இருப்பியல் சுதந்திரம்

  • நாகரத்தினம் கிருஷ்ணா

மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
               அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
              செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று.

                                                                               (சிறுபாணாற்றுப்படை)

இயற்கை கூட இயங்கினால்தான் கவனம் பெறுகிறது, சீற்றம்கொண்டால்தான் மதிக்கப்படுகிறது, மனிதர், விலங்கு, பறவையென சொல்லப்படுகிற உயிரினங்களன்றி, இயற்கை உட்பட அனைத்துமே அசைதல் வேண்டும், இயங்குதல் வேண்டும், அவ்வியக்கம் எந்த வடிவிலும் இருக்கலாம் :தவழுதல், தழுவுதல் ; நடத்தல் ஓடுதல் ; பேசுதல், பாடுதல் அனைத்துமே இருப்பியல் வெளிப்பாடுகள். ஆனால் இவை அவரது சொந்த மன விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக நடைபெறவேண்டும்.  

உறங்கிக் கொண்டிருந்த மனிதர் எழுந்திருக்கவில்லை. மனிதரின் வயதும், உடலைப் பாதித்த அல்லது பாதித்துக் கொண்டிருக்கிற நோயும் உடன் வாழ்பவர்களைச் சந்தேகிகிக்க வைக்கிறது, மருத்துவரை அழைக்கிறார்கள், வருகிறார், சோதித்துப் பார்க்கிறார், உதட்டைப் பிதுக்கி முடிந்துவிட்டதென்கிறார். இம்மனித உயிரியின் இருப்பைத் தீர்மானிக்க மருத்துவருக்கு, உடலிலுள்ள இதயத்தின் இயக்கம் ஆதாரமெனில், அம்மனிதரோடு வாழ்கிற அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் இருப்பியல் குறித்து எழுந்த கேள்விக்கும் மருத்துவரை அழைத்தமைக்கும், «  வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டில் எதையாவது உருட்டிக்கொண்டிருக்கிற மனுசன், இன்று ஏன் ஏழுமணிவரை தூங்குகிறார் »என்கிற ஐயம் காரணமாகிறது. ஆக மனிதர் இருத்தல் என்பது இதயம் இயங்குவதை மட்டும் பொருத்தது அல்ல, அவ்வுடல் எழுந்து நடமாட வேண்டும், பேசவேண்டும், புலன்களை உபயோகிக்கவேண்டும், வயதோடு இணைந்து, தம்முடைய தேவைகளை மட்டுமின்றி சுற்றம், நட்பு, வீதி, வெளி, அலுவலகம், சமூகம் சார்ந்த பலதேவைகளை நிறைவேற்றவும் வேண்டும், இவை நடந்தால் சம்பந்தப்பட்ட மனிதர் பற்றிய இருப்பு குறித்து அவரைச் சார்ந்த, அவரை காண்கிற, பார்க்கிற அவரோடு உறவாடுகிற மனிதர்களுக்கு ஐயம் எழுவதில்லை.

« இருத்தல் » என்ற வினைச்சொல்லை தமிழில் அஃரிணையாக இருப்பின்  இருக்கிறது, உயர்திணையாக இருப்பின்,இருக்கிறான், இருக்கிறாள், இருக்கிறார் என்றெழுதுகிறோம். இதையே சற்றுத் தெளிவாக விளங்கிக்கொள்ள யார் எப்படி இருக்கிறார் ? அல்லது எது இப்படி இருக்கிறது என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதிலில் மனிதர் அல்லது விலங்கு குறித்த கூடுதல் புரிதல் கிடைக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையில் சில இருப்பியல் பண்புகள் இயற்கையாக அமைகின்றன, இவற்றை உயிர்களின் பொதுவான அம்சங்களாக காண்கிறோம் : கொம்புள்ளவை, நான்கு கால்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, இலை தழைகளை தின்று வயிறு வளர்க்கும், பிற உயிர்களைக் கொன்று பசியாறும் என விலங்குகளைப் பகுப்பதும் ; கறுப்பின மக்கள், வெள்ளையர்கள் முதலான மனிதர்க்குரிய பாகுபாடும் இயற்கை அளித்தவை, இயல்பானவை, பிறப்பில் பெற்றவை. இவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரம் விலங்குக்கோ மனிதருக்கோ இல்லை. எனக்கு வால் வேண்டாம் என ஒரு குரங்கோ, எனது பெற்றோர்கள் போல இருக்கமாட்டேன் என்று ஒரு குழந்தையோ தனதிருத்தலை முன்னதாக தீர்மானிக்க இயலாது. மாறாக பிறந்த பின்னர் ஓர் உயிரி தமது இருத்தலை தமதியக்கத்தை எப்படி இருக்கவேண்டும் அல்லது கூடாது ; எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கேள்விக்குரிய பதிலின்படி நடக்கலாம். 

இயற்கைக் கூறுகளில் விலங்குகளும் மனிதர்களும் மேம்பட்ட இனம், இருந்தும் விலங்குகள்போலன்றி மனித உயிர்கள் அறிவுத் திறனால் தங்கள் இருத்தல்களை மேம்படுத்திக்கொள்ளவும் அல்லது சிறுமைப் படுத்திக்கொள்ள இயலும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியதுபோல ஆறறிவு படைத்த மனிதன் எழுந்து நடமாடி  இருத்தலை உறுதி செய்தபோதிலும் அதனை தனது அறிவு வழிநடத்த செய்கிறான் என்பது பொதுவான நம்பிக்கை.   

 « தம்பி கடைக்குப் போய் ஒரு சோடா வாங்கி வா ! எனப் பிறப்பிக்கப்படும் கட்டளைக்கு, அடுத்தகணம் கையை நீட்டி தாயோ தந்தையோஅல்லது அவனுக்கு வேண்டிய யாரோ ஒருவர் கொடுத்த சில்லறையைப் பெற்றுக்கொண்டு ஒரு சிறுவன் வீதியில் இறங்குவதில்லை, சில நொடிகள் யோசிக்கிறான், ஆணையிடுகிறவர் யார் ? இந்த ஆணையை நிறைவேற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன் என்ன, நிறைவேற்றாமற்போனால் ஏற்படக்கூடிய இழப்புகளென்ன என்பதை யோசித்து அதன் அடிப்படையில் அக்கட்டளைக்கு இணங்கவோ மறுக்கவோ செய்கிறான். கட்டளை வேண்டியவரிடமிருந்து என்கிறபோதும் தொடர்ந்து கீழ்ப்படிந்து நடந்தவன் சில நாட்களில் அல்லது சிற்சில சமயங்களில் « என்னால் முடியாது» என மறுக்கவும் கூடும், காரணம் அவன் விலங்கல்ல மனிதப் பிறவி. சிறு கொம்பை தூர எறிந்து, எஜமான கட்டளையிடட மறுகணம் தான் பழக்கப்பட்டிருப்பதுபோல  ஓடிச் சென்று கவ்விவருவதற்கு நாயல்ல. கொம்பைத் தூர எறிந்தால், கவ்விவர பழகிய விலங்கிற்கு யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. சில நேரங்களில் எஜமான் அல்லாது,  எஜமான் வீட்டைக் களவாட வந்திருக்கும் திருடன் ஒன்றை தூர எறிந்தாலும் கவ்வி வர ஓடித் தனது  கடமையை மறக்கின்ற இருத்தலாகவும் அது மாறும். « காளை ஒரு விலங்கு », « காளை கொம்புடன் இருக்கிறது » என்பவை விலங்கொன்றின் இருத்தல் பற்றிய செய்திகள். அதேவேளை இந்த இருப்பியல் செயல்படும் சுதந்திரத்தின் அளவீடென்ண என்பது கேள்வி. தன்னைச் சீண்டினால் முட்டவேண்டும், அதட்டினால் அடங்கவேண்டும் . புண்ணாக்கும், தவிடும், புல்லும் கொடுத்தவர் இவ்விலங்குக்கு வேண்டியவர், பிற மனிதர்கள் அந்நியர்கள் என்கிற புலன்கள் தரும் இச்சிறு புரிதலே அதன் வாழ்க்கைக்குப் போதும்   

 மனிதர் தேர்வு  அல்லது மனிதர் இருப்பியல் புலன் சார்ந்தது மட்டுமல்ல, அறிவையும் சார்ந்தது. சுதந்திரமாக செயல்படவேண்டும். Libre arbitre என்றொரு சொல் பிரெஞ்சு மொழியிலுண்டு, « Liberum Arbitrum » என்ற லத்தீன் மொழிச்சொல் அதன் வேர் என்கிறார்கள். அதன் பொருள் விருப்பம்போல செயல்படுவது, தங்குதடையற்ற சுதந்திரத்தை கையாள்வது. விலங்கின் இருப்பியல் சுதந்திரம் சிந்தித்து வினையாற்றுவதல்ல, மாறாக மனிதர் இருப்பியல் சிந்தித்து வினைபுரிவது. « ஆம் அல்லது இல்லை », « முடியும் அல்லது முடியாது », « நல்லது அல்லது கெட்டது »  இரண்டில் ஒன்றைமட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்கிற சூழலில், சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல நின்று கோடாமையுடன் செயல்பட மனிதர் இருப்பியலுக்கு உள்ள சுதந்திரமும் அடுத்து அச்சுதந்திரத்தைக் கையாளும் விருப்பத்தின் பலத்தையும்  இவ்வார்த்தைகள் குறிக்கின்றன.  “மனிதன் செய்யும் பாவத்திற்கு மனிதன் மட்டுமே பொறுப்பு, கடவுள் பொறுப்பல்ல” , என்று ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த கிறித்துவ சமய  இறையியலாளர், மற்றும் தத்துவவாதியான ஹிப்போ அகஸ்ட்டீன்( Augustine of Hippo) தெரிவிக்கிறார். தமது சமயத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த அம்மனிதருக்கு, கடவுள் பல உயிர்களைப் படைத்திருந்த போதிலும், அவருடைய படைப்பில் மனிதன் மட்டுமே அவருடைய நகல், எனவே அவன் நன்மைக்கானவன், அவன் நல்லவற்றைச் செய்கிறான் எனில் அல்லது  தேர்வுசெய்தால் அதற்கு கடவுள் காரணம். அவனே தீமையை தேர்வுசெய்கிறபோது கடவுள் காரணமில்லை என்கிறார், இந்து சமயம் « ஒரு மனிதனின் முன் ஜென்ம ‘கர்மா’ அல்லது ‘வினைப்பயன் அவனுடைய  தற்போதைய வாழ்க்கைப் பலன் » என்று தெரிவித்து மனிதர் இருத்தலை  முடக்க முனைவதும் வேடிக்கை.  இவை போன்ற கருத்துகள் சமயத்தை கேள்வி கேட்காமல் பின்பற்றிய காலங்களில் எடுபட்டிருக்கும், இன்றிவை பொருளற்றவை கேலிக்குரியவை. தீமைக்குரிய தேர்வு மட்டுமல்ல நன்மைக்குரிய தேர்வுக்கும் மனிதன் மட்டுமே பொறுப்பு, அத்தேர்வின் பலனை அடைய மறுபிறவிவரை காத்திராதே, உன்னுடைய நேற்றைய மற்றும் இன்றைய தேர்வின் பலனை நாளை அல்லது எதிர்காலத்தில் இப்பிறவியிலேயே  காண்பாய் என்பதுதான் வாழ்வியல் சித்தாந்தம் தரும் விளக்கம்.  “தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்று கணியன் பூங்குன்றனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த பேருண்மை.

ஒரு மனிதனின் விருப்பம்போல ஒன்றை தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டும், ஆனால் அது இருக்கிறதா இருந்தால் அதன் அளவீடு என்ன ? என்பதுதான் இன்று நம்மிடமுள்ள கேள்வி. அதாவது பாரபட்சமின்றி கோடாமையோடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா ?

மனிதனின் முன்னால் சரி தப்பு இரண்டும் இருக்கின்றன, இரண்டிலொன்றை தேர்வு செய்யும் சுதந்திரம் இல்லாமலில்லை, இருக்கிறது, இருந்தும் சரியை நிராகரித்து விட்டு, தப்பைத் தேர்வு செய்கிறான். ஏன் ? « எனக்கு மாத வருமானம் போதவில்லை, ஐந்து பிள்ளைகள், அவற்றைக் கரையேற்றவேண்டும்  எனவே இலஞ்சம் வாங்கிறேன் » என்பதில் ஆரம்பித்து, « தேர்தலில் ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுக்கவேண்டியிருக்கிறது, அதை ஊழல் செய்யாமல் எப்படி சம்பாதிக்க முடியுமா ? » என அரசியல் தனது தெரிவை நியாயப்படுத்த, « ஓட்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்றாலும் என்னுடைய வீட்டில் மூன்று ஓட்டுகள் சுளையாக பதினைந்தாயிரம் ரூபாய், அது  எங்கிருந்து வரும் ? » திருப்பிக்கேட்கிறான், அன்றொரு நாளாவது வீட்டில் பிரியாணி விருந்துக்கு ஆசைப்படும் அப்பாவி வாக்காளன். குறை சொல்ல ஒன்றுமில்லை, எளிய வாழ்க்கைக்குறித்து  பேசுகின்ற மனிதர்களே « நான் இதுபோன்ற இடங்களிலெல்லாம் தங்குவதில்லை பெரிய நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போடுங்கள் » எனச் சொல்வதும் « நான் பகுத்தறிவாதிதான் இருந்தும் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது, சக தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனவே சாமி சிலை செய்யவேண்டியுள்ளது » என தெரிவித்து, கலைத்திறனை பிழைப்புக்கேற்ற வகையில் குறுக்கிக்கொள்ளும் மனிதர்களுக்கும் ;  ஏன் விபச்சாரம் செய்கிறாய், ஏன் திருடினாய், ஏன் கொலைசெய்தாய் ? போன்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களும் ஒன்றுதான். 

தெக்கார்த் என்ற சிந்தனையாளர், « நான் சிந்திக்கிறேன் எனவே இருக்கிறேன் » என்றார், அல்பெர் கமுய் « நான் கிளர்ச்சி செய்கிறேன் அதனால் இருக்கிறேன் » என்றார். ஊடகங்களின் பொய்களும், காட்சி ஊடகங்களின் கவர்ச்சியும், அலங்கார மேடைகளின் உரத்த குரல்களும் விளம்பரங்களும் வேடிக்கைகளும் வீடு தேடி வருகிறபோது, நமக்கு யோசிக்க நேரமேது, « இதில் எனக்கென்ன இலாபம் » ? இதை மட்டுமே இன்றைய மனிதர் இருப்பியல் கேட்டு வினைபுரிகிறது. 4 ஆம் நூற்றாண்டின் பிரான்சுநாட்டைச் சேர்ந்த மற்றொரு இறையியலாளர் புரிடன்(Buridan) கழுதை ஒன்றை முன்வைத்து இப்பிரச்சனையை விளக்குவார், அதாவது பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவ்விலங்கு முன்பாக ஒருவாளி தண்ணீரும் மற்றொரு வாளியில் ஓட்ஸும் வைக்கிறார்கள்கள், இரண்டும் சமதூரத்தில் வைக்கபட்டிருக்கின்றன. எப்பொருள் முதலில் கண்ணிற்படுகிறதோ அதைத் தேர்வு செய்துபழக்கப்பட்ட விலங்கு அது. இங்கே இரண்டுமே சமதூரத்தில் இருக்கின்றன, விளைவாக எதைத் தேர்வு செய்வதென்கிற குழப்பத்தில் விலங்கு இறந்துவிடும். மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன் அவனுக்குப் பசி வயிற்றில் மட்டுமல்ல. அதற்குகந்தவகையில் அறிவைப் பயன்படுத்தி எதைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் இன்றையமனிதன் வல்லவன்.

« படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால்  போவான் போவான் ஐயோன்னு போவான் » என பிழைக்கத் தெரியாத பாரதி எதையோ எழுதினான், அது நமக்கெதற்கு ?  நல்லதோர் வீணையை, சிந்திக்கும் அறிவை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டு. விலங்குகள்போல அடிமைகளாக வாழப் பழகிக்கொண்டோம். இப்பிரச்சனையில் விலங்குகள் மேம்பட்டவை, எஜமானர்கள் யாரென்று தெரிந்து அவர்களுக்கு மட்டுமே அடிமைப் படத் தெரிந்தவை, மனிதர்க்கின்று ஆயிரமாயிரம் ஆண்டைகள் அவர்கள் தூணிலும் இருப்பார்கள் துரும்பிலும் இருப்பார்கள், முகம்காட்டும் எஜமானர்களைக் காட்டிலும் முகமற்ற எஜமானர்களிடம் கூடுதலாக இன்றைய மனிதம்  விசுவாசத்துடனிருக்க பழகியிருக்கிறது. 

நன்றி: மானுடம் ஜூன் 2023

——————————————————————————-

அன்புள்ள அப்பாவுக்கு…..

சிறுகதைகள்

ஒற்றைச் சம்பவம் அல்லது நிகழ்வு இரண்டொரு கதைமாந்தர்களைக் கொண்டு சிறுகதைகள் எனப்படும் கதைசொல்லல் முறை இடைக்காலத்தில் ஆரம்பித்துவைக்கப் கபட்டது. இம்முறையில் மேற்குலகில் நாவல்களைபோலவே குற்றம், அறிவியல், நகைச்சுவை எனவகைமைகள் இருக்கின்றன. இன்றும் சிறுகதைகள் எழுதப்படினும் இருபதாம் நூற்றாண்டில் அவற்றுக்கிருந்த செல்வாக்கு இன்றில்லை. கவிதையைப்போலவே பரந்த ஆதரவு இவற்றுக்கும் இன்றில்லையென்றுதான் கூறவேண்டும். சிறுகதைகளில் நானறிந்த பெயர்கள் பல்சாக், எமில் ஸோலா, மொப்பசான், ஆர் எல் ஸ்டீவன்சன், அண்டன் செக்கோவ், டோயில்,சோமெர்செட் மௌஹாம்,காஃப்கா, கல்வினோ, அன்னிசொமோன், எரிக் ஒர்சேனா, பத்ரிக் மொதியானோ, பிட்ஸ்ஸெரால்டு எனப் பெரியதொரு பட்டியல் இருக்கிறது ஏன் எனக்கு வர்ஜீனியா வுல்ஃப் The Searchlight, , இ.எம். ஃபாஸ்ட்டரின் The otherside of the hedge மறக்க கூடியவையா என்ன. தமிழில் புதுமைபித்தன், ஜெயகாந்தன் எனத்  இன்றுள்ள பல முக்கிய படைப்பாளரகளை வாசித்துள்ளேன்.

கவிதைகளில் தொடங்கி சிறுகதைகளை முதலில் குமுதம், விகடன், கல்கி, குங்குமம் என்று எழுதிடிருக்கிறேன். ஆறு சிற்கதை தொகுப்புகள் வந்துள்ளன

அன்புள்ள அப்பாவுக்கு

( 2001 ல் குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை)

அவள் கடிதம் எழுதும் அப்பாவின் தேவை வேறு, அக்கரையில் வாழும் அவள் வலியும் தேவையும் வேறு கனவு மெய்ப்படவேண்டும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை

                                                                                   பாரீஸ் 10-12-2000

ன்புள்ள அப்பாவுக்கு,

இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை.  என்ன கோபம்?

உங்களுக்கு சர்க்கரை குறைந்திருக்கிறதா?  இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா? அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

அவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா? அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ? நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.

அண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா? ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா?

எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா? (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா?) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில்  சிகரெட்டை வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை! சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு,  விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.

எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா? ச சு·பி ! ·பே பா லெ சினேமா! (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.

எனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம்  என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.

எதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா? அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.

பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு!” என்றார்கள்.  ரொம்ப பசிச்சா? அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.

பிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா? இந்தியாவுக்கு வந்து விடட்டுமா? எனக்கு உடனே கடிதம் போடவும்.

இப்படிக்கு
கலா
—————————————
புதுவை, 05-02-2001

சௌபாக்கியவதி கலாவுக்கு,

அப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.

சௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.

நீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.  அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு குழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.

ஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.

உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது? வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச்  ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.

இப்படிக்கு
அப்பா
நன்றி

————————–

குங்குமம் 10-02-2001

_____________________________________________________

பெருவெளி எழுத்து:  

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

பெருவெளி எழுத்து:  – அ.ராமசாமி

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

Advertisements

Report this adஅந்தரங்கம்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல்பிராஹாசெக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹாசெக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016

‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

இக்கட்டுரை செப்டம்பர் 27 2007ல் தமிழின் முதல் இணைய இதழான திண்ணை யில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை ஆசிரியர் தமிழ் மரபிலக்கியம, நவீன இலக்கியம் இரண்டையும் நன்றாக அறிந்த தமிழ்பேராசிரியர்களில் ஒருவர். 1948ல் கோவையில்பிறந்த இவர்,  இந்தியாவில் புதுச்சேரிமாநிலத்தில்,  புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம்அகவையில்விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம்ஆண்டுமுதல்தேவமைந்தன்படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில்ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்றமூன்றுநூல்களாகவெளிவந்துள்ளன. 1969 முதல்வானொலி உரைகள்நிகழ்த்திவருபவர். செந்தமிழும் நாப் பழக்கம் என்ற இவர் தம் வானொலி உரைத் தொடர் குறிப்பிடத் தகுந்தது.

நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய ‘நெடுங்கதை’ என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக ‘novella’ இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா ‘வணக்கம் நண்பர்களே!’ என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் ‘nouvelle’ ‘ஒருவகை சுருக்கமான இலக்கிய’க் கட்டுரைதான். இருப்பினும், ‘éditions de la connaissance’ இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் – நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் ‘தகவல்’ அல்லது ‘செய்தி’ ‘nouvelle’க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘nouvelle’க்கு – அடுத்த பொருள் ‘சிறுகதை’ என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள ‘மொரீஷியஸ் கண்ணகி’யைச் சிறுகதை என்றும்; ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான ‘மொரீஷியஸ் கண்ணகி’ கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

“ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.’யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் ‘குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்’ என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது – இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) ‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்”-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. ‘எமன் – அக்காள் – கழுதை’ சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் ‘அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு ‘அக்கா’ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், “பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று சொல்லாமலிருந்திருக்கலாம்..” என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.

மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, ‘அம்மா எனக்கொரு சிநேகிதி ‘ கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு ‘ஓர் அசாதரணமான மௌன’மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் – மகன், குந்திதேவி – அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா – தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். “குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு”(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், “கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று” என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. ‘அம்மா எனக்கொரு சிநேகிதி,’ ‘அக்கினிகாரியம்,’ ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,’ ‘எமன் – அக்காள் – கழுதை,’ ‘குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) ‘நந்தகுமாரா நந்தகுமாரா'(7), ‘சாமி – பெரிய சாமி,’ ‘தாண்டவராயன்'(8), ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ ஆகிய கதைகள் – நா.கி. “வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள”(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

“சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள ‘வேறொருவன்’ பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்”(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, ‘38,39,40 – புல்வார் விக்தோர் யுகோ.’ சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. ‘அமலா..விமலா..கமலா,’ ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’ என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் ‘பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்’ சுந்தரம். 1997இல் – முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் “அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்” என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் – அமலா மட்டுமல்ல, விமலா – கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, ‘ரீஜெனெரேஷன்’ என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்,’
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு ‘புரொக்ராம்’கள்தாம்… உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை ‘மகா சங்கார’த்துக்கான ‘புராஜக்ட்’டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை ‘misogyny’ என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான ‘நந்தகுமாரா நந்தகுமாரா’வும் ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா’ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக – தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்’ கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் ‘அறைய’ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் ‘அவர்,’ தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், “திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

‘மொரீஷியஸ் கண்ணகி’ கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. “கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்” என்பவனுக்கு, “இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்” என்று உறுதிப்படுத்த “கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்” என்று கதை முடிகிறது. நா.கி.’யின் ‘நீலக்கடல்’ தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

‘பிறகு’ என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, ‘மொரீஷியஸ் கண்ணகி.’ அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ என்கிற கடைசிக்கதை. ‘டிஜிட்டல் காமரா’ போல – நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை – காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது – இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி – திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் – உற்றார் உறவினர் – எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. – பக்.67, 69.
8. “எதற்காக ‘என்னுடைய’ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? – நினைக்க நினைக்க ஆத்திரம்.” ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. “தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?” ப.108. “…இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்.” ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10.”இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”
“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்.”-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. “இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்.” – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. – கதை: ‘பிறகு..’ ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! – “காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்.” ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்…… ப.67.
19. “திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. ‘பௌருஷம்’ என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. “எங்க.. அவங்கிட்டயா…வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே.” ப.37.
22. ‘ஆவளி’ என்றால் வரிசை; ‘வம்சாவளி’ என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, ‘கனவு'(dream state)க்கு மாற்று ‘நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி ‘நினைவுகூறுதல்’ என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
annan.pasupathy@hotmail.com
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

( இங்கு நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளனாக நான் சொல்ல நேர்ந்திடும், அப்படிச் சென்றபோது, என்னுடைய வழக்கு விசாரணை அல்லாது வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து பெண்நீதிபதிக் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வித்தியாசமானவை. அதன் எதிரொலிதான் இக்கதை. கடந்த பிப்ரவரியில் வெளிவந்துள்ள சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

      குளிரகாலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி ஒருவாரம் ஆகிறது, கடந்த சில  நாட்களாகவே இரவுபகலாக பனிபொழிந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய  நாடுகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரையில், என்னைப்போன்ற பாவப்பட்ட மனிதர்களை வாட்டுவதெற்கென அவ்வப்போது பூமியின் துருவப் பகுதிகள் அனுப்பி வைப்பதாக நம்பப்படுகிற கடுங் குளிர்காலப் பனி. தொலைகாட்சி வானிலை அறிவிப்பாளர்கள் – அதிலும் பெண் அறிவிப்பாளர்கள் என்றால், அவள் சொல்வதை எங்கே காதில் வாங்கமுடிகிறது – எச்சரித்தும்,  உடுத்தவேண்டியவற்றை  உடுத்தத் தவறி வெளியில் கால் வைக்கிறபோதுதான், அதன் வீரியத்தை உணரமுடிகிறது. திறந்த வாசற்கதவை அடைத்துவிட்டு,  திரும்பவும் வீட்டுக்குள்   நுழைந்து குளிரைச் சமாளிக்கப் பொருத்தமாக  ஒரு கம்பளிச்சட்டை, ஒரு கம்பளி ஸ்கார்ஃப், ஒருகம்பளிச் ஜாக்கெட், என்று  வெளியில் வந்தேன்.

குடியிருப்புகளின் கூரைகள், இலைகளை உதிர்த்த மரங்கள், மோட்டார் வாகனங்கள், சாலைகள்,  நடைபாதைகளென, திறந்தவெளியில் வானத்தின் கண்காணிப்பில் இருந்தனவற்றில் விதை நீக்கிய பஞ்சை உலர்த்தியதுபோல,  எங்கும் பனி. போதாதென்று, ‘பனி’ வெண் சாம்பல் தூவலாக  காற்றில் அலைந்து பூமியைத் தேடிக்கொண்டிருந்தது. மழைத்தூறல்கள் தங்கள் பாட்டுக்கு விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் வினையில் குறுக்கிடக்கூடாது எனப் பனிப்பொழிவு எச்சரிக்கப்பட்டிருக்கவேண்டும்,  மழைத்தூறல்களுக்கு இடையூறின்றி  சாதுர்யமாகத் தப்பித்து,காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து, காற்பந்தாட்ட வலைக்குள் பந்தைப் போட்ட ஆட்டக்காரரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, பிற  வீரர்கள்  ஒருவர்பின் ஒருவராக தாவிவிழுந்து அவரை மூடிமறைப்பதுபோல, சீவல்களாக உதிரும் பனித்துகள்கள் ஒன்றின்மீது ஒன்று விழுந்துகொண்டிருந்தன.  வாகனங்கள், வளர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியன மட்டுமின்றி ;  திக்கற்ற  புழுக்கள், வண்டுகள், சிறு சிறு பூச்சிகளின் உயிர்வாழ்க்கையும்  நசுக்கப்படுவதை  எதார்த்தமாக கருதிக்கொண்டு படி இறங்கினேன்.  திரையிடாத  என் முகத்தில்  உறைந்த  நீரை வாரி இறைத்த துபோல பனிக்காற்று தாக்குகிறது. முகத்தை நனைத்தக் காற்றை வழித்து எரிந்தபின்,  குடியிருப்பு அருகில்போடப்படிருந்த  படிகளைக் கவனத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு காலெடுத்துவைத்தபோது, மிதிபடும் பனி, சப்பாத்துகளில் பிதுங்கி மனித அழுக்கின் அடையாளம் பாதச்சுவடுகளாகப் பின் தொடர்வதை ரசித்தபின், நேரத்தின் நெருக்கடியை உணர்ந்தவனாய் நடந்தேன்.

வாகனத்தை எடுக்க குடியிருப்பின் பின்பகுதிக்கு வரவேண்டும். பனியைத் தரித்திருந்த ஊசியிலை மரங்களுக்கு இடையே,  சிலுசிலுவென்று  குறுக்கிடும் காற்றுத் திரைகளை விலக்கி, தரையெங்கும் கொட்டிப் பரப்பியிருந்த பனியை மிதித்து துவைத்தபடி, காரஜ் எண்ணை மனத்திரையில்  சரிபார்த்துக்கொண்டு  நடந்து எதிரில்  நின்றேன். குடியிருப்புகளின்  பின்புறத்தில், எனக்கு இடது பக்கமாக  நிற்கும் இலைகளை உதிர்த்து நிற்கும் ஒக் மரங்களின் மீது எனது பார்வை சென்று முடிந்தது.

இதேவேளையில் பிறகாலங்கள் எனில் சிட்டுக் குருவிகள் பெருங்கும்பலாகக்  கூடி அப்பகுதியைக் கடந்து செல்கிற எந்த மனிதரையும் திரும்பவைக்கிற வகையில் ‘க்ரிக்..க்ரிக்’ என சத்தமிடும், குறிப்பாக பத்து அல்லது பதினோருமணிக்கு. அவைகளுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கும்போல : சற்றே பெரிதான தடித்த கிளையொன்றில் இருகுருவிகள் உட்கார்ந்திருக்க, கீழும் மேலும், எதிரிலும் பக்கவாட்டிலும் கிளைகள்,கொம்புகளில் வாதி, பிரதிவாதி, சாட்சிகள், ஜூரிகள் என்று   ஒரு   நீதிமன்ற காட்சி கச்சிதமாமாக அரங்கேறும்.  கனம்  நீதிபதி அவர்களே என ஆரம்பித்து  வாதிடும் பறவைகளின் தொனியைக்கொண்டு, வழக்கை ஊகிக்க முயன்று, குழப்பத்துடன் கிளம்பிச்சென்றது அதிகம்.   `முதல்  நாள்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குருவிக்கு மறு நாள் என்ன  நேர்ந்திருக்கும் என யோசிப்பதுண்டு. அதை விளங்கிக்கொள்ள, மரத்தில் அமர்ந்திருக்கும் குருவிகூட்டத்தில், அப்பறவையைத் தேடி அலுப்புற்றிருக்கிறேன். ஒருமுறை அப்படியொன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளை, எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் குடியிருக்கும் பெண்மணி, முகத்தில் பல கேள்விகளைத் தேக்கிக்கொண்டு என்னைப் பார்ப்பது மட்டுமல்ல, அதுமுதல்  எப்போதேனும் என்னைக் கடந்து செல்லவேண்டிய இக்கட்டு உருவாகிறபோதெல்லாம், கால்கள் பின்னிக்கொள்ளத் தடுமாறுகிறாள், தம் குழந்தைகளை சேர்த்தணைத்தபடி முகத்தைப் பராக்கு பார்ப்பதுபோல வைத்துக்கொண்டு அச்சத்துடன்   நடந்து, சில அடிதூரம் சென்றபின் திரும்பிப் பார்க்கிறாள்.  

காலை பத்து முப்பதுக்கு நீதிமன்றத்தில் இருக்கவேண்டும் என்பது நினைவுக்கு வந்த து. சம்பந்தப்பட்ட வழக்கு பத்து நாற்பத்தைந்திற்கோ, பதினொன்றிற்கோ தொடங்கலாம், எனினும் அரசாங்கம் தரும் மொழிபெயர்ப்புக்கான கட்டணத்தைப் பெறுகிறபோது, அவர்கள் கோரிக்கை கடிதத்தின்படி  பத்து முப்பதுக்கு விசாரணை மண்டபத்தில் இருப்பதுதான்  நியாயமாக இருக்க முடியும். வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதான சாலையில் ஊர்ந்தவேளை, பனிப் பொழிவு நின்று சூரியனை அனுமதித்திருக்க, சாலையோரங்களிலும், நடைபாதையிலும், கட்டிடங்களின் கூரைகளிலும் விழுந்து கரையாமலிருந்த பனிகளில் பொன் நீலத்தில் சூரிய ஒளி நட்சத்திரங்களாக பிரகாசிப்பதும் மறைவதுமாக இருந்த அழகை ரசிக்க நேரமின்றி சாலையில் கவனம் செலுத்தினேன். சாலைகள், வீதிகள், திருப்பங்கள்  நன்கு பழகியவை என்கிறபோதும், சரியானவற்றை இருமுறை தவறவிட்டதற்கு, வழக்கமாக காண்கிற  குருவிகள் விசாரணை, இல்லை என்றானது காரணமாக இருக்கலாம். 

வாகனத்தை  இடம் பார்த்து  நிறுத்தி, இடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த எந்திரத்தில் வாகன எண்ணைப் பதிவுசெய்து, கடனட்டையை நுழைக்க, எவ்வளவு  நேரத்திற்கு என்ற கேள்வி. குறைந்தது ஒரு மணி  நேரம் தேவைப்படும். நிறுத்தியுள்ள வாகனங்கள் நேரத்திற்குரிய தங்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனவா எனச் சோதித்துக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்களைப் பார்த்ததும், அவர்கள் திரும்ப  இப்பக்கம் வருவது இப்போதைக்கில்லை , அதற்குள் வாகனத்தை இங்கிருந்து அகற்றிவிடமுடியும் என்று கணக்கிட்டு, அவர்கள் போகட்டுமெனக் காத்திருந்து, எவ்வளவு குறைவாகச் செலுத்த முடியுமோ அக்கட்டணத்தைச் செலுத்தி, இரசீதை காரில் வைத்தபின்  கையிற் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்,  மணி 10.15.

        நீதிமன்றத்தில் நுழைந்தபோது எனக்கு முன்பாக ஐந்துபேர் சோதனைக்கு உட்பட காத்திருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகியபின் எல்லா இடங்களிலும் சோதனைக்குப் பின்னரே அனுமதி என்றாகிவிட்ட து. எனது முறைக்குப் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. குளிருக்கென போட்டிருந்த ஜாக்கெட், வாலெட், கைத்தொலைபேசி  மூன்றையும் கன்வேயர் பெல்ட்டில் வைத்துவிட்டு சோதனைகளை கடந்து முதற்தளத்தில்  அழைத்திருந்த  விசாரணைக் கூடத்தைக் கண்டுபிடிக்க கூடுதலாகப் பத்து  நிமிடங்கள் தேவைப் பட்டன.

      பத்து முப்பதுக்கு விசாரணை மன்றம் எண் 13ல் இருக்கவேண்டும். என் கைக்கெடிகாரம் பத்து முப்பத்தைந்தைக் காட்டியது.  மண்டபத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தயக்கத்துடன் கதவைத் தட்டினேன். வரலாம் என்ற அனுமதிக் குரலைக் காதில் வாங்கியபடி உள்ளே  நுழைந்தேன். எனக்கு நேர் எதிராக போடப்பட்டிருந்த மேசையின் பின்புறம்  நீதிபதி, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி பக்கவாட்டில் மிகச்சிறிய தட்டச்சு எந்திரத்துடன் பெண்செயலர். அவருக்கு  எதிரில் ஆசனங்களில் வழக்கறிஞர்கள்.  நீதிபதி என்ற பொருளுக்குச் சமனாக வைத்த எடைகற்கள்போல அவருக்கு எதிரே நாற்காலிகளில் வரிசைக்கு இரண்டொருவர் என அமர்ந்திருக்கும்,  அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள்.   எல்லோருடைய பார்வையும் என் முகத்தில் இருந்தது.  தாமதத்திற்கு விளக்கம் என்றபேரில் விரயம் செய்யப்படும் வார்த்தைகளில் சலிப்புற்று அமைதியாய் நின்றேன். வழக்கறிஞர் பெண்மணிகளில் ஒருவர், தனது கைக்கெடிக்காரத்தைப்பார்த்தார். நீதிபதி பெண்மணி என்னிடம், « முன்வரிசையில் உட்காரலாம். குற்றவாளியைக் காவலர்கள் அழைத்துவரும் நேரம் » எனச்சொல்லவும், காலியாகவிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன். 

பெண் செயலருக்குப் பின்புறமிருந்த கதவைத்  தள்ளிக்கொண்டு இரு காவலர்கள், நடுத்தர வயது மனிதர் ஒருவரை அழைத்துவந்தனர். அழைத்துவந்த மனிதரின் கைவிலங்கை அகற்றி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், காவலர் இருவரும் பக்கத்திற்கொருவராக  நின்றகொண்டனர்.  அவருடையை ஐரோப்பிய   நிறம், உயரம், எனது மொழிபெயர்ப்பு வழக்கிற்கு உரியவரல்ல எனபதைத் தெரிவித்தன.  அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதில்களைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில்  விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிர்குரிய பணத்தை, பொய்த் தகவல்களின் அடிப்படையில் வங்கியில் பெற்ற  கடனட்டைகள்,காசோலைகளில்  செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது. 

 குற்றவாளியிடம் கேட்கும் வழக்கமானக் கேள்விகளைக்  கேட்டு அதற்குண்டான பதில்களைப் பெற்றுமுடிந்த பின் பெண்நீதிபதி தம் கையிலிருந்த பேனாவை கோப்பு அருகே வைத்தார், நிமிர்ந்து உட்கார்ந்தார், ஏதோ முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள  நபரை காண்பதுபோல புருவத்தைக் குறுக்கிச் சில கணங்கள் அவர் முகத்தைப் பார்த்தார்.பார்வைக்கான விளக்கத்தைக் குற்றவாளிக்கும் எங்களுக்கும் தரமுற்பட்டவர்போல :

–  உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளியாகத் தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? – என்று கேட்டார்.

 நீதிபதியின் கேள்வி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. குற்றவாளியின் முகத்தை சற்று  கூர்ந்து கவனித்தேன். செய்த குற்றத்தின் அறிகுறிகளின்றி, பால்போல தெளிவான முகம், படிய வாரியத்தலை, அணிந்திருந்த கண்ணாடியும், மூக்கின் கூர்மையும், உடைகளில் செலுத்தியிருந்த அக்கறையும் சந்தேகிக்க முடியாதவைதான். என்ன பதில் சொல்லப் போகிறார் என  நீதிபதியைப் போலவே அனைவரும் காத்திருக்கிறோம்.  பதில் அவர் நெஞ்சுக்கும், உதட்டிற்குமிடையில்  எங்கோ தயங்கி  நிற்பதுபோல எனக்குப் பட்டது. அதற்கு முகவுரைபோல மெலிதாக அவிழ்ந்த சிரிப்பு அவர் உதடுகளைக் கடக்க, பார்வயாளர்கள் மத்தியிலும் இலேசாகச் சிரிப்பு.  நீதிபதி எரிச்சலுற்றார். குற்றவாளியின் வழக்கறிஞர் ஏதோ சொல்ல முற்பட்டார். அவரைத் தடுத்த  நீதிபதி, « தற்போது குற்றவாளி எதற்காகச் சிரிக்கிறார் என்பதை அவர் வாயால் சொல்லட்டும் »- என்றார்.

அவையில்  நிசப்தம்.  குற்றவாளி மௌனத்தை கலைத்துக்கொண்டவர்போல  மெலிதாகத் தொண்டையைக் கனைத்து அதற்கு ஐரோப்பிய வழக்கப்படி சம்பிரதாய மனிப்பும் கேட்டார், பின்னர் :

–  உங்க கேள்வியிலேயே பதிலிருக்கு மேடம், உண்மையில் நல்லவர்கள்போல இருப்பதால் குற்றம் இழைப்பது எளிதாகிறது, சுலபமாக மற்றவர்களை ஏமாற்றவும்முடியும். என் பிரச்சினை உங்களுக்குப் புரிகிறதில்லையா ? – என்று கேட்டு  பெண்  நீதிபதியின் முகத்தைப் பார்த்தார்.

நீதிபதிப் பெண்மணி பதில் கூறுவதைத் தவிர்த்து, தம் முன்பிருந்த கோப்பு காகிதங்களின் முனைகளை மடிப்பதும் பிரிப்பதுமாகத்  பதற்றத்தைக் தணித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.

– மேடம், நான் என் பதிலை முடிக்கவில்லை, உங்கள் அமைதி, எனது பதிலில் உள்ள நியாயத்தினால் என நினைக்கிறேன். இன்னொரு கேள்வியும் எனது பதிலோடு கேட்க இருக்கிறது, அதையும் கேட்டுவிட்டால் மனதுக்கு நிம்மதி !

குற்றவாளியின் குரல் நீதிபதியின் சேட்டைகளை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவந்தன. கண்களை அகல விரித்து, தலையைச் சொடுக்கியவர், ஒரு சடங்குபோல  எதிரிலிருந்த எங்களை ஒரு நொடி பார்த்தார், பின்னர் குற்றவாளிப் பக்கம் கண்களைத் திருப்பியவர், « சொல்லுங்க கேட்கிறேன் » என்பதுபோல தலையைக் குலுக்கினார்.

– நீங்க உட்படஇங்கே இருக்கிறவங்க  அனைவருமே பார்வைக்கு  நல்ல மனிதர்கள்போலத்தான் இருக்கிறோம். விதிவிலக்காக குற்றத்தைக் கூடுதலாகத்  துரத்துவதும், பதிலுக்குத் தண்டனை என்னைத் துரத்துவதும் ஒருவித போதை  விளையாட்டாகிப்போனது. அது சுகமாகவும் இருக்கிறது . பெரும்பான்மை மனிதர்களைப்போல அளவாகப் பழகிக் கொள்ள எனக்குத் தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால்  பார்வையாளர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கலாமில்லையா ?

நீதிபதி தலையை பதில் எதையும் கூறாமல், தலையைத் திருப்பி பார்வையாளர்களைப்பார்த்தார்.அரசு வழக்கறிஞர், தமது காரியதரிசி என்று அவர் பார்வை ஓடி,  கடைசியாக குற்றவாளியினுடைய வழக்கறிஞரிடத்தில் முடிவுக்கு வந்தது. காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல குற்றவாளியின் வழக்கறிஞர் இருக்கையைவிட்டெழுந்து, பார்வையாளர்களுக்கும் நீதிபதிக்கும் இடையில் நின்று இருதரப்பினரையும் தமது வாதம் ஈர்க்கவேண்டும் என்பதை உணர்ந்து, சொற்களுக்கேற்ப குரலை உயர்த்தியும் தாழ்த்தியும்  தரப்பு வாதத்தை வைத்தார்.  தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், கடைமைக்காக என்றிருந்தது.  எனது மொழிபெயர்ப்புக்குரிய குற்றவாளியை அழைத்தபோது மணி பதினொன்றரை. முடிவாகக் குற்றவாளிகளின் தண்டனைக்  குறித்த தீர்ப்புகளை வழங்க  நீதிபதி  முப்பது நிமிடம் எடுத்துக்கொண்டார்.

காலை பன்னிரண்டு முப்பது.  நீதிபதியின் பெண்காரியதரிசி,  என்னை அழைத்து அன்றைய பணிக்கான ஊதியப் படிவத்தை அளித்து, உங்கள் ஒன்றரை மணி  நேரத்தை இரண்டு மணி  நேரமென்று போட்டிருக்கிறேன் மகிழ்ச்சிதானே என்கிறார். குற்றவாளிகள் தரப்பில் வாதிட வந்த வழக்கறிஞர்கள், குற்றவாளிகளைச் சூழ்ந்து தெம்பூட்டிக்கொண்டிருந்தனர்,  அவர்களுக்கு  விலங்குபூட்டக் கைகளில் விலங்குடன் காத்திருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தவர்கள்போல நீதிபதிகள் முதல் பார்வையாளர்கள்வரை அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தோம்.

இடைத்தேர்தல்

சிறுகதை தொகுப்பு

எழுத்து பிரசுரம், சென்னை

இடைத்தேர்தல்

(காலச்சுவடு இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிறுகதை. விரைவில் இதே பெயரில் சிறுகதை தொகுப்பாக எழுத்து பிரசுரம் வெளியிட ஊள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் வழக்கம்போல அனைத்து இலட்சணங்களுடனும் அரங்கேறிகொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் நினைவேந்தலாக இச்சிறுகதையை பகிர்ந்துகொள்ள உதவிய திராவிட செம்மல்களுக்கும், துணை நிற்கும் அரசியல் பெருந்த்கைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் )

தொரம்மா ! தொரம்மா ! என்று கதவருகே வாசலில் கேட்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்தது கூட தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள், விழித்த வேகத்தில் கையைத் பக்கத்தில் துழாவினாள்.  அவனில்லை, நம்பிக்கையின்றி இரண்டாவது முறையாகத் துழாவினாள். அவன் விட்டுச்சென்ற வெப்பம்மட்டுமே விரித்திருந்த பாயில் மிச்சமிருந்தது.  சுவரோரமிருந்த தகரப்பெட்டி திறந்திருந்தது. தலையை நிமிர்த்தி புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த  சீவராசுவைப் பார்த்தாள். துக்கம் தொண்டையில் அடைத்து, நீர்க் கழிவாகக் கண்களை நிரப்பியது. 

*                 *                 *                 *

தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருந்தார்கள். தேர்தலென்று அறிவித்த மறுகணம் அவள் வாசலில் மட்டுமல்ல, அப்பகுதியைச் சேர்ந்த பிற வாசல்களிலும்  வழக்கம்போல சந்தோஷம்.  ஊருல திருவிழாவுக்குக் கொடிகட்டினா சவலைப் பிள்ளைக்குப் பாலுட்டினக் கதையா ஒரு துடிப்பு வந்திடும். ‘தாலிக் கட்டிக்கிட்டு புருஷன்வீட்டுக்குப் போன பெண்களெல்லாங்கூட தங்கள் தங்கள் பிள்ளைக்குட்டிகளை இழுத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வருவார்கள், அதுபோலத்தான் தங்கள் பகுதியும் மாறியிருப்பதாக நினைத்தாள். சாட்சிக்கு வேறெங்கும் போகவேண்டிய அவசியமில்லை  அவள் வீட்டு வாசலேபோதும். ஒவ்வொரு ஒண்டு குடித்தனத்திலும் நான்கைந்துபேர் கூடுதலாக இருந்தனர். கக்கூஸுக்கும், குளிக்கவும் வாளியை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், அவனைப்பற்றிய நினைப்பும் குறுக்கிடுகிறது. போனமுறைபோல இம் முறையும் அவன் தன்னைத் தேடிவருவானா ? என்று மனதிற்குள் பலமுறைக் கேட்டுக்கொண்டாள்.  எதற்காக இந்தக்கேள்வி, எப்படி திடீரென்று அவனை மனம் நினைக்கப் போயிற்று ? என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் சொல்லத்தெரியாது.

அவள் மனதை அலைக்கழித்த சிந்தனைகுப் பதில்போல  கடந்த இரண்டுமூன்று  நாட்களாக, அடிக்கடி  அவனை எதிர்கொள்கிறாள். எம்சி ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலுக்கு பாத்திரங்களை துலக்கிவைக்கிற வேலைக்குப்போகிற நேரத்திலும் சரி, பத்து மணிக்கு மார்க்கெட்டுக்குப் போகிறபோதும், திடீரென்று கடை கண்ணிக்கு கிளம்பிப்போகும் நேரத்திலும், திரும்பும்போதும் இவளுக்காகவே அவன் ஏதாவது ஓரிடத்தில் காத்திருக்கிறான்.  இரக்கப்பட்டு பேசலாமென்று கூட நினைத்தாள். ஒரு வருடமா இரண்டு வருடமா ‘தோ ன்னாலும் நாலஞ்சு வருஷமிருக்கும்’ என்று அவள் மனதில் அவனைப் பிரிந்திருக்கும் காலம் குறித்துத் தோராயாமாக ஒரு கணக்கு இருந்தது. ஜெயலலிதாஅம்மா போனமுறை ஜெயித்த மறுநாள் போனவன், பிறகு அவர்கள் இறந்து, முதன்முறையாக இடைத்தேர்தல் அறிவித்தபோது, தற்போதுபோலவே அவளை விடாமல் துரத்தினான். அப்போது அவளிடத்தில் கோபம் மட்டுமே இருந்தது.

முகம்கொடுக்கக் கூடாதென வைராக்கியமாக இருந்தாள். இம்முறை அவ் வைராக்கியம் விரிசல் கண்டிருந்தது.  சகக் குடித்தனக்காரர்களிடம் சென்றமுறை  நடந்த சம்பவங்களைக் கூறியபோது, வாசல்பெண்கள் எல்லோரும் திட்டித் தீர்த்தார்கள். « என்ன பொம்பிளை  நீ ! வலிய வந்த புருஷனை இப்படித் தொலைக்கலாமா ? ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்க, கூத்தியாவூடு புளிச்சுப்போச்சுன்னு வந்த மனுஷனை தண்ணித்தெளிச்சு வூட்டுக்குள்ள வான்னு சொல்லுவியா, அத வுட்டுட்டு வீம்புபிடிச்சு நிக்கிற ? » என ஆளாளுக்குச் சண்டைபோட்டார்கள். தற்போது முன்புபோலவே அவனிடம் கோபமிருந்தாலும், கொஞ்சம் இரக்கமும் பிறந்திருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒழுங்காக சமைப்பதோ சாப்பிடுவதோ இல்லை. சோற்றைத் தட்டில்போட்டுக்கொண்டு உட்கார்ந்தாலும் அவன் நினைப்பில் கையைக் கழுவிவிட்டு எழுந்துவிடுகிறாள்.

அன்று தெருமுனையில கூறுகட்டி விற்ற  பெண்மணியிடம், வயிறென்று ஒன்றிருக்கிறதே என்பதற்காக வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிக்கோண்டிருந்தாள்.  இவள் குடியிருக்கும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவன்  உற்றுப்பார்ப்பது போலிருந்தது, சந்தேகமில்லை இவளைத்தான் பார்க்கிறான். சுருள் சுருளான தலைமயிரைப் பின்பக்கம் அணைத்துச் சீவியிருந்ததும், அதற்குரிய முகமும் அவன்தான் என்கிற சந்தேகம் வீட்டுவாசலை நெருங்கநெருங்க  திடப்பட்டதும், முதன்முறையாக மனதில் இலேசாக வெட்கமும் மகிழ்ச்சியும். வீட்டை நெருங்கியவள், அவன் இவளைப் பார்த்து, « இன்னா தனம் எப்படியிருக்க ? » என்று தொட்ட கையை உதறிவிட்டு விடுவிடுவென்று  வீட்டிற்குள் நுழைந்து தனது ஒண்டுக்குடித்தன கதவின் பூட்டைத் திறந்தபோது, அவன் இவள் பின்னால் நின்று தொண்டையைச் செருமினான். அதற்குள் வாசலில் இருந்த மற்றக் குடித்தனக்கார பெண்களில் இரண்டொருவர் கூடியிருந்தனர். வெத்திலைப் பெட்டி சகிதமாக அங்கு வந்த வீட்டுக்கார அம்மா « வாய்யா ! இப்பத்தான் உனக்குப் பொண்டாட்டி நெனப்பு வந்ததா ?  » என்று கேட்டவள் தனத்திடம், « ஒன் கோவத்தையெல்லாம் பிறகு வச்சுக்கோ, முதலில் வந்தவருக்கு உள்ள அழைச்சுபோய் ஒரு வாய்த் தண்ணிகொடு, நீ ஒண்ணும் கொறைஞ்சிடமாட்ட » எனவும், சீவராசும் உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனுக்கு மனையை எடுத்துபோட்டாள். கொஞ்சம் இரு வரேன், என்றவள் கதவருகே நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் கூடியிருந்த பெண்கள் இல்லை என்றானதும், கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். வெளியில் யாரோ சிரிப்பது கேட்டது.  தகரப்பெட்டியைத் திறந்து இருப்பதில் சுமாராக ஒரு புடவையையும் இரவிக்கையையும் எடுத்தாள், அவனிடம், கொஞ்சம் அப்படித் திரும்பு எனக்கூறி புடவையையும் ஜாக்கெட்டையும் அணிந்தாள். கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீராக்கிக்கொண்டாள். நெற்றியில் வைத்த சாந்துபொட்டும் திருப்தியாக இருந்தது. அவன் எதிரே சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.  சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை அவிழ்த்த்திருந்ததில் கழுத்தும் மார்பும் அவனுக்குக் கூடுதலாகத் தெரிந்தன. முண்டாபனியனுக்கு மேலாக மார்பில் செழிப்பாக இருந்த மயிர்கள் வியர்வையில் நனைந்து பிசைந்து கிடந்தன. மிச்சமிருந்த  உடம்பு எப்போதும்போல கட்டுக் குலையாமலிருந்தது.  சுருள் சுருளாக நெற்றியில் முன் இறக்கத்தில் விழுந்திருந்த கேசம் மட்டும் அடர்த்தியின்றி வெறிச்சோடி கிடந்தது. நெற்றியின் கீழ்ப்பரப்பில் மழைக்கால அட்டைகள்போல கருத்த இரு புருவங்கள். அவை இரண்டிற்கும் கீழிருந்த கண்கள் சிறியவை என்றாலும் அதை ஒரு குறையென்று சொல்லமுடியாது. குறிப்பாக மூக்கு, மூக்கிற்குக் கீழிருந்த உதடுகள், இரண்டையும்  பிரித்திருந்த கட்டை மீசை; கழுத்துக்கு இருபுறமும் புடைத்துக்கொண்டிருந்த தோள்கள் ஆகியவை எந்தப் பெண்பிள்ளையையும் கவரக்கூடியவை.

சிறிதுநேரம் அவனை வைத்தகண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பவும், « கொஞ்சம் இரு தோ வரேன் » என வெளியிற்சென்று அடுத்த ஐந்தாவது நிமிடம் உள்ளே வந்தாள். தம்ளரில் பால் இருந்தது. வீட்டுக் கார அம்மாவிடம் கேட்டு வாங்கி வந்திருக்க வேண்டும், அந்த வாசலில் பிறக் குடித்தனக்காரர்களில் ஒருவருக்கும் வீட்டில் பால் வாங்கி வைத்திருக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பாலில் கொஞ்சமாச் சர்க்கரை போட்டு அவனிடம், தம்ளரை நீட்டினாள். அவனும் அவள் கைத்தொட்டு வாங்கி சப்புக்கொட்டிக் குடித்தான். அவன் உதட்டோரம் குடித்த பாலின் அடையாளம் நுரை செதிள்களாக ஒட்டிக்கிடந்தன. முந்தானையால் துடைத்தாள்.

– தனம் உனக்கும் எனக்கும் ஐம்பது வயசுக்கு மேல, நாலுபிள்ளைகீது, மறந்துடாத ! 

– அந்த ஞாபகமிருந்தா இன்னொருத்தியைத் தேடிப் போயிருப்பியா ?

– தப்பு பண்ணிட்டேன் தனம். இனிமே பெரிய பாளையத்தம்மன் மேல சத்தியமா அவவீட்டை எட்டிப் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

– சரி இந்த நேரத்துல அதெல்லாம் எதுக்கு, நான் ஒருத்திதான என்று நெனைச்சி கத்தரிக்காயும் தக்காளியும் போதும்னு வாங்கிவந்தேன். இராத்திரிக்கு வேணுமின்னா, ரெண்டுபேருமா மார்க்கெட்டுக்குப் போயி உனக்குப் பிடிச்சத வாங்கி வருவோம்யா. எனக்கும் வாய்க்கு ருசியா சாப்பிட்டு வருஷக் கணக்காச்சு. என்ன சொல்ற, எனக் கேட்டாள்.

சொன்னதுபோலவே, புருஷனும் பொண்டாட்டியுமா நான்கு மணிக்குக் காசிமேடு மார்க்கெட்டுக்குப் போனார்கள். வஞ்சிரமும், சுராவும் வாங்கினார்கள். வரும் வழியில் டாஸ்மார்க்கில் இரண்டு கால் பாட்டிலும் வாங்கினாள். கட்சிக்காரங்க கொடுத்த பணம் கையிலிருந்ததால் கொஞ்சம் தாராளமாகச் செலவு பண்னமுடிந்தது.

ஒருகால் பாட்டிலை மட்டும் இரவு குடித்து முடிக்க அனுமதித்தாள். தட்டு நிறைய சோற்றைப்போட்டு வஞ்சிரம் மீன் குழம்பை ஊற்றி சுராப் புட்டை வைத்து விசிறி மட்டையை எடுத்து விசிற ஆரம்பித்ததும். அழுதான்.

– அழாம சாப்பிடுய்யா, அதான் வந்துட்ட இல்ல.

– என் மனசு தாங்கலை. உன் தலையில அடிச்சு வேணா சத்தியம் பண்றன், தலையைக் காட்டு, இனி அந்தத் தெவடியா வீட்டுல காலெடுத்து வைக்கமாட்டன்.

சோறு பிசைந்த கையை அவள் தலையில்வைக்கப்போனவனைத் தடுத்தாள்.

– பேசாம சாப்பிடு, அப்புறம் பேசலாம், என்றாள்.

–  சரி, ஒங்கிட்ட ஒண்ணு கேப்பன் கோவிச்சுக்க மாட்டிய.

– நான் ஏன் கோவிச்சுக்கப்போறன், தாலிக்கட்டினவள் ஆச்சே.

– அந்தக் கழுதைக்கு ஒரு முப்பதினாயிரம் கொடுக்கவேண்டியிருக்கு, அவ மூஞ்சில கடாசிட்டன்னு வச்சிக்கோ, நான் நிம்மதியா ஒங்கூட இருந்திடுவேன்.

– ஏன் நீ சம்பாதிச்சதைல்லாம் என்ன பண்ண ?

– ஏதோ பண்ணன், என் கையில இருந்தா ஒங்கிட்ட ஏன் கேக்கறன்

– அவளோ பணத்துக்கு நான் எங்கேபோவன்.

– ஓட்டுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் என்ன பண்ண ? இன்ன ராத்திரிக்கு குண்டான் கட்சிகாருங்க வர்ராங்கன்னு கேள்வி பட்டன். நீ தாம் தூம்னு செலவு பண்றவ இல்லியெ.  பெட்டியிலதான வச்சிருப்ப. அதை இதைச்சேர்த்து அவ கிட்ட கொடுத்தா பிரச்சினை தீர்ந்திடும். அவள் சங்காத்தியமே வாணாம்.  மாசம்பொறந்தா சம்பள பணம் வந்திடும், அதை இனி உங்கிட்டத் தவற யார்கிட்ட கொடுக்கப்போறன்.

சொல்லிவிட்டு இவள் கண்களைப் பார்த்தான், கையில் பிசைந்தசோறு அப்படியே இருந்தது. பொலபொலவென்று அவன் கண்ணீர், கன்னக் கதுப்புகளில் இறங்கியது. அவள் மனம் இளகிப்போனது.

-அழாதய்யா ! நீ நல்லபடியா என்னைத் தேடி வந்தியே அதுவே எனக்குப் போதும்யா. பணமென்ன பணம் !

தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தாள். அவன் கையை உதறினான். சோற்றுருண்டைகளைப் பிடித்து அவன் கையில் வைத்தாள்.

– இன்னும் கொஞ்சம் சோறுபோட்டுக்க, எனக்கூறி சோற்றுச் சட்டியை எடுத்தாள்.

– அப்புறம் உனக்கு.

– நீ வவுத்தை வஞ்சனை பண்ணாம சாப்பிடு, பொட்டச்சிக்கி  வவுரா பெருசு.

சாப்பிட்டு முடித்ததும் தட்டிலேயே கையைக் கழுவினான். « பாயைப் போடு தனம் » என்றவனின் பார்வைக் கொதிப்பைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அரைமயக்கத்திலேயே பாயையும் போட்டாள்.

*                       *                       *

சுவரில் புகைப்படத்தில்  அப்பாவிபோலச் சிரித்துக்கொண்டிருந்த சீவராசுவைத் திரும்பத் திரும்ப்ப் பார்த்தாள். ஓண்டு குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்த முதல் வாரத்திலேயே  எம்.சி ரோட்டிலிருந்த ஒரு போட்டாகடையில் எடுத்துக்கொண்டது.  வாசலில் இருந்த சராசரி ஆண்களைப்போலத்தான் சீவராசும் நடந்துகொண்டான். சம்பளம் வாங்கிவந்த நாட்களில் மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் குடிப்பான்,  ரகளைப் பண்ணுவான். உப்பில்லை, காரமில்லையென்று கொத்தாகத் தலைமயிரைப் பிடித்து சுவரில் மோதுவான். வீட்டுக்கார அம்மா கதவைத் தட்டிச் சத்தம் போட்டதும்  அடங்கிவிடுவான். மற்ற நாட்களில் சும்மாச் சொல்லக்கூடாது, அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் செய்யவேண்டியவற்றை செய்தே வந்தான். ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத தமயத்தில் « சீவராசுவை பீச் ஸ்டேஷன்ல பொரிகடலை விக்கிற பொம்பளையோட பார்த்தன் கவனமா இருந்துக்க » என்று  ஹார்பர் மேஸ்த்திரி துரைசாமி எச்சரித்தார்.  அவன் சீவராசுவிடம்  அது பற்றி கேட்கவும் செய்தாள். « எவன் சொன்னான் உனக்கு, ஒருத்திக்குப் பொறந்தவனா இருந்தா, அவன என் முன்னால வரச்சொல்லு » என வாசலில் இறங்கிச் சத்தம்போட்டான்.   இவளையும், அன்றைக்கு அடித்து உதைத்தான். வீட்டுக்கார அம்மாள் « நீங்க வரமாசம் காலி பண்ணிடுங்க, இதுக்கு மேல இங்கிருக்க வேணாம் », என்றாள். மறு நாள் வழக்கம்போல அரைக்கால் காக்கி நிஜாரையும், காக்கிச் சட்டையையும், சிவப்பு ஈரிழைத்துண்டு முண்டாசும், கையில் மூட்டையைக் குத்தித் தூக்குகிற கொக்கியுமாக வேலைக்குப் போனவன் திரும்பவில்லை.

தொரம்மா ! தொரம்மா !- என்று மீண்டும் கன்னியம்மாள் குரல்.

தொரம்மா என்கிற தனபாக்கியத்திற்கு வைகாசி பிறந்தால் வயது ஐம்பத்தொன்றோ ஐபத்திரண்டோ,இரண்டிலொன்று. அது ஐபத்துமூன்றாகவும் இருக்கலாம். பிறந்தவருடம் எதுவென்று தெளிவாகத் சொல்லத் தெரியாது. அவளுடைய ஆத்தாள், எதிர்வீட்டுச் செங்கமலம் ஈயம் பூசவந்தவனோட ஓடிப்போன வருஷமென்று சொல்லியிருக்கிறாள். ‘செங்கமலம் எந்த வருஷம் ஓடிப்போனாள் ?’ என்று பெற்றவளிடம் கேட்டாள், அதற்கு ‘ஏரி ஒடைஞ்சி ஊருக்குள்ள வெள்ளம் வந்ததே, அந்த வருஷமென்று !’ பதில் வரவும், ‘செங்கமலம் ஓடிப்போன வருஷத்தையே’ பிறந்த வருடமாக வைத்துக்கொண்டாள்.

அவள் வாழ்க்கையே  ஒரு தோராய வாழ்க்கை, தோராயக் கணக்கில் நாட்களைக் கடந்துகொண்டிருப்பது. பிறந்தது ; வயசுக்கு வந்தது ;  இப்போதோ அப்போதோ என்றிருந்த சினைப் பசுவுக்குப் புல் அறுக்கப்போன இடத்தில்  பரம்படித்த  மாடுகளை ஓடைநீரில்  குளிப்பாட்டிக்கொண்டிருந்த  காசிநாதனுடன் சவுக்குத்  தோப்பில் ஒதுங்கியது ; பொங்கலின்போது கொத்தவால் சாவடியில் வாழைத்தார்களைச் சுமக்கும்  சீவராசுக்கு உறவு சனத்திற்கு முன்னால்  கழுத்தை நீட்டியது,  அவனுடன் பதினைந்து நாள் கழித்து  சென்னைக்குப் ‘பஸ்’ ஏறியது ;  பாரி முனையில் பேருந்தை விட்டு இறங்கி, ஹைகோர்ட்டையும், ஊர்ந்த  வாகனங்களையும், இடித்துக்கொண்டு சென்ற மனிதர்களையும் கண்டு  பெரிதாகக் கண்களைத் திறந்து மூச்சை உள்வாங்கி பிரமித்தது ; அங்கிருந்து  ஜோடியாக சீவராசுடன்  ரிக்‌ஷாவில் பயணித்தது ; விதவிதமான ஓசைகள், புழுதிகள், கட்டிடங்களைப் பார்த்தபடி பழைய வண்ணாரப்பேட்டையில் ஒண்டுக் குடித்தனங்களில் ஒருத்தியாக குடைக்கூலிக்கு வந்தது என எல்லாமே ஒரு தோராயக் கணக்கிற்குறியவைதான். ஏன் அதன் பிறகு  அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை  சீவராசுக்குப் பெற்றது, எவளோ ஒருத்தியுடன் தொடுப்பு வைத்துக்கொண்டு, இவளை  அவன் மறந்து,  வீட்டிற்கு வருவதை  நிறுத்திக்கொண்டது; வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஆளாளுக்கு ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகள் இவளை மறந்தது ஆகியவற்றையெல்லாங்கூட ஒரு குத்துமதிப்பாகத்தான் இவளால் சொல்ல முடியும். 

தொரம்மா என்ற பெயர் வாசலில் இருக்கிற மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த பெயர். இவளுடைய மூத்த மகனுக்குப் பெயர் துரை, அதனால்  இவள் தொரம்மா.தமிழ்ப்பண்டிதர்களுக்கு மருவல், திரிபு என்று இலக்கண விளக்கம் தேவைப்படலாம். பழைய வண்ணாரப்பேட்டையில், அவசரத்திற்கு ஒதுங்கும் வசதிகொண்ட சந்தில் அன்றன்றைக்கு கையூன்றினால்தான் கரணம் என்ற நிலையில் குடியிருப்பவர்களுக்கு, இந்த விளக்கமெல்லாம் அதிகம்.  தனபாக்கியம் என்ற ஊர்ப்பெயரை அரசாங்கப் பிரச்சினைகளென்று வருகிறபோது, சிரமப்பட்டு ஞாபகத்தில் கொண்டுவந்திருக்கிறாள்.

தொரம்மா ! இன்னுமா  நீ எழுந்திருக்கல ! உள்ள வரலாமா, சீவராசு  அண்ணன்  உள்ளதான் இருக்காரா ?

கதவை உட்புறமாகத் தள்ளிய கன்னியம்மாவின் குரல் குனிந்த வாட்டில் தலையை இருட்டிற்குள் புதைத்து, தொரம்மாவைத் தேடியது.  திறந்திருந்த கதவின் அனுமதியுடன் முதிராத காலை வேளை, கன்னியம்மாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்திருந்தது. சன்னமான பனிமூட்டம்போல சில இடங்களில் தளர்ந்தும், சில இடங்களில் இறுக்கமாகவும் தம்மைத் திடப்படுத்திக்கொண்டிருந்த காலை ஒளியின் துணையுடன் தொரம்மாவைக் கண்டுபிடிப்பதில் கன்னியம்மாவுக்கு அதிகச் சிரமங்கள் இல்லை. திறந்த கதவு சுவரில் அணையும் பக்கமாக அடுப்பும், தண்ணீர் தவலையும் பாத்திர பண்டங்ககளும் இருந்தன, அதற்கு அடுத்த சுவரில், அதன் முழு  நீளத்தையும் உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதுபோல பிளாஸ்ட்டிக் கயிறில் ஒரு கொடி. அதில் ஒழுங்கின்றி அவிழ்த்துப்போட்டப் புடவைகளும் ஜாக்கெட்டும் கிடந்தன, அதன் கீழே சீவராசுடன் பட்டணத்திற்குப் புறப்பட்டு வந்தபோது கொண்டுவந்த டிரங்க்பெட்டி. அதையொட்டி ஒர் அழுக்குச் சிப்பம்போல இருந்த தலையணையை வேண்டாமென்று ஒதுக்கியவள்போல கையை முக்கோணமாக மடக்கித் தலைக்குக் கொடுத்து தொரம்மா என்கிற தனபாக்கியம் பக்கவாட்டில்  உறங்குவதுபோல பாவனை செய்துகொண்டிருந்தாள். தலை அவிழ்ந்திருந்தது.  இடப்பக்கக்  கன்னத்தில் வாயிலியிருந்து கசிந்த எச்சிலின் நெளிந்த வெண்கோடு.

– தொரம்மா எழுந்திரு இன்னும் ஒரு மணி நேரத்துல நாமல்லாம் பூத்துல இருக்கனும்  இன்னைக்கு  ஓட்டுப் போடறது. மறந்துட்டியா ? 

கன்னியம்மா உலுக்கிய உலுக்கலில் திறந்த கண்கள், தொட்டெழுப்பிய கையையும், அந்தக் கைக்குச் சொந்தக்காரியையும் பார்த்துக்கொண்டிருந்தன.

– எழுந்திரு, லைட்டைப் போடட்டுமா ? மீண்டும் கன்னியம்மா.

‘வ்வா’ என்று ஒரு பெரிய கோட்டுவாயுடன், எழுந்த தொரம்மா அவிழ்ந்திருந்த தலைமயிரை கொண்டையாக்கி முடித்த மறுவினாடி, விலகிக்கிடந்த முந்தானையைச் சரி செய்து மார்பை போதிய அளவுக்கு புடவைப் பரப்பிற்குள் கொண்டுவந்த திருப்தியில் :

– அந்த மணையைப் போட்டு உட்காரு ! -சுவரில் சாத்தியிருந்த மணைப்பக்கம் கை  நீண்டது.

மணையை எடுத்துப் போட்டும், வழக்கம்போல சம்மணமிடாமல்  குத்துக்காலிட்டு உட்கார்ந்த கன்னியம்மா முகத்தில் கம்பி மத்தாப்பைக் கொளுத்தியதுபோல அப்படியொரு பிரகாசம். அந்தப் பிரகாசம், மின்சார விளக்கின் ஒளியில் கூடுதலாக மினுங்கியது. தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்  தினத்தில் பற்றிக்கொண்ட சந்தோஷம். ஏதோ சொல்லவந்த கன்னியம்மா தனபாக்கியத்தின் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்டவள்போல :

– என்ன அழுதியா ?

– அதெல்லாம் ஒண்ணுமில்லை, சொல்லு.

– நேற்று ராத்திரி செல்ராசு அண்ணன் எலெக்‌ஷன் டோக்கன் கொடுத்துட்டுப் போனாங்க, கதவைத் தட்டினோம்,சீவராசு அண்ணன் தான் கதவைத் திறந்தாரு.

தனபாக்கியத்திற்கு ஞாபகம் வந்தது. நள்ளிரவு, பன்னிரண்டு ஒன்றிருக்கலாம். இவளிருந்த அலங்கோலத்தில், பக்கத்திலிருந்த சீவராசிடம் கதவைத் திறந்து என்னவென்று பார்க்கச் சொன்னாள். 

– இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பிக் கொடுத்துட்டுப் போச்சே ! இரண்டும் ஒண்ணுதானே ?

– இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க  அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து  செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா ? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடனும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே !

–  என்னமோபோ நீ சுலபமாச் சொல்லிட்ட  எனக்குப் பயமா கீது.

– தோடா ! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும்  நான் கிறேன்னு சொல்லிட்டனில்ல.

– பணத்தைக் கொடுத்திட்டு சாமி பட த்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன்.

– அடப்போக்கா ! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா.அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுபாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்க மாட்ட, கறிய மீனவாங்கி துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை  வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான்.  பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிகிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி.  அது சரி சீவராசு அண்ணன்  எங்க ?

சீவராசு கூட நேற்று ராத்திரி பெரிய பாளையத்து அம்மன் பேருலதான் சத்தியம் செய்தான். இராத்திரி இருந்த மனுஷன், விடிஞ்சதும்  சொல்லாமக் கொள்ளாம எங்க போயிருப்பார் என்று யோசித்தாள். இருந்தாலும் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்பது சரியாக இருக்காதென்று நினைத்தாள்.

– நீதான் பார்த்திய நான் அசந்து தூக்கிட்டேன். எதற்காக எழுப்பறதுன்னு நினைச்சிருக்கனும், எங்கே போயிருப்பாரு டீக்கடைக்குதான். 

– அது சரி, அண்ணன் வந்த இரண்டு நாளா நீ ராத்திரியில தூங்கறது இல்லன்னு வாசல்பூரா பேச்சு,  சரி சரி நீ எழுந்திரு, நாஷ்ட்டால்லாம் ரெடியா கீது. ஒரு மணி நேரத்துல பூத்துல இருக்கனும்னு ஊட்டுக்காரம்மாவும் சொல்லிட்டாங்கோ. வரேன்.  

கன்னியம்மாள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். அவள் படி இறங்கியிருப்பாள் என்பதை உறுதிபடித்துக்கொண்டதும், இவள் தலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தி நிழற்படத்தில் சிரிக்கும் சீவராசுவை பார்த்தாள். கீழே திறந்திருக்கும் தகரப்பெட்டியையும் பார்த்தாள். முதன் முறையாக வெடித்து அழுதாள்.

—————————————————————————–

பிரான்சு நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒருவர் இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (புதுச்சேரி வரலாறு தவிர்க்க இயலாத ஆனந்தரெங்கப்பிள்ள குடும்பமும், பக்தி இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட தேசிகப்பிள்ளை குடும்பமும் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

தற்கொலைகள் (அம்ருதா பிப்ரவரி 2023)

                                                              கி தெ மொப்பசான்

                                                                          தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

                                                             —–

                                                                                                  ….. ஜார்ஜ் லெக்ராண்டிற்கு

ஒரு சில செய்தித்தாள்களில், இதரச்செய்திகள் என்கிற பிரிவின்கீழ்    ஒவ்வொருநாளும் இதுபோன்றதொரு செய்தி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்:

“கடந்த புதன் கிழமை இரவு, ……வீதியில், கதவெண் 40ல் குடியிருப்புவாசிகள் நள்ளிரவில்  அடுத்தடுத்து இரண்டுமுறை வெடித்த  துப்பாக்கிச் சத்தம் கேட்டு விழித்திருக்கிறார்கள்.  சத்தம் மிஸ்டர் எக்ஸ் என்பவர்  குடியிருப்பில் இருந்து வந்திருக்கிறது… பின்னர் கதவு திறக்கப்பட்டுப் பார்த்தபோது, அந்த  அடுக்குமாடி குடியிருப்புவாசி ரத்தவெள்ளத்தில் கிடக்க, அவர் கைப்பிடியில் தற்கொலைக்கு உபயோகித்த கைத்துப்பாக்கி ».  

« “திருவாளர் Xக்கு  வயது ஐம்பத்தேழு,  வசதியான வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் இருந்துள்ளது, எனவே குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. இந்நிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுத்தக் காரணமென்ன, எனபது விளங்காதப் புதிர்.  »

கடுமையான துயரங்கள், நெஞ்சில் ஏற்பட்டக் காயம், ஒளித்துவைத்த  ஏமாற்றங்கள்,  வாட்டிய கவலைகள் இவற்றில் எவை அல்லது எது,  சந்தோஷமான வாழ்க்கைக்குரிய வருவாயிருந்தும் இதுபோன்ற மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கக்கூடும்?  என்ற கேள்வி எழுகிறது. பதிலைத் தேடுகிறோம் : காதல் தோல்வியாக இருக்கலாமென கற்பனை செய்ய முடிகிறது, பின்னர் பணம் ஒரு பிரச்சனையாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது, இறுதியில் திட்டவட்டமாக எதையும் அறியமுடியாதபோது,     இப்படியான மரணங்களுக்கென்று நம்மிடம் இருக்கவே இருக்கின்றன  “மர்மம்” என்ற வார்த்தை.

  இப்படி காரணமின்றி தற்கொலைசெய்துகொண்ட ஒருவரின் மேசையிலிருந்து கடிதமொன்று கிடைத்தது. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி அருகே கைக்குக் கிடைத்த, கடைசியாக எழுதப்பட்ட அக்கடிதம், சுவாரஸ்யமாக இருக்குமென்றும் தோன்றியது. மனிதரின் விரக்தியான இகாரியத்திற்குப் பின்னே ஏதேனும்  பெரும் விபரீதமான காரணங்கள் ஒளிந்திருக்குமோ என நினைக்க, அப்படி எதுவும் தகவலில்லை; பதிலாக அக்கடிதம்  வாழ்க்கையில் ஓயாமல் படும்  சிறு சிறு கஷ்டங்களை,  கனவுகளத் தொலைத்து துணையின்றி காலம்தள்ளிய ஒரு மானுட உயிருக்கு நேர்ந்த சேதங்களைச் சொல்வதாக இருந்தது. மேலும்  இப்படியொரு சோகமான முடிவுக்கு அக்கடிதம் கூறும் காரணத்தை புரிந்துகொள்ள நெஞ்சில் பதற்றமும்  எளிதில் உணர்ச்சிவசப்படும் மனநிலையும்  அவசியம்.     

கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான் :

  «  நள்ளிரவு. இக்கடிதத்தை  எழுதிமுடித்ததும், என்னுடலில் உயிர் தங்காது. ஏன் ? அதற்குரிய காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன். இவரிகளை எனது மரணத்திற்குப்பிறகு பிறகு படிக்கின்றவர்களுக்காக அல்ல, எனக்காக. எனது பலவீனமான தைரியத்திற்குத் தெம்பூட்டிக்கொள்ளவும், தள்ளிப்போடலாம் ஆனால்  தவிர்க்கவியலாது என்கிற அபாயகரமான இதன் தேவைக்கு என் மனதைத் திடப்படுத்திக்கொள்வதற்கும் என வைத்துக்கொள்ளலாம்.

எந்தஒன்றையும் எளிதாக நம்புகிற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் நானும் அப்படிபட்டவனாக இருந்தேன். வெகுகாலம் உயிர்வாழ்ந்த அந்நம்பிக்கைக் கனவு அண்மையில்தான் தனது கடைசி முகத்திரையைக்  கிழித்துக்கொண்டது.

டந்த சிலஆண்டுகளாக ஏதோவொரு வினோதம் எனக்குள் நிகழ்வதுபோன்றதொரு அனுபவம். வைகறை சூரியனைப்போல பிரகாசித்த  கடந்தகால சம்பவங்கள் இன்றெனக்கு மங்கியவைப்போலத் தோற்றமளிக்கின்றன.  அவற்றின் முக்கியத்துவத்தில்  இன்றுநான் காண்பதென்னவோ  கசப்பான சில உண்மைகள்.  அன்பிற்குப் பின்புலத்திலிருந்த உண்மையான காரணம் எனக்கு வெறுப்பினைத் தந்தது,  விளைவாக கவிநயமிக்க மென்மையான உணர்வுகள் விஷயத்திலும் கசப்பினை உணர்ந்தேன்.  

உண்மையில் நாம், தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொள்ளும்   முட்டாள்தனமும் கவர்ச்சியும் மிக்க மாயைகளின் நிரந்தர கைப்பொம்மைகள். ஆகையால் வயது கூடக்கூட கடும் பிரச்சனைகள், பயனற்றமுயற்சிகள், அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள் ஆகியவற்றோடு இணக்கமாகவிருக்க சம்மதித்தேன், இந்நிலையில்தான் இன்று மாலை, இரவு உணவிற்குப்பிறகு அனைத்து இன்மையின்மீதும் ஒருபுதிய வெளிச்சத்தினைக் காணமுடிந்தது.

முன்பெல்லாம் சந்தோஷமாக இருந்தேன். என்னைக் கடந்து செல்லும் பெண்கள், வீதிகளின் தோற்றம், எனது குடியிருப்பு இருக்கும் பகுதி என அனைத்தும் என்னைக் கவர்ந்தன. ஆனால் திரும்பத் திரும்பக் அக்காட்சிகளை காணநேரிட்டதால்,  எனது இதயத்தில் அயற்சியும், எரிச்சலும் நிரம்பி வழிந்தன, அதாவது  நாடகத்திற்குச் செல்லும் ஒரு பார்வையாளனக்கு ஒவ்வொரு மாலையும் ஒரேவிதமான நாடகத்தைக் காண நேர்ந்தால் என்ன நேருமோ அத்தகைய அனுபவம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் படுக்கையிலிருந்து எழும் நேரம் மாறியதா என்றால், இல்லை. பிறகு கடந்த முப்பது வருடங்களாக நான் செல்லும் உணவு விடுதியையும் மாற்றிக் கொள்ளாமலிருக்கிறேன். அங்கு உணவு கொண்டுவரும் பரிசாரகர்களில் மாறியிருக்கிறார்கள், மற்றபடி  உண்ணும்  நேரத்திலும் உணவிலும்  மாற்றங்கள்  இல்லை.

பயணத்தை முயற்சித்ததுண்டா ? உண்டு. ஆனால் புதிய இடங்களில்  தனிமை எனக்குப் பயத்தை அளித்தது. இந்த உலகில், சின்ஞ்னசிறிய ஜீவனாக என்னை உணர்ந்த கணத்தில்,  தனிமை படுத்தப்பட்டதுபோன்ற உணர்விற்கு ஆளாகி, வீட்டிற்குத் திரும்பிவிடுவேன்.  

பிறகு வாங்கிய நாளில் எப்படிப்பார்த்தேனோ அதுபோலவே கடந்த முப்பது ஆண்டுகளாக போட்டது போட்டபடி ஒரே இடத்தில் இருக்கிற வீட்டுத் தளவாடங்களும்,  புதிதாக வாங்கிவந்த மெத்தை இருக்கைளின் தேய்மானங்களும், பொதுவாக ஒவ்வொரு குடியிருப்பும் காலப்போக்கில் ஒருவாசத்தைப் பெற்றுவிடும் என்பதற்கிணங்க குடியிருப்பிலிருந்து  வருகிற  ஒருவித வாசமும், ஒவ்வொரு இரவும், இப்படியொரு வாழ்க்கைமீது மாறாததொரு குமட்டலையும், விளங்கிக்கொள்ளவியலாத ஒருவித துன்பத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன.   

ஆக அனைத்துமே ஓயாமல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. பூட்டிய பூட்டை எப்படி திறக்கிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னுடையை தீப்பெட்டியை எந்த இடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் எடுக்கிறேன், தீக்குச்சியின் பாஸ்பரஸ் பற்றி எரிகிறபோது எனது அறையில் கண்ணிற்படும் முதற்காட்சிவரை அனைத்தும் தப்பிக்கவியலாத சலிப்பூட்டுகிற நிகழ்வுகள் என்பதால் சனலுக்கு வெளியே குதித்து இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டலாமா என்று கூஎட நினைப்பதுண்டு.  

ஒவ்வொருநாளும் முகச்சவரம் செய்துகொள்ளும்போது என்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்ளலாம் என்கிற வெறித்தனமான எண்ணம் வரும், பிறகு கண்ணாடியில்  எப்போதும்போல தெரிகிற எனது முகத்தையும் சோப்பு நுரையோடு அக்கன்னங்களையும் பார்க்கிற்போது அனேக தடவை துக்கம் தாங்காது அழுதிருக்கிறேன்.

முன்பெல்லாம் எந்தெந்த மனிதர்களை மகிழ்ச்சியுடன் சந்திப்பேனோ அவர்களைக்கூட தற்போது சந்திப்பதில்லை. அவர்களை நன்கறிந்தவன், அதாவது  அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு என்னுடைய பதில் என்னவாக இருக்கும், எப்போதும் ஒரே மாதிரியாக  இருக்கிற அவர்களுடையை சிந்தனையை வார்த்தெடுக்கும் கலன் எது, அவர்கள் முன்வைக்கும் நியாயங்களின் நெளிவு சுளிவுகள் எவை ? என்று அனைத்தையும்  அப்போது தெரிந்துவைத்திருந்தேன்.    

 மனிதர் மூளைகள் ஒவ்வொன்றும் ஒரு சர்க்கஸ் கூடாரம், அங்கே தப்பவழியின்றி சுற்றிவரும் விலங்காக இருப்பது ஒரேஒரு குதிரை. முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகளென்று அணுகுமுறைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், வரைமுறைக்கு உட்பட்டே செயல்படமுடியும், பிறகு திரும்பவும் பழைய நிலமைக்குத் திரும்பவேண்டும். முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகள் என அணுகுமுறைகளில் சில வழிமுறைகளை கையாண்டாலும் ஓரள்விற்கே சாத்தியமாகும், பிறகு எப்போதும்போல பழைய பாதையில்   ஓயாமல்  ஒரேவிதமான   கருத்துக்களை, மனமகிழ்ச்சியை, கேலி பேச்சுக்களை, மரபுகளை, நம்பிக்கைகளை, ஒவ்வாமைகளை சுமந்தபடி உழலவேண்டும்.

கடுமையான பனிமூட்டம். அகன்ற வீதிகளையும் அவை மூடியிருக்க, புகை மூடிய மெழுகுவர்த்திகள்போல தெருவிளக்குகள்  எரிந்துகொண்டிருந்தன.  தோள்களில் இதுவரை அறிந்திராத பாரம், உண்டது செரிமானம் ஆகாமல் இருந்திருக்கலாம்.  

உண்பது ஒழுங்காக செரிமானம் ஆக கொடுப்பினை வேண்டும், வாழ்க்கையில் அனைத்துமே அதைச் சார்ந்தே இருக்கின்றன. கலைஞனுக்கு உத்வேகமும், இளம் வயதினருக்கு காதல் ஆசைகளும், சிந்தனையாளருக்குத் தெளிவான எண்ணங்களும்,  அனைவருக்கும் வாழ்க்கைக்கான சந்தோஷமும் நல்ல செரிமானத்தினால் மனிதருக்கு கிடைக்கும் நன்மைகள்.  தவிர நன்றாகச் சாப்பிடவும் மனிதர்க்கு அது உதவுகிறது (இதற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்). நோய்பட்ட வயிறு சந்தேகிக்கவும், நம்பிக்கையின்மைக்கும், கொடுங்கனவுகளுக்கும், மரணத்தின் மீதான விருப்பத்திற்கும் காரணமாகிறது  என்பதை நான் நன்குணர்ந்திருக்கிறேன். இன்று மட்டும் நான் உண்டது  ஜீரணமாகியிருக்குமெனில், ஒருவேளை எனது தற்கொலை எண்ணம் தவிர்க்கபட்டிருக்கக் கூடும்.  

கடந்த முப்பது வருடங்களாக நாள்தோறும் மெத்தை நாற்காலியில் உட்காருவது வழக்கம், அவ்வாறு உட்கார்ந்திருக்கும் நேரத்தில்  பார்வையை என்னைச் சுற்றிலும் ஓடவிடுவதுண்டு, அப்படிச் செய்கிறபோது மிக கடுமையானதொரு வேதனைக்கு ஆளாகி, கிட்டத்தட்ட பைத்திய நிலைக்குப் போவதுண்டு

என்னிடமிருந்தே நான் தப்பினால் போதுமென்றொரு நிலமையில்  அதற்கான யோசனைகளில் இறங்கியதுண்டு. நான் எதையும்செய்யாமல் சும்மா இருந்திருக்கலாம், எதையாவது செய்யலாம் எனப்போக  மிகப் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். மேசை இழுப்பறைகளில் குவிந்துகிடக்கும் காகிதங்களை ஒழுங்குபடுத்த நினைத்தேன்.

எப்போதிருந்து என்பது நினைவில்லை, ஆனால் நீண்ட நாட்களாகவே என்னுடைய மேசையின் இழுப்பறைகளை சுத்தம் செய்ய நினைப்பதுண்டு ; காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த மேசையில் கடிதங்களையும் ரசீதுகளையும் கலந்து கட்டி போட்டுவர, அந்த  ஒழுங்கின்மை அவ்வப்போது எனக்கு கணிசமான மனக்கலக்கத்தை  அளித்து வந்தது. ஆனால் பொதுவாகவே எதையாவது ஒழுங்கு படுத்தவேண்டும் என எண்ணினால் போதும் மறுகணமே எனது உள்ளம், உடல் இரண்டுமே சோர்வுக்கு ஆளாகும், விளைவாக இக்கடினமான பணியைச் செய்ய ஒருபோதும் துணிவதில்லை.

ஆனால் இம்முறை துணிந்து மேசைக்கு முன்பாக  அமர்ந்து இழுப்பறையைத் திறந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றை அழித்துவிடும் நோக்கில், அதற்குரியவற்றை தெரிவு செய்தேன். என்முன்பாக ஆண்டுகள் பலவாக சீண்டப்படாமல் பழுப்பு நிறத்தில் குவிந்திருந்த காகிதங்களைக் கண்டு சில கணங்கள் தடுமாறி, பின்னர் ஒன்றை கையில் எடுத்தேன்.


     நண்பர்களே ! உயிர்வாழ்க்கை மீது நல்ல அபிப்ராயம் உங்களுக்கு இருக்குமெனில் பழைய கடிதங்களின் புதைகுழிகயை ஒருபோதும்  தோண்டாதீர்கள் ! தப்பித் தவறி அப்படியொரு தவறைச் செய்ய நேர்ந்தால்   அவற்றைக் கைநிறைய எடுங்கள் ! எடுத்த மறுகணம் கண்களை இறுக  மூடுங்கள், ஏனென்றால் சட்டென்று பழைய நினைவுகளின் சமுத்திரத்தில் உங்களைத் தள்ள வாய்ப்புள்ள ஒரே ஒரு வார்த்தை, மறந்துபோன  அல்லது பரிச்சயமான சில வரிகள் உங்கள் கண்களில் பட்டுவிடக்கூடும், அதற்காக. அடுத்து நீங்கள் செய்யவேண்டியது, இந்த நச்சுக் காகிதங்களை தீயிலிடுதல், கவனமுடன் செய்யவேண்டும்,எரித்த சாம்பலில் துண்டு துணுக்குக்கூட மிஞ்சக்கூடாது, அவ்வளவும் கண்களுக்கு எளிதில்  புலனாகாத தூசாக மாற்றப்படவேண்டும், தவறினால்  நீங்கள் தொலைந்தீர்கள், என்னைப் போல ! கடந்த ஒரு மணிநேரத்திற்கு முன்பிருந்து என்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்.

என்ன சொல்ல!  முதலில் படிக்க நேர்ந்த கடிதங்களில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை, தவிர அவை அண்மையில் எழுதப்பட்டவை. எழுதியவர்களும் உயிரோடிருக்கிறார்கள், அடிக்கடி அவர்களைச்  சந்திக்கவும் செய்கிறேன், என்பதால் அவற்றை அலட்சியம் செய்தேன். திடீரென கண்ணிற்பட்ட உறையொன்று மெலிதானதொரு நடுக்கத்தைத் தந்ததது. உறைமீது  மிகப்பெரிய எழுத்துகளில் இருந்த எனது பெயரைக் கண்டதும் என் விழிகளில் நீர் கோர்த்தது. என்னுடைய ஆருயிர் சினேகிதன், இளமைக்கால தோழன்,  நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். என்ன ஆச்சரியம், கண்முன்னே அவன் தெளிவான வடிவில் நிற்கிறான்.  எப்போதும்  காணும் இயல்பான புன்னகையை முகத்தில் தேக்கி, கைகள் இரண்டும் என்னை  நோக்கி நீட்டியபடி இருக்கும், அவனைக் கண்டதும்  எனது முதுகுத்தண்டு சிலிர்த்தது. நான் நேரில் அவனைத் திரும்பவும் பார்த்தேன்,  இறந்தவர்கள் திரும்ப வருவார்கள், பொய்யில்லை, உண்மை ! பிரபஞ்சத்தைக் காட்டிலும் நம்முடைய நினைவுகள் ஒரு பரிபூரண உலகம், மரித்த மனிதர்களையும் உயிர்ப்பிக்கக் கூடியது அதொன்றுதான்.

எனதுகை நடுங்கிக் கொண்டிருக்க, கண்ணீர் திரையிட்டக் கண்களுடன் அவன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த அனைத்தையும் வாசித்தேன், விம்மி அழுதுக்கொண்டிருந்த எனது இதயம் காயமுற்றிருக்க,  கைகால்கள் முறிக்கபடும் மனிதரொருவர் வலிபொறுக்கமுடியாமல் தனது வேதைனையை வெளிபடுத்துவதுபோல நானும் புலம்பினேன்.   

நதிமூலத்தைத் தேடி ஒருவர் பயணிப்பதுபோல, எனது கடந்தகால வாழ்க்கையில் பிரவேசித்தேன். பல வருட காலமாக நான் மறந்திருந்த மனிதர்களை அடையாளம் காண முடிந்தது, ஆனால் பெயர்கள் நினைவில் இல்லை. அவர்கள் முகங்கள் மாத்திரம் என்னுள உயிர்பெற்றன. எனது தாயின் கடிதங்களில் அக்காலத்தில் எங்கள் வீட்டில் பணியாற்றிய ஊழியர்களைத் திரும்பக் கண்டேன்.  எங்கள் வீட்டின் வடிவமும் வந்துபோனது, சிறுவயது பிள்ளைகளுக்கென்று ஒருவகை குணமுண்டு, அர்த்தமற்ற சம்பவங்கள் என்கிறபோதும் அவர்களுக்கு அதில் ஒருவகையான ஒட்டுதலிருக்கும், அன்று அத்தகையவற்றையும் நினைவுகூர்ந்தேன்.

அதுமட்டுமல்ல என்னுடைய தாய் அன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப  உடுத்திய ஆடைகளும், அவைதரும் வகைவகையான தோற்றங்களும், அவற்றுக்குப் பொருத்தமாக அடிக்கடி அவள் கையாளுகிற  சிகை அலங்காரங்களும் திரும்பவும் நினைவுகூர முடிந்தது. இறகுபோன்ற மெல்லிய பின்னல் வேலைப்பாடுகொண்ட கவுன் ஒன்றை அவள் சில நேரங்களில் அணிவதுண்டு, அக்காட்சி என் நினைவில்  வந்துபோனது. அதிலும் அந்த ஆடையை அணிந்திருந்த  ஒரு நாள் « மகனே  ரொபெர் !  நீ நேராக நிற்க பழகிக்கொள்ளவேண்டும், தவறினால் கூன்முதுகோடு வாழ்க்கை முழுதும் இருப்பாய் ! »- என எச்சரித்தது, நினைவுக்கு வந்தது.

பிறகு மேசையின் மற்றொரு இழுப்பறையைத் திறந்தேன். எதிரே எனது இளமைக்கால காதல்அனுபவங்களை நினைவூட்டுவதுபோல பாலே நடனத்திற்குரிய ஒரு ஷூ, கிழிந்த ஒரு கைக்குட்டை, ஒரு கணுக்காலுறை, தலைமுடிகள், உலந்த பூக்களென்று வரிசையாக இருந்தன.  என்னுடைய வாழ்க்கையில் இரண்டு காதல்கதைகள், அவற்றின் கதாநாயகிகள் தலை முழுவதுமாக நரைத்து இன்றும் உயிர்வாழ்கிறார்கள், அவற்றை எண்ணிப் பார்த்தபோது, ஒருபோதும் முடிவுறாத கசப்பான துன்பத்தில் மூழ்கினேன். தங்கச்சரிகைபோன்ற கேசங்கள் ஒட்டி உறவாடும் இளம் நெற்றிகள், கைகளின் தீண்டல்கள், உரையாடும் பார்வை. துடிக்கும் இதயங்கள், உதடுகளுக்கு உத்தரவாதம், தரும் புன்சிரிப்பு, தழுவலுக்கு அழைத்துச்செலும் உதடுகள்… முதல் முதல்…., முடியாமல் நீளும் அம்முத்தம் கண்களை மூடச் செய்து, கூடியவிரைவில் உடமையாக்கிக்கொள்ள இருக்கிறோம் என்கிற அளவிடமுடியாத இன்பத்தில், அனைத்து சிந்தனைகளையும்  மூழ்கடித்துவிடும்.

முன்னாள் காதலின் இப்பழைய பிணையப்பொருட்களை கைகொள்ள எடுத்து, அவற்றை  வெறித்தனமான தழுவல்களைக் கொண்டு மூடினேன்.  நினைவுகளால் சிதைக்கபட்டிருந்த என் ஆன்மாவில் அவை ஒவ்வொன்ன்றையும்  அனாதையாகப்பட்ட நேரத்தில் எப்படி இருந்தனவோ அப்படித் திரும்பப் பார்த்தேன்; நரகத்தை விவரிக்க அனைத்து கட்டுகதைகளிலும் சந்திக்கிற, இட்டுக்கட்டிய வதைகளுக்கும் மேலானதொரு கொடுமையான சித்திரவதையை அன்று நான் அனுபவித்தேன்.

இன்னுமொன்று வாசிக்க இருக்கிறது. அது என்னுடையது, ஐமபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய  ஆசிரியர்  சொலவது எழுதுதல் என்ற பெயரில் எனக்கு கொடுத்தது :

« அன்பினிய எனது அம்மாவிற்கு,

இன்றெனக்கு ஏழு வயது. பகுத்தரியும் வயது, எனவே இவ்வுலகிற்கு என்னை நீ கொண்டுவந்தவள் என்கிற வகையில் உனக்கு நன்றி கூற இது உகந்த தருணம்.

உங்களை மிகவும் நேசிக்கும் மகன்  »

                                                                ரொபெர்

எல்லாம் முடிந்தது.  ஒருவழியாக நதி மூலத்தை அடைந்தது போல, எனது ஆரம்பத்திற்கு வந்தாயிற்று. என்னுடைய வாழ்க்கையில்  எஞ்சியிருப்பதை அறிய முற்பட்டதுபோல எனது பார்வையைச் சட்டென்று திருப்பினேன்.  குரூரமான தோற்றத்துடன் ஒற்றை மரமாக முதுமை, அடுத்து காத்திருப்பது தள்ளாமையும், பலவீனமும். ஆக அனைத்தும் முடிந்தது, இன்று நான் யாருமற்ற அநாதை.

என்னுடைய கைத்துபாக்கி மேசைமீது, கைக்கெட்டும் தூரத்தில். தோட்டாக்களை நிரப்புகிறேன்….. ஒரு போதும் உங்கள் பழைய கடிதங்களை  திரும்ப வாசிக வேண்டாம்.,,, »

      ஆக அனேக மனிதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வது, இதுபோன்ற காரணங்களுக்காக. நாமோ  இவ்வாறான முடிவுகளுக்கு   மிகப்பெரிய துன்பங்கள் காரணமாக இருக்கவேண்டுமென நினைத்து வீணில்  நேரத்தை செலவிடுகிறோம்.  

17 avril 1883

அதிரியன் நினைவுகள் (Mémoires d’Hadrien)

ஒரு பிரெஞ்சுப் புதினம். ஆசிரியர் மார்க்கெரித் யூர்செனார். எழுதபட்ட ஆண்டு 1952.

தமிழில் நல்லபடைப்புகளை வரிசைபடுத்துகிறேன் என ஒருசிலர் முன் வருவதை பார்க்கிறோம், அத் தேவ இரகசியம் ஊரறிந்தது, மேற்குலக எழுத்தாளர்கள் இம்மாதியான வம்பு தும்புகளுக்குப் போவதில்லை. அவர்களுக்கு பிற எழுத்துக்களை விமர்சிப்பது வேண்டாத வேலை, காரணம் இங்கே அதற்கென மனிதர்கள் இருக்கின்றனர். படைப்பிலிருந்து விலகி, ஒரு நல்ல படைபினை 99 விழுக்காடு நடுநிலையோடு உள்வாங்கி கனியெது, காயெது என்பதில் தேர்ந்த பத்திரிகையாளர்கள், இலக்கிய அபிமானிகள் அடங்கிய கூட்டம் அது. நார்வே இலக்கியவட்டம் அப்படிபட்ட ஓர் அமைப்பு.

எந்நாளும் உலகில் வாசிக்கபடவேண்டிவையென 100 நூல்களை இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்திய நூல்களில் ராமாயணம், மகாபாரதம், சாகுந்தலம் பட்டியலில் இருக்கிறது. நோபெல் பரிசு பெற்ற தாகூர் பெயரில்லை, ஆனால் சாலமன் ருஷ்டியின் The Midnight children இடம் பெற்றுள்ளது.

பிரெஞ்சு மொழி படைப்புகள் 12 இடம் பெற்றுள்ளன. அவற்றில் தமிழறிந்த ‘அந்நியன்’ -அல்பெர் கமுய் -நாவலும் அடக்கம். எஞ்சியுள்ள 11 நாவல்களில் அதிரியன் நினைவுகள்’ நாவலுமொன்று.

இந்நாவல் ஒரு வரலாற்று நாவல், ஒரு வரலாற்று நாவலை இப்படியும் எழுதமுடியுமாவென எனக்கு பிரம்பிப்பை இன்றைக்கும் தரும் நாவல். அண்மையில் நோபெல் பரிசுபெற்ற அன்னி எர்னோ, மார்கெரித் யூர்செனார் பெயரால் பெற்ற பரிசுக்குப் பின்பே இலக்கிய உலகிற்கு நன்கு அறியப்பட்டார்.

இந்நாவலை கடந்த இரண்டு மாதமாக சொல்வனம் இலக்கிய இதழுக்கென மொழிபெயர்த்து தொடராக வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

தன் வலியும் மாற்றான் வலியும்

                          உலகமக்களில் குறிப்பாக இந்தியர்களை அண்மைக் காலத்தில் வியப்பில் ஆழ்த்திய செய்திகள் இரண்டு: முதலாவது கமலா ஹாரீஸ் என்ற பெண்மணி ஐக்கிய அமெரிக்க நாட்டின் துணை அதிபராக  இரண்டாண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற வரலாற்று நிகழ்வு, அடுத்தது, அண்மையில் ரிஷி சுனக் என்பவர் இங்கிலாந்து பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம்.  இருவரும் இந்தியர்கள் என்கிற அடையாளத்தைக்காட்டிலும் இந்நிகழ்வின் பின்புலத்தில் ஒளிந்துள்ள பொதுவான ஒற்றுமைகள் கூடுதல் கவனத்தைப் பெற்று அரசியல் விற்பன்னர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. காரணம் இருவருடைய மூதாதையர்களுமே இந்தியர்கள், தங்கள் சந்ததிகளுக்கு மகுடம் சூட்டிய மண்ணுக்கு, தேசியம் பேசுகிறவர்களின் மொழியில் சொல்வதெனில் அந்நியர்கள்; இனத்தால், நிறத்தால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருந்தபோதிலும் இவ்விருவரும் இப்படியொரு உயரத்தை எட்டமுடிந்tதது எப்படி?  ஐக்கிய அமெரிக்காவிலாவது அதிபராக ஒர் ஒபாமாவை காணமுடிந்தது, ஆனால் ஐரோப்பா என்றதும், வரலாற்றாசிரியர்கள் முதன்மைபடுத்துகிற, காலனி ஆதிக்கவரிசையில் முன் நிறுத்தப்படுகிற பிரிட்டிஷ் ராச்சியத்தின் பிரதமராக  சர்ச்சில், கல்லகன், தாட்சர், அமர்ந்த அரியாசனத்தில் இன்று அக்காலனிநாட்டிலிருந்து பிழைக்கவந்த குடிமகனின் வாரிசு பிரதமரானது எப்படி ?

       கமலாஹாரீஸ் : தந்தை ஜெமைக்கா நாட்டவர், தாய் இந்தியர். இருவருமே மேற்கல்விக்காக அறுபதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள். பெற்றோர் இருவரும் பிரிந்துவாழத் தொடங்கியதும் இளமைக்காலத்தைக் கனடாவில் கழித்தபின்னர் உயர்கல்விக்கு மீண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்பினார். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்னர் மாவட்ட அரசு வழக்கறிஞர், மாநில அரசு வழக்கறிஞர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.  பின்னர் அரசியலுக்குள் நுழைந்து, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆனார், அமெரிக்க மக்கள் மன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2021 ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், மற்றும் மேலவைத் தலைவர்.

ரிஷி சுணக் : இவருடைய பெற்றோர்களும் கமலா ஹாரீஸ் பெற்றோர்களைப்போலவே அறுபதுகளில் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். தத்துவம், அரசியலில் பட்டம்பெற்றவர். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம், அப்போது தமது வருங்கால மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. மனைவி கணிணித் துறையில் நன்கறியபட்ட இன்போசிஸ் நிறுவனரின் வாரிசு. அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர், மக்களவை உறுப்பினர், உள்துறை அமைச்சர், நிதித்துறை செயலர், நிதித்துறை அமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்.

       இவர்கள் என்றில்லை, மனிதர்களில் ஒருசிலர் மட்டும் அரசியல் அல்லாத பிறதுறைளிலுங்கூட ஆயிரமாயிரம் நட்சத்திர கூட்டத்திடையில் நிலவாக ஒளிர்வதற்குக் காரணங்களென்ன ?

       முயலோ, மானோ அதனதன் இனத்திடையே தனது பலத்தை நிரூபிப்பது, திறனை முன்நிறுத்துவது அதிசயமோ, அபூர்வமோ அல்ல மாறாக ஓர் ஆமை முயலை வெல்வதும், முயல் சிங்கத்தைக் கிணற்றில் குதிக்கச்செய்து வீழ்ழ்த்துவதும் அதிசயமாகிறது, காலங்காலமாக நினைவுகூரப்படும் கதையாகிறது. வரலாறு என்பது சராசரி நிகழ்வல்ல, அரிய செயல். « செயற்கரிய செய்வார் பெரியர் » . கமலா ஹாரீஸும், ரிஷி சுணக்கும் அதைத்தான் செய்திருக்கிறார்கள் தன் வலியையும் மாற்றான் வலியையும் புரிந்து செயற்கரிய செயலைச் செய்து அரியாசனத்தில் அமர்ந்தவர்கள். இவர்களுடையது  ஊமையாக எதிர் தரப்பில் அமர்ந்திருக்கும் பாமர பார்வையாளர்களுடன், தனிமனிதனாக உரையாடலை நடத்த உபயோகிக்கும் அலங்கார அரியாசனமல்ல, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தி, காணவரும் உலகத் தலைவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடக் கிடைத்த அரியாசனம்.

       இதுபோன்ற வெற்றிக்கு இருபடிநிலைகள் தேவைப்படுகின்றன. முதலாவது தன்பலத்தை உணருதல், அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பலத்தை அறிதல்.

« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல் »  என்கிறது குறள்.  இதனைத்தான் சுருக்கமாக ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்கிறது தமிழின் திருமந்திரம். இதனையே சாக்ரடீஸ் ” உன்னையே நீ அறிவாய்” என்கிறார்.

       தன்வலியை உணருதலோ, தன்னை அறிதலோ, உன்னையே நீ அறிவாய் என சாக்ரடீஸ் போதிப்பதோ அனைத்துமே தனிமனிதனின் சுயமுன்னேற்றத்திற்குச்  சொல்லப்பட்டவை, பொருள் அளவில் வேறுபாடுகளற்றவை.

        சாக்ரடீஸ் மேற்குலகின் முதமைத் தத்துவவாதி, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னும் பின்னும் மேற்குலகு பல தத்துவவாதிகளைக் கண்டிருக்கிறது என்கிறபோதும் சாக்ரடீஸ் முக்கியமானவர். «  பல கடவுள்கொள்கைக்கு(Polytheism) மாறாக ஒரு கடவுள்(Monotheism) கொள்கையை முன் வைtக்கிறார், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் » என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர். தமது சிந்தனைக்காக அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டு பலியான மனிதர், சொந்த உயிர்வாழ்க்கையின் முடிவைக்கூட தமது மெய்ஞானத்தின் வழிமுறையில் தேடிக்கொண்டவர். சாக்ரடீஸ் தமது கருத்துக்களை, எண்ணங்களை எழுதிவைத்தவர் அல்லர். வாய் வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டவர், தானறிந்த உண்மைகளை பிறர் கருத்துக்கு உட்படுத்தி தமது சிந்தனையை தெளிவுப் படுத்திக்கொண்ட சிந்தனாவாதி. வள்ளுவன் கூறுகிற « தன்வலியும் மாற்றான்வலியும் » அறிந்து தெளிதலை சாக்ரடீஸ் மெய்ப்பொருள் கூடுதலாக நமக்கு விளக்குகிறது. சாக்ரடீஸ் கண்ட தத்துவம் அல்லது மெய்ப் பொருளுக்கு கிரேக்க மொழியில் மையேத்திக் (Maieutic) என்று பெயர். கிரேக்க தொன்மவியலின்படி மாய்ய(Maïa) என்ற சொல்லுக்கு மருத்துவ தாதியர் என்று பொருள். மகப்பேறின்போது உடனிருந்து உதவிசெய்பவர்கள். சாக்ரடீஸ் தத்துவத்தின்படி கேள்விகள் என்ற மருத்துவச்சி ஞானமென்ற குழந்தையைச் சுகமாகப் பிரசவிக்க-வெளிக் கொணர மனிதனுக்கு உதவுகிறாள். Maieutics என்பது  உள்ளத்திலிருந்து ஞானத்தை பிரசவிக்க உதவும் முயற்சி. ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குள் ஒளிந்துள்ள அறிவை அல்லது ஞானத்தைக் கண்டெடுக்கும் நோக்கத்தை அடிடிப்படையாகக் கொண்டது. மனிதன் தனக்குள் கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு உரியபதிலைத் தேடுதல். தன்னை அறியாமையிலிருந்து விடுவிக்கிற ஒரு படி நிலை. « தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை » என்கிற திருமூலர் வாக்கு அது: தன் பலத்தை, தனக்குள் புதைந்துள்ள அறிவைத் தோண்டி எடுத்தல்.

       சிந்தனையும் உண்மையும்

        சாக்ரடீஸை பொறுத்தவரைசிந்தனையின்(Thought) நோக்கு, உண்மையை அடைதல். சிந்தித்தல், அவருக்கு ஓய்ந்திருப்பதல்ல,தொழிற்படுதல்; எண்ணத்தை வினையாக்கும் வழிமுறை. அவர் கருத்தின்படி அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நேரடிப் பேருந்து இல்லை, பல நிறுத்தங்களில் இறங்கி ஏறவேண்டும், அதற்கு நேரமும் காலமும் பிடிக்கும். சிந்தனையென்பது சரியான விடையைத் தேடிப் போடும் கணக்கு ; படிப்படியாக ஏறி மேற் தளத்தை அடையும் செயல். சிந்தனைக்கு உரையாடலைச் சிபாரிசு செய்கிறார் சாக்ரடீஸ். அதாவது சிந்தனையின் ஆரோக்கியம் உரையாடலைச் சார்ந்தது. சாகரடீஸுக்கு உரையாடல் முதன்மையானது, உரையாடலே உண்மைக்கு வித்திடுகிறது. அவ்வுண்மை கண்மூடித்தனமான நம்பிக்கையை விலக்கி அறிவுடைநிலையை இட்டு நிரப்ப நமக்கு உதவுகிறது.  உண்மை என்பது என்ன ? ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர் வளர்ப்பு, கற்றகல்வி, உற்ற அனுபவம், சமூகச்சூழல், அதன் மரபு, பண்பாடு இவற்றின் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கக்கூடும். அவ்வுண்மை அவரவர் பார்வை சார்ந்த உண்மை. பார்வைக்குத் தெரிந்தது தெரியாதது என இரு பக்கங்கள் உண்டு, எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. அவரவர் கண்பார்வை சக்தியைப் பொறுத்தும் அதுவேறுபடும். பார்வைகுறைபாடு உடைவருக்கு எதிரிலுள்ள பொருள் தெரியவில்லை என்பதால் அப்பொருள் அங்கில்லை என்று பொருளல்ல. கண்ணாடி அணிந்தோ, தொட்டுணர்ந்தோ அப்பொருளை அவரால் அறியமுடியும். உண்மைக்கும் இத்த்கைய எத்தனங்கள் அவசியமாகின்றன. தவிர தனிமனிதர் உண்மை,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கான உண்மை அல்ல. பிரபஞ்ச உண்மை என்பது, எண்ணற்ற மனிதரிகளிடம் பெறப்பட்ட உண்மைகளின் ஒன்றிணைப்பு. ஒவ்வொரு மனிதனிடமும் அடிமனதில் சரியான உண்மை ஒளிந்துள்ளது, காலம்காலமாக மானுடத்தோடு பயணிக்கும் உண்மை அது, உள்ளத்திலிருந்து ஆய்ந்து அதனை அறிதல் வேண்டும், அப்படி அறிந்த உண்மையை உறுதிப்படுத்த உரையாடலும், விவாதமும் அவசியமாகிறது. நமக்குள் உணரும் உண்மையை மேம்படுத்த பிறருடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பூமி உருண்டை, கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை, எல்லாவற்றிர்க்கும் பதிலைத் தேடவேண்டியது நம்மிடம், ஆனால் அப்பதிலை  அவ்வுண்மையைப் பேருண்மையாக்க அல்லது பிரபஞ்ச உண்மையாக புணரமைக்க பிறர் கருத்துக்கு உடபடுத்தவேண்டும். ஒரு பிரச்சனைக்கு பிறர் யோசனையை நாடுவதோ அல்லது பிறர் கருத்தைக் கேட்பதோ நமது இடத்தில் அல்லது நமக்குப் பதிலாக அவரைச் செயல்பட அனுமதிக்கிறோம் என்று பொருளல்ல.  ஒரு பிரச்சனையில் நாம் கண்ட தீர்வு சரியா தவறா  அதில் உண்மையின் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய பிறர்  கருத்து உதவக்கூடும். நாம் தெளிந்தறிந்த உண்மையத் திருத்தி எழுதவும் வலுவூட்டவும் பிறமனிதருடனான உரையாடல்கள் உதவலாம். நாம் எடுக்கின்ற எந்த முடிவும் அதுசார்ந்த உண்மைக்கூறுகளும் எதிர்வினை இல்லாதபோது, நூறு விழுக்காடு சரியானதென்று சொல்வதற்கில்லை. நம் சிந்தனையில் உருவான கலையோ, படைப்போ பூரணம் பெறுவது மறுபக்கம் அதனைக் கையிலெடுத்துக் கொண்டாடும் பிற மனிதர்களின் ஆதரவால், ரசனையால்.                                     

« உன்னையே நீ அறிவாய் ! உன்னிடத்திலுள்ள உண்மையை அறிந்து அவ்வுண்மையை உறுதிசெய்துகொள்ள அண்டையிலுள்ள மனிதர்களிடம் உரையாடலையும் நிகழ்த்து ! » என்பது சாக்ரடீஸ் எழுதிய மனிதர் வெற்றிக்கான சூத்திரம். கிட்டத் தட்ட பூமிப்பந்தின் வேறொரு திசையில் வாழ்ந்து மறைந்த நமது வள்ளுவரும் « தன்வலி, மாற்றான் வலி » என உரைப்பதை இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியக் காலனி ஆட்சியின்போது ஆயிரமாயிரம் காந்திகள் இந்தியாவில் இருந்தார்கள், மோகன்தாஸ் கரம்சந்த் மட்டுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலமை ஏறக முடிந்தது, தன் வலியை, தமது பலத்தை உணர்ந்ததோடு தென்னாப்ரிக்காவில் தன்னிடம் தேடிய உண்மையை அது சார்ந்த உரையாடலை சொல் செயல் இரண்டு வடிவிலும் இந்திய தேசத்திலும், பிட்டிஷ் முடியாட்சியோடும் தொடர்ந்ததன் பயனை பின்னர் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பராக் ஒபாமா என உலகறிந்த மனிதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், இங்கிலாந்து பிரதமர்  ரிஷி சுணக் இருவரும் இனத்தால் நிறந்த்தால் சிறுபான்மையிராக இருந்தும் பிழைக்கச் சென்ற தேசத்தின் பெருமகனாகத் தங்களை அடையாளப் படுத்த முடிந்ததற்கு தன்பலத்தையும்    பிறர் பலத்தையும் அவர்கள் அறியமுடிந்ததே காரணம்.  பெரும்பானமையினரிடமிருந்து அந்நியபட்ட ஒருவரை தமது அரசியல் சட்டம் வகுத்துக்கொண்ட நெறிமுறையின் அடிப்படையில், தலமைக்கு அழைத்துச்சென்ற  பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் அரசியல் நாகரீகத்தை பாராட்டவேண்டும். அமெரிக்க  நாட்டின்  துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் இருவரும் இப்பதவியைச் சம்பந்தப் பட்ட நாட்டின் குடிமக்கள், கட்சிகள், அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்களின் தயவினால், கருணையினால் பெற்றவர்களில்லை கடுமையானப் போட்டியில் தங்கள் திறனை, வல்லமையை எண்பித்து வெற்றிபெற்றவர்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.                                                                                                                                                                       

       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பெருமைப் பட்டுக்கொகிற இந்தியாவிலும் நாளை இப்படியொரு அதிசயம் சாத்தியமா ? இங்கே காலங்கலமாய் ஆதிக்க சக்திகளிடம் அடிமைப் பட்டுக்கிடக்கிற மக்களை விடுவிக்க, அந்நய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட  ஓர் இந்தியப் பிரஜை அல்லது  சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்த அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஓர் இந்தியர் அல்லது மக்கள் எண்ணிக்கையில் பெரும்பானமையினராக இருந்தும்  ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே செத்துமடிகிற கூட்டத்திலிருந்து ஒருவர் அதிகார பலத்துடன்  இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவோ, குறைந்தபட்சம் குக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ;  தேர்வு செய்யும் கண்ணியம்  அல்லது பெருந்தன்மை ( ஒதுக்கீடுகளின் தயவின்றி ) நமக்குண்டா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும் ; இங்குள்ள சிறுபான்மை மக்களிடை அல்லது ஒடுக்கபட்ட சமுதாயத்தின் தலைவர்களிடையில் தங்கள் பலத்தை அறியும் ஆர்வமும், அறிந்த பின் பிறர்வலியறிந்து தங்கள் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பும் இருக்கிறதா என்பதுங்கூட இங்கு கேள்விக்குறி.  « எனக்கு ஒரு எம்.பி சீட் போதும், மத்திய அரசில் ஓர் அமைச்சர், கட்சிக்கு  பத்து எம். எல். ஏ. சீட்டுகள், சிறுபானமை வாரியத்துக்கு ஒரு தலைவர்பதவியென வாய்க்கரிசி போட்டால் போதும் தங்கள் சன்னதிக்குவந்து மொட்டைபோட்டுக்கொள்ள தயார் » என்கிற கொள்கைப் பிடிப்பாளர்களுக்கு, அதிகார வர்க்கம் கருணைவைத்தால் கவர்னர் ஆகலாம், ஜனாதிபதியாக கூட ஆகலாம் என்கிற கனவுடன் அரசியல் செய்பவர்களுக்கு « தன்வலியும் மாற்றான் வலியும் » நூறுவருடம் ஆனாலும் தெரியவர வாய்ப்பில்லை.

நன்றி : காற்றுவெளி மார்கழி 2022