கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் விஷ்ணுபுர அறக்கட்டளை பூமணியை விருதுகொடுத்து கொண்டாடியிருக்கிறது. நண்பர் ஜெயமோகனுக்கு முகம் விருது, நண்பர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது. எழுத்தாளனை வாழுங்காலத்தில் கொண்டாட மனம் வேண்டும். வேருக்கு நீர்போல அது இன்றிமையாதது. அது எழுத்தாளருக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட மனைவி, மக்கள் மகிழ்ச்சிகொள்ளும் தருணம். நமது கடந்தகால இலக்கிய வரலாற்றில் இப்படியொரு வாய்ப்பில்லை. இன்று அதைக் கருத்தில்கொண்டு இயங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. பரிசுபெற்ற நண்பர்களை பாராட்டும் நேரத்தில், உரியவர்களை தேர்வுசெய்து பாராட்டும் பரிசுக்குழுவினருக்கு மீண்டும் நன்றிகள்.

—————————————–

அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக்கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

ருமேனியா நாட்டிலிருந்தும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புறப்பட்டு பரவலாக மேற்கு ஐரோப்பிய நாடுகளெங்கும் அலைந்து திரியும் நாடோடி மக்களின் பூர்வீகம் இந்தியா என்கிறார்கள். ஆக அவளுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது, நானொரு இந்தியன் என்பதால் மட்டுமல்ல, நானுமொரு நாடோடி என்பதால், அதாவது புலம் பெயர்கிறவர்களெல்லாம் நாடோடிகளெனில் நானும் நாடோடி என்கிற அடிப்படையில். இரண்டாவது முறையாக சிரிக்கிறாள். சிரிப்பில் ஒத்திகையின் பலன் வெளிப்படையாகவே தெரிகிறது. பாசாங்கில்லை. வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக துவங்கியிருக்கிற மே மாத வெக்கையைத் தணிக்கும் குளுமையும் அச்சிரிப்பில் இருக்கிறது. சிரிப்பில் ஓர் ஒழுங்கு. உதடுகள் சீராகப் பிரிந்து பற்களின் முன்வரிசையை, என்னை ஒரு புகைப்படக்காரனாகப் பாவித்து வெளிப்படுத்தியதைப்போல  உணர்ந்தேன். இளம்சிவப்பாக தெரிந்த அதரங்களின் மினுமினுப்பிலும் கன்னங்களின் இரு கதுப்புகளிலும் புத்தம் புதிய அச்சிரிப்பு மெல்லிய சவ்வுபோல ஒட்டியிருக்கிறது. அவளுடைய முதல் சிரிப்பும் கிட்டத்தட்ட இதுபோலத்தான் இருந்ததென்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். ஆனால் அச்சிரிப்பு அதற்கான விளைவை ஏற்படுத்த தவறிவிட்டதென்ற ஐயம் அவளுக்கு இருந்திருக்கவேண்டும். தலையை வணங்குவதுபோல தாழ்த்தியபோது, காத்திருந்ததுபோல விழுந்த தலைமுடியை விரல்தொட்டு காதுமடலுக்கும் தலைக்குமிடையே அனுப்பியபடி இரண்டாவது முறையாகச் சிரித்தபோது கூடுதலாக உதடுகள் பிரிகின்றன. இரு உதடுகளும் சேரும் இடங்கள் இம்முறை பின்னோக்கி இழுபட்டு மீண்டும் சுய நிலைக்கு வருகின்றன. சிரிப்பின் உபயோகம் என்னைப்போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். எதிராளியின் கவனத்தை தமக்கு இலாபம்தர தக்கதாக மாற்றவேண்டும். அவளுடைய எண்னமும் அதுவாகத்தான் இருக்கிறது. என்னை – என் கண்களை- குறிவைத்தே தாக்குதல் நிகழ்ந்தது. வேட்டையாடல் அநிச்சையாக நிகழ்ந்ததைப்போன்ற தோற்றம் தரினும் குறி தப்பவில்லை. குறிப்பொருள் வீழ்த்தப்பட்டது. வீழ்ந்திருந்தேன்.

கையை எனக்காக நீட்டியதும் சிரித்ததும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததா? கை நீட்டியது முதலிலும் சிரிப்பு இரண்டாவதுமாக நிகழ்ந்ததா? அல்லது சிரிப்புக்குப் பின் கையை எனக்காக நீட்டினாளா? என்ற கேள்விகள் எனக்குள் தேவையில்லாமல் ஒன்றன் பின்னொன்றாக தொடர்கின்றன. அவள் சிரிப்பினையும் நீண்டிருக்கிற அவள் கையையும் கவனியாதவன்போல நடந்துகொள்கிறேன். அதற்கான காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று  அப்பெண்ணை நான் அலட்சியம் செய்கிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றொன்று அதன் மூலம் அவளுடைய உடல்மொழியை நிராகரிப்பதும் வாய் திறந்து பேசவைப்பதுமென்ற எனது எதிர்பார்ப்பு. எனவே அவளுடை இவ்விளையாட்டில் எனக்குப் பற்றில்லை என்பதுபோல நடந்துகொள்கிறேன். எனது மனதைப் படித்தவைபோல ஸ்டியரிங்கில் விரல்கள் ஏற்ற இறக்கத்துடன் தாளமிட ஆரம்பிக்கின்றன. பெண்ணிடமிருந்த கொத்தாகப் பறித்த எனது பார்வையையை  வெப்பத்தில் நனைத்து சிக்னல் விளக்கின் மீதி பதியமிடுகிறேன். அவளிடம் நெருக்கடியொன்றை ஏற்படுத்திய குரூரத்துடன் மனம் குதூகலிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து பதட்டத்துடன், தற்காலிக மகிழ்ச்சியை ஒதுக்கியவன் ஜாடையாக அவளைப் பார்க்கிறேன். இப்போது பிரச்சினைகள் எனக்கு. விளையாட்டென்றாலும் ஆண் ஜெயிக்கவில்லையென்றால் எப்படி? என்னிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்பதை வாய் திறந்து சொல்லட்டுமே. வெள்ளந்தியாக ஒரு சிரிப்பினை உதிர்த்து சுலபமாக எதிரியை வீழ்த்திவிடலாமென்ற நாடோடிப்பெண்ணின் திட்டத்தை முறியடிக்கவேண்டும்.

அவளிடத்தில் தொடர்ந்து பதிலில்லை. மென்மையான சிரிப்பும், கை நீட்டலும் போதுமென்று நினைத்திருக்கவேண்டும். பொறுமையின்றி ஒரு நொடி திரும்பிப்பார்த்தபொழுது அவள் தலையைக் குனிந்துகொண்டாள். தாமதித்தால் வேறு வாகனங்களை, வேறு நபர்களைத் தேடி போய்விடுவாளோ என்றும் தேவையின்றி ஒரு அச்சம். பெண்ணின் ஊமை கெஞ்சுதலுக்கு மசிவதில்லையென்பதில் திட்டவட்டமாக இருக்கிறேன். நொடிகள் நிமிடங்களாகப் ஊதிப்பெருக்கின்றன. மௌனத்தின் நீட்சி என்னவாக முடியக்கூடும், என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. நிலவிய அமைதியை குலைத்துவிடக்கூடாது என்பதுபோல இருவரும் மௌனத்தை கையிலெடுக்கிறோம். அதனைக் கலைப்பதில் அவள் முந்திக்கொண்டால் எப்படி நடந்து கொள்ளலாம், என்ன கூறலாம் என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை இருவர் பார்வையும் ஓசையற்ற சூன்யத்தில் முட்டிக்கொள்கின்றன, ஒருசிலவிநாடிகள் அசைவின்மைக்குப்பிறகு அவை மேய்ச்சலில் இறங்குகின்றன. ஒருவர் மற்றவரின் பலவீனத்தை துகிலுரிந்துவிடுவதென்று செயல்படுகிறோம். “பிச்சைக்காசு அதற்கு போயிட்டு இப்படி யோசிக்கிறான்?”, என்று அவளும்; “எதற்காக இந்த கழுதை ஊமை நாடகமாடுகிறது? வாயைத் திறந்து கேட்கவேண்டியதுதானே?”  என்று நானுமாக இருக்கிறோம்.

பரிதாபத்திற்குரிய அவளது செயல்பாடு, வாய் திறந்தால் வரவிருக்கிற சொற்கள் ஆக எதுவென்றாலும் அவற்றை சந்திப்பதென்ற முடிவோடுதான் இருக்கிறேன். என்னை அணுகிய விதமும், காட்டிய பணிவும், நீட்டிய கையும் கடந்த ஒரு சில நொடிகளில் அவளை ஓர் அடிமையாகவும், என்னை எஜமானாகவும் கற்பித்துக்கொள்ள தூண்டுகின்றன. அவள் இருப்பின் மீது ஒரு தற்காலிக உரிமையை ஏற்படுத்திக்கொள்கிறேன். பெண்ணின் உடல்மொழிக்குப் பொருத்தமான வகையில், சரியான தருணத்தில், எனது பின்னூட்டம் அமையவேண்டும். சிக்னல் வழக்கமான நேரத்தைத்தான் எடுத்துக்கொள்கிறதென்ற போதிலும் எனக்கு முடிவுறாமல் நீள்வதாகத் தோன்றுகிறது. அவ்வப்போது அவளைப் பார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. மீண்டும் அடுத்தடுத்து கேள்விகள், வரிசையாக கரும்பலகையில் எழுதபட்டு கையில் பிரம்புடன் முகமற்ற ஒருவர் வாசிக்க சொல்லி அவளைக் கேட்கிறார்: பிறந்தநாடு, நாடோடி வாழ்க்கை, யாசிக்கும் குணம், மௌனம், முகம், சமிக்கைகள்- வாய் திறந்தால் பிரெஞ்சில் அவள் உபயோகப்படுத்தவிருக்கிற சொற்கள்?  இதுபோன்ற பலவும் மின்னணு தகவற் பலகையில் வருவதுபோல கோர்வையாய் தொடர்கின்றன. அவள் வாய்திறந்தால் வரக்கூடிய சொற்களெல்லாம் ஏற்கனவே வேறொரு சாலையில், வோறொரு சிக்னலில் வாகனத்தை நிறுத்திய பொழுது கேட்டதுதான். எனினும் திரும்பவும் கைநீட்டும் குறியீட்டிற்கான பொருளை அவள் தெளிவுபடுத்திட வேண்டுமென்பதில் கறாராக இருக்கிறேன். .

காத்திருப்பது அநாவசியமாகப்பட்டது. ஏதோ அவளுக்காகவே சிக்னலும் அதற்கான விதிமுறைகளும், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் இயங்குவதுபோன்ற எண்ணம் மனதில் சிலுசிலுவென்ற பரவ, உடலொருமுறை அதிர்ந்து மீள்கிறது. சென்னையில் ஒரு எழுத்தாள நண்பரைபார்க்கப்போக, மதிய உணவுக்கு முதலமைச்சர் வீடு திரும்புகிறார் எனக்கூறி வாகனங்கள்  நிறுத்தபட்டதும், மற்றொரு ஆட்டோகாரர் (எதிர்கட்சி அனுதாபி) ஏக வசனத்தில்  பிறர்காதுபட அந்த முதலமைச்சரை திட்டிதீர்த்ததும் நினைவுக்கு வந்தது. எனது தரப்பில் அவளாக வாய்திறக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்த்திருந்த நியாயங்கள் பாலினத்தில் எனக்கு எதிர்த்திசையிலிருக்கிறவள் என்ற அடிப்படையிலும், அவள் வயது காரணமாகவும் குலையத் தொடங்கிய அதேவேளையில் உலகெங்கும் ஏதோஒருவகையில்  பிறரை எதிர்பார்க்கும் கைநீட்டல்கள் அதாவது கொடுக்கின்ற கைகள் மேலேயும் வாங்குகின்ற கைகள் கீழேயுமென காட்சிகள் ஒன்று இரண்டு, நூறு ஆயிரம்  லட்சமென என்னை சுற்றிலும் வலைப்பின்னல்களாக தொடர்கின்றன.

அவளுக்கும் எனக்குமிடையில் இடைவெளியென்று ஒன்றுமில்லை.  என்னை அவளிடத்தில் நிறுத்தி அவள் நடவடிக்கைகளை எனது சரீரத்தின் செயல்பாடாக முன்னிறுத்தி யோசித்தபோது அது உண்மைதானென்று புரிந்தது. அவ்வுண்மை அவளுக்கு முன்பே எனது மௌனத்தை கலைத்துக்கொள்வதிலுள்ள நியாயத்தை தெளிவுபடுத்தியது. முடிவுகள் காரண காரியங்களை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுக்கவா முடியும். நாடோடிப்பெண்ணுக்கும் எனக்கும் இடையில் விழுந்த திரையை விலக்குவதில் அவளுக்குள்ள பொறுப்பு எனக்கு முண்டு. இப்படி இருவருமாக பார்வைகளை சாதனங்களாகப் பாவித்து எவ்வளவு நிமிடங்கள் உரையாடமுடியும். முன்பின் அறிந்திறாத இரு மனிதப்பிறவிகளுக்கிடையேயான சங்கடங்களுள் தொடக்க உரையாடலுமொன்று என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையென்பதை நினைக்க வெட்கமாக இருந்தது. தவிர இதை நான்தான் தொடங்க வேண்டும். தராசு முள் சமூகத்தில் ஓரவஞ்சனையாக என்தரப்பை சார்ந்திருக்கிறது. அதை நிரூபிக்க எனக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறபொழுது எதற்காக விட்டுகொடுப்பானேன்? நாடோடிப்பெண்ணின் நீட்டிய கைக்கும் எனது உடலுக்குமுள்ள இடைவெளி ஒரு சில அங்குலங்கள் இருக்கலாம் அல்லது தோராயமாக ஓர் அளவினைக் குறிப்பிடவேண்டுமானால், அவள் சுவாசம் என்னைத் தொடும் தூரத்தில் என்று வைத்துக்கொள்ளலாம். இக் குறுகிய இடைவெளியைவைத்துக்கொண்டு இத்தனை நேரம் அமைதியாக இருந்தததே ஆச்சரியம், வியப்புக்குரிய விடயம். யோசித்துப்பாருங்கள். கைநீட்டுகிற நபரை கூடுமானவரை தவிர்க்க  எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் நமது பார்வையிலிருந்து தவிர்க்க நினைக்கிறோமா இல்லையா? எனக்கும் அது உரைத்திருக்கவேண்டும் எனது சட்டைப் பையை துழாவி முடித்து பர்ஸ் எடுப்பதுபோல பாவனை செய்கிறேன். எனது தேடலுக்கிடையிலும், அவள் வாய்திறந்து என்னிடம் பிச்சை கேட்கவேண்டுமென்கிற இளக்காரமான எதிர்பார்ப்பு. எனது தேடல் அவளுக்கு தெம்பூட்டியிருக்கவேண்டும், வாய் திறப்பதுபோலிருந்தது, குரல் வெளிவரவில்லை, கட்டைவிரலால் ஆட்காட்டிவிரலைத் தொட்டு சுண்டியவளாய், அவளுக்குத்தேவை ஒன்றிரண்டு நாணயமென குறிப்பால் உணர்த்துகிறாள்.

நாடோடி பெண்ணிடம் தோற்றுவிட்டேன் என்பது புரிந்தது.  என்ன நடக்கவிருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டவள்போல இப்போது மெல்ல சிரிக்கிறாள். விரும்பினால் கொடு, விருப்பம் இல்லையென்றால் இல்லையென்று சொல்லு, அடுத்த வாகனத்தைப்பார்க்கிறேன் என்பது போலத்தான் அவளது அடுத்த பார்வையும் இருக்கிறது. எனது பொல்லாத நேரம் சில்லறை நாணயங்களென்று எதுவுமில்லை. சட்டைப்பை சுத்தமாகத் துடைக்கபட்டிருந்தது. என்னிடம் காசில்லை, போவென்று சொல்லிவிடலாமா? போயும் போயும் ஓர் இந்தியனிடம் கேட்டேன் பார் என அவள் நினைத்திடக்கூடாது. ஏதோ ஒட்டுமொத்த இந்தியர்களின் மரியாதைக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று நினைப்பு. சபித்தபடி  ஐந்து யூரோ தாளை அவள் கையில் வைத்தேன். புறப்பட இருந்தவளிடம், “கொஞ்சம் பொறு நாமெல்லால் ஒர் இனம் தெரியுமா?”, என்றேன். அவள் விழித்தபடி நிற்கிறாள். தொடர்ந்து பேசினேன்: “அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.”. காதில் வாங்கினாளா என்று தெரியவில்லை. அவளது முழுக்கவனமும் அடுத்த வாகனத்தின் மீதிருந்தது.

————————————————–

வணக்கம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.

ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-

2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

—————————————————————–

எனது மூன்று நூல்கள்:

இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————

மொழிவது சுகம்: ஜனவரி 5

லெ. கிளேசியோவும் இந்தியாவும்

 இந்திய தேசம் புதிர்களால் ஜ்வலிக்கிற கனவுதேவதையாக ஆதிங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள் வெவ்வேறுகாரணங்களின் அடிப்படையில் இந்தியாவைத் தேடி வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர், மெகஸ்தனிஸ் ஆகியோர் முன்னோடிகள். சந்திர குப்த மௌரியர் காலத்தில் பாடலிபுத்திரம் வரை (பாட்னா)வந்த மெகஸ்தனிஸ் சுமார் பத்தாண்டுகாலம்  தங்கி எழுதிய இண்டிகாவில்,  முதன் முதலாக ஒரு மேற்கத்தியர் பதிவு செய்த இந்தியாவைக் காண்கிறோம். அதன் பின்னர் உரோமானியரான பிளினி (Pliny the Elder) எழுதிய நூல் Naturalis Historia. கி.பி.முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவை விசித்திர மிருகமென்று சித்தரிக்கிறது.  மேற்கத்திய படைப்பாளிகளை பொருத்தவரை தங்கள் எழுத்துப்பாதையில் என்றேனுமொரு நாள் இந்தியத்தைச் சந்திக்கவேண்டுமென்பது படைப்பிலக்கிய விதி. குறிப்பாக பின் நவீனத்துவத்தில் களைத்திருக்கும் அவர்களுக்கு இந்தியத்துவம் என்ன மாய்மாலம் செய்கிறதோ? இந்தியா என்று பேசும்போதெல்லாம் அவர்கள் எழுத்து எருவைத்த பயிர்போல கரும்பச்சையில் நெளிகிறது. அதிலும் கிளேஸியோ போன்ற நாடோடிகளுக்கு எங்கேனும் ஓரிடத்தில் ஒன்றிரண்டு வரிகளிலாவது இந்தியாவை சிலாகித்து  அந்நாடுபற்றிய தங்கள் கேள்விஞானத்தைக் கோடிட்டுக் காட்டிவிடவேண்டும். உலகத்தின் இருப்பை அதன் உயிர்வாழ்க்கையை, அதன் சீர்மையையை சொல்லவருகிறபோது இந்தியா என்ற சொல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, இல்லை யெனில் தமது படைப்பறிவு கேள்விக்குறியதாகிவிடுமென்ற அச்சம் மேற்கத்திய படைப்பாளிகளுக்கு நிறையவே உண்டு. மிளகு, ஏலக்காயென்று வாசனாதி திரவியங்களைத் தேடி தங்கள் புறவளத்தை பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது ஒரு கூட்டமெனில்; சிந்தனைகள், கலைகள், இலக்கியமென்று தங்கள் அகவளத்தைப் பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது மற்றொரு கூட்டம். முதல் வளத்தை தேடிவந்தவர்கள் நம்மை அடிமைபடுத்தினார்கள், இரண்டாவது வளத்தைத் தேடிவந்தவர்கள் நமக்கு அடிமையானார்கள். எனது சிற்றறிவுக்கு சட்டென்று நினைவுக்கு வருகிற இரண்டாம் வகையினருக்கு நேற்றைய உதாரணம் ஆங்கிலேயரான இ.எம் பார்ஸ்ட்டர்.  இன்றைய உதாரணம் பிரெஞ்சுக்காரரான லெ கிளேஸியோ. La quarantaine என்ற நாவலில் எழுத ஆரம்பித்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தla Ritournelledela Faimவரை தொடர்ந்தது. இனியும் தொடரக்கூடும். மொரீஷியஸில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்ததாலோ என்னவோ இந்தியாவைப்பற்றியும் தவறாமல் எழுதுகிறார்.

 இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்?

 திராவிடக் கட்சி தலைவர்கள் அறுபதுகளில் இளிச்சவாய் தமிழர்களுக்கெனவே கண்டுபிடித்த மேடை வசனம். இன்றைக்குத் சிரியாவில் தினசரி அரங்கேறுகிறது. ஐநாவின் மனித உரிமை ஆனையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிரிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு அதிபரெடுத்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஐந்தாயிரத்திற்குக் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று சிகிச்சையின்றி வீட்டில் பதுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகிறவர்களை மருத்துவமனையில் அதிபரின் கூலிப்படை கொல்கிறது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கமுன் வரும் மருத்துவர்களுக்கும் அதுவே முடிவு. வழக்கம்போல சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டொ அதிகாரத்தின்மூலம் பாதுகாப்புசபையின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு இக்கொடுமைகளுக்குத் துணைபோகின்றன. சிரியமக்கள் சபிக்கப்பட்டவர்கள். மேற்கத்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் சிரியா நாட்டினால் லிபியா போன்றோ ஈராக்போன்றோ பெரிய இலாபங்களில்லை. எதற்காக ரஷ்யாவும் சீனாவும் சிரியாமக்களை எதிர்க்கவேண்டும்?. மேற்கத்திய நாடுகளின் குரல்கள் சிரியாவுக்கு ஆதரவாக ஒலிக்கின்றனவே அது போதாதா? உலகில் இன்னமும் சுதந்திரமென்ற சொல் ஒலிக்ககூடாத நாடொன்று உண்டெனில் அது சீனாவகாத்தான் இருக்க முடியும். இவ்விஷயத்தில் இந்தியாவை நினைக்க நமக்கு எவ்வளவோ பெருமையாக இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகளென ஆதரிக்கவும் எதிர்க்கவும் இங்கு எவ்வளவோ உள்ளன. உண்மையில் இந்தியர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இதை நான் சொல்லவில்லை ஒரு சீன நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் வாயால் சொல்லக்கேட்டது. அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் சுதந்திரமும், ஜனநாயகமும் பல நேரங்களில் கேலிக்குறியதாக இருப்பதும், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்மைதான். எனினும் கலகக்குரல்கள் எதிர்பார்க்கும் நீதிக்கு (‘பல நேரங்களில் பொய்த்தாலுங்கூட) அங்கே வாய்ப்புகளுண்டு.

 தாய் சீஜி (Dai Sijie)பிறப்பால் சீனர். வாழ்க்கையின் முற்பகுதி சீனாவில் கழிந்திருக்கிறது. பிறந்ததும் வளர்ந்ததும் பூர்ஷ்வா சூழலில். காம்ரேடுகள் சீனாவுக்கு அவர் எதிரி வர்க்கம். மாவோ சீனா புரட்சிபோதையில் அட்டூழியம் செய்த நேரம் தோழர்களுக்கு நிலவுடமையாளர்களும், பிற உரிமையாளர்களும் கொடுங்கோலர்கள். நடுத்தர மக்களும் மெத்த படித்தவர்களூம் முதலாளியியத்தின் கைக்கூலிகளென்ற மார்க்ஸிய பார்வையின்படி மூன்றாண்டுகாலம்  புணர்வாழ்வுபணிக்கு சிக்சூவான் மலைபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டவர் தாய் சீஜி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார். “சீனாவில் எனது விருப்பப்படி திரைப்படங்கள் எடுப்பதற்கான சூழ்நிலைகள் நிலவாததால் பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக சீனப்பின்புலக் கதைக்கு வியட்நாம் நாட்டில் தங்கி இரண்டுபடங்களை எடுக்கவேண்டியிருந்தது”, என்கிறார் அவர்.

 சீனாவுக்கு ஒரு தாய்சீஜியெனில் ஈரானுக்கு ஒரு ஜா·பர் பனாயி( Jafar Panahi ). ஜாபர் உலகம்முழுக்கக் கொண்டாடப்படுபவர் அவரது திரைப்படமொன்றிற்கு தங்கக் காமிராவை 1995ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் பரிசாகப்பெற்ரார். அவ்வாறே வெனிஸ் திரைப்படவிழாவிலும் பர்சினை வென்றவர். ஸ்பீல் பெர்க் இவரது பரம ரசிகர். இவருக்கு ஈரானிய உச்சநீதிமன்றம், அண்மையில் கீழ் நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த ஆறாண்டுகால சிறைதண்டனையை உறுதிசெய்திருப்பதோடு இருபதாண்டுகாலம் திரைப்படத் தொழிலிலிருந்து அவரை விலக்கி வைத்துள்ளது. இது தவிர அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரானக் கருத்துக்களை திரைபடங்களில் தெரிவித்தாரென்பது அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டு. உண்மையில் 2009 அதிபர் தேர்தலில் இயக்குனர் தற்போதைய அதிபருக்கு எதிராக நின்ற வேட்பாளரை (முசாவி) ஆதரித்தது மிகப்பெரிய குற்றம். பிரச்சினைக்குப்பின்பு 2010 மார்ச் மாதம் ஜா·பர் பனாயி அவரது மனைவி, மகள் மூவரும் கைது செய்யப்பட்டனர், 88 நாட்கள் சிறையிலிருந்த இயக்குனர் உண்ணாவிரதமிருக்கவே வேறுவழியின்றி விடுதலை செய்து ஈரான் அரசு வழக்குத் தொடர்ந்தது வழக்கின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். 

 குற்றவாளிகள்?

 மாக்சிம் ப்ருனெரி பிரான்சுநாட்டைச்சேர்ந்த 37வயது இளைஞர். லொரான்ஸ் பியாவா(Laurence Biava) என்ற எழுத்தாளர் உருவாக்கியுள்ள Le Savoir et dela Rechercheஎன்கிற இலக்கிய பரிசு அமைப்புத் தேர்வுக் குழு ஜூரிகளுள் இந்த இளைஞரும் ஒருவர். தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள வேறு இருவர் இவரை உடனடியாகத் தேர்வுக்குழுவிலிருந்து நீக்கப்படவேண்டுமென்கிறார்கள். காரணம் அவர் வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் அவருக்கிருந்த தொடர்பு. அதுமட்டுமல்ல 2002ம் ஆண்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றத்திற்கு ஆளாகி வழக்கின் முடிவில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு சிறைதண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து நன்னடத்தையின் காரணமாக அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யமுயன்ற நபர் யாரோ எவரோ அல்ல, பிரெஞ்சு ஜனாதிபதி. சம்பவம் நடந்த தினம் பிரான்சு நாட்டில் பஸ்தி விடுதலை நாளான தேசிய தினம். அதாவது ஜூலை 14. அன்றைய தினம் கொடியேற்றிவிட்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட பிறகு அதிபர் திறந்த வாகனத்தில் முப்படை தளபதிகள் சூழ மெதுவாக வந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. மெய்க்காப்பாளர்களின் முன்னெச்சரிக்கையால் அதிபரைக் காப்பற்றவும் முடிந்தது. குற்றவாளியையும் வளைத்துப்பிடித்தார்கள். இத்தகைய குற்றத்துக்குக் காரணமானவரை ஓர் இலக்கிய பரிசு தேர்வுக்க்குழுவில் இடபெறச்செய்யலாமா? என்பது பரிசுக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற இலக்கியவாதிகளின் கேள்வி. அவரை தேர்க்குழுவில் இடம்பெறச்செய்தவர்கள் அவரது படைப்புத் திறனின் அடிப்படையில் இடம்பெறச்செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது படைப்புத் திறனுக்கு சாட்சியென்று இருப்பது ஒரே ஒரு நூல். பெயர்: Une vie ordinaire : je voulais tuer Jacques Chirac தமிழில் மொழிபெயர்ப்பதெனில்: அதிபரை (ழாக் சிராக்) கொலைசெய்ய விரும்பினேன் காரணம் எனது உப்புசப்பில்லாத வாழ்க்கை. 

 அதிபர் ழாக் சிராக்கை கொலை செய்ய முயன்று 2009ல் விடுதலையாகி தற்போது ஓர் இலக்கியப்பரிசு குழு தேர்விலும் இளைஞர் மாக்சிம் ப்ருனெரி இடம்பெற்றிருக்க சம்பந்தப்பட்ட அதிபருக்கோ அண்மையில் இரண்டாண்டுகால சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவர் செய்தகுற்றம் பாரீஸ் நகரத்தின் மேயராக இருந்தகாலத்தில் செய்த ஊழல். குற்றம் பதிவுசெய்யப்பட்டும் அதிபருக்கேயுரிய பிரத்தியேக சலுகையின்கீழ் வழக்குத் தொடரமுடியாதவராக சட்டவிலக்குப் பெற்றிருந்தார். இரண்டு முறை அதிபராக இருந்த பின் மூன்றாவது முறையாக போட்டியிட பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் வாய்ப்பில்லாத நிலையில் காத்திருந்த நீதித்துறை வழக்குத் தொடர்ந்து தண்டனையும் வாங்கித்தந்தது. மேல் முறையீடு செய்யப்போவதாக அதிபரின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். எனினும் பிரான்சு நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை. சட்டத்தின் பார்வையில் இருவேறு மனிதர்கள் இருக்கமுடியாது இருக்கவும் கூடாது. இக்காரணங்களினாலேயே லோக்பால் மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.

நன்றி: அம்ருதா- ஜனவரி

————————————–

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். அவ்வரிசைகளில் தொடர்ந்து ஏன் எதற்கென்று தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதலாமென்று திட்டம்:

பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
————————————————

பெனுவாத் க்ரூல்ட்

‘பெண்ணியம் ஒருவரையும் கொன்றதில்லை, கொல்லவும் கொல்லாது, ஆணாதிக்கத்திற்கோ அதுதான் அன்றாடத் தொழில்.’-பெனுவாத் க்ரூல்ட்

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. புகழ்பெற்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம்.- உ.ம். Picasso, Picabia, Jouhandeau, Paul Morand மற்றும் பலர். தாயாரின் வழிகாட்டுதலில், இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம், பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஞானம், ஆங்கிலத்திலும் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலில் ஆர்வம் காட்டினார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1978ம் ஆண்டில் குளோது செர்வன் என்பவரோடு சேர்ந்து பெண்களுக்கான F. Magazine என்கிற இதழொன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1982ம் ஆண்டுமுதல் Femina இதழின் ஜூரிகளுள் ஒருவராக இருந்துவருகிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை உண்டாக்கவென்று, இலக்கண வல்லுனர்கள், மொழியாளர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். மூன்று முறை திருமணமானவர்.  முதல் கணவர் காச நோயில் 1945ம் ஆண்டு இறந்தபின்னர், இரண்டாவதாக பத்திரிகை செய்தியாளரை மணந்து இரு பெண்களுக்குத் தாயாரானார். அம் மணவாழ்க்கையும் கசப்பில் முடிய மூன்றவதாக ஓர் பிரபல எழுத்தாளரை (Paul Guimard) மணக்க நேர்ந்தது. திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி ‘•புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவலான ‘இருவர் வாசித்த செய்தித்தாள்’ (JOURNAL A QUATRE MAINS) 1958ம் ஆண்டில் வெளிவந்தது, தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற ‘வாழ்க்கையின் சில உண்மைகள்’ (LA PART DES CHOSES-1972,) ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE -1972) என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பல நாவல்கள் குறிப்பாக ‘முக்கால்வாசி நேரம்'(LES TROIS QUARTS DU TEMPS), ‘தமனியும், சிரையும்'(LES VAISSEAUX DU COEUR) அவற்றுள் முக்கியமானவை. பிறகு பெண்ணியல் வாதிகளான ‘பொலின் ரொலான்(Pauline Rolland), ஒலிம்ப் தெ கூழ் (Olympe de Gouge) ஆகியோரது வாழ்க்கைவரலாறுகள், ‘ஒருவிடுதலையின் வரலாறு'( Histoire d’une evasion) என்கிற பேரிலே 1997 வெளிவந்த அவரது சொந்த வாழ்க்கை மீதான பார்வையும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை.

பெனுவாத் வாழ்க்கையும், எழுத்தும், இன்றைய நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்த முனைவதல்ல, ஆணுக்கு நிகரென்று, அழுந்த உரைப்பது, எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்துவது. அவளுடைய வாழ்வியல் நித்தியங்களை நிதரிசனப்படுத்துவது: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம், பெண்ணினம் மற்றும் அவள் சார்ந்த கருத்தியல்கள் அதில் பதிவுசெய்ய்யப்பட்டன. தற்போது அதற்கான வயதில் – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார், அதன் மேன்மைக்கு வாதிடுகிறார். பெண்கள், பெண்ணியம் என உழைத்துவருகிற இவரது சமீபத்திய படைப்பு,(2006) ‘நட்சத்திர ஸ்பரிசம்’- விற்பனையில் சாதனை செய்துவருகிறது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்ஷம் 3000 பிரதிகள். மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டுமென்பது இந்நாவலில் வெளிப்படுத்தப்படும் அவரது ஆதங்கம். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிஸத்திற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது பிடிவாதம்..

(Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது. சிமோன் தெ பொவார்க்கு ‘பெண்ணென்ற  இரண்டாமினம்’ ( Deuxieme sex) எப்படியோ, பிரான்சுவாஸ் பத்துய்ரியேவுக்கு (PARTURIER, FRANCOISE)’ஆண்களுக்கு ஓரு வெளிப்படையான கடிதம்(‘Lettre ouverte aux hommes) எப்படியோ, அப்படி ‘பெனுவாத் க்ரூல்ட்க்கு ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE). இன்றுவரை பத்து இலட்சம் பிரதிகள் விற்பனைச் செய்யபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரது எழுத்துக்களில் பெண்ணியத்தின் தாக்கங்கள்: காதலர்கள், கணவன்மார்கள், அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்துச் சொல்லபட்டிருக்கின்றன. சமீபத்தில் இவரைக் குறித்த ஓர் ஆவணப்படத்தினை மற்றோர் பெண்ணியல்வாதியும் இயக்குனருமான ஆன் லா•பான்(Anne Lenfant) ‘அவளுக்கென்று ஓர் அறை (Une chambre a elle) என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

———————————————————————————

* ‘Le feminisme n’a jamais tue personne – le machisme tue tous les jours’

(Ainsi soit-elle) கட்டுரைத் தொகுப்பிலிருந்து                                                                         பெனுவாத் க்ரூல்ட்

பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக ‘அவளது விதிப்படி ஆகட்டும்’ வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் ‘இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென’ நினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக ‘மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக்கொள்ளுமென்று எவரும் நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலை’ பேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு ‘மகப்பேறு கொள்கை’ அடிப்படையில் ஒரு சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் ‘பெத்தேன்'(Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3) பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென சட்டம் கொண்டுவந்திருந்தும், பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால் அதிர்ச்சிதருகிறது.

தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த  ‘ இரண்டாம் பாலினம் (Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு ஜீவிகளுடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் ‘சிமோன் தெ பொவாரு’க்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர் கையாண்டவிதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில் நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் ‘சிமோன்’ வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில்  ‘லிட்ரேலுடைய'(Maximilien Paul Emile Littre) அகரமுதலியில்  ‘பெண்ணியம்’ என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும் ‘வரையறையைத் தாண்டிவிட்டதெனக்’ குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட ‘பெண் விடுதலை’ சிந்தனையும், எழுப்பிய ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும், ‘பெண்ணென்ற  ஓர் இரண்டாமினத்தில்’ சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge) பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert), மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம் செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்•ப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் – பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.

உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். ‘பண்டை வழக்குகள்’ நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்; காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு. நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யபட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்தது’ என நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்’ எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1792ம் ஆண்டில் ‘ஒலிம்ப் தெ கூர்ழ்'(Olympe De Gourge) உரத்து குரல்கொடுத்ததைபோல: ‘ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது’,  அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால் அவர் சிரம் வெட்டபட்டது.

அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த ‘பொவாருடைய'(Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர். ‘உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று'(La plus massive survivance de l’esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.

பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு போகிறது.  அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை, எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது,’இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.’ சட்டென்று அவளுக்கு ஓரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டாண்டுகள் கழித்து அது கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய்  முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென சட்டம் இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.

‘அவள்’(Elle) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர், மார்கெரித் துராஸ், பிரான்சுவாஸ் தோபோன், எவ்லின் சுல்லெரோ, பெனுவாத் மற்றும் •ப்ளோரா க்ரூல்ட், மொனிக் விட்டிக், சிமொன் தெ பொவார், லூயீஸ் வைஸ், அர்லெத் லகிய்யே, ழிஸேல் அலிமி, டெல்பின் செரிக், லிலியானா கவான்னி, மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் ‘மகளிர் ஆண்டாக’ அறிவித்தது. ‘அன்னையர் தினம்’ என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. ஷந்தால் ஷவா•ப் ‘பெண்ணைப்’ பற்றியும், ‘வீழ்ந்த பெண்கள்’ என்று எரென் பிஸ்ஸேவுல், ‘சூதக இரத்தம்’ என்று மரி கர்டினல் என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான ‘அவள் விதிப்படி ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.

இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்’ என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். ‘பெண் விடுதலை இயக்கம்’ இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது, பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்’ என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன. ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O)என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர். வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென சொல்லிவருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்'(DEUXIEME SEX) மிகப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற ‘உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்ல’ என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

——————————————————————————————————————————–

**.  1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.

1. மே -ஜூன் -1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது, ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)

3.. REGIME DE VICHY(1940 – 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு ‘பெத்தேன்'(Petain)என்ற ராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிருவாகம்

4. Charle DE GAULLE (1890-1970) -இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.

———————————————————————————————

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -14

‘La Bûche de Noël’

அநேகமாக ஆங்கிலத்தில் ‘Yule Log’ என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். பிரெஞ்சில் La Bûche de Noël-லா பூஷ் தெ நோயெல்- என்பார்கள். கிருஸ்துமஸ் பண்டிகையை அறிந்தவர்களுக்கும் அல்லது மேற்கண்ட சொற்களை பண்டிகை நாட்களில் சொல்லக் கேட்டவர்களுக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மரத்துண்டு வடிவிலான கேக். இக்கேக்கை பண்டிகை விருந்தின் முடிவில் ‘Dessert’ ஆக தின்பார்கள்(உணவிற்கு முன்பாக ‘Starter’ எப்படியோ அப்படி உணவிற்குப் பின்பு ‘Dessert'(இதைப்பற்றித் தனியாக பின்பு ஒரு ஒருமுறை எழுதுகிறேன். உண்மையில் ‘La Bûche de Noël’ சடங்கொன்றின் குறியீடு.

இம்மரத்துண்டு அல்லது மரக்கட்டை உபயோகம் கிருஸ்துமஸ் பண்டிகைச் சடங்கின் ஒரு பகுதி. பொதுவாக இம்மரத்துண்டு செரீஸ் அல்லது ஆலீவ் மரங்களிலிருந்து பெறப்படவேண்டுமென்பது ஐதீகம். பிரான்சு நாட்டின் தென் கிழக்குப் பிரதேசமான புரொவென்சால் பகுதிகளில் இன்றளவும் ஒரு மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் இரவன்று பெரிய விருந்திற்கு (Gros Souper) முன்பாக வீட்டின் மூத்த உறுப்பினரும், இளைய வயதினரும் மரத்துண்டைக் கொண்டுவருவார்கள். பின்னர் இருவருமாக  விருந்து மேசையை மூன்றுமுறை மரத்துண்டுடன் வலம் வருவார்கள். அம்மரத்துண்டின் மீது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட -Vin cuit- சிவப்பு ஒயினை மூன்று முறை பன்னீர்போல தெளித்து, அதனை வரவேற்பறையின் கணப்பு அடுப்பிலிட்டு தீயிடுவார்கள். அதன் பின்னர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் Gros Souperக்காக சென்றமர்வார்கள்.

இச்சடங்கு இடத்திற்கிடம் வேறுபடும். சிலருக்கு மரத்துண்டு 3 நாட்கள் எரிந்தால்போதும். வேறு சிலருக்கோ ஆங்கிலப் புத்தாண்டு முதல்நாள்வரை எரியப்படவேண்டும். இரண்டாவது வகையினர் நள்ளிரவில் தீயை அணைத்து மறுநாள் மாலை மீண்டும் தீ மூட்டுவதால் ஒருவாரத்திற்கு அவர்கள் சொல்வதுபோல மரத்துண்டை எரியவைக்க முடிகிறது. பண்டிகை முடிந்தபின்பு சாம்பலைசேகரித்து வீட்டில் மேசை நாற்காலி, கட்டில், அலமாரிகளின் அடியிற் போடுவதும், வீடெங்கும் சாம்பலைத் தெளிப்பதும் தீவிபத்திலிருந்து வீட்டைக் காப்பாற்றுமென்றொரு நம்பிக்கை நிலவுகிறது.  தமிழ்நாட்டிலுள்ள எங்கள் கிராமத்தில் சொக்கப்பனை சாம்பலை இது போன்ற நம்பிக்கையில் உபயோகிப்பது வழக்கம். இப்போதும் தொடர்கிறதாவென்று தெரியாது.
———————–

கதையல்ல வரலாறு -2-4

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது.  தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம்.

முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை

இரண்டாவது: தந்தை நைநியப்பிள்ளையின் நேர்மையில் மகன் குருவப்பாபிள்ளை வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை.

மூன்றாவது: ஒரு பேராசைபிடித்த கவர்னர், குற்றமிழைக்காத தமது தந்தையை தண்டித்து தமது தந்தைக்கும் தமது குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார், இந்த அவப்பெயரை துடைக்காமல் நாடுதிரும்பமாட்டேனென்ற மகனுக்குள்ள இயற்கையான வீம்பும் காரணமாக இருக்கலாம்

நான்காவது: இது ஒரு கௌரவ பிரச்சினையுங்கூட. உள்ளூர் பிரமுகர்கள் மத்தியிலும் புதுச்சேரியிலும் நைநியப்பிள்ளைக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும் பறிபோன தரகர் பதவியும் அக்குடும்பத்தின் செல்வாக்கை வெகுவாக குறைத்திருந்தன. என்பதும் ஓர் காரணமே.

ஐந்தாவது: பாரீஸ் சென்று நீதிகேட்கும் அளவிற்கு குருவப்ப பிள்ளையிடம் போதிய பணபலம் இருந்ததும். நைநியப்பிள்ளையைத் தண்டித்திருந்த கவர்னர் கியோம் எபேருக்கு புதுச்சேரி காலனியிலும் சரி, பிரான்சு தேசத்திலும் சரி, அரசியல் எதிரிகள் நிறைய இருந்தார்கள் என்ற உண்மை கூட ஒரு காரணமாகிறது.

மேற்கண்ட ஐந்து காரணங்களைத் தவிர்த்து ஆறாவதாக ஒன்று பிரெஞ்சு முடியாட்சியில் குருவப்பபிள்ளைக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

பதினைந்தாவது லூயி முடிசூடியிருந்தார். நன்மை பதினைந்தாம் லூயி வடிவில் ஏற்படவில்லை. அவரது சிறிய தகப்பபன் வடிவில் குருவப்பாவைத் தேடிவந்தது. பதினைந்தாம் லூயி பதவிக்கு வந்தபோது அவர் ஆறு வயது சிறுவனென்ற நிலையில் உருவான காபந்து அரசுக்கு பதினைந்தாவது லூயியின் சகோதரர் ஓர்லயான் பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கவனித்துவந்த பிரபு ஒருவர் பொறுப்பேற்கிறார். சிறுவனாக இருந்த பதினைந்தாம் லூயி பெயரளவில்தான் மன்னர். ஆட்சி உண்மையில் ஓர்லயான் பிரபுவின் கைக்குள் இருந்தது. ஆட்சித் தலமைக்கு வருகிற எவரும் தமது முந்தைய ஆட்சியில் செயல்பாடுகளை முந்த வேண்டுமென நினைப்பதும், தமது ஆட்சி முந்தய ஆட்சிக்கு மேம்பட்டதென்கிற கருத்தினை மக்களிடம் ஏற்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதும் இயல்பு. அவ்வாறே ஓரலயான் பிரபுவுக்கும் தமது பெரிய தந்தையார் செய்தவை விவேகமற்ற செயல்கள், அநீதிகள். எனவே அரசியல் அமைப்பை திருத்த வேண்டும், மக்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தந்து சமூகத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென நினைத்து மும்முறமாக செயல்பட்டார்.

குருவப்பா விண்ணப்பத்தை பரிசீலித்த மன்னரின் ஆலோசனை சபை 1718ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம்தேதி  முழுமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. அத்தீர்மானம் நைநியப்பிள்ளை வழக்கில் வாக்குமூலங்கொடுத்த சாட்சிகளை மறு விசாரணை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

இராண்டாண்டுகாலம் நீடித்த மறுவிசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்தார்கள். 1720ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தது. நைநியப்பிள்ளை குற்றமேதும் இழைக்கவில்லை அவர் தண்டிக்கப்பட்டது தவறு என்றதில் கூறப்பட்டிருந்தது.  அரசு தரப்பில் அதற்குரிய இழப்பீட்டைத் தரவேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

நைநியப்பிள்ளையின் சொத்துக்களை ஏலம் போட்டுக் கிடைத்த 10060 வராகன்களை தமது கருவூலத்தில் பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் சேர்த்துக்கொண்ட நாள் முதல் பத்து சதவீதம் வட்டியுடன் சேர்த்து அசலையும் வட்டியையும் நைநியப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு செலுத்தவேண்டும் அது தவிர நைநியப்பிள்ளை குடும்பத்திற்கு ஏற்படுத்திய அவமரியாதையை  சீரமைக்கும் வகையில் அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 20000 வராகன் கூடுதலாக தரவேண்டுமென்ற உத்தரவு ம் முடியாட்சியிடமிருந்து புதுச்சேரி கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு வந்தது.

குருவப்பா பிள்ளை தம் முயற்சியின் பலனை முழுவதுமாக அனுபவித்தார் என்றே சொல்லவேண்டும். செவாலியே பட்டத்தையும் அவருக்கு பிரெஞ்சு அரசாங்க சூட்டி மகிழ்ந்தது. பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் முடியாட்சியின் உத்தரவுப்படி அவரது தந்தையின் தரகர் பதவிக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட கனகராய முதலியாரை தரகர் பதவிலிருந்து நீக்கி அப்பதவிக்கு குருவப்பா பிள்ளையை நியமனம் செய்தது.  தரகர் பணியோடு தபலியோம் (Registrar) வேலைக்கும் அவரும் அவர் சகோதரர்களும், வாரிசுகளும் தலைமுறைதலைமுறையாய் சாசுவதமாகின்றார்கள் என்றும் அந்த நியமன அறிக்கை தெரிவித்தது.

ஆக நைநியப்பிள்ளை மீது பழிசுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர் மகன் குருவப்பா பிள்ளை பிராயச்சித்தம் தேடினார் என்பது உண்மைதான். பிரெஞ்சுக் காரர்களின் நீதிக்குறித்தும் இவ்வழக்கின் அடிப்படையில் இக்கட்டுரையினைப் படிக்கின்ற நண்பர்கள் வியந்தோதக்கூடும். ஆனாலுங்கூட உங்களில் ஒரு சிலருக்கு காலனி அரசுகளின் மனப்பாங்கினை அறிந்தவர்களென்ற வகையிலும், பிரெஞ்சின் முடியாட்சியில் சேசு சபயினருக்குள்ள செல்வாக்கை இக்கட்டுரையிலேகூட  ஏற்கனவே வாசித்திருக்கின்ற வகையிலும் சில கேள்விகள் இருக்கலாம்.

நைநியப்பிள்ளைக்கு பதிலாக வேறு தரகர் நியமனம் செய்யப்படவிருந்தபோது ஒரு கிறுஸ்துவரே தரகராக நியமனம் செய்யவேண்டுமென்று கறாராக இருந்த சேசுசபயினர் -(நைநியப்பிள்ளை இடத்திற்கு நியமிக்கப்பட்ட கனகசபை ஒரு கிருஸ்துவர் என்றும் ஏற்கனவே கூறியிருந்தோம்.)- எப்படி குருவப்பபிள்ளை என்ற இந்துவை தரகராக நியமனம் செய்ய சம்மதித்தார்கள் என்பது முதலாவது கேள்வி

பிரெஞ்சு காலணி அரசாங்கத்திற்கு நியாயத்தை வழங்குவதில் அப்படியொரு அக்கறையா? என்பது இரண்டாவது கேள்வி.

நன்கு யோசித்திருப்பீர்களெனில் இரண்டுக்கும் விடையொன்றுதான். அந்த விடையை ஊகிக்க முடிந்தவர்களில் ஒருவராக   நீங்கள் இருப்பீர்களென நம்புகிறேன். உங்கள் ஊகம் சரி. அறமும் நெறியும் சம்பத்தையோ குபேர பலனையோ அழைந்துவந்ததாக கதைகளில் படிக்கலாம் ஆனால் வரலாற்று உண்மை என்பது வேறு. குருவப்பாபிள்ளை தந்தைக்காக நீதியை நிலைநாட்ட பிரான்சுக்குப் பயணித்தபோது ஆறுகாரணங்கள் இப்பகுதியின் தொடக்கத்தில் ஊகங்களாகச் சொல்லப்பட்டிருந்தன. அந்த ஆறுகாரணங்களையும் கடந்து நீதி தமக்குக் கட்டாயம் வழங்கப்படும் என்பதற்கு ஏழாவதாக ஒரு காரணத்தை தனயன் குருவப்பாபிள்ளை வைத்திருந்தார். அக்காரணம் கிருஸ்த்துவத்தை தழுவுவதென்று அவரெடுத்த முடிவு. பிரான்சுக்குச்சென்றதும் அவர் செய்த முதல்வேலை கிருஸ்துவராக மாறியது. அவரது ஞானத் தந்தை ஒர்லயான் பிரபு, ஞானத் தாயார் இளம் வயது அரசரின் (பதினைந்தாம் லூயியின்) தாயார். ஆக இந்தப் புதிய தகுதி பிரெஞ்சு நீதியின் கதவுகளை திறக்க வழிகோலின. தந்தை நைநியப்பிள்ளைக்கு தனயன் குருவப்பாபிள்ளை கிருஸ்துவத்தைத் தழுவி நீதியை நிலைநாட்டிவிட்டார்.

பி.கு. குருவப்பா பிள்ளையின் இறப்புக்குப்பிறகு கனகராயமுதலியார் தரகராக நியமிக்கபடுகிறார். அவருக்குப்பின் குருவப்பாபிள்ளையின் மைத்துனர் திருவேங்கிடம்பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப்பிள்ளை தரகராக நியமிக்கப்பட்டார். இவர் நைநியப்பிள்ளை வழிவந்தவரல்ல. குருவப்பா பிள்ளைபோல மதம் மாறி தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டவருமல்ல. நவீன தமிழில் பிழைக்கத் தெரிந்தவர் என்பதற்கு ஆனந்தரங்கப்பிள்ளையென பொருள்கொள்ளலாம். சாதுர்யமான எஜமான விசுவாசமும், தரகுத் தொழிலில் அவருக்கிருந்த திறனும் சேசுசபையினரையே வாயடைக்கச்செய்திருந்தது.

—-

மொழிவது சுகம் டிசம்பர் 15

காந்திஎன்றகுறியீடு

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் வசிக்கின்ற Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறந்தார்கள். வொரெயால்(Voreyal) தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் எனக்கு அறிமுகமானவர். வருடந்தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து வருகிறவர். இவ்வமைப்பு தமிழ்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் தமிழ் கற்று வருகின்றனர். வொரெயால் தமிழ் அமைப்பு நடத்தும் பொங்கல் நிகழ்ச்சியில் தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பெறும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை தமிழ் கற்கும் வாய்ப்புகள் மங்கிய சூழலில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்களை வணங்க வேண்டியிருக்கிறது. நண்பர் இலங்கைவேந்தன்,  பாரீஸில் காந்திக்கு சிலைவைக்க முயற்சிகளெடுத்து அதில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இருமாதங்களுக்கு முன்பு சிலை திறக்க யாரை அழைக்கலாமென என்னிடம் யோசனைக் கேட்டார். எனக்கு இன்றைய தேதியில் முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர்கள்  இல்லை என்பதை வற்புறுத்தினேன் .  தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் என நம்பப்படுகிறவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன். இந்தியா சென்றதும் அவர்களைச் சந்தித்து பேசுவதாக என்னிடத்தில் கூறினார். அவ்வாறு அவர் செய்யவில்லை, இந்தியாவிலிருந்து திரும்பியபிறகு என்னைச் சமாதானபடுத்தும் வகையில் சில காரணங்களைக் கூறினார். அதை நான் வேறுவிதமாக ஊகித்தேன்: காந்தி சிலையை நிறுவ உழைப்பு பொருள் இரண்டும் தேவைபட்டன. உழைப்பை தர முன் வரலாம்,  ஆனால் பொருட்தேவையை ஓரளவுதான் சுமக்க முடியுமென்ற நிலை. இது எல்லோருக்கும் நேர்வதுதான். மீன் விற்றாலென்ன காசு நாறாதில்லையா?  சுமையை பகிர்ந்துகொள்ளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தேவையாக இருந்தனர். எனவே அவர்களை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எது எப்படியிருப்பினும் காந்தி முதன் முறையாக சிலை வடிவில் பாரீஸ் மண்ணில் கால் பதிக்க நண்பர் எடுத்த பெருமுயற்சி நனவாகியுள்ளது. வேறு இந்தியர்கள் சாதிக்காதது, பாராட்டுக்கள்.

இன்று காந்தி என்ற சொல் வணிகமொழியில் சொல்வதெனில் ஒரு விற்பனை குறியீடு. காங்கிரஸில் ஆரம்பித்து கசாப்புகடைவரை அவரவர் சரக்கினை விற்க முதலீடற்ற விளம்பரமாக காந்தி உதவுகிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்தியா துணைக்கண்டத்தைச்சேர்ந்த பலருக்கும் காந்தி உபயோகமாகிறார். இந்தியர்களோடு, பாகிஸ்தானியரும், வங்காள தேசத்தினரும், இலங்கையரும் மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெயரால் நடத்தும் ரெஸ்டாரெண்ட்டுகளில்  பிரியாணியும், முர்க்மசாலாவும், நான் கீமாவும், சிவப்பு ஒயினும், விஸ்கியும், பீரும் விலைபோகிக்கொண்டிருக்கின்றன.  அக்டோபர் 2ல் காந்தியை ஞாபகம் வைத்து சிலைக்கும் காந்தி சமாதிக்கும் தலைவர்கள் அஞ்சலி செய்ய மறப்பதில்லை.

நாம் இப்படியிருக்க அமெரிக்காவின் மார்ட்டின் லூதர்கிங்கில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டெலா, பர்மாவின் அவுன் சன் ஸ¥ கீ (Aung San Suu Kyi) போன்ற உலகறிந்த பெருமக்கள்- காந்தியைபோலவே பிறருக்காக தங்களை வருத்திக்கொள்கிறவர்கள் – காந்தியின் சீடர்களென சொல்லிக்கொள்வதில் நிறைவு காண்கிறார்கள். அன்னா ஹசாரே தம்மை காந்தியுடன் ஒப்பிடவேண்டாமென்கிறார்.  காந்தி இந்தியாவின் தேசிய அடையாளம், பாரம்பரிய சின்னம். காந்தியம் குறித்த விவாதங்கள் தேவைதான், ஆனால் காந்தி என்ற மனிதரின்  அப்பழுக்கற்ற நெறியும் அறத்தின் மீதான அவரது பிடிமானமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. எதையும் சந்தேகித்தே பழக்கப்பட்டவர்களிடம் நாம் விவாதிக்க ஒன்றுமில்லை. இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாததது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது.

புனைவும்நிஜமும்.

டேனி போயலின் Slumdog Millionaire தி ரை ப்படத்தில்வரும் சம்பவம் உண்மையாகியிருக்கிறது. சில நேரங்களில் எது புனைவு எது உண்மையென்று பிரித்துணரமுடியாமல் குழம்பிப்போகிறோம். இச்சம்பவம் அதற்கு ஓர் நல்ல உதாரணம். உண்மைசம்பவங்களின் அடிப்படையில் நாவல்களும், திரைப்படங்களும் வருவதுண்டு. ஆனால் புனைவு உண்மையாகுமா? நடந்திருக்கிறது நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சில் பங்குகொண்டு ஜெயித்திருக்கும் 26 வயது இளைஞனரான சுசில்குமார் என்ற இளைஞர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மோத்திஹரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிகிறாராம். ஒரு ஏழை விவசாயின் மகன் என்கிறார்கள். அவரது முன்னும்பின்னுமான வாழ்க்கையும் திரைப்படத்தை ஒத்திருந்ததா ஒத்திருக்குமா என்பது தெரியவில்லை.

காலபைரவன்

அந்நிய மொழிகளில்வரும் படைப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் வாசிக்கும் பழக்கமுண்டு. வாங்கிய வேகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமற்போன நூல்களையும் நிறைய வைத்திருக்கிறேன். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கிறபோதெல்லாம் தமிழில் இதைக்காட்டிலும் நல்லவாசிப்புகளை சந்தித்திருக்கிறேன் என்ற பெருமிதமும் இடைக்கிடை வருவதுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் உலகறிந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்காட்டிலும் மீசுரமானவை. அக்டோபர் மாத உயிரெழுத்தில் ‘விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்’ என்ற சிறுகதையை படித்தேன். காலபைரவன் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். சொல்ல வார்த்தைகளில்லை. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் முக்கியமானதொரு படைப்பு. இக்கதையை மீண்டும் நினைவுகூரும்வகையில் நவம்பர் மாதம் 14ந்தேதி பிரெஞ்சு தினசரியில் மர்செய் என்ற பிரதேசத்துக்கருகே நடந்ததாக ஒரு சம்பவம். இந்தியக்குடும்பத்தைசேர்ந்த நாற்பது வயது பெண்மணி புத்தி சுவாதீனமற்ற 6 வயது மகனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாள் என்பது செய்தி. காரணமும் காரியமும் நெருக்கமானவைதான் அந்த நெருக்கம நூலிழையாகவும் இருக்கலாம், பாரிய இடைவெளியாகவும் இருக்கலாம். முடிவின்றி காரணகாரியத்தை அறிவுகொண்டு புறத்தில் தேடுவது வானத்தைக் கைகொண்டு தொடும் முயற்சி. காலபைரவன் காரணகாரியத்தை மனித மனங்களுக்குள் தேடுகிறார்.

ஓடப்பரும்உதையப்பரும்..

1961ம் ஆண்டு அக்டோபர் 17 பிரான்சுநாட்டின் காலனிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த தேதி. பாரீஸ் மாநகரில் அமைதியாக ஊர்வலம்சென்ற அல்ஜீரிய மக்களில் பலர் பிரெஞ்சு காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைபடுத்தும் தேதி அது. கடந்தமாதம் அதனுடையைய ஐம்பதாவது ஆண்டு தினம். பொதுவாக காலனிய வரலாறென்பது ஆதிக்க சக்திகளின் அதிகார அடக்குமுறைகளாலும்  அடிமைபட்டநாடுகளின் அபயக்குரல்களைக்கொண்டும் எழுதப்பட்டது. எஜமானர்கள் எஜமானர்களாகவே இருக்கவேண்டுமா என்ன? அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் தலைநிமிர நினைக்கிறார்கள். அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கின்றன. காற்று திசைமாறுகிறது. ஓடப்பராயிருந்தவர்கள் உதையப்பர்களாக மாறுகிறார்கள், அதற்கான விலையையும் அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது. பிரான்சுநாட்டின் காலனிகளில் ஒன்றாக இருந்து விடுதலைபெற முயன்ற அல்ஜீரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அதுபோன்ற அநீதிகளின் சாட்சியாகவிருந்த நாட்களில் ஒன்றுதான் 1961ம் ஆண்டு அக்டோபர்மாதம் 17ந்தேதி. தேதியின் அடிப்படையில் பார்க்கிறபோது சம்பவம் ஒரு நாள் அடையாளத்தை பெற்றதைப்போல தோற்றம் தரினும் பின்புலத்தில் பல மாதங்களின் – அதாவது உண்மையில் ஆகஸ்டுமாதத்தின்  இறுதியில் தொடங்கிய பிரச்சினை அக்டோபர் இறுதிவரை நீடித்தது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அல்ஜீரியாநாடு பிரெஞ்சு காலனியாக இருந்துவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிநாடுகள் பலவும் விடுதலைபெறவிரும்பியதைபோலவே அல்ஜீரியமக்களும் விடுதலை பெற விரும்பினர். அவர்களை வழி நடத்த இரண்டு விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஒன்று தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale), மற்றொன்று அல்ஜீரிய தேசிய இயக்கம். இவை இரண்டினுள் முதல் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு இரண்டாவது இயக்கத்திற்கு. இவ்விரண்டு அமைப்புகளுக்கும் பிரான்சுநாட்டில் குடியேறியிருந்த அல்ஜீரிய மக்களிடை அனுதாபிகளிருந்தனர். தாய்நாட்டில் இவர்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தை புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தனர். இச் சகோதரயுத்தத்தில் ஏறக்குறைய 4000பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ராஜபக்ஷேபோலவே பிரெஞ்சு அரசாங்கமும் இந்த சகோதரயுத்தத்தை மறைமுகமாக கூர்தீட்டி விளைவை சந்தோஷத்தோடு ரசித்தது தேசிய விடுதலை முன்னணியின் ஆதரவுபெற்ற ஆல்ஜீரியாவின் தற்காலிக அரசாங்கத்திற்கு வேண்டிய நிதியை அவ்வியக்கத்தின் பிரான்சு நாட்டின் கிளையும்  பிரான்சு நாட்டில் வசித்துவந்த அதன் அல்ஜீரிய உறுப்பினர்களும் உதவப்போக இதை தடுத்து நிறுத்த நினைத்த பிரெஞ்சு அரசாங்கம் தனது ஆதரவுபெற்ற தேசிய இயக்கத்தைக்கொண்டு இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது. அல்ஜீரிய தேசிய முன்னணிக்கு எதிராக ஒர் பிரத்தியேக காவற் படையை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை முன்னணியின் அனுதாபிகளான ஆண்களும் பெண்களும் அவ்வப்போது இழுத்துசெல்லப்பப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரத்தியேக காவற்படையுடன் நேரடித் தாக்குதலில் தேசிய முன்னணி இறங்க இருதரப்பிலும் பல உயிரிழப்புகள். பிரத்தியேக காவற்படையின் ஒரு பிரிவினரும் பிரெஞ்சு இனவாதிகளும் ஒன்றுகூடி அல்ஜீரிய மக்களை தண்டித்தாக வேண்டும் என்கிறார்கள். மாவட்ட தலைமை நிர்வாகி இதை மறைமுகமாக ஆதரித்தாரென்ற குற்றசாட்டு. ஒரு பக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் மூர்க்கமான காவல் படை, எதிரணியில் பிரான்சில் வாழ்ந்துவந்த எழுத்தறிவற்ற அல்ஜீரிய மக்கள். ‘வன்முறைக்கெதிராக’ என்று தமது நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொன்ன பிரெஞ்சு அரசாங்கம் வன்முறையாளர்களைக் கொல்லவில்லை அப்பாவி அல்ஜீரியர்களைகொன்றது. விசாரணை என்ற பெயரிலே சித்திரவதை செய்தது. அடித்துக் கொன்றது. காரணமின்றி திடீர் திடீரென்று ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். பலரை பிரான்சிலிருந்து வெளியேற்றியது. இக்காலங்களில்  அப்படிக்கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 307பேரென்று சொல்கிறார்கள். அக்டோபர் 17 1961 அன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவித்து அல்ஜீரிய மக்களில் சுமார் இருபதாயிரம் மக்கள் ஊர்வலம் போகின்றனர் அவர்களுக்கு எதிராக பத்தாயிரம் போலிஸார் தாக்குதலில் இறங்கினர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரென எவரையும் பொலீஸார் விட்டுவைக்கவில்லை. அடிபட்டு வீழ்ந்தவர்கள் பல மணிநேரம் வீதிகளிலேயே கிடந்ததாக சொல்கின்றனர். சேன் நதியில் குதித்து தப்பியோடமுயன்ற்வர்கள் பலர் நதியில் மூழ்லிப்போனதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாக்குதலில் 30லிருந்து 50 பேர் இறந்ததாச் சொல்கிறது பத்திரிகையாளர்கள் குறைந்தது 200பேராவது இறந்திருக்கலாமென எழுதியுள்ளார்கள். அப்பாவிகளுக்கு நீதிகிடைத்ததாக வரலாறில்லை.

 புக்கர் பரிசு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில படைப்பிலக்கிய உலகில் புக்கர் பரிசு (மேன் குழுமம் சுவீகரித்தபிறகு மேன் புக்கர் பரிசு) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதை மறைமுகமாக விமர்சித்தவர்கள் பலரும் அதன் அங்கீகாரத்திற்கு ஏங்கினதென்னவோ உண்மை. ஆனாலின்று அப்புக்கர் பரிசுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் வந்திருக்கிறது. புக்கர் பரிசு தேர்வு குழு ஒரு படைப்பின் வாசிப்புத் தன்மையை(readability) பார்க்கிறதேயன்றி படைப்புத் திறனை பார்ப்பதில்லை என்பது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு.   போட்டி புக்கர் பரிசு ஒன்றை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புக்கர் பரிசுபோல காமன்வெல்த் நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில படைப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,  உலக நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் தங்கள் தேர்வு குழு போட்டிக்கு அனுமதிக்கும் என்கிறார்கள் புக்கர் பரிசு தேர்வுக்குழுவில் இலக்கியதுறை சார்ந்தவர்களும் அத்துறை சாராதவர்களும் இடம்பெற்றிருக்கிறார்களாம், ஆனால் இவர்கள் அமைக்கவிருக்கும் தேர்வுக் குழுவில் தொழில் முறை விமர்சர்கர்கள், எழுத்தாளர்கள், மொழிஅறிஞர்கள் மற்றும் இலக்கியதுறைசார்ந்தவர்கள் பங்குபெறுவார்களென்றும் இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும் அந்நோக்கம் ‘தெளிவுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமலும், மிகச்சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல்’ என்று சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்னொரு புக்கர் பரிசு பிறக்காமலிருந்தால் சரி.

நன்றி: அம்ருதா டிசம்பர் இதழ்

—————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-13:

நவம்பர் டிசம்பர் இரண்டுமாதங்களும் பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம். நகரங்கள் கிராமங்களென்ற பாகுபாடின்றி எங்கு பார்த்தாலும் விழாக்கால கோலாகலங்களில் பிரான்சு திளைக்கும். அக்காலங்களில் நவம்பர் கடைசிவாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முடிய நடைபெறுகிற  கிருஸ்துமஸ் கடைகளும் பிரசித்தம். இப்போதெல்லாம் உலகில் எல்லா நாடுகளிலும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளைப் பரவலாக பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்த்தாலும் ஸ்ட்ராஸ்பூர் நகர் கடைகளைபோல எங்கும் பார்த்திருக்கமாட்டீர்களென உறுதியாகச்சொல்வேன். இந்நகரமிருக்கும் அல்சாஸ் பிரதேசம் பல ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் வசமிருந்தது ஒரு காரணம்.

ஸ்ட்ராஸ்பூர் கிருஸ்துமஸ் கடைகளுக்கு 500 வயது. அதாவது முதன் முதலாக உலகில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளென்று திறக்கபட்டது இங்கேதான். கி.பி 1570லிருந்து வருடம் தோறும் கிருஸ்துமஸ் காலத்தில் இக்கடைகள் இயங்குகின்றன. பண்டிகைக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், பிரார்த்தனை பொருட்கள், வாசனை திரவியங்கள், உள்ளூர் கலை பொருட்கள் விசேடமான பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் ஆகியவை இக்கடைகளில் கிடைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வருடம்தோறும் நானும் ஒரு கடையை இங்கே திறந்து நடத்திவருகிறேன்.

பிரான்சின் பிற மாநிலங்களிலிருந்தும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்தும்  சுற்றுலா பயணிகள் ஏராளமாக இக்காலங்களில் ஸ்ட்ராஸ்பூர் வருகின்றனர். ஒளிவெள்ளத்தில் மூழ்கிய வீதிகளில் கூட்டத்தில் புகுந்து வெளிவருவது ஒரு சுகமான அனுபவம், நடுக்கும் குளிருக்கு இருக்கவே இருக்கிறது ‘Vin Chaud’ ம்   jus d’orange chaudம் (சூடான ஒயினும், சூடான ஆரஞ்சுபானமும்.)

——————————-