பனிமூட்டம்

ழான் – ப்போல் திதியெலொரான்
பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
ஓவியங்கள்: கார்த்திகேயன்
பன்னிரண்டு ஆண்டுகள். ஆமாம்! கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். ‘மரியா’ என்னுடைய இரண்டு பெண்களில் மூத்தவள், இதற்கெல்லாம் காரணம் அவள்தான். இரண்டொரு நாட்களில் சொடுக்கு போட்டதுபோல நடந்து முடிந்ததல்ல. போராடிப் பார்த்தேன், கட்டிப் புரளவில்லை, மற்றபடி பெரியதொரு யுத்தம் நடந்தது. தனது முடிவிற்கு ஆதரவாக அவள் முன்வைத்த நியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் நிர்ணயிக்கப்பட்ட தேதியை ஆரம்பத்தில் மட்டுமே என்னால் தள்ளிப்போட முடிந்தது. எலிஸ்பெத் இரண்டாவது மகள், தனக்கு இதில் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல அமைதியாக இருந்தாள், வெகுநாட்களாகவே, தர்மசங்கடமான சூழல்களில் மதில்மேல் பூனைபோல இருந்து பழக்கப்பட்டவள். இப்பிரச்சினையைக் குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனது மூத்த சகோதரிக்குக் கொடுத்திருந்தாள், பெரியவளோ இதற்காகக் காத்திருந்தவளே அல்ல. அவர்கள் முடிவுக்கு எதிராக எனது ஆட்சேபம் வெகுகாலம் நீடித்ததென்னவோ உண்மை. ‘மரியா’வின் ஓயாத வற்புறுத்தலைக் கிழட்டுக்கழுதையின் பிடிவாதத்துடன் தள்ளிப்போட்டும் வந்தேன். “பொதுவாக இந்த முடிவு எல்லாருக்கும் நல்லது, விடுதியும் தூரத்தில் இல்லை. நம்ம வீட்டிலிருந்து காரில் பத்து நிமிடப் பயணம். உங்களைப் பார்க்க, நாங்களும் ஒவ்வொரு வாரமும் வரப்போறோம். எனக்கும் பொறுப்பானவர்கள் கையிலே உங்களை

ஒப்படைச்சிருக்கேன் என்ற நிம்மதி.” என்றாள் அவள்.

‘ஷத்தோ ரூ’ புற நகர்ப் பகுதி எனது இறுதிகாலத்தை முடித்துக்கொள்வதற்கான இடமல்லவென்றும், பால்யவயதிலிருந்தே கடலுக்கு வெகு அருகில் வாழ்ந்து பழகிவிட்டு இப்போது அதைவிட்டு விலகியிருப்பதென்றால் கடினமென்றும் அவள் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறிப் பார்த்தேன், எடுத்த முடிவில் அவள் பிடிவாதமாக இருந்தாள். மரியாவின் வாதங்கள் என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதொன்றுதான் கடைசியில் இவ்விஷயத்தில் எனக்குள்ள சிறிய ஆறுதல். சமையலறைக்குள் நான் வழுக்கி விழுந்ததும், கேடுகெட்ட தொடை எலும்பு, நாட்பட்ட சுள்ளி போல இரண்டாக உடைந்ததும் இங்கு வரக் காரணம். ‘ரோஸ்’ – வீட்டுவேலைகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்த பெண்மணி – சமயலறை ‘சிங்க்‘ அடியில் நான் விழுந்துகிடந்ததைக் கண்டிருக்கிறாள். முதல் நாள் முன்னிரவிலிருந்து கேட்பாரற்று, சுயமாக எழுந்திருக்கவும் முடியாமல் கிடந்திருக்கிறேன். இப்படியொரு சம்பவத்திற்குப் பிறகு சம்மதித்துத்தானே ஆகவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு ஆறு கிழமைகள் மரியா வீட்டில் உடலைத் தேற்றிக் கொள்ளத் தங்க நேரிட்டது. அந்நாட்களில் தான் எஞ்சியிருந்த எனது பிடிவாதத்தை மூத்தமகளால் கரைக்க முடிந்தது.

‘லெ க்ளிஸின்’ (Les Glycines)1 என்ற பெயரை முதன்முதலாக என்னிடத்தில் அவள் உச்சரித்தபோதே வெடவெடத்தது. இப்பகுதியில் ‘ஷெவால் பிளாங்’ (Cheval blanc)2 என்ற விநோதமான பெயர்கொண்ட தங்கும் விடுதிகள் அநேகம். அதைப்போலவே ‘லெ க்ளிஸின்’ என்ற பெயரில் முதியோர் காப்பகங்களும் ஏராளம். பெயர்தான் ‘கிளிஸின்’ என்றிருந்ததே தவிர, கட்டிடத்தில் நான்குபக்கங்களிலும் அரிதாகக்கூட ஒரு கிளிஸினைக் காணமுடியவில்லை. அவை படர்வதற்கு சுவர்கள்தான் ஏற்றவை, எனினும் சுவர்களில் இல்லை. தோட்டத்திலாவது முளைத்திருக்கும் அறிகுறி தெரிந்ததா என்றால், இல்லை. ‘ஷெவால் பிளாங்’ என்ற பெயர்கொண்ட ஓட்டல்கள் அருகில் வெள்ளைக் குதிரைகளை நம்மால் பார்க்க முடிகிறதா என்ன? இன்றைக்குங்கூட இதுபோன்ற பெயர்களை ‘ஏன்’ வைக்கிறார்கள், ‘எதற்காக’ வைக்கிறார்கள் என்பது எனக்கு மர்மமாகவே இருந்துவருகிறது. இதுபோன்ற புதிர்களுக்கு எவரிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை. தவிர, இந்த ‘ஏன்’ மற்றும் ‘எதற்கு’ மனிதர்கள் அனைவருக்குமே கேலிக்குரியதாக இருக்கின்றனவென்று நினைக்கிறேன். நான் தங்கியுள்ள இவ்விடத்தில் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று கேட்பது எங்களுக்கு அவசியமில்லையாம், அதற்கான வயதையெல்லாம் கடந்துவிட்டோமாம், சொல்கிறார்கள். இரண்டு செவிலியர்கள், துணையாகச் சிப்பாய்கள்போல இரண்டு தடியர்கள்; அவர்கள் இட்டதுதான் அதிகாரம், வைத்ததுதான் சட்டம், ஒருவரும் அச்சட்டங்களை வளைத்துவிடமுடியாது. இரவுக்கொன்று பகலுக்கொன்று, என்றும் நிரந்தரம்!

சூரியனைக் காண்போமா என்றிருக்கிறது. இதமான வெப்பம் மட்டுமல்ல, அதனுடைய ஒளிக்கும் இங்கே பற்றாக்குறை. எப்படி நிகழ்ந்ததென்று புரியாதவகையில் நிர்மலமான வானிலையின் இடத்தில் ஊத்தை பிடித்த பனிமூட்டம், எங்கிருந்து வந்ததோ? பூமிமீது ஓயாமல் வடிந்துகொண்டிருக்கிறது. இன்றைய தினத்திலும் காலைப்பொழுதை மொத்தமாக மூழ்கடித்துக்கொண்டிருப்பது அதுதான்; விரிந்து கிடக்கும் தோட்டம், மரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட வெளி வாயிற்கதவு எதுவும் கண்ணிற்படவில்லை. அழுக்கடைந்த மிகப்பெரிய பஞ்சுப்பொதி அவற்றை விழுங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், இங்கே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பனிமூட்டம் சூது நிறைந்தது. ஒருவகையில் முதுமைபோல. சோர்வைக் களைந்து அது புத்துணர்ச்சி பெறுவது இரவு வேளைகளில். பிறகு சந்தடிகளின்றி உங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும். ஓரிடத்தையும் விட்டுவைப்பதில்லை, தந்திரமாக நுழைந்துவிடும். தன்னை வெளிக்காட்டாமல் நமது எண்ணங்களை மரத்துப்போகச் செய்யும், நினைவுகளை முடக்கிவிடும். விடிந்ததும் மறுபடியும் பனிமூட்டம், எங்கும் – எல்லா இடங்களிலும், அப்படியெல்லாம் உங்களை விட்டு எங்கும் போகமாட் டேன், உங்களோடுதான் இருப்பேன் என்பதைப்போல. இன்றும் வழக்கம்போல கடைசி ஆளாக உணவகத்திற்கு வந்துசேர்ந்தேன். வெகுநாட்களாகவே இதுபோன்றதொரு வேடிக்கையான பழக்கம் என்னிடம் இருக்கிறது. காப்பகத்திலுள்ள மற்றவர்களைப்போல விரைவாக நான் நடப்பதில்லையென்று நீங்கள் நினைக்கக்கூடாது. அந்த மற்றவர்களிலும் பெரும்பாலோர் இங்கு ஜிம்மர் சட்டத்தின் உதவியின்றி நடப்பதில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், எனது தாமதத்திற்கு அவர்களைப்போல எனக்குப் பசி இல்லை என்றும் கூற முடியாது. எனினும் ஸ்பானிய காளைச்சண்டையில், உயிருக்குப் போராடும் விலங்கைக் கொல்லும் புண்ட்டியெரோ(Puntillero)3 ஆசாமியிடம் காணும் பழமையான அனிச்சை செயல் என்னிடமும் இருந்தது. கடைசியில்தான் அது நடக்கிறது, கிட்டத் தட்ட எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பிறகு, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக நானே முடித்துவைக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஒரு சிறிய பீங்கான் கோப்பைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறேன். உணவகத்தின் ஊழியை ழிசேல் லெவஸ்ஸெர், உங்களுக்கு எது விருப்பம், தேநீரா காப்பியா என்று வினவுகிறாள். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் காலையில் கடவுள் விதித்தபடி கொஞ்சமாகப் பால்விட்டு காப்பி குடிக்கிறேன், இப்பெண்ணும் அதே பிடிவாதத்துடன் எனக்கு காப்பி வேண்டுமா, தேநீர் வேண்டுமா என நிதமும் கேட்டபடி இருக்கிறாள். “மத்மஸல் லாவ் வெவஸ்ஸெர்! தயவுசெய்து வழக்கம்போல கொஞ்சம் பால்விட்டு காப்பி கொடேன்!” வலதுபக்கம் அமர்ந்திருந்த பெண்மணி முனங்கினாள். எதிரே இறுகிக் கடினமாகவிருந்த ரொட்டி, குழைந்த வெண்ணெய், வாயில் வைக்கமுடியாத அளவிற்கு சர்க்கரை கலந்திருந்த ஜாம். பெண்மணியிடம், “நீ எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பவள்” என்று கூற நினைத்த எனது விருப்பம், மேசையில் எனக்கு முன்பாக வைக்கப்பட்ட ஒரு கண்ணாடித் தம்ளர் தண்ணீரையும் மூன்று மாத்திரைகளையும் பார்க்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்கும்; வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். மறுநாள் சூரிய உதயத்தை காணாமற் போய்விடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக நான் விழுங்கவேண்டிய மாத்திரைகள் அவை. இரத்த அழுத்தத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை, தைராய்டு பிரச்சினைக்காக வெள்ளை மாத்திரை, பிறகு வெளிர் நீலத்தில் ஒன்று. இருப்பிலிருந்து நம்மை விலக்கிவைக்கக் கண்டுபிடித்ததில் முதுமையைக் காட்டிலும் வேறு சாபம் இருக்கமுடியாது. இங்குள்ள சிலருக்கு வானவில்லில் இருக்கிற அத்தனை நிறத்திடமும் உரிமையுண்டு. மேசையில் குவிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை விழுங்கவே பெரும்பான்மையான நேரத்தை அவர்கள் செலவிடுவார்கள். மாத்திரைக் குவியலோடு பூஜ்ய விழுக்காடு கொழுப்புச் சத்துடைய வெண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒன்று தடவப்பட்ட ரொட்டியும் காத்திருக்கும். இங்கே அனைத்துமே பூஜ்ய விழுக்காடு கொண்டவைதான். நாங்கள் ஆரோக்கியமாகச் சாகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நேற்றிரவுகூட ஒருவர் புறப்பட்டிருந்தார். லெ கிளிஸின் காப்பகங்களில் ‘இறப்பு’ என்ற சொல்லை மிகவும் கவனமெடுத்துத் தவிர்த்துவருகிறார்கள். காப்பகத்தில் ஒரு சில பகுதிகள் இருக்கின்றன, அங்கு ‘இறப்பை’ எந்த நேரமும் சந்திக்க வாய்ப்புண்டு. எனினும் மரணத்தை நேரிடையாகச் சந்திக்கும் விஷயத்தில் துணிச்சல் கூடாதென்று வழக்கமாகவே பிடிவாதம் காட்டி வருகிறார்கள். அச்சந்திப்பைத் தவிர்க்க, வலம் வரவேண்டும், மரியாதையுடன் விலகிக்கொள்ளவேண்டும், ‘புறப்பாடு’ என்ற அழகானதொரு வார்த்தை ஆடைகொண்டு மரணம் உடுக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அன்று காலையில் தியானச்சூழல் நிலவியது என்றெல்லாம் என்னால் கூறிக்கொண்டிருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக சப்புக்கொட்டுவதும் மெல்லுவதும் சற்றுக் குறைந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை வாய்களுக்குச் சாப்பிடும் ஆர்வம் குறைவாக இருந்திருக்கும். பார்வைகள் ஓரிடத்தில் நிலையாய் இல்லை. கரண்டிகளும் பிறவும் எழுப்பும் ஓசைகள்கூட மிகவும் அடக்கமாக ஒலிக்கின்றன. இன்மையின் வெளிப்படையான அறிகுறி ஒன்றே ஒன்றுதான், எல்லோருடைய பார்வையும் அதன்மீதுதான் கூடுதலாக இருந்தது: மர்செல் கர்னியெ இல்லாத காலி நாற்காலி அது. உணவகத்தில் நட்டநடுவே வாய் பிளந்துகொண்டிருந்த அக்காட்சி மிகவும் கொடுமையானது.

அதிகாலையில் கட்டிலில் மிகவும் அமைதியாகப் படுத்திருந்ததைக் கண்டோம். அவருடைய புறப்பாடு ஒருவருக்கும் வியப்பூட்டவில்லை. மாரடைப்புக்குப் பலியாகியதாகச் சற்று முன்பு காப்பகத்தின் நிர்வாகி திருமதி வெர்ழ்லெ கூறியிருந்தாள். தும்மியதில் தெறித்ததைத் தடுக்க உணவு மேசையிலிருந்த துணிகொண்டு வாயை மூடினேன். குருதிநாள் விரிசல், மாரடைப்பு, நுரையீரல் வீக்கம் காரணம் எதுவாயினும் கடைசியில் அதற்குப்பெயர் மாரடைப்பு. விநோதமான இக்கொரிடாவின் (Corrida)4 மூன்றாவது தெர்சியோ (Tercio)5வில் எங்களில் ஒரு நபரை மரணம் முடித்துவைக்கும் சம்பவத்தை எடுத்துச்சொல்ல ‘மாரடைப்பு’ என்ற சொல்லைக்காட்டிலும் மேம்பட்ட சொல் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே ‘எஸ்டோகாட்’

(Estocade)6 எப்படி நடக்கிறதென்பதை நேரில் கண்டவன். இங்கேயும் அதுதான் நடந்தது. வடிவிலும் கூர்மையிலும் குறைசொல்ல முடியாத ‘எஸ்டோகாட்.’ கிழங்களாக வலம்வருகிற ‘கிளிசிசின்’களில் மரணத்திற்கு ‘எஸ்டோகாடை’ உபயோகிப்பதில் ஒருபோதும் சங்கடங்கள் இருப்பதில்லை. நீண்ட நாட்களாகவே மர்செல் கர்னியெ தனக்கென்று வைத்திருந்த பாந்த்ரீ (banderilles)7 சிப்பத்துடன் சுற்றிவந்தார். கட்டுப்படுத்த இயலாமல் அதிகரித்திருந்த கொலாஸ்ட்ரோல், குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்த சர்க்கரை, களைத்திருந்த இரத்த நாளங்கள் என பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இறப்பதற்குத் தவணை கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தில் அவரும் ஒருவர், இங்கு அதுபோல டஜன் கணக்கில் பலர் இருக்கின்றனர். ஆவிகள்போல இருக்குமிடம் தெரியாமல் இருப்பார்கள். தங்கள் நேரத்தில் கணிசமான காலத்தை ‘சூப்’பிற்கென்று ஒதுக்கிக் காத்திருப்பார்கள். தங்கள் அறைகளைவிட்டு வெளியில் வருகிறார்களென்றால் அது வயிற்றை நிரப்ப உணவகத்திற்கு வருவதுதான். அதன்பின்னர் தங்கள் முதுமைக்கு அடிபணிந்து கூன்போட்ட முதுகுடன் சாய்வுநாற்காலிகளுக்குத் திரும்பி மீண்டும் அடுத்தவேளை உணவுக்கான நேரம் வரும்வரை காத்திருப்பார்கள். மர்செல் கர்னியெ கூட அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான். முழங்காலில் கிடக்கும் துண்டையும் புறங்கையையும் தடவிக்கொடுத்தபடி நாள் முழுக்கத் தனது இரவுமேசை மீதிருக்கும் கடிகாரத்தை அவதானித்த வண்ணம் இருந்தார். புறப்படுவதற்குத் தயாராகவிருக்கிற உயிர்கள், துறைமுகமேடையில் தாமதமின்றி நிகழவிருக்கிற புறப்பாட்டின் வரவை எதிர்பார்த்து வலம் வருவார்கள். ‘மர்செல் கர்னியெ’வின் காலியாகவிருந்த நாற்காலியை ஆவலுடன் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, பார்வையாளர் களுக்கான நாள். நுழைவுவாயிலுக்கு நேர் எதிராகவிருந்த ஹால் பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தவண்ணம் பிற்பகலைச் செலவழித்தேன், என்னுடன் வேறு சிலரும் இருந்தனர். கண்ணாடித் தடுப்புக்கு மறு புறம் தெரிந்த உயிர்ப்பியக் கத்தில் எனது கவனம் இருந்தது. மணிக் கணக்காக அரைத்தூக்கத்தில் நான் இருக்கும் அந்தவேளையில், சிறுசிறு குழுக்களாக உறவினர்கள் உரத்துப் பேசியபடி வேகவேகமாக உள்ளே நுழைவார்கள். எல்லா ஞாயிற்றுக்கிழமை களையும் போலவே அன்றும் ‘மரியா’வை எதிர்பார்த்தேன், உணர்வு மழுங்கியிருந்த மூளை விழிப்புற்றுச் சென்ற வருடத்தில் அவள் இறந்ததை நினைவூட்டியது. வரக்கூடாத இடத்தில் வந்த கட்டியொன்று மூன்று மாதத்தில் அவள் உயிரைக் குடித்துவிட்டது. தனக்கு முன்பாகப் பிள்ளைகள் இறப்பைக் காண்பதென்பது கொடுமை, ஒருவருக்கும் நேரக் கூடாது. இரண்டும் இரண்டும் நான்கென்பதுபோல, தன்னுடைய மகளுக்கு முன்பாக தந்தை என்பதுதான் நியாயம்! எலிஸபெத்தும் அபூர்வமாக என்னைப் பார்ப்பதற்கு வருவதுண்டு. அவளுடைய ‘நீம்’ நகரம் ‘ஷத்தோ ரூ’விலிருந்து வெகுதூரம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு உணவிற்குப் பிறகு தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள்; ஆனால் எனக்குக் காது முன்புபோலக் கேட்பதில்லை. ஆயிரம்பேர் பேசினாலும் கடந்தகாலத்தில் என்னால் அடையாளப்படுத்த முடிந்த சொந்தப் பெண்ணின் குரல், தற்போது நீர்மப்பொருள் கொதிபோல மேலும்மேலும் கேட்கச் சாத்தியமற்ற ஒலியாகிவிட்டது. எனவே ஒருவித பாவனை உரையாடலை நடத்துகிறேன். “ஆம்”, “இல்லை”, “நல்லது” போன்ற என் வார்த்தைகள், முணுமுணுப்பாக, பொய்யான உரையாடலை ஆர்வத்துடன் நிகழ்த்தும். பின்னர் இருவருமாக “பிறகு பார்ப்போம்”, “அடுத்த வாரம் பேசலாம்”, “உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் அப்பா”, “எனது அன்பு முத்தங்கள்” சொற்களால் அதனை முடித்துக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகள் பொதுவில் எனது விருப்பத்திற்கு உகந்தவை அல்ல. இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எதையோ நினைவூட்டும் ஆணைகள் அவற்றில் பொதிந்திருக்கின்றன. குறிப்பாக “உண்மையான வாழ்க்கை என்பது இங்கே, நான்கு சுவர்களுக்குள் இல்லை, மாறாக வெளியே, அடர்ந்த பனிமூட்டத்திற்குள் இருக்கிறது, ஆனால் உங்களுக்குத் தற்போதைக்கு அங்கு செல்லச் சாத்தியமில்லை” என்பதைக் கூறுவதாக உள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பாக, மர்செல் கர்னியெ உடலை எடுத்துச் சென்றார்கள். காளைச்சண்டையின் முடிவில் கொன்ற காளையை இழுத்துசெல்வதுபோன்ற சத்தம் எனது தலைக்குள் அப்போது கேட்டது. இப்போதெல்லாம் “மரணம் என்னை விரும்பவில்லையோ” என அடிக்கடி நினைக்கிறேன். கீழே இருக்கிற உயிர்களின் இறுதிப்பயணத்திற்குதவ, மரணத்திற்கு ஒருவேளை தொடர்ந்து வயதானதொரு புண்ட்டியெரோ (Puntillero) ஆசாமியின் தேவை இருக்கிறதோ? நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கான இடம் இங்குதான். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காளைச் சண்டைத் திடலில் பெற்றிருந்த அதே இடம். ஏனென்றால் கிளிசின்களிலும் சில நேரங்களில் ‘எஸ்டோகாட்’

(Estocade)6ஐ சொருகியபின்பும் முடிவு தாமதமாகவே வருகிறது. இந்த அற்ப உயிர்த் தாரை வற்றாமல் பாய்வதற்குக் காலம் இன்னமும் இருக்கிறது. நள்ளிரவில் என்னுடைய கட்டிலைவிட்டு நழுவவேண்டும், நாள்பட்ட சடலமாகிப்போன வலிமூட்டையைக் கொஞ்சம் மறந்து, நடைக்கூடத்தில் இருளில் பதுங்கிச் செல்லவேண்டும். சரியான கதவைக் கண்டுபிடிக்கும்வரை இதயத் துடிப்புடன் ஒவ்வொரு அறையாகக் கடக்கவேண்டும், இரவு காவலர் பிடியில் அகப்பட்டுவிடாதென்ற பிரார்த்தனையும் முக்கியம்! கட்டில்வரை நெருங்குகிறேன். கடந்த காலத்தில் காளைச்சண்டை மணற் திடலில் செய்த அதே காரியம். இறுதி இழையை அறுத்து, அவற்றுக்கு விடுதலை அளிக்கிறேன். அதிசயமாக, கண்ணுக்குப் புலனாகாத அந்தத் தொப்புள்கொடியைத் துண்டிக்கும் தருணத்தில் மட்டுமே உயிர்வாழ்வதைப் போன்ற உணர்வு என்னிடம் இருக்கிறது, ஒருபோதும் பிறநேரங்களில் அதை உணர்ந்த அனுபவமில்லை. பிதா கர்னியெவின் இறுதிமூச்சைச் சிரமமின்றிப் பறிக்க முடிந்தது. பிறரைப்போலவே, முகத்தில் அழுத்திப்பிடித்த தலையணை, நுரையீரலில்

எஞ்சியிருந்த உயிரைக் குடித்து முடித்தது. எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு கடைசியாக ஒருமுறை அவர்களை அவதானிப்பதுண்டு. அந்திக் கருக்கல் அவர்கள் முகத்தைத் திரையிட்டிருப்பினும், அஸ்தமித்த அவர்கள் பார்வையில் சிற்சிலசமயங்களில் ஒருவித நிம்மதி இழைகள் இருப்பதாகத் தோன்றும்.

நாளை, எனக்கு 102 வயது. ‘ழிஸ்லெர் லெவஸ்ஸெர்’ வியப்பில் வாய்பிளக்கவேண்டும் என்பதற்காகவே தேநீர் குடிக்க இருக்கிறேன்.

குறிப்புகள்:

1. Glycine ஒருவித கொடி; நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள்கொண்ட பூக்களையும் காணலாம்.

2. Cheval blanc – வெள்ளைக்குதிரை

3. Puntillero – காளைச் சண்டையின் இறுதியில், உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் காளையைக் கொல்வதற்கென உள்ள ஊழியர். அவர் உபயோகிக்கும் குறுவாளுக்கு ‘Puntilla’ என்று பெயர்.

4. Corrida – ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாட்டின் வடபகுதியில் நடக்கும் காளைச் சண்டை

5. Tercio – காளைச் சண்டையின் மூன்றாவது கட்டம் அல்லது இறுதிச்சுற்று

6. Estocade – காளைச்சண்டையில் காளையை அடக்கும் வீரனின் கையிலுள்ள வாள்

—————————————

நன்றி: காலச்சுவடு ஜனவரி இதழ்

One response to “பனிமூட்டம்

  1. மனதுக்கு நெருக்கமாய் உணர்ந்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s