துருக்கி பயணம்-1

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி       
மார்ச்-26

[துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் முஸ்தபா கேமால்  மொழி சீர்திருத்தத்தையும் கொண்டுவந்தார், அவரால் அறிமுகப்படுத்தபட்ட இன்றைய துருக்கிமொழி அராபியமொழியை விலக்கிக்கொண்டு இலத்தீன் வடிவத்தைபெற்றுள்ளது. துருக்கிமக்கள் அரபு மொழியை முற்றுமுதலாக மறந்தவர்கள் அல்லது அதன் தேவையின்றி வாழப்பழகியவர்கள்; குர்-ஆன் கூட துருக்கிமொழியில் எழுதப்பட்டு (மொழி பெயர்க்கப்பட்டு அல்ல) வாசிக்கப்படுகிறது.]

எங்கள் துருக்கிப்பயணம் மார்ச் 26ந்தேதி என திட்டமிடப்படிருந்தது. இப்பயணத்தில் மனைவியும் நானும் பங்குபெற்றோமென்றாலும், இரண்டு நாட்கள் முன்னதாக பாரீஸில் நான் இருக்கவேண்டியிருந்தது. நண்பர் காலச்சுவடு கண்ணன் பாரீஸ் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார். துருக்கி யணப்படுவதற்கு முன்னால் அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். என்ன புரிந்துகொண்டேனோ அல்லது எப்படி புரிந்துகொண்டேனோ, பாரீஸில் 26ந்தேதிவரை கண்ணன் இருப்பதாக  நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து கிடைத்த மின்னஞ்சல் 23ந்தேதியன்றே பிற்பகல் மாலை 5.30க்குப் பாரீஸிலிருந்து புறப்பட்டு இலண்டன் செல்வதாக தெரிவித்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. 23ந்தேதி மாலை 4.30க்கு பாரீஸை அடைகிறேன் என்றாலும், இலண்டன் செல்லவிருந்த அவருடைய பயண இரயில் பத்து நிமிட தூரத்தில் இருந்ததால் சந்தித்து ஒரு முப்பது நிமிடம் அவருடன் உரையாடமுடியுமென்றாலும் போகிறபோக்கில் அவரை சந்திப்பது நாகரீகமல்ல என்பதால் 23ந்தேதியென்றிருந்த எனது முன்பதிவை ரத்துசெய்து ஒரு நாள் முன்கூட்டியே பாரீஸ் செல்ல முடிவுசெய்தேன். பாரீஸ் பிரான்சுவா மித்தரான் தேசிய நூலகத்தில், செஞ்சி நாவல் தொடர்பாக சில தகவல்களை பெறவேண்டியிருந்ததால் இத்தேதிமாற்றம் உதவக்கூடுமென  நினைத்தேன்.

எனவே 22 மார்ச் அன்று பிற்பகல் இரண்டேகால்மணிக்கு TGV பிடித்து நான்கரை மணிக்கெல்லாம் பாரீஸ் கிழக்கு திசை பயண இரயில்நிலையமான Gare de l’estக்கு வந்தாயிற்று. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்ட்ராஸ்பூர் – பாரீஸ் இரயில் பயணத்திற்கு( சுமார் 500 கி.மீட்டர் தூரம்) நான்கு அல்லது நான்கரை மணிநேரத்தை நாங்கள் ஒதுக்கவேண்டும். அது பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் ஒன்றே முக்கால் மணி நேரம் என்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்துவது உபயோகமான காரியம். 22ந்தேதி பிற்பகல் நான்கரைமணிக்கு Gare de l’estல் இறங்கினேன். அங்கிருந்து பத்துநிமிடத்திற்கு குறைவான தூரத்தில் பிரான்சு நாட்டின் வடபகுதிகளுக்குச் செல்லக்கூடிய இரயில் நிலையம் (Gare du Nord)இருக்கிறது- கண்ணன் மறுநாள் இலண்டன் செல்ல இந்த நிலையத்திற்குதான் போகவேண்டும். இப்பகுதி தமிழர் கடைகள் அதிகமாக குவிந்துள்ள இடம். தொடக்ககாலங்களில் இந்தியர் கடைகள் விரல் விட்டு எண்ணகூடிய அளவில் ஒன்றிரண்டு அங்கிருந்தன. பின்னர் இலங்கைத் தமிழர்கள் வரத்தொடங்கியபிறகு குறிப்பாக 90களில் புற்றீசல்கள்போல தமிழ்க்கடைகள் முளைத்தன. மளிகைக்கடைகள், குறுந்தட்டு, இசைதட்டு கடைகள், ஆடை ஆபரணக்கடைகள் எண்ணிக்கையில் அதிகமிருப்பினும், இவற்றுக்கிடையில் அறிவாலயம், தமிழாலயம் அத்தியும் பூத்திருக்கிறது. இரண்டும் பாரீஸிலிருக்கும் புத்தகக்கடைகள்.

ஐந்துமணிக்கெல்லாம் பெட்டியை இழுத்துக்கொண்டு அறிவாலயம் வந்துவிட்டேன். நண்பர் கண்ணனை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டாரெண்ட்டிற்குச் சென்று இருவருமாக தேனிர் அருந்தினோம். பாரீஸில் அவரது சந்திப்புகள் எப்படியிருந்தனவென கேட்டேன். பிரெஞ்சு பதிப்பாளர்கள் தமிழிலிருந்து படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் அக்காரியத்தை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே செய்யவேண்டுமென்டுமென எதிர்பார்க்கிறார்களென்றார். “அவர்கள் சொல்வதும் நியாயமே நான் எந்தவொரு பிரெஞ்சுக்காரரும் தமிழில் செய்கிறேனென முன்வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேனென்று, பிரெஞ்சு பதிப்பாளர்களின் கூற்றை நியாயப்படுத்தவும் செய்தார்.

பாரீஸ் நகரில் தமிழ்வாணி என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வருடம்தோறும் உழைப்பையும் பணத்தையும் தனி ஒருவராக அளித்து இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜெயராமன் என்ற நண்பர். எதிர்வரும் ஜூலைமாதம் தமிழிலக்கிய மாநாடு என்ற ஒன்றை கவிஞர் இந்திரனின் உதவியுடன் நடத்த இருக்கிறார்.  அவர் அவ்வபோது விழா தொடர்பான ஏற்பாடுகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார். இவ்விடயத்தில் எனக்கு அதிக ஆர்வமில்லை என்பதற்குப் பலகாரணங்கள் இருக்கின்றன. எனினும் ஜெயராமனைப்போன்றவர்கள் பிழைப்புக்காக மொழியை கையில் எடுப்பவர்களல்ல, மொழியின் பிழைப்புக்காக தங்கள் கையிலிருப்பதை கொடுக்கிறவர்கள் என்ற வகையில் அவரை மதிக்கிறேன். இந்த நண்பர் ஜெயராமனும், வொரெயால் தமிழ்ச் சங்க தலைவரும் நண்பருமான இலங்கைவேந்தனும் காலச்சுவடு கண்ணனை சந்திக்க விரும்பினர். அறிமுகப்படுத்தினேன். கண்ணனிடம் நாளை சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு அன்றிரவு மகன் வீட்டில் சென்று தங்கினேன்.  23 -3-2012 காலை பிரான்சுவா மித்தரான் நூலகத்திற்கு சென்றுவிட்டு கண்ணனுடன் மதிய உணவிற்கு திட்டமிட்டிருந்தபடி பன்னிரண்டரைக்கெல்லாம் மீண்டும் அறிவாலயம் வந்துவிட்டேன். கண்ணன் தயவில் பாரீஸில் தீவிர இலக்கியசார்ந்து இயங்கவும், சிற்றிதழ்களை வாசிக்கவும் செய்கிற நண்பர்களை சந்திக்க முடிந்தது. மாலை நான்கு மணிவரை உரையாடிமுடித்து கண்ணனை அழைத்துக்கொண்டுபோய் இலண்டனுக்கு இரயிலேற்றிவிட்டு இரவு எட்டுமணிக்கு பாரீசில் வசிக்கும் மகன் வீடுதிரும்பினேன்.

24-3-2012 காலை மீண்டும் பிரான்சுவா மித்தரான் நூலகம் போகவேண்டியிருந்தது. மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருந்த பாதரெ பிமெண்ட்டா போர்ச்சுகீசிய மொழியில் எழுதிய நாட்குறிப்பின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு அங்கு கிடைத்தது. இந்நூல்நிலையம்பற்றி முடிந்தால் தனியாக ஒரு கட்டுரை எழுதவேண்டும். பிற்பகல் கைவசமிருந்த சாண்ட்விச்சை நூலகத்திலேயே முடித்துவிட்டு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து ரயிலில் வந்திருந்த மனைவியை எதிர்பார்த்து மீண்டும் பிற்பகல் Gare de l’est பின்னர் மகன் வீடென்றானது. 25.-3-2012 ஞாயிற்றுகிழமையும் 26 -3-2012 திங்கட்கிழமை நான்கு மணிவரை நடந்தவைக்கும் துருக்கி பயணத்திற்கும்(மீண்டும் ஒருமுறை பெட்டிகளை சரிபார்த்து சுமையைக் குறைத்து அவரவர் தேவைக்குரியவை இருக்கிறதாவென எனது மனைவி திருப்திபட்டதைத் தவிர்த்து)  பெரிதாய் சம்பந்தமில்லை. திங்கட்கிழமை மாலை நான்குமணிக்கு கால் மணி தூரத்திலிலிருந்த இரயில் நிலையத்திற்குச்சென்றோம்.  RER B வழித்தடமது. அங்கிருந்து Charles -De-Gaulle விமானதளத்திற்குச் செல்ல நாற்பது நிமிடம் தேவைப்படுகிறது விமான தளமென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். விமான தள வரியை இரயில் பயணச்சீட்டில் சேர்த்திருந்தார்கள். விமான பயணச்சீட்டில் ஏற்கனவே அவ்வரியை அதை செலுத்தியிருக்கிறபோது இரண்டாவது முறையாக இரயிலிலும் விமான தள வரியை கேட்பது நியாயமா என்று இரயில் பயணச்சீட்டு விற்பனைசெய்த பெண்மணியிடம் கேட்டேன். “சொல்வது நியாயம்தான், என்ன செய்வது உங்கள் கோரிக்கையை வருகிற அதிபராவது பரிசீலிக்கிறாராவென்று பார்ப்போம், என்றாள், அப்பெண்மணி. மறுபேச்சின்றி அவள் கொடுத்த பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு நாற்பது நிமிடத்திற்குப்பிறகு சார்ல் தெகோல் விமானநிலையத்தில் இரண்டாவ்து முனையத்தில் இறங்கிக்கொண்டோம்.

நாங்கள் செல்லவேண்டிய விமானம் மூன்றாவது முனையத்திலிருந்து புறப்படுகிறது. 200 அல்லது 300 மீட்டர் தூரம் பெட்டிகளை இழுத்துக்கொண்டு நடந்திருப்போமென நிற்கிறேன். மூன்றாவது முனையத்தை ஒட்டுமொத்தமாக சுற்றுலா அமைப்பாளர்கள் வசம் ஒப்படைத்திருந்தார்கள். சுற்றுலா நிறுவனங்களின் பெயர்களை வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது. எதிர்பட்ட தடுப்புகளையும் கணிணி விளம்பர பலகையும் கடந்துவந்து பார்த்தபோது நான்கு முனையங்களிலும், எங்களைப்போலவே துருக்கி சுற்றுலாவிற்கு பதிவுசெய்திருந்தவர்கள் எட்டுவரிசைகளில் காத்திருந்தார்கள். வரிசையில் எங்களுக்குப்பிறகு வந்து நின்ற மூவரும் அடுத்துவந்த நாட்களில் தொடர்ந்து நட்பு பாராட்டுவார்களென தோன்றவில்லை. நாங்கள் பயணம் செய்த தருணம் பிரான்சில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சத்திலிருந்த நேரம், தீவிரவாத தாக்குதலில் நான்கு ராணுவீரர்களும், பள்ளி மாணவர்களும் சுடப்பட்டிருந்தனர்.  பாதுகாப்பு கெடுபிடி வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக இருந்தது. அன்று வரிசையிலிருந்த பயணிகளில் ஒரு ஆப்ரிக்க குடும்பத்தை அடுத்து நானும் எனது மனைவியும் நிறத்தால் வேறுபட்டவர்கள். ஆப்ரிக்க மக்களுக்கும் சப்பை மூக்கு சீனருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியத் துணைக்கண்டமென்றால் பிரச்சினை கூடைகூடையாக  வரும், அன்றும் வந்தது. நம்முடைய முகங்களில் அப்படியென்ன எழுதப்பட்டிருக்கிறதோ. விதிமுறைகளை நமக்கென்றால் கூடுதலாக எழுதிவைத்திருப்பார்களென நினைக்கிறேன். ஆனானப்பட்ட அப்துல் கலாம், ஷாருக்கான் போன்றவர்களுக்கே சனிதிசை என்கிறபொழுது நம்மைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. படுக்கவைத்து ஸ்கேனின் வருடலுக்கு அனுப்பவில்லையே தவிர மற்ற சடங்குகளெல்லாம் நடந்தேறியது.

விமானம் புறப்படும்போது இரவு 10.30.மணி. விமானத்தில் சேவை குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாமென மகனும் மருமகளும் எச்சரித்திருந்தார்கள். விமானம் புறப்பட்டு பறந்துகொண்டிருந்த நேரத்தில், சேவையென்று தொடங்கியதுமே தள்ளுவண்டியில் கொண்டுவந்த பானங்களையும் கொறிப்பான்களையும் பயணிகளிடம் விற்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அதிபர்களுக்கு அரசாங்கத்தின் கஜானா இருக்கிறது, இந்திய அதிபரெனில் உற்றார் உறவினர் பேரன் பேத்திகளுக்கெல்லாங்கூட மக்கள் வரிப்பணம் உதவக்கூடும். நாம் அப்படியா எண்ணிபார்த்துதான் செலவிடவேண்டியிருக்கிறது.  இரவு உணவென்று எதுவும் விமானத்தில் கிடைக்காதென்கிற ஐயம் எங்களுடன் பயணம்செய்த பலருக்கும் இருந்திருக்கும்மென நினைக்கிறேன். ஒவ்வொரு பயணியும் ஐந்து யூரோவாவது செலவிட்டிருப்பார்கள். தோராயமாக  900 யூரோ சுற்றுலா ஏற்பாட்டாளருக்கு கிடைத்திருக்குமென மன ஸ்லேட்டில் கணக்கைப் போட்டேன். . எங்களை சமாதானப்படுத்தவென்று இரவு பதினொன்றரை மணியளவில் (உறங்கியவர்களை எழுப்பி) சாண்ட்விச் கொடுத்தார்கள். நள்ளிரவு ஒரு மணி அளவில் மத்திய தரைகடலில் உள்ள அண்ட்டல்யா துறைமுகத்தை நெருங்கும்போது வானிலிருந்து பார்க்க லாஸ்வேகாஸ் நினைவுக்கு வந்தது. முழுமுழுக்க சுற்றுலாவாசிகளை நம்பி அண்டல்யாவின் தற்போதைய பொருளாதாரம் இருப்பதாக அறிந்தேன். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் பயண ஏற்பாட்டாளர் எங்களுரிய பேருந்துக்கு அழைத்து போனார். 30 சுற்றுலாபயணிகளுக்கு ஒரு பேருந்தென ஒதுக்கியிருந்தார்கள்.  பேருந்தில் அமர்ந்ததும் வழிகாட்டி தம்மையும் பேருந்து ஓட்டுனரையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் நாளைக்கு கல்வடோஸ் பயணிப்பதற்கு பதிலாக இறுதிநாள் நிகழ்வை வைத்துக்கொள்ளலாமா என்றார். ஏற்கனவே அவர்கள் தீர்மானித்திருந்ததை தகவலுக்காக தெரிவிப்பவர்போல பேசினார். எனினும் வழிகாட்டிகளுக்கே உரிய நாவன்மை அவரிடமிருந்தது. பிரெஞ்சுமொழியை மிக நன்றாக பேசினார். எங்களுக்காகாவே துருக்கியில் பிறந்து பிரெஞ்சு மொழி பயின்று வழிகாட்டி தொழிலுக்கு வந்ததுபோல இருந்தது ஆசாமின் பேச்சு. 30நிமிட பயணத்தில் எங்கள் ஓட்டல் வந்தது. ஓட்டலைப்பற்றி எந்தகுறையும் சொல்வதற்கில்லை. முதல் நாள் ஆரம்பித்து இறுதிநாள்வரை ஓட்டல், உணவு பயணம் அனைத்தும் இனிமையாகவே கழிந்தது. உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு துருக்கியில் வேறு அனுபவங்கள் இருக்கின்றன, சொல்கிறேன்.

(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s