“Arrête ce cinéma” என அலறுகிறார் ஒரு மேயர் அவருக்கு என்ன பிரச்சினை. நகரில் கேட்பார்ற்றுச் சுற்றித் திரிகிற ஒன்றிரண்டு மாடுகள் தான் பிரச்சினை. அலறிய இடம். நீதிமன்றம்.
இரவு பதினோறு மணிக்குக் களைத்து படுக்கிறார். விவேக்கின் பிரெஞ்சு மேக் உள்ளூர்வாசி ஒருவர், “சன்னலை திறந்தால், தெருவாசலில் ஒரு பசுமாடு நிற்கிறது, நகராட்சி காவல் துறைக்கு போன் போட்டு அரைமணி ஆயிற்று, இதுவரை பதிலில்லை, ஏதாவது செய்ய முடியுமா? இந்த மாட்டை அப்புறப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடியுமா?” என மறுமுனையில் கேட்டுக்கொண்டால், தொலைபேசியை எடுத்த மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் படுக்கை, மனைவி எல்லாம். தவறினால் நீதிமன்றத்தில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தலாம்.
“1988ம் ஆண்டே மாட்டுக்குச் சொந்தக்காரருக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டது 2004ம் ஆண்டு மேயரானேன், சம்பந்தப்பட்ட நபருக்கு பல கடிதங்கள் நகராட்சியின் சார்பில் எழுதியிருக்கிறேன். எனினும் அவருடைய மாடுகள் எங்கள் நகராட்சியின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் அவ்வப்போது சுற்றித் திரிவது தொடர்கின்றது. அம்மாடுகளை பிடித்துச்சென்று அடைத்தும் பார்த்தாயிற்று, ஒவ்வொரு முறையும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லும் மாடுகளுக்குச் சொந்தக்காரர், மாடுகளை கவனியாமல் அலைய விடுவது தொடர்கிறது. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு இங்கு வரவேண்டிய தாயிற்று” என நீதிமன்றத்தில் புலம்பிய மேயர் “ரூலான்ஸ்’ என்ற நகரைச் சேர்ந்தவர். உள்ளூரின் நிர்வாகப் பிரச்சினைகளோடு, சுற்றித்திரியும் மாடொன்று ஒரு நாயை முட்டினால் கூட, காற்றில் ஒரு மரக்கிளை முறிந்து அப்புறப்படுத்தாமல் கிடந்தால் கூட ஒரு மேயர் தண்டிக்கப்படலாமென பிரெஞ்சு சட்டம் சொல்கிறது.
நாட்டின் அதிபர் பிரான்சு நாட்டின் கப்பல் கட்டும் தளமொன்றிர்க்கு (Saint-Nazaire) வருகை தருகிறார். அங்கிருந்த தொழிலாளர்களுடன் வரிசையாக கைகுலுக்கிக்கொண்டு வருகிறார் ஆனால் ஒர் இடது சாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் (Sébastien Benoît), அதிபர், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாகக்கூறி, அவருடன் கை குலுக்க மறுக்கிறார். நீங்கள் பிரெஞ்சு குடிமகனாக இருந்தால், தனி ஆளாக நின்று மேயரை மட்டுமல்ல நாட்டின் அதிபரைக்கூட சாலையில் தடுத்துநிறுத்தி பிரச்சினைகளை வைக்க, உங்கள் கோபத்தைக்காட்ட, விமர்சிக்க முடியும் என்பதற்கு அண்மை உதாரணம் இது. இந்த பிரெஞ்சுக் குடி மகன் யார்?
பிரெஞ்சுக் குடியுரிமை.
பிரான்சு நாட்டில் பிரெஞ்சுக் குடியுரிமை நான்கு வழிமிறைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது:
1. Droit du Song – இரத்த அடிப்படையிலான உரிமை: பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் பிரெஞ்சுக் குடிமகனாக இருப்பின் அவர்களுடைய குழந்தையும் இயல்பாகவே பிரெஞ்சுக் குடிமகனாக முடியும்.
2. Droit du sol: பிறந்த இடத்தை அடிப்படையாகக்கொண்ட உரிமை: இது இரு வகைப்படும்:
அ. Double droit du sol: பிறந்த மண்சார்ந்த (பிரான்சு) சார்ந்த இரட்டை உரிமை இதன்படி பெற்றோர் வெளிநாட்டினராக இருந்து, அவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டில் பிறந்திருந்து, அவர்களுடைய குழந்தை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால், இவ்வுரிமையின் அடிப்படையில் குடியுரிமைத் தானாகக் கிடைக்கும்.
ஆ. Droit du sol simple différé: பிறந்த நாட்டின் அடிப்படையிலான ஒற்றை உரிமை: பெற்றோர்கள் இருவருமே வெளிநாட்டில் பிறந்தவர்களாக இருந்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால் குடியுரிமைக்கு வழியுண்டு. பதினாறுவயதிலிருந்து விண்ணப்பிக்கலாம். தவிர பதினோறு வயதிலிருந்து தொடர்ந்தோ, விட்டுவிட்டோ ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்திருக்கவேண்டும். பதின்மூன்று வயதிலிருந்து பதினாறு வயதிற்குள் விண்ணப்பம் செய்த்வதாக இருப்பின் பிள்ளையின் பெற்றோர் அதனைச் செய்யவேண்டும்.
3. Naturalisation – தனது பூர்வீகக் குடியுரிமையைத் துறந்து பிரான்சுநாட்டின் குடியுரிமையைப் பெறும் முறை. சட்டப்படியான தகுந்த வயதை அடைந்து, குறைந்தது ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு வெளிநாட்டவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர் உயர்கல்வி பெற்றவராக இருந்தாலோ, அவரால் பிரான்சு நாட்டிற்குப் பயன்கள் உண்டு என அரசாங்கம் நினைத்தாலோ இரண்டு ஆண்டுகள் பிரான்சு நாட்டில் தங்கியிருந்தாலே போதுமானது. ஆனால் நீதிமன்றத்தால் அவர் தண்டிக்க்பட்டவராக இருக்கக் கூடாது. ஆனாக் இவ்வகை விண்ணப்பத்தை அரசாங்கம் காரணத்தை வெளிப்படையாகக்கூறாமல் நிராகரிக்க முடியும். தவிர நேர்காணலில் விண்ணப்பதாரர் பிரெஞ்சு மொழியில் அவருக்குள்ள தேர்ச்சியையும், பிரெஞ்சு சமூகத்துடனும், பண்பாட்டுடனும் அவர்க்குள்ள இணக்கத்தை உறுதி செய்தல்வேண்டும்.
4. Le Mariage – திருமணத்தின் அடிப்படையிலும் குடியுரிமை கோரலாம். பிரெஞ்சு குடுடியுரிமைபெற்ற ஓருவரை மணமுடித்த ஆண் அல்லது பெண் நான்காண்டு குடும்ப வாழ்க்கைக்குப்பிறகு விண்ணப்பிக்கவேண்டும், விண்ணப்பிக்கும் தருணத்தில் விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவி பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இருக்கவேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதிகளாக இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குபிறகு விண்ணப்பிக்கலாம். இங்கும் விண்ண்ப்பதாரர் பிரெஞ்சு மொழி தேர்ச்சி, பிரெஞ்சு பண்பாடு, சமூகம் இவற்றுடனான ஆர்வம் இவற்றை உறுதி செய்வது அவசியம்.
2010 கணக்கின்படி 143000 வெளிநாடினர் புதிதாக பிரெஞ்சுக்குடியுரிமை பெற்று பிரான்சு நாட்டில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரான்சு நாட்டில் குடி உரிமை மறுத்து அந்நியர்களாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடருகிற மக்களும் இருக்கவே செய்கின்றனர். பிரான்சு நாட்டின் மக்கள் தொகையில் அவர்களின் விழுக்காடு ஆறு. அதாவது 3.8 மில்லியன் மக்கள்
வாக்குரிமை – பெண்கள், அந்நியர்கள்
பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில் சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ழ்வாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789 வாக்கில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதே கடைபிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமை இருந்த்து. பிரெஞ்சுப் புரட்சியில் பெண்கள் பங்கெடுத்திருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர்வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அவர்கள் ஒன்றரை நூற்றாண்டுகாலம் தங்கள் வாக்கைப்பயன்படுத்த காத்திருந்தார்கள். 1944ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 21ந்தேதிதான் பிரெஞ்சுப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை ஆண்களுக்கு ஈடாகப் பெற்றார்கள். தவிர 1946 வரை மேற்கு ஐரோப்பா பிரெஞ்சுப் பிரதேசத்தில் வசித்த ஐரோப்பியர்களுக்கே வாக்குரிமை இருந்தது. பிரான்சு நாட்டின் கடல்க்டந்த பிரதேசங்களில் வாழ்ந்த கறுப்பரின மக்களுக்கும் பிரான்சு நாட்டின் காலனி மக்களுக்கும் ஓட்டுரிமை இல்லை. அவ்வாறே 1988வரை நிரந்தர முகவரி இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. 18வயதை அடைந்த ஆணும் பெண்ணும் வாக்குரிமையைப் பயன் படுத்த முடியுமென்றாலும் இந்த உரிமையை பிரான்சு நாட்டில் வாழும் பிரெஞ்சுக் குடிமைபெற்ற பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்த மக்களே பயன்படுத்த முடியும். அவர்களைப்போலவே பிரெஞ்சுக் குடியுரிமையற்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் (உதாரணம் :ஜெர்மன், இங்க்கிலாந்து குடியுரிமையைப் பெற்றவர்களும் பிரான்சு நாட்டின் தேர்தல்களில் வாக்கு அளிக்க முடியும்) ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் வசித்தாலும் அவர்கள் சட்டத்திட்குட்பட்ட பிரஜைகளாக, நாட்டின் பொருளாதாரம் பிற துறைகளில் உதவுபவர்களாக இருப்பினும் பிரெஞ்சு குடியுரிமையைத் தேர்வு செய்யாததால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.
(தொடரும்)