பிப்ரவரி 3
விழித்தபோதுதான் இந்திரலோகத்தில் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். “என்ன சார் நன்கு தூங்கினீர்களா? ” என நண்பர் இந்திரனின் விசாரிப்புடன் காலை தொடங்கியது. நன்கு உறங்க முடிந்தால், எல்லாம் கைவரப்பெற்றிருக்கிறோமென்று பொருள். படுத்தால் கணத்தில் உறங்கவும், முடிந்தபோது எழுந்திருக்கவும் வரம் வாங்கியிருக்கவேண்டும். சிலருக்கு இவ்வரம் கூடுதலாகவே அமைந்துவிடும். அவர்களுக்குத் தேவை பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல்..
இன்றைய காலையும் தென்னிந்திய காலையாக திருமதி இந்திரன் தயவில் வயிற்றுக்கு அறிமுகமானது. காலையிலேயே சூரிய பகவான் வேண்டுமான வெப்ப புன்னகையை பாரபட்சமற்று விநியோகித்துக்கொண்டிருந்தார். நீர், காற்று , ஆகாயம், தீ, பூமி என அனைத்துமே பொதுவில்தான இருந்தன. பூமியும் நீரும் இன்று தனியுடமையாகியிருக்கின்றன எதிர்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் தனியுடமை ஆக்கப்படலாம், ஆமென்.
இந்திய பெருநகரங்களுக்கேயுரிய மக்கள் வெள்ளம், வாகனப்பெருக்கம், வெப்பம், அனற்காற்று, இரைச்சல், மூர்க்கம், தன்னை தன்னை மட்டுமே தற்காத்துக்கொள்ளத் துடிக்கும் மனித உயிர்களென்ற இடிபாடுதல்கள், நெருக்குதல்கள், ஊமுள், நெருஞ்சிமுற்களென்ற வதைகளில் தினசரியைக் கடக்கும் (குறிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்கும்) இந்தியர்களை வணங்கவேண்டும். இந்தியாவில் நியாயமாக வெற்றி பெறமுடிந்தவன் அண்டார்ட்டிக்கில் வாழ நேர்ந்தாலும் சுலபமாகப் பிழைத்து கொள்வான். இந்தியச்சாலைகளில் வாகனமோட்ட தனிப்பயிற்சி வேண்டும் எவ்விதிகளுக்கும் அடங்காதவர்கள். தங்கள் கால்கள், தங்கள் கைகள், தங்கள் வாகனம், தங்கள் சாலை, தங்கள் உயிர் ஆகியவற்றில் அக்கறைகொண்டு சாலையை உபயோகிப்பவர்கள். நண்பர் இந்திரனின் வாகன ஓட்டி கொஞ்சம் விதிவிலக்கு: நல்ல சுறுசுறுப்பு. வாகனத்திற்கென ஒதுக்கப்பட்ட சாலைகளைப் பெரும்பாலும் பாதசாரிகள் ஆக்ரமித்துக்கொள்ளும் இந்தியாவில் அவர்கள் சாலையை தயவு பண்ணுகிறார்களாவென கவனித்து வாகனத்தைச் செலுத்தவேண்டும். இளைஞரான நண்பர் இந்திரனின் வாகனஒட்டி மன்மோகன் சிங்கைக்காட்டிலும் திறமைசாலி. எனக்கெதுவும் தெரியாதென்று கூறி இடித்து வாகனத்தை நிறுத்திய அனுபவம் நிகழவில்லை.
கிழக்குக் கடற்கரை சாலையின் திசைக்காக பயணித்தபோது இரண்டு கருத்துகள் குறித்து விவாதித்தோம். முதலாவது ஒரு கலைஞரின் படைப்புரிமை தொடர்பானது. சிற்பமொன்றை சுட்டிக்காட்டி நண்பர் இந்திரன் இன்னாருடையதென தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அக்கலைஞரை ஓவியர் என்ற வகையிலேயே அறிவேன். அதனை நண்பரும் உறுதிசெய்தார். எனக்குள்ள வியப்பு அவரால் எப்படி ஒரு சிற்பத்தை வடிவமைக்க முடிந்ததென்பது. உரையாடலின் தொடர்ச்சி எனது ஐயத்தைப்போக்கியது. அக்கலைஞர் தீட்டிய ஓவியத்தின் அடிப்படையில் வேறொரு சிற்பி சிற்பத்தை உருவாக்கியிருந்தார் என்பது செய்தி. ஆனால் அச்சிற்பத்தை உருவாக்கினதாக ஓவியர் பெயர் இடம்பெற்றிருந்ததே தவிர அதன் வடிவமைப்பில், ஆக்கத்தில் ஓவியனின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கொரு relief கொடுத்த கலைஞனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. தஞ்சாவூர்க்கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான் என்பதுபோல, மாமல்லசிற்பங்களை பல்லவர்களின் பெயர்களால் கொண்டாடுவதுபோலவென்று வைத்துக்கொள்ளுங்கள். நல்லவேளை நவீனயுகத்தில் ஓவியர்களும் சிற்பிகளையும் அடையாளப்படுத்தத்தொடங்கியுள்ளனர். கலைஞர் வடித்தது, ஜெயலலிதா தீட்டியதென்று சொல்ல முனையவில்லை. அவர்களுடைய அபிமானிகள் கூறத் தயாரென்றாலும் பிறர் ஏற்கமாட்டார்கள். பத்துபேர் சேர்ந்து உருவாக்கும் திரைப்படத்தில் இவர் கேமராமேன், இவர் எடிட்டர், இவர், பாடகர், அவர் இசைக்கலைஞர் என்று பெயர்களைப்போட தயாராக இருக்கும்போது ஓவியரின் மூளையில் உதித்திருந்தாலும் அந்த ஓவியத்தை வடித்த சிற்பியின் பெயரையும் அங்கே பொறித்திருக்கவேண்டாமா? இவருடைய திறமைமட்டுமே போதுமானதாக இருந்தால்; அம்மி பொளிபவனோ ஆட்டுக்கல் பொளிபவனோ சிற்பம் வடிக்கபோதுமென்று அவ்ர்களிடத்தில் தமது ஓவியத்தை சிலைவடிக்க ஒப்ப்டைத்திருப்பாரா? சம்பந்தப்பட்டச் சிற்பி அவனே எனக்குப் பெயர் வேண்டாம் எனது பசியைப்போக்க உதவினாற்போதும் எனக்கூறியிருந்தாலும், ஒரு கலைஞன் மற்ற கலைஞனின் ஞானத்திற்கு உரிமை கோரமுடியுமா? அப்படிகோருகிரபோது கூச்ச உணர்வு இருக்காதா?
அடுத்த விவாதப் பொருள் பிரெஞ்சு நண்பரால் உருவானது. உண்மை சத்தியம் குறித்து கீழைநாட்டவர்களின் பார்வை என்னவென்று அவர் கேட்கப்போய் பதில் சொல்லவேண்டியிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுநீதிச்சோழனின் சிலைகுறித்து விளக்கப்போக ஒரு பெரிய விவாதத்தை நடத்தினோம். அதே பார்வையில் இப்போதும் கேள்வி பிறந்தது. உண்மை, அறம், நீதி போன்றவற்றை வெவ்வேறு அலகுகொண்டு கிழக்கும் மேற்கும் அளக்கின்றன என்பதை எனது மேற்குலக வாழ்க்கைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது. தவிரவும் பல நேரங்களில் நம்மை ஜப்பான், சீனா போல முற்றுமுதலாக கீழைதேசத்தவர்கள் எனச்சொல்லிக்கொள்வதில் தயக்கமுண்டு. இந்திய வரலாற்றை அறிந்த நண்பர்கள் இந்த எனது தயக்கத்தை ஏற்பார்களென நினைக்கிறேன். இந்தியப்பண்பாடு படையெடுப்புகளாலும், பிற மக்களின் ஆதிக்கத்தாலும் காலங்கள்தோறும் சிதைந்துவந்திருக்கிறது அல்லது மாற்றத்திற்குள்லாகிவந்திருக்கிறது. இதுபற்றி தனியாக விவாதிக்க வேண்டும். அதுபற்றி எழுத ஆரம்பித்தால் கிளைக்கதையாகிவிடும். இப்போதைக்கு அதை மறந்தவனாக எடுத்துக்கொண்ட பிரச்சினைக்கு வருகிறேன். பிரெஞ்சு நண்பர் ‘உண்மை’ குறித்து நாம் என்ன நினைக்கிறோமென்று கேட்ட கேள்விக்கு வருகிறேன். நண்பர் இந்திரன் தயங்கவில்லை: பாவமன்னிப்பு தொடர்பான ஓர் உணமைச்சம்பவத்தில் பங்குத் தந்தையொருவருக்கு நேர்ந்த சோதனையையும் அவர் நடந்துகொண்ட விதத்தையும் விளக்கிக்கூறி, அவரது நடத்தை விதி திருவள்ளுவரால் எழுதப்பட்டதென்கிற விவரத்தையும் கூறினார். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த/ நன்மை பயக்கும் எனின்” என்கிற குறளையும் சுட்டிக்காட்ட நண்பர் தவறவில்லை. பிரெஞ்சு நண்பருக்கு வாய்மையிடத்தில் பொய்யை நிரப்பலாம் என்பதில் உடன்பாடில்லை. மனிதர் வாழ்க்கையை உலகமயமாக்கல் என்ற கோளுக்குள் குடி அமர்த்திய பிறகு இதுபோன்ற விடயங்களில் மேற்குக் கிழக்கு பார்வைகள் தேவையில்லை. தனிமனிதன் அவன் சுதந்திரம் என்கிற பார்வையை முன் வைத்து இயங்கும் மேற்கத்தியர் ஒரு புறம்; பண்பாட்டை சமூகம் சார்ந்து சிந்தித்து அச்சமூகத்தின் தமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுகும் இந்தியர்கள் ஒரு புறம். நமது பார்வைக்கும் மேற்கத்தியர் பார்வைக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. நம்மிடம் போலிகள் அதிகம். பகவத் கீதையையும் பைபிளையும், குர்ரானையும் ஏற்று நடக்கவேண்டியவன் எதிர்வீட்டுக்காரனேயன்றி நாமல்ல என்ற நினைப்பு என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கும் இருக்கிறது. கீழைநாடுகள்Xமேற்கு நாடுகள் என்ற விவாதத்தில் இந்தியாவை பெருக்கல் குறிக்குள் நிறுத்தவேண்டும். இது பற்றியும் ஆரோக்கியமானதொரு விவாதம் தேவை.
சுமார் பதினோரு மணிக்கு தென் அமெரிக்கப்பாணியில் கட்டப்பட்டிருந்த ஒரு தேவாலயத்தின்முன் எங்கள் வாகனம் வந்து நின்றது. பிரெஞ்சு நண்பரை அத்தேவாலயம் ஈர்த்ததெனலாம். அவர் தமக்கு அதீத மத நம்பிக்கையில்லையெனக் கூறிக்கொண்டாலும் உள்ளுக்குள் கூடுதலாக தமது மதத்தின்மீது நம்பிக்கை வைத்திருப்பவரென்பதை நன்கறிவேன். எனவே அவரது நடவடிக்கைகளில் எனக்கு வியப்புகளில்லை. இது போன்ற தேவாலயங்கள் அண்மைக்காலங்களில் ஆங்காங்கே இந்தியாவில் காளான்கள் போல ஏராளமாக முளைத்திருக்கின்றன. இந்து மதவியாபாரிகள் கோவில்கட்டி வர்த்தகம் செய்வதுபோல கிறித்துவ வியாபாரிகளின் வர்த்தக பிரிவில் இவை அடங்கும்.
காலை பதினோருமணிக்கு சோழமண்டலமென்கிற கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் இயங்குகிற கலைகிராமத்திற்கு வந்தோம். தமிழ்நாட்டின் தென்முனையிலிருந்து கிராமமக்கள் சென்னையைப்பார்த்து வாய்பிளக்க அக்காலத்தில் அண்ணா சமாதி, மெரீனா, எல்.ஐ.சி. உயிர்காலேஜ் செத்தகாலேஜ் போன்றவைகள் உபயோகத்திலிருந்தன. இப்போதும் அவைகள் அதே தகுதியுடன் இருக்கின்றனவாவென தெரியாது. ஆனால் வெளிநாட்டினருக்கு மகாபலிபுரம், காஞ்சிபுரம் பட்டியலில் சோழமண்டலம் கிராமம், தட்சிணசித்ரா ஆகியவைகளும் உள்ளன. கே.சி பணிக்கரென்கிற கலைஞனின் அரிய முயற்சியால் உருவான இக் கிராமம் ஓவியம் சிற்பமென இரு துறைசார்ந்த பெருமக்களையும் இணைத்து ஒரு மிகப்பெரிய கூட்டு குடும்பமாக இயங்குகிறது. ஏற்கனவே சென்றதுண்டு என்றாலும் முதல் முறையாக இப்போதுதான் சோழமண்டலத்தை புரிந்து பார்த்தேன். நண்பர் இந்திரனுக்கு நன்றிகூறவேண்டும். காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவற்றை தீட்டியவர்கள், செதுக்கியவர்கள்; அவர்களுடைய பாணி; வாழ்க்கைவரலாறு; அவர்களது குரு யார்? மானாக்கர்கள் யார்யார்? என்றெல்லாம் எங்களுக்கு அவர் பாடம் நடத்தினாரென்று சொல்லவேண்டும். அங்கிருந்த ஒவ்வொரு கலைஞனின் திறனும் பிறருக்குப்போய்ச்சேரவேண்டும் என்கிற உண்மையான ஆர்வம் அவருக்கிருந்ததை அன்று கண்டேன். தனபால், ராய் சௌத்ரி, பெருமாள், முனுசாமி, ராமானுஜம் அல்போன்ஸாஅருள்தாமஸ்; ஏ.வி. இளங்கோ, வீர சந்தானமென்று சிறுபத்திரிகை உலகில் நான் வாசித்திராத கலை அகாதமி உலகில் மட்டுமே கோலோச்சுகின்ற பலரை இந்திரன்மூலமே அறியநேர்ந்தது.
அங்கிருந்து வளசரவாக்கத்தில் கார்த்திகேயனும் அவருடை நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் அகவெளியென்ற கலையுலக கனவின் பரிச்சயம் வாய்த்தது. கலைஞர்களும் படைப்பாளிகளும் எவ்வித இடையூறுமின்றி உண்டு உறங்கி படைப்பு வினையாற்றிட சோழமண்டலம்போன்ற சூழலை ஏற்படுத்திதருதல் நண்பர்களின் திட்டம். பின்புலத்தில் இந்திரனின் வழிகாட்டுதலும் உள்ளதென்பது புரிந்தது. எங்கள் அமைப்பும் இவர்களோடு இணைந்து செயல்பட, நானும் கனவுகண்டு கொண்டிருக்கிறேன்.
பிற்பகல் தட்சிணசித்ரா சென்ற அனுபவத்தைத் தனியாக எழுதுகிறேன்
———————————————————–