Tag Archives: நாகரத்தினம் கிருஷ்ணா

மொழிவது சுகம் அக்டோபர்   2019: தக்கார் எச்சம் : காந்தி

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம்.

நாடறிந்த தலைவர்கள் அனைவரும் உலகறிந்த தலைவர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை.  உலகறிந்த தலைவர்களிலும் அமாவாசை  நாட்களின் பித்ருகளாக அன்றி உண்மையில் கொண்டாடப்படும் தலைவர் குறைவு. இத்தலைவர்களில் பலரும் அவரவர் சொந்த நாடுகளில்கூட  ஆராதிக்கப்படுவதேகூட வரலாறு தரும் நிர்ப்பந்த்தால்.

ஒரு தலைவரின் பெருமையும் புகழும்  அவர் மறைவிற்குப் பிறகு யார் அவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப்  பொறுத்தது.   நமக்குப் பிரச்சினை,  தலைவர்கள் அல்ல அவரை அடுத்து வருகின்றவர்கள் . « அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் » என காத்திருக்கிற அவர் நம்புகிற சீடர்கள்.

தலைவரை தொடரும்  முன் வரிசை அபிமானிகள் கூட்டத்தில்  உண்மையான விசுவாசிகளோடு மேலே குறிப்பிட்ட பழமொழிக்கிணங்க ஒன்றிரண்டு  சாமர்த்தியசாலிகள் கலந்திருப்பார்கள். திண்ணை காலியானவுடன்  தலைவர் இடத்தில் அமருகிற இந்த நரிகளின்  நோக்கம் தலைவர் விட்டுச்சென்ற அட்சயபாத்திரத்தின் ஓட்டை உடைசலைத் தட்டி ஈயம் பூசுவது. மறைந்த தலைவர் ஈட்டிய புகழை, தங்கள் வளர்ச்சிக்கு மடை திறந்து விடுவது.  தலைவரை முன்நிறுத்தி வளர்ந்ததும், ஒரு சில ஆண்டுகளில் இறந்த தலைவர் நிழல்  இவர்கள் நிஜம் என்று ஆகிப்போவார்கள். உண்மையில்  தலைமைக்கும் கொள்கைக்கும்  அபாயமாக இருப்பது  இந்த சாமர்த்தியசாலிகளே.  இந்த அபாயத்தை உணர்ந்தோ என்னவோ, முக்காலமும் உணர்ந்த இந்திய புத்திசாலி தலைவர்களில்  ஒரு சிலர் உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் அரிதாக காண்கிற வாரிசு அரசியலைப் கடைபிடிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல தலைவர்களுக்கு ‘குலசாமி’ லேபில் கிடைக்கிறது. சந்த தியினர் « பொங்க வைக்கவும், கிடாவெட்டவும், மொட்டைபோட்டு  காதுகுத்தவும் » இந்த வாரிசு அரசியல் உதவுகிறது. இவர்கள் புகழை மொட்டைபோட காத்திருக்கும் கபட சீடர்களிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

காந்தியின் வெற்றி :

நிழலுக்கு அதிகம் காத்திராமல் பாலை நிலமென்றாலும் கடந்து செல்ல துணிபவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். பெருங்கூட்டத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கட்டிக் காப்பவன், வாகை சூடுகிறான். காந்தி தேர்வு செய்த ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம், அகிம்சை சொற்கள் விடுதலைக்  களத்திற்குப் புதியவை. உயிர்ப் பலிகளை வேண்டியவை அல்ல. தொண்டர்களைத்  தீக்கிரையாக்கி தலைவர்கள் நினைவுகூர கண்டவையும் அல்ல.

ஒரு தலைவரை அவர் பிறந்த நாட்டின் எல்லை கடந்து, மொழிகடந்து, நிறம் கடந்து, சமயம் கடந்து   எவ்வித நெருக்கடியும் இல்லாத நிலையில் உலகமக்களில் ஒரு பகுதியினர்ஒவ்வொரு நாளும்  நினைவு கூரும் அதிசயம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  பிரான்சு நாட்டில் மட்டும்,  நாங்கள் வசிக்கின்ற ஸ்ட்ராஸ்பூர் உட்பட மூன்று நகரங்களில் (இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே அன்றி குறைவாக இருக்க வாய்ப்பில்லை. )  அரசின் பங்களிப்புடன் காந்தி சிலைகள். நிறுவப்படுள்ளன.  நகரில்  உள்ள ‘Café Philo’ விலும் ‘Espace Culturel des Bateliers என்கிற அமைப்பின் தத்துவ கலந்துரையாடல்களிலும் , வருடந்தோறும் காந்திய சிந்தனைகள் குறித்து பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அமைதி குறித்த அரங்குகளில் ஐநா சபை தொடங்கி பிரான்சு பாராளுமன்றம்வரை அவப்போது  காந்தி  என்கிற மூன்று எழுத்து ஒலிக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்நாள் பிரெஞ்சு அதிபர் மக்ரோன்வரை காந்தி பெயரை உச்சரிப்பதைச் செய்திகளில் கேட்கிறோம், பார்க்கிறோம்.

இங்கேதான்  நமது வள்ளுவனின் :

‘ தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

குறள் உதவுகிறது. இக்கட்டளைக்கல் சராசரி மனிதர்களை மட்டுமல்ல,  தலைவர்களை உரசிப்பார்க்கவும் உதவும். இங்கே எச்சம் என்பதை  ஒரு தலைவர் விட்டுச்சென்ற கொள்கைகள், புகழ்கள், சிந்தனைகளாக மட்டுமின்றி அவர் விட்டுச்சென்றவற்றை உண்மையாகப் பின்பற்றி அதில் வெற்றியும் பெற்ற  அப்பழுக்கற்ற சீடர்களாகவும் காண வேண்டும். காந்தியின் சீடர்களும் அவரைப்போலவே உலகெங்கிலும் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது காந்திக்குக் கிடைத்த பெருமை. இப்படியொரு பெருமை உலகில் வேறுதலைவர்களுக்கு இன்றைய தேதியில் வாய்த்ததில்லை. நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும்,  மார்ட்டின் லூதர் கிங்கின் சுயசரிதையையும் காந்தி என்கிற பெயரின்றி வாசிக்க இயலாது என்பது வரலாறு தரும் உண்மை. இத்தலைவர்கள் காந்தியைத் தங்கள் பிழைப்புக்காகக் கொண்டாடியவர்கள் அல்ல. எங்கோ பிறந்த ஒரு தலவைனை சாதிய விடுதலை, சமய விடுதலை, வர்க்க விடுதலை என்ற முழக்கமின்றி தங்கள் இன விடுதலைக்கு முன்னோடியாக கொண்டு  நேசித்த அபிமானிகள். காந்தியைத் ‘ தக்கார்’ என்பதை உலக அரங்கில் எண்பிக்கும் எச்சங்களாக இருப்பவர்கள் யாரோ எவரோ அல்ல ஆப்ரிக்க காந்தி என ழைக்கபடும் நெல்சன் மண்டேலாவும், அமெரிக்க காந்தி என அழைக்கபடும் மார்ட்டின் லூதர் கிங்கும்.

காந்தி குறைகளற்ற மனிதரா ?  அப்படி யாராவது  ஒருவர் உலகில் உண்டென்றால் சொல்லுங்கள். ஒரு மனிதனை உரசிப்பார்த்து அறிய அவரைக் கொண்டாடுகிறவர்கள் யார் என்றும் பார்க்கவேண்டும்.

உலகில் பண்பட்ட மனிதர்கள் என நம்பப்படுகிற  பிரெஞ்சு மொழி அறிவு ஜீவி ரொமன் ரொலான் (Romain Rolland) என்பவரும் நமது மகா கவியும் காந்தியைப் கொண்டாடுவது எனக்கு முக்கியமாகப் படுகிறது.

Romain Rolland :

« De tranquilles yeux sombres. Un petit homme débile, la face maigre, aux grandes oreilles écartées. Coiffé d’un bonnet blanc, vêtu d’étoffe blanche rude, les pieds nus. Il se nourrit de riz, de fruits, il ne boit que de l’eau, il couche sur le plancher, il dort peu, il travaille sans cesse. Son corps ne semble pas compter. Rien ne frappe en lui, d’abord, qu’une expression de grande patience et de grand amour »

மகா கவி :

வாழ்க நீ எம்மான்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

நன்றி திண்ணை

———————————————————–

மொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து )

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை நாட்களுக்குத் தற்கூற்றுமொழியில் தனக்குத்தானே அல்லது சூன்யத்துடன் கதையாடமுடியும். தமது பால்ய வயது அனுபவங்களையும், தாமறிந்த கதைகளையும் இவரது ‘போ’ மொழியில் புரிந்துகொள்ளவல்ல ஒரே மனித உயிராகவும் துணையாகவுமிருந்த அவரது அன்னை இறந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்று தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பொழுதை இயற்கையோடு கழித்தவராம்: பறவைகளும் விலங்குகளும் தமது மூதாதையார் மொழிகளை அறிந்தவைகள் என்ற வகையில் அவற்றுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிவருவாராம்.

 

கடந்த மாதம் முதல் வாரத்தில் 85வது வயதான அம்மூதாட்டி இறந்துபோனாள். அவளோடு இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்டுவந்த மிகப்பழமையான மொழிகளில் ஒன்றும் ஒப்பாரிக்கு ஆளின்றி புதைக்கபட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சொற்கள் உலகை நமக்கு புரியவைக்கின்றன. சொற்கள் கட்டமைக்கும் உலகமென்பது எல்லகளற்ற பரந்த வெளி, பேரண்டம். ஒவ்வொரு மொழியும் தமது சொற்களுக்கென தனித்துவத்தைக் கூர்தீட்டிவைத்திருக்கிறது. சொல்லின் புரிதல் அகராதிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. எண்பத்தைந்து வயது போவா பெண்மணியோடு ‘அவளுடைய மொழிமாத்திரமல்ல, அம்மொழிகொண்டிருந்த அறிவுத் திரட்சியும் – வரலாறு, பண்பாடு, சடங்குகள், மரபுகளென்ற பிற விழுமியங்களும் காற்றில் கலந்தன. போவா பெண்மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பல்வேறு வகையானத் தாவரங்களின் பெயர்கள் மனப்பாடமாகத் தெரியுமாம், வேறு மொழிகளில் மூங்கிலுக்கு அவ்வளவு பெயர்களில்லை என்கிறார்கள். ஆக ஒரு மொழியின் இழப்பென்பது பண்பாட்டின் இழப்பு மாத்திரமல்ல பல நேரங்களில் இயற்கையையும் அதன் கூறுகளைப்பற்றிய ஞானத்தையும்  தன்னகத்தே கொண்ட இழப்பு. .

 

அந்தமான் நிக்கோபார் தீவு  மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமொழிகளுள் போவாமக்களின் போ(Po) மொழியுமொன்று  என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 5000பேர்கள் பேசிவந்த மொழி. உலகில் அதிகமொழிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கியநாட்டு சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிலிலுள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1635, அவற்றுள் 37 மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானபேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவிலுள்ள மொழிகளுள் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகுமென்றும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது(1). இந்திய அரசியல் சட்டம் 22 பிரதான மொழிகளை அரசு மொழியாக ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் நாடு தழுவிய மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் இருக்கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள 85 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய் மொழி அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடியேறிவசித்துவரும் அவர்களுக்கு இன்று இந்திதான் பிரதான மொழி. வளர்ந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் இன்ன பிற மொழிகள் இந்திக்காகத் தம்மை அங்கே அழித்துக்கொண்ட பிறகு ஆதரவற்ற ‘போ’மொழி இத்தனை நாள் நீடித்ததே கூட வியத்தலுக்குரியது. தனிமனிதன், அவன் சார்ந்த சமூகம், அரசு இம்மூவரும் மொழியின்பால் அக்கறைகொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்திய மைய அரசைப்பொறுத்தவரை மாநிலத்திலுள்ள மொழிகளுக்கு ஆதரவாக எடுக்கும் எந்த முடிவும் இந்திய ஸ்திரத் தன்மைக்கு எதிராக முடியுமென்ற உண்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தவிர குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இராஜஸ்தானியர்களும், பீகாரிகளும் தங்கள் மொழியிடத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டபிறகு, பிறருக்கு ஒரு நீதியெனில் எப்படி? ஆக பிறமொழிகளைப்போலவே தமிழின் தலையெழுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழர்களைச் சார்ந்தது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கநாடுகளில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மொழிகளும். ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சும் ஆங்கிலமும் எஜமானர்கள். எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் வேலைசெய்தவர்களிற் பலர் பின்னாட்களில் சென்னைக்குச் சென்று துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலைபார்த்து பொங்கலுக்கும் ஊர் திருவிழாவுக்கும் கிராமத்துக்கு வருவார்கள். கூட்டுறவு வங்கிகளிலும், சில நேரங்களில் சென்னையிலுள்ள தங்கள் பண்ணையாட்களிடமும் கடன்பட்டு வரப்பில் குடைபிடித்து நடக்கப்பழகிய ஒன்றைரை ஏக்கர் நிலக்கிழார்கள் ஜமீன்தார் மனோபாவத்துடன்  தனது முன்னாள் பண்ணையாட்களை விசாரிப்பார். அந்த முன்னாளும் வேட்டியும் சட்டையும் போட்டபின்பும், ‘ஐயா ஏதோ உங்கள் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்’, என்று கூறிவிட்டு கொத்தவால் சாவடியிலிருந்து கொண்டுவந்த வாழைப்பழதாரை கொடுத்துவிட்டு காலில்விழ, ஆசீர்வாத கூத்தும் நடக்கும். காமன் வெல்த் நாடுகள் என்ற முத்திரையும், கிரிக்கெட் மட்டையை தூக்கிபிடிக்கிறபோதும், ஆங்கிலத்தைப் பேசுகிறபோதும் அதுதான் நடக்கிறது. மேதகு விக்டோரியா மகாராணிக்கு நாம் நிரந்தர அடிமைகள். ஆண்டானிடமிருந்து அடிமை விடுதலை பெறுவதும், முதலாளியியத்திடமிருந்து தொழிலாளியின் விடுதலையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமுமென அரசியல் விடுதலையைச் சந்திக்க முடிந்தது, ஆனால் பண்பாட்டு விடுதலை என்பது வேறு, அதற்கு விடுதலைக்கான கதவுகள் அடைப்பட்டதுதான் ஒருபோதும் திறவாதவை.  நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றானபிறகு,  மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்.

 

அந்தமான் தீவு போவாப் பெண்மணியின் உதாரணத்தை பிரான்சு நாட்டிலுள்ள மொரீஷியஸ் தமிழர்களின் வீட்டிலும் சந்திக்கிறேன். ஒவ்வொரு மொரீஷியர் தமிழர் வீட்டிலும் எழுபது அல்லது எண்பது வயதில் ஒரு முதியவரோ அல்லது மூதாட்டியோ இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் வருமென்று சம்பந்தப்பட்டவர்களின் மகனோ மகளோ தெரிவிப்பார்கள். பிறகு திடீரென்று ஒருநாள் அந்த முதியவரையோ அல்லது மூதாட்டியையோ கைப்பிடித்து அழைத்து வருவார்கள். இருக்கின்ற மூன்று படிகளை ஏறிமேலேவர ஐந்து நிமிடமெனில், மூச்சிறைப்பு அடங்கி சுவாசம் தனதியல்புக்கு வர ஒரு ஐந்து நிமிடம்பிடிக்கும். அதற்குள் அவரது மகனோ மகளோ பேசு பேசு என்று அவசரப்படுத்துவார்கள். வெகுகாலமாக உபயோகமின்றிக் கிடந்த ‘தமிழ்’, காற்றும் உமிழ்நீருமாக கலந்து வரும்: ‘வணக்கம்’ என்பார், பதிலுக்கு ‘வணக்கம்’,  என்பேன். ‘பொண்டாட்டி எப்படி?’ என்று அடுத்த கேள்விவரும், ‘இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று? தெரியாமல் நான்  என் மனைவியைப் பார்க்க, அவள் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டிருப்பாள். நான் விழிப்பதைவைத்து, தமிழில் பேசி என்னை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். அடுத்த சில மாதங்களில் அம்மொரீஷியரின் குடும்பத்தில் தமிழறிந்த அந்த ஒரு உறுப்பினர் இறந்திருப்பார். தமிழ்மொழியும் அவரோடு சேர்ந்து  அக்குடும்பத்திலிருந்து விடுபட்டிருக்கும். இது பெரும்பாலான மொரீஷியஸ் தமிழ் குடும்பங்களின் நிலை. இன்றைய மொரீஷியர் தமிழரின் தமிழர் பண்பாடு¦ன்பது நிறம், பெயர்கள், கடவுள் வழிபாடுகளில் மட்டுமே முடங்கிக்கிடக்கிறது, மொழி அடையாளமில்லை. தென் ஆப்ரிக்கா, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள் தமிழரிடத்திலும் எஞ்சியிருப்பது மேற்கூறப்பட்ட குறியீடுகள்தான். அதாவது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்ட நமது மூதாதையர்களின் இன்றைய நிலைமை இது. ஒரு நூறாண்டுகாலம் கடந்ததென்றால்  அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அல்லது இந்திய தமிழ்க்குடும்பங்களுக்கும் இதுதான் நேரும்.

 

தமிழர்கள் தமிழை மறக்காலிருக்க எனக்குத் தெரிந்த யோசனை, பேசாமல் தமிழை வரமளிக்கிற தேவதையாக மாற்றி, மாநாடுகளைக்கூட்டாமல் குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வது. நமது  பொதுப்பண்பின்படி தீமிதித்தோ, தேர் இழுத்தோ, கிறிஸ்துவ சகோதரர்களெனில் தமிழ்பூஜை வைத்தோ மொழியை நாம் மறக்காமலிருக்க இது உதவும். தமிழர்களின் நலன்கருதி இனமானத் தலைவர் வீரமணியும்  கலைஞரிடம் இதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், இப்போதுள்ள சூழலில் அவரும் கேட்பார் போலத்தான் தெரிகிறது.

————————————–

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் – 2:

சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை

 

(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)

அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.

 

பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான்.  இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.

 

கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.

 

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.

 

1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை  எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை  ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.

 

லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

 

——————————

 

  கடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்

கடந்த காலத்தின் குரல்

  • ஜிதேந்திரன்

  நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘இறந்த காலம்’ நாவல் சந்தியா பதிப்பகம் வெளியீடாக டிசம்பர், 2018-இல் வெளிவந்திருக்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி, ரணகளம் முதலிய ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ‘இறந்த காலம்’ அவருடைய ஆறாவது நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வரலாற்றுப் பின்புலத்திலேயே தன்னுடைய படைப்புகளை அமைத்துக் கொள்கிறவர். புதுச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிப்பதனால், பிறந்த தேசத்தைப் பற்றிய வரலாற்றைத் தன்னுடைய படைப்புகளில் வரைந்து கொள்கிறார். புதுச்சேரி வரலாற்றைப் பேசுபவை பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள். புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அதே திசையில், ஆனால் மாறுபட்ட கதைசொல்லல் திறமையில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பிரதிகளைச் செய்கிறார். இவருடைய நீலக்கடல் நாவல் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்கத் தீவு மொரிஷியஸ் பற்றியது. மாத்தா ஹரி நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டவள். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் புதுச்சேரி மற்றும் செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்கிறது. காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் புதுச்சேரியிலிருந்து பிரான்சு, செக் குடியரசுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. ரணகளம் நாவல் தமிழக அரசியல் பற்றியது.

மிரா அல்ஃபஸ்ஸா (அன்னை) புதுச்சேரி வந்த 1914 முதல் புதுச்சேரி அரசு இந்திய அரசுடன் இணைந்த 1954 வரையிலான அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது இந்நாவல். புதுச்சேரி நகர உருவாக்கமும், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையும் இதில் இருக்கின்றன. ஆரோவில் ஒரு கண்ணியாகவும், புதுச்சேரி விடுதலை மற்றும் புலம்பெயர் அரசியல் மறு கண்ணியுமாக நாவல் அமைகிறது. இரண்டையும் இறுதியில் இணைக்கும் லாவகம் சிறப்பு.

மனிதன் இறந்த காலத்திலிருந்து மீள முடியாது. இறந்த காலம் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கும், அவனுக்குள் மனமாக. சுற்றியிருப்பவர்களும் அவனை அவனது இறந்த காலத்தின் நீட்சியாகவே காண்கிறார்கள். தனது நேற்றைய சம்பவங்களை; நேற்றைய தவறுகளை; அவமானங்களை தனிமனிதன் மறக்கலாம். ஆனால் அவனைக் குறித்த அந்நிகழ்வுகளை மற்றவர்கள் மறந்துவிடுதில்லை. அதிலும், வரலாற்றுத் தவறுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில்தான், பிரெஞ்சிந்திய விடுதலைச் சிக்கலும் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில்  பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த புதுச்சேரியின் நிலை தர்மசங்கடமானது. வேறு வழியில்லாமல் அவர்களும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. நாவலில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆரோவிலியன்களாவது என்பது ஏமாற்று வேலை. எந்த மனிதனும் முழுமையாகப் புனிதனாகிவிட முடியாது. ஆரோவில் குழுமத்தில் இணைபவர்கள் சில காலம் புனிதர்களாக நடிக்கலாம். தவம், தியானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகப் பாலியல் சிக்கலுக்குள் தத்தளிக்கின்றனர். உலகின் எந்தத் தியான ஆஸ்ரமும் பாலியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்ததில்லை. ஓஷோ கம்யூன், நித்யானந்தா ஆஸ்ரமம் உட்பட, வட இந்தியச் சாமியார்கள் பட்டியல் பெரிது. காலங்காலமாக மனிதன் காமத்திலிருந்து விடுபட முடியாதா? என்ற சிக்கல் இருக்கிறது. ஏன் விடுபட வேண்டும்? ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கிற வழியைக் காட்டுகிறார். தியானம் செய்கிறவர்கள் காமத்தை அடக்குவதன் மூலம் தங்களுக்குள் மனப் பிளவுகளை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனை அடக்குவதன் மூலம் பாலியல் சிக்கல் வெறி கொண்டதாகிறது.

குருவால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் தங்கள் சொத்துக்களை தாங்களாகவே ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுகின்றனர். அல்லது வசியத்தால் சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டலாலும்கூட. இங்கு அவர்கள் சீடர்கள் அல்ல; பொதுமக்கள். ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, பணம் சேர்கிறது. ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி, ஆஸ்ரமத்தை விஸ்தரித்துக் கொண்டே போகிற யதார்த்தத்தைப் பார்க்க முடிகிறது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சுற்றியுள்ள மக்கள், சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளின் குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படித்தான் ஆரோவில்லும். “இந்த நகரத்தை (ஆரோவில்) உருவாக்க 50 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக் கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தொழில் தொடங்குவதற்காகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை” (ப.180).

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆரோவில் அமைப்பிற்கு உள்ளது என்று விவரிக்கிறார் நாவலாசிரியர். வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியப் பெண் ஆரோவில் நகரத்தில் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட செய்தி, ஆரோவில் நகர விரிவாக்கம் ஆகிய இரண்டும் சமீபத்திய உண்மைச் செய்திகள். ஆனால், ஆரோவில் உருவாகும்பொழுது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு எதிரான திசையில் இப்போதைய ஆரோவில் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத்தான் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் முன்வைக்கிறார்.

நில அபகரிப்பு என்பதில் ஆரோவிலுக்கு பிரெஞ்சு அரசாங்கமே குறைந்த விலையில் நிலத்தைக் கொடுத்தது என்பதும் அடங்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆஸ்ரமவாசிகள் / ஆரோவிலியன்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்கிற உண்மையை நாவல் விவரிக்கிறது. ஆரோவிலின் ஆன்மீக சோஷலிஸம் என்பதே ஏமாற்றுத் தந்திரம். புளி ஏப்ப ஆன்மீகவாதிகள், பசி ஏப்ப ஆன்மீகவாதிகள் உண்டு என்கிறார் நாவலாசிரியர். தங்கம் பூசப்பட்ட மாத்ரி மந்திர் கோளம் ஆன்மீகத்திலிருந்து விலகிய நிலை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்குகிற ஆஸ்ரமவாசிகள், ஆரோவிலுக்கு வெளியே வாழும் புதுச்சேரி ஏழை மக்கள் எனப் பெரும் பிளவுகளைக் கொண்டிருக்கிறது ஆரோவில் நகரம். ஆரோவிலுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, ஆரோவிலுக்கு உள்ளேயே எடுபிடி வேலை பார்க்கும் ஏழை மக்களும் இருக்கிறார்கள்.

நர்மதா குடும்பத்திடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்ட ஆல்பர்ட், நர்மதாவைக் கற்பழித்த ஆல்பர்ட், ஆரோவிலுக்கு வருகிற பெண்களைச் சீரழிக்கிற துய்மோன் என ஆரோவில் நகரக் களங்கத்திற்கு உருவகமாக இரண்டு கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வருகிற ஜெஸிக்கா, பிரான்சிலிருந்து வருகிற மீரா இருவருமே ஆரோவில் நகரில் கற்பழிக்கப்படுகிறார்கள். ஜெஸிக்கா எந்தப் புகாரும் அளிக்காமல், நாடு திரும்புகிறாள். மீரா காவல் நிலையத்தில் புகாரளித்தாலும், சாட்சியங்கள் இல்லையென்று கூறி, காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது. மீரா ஜெஸிக்காவைத் திரும்ப அழைத்துவந்து, அஸ்ஸாமிற்குச் செல்கிற துய்மோன், ஆல்பர்ட் இருவரையும் குழந்தை கடத்துபவர்களாகச் சித்திரித்து, அங்கு வைத்து அவர்கள் இருவரும் கொல்லப்படும் சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

அன்னை, அரவிந்தரின் நல்ல நோக்கம் தற்போதைய நிகழ்வுகளால் அடிபட்டுப் போகிறது. ‘ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃபஸ்ஸாவுமல்ல’ (ப.103). ஆரோவிலுக்கு எதிரான கருத்துக்கள் மாதவன் வழியாகச் சொல்லப்படுகின்றன. நாவல் முழுக்க அன்னை, அரவிந்தருக்கு எதிரான பார்வை இருக்கிறது. அன்னை, அரவிந்தரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. “முடிகொட்டிய நரைத்த தலைக்கு ஒரு சல்லடைத் துணியை முக்காடிட்ட சூன்யக்காரி போல ஒரு மூதாட்டி” (ப.39) என்கிற அன்னையின் முகத் தோற்றத்தைச் சொல்லும் வரிகள் அன்னையின் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரும். அன்னையின் கண்கள்தான் பிரசித்தமானவை. மாறாக, இந்த நாவலில் அன்னையின் ‘குரல்’ பேசுகிறது. பிரான்சிலிருக்கிற மீராவை (நாவலின் நாயகி) இந்தக் குரல்தான் தொந்தரவு செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் வருகிற அந்தக் குரல், இறுதியில் மீரா கற்பழிக்கப்பட்டபின்தான் வருகிறது. மீராவை இங்கு அழைத்து வந்த குரல், ஆரோவிலின் பெருமைக்குக் களங்கம் செய்கிறவர்களை அழிக்க விரும்பும் குரல்.. அவள் கற்பைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘இறந்த காலம்’ நாவல், அன்னையின் கடந்த (இறந்த) கால வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுகிறது. துய்மோன், ஆல்பர்ட் கொல்லப்பட்ட பிறகு, ஆரோவில் களங்கங்களைப் போக்கிய பிறகு,  அன்னையின் இந்தக் குரலில் அமைதி ஏற்படுவதாக நாவல் முடிகிறது.

நாவலின் மற்றொரு தளம் – புதுச்சேரி அரசியல். இறந்த காலம் – புதுச்சேரியின் கடந்த காலம். புதுச்சேரியிலிருந்து பிற நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தோ சீனாவிற்குப் (சைக்கோன்) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது. சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட, சமத்துவ உரிமையைப் பெற விரும்பி பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்க நாடுகளில் வாழும் மக்கள் ‘ரெனோன்சியாசியோன்’ (La renonciation) எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு மாறியவர் ‘ரெனோன்சான்’ (காலனிவாசி) எனப்படுகிறார். சுப்பராயன் அப்படி ரெனோன்சானாக, ஃபெலிக்ஸ் சுப்பராயனாக மாறிக்கொண்டார். சிங்காரவேலர் எதுவார் என்று மாறிக்கொண்டார். இவர்கள் சிப்பாய்களாக பிரெஞ்சு தேசத்திற்காகப் போர்க் களத்தில் உயிரைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதாவது ரெனோன்சானாவதற்கு இது ‘இரத்த வரி. ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தை மட்டுமே அறிந்திருந்த தமிழ்ச் சூழலுக்கு இந்தப் பிரெஞ்சிந்தியக் காலனியாதிக்கச் சிக்கல்கள் புதிது. பிரெஞ்சு தேசத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். பூர்வீகப் பிரெஞ்சு மக்கள், கிரேயோல் மக்கள் (தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் ஐரோப்பியர்), ரெனோன்சான் மக்கள். இவர்களில் ரெனோன்சான் மக்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை. பதவி, வேலை, ஆடம்பர வாழ்க்கை, சாதியத் தடைகளிலிருந்து விடுதலை என ஆசை வார்த்தைகாட்டி, இந்தோ சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி மக்களின் நிலையை சுப்பராயன், சிங்காரவேலர், வேதவல்லி வழி நாவலாசிரியர் புலப்படுத்துகிறார். அதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விளக்குகிறார். சைக்கோனின் நிகழ்வுகளை வேதவல்லியும், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளை அவரது தம்பி சதாசிவமும் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள் மூலமாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

புதுச்சேரி நிகழ்வில் அரவிந்தர் ஆஸ்ரமம் அமைத்தது, ஆரோவில் உருவாக்கப்பட்டது, காந்தியின் புதுச்சேரி வருகை, அரவிந்தரைச் சந்திக்க காந்தி தூது அனுப்பியபோதும் அரவிந்தர் மறுப்பு தெரிவித்தமை, இந்தோ சீனா வங்கி, புதுச்சேரி அரசியலின் நாயகன் ‘வி.எஸ்’ எனப்படுகிற வ. சுப்பையாவின் அரசியல் போராட்டங்கள், பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம், சவானா மில், ரோடியர் மில், கெப்ளே மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு, கவர்னர் எதுவார் குபேர் என்பவரின் அரசியல் மீதான விமர்சனம் எனப் பல பக்கங்களை நாவலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததை, தற்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த உணர்வெழுச்சியோடு பொருத்தி எழுதியிருக்கிறார்.

வரலாற்றுப் புனைவை எழுதும்போது, நிகழ்வை எழுதுகிற அதேநேரத்தில், கற்பனையும், படைப்பாற்றல் மிக்கவராகவும், தனித்த பாத்திரங்களை உருவாக்கி, ரசனை குன்றாமல் நாவலை எழுதிச் செல்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனித்திறமையே கதைசொல்லும் உத்திதான். கதையில் ஏற்படுத்துகிற சுவாரஸ்ய முடிச்சுகள், வாசகர்கள் கண்டுபிடிக்கிற அளவில் ‘பொடி’ வைத்து எழுதுகிற எழுத்து நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுடையது. இந்த நாவலில் மட்டுமல்ல, அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்தத் தனித்திறனைப் பார்க்கலாம். நாள், தேதியிட்டு காலத்தை மாற்றி மாற்றி எழுதும் உத்தி இவருடைய பொதுவான தன்மை. கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமாக இவரது மொழி, கதை சொல்லும் உத்தி மாறி, மாறிப் பயணிக்கும். காலத்தை இணைக்கும் புள்ளியைக் கூர்ந்த அவதானிப்புடன் செய்கிறார். நிகழ்கால அரசியலை; சம்பவங்களை; அரசியல்வாதிகளைக் குறிப்பால் உணர்த்தும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்.

மீரா, ஜெஸிக்கா, மாதவன் தவிர பிரான்சிலிருக்கும் மீராவின் தாய் இஸாபெல், அவரது இரண்டாவது கணவர் லூயிஸ், புதுச்சேரியில் மாதவனின் குடும்பம், மீரா தங்கும் வீட்டில் ஆல்பர்ட்-தேவகி, ஆரோவிலியன் துய்மோன், நர்மதா, கலைவாணி முதலியோர்தான் கதாபாத்திரங்கள். அரூபப் பாத்திரங்களான வேதவல்லி, சதாசிவம் கடிதங்களின்படி மாதவனும், மீராவும் திருமண முறை உறவினர்கள். இந்த முடிச்சை அவிழ்ப்பதில்தான் நாவலின் சுவாரஸ்யம் இருக்கிறது. வேதவல்லியின் மற்றொரு தம்பி சிங்காரவேலர் புதுச்சேரியிலிருந்து இந்தோ சீனாவிற்குச் சென்று, அங்கு வியட்நாமியப் பெண்ணை மணம் செய்து, அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்வதாகச் சொல்கிறது வேதவல்லியின் கடிதம். மீரா தன்னுடைய தாத்தா பற்றிக் குறிப்பிடும்பொழுது, இதே குறிப்பைச் சொல்கிறாள். கதாபாத்திர உறவுகளை சஸ்பென்ஸாக வைத்து, வாசகர்கள் கண்டுபிடிக்கும்படியான எழுத்து முறை இவருடைய மற்ற நாவல்களிலும் காணப்படுகிறது. மீராவின் தாய் இஸாபெல்லும் புதுச்சேரியில் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மீராவின் தந்தை யாரென்றே தெரியாத சூழலில், துய்மோனாக இருக்கலாம் என இஸாபெல் கூறுகிறாள். துய்மோன் – இந்தப் பெயர் ஏன்? 1735ஆம் ஆண்டு கவர்னராகப் புதுவைக்கு வந்தவர் துய்மா. இவர் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரைக் குறிப்பிடும் விதமாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதோ என ஐயம் தோன்றுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வீணாக்கவில்லை. சாதாரணமாக ஒருமுறை டிராப் செய்கிற டிரைவர்கூட இறுதியில் மறுபடியும் வருகிறார், மணிகண்டனாக. மீராவின் திட்டங்களுக்கு உறுதுணையாக. மீராவை ஆரோவில் நகரில் சைக்கிளில் பின்தொடர்கிற பத்திரிகையாளர், விமான நிலையத்தில் தற்செயலாகப் பக்கத்தில் அமர்பவர் நாவலின் இறுதியில் மீண்டும் வருகிறார்கள். முதலில் ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி. அதற்கு நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் விடை என்கிற ரீதியில் நாவலின் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அண்மையில் தமிழகத்தில் குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தவர்களைக் குழந்தை கடத்தல் கும்பலென அடித்துக் கொன்ற (உண்மை) செய்தியை, இரண்டாகப் பிரித்து, முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தை சாக்லேட் பெறுவது குற்றமாகப் பார்க்கும் நாடு இது என்று ஒரு பகுதியிலும், குழந்தை கடத்துபவர்கள் எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, இருவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொலை செய்கின்றனர் என்பதை இறுதிப் பகுதியிலும் அமைத்திருக்கிறார்.

‘இறந்த காலம்’ நாவல் புதுச்சேரியில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமவாசிகளால் இந்த நாவல் நிச்சயம் விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

 

நாமார்க்கும் குடியல்லோம்

நாமார்க்கும் குடியல்லோம்

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து  )

“காலையில் எழும்ப வேண்டியது

ஒரு கோணியோடு

ஒரு தெருவு நடந்தால் போதும்

கோணி நிறைந்துவிடும்

காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன

தலை நிமிர்ந்து வாழலாம்”

 

என்கிற வரிகளும்,  “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை”  என்ற வரியும் தமிழர்களைப் பற்றிய சித்திரமாக கவிஞர் மு. சுயம்புலிங்கத்தினால் சுட்டப்படுகிறது. அவரவர்க்கு ஒரு கோணி கைவசம் இருக்கிறது, நிரம்புகிறது. தலை நிமிர்ந்து வாழ்கிறோம். சுதந்திரமென்றும் சொல்லிக்கொள்கிறோம். கோணி மனிதர்களுக்கு மாத்திரமல்ல தன்மானமிக்க ஆனைகளுங்கூட மேடை தானமாகக் கிடைத்தால் கால் மடக்கி, பணிவு காட்டும் சுதந்திரம். தார்மீகச் சுந்திரமா? சட்டம் தரும் சுதந்திரமா என்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நாம் பிழைக்கிறோம் என்பது முக்கியம். மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ, எனக்கேட்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் சாத்தியமா? என்ற கேள்வி கவிஞர் சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசித்த பிறகு எழுகிறது.

 

மரிதியய் கம்பனுக்கு வேண்டியவர்(இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து எழுதியிருந்தேன், இக்கட்டுரையை அதன் தொடர்ச்சி எனலாம்). பிரெஞ்சில் இன்றைய தேதியில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்: கறுப்பரினம், பெண்மணி என்பது இலக்கியத்திலும் கோட்டாவை வற்புறுத்தி அடையாளம் பெற நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய தகவல். 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசினை, நியாயமானத் தேர்வில் வென்றவர். ஆனாலும் அப்பெண்மணி பரிசுக்குரியவரல்ல என்ற விமர்சனம் வந்தது. விமர்சித்தவர்கள் அப்பெண்மணியின் எழுத்தாளுமையையோ, பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த அவரது நூலையோ கேள்விக்குட்படுத்தவில்லை, அவரது பிரெஞ்சு அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபராக உள்ள நிக்கோலாஸ் சர்க்கோசியினுடைய கடந்த கால செயல்பாடு பிரான்சு நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருந்ததென்ற குற்றசாட்டு உண்டு. நகரின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்த கறுப்பரின மக்களும், அரபு மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அவரை இனவெறியாளரென்றே சித்தரித்திருந்தார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அறிவு ஜீவிகளை முகஞ்சுளிக்க வைத்தன. சர்க்கோசி 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது கறுப்பரினத்தை சேர்ந்த அறிவுஜீவிகள், கலையுலக பெருமக்கள், பாடகர்கள் எனப் பலர் அவருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்படி சர்க்கோசியின் எதிரணியிலே இடம்பெற்றவர்களுள் மரி தியய்யும் ஒருவர். அதிபர் தேர்தல் முடிவு சர்க்கோசிக்கு ஆதரவாக இருந்தது. வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டார். நிக்கோலாஸ் சர்க்கோசி ஒரு மிருகம், அத்தகைய மனிதரின் கீழ்வந்த பிரான்சும் எனது நம்பிக்கையை இழந்துவிட்டது, இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன், என்ற கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் தமது கணவருடன் வசித்து வருகிறார்.

 

மரி தியய்க்கு பரிசளித்திருக்கக்கூடாதென்று சொல்ல நினைத்த எரிக் ராவுல் என்ற ஆளும் கட்சி உறுப்பினர்: “2009ம் ஆண்டிற்கான கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கென அறிவிக்கபட்ட முடிவு தவறானது. தேர்வுக்குழுவினர் சரியான நபரை தேர்வு செய்ய தவறிவிட்டனர். பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் அடையாளம் கொண்டவராகவும் அதன் பெருமைகளை போற்றுகிறவராக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இப்பெண்மணி (மரி தியைய்) நமது (பிரான்சு) நாட்டையும் நமது அதிபரையும் சிறுமைபடுத்தி பேசியிருக்கிறார். விமர்சித்து இருக்கிறார். இவ்விடயத்தில் நமது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்றார். அவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க அதிபரின் துதிபாடிகளும் முன் வந்தனர். ஆனாலும் இப்பிரச்சினையில் கலை பாண்பாட்டுதுறை அமைச்சரும், பரிசு அளித்த கொன்க்கூர் அமைப்பும், தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்களும், பரிசுபெற்ற எழுத்தாளர் பெண்மணியும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 

மரிதியய் பெண்மணியை பரிசுக்குரியவராகத் தேர்வுசெய்த படைப்பாளிகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூச்சலை வன்மையான கண்டித்தனர். “அரசியல் வாதிகள் ஓய்ந்த நேரங்களில் இலக்கியமென்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கிய பரிசினை ‘மிஸ் பிரான்சு’ தேர்வு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மரிதியய் என்ன எழுதியிருக்கிறார் எனப்பார்த்து பரிசினை அளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப்பார்த்து பரிசுவழங்குவதில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாது என்று தெரிவிப்பதன்மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள். சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்? என்ற கேள்வியையும் அரசாங்கத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் களத்தில் குதித்தனர்.

 

கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு வருவோம். இவர் பெயர் பிரெடெரிக் மித்தரான் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானின் சகோதரர் மகன். இடது சாரி சிந்தனையாளர், எழுத்தாளர், கலை விமர்சகர். தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட சர்க்கோசி ஆட்சிக்கு வந்தவுடன், எதார்த்தவாதியானார். உலக அரசியலில் இனி தீவிர வலதுசாரிகளுக்கோ அல்லது தீவிர இடது சாரிகளுக்கோ இடமில்லை என்ற உண்மையை சர்க்கோசியும் அறிந்திருந்த காரணத்தால், தமது கட்சி அமைச்சரவையில் இடதுசாரி சிந்தனைவாதிகள் பலரை சேர்த்துக்கொண்டார். அவர்களுள் பிரடெரிக் மித்தரானும் ஒருவர். கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது. வலது சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும் அவரது இடதுசாரி சிந்தனையை எவரும் சந்தேகித்ததில்லை.

 

போலந்தில் பிறந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமான பிரபல திரைப்பட இயக்குனரான ரோமன் போலஸ்கியை (Rosemary’s Baby, Chinatown) சமீபத்தில் ஸ்விஸ் காவல்துறை கைது செய்தது.  அவர் கைது செய்யப்பட காரணம் 1977ம் ஆண்டு திரைப்படமொன்றை இயக்குவதற்காக அமெரிக்காவில் தங்கி இருந்தபொழுது இளம்வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் பாலியியல்குற்றச்சாட்டு. இப்பிரச்சினையில், ரோமன் போலஸ்கி ஒரு பிரெஞ்சு குடிமகனாகவும் இருந்ததால் அமெரிக்காவைக் கண்டித்து  பிரடெரிக் மித்தரான் அறிக்கை வெளியிட்டார். முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு வழக்கில் வெறும் குற்றசாட்டுகளின் அடிப்படையில் ஒரு சாதாரண மனிதரைபோல ரோமன் போலஸ்கிபோன்ற கலைவிற்பனரை கைது செய்யவேண்டும், விசாரணைக்குட்படுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பது நியாயமல்ல என்றார். இவரது அறிக்கையை பலரும் கண்டித்தார்கள். போலன்ஸ்கியின் தவறை நியாயப் படுத்துகிறார் என்றார்கள். எனினும் அமைச்சர் ரோமன் போலஸ்கியை உணர்வு பூர்வமாக ஆதரித்ததைப் பலரும் சிலாகித்தார்கள். எனவே அமைச்சரின் கருத்து எழுத்தாளர் மரிதியய்க்கு ஆதரவாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு. ஓடோடிச்சென்று ரோமன் போலஸ்கியை ஆதரித்தவர், எழுத்தாளருக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை..ம் இல்லை. எழுத்தாளருக்கு உண்டான பேச்சு சுதந்திரம் எழுத்தாளரை விமர்சிக்கிறவர்களுக்கும் உண்டு எனக்கூறி தமக்கு அமைச்சர் பதவி அளித்த சர்க்கோசிக்கு விசுவாசமாக நடந்துகொண்டார். “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரிக்கொப்ப.

 

பிரான்சு நாட்டையும், அதிபரையும் விமர்சனம் செய்துவிட்டு, பிரெஞ்சு இலக்கிய பரிசினை வாங்குவது தவறு என்ற ஆளும் கட்சியின் விமர்சனத்தை பரிசுபெற்ற பெண்மணி மரி தியய் எப்படி எடுத்துக்கொண்டார். “இங்கே பாருங்கள் எனக்குப் பரிசினைக்காட்டிலும் பேச்சு சுதந்திரம் முக்கியம், அதிபர் சர்க்கோசி குறித்தும், அவர் நிர்வாகத்தின் கீழுள்ள பிரான்சு குறித்தும் எனக்கு இப்போதும் ஒரே அபிப்ராயந்தான். பரிசுக்காக அதிபரிடமோ, பிறருடனோ சமரசம் செய்துகொள்ள நான் தயாரில்லை”, எனக் கறாராகச்சொல்லிவிட்டார்.

 

“தனது எண்ணத்தையும் கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிப்பதே மனித உரிமைகளுள் மிகவும் உன்னதமானது” என 1789ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 26ந்தேதி மனித உரிமை பிரகடனத்தின் பிரிவுக்கூறு எண் 11 தெரிவிக்கிறது. அதன்படி ஒரு குடிமகன் சுதந்திரமாக பேசவும், எழுதவும், எழுதியதைப் பிரசுரிக்கவும் அது வழிவகுக்கிறது. ‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ – ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல். எழுத்து வெளியைப்போல ஒரு சுதந்திர உலகம் இருக்க முடியாது. எழுத்து என்னை வசீகரித்ததற்கும் பிரதான காரணம் இதுவே. சுதந்திரம் என்ற சொல் தனி மனிதன், சமூகம் என்ற இரு முனைகளுக்கும் கயிற்றில் நடக்க முயல்கிற கழைக்கூத்தாடியொருவனின் கவனத்தைப் பெற்றது. இரு முனைகளும் ஒத்துழைக்கவேண்டும். சில சில்லறைவிதிகளென்ற கம்பைக் கையிலேந்தியபடி பிசகாமல் அடியெடுத்து வைக்கும் வித்தை. சுதந்திரத்தினை இருவகையில் தனிமனிதன் பிரகடனபடுத்தமுடியும்: எதிர் தரப்பு அதிகாரத்திற்கு அடிபணிவதில்லை, கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை, இச்சைக்கு இணங்குவதில்லையென எதிர்வினைகளூடாக தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பதென்பது ஒரு வகை. எனது எண்ணம், எனது சிந்தனைகள், எனது முடிவுகளென சொந்த விருப்பத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக சுதந்திரத்தைப் போற்றுவதென்பது இன்னொருவகை. இரண்டிற்கும் நோக்கமொன்றுதான்: நாமார்க்கும் குடியல்லோம்.

(மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து)

__________________________________________

 

 

 

மொழிவது சுகம்,  செப்டம்பர்  7, 2019  

 

அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட …….

நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். இந்த மிஷலன் என்கிற நிறுவனம் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்கும். அவர் யார், எப்போது வருவார், அவர் எப்படி இருப்பார் என்கிற எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. வாடிக்கையாளர்களுள் ஒருவராக வந்துபோகும் அம்மனிதர் (அல்லதுமனிதி) உணவு விடுதியின் சூழல், வாடிக்கையாளர்களை வரவேற்கும் முறை, அவர்களை நடத்தும் விதம், உணவின் தரம், பரிமாறும் விதம் முதலான கூறுகளின் அடிப்படையில் முடிவுகளை ஒன்று இரண்டு மூன்று என நட்சத்திர எண்ணிக்கையில் மதிப்பிடுவார்கள்.  இந்த நட்சத்திர மதிப்பீடு ஓட்டலின் தரத்தை நிர்னயிக்கும்.

நண்பர் க.பஞ்சாங்கம் பேராசிரியர் என்றோ, முனைவர் என்றோ  கவிஞர் என்றோ, திறனாய்வு திலகர் என்றோ அல்லதுவேறு  பட்டுக்குஞ்சலங்களாலோ,  தன்னை அலங்கரித்துக்கொண்டு  படைப்புக்களை அணுகுவதில்லை. (நூலட்டை அதற்குச் சாட்சி).   அதுபோலவே படைப்புக்களின் தரத்தை எழுதியவரின் பாலினம், எத்தனைமுறை தன்னை வந்து பார்த்தார், அவருடைய பின்புலமென்ன என்று அணுகுவதில்லை. பிரான்சு மிஷலன் நிறுவனத்தைப்போலவே  அவருடைய இதயமும் திடமானது. « அசல் நெய்யினால் தயாரிக்கப் பட்டது » என்பதுபோன்ற  படைப்பாளிகளின் முன்னொட்டுச் சான்றிதழ்கள் உதவாது.    நூலில் இடபெற்ற கவிஞர்கள் க. பஞ்சாங்கத்தால்விரும்பி வாசிக்கப்பட்ட வர்கள். நூலாசிரியர் நண்பர் க.பஞ்சாங்கத்தையும் நூலில் இடம்பெற்றுள்ள  கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்.

 

ஆ.  கட்டற்ற சுதந்திரம் ( Liberalism)  என்கிற காட்டாறு

அண்மையில் படித்த நூல் பிரெஞ்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களுடன் அண்மையில் மறைந்த Max Gallo – மாக்ஸ் கலோ- என்பவரின் « Le regard des femmes » ( பெண்களின் அவதானிப்பு)என்கிற நாவல்.  பார்த்த திரைப்படம்  « Partir » ( திரைக்கதையைக்கொண்டு  ‘ஓடுகாலி என்பது தமிழில் சரி). நாவலுக்கும் திரைப்படத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் அதிகம் : ஆண்பெண் – உடல் சேர்க்கை – மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கை முறை சமூகப்பாதையில்  இந்த இருகோடுகளுக்குள் நிகழும் திசைமாற்றம், தடம் புரளும் குடும்ப இரயில் என லென  அந்த ஒற்றுமைகளை வகைப்படுத்தலாம்.

Le regard des femmes (பெண்களின் அவதானிப்பு ) நாவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் பிலிப்  அவருடைய இளம் மனைவி லிசா இடையிலான உறவுகள் ;  பிலிப்பின் தாய், தந்தை இருவரின் குடும்ப வாழ்க்கை  அதில் ஏற்படும் விரிசல் ஆகியவற்றைப் பெண்களின்  பார்வையில் விவரிக்கிறது. பிலிப்பும் அவர் தந்தையும்  அவர்களுடன்  குடும்பம் நடத்திய (என்று சொல்ல இயலாது, கூடி வாழ்ந்த  என்று சொல்வது சரி )பெண்களின்  எதிர்பார்ப்பின் அடிப்படையில் விமரிசனத்திற்கு உள்ளாகின்றனர். தங்களின் பிற ஆண்களுட னான உறவுக்கு அல்லது எல்லை மீறலுக்கு தங்கள் உடல் உள்ளம் இரண்டையும் புரிந்துகொள்ளாத பிலிப்பும் அவர் தந்தையும் குற்றவாளிகளென  வாதிட்டு பிற ஆண்களுடனான படுக்கைப் பகிர்வுகளை  இப்பெண்கள்  நியாயப்படுத்துகிறார்கள்.

Partir ( ஓடுகாலி) : இத்திரைப்படத்தை அண்மையில் Arté என்கிற பிரெஞ்சு தொலக்காட்சிஅலை வழியாகக் காண நேர்ந்த து. கத்ரின் கொர்சினி (Catherine Corsini) இயக்கத்தில் வெளிவந்த படம் . ஒரு மருத்துவர் அவர் மனைவி, இரண்டு  வளர்ந்த பிள்ளைகள்.  மருத்துவர்,தமது  பிசியோதெராப்பிஸ்ட் மனைவிக்கென்று ஒரு பணி அறையை தனது வீட்டில் ஏற்படுத்த முனைந்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அவர்கள் ‘இவான் ‘ என்றொரு  தொழிலாளியை  அனுப்பிவைக்கிறார்கள், இவான் ஒரு முன்னாள் சிறைவாசி. ஒரு நாள்  சுஸானும், தொழிலாளியும் சில பொருட்களை வாங்க கடைக்குச் சென்று திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது.  இவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுஸான் விபத்துக்குத் தானும் ஒருவகையில் காரணமென்று கொண்ட அனுதாபம் தொழிலாளி  மீது தணியா  மோகத்தில் முடிகிறது.  சமூகத்தில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர் மீதான அன்பு, வளந்த இருபிள்ளைகள் மீதான பாசம் இரண்டையும் ஒதுக்கிவிட்டு  உடல் இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி அன்றாடக் கூலியுடன் படுக்கிறாள்.  முடிவில்  இந்த வேட்கையை ஆற்றிட கணவனைக் கொலை செய்கிறாள்.

மேற்கண்ட இரண்டிலும் சொல்லப்பட்ட இன்றைய எதார்த்தம், « பண்பாடு பண்பாடு » என்று கூச்சல் போடுகிற இந்தியாவிலும் நடப்பதுதான். நடுத்தரவயது  பெண்மணியின் இன்னொரு ஆணுடனான  ‘Passion’ (அதி தீவிர காதல்  )  திரைக்கதைக்கான மையப்பொருள் என்ற வகையிலும், திரைப்படம் ஓரு காட்சி ஊடகம் என்பதாலும்,  அதனை அழுத்தமாக தெரிவிக்க  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு காட்சிகள்.  ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுபவன் எனவைத்துக்கொண்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழுதுவதைக்காட்டினால்  கோபம் வராதா. இயக்குனரின் கற்பனை பஞ்சம் எரிச்சல் ஊட்டியது. கதையோ கட்டுரையோ எழுதும்போது திரும்பத் திரும்ப ஒரே சொல்லை  உபயோக்கும் படைப்பாளிகளைப்போன்று

சுற்றுச்சூழல் மட்டுமல்ல பண்புச் சூழலும் நடைமுறை உலகில் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. உதாரனத்திற்கு இன்று ஐரோப்பியர்களிடையே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சிக்காக, குடும்பம் என்ற பாரத்தை சுமக்க அல்ல. விளைவாக பிள்ளைகள் வேண்டுமா ? இந்தியா போன்ற மூன்றாம் உலக  நாடுகளில் வாடகை த் தாயை ஏற்பாடு செய்துகொள்ளலாம்( இந்திய மருத்துமனைகளில் சில உடல் உறுப்புகள் வியாபாரத்தில்  அக்கறைகாட்டுவதைபோலவே, வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனவாம். மேகத்திய நாடுகளைக்காட்டிலும் மிகவும் மலிவாக வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொள்ளலாமாம்) என்கிற எண்ணம் வலுபெற்றுவருகிறது,

கர்ப்பம் தரிப்பதும் குழந்தையைப் பாராமரிப்பதும் மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கைக்கு இடையூறு தருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இது நிகழலாம்.

மேற்கத்திய நாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுவில் வலது சரிகள் x இடதுசாரிகள்  என இருவகையாக பிரித்துபார்க்கப்படுகின்றனர். (இதனை  முற்போக்கு  x பிற்போக்கு என்கிற  அபத்தபார்வையில் பொருள்கொள்ளகூடாது.) வலதுசாரிகளும் இடதுசாரிகளைபோலவே சுதந்திரச் சிந்தனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதாவது வலதுசாரிகளும் பழமைவாதிகள் அல்லர்,  முற்போக்குவாதிகளே. பின் பிரச்சினை எங்கே எழுகிறது. கடைப்பிடிக்கும் சுதந்திரத்தின் பார்வையில் உள்ளது. மேற்குலக வலது சாரிகள் தன்னல சுதந்திரத்தில் (personal interests ) அக்கறை கோண்டவர்கள்.   மாறாக (மேற்குலக) இட து சாரிகள் கூட்டுச் சுதந்திர த்தை  (collective interests. )முன் நிறுத்துபவர்கள்.  அதாவது முன்னவர்களுடையது அதிகம் தனி நலம் சார்ந்த து , பின்னது பொது நலன் சார்ந்த து.  இத்தன்னல சுதந்திரத்தை எதிர்மறை சுதந்திரம்(Negative liberty) என்றும்  பொதுநலனை அடிப்படையாக்கொண்ட மேற்கத்திய இதுசாரிகளின் சுதந்திரத் தேர்வை நேர்மறை சுதந்திரம் என்றும், (Positive liberty)  கருதுகிறார்கள்.  சுதந்திரத்தை கூறலாம். தயவு செய்து இதனை இந்திய முற்போக்கு பிற்போக்குடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்.

 நேர்மறை சுதந்திரம் :  கட்டுப்பாடுடை யது. ஒரு மனிதனை, சமூகத்தை கட்டுக்குள் வைத்து அனைவருக்கும் பொதுவான  இலக்கினை அடைவது. ஒரு தேசம், சமூகம்  ஆகியவற்றின் நலனில் அக்கறைகொண்டது.  நேர்மறை சுதந்திரம் கரையுடைய ஆறுபோல முறையான பாசனத்திற்கு வழிவகுப்பது அல்லது பொது நன்மைகருதி போக்குவரத்து விதிகளை மதித்து விரும்பிய  ஊர் போய்ச்சேர உதவுவது. சிற்சில பாதிப்புகள் தனிமனித சுதந்திரத்திற்கு உண்டென்கிறபோதும் சமூகத்தின் நன்மை கருதி அச்சமூகத்தில் நாமும் ஒருவர் என்ற உண்மையினால் ஏற்கிறோம்.

எதிர்மறை சுதந்திரம் : தன் சுதந்திரம்பற்றி மட்டுமே அக்கறைகொண்டு பிறரை, பிறவற்றைக் கூடாதென்பது. காட்டாறு போன்றது, நீரென்றாலும் பயனாளிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம் இதிலுண்டு. பொதுநன்மைக்காக விதிக்கபட்ட போக்குவரத்து விதிகளை மீறுவேன் என்கிற எதிர்மறை சுதந்திரத்தில் போகவேண்டிய ஊருக்குப்பதிலாக எமலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்க கூடிய வாய்ப்புகள் அதிகம். globalisation வேண்டும் என்பவர்கள் வலியுறுத்தும் சுதந்திரம். பொருளியலில்  Liberal economy  அல்லது negative economy என்பது இதுதான். விற்பவர் சாமர்த்தியம் வாங்குபவன் சாமர்த்தியம் இடையில் ஒருவரும் குறுக்கிடக்கூடாது, அரசாங்கம் சட்டம்  எதுவும் வேண்டாம். மாறாக Social economy  பொருளாதாரம் வணிகம் ஆகியக் கொள்கைகளில்   சமூகத்தின் நன்மைகருதி, பெருவாரியான மக்களின் நலன் பொருளியல் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடவேண்டும் என்கிறது.

Marquis de Sade  என்கிற  பத்னெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு  பிரமுகரை அநேக மாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  உடலுறவில் மிருகத்தனமான இச்சைகளுக்கு அடித்தளமிட்டவர், ‘Libertin’  என்கிற  சுதந்திரமான உடல் இச்சை இயக்கத்தின் மூலம் வக்கிரமான  ஆசாபாசங்ககளுக்கும் அடித்தளமிட்டவர். அகராதியில் Sadism, Sadiste சேர்க்கபட காரணமானவர்.  எதிமறையான சுதந்திர த்திற்கு நல்லதொரு உதாரணம்.

 

அமிர்தம் மட்டுமல்ல  சுதந்திரமும் அளவுக்கு மிஞ்சினால் உயிரைக்குடிக்கூடியதுதான் என்பதெல்லாம் தெரிந்தும் நாம் மீறத்தான் செய்கிறோம்.  வாழ்வியல் போக்குவரத்தில், பெண்களைக்காட்டிலும் விதிமீரல்களில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் உண்மையில் ஆண்கள். «  கவனக்குறைவு »எனக்கூறி  ஆண்கள் தப்பிக்க முடியாது.  குடும்பப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்களான  மனைவியர் இந்த சால்ஜாப்புகளை நம்புவதில்லை. அவர்களுக்கு அபராதத் தொகையை எப்படிப்பெறுவதென்பது தாய்வீட்டுச் சீதனம்.

 

———————————————————————–

மொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்

சாலையின் தனித்து நட க்கிறபோது வழியில் கிடக்கும் கல்லை பலர் பார்க்க எடுத்து, ஓரமாகப் போடுகிறான் ஒருவன், அவனுடைய பொது நல சேவையை வியக்கிறோம், கைத்தொலைபேசியில் அக்காட்சியைப்பிடித்து முகநூலில் பதிவுசெய்து,   « நீங்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால் பாராட்டுங்கள் ! » என பண்பான  வேண்டுகோளை வைக்கிறோம்.  அந்தப் பொதுநல சேவகனே மறுநாள் செய்தி த் தாளில் கலகக்காரனாக அவதாரம் எடுத்கிறான், சிலையை உடைக்கிறான். தனி மனிதனாக இருக்கிறபோது வெளிப்பட்ட அவனுடைய நல்ல பண்பு  கூட்டத்தில் கலந்தபோது எங்கே போனது?

மூன்று கிழமைகள் விடுமுறைக்கு பாரீலிருந்து மகன் குடும்பம் வந்திருந்தது. பேரனுக்கு 8 வயது. பேர்த்திக்கு 2 வயது. அவ்வப்போது பிள்ளைகளுக்கு இணக்கமான இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது. அதன் ஒர் பகுதியாக எங்கள் ஊரிலிருந்து  இருநூறு கி.மீ தொலைவில் இருந்த  அம்னேவீல் (Amnéville) விலங்குக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். ஓரிடத்தில் வெள்ளை நிற புலிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஓரளவு பெரிய நிலப்பரப்பு, சிறிய நீர்த்தேக்கம் பாறைகள், அடர்ந்த புற்கள், ஒன்றிரண்டு மரங்கள் இயற்கைவேலிகள் என்ற சூழலில் பார்வையாளருக்கென்று தடித்த கண்ணாடியாலானத் தடுப்பு. மனிதர் இயல்புப்படி யாருமற்ற கண்ணாடியைப் பகுதியைத் தவிர்த்துவிட்டு பார்வையாளர்கள் குவிந்திருந்த இடத்தை நெருங்கி, அவர்கள் பார்வைக் குத்திட்டிருந்த செயபடுபொருளைக் கூட்டத்தின் இடுக்கில் தேடியபோது பரணொன்றில் துணிப்பொதி போல விலங்குக்  கிடந்தது. அசைத்த வாலைத் தவிர விலங்கென்று சொல்ல எதுவுமில்லை, வாலையே விலங்கென்று சாதித்தால் சொல்கின்ற ஆளைப்பொருத்து நம்புவதற்கு கூட்டமுண்டு, குழந்தைகள்?  கொஞ்சம் நன்றாக பார்க்கலாம் என்றால்,  ஆசைக்குத் தடையாக  மனிதர் வேலி, சரீரத் திரை. நான் பார்க்கிறேனோ இல்லையோ என் பேர்த்திக்கு நான்குகால் மனிதனைக் காட்டவேண்டுமே, « ஓ புலி மாமோய், (மனசுக்குள்தான்) ! » எனச் சோலைக்கொல்லை வள்ளிபோல கூவி அழைத்தேன்,பலனில்லை. கைவிரலைப் பிடித்திருந்த பேர்த்திமீது தற்போது கவனம் சென்றது. அவள் என்ன செய்வாள் என்று தெரியும், அவளுக்கும் மொத்தக் கூட்டமும் அதிசயிக்கிற துணிப்பொதியைப் பெரிதுப்படுத்திக் காட்ட வேண்டும். தவறினால் கையை உதறிவிட்டு ஓடுவாள். அவள் பொதுவாகவே ஓரிடத்தில் நிற்கமாட்டாள். ஓடிக்கொண்டே இருப்பாள். ஓடியதும் சிறிது நின்று நாம் பின்னால் ஓடி வருகிறோமா என்று பார்ப்பாள். நாம் வருவது உறுதியானதும், ஓடுவதைத் தொடர்வாள். நாம் பின் தொடரத்  தவறினால் அவள் ஓடுவதில்லை என்பதையும் ஒன்றிரண்டு முறைக் கண்டிருக்கிறேன். எனினும் அந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க எங்களுக்கு அச்சம். அன்றும் கையை உதறினாள், ஓடினாள். வழக்கம்போல அவள் மீதான பார்வையை அகற்றாமல் வேகமாய்த் தொடர்ந்தேன். பார்வையாளர்கள் இன்றி காலியாகவிருந்த பக்கம் சட்டென்று நின்றவள் கையைக் காட்டினாள். அங்கே பிரார்த்தனைபோல ஒரு மரத்தருகே இன்னொரு புலி. ஐரோப்பிய சரீரங்களின் அழுக்கு வாசத்திற்கிடையில்  சற்றுமுன்பு தேடிய புலிபோல அன்றி, இப் பெண்புலி( ?)  «  நான் வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன் பார்த்துக்கோங்க ! » என்பதுபோல நின்றிருந்தது, அது மட்டுமல்ல முற்பிறவியில் மாடலிங் தொழிலில் இருந்திருக்குமோ என்னவோ போனஸாக அப்படி இப்படி catwalkம் செய்துக் காட்டியது. இன்னொரு பக்கம் ‘அதோ அங்க’ , ‘இல்லை இல்லை அங்க’  எனச் சொற்கள் உதவியுடன் சிக்காதப்  புலிக்குத் தூண்டில்போடுவதில்  கூட்டம் ஆர்வமாக இருக்க, இங்கே நானும் பேர்த்தியும் ஒரு சில நிமிடங்கள் தனித்து விஐபி தரிசனமாக புலிவரதரைக்  கண்டு மெய்சிலிர்க்க முடிந்தது.

அசலான வாழ்க்கையிலும் நமக்கு நேர்வது இநத்தகைய அனுபவமே.  கூட்டம் வழிநடத்துகின்ற ஏதோ ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  உண்மை மலைபோல நின்றாலும்  கவனிப்பாரற்றுப்போக வாய்ப்பிருக்கிறது.  கூட்டம் பாதுகாப்பைத் தரும் என்பது நம்பிக்கை.  தனிமனிதனாக  அடைய முடியாதப் பலனை கூட்டம் பெற்று தரும் என்பது கருத்து.  குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களைக்கொண்ட ஒரு குழு சேதங்களைக் கொடுப்பதுமில்லை, கொள்வதுமில்லை. கல்வி, ஏற்ற தாழ்வற்ற பலன்கள் பரிமாற்றம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவை, இக்குழுவின் பண்பை ஒழுங்குபடுத்துகின்றன.

நமக்குச்சிக்கல் பெரும் எண்ணிக்கையிலான மனிதர் கூட்டம் : ஒன்று கட்டுக்கடங்கிய கூட்டம்  மற்றொன்று கட்டுக்கடங்கா கூட்டம்.

கட்டுக்கடங்கிய கூட்டம் : நியதிகளின் அடிப்படையில் , தலைவர்கள் தொண்டர்கள்  என்கிற ஆகம விதியின் கீழ் எஜமானும் –  அடிமைகளும் இணைந்து செயல்படும்  கூட்டம். இருதரப்பும் பலன்களை முன்வைத்து விசவாசம் காட்டுபவர்கள். இவர்களின் ஒற்றுமை எதிரிகளின் வலிமையையும், அடையும் பலன்களின் அளவையும் பொருத்தது.    பிறமைகளுக்கு அதிக சேதம் இவர்களால் நேர்வதில்லை.

கட்டுக்கடங்கா கூட்டம் :  வதந்திகள் உருவாக்கும் கூட்டம். பைத்தியக்கார மனநிலை. இக்கூட்டம் எதிரிகளுக்கு மாத்திரமல்ல, தனக்கும் சேதம் விளைவித்துக்கொள்ளும்.

பொதுவில் கூட்டம் என்கிற  தனிமனிதர்களின் குவியல் விநோதமான பண்புகளைக்கொண்டது. ஐந்து தலை 21 கண்கள், 12 கைகள் 38 கால்கள் என்றொரு உயிரை கற்பனை செய்து பாருங்கள். கூட்டமும் அப்படியொரு விலங்கு.  கடைகள், விழாக்கள், அலுவல் நேரங்களில் பேருந்துகள், இழவு வீடுகள்,  வீதிகளில் ஊர்வலங்கள்  எங்கென்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூடும் இடங்களில்  தனிமனிதன் தன்னுடைய  அடையாளத்தைத் தொலைத்து கூட்ட த்தின் பண்பை உள்வாங்கிக்கொள்கிறான்.  அப்பொதுப்பண்பு மகிழ்ச்சியாக இருக்கலாம், துன்பமாக இருக்கலாம், சத்தம் போட்டுப்பேசலாம், கல்லெறியலாம், கலகலவென சிரிக்கலாம் வீச்சரிவாளை எடுக்கலாம்.  தனிமனிதனும் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட்டு கூட்ட த்துடன் சேர்ந்து இரங்கல் தெரிவிக்கவேண்டும், வெடித்து சிரிக்கவேண்டும், கலகலப்பாக இருக்கவேண்டும், கல்லெறிய வேண்டும். கற்ற கல்வியை, அறிந்த ஒழுங்கை, தொலைத்து எடுப்பார் கைப்பிள்ளையாகும் அவலம் கூட்டத்தால்  நிகழ்கிறது.

எல்லோரும் பார்க்கிறார்கள் நாமும் பார்ப்போம், எல்லோரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுவோம்,  அட்சய திதிக்கு நகைக் கடைக்குப் போகிறார்கள், போகிறோம்,  அத்திவரதர் முன்பாக மண்டி இடுகிறார்கள்,  செய்கிறோம் . தரிசித்துவிட்டு வருகிறபோது ஒருவர் விழுகிறார், மிதிபடுகிறார் அதனாலென்ன நமக்கு முன்னே ஓடுகிறவர்  மிதிக்கிறார்   மிதிக்கிறோம், தனிநபராக இருந்தபோது  ஏதோ ஒரு பெயரில் அறியப்பட்ட நான் இருளென்கிற கூட்டத்தில் புதையும்போது யாரோ, இலட்சக்கணக்கான  மனிதர்கூட்டத்தில்  ஒருவன் என்ற குறியீட்டைத்தவிரத் தன்னைச் சுட்ட எதுவுமில்லை.   கூட்டம் என்ற முகமூடி சாட்சிகளை, நீதியைக் குழப்பிவிடும் என்பதால் துணிச்சல்.  பாதையில் கிடக்கும் கல்லால் சக மனிதனுக்கு ஆபத்து நேருமென்று கல்லை அகற்றிய அவனே கூட்ட த்தில் கலந்ததும், அக்கல்லைக் கொண்டே தாக்குதல் என்கிற வினையை அரங்கேற்ற ஒரு எதிரியைத் தேடுகிறான்.  செய்த தனிமனிதனைக் காட்டிலும், அவனைச் செய்யத் தூண்டிய கூட்டத்திற்குப் குற்றத்தில் எப்போதும் பெரும்பங்கு இருக்கிறது.

—————————————————————————

படித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்

‘உலக எழுத்தாளர் வரிசை: டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong)

வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

‘ரணகளம்’ : ‘துணை’யும் ‘இணை’யும்

26047505_1779219605441809_5161767557754892563_n « புதுச்சேரி என்ற பெயரில் ஒரு  நாவலை எழுதத் தகவலைத் திரட்டினேன். கிடைத்துள்ள தகவல்கள் ஓரளவிற்குப் போதுமானவை. இருந்தாலும் நன்றாக வரவேண்டுமென்ற அச்சத்தினால் தள்ளிப்போகிறது. இடைவெளியை  நிரப்ப  ஒரு குறு நாவலை  எழுத முடிக்க யோசித்திருந்தவேளை ‘ our souls at night’  (கெண்ட் ஹாரெஃப் என்ற அமெரிக்க எழுத்தாளரின் நாவல்)  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். குறு நாவலொன்றை எழுதத் தீர்மானித்தது தற்செயலெனில், Lunch box புகழ் ரித்தேஷ் பத்ரா எங்கிற இந்திய இயக்குனர் கைவண்ணத்தில் உருவான இத்திரைப்படத்தைக் காண  நேர்ந்ததும் தற்செயலே. ராபர்ட்ஃபோர்ட், ஜேன் ஃபோண்டா இருவரும் நடித்திருக்கிறார்கள். முதுமை அரிக்கும் இரு மனித உயிர்களின் அந்திம  நோய்க்கு கலை, உளவியல் அடிப்படையில் தீர்வுகண்டிருக்கிறார்கள். இப்படம் வேறொரு சிந்தனையைக் கொடுத்தது. துணை என்ற சொல்லைக் குஈத்து யோசிக்க வைத்தது. அந்த யோசனையைப் புனைவாக்கியதன் பலனே இந்த  நாவல். »

 

‘ரண்கவளம்’   நாவலுக்கு எழுதிய முன்னுரை இது. ஆம், ரணகளம் துணைகுறித்த ஒரு பார்வை. துணை மிகப் பெரிய சொல். துணையுடன் ஆற்றும் வினையே முழுமையை எட்ட உதவும் என்பதைமனிதர்க்கு குறிப்பால் உணர்த்த முற்பட்டதுபோல நமது உடலில் கைகள், கால்கள், கண்கள் நாசிதுவாரங்களென, முக்கிய உறுப்புக்களையெல்லாம்  இயற்கை இரண்டிரண்டாக  படைத்திருக்கிறது. இத்துணையை இணையாக, தோழமையாக, சரி நிகராகக் கொள்வதற்கு மாறாக இரண்டிலொன்றை உயர்த்தி பிடிக்கிறபொழுது, ஈன்றெடுத்தல் சுகப்பிரசவமாக நடைபெறுவது கிடையாது. இரண்டிலொன்றை உதவியாள், சேவகன், அடிமை, இரண்டாம் பாலினம் என்று கீழே  நிறுத்தி பெறப்படும் பலன்கள் முழுமையானப் பலன்களா என்றால் இல்லை. விசுவாசத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் விருப்பத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

 

ரணகளம் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள ‘our souls at night’  பற்றியும் வேறு இரண்டு தகவல்களையும் பகிர்ந்துகொள்வது ஒருவகையில் அண்மையில் வந்துள்ள என்னுடைய  நாவலை ஏறி நின்று எட்டிப்பார்க்க வசதியாக முக்காலியைப் போடுவது.  ரணகளம்

அந்த வகையில் மூன்று ‘துணை’கள் குறித்து பேசுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை.

 

துணை -1 : இணை

‘our souls at night’  நாவலில் நாயகனும் நாயகியும் எழுபது வயதைக் கடந்தவர்கள். நாயகன் மனைவியை இழந்தவர்,  நாயகி கணவனை இழந்தவள்.   ஒரே தெருவில் அவரவர் வீடுகளில், இன்றையை  நியதிக்கேற்ப  பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் தனிமை விபத்துக்குள்ளானவர்கள்,   மன ஊனமுற்றவர்கள். பகல்வாழ்க்கையும் அது சார்ந்த உரையாடலும் வணிப விதிக்குட்பட்ட  நிலையில், தெரிந்தமுகங்கள்கூட சம்பாஷனைகளை சடங்குகளாக அணுகுகிறச் சூழலில் பாசாங்கற்ற அன்பிற்கும் அரவணப்பிற்கும் இரவு வெளிச்சம் தருமென  நம்பும் கதை நாயகி தனிமை வெக்கைக்கு நிழல் தேடும் முயற்சியாக மூதாட்டியான ஜேன்ஃபோண்டா, கிழவர் ராபர்ட் ஃபோர்ட் ஐ தேடிவருகிறாள். அவரிடம்  நேரடியாகவே இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா எனக் கேட்கிறாள். அவர் தயங்குகிறார். யோசித்து சொல்கிறேன் என் கிறார். ஒரு நாள் இரவு  அவள் வீட்டிற்கு இரவுக்கு வேண்டிய ஆடைகளுடன் பிறர் அறியாதபடி அவள் வீட்டு பின் வாசல்  வழியாக வருகிறார். இருவரும் அவரவர் குடும்பம் பிள்ளைகள், பிடித்தது பிடியாதது என உரையாடலைத் தொடங்குகிறார்கள். அவர்களிடையே  நாம் பலரும் சந்தேகிக்கிற வேறுவகையான உறுவுகள் இருப்பதில்லை. பின்னர்  செய்தி அச்சிறிய  கிராமத்தில் மதுச்சாலைகளில், பொதுவெளிகளில் அவர்களைகிண்டலும் கேலியுமாக விமர்சிக்க உதவுகிறது. சொந்த பிள்ளைகளின் கோப்பத்திற்கும் ஆளாகிறார்கள்.

 

துணை -2 : புணர்ச்சி

 

The Reader என்று மற்றொரு திரைப்படம் பெர்னார் ஷ்லிங்க் என் கிற ஜெர்மன் எழுத்தாளரின்  நாவல். இப்படத்தில் மைக்கேல் பதின் வயது சிறுவன். ஒரு மழை  நாளில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்  மைக்கேல், திடீரென்று  உடல் நலிவுற்று  வருந்துகிறபோது,  டிராம் ஒன்றில் பரிசோதகராக வேலைசெய்யும்,  அவனைக்காட்டிலும் இருமடங்கு  வயதுடைய  ஹன்னா உதவுகிறாள். அவர்களிடையே  நட்பு பிறக்கிறது. நட்பு காதலாகிறது. முதலில் குறிப்பிட்ட படத்தில் உடல் உறவுக்கு இடமில்லை. இங்கே உடல் உறவின்றி அவர்கள் சந்திப்புகள் கழிவதில்லை. முதல் படத்தில்  நாயகனும் நாயகியும் தங்கள் மனதில் உள்ள சேமித்துள்ள அனைத்தையும் உரையாடலாக பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் உடல் உறவு கொள்ளும்  நேரத்திலும் உலக இலக்கியங்களை  மைக்கேல் வாசிக்க ஹன்னா கேட்டு ரசிக்கிறாள். முதல் படத்தில் இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை. இரண்டாவது படத்தில்  தம்பதிகளிடையே ஒருவர் குறிப்பாக ஹன்னா இளைஞனிடம் மறைக்க ரகசியங்கள் உண்டு.

 

துணை – 3 : காப்பு

Emmanuel-Macron-et-sa-femme-Brigitte-a-l-Elysee-le-2-juin-2015_exact1024x768_p

தற்போதைய பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கும் அவருடைய மனைவி பிரிஜித்திற்கும் இருபத்தெட்டு  வருடங்கள் வித்தியாசம். இருபரும் காதலில் விழுந்த ஆண்டு 1993.  அப்போது  பிரிஜித்  பள்ளி ஆசிரியை நாற்பத்துமூன்று வயது, அவருடைய காதலன் அதிபர் மக்ரோனுக்கு  பதினைந்து வயது. அவர்கள் காதலில் விழுந்தபோது பிரிஜித்தின் முதல் கணவர்  மகளும், அதிபர்மக்ரோனும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருந்தபோதும் ஆசிரியையும் மாணவனும் காதலித்தார்கள். பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுடனான உறவு பெரும்மாபாலான  நாடுகளைப்போலவே பிரான்சிலும் தண்டனைக்குரியது. எனவே இருவரும் 13 வருடங்கள் காத்திருந்தார்கள். முதல் கணவனை 2006ல் பிரிஜித் விவாகரத்து செய்துவிட்டு 2007ல் மக்ரோனை மணமுடிக்கிறார்.  மக்ரோனுக்கும் பிரிஜித்திற்கும் பிள்ளைகள் இல்லை. பிரிஜித்தின் முதல் கணவர் பிள்ளைகளை ஏற்றுகொள்கிறார். அதிபர் மக்ரோன் தான் ஒரு தன் பாலினவிரும்பி இல்லை என பகிரங்கமாக மறுக்கவேண்டிய  நிர்ப்பந்தம் இருந்தது. இன்றும் 38 வயது பிரெஞ்சு அதிபர் இம்மானெவெல் மக்ரோனும் அவருடைய 66 வயது மனவியும் துணை என்ற சொல்லுக்கு துணை என்ற சொல்லின் சாட்சியாய் நிற்கிறார்கள்..

 

இந்த மூன்று தடத்திலும் துணை என்ற சொல் மேற்குலகில் வெவ்வேறு பொருளில் பயணிக்கிறது.  ‘இது என் வாழ்க்கை, பிறர் குறித்து எனக்கென்ன கவலை !’ என்கிற தனிமனிதன் ஒருபக்கம்.  ‘அது அவன் வாழ்க்கை, நமக்கென்ன வந்தது ! எனக் கருதுகிற சமூகம். இந்த இரு தரப்பிற்கும் மேற்கண்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததில் பங்கிருக்கிறது.    இதில் என்னை ஆச்சரியமூட்டும் விஷயம்  தனிமனித வாழ்க்கைக்கு விசுவாசமாக இருக்கவேண்டி பாசம் பந்தம் போண்ற சொற்களைப் பின்னுக்குதள்ளி வாழும்  மேற்குலக சமூகம் கீழைத்தேய சமூகத்தைக் காட்டிலும் வலிமையுடன் இருப்பது.

 

கடந்தகாலம் கடவுள் சடங்கு  பெயரால் மனித உயிர்களை ஒன்றிணைத்தது. அகக் கூறுகளைக் காட்டிலும் புறக் கூறுகள் அன்று முக்கியத்துவம் பெற்றன. இன்று புறகூறுகள் இடத்தில்  அகக்கூறுகள்.

மேற்குறிப்பிட்ட மூன்று உதாரணங்கள்  சாராது, கீழைப்பின்புலத்தில் துணை என்றசொல்லுக்குப் பொருள் காண முற்பட்டதே ‘ரண களம்’    இங்கே எனது ‘துணை’க்குப் பொருள்,  ‘ நட்பு ‘. துணையின்றியும், பயணிக்கலாம். ஆனால் அலுப்பின்றி பயணிக்க  துணை வேண்டும்.

—————–

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்