வாகீசமும் வயிற்றுப் பாடும்! நாஞ்சில்நாடன்

Nanjil Nadan

சாதிச் சங்கங்கள்

தத்தெடுக்கின்றன

தம் படைப்பாளரை

முற்போக்கு முகாமெலாம்

தத்தம் உறுப்பையே

முன்மொழிகின்றன

மதவாத எழுத்தும்

மதங்களின் அரணில்

மகிமைப்படுவன

நட்புக் குழாம் எலாம்

தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும்

உன்னத மானுடப் பண்பெலாம் பேசி

கட்சித் தலைவர் காலடி மண்ணை

நெற்றியில் நீறென நீளப் பூசுவர்

இச்சகம் உரைக்கும் பங்குதாரரை

வாராது வந்த மாமணி என்னும்

வானத்து அமரன் வந்தான் என்றும்

சொந்த இதழில் பரப்புரை செய்வர்

கண்கள் நீலோற்பலம்

காலத்தைத் திருப்பி உதைப்பார்

பின்நவீனத்துவக் கடைசி ரயிலின்

இறுதி இருக்கை

மனையை இனத்தை மதத்தைத்

துறந்து

அடிமைச் சங்கிலி தெறித்த மகத்துவர்

எனப்பல ஆங்கு

குழாய்த் தண்ணீரில் வெண்ணெய் கடைந்து

புத்துருக்கு நெய்யும் எடுப்பர்

நல்ல படைப்பு

வயிற்றுத் தீக்கு மெய்ப்பு படிக்கும்

காய்கறி விக்கும் வாகனம் ஓட்டும்

அடுமனை அடுப்படி பாத்திரம் விளக்கும்

உதிரிப் பாகம் உரசிக் கழுவும்

செங்கல் சுமக்கும் செருப்பு தைக்கும்

நின்று கிடக்கும் இலவச வரிசையில்

நாற்சந்தியை நடந்து கடக்கும்

நாதியொன்று இன்மையால்!

உயிர் எழுத்து ஏப்ரல் 2017

One response to “வாகீசமும் வயிற்றுப் பாடும்! நாஞ்சில்நாடன்

  1. பொருள் பொதிந்த கவிதை

K Chandramurthy -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி