வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்
(‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் குறித்து முனைவர்.க.பஞ்சாங்கம்)
தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.
செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.
இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.
இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.
மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.
மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.
அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.
“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.
இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.
வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.
இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.
ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.
நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.
‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013
————————————————————————————
கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160
————————————————————————————————————————————