பார்சலோனா -1

(இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்சலொனாவிற்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன் . உயிரோசை இணைய இதழில் தொடராக வந்தது. அதன் மறுபிரசுரம்.)

எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரைக் கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா…), ஃப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே பதில்சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள், ஃபிளாமெங்க்கா தாளகதியை வாய்க்குள் கொண்டுவந்ததுபோல ஸ்பானிஷ் சொற்கள், தூக்கி எறியப்பட்ட பாத்திரங்களாக நங் நங்கென்று நெஞ்சில் விழுந்து காதை அடைக்கின்றன, செம்பையும் பறவை முனியம்மாவும் சேர்ந்து நிரவல் செய்வது போன்றதொரு சப்தம் நான்கு திசைகளிலிருந்தும் வருகிறது.

ஸ்பானிய மொழி அப்படியொன்றும் இளப்பமான மொழியுமல்ல. பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில் சொல்லப்போனால், பிரேஸிலைத் தவிர்த்து பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஸ்பானிஷ்மொழிதான் அரசாங்க மொழி, இது தவிர வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமாக வசித்துவருகிறார்கள். எனினும் இத்தாலி மொழியையும், ஸ்பானிஷ் மொழியையும் பிரித்து அறியமுடியாமல் பல நேரங்களில் திணறுவதுண்டு. மொழி மாத்திரமல்ல; உணவு, கலாச்சாரம் எனபவற்றிலெல்லாங்கூட இத்தாலிக்கும், ஸ்பெயினுக்கும் மேலோட்டமாகப் பார்க்க வித்தியாசம் எதுவுமில்லை என்பதுபோலத்தான் தெரிகிறது.

பொதுவாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பானியர், இத்தாலியர், போர்ச்சுக்கீசியர்களெனில் பொருளாதாரத் தராசில் எடை குறைந்தவர்கள். அண்மைக் காலங்களில் இம்மூன்று நாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக பிரான்சுக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் ஆப்பிரிக்க அரபுநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தபோதிலும் இன்றைக்கும் பிரான்சு நாட்டு வெளிநாட்டவரில் ஏறக்குறைய பதினேழு இலட்சம்பேர் இம்மூன்று நாடுகளைச்சார்ந்தவர்களே. ஒரு காலத்தில் இஸ்டான்புல் தெருக்களில் 70 மொழிகளைப் பேசுகின்ற மக்களைச் சந்திக்க முடியுமாம், அங்கு கிரேக்க இஸ்லாமியரும், அர்மீனிய கத்தோலிக்கர்களும், அரபு கிறிஸ்துவர்களும், செர்பிய யூதர்களும் சேர்ந்து வாழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. அப்பெருமையை இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய நகரங்கள் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் முப்பது ஆண்டுக்காலம் வாழ்ந்திருந்தும், சீனாவையும், பாகிஸ்தானையும், பங்ளாதேஷையும், இலங்கையையுங்கூட ஏட்டில் வாசித்ததுதான், செய்திகளில் அறிந்ததுதான். இன்றைய தினம் கடவுச்சீட்டின்றி, விசா இல்லாமல் வாரத்தில் ஒருநாளேனும், பாகிஸ்தானுடன் கைகுலுக்கவும், சீனாவுடன் முகமன் கூறவும், பங்களா தேஷுடன் நேசத்தை வெளிப்படுத்தவும், இலங்கையுடன் உறவு பாராட்டவும் முடிகிறது. உலகின் அத்தனை மனிதர்களுக்கும், அத்தனை இனங்களுக்கும் ஏதோவொரு வகையில், ஏதோவொரு பெயரில் மேற்கத்திய நகரங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றன. ஆக உலக நாடுகளின் பண்பாடுகளும், உணவுமுறைகளும் அசலாக இல்லையென்றாலும் நகலாக அறிமுகமாகியிருந்ததால் பெரிய எதிர்பார்ப்புகளென்று எதுவுமில்லை.

பாரீஸிலிருந்து பார்சலோன் ஒன்றரை மணிநேர விமானப்பயணம். 1992இல் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டின்போது விமானத் தளம் விரிவாக்கப் பட்டிருக்கவேண்டும், பெரிதாகத் தெரிந்தது. ஐரோப்பிய நாடுகளில் அதுவும் நாங்கள் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர்நகரில் எளிதில் வாய்க்காத தட்பவெப்ப நிலையும், தென் அமெரிக்க பனைமரங்களும், தோல் பழுத்த ஐரோப்பியரும், பெரியதலைகொண்ட சிவப்பிந்திய வம்சாவளியினரையும் பார்க்க, அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமானத் தளத்தை நினைவுபடுத்தும் சூழல். பார்சலோனா விமானத் தளத்தில் ஸ்பானிய மொழியைக்காட்டிலும் வேறொரு மொழி உபயோகத்தில் இருந்தது, தகவற் பலகைகளில் தவறாமல் அம்மொழி ஸ்பானிஷ் மொழிக்குக் கீழே இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. விசாரித்ததில் கட்டலான் என்றார்கள், ஸ்பானிஷ் மொழிக்கும் கட்டலான் மொழிக்கும் அதிகம் பேதமிருக்காதென்று நினைக்கிறேன்.

ஸ்பானிஷ் சொல்லுடன் ஒரு ‘O’வைக் கூடுதலாகப்போட்டால் போதுமென்றாகிறது, உண்மை என்னவென்று மொழியை அறிந்தவர்கள்தான் சொல்லமுடியும். கட்டலான் மொழி பிரான்சின் தென்பகுதியிலும், இத்தாலிநாட்டைச் சேர்ந்த சர்தினியா தீவிலும் ஸ்பெயின் நாட்டின் வடபகுதியிலும் பேசப்பட்டபோதிலும், பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள அந்தோரா என்ற மிகச்சிறிய நாட்டில்மட்டுமே ஆட்சிமொழியாக நேற்றுவரை இருந்த மொழி. பிரான்சைச் சேர்ந்த கட்டலோனியப் பிரதேசத்தைக் காட்டிலும் ஸ்பெயின் நாட்டுக் கட்டலோனியப் பகுதி சிறப்பு அதிகாரத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்துவருகிறது. 1979லிருந்து ஸ்பானிஷ் மொழியோடு கட்டலான் மொழியையும் அரசுமொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனினும், கட்டலோனியரில் 68 விழுக்காடு மக்களே கட்டலான் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். எனினும் இந்த 68 விழுக்காடு மக்கள் கட்டலோனிய நிர்வாகத்தில், பிரதேசத்தின் பண்பாட்டில் அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதை, விமானத் தளத்தில் இறங்கிய சில நொடிகளில் மனதிற் கொள்ளவேண்டியிருந்தது. “எங்கள் மக்கள் கட்டலான் மொழியில் வெளிவரும் படைப்புகளையே விரும்பி வாசிக்கிறார்கள். பிறமொழிப் படைப்புகளென்று வருகிறபோதும் ஸ்பானிஷ்மொழியினும் பார்க்க கட்டலான் மொழிபெயர்ப்பென்றால், நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என, பார்சலோனாவாசியொருவர் உள்ளூர் இரயில் பயணத்தின் போது குறிப்பிட்டார்.

நாங்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதி கடற்கரைக்கு வெகு அருகிலிருந்தது. விமானத் தளத்திலிருந்து அங்குசெல்ல, சிறப்புப் பேருந்துகளும் இரயில்களுமிருந்தன, எங்கள் தேர்வு இரயில். பிரான்சு நாட்டில் அதிவேக இரயில்களைத்தவிர புற நகர் இணைப்பு இரயில்களும் சரி, சுரங்க ரயில்களும் சரி பார்சலோனா நகர இரயில்களோடு ஒப்பிடுகிறபொழுது மிகவும் பின் தங்கியிருந்தன. பயண திசை, கால அளவு, எந்த நடைபாதை மேடைப்பக்கம் கதவுகள் திறக்கவிருக்கின்றன என்பவற்றை பயணிகளுக்குத் தெளிவாக மின்னணு தகவற்பலகைகள் அறிவிக்கின்றன. பாரீஸ் இரயில்களில் ஆப்பிரிக்க மக்களை நிறைய பார்க்கலாம், பார்சலோனாவில் குறைவு, மற்றபடி இரயில்களில் குழலிசைத்தும், பாட்டுப்பாடியும் பிச்சைகேட்பவர்கள் சென்னை, பாரீஸ், பார்சலோனா என்றுபோனாலுங்கூட உடன் பயணிக்கத்தான் செய்கிறார்கள். பார்சலோனா நகரத்தை நெருங்கியபோது, கடைகள் மூடியிருந்தன, வாகனங்களின் எண்ணிக்கையும் ஓட்டமும், ஐரோப்பாவின் பெரிய நகரங்களின் நண்பகலுக்கு ஒத்ததாக இல்லை, சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. விசாரித்தபோது கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. அங்கு பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டு மீண்டும் பிற்பகல் நான்கு மணி அளவில்தான் திறப்பார்களென்றும் அதன்பிறகு இரவு பத்துமணிவரை வியாபாரம் செய்வார்களென்றும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. உணவு விடுதிகளெல்லாங்கூட இரவு எட்டு மணிக்குமேல்தான் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதை அடுத்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். பிரான்சில் அலுவலகங்களைத் தவிரக் கடைகளை நாள் முழுவதும் திறந்துவைத்திருப்பார்கள் என்பதோடு, பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்து பிறநாட்களில் இரவு ஏழுமணியோடு மூடிவிடுவது வழக்கம். பிலாஸ் தெ லா கட்டலோனாவில் இறங்கியபொழுது நகரம் உறக்கம் கலைந்திருக்குமென நினைக்கிறேன். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களைக் கலைத்தது போன்றதொரு மனித நடமாட்டத்தைக் காணமுடிந்தது.

பார்சலோனா நவீனத்தின் அவ்வளவு நுணுக்கங்களையும், அறிவியல் ஞானத்தையும், உரியவகையில் பயன்படுத்திக்கொண்டுள்ள நகரமென்று கேள்விப்பட்டிருந்தேன். படைப்புலக ஆளுமைகள், கலைஞர்கள், ஓவியர்கள் எனப் பலரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் மேடையாக நகரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நவீனத்தையும் பழமையையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கொரு நல்ல உதாரணம்: 1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 இல் கட்டி முடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிற லா சக்ரதா ஃபமிலியா (Sagrada Familia – Temple of the Holy Family). இதுவரை நாங்கள் பார்த்துள்ள நகரங்களில் பார்சலோனா அளவில் வேறொரு நகரம் எங்களைக் கவர்ந்ததில்லை எனபதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். காரணம் ‘பூவும் புகையும், பொங்கலும் சொரியும்’ பார்சலோனா ஓர் இந்திர விழா நகரம்.

– தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s