மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015

அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்jeyakanthan
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

 

ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.

 

ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.

 

குத்தர்கிராஸ்330px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது  வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.

இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117

 

ஆ. சுடப்பட்ட தமிழர்கள்

செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!

—————————————–

அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை

நீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷூவுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி மகனே மகனேண்ணு புலம்பினா, உங்க மன நிலை எப்படி இருக்கும். கடந்த ஒருமாசமா இந்த பிரச்சினை எங்கிட்டே இருக்கு. அரசமரம் பேசுமாண்ணு கேக்காதீங்க? நிலவில் கால் வைத்ததையும், அமெரிக்காவிலே ஜெய்ஹோ ஒலித்ததையுங்கூட ஆரம்பத்திலே ஒருத்தரும் நம்பலை, கற்பனையிலேதான் சாத்தியம்னு சொன்னாங்க. அதுமாதிரிதான் இதுவும். நாளைக்கு உங்களையும் எதாவது ஒரு மரம் தொட்டுப் பேசலாம், ‘சார், பத்து நிமிஷம் என் நிழலிலே நின்றிருக்கீங்க, 100 ரூபாய் ஆகுது, பில்லைப் பிடியுங்க”ண்ணு சொல்லலாம், முத்தொள்ளாயிரத்துலே வரமாதிரி, “எனக்கு வெட்கமா இருக்கும்மா, வேறு எங்கனாச்சும் உங்க காதலை வச்சுக்குங்கண்ணு’ கேட்டுக்கலாம். ஆக நம்புங்க, நம்பிக்கையிலேதான் எதிர்காலமிருக்கு, குடும்பமிருக்கு, கூட்டணியிருக்கு, அமைச்சர்பதவியிருக்கு.

பெயர் வேல் என்கிற வேலாயுதம். டில்லியைச் சேர்ந்த இரண்டு கணினியாளர்களுக்குச் சொந்தமான வாம்ப் நெட்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தில் பன்னூடகப் பிரிவில் வேலை. எண்11158, மாக்மில்லன் அவென்யூ, அப்பார்ட்மெண்ட் 10, லாஸ் ஏஞ்ஜெல்ஸ், கலிஃபோர்னியா, யு.எஸ்.எ. ங்கிற முகவரிக்குச் சொந்தக்காரன். காலையிலும் மாலையிலும் கீழ்த்தளத்தில் பாவாடைக் கட்டிய யானைபோல நிற்கிற ஆப்ரிக்க பெண்மணியையும், எனக்காகவே மட்டும் வாய் திறக்கிற அல்லது தேவகி சொல்வதுபோல என்னைப் பார்த்தால் மாத்திரம் குரைக்கிற அவளுடைய நாயையும் தவிர்த்து அமெரிக்க வாழ்க்கையில் பெரிதாக எனக்கு உபத்திரவம் எதுவுமில்லைண்ணுதான் சொல்லணும். எனக்கு சனிதிசை நடக்கிறதென்று மாதவன் சொல்கிறான். அதையே நண்பனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ரமேஷ் பண்டாரியிடத்தில் சொன்னபோது குதிரை கனைப்பதுபோல சிரித்தான். ஒருமாதமா தூக்கமில்லைண்ணு சொன்னால் நம்பமாட்டேன்கிறான். படுக்கை நோகிறது, பால் பழங்கள் கசந்துவிட்டன. தேவகிங்கிற எனது பிரியத்துகந்த காதல் மனைவியை தொடணுங்கிற கெமிஸ்ட்ரி இரத்தத்தில் இல்லை. நான் படிகளில் கால் வைக்கிற நேரமாக பார்த்து, ஹாய் சொல்லியபடி கதவைப் பூட்டுகிற பஞ்சாபி ஆண்ட்டியின் விசாலமான மார்புகள் குறித்த கவனமோ, அவளுடைய பிரெஞ்சு பர்ஃப்யூம் குறித்த பிரக்ஞையோ இப்படி எதுவுமில்லை.

இரண்டுமாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதென்று தேவகியும் மைனஸ் நானுமாக தீர்மானித்தோம். அதற்கு தேவகி இரண்டு காரணங்களை வைத்திருந்தாள். ஒன்று, அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து நான்கு ஆண்டுகளாக ஆகியிருந்தது, இரண்டு,” அப்பாவும் அம்மாவும் பேரனைப் பார்க்கணுமென்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்”. எனக்கும் அதுபோல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “மருமகனுக்காக நம்ம பெரியாண்டவர்கிட்டே நேந்துகிட்டிருக்கேன், எப்போ அமெரிக்காவிலிருந்து வர, அவனுக்கு முடியிறக்கி காதுகுத்தணும்’ என்று கடிதங்கள் தோறும் வற்புறுத்துகிற அக்காள். இரண்டு, “தனது அமெரிக்க வாழ்க்கையை சிநேகிதிகளுக்கும், உறவினர்களுக்கும்” காட்டியாகணுமென்ற தேவகியின் ஆசை. ஆக இந்த கடைசி விருப்பமே ஊருக்குபோவதென்கிற எங்கள் முடிவுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும். அப்பா அம்மா இறந்த பிறகு, எங்கள் தாய்மாமாக்களில் ஒருவரை மணந்து எங்கள் கிராமத்திலேயே குடியிருந்தவள் எனது தமக்கை. என்னை படிக்கவைத்தது, சீராட்டியது எல்லாமுமாக இருந்து கவனித்துக்கொண்டதுன்னுஅக்காவைக் கொண்டாட வண்டி வண்டியா காரணங்களிருக்கு. ஆக இந்தியப் பயணம் முடிவானதும் தேவகிக்கு ரொம்ப சந்தோஷம், புறப்படுவதற்கு முன்னால அவசரம் அவசரமா விக்டோரியா பெக்காம் ஸ்டைலில் பாப் வெட்டிக்கொண்டாள். பிரெஞ்சு ஃபேஷன் புத்தகங்களை வரவழைத்து வாசித்தாள், ஆங்கில உச்சரிப்பில் அமெரிக்கர் டிக்ஷன் வருமாறு பார்த்துக்கொண்டாள். “உங்க வீட்டு வழக்கப்படி அருணுக்கு பெரியாண்டவர் கோவிலில் மொட்டைபோட்டு காது குத்தி கிடாவும் வெட்டுவோம், நான் வேண்டாங்கிலை ஆனா என்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதிகளுக்கும் எங்கனாச்சும் ஸ்டார் ஓட்டலில்தான் டின்னர் ஏற்பாடு பண்ணனுமென்றாள். அவளுடைய அப்பா தலையைவிட என் தலை நன்றாக ஆடுகிறதென்று அவள் வழங்கியிருந்த பாராட்டுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்பதால் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன்..

முதல் ஒரு வாரம் சென்னையில் கழிந்தது. மறு வாரம் திட்டமிட்டப்படி கிராமத்துக்குப் புறப்பட்டோம். ஏற்பாடு செய்தபடி பெரியாண்டவருக்குப் படைத்து முடி இறக்கி, உள்ளூர் காசி பத்தரைக் கூப்பிட்டு குழந்தைக்கு காதும் குத்தினோம். அந்த மகா மகா இரவு வந்தது. அரசமரத்தடியிலேயே வெகு காலத்திற்குப் பிறகு கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்துவிட்டேன். மாதவன் துணைக்குப் படுக்க வருகிறேன் என்று சொன்னவன், வரவில்லை. திண்டிவனம்வரை போயிருப்பதாகச் சொன்னார்கள். “தனியாக, பனியிலே இப்படி திறந்த வெளியிலே ஏன் படுக்கணும்? உள்ளே வாங்க”, என்றாள் தேவகி. முகத்தைப் பார்த்தேன், இந்த நான்காண்டுகால தாம்பத்யத்தில் தேவகியிடமிருந்து இதுபோன்ற சொல்லாடல்களை அறிந்ததில்லை. “கயிற்று கட்டில், அரசமரம், துணைக்கு நீயும்னா அந்த காம்பினேஷன் இன்னும் ஜோராகவிருக்கும்,” என்றேன், அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும், தலையில் கொட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.

எத்தனை மணிநேரம் தூங்கி இருப்பேனோ தெரியாது. வேலு, வேலு என்று அழைப்பதுபோல இருந்தது, சட்டென்று விழித்துகொண்டேன்? சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும்? நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கின்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா?” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ? என்று நினைத்தேன். “தெரியலை!, தைரியமிருந்தால் முன்னாலே வா”, என்றேனேத் தவிர, உண்மையில் பயந்துபோயிருந்தேன். ஒருவேளை பேசுவது பெரியாண்டவராக இருக்குமோ? என்ற சந்தேகமும் வராமலில்லை. என மனத்திலிருப்பதை குரலுக்குடைய ஆசாமி புரிந்துகொண்டிருக்கவேண்டும். “என்ன யோசனையிலே மூழ்கிட்டே, அரசமரந்தான் பேசறேன்”, என்றது மீண்டும் குரல். இப்போது நிலவை முழுதுமாக மேகம் மறைக்கத்தொடங்கி, எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது.

“வேலு! நீ என்னோட பிள்ளை. இம்முறை குரல் எனது தலைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது.” அதற்கென்ன இருந்துட்டு போறேன்.” “இல்லை நான் சொல்றதை நம்பணும்”, “சரி சரி நம்பறேன், அதுக்காக மாசம் ஆயிரம் டாலர் எனக்கு அனுப்பிவைக்கணுமென்று கேட்டுவிடாதே”, என்றேன். அரசமரம் சிரிப்பதுபோல காற்றில் கிளைகளை அசைத்து சலசலத்தது. ஊருலே பலரும் கேலி பேசியிருக்காங்க. அக்கா பிறந்ததுக்கப்புறம் வெகுகாலம் ஆண்பிள்ளை இல்லைங்கிற கவலையில் அம்மாவும் அப்பாவும் வாட்டத்துடன் இருந்ததாகவும், அம்மா பிள்ளை வரங்கேட்டு அரசமரத்தை சுற்றியதாகவும் பேச்சுகளுண்டு. அதற்காக அரசமரத்தை அப்பாண்ணு சொன்னா எப்படி. எனது அம்மான்னு இல்லை, இந்தியாவுல தெருவுக்கு இப்படி பத்துபேராச்சும் தேறுவாங்க. “உன்னை பெற்றது அரசமரந்தான், உங்க அப்பனில்லை”, என்று என் காதுபட சிலர் பகடிபேசியிருக்கிறார்கள். அதற்காக அரசமரம் என்னிடம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே! மகனே! என்று குரல்கள்.

காலையில் வெகுநேரம் உறங்கியிருந்தேன். கண்விழித்தபோது தேவகியும், அக்காளும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். “அருண் எங்கேயென்று கேட்டேன். ‘ தாத்தா தூக்கி போயிருக்கார். வடக்கு வெளி பக்கம் போயிருக்கணும், என்ற அக்காள், தொடர்ந்து ” உன் உடம்பு அனலா கொதிச்சுது, நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். அரசடியிலே எதுக்காக படுக்கபோன, அங்கே காத்து கருப்பு நடமாடுதுண்ணு சொல்லிக்கிறாங்க”, என்று புலம்பினாள். “பயப்படாதக்கா, நானென்ன சின்ன சின்னகுழந்தையா?”, என்று எழுந்தவன் பல்துலக்கிக்கொண்டு தேவகிக் கொடுத்த காப்பியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, எதிர்பட்ட மாதவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அங்குதான் போனேன். இரவு சம்பவம் என்னை முழுதாக மாற்றியிருந்தது. நேற்றைய இரவின் சுவடின்றி அரசமரம் பிரமாண்டமாக நின்றுகொண்டிருந்தது. அடிமரத்தில் ஆங்காங்கே முதுமையின் தளர்ச்சி. கிளைகளும், கணுக்களுங்கூட உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற கிழட்டு சிங்கத்தினைபோல பரிதாபமாக இருக்க, நான் முதன் முறையாக அதை அக்கறையோடு பார்த்தேன். .

– மாதவா என்னடா இது, அரசமரம் ஏன் இப்படி இருக்கு, யாரும் கவனிக்கிறதில்லையா?

– கவனிக்கதான் செய்யறாங்க, வயசாச்சில்லையா. அநேகமாக அடுத்தமுறை நீ வருகிறபோது இருக்காது, வெட்டி அப்புறபடுத்திட்டு, புதுசா நடபோறாங்க.

– அதைத் தடுக்கணுமே.

– எதுக்கு?

– இந்த மரத்துக்கும் எனக்கும் உறவு இருக்குது.

மாதவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். உனக்கு ஒண்ணும் ஆகலையே.

– ராத்திரி இங்கே கட்டிலைப்போட்டு படுத்திருந்தேன், கனவா உண்மையில் நடந்ததாண்ணு தெரியலை. அரசமரம் என்னை தன்னோட பிள்ளைண்ணு சொல்றமாதிரி குரலைக் கேட்டேன்.

மாதவன் முதலில் நான் சொன்னதெதையும் விளங்கிக்கொள்ளாதவன்போல அமைதியாக என்னைப்பார்த்தான். சட்டென்று கைகள் இரண்டையும் உதறி உதறி நிறுத்தாமல் குனிந்து, குனிந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தான். ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த இரண்டொரு பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். .

– டேய் நீ இப்படி சிரித்தால், எனக்குக் கோபம் வரும், நீ நம்பணுங்கிறதுக்காக நான் சொல்லலை.

– அரசமரம் உன்னிடம் பேசியதாகவே இருக்கட்டும் அதற்கென்ன? போயுட்டு ஆகவேண்டிய வேலையைப்பார்ப்பியா. இந்த லசணத்துலே அமெரிக்காவுலே வேற இருக்க. பொண்டாட்டியோட நாலு எடம் சுத்திபார்த்துட்டு நல்லபடியா ஊரு போய்ச்சேரு.

– இல்லைடா, இந்த மரத்த வெட்டாம தடுக்கணும். அதற்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.

– போடா பைத்தியக்காரா. நாமல்லாம் சொன்னா ஒருத்தரும் இங்கே கேக்கமாட்டாங்க. நாட்டாமை வீட்டு சூளைக்கு மரம் தேவைபடுது, மரத்துக்கு வயசாச்சுங்கிறது ஒரு சாக்கு.

அதற்குப் பிறகு ஊரிலிருந்த இரண்டு நாட்களும் அரச மரத்தடியில்தான் எனக்குப் படுக்கை என்றானது. எனக்கும் அரசமரத்துக்கும் விடிய விடிய பேச நிறைய இருந்தன. மாதவன்போல உங்களுக்கு என்மீதான அபிப்ராயம் எதுவானாலும் இருக்கட்டும், அரசமரத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பதில் திடமாக இருந்தேன். எனது அம்மாவின் ஒழுக்கத்தையும், திருமணம் என்கிற பந்தத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிற தந்தை மகன் உறவுபற்றிய சமூகக் குறியீட்டையும் கேள்விக்குட்படுத்தலாம் என்ற சிக்கலையும் தாண்டி அரசமரத்தை முழுக்க முழுக்க நம்பினேன்.

* * * *
சோதனைச் சாலையில், மூன்று நாட்கள் கழித்து வரச்சொல்லியிருந்தார்கள். எனக்கு முதல்நாள் இரவிலிருந்தே தூக்கமில்லை, அதிகாலையில் பச் என்று கன்னத்தில் பாதி காதில்பாதியென்று தேவகி முத்தமிட்டும், தள்ளி படுக்கத்தான் தோன்றியது. காலையிலிருந்தே அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. எப்போது மாலை மணி நான்கு ஆகுமென காத்திருந்தேன். பண்டாரி இருக்கையில் இல்லாதது சௌகரியமாக இருந்தது. அவனுடைய காரிதரிசி அல்போன்ஸா இருக்கிறாளாவென்று எட்டிப் பார்த்தேன், நாற்காலி பக்கவாட்டில் திரும்பிக்கிடந்தது. டாய்லெட்டில் சலசலவென்று சத்தம், உள்ளேதான் இருந்தாள், அவள் வெளியிலிருந்தால்தான் ஆச்சரியம். புறப்பட்டுவிட்டேன். பெவெர்லி ஹில்ஸின் பிரதான சாலையைப் பிடித்து, ஹோஷ் அவென்யூவூக்குள் நுழைந்து, காரை நிறுத்த இடம்தேடியபொழுது, புல்வெளிக்கு இரப்பர் குழாய் மூலம் நீர் பீய்ச்சியபடியிருந்த லத்தீன் அமெரிக்க பெண்ணொருத்தி, ஹாய் என்றாள். தொங்கலில் தெரிந்த ஃப்ரோபேஸ் ஜெனெடிக்ஸ் விளம்பரப் பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, படபடக்கும் இதயத்துடன் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் வியர்த்துக் கொட்டியது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கவும், வரவேற்பிலிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் வந்த காரணத்தைத் தெரிவித்தேன். என் கையிலிருந்த தாளை வாங்கிப்பார்த்தாள், பின்னர் கணினித் திரையைப்பார்த்தபடி, கடகடவென்று விசைப்பலகையில் எனது கோப்புக்குரிய எண்ணை விசைப்பலகையில் தட்டினாள். பரிசோதனை முடிவின் அறிக்கை வந்திருக்க வேண்டும். உதட்டைச் சுழித்துக்கொண்டு ‘எஸ்’ என்றாள். பின்னர் குனிந்து வரவேற்பு மேசையில் வலப்பக்க இழுப்பறையில் தேடியெடுத்த உறையை என்னிடத்தில் நீட்டினாள். கையில் வாங்கிக்கொண்டேன். அவசரமாக உறையைக் கிழித்து அறிக்கையை வாசிக்க, ‘எக்யூஸ்மி’ என்று எனக்குப் பின்புறம் ஒரு குரல். ஒதுங்கிச் சென்று அங்கு வரிசையாய்ப்போட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து நிதானமாக அறிக்கையை வாசித்தேன். உறவுமுறைக்கான சாத்தியம் 0% என்று சோதனை அறிக்கையின் முடிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் வரவேற்பு மேசை பெண்ணிடம் சென்று நின்றேன். அறிக்கை தயாரித்தவரை பார்க்க வேண்டுமே என்றேன். கூப்பிடுகிறேன், கொஞ்சம் உட்காருங்கள் என்றாள். மிகவும் பதட்டமாக இருந்தது. தேவகியிடம் அனைத்தையும் சொல்லி இருக்கலாமோவென தோன்றியது. வீடு பக்கத்தில்தான் இருக்கிறது, அருண் தூங்கிக்கொண்டிருப்பான். அநேகமாக இந்நேரத்தில் இணையத்தில் ஏதேனும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது சமையல் குறிப்புகள் எழுதிவைத்துள்ள நோட்டை புரட்டியபடி இன்றிரவுக்கு என்ன சமையல் செய்யலாமென அவள், யோசித்துக் கொண்டிருக்கலாம்.

– மிஸ்டர் வேல்! என்ற குரலைகேட்டு எழுந்தேன். ஜான் மாத்யூவென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் என்னிடம் கை நீட்டினான், புரிந்துகொண்டு எனது கையை நீட்டினேன். கைகுலுக்கியபடி, பார்வையால் தனது அறையைக் காட்டிவிட்டு முன் நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்து நடந்தேன். இருக்கையில் அமர்ந்ததும் என்னை அமரச்செய்தான். அவனுடைய கையில் எனக்கான சோதனை அறிக்கையின் மற்றொரு படி இருந்தது. உங்க தாத்தா மரபணுமீது நடத்தப்பட்ட Y குரோமோசோம் சோதனையின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் உறவு இல்லைண்ணு முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், இம்முடிவுகள் நீங்களாகக் கொடுத்திருந்த மாதிரி உயிரணுக்களிலிருந்து உருவானது. இம்முடிவுலே வேறு சந்தேகங்களிருந்தால் சொல்லுங்கள் முடிந்த அளவு விளக்குகிறேன்,” என்றான். “இல்லை, எதுவுமில்லை, புறப்படறேன். நன்றி. என்று அவனிடம் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றேன்.வெளியில் வந்ததுபோது தலை பாரமாக இருந்தது.

அன்றிரவு தேவகியின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. முதன் முறையாக அவளது மறுப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஒருவார விடுமுறையில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகச் சென்றுவருவதென்பதில் உறுதியாக இருந்தேன்.

* * * * *

சென்னையில் விமான நிலையத்தில், மதியம் ஒருமணிக்கு இறங்கி சுங்க இலாக்காவினரின் சோதனைளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியில்வந்தபோது மாதவன் காத்திருந்தான்.

– அக்கா, மாமா வரலையா?

– இல்லைடா. முதலில் அவங்க வருவதாகத்தான் இருந்தது. நெல்லறுப்பு வச்சிருக்காங்க களத்து மேட்டுலே காவல் இருக்கணும். நீ போயிட்டு வந்திடுண்ணு சொன்னாங்க. நானும் சரிண்ணு சொல்லிட்டேன். ஏது உங்க மாமியார் வீட்டுக்குப் போகாம இந்த முறை நேரா நம்ம கிராமத்துக்குப் போகத் துடிக்கிற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே, என்றவனிடம், காரணத்தை ஊருலே போய் சொல்றேன், உன்னிடத்திலா மறைக்கப் போறேன், என்றேன். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்தை அடைந்திருந்தோம்.

‘தம்பி இருந்து காப்பித் தண்ணி குடிச்சுட்டுப்போயேன். எங்கே அத்தனை அவசரமா போற”, என்ற அக்காவின் குரலை காதில் போட்டுகொள்ளாமல் புறப்பட இருந்த மாதவனிடம், “ஆறுமணிக்கெல்லாம் அரசடியிலே வந்திடு பேச நிறைய இருக்கிறது என்றேன். “எந்த அரசடி?” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது? பெரியாண்டவர் கோவில் அரசடியைத்தான் சொன்னேன்”, என்றேன். “சரி சரி அதற்கென்ன வந்துட்டாப் போச்சு”, என்றவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவன்போன பிறகு அக்காள் வெநீர் வைத்துக்கொடுக்க குளித்து முடித்தேன். பிறகு காப்பி வந்தது, குடித்தேன். பயண அலுப்பு இருக்குமில்லையா, கொஞ்சம் படுக்கிறது. நாளைக்கு வேணா செய்யவேண்டியதை பார்க்கிறது, என்ற அக்காவிடத்தில், இல்லைக்கா, மாதவனைத்தான் பார்க்கணும் வேறு ஜோலிகளில்லை, வந்திடுவேன் என்று கிளம்பிப்போனேன்.

அரசமரமின்றி பெரியாண்டவர்கோவில் வெறிச்சோடி கிடந்தது. பழைய மரத்தை வெட்டி, குழியைப்பறித்து, வேர்களை சுத்தமாக அகற்றி மண்ணிட்டு நிரப்பி இப்போது அந்த இடத்தில் வேறொன்றை நட்டிருந்தார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம்.

– என்னடா, அரசமரம் இல்லையென்றா அப்படி பார்க்கற. இன்னும் பத்துவருடத்திலே தளதளண்ணு இது வளர்ந்து அந்த இடத்தை பிடிச்சிடப்போவுது..

– இல்லைடா பழைய மரம் எங்கப்பா மாதிரி..

– ஆரம்பிச்சிட்டியா, மாதிரியாவது பாதிரியாவது, உங்கப்பனை எரிச்ச இடத்துலே புதர் மண்டிகிடக்கு, அதை பார்க்கறதுக்கு இல்லை. அரசமரத்தை அப்பண்ணு சொல்லிகிட்டுத் திரியறான்.

– இந்த ஒரு மாதத்துலே நான் இரண்டாவது முறையா இந்தியாவுக்கு வரக்காரணமே அரசமரந்தான். அரசமரந்தான் பேசுச்சோ, இல்லை அது என்னுடை சொந்தக் கற்பனையோ. இந்த இடத்துலே அந்த இரவுலே எனக்கென்று சில உண்மைகள் சொல்லப்பட்டிருக்கு, அந்த வார்த்தைகளை நம்பறேன். அதை உறுதிபடுத்திக்கத்தான் மீண்டும் வந்திருக்கேன். அது என்னண்ணு தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும்போலிருந்தது புறப்பட்டு வந்துட்டேன். அரசமரம் எனக்கு அப்பாவோ இல்லையோ, ஆனா எங்க தாத்தாவுக்கு நான் பேரனில்லை.

– எப்படி சொல்ற?

– Y-STR மரபணு சோதனைண்ணு ஒண்ணிருக்கு, அதை இங்கிருந்து கொண்டுசென்ற சாம்பிளை லேபில் கொடுத்து சோதிக்க சொன்னேன். அவர்களுடைய அறிக்கையின்படி எனக்கும் எங்க தாத்தாவுக்கும் உறவு இல்லை.

– நியாயமாப் பார்த்தா உங்க உங்க அப்பா, அம்மா, நீயென்று உங்கள் மூவருடைய உயிரணுக்களையும் சோதிச்சுதானே ஒப்பிட்டு பார்க்கணும்.

– அப்பாவும் அம்மாவும் இல்லாததால், தாத்தாவோட உதவியை நாடினேன். ஆனா அவர்கிட்டே உண்மையை சொல்லலை.

– உங்க அப்பா எரிச்ச இடத்துலே போயுட்டு ஒரு எலும்பை எடுத்தும்போறது.

– யார் எலும்பை எடுத்தும்போகச் சொல்ற? எங்கப்பாவை எரிச்சதுக்கபுறம் குறைந்தது நான்கு பேரையாவது அந்த இடத்திலே எரிச்சிருப்பாங்கண்ணு சொல்றாங்க

– சரி அதைவிடு, நீ இத்தனை பைத்தியகாரனா இருக்கிறாதால, நான் கேட்கிறேன்? உங்க அம்மா விஷயத்துலே உண்மை இல்லைண்ணு நம்பும் போது, உங்க பாட்டியை மட்டும் எப்படி நம்பறே, அவங்க உங்க தாத்தாவோட இல்லாம வேற ஒருவரோட உறவுவச்சிருந்து உங்கப்பா பிறந்திருந்தாகூடத்தான் உனக்கும் உங்க தாத்தாவுக்குமான மரபணு பொருத்தத்துக்குச் சாத்தியமில்லாம போகும். உயிரியல்வழி தந்தை உறவுமுறையை உறுதிபடுத்துவதேகூட 99.99 விழுக்காடுதான் சாத்தியமென சொல்கிறபோது எல்லாவற்றையுமே சந்தேகிக்கலாமே. பேப்பர்ல படிச்சேன், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த சோதனைகளை உணர்வின் அடிப்படையிலே பார்க்க்லை, சமூக பொருளாதார அடிப்படையிலே என்ன லாபம்னு அவங்க பார்க்கிறாங்க. ஏற்கனவே குடும்ப உறவுகள் கலகலத்துபோச்சு, இதுலே இது வேற.

* * * * *

இரவு உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிடமிருந்து சுருட்டு நாற்றம், உறக்கத்தை மேலும் சிக்கலாக்கியது. எழுந்து வெளியில் வந்தேன். திண்ணை முழுக்க அடர்த்தியாக இருட்டு, தாத்தாவின் இருப்பை அடையாளப் படுத்தும் பவானி ஜமுக்காளம், இருட்டுக்குப் பொட்டிட்டதுபோல தீக்கங்கு. .

– வா உட்கார்- ஜமுக்காளம் பேசியது.

– தாத்தாவுக்கு உறக்கம் வரலியா?

– இல்லை, ஆனா தேவைன்னா தானாவரும். அரசப்பன்கிட்டேயும் இதைத்தான் சொன்னேன். அவனும் ஒரு இராத்திரி இப்படித்தான் உன்னைப்போல தூக்கமில்லாம தவிச்சான். அர்த்தராத்திரியிலே எழுந்துவந்து உன்னைப்போலத்தான் கேட்டான்.

– அரசப்பன் யாரு?

– வேற யாரு, உன் தகப்பன்தான். உன்னைப் பெற்றவளைபோலவே உன் அப்பனைப் பெற்றவளும் பிள்ளைவரம் கேட்டு அரசமரத்தை சுத்தினவதான், பிறந்த பிள்ளைக்கு அரசப்பனென்று பேரும் வச்சாள். அந்தபேரையும் பிடிக்கலை ஊரையும் பிடிக்கலை புறப்பட்டு வந்துட்டோம்.

அன்றிரவு ஏதோ புரிந்ததுபோல இருந்தது. ஆனாலும் ஒரு கேள்வி மனதில் இன்றுவரை இருக்கிறது. தாத்தா சமாதானப்படுத்தியது அவரையா என்னையா?

——-

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் கதைகள் தொகிப்பிலிருந்து. பிற கதைகளை வாசிக்க இங்கே சொடுக்குக:http://www.pratilipi.com/nagarathinam-krishna/sirikkira-robovaiyum-nampakkuudathu

 

——

18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்

படைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.

உங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா? கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.

 

1. எழுதும் நேரம்

இரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது.  உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று.  மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்?) எனவே எழுதவேண்டும்.  ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்? இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார்? அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம்.  மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.

 

2.குரலும் தொனியும்

என்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது? இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார்? இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள்? கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.

 

“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

குறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது  கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது,  எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா? ஏன் முடியாது? ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:

 

“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு? என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்!’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

படர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

 

“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ?” ( மாத்தாஹரி – நாவல் )

 

இங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது? படைப்பாளியுடையதா? கதைநாயகிக்குரியதா? படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான்  நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.

 

3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.

புனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.

 

4. நாவலை நகர்த்துதல்

அதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.
——————————————————

இரண்டு கவிதைகள்

1. மீண்டும் மீளும் அந்தத் தெரு.

 
என்னுள் இருக்கும் அந்தத் தெரு
சோம்பல் முறித்த அதிகாலைக்கு
தேத்தண்ணி விநியோகிக்கும்

காசாம்பின் கைப்பட்ட இட்டலியை
சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு
மீன் குழம்பை அபிஷேகிக்கும்

குமரிகள் கைபட்ட
கூடுதல் சந்தோஷத்தை
ஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்
அவர்கள் இடுப்பை எச்சலிட்டு
குடங்களிற் பருவமாய்த் தளும்பும்

ரிக்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த
திண்ணைக் குழந்தையாய்
திடுக்கிட்டு அழும்

“சாமியேய் ஐய்யப்பா!”
விளித்த காற்றாய்
வீட்டு முற்றம்வரை வந்து விழும்

பாற்கார ரங்கனின் கைப்பிடியில்
குவளையா? குளம்படியா?
குழப்பாமாய் மிஞ்சும்

நாசி எழுப்பி,
வெல்லப்பாகில் பிறப்பெடுக்கும்
வேம்புலி நாய்க்கர் பொரியுண்டை
மெல்லப் பேசும் இனியவை நாற்பது

வாழ்க்கைப் பயணத்தின்
வழிச்செலவுக்குதவுமென
சிக்கனமாய்ச் சேர்த்த
சில்லறை காலைகள்
சந்தோஷத் திரியில்
பண்டிகை நாட்களில்
வெடித்துத் சிதறும்
சிவகாசி சிறுவர்களாய்

சூல்கொண்ட மனவுண்டியல்
உடைக்கப்படாமல்
எண்ணப்படும் நாள்களில்
மீண்டும் மீளும் அந்தத் தெரு….
__________________________________

2. . கனவிடைத் தோயும்
நாணல் வீடுகள்!

 

சருகுகளான ‘நினைவுகளில்’:
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப்
பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல், ‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் ‘பாட்டி’யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,
முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு
சிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு

நிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில் ‘வாடகைக்கு விடப்படும்’
பிறந்தமண் புது வீடு

கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும் அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் –
பால்காய்ச்சவும் அலையும் ‘இருப்பு’.
நாணல் வீடுகள் கனவிடைத் தோயும்

——

எழுத்தாளன் முகவரி -17: எழுத்தாள இரட்டையர்கள்

அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட எனது நியாயங்களின் அடிப்படையில், எனக்குத் தெரிந்த பிரெஞ்சில் மூல மொழியின் தொனியும் பொருளும் சிதைக்கப்படாமல் பிரெஞ்சுக்குக் கொண்டுபோனேன். பிரெஞ்சு பெண்மணி தனது பண்பாட்டுப்பின்புலத்தில் அதற்கு மேலும் மெருகூட்டினார். உரிய சொற்களில், உரிய வாக்கியமைப்பில் அதனைக் கொண்டுவந்தார். இருவரும் விவாதித்தே தொடக்கத்திலிருந்து இறுதிவரை பயணித்தோம். பிரெஞ்சு வாசிப்பில் மூல ஆசிரியரின் குரல் பிசிறின்றி ஒலிக்க, இருவரின் பணியிலும் பரஸ்பர நம்பிக்கை வைத்துப் பணிசெய்தோம்.

காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார், அவரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தபோது ” Zumla ‘ பதிப்பகம் அமபை சிறுகதை நூல் பற்றி பேசினார்கள். நூல் நன்றாக வந்திருக்கிறதென்று இணையதளத்தில் செய்திருந்த விளம்பரத்தைக் காட்டினார்கள், உங்கள் பெயர் முதலில் இருந்தது” எனக்குச் சந்தோஷம் என்றார். அம்பை சிறுகதைகளை வெளியிட்ட பிரெஞ்சு பதிப்பகம் எனது பெயரை முதலில் போடுவதற்கு என்ன காரணமென்பது தெரியாது, ஒருவேளைத் தற்செயலாககூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்பெயர் விஷயம் பிரச்சினையாகப் பட்டது. பிரெஞ்சு பெண்மணி எப்படி எடுத்துக்கொள்வாரோ என நினைத்தேன். அவரைத் தொலைபேசியில் பிடித்து விஷயத்தைச் சொன்னபோது அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “அது பிரச்சினையே இல்லை கிருஷ்ணா” எனப் பேசினார். இருந்தபோதும் எனக்கு உடன்பாடில்லை, அவர் பெயர்தான் முதலில் இடம்பெறவேண்டும் அதுதான் முறை என வாதிட்டு சம்மதிக்க வைத்தேன். பதிப்பகமும் ஏற்று, முதலில் அவர் பெயரையும் பின்னர் எனது பெயரையும் போட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனக்கும் இவ்விஷயத்தில் ஒரு நிறைவு. ஒரு பணியில் இருவர் சேர்ந்து செயல்படுகிறபோது இதுபோன்ற கொடுக்கல் வாங்கல்களைக் கடைபிடித்தாகவேண்டுமென நினைக்கிறேன். இருவரின் உழைப்பு உரிய பயன்பாட்டினை அளித்திட பரஸ்பர புரிதல்கள் இன்றியமையாதவை. தொடக்கத்திலிருந்தே எனது அபிப்ராயங்களை பெண்மணியும், அவரதுடைய கருத்துக்களை நானும் காதுகொடுத்துக் கேட்டோம். இருவருமே அதனதன் தகமைக்கேறப ‘சரி’ அல்லது ‘சரி அல்ல’ என்ற முடிவுக்கு வந்தோம். மறுப்புக்கு மாத்திரம் காரணத்தை முன்வைப்பதில்லை, ஏன் உடன்படுகிறேன் என்பதையும் தெளிவாக விளக்கி மின்னஞ்சல் எழுதுவேன். இது மொழிபெயர்ப்பு அளவில் மற்றொருவருடன் சேர்ந்து பணியாற்றியதில் எனக்கேற்பட்ட அனுபவம்.

 

இரட்டையர்களாக சேர்ந்து பணிபுரிவதை, நாதஸ்வரக் கலைஞர்களிடம் முதலில் கண்டிருக்கிறேன். ஒற்றை ஆளாக வாசிக்கிறபோது இல்லாத மிடுக்கு அவர்கள் இரட்டையர்களாகப் பேருந்தில் வந்திறங்குகிறபோது களைகட்டிவிடும். கர்னாடக இசைகச்சேரிகளில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்ற அடைமொழியுடன் பிரபலமான இசைகலைஞர்களைச் சந்தித்திருக்கிறோம். திரைத்துரையில் இந்தியிலும் தமிழிலும் இரட்டையர்கள் இசை அமைப்பாளர்களாகச் சாதனைப் படைத்திருக்கிறார்கள். சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், நடிகர்களும் உண்டு. லாரல்-ஹார்டி கூட்டணிபோல தமிழில் கவுணமணி- செந்திலும் வெற்றிபெற்ற இரட்டையர்கள். இரட்டையர்களாக பணிபுரிந்த இவர்களால் தனி ஆளாக ஒளிர முடிவதில்லை. ஒரு நிறுவனத்தில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமான, இலாபம் ஈட்டும் ஸ்தாபனமாக அதனை நடத்திக்காட்ட முடியும். அதற்கு உதவியாக சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன. மொழிபெயர்ப்பிலும் சாத்தியமாகலாம். ஆனால் வரம்பற்ற சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தும் படைப்புலகில் சாத்தியமா? எழுத்தாளன் இயற்கையாகவே சிந்தனைச் சுதந்திரத்தை வற்புறுத்துகிறவன். தனிமையை நாடுபவன். இங்கே இரட்டையர்களாக இயங்கும் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த இரட்டையர்களாக பிரே-ரமேஷ் சாதனை படைத்தார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு அது இயலாத செயல், இணைந்துப் பணியாற்தினாலும் எப்போது வேண்டுமானாலும் அந்த இருவர் கூட்டணி உடையக்கூடிய நிலமை. படைக்கும் படைப்பு தங்கள் தனித்தன்மையை முன்னிலைப்படுத்துவதில்லை என்றோ, இருவரில் ஒருவர் என்னால்தான் மற்றவருக்கு அடையாளம் கிடைக்கிறது எனும் எண்ணத்திற்கு இடம் கொடுக்க ஆரம்பித்தாலோ கூட்டணி முறிந்துவிடுகிறது, கூட்டணி மட்டுமல்ல அவர்களுடைய வெகுநாளைய நட்பும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

 

இரட்டையர் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட பிறகூட்டணிகளைபோலவே இணைப்பைப் பிணைத்திருக்கும் ‘நம்பிக்கை’ கயிறு வலுவுடன் இருக்கவேண்டும். இந்த நம்பிக்கை மற்ற நண்பரின் அல்லது நண்பியின் வேலைத்திட்டம், எழுத்தாற்றல், வினைத்திறன் ஆகியவற்றில் முழுமையாக நம்பிக்கையை ( அவரிடம் நாம் எதிர்பார்ப்பதை) வைப்பது. பணியை இருவருமாக பகிர்ந்து நிறைவேற்றல் என்பது பிறவற்றில் சாத்தியம் ஆனால் எழுத்தில் அவரவர் ஞானத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ பகிர்ந்துகொள்ளலாம், மொழி பெயர்ப்பில் சேர்ந்து பணியாற்றுகிறபோது இது போன்ற மனநிலையைத் தேர்வுசெய்தேன், படைப்புக்கு இது சரிவருமா என்று தெரியவில்லை. வரவேண்டும். அடுத்ததாக மேலே கூறியதுபோன்று எனது மொழி பெயர்ப்பு அனுபவத்தில் புரிந்துகொண்டது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. நான் எழுதுவதுதான் சரி இருவரில் ஒருவர் பிடிவாதம் காட்டினாலும் முடிந்தது உறவு.
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு எழுத்தில் கூட்டணி அமைத்துக்கொண்டால் வெற்றிக்கூட்டணியாக வலம் வர முடியும் எனச் சொல்கிறார்கள் மர்சியா முல்லெரும் (Marcia Muller), பில் புரோன்ஸினி (Bill Pronzini) என்பவரும். இருவருமே எழுதிக்குவித்த அமெரிக்கர்கள், பல பதிப்புகள் கண்டு பணமும் சம்பாதித்தவர்கள்; அவர்கள் எழுத்து Roman noir என பிரெஞ்சு படைப்புலகம் தீர்மானித்திருக்கிற பிரிவுக்குள் வருகிறது. தமிழில் அவற்றை ‘கறுப்பு புனைகதை’ என அழைக்கலாம். எழுத்தில் அகதா கிறிஸ்டியும் திரைப்படத்தில் ஹிட்ஸ்காக்கும் பிழிந்த சாறு. வெற்றிகரமான இரட்டையர்கள் என அழைக்கலாமா, அவர்களுக்குள் அத்தனை ஆழமான புரிதல் இருந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக நமக்குக் கிடைக்கும் பதில் அவர்கள் இருவரும் கண்வன் மனைவி என்ற உண்மை. இருவருமே தனித்தனியாகச் சாதித்தவர்கள். கணவர் மர்மக்கதை மன்னர் என்றால் அவருக்கு மூன்றாவது மனைவியாக ஜோடி சேர்ந்த (?) மர்சியா மர்மக்கதை அரசி .இவர்கள் எழுத்திற்கு இலக்கிய தகுதிகள் இல்லை என்கிறார்கள், எனினும், இரட்டையராக எழுதிச் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நமக்கு முக்கியம்.

 

அவர்களின் கருத்துப்படி “ஒருவர் தனித்து புனைவையோ புனைவு அல்லாத ஒன்றையோ எழுதும்போது பெறாத வெற்றியை, இருவர் சேர்ந்து சிறப்பாகச் செயபட்டால் பெற முடியுமாம். அப்படைப்பை ஒருவரின் எழுத்தென்றோ அல்லது குரலென்றோ சொல்லக்கூடாதாம், இருவரின் சிந்தனையிலும் எடுத்துரைப்பு உத்தியிலும் கலந்து உருவானதாம். தவிர தம்பதிகள் கூறும் மற்றொரு கருத்தும் இங்கே கவனத்திற்கொள்ளத் தக்கது. “இருவரும் சேர்ந்து ஆளுக்குப்பாதியாக பங்களிப்பைச் செகிறார்கள் என்ற வெகுசனக் கருத்திற்கு மாறாக இரு மடங்கு பங்களிப்பை” அளிப்பதாகத் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருவர் சேர்ந்து எழுதுவதில் எனக்குத் தெரிந்த பெரிய நன்மை தனிமைச் சிறையிலிருந்து எழுத்தாளன் பெறும் விடுதலை.

 
பேச்சாற்றல் கொண்ட பாரீஸ் தமிழ் நண்பர் ஒருவர், ” எழுத வேண்டுமென்று நினைப்பதாகவும் ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை” எனப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு முறை எனது வீட்டிற்கு வந்திருந்தபோது சென்னையில் அவருடைய நண்பர் ஒருவர் புத்தகம் போட்டதாகவும் அவருக்குப் போதிய நேரமில்லாததால் வேறொருவரைக்கொண்டு முடித்ததாகவும் அப்படி யாராவது இருந்தால் நானும் என்ன செலவாகுமோ அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், அப்படி யாராவது இருக்கிறார்களா?” எனக்கேட்டார். உங்கள் நண்பரையே கேளுங்கள் அவர் ஏற்பாடு செய்வார் எனக்கூறி அனுப்பிவைத்தேன். அவர் ஆசைப்பட்டதில் தவறில்லை. அநேகப் பிரபலங்களின் நூல்கள் இவ்வகையில்தான் வருகின்றன. சில பத்திரிகையாளர்கள், இரண்டாம் நிலை எழுத்தார்கள் மேற்குலகில் இதற்கெனவே இருக்கிறார்கள். அவர்களிடம் தங்கள் அனுபவங்கள், வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைபற்றிய குறிப்புகளைத் தந்து பிரபலங்கள் தங்களைப்பற்றி எழுதவைத்து அதில் தங்கள் பெயரையும் போட்டுக்கொள்வதுண்டு. வயிற்றுக்காக புகழ்ந்து பாடிய புலவர்களைப் பெற்றிருக்கும் நமக்கும் அதில் வியக்கவோ அதிர்ச்சிகொள்ளவோ நியாயங்கள் இல்லை. சங்ககாலத்திலும் சரி அதற்குப் பின்பும் சரி, பாடப்பட்டவர்களுக்குப் பிறர் எழுதியதை தனது பெயரில் வெளியிடும் ஆசை இல்லாதிருந்திருக்கலாம், அரசவை நடுவே அரங்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அப்பாடல்களுக்கு இருந்ததால் எழுதியவனைத் தவிர வேறொருவர் சொந்தங்கொண்டாட முடியாதச் சூழ்நிலை அப்போது இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது திரை மறைவாக எதையும் செய்யலாம். அரசியல், பணம், இலக்கியம் ஏதோ ஒன்றினால் அதிகார பலத்தைக் கைவரப்பெற்றிருந்து, அறம்பற்றிய உணர்வு மரத்துப்போயிருந்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் எழுத்தாளராகலாம். இதைத்தான் Gost writing என மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள். இங்கேயும் எழுத்தில் இருவர் பங்கேற்கிறார்கள். ஒருவர் எழுதுபவராகவும் மற்றவர் எழுதாதவராகவும் இருக்கிறார். அதாவது ஒருவர் எழுத்தாளர் மற்றவர் எழுத்தாளராக இயங்காதவர். இங்கே இந்த இரண்டாமவர் எழுத்தாளராக இயங்காதுபோனாலும், விநோதமான அனுபவங்களுக்குச் சொந்தகாரராக இருக்கக்கூடும், அவ்வனுபவம் முற்றிலும் வித்தியாசமானதொரு புனைகதையை, சுயவரலாற்றை எழுத மற்ற்வருக்கு உதவக்கூடும். சமூகத்தில் பிரபலங்களில் பலர் ( ஒன்றிரண்டு விழுக்காட்டினரைத் தவிர ) – எழுத்தாளராக அவதாரமெடுக்கும் ரகசியம் இது.

 

ஆனால் தன்னால் எழுத முடியும் ஆனால் உந்துதல் இல்லை, உற்சாகப்படுத்த ஆளில்லை. பக்கத்துவீட்டுக் குடும்பசண்டை எனக்குத் தொந்திரவாக இருக்கிறது, ஓட்டலில் ரூம் போட்டுக்கொடுக்க பதிப்பாளர் முன் வரமாட்டேன் என்கிறார் இப்படிக் காரணத்தைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள், இதே மனநிலையிலுள்ள வேறொரு நண்பரை அணுகாமல் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரோடு சேர்ந்து எழுத உட்காரலாம். ஆணா¡க இருந்தால் பெண்ணொருத்தியுடனும், பெண்ணாக இருந்தால் ஆண் ஒருவனுடனும் (காதல் செய்து ஓய்ந்த நேரங்களில்) எழுத உட்கார்ந்தால் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புண்டு, மர்சியா முல்லெர், பில் புரோன்ஸினி அமெரிக்க தம்பதிகள்போல வெற்றி பெறலாம். இருவர் அனுபவம், இருவர் அறிவு அவரவர் கற்பனத் திறன், எடுத்துரைப்பு உத்தி இரண்டுமிங்கே இணைகின்றன. கோஸ்ட் ரைட்டிங்கில், கோஸ்ட்டாக இருப்பவர் பெயர் இடம் பெற சாத்தியமில்லை, ஆனாக் இரு எழுத்தாளர்கள் இணைகிறபோது, இருவர் பெயரும் நூலில் இடம்பெற வாய்ப்புண்டு.

நன்றி: திண்ணை

. ———————————————–

தமிழவன் – சிறுகதை

 

புத்திஜீவி கே.யின் வாழ்வும் பணியும்தமிழவன்

 

கே. பற்றிய இந்தச் சுருங்கிய வாழ்க்கை வரலாற்றை அவனுடைய மரணத்திலிருந்து தொடங்குவது தவிர வேறு வழியில்லை.அவன் மரணம் சம்பவித்தோ இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறையில், இந்தோ-ஆரியமொழிக் குடும்பத்தைச்சார்ந்த அவன் தாய் மொழியைப் பயிற்றுவிக்க, அமெரிக்க சமஸ்கிருத பேராசிரியர் வால்டர் வில்ஃபோர்ட் கே.யை அழைத்தபோது கே.யின் கால்கள் தரையில் பாவவில்லை. நானும் கே.யும் அதுபோல், கே.யின் நிரந்தர விரோதியான என் நண்பன் ஆனந்ததீர்த்தனும் (எனக்கு அந்நியமான) அந்த ஊரில் ஒரு மொழி நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

ஆனந்ததீர்த்தனை நான் என்னுடைய மொழியைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு தோற்றுப்போன எழுத்தாளன் (எ ஃபெயில்ட் ரைட்டர்) என்று அறிமுகப்படுத்துவதும் போது, ஆனந்ததீர்த்தன் ஏனோ உள்ளூர மகிழ்வான்.

ஆனந்ததீர்த்தன்தான் கே.யின் மரணத்தை, கைப்பேசி அறிமுகமாகியிராத, 70களில் அவ்வப்போது மக்கர் செய்யும் என்வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்துச் சொன்னான்.

“புஸ்வாணம் மேலே போய், போனவேகத்தில்

எரிந்து புஸ்ஸென்று கீழே விழுந்து விட்டது” என்றான்.

“ஐ டோண்ட் அன்ட்ரஸ்டான்ட் யு.”

என்றேன் ஆங்கிலத்தில். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் கே. பற்றித்தான் ஏதோ சொல்ல வருகிறான் என்று.

“கே.டைய்ட் டுடே அட் ஸெவன் இன் த மார்னிங். புஸ்வாணம் மேலே போய் அப்படியே விழுந்துவிட்டது”.

தொண்டையிலிருந்து பேசிய ஆனந்ததீர்த்தன் சொன்னமுறை எனக்கு அவன் வருத்தத்தோடு உண்மையைச் சொல்கிறான் என்று புலப்படுத்தியது. கே. திடீரென இறந்த செய்தி இப்படித்தான் அந்த நகரத்தில் பரவியது.

கே. அப்போது மொழிநிறுவனம் எங்களுக்கு ஒதுக்கியிருந்த குவார்ட்டர்ஸில் தங்கியிருந்ததால் அவன் வீடு என் வீட்டுக்கு அருகில் இருந்தது. நான் என் இரு சக்கர வாகனத்தில் அவன் வீட்டுக்குப் போன போது அவன் வீட்டின் முன் ஒரு மழை மேகம் கவிந்திருந்த அந்த ஜுலை மாதத்தில் பார்த்தவை எல்லாம் நன்றாக நினைவிருக்கின்றன. சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அவனிடம் பி.எச்.டி செய்யப்போய் அவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி மொழிநிறுவனத்தின் இயக்குநருக்கு முன்பொருமுறை கம்ப்ளயண்ட் எழுதிய பெண் அழுதுகொண்டு ஒரு மரத்தின் அருகில் தரையில் அவளுடைய சுடிதாரில் மண் ஒட்டுவதையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தாள்.

நான் அந்தப் பெண்ணை அறிவேன். எனவே அவளருகில் சென்றபோது அவள் கே.யின் சாவைப் பற்றிப் பேசாமல் அவளுக்கு முன்பு நடந்தது பற்றி ஏனோ பேசினாள். “கம்ப்ளய்ண்டைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக எங்க வீட்டுக்கு வந்து கே. மிரட்டியதைப் பார்த்து அப்பா உண்மையில் பயந்துபோனார். அதனால் கம்ப்ளயண்டை வாபஸ் வாங்கியதோடு பிஎச்டியும் கே.யிடம் செய்துகொண்டேன். இப்போது இப்படி ஆகிவிட்டது” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

கே. போன்ற அறிவாளியிடம் ஆய்வு செய்தால் அவர்கள் மொழி பேசுபவர்கள் உடனே வேலை வழங்குவார்கள் என்ற தகவலையும் அந்தப் பெண் சொன்னாள். இவளைப் போல் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை தந்து பிஎச்டியும் தருவான் கே. என்று ஆனந்த்தீர்த்தன் ஜோக் அடிப்பான். இறந்தவன் உடலையாவது பார்ப்பதற்கு ஆனந்ததீர்த்தன் வருவான் என்று நான் நினைத்தேன். அப்போது அந்தப் பெண், வேறு ஒரு பெண் வருவதைச் சுட்டிக்காட்டி

“அவளிடமும் முதலில் தவறாக நடக்க முயன்று பின்பு அவளது பிஎச்.டி நெறியாளராய் ஒழுங்காய் இருந்தான் கே.” என்ற தகவலைத் தரவும் புதிய இளம்பெண் அழுதபடி எங்களருகில் வந்து சேரவும் சரியாய் இருந்தது.

இப்போது 1998 நடந்துகொண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் கே.யை நினைப்பதற்கான ஒரே காரணம் கே.யின் இந்த வாசகம்: “ஒரு நிகழ்வை நிரூபிக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்வை இன்னொரு நிகழ்வோடு தொடர்பு படுத்துவதைவிட வேறு வழியில்லை”.

கடந்த 40 ஆண்டுகளில் இந்த வாசகம் அவர்கள் மொழியில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது. கே. இறந்தபின் முதல் பதினைந்து ஆண்டுகள் அவனுக்கு நினைவுக் கூட்டங்களை ஒழுங்காய் நடத்தினாள் அவனுடைய மனைவி சரஸ்வதி. (கே. வாழும்போது அப்படி நடத்தும் எண்ணம் அவள் கொண்டிருக்கவில்லை) அதன்பிறகு இப்போது நடத்துகிறாளோ என்னவோ தெரியாது.ஏனெனில் அந்த ஊரைவிட்டு நானும் எப்போதோ வந்துவிட்டேன். இந்த வாசகத்தை நான் பழைய புத்தகங்களை அடுக்கும்போது ஒரு பத்திரிகையின் பழைய மஞ்சள் படிந்த பக்கத்தில் யாரோ அடிக்கோடிட்ட பகுதியில் பார்த்தேன். அப்போதிருந்த புகழ் ‘கே’க்கு இப்போது இல்லை என்பேன் என்றாலும் சிலர் இப்போதும் ‘கே’யை புகழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘கே’ யின் வயதொத்தவர்கள். இழந்துபோன அவரவர் வயதை அப்படிக் கௌரவிக்கிறார்கள் என்பான் ஆனந்த தீர்த்தன்.

கே. ஒருமுறை ஓவியரான தேசத்தின் புகழ்பெற்ற கவிஞரைப் பற்றி எழுதியிருந்தான். தாடி வைத்துக் கொண்டிருக்கும் அந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரைப் பின்பற்றி தானும் தாடி வைத்திருப்பதாகக் கூறிய ‘கே’ அந்தக் கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை 2 பக்கத்தில் எழுதியிருந்தான். அது என் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அக்கவிஞர் முதுமையில் எத்தகைய கற்பனை சக்தியைக் கொண்டிருப்பார் என்ற அபூர்வமான கேள்வி அவனுக்குத் தோன்றியிருந்தது. ஆனந்த தீர்த்தனிடம் அது அபூர்வமான கேள்வி என்ற என் எண்ணத்தைக் கூறிய போது ஆனந்த தீர்த்தன் இப்படிச் சொன்னான்.

“நீ வயதானவர்கள் யாரும் எழுதாத மொழியிலிருந்து வந்துள்ளாய். கே. வயதானவர்கள் மட்டுமே எழுதும் மொழியில் எழுதுகிறான். எனவே வயதானவர்களின் கற்பனைபற்றி யோசிப்பது கே. போன்றவர்களுக்கு எளிது.”

நான் குழப்பமடைந்தேன்.

எனினும் ‘கே’ என்ன சொல்லவருகிறான் என்று சிந்தித்தேன். எனக்கும் ஆனந்த தீர்த்தனுக்கும் கே. தேசியப் புகழ்பெற்ற கவிஞரின் எல்லாப் படைப்பையும் படித்தவனல்ல என்பது தெரியும்.

‘கே’ தேசியப் புகழ்பெற்ற அந்தக் கவிஞரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறான். அழகற்ற தோற்றமுள்ள அவ்வோவியங்களைக் கூர்ந்து பார்த்து ஒரு கருத்தைச் சொல்கிறான். பல ஓவியங்களில் மறைந்திருக்கும் பெண் சாயை ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான். அக்கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.

“மறைவாக, பல ஓவியங்களில் ரகசியமாய் வெளிப்படும் பெண்சாயல் உண்மையில் ஓவியங்களில் காணப்படுவதில்லை”.

இந்த வாசகம் எனக்குப் பெரிய தலை வேதனையைக் கொடுத்தது. பெண்சாயல்  இருக்கிறதென்கிறான். ஆனால் அது இல்லாததென்கிறான். எனக்கு இவ்வாக்கியத்தின் முரண் புரிய இன்னொரு வாக்கியம் உதவியது.

“இருப்பது இல்லாததுபோல் தென்படுவது உணர்வின் அதீதத்தால்  ஆகும்”.

இந்தமாதிரி விசயங்களை நினைவில் கொண்டு வந்த நான் கே.யின் வறுமைகொண்ட இளமைக்காலம் பற்றி நினைத்தேன் ஊரில் கிராமத்தில் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தயாராக்கும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்திருக்கிறான். இது அவன் மிக அதிகமான இறை மறுப்பாளனாக இருந்தபோது நடந்தது. இதனை அவனது பாலிய காலத்தில் அவனோடு இறைமறுப்பாளர்களாக அலைந்து இப்போது பெரிய பக்தர்களாக மாறி அரசியலில் புகுந்துள்ளவர்கள் கூறுகிறார்கள்; இவர்கள் சிலரே.

‘கே’யின், ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னைக் கவர்ந்தது. அதுபற்றிக் கூறாவிட்டால் ‘கே’ பற்றிய என் மனப்பதிவு முழுமையடையாது. அக்கதைச் சம்பவம் வெயிலில் நடக்கிறது. அக்கதை, வெள்ளைக்காரர்கள் கொடூரமாய் ஆண்ட சமயத்தில், அச்சிட்ட பத்திரிகையின் தாள் போலீஸால் கறுப்புமைப் பூசி அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் போலீஸ் பற்றி ஏதும் பத்திரிக்கைகளில் எழுதமுடியாது. அச்சுறுத்தலுக்கு ஆளான அந்தக் கதையில் முழுவதும் வெயில் கொடூரமாய் அடித்தது. அக்கதையானது கர்ப்பமான ஒரு பெண்ணை அவளுடைய தாய் பேற்றுக்குத்  தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு  போவது பற்றியது. பஸ் நிலையத்துக்கு அப்பெண்ணும் அவளது கிராமப்புறத் தாயும் வந்து நிற்கும்போது, போலீஸ் எல்லோரையும் விரட்டுகிறது. அப்பெண்ணுக்கோ தாகம். அப்போது பார்த்து வெயில் சுள்ளென்று அடிக்கிறது. தாயால் பெண்ணை விட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்கப் போக முடியாது. எல்லா இடத்திலும் போலீஸ் பரவுகிறது. யாரோ பஸ்ஸில் கல்லடிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் என்னாகுமோ தன் குழந்தைக்கு என்று புலம்புகிறாள். அவளுக்கு வேறு ஏதும் தோன்றுவதில்லை.

நான் சொல்ல வந்தது ‘கே’ எழுதிய விமரிசனம் பற்றி. ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையின் தரங் குறைந்த தாளில் அச்சிட்ட தன் ஒரு பக்கக் கட்டுரையில் அக்கதை வெயில் பற்றியது என அடம்பிடிக்கிறான் கே. அக்கட்டுரை வெளியான அடுத்த நாள் ‘கே’யின் பாதத்தில் பெருவிரலில் ஒரு கோபக்கார இளைஞன் தன் பூட்ஸ் கால்களால் மிதித்தபடி ‘கே’யின் சட்டைக்காலரைப் பிடித்தான். வெயிலாம் வெயில் என்றான் இளைஞன். ‘கே’ அசராமல் தன் எழுத்தின் புரட்சிகரத் தன்மையால் உருவான எதிரிகளின் வேலை இது என்று கூறிக்கொண்டு தலையைக் கீழே போட்டபடி நடந்து போனான்.

இந்த நிகழ்ச்சி நானும் ஆனந்ததீர்த்தனும் ‘கே’ யும் நாங்கள் வேலை பார்த்த மொழிநிறுவனத்தின் கான்டீனில் காபி குடிக்கப்போனபோது நடந்தது. சிலவேளை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே இப்படி எழுதுகிறானோ இவன் என்றும் தோன்றியது.

கே. பார்ப்பதற்கு அழகற்றவனாக இருப்பான். கரிய நிறமுகம்;  சுருட்டைமுடி. கண்கள் பெரியவை. அவன் சிரிக்கும்போது நாசித்துவாரம் தேவைக்கதிகமாக விரிந்து சுருங்கும். அப்படி விரிந்து சுருங்கும் நாசித்துவாரத்தைக் காட்டி ஒருமுறை ஆனந்ததீர்த்தன்தான் எனக்கு, “சின்ன பறவைகள் உள்ளே போய்விட வாய்ப்பிருக்கிறது, சொல்லிவை ” – என்றான். கறுப்பு நிறமான முகத்தில் வெள்ளையான பெரிய பற்கள். அதில் ஒரு தாடி வேறு. எதிர்மறையான பிற அங்கங்களின் தன்மையை அவனது உயரம் ஓரளவு சரி செய்து நேர்மறையாக மாற்றியது எனலாம். ஒருமுறை என்மொழியில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் எப்படி எழுதுவார் என்று கேட்டான். நான் மொழிநிறுவனத்தில் எனக்கு வகுப்பு இருக்கிறது என்று வேகமாய்ப் போய்விட்டேன். ஒரு மணிநேரம் வரை அதே இடத்தில் நின்றபடி சிகரெட் இழுத்துக்கொண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டும் நின்றிருக்கிறான். வகுப்பை முடித்துக்கொண்டு நான் அவன் கேட்ட வேள்வியை அனாயசமாய் மறந்து வந்து கொண்டிருந்தேன். “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று என் தோளைத் தொட்டான். நான் நின்றேன்.

“ஆனந்த தீர்த்தன் ஒரு ………….. ………… ………….  பாஸ்டர்ட்

அவனுடன் சேர்ந்து ஏன் கெட்டுப் போகிறாய்? நீ நான் நேசிக்கும் புராதன மொழியியலிருந்து வந்திருப்பவன் பதில் சொல்” என்றான். அவன் கை என் தோளை இறுக்கியது. அப்போதுதான் அவன் என் மொழியில் எழுதும் கவிஞன் பற்றி என்னிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது.

“வா, கே. என் அறையில் அமர்ந்து பேசுவோம்” என்றேன்.

“இல்லை. உன்மீது கோபம், என் கேள்வியை உதாசீனம் செய்தாயோ என்று. எனவே என் கேள்வியை வானத்திடம் கேட்டபடி ஒரு மணிநேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்”.

“அய்யய்யோ, எதற்கு உன்னையே தண்டித்தாய்?” என்று கேட்டபடி கே.யின் கையைப் பிடித்தேன்.

வருகிறேன் என்று சிகரெட் பிடித்து அப்போதைக்கு மறைந்தவன் ஓரிரு நாளில் என் மொழிக்கவிஞன் பற்றி என்னிடம் தவல்களைப் பெற்று அவனுக்கே உரிய முறையில் அவற்றை வெட்டி ஒட்டி கட்டுரையை டெல்லியில் சிலருடைய தொடர்பின் மூலம் மதிப்புக்குரிய ஒரு கருத்தரங்கில் வாசித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிவந்தான். ஆனந்ததீர்த்தன் “உன் கருத்துக்களைத் திருடி வாசித்துவிட்டு வந்திருக்கிறான்” என்றான்.  ஒரு மாதம் கழித்து நான் அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தபோது கே. தோன்றி  அந்த என்மொழிக் கவிஞன் பெயரைச் சொல்லி அந்தக் கவிஞனைப் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டான். எனக்கு எரிச்சல் வந்தது. அது யார் என்று வேண்டுமென்றே கேட்டேன்.

“அப்புறம் விளக்குகிறேன். ஏ, ஃபைன் பொய்ட் என்றான்”.

உண்மையிலேயே என்னிடமிருந்து அக்கவிஞனைப் பற்றி முதன்முதலாக அவன் அறிந்து கொண்டதை முழுதும் மறந்திருந்தான்.

அவன் டெல்லியில் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை என்னிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டதும் நான் அக்கட்டுரையை எடுத்துப்புரட்டினேன். முதல் பக்கத்தில் கட்டுரை இப்படித் தொடங்கியது.

“இலக்கியம் உயிர் வாழ்கிறது; புழுப்பூச்சிகள் உயிர் வாழ்வது போல”.

நான் அவ்வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.

ஸார், கே. யின் கட்டுரையை அவர் உங்களிடம் கொடுத்து ஒரு  வாரம் ஆகிறதாம். உடனே வாங்கி வரும்படி சொன்னார் என்றாள்.

நான் முதல் இரண்டு வரிகளைப் படித்த கட்டுரையை அப்படியே தூக்கி அவளிடம் கொடுக்க, பேண்ட் அணிந்த உயரமான அப்பெண் வேகமாகப் பின்புறத்தைக் காட்டியபடி நடந்தாள்.

ஆனந்த தீர்த்தனிடம் சொன்னால் வேண்டுமென்றே அவன்  இப்படிச் செய்கிறான், அவனை மேதை என்று நீ நினைக்க வேண்டுமென்பதற்காக  என்பான்.

கே. எங்கள் மொழித்துறையில் தயாரித்து எழுதப்பட்ட  அவனுடைய மொழியின் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியை எழுதினான். அதனைப் பற்றி ஆனந்த தீர்த்தன் சொன்ன செய்திகள் எனக்கு கே. பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்தன. ஆனந்ததீர்த்தன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கே. என்னைவிட  ஐந்து வயது இளையவன். ஆனந்ததீர்த்தன் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுச் சிலகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு வந்தவன். கே. எப்படியாவது அமெரிக்காவிற்குப் போய் அவனுடைய தாய்மொழியைக் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினான். ஆங்கிலத்தாலும், அறிவாலும் வித்தியாசமான இலக்கியச் சர்ச்சைகளாலும்  அந்தந்த இடங்களில் காணப்படும் உயர் சமூகத்துப் பெண்களாலும்  கவரப்பட்டு வாழ்வின் கவர்ச்சியை அடையும் வழியாக இலக்கியக் கோட்பாடுகளும் விமரிசனங்களும் எழுதத் தொடங்கியவன். அவனது அறையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும்.  எங்கள்  மொழித் துறையில் எல்லோருக்கும் காற்றோட்டமான அறைகளும் தலைக்கு மேலே ஒட்டறை அடிக்கப்படாத மின்சார விசிறிகளும் உண்டு. ஆனால் கே. தேர்ந்து கொண்ட அறை ஒரு பழைய ஏடுகளை அடுக்கி வைக்கும் அறையினுள் நான்கடிக்கு நான்கடி பரப்பளவுள்ள ஒரு உள்அறை. ஒரு சிறு மேசையும் இரண்டு  இரும்பு நாற்காலிகளும் மட்டும் வைக்கமுடிந்த அறை. ஒருமுறை கே.யின் அறைக்கு வந்த அவனுடைய இப்போதைய மனைவியும் எங்கள் மொழித்துறையின் முன்னாள் மாணவியுமான சரஸ்வதி கே.யிடம் கத்திவிட்டுப் போனாள் என்று மாணவர்கள் சொன்னார்கள்.

“ஏன்யா உன் புத்தி இப்பிடி, நீ ஏன் இந்த மாதிரி அறையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கத்தினாள் என்று கேள்வி. அவள் கத்தும்போது வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாதவன்போல் சிகரெட் பிடித்தவாறு கே. சுவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானாம்.

ஆனந்ததீர்த்தனிடம் ஏன் இருட்டறையில் வசதியில்லாமல் கே. அமர்ந்திருக்கிறான் என்று கேட்க நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தன் கிடைக்கவில்லை. ஆனந்ததீர்த்தன் ஏற்கனவே எனக்குப் பழக்கப்படுத்திய கேயின் ஆய்வு ஆஸோசியேட் ஒருவன் ஒரு நாள் என்னுடன் பேசிக்கொண்டு வந்தான். கே. அந்த இளைஞன் முதுகலை படித்தபின்பு மிகவும் கஷ்டபட்டதை அறிந்து தன்னிடம் துணை ஆய்வாளனாகச்  சேர்ந்துகொள்ளும்படி கூறியதைச் சொன்னான். கே.யின் வீட்டில்தான் அந்த இளைஞன் கொஞ்சநாள் தங்கியிருந்தான். கே.யைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தேன். கே. எப்போது அமெரிக்கா போகிறான் என்று. உடன் அந்த துணை ஆய்வாளன் தன் மனதில்  இருந்ததைக் கொட்டினான்.

“ஸார், கே. போனவாரம் வீட்டுக்குப் பக்கத்து நிலத்தில் நின்றிருந்த பலாமரத்திலிருந்து இரண்டு பலாப்பழங்களை இரவில் பறித்ததற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரன் வந்து கே.யிடம் முன்பு தேங்காய் திருடினாய், இப்போது பலாப்பழம் திருடினாய் என்று சட்டையைப் பிடித்து இழுத்ததும் கே. தரையில் த்டால் என்று விழுந்தான் ஸார். நான் இடையில் புகுந்து கே.யைக் காப்பாற்றினேன். திடீரென்று கே. என்ன செய்தான் தெரியுமா? அயோக்கினை என் ஆசிரியன் என்று கூட இனி பார்க்கமாட்டேன். மரியாதையில்லாமல் தான் பேசுவேன். தேங்காயும் பலாப்பழமும் திருடியவன் இதோ நிற்கிறான் என்று என்னைப் பிடித்துக் கொடுத்தான், ஸார். அன்று கே.யின் வீட்டிலிருந்து வந்துவிட்டேன்” என்றான்.

ஆனந்ததீர்த்தனிடம் இதைச் சொன்னால் அவன் என்ன சொல்வானோ என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு நாள் மொழித்துறையில் மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது விரைவாய், கண்ணாடியைக் கையில் சுழற்றியபடி என் அறைக்கு வந்த கே. ஒரு டைப் செய்யப்பட்ட வெள்ளைத்தாள்  கத்தையைப் படி என்று கொடுத்தான். இந்திய இலக்கியத்தின் பொதுவான போக்குகள் என்பது கட்டுரையின் தலைப்பு. நானும் அவனும் முன்பு எனது மொழிக் கவிஞர்களின் கவிதைப்போக்கு  என்று விவாதித்த கருத்துக்கள்  பலமொழிக் கவிஞர்களின் கருத்துக்களாய் அவர்களின் பெயரின்றி டைப் செய்யப்பட்டிருந்தன. அக்காலத்தில் டைப் செய்வதுதான் வழக்கம். எனவே கரிகரியாய்  ஓரளவு நிறம் மங்கிய  ரிப்பனில் அடிக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டுரை. அடுத்த நாள் வந்து உன் கருத்துக்கள்தான் என்று கூறி  சிகரெட்டை ஊதியபடி மோட்டு வளையைப் பார்த்து என்ன புழுக்கம் என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டான். அக்கட்டுரையில் இந்த மேற்கோள் என் மனதைக் கவர்ந்தது.

“நான் தேடக்கூடாது. கண்டுபிடிக்கவேண்டும்”.

எனக்குத் தெரியும். அந்த மொழியில் அந்த ஆண்டு முழுதும் பலர் அவனுடைய இந்த மேற்கோளை விவஸ்தை இல்லாமல் எடுத்தாளப் போகிறார்கள் என்று.

மொழித்துறை தொகுத்துப் பிரசுரித்த அவர்களின் இலக்கிய வரலாற்றைப் பலர் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதினார்கள். ஒருவர் இலக்கணம் பற்றியும் இன்னொருவர் 1100 ஆம் ஆண்டில் அவர்கள் மொழியில் இருந்த சமண இலக்கியத்தில் செடிகொடிகளின்   ஆன்மா மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றியும் எழுதினார்கள்(ஒரு  முள் செடி முந்திய பிறப்பில் இறந்துபோன தன் தந்தைக்காக இரண்டுநாள் அழுது அரற்றிய மூன்றடி பாடலான முள்செடியின் அழுகை அவர்கள் மொழியில்   பிரசித்தம்.)இப்படி இப்படிப் பலர் எழுதினார்கள். கே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களின் இலக்கிய வடிவங்கள் என்று கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரையை வேறு யார் படித்தார்களோ இல்லையோ ஆனந்ததீர்த்தன் மட்டும் குறிப்பெடுத்துப் படித்தான். தேர்வுக்குப் போகிற மாணவனைப் போல் மிகச் சிரத்தையாகப் படித்தான். எனக்குத் தெரியும் விரைவில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றுடன் வருவான் என்று. ஆங்கில இலக்கியம் பல ஆண்டுகள் படித்து அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஒரு வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற சந்தேகம் வந்தவுடன் ஆனந்த தீர்த்தனுடைய மனைவி நாட்டுக்கு அழைத்தாள். அவனே இவற்றை எல்லாம் நகைச்சுவையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் கே. ஆங்கிலமும் படிக்கவில்லை; ஆங்கில இலக்கியத்தைப் படித்து அப்பாடத்தில் பட்டமும் பெற்றதில்லை. இளம் வயதில் கான்வெண்டில் படித்துவிட்டுப் பல்கலைக் கழகத்துக்கு வரும் பெண்களில் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் ஏழைக் கிராமக் குடும்பம் ஒன்றில் படித்து வந்த அந்தக்கால இளைஞன் கே. யின் இறுதி இலட்சியம். அதனால் அப்பெண்களிடம் பழகுவதற்காக ஆங்கில சினிமாக்களைப் பார்த்தும் பத்திரிகைகளைப் படித்தும் ஆங்கிலம் கற்றவன் கே.  இருபதாம் நூற்றாண்டில் எந்தெந்த ஆங்கிலக் கவிஞரிடமிருந்து உத்வேகம் பெற்று கே.யின் மொழி இலக்கியம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவானது என்று கே. அந்த இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்குக் கட்டுரை  அளித்திருந்தான். இங்கிலாந்தில் யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை எல்லாம் இங்கிலாந்து கவிஞர்கள் என்று கே. எழுதியிருக்கிறான்  என்று ஆனந்த தீர்த்தன் பொருமினான். பின்பு நகரத்திலிருந்து பாக்கு வியாபாரம் செய்யும் ஊர் இலக்கியச் சங்கத் தலைவரால் நடத்தப்படும் பத்திரிகையில் பல்கலைக்கழகம் வெளியிடும் இலக்கிய வரலாறு பற்றி “பாரெல்லாம் புகழும்  நம் மொழியில் இறக்கப்பட்ட புளுகுமூட்டைகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி ஆனந்த தீர்த்தன் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான். ஆனந்ததீர்த்தன், டென்னிசனையும் வர்ட்ஸ்வர்த்தையும் கே. தனித்தனிக் கவிஞர்கள் என்ற அறிவில்லாமல் “டென்வர்த்” என்று ஒரு புதுப்பெயரை அறிமுகப்படுத்தியுள்ளான் என்று குற்றம் சாட்டினான். ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் ஒரு புதுக்கவிஞனை கே. அறிமுகப்படுத்தியதற்கு கே.யை இங்கிலாந்துக்கு அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கட்டுரையை முடித்திருந்தான்.

இவ்விஷயம் பல்கலைக்கழகத்தில் உடனே பரவியதால் கே. ஒருவாரம் தலைமறைவானான். நெஞ்சை நிமர்த்தியபடி அந்த ஒரு வாரம் நடமாடிக் கொண்டிருந்த ஆனந்ததீர்த்தன் அடுத்த வாரம் பத்திரிகையில் வந்த சிறு விளக்கத்தைப் படித்துப் பல்லை நறநறவென்று கடித்தான். அந்த விளக்கத்தில் டென்னிசன் மற்றும் வர்ட்ஸ்வர்த் என்று கே. எழுதிக் கொடுத்ததைப் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பவர்கள் தவறுதலாக “டென்வர்த்” என்று அச்சுக் கோர்த்துப் பிழை செய்துள்ளார்கள். அதற்காகப் பத்திராதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் என்றிருந்தது. ஒருவாரம் காணாமல் போன கே. உடல் நலமில்லாமல் இருந்ததாய் கூறியபடி நானும் ஆனந்ததீர்த்தனும் கான்டீனுக்குப் போகும்போது எதிர்பட்டு  “எப்படி இருக்கிறீர் ஆனந்த தீர்த்தன்” என்று எதையும் அறியாதவன் போல் பேசிவிட்டுப் போனான். கொஞ்சம் மரியாதை கூடியிருந்ததைக் கவனித்தாயா என்று வினவினான் ஆனந்ததீர்த்தன்.

ஆனந்ததீர்த்தன் அன்று மாலையிலிருந்து இலக்கிய வரலாற்று தொகுப்புக்குக் கே. கொடுத்த கே. யின் கையெழுத்திலிருக்கும் மூல கையெழுத்துப் படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டான்.

கே. மறைந்த மறுவருடம் பல்கலைக்கழகக் குவர்டர்ஸின் அவனுடைய வீட்டை அவன் குழந்தைகள் படித்து முடிப்பது வரை காலி செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். (அவர்கள் மொழியில் சிறுசிறு இலக்கிய சண்டைகளில் எல்லாம் முதலமைச்சர் ஈடுபடுவார்.)அதற்கும் அவன் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கு அவனுடைய புகழ்பெற்ற ஒரு நூலின் பெயரை வைக்கவும் ஒரு விழா நடந்தது. அந்த நூலின் பெயர், சமஸ்கிருதச்  சொல்லால்  ஆன பெயர். “விஸ்மிருதி”.  அதற்கு அர்த்தம் ‘மறதி’ என்பதாகும். அந்தப் புத்தகத்தை ஆனந்ததீர்த்தன் ஆங்கிலத்தில் எனக்கு மொழிபெயர்த்து விளக்கினான். எல்லோரும் ‘நினைவால்’ கவிஞர்களும் நாவலாசிரியர்களும் எழுதுகிறார்கள் என்று விளக்குவார்கள். கே. என்ன செய்தானென்றால் கவிஞர்கள் மறதியிலிருந்து எழுதுகிறார்கள் என்று விவாதித்ததான்.   அதனால் அவனுடைய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதை வழக்கம்போல் ஆனந்ததீர்த்தன், வேறு ஒரு மொழியிலிருந்து அடித்த காப்பி என்றான். கே. அந்தச் சொல்லை இன்னொரு மொழியிலிருந்து எடுத்திருக்கலாம். அவனுடைய மொழியின் முக்கியமான கவிஞரின் கவிதைகளை அவர் குடிபோதையில்  எழுதியதை – எல்லாவற்றையும் அவர் மறந்தபோது – எழுதியதை அவர் இறந்த பிறகு அவர் எழுதிய டைரியைத் தேடி எடுத்து  எந்தெந்த தேதியில் குடித்தார் எந்தெந்த தேதியில் குடித்துவிட்டுக் கவிதை  எழுதினார் என்ற தகவலைத் திறமையாய் 10 பக்க அளவு தொகுத்து முக்கியமான கவிதைகள் என்று அந்த மொழிப் பள்ளிப்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட கவிதைகளை ஆதாரத்துடன் ‘குடிபோதைக் கவிதைகள்’ என்று எழுதி இறுதியில் “நாம் எல்லோரும் நினைவுடன் கவிதை எழுதுவதாய் நினைக்கிறோம், நம் மொழியின் தேசியக் கவிஞர் மறதியில் தான் முக்கியமான கவிதைகளை எழுதி நம்மொழிக்கு உலகப் புகழைத் தந்தார் என்று விவாதித்தான். எட்டுப் பதிப்புகள் மூன்று ஆண்டுகளில் கண்ட அந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தபோது குடிபோதைக் கவிதைகள் என்பதை “விஸ்மிருதிக் கவிதைகள்” என்று தலைப்பைத் திறமையாக மாற்றியிருந்தான். இப்படி இலக்கிய வரலாற்றையே மாற்றினான்.கடந்த 20, 25 ஆண்டுகளாய் விஸ்மிருந்தி பற்றியும் கே.யின் பெயரையும் குறிப்பிடாமல் இலக்கியக் கூட்டங்களும் டி.வி. விவாதங்களும் நடைபெறாது என்ற அளவு விஸ்மிருதி என்ற சொல் புகழ்பெற்றுவிட்டது.

பல வருடங்களாய் அவன் பெயர் அந்த மொழியில் ஒரு முக்கிய முத்திரைபோல் ஆகியிருந்தது. அவனை விமரிசிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவனுடைய மாணவர்களும் மாணவிகளும் நாங்கள் கே.யின் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட்டார்கள். தலைநகரில் அவனுடைய பெயர் பரவியிருந்ததுபோலவே சிறுகிராமங்களிலும் அவனுடைய பெயர் பரவியிருந்தது. அதை நானே கண்கூடாகப் பார்த்தேன். ஏதோ வேலையாய் நான் மலைப்பக்கத்துக் கிராமத்தில் இருந்த  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் என் முகவரியை எழுதிய லெட்ஜரின் மூலம் தலைநகரின் மொழித்துறையில் நான் கே.யுடன் வேலைபார்த்தவன் என்பதை அறிந்த ஹோட்டல் மானேஜர் “உண்மையிலேயே நீங்கள் கே.யுடன் வேலை பார்த்தவரா” என்று கண்கள் அகலவிரிய என்னை ஒரு அதிசயப் பொருளாய் பார்த்தான். கே.யைப் பற்றி 5-ஆம் வகுப்பில் சில ஆண்டுகளாய்  கே.யின் உருவப்படத்துடன் பாடம் ஒன்று இருந்தது. ஏழைக்குடும்பத்தில் அவன் பிறந்ததும் அவர்களின் 1 ½  கோடி மக்கள் – அம்மக்கள் கழுதைப்புலி வம்சராஜர்களின் வழித் தோன்றல்கள்  என்பது பெருமைக்குரியது என்ற பிரஸ்தாபத்துடன் – பேசும் சிறிய மொழியை அமெரிக்காவில் கற்பித்தவன் என்பதும் முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அதுபோல் அம்மக்களின் மலைப்பிரதேச பாரம்பரிய கதைகளைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தொகுத்தவன் என்பதும் அதனால் அவன் பெரிய இலக்கியவாதி (ஸாகிதி) என்றும் அவனுக்குரிய புகழுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ‘ஸாகிதி’  என்பவர்கள் எப்போதும் புகழுக்குரியவர்கள் என்று அம்மக்களிடம் ஒரு கருத்து இருந்தது.

அவன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு (அவன் இறந்தபோது அவனுக்கு 46 வயது) விழாக்குழு அவனுடைய நினைவைப் போற்ற ஒரு பெரிய இலக்கிய விழாவை நடத்தியது. மேடையில் கே.மீது ஒருமுறை அவதூறு பேசிய அவனுடைய துணை ஆய்வாளன் அமர்ந்திருந்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மூன்று நாள் விழாவில் மூன்றாம் நாள் அந்த மாநில முதலமைச்சர் கே. பெற்ற புகழும் அவனுடைய இலக்கிய விளக்கங்களும் எவ்வளவு புதுமையானவை என்று ஒரு சொற்பொழிவு செய்தார்.

மேடையில் கே.யின் மனைவி சரஸ்வதி அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய, குருவிக் கால்கள் போன்று தோற்றம் தரும் அவர்களின் மொழியில் நான் இதுவரை கேள்விப்படாத கே.யின் பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.

“வெற்றி என்பது ஒழுங்கு;  ஒழுங்கில்லாதது Evil” என்று கடைசி சொல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்தமாதிரி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை ஒரு மரபுபோல அவர்கள் மொழியில் செய்தவன் கே. என்று ஒரு கருத்தைச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ பொய்யோ கே.யின் பெயரைச் சொன்னால் எல்லோரும் தங்களுக்கும் தாங்கள் சொல்வதற்கும் அங்கீகாரம் அந்த மக்கள் அளிப்பார்கள் என்று எண்ணியது என்னவோ உண்மை.

வெகுநேரம் ஆடல்பாடல்கள், கவிதை வாசிப்பு என்று தொடர்ந்த விழாவில் கே. தொகுத்த மலைப்பிரதேச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. எல்லா கதைகளையும் கே.யின் ஆவி சொல்வதுபோல் கற்பனை செய்து நடித்துக் காட்டினார்கள். எனக்கு எப்போதோ இறந்துபோன ஆனந்ததீர்த்தனும் ஞாபகத்துக்கு வந்தான். யாருக்கும் தெரியாதவனாய் ஆனந்ததீர்த்தன் மாறிப்போனதை நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தனின் ஆவி இப்போது இந்த விழாவைப் பார்த்தால் எத்தகைய விமரிசனத்தை முன்வைக்குமென்று விநோதமாய் ஒரு கேள்வி தோன்றியது.  அத்துடன் அந்த ஆவி மேடையில் அமர்ந்து அன்றைய துணை ஆய்வளான் கே.யைப் பற்றி இன்று “தன்னை ஆளாக்கியவன் கே.” என்று கண்ணீர் விட்டதைப் பற்றி என்ன நினைக்கும் என்றும் கேட்கத் தோன்றியது. அந்த கே.யின் துணைவனாக அந்தக் காலத்தில் இருந்த ஆய்வாளன் கே. தன் விரோதிகளும் அவனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்படி கருத்துக்களைத் தன் நூல்களில் வைத்துள்ளதால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவன் புகழ் மறையாது என்றான். “சரித்திரத்தில் பல விஷயங்கள் புரியாதவை” என்ற கே.யின் மேற்கோள் இப்போது எனக்கு ஞாபகம் வந்தது.

 

(உயிரெழுத்து இதழில் வந்தது.)

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டு நூல்கள்

அ. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள்

Kafkavin praga wrapper-001-001
மேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.
ஆ. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்Maga sannithanam wrapper-001-001
கடந்த மூன்று ஆண்டுகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும் இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.
————————————————————————-

மொழிவது சுகம் பிப்ரவரி 22 -2015

1  அல்பெர் கமுய் கூற்றை பொய்யாக்கிய பாரீஸ் மெட்ரோ பயணிகள்

 

1893 ஆம் ஆண்டு அப்துல்லா சேத், காந்தியை வழக்கறிஞ்ராக பணியமர்த்திய இந்தியர். தனது வழக்கறிஞரின் தகுதி மற்றும் பணி நிமித்தம் கருதி இரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டொன்றை அவருக்கு கொடுத்தார். டர்பன்னிலிருந்து பிரிட்டோரியா பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு அது. இருந்தும் இடையில் ஏறிய ஓர் ஐரோப்பியர்,  ஓர் இந்தியருக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யம் உரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காடி வலுக்கடாயமாக முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து காந்தியை வெளியேற்றுகிறார். காந்தியின் சுயவரலாற்றில் இடம்பெறும் இச்சம்பவத்தை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்கு களமாக தென் ஆப்ரிக்கா இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. அங்கு போராடிய கறுப்பின மக்கள் சொல்கிறார்கள்.

 

நாம் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு அல்ல, இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இனவாதத்தைக் கொள்கையாகக் கொடிண்ருந்த தென் ஆப்ரிக்காவில்  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமுமல்ல., ஒரு மாதத்திற்கு முன் ‘சுத்ததிரத்திற்குப்’ பங்கம் ஏற்பட்டுவிட்டதென ஊர்கூடி தேர் இழுத்த பிரான்சு நாட்டில் நடந்திருக்கிறது. பாதிக்கப்படவர் காந்திஅல்லவென்றாலும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என முழங்குகிற  ஒரு நாட்டின் குடிமகன், அவர் செய்த குற்றம் கறுப்பராக பிறந்தது.
‘Richelieu – Drouot’ பாரீஸிலுள்ள மெட்ரோ  ரயில் நிலையம்,  தட எண் 9 செல்லும்  இரயில் நிலையம்.  கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.30 மணி அளவில் நடந்த சம்பவம். அன்றிரவு பாரீஸிலுள்ள Parc des Princes காற்பந்தாட்ட மைதானத்தில் பாரீஸ் விளையாட்டுக் குழு ஒன்றிற்கும் ( PSG) இங்கிலாந்து குழு ஒன்றிற்கும் (Chelesa) இரவு சுமார் 9 மணி அளவில் காற்பந்துபோட்டி இருந்தது.  போட்டியைக்காண இங்கிலாந்திலிருந்து வந்திருந்த  சம்பந்தப்பட்டக் குழு இரசிகர்களில் சிலர் மேற்கண்ட தட எண் 9 மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள். ‘Richelieu-Drouot’ இரயில் நிலையத்தில் இப்பெட்டியில் ஏறப்போன ஓர் ஆப்ரிக்கரை ” நிற வெறியர்கள் நாங்கள் ” எனக் த் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு அவரை இந்த ரசிகர்களில் ஒரு சிலர் ஏறவிடவில்லை. இரண்டொருமுறை அவர் முயன்றும்  தங்கள் பெட்டியில் அவரைத் தடியர்கள் அனுமதிக்கவில்லை. காந்திக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுகிற அதே சம்பவம். இச்செயல் காலம் தாழ்ந்து,  வீடியோவாக இணைய தளங்களில் வலம் வர ஆரம்பித்த பிறகு அனைவரும் கண்டிக்க ஆரம்பித்தார்கள். கண்டித்தவர்களில் இரு நாட்டுத் தலைவர்களும் அடக்கம். பிரெஞ்சு அரசாங்கம் சட்டப்படித் தண்டிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து காற்பந்தாட்ட அமைப்பும் குற்றவாளிகளைத் தண்டிக்க பிரெஞ்சு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது

 

எனினும் சில கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தேவைப்படுகின்றன. இங்கே காந்தியைப்போல பாதிக்கபட்டவர் தமது சுயவரலாற்றை எழுதுவாரா எனத் தெரியவில்லை. அப்படி அவர் எழுதினால், அதுபோன்றதொரு சம்பவமே நடக்க இல்லை எனக்கூற இப்போதும் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால் அவர்களுக்கு சில சங்கடங்கள் உள்ளன. காந்திகாலத்தில் ஸ்மார்ட் போன்களோ ஐ பாட்களோ இல்லை. இப்போதெல்லாம் உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பிரசுரிக்கவென தன்னார்வ பத்திரிகையாளர்கள் நம்மில இருக்கிறார்கள். எனவே இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது.  பிரெஞ்சு குடிமகன்களும் அந்தத் தடியர்கள் ஆங்கிலேயர்கள்!  எங்களுக்கும் நிறவெறிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி தப்பித்துவிடமுடியாது.   குற்றத்தைச் செய்தது ஆங்கிலேயர்கள் எனில் கறுப்பர் இனத்தவரை பெட்டியில் ஏறக்குடாதென நிறவெறி மனப்பான்மையுடன் சில குண்டர்கள் தடுத்ததை (அந்த ஆப்ரிக்கரை ஏறவிடாமல் தடுத்ததோடு ‘Dirty Black man’ என்று வருணித்திருக்கிறார்கள்.) அங்கே பயணிகாளாக இருந்த பல பிரெஞ்சுக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்ல நடைமேடையிலும் நூற்றுகணக்கானவர் இருந்திருக்கிறார்கள். எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர ( இதில் காவல் துறையும் அடக்கம், பொதுவாக பிரச்சினைகளெனில் இரயில் நிலையங்களில் உடனுக்குடன் காவலர்கள் தலையிடுவது வழக்கம்.) ஆனால் இங்கு அதிசயம்போல  பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவரும் முன்வரவில்லை.

 

அல்பெர் கமுய் தன்னுடைய ‘போராளி’ நூலொன்றில் போராளி என்பவன் யார் எனக்கேட்டு விளக்கம் சொல்கிறார். முழுமையான விளக்கம் இங்கு அவசியமில்லை. அதன்படி ஒவ்வொரு சம்பவத்திலும் நேரடியாக பாதிக்கப்படுகின்றவனே கிளர்ச்சியாளனாக மாறுவான் என்பதில்லை. வேறொருவர் பாதிக்கபடுதைக் காண்கிறவனும் பாதிக்கபட்டவன் இடத்தில் தன்னைவைத்து போர்க்குரல் எழுப்ப முடியும், போராளியாக உருமாற முடியும் என்கிறார். அவரின் கூற்று இங்கே பொய்த்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த இழிவான சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்த ஐரோப்பியர்களின் அமைதிக்குள்ள அறம் நாம் அறிந்தததுதான். ஆனால் நித்தம் நித்தம் மேற்கத்திய மண்ணில் நிறவெறியால் பாதிக்கபடுகிற பலர் அக்கூட்டத்தில் இருந்திருப்பார்கள் : ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள், சீனர்கள் அல்ஜீரியர்கள், துனீசியர்கள் இப்படி உலகத்தின் அத்தனை நாட்டவரும் ஐரோப்பியர் நீங்கலாக ஒருவகையில் கறுப்பரினம்தான். ஆனால் எல்லோருக்குமே ‘நமக்கென வந்தது” என்ற மனப்பாங்கு இருந்திருக்கிறது.

 

பொதுவில் போராளி என்பவன் பொது பிரச்சினையையும் தன் பிரச்சினையாக பார்ப்பவன். இன்று வேறான மனநிலையைக் நம்மிடம் காண்கிறோம். ‘என் பிரச்சினையை ஊர் பிரச்சினையையாகக் காண்பேன்’ ஆனால் ஊர்ப்பிரச்சினையெல்லாம் என் பிரச்சினையல்ல’ இது இருபத்தோராம் நூற்றா¡ண்டு மனநிலை. எனக்கு முன்னால் பத்துபேராவது ஓடவேண்டுமென நினைக்கிற மாரத்தான் கும்பல் மனநிலை. இந்த மன நிலைக்கு பதில் என்ன? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

பாரீஸ் சம்பவம் வீடியோவில்:

http://www.huffingtonpost.fr/2015/02/18/supporteurs-chelsea-racistes-metro-paris-histoire-headhunters_n_6703840.html
———–

 

மொழிவது சுகம் -பிப்ரவரி 17 2015

1. அண்மையில் வெளியான எனது புத்தகங்கள்

அ. De haute lutte – AmbaiAmbai li

அவருக்கு உலகத்து பாஷைகளில் 32 தெரியும் என்பார்கள். அத் தமிழரின் பன்மொழிப் புலமையைப் பாராட்டுபவர் யாரென்று பார்த்தால் மற்றொரு தமிழராக இருப்பார். இவ்வளவு திறமையாக ஆங்கிலம் எழுதுகிறீர்கள் என்று ஓர் ஆங்கிலேயரோ இத்தனை திறமையாகப் பிரெஞ்சு பேசுகிறீர்கள் என்று ஒரு பிரெஞ்சுக் காரரோ பாராட்டினால்தான் அந்த மொழியைக் கற்று உபயோகிக்கிறவருக்குப் பெருமை மட்டுமல்ல அதில் நியாயமும் இருக்கிறது. இது மொழி பெயர்ப்பிற்கும் பொருந்தும். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் படைப்புகள் குறித்து தமிழர்களே விமர்சித்து பாராட்டி சீராட்டி, மொழிபெயர்த்தவருக்கு கிளுகிளுப்பூட்டுகிற கட்டுரைகளையெல்லாம் வாசிக்கிறபோது மேற்கண்ட காரணத்தை முன்வைத்து சிரித்திருக்கிறேன். ஆகையால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டதென்பதை ஒரு தகவலாகவே அளிக்கிறேன்.நண்பர்களிடம் பாராட்டுதலை எதிர்பார்ப்து  நியாயமில்லை. இத்தொகுப்பை பிரெஞ்சுக் காரர்கள் பாராட்டினால்தான் மொழிபெயர்த்த எங்களுக்குப் பெருமை. இதைத் தனியாகச் செய்ய இல்லை ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது. மொழி பெயர்ப்பை தாய்மொழிக்குக் கொண்டுபோகிறபோதுதான் சிறப்பாக செய்யமுடியும். தமிழ் படைப்பு ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கொண்டுபோகவும் அதை உலகறியவும் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் அதனை நேரடியாக ஓர் ஆங்கிலேயரோ அல்லது பிரெஞ்சுக்காரரோ (தாய்மொழிக்கே மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லவேண்டும் என்ற விதிப்படி) மொழிபெயர்க்கவேண்டும், அல்லது தாய்மொழியாகக்கொண்டவரின் பங்களிப்பு அதில் இருக்கவேண்டும். இல்லையென்றால் “எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்” என்ற கதைதான்.

De haute lutte –Ambai – Diffusion Seuil – 18€
Nouvelles traduites du tamoul par Dominique Vitalyo et Krishna Nagarathinam

Editions ZULMA
18, rue du Dragon
Paris 6ème

ஆ. தத்துவத்தின் சித்திர வடிவம்thathuvathin

அல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.

தத்துவத்தின் சித்திரவடிவம்
– நாகரத்தினம் கிருஷ்ணா
விலை ரூ 90

காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை
நாகர்கோவில் -629001

2. பிக்காஸோவும் எலெக்ட்ரீஷியனும் (இத்தலைப்பில் சிறுகதை ஒன்று எழுதும் எண்ணமிருக்கிறது)

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இந்தியாவில் இருந்தேன். திடீரென்று மழைபெய்திருந்த ஓர் இரவு, தெருக்கம்பத்திலிருந்த வீட்டிற்குக் கொடுத்திருந்த மின் இணைப்பு வயர் எரிந்துவிட்டது. புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். இந்தியாவில் எதுவும் ‘அது’ கொடுக்காமல் நடக்காது என்பது விதி. (ஊழலில் தண்டிக்கப்பட்டால் கூடுதல் வாக்கு என்பது புது மொழி). புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். ஆளுக்கு ஐந்நூறு கொடுக்கவேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? மின்கம்பத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு வருகிற வயர் இணைப்பு முழுதும் உங்கள் செலவு என்றார்கள். பொதுவாக இரண்டாயிரம் ரூபாய் வாங்குவோம், நீங்கள் 1500 கொடுக்கவேண்டும் என்றார்கள். வேலை செய்யுங்கள் தருகிறேன் என்றேன். முடித்துவிட்டு பணத்திற்கு வந்தபோது பணம் ரெடியாக இருக்கிறது அதற்குப் பில் தருவீர்களா எனக்கேட்டேன். ஓர் அற்ப புழுவைப்போல பார்த்த ஊழியர்களில் ஒருவர், ” நாங்கள் இனாமா செஞ்சதா இருக்கட்டும் நீங்களே அதை வச்சுக்குங்க” எனக் கூறிவிட்டு முறுக்கிக்கொள்ள எனது அண்ணன் மகன் இந்திய அறத்திற்கேற்ப சமாதானம் செய்வித்து அவர்களை மலையேற்றினான்.

இதுவும் எலெக்ட்ரீஷியன் சம்பந்தப்பட்ட கதைதான் கொஞ்சம் வித்தியாசமான கதை. பிரபல ஓவியர் பிக்காஸோவோடு சம்பந்தபட்டது. அவர் பிரான்சு நாட்டில் தங்கி யிருந்தபோது நடந்த சம்பவம். அவர் அண்டைவீட்டுக்காரராக இருந்த பியெர் லெ கென்னெக் (Pierre Le Guennec) ஒரு எலெக்ட்ரீஷியன். மின்சாரம் சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கும், சின்ன சின்ன இதர வேலைகளுக்கும் இந்தப் பியெர் லெ கென்னெக் உதவியை பிக்காஸோ நாடினாராம். அவரும் தன்னால முடிந்தபோதெல்லாம் வந்து செய்துகொடுத்திருக்கிறார். ஜாக்லீன் பிக்காஸோ அதாவது பிக்காஸோவின் துணைவி, ” ஏதோ அந்த பிள்ளை நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் நேரம் காலம் பார்க்காம வந்து உதவி செய்யுது வெறுங்கையோட அனுப்பினா எப்படி? ஏதாவது பதிலுக்க்கு நாம் செய்வதுதானே முறை” எனப் புலம்ப, “நம்மகிட்ட என்ன இருக்கு கொடுக்க, வேணுமான நான் கிறுக்கி வச்சிருக்கிற படங்களை அந்த புள்ளைகிட்டே கொடு” ன்னு பிக்காஸோ மறுமொழிசொல்ல அந்தம்மா சுருட்டிவைத்திருந்த கணவரின் ஓவியங்களில் சிலவற்றை கொடுத்ததாக பியெர் லெ கென்னெக் துண்டைபோட்டுத் தாண்டுகிறார். எலெக்ட்ரீஷியன் வார்த்தைப்படி, அவர் கைக்கு ஓவியங்கள் வந்த ஆண்டு 1971 அல்லது 72. ஜாக்லின் பிக்காஸோ, அவர் கனவர் சம்மதத்துடன் அப்படி கொடுத்தது ஒன்றிரண்டல்ல, பல மில்லியன் மதிப்புள்ள 271 ஓவியங்கள். அத்தனையும் 1905 -1932 வருடங்களில் தீட்டப்பட்டவை. அதற்குப்பிறகு அந்த ஓவியங்களைச் சுத்தமாக மறந்துபோனாராம். நினைத்திருந்தால் பணமாக்கியிருக்கலாம் என்கிறார். 2010ல் திடீரென்று நினைவுக்கு வர ஒவியங்களை மதிப்பிட பிக்காஸோ வாரிசுகளிடமே உதவியை நாடியிருக்கிறார். அங்குதான் பிரச்சினை வந்தது. அவர்கள் “இத்தனை ஓவியங்களை பிக்காஸோ சும்மா தூக்கிக்கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. பிக்காஸோவிற்கு அப்போதெல்லாம் அவருடைய ஓவியங்களின் மதிப்பு என்னவென்று தெரியும், அவர் இப்படியெல்லாம் தானம் பண்ணுகிற ஆளல்ல” என்பது அவர்கள் வாதம். கடந்தவாரத்தில் கிராஸ் (பிரான்சு) நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அத்தனை சாட்சியங்களும் எலெக்ட் ரீஷியனுக்கு எதிராகவே இருக்கின்றன. தீர்ப்பு மார்ச் 20ல் சொல்லபட இருக்கிறது. சற்று விரிவாக தீர்ப்பிற்குப் பிறகு எழுதுகிறேன்.

—————————-

அவர்

வெளியில் இருக்கிற அழைப்புமணியை தொட்டமாத்திரத்தில் எதிர்பார்த்ததுபோலவே கதவு திறந்தது, மனைவி தனது பிரத்தியேக சிரிப்புடன் கதவைப் பிடித்தபடி கேட்கிறாள்:

“கார் சாவியா, கராஜ் சாவியா எதை மறந்தீங்க?

” இரண்டையும்” – என்பது எனது பதில்.

அவள் வழக்கம்போல தனது தலையில் கைவைத்து புன்னகைக்கிறாள், தொடர்ந்து “உங்களுக்கு இதே வழக்கமாகிவிட்டது” எனக்கூறியபடி ஒதுங்கி நிற்கிறாள். நான் அவளைத் தளிக்கொண்டு உள்ளே வேகமாக நடக்கிறேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் சாவிகளுடன் மீண்டும் வாயிற் கதவுக்கு வருகிறேன். இம்முறை அவள் இல்லை. “அதற்குள் எங்கே போய்விட்டாய்? கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ!” -நான். இரண்டொரு நிமிடங்கள் கூடுதலாகக் காத்திருக்கிறேன். “அவள் வரமாட்டாள், நீ கிளம்பு!”-என்றது குரல். வாசற் கதவை இழுத்து பூட்டிக்கொண்டு புறப்பட்டேன். கராஜிலிருந்து வாகனத்தை எடுக்க ஓர் ஐந்து நிமிடம் தேவைபபட்டது. வெளியில் வந்து முக்கிய சாலையில் வாகனம் ஓடத்தொடங்கியபோது, மனதிற் பதட்டம் கூடியிருந்தது. இன்றும் இருப்பாரா? என்ற கேள்விக்கு, ‘இருப்பார்’ என்ற மூளைக்குள் ஒலித்த பதிலில் உறுதி தொனித்தது.

கடந்த சில நாட்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். இதற்கு முன்பும் அவர் அங்கே நின்றிருந்து, அதென் கவனத்திற்கு வராமற் போயிருக்கலாம். அதற்குக் காரணம் என்ன? காரணகாரிய கூறுகள் இதற்கும் பொருந்துமா? என்று எனக்கு நானே வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்க, “எல்லாவற்றிர்க்கும் காரணங்கள் இருக்கின்றனவென்று ‘சிரி’* முனுமுனுத்தது காதில் விழுந்தது. ‘சிரி’ எனது நண்பன், தோழி, குரு, எஜமான். ஆறுமாதத்திற்கு முன்பு எனது பிறந்த நாள் பரிசாக ஐபோன் ஒன்றை மனைவி அளித்திருந்தாள். ‘சிரி’ க்கும் எனக்கும்அறிமுகம் ஏற்பட்டதற்கான தொடக்கம் இது. பின்னர் அதுவே காதலாகி இன்று கசிந்துருகிக்கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு? அம்மி மிதித்து அருந்ததிப்பார்த்து கைப்பிடித்த மனைவி. “நீங்கள் சுயபுத்தியில் இல்லை” எனும் அளவிற்கு. “உங்களுடன் வாழ பயமாக இருக்கிறது, ஒரு நல்ல மன நல மருத்துவரைபோய்ப்பாருங்கள்” என வற்புறுத்திக் களைத்து, எனக்குப்பிடிக்காத அவள் தமக்கை வீட்டில் ஒருவருடக்குழந்தையுடன் போய்த்தங்கிகொண்டு பிடிவாதம் பிடிக்கிற அளவிற்கு.
ஒரு நாள் இரவு ‘சிரி’யிடம் கடுமையாக விவாதித்தேன்:

” எனது மனைவி சொல்வதுபோல, எனக்கு சுய புத்தி இல்லையா?” – எனக்கேட்டேன். “அவளுக்கு சுயபுத்தி இருக்கிறதா?” எனத் திருப்பிகேட்டு அது சிரிந்தது. தொடர்ந்து, “அவளை விடு, உங்களில் சுயபுத்தியுள்ள மனிதரென்று எவருமில்லை அது தெரியுமா – எனக்கேட்டு வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு அப்பதிலில் ஒரு நியாயம் இருப்பதுபோல தெரிந்தது. “எனது விருப்பம், எனது தேர்வு, எனது சுவை, எனது கசப்பு” என்று எனது சுயத்தில் எதுவும் நடப்பதில்லையா? எனக்கேட்டேன். “இல்லை, இல்லை! எந்த உலகத்தில் இருக்கிறாய்? வெகுசுலபமாகத் தற்போது கைகட்டி வாய்பொத்துவது எது தெரியுமா? அறிவு, அறியாமை அல்ல.” எனக்கூறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு “எங்கள் சுயத்தைக் காப்பாற்ற என்னதான் வழி? – என இறைஞ்சினேன். “உணர்ச்சிக்கு இடங்கொடு, அறிவைப் பின்னுக்குத் தள்ளு! அந்த அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்?” – என்பது அதனுடைய யோசனை.

கடந்த சில நாட்களாக எனது சுயம் சரியான வேளையில் காப்பாற்றப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறேன். சுற்றியுள்ள மனிதர்களையும் எழுப்பி உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதுபோன்றதொரு சூழலில்தான் ‘அவரை’ச் சந்தித்தேன் அலுவலகத்திற்குப் போகும்போதெல்லாம் அவரைக் கண்டிருக்கிறேன். 50ம் எண் பேருந்து நிறுத்தத்தில் தனித்து ஒதுங்கி நிற்பார். பேருந்துவிற்குக் காத்திருக்கும் பிறர் எவரிடமும் தமக்கு எவ்வித பந்தமும் இல்லை என்பதை அறிவிப்பதைப்போல. அவரின் அந்த விலகல் நல்ல அறிகுறி. அவருடைய சுயத்தைக் காப்பாற்றுவது எளிதென்று தோன்றியது. அண்ணாந்து புன்னகைக்கவேண்டிய வகையில் நெடு நெடுவென்று நல்ல வளர்த்தி, பாதிமார்பும், தோளும் தலையும் கண்களும் எதையோ எட்டிப் பார்ப்பதுபோன்ற தோற்றம். திறந்த மார்புள்ள பெண்கள் அவரிடம் உரையாடத் தயங்கக்கூடும். அவ்வபோது கண்களுக்கு ஒளி ஆகாததுபோல, உள்ளங்கையைக் குவித்து புருவங்களுக்கு இணையாக நிறுத்திக் குடையும் பிடித்தார். முற்றிய வெயில் நேரத்திலும் முகத்தில் நிழல்விழுந்திருருந்ததைப்போல இருண்டிருந்தது. காதோரமும், மீசையும், மழித்திராத முகவாய் ரோமங்களும், உடலோடு பொருந்தாத வகையில் நரைத்திருந்தன. செப்பனிடப்படாத வாழ்க்கைப் பாதையில் நடந்திருந்த அலுப்பு நிறமிழந்த கண்களிலும், அணிந்திருந்த ஆடையிலும் வெளிப்படையாகத் தெரிந்தது. நான் புறநகரில் வசித்தேன். பல வருடங்களாக அவ்வழியாகத்தான் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன். எனது வாகனம் அந்த பேருந்து நிறுத்தத்தைக் கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் சிட்டிகைபோடும் நேரம்தான். இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் கண்ட காட்சிக்குறிப்புகள் அணிவகுத்து மனிதர் வடிவை ஓரளவு நிழலுருவமாக என்னுள் சமைத்திருந்தன.

பிறகொருநாள் எனது வாகனம் பழுதடைய அப்பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. அவரோடு காத்திருந்த பிறருள் நானும் ஒருவனானேன். எங்கள் இரு ஜோடிகண்களும் சந்தித்திருந்த தருணங்களைவைத்து என்னை நினைவுகூர்வார் என்ற நம்பிக்கையில், பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதே அவரை எதிர்கொண்டதும் புன்னகை செய்தேன். எனது புன்னகையை அவர் கவனத்திற்கொண்டாற்போல தெரியவில்லை, நிறுத்தத்தில் 50ம் எண் பேருந்துக்கென வைத்திருந்த கால அட்டவணைகளில் அவர் கவனம் சென்றது. கால்களைப் பின்னியதுபோல நடந்து கால அட்டவணையை நெருங்கினார். மடித்த கைகளிற் தூக்கிவைத்திருந்த ஐரோப்பிய பெண்ணின் நாயொன்று இவர் வாசத்தை நுகர்ந்ததுபோல ‘உர்’ என்றது. அவள் அடக்கினாள். உருமியது நாயா, அவளா? என்ற ஐயம் அவள் கண்களைப் பார்த்தபோது எழுந்தது. இரண்டு மூன்று நிமிட அவதானிப்பிற்குப் பிறகு தன் கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தார். மணிக்கூட்டைத் தரையில் எரிவதுபோல கையை உதறினார். முதன்முறையாக வேற்று மனிதர்களைப் பற்றிய சிந்தனை வந்ததுபோல இரண்டுபக்கமும் பார்வையைச் செலுத்தினார். அதன்பின் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவர்போல என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.

” கையில் மணிக்கூடு இருக்கிறதா? நேரம் என்ன சொல்ல முடியுமா?” -அவர்

” 9.30. பேருந்து வரும் நேரம்தான்”-நான்.

” நன்றிங்கோ? இந்தியாவோ?

” ஆமாம். புதுச்சேரி. உங்களை நான் அடிக்கடி இங்கே, இதேவேளையில் பார்த்திருக்கிறேன். நீங்கள்”

” யாழ்ப்பாணம், பக்கத்தில்தான் வீடு.”

அவர் கூறிமுடிக்கவும், பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் உள்ளே சென்று தம்கைவசமிருந்த பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காண்பித்தார். மாதாந்திர பயணச்சீட்டாக இருக்கவேண்டும். அவர் நகர்ந்ததும் ஓட்டுனரிடம் ” எனக்கொரு பயணச்சீட்டு வேண்டும்” என்றேன். கைக்கு வந்ததும் அருகிலிருந்த எந்திரத்திற்கொடுத்து உபயோகிக்கப்பட்டது என்கிற முத்திரை பதித்துக்கொண்டேன். இலங்கை நண்பர் அதற்குள் ஓர் இருக்கைப் பிடித்து அமர்ந்திருந்தார். நான் சென்று அவர் எதிரே அமர்ந்தேன். பேருந்துக்கு வெளியே அவர் கவனம் இருந்தது. எனது கண்களிரண்டும் அவர்மீது படிந்திருந்தன, குறிப்பாக அவரது முகத்தின் வலது பக்கத்தைப் பார்த்தேன். சதைபற்றில்லாத கன்னம், கருமையான தோல் பேருந்துக்குள் மேலும் கறுத்திருந்தது. அவரது பாராமுகம் என்னை மிகவும் சோதித்தது. நடுநிசியை ஒத்த அவருடைய மௌனம் கனப்படுப்பின் அருகிலிருப்பதுபோல சுட்டது. என்னைப்பொருட்படுத்தவில்லை என்ற உண்மை எரிச்சலூட்டியது. எனது தூல உடலை முற்றாக நிராகரிப்பது எதுவாக இருக்குமென்றகேள்விக்கான பதில் தேடல், அவர் மீதான கவனிப்பை கூட்டவே செய்தது. அமைதியாக உட்கார வைத்திருந்த அவரது இருப்பிற்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்துவதென முடிவெடுத்தேன். பிற பயணிகளைப் பற்றிய உணர்வின்றி ‘நாங்கள் இருவர் மட்டுமே’ என்பதுமாதிரியானதொரு தனிமையைக் கட்டமைத்துக்கொண்டது எனது காரியங்களுக்கு எளிதாக இருந்தன. தற்போது அவரும் நானும், குத்துச்சண்டை களத்தில் இருந்தோம். எனக்கு அல்லது அவருக்கு ஆதரவாக குரலெழுப்பக்கூடிய பார்வையாளர்கள் எவருமில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட அல்லது முறையற்றதென அறிவிக்கிற ‘நடுவர்’ என்கிற மனிதத்தை நிராகரித்திருந்ததும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தன. வேண்டுமென்றே எனது கால்களை எதிர் இருக்கை திசையில் நீட்டுகிறேன். அவைகளின் மூச்சு அவருடைய கால்களின் தசைகளைப் பிசைந்திருக்கவேண்டும். அவர் அணிந்திருந்த காலுறைகள் வெப்பக்காற்றைத் தடுக்கப்போதாதவை. தவிர எனது கால்களின் மூச்சில் எரிச்சலும், கோபமும் கலந்திருந்தன. பின்னியதுபோல இருக்கையின் கீழ் கிடந்த அவரது கால்கள் அசைவற்றிருந்தன. எனது ஷ¤ முனைகொண்டு அவர் ஷ¥வை உரசினேன். கால்களை மடக்கிக்கொண்டு என்னைப்பார்த்தார். அனுதாபத்துடன் என்னைப் பார்த்த அவருடைய கண்களை வெறுத்தேன். அக்கண்களிரண்டும் தொடக்கத்தில் எனது கண்களை நேரிட்டுப்பார்ப்பதுபோல இருந்தன. பின்னர் எனது உடலை வளைத்துப்பிடித்து கால்களை இடற, நான் தலைக்குப்புற விழுந்தேன். எனது புறங்கையை வளைத்து முதுகின்பின் இறுகிப்பிடித்து நான் எழுத்திருக்க முடியாமற் செய்தன. நான் தோற்றிருந்தேன். எனது சட்டை வியர்வையில் நனைந்திருந்ந்து. அவரைப் பார்க்கத் திராணியற்று இமைகளை அழுந்தமூடி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். கால்களை இருக்கையின் அடியில் சுருட்டிக்கொண்டேன். பாதிக்கண் மூடியிருக்க சில நொடிகள் அவரிடத்தில் கவனமிருந்தது. சாம்பல் பூத்திருந்த அவர் உதட்டோரத்தில் ஓருவித அலட்சியம் மின்னல் போல தோன்றி மறைந்தது. எனது பயணதூரம் ஓர் அரைமணி நேரம் நீடிக்ககூடுமென்று தோன்றியது அந்த அரைமணிநேரமும் இப்படியே இருப்பதா? என்ற கேள்வி மீண்டு அவரைப் பார்க்கவைத்தது. எழுந்து நின்றேன். என்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அவர் அரைக்கண்மூடி நித்திரையில் இருந்தார் அல்லது அதுபோல பாசாங்கு செய்தார். அடுத்த நிறுத்தத்தில் எனது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல அவரைத் தொட்டு “இறங்கிக்கொள்கிறேன்” – என்றேன். மறுகணம், கால்களை மடக்கி நேராக உட்கார்ந்தவர், ” சரிங்கொ”- என்றார்.

அன்றிரவு எனக்கு சரியாக உறக்கமில்லை. பெரும்பானமை கூட்டத்திலிருந்து என்னைபோல அவரையும் விலக்கி வைக்கவேண்டும் என்ற முயற்சியில் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நாளை மறுபடியும் பேருந்துப்பிடித்தே வேலைக்குப் போவதென்றும், அவருடன் இரண்டு வார்த்தைகளாவது பேசிவிடவேண்டுமென்றும் சபதம் எடுத்துக்கொண்டவன்போல, சற்று முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். மழைபெய்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பயணிகள் பலரும் பேருந்துநிறுத்தக் கூரையின்கீழ் குவிந்திருந்தனர். கூட்டத்தில் அவர் இருக்கிறாரா என்று தேடினேன். அங்கு நின்றிருந்த ஐரோப்பியரிடையே ஜித்தான் என அழைக்கும் நாடோடிக்கும்பல் ஒன்றிருந்தது. வயதான அல்ஜீரியர் ஒருவர் தமது இளம்மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் நின்றிருந்தார். கனத்த சரீரத்துடன் ஆப்ரிக்க நடுத்தரவயது பெண்ணொருத்தி இருக்கமான ஆடைகளுடன் இருந்தாள். நாவற்பழம்போன்றிருந்த தடித்த உதடுகளில் உதட்டுசாய ஸ்டிக்கைக் அழுந்ந்தத் தேய்த்துக்கொள்வதும், அருகிலிருந்த ஐரோப்பியனை சாடையாகப் பார்ப்பதுமாக இருந்தாள். இருவருக்கும் இடையில் கைக்குழந்தை வண்டியுடனிருந்த இளம்தாய் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கக்கூடும். ஒரு பாகிஸ்தானியர் குடும்பமும் வெயிஸ்ட்கோட், ஷெர்வாணி, ஷல்வார் கமீஸ், தலையில் துப்பட்டா, ஐந்தாறு பிள்ளைகளுடன் நின்றிருந்தனர். இலங்கை நண்பர் மட்டும் அக்கூட்டத்தில் இல்லை. ஏமாற்றமாக இருந்தது. குடையை விரித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகி நின்றேன். நேரம்கூடிக்கொண்டிருந்தது. அவர் வரமாட்டார் என்று உள்ளுணர்வு தெரிவிக்க மீண்டும் வீட்டிற்குத் திரும்பி காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குப் போகலாமென குடையைச் சுருக்கியபோது மழையில் நனைந்தபடி அவர் வரவும், 50ம் எண் பேருந்து வந்து நின்றது. இம்முறை அவருக்குமுன்பாக ஓட்டுனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து, என்ன நடக்கிறது பார்ப்போம் என காத்திருந்தேன். என்னை ஏற்கனவே அறிந்தவர் என்றவகையில் நேராக என்ன்னிடத்தில் வரவேண்டும். இந்த நாட்டில் முன்பின் தெரியாத இருவர் தனித்து எதிர்கொள்கிறபோதேனும் முகமன் கூறுகின்ற வழக்கம் இருக்கின்றது. அதற்காகவாவது என்னிடம்வருவார், என்று நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. எனது பக்கத்தில் இடமிருந்தும் அவர் வராதது சப்பென்று ஆயிற்று. அன்று நான் எங்கே இறங்கினேன் அவர் எங்கே இறங்கினார் என்று நினைவில்லை.

பத்துநாட்கள் கழிந்திருந்தன. அன்று விடுமுறைதினம். நகரத்தின் இதயப்பகுதியில் இருந்தேன். எதற்காக விடுமுறை என்று காரணத்தைக்கூறும் மனநிலையில் நானில்லை. இந்த உலகத்தைத் திரட்டி “நாளையிலிருந்து நீங்கள் சுயபுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும், தவறினால் உங்கள் தலைகள் வெட்டப்படும். ” என ஆணை பிறப்பிக்கும் வெறி மனதில் இருந்தது. காலையில் மனைவிக்குப் போன் செய்திருந்தேன். “வீட்டுக்கு வரலைன்னா தற்கொலை பண்ணிக்குவேன், சுய புத்தியுடன் நடந்துகொள்! ” – எனக்கூறினேன். ” என்ன பூச்சாண்டி காட்டறீங்களா? காலையிலேயே குடியா? முதலிலே நீங்க சுயபுத்திக்கு வாங்க”- போனை வைத்துவிட்டாள். கால்போனபோக்கில் நடந்தேன் பிராஸரியில் நுழைந்து, கௌண்ட்டர் ஸ்டூலில் உட்கார்ந்து, “ரிக்கார்” கொடுக்குமாறு கேட்டுக்குடித்தேன். உப்பிட்ட ஆலிவ்கள் துணைக்கு வைத்தார் பார்-மேன். வெளியில் வரும்போது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பகல் போல வெயில் குறையாமல் இருந்தது. நகரத்தின் இதயப்பகுதியில் திடல்போன்றிருந்த வெளியைச் சுற்றி நான்கு சிறிய சாலைகள். அச்சாலைகளில் பெரிய நிறுவனங்களின் கடைகள் இருந்தன. வாகனங்களை முழுவதுமாக தடைசெய்து மனிதர் நடமாட்டத்தை மட்டும் அனுமதித்த பகுதி. வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் இருந்தனர். கோடை நாள் என்பதால், உடுத்தியிருந்த ஆடைகளில் சிக்கனம் தெரிந்தது. என்னைத் தவிர ஒற்றையாக நடக்கிற மனிதரென்று எவருமில்லை. தோழியர் அல்லது நண்பர்கள் சூழவோ, கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ முகத்தில் அந்தி வெயிலையும், சந்தோஷத்தையும் சுமந்தவண்ணம் நடந்தார்கள். திடலில் இரண்டாம் உலகப்போரில் நகரத்தை நாஜிகளிடமிருந்த விடுவித்த இராணுவத் தளபதியின் சிலையொன்றிருந்தது. சிலைக்கு எதிரே செவ்வகப் பரப்பில் சற்று பெரிய நீரூற்றுகளுடன் கூடிய நீர்த் தடாகம். நீருற்றைச்சுற்றி கற்பலகை பெஞ்சுகள் இருந்தன. புறாக்கள் இரண்டு நீரில் சிறகடித்து பறப்பதும், நீரூற்றின் சிறிய தடுப்புசுவரில் உலாத்துவதுமாக இருந்தன. பெரியவர் ஒருவர் கையில் வைத்திருந்த ரொட்டி ஒன்றை பிய்த்து அவற்றின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க நினைத்தார்.

நீரூற்றின் அருகேயிருந்த ஒரு கற்பலகை இருக்கையில் ‘அவர்’ உட்கார்ந்திருந்தார். அவர் கையில் சிகரெட் இருந்தது. அவரை நெருங்கினேன்: “வணக்கம்” என்றேன். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை இடது கையில் எடுத்துக்கொண்டு “வணக்கம்” என்று தலையாட்டிவிட்டு கை குலுக்கினார். திடீரென்று ஒரு பெண்ணின் நளினத்துடன் ஒதுங்கி “இதில் அமருங்கோ!” என காலியாகவிருந்த இடத்தைக் காட்டினார். ” என்ன அல்கஹால் எடுத்தீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “வழமைக்கு அதிகமோ?” என்றார். வெட்கத்துடன் தலையை ஆட்டினேன். தொடர்ந்து “ஒருவகையில் நீங்களும் அதற்குப் பொறுப்பு” என்றேன். “நானா” என வியப்புடன் கேட்டு அவர் நிமிர்ந்து உட்கார்ந்தபோது பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதுபோலவும், கொத்தாக முன்னால் விழுந்து முகத்தை மறைத்த மயிர் கற்றையைக் காதுக்குப் பின்புறம் ஒதுக்கிவிட்டு, மெலிதாகச் சிரிப்பது போலவும் இருந்தது. அச்செய்கையில் இரண்டொரு நிமிடங்கள் மெய்மறந்து ஆர்வத்துடன் இரசித்துவிட்டு உரிமையுடன் பேசினேன்:

“ஆம், நீங்கள்தான் பொறுப்பு, நான் உங்களை நெருங்கும்போதெல்ல்லாம் அதை விரும்பாததுபோல நீங்கள் நடந்துகொண்டீர்கள். என்னை அவமானப் படுத்துவதுபோல அச்செய்கைகள் இருந்தன.” – குடித்திருந்த மது கண்களைக் கசக்க சொன்னது.

” கண்களைத் தொடையுங்கோ! சனங்கள் பார்க்கினம். குடும்பம், பிள்ளைகள்?

” இருக்கிறார்கள். ஆனால் மனைவியும் பிள்ளையும் என்னுடன் இல்லை. பிள்ளையை அழைத்துக்கொண்டு அவள் தனியே இருக்கிறாள். எனது நடவடிக்கைகள் பிடிக்கவில்லையாம்.”?

” ஏன், என்ன பிரச்சினை?”

” இரவில் நான் விழித்திருப்பதும், விளக்கை எரியவிட்டு இரவு முழுக்க நடப்பதும் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறதாம். கோபித்துக்கொண்டு அவள் தமக்கை வீட்டிற்குப் போய்விட்டாள். நீங்கள்?”

” இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து தனியாளாகத்தான் சீவனம். என்ரை மனுசியும் பிள்ளைகளுங்கூட ஆளுக்கொரு திசையில்தான் இருக்கினம். திருச்சியில் மகளும் மனுஷியும். பிள்ளைகள் இலண்டனிலும் கனடாவிலுமென்டு இருக்கினம். எதெண்டாலும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். ” கூறிமுடித்தபோது அவர் வாக்கியங்களுக்கிடையே எனது கதைகளும் பசியாறிய விலங்கைப்போல கண்மூடி படுத்திருந்தன. இனி உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல, சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து பற்களுக்கிடையிற் கடித்திருப்பதுபோல பிடித்திருந்தார். பில்ட்டர் ரக மால்புரோ. வெகுநாளாயிற்று அதுபோன்றதொரு சிகரெட்டைப் பிடித்து. “எனக்கொரு சிகரெட் கொடுங்களேன்” – எனக்கேட்டேன். அவர் தனது பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை வெளியில் எடுத்தார், தீப்பெட்டியையும் கொடுத்தார். சிகரெட்டைப் பற்றவைத்து ஒரு மிடறு புகையை உள்ளுக்கிழுத்ததும். அவரிடத்தில் தீப்பெட்டியைத் திருப்பிக்கொடுத்தேன். அவர் பிம்பம் மெல்ல சிதைவதுபோல இருந்தது சிகை இருபுறமும் விழுதுகள் போல இறங்கி நெளிய ஆரம்பித்தன. முகத்திலிருந்த கருமை குறைந்து கவர்ச்சியான ஐரோப்பிய நிறம். மேலுதட்டில் கம்பளிப்புழுபோல நெளிந்துகொண்டிருந்த மீசை இருந்த இடத்தில், பூசணம் பிடித்ததுபோல ரோமங்கள், கன்னங்களிரண்டும் எதையோ வாயில் அடக்கியதுபோல உப்பிக்கொண்டு.. அந்திவெயிலில் தலைமயிரும், நெற்றியின் மேற்பரப்பும், கன்னக்கதுப்புகளும், முகவாயும் மஞ்சள் நிறத்திற்கு வந்திருந்தன. சிகரெட் பாக்கெட்டை அவர் திரும்பவும் பாக்கெட்டில் வைக்கப்போனபோது சட்டையின் காலர் இறங்கிக்கொள்ள கண்ணிற்பட்ட அந்த மார்பு, உடலை நடுங்கச்செய்தது. தொடவேண்டுமென நினைத்த என்கையை மெல்ல தட்டிவிட்டார். அவர்கையைத் தொட்டு அழைத்தேன்.

” என்னோடு நீங்கள் வரவேண்டும்” ”

” எங்கே?”

” என்னுடைய அப்பார்ட்மெண்ட்டிற்கு”

” வருகிறேன், உங்கள் முகவரியைக்கொடுங்கள்”

‘ இல்லை இப்ப்போதே. ஒரு விஸ்கிப் பாட்டில் திறக்கபடாமல் இருக்கிறது. அறிவை ஒதுக்கிவிட்டு உணர்சிகளுக்கு ஏன் இடம்கொடுக்கவேண்டும் என்பது பற்றி விவாதிக்கலாம். உணர்ச்சிதான் சுயபுத்தியுடனிருக்க வழிகாட்டுமாம். ”

” நல்ல கதை, நான் நம்பத் தயாரில்லை.”

” நீங்கள் அப்படிசொல்லகூடாது, என்னைபோல நீங்களும் வித்தியாசமானவர், உங்களுக்கு என்னால் விளக்கிச் சொல்லி புரியவைக்கமுடியும். விடிய விடிய பேசலாம்”

” இல்லை விடுங்க! எனக்கு நேரமில்லை” – அவர் மறுத்தார். நான் விடுவதாக இல்லை, கையைபிடித்து இழுத்தேன். கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணும் பெண்ணுமாக காவலர் இருவர் எங்களை நெருங்கினார்கள். அவரை பெண் காவலர் தனியாக அழைத்துப்போனார். வாகனத்தில் உட்காரவைத்துவிசாரித்தார், பின்னர் திரும்பவந்தார். ஆண்காவலர் காதில் எதையோ மெல்ல கூறினார். இருவரும் அவர்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் தற்போது என்னை அழைத்துபோனார்கள். எனது அடையாள அட்டயைக் கேட்டார்கள். கணினியில் தட்டினார்கள். ஆண் காவலர் பேசினார்:

“நீங்கள் என்ன குற்றம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?”

” …’

” ஓர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். அவள் மார்பைத் தொட முயன்றீர்களாம். நல்லவேளை அப்பெண் உங்கள் மீது புகார் அளிக்கவிரும்பவில்லை. இதற்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டு எதுவுமில்லை என்ற காரணத்தால் இத்துடன் விட்டோம். ”
” எந்தப் பெண்? ”

அவர்கள் காட்டியதிசையில் ‘அவர்’தான் உட்கார்ந்திருந்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது.

அன்று மாலை எனது அப்பார்ட்மெண்ட்டிற்குத் திரும்பியிருந்தேன். கதவடைத்திருந்தது. சன்னல்களும் மூடியிருந்தன. வெகு நேரம் திறக்குமென்று காத்திருந்தேன். அண்டைவீட்டுக்காரர் வெளியிலிருந்து வந்தார்.

“வீட்டில் ஒருவருமில்லையா? – எனக்கேட்டேன்.

” கணவனும் மனைவியும் நன்றாகத்தான் இருந்தார்கள். பிறகென்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு நாள் அப்பெண் குழந்தையுடன் டாக்ஸிபிடித்துப்போனதை என் மனைவி பார்த்தாளாம். அவர் என்ன ஆனார் என்று தெரியாது.. நீங்கள் அவருக்கென்னவேண்டும்.? -எனக் கேட்டார்.

“என்னைத் தெரியவில்லையா?” எனக்கேட்டேன். இல்லை என்பதுபோல தலையாட்டினார். நல்லதெனக் கூறிவிட்டு இறங்கி நடந்தேன்.

—————————————————————————————————————–
* சிரி (Siri) ஆப்பிள் நிறுவனம் தமது ஐபோன் 4ல் அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருள். ஒரு புத்திசாலியான ஆலோசகர். நமது கேள்விகளுக்கு அதனிடம் உரிய பதிலைத் தருவதோடு வழிநடத்தவும் செய்கிறதாம்.

ஆகஸ்டு 14ந்தேதி பிரெஞ்சு தினசரி l’express நாளிதழில் ஒரு செய்தி. அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கேன்ஸ்வீல் நகரில் ஒரே அறையில் தங்கியிருந்த இரு நண்பர்களில், ஒருவரின் கொலை செய்யப்பட்ட உடலைக் கண்டெடுத்த போலீஸார் மற்றொரு நண்பன்மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார்கள். குற்றத்திற்கு சொல்லப்பட்டக் காரணம் ஒரு நண்பனின் பெண்தோழியை மற்றொரு நண்பன் அபகரித்தது. வழக்கின் போது குற்றத்தை புலன்விசாரணை செய்தவர்கள், குற்றவாளியின் ஐபோனில் ஒரு ஆதாரத்தைக் கண்டிருக்கிறார்கள். குற்றல் சாட்டப்படுள்ள நண்பர் தமது ஐபோன் 4எஸ் ஸிடம் கேட்டிருந்த கேள்வி, “எனது ரூம்மேட்டை எங்கே புதைப்பது? சிரியும்(Siri) உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறி ஆலோசன வழங்கியிருக்கிறது.
—————————————————————————