தமது ஸ்பாரோ அமைப்பு ஊடாக கௌரவிக்கப்பட்டிருக்கிற அம்பை தமது ஐரோப்பிய வருகையின்போது பிரான்சில் உயிர் நிழல் லட்சுமி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார். ‘தேடலும் பகிர்தலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவும் உள்ளார். பாரீஸில் உள்ள நண்பர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்வு. அவரைக் காணும் ஆவல் உள்ளது. சந்தர்ப்பம் அமையுமாவென்று தெரியவில்லை. முதலில் நிகழ்ச்சி டிசம்பர் 14 என்று சொல்லபட்டது. அதற்கேற்ப எனது ப்யணத்தை ஒழுங்கு செய்திருந்தேன். தற்போது டிசம்பர் 13 மாலை 5 மணி என்பதால், சனிக்கிழமை காலையிலேயேயே ஸ்ட்ராஸ்பூரிலிருந்து கிளம்பவேண்டும், சாத்தியமாவென்று தெரியவில்லை.
“தேடலும் பகிர்தலும்”
நிகழ்ச்சி நேரம்: மாலை 4.40
5, Rue Pierre l’Ermite
Paris-18
Metro: La Chapelle
——————-
2. படித்த படிக்கிற நாவல்கள்
அண்மையில் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலையும், சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலயும் படித்தேன். சாயாவனம் கடந்த காலத்தினும்பார்க்க தற்போதைய சூழலில் கூடுதல் ஜொலிப்புடன் இருக்கிறது. முதல் வாசிப்பு காலத்தில், நாவலை ருசித்து வாசிக்க தவறி இருக்கிறேன் என்று புரிந்தது. சாயாவனத் தேவர் போன்ற்வர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள். மனிதர்கள் அனைவருமே தனித்தன்மையோடிருப்பவர்கள்தான், என்றாலும் தேவர் போன்றவர்கள் அத்தனித் தன்மையைத் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் முன்னெடுத்து தங்கள் இருப்பை உயர்த்திக்கொள்கிறார்கள். சாயாவனம் மனதில் நிற்கிறது.
தமிழவன் பிலிப் சொலெர் (Philipe Sollers) எழுத்துவகைமையை தமது சிற்றேடு இதழில் உதாரணம்காட்ட அவரது படைப்பில் ஒரு சிலபக்கங்களை மொழிபெயர்த்து அனுப்ப முடியுமாவென கேட்டார். தமிழ் புனைகதை உலகை மேற்குலகோடு இணைத்து கொண்டுபோகவேண்டுமென வார்த்தை செயல் இரண்டின்மூலமும் தமிழவன் வற்புறுத்திவருபவர். பிலிப் சொலெர் எழுத்தை அதிகம் நேசிப்பதில்லை. கலைநேர்த்திக்குப்பதிலாக, அறிவியல் கூறுகள் அதிகம் தலைவிரித்தாடுவதுபோல உணர்வேன். தேன்கூட்டைக்கலைத்ததுபோல சொற்களை சிதறடித்து, புனைகதை என்பதைக்காட்டிலும், மொழிநூலொன்றை படிப்பதுபோல இருக்கும். நிறைய எழுதுவதிலும், எதையாவது சொல்லிவிட்டு பிறபடைப்பாளிகளிடம் வாங்க்கிக்ட்டிகொள்வதிலும் ஒருவகையில் பிரெஞ்சு ஜெயமோகன். தமிழவன் மீதுள்ள மரியாதை மற்றும் விசுவாசம் காரணமாக Eclaircie என்ற நாவலை பிடிப்பின்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
3. மொழிபெயர்ப்’பு
காலச்சுவடிற்காக அல்பெர் கமுய் கட்டுரைத் தொகுப்பொன்றை மொழிபெயர்க்கிறேன். கடுமையான் சவால்தான் பல நேரங்களில் சரியாக த் தமிழ்சொற்கள் அமைவதில்லை. உதார ணமாக நூலின் பெயரிலேயே பிரச்சினை தொடங்குகிறது. ‘L’homme révolté’ என்ற பிரெஞ்சு சொல் செய்திக்கும், ஆங்கில மொழிபெயர்ப்பில் அதனை ‘The Rebel’ எனக்கூறுவதற்கும் நிறைய வித்தியாசம். தவிர தமிழில் ‘புரட்சி’ என்ற சொல்லை முடிந்த அளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழர்களின் ‘புரட்சியை’ தத்தெடுத்தால் அல்பெர் கமுய் என்னை மன்னிக்கவேமாட்டார். புரட்சி என்ற சொல்லை சரியாககக்கையாண்டவர் பாரதிதாசன் மட்டுமே, இன்றைக்கு அது கட்டெறும்பாக இருக்கிறது . இரண்டாவது பிரச்சினை நூலில் ஆங்காங்கே வேற்று நூல்களில் அவர் படித்த செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ளன, குறிப்பாக அவருடையதும், பிற அறிஞர்களுடையதுமான பல மெய்யியல் கோட்பாடுகள். உதாரணம் Respirer, c’est juger. தமிழில் “சுவாசிப்பதே, தீர்ப்பளித்ததுபோலத்தான்” என்ற பொருளில். அல்பெர் கமுய் யின் அபத்தவாதத்தை படித்தறியாதவர்களுக்கு இது போன்ற வரிகள் குழப்பததை அளிக்கக்கூடும். அதை தெளிவுபடுத்தவேண்டிய கடமையும் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதாக நினைக்கிறேன்.
4. Marché de Noël de Strasbourg
எங்கள் ஊரில் ( Strasbourg) கிறிஸ்துமஸ் அலங்காரம், கடைகள் என்று சூடுபிடித்துவிட்டன. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கிறிற்துமஸ்ஸ¤க்குத் தனியாக கடையொன்றை (இந்திய கலைப்பொருட்கள், ஆரோவில் ஊதுபத்திகள்) போடுவதுண்டு, ஒரு மாத காலம் நீடிக்கும். க்டந்த இரண்டுவருடங்களாக அதை நிறுத்திவிட்டேன். அலுத்துவிட்டது. பிரான்சுநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு அதிகம் உல்லாசப்பயணிகள் கூடும் நகரம் ஸ்ட்ராஸ்பூர். கிறிஸ்துமஸ் கடைகளை பார்க்கவென்றே, ஐரோப்பா அமெரிக்க சுற்றுலாவாசிகள் இந்நகருக்கு வருவார்கள். அக்காலங்களில் சூடான ஒயின், தார்த் •பிளாம்பே, வறுத்த மரோன், மசாலா சேர்த்த இனிப்பு ரொட்டி ஆகியவற்றை கிறிஸ்துமஸ் கடைகளைப் பார்க்கவருகிற பயணிகள் வாங்கத் தவறமாட்டார்கள், தவிர ரெஸ்டாரெண்ட்டில் ஷ¤க்ரூத் (Choucroute) சாப்பிடாத வெளியூர்வாசிகளைப் பார்க்கமுடியாது.
————————————-