கரந்தடி சீனு. தமிழ்மணி

Tamize புதுவை சீனு . தமிழ் மணியை இனி கரந்தடி சீனு. தமிழ்மணி  என்று அழைக்கலாம்.

‘இலக்கியம்’  என்ற புத்தகக் கடையைப் புதுச்சேரியைச் சேர்ந்த குயவர்பாளையம் பகுதியில்  நடத்துகிறார் என்று தொடங்கியது அவரது அறிமுகம். மாத்தாஹரி நாவல் வந்திருந்த நேரம். புத்தகக் கடையில்  அவரது வாடிக்கையாளர்களும் இலக்கிய அபிமானிகளுமாக இருந்த ஒரு சிலருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தார்.  நன்றிக்கடன் அவர்மீது அன்பு செலுத்த வழிவகைசெய்தது. அது நாள்முதல்  அவதானித்து  வருகிறேன்.  இனப்பற்று, தமிழ்த் தேசியம், பெரியார் மீது தீராக் காதல், பூவுலக நண்பர்கள், துளிப்பா கவிஞர், துளிப்பா புரவலர் என பலமுகங்களுக்கு அவர் சொந்தக்காரர், என்கிறபோதும் அவருக்கு சமூகப் போராளி என்கிற ஒற்றைச்சொல் கச்சிதமான கவசம். தமிழ்மணி அதிசயமணியாக எனக்குப் பட்டார்.  நல்ல மனிதர்களை அடையாளப்படுத்துகிற  நண்பர் வெ.சுப நாயகருக்கு இதற்கும் நன்றி சொல்லவேண்டும்.  அகம், புறம் இரண்டிலும் அவர் தமிழ் மணிதான், தன் குடும்பத்தைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகளில், நண்பர்கள் நலனில்  கூடுதல் அக்கறை, அநீதிகண்டு கொதிக்கும் மனம்,  எனப் பார்க்கிறபோது அவர் பெயருக்கு முன்னொட்டாக கரந்தடி பொருந்துகிறது.  அடுத்ததாக இந்தப் பெயர் அவருக்கு ஏற்றதுதான் என நான் நினைப்பதற்குக் காரணம்,  ‘கரந்தடி’ துளிப்பா இதழைத் தொடங்கி நடத்தினார் என்றச் சிக்கலில்லாத உண்மை.

அவருடைய இலக்கிய பங்களிப்பை  ஆழமாக உணரத் தவறி இருக்கிறேன்.  ஹைக்கூ என் கிற துளிப்பாக்களை அக்கறைகொண்டு வாசித்தவனல்ல. அன்பிற்குரிய  ஈரோடு தமிழன்பன் எழுதியவை என்னிடம் இருக்கின்றன, அவற்றை வாசித்து மகிழ்ந்த துண்டு, அதன் பின்னர் வாசித்தவை முழுக்கமுழுக்க  தமிழ் மணி குடும்பத்தாருக்குச் சொந்தமானவை. நண்பர் தமிழ்மணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரம் வாங்கி வந்தவர்கள்போல துளிப்பாக்கள் எழுதுகிறார்கள். நன்றாக எழுதவும் செய்கிறார்கள்.

அண்மையில் அவருடைய  காவ்யா வெளியீடான ‘ஆய்வுப் பதிவுகள்’ என்ற நூலை வாசித்தேன். ஆலா, ம. ஞானசேகரன், ‘ஓவியம்’ தமிழ்ச்செல்வி, அர. சந்திரசேகரன், கரசூர் பத்ம பாரதி, புதுவை யுகபாரதி ஆகியோரின் துளிப்பா  தொகுப்புகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்.   கட்டுரைகள் விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளன.  ஹைக்கூ எனப் பொதுவில் அறியப் பட் டதைத்தான், சீனு. தமிழ்மணி துளிப்பா என அழகாகச் சொல்கிறார். துளிப்பாவின் தோற்றம், வளர்ச்சி, தற்காலத்  தமிழுக்கு அவற்றின் பங்களிப்பு, கவிதகள் பற்றிய விளக்கமான ஆய்வு, அவ்வாசியர்களைபற்றிய அறிமுகம்  என விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்து பக்கங்களுக்கு மேல்  எழுதப் பட்டுள்ளது.

ஆய்வுப் பதிவுகள் என்ற இந்த நூலில் இரண்டு விடயங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதலாவதாக வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம துளிப்பாவின் வரலாற்றையும், உடற்கூற்றையும் தெளிவாய்ச் சொல்ல நினைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். துளிப்பா எப்போது பிறந்தது, எங்கே பிறந்தது ? பெற்றோர்கள் யார் ? எப்படி எழுதினால் சிறப்பு ? துளிப்பாவில் படிமத்தின் பங்கு என்ன ? குறியீடு எப்படி ? இப்படி  எல்லாச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் புதிதாக துளிப்பா எழுத நினைக்கிறவர்கள் நல்ல துளிப்பாக்களைத் தரமுடியும் என்பதோடு, எழுதிக்கொண்டிருப்பவர்களும் தங்கள் துளிப்பா வடிக்கும்  திறனை வளர்த்துக்கொள்ள உதவும். அடுத்ததாக நான்  இந்த நூலில் வியந்தது, அவர் துளிப்பாக்களைக்குறித்தும் அவற்றின் பொருள் குறித்தும், படிமம் குறியீடு ஆகியவைப் பற்றி மட்டும் பேசாமல், கவிஞர்களின் பின்புலம், துளிப்பாவின் கருப்பொருளாக ஒன்றைத் தேர்வு செய்யக் காரணம் முதலானவற்றை  விரிவாக எவ்வித சமரசத்திற்கு இடம் கொடாமல் தயக்கமின்றி பேசுகிறார். உள்ளத்தில் ஒளி உண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும் என்பது, அவர் உபயோகிக்கும் சொற்கள் தெரிவிக்கும் உண்மை. இனி நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

  1. இங்கும் தோகுவா காலம்

‘ஆலா’ என்ற கவிஞரின் துளிப்பா நூலைப்பற்றிய இலக்கிய ஆய்வு இக்கட்டுரை.  நூலைக்குறித்த  விமர்சனத்திற்குள் நுழைவதற்கு முன்பாக புதுச்சேரி துளிப்பாவின் வளர்ச்சியை, தன் குழந்தையின் வளர்ச்சிக்கண்டு பெருமைபடும் இளந்தாயின் மனக்கிளர்ச்சியுடன் தமிழ்மணி  விவரிக்கிறார். தமிழக அரசு நடத்திய துளிப்பா கருத்தரங்கில் புதுச்சேரி கவிஞர்கள் கலந்து கொண்டமை, புதுச்சேரியில் சீனு தமிழ்மணியின் தலைமையில் வாசிக்கபட்ட கட்டுரைகள், தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் துளிப்பா  நூல்கள் வெளியீடு. இன்றைய தேதியில் யார் யாரெல்லாம் துளிப்பாவையில் அக்கறை செலுத்துகின்றனர் என்ற விவரங்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார்.  புதுச்சேரிக்கும் தமிழ்த் துளிப்பா உலகிற்கும் உள்ள உறவை பெருமித த்தோடு குறிப்பிடுகிறார்.

ஆலா வின் துளிப்பாக்கள் : :

«  விழுதுகள் தாங்கும்/ஆலமரம் /முதியோரில்லம் »

« மாலையில்/சந்திக்குமிடம்/கோலத்தில் குறியீடு ; »

«  தூரம் அதிகமாக/ஈர்ப்புவிசைக்கூடும்/காதலின் விதி ! »

 

2. புதுச்சேரி துளிப்பாக்களின் தொட்டில்

இக்கட்டுரை  புதுச்சேரி ம, ஞானசேகரனின் துளிப்பா  தொகுப்பு பற்றியது

தொகுப்பிலுள்ள துளிப்பாக்கள், நாத்திக விமர்சனப் பார்வையுடனும், சமயம்,  சாதி வழக்கைக் கண்டித்தும்  சொல்லப்பட்டுள்ளன.

சக்கிலி குளம்/வண்ணான் குளம் / பெரியார் நகர்

மரம் வெட்டி/கட்டிய வீட்டில்/ பறவைகள்  உச்சம்

மாடு விரட்டுகிறான்/மறத்தமிழன்/ ஊரில் மார்வாடி

போன்ற கவிதைகள் நல்ல உதாரணங்கள்

 

3 .ஓவியர் தமிழ்ச்செல்வி எழுதிய துளிப்பாக்களைக் குறித்த ஆய்வு

இக்கட்டுரையில்  நல்ல துளிப்பாவிற்குரிய  அடையாளங்களை மேனாட்டு அறிஞர்களின் கருத்தூடாக  கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

« ஓரளவு சரியானச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்றில்லாமல் மிகச்சரியான சொல்லையே பயன்படுத்த வேண்டும்,  பாவலன் என்ன உணர்ந்தானோ அதை அப்படியே வாசகன் உணரும்படி வெளியிடவேண்டும் » என்பது போன்ற துறைசார்ந்த அறிஞர்களின் படிமக் கொள்கைகளை ஆசிரியர்   நினைவூட்டுகிறார்.தவிர « துளிப்பாவின் வடிவ உத்திகளை சரிவர புரிந்துகொள்ளாமல் பலர் கிளம்பிவந்துவிட்டதால் தமிழ்த் துளிப்பா சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது பேருண்மையே. துளிப்பா எழுத முனைவோர் சபானியத் துளிபாக்களின் மொழிபெயர்ப்பைக் கட்டாயம் படிக்க வேண்டும் . சப்பானிய துளிப்பா குறித்த கட்டுரைகளையும் படிக்க வேண்டும் » என்ற கட்டுரை ஆசிரியரின் ஆதங்கத்தையும், ஆலோசனையையும் புதிதாகத் துளிப்பா எழுதுகிறவர்கள் மனதில்  நிறுத்துவது நல்லது.

துளிப்பா கவிஞர் தமிழ்ச்செல்வி பாக்கள் மணக்கொடை என் கிற வரதட்சணை, பெண்விடுதலை ஆகியனவற்றைக் குறித்து பேசுபவையாக  உள்ளன.

உருவம் இல்லாத பூதம் /பெண்ணையே அழிக்கும் /வரதட்சனை

பெண்கள் விரும்பி ஏற்கும்/ விலங்கு/ தாலி

 

  1. சிற்றுளி நன்றாகச் செதுக்குகிறது

அர. சந்திரசேகரன் என்பவரது கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட  கட்டுரை.

நீர் நிலைகளை ஆக்ரமித்து வீடுகள் கட்டப்பட அந்த வீடுகளுக்கு ஏற்பட்ட முடிவினை அண்மையில் சென்னை வெள்ளம் போதித்தப் பாட த்தால் அறிந்தோம்.

பொய்யாக்குளத்துள்/ புதுப்புது வீடுகள் /பொய்த்த மழை

என்ற இக்கவிதைக்கு, வழக்கமாகவே ஒரு கவிதையின் பொருள் குறித்துப் பேசுவதற்கு முன்பாக நீண்ட விளக்கத்தின் ஊடாக கவிதையை நெருங்குகிற  தமிழ் மணி,  இயற்கை உபாசகர் என்பதால் எழுத்துஇரட்டிபாகிறது :

« வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி எனத் தமிழிலக்கியப் பதிவுகளில் ‘பொய்யா’ எனும் அடைமொழி ‘வற்றாத’  எனும் பொருள் தரும். ஆகப் பொய்யாக்குளம் வற்றாத குளமாக இருந்திருக்கிறது. பொய்யாக்குளம் பொய்த்த குளமாகிப் போனதற்குக் காரணம்மக்களே. சுற்றுச் சூழல் பாதிப்பால் மழை சரிவரப் பெய்யாததால் பள்ளமான இடத்தில் வீடுகள் கட்டிவிட் டனர். அப்படி மழைப் பெய்தால் பள்ளத்தில் நீர்த் தங்கத்தானே  செய்யும் …. » (பக்கம்-59)

 

  1. முகங்கள்

கரசூர் பத்மபாரதி என்ற பெண்கவிஞரின் துளிப்பா தொகுப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை.

இக்கட்டுரையிலும் ஆசிரியர், பெண்ணியம் குறித்து பல தகவல்களை அளித்தபின்பே தொகுப்பை பரிசீலிக்கிறார்.

உதாரணத்திற்கு எடுத்தாண்டுள்ள துளிப்பாக்களில் சில

இச்சைக் கணவன்/ ஏங்கும் மனைவி /அந்த மூன்றாம் நாள்

தேனீருட ன் /தேக க் கட்டை வணிகம்/ பெண்பார்க்கும் படலம்

 

  1. அரசமரம்

புதுவையைச் சேர்ந்த அரசு அலுவலர் யுகபாரதி என்பவர் எழுதிய துளிப்பாக்கள் தொகுப்பு குறீத்து எழுதப்பட் டக் கட்டுரை.

யுகபாரதியின் கவிதைகள் அர்த்தம் பொதிந்தவை ஒரு வகையில் அரசு அலுவலர்கள் பற்றிய சுய விமர்சனமும் கூட

மின்விசிறிகள் விளக்குகள்/வெறும் நாற்காலிகளுடன்

பல அரசு அலுவலகங்கள்

நூலில் இறுதியாக இடம் பெற்றுள்ள ‘புதிய புதிய சிந்தனைகளில்புதிய புதிய நகைத் துளிப்பாக்கள்  என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. இது ஹைக்கூ வகைப்பாட்டில் ‘சென்ரியு’ வகைக் குறித்துப் பேசுகிறது.

கட்டுரையாளரும் அவர் சகோதர ர் தமிழ்  நெஞ்சனும் இணைந்து வெளியிட்ட தீவின் தாகம், இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள்  நூலிலும் நகைத் துளிப்பாக்களை (சென்ரியு) துளிப்பாக்கள் என்ற பெயரிலேயே வெளியிட்டிருந்த தாகவும் ஆனால் 2007இல் கரந்தடி என்ற நூலில் துளிப்பா, நகைத்துளிப்பா, ஈறுதொடங்கித் துளிப்பா, இயைபு துளிப்பா ( லிமரைக்கூ ), உரைத் துளிப்பா ( ஐபுன் ) எனத் தனித் தனியாகப் பிரித்தெடுத்துத் தமிழில் முதன் முதலாக  வெளியிட்தாகவும் தெரிவிக்கிறார். இது தவிர விரிவான வேறு உபயோகமுள்ள செய்திகளும் உள்ளன.

நூலின் பதிப்பாசிரியர் இப்படி எழுதுகிறார் :

« நண்பர் சீனு தமிழ்மணி புதுவையில் இலக்கியா மூலம், பல புதுமைகள் செய்து வருகிறார். நல்ல நூல்களை விற்பதோடு நல்ல நூல்களை எழுதவும் முயன்றுவருகிறார். சமீபத்திய அவருடைய ஆர்வம் ஹைக்கூ பற்றிய ஆய்வுகளாகும்.  இதுவரை ஹைக்கூ பற்றி வெளிவந்துள்ள ஆய்வுகட்டுரைகளை தொகுக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்லார் என்றே சொல்ல வேண்டும். அதற்கான அடையாளம் இந்த நூலில் உள்ளது »

நூலைப்பற்றிய ஒரு  முடிவுடன் வாசிப்பதில் கவனம் செலுத்த பதிப்பாளரின் இந்த அறிமுக வரிகள் உதவுகின்றன. எதனால் இதைக்குறிப்பிட வேண்டியிருக்கிறதெனில், துளிப்பா என்று அழகான தமிழ்பெயரைக் கொண்ட இவ்வகை பாக்களோடு எனக்கு அதிகப் பரிச்சயம் கிடையாது. பொருள் பொதிந்த, உபயோகமுள்ள பலச் செய்திகளை இந்த நூல் மூலம்  பெறமுடிந்த து.  கவிஞர் சீனு. தமிழ்மணி ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 8 நூல்களில்  உள்ள படைப்புகள் அவரது மன நிலைக்கு ஒத்திசைவானவை, அவரது கொள்கைகளை எதிரொலிப்பவை. சமூக உணர்வு கொண்டவர்கள், தன்னைச்சுற்றியுள்ள மக்கள் உணர்வுடன் இருக்கவேண்டும் என்று  விரும்புவர்கள், வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய நூல். உலகச் சமூகத்தில் காண்கிற மையப்பிரச்சினைகளையும், தமிழ் சமூகத்தில் காண்கிற தனித்துவமான சிக்கல்களையும்   பேசுகிற துளிப்பாக்கள் தொகுப்புகளை கட்டுரையாளர் பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். பகுத்தறிவு, தமிழ்த் தேசியம், பெண்ணியம், இன்றைய சமூகத்தைக் குறித்த கடுமையான விமர்சனங்கள்,  சுற்றுபுற சூழலென்று  இன்றைய உலகளாவிய மானுட பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நூல்கள் என்பது ஒரு புறம், அவற்றூடாக கரந்தடி சீனு தமிழ் மணி ஹைக்கூ கவிதைகளுக்கு வலிமை சேர்க்கும் புரிதலை நிகழ்த்தியுள்ளார் என்பது இன்னொருபுறம். இந் நூல் ஹைக்கூ பற்றிய ஆய்வுப் பதிவு மட்டுமல்ல, கையடக்கமான ஹைக்கூ குறித்த கலைக் களஞ்சியமும்  ஆகும்.

 

ஆய்வுப்பதிவுகள்

ஆசிரியர் புதுவைச் சீனு தமிழ்மணி

காவ்யா பதிப்பகம்

சென்னை624

 

 

 

 

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சனங்கள்-10: ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவல் குறித்து -க. பஞ்சாங்கம்

 வலியை உற்பத்தி பண்ணும் எழுத்து-க. பஞ்சாங்கம்

panchu

மொழி அறிந்த மனிதராகப்பட்டவர் எழுத்தாளராக மாறும் புள்ளி பிறரைப் பார்ப்பதுபோலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும்போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண்கொண்டு பார்க்காமல் பிறர் கண்கொண்டும் பார்க்க வேண்டும். பாரீஸ் பண்பாட்டோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக்கொள்வதற்கான சூழலில், அவரின் எழுத்து மொழி தமிழாக இருந்தாலும், புனைவெழுத்து உலகம் தழுவி நீட்சிபெறுவதை அன்னாரின் நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்தப் புனைவும் செக்நாட்டைச் சேர்ந்த பிராஹா, பிரஞ்சு நாட்டைச் சார்ந்த பாரீஸ், கொல்மார், ஸ்ட்ராஸ்பூர், ஜெர்மனியைச் சார்ந்த பிராங்பர்ட், ஈழத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, இந்தியாவின் வடக்குப் பகுதியான புதுடில்லி, ரிஷிகேஷ், தென்பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி, கன்னியாகுமரி என உலகம் தழுவிய ‘களத்தில்’ கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பருவ காலம் – பொழுதுகள் என்ற முதற் பொருளும், தெய்வம், உணவு, மரம், விலங்கு, பறவை, ஆறு முதலிய கருப்பொருட்கள் பலவும் உலகம் சார்ந்ததாக அமைந்துள்ளன. எடுத்துரைப்பின் இந்தப் புதிய பின்புலங்கள் அது பேசும் புதியபுதிய வடிவங்களுக்குக் கூடுதலான அழகைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. எப்பொழுதுமே எழுத்தின் அழகியல் அது பேசும் பொருளில் மட்டும் இல்லை, புதிய களங்களைக் கட்டமைக்கும் வடிவ நேர்த்தியிலும்தான் குடிகொண்டுள்ளது.

இவ்வாறு உலகம் தழுவிய பின்புலத்தில் மனித வாழ்வின் அபத்தங்கள், ஆண் – பெண் உறவின் ஊடே வினைபுரியும் அசிங்கங்கள், மரணம் குறித்த மனித உயிர்களின் விளக்கங்கள், ஈழப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வாழநேர்ந்தாலும் போட்டி, பொறாமை, காமக் குரோதம், சூழ்ச்சி என ஒன்றிலும் சிறிதும் குறையாமல் ஒரு சிறிதும் மாறாமல் வழக்கம்போல் தரமற்ற வாழ்க்கையையே எவ்வாறு நடத்த முடிகிறது என்ற வியப்பில் எழும் எழுத்துக்கள், பிரான்ஸில் வாழ ஆசைப்பட்டு, ஏதாவதொரு பிரான்ஸ் நாட்டுக் குடிமகளைத் திருமணம் முடித்துக்கொண்டு, அவளின் ‘நாய்க்குட்டியாக’த் தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் புதுச்சேரி வாழ் தமிழர்களின் துக்கம், ஈழத்திலிருந்து பிரான்ஸில் முறையற்றுக் குடியேறியதால் வழக்கில் சிக்கிக்கொண்ட ஈழத் தமிழர்கள், நீதிமன்றத்தில் கூறும் வாக்குமூலங்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் அனுபவங்களைச் சித்திரிப்பதன்மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், ‘அங்கே இங்கே’ என்று விவரிக்கும் தன்மை என நாவல் பன்முகமாக விரிகிறது; வாசகர்களையும் தன்னோடு உரையாடியே தீருமாறு தனது எடுத்துரைப்பு மொழிமூலம் சாதித்துக்கொள்கிறது.

புலம்பெயர்ந்து வாழநேர்ந்த ஒருவர்க்குள் தன் மண்சார்ந்த நினைவுகளும் விசாரணைகளும் கூடிவந்து வினைபுரிவதைத் தவிர்க்க முடியாது. நாவலாசிரியர் காஃப்காவின் நினைவுகளோடு உலகம் தழுவிய ஒரு சூழலில் நாவலை நடத்திக்கொண்டு போனாலும், தன் மண்சார்ந்த தமிழர்களின் வாழ்வு இருக்கும் நிலை குறித்து உள்ளம் நோகாமல் இருக்க முடியவில்லை. இன்று உலகப் பரப்பு முழுவதும் தமிழர்களாக அறியப்பட்டவர்கள் படர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் சீக்கியர்கள்போல, வங்காளிகள்போல, குஜராத்திகள்போலச் சென்ற இடங்களில் பெருமைப்படும்படியான சுயமரியாதை வாழ்வு வாழ்கிறார்களா? படைப்பாளி நேரில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் புண்பட்ட மனத்தைத் தன் எழுத்தின் ஊடே பல இடங்களில் பதிவுசெய்துகொண்டே போகிறார்:

கிரகங்களிடம் தங்கள் தலை எழுத்தை ஒப்படைத் திருக்கிற தமிழர்கள் (ப.223)

தமிழ் படிச்சவரு புண்ணியக்கோடி. அவர் குதிரைபோல் கனைத்தார்; வேறொன்றுமில்லை; அவர் சிரித்தது அப்படி. காபி அடித்துப் பேரு வாங்கும் கூட்டம் (ப. 225)

ஒரு விஷயத்தை நிறைய வார்த்தைகளிட்டுப் பேசுகிறார்கள் (ப.248)

தமிழர் பேச்சில் போலியும் பகட்டும் அதிகம் (ப142)

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் பார்வையில் தமிழ் வாழ்வின் தரமற்ற தன்மை பளிச்செனப் புலப்படுத்துகிறது. இந்தப் பார்வையின் நீட்சியாக, ‘அங்கே, இங்கே’ என்று ஒப்பிட்டுப் பார்க்கும் எழுத்து முறையும் நாவலில் இடம்பெறுவதைப் பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மனத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரே ஒரு சான்று:-

ஒரு மரணத்தால் ஏற்படும் துக்கமோ மகிழ்ச்சியோ பிறருக்கேயன்றி, அம்மரணம் நிகழ்ந்த உடலுக்கில்லை என்கிறபோது எதற்காக அனுபவித்திராத மரணத்தை நினைத்து ஒருவர் கவலையுறவோ அஞ்சவோ வேண்டும்? தெரிதா முதல் எபிகூரஸ் வரை சொல்வதும் இதுவே. மரணத்தினால் ஓர் உயிரின் இருப்பு முடிவுக்கு வருகிறது என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது… கிழக்கில் வேறு சிந்தனை இருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது, எடுத்த தேகம் இறவா நிலையைப் பெறுவதற்காக, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை அடைவதற்காக…(252-253)

புலம்பெயர் வாழ்வு தரும் வலிகளையும் சலுகைகளையும் சிக்கெனப்பிடித்துக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் படைப்பாளி, எழுத்தின் நுட்பம் அறிந்தவராதலால் பலவிதமான சோதனைகளையும் நாவலுக்குள் செய்துபார்க்கிறார். அவற்றில் தலையாயது ஒரு கணம் தோன்றும் மாயத்தோற்றங்களை நூலேணிபோலப் பிடித்துக்கொண்டு மேலேறும் எழுத்துமுறை சிறப்பாகக் கூடிவந்துள்ளது. விவேகசிந்தாமணியில் ஒரு காட்சி: பொழில் விளையாட்டிற்காகக் காட்டிற்குள் செல்லும் தலைவி, நாவல் மரங்கண்டு காலிழுக்க அடியில் போய் நிற்கிறாள்; ஒரு பழம் உருண்டுதிரண்டு கர்ரேரென்று கிடக்கிறது; கையில் எடுக்கிறாள்; ஆனால் அது தேனுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு. தலைவியிடம் ஒரு கணம் தோன்றிய அந்த மாயத் தோற்றத்தைப் பிடித்துக்கொண்டு கவிஞர் மேலேறுகிறார்; அந்த வண்டு தலைவியின் உள்ளங்கையைத் தாமரைப் பூவின் இதழ் என்று அறிவது போலவும், விழித்துப் பார்த்தால் அவள் முகம் முழுமதிபோன்று தெரிவதால், தாமரைப்பூ உடனே கூம்பிவிடுமே, நாம் பூவுக்குள் மாட்டிக்கொள்வோமே என்று பயந்து அவசரம்அவசரமாக ‘றெக்கையை’ விரித்து விர்ரென்று பறந்து போனதாம்; அதைப் பார்த்த தலைவி மீண்டும் ஒரு கணம் மாயத்தோற்றத்திற்கு உள்ளாகிறாள்; ‘பறந்தது வண்டோ பழமோ’ என்று சொல்லும்போது கவித்துவத்தின் அழகியலுக்குள் நாமும் வண்டாய் மயங்கிவிடுகிறோம்.

இந்தப் படைப்பு நுட்பத்தை நாவலாசிரியர், பிராஹாவில் சுற்றுலாப் பயணிகளோடு பயணியாக, ‘இளம் மஞ்சள் வெயிலில்’ சுற்றி வரும்போது அனை வரும் ஒரு கணம், ஓரிடம் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கும் நாய்களாகத் தோற்றம் அளிக்கிறார்கள்; அந்தக் கணத்தைப் பயன்படுத்திக்கொண்டு நூலேணியில் ஏறுகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எளிமையாக அதிகாரம் செலுத்துவதற்கான ஒருமுறையில் மற்றவர்கள் தங்களிடம் ‘நாயாக’ நடந்துகொள்ள வேண்டுமென நனவிலி மனத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரு பாவனையில் எழுத்தை அற்புதமாக நடத்திச் செல்கிறார்.

துணை, நட்பு, உறவு, அன்பு என்ற பதாகையின் கீழ் புதைந்துகிடக்கும் அதிகார வேட்கையின் அம்மைபோட்ட முகத்தை, போலான முறையில் நாவலா சிரியர் புனைவெழுத்தாக்கி உள்ளார். இந்த மாயத்தோற்றத்தைப் பயன்படுத்தி “விலங்குகள் வேற, மனிதர்கள் வேற இல்லை” என்றும் உரையாடுகிறார்.

“மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்துகொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா? அவைகளுக்கு வேறு மொழிகள் இருக்கின்றன. வேறுவகையான உரையாடல்கள் இருக்கின்றன” (292) என்று எழுத்து வேகமாக நகரும்போது வாசிக்கின்ற வாசகர் உட்பட எல்லோரையும் காஃப்காவின் ‘நாய்க் குட்டிதான்’ என்ற தீச்சுட்டு, ஒரு கணம் மரத்துப்போய்க் கிடக்கும் நாம் உயிர்ப்புறுகிறோம்.

எலும்பின் மஜ்ஜைக்காக ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொள்ளும் காஃப்காவின் நாய்கள்தாம் நாமும் என்ற பார்வை நாவல் முழுவதும் உள்ளோடிக் கிடந்தாலும், வெளிப்படையாக அது புலப்படுவது ஈழப் போராளியாய்ச் செக்குச் சுமந்து வேறு வழியின்றி பாரீஸில் இருக்கும் தமக்கையின் கணவனாகிய மத்யூஸிடம் வந்து மாட்டிக்கொள்ளும் போராளி ‘நித்திலா’ பற்றிய பக்கங்களில்தான். தனது மனைவி கமலாவின் தங்கை நித்திலாவை அடைவதற்காக மத்யூஸ் போடுகிற திட்டங்களும் நடத்துகிற கபட நாடகங்களும் நிகழ்த்துகிற கொடுமைகளும்

மஜ்ஜைக்காக நாயைவிடக் கேவலமாக நடந்துகொள்ளும் மனிதர்களின் பேரவலத்தைப் படம் பிடிப்பவையாக அமைந்துள்ளன. இவ்வாறு எல்லாவிதமான கயமைத் தனத்தையும் பயன்படுத்தி அடையப்பட்ட மஜ்ஜை, அடைந்த அந்தக் கணத்திலேயே விஷமாகி விடும் யதார்த்தத்தை நாவல் வலுவாக முன்வைக்கிறது. ஈழப் போராட்டமானாலும், நீதிமன்ற நடவடிக்கைகளானாலும், ஒருத்தரையொருத்தர் நாயாய் நடத்த முயலும் ஆண் – பெண் உறவானாலும், கன்னியாகுமரி முதல் பிராஹாவின் வெல்ட்டாவா நதிவரை அலைந்து திரியும் சாமியாரானாலும் கவர்ச்சி காட்டி அங்கும் இங்கும் அலைபாயவிட்ட அனைத்தும், கைப்பற்றிய அந்தக் கணத்தில் மனிதர்களுக்கு எதிரானவைகளாக அப்படியே தலைகீழாக மாறிவிடுகிற நெஞ்சைச் சுடும் மெய்மையினால் பிறக்கும் வியப்பின் வெளிப்பாடுதான் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்த நாவல்.

ஒரு நல்ல எழுத்து, வாசகருக்குள் புதைந்துகிடப்பதை அவருக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் ‘வலியை’ உற்பத்தி பண்ணிவிட முயற்சிப்பதுதான். இந்தநாவல் அதைச் செய்கிறது

நன்றி : காலச்சுவடு பிப்ரவரி 2016 இதழ்

———————————————————————

காஃப்காவின் நாய்க்குட்டி
நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் & 629 001
பக்கம்: 312
விலை: ரூ.295

 

அமைதியைப் பார்த்ததில்லை, கேட்டதுண்டு(2002)

Image1.png

 

 

 

 

 

 

 

அமைதியைப் பார்த்ததில்லை, கேட்டதுண்டு(2002)
 
நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
 
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
 
வேற்றுமை பெயரானதில்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
இந்தியா – பாகிஸ்தான்
 
இஸ்ரேல் – பாலஸ்தீனம்
 
ஈரான்-ஈராக்
 
குர்திஸ்தான் -கொசொவா
 
ஆப்கானிஸ்தான், இலங்கையென
 
தொடரும் பட்டியலில்
 
நாடுகள் எதுவாயினும்
 
படுகள உயிர்கள்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
புயலுக்குப் பின்னே அமைதி
 
போருக்குப் பின்னே அமைதி
 
படித்ததுண்டு அறிந்ததில்லை !
 
கொலைவாட்கள் தீட்டப்படும்
 
கோப வினாடிகளில்
 
இரு பீரங்கி முழக்கங்களின்
 
இடையிலான பிரசவ நிமிடங்களில்
 
இரு போர்களுக்கு இடையிலான
 
சூன்ய நாட்களில்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
 
எமதில்லங்களில்
 
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
 
டாங்்கிகள் தடம் பதித்த வீதிகளில்
 
சமாதிகண்ட சந்தைகளில்
 
அமைதியைப் பார்த்ததுண்டு
 
அறிந்ததில்லை !
 
வண்டுகள் மொய்த்த சோலையெங்கும்
 
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
 
அலகுடைந்து காத்திருக்கும்
 
கழுகுகள் !
 
மயானத்தில் பிணங்கள்
 
காத்திருப்பது
 
அமைதிவேண்டியல்ல
 
கல்லறைகளுக்காக !
 
– நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

 

என்றோ எழுதியது-3

மழையின் கால்கள் (1977)

 

தடதடவென மத்தள இடிகள்

தம்புராச் சுருதியில் தனிச் சுழற்காற்று

சலசலவென சங்கீதமழை

நீர்க்கோடுகளாய் நிலத்தில் இறங்கும்!

 

இலையும் கிளையும் துளிகள் வாங்க

இன்பச்சுகத்தின் இறுதியில் வேர்த்து

நின்று மூச்சிடும் மழையின் கால்கள்!

 

குக்கூவென்றும் அக்கோவென்றும்

குளறும் மொழியில் குளிரும் மழையில்

கூடத் துடித்திடும் கொஞ்சும் கால்கள்!

 

தாழங்குடையில் தலையை வாங்கி

வீழும் துளிகளை விரலால் வழித்து

உழவு மாட்டுடன் ஓடும் கால்கள்!

 

மழையில் நனைந்த மகிழுவுடன் கன்று

தாய்ப்பசு மடியில் தலையைத் துவட்ட

தாய்மைச் சுகத்தில் தவித்திடும் கால்கள்!

 

சவுக்கு மரங்கள் சாய்ந்திட-அந்த

சத்தம் கேட்டுப் பெண் முயல் விலக

அச்சம் தவிர்க்கும் ஆண்மையின் கால்கள்!

 

களையை முடித்து மழையில் நனைந்து

முந்திக் குடையில் முகத்தை மறைத்துக்

கனத்த மார்புடன் பிணக்குங்கால்கள்!

 

கொட்டும் மழையில் கூச்சலிட்டோடி

மூக்கு சளியை முழங்கை வாங்க

ஆட்டம் போடும் அறியாக் கால்கள்!

 

மழையின் கால்களில் மகத்துவம் தேட

ஒழுகும் துளிகளின் ஊடே புகுந்தேன்

காலடி மழையில் கரைந்து ஒளிந்து

தாளடி இயற்கைத் தருமம் அறிந்தேன்!

 

–  நாகரத்தினம் கிருஷ்ணா

 

மொழிவது சுகம் ஏப்ரல் 2 2016

சொல்வனம்  இதழ் 147  (22 -3 -2016)

 

. மணிபத்மம்ஆபிரகாம் எராலி

 ஆபிரகாம் எராலி என்பவர் எழுதி பெங்க்வின் பதிப்பாக வெளிவந்துள்ள இந்திய வரலாறு குறித்த நூல்களைப் பற்றிய அறிமுக க் கட்டுரை,  வெ. சுரேஷ்  என்பவர் எழுதியுள்ளார்மிகவும் பயனுள்ள கட்டுரை   இந்திய வரலாற்றை முற்றிலும் புதிய பார்வையுடன் –  விமர்சன  நோக்கில் எழுதப்பட்டதென்கிற கட்டுரையாளரின் வார்த்தைகளை  நம்பமுடிந்தால்-, அவசியம்  நாம் படிக்க வேண்டியவை.   ஒரு  நல்ல நூலொன்றை  அறிமுகம் செய்கிறபோது எவற்றைப் பதிவு செய்வது, எப்படிச்சொல்வது போன்ற விதிகளையெல்லாம் வகுத்துக்கொண்டு கூறவந்ததுபோல கட்டுரை வெகு துல்லியமாக தனது பணியை நிறைவேற்றுகிறது. பல அறிந்திராத புதிய தகவல்கள் நூல்களில் இருக்கின்றன  என கட்டுரையாளர் தெரிவிக்கிறார். ஆபிரகாம் எராலிக்கும், அவர் நூல்களைவெளியிட்டுள்ள பதிப்பகத்திற்கும், அ ந் நூல்களை நமது கவனத்திற்குக் கொண்டுவந்த  கட்டுரையாளருக்கும், சொல்வனத்திற்கும் நன்றி.

 . அரவிந்த கண்மருத்துவ குழுமமும அரசு நிர்வாகமும்

 மிகப்பெரியக்கட்டுரை, அரவிந்தக் கண்மருத்துவமனையின் செய்தித்துறைத் தயாரித்த கட்டுரைபோல எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவ மனைகள் இந்தியாவெங்கும் உள்ளன. எதிலும் அமெரிக்க நடைமுறையைக் கையாளும் இந்தியாவில் மருத்துவத்தின்  கொள்ளை  தெரிந்த கதைதான்ஆனால் அமெரிக்காவில்  பாதிக்கப்படுகிறவர்கள் உரிய நீதியைப் பெற முடியும்.  எது எப்படியிருப்பினும் அரவிந்த கண்மருத்துவ மனை தமது பணியை குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ஏழைகளுக்கு வழங்குவது வரவேற்கக் கூடியதே.  ஆனால்  மருத்துவசேவையை கின்னஸ் ரெக்கார்டுக்கு என்பதுபோல அவர்கள் நினைத்து செயல்படுவதைச்  சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஊதியத்தைக் குறைத்து மருத்துவர்களின் ஊதியத்தைக் குறைக்காமல் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்திருப்பதாக கட்டுரையாளர் வாதிடுவது அபத்தம். அம்மாதிரியான  உற்பத்திமுறையில், சந்தைக்கு வரும் பொருட்களின் தரத்தைப் பற்றிய தரவுகளையும் கட்டுரை வழங்கியிருக்குமானால் அரவிந்த கண்மருத்துவ குழுமத்தின் சேவையைத் தராளாமாகப் பாராட்டலாம்.  ஆனால் அதே சிகிச்சைக்கு25000 ரூபாய் வாங்குகிற மற்றவர்களும் பெரிய உத்தரவாதத்தைத் தருவதில்லை என்கிறபோது  கண்ணை மூடிக்கொண்டு அரவிந்த கண் மருத்துவ குழுமத்தின் சேவைக்கு ஒரு பெரியபோடலாம்.

 

பாரத நாடு

 

ராமபதசௌத்ரி வங்காள மொழியில் எழுதி சு.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் தமிழ் படுத்தப்பட்ட சிறுகதை

இச்சிறுகதையைத் தேர்வு செய்து பிரசுரித்துள்ள சொல்வனம்` இணைய இதழுக்கு நன்றிசொல்ல வேண்டும் . மொழிபெயர்ப்பென்று சொல்லமுடியாதவகையில் மொழிபெயர்ப்பாளார் கதையைத் தமிழ்ப் படுத்தியுள்ளார். கதை ஆசிரியருக்கு இந்திய நாட்டின் மீதும் அதன் பிரஜைகள் மீது என்ன கோபமோ  கதைக்கருவும், பொருத்தமான கதைசொல்லலும் சிறுகதையின் மதிப்பினை உயர்த்தியிருக்கின்றன. தலை நிமிர்ந்து பாரதத்தின் மானத்தைக் காப்பாற்துவார்  என நாம் நம்புகிற  மகோதக் கிழவனும் வீசுகின்ற சில்லறைகளை பொறுக்கி எடுக்கிறபோது, இந்தியச் சமூகத்தையே  தலை குனியவைத்திருக்கிறார் கதையாசிரியர்  ராமபத சௌத்ரி..

« தொரை பக்க்ஷீஸ் ! தொரை பக்க்ஷீஸ் !  ஒரு கிராமமே திரண்டு ராணுவ வீர ர் களிடம் கையேந்துகிறபோது, தமிழ்னாடு வாக்காளர்களும் தமிழகத் தேர்தலும் ஏனோ தேவையின்றி நினைவில் குறுக்கிட்டது.

 

. முகம்தெரியாத ஒரு பறவையின் கூடு சிறுகதை

கே. ஜே அசோக்குமார் எழுதிய சிறுகதை. எதிஎர்காலத்தில் பிரகாசிக்க உள்ள இளைஞர்.   இவரது கதைசொல்லல் எனக்கு ஏமாற்றத்தைத் தருவதில்லை. திடீரென்று அகதிகளாக காலி மனையில் குடியேறும் நாடோடி ஆட்டிடையர் குடும்பமும், சன்னலுக்கு மறுபுறம் கண்ணிற்படுகிற குருவிக்கூடும் மையப்பொருட்கள், இரண்டின் சந்தோஷத்தையும் வழக்கம்போல இயற்கை நியதிக்கு மாறாக உலக நியதிகள் உருக்குலைக்கும் தந்திரத்தை   அதிகச் சிக்கலில்லாமல் கதைப் படுத்தியிருக்கிறார்

இவற்றைத்தவிர பாவண்ணன், எழுதிய வஞ்சினங்களின் காலம்  என்ற ஆங்கிலத் திரைப்படம் பற்றிய கட்டுரை, பாலாஜி பிரித்வராஜ் என்பவர் எழுதிய நிலையாட்டம் என்ற சிறுகதை ஆகியவையும், வேறு சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

 வாசிக்க : http://solvanam.com/

 ————-

 

 

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் விமர்சனங்கள்-9 ‘

பெருவெளிழுத்து:                                                                           

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி

——————————————

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்Rama-012

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம்.  அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட  காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின்  கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட  கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும்  ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும்.   வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர்  நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

Kafka Naykutti Wrapper 3-1நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில்  சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .

காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக  2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப்  பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி)  உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில்  அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள்.  அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி  குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம்  அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது.  செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை.  நீண்ட காலமாகத் தங்களுக்குக்  குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே  அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி   நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான  குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி:  தீரா நதி பிப்ரவரி 2016

——————————

காப்காவின் நாய்க்குட்டி

நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு பதிப்பகம்

நாகர்கோவில்

தமிழ் நாடு

———————————————————————

 

 

 

 

 

 

எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது (ஸ்பெய்ன் பயணம்) -3

 IMG_1183பன்னிரண்டாம் தேதி(மார்ச்) காலை செவில்லா நகருக்குப் பயணம்ஸ்பெய்ன் இரயில்வே துறை  குறித்து ஒரு தகவல்மாட் ரீட்டில் ஆரம்பித்து, கொர்தோபா, செவில்லா என்ற மூன்று இரயில் நிலையங்களும் ஸ்பெய்ன் நகரங்களைப் போலவே அவ்வளவு சுத்தம், நன்கு பராமரிக்கிறார்கள்ஐரோப்பாவில் வேறு நகரங்களில் (ஸ்காண்டி நேவியா சுவிஸ் தவிர்த்து) இதுபொன்றதொரு சுத்தத்தைக் கண்டதில்லை.  ஐரோப்பாவின் பிற நகரங்களில் காண்பதைப்போல நூறாண்டுகளைக் கடந்த கலை நேர்த்திமிக்க கட்டிடங்களாக ஸ்பெய்ன் இரயில்  நிலையங்கள்  இல்லை அனைத்துமே நவீனத்தின் அடையாளங்கள், அறிவியல்  திரைப்படத்தில்  இடம்பெறுகிற  கட்டிட ங்களை நினைவூட்டுபவை.  அடுத்ததாக பாதுகாப்பு ஏற்பாடுகள். விமான நிலையத்தில் விமானத்தில் எறுவதற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு சோதனைகளை இங்கும் கடக்க வேண்டியிருக்கிறது. கட ந்த காலத்தில் இரயிலில் நடந்த பயங்கரவாத  தாக்குதல்அனுபவம் ஸ்பெய்ன் நாட்டவரை எச்சரிக்கையுடன் இருக்க வைத்துள்ளது   பிரான்சு நாட்டில் அத்தகைய பாதுகாப்பு சோதனைகள் இல்லை

 IMG_1200

ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறேன். ஸ்பெய்ன் நாட்டின் அண்டாலூசியாவுக்குச் செல்கிறவர்கள் குறிப்பாக செவில்லாவிற்கும் கொர்தோபாவிற்கும் செல்கிறவர்கள்  பாரீஸிலிருந்து செவில்லா சென்று பின்னர் அங்கிருந்து கொர்தோபா செல்வது நல்லது. பணம்,  நாள் விரயம் இரண்டும் மிச்சம் செவில்லா செல்வதற்குக் காலை 9 மணிக்கு கொர்தோபா இரயில் நிலையம் சென்றோம்இடம்பெயர்ந்திருப்பது  இந்தியத் துணைக் கண்டம் என்பதைப் பயணச்சீட்டு விற்பவரின் பார்வை அவரது மூளைக்குத்  தெரிவிக்க ஆங்கில மொழியாடலுடன் தனது பணியைத் தொடர்ந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சுக் காரர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்  என்ற விளக்கத்திற்கெல்லாம் அவசியமின்றி பயணச்சீட்டுகள் கைமாறின. .

 IMG_1187

ஓருண்மையை உங்களொடு பகிர்ந்துகொள்ள வேண்டும்  இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள்,   தமிழை, தமிழ்ப் பண்பாட்டைப் புலம்பெயர்ந்தவர்கள் வளர்த்தெடுப்பார்கள் என்றெல்லாம் நம்மிடத்தில் கனவுகள் இருக்கின்றன .  கனவுகாண யாருக்கு உரிமை இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அன்றைய வசதிக்கேற்ப மொரீஷியஸிலும், பீஜித்தீவிலும், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து குடிசைக்குத் திரும்பியவேளைகளில்  புலம்பெயர்ந்த சூடு தணியாமலிருந்தபோது தாயகத்தையும் தாய்மொழியையும் நேசித்தார்கள். அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு அப்படியான நாஸ்ட்டால்ஜியாக்கள் இல்லை, புலம்பெயர்ந்த நாட்டில் அதற்கான தேவைகளும் இல்லைமிச்சமென்று இருப்பதெல்லாம். மாரியாத்தாளும், பழனி ஆண்டவரும், கோவிந்தனும் மட்டுமே. அமெரிக்கா, ஐரோப்பாவென்று புலம்பெயர்ந்திருக்குமிடத்திலும், இந்த உண்மைதான் நாளை அரங்கேறும். இன்றைக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்ப் பண்பென்ற ஆராதிக்கிறவர்கள், அவற்றைக் கொண்டாடுகிறவர்கள் அனைவருமே இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பா, அமெரிக்காவென்று குடியேறியவர்கள்.  தாயக நாஸ்ட்டால்ஜியா மோகத்திலிருந்து  விடுபடாதவர்கள் ஆதலால் மொழியென்றும் பண்பாடென்றும்(பொங்கல், தீபாவளி, கோலிவுட், பாலிவுட், ரஜனி, விஜய், அரசியல்) பேசுகிறார்கள். – ஆனால் அவர்களுக்கேகூட தாயகம் திரும்பும் ஆசையில்லை.  அலுத்துவிட்டதுஇந்தியாவிற்கு பார்வையாளனாக மட்டுமே  செல்ல விருப்பம்,, இலங்கைத் தமிழர்களில் 99 விழுக்காட்டினர் நிலமையும் அதுதான். இ ந் நிலையில் எங்கள் அடுத்த தலைமுறையினர் அடுத்தடுத்த  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எப்படி இருப்பார்களெனச் சொல்ல வேண்டியதில்லை, தவிர தாய்  நாட்டிலேயே  தமிழ் படிக்க ஆளில்லாதபோது ரஜனிக்காகவும் விஜய்க்காகவும் இங்கே படிக்கிற தமிழ் எத்தனை காலத்திற்கு உதவும். இரண்டொரு நூற்றாண்டுகளை புலம்பெயர்ந்த மண்ணில் கழித்த தலைமுறை தங்கள் பிள்ளைகள் மேடைகளில் திருக்குறள் சொல்லக்கேட்டுச் சந்தோஷப் படுவார்களா ? மொரீசியஸில் அப்படியொரு நிலமை பதினேழாம் நூற்றாண்டில் இருந்தது, இன்றில்லை. ஆக உடலால்  மட்டுமே  தமிழர்களாக இருக்க முடியும், அது கூட வேறு கண்டத்தைச் சேர்ந்த உடலுடன் கலக்காதவரை  அந்த உடல் கூட புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியத் துணைக் கண்டத்தைச் சார்ந்தவர் என்ற  அடையாளத்தை பெற உதவுமேதவிர தமிழர் அடையாளத்தைத் தருவதாக இருக்காது.  

 IMG_1179.JPG

ஸ்பெய்ன் பயணத்திற்கு வருகிறேன்  செவில்லாவில் வந்திறங்கியபோது காலை பத்தரை மணி. பொதுவாக ஐரோப்பிய பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகளுக்கென  தகவல் அலுவலகங்கள் இருக்கும், இந்தியாவில் இது பெரும் குறை. சேவைகள் குறித்து பெரும் அறிவிப்புகளை மத்திய அமைச்சர்களில் ஆரம்பித்து மா நில அமைச்சர்வர்கள் வரை செய்வார்கள். தினசரிகளிலும் செய்திகள் வரும். கருணா நிதி  தேதிமுக கூட்டணி கனிந்து விட்டது என்பதைப் போன்றதுதான் இதுவும். பின்னர் அனைத்தும் புஸ்வாணமாக முடியும்

 

 செவில்லா இரயில் நிலையத்திலிருந்த சுற்றுலா தகவல் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் எங்களிடத்தில் ஒரு வரை பட த்தைக் கொடுத்து பிரெஞ்சுமொழியில் நிதானமாக அனைத்தையும் விளக்கினார். நிலையத்தைவிட்டு வெளிவந்ததும் தட எண் 21 பிடித்து (இம்முறை நீல நிறப் பேருந்து) ஏறியதும், ஓட்டுனரிடம் நாங்கள் இறங்கவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டோம். தவறுதலாக எங்கேயாவது இறங்க்கிவிடப்போகிறோம் என்ற பயம். அவர் ஸ்பானிஷ் மொழியில் பதிலைச்சொன்னார். அடுத்த  நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேறு ஓட்டுனர் மாறப் போகிறார் என்பதை அவர் கூறியதைவைத்து ஊகிக்க முடிந்ததுஅடுத் த நிறுத்தத்தில் ஏறிய ஓட்டுனரிடம்  எங்களைப்  பார்த்து முன்னவர் கூறியதைவைத்து, எங்களுக்குரிய நிறுத்தத்தில்  இறக்கிவிடச்சொல்கிறார் என்பது புரிந்ததுநான்காவது நிறுத்தத்தில் இறங்க்கியதும் sight seeing பேருந்து தடத்தின் பயணச் சீட்டு முகவர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். இங்கும் பச்சை, சிவப்பு வண்ணத்தில்  அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நகரின் முக்கிய சுற்றுலா இடங்களை பேருந்துகள் வலம் வருகின்றன.  முதற்சுற்றை பேருந்தின் மேற்தளத்தில் அமர்ந்து  ஒலி நாடா  அளித்த விளக்கங்களைக் கேட்டவண்ணம் முடித்தோம். அதன் பின்னர் பார்க்க வேண்டியவற்றுள்  எவையெவை முக்கியமோ  அவற்றை மட்டும் கண்டோம்.

கொர்தோபாவை விட செவில்லா பெரிய நகரம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது. செவில்லா கொர்தோபாவைப் போலவே புராணீகமும் மர்ம மும் ஒன்றிணைந்த அதிசய நகரம்இங்கும் வரலாறு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. ரோமானியர்கள், அரபுகள் ஸ்பானிஷ் மன்னர்கள்  ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது. கிறிஸ்தோப் கொலம்பஸ்  கடற்பயனத்தை மேற்கொள்வதற்கு முன்பாக தமது திட்ட த்தை நண்பர்களுடன் கலந்தாலோசித்தது இவ்விடத்தில்தான். இங்கும் பார்க்கவேண்டியவையென ஒரு பெரிய பட்டியலை விரிக்கலாம்.  மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரை அறிந்தவர்கள் அவருடைய முக்கிய நாவலான  Mémoires d’Hadrien ஐ வாசித்திருக்கக்கூடும். உலகின் முக்கிய நாவல் வரிசையில் அதற்கு எப்போதும் இடமுண்டுதமிழ்ப்படுத்த விரும்பி. இருபது பக்கங்களுக்கு மேல் மொழி பெயர்த்து தொடராமல் இன்னமும் கணினியில் தூங்குகிறதுஅந்த அத்ரியனை ரோமானியர்களுக்கு அளித்தது செவில்லா நகரம்தான். யுனெஸ்கோவின் மரபுவழி சின்னங்களாகத் தேர்வு செய்யப்பட்ட பல நூற்றாண்டுகளைக் கடந்தக் கட்டிடக்கலைச் சான்றுகள் ஏராளம் : Catedral de Santa Maria Aalcazar,Plaza d’Espana, Quartier Tirana, SantaCruz …1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப்பொருட்காட்சி  கோபுரமும், அறிவியல் மண்டபங்கள்நவீன கலை நுட்பத்துடன் வடிவமைத்த பாலங்கள் பார்க்க வேண்டியவை இருக்கின்றனஇரவு தங்க முடிந்தால்  Flamencoவைத் தவறவிடாதீர்கள்.  

 

பிளாஸா எஸ்பானாவில் அதிசயமாக ஒர் ஈழத் தமிழரைச் சந்தித்தேன் வியப்பாக இருந்த து. ஸ்பெய்ன் நாட்டிற்கு அவர்கள் காலனி மக்களே அதிகம் வருவதில்லை. அண்டை நாடான மொராக்காவிலிருந்து புலம்பெயருபவர்கள் உண்டு. வழக்கம்போல இந்தியத் துணைக்கண்ட த்திலிருந்து சீக்கியர்களையும், பாகிஸ்தானியரையும் பார்க்கலாம். தமிழர்கள் அரிதாகத் தான் கண்ணிற்படுவார்கள். அதை அவர் உறுதி செய்தார்இந்த நகரை எப்படி தேர்வு செய்தீர்கள் பிரத்தியேக க் காரணம் இருக்கிறதா எனக் கேட்டதற்கு, தான் பத்தாண்டுகளுக்கு முன்பு இலண்டனில்  இருந்தாகவும், தமிழர்கள் முகத்தில் விழிக்க க் கூடாதென்று இப்படி தனி ஆளாக இங்கிருக்கிறேன் என்றார்அவர் இப்படிக் கூற எது காரணமாக இருக்குமென யோசித்தது ஒரு நல்ல நாவலுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதனை ஈழத் தமிழில் எழுதவேண்டும்.  இந்தியத் தமிழ் உதவாது   அதில் ஈரம் இருக்காது என்பதால் அப்போதே அதை மறந்தாயிற்று.  இறுதியாக அவரிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருந்ததுதமிழர்கள் முகத்தில் விழிக்க் கூடாது என்பது உங்கள் முடிவென்றால் எதற்காக என்னைத் தடுத்து நிறுத்தி எதற்காகப்  பேசவிரும்பினீர்கள் என்று மனதில் எழுந்ததைக் கேட்கவும் செய்தேன் . தமிழ் பேசி நாளாயிற்று  என்பது அவர் பதில்.

 

 

———————————————

பரந்து கெடுக உலகியற்றியான்!

பிள்ளை வரத்திற்கா?

இல்லை, இல்லை!

பெண்ணுக்காகவா?

சீச்சி….!

அம்மா, அப்பா…

தம்பி, அண்ணன்

அக்காள், தங்கை, நண்பர்கள்?

ஒருவரும் வேண்டாம்!

வாசத்தைப் பிரித்துணரும்,

ஓசையின் ருசி அறியும்

வாழ்க்கையின் தூரம் காணும்

சூட்சமங்கள்?

வேண்டவே வேண்டாம்!

எதற்காகப் பின்

கொலைவாளும்,

கண்களில் தீயுமாக

கடவுளைக் குறித்து தவம்?

என்னையும் என் சகமனிதர்களையும்

கொன்றபின் -இனி நீ

எதற்கு ?

பரந்து கெடுக!

 

 

எழுதுவதற்குப் படித்தால் மட்டும்போதாது (ஸ்பெய்ன் பயணம்) -2

ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதி குறிப்பாக அண்டாலூஸியா (Andalousie)  வரலாறு, இயற்கை, மரபு, பண்பாடு அனைத்திலும் ஒரு பன்முகத் தன்மையைத் தெரிவிக்கும் பிரதேசம். இப்பிரதேசத்தில் கொர்டாபோ, செவில்லா இரண்டும் முக்கிய நகரங்கள். மாட்ரீட்டிலிருந்து புறப்பட்டு கொர்தோபாவை அடைந்தபோது மாலை நான் கரை மணி. வழக்கமாக இன்று எல்லா பெரு நகரங்களிலமுள்ள  இரயில் நிலையங்களின் அலங்காரங்களுடன் எங்களை வரவேற்றன. பிராஸ்ஸரியொன்றில் காப்பிக் குடித்துவிட்டு  வெளியில் வந்தபோது காவி நிறத்தில்கண்ணுக்கெட்டியவரை காரைபூசிய கம்பளம் ஒரு பெருவெளிபோல விரிந்து நீண்டது. தகுந்த இடைவெளியில் நீருற்றுகள், நவீனமும் கலை நயமும் பின்னிப்பிணைந்த மின் விளக்குக் கம்பங்கள். ஸ்பெய்ன் ஆண்களும் சரி பெண்களும் சரி தனி அழகு, மத்தியதரை கடற்பகுதிகளின் பிரத்தியேக வார்ப்புகள்அவர்கள் : காற்றைபோல நடக்கிறார்கள், ஓதுவார் குரலில் உரத்துப் பேசுகிறார்கள். சோறுபோல சிரிக்கிறார்கள்எங்கே சென்றாலும்  « ….லா ! » என வரவேற்கும் ஸ்பானியர்களின் விழிச்சந்தைகளில் செலவின்றிபெற்ற முறுவலும், புன்னகையும்  நெஞ்சத்தை மளமளவென்று நிரப்பி  நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அந்தி நேர கொர்டோபாவின் குரல்களை அலட்சியம் செய்யும் துணிச்சல் எனக்கோ, மனைவிக்கோ இல்லை. அலுப்பை  இறக்கி  ஓட்டல் கட்டிலில் ஓய்வெடுக்கச்செய்துவிட்டு, நாங்கள் கிழே இறங்கினோம்.

 IMG_1012

கொர்தோபாவின் மேற்குப் பகுதியில் தேடிக்கண்டறிவது  எங்கள் நோக்கம். கிறிஸ்த்தோப் கொலம்பஸ் பாதம் பட்ட பூமியில்  இயன்றவரை நடந்து பார்ப்பது. நவீனத்தில் தலை நனைத்துக்கொண்டிருக்கிற உலகின் பெரு நகரங்களை ஒத்திருந்த பகுதிகளைக் கடந்து, Tapas,, Croquettes போன்ற மோகினிப்பிசாசுகளின் சூட்சியில் விழாமல், புதிர் விளையாட்டுப்போன்ற தொரு புதர் மண்டிக் கிடந்த துபோல வீடுகளும் குறுகிய தெருக்களாற்  கோலமிடப்பட்டுமிருந்த பழைய நகருக்குள் நுழைந்தோம். இரு சக்கர வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள் என்பதைப் போன்றதொரு  நகர அமைப்பு. சுற்றியுள்ள மனிதர்களை மறந்தோமென்றால் பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்த உணர்வு. யூதர்களும், கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இன்றளவும் இணக்கத்துடன் வாழும் பகுதி.    7ம் நூற்றாண்டில் தொடங்குகிறது  « La Juderia »  என்ற இப்பகுதியின் வரலாறுகாலாற இப்பகுதியில் நடந்துவிட்டு, இரவு உணவை முடித்துப் படுத்தபோது இரவு பத்து மணி. IMG_1016

 

கொர்தோபா இரண்டாம் நாள்

இன்று Sight seeing பேருந்து எடுப்பதெனத் தீர்மானித்திருந்தோம்காலை ஒன்பது மணிக்கு சுற்றுலா அலுவலகத்தில் விசாரித்தபோது சுற்றுலா பேருந்தொன்றிர்க்கு நபர் ஒன்றுக்கு 18 யரோவென பயணச் சீட்டு வாங்க்கியாயிற்று. கொஞ்சம் பொறுப்பான ஊழியை, பேருந்து நிற்கும் சுற்றுலா இடங்க்கள், அவற்றில் எவை மிகவும் முக்கியமானவை, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து என்ற தகவல் அன அனைத்தையும் விளக்கிக் கூறிவிட்டு  இருபது மீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து  நிறுத்தத் தில் விட்டுவிட்டுச்  சென்றார். எல்லா பெரு நகரங்களிலும் தற்போது கிடைக்கின்ற சேவைமுதலில் ஒரு சுற்று எங்கும் இறங்காமல் பேருந்தின் மேற்தளத்தில்  அமர்ந்து சுற்றுலா இடங்கள் பற்றிய விளக்கங்களைக் காதில் வாங்க்கிக்கொண்டு, அவற்றில் முக்கியமானவை எவைஎவையெனக் குறித்துகொண்டு மறு சுற்றில் இருந்து பார்க்கவேண்டிய இடங்களில் இறங்க்குவதும், பார்த்து முடித்தபின் அடுத்த பேருந்து பிடித்து பிற இடங்க்களூக்குச் செல்வன்ற முடிவுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு தங்கியிருந்த ஒட்டல் அருகே இருந்த உணவுவிடுதியில் னல்ல ஸ்பானிஷ் உணவு. அதிகமில்லை நபர் ஒன்றுக்கு !2யூரோவில் முடிந்தது.

 IMG_1020

. கத்தீடரல் மசூதி

IMG_1122தற்போது தேவாலயம் உள்ள இடத்தில் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Baslic  San Vincente இருந்துள்ளது. நகரில் இஸ்லாமியர் என்னிக்க்கை அதிகரித் தும், அப்போதைய கொர்தோபா மன்னர்அப்துல் ரெஹ்மான் ஒரு மசூதியைக் கட்ட நினைத்தார். தனது கற்பனையில்  கண்ட மசூதியை எழுப்ப இடம்போதாதென நினைத்ததால் பஸ்லிக்கை இடிக்க வேண்டியிருந்ததுஇடித்த இட த்தையும் உள்ள்டக்கி,  உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவில் பிரம்மாண்டமானதொரு மசூதி  எட்டாம் நூற்றாண்டில் உருவாயிற்று. 13ம் நூற்றாண்டில் நகரம் கிறுஸ்த்துவ மன்னர்களின் கைக்குத் திரும்பவும்  வருகிறதுஅவர்கள் மசூதியை தேவாலயமாக மாற்றுகிறார்கள். ஆக ஒரு மசூதிக்குரிய இசுலாமிய கலை நுணுக்கங்களுடன் தேவாலயத்தைக் காணமுடிகிறது. கிருஸ்துவர்களும் தங்கள் பங்கிற்குக் கலை  நுட்பத்தை தேவாலயத்தில் சேர்த்துள்ளார்கள். Mezquita de Cordoba என்றும் Catedral de Nuestra Señora de la Asunción என்றும்  இன்று அழைக்கப்படுகிறது.IMG_1154

இது தவிர Algazer  de les Reyes, Christines, Medina Azahara, Pont Roman, Plaza de potro, Palais vienne என நாங்க்கள் பார்த்தவை. அவை பற்றிய தகவல்கள் இணைய தளத்தில் கிடைக்கின்றன.

 

கொர்டோபா முற்றங்கள்

 IMG_1175

அண்டாலூஸியா பிரதேசங்க்களைப் பற்றிச்சொல்கிறபோது நகர்ப்பகுதிகளில் முற்றங்கள் பற்றிக் குறிப்பிடவேண்டும்அக்காலத்தில்  கிராமங்களில் வாசலை நடுவில் வைத்து சுற்றிலும் கூடம் அறைகள் என்றிருக்கும் முற்றத்தைப் போலத்தான் இவைகளும் உள்ளன. எனினும் இங்கு அந்த முற்றம் பூஞ்செடிகள் அடர்ந்த தாவரங்கள் என அலங்காரமாய் உள்ளன. தரைகளைக் கூழாங்கற்களைப் பதித்து அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

 (தொடரும்)

எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது…..1

 IMG_0973« எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது ஊர் சுற்றவும் வேண்டுமென » நண்பர்  இந்திரன் தெரிவித்திருந்தார். உண்மையும் அதுதான். நமது இருத்தல் பிற மனிதர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மனைவி உள்ளவரைதான் கணவன், தந்தை எனும் இருத்தல் பிள்ளைகளால் கிடைக்கிறது. சகோதரன் என்பதும் சகோதரி என்பதும் உடன்பிறந்தவர்கள்  படைக்கும் அடையாளம். எழுத்தாளன் என்பதும், ஓவியன் என்பதும், ஆசிரியன் என்பதும்  நாமே நமக்குப் படைத்துக்கொள்ளும் அடையாளங்கள் அல்ல. இச்சமூகத்தின் அங்க்கீகரிப்பால் அதன் அமைப்பு முறைகளால்  அதனை உருவாக்கிய பிறமனிதர்களால் தீர்மானிக்கப்படுவது. எனவே இயலும் போதெல்லாம் நமாது இருத்தலை இயக்கி நமது இருப்பை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது, தவறினால் , இயங்கமறுத்தால் அவர்கள் புதைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆக இயலும் போதெல்லாம்  சக மனிதர்களைச் சந்திக்கவேண்டும், என் சுவாசக் காற்று அவர்களைத் தொட்டுக் கடக்கவேண்டும், அதனூடாக எனது உயிர்வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறதென உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மட்டுமல்ல எல்லோருமே ஒவ்வொருகணமும் படிக்கிறோம் என்ற உணர்வின்றியே வாழ்க்கைமுழுதும்  கற்கிறோம், பெற்றதை அதற்கான தேவைவருகிறபோது உபயோகிக்கவும் செய்கிறோம். எவரிடம் கற்றோம், எங்கே படித்தோம் என்கிற உணர்வின்றியேஅவற்றை உபயோகிக்கவும் செய்கிறோம். கற்றதும் பெற்றதும் அதற்கான அவசியம் வருகிறபோது  நமது அனுமதிக்குக் காத்திராமலேயே  எஜமானாக மாறி  நம்மை செலுத்துகிறது.

 

ஐரோப்பாவில் உள்ள சௌகரியம் நாடுகளின் எல்லைகள் குறுகிய நிலப்பரப்புக்குளைக் கொண்டவை . புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்ல ஆகும் அதே நேரத்தை இங்கும்,   சாலைப்பயணத்திற்குச் செலவிட்டால் ( நான் இருக்கும் ஸ்ட்ராஸ்பூரிலிருந்து)  ஜெர்மனிலோ, ஆஸ்ட்ரியாவிலோ, சுவிட்ஸர்லாந்திலோ, பெல்ஜியத்திலோ, லக்ஸம்பர்கிலோ இருக்கமுடியும்.  ஸ்பெய்ன் நாட்டிற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பார் சலோனாவிற்குச் சென்றிருக்கிறேன். மகனும், மருமகளும் தங்கள் திருமணப் பரிசாக எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். அமெரிக்காவிலிருந்து பெரியமகள், மருமகன் ; இளையமகள் என அனைவரும் சென்றிருந்தோம்.  உயிர்மை.காம் ல்  அது வாசிக்க கிடைக்கும் : http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=1456.  . ஸ்பெய்ன் செல்ல ஆசைப்பட்டால் பார்சலோனாவிற்குக் கண்டிப்பாக முதலிற் போகவேண்டும். அதன் பிறகே மற்றதெல்லாம். இம்முறை நாங்கள் சென்றது ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதியிலுள்ள அந்தாலூசி(Andalousie) பிரதேசத்திற்கு. இப்பிரதேசத்தில் செவில்லா கொர்தோபா, இரண்டுமே முக்கியமான நகரங்கள்.. 9ந்தேதி Strasbourg லிருந்து புறப்பட்டோம். பிரான்சு முழுக்க வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம், அதன் விளைவாக 4 யூரோ கொடுத்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக  டாக்ஸிக்கு 60 யூரோ கொடுக்க வேண்டியிருந்த து. பாரீஸ் ஒர்லி விமான நிலையத்தில் காலை எட்டுமணிக்கு இறங்க்கியபோது பருவ நிலையும் மோசமாக இருக்க அனேக விமானங்களை இரத்து செய்திருந்தார்கள். ஆனால் மாட் ரீட் செல்ல பிரச்சினையில்லை.  ஸ்பெய்ன் தலை நகரம் மாட் ரீட்டில் இறங்கியபோது பிற்பகல் பன்னிரண்டரை.. மாட் ரீட்டிலிருந்து கொர்தோபா செல்ல விரைவு வண்டி எங்களுக்கு 2.20க்கு இருந்தது. இந்த இடத்தில்  ஒரு சிறுகுறிப்பு  பாரீஸிலிருந்து அந்தாலூசி செல்ல விரும்பும் நண்பர்கள் பாரீஸ் ஒர்லியிலிருந்து செவில்லா (Seville)  சென்று அங்கிருந்து கொர்தோபா செல்வது உத்தமம். பயணச்செலவு மட்டுமல்ல  நேரமும் மிச்சம் ( பாரீஸ்செவில்லா 60 யூரோ+, செவில்லாவிலிருந்து கொர்தோபா  இரயிலுக்கு 9யூரோ) . தேவையின்றி மாட்ரீட் போனதில் எல்லாமே இரட்டிப்பு ஆனது.

 

காத்திருந்த பிரச்சினைIMG_0974

வாழ்க்கை மட்டுமல்ல பயணமும் பிரச்சினைகளைச் சந்தித்து முடிவில்சுபம்முறுவலிக்குமெனில், மகிழ்ச்சிதான். ஆனால் பிரச்சினைக்குரிய அத்தருணங்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாமாட்ரீட் விமானத்தளத்தில் இறங்கி  இரயில் நிலையம் செல்ல மகளின் யோசனை டாக்ஸி பிடிப்பது. அதனை நான் விரும்புவதில்லை. முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். பொதுமக்கள் வாகனத்தில் பயணிக்கிறபோது மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நடப்பது அதனைக் காட்டிலும் கூடுதலாக உதவும் எனில் நடக்க ஆசைப்படுவதுண்டு. கவிஞர் இந்திரன் கூறுவதுபோல மனிதர்களை வாசிக்க என்று வைத்துக்கொள்ளலாம்விமானத் தளத்தில் இறங்கி அங்கிருந்த ஓர் அரசு சுற்றுலாதுறை அலுவலகத்தில் விசாரித்தபோது  இரயில் நிலையம் செல்ல பேருந்து இருப்பதை உறுதி செய்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் உள்ள சௌகரியம் பெருந்தடங்களில் செல்கிற பேருந்துகளுக்கு, தடத்திற்கு ஒரு நிறத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அவற்றினை இணைக்கிற  கிளைத் தடங்களில்  செல்கிற வாகனங்களுக்கும் பெருந்தட வாகனத்தின் நிறத்தையே ஒதுக்குவதால் பேருந்து தூரத்தில் வருகிறபோதே அடையாளப் படுத்த முடிவதோடு வீண் பதற்றமும் கொள்ளவேண்டியதில்லை. விமான நிலையத்திலிருந்து மஞ்சள் நிறப் பேருந்து மாட்ரீட் அத்தோஷா இரயில் நிலையத்திற்குச் செல்கிறது,  இருபது நிமிட பயணம். வாகன ஒட்டுனரிடம் இரயில்  நிலையத்தில் இறங்கவேண்டும் என்றேன், பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டுமொழிகளை உபயோகித்தும் பயனில்லை. பேருந்திலிருந்த ஒரு குறிப்பு நான்காவது நிறுத்தம் என்றிருக்க அமைதியாய்  இருக்கையைத் தேடியபொழுது குறுக்கிட்ட ஆங்கிலேயர்( ?)   நான் இரயில் நிலையத்தில் இறங்கப் போகிறேன் என்றார்.  பேருந்து நின்றபோது பயணித்தவர்கள் அனைவருமே இரயில் நிலையத்திற்குப் பேருந்தைப் பிடித்தவர்கள் எனப் புரிந்தது

 

ஓர் அதிர்ச்சித் தகவல். IMG_0984

மகள் அனுப்பியிருந்த முன்பதிவு பாரீஸ்ஒர்லிமாட் ரீட் விமானப் பயணம், தொடர்ந்து மாட் ரீட்கொர்தோபா இரயில் பயணம் . எங்கள் முன் பதிவைக்காட்டி இரயில் பயணச்சீட்டைபெற வரிசையில் பத்து நிமிடம் நின்று, பயணச் சீட்டு விற்பனையாளரை நெருங்க்கியபோது முன்பதிவில் இரயில் பயணத்திற்கான எண் இல்லை எனக்கூறி . பயணிகள் சேவை அலுவலகத்தில் விசாரிக்குமாறு அனுப்பிவைத்தார். அங்கும் அரைமணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னர்  தங்களுக்கு மேலேயுள்ள நிர்வாகத்திடம் விசாரியுங்கள் என அனுப்பி வைத்தார்கள். இரயில் பயணத்திற்கான முன்பதிவு  எண்ணைப் பெற்றால்தான் தீர்வு என்பது முடிவாகக்  கிடைத்த பதில். . எங்க்களுக்குப் மின் அஞ்சலில் பயண முன்பதிவை அனுப்பிய முகவர் செய்த தவறு. நாங்க்களும் முன்பதிவில் இருந்த விமானப் பயண பதிவு எண்ணை இரயில் பயணத்திற்கும் சேர்த்து என நினைத்துவிட்டோம். மகளுக்குப் போன்போட்டு பயண முகவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள கூறினோம். நேரம் கடந்துகொண்டிருந்தது.  கொர்தொபா செல்லும் இரயில் பத்து நிமிடத்தில்  புறப்பட இருக்க பிரச்சினையைப் பிறகு தீர்த்துகொள்ளலாம் என நினைத்து 180 யூரோ கொடுத்து ஒரு வழிபயணமென இரண்டு டிக்கெட்டை எடுத்து ஓடி இரயில் அமரும் வரை அனுபவித்த நரக நொடிகளை மறக்க முடியாதுIMG_1001

ஸ்பெய்ன் விரைவு இரயிலும்  400 கி.மீதூரத்தை  ஒரு மணி நாற்பது நிமிட த்தில் கடந்திருந்தது. இத்தனைக்கும் வழியில்  இரண்டு ஸ்டேஷனில் தலா ஐந்து நிமிடம் நின்றிருக்கும்பிற்பகல் 2.20க்குப் புறப்பட்டு மாலை 4.10க்கெல்லாம் கொர்தொபா வந்துவிட்டோம். எடுத்திருந்த ஒட்டல் இரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இருந்த து. ஒட்டலுக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்துவிட்டு மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கீழே இறங்கி   அரபு பண்பாட்டுடன் இரண்டற கலந்திருந்த கொர்தொபா பழைய நகர்ப் பகுதிக்குச் சென்றோம்

(தொடரும்)