‘தேனும் திணை மாவுங்கொண்டு’ விருந்தினர்களை உபசரித்த காலமொன்றுண்டு. ‘தேன்’ என்பதற்கு மதுவென்றும், கள்ளென்றும் பொருள். அருந்தேன், பைந்தேன், நறுந்தேன் என எழுதிக் கை சோர்ந்தவர்களையும் தமிழில் கண்டிருக்கிறோம். ”செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”. எங்கெல்லாம் இனிமையின் அடர்த்தியும், செறிவும் கொழகொழப்பும் இடம்பெறவேண்டுமோ, அங்கெல்லாம் படிமமாக தேன் இடம் பிடித்துவிடும். ஈழத்திற்கும் ‘மீன்பாடும் தேன் நாடு’ என்றபெயருண்டு. தமிழின் இனிமைக்கு வலு சேர்க்கவும், வக்காலத்தாகவும் மரபு இலக்கியங்களில் தேன் புறங்கை வழிய எடுத்தாளப்பட்டிருக்கிறது. தேனில் அறுபது வகைகளுண்டா, இருக்கலாம் இல்லாமலுமிருக்கலாம், யாமறியேன் பராபரமே! துளியை வெள்ளமாகவும், துகளை மலையாகவும் பருத்துப்பார்த்துப் பழக்கப்பட்ட தமிழருக்கு உயர்வு நவிற்சி அந்நியமே அல்ல. அறிந்தவகையில் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன், புறக்கடை தேன்கூட்டில் எடுத்தத் தேன் புற்றுத் தேன் என்றும் சொல்லக்கேள்வி. ஆக எனது ஞானத்தின்படி நான்குவகைகள். மிச்சமுள்ள ஐம்பத்தாறுவகைக்குக் கண்ணதாசனின் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் என்ற பாடலை கணக்கிற் சேர்த்துக்கொண்டால்தான் உண்டு, அப்போது கூட அறுபது தேறாதென்றுதான் நினைக்கிறேன்.
தேனின் மணத்தைக்கொண்டு கொம்புத்தேனா, மலைத்தேனா எனக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள். எங்கள் கிராமத்தில் சித்திரை வைகாசிமாதங்களில், குறவர்கள் சும்மாடில் தேன் குடத்தைச் சுமந்துகொண்டு வருவார்கள், ‘சளுக் என்று சுண்டுவிரலையும் மோதிரவிரலையும் தேனில் நனைத்து, ‘மோந்து பாருங்க சாமி’ என்பார்கள். அப்படித்தான் ஒருமுறை மலைத்தேன் என்று கூவி விற்றுக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து, அம்மா தேனை வாங்கிக்கொண்டிருந்தார். அங்கே வந்த என் அசட்டு மாமா ஒருவர், “எங்கே தேனைக் கொடு முகர்ந்து பார்க்கணும்” என்றார். அவளும் அளந்து ஊற்றிக்கொண்டிருந்த மாகாணியை என் மாமாவிடம் நீட்டினாள். மூக்கை நீட்டிய மாமாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே, இருக்கின்ற குடல்மொத்தத்தையும் வெளியிற்கொண்டுவந்து விடும் யோசனையில் ‘உவ்வே’ என்றார். குறத்தியிடமிருந்து, “அய்யா! நீங்க தப்பா எடுத்துகாதீங்க, சித்தேமுன்னே அணிப்பிள்ளையை உரிச்சேன், அதுதான் கையிலே வாசம், மற்றபடி மலைத்தேனுன்னு எங்க சாமி சத்தியமா சொல்லமுடியும்”, என்று அப்பிராணியாக பதில் வந்தது.
மலைத்தேன் எடுக்க வில்லும் அம்புமாக புறப்பட்டுப்போவார்கள். கொம்புத்தேனுக்கு தீப்பந்தம் உதவியதைப் பார்த்த அனுபவம், சுயமுயற்சியாக தேனெடுக்க என்னைத் தூண்டியது. வீட்டுப் பின்புறத்திலிருந்த புளியமரத்தினடியில் நான்கைந்து நண்பர்கள் சகிதம் தாழ்வாக இருந்த கிளையைப் பிடித்து தொங்கியபடி ஆட்டம்போட தலைக்கு மேலே அடுத்திருந்த கிளையில் தேன்கூடொன்று இருந்தது. தேனிக்கள் ஏதுமில்லை. ஒரு குச்செடுத்து தட்டினால் கீழே விழுந்துவிடுமென்று எங்கள் கும்பலில் ஒருவன் சொல்ல, அவன் பேச்சை நம்பி, பக்கத்திற் கிடந்த சவுக்கு மிலாரை எடுத்து உறியடித் திருவிழா விளையாட்டை நடத்த அடுத்த ஐந்து நிமிடத்தில் தேனடையோடு தேனிக்களும் சேர்ந்தாற்போல முகத்தில் மொத்தென்று விழுந்தன. பயந்து அலறினேன். பையன்களுக்குக் கொண்டாட்டம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முகம் பூசனிப்பழம்போல ஊதிப்பெருத்ததின் காரணமாக மூன்று கல் தொலைவிலிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தின் கம்பவுண்டர் போட்ட ஊசியின் வலி தேனீக்கள் கொட்டியதைக்காட்டிலும் அதிகம், இன்னமும் நோஸ்ட்டால்ஜியாக கையிலிருக்கிறது.
தேனடையில் மொய்த்திருக்கும் தேனீக்களை, இலட்சமிருக்குமா கோடியிருக்குமா என தோராயமாகக் பந்தயங்கட்டி, அந்த உதவாக்கரை மாமாவை கூட்டிவைந்து எண்ண வைத்திருக்கிறேன், அவரும் வேலைமெனகெட்டு எண்ணிக்கொண்டிருப்பார். எனக்குப் பிடிபடாத மர்மம். இடமில்லை திரும்பிப்போ என்று சொல்லும் வகையில் அவை நடந்துகொண்டதாகவோ, தேனடைவரை வந்து இடமின்றி ஏமாற்றத்துடன் திரும்பும் தேனிக்களைக் கண்டதாகவோ நினைவில்லை, அவைக்களுக்குள் இருக்கிற பரஸ்பஸ ஒற்றுமை வியப்பில் ஆழ்த்துகிறது. தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?/ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!/தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்/ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!” என்பது இறைவன் முகவரியை தொலைத்தவர்களுக்கு திருமூலர் தருவது முகவரித்தேன். தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ? தெரியாது, ஆனால் தேனின் நிறத்தை மேற்கத்தியர்கள் ‘Blonde’ என்று கூறுகிறார்கள். ஐரோப்பிய பெண்களின் அழகு ரகசியம் இந்த ‘Blonde’ல் அடங்கி கிடக்கிறது, கருங்கூந்தலில் ஜொலிப்பதில்லை. பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது தேன்மொழி எந்த நாடாக இருந்தாலும்.
யூசு·ப் ஆறுவயது சிறுவன், தனது பெற்றோர்களுடன் குக்கிராமமஒன்றில் வசித்துவருகிறான். தந்தைக்கு தேன் எடுத்தல் தொழில். ஊரையொட்டிய காடு அவனது அதிசய உலகம், தேனெடுத்து விற்கும் தொழில் புரியும் தந்தையுடன் காட்டிற்குச்சென்று, வானளாவிய மரங்களில் அவர் தேனெடுக்கும் அழகை கண்கள் விரிய அண்ணாந்து பார்த்தபடி வியந்து நிற்கவேண்டும், அதில் பையனுக்கு மிகவும் சந்தோஷம். ஒருநாள் பள்ளியில் பையனிடம் ஒரு பிரதியைக்கொடுத்து வாசிக்கச்சொல்ல, பையன் திக்குகிறான், கேலிசெய்யும் பையன்கள் அது முதல் அவனை தங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. நாளுக்கு நாள் தேனடைகளின் கண்ணிற்படுவது அரிதாகிபோக அடர்ந்தகாட்டிற்குள் தந்தையும் மகனும் வெகுதூரம் இப்போது ஆபத்தான மலைகளில் தேன்கூடுகளைத்தேடி செல்லவேண்டியிருக்கிற நிலையில் உணர்வுகள் உறைந்துபோக ஊமையாகிறான். ஒளிக்கரைசலில் தெப்பமாக மிதக்கும் அசல் உலகமும்; பதுங்கிய ஒளியும், பசுமையும், குளுமையும் அடர்த்தியாய் விரவிக்கிடக்கிற கானகமும் ஒன்றல்ல வேறுவேறு என மொழியப்படும் உண்மை அவனை மீளமுடியாத அதிர்ச்சியில் நிறுத்துகிறது. அண்மையில் ‘Miel'(தேன்) என்ற பெயரில் பிரெஞ்சில் மொழிபடுத்தப்பட்டு வந்திருக்கும் இத் துருக்கி திரைப்படம் ஒரு கவிதை. குறிப்பாக பையனின் தந்தை எதிர்பாராவிதமாக குதிரையிலிருந்து விழுந்தனால் நிகழும் திடீர் மரணம் சிறுவன் அவனது அம்மா இருவரின் தினசரி வாழ்க்கையில் பறிக்கும் குழியும், இன்மையும் வலிகளைத் தருகின்றன- படத்தின் இயக்குனர் Semih Kaplanoglu.
கசப்பான பூக்களிலிருந்தும் தேனெடுக்கமுடிந்த தேனிக்களாக மனித மனம் இருக்கவேண்டுமென்கிறார் போலந்து எழுத்தாளர் ஒருவர், இயற்கையில் எதுவும் நடக்கலாம், எனக்கு முடிந்ததில்லை, முடவன், கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படமுடியாது.
——-