Tag Archives: நாகரத்தினம் கிருஷ்ணா

நீ வரவில்லையெனில் – புதிய நாவல்

2025 ஜூன் மாதம் வெளிவந்த எனது புதிய நாவல் குறித்து

—————————————————————–

அன்பினிய நண்பர்களுக்கு,

மனிதநேயம் என்கிற மனிதப்பண்பின் உன்னத  வெளிப்பாட்டைக் குறிக்க அன்பு, பாசம், பரிவு, இரக்கம், கருணை போன்ற சொற்கள் வழக்கில் இருப்பினும், கடைசியாக குறிப்பிட்ட ‘கருணை’ மனித நேயத்தினை தெளிவாக அடையாளப்படுத்தும் ஒரு சொல்.

மனிதரினத்தில் காணக்கூடிய அன்பும் பாசமும் வரையறைக்குட்பட்டவை, உறவு, நட்பு, என்கிற வட்டத்துக்குள் அடங்கியவை. முன்பின்தெரியாத மனிதர்களெனில் முகசுளிக்க கூடியவை. ஏன் பறவைகள் விலங்குகளிடம்கூட அன்பிற்கும் பாசத்திற்கும்  இடமுண்டு. மாறாக பரிவும், இரக்கமும், கருணையும் மனிதரினத்தில் மட்டுமே காணகூடிய மெய்மைகள். இப்பண்புடையோர் பிறர் துன்பங்கண்டு வருந்துவதோடன்றி அத்துன்பத்தைக் களையவும் முற்படுபடுகின்றனர். இம்மூன்றில் « பரிவும், இரக்கமும் » « மேலோர் கீழோர் » என்கிற பாகுபாட்டின்கீழ் தள்ளி நின்று செயல்படக்கூடியவை. மாறாக கருணயுள்ளம் கொண்ட மனிதர் துன்புறும் மனித உயிர்களைத் தேடி வருகிறார், அவர்களை அரவணைத்து கண்ணீர் துடைக்கிறார். வயிற்றுப்பசிக்கு வாசல்தேடி வரும் மனிதர்களுக்கு, உணவளிக்கும் மனிதர்களின் இரக்கத்தைக் காட்டிலும், வயிற்றுப்பசியில் வாடும் மனிதர்களைத் தேடிசென்று பசியாற்றும் மனிதர்களின் கருணையுள்ளம் பெரிது.  

நாடக அரங்குகளைக் காட்டிலும் நிஜவாழ்க்கையில் ஒப்பனையுடன் வலம் வருகிறவர்கள் இன்று எண்ணிக்கையில் அதிகம்.  இது பாசாங்குலகம். உறவு, நட்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், எழுத்தில் காட்டும் அறச்சீற்றமென எங்கும் எதிலும் பாசாங்கு. கருணைக்கு இதயபூர்வமாக பொருள்காண முற்படுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பிறர் நலத்தை மேடையிலும் சுயநலத்தை திரைமறைவிலும் தேடிச் சோர்வுறும்  கூட்டத்திடை,  வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் சபிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் கனக்க உதவிகரம் நீட்டும் மகாத்மாக்களை  இறைவனிடத்தை இட்டுநிரப்ப அவதரித்தவர்களென எண்ணத்தோன்றுகிறது.

பெங்களூரில் ஆட்டோ ராஜா என்ற மனிதர் நேற்றுவரை வன்முறைகளில் தீர்வுகண்ட மனிதர். இன்று திக்கற்ற பல மனித உயிர்களுக்கு எவ்வித விள்ம்பரமுமின்றி மறுவாழ்வுதரும் மகேசனாக இருக்கிறார் என்று கேள்வி. இந்நாவலில் இடம்பெறும் பெண், பிரான்சு நாட்டில் பிறந்து, தனது வளமான மேற்குலக வாழ்க்கையைத் துறந்து,  மொழி, பண்பாடு அனைத்திலும் வேறுபட்ட ; போக்குவரத்து, மின்சாரம் இவற்றை அறியாத, ஒருவேளை உணவைக்கூட எளிதாகப் பெறமுடியாத உலகில் பிறருக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருத்தி. முடிந்தவரை அதிகப் புனைவுகளின்றி அவள் வழித்தட உண்மையை எழுத்தில் வடித்திருக்கிறேன்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின்  உலக இருத்தலுக்கான  காரணங்களிலொன்றை  புதின மொழியில் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இந்நாவலைச் சிறப்புடன் கொண்டுவந்த சந்தியா பதிப்பகத்திற்கும், நண்பர் நடராஜனுக்கும் நன்றிகள்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

ஸ்ட்ராஸ்பூர்

nakrishna@live.fr

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

                              –  ரா கிரிதரன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’  – 1

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால்  ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியு ள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நீலக்கடல் – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை.  காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.

வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.

பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.

இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.

நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.

00Ooo

கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.

கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித  வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.

இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை

குடைராட்டினம்

குடைராட்டினம்

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை  தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.  

அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி.  பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில்  கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன்.  ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.

மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம்.  இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”

பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல்.  இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.

பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும்.  காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.

போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால்  கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:

– எங்கே வந்த?- என்றாள்.

– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.

– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?

– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.

– பிரண்டுன்னா

– நீங்க நினைக்கிறமாதிரிதான்.

வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.

– தெவடியா. தெவடியா..

குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.

இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட  குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான்.  ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.

ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன.  அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது.  அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.

பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக  ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.

தன் வலியும் மாற்றான் வலியும்

                          உலகமக்களில் குறிப்பாக இந்தியர்களை அண்மைக் காலத்தில் வியப்பில் ஆழ்த்திய செய்திகள் இரண்டு: முதலாவது கமலா ஹாரீஸ் என்ற பெண்மணி ஐக்கிய அமெரிக்க நாட்டின் துணை அதிபராக  இரண்டாண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற வரலாற்று நிகழ்வு, அடுத்தது, அண்மையில் ரிஷி சுனக் என்பவர் இங்கிலாந்து பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம்.  இருவரும் இந்தியர்கள் என்கிற அடையாளத்தைக்காட்டிலும் இந்நிகழ்வின் பின்புலத்தில் ஒளிந்துள்ள பொதுவான ஒற்றுமைகள் கூடுதல் கவனத்தைப் பெற்று அரசியல் விற்பன்னர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. காரணம் இருவருடைய மூதாதையர்களுமே இந்தியர்கள், தங்கள் சந்ததிகளுக்கு மகுடம் சூட்டிய மண்ணுக்கு, தேசியம் பேசுகிறவர்களின் மொழியில் சொல்வதெனில் அந்நியர்கள்; இனத்தால், நிறத்தால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருந்தபோதிலும் இவ்விருவரும் இப்படியொரு உயரத்தை எட்டமுடிந்tதது எப்படி?  ஐக்கிய அமெரிக்காவிலாவது அதிபராக ஒர் ஒபாமாவை காணமுடிந்தது, ஆனால் ஐரோப்பா என்றதும், வரலாற்றாசிரியர்கள் முதன்மைபடுத்துகிற, காலனி ஆதிக்கவரிசையில் முன் நிறுத்தப்படுகிற பிரிட்டிஷ் ராச்சியத்தின் பிரதமராக  சர்ச்சில், கல்லகன், தாட்சர், அமர்ந்த அரியாசனத்தில் இன்று அக்காலனிநாட்டிலிருந்து பிழைக்கவந்த குடிமகனின் வாரிசு பிரதமரானது எப்படி ?

       கமலாஹாரீஸ் : தந்தை ஜெமைக்கா நாட்டவர், தாய் இந்தியர். இருவருமே மேற்கல்விக்காக அறுபதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள். பெற்றோர் இருவரும் பிரிந்துவாழத் தொடங்கியதும் இளமைக்காலத்தைக் கனடாவில் கழித்தபின்னர் உயர்கல்விக்கு மீண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்பினார். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்னர் மாவட்ட அரசு வழக்கறிஞர், மாநில அரசு வழக்கறிஞர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.  பின்னர் அரசியலுக்குள் நுழைந்து, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆனார், அமெரிக்க மக்கள் மன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2021 ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், மற்றும் மேலவைத் தலைவர்.

ரிஷி சுணக் : இவருடைய பெற்றோர்களும் கமலா ஹாரீஸ் பெற்றோர்களைப்போலவே அறுபதுகளில் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். தத்துவம், அரசியலில் பட்டம்பெற்றவர். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம், அப்போது தமது வருங்கால மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. மனைவி கணிணித் துறையில் நன்கறியபட்ட இன்போசிஸ் நிறுவனரின் வாரிசு. அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர், மக்களவை உறுப்பினர், உள்துறை அமைச்சர், நிதித்துறை செயலர், நிதித்துறை அமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்.

       இவர்கள் என்றில்லை, மனிதர்களில் ஒருசிலர் மட்டும் அரசியல் அல்லாத பிறதுறைளிலுங்கூட ஆயிரமாயிரம் நட்சத்திர கூட்டத்திடையில் நிலவாக ஒளிர்வதற்குக் காரணங்களென்ன ?

       முயலோ, மானோ அதனதன் இனத்திடையே தனது பலத்தை நிரூபிப்பது, திறனை முன்நிறுத்துவது அதிசயமோ, அபூர்வமோ அல்ல மாறாக ஓர் ஆமை முயலை வெல்வதும், முயல் சிங்கத்தைக் கிணற்றில் குதிக்கச்செய்து வீழ்ழ்த்துவதும் அதிசயமாகிறது, காலங்காலமாக நினைவுகூரப்படும் கதையாகிறது. வரலாறு என்பது சராசரி நிகழ்வல்ல, அரிய செயல். « செயற்கரிய செய்வார் பெரியர் » . கமலா ஹாரீஸும், ரிஷி சுணக்கும் அதைத்தான் செய்திருக்கிறார்கள் தன் வலியையும் மாற்றான் வலியையும் புரிந்து செயற்கரிய செயலைச் செய்து அரியாசனத்தில் அமர்ந்தவர்கள். இவர்களுடையது  ஊமையாக எதிர் தரப்பில் அமர்ந்திருக்கும் பாமர பார்வையாளர்களுடன், தனிமனிதனாக உரையாடலை நடத்த உபயோகிக்கும் அலங்கார அரியாசனமல்ல, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தி, காணவரும் உலகத் தலைவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடக் கிடைத்த அரியாசனம்.

       இதுபோன்ற வெற்றிக்கு இருபடிநிலைகள் தேவைப்படுகின்றன. முதலாவது தன்பலத்தை உணருதல், அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பலத்தை அறிதல்.

« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல் »  என்கிறது குறள்.  இதனைத்தான் சுருக்கமாக ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்கிறது தமிழின் திருமந்திரம். இதனையே சாக்ரடீஸ் ” உன்னையே நீ அறிவாய்” என்கிறார்.

       தன்வலியை உணருதலோ, தன்னை அறிதலோ, உன்னையே நீ அறிவாய் என சாக்ரடீஸ் போதிப்பதோ அனைத்துமே தனிமனிதனின் சுயமுன்னேற்றத்திற்குச்  சொல்லப்பட்டவை, பொருள் அளவில் வேறுபாடுகளற்றவை.

        சாக்ரடீஸ் மேற்குலகின் முதமைத் தத்துவவாதி, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னும் பின்னும் மேற்குலகு பல தத்துவவாதிகளைக் கண்டிருக்கிறது என்கிறபோதும் சாக்ரடீஸ் முக்கியமானவர். «  பல கடவுள்கொள்கைக்கு(Polytheism) மாறாக ஒரு கடவுள்(Monotheism) கொள்கையை முன் வைtக்கிறார், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் » என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர். தமது சிந்தனைக்காக அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டு பலியான மனிதர், சொந்த உயிர்வாழ்க்கையின் முடிவைக்கூட தமது மெய்ஞானத்தின் வழிமுறையில் தேடிக்கொண்டவர். சாக்ரடீஸ் தமது கருத்துக்களை, எண்ணங்களை எழுதிவைத்தவர் அல்லர். வாய் வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டவர், தானறிந்த உண்மைகளை பிறர் கருத்துக்கு உட்படுத்தி தமது சிந்தனையை தெளிவுப் படுத்திக்கொண்ட சிந்தனாவாதி. வள்ளுவன் கூறுகிற « தன்வலியும் மாற்றான்வலியும் » அறிந்து தெளிதலை சாக்ரடீஸ் மெய்ப்பொருள் கூடுதலாக நமக்கு விளக்குகிறது. சாக்ரடீஸ் கண்ட தத்துவம் அல்லது மெய்ப் பொருளுக்கு கிரேக்க மொழியில் மையேத்திக் (Maieutic) என்று பெயர். கிரேக்க தொன்மவியலின்படி மாய்ய(Maïa) என்ற சொல்லுக்கு மருத்துவ தாதியர் என்று பொருள். மகப்பேறின்போது உடனிருந்து உதவிசெய்பவர்கள். சாக்ரடீஸ் தத்துவத்தின்படி கேள்விகள் என்ற மருத்துவச்சி ஞானமென்ற குழந்தையைச் சுகமாகப் பிரசவிக்க-வெளிக் கொணர மனிதனுக்கு உதவுகிறாள். Maieutics என்பது  உள்ளத்திலிருந்து ஞானத்தை பிரசவிக்க உதவும் முயற்சி. ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குள் ஒளிந்துள்ள அறிவை அல்லது ஞானத்தைக் கண்டெடுக்கும் நோக்கத்தை அடிடிப்படையாகக் கொண்டது. மனிதன் தனக்குள் கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு உரியபதிலைத் தேடுதல். தன்னை அறியாமையிலிருந்து விடுவிக்கிற ஒரு படி நிலை. « தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை » என்கிற திருமூலர் வாக்கு அது: தன் பலத்தை, தனக்குள் புதைந்துள்ள அறிவைத் தோண்டி எடுத்தல்.

       சிந்தனையும் உண்மையும்

        சாக்ரடீஸை பொறுத்தவரைசிந்தனையின்(Thought) நோக்கு, உண்மையை அடைதல். சிந்தித்தல், அவருக்கு ஓய்ந்திருப்பதல்ல,தொழிற்படுதல்; எண்ணத்தை வினையாக்கும் வழிமுறை. அவர் கருத்தின்படி அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நேரடிப் பேருந்து இல்லை, பல நிறுத்தங்களில் இறங்கி ஏறவேண்டும், அதற்கு நேரமும் காலமும் பிடிக்கும். சிந்தனையென்பது சரியான விடையைத் தேடிப் போடும் கணக்கு ; படிப்படியாக ஏறி மேற் தளத்தை அடையும் செயல். சிந்தனைக்கு உரையாடலைச் சிபாரிசு செய்கிறார் சாக்ரடீஸ். அதாவது சிந்தனையின் ஆரோக்கியம் உரையாடலைச் சார்ந்தது. சாகரடீஸுக்கு உரையாடல் முதன்மையானது, உரையாடலே உண்மைக்கு வித்திடுகிறது. அவ்வுண்மை கண்மூடித்தனமான நம்பிக்கையை விலக்கி அறிவுடைநிலையை இட்டு நிரப்ப நமக்கு உதவுகிறது.  உண்மை என்பது என்ன ? ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர் வளர்ப்பு, கற்றகல்வி, உற்ற அனுபவம், சமூகச்சூழல், அதன் மரபு, பண்பாடு இவற்றின் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கக்கூடும். அவ்வுண்மை அவரவர் பார்வை சார்ந்த உண்மை. பார்வைக்குத் தெரிந்தது தெரியாதது என இரு பக்கங்கள் உண்டு, எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. அவரவர் கண்பார்வை சக்தியைப் பொறுத்தும் அதுவேறுபடும். பார்வைகுறைபாடு உடைவருக்கு எதிரிலுள்ள பொருள் தெரியவில்லை என்பதால் அப்பொருள் அங்கில்லை என்று பொருளல்ல. கண்ணாடி அணிந்தோ, தொட்டுணர்ந்தோ அப்பொருளை அவரால் அறியமுடியும். உண்மைக்கும் இத்த்கைய எத்தனங்கள் அவசியமாகின்றன. தவிர தனிமனிதர் உண்மை,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கான உண்மை அல்ல. பிரபஞ்ச உண்மை என்பது, எண்ணற்ற மனிதரிகளிடம் பெறப்பட்ட உண்மைகளின் ஒன்றிணைப்பு. ஒவ்வொரு மனிதனிடமும் அடிமனதில் சரியான உண்மை ஒளிந்துள்ளது, காலம்காலமாக மானுடத்தோடு பயணிக்கும் உண்மை அது, உள்ளத்திலிருந்து ஆய்ந்து அதனை அறிதல் வேண்டும், அப்படி அறிந்த உண்மையை உறுதிப்படுத்த உரையாடலும், விவாதமும் அவசியமாகிறது. நமக்குள் உணரும் உண்மையை மேம்படுத்த பிறருடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பூமி உருண்டை, கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை, எல்லாவற்றிர்க்கும் பதிலைத் தேடவேண்டியது நம்மிடம், ஆனால் அப்பதிலை  அவ்வுண்மையைப் பேருண்மையாக்க அல்லது பிரபஞ்ச உண்மையாக புணரமைக்க பிறர் கருத்துக்கு உடபடுத்தவேண்டும். ஒரு பிரச்சனைக்கு பிறர் யோசனையை நாடுவதோ அல்லது பிறர் கருத்தைக் கேட்பதோ நமது இடத்தில் அல்லது நமக்குப் பதிலாக அவரைச் செயல்பட அனுமதிக்கிறோம் என்று பொருளல்ல.  ஒரு பிரச்சனையில் நாம் கண்ட தீர்வு சரியா தவறா  அதில் உண்மையின் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய பிறர்  கருத்து உதவக்கூடும். நாம் தெளிந்தறிந்த உண்மையத் திருத்தி எழுதவும் வலுவூட்டவும் பிறமனிதருடனான உரையாடல்கள் உதவலாம். நாம் எடுக்கின்ற எந்த முடிவும் அதுசார்ந்த உண்மைக்கூறுகளும் எதிர்வினை இல்லாதபோது, நூறு விழுக்காடு சரியானதென்று சொல்வதற்கில்லை. நம் சிந்தனையில் உருவான கலையோ, படைப்போ பூரணம் பெறுவது மறுபக்கம் அதனைக் கையிலெடுத்துக் கொண்டாடும் பிற மனிதர்களின் ஆதரவால், ரசனையால்.                                     

« உன்னையே நீ அறிவாய் ! உன்னிடத்திலுள்ள உண்மையை அறிந்து அவ்வுண்மையை உறுதிசெய்துகொள்ள அண்டையிலுள்ள மனிதர்களிடம் உரையாடலையும் நிகழ்த்து ! » என்பது சாக்ரடீஸ் எழுதிய மனிதர் வெற்றிக்கான சூத்திரம். கிட்டத் தட்ட பூமிப்பந்தின் வேறொரு திசையில் வாழ்ந்து மறைந்த நமது வள்ளுவரும் « தன்வலி, மாற்றான் வலி » என உரைப்பதை இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியக் காலனி ஆட்சியின்போது ஆயிரமாயிரம் காந்திகள் இந்தியாவில் இருந்தார்கள், மோகன்தாஸ் கரம்சந்த் மட்டுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலமை ஏறக முடிந்தது, தன் வலியை, தமது பலத்தை உணர்ந்ததோடு தென்னாப்ரிக்காவில் தன்னிடம் தேடிய உண்மையை அது சார்ந்த உரையாடலை சொல் செயல் இரண்டு வடிவிலும் இந்திய தேசத்திலும், பிட்டிஷ் முடியாட்சியோடும் தொடர்ந்ததன் பயனை பின்னர் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பராக் ஒபாமா என உலகறிந்த மனிதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், இங்கிலாந்து பிரதமர்  ரிஷி சுணக் இருவரும் இனத்தால் நிறந்த்தால் சிறுபான்மையிராக இருந்தும் பிழைக்கச் சென்ற தேசத்தின் பெருமகனாகத் தங்களை அடையாளப் படுத்த முடிந்ததற்கு தன்பலத்தையும்    பிறர் பலத்தையும் அவர்கள் அறியமுடிந்ததே காரணம்.  பெரும்பானமையினரிடமிருந்து அந்நியபட்ட ஒருவரை தமது அரசியல் சட்டம் வகுத்துக்கொண்ட நெறிமுறையின் அடிப்படையில், தலமைக்கு அழைத்துச்சென்ற  பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் அரசியல் நாகரீகத்தை பாராட்டவேண்டும். அமெரிக்க  நாட்டின்  துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் இருவரும் இப்பதவியைச் சம்பந்தப் பட்ட நாட்டின் குடிமக்கள், கட்சிகள், அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்களின் தயவினால், கருணையினால் பெற்றவர்களில்லை கடுமையானப் போட்டியில் தங்கள் திறனை, வல்லமையை எண்பித்து வெற்றிபெற்றவர்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.                                                                                                                                                                       

       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பெருமைப் பட்டுக்கொகிற இந்தியாவிலும் நாளை இப்படியொரு அதிசயம் சாத்தியமா ? இங்கே காலங்கலமாய் ஆதிக்க சக்திகளிடம் அடிமைப் பட்டுக்கிடக்கிற மக்களை விடுவிக்க, அந்நய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட  ஓர் இந்தியப் பிரஜை அல்லது  சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்த அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஓர் இந்தியர் அல்லது மக்கள் எண்ணிக்கையில் பெரும்பானமையினராக இருந்தும்  ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே செத்துமடிகிற கூட்டத்திலிருந்து ஒருவர் அதிகார பலத்துடன்  இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவோ, குறைந்தபட்சம் குக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ;  தேர்வு செய்யும் கண்ணியம்  அல்லது பெருந்தன்மை ( ஒதுக்கீடுகளின் தயவின்றி ) நமக்குண்டா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும் ; இங்குள்ள சிறுபான்மை மக்களிடை அல்லது ஒடுக்கபட்ட சமுதாயத்தின் தலைவர்களிடையில் தங்கள் பலத்தை அறியும் ஆர்வமும், அறிந்த பின் பிறர்வலியறிந்து தங்கள் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பும் இருக்கிறதா என்பதுங்கூட இங்கு கேள்விக்குறி.  « எனக்கு ஒரு எம்.பி சீட் போதும், மத்திய அரசில் ஓர் அமைச்சர், கட்சிக்கு  பத்து எம். எல். ஏ. சீட்டுகள், சிறுபானமை வாரியத்துக்கு ஒரு தலைவர்பதவியென வாய்க்கரிசி போட்டால் போதும் தங்கள் சன்னதிக்குவந்து மொட்டைபோட்டுக்கொள்ள தயார் » என்கிற கொள்கைப் பிடிப்பாளர்களுக்கு, அதிகார வர்க்கம் கருணைவைத்தால் கவர்னர் ஆகலாம், ஜனாதிபதியாக கூட ஆகலாம் என்கிற கனவுடன் அரசியல் செய்பவர்களுக்கு « தன்வலியும் மாற்றான் வலியும் » நூறுவருடம் ஆனாலும் தெரியவர வாய்ப்பில்லை.

நன்றி : காற்றுவெளி மார்கழி 2022


  அலெக்சாந்தர்

                      

       ( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)

                                         கி தெ மொப்பசான்

மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.

இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில்  மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும்  கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத்  தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.  

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.

திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது  அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:

–  பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..

திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான  சுயநலத்தில், அலெக்ஸாந்தரை  மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.

அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட  திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:

– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா?  என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.

 .- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக  திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில்  தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார். 

அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப  விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.  

– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு  இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.

அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :

– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான்  உண்மை, என்றார்.

–  நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது.  இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன்  பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.

– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும்.  ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.

அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!

திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம்  நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும்  ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்!  என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:

  – அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம்,  நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் ​​பணியாள் அலெக்சாந்தர்  இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய  வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி  தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.

பெண்மணி தொடர்ந்தார்:

– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ? 

தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :

– ஓ! நான் …நான் மேடம்,  எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .

பெண்மணித் தொடர்ந்து :

உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?

 «  ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று  கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.

திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :

— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.

அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :

—  ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.

— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?

அவருக்கு நா குழறியது :

— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.  

— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.

—  ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது  மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.  

பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்

—  ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும்,  அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?

பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :

– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !

பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.

மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.

– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க  எனக்காகவா, ஏன் ?

அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர்  பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :

— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.  

பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :

— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?

மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :

—  மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.

பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள்,  நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.

தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :

— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.

அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.

ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :

— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.

— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.

கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :

— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?

பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :

— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.  

பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.

— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும்  சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.

மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.

                       ———————————————————.

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   – (காலாழ் களரில் உலகு ) – வித்யா அருண்

                         

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம்,  தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை  சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம். 

« காலாழ் களரில் உலகு » அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதை தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடுபத்தலைவி மட்டுமல்ல, உயர் கல்விபெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர்,நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின்  மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.

நூலுக்கு  முன்னுரை எழுதியுள்ள  எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் « காலாழ் களரில் உலகு » என்ற  சிறுகதைநூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக்  காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார்.

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில்  பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும்  ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் « தன் »னையும்,  « பிறரை »யும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன் இந்த « யார் ? » சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது.

« ஏழாம் அறிவு », « காலாழ் களரில் உலகு » இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை ( கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில்  நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம் எதுவும் நடக்கலாம்.

« மோனம் », « தொட்டால் பூ மலரும் », இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன.

« வழித்துணை », « வெட்டென மற », « போகாதே » மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆனால்  இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின்  அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட  மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும்,  புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  « அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ? » என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  « ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் »என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’ » என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில் தன்மையில் வளவளவென்றில்லாமல் சிக்கனமான மொழியில் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன.

இத்தொகுப்பில் « அதிர்வலைகள் », நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும், « கானல் காலங்கள் » மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, « புதையல் » என்ற சிறுகதையையும். « அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை » என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின்  ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் « அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை » என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு,   இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும்  உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரை திறனைப்  பாராட்டுகிறென்.

——————————————————————–

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

நாடா கொன்றோ, காடா கொன்றோ

 

 “ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து

அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.

« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை,  ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின்  தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை  அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.

     நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும்  மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென  விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து  வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »

ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம்.  அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.

கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும்  பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும்,  அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ?  எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

      கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது. 

      ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை  தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.

ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்;  இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற  தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.  

மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.

விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை.  மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு.  அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.

இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும்  அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.

 நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே

                                – ஔவை

_______________________________________

இறந்த காலம் (நாவல்)

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை

இலங்கு நூல் செயவலர்: முனைவர் க. பஞ்சாங்கம்

 

Ilangu nool seya valar (notionpress.com)

சந்தையில் கிடைக்காத எனது நூல்களை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அம்முயற்சியில் முதற்படிதான் முனைவர் க.பஞ்சாங்கம் திறனாய்வு நூல்கள் பற்றிய எனது கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல். சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. தமிழ் வாசிப்பு என்பது சாதி, சமயம் , என்னைத் தேடிவருவதில்லை, என்னை அழைப்பதில்லை, அந்த இதழில் அடிக்கடி காணுகின்ற பெயர், நூலுக்கு முன்னுரை அவருடையதாமே, பத்திரிகைகளின் சிபாரிசு, இடதுசாரி வலது சாரி, பெரியார் ராஜாஜி, தலித் பிராமணர் என்கிற இவற்றையெல்லாம் கடந்து படைப்புக்காக வாசிக்கபடுவது தமிழில் குறைவு. இன்றைக்கு சில வாசிப்புத் வட்டங்கள், இவாசிப்பு அரிதாரத்தைக் கலைத்து பொதுவான வாசிப்ப்பை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நவீன தமிழிலக்கியத்திற்கு பெரும்பங்கு ஆற்றி இருப்பவர் பேராசிரியர் க. பஞ்சாங்கள். அவர் திறனாய்வு நூல்களை வாசித்தபின் எடுத்த முடிவு. அவர் கரையில் ஒதுங்கியவற்றை சேகரித்தவரில்லை. ஆழ்கடலில் சோர்வின்றி தேடிய முத்துக்களைகொண்டு செய்வித்த ஆரங்கள் அவை. பாராட்டினையும் பரிசினையும் எதிர்பார்க்காது உழைத்த அன்றும் உழைக்கிற அறிஞர்கள் இன்றும் இல்லாமலில்லை. அவர்களில் பேராசிரியரும் ஒருவர். அவருடைய திறனாய்வு நூல்கள் குறித்த எனது பார்வைதான் இக்கடுரைகள். பிரெஞ்சு இலக்கியங்கள் இன்றைக்கும், நூற்றுக்கு 99 விழுக்காடு படைப்புகள், அவை தினசரி, செய்திகளாக இருந்தாலும் கூட மொழியைக் கையாளுவதில் கவனமாக இருக்கின்றன. இளம் படைப்பாளிகள் நவீன இலக்கியத்தினை நன்கு உள்வாங்கிகொள்ள பேராசிரியர் பஞ்சாயங்கத்தின் இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய திறனாய்வுக் கட்டுரைகள் நூல்களை வாசிக்கவேண்டும். அதற்கான அற்முகநூலே இலங்கு நூல் செயவலர் எனும் இந்த நூல்.

கீழ்க்கண்ட கட்டுரை நூலின் முதல் கட்டுரை: Ilangu nool seya valar (notionpress.com)

திறனாய்வும் திறனாய்வாளரும் 

க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே  பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.

” மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை –  படைப்புகளை உணர முடியும்”  என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார்.  இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.

கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும்  ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவன் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அவன் வாசகன் மட்டுமல்ல வாசகனுக்கும் மேலானவன், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவன் – ஒரு தேர்ந்த திறனாய்வாளன். ஒரு நல்ல தலைவிக்கு உரிய  தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.

க. பஞ்சாங்கத்தின் இரு திறனாய்வு நூல்களை முன்வைத்து இத்தொடரை எழுதுவதால் திறனாய்வு என்பதென்ன? ஒரு திறனாய்வாளன் என்பவன் யார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை தருவது முகவரிபோல அவசியமாகிறது. படைப்பிலக்கியத் துறையில் படைப்பு சார்ந்து வினையாற்றுபவர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்

1. வாசகர்கள் 2. படைப்பாளிகள் 3. விமர்சகர்கள்

1. இரசிகர்கள்வாசகர்கள்: படைப்பு துறையின் முதற்படியில் இருப்பவர்கள். அறிதலில் ஆர்வம் காட்டுபவர்கள். இரண்டாவது படிநிலையான படைப்பாளியாக உருமாறும் ஆற்றல் இருந்தும் அதனைத் தொழிற்படுத்த விருப்பமின்றி இருப்பவர்கள். வெகு சன ரசனையிலிருந்து மாறுபட்டவர்கள். உயிர் வாழ்க்கையே தேடல்கள் என்ற உந்து சக்தியால் முன் நகர்த்தப்படுகிறது என்பதைக் கிஞ்சித்தும்  உணராமல் வாழ்ந்து சாகும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து மாறுபட்ட சிறுபான்மையினர்.  படைப்புலகின் பூகோளத்தை புரிந்துகொள்ள கூடியவர்கள், அதன் தட்ப வெப்பத்தில் பயணிக்க அறிந்தவர்கள். இவர்கள் ஞானத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது,

2. கலைஞர்கள்– படைப்பாளிகள்:  உணர்வுகளால்  வழிநடத்தப்படுபவர்கள். வாசிப்பு தந்த உந்துதலால் படைப்பாளியாக உருமாருகிறவர்கள். புத்தக வாசிப்பும், மனித வாசிப்பும், கற்றதும் கேட்டதும், உற்ற அனுபவமும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் அக விழிப்புக்கு ஆளாகிறார்கள். கழுகின் பார்வைலிருந்து தப்பித்து ஓர் அரவம் போல இண்டு இடுக்குகளிலும் புதர்களிலும் ஊர்ந்தும், சுருண்டும் முடங்கியும் கிடப்பவர்கள், பெருமூச்சுக்குச் சொந்தக் காரர்கள். ஏதோஒருவகையில் எல்லாவற்றுடனுமான இவர்களின்  முரண்களும், மொழியும், மொழி சார்ந்த அழகியலும் எடுத்துரைப்பிற்கு இவர்களை இழுத்துவருகிறது,

3. கலை விமர்சகர்கள் மற்றும் திறனாய்வாளர்கள்: இவர்கள் கல்வியாளர்கள். உணர்வில் தோய்ந்தபோதும், வேண்டும்போது விலகியிருக்கக்கூடிய தெளிவு கொண்டவர்கள். அறிவில் தெளிவும் அனுபவத்தில் முதிர்ச்சியும், தடுமாறாத மனமும் இவர்களை கலை விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் செயல்பட ஊக்குவிக்கிறது.  திறனாய்வு என்பது வல்லுனர்களின் பணி. கல்வி, அனுபவம், எப்பொருள் குறித்து திறனாய்வு செய்கிறார்களோ அப்பொருள் பற்றிய முழுமையான அறிவுஎன மூன்றும் அமையவேண்டும். திறனாய்வாளர்களுக்கு அவர்களின் எல்லைகள் பிடிபடுவதுபோல தோற்றந்தரினும் பல நேரங்களில் அவர்களைத் திக்குத் தெரியாத காட்டில் அல்லாடவும் செய்யும். 

மேற்கண்ட மூன்று வகைபாட்டில் க. பஞ்சாங்கம் ஐயமின்றி மூன்றாவது பிரிவுக்குள் வருகிறார். கலைஞர்களும் படைப்பாளிகளும் எங்ஙனம் ரசிகர்களாகவும் வாசகர்களாகவும் தொடர்ந்து செயல்படுகிறார்களோ அங்ஙனம் கலைவிமர்சகர்களும், திறனாய்வாளர்களும் மேற்கண்ட இரு பிரிவின் கீழ் தொடர்ந்து செல்படுகிறவர்கள் அதாவது தொடர்ந்து வாசிப்பவர்களாவும், உந்துதல் தலைப்படுகிறபோது படைப்பாளிகளாகவும் செயல்படுகிறவர்கள். கடும் வாசிப்பின்றி திறனாய்வுகளுக்கு சாத்தியமில்லை என்பதால் . வாசிப்பில் தொடர்ந்து கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். க. பஞ்சாங்கம் சோர்வின்றி வாசிப்பவர், வாசிப்புதான் அவரது சுவாசத்தை சீராக வைத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் கவிஞர், நாவலாசிரியர் என்பதையும் நாம் அறிவோம்.

திறனாய்வு?

இலக்கிய திறனாய்வு என்பது  தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள்.  தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார்.  பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்து அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட சமூக மதிப்பீடுகளைக்கொண்டே பனுவலை அணுகுகிறார்கள் என்பதை ஒரு போதும் தமிழ்ச்சூழலில் நாம் மறக்கக்கூடாது. 

க. பஞ்சாங்கம் என்ற திறனாய்வாளர்

மேற்கத்திய உலகில் திறனாய்வில் இருவகையுண்டு:

1. பாராட்டுவதுபோல இகழ்வது  (La Critique Péjorative): நேர்மறையான விமர்சனங்களில் ஆரம்பித்து பின்னர் பனுவலை சிறுமை படுத்துவது

2. இகழ்வது போல பாராட்டுவது (La critique méliorative): எதிர்மறையான விமர்சங்களில் ஆரம்பித்து; சிறப்புகளை பேசுவது

தமிழ் திறனாய்வுகளை கீழ்க்கண்டவகையில் வகைபடுத்தலாம்

1. துதிபாடும் விமர்சனங்கள் 2. வசைபாடும் விமர்சனங்கள் 3. தனனை அண்டி இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், தன் இருப்பைச் சொல்லவும் எழுதப்படும் விமர்சனங்கள்  4. நடு நிலையான திறனாய்வாளர்கள்.

க. பஞ்சாங்கம் இந்த நான்காம் வகைமைக்குள் வருகிறார் என்பதை அவரது திறனாய்வு கட்டுரைகள் தெரிவிக்கின்றன. பாரதி புத்திரணின் அணிந்துரையில் உபயோகித்துள்ள வார்த்தைகளின் படி “உயர்கல்வி,பேராசிரியர், ஒற்றைப் பரிமானபார்வையில் பன்முகத்தன்மை, சிறு பத்திரிகைகள் அறிமுகமும் உறவும், பார்வை முதிர்ச்சி, தொன்ம இலக்கியங்கள், பின்நவீனத்துவ பார்வை, வாசிப்பில் தெளிவு”  எனும் பல்வேறு கூறுகள் அவரது சிறந்ததொரு திறனாய்வாளராக உருவாக்கியிருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக “இந்தியன் இப்படிபட்டவன், தெலுங்கன் இப்படிபட்டவன், அந்த சாதிக்காரன் இப்படிப்பட்டவனென்று அன்றாடம்  உரைக்கப்படும் பொதுவிதிகளைப் புறக்கணித்து மனித மனம் அவற்றையும் கடந்து ஆழமானது என்று மனிதனைப் பற்றிய புதிரிலும் மூழ்கிவிட்டவர் பஞ்சு”

எனவேதான் தமிழ் புதுக்கவிதையின் வரலாறுகள் எழுதமுற்பட்டவர்களில் பலர் எங்ஙனம் குறுக்கு சால் ஓட்டினார்கள். பேரறிஞர்கள் எனசொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழின் புதிய வழித்தடத்தை அங்கீகரிப்பதில் காட்டிய தயக்கமென்ன என்பதைச் சொல்ல முடிந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழ்கம் சார்பாக பாரதி பாடல்களின் ஆய்வு ப் பதிப்பினத் தயாரித்த மா. ரா. போ. குருசாமி பாரதியின் காட்சிகவிதைகளை அத்தொகுப்பில் மனமின்றி சேர்த்திருக்கிறார். அது பற்றி எழுதுகிறபோது: ” காட்சி என்ற தலைப்பில் இங்கே வெளியாகும் பகுதி கவிதை அன்று. பின் வந்தோர் தாம் எழுதிய ஒது புது வகை எழுத்தோவியத்துக்கு ‘வசன கவிதை ‘ என்று பெயரிட்டுக் கொண்டு, அந்த வகையான இலக்கிய வடிவத்துக்கு முன்னோடி பாரதியாரே என்று சாதிக்க லாயினர்; கவிதை கவிதை தான் வசனம் வசனம் தான்’ ‘ஒட்டு’ வேலை செய்வது சரி எனக்கூற இயலவில்லை”  என்று எழுதியதைக் குறிப்பிடும் க.பஞ்சாங்கம், ” 30களில்  தோன்றிய புதுக்கவிதைக்கு 1987ல் இந்த நிலமை. 1977லேயே “தமிழ்ப்  புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளிவந்தும் , அந்நூலுக்கு 1978-இல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமிப் பரிசுவாங்கியதன் மூலம் அங்கீகாரம் இந்திய அள்வில் கிடைத்தும் இந்த நிலைமை ” என்று வருந்த க.பஞ்சாங்கத்தால் மட்டுமே இயலும். மா. ரா. போ. குருசாமி மட்டுமல்ல தமிழண்ணல், மு.வ. சி.பாலசுப்பிரமணியமென பலர் வரிசையாகப் பஞ்சாக்கத்திடம் குட்டுப்படுகிறார்கள். “1959ல் முதல் பதிப்பாக சி.பாலசுப்பிரமணியன் “பெயரில்” வந்துள்ள இலக்கிய வரலாற்று நூலிலும் புதுக்கவிதைக் குறித்து குறிப்பில்லை என்கிற திறனாய்வாளர் அதே சி.பாலசுப்பிரமணியன் 1982ல் மறுபதிப்பு கொண்டுவரும்போது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்று சேர்த்துள்ளதைக்கூறி “இதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்பது” என நகைக்கிறார். இவர்களயெல்லாம் கண்டிக்கும் திறானாய்வாளர், புதுக்கவிதையை ஓர் இலக்கிய வகையாக ஏற்றுக்கொண்டு அதன் வரலாற்றை விரிவான முறையில் எழுத முயன்ற மரபான தமிழ் அறிஞர்கள் மது.ச. விமலானதம் (1987) சிலம்பொலி செல்லப்பன் ஆகியோரை பார்ராட்டவும் தவறுவதில்லை. 

——————————————————————

 

 

 

 

 

 

 

 

எஜமானடிமைகள்

              அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘புரட்சியாளன்’ (‘l’homme révolté’ ) என்ற கட்டுரை நூலை பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்த்தபோது இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல், மனதில் உதித்தது.   ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’  (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஒரு நுண்பொருளின்  பயன்பாடு எஜமான் (நுண்பொருள்)-அடிமை(செயலிகள்) உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.  அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து  புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். என்னுடைய கருத்தில் ‘எஜமானடிமைகள்’ எஜமானுமல்ல அடிமையுமல்ல.  எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள்.  இவர்கள் அலுவலங்களில் தலைமைக் கணக்காளராக இருக்கலாம், மேனேஜராக இருக்கலாம், வட்டாசியரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியராவும் இருக்கலாம், கட்சிகளில் மாவட்ட செயலாளரில் ஆரம்பித்து ஏன் கட்சித் தலைமை ஆகவும் இருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு ஏதோ சிலகாரணங்களை முன்வைத்து எஜமான்கள் என்ற ஹோதாவுடன் தங்கள் தங்கள் அரியாசனத்தில் இருந்தவாறே வேறு சிலருக்கு அடிமைகளாக இருக்கவேண்டிய நெருக்கடி.  உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.  இதுபற்றிய ஒரு நீண்ட  கட்டுரை எழுதி மலைகள் இணைய இதழில் வந்திருக்கிறது. இவர்களின் உள்மன வேட்கையை உணர்ந்து மேடையில் செங்கோலைக் கொடுத்து தலையில் மலர்க்கிரீடம் சூட்டுகின்ற தந்திரக்கார ர்களுக்கு அல்லது வெகுசனவழக்கில் ‘அல்லக் கைகளுக்கு’ உண்மையில் இந்த எஜமானர்கள் அடிமைகள். இக்கருத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது தான் 2017ல் வெளிவந்த ரணகளம் நாவல். நாவலில் வரும் அக்காள் மகாராணியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டபோதும், அண்டங்காக்கைகள் ஆட்டுவித்த கைப்பாவையாகத்தான் வாழ்ந்தார், மறைந்தார். உண்மையில் தலமை வாழ்க்கை பரிதாபத்திற்குரியது.

எஜமானடிமைகள் கட்டுரை விரைவில் ஒரு நூலில் இடம்பெற உள்ளது.

ரணகளம் நாவலில் இருந்து….

எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் வாயிலில் திரண்டிருந்த பெருங்கூட்டத்தையும்,  ஈக்கள் கூட தங்களை மீறி நுழைந்துவிடக்கூடாது என்பதைப்போல பொறுப்புடன் பணிசெய்த காவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணி நேர செவிலியர்கள், தனக்கு வேண்டியவர்களைத் தவிர அந்நியர் எவரும் அக்காளைச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கனகம் ஏற்பாடு செய்திருந்த மனிதர்களென அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிச் சாமர்த்தியமாக அக்காள் படுக்கையிற்கிடந்த  மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தான். இனி அக்காளின் கட்டிலைக் கண்டுபிடித்து அக்காள் ‘உயிரை’ விடுவிக்கவேண்டும்.

நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் வேளையில் சித்திரகுப்தன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம்’ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி’ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று. தொழுவத்தில் சாணம், கோமியம், கோரைப் புற்கள் கலவையிற் படுத்திருந்த எருமைக்கிடாவைக் குளத்தில் இறக்கித் தேய்த்து கழுவி மறுகரைக்கு  நீந்தவைத்து கரையேற்றி அழுந்தத் துடைத்தபோதும்  மிஞ்சியிருந்த நீர்த்திவலைகளை ஒற்றியெடுக்கமறந்து அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகள் உறிஞ்சிய சோமபான வாடையையும், ஆடைகளிற் படிந்திருக்கும் அத்தர் ஜவ்வாது மணத்தினையும், எருமையின் அடிவயிற்றில் கெட்டியாய் ஒட்டிக்கிடந்த சாணிப் பொருக்குகள் முடக்கியிருந்தன.  கடந்த  சில வருடங்களாகவே எமனுக்கு தனதுவேலை குறித்து அதிருப்தி இருக்கிறது.  எத்தனைகாலம் மனைவியுடன் சல்லாபம் செய்வதற்குக்கூட நேரமின்றி மானுட உயிரை எடுப்பது, அலுத்துவிட்ட து.  திரும்பவும் பூமியிற் பிறக்க விண்ணப்பிக்கலாமென்று தோன்றியது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தொழிலையும், தன்னையும் நவீனப்படுத்தும் யோசனை இருக்கிறது.  சியாமளாதேவி  இடத்தில் வேறொரு தேவி; தண்டம், பாசக்கயிறுக்குப் பதிலாக புதியவகைஆயுதம். ஒருநாள் போல அணிகிற பட்டு வஸ்திரம், பதக்கங்கள், கிரீடம் முதலானவற்றைத் தூர எறிந்துவிட்டு, இன்றைய நாகரீகத்திற்கேற்ப கோட்டு சூட்டு, எருமைக்குப் பதிலாக நவீன மோஸ்தரில் ஒரு வாகனமென்று ஆசைகள் நிறையவே இருக்கின்றன.  

கடந்த சில வருடங்களாக அவனுடைய வேலை பளு குறைந்து வருவதையும் மறுக்கமுடியாது.  ‘காமா சோமா’ உயிர்களுக்கு பூலோகத்தில்  தற்போது உத்திகளும், வழிமுறைகளும் ஏராளம். எமனுடைய சேவைக்காக மனிதர்கள் எவரும் காத்திருப்பதில்லை. மானுடர்களில் அநேகர் தம்முடைய உத்தியோகத்தின்மீது  கண் வைத்திருப்பது அவனுக்கு நன்றாகத்தெரியும். தீவிர சுதந்திர அபிமானிகளில் சிலர், பிறர் உயிரைப் பறிக்கிற சுதந்திரமும் வேண்டுமென்று போராட இருப்பதாகக் கேள்வி.  இருந்தும் இவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், அத்தனை சுலபத்தில் போவேனா என்று அக்காளின் ஜீவனையொத்தவையும் இருக்கவே செய்கின்றன. உறக்கத்திலிருந்த கும்பகர்ணனை யுத்தத்திற்கு எழுப்பியதும், பாதி சம்போகத்தின்போது  உத்தியோகத்திற்குத் திரும்ப தமக்குள்ள நிர்ப்பந்தமும் எமனுக்கு ஒன்றுதான்.   காரியம் முடிந்த உடனே காலவிரையமின்றி  எமலோகம் திரும்பவேண்டும்  சியாமளாதேவியை மஞ்சத்தில் சாய்த்து.. பாதியில் விட்டு வந்த சம்போகத்தைத் தொடரவேண்டும். எமன் கௌபீனத்தை இறுக்க மறந்திருந்தான், வழியனுப்ப கையை அசைப்பதுபோல  எருமை இருமுறைக்  கொம்புகளை அசைத்து, நாசி, மலதுவாரங்கள் ஊடாக தனது ஒவ்வாமையை வாயுவாக வெளியேற்றியதும், ஒருமுறை உடலைச் சிலிர்த்து மீண்டும் நடக்க ஆரம்பித்தது.

பகலில் தற்போதெல்லாம் அடிக்கடி  போக்குவரத்து நெரிசல்கள். சாலை மறியல்கள்.இரவுகளில் அம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதில்லை, குறித்த நேரத்தில் உயிரைப் பறித்து திரும்ப சௌகரியம்.    இவன் வரவை  எதிர்பார்த்து இரவில், அகால வேளைகளில்  தெருநாய்களின் ஓலம், நரிகளின் ஊளை; ஆந்தை, கோட்டான்களின் அலறல் போன்றவை வெகுகாலந்தொட்டு  கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள், அவைகள் இன்றில்லை என்பது ஒரு குறை. எங்கோ ஒரு கழுதை மட்டும் ஆரோகணத்தில் தொடங்கி  அவரோகணத்தில் முடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு, கால அட்டவணைப்படி  அக்காளின் உயிரைப் பறிக்கச் சாத்தியமா என்ற சந்தேகம் திடீரென எமனுக்கு வந்தது. அக்காள்  நலம் பெறவேண்டும் என்பதற்காக அக்காள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  தீவிரப்  பிரார்த்தனையில் இறங்கியிருந்தனர் அப்பிரார்த்தனைகளுக்கு இறங்கி,  இக் கடவுள்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவார்களோ,  எமதர்மராஜா என்ற தம் பெயருக்குச்  சிக்கல் வருமோ என்ற கவலையளித்த சந்தேகம். தன் கவலையைச் சித்திரகுப்தனிடம் தெரிரிவிக்க அவன் சிரித்தான் « பிரார்த்தனையின் நோக்கமே அக்காள் உயிர் சீக்கிரம் போகவேண்டும், என்பதுதான் அதனாலே கவலைப்படாம பூமிக்குப் போங்க. என் கணக்கு ஒருபோதும் தப்பாது. » எனக்கூறி சமாதானமும் செய்தான்.

அடர்த்தியாய் வானை உரசும்வகையிற்  தளும்பிக்கொண்டிருந்த இரவில் மூழ்கி பூமிப்பந்தைச் சில மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தாயிற்று.  சுரப்பெட்டிபோல ஒலித்த சுவர்க் கோழிகளின் சப்தமும், குண்டியைச் சொறித்தபடி வெளியில் வந்த நபர் தெருவைக் குறுக்காகக் கடந்து, ஒருமுறைக்கு இருமுறை  எதிர்வீட்டுக்காரன் சுற்றுசுவர்தாணா என்பதைத் திடப்படுத்திக்கொண்டு  மூத்திரம் போனதும் வந்திருப்பது பூமி என்பது உறுதியாயிற்று.  இனி எடுக்கவேண்டிய உயிர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற  மருத்துவமனையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சிக்காலானதல்லவென்று கூறி  எமனுடைய காரியதரிசி தெரிவித்த குறிப்புகள் மனதிலிருக்கின்றன. இந்திரலோகம்வரை மருத்துவமனையின் புகழ்  எட்டி இருந்தது. ஓரளவு சமாளிக்கக் கூடிய செலவில் உயிரை எடுப்பதற்குப் பூலோகத்தில் எவ்வளவோ வசதிகள் இருக்கிறபோது எதற்காக லட்சமாக லட்சமாக கொட்டிக்கொடுத்து, உயிரைக் போக்கிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு பெரிய பட்டிமன்றமே தேவர் சபையில்நடந்தது.  இரம்பையையும் ஊர்வசியையும் அணிக்கொருவராகப் போட்டிருக்க அப்படியொரு கூட்டம்.  முதன்முறையாகப்  பலகோடி உயிர்களைப் பறித்து எமன் செய்திருக்கும் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா. விழாவில் நமது எமனுக்கு பூ, பழம், தேங்காய், பாக்குவெத்திலை, பட்டு வஸ்திரம் பத்தாயிரம் வராகன் பொற்காசுகள்  தட்டில் வைத்து அளித்தார்கள். தமிழ்நாட்டுப் பிரதிநிதி ‘அண்டம் காத்த  தொண்டன்’ , எமனுக்கு  ‘உயிர்ப்பறிக்கும் உத்தமன்’  விருதை அளித்துப் பொன்னாடைப் போர்த்தினார். போர்த்திய கையோடு, ‘அப்படியே எனக்குமொரு விருதை ஏற்பாடு செய்திடுங்க, ஆகிற செலவை நான் பார்த்துக்கிறேன்’ என்று எமன் காதில் போடவும் செய்தார்.

 «யாருய்யா அது, எருமை மாடு ! படுத்திருப்பது தெரியலை »  என்ற குரல் கேட்டு எமன் சுய நினைவுக்குத் திரும்பினான். அவனுடைய வாகனம் சாலையிற் படுத்திருந்த  ஒருவரை மிதித்திருந்தது. சற்றுத்தள்ளி  ஜெகஜொதியாக மருத்துவமனை. வாகனத்தை  நிறுத்தி இறங்கிக் கொண்டதும், மூக்கனாங்கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், விளக்குக் கம்பமொன்றில் கட்டினான்.

 சிறுகுடலின் முற்பகுதி தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து சுவாசகுழாயை நெறித்தது.  இரு நாசி துவாரங்களும் காத்திருந்தவைபோல அடைத்துக்கொண்டு மூச்சை நிறுத்தப் பிரயத்தனப் பட்டன.  நெஞ்சில் கபம் கட்டியிருந்தது, இருமல் நிற்க மறுத்தது, எழுந்து உட்கார்ந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாக இருந்தது.  இருமல், சளி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என்று அனைத்தும் கைகோர்த்திருந்தன. இருமும்போது கண்களில் நீர் கோர்த்து ஒன்றிரண்டு சொட்டுகள் கன்னக்கதுப்புகளில் விழுந்து உடைவதுண்டு. இருமல்  சளியுடன் கடந்த சில நாட்களாக இரத்தத் துளிகளும் கலந்திருக்கின்றன. இருமி முடித்த மறுகணம், தொண்டைவறட்சியை உணர்ந்தாள். தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், பிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம்’ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். கனகம் எங்கே போய்த் தொலைந்தாள்?  இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அவள் வருவதில்லை. கறீம் கூறிய வார்த்தைகள்  உண்மையாக இருக்குமோ என நினைத்தாள். « கடைகள் நிர்வாகத்திற்குப் புதிதாக ஒரு குழுவினரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை  ஒப்படைக்கும்படி நீங்கள் கையொப்பம் இட்டிருந்ததாக ஒரு பேப்பரை  கனகம் உங்கள் குடும்பத்தாரிடம் காட்டினார். அந்த அம்மாள் பேச்சை நம்புகிறார்களேயொழிய, உங்களைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்குமில்லை. நான் பயந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது. உங்க தெய்வத்துக் கிட்ட நீங்க வேண்டிக்குங்க,  நமாஸ் பண்ணும்போது, உங்களைக் காப்பாத்தும் படி நானும் அல்லாகிட்ட வேண்டிக்கிடறேன், அதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியலை. » என்றான்.

மெள்ள எழுந்திருக்க முயன்றாள், இருமல் திரும்பவந்தது, ஓக்காளித்தாள், ஓக்காளித்ததைக் இரண்டுகைகளிலும் வாங்கினாள், சகதிபோல இரத்தமும் கோழையும். மயங்கி விழுந்தாள். கிராமத்தில் அம்மாவையும், சகோதரர்களையும், படியாட்களையும் கூட அதிகாரம் செய்தவள்தான். இயல்பான அவ்வதிகாரத்தைச் செலுத்திய இவளும் சரி, செலுத்தப் பட்ட மனிதர்களும் சரி மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். புதுச்சேரியில் செலுத்திய அதிகாரம் உபரிமதிப்பைக் குறிவைத்து, அவர்கள் வேலை நேரத்திற்கு விலைகொடுத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் சிப்பந்திகளை அடிமைகளாகப் பார்த்த எஜமான் அதிகாரம். காலம் விசித்திரமானது. இன்றைக்கு அவள் உயிர்கூட  அவள் பொறுப்பிலில்லை. இனி அவளுக்கு உரிமையான கடையில், ஓட்டலில், ஜவுளிக்டையில் மல்லிகைச்சரம் ஊதுபத்தி மணக்க நிழற்படத்தில் சிரிப்பாள்.  அவளுக்கென்றுள்ள வாடிக்கையாளர்களைப் பிடிக்கவேண்டுமில்லையா ?

இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்கிறார்கள். முதலில், ஊரில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு புதுச்சேரியில் மூத்தார் குடும்பத்தில் ஆரம்பித்து வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். ‘கணக்கன்வீட்டு கம்பத்தத்தில்’ பல தலைமுறையாக அடிமைபட்டுக்கிடந்த கறுப்பன்கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான், இறுதியாகக் கனகம். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.

       அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திர வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது? ஒருவேளை சிறுவயதில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்குத் தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவி வைக்க உழைமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள். பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் மூத்த அண்ணனிடம்  முறையிட்டதும், பத்து ருபாயை விட்டெறிஞ்சி “போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ” என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும்” எனச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

        பூப்டைந்த அக்காளுக்கு வரன்கள் தேடும் காலத்தில். பொருத்தமானவனைத் தேடிக் களைத்துப்போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், மூத்த சகோதரருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்தவாறுப் பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்.

       “என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா? இது புதுசா இருக்கு!”

        “ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர்’ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.”

        அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப்  படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது செக்குமாடுகள் பார்வையைத் விலக்க முடிவதில்லை.

ஏசியின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. சிறுவயதில் பனைஓலையில் செய்த காற்றாடியை குச்சியில் ஏந்தியபடி சகவயது பையன்களோடு ஒடுவாள். அப்போதொரு சத்தம் வரும், அதுபோலத்தான் குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. அளவைக் கூட்டிவைத்தால்  உடல் வெட வெடவென்று உதறுகிறது. ஒன்றுக்கு இரண்டுபேராக தமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் ஒருத்தியிடம் குறைக்கும்படி சொல்லியிருக்கலாம்,  பார்வையாளர் நேரத்தின்போது அங்கிருருந்த ஜவுளிக்கடை கணக்கப்பிள்ளை செல்வமணியிடம் கூறினாள். அவர் வேண்டுமென்றே ஐந்தில் உயர்த்திவைத்து, இரண்டொரு நிமிடங்கள் இவள் படும் வேதனையைப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்  பிறகு இரக்கப்பட்டவர்போல ஏசி அளவைக் குறைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தார். இவள் திரும்பமாட்டாளென்பது, அவருக்கு முடிவாகிவிட்து. அக்காளின்  கணவர் இறந்த பின்பு கனகத்தின் சிபாரிசில் நியமிக்கப் பட்ட ஆள். முதுகில் துணிமூட்டை சுமக்கும் சலவைத் தொழிலாளிபோல இவள் எதிரே பவ்யமாக நின்றவர். அக்காள் விட்டத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.  முடிச்சு முடிச்சாகக் குழப்பமான நினைவுகள், ஜொராஷ்ட்ரியர் பிணம்போல இவள் கிடக்க உடலுக்கு மேலே சுற்றிவரும் கழுகுகள். தரையில்,  சிறுகூட்டமாய்  உருமும் நரிகள், அவற்றை முந்திக்கொண்டு, நடக்கவிருப்பதை காணச் சகியாததுபோல தலையைத் தொங்கப்போட்டபடி நிற்கும் முருகேசன் கழுதை.

       கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும்’ வலது கரத்தில் ‘சுருக்கு’மாக நமது எமன்.  

       “வந்தாச்சா? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன்”.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. “பக்கத்திலென்ன கழுதையா? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது? வாகனத்தை மாற்றிக் கொண்டீர்களா?”

       “இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகளிருப்பது உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதாக வாங்கவேண்டும். தவிர வேறு யோசனைகளும் இருக்கின்றன.  இந்திரனிடத்தில் பிரச்சினையை கொண்டுபோகவேண்டும் நேரமில்லை. “

       ” பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை.”

          « உன்னிடத்தில் வாதிட நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகனும். எமலோகத்துலே வேலைகள் நிறைய இருக்கின்றன. கிளம்பு  நீ !


          ” இல்லை.. எனக்கு கழுதைமேல் ஏற விருப்பமில்லை, விட்டுடுங்க.”

          ” இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னுடன் இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘தண்டத்தில்’ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது.

—–