புரட்சியாளன் என்பவன் யார்?- அல்பெர் கமுய்

puratchiyalanபுரட்சியாளன்  என்பவன் யார்? ‘இல்லை’ இனி என்னால் முடியாது !” என தனக்கிடப்பட்ட ஆணையை மறுக்கிற மனிதன். அவன் மறுப்பவனே அன்றி நிராகரிப்பவனல்ல. அம்மனிதனே ‘சரி’ என்று இடப்படும் ஆணைக்குச் செயலின் தொடக்கத்தில் சம்மதிப்பவனாகவும் இருக்கிறான். தனது வாழ்நாள் முழுக்க தனக்கிடப்பட்ட ஆணைகளை மறுப்பின்றி நிறைவேற்றிய ஓர் அடிமை, இடப்பட்ட புதிய கட்டளையொன்றை ‘ஏற்பதற்கு உகந்ததல்ல’ என்று தீர்மானித்தது திடீரென்று எடுத்த முடிவு.  அவனுடைய திடீர் ‘மறுப்பிற்குப் பொருள் என்ன?

உதாரணத்திற்கு  “இப்பிரச்சினை சகிக்க முடியாத அளவிற்கு நீடித்துவிட்டது” என்றோ; “இதுவரை சரி,  இனி சரிவராது” என்றோ;  “நீங்கள் வரைமுறையற்று நடந்துகொள்கிறீர்கள்” என்றோ;  அல்லது  “அததற்கு வரம்பு இருக்கிறது, அதை நீங்கள் மீறக்கூடாது” என்றோ பொருள் கொள்ளலாம்.  ஆக மொத்தத்தில் ‘இல்லை’ என்னால் இனி முடியாது! என்ற மறுப்பு, அனைத்திற்கும் ஓர் வரம்பு இருக்கிறதென ஓர் எல்லையின் இருப்பைத் தெரிவிக்கிறது.  மற்றொரு ஆசாமி “வரம்பை கடக்கிறார்” என்ற சிந்தனையை ஒரு புரட்சியாளனிடமும்  காண்கிறோம். அந்த மற்றவர் தமக்குள்ள உரிமையை, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டு, எதிர்கொள்ளவேண்டிய பிரிதொரு உரிமைக்குள் -அதன் எல்லைக்குள் நீட்டிக்கப் பார்க்கிறார் எனப் புரட்சியாளன் கருதுகிறான். ஏற்க முடியாததொரு அத்துமீறலெனக் கணித்து திட்டவட்டமாக மறுத்தலும்; புரட்சியாளனிடம் தனக்குள்ள நியாயமான உரிமைக்குறித்த தெளிவின்மையும் – சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவனுடைய “எனக்கும் உரிமையிருக்கிறது…” என்கிற மனப்போக்கும்  இணைந்துகொள்ள ‘எதிர்ப்பு மனப்பான்மை’  தனக்கான அடித்தளத்தைப் புரட்சியாளனிடம் அமைத்துக்கொள்ளும். ஏதோ ஒருவகையில், எங்கேனும் கொஞ்சம் நியாயம் தன்பக்கம் இருக்கிறதென்ற உணர்வு ஒருவருக்கு எழாதவரை கிளர்ச்சிக்கு இடமில்லை. அந்த வகையில்தான் கிளர்ந்தெழும் அடிமைக்கு மறுப்பதும், சம்மதிப்பதும் சத்தியமாகின்றன. உரிமைக்கான எல்லையை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐயத்திற்குரியவற்றை அதன் எல்லைக்குள் வைத்திருக்கவும் விரும்புகிறான். தம்மிடமும் ‘பொருட்படுத்தக்கூடியவை…’ உள்ளன என வற்புறுத்துகிற புரட்சியாளன் அவற்றை மற்றவர்கள் ‘கவனத்திற்கொள்ள’ வேண்டுமென எதிர்பார்க்கிறான். தனக்கென்றுள்ள உரிமையை ஒடுக்கும் ஓர் ஆணையை, ஏற்கக்கூடிய வரம்பிற்கு அப்பாற்பட்டதெனக் கருதி எதிர்க்கிறான்.

அத்துமீறல் ஆசாமியை வெறுக்கிற அதேவேளை,  கிளர்ச்சியில் ஈடுபடுகிற போதெல்லாம் தாமதமின்றி  தன்னில் ஒரு பகுதியிடம் மனிதன் முழுமையாக  அவனைப் பிணைத்துக்கொள்கிறான். தமது சுய மதிப்பீடுகளைக் குறிப்பாலேனும் உணர்த்த முற்பட்டு அதற்கு எந்த விலையென்றாலும் கொடுத்து,  அதை அழிவினின்று பாதுகாக்க முற்படுகிறான். இதுவரை அமைதி காத்தவன். நிர்க்கதியாய் விடப்பட்ட நிலமையில், அவனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதில் தெளிவிருந்தபோதும் உடன்பட்டான்.  எவ்வித விருப்பமும் இல்லை, எதைப்பற்றியும் அபிப்ராயங்கள் இல்லை என்பதே அவனது அப்போதைய மௌனத்திற்கான பொருள், அதாவது வேண்டியதென்று எனக்கெதுவுமில்லை என்பதுதான் அதற்கான பொருள். அபத்தவியலைப்போலவே விரக்தி மனோபாவமும் அனைத்தையும் பொதுப்படையாகப் பார்க்கிறது. எதனிடத்திலும் தனிப்பட்டவகையில் கவனம்செலுத்துவதில்லை. வாய்மூடி இருப்பதன் அர்த்தம் அதுதான். ஆனால் பேச ஆரம்பித்த கணத்தில் ( அது மறுப்பதற்கு என்கிறபோதும்) அவனுடையக் கருத்தைக்கூறவோ, அவனது விருப்பத்தைத் தெரிவிக்கவோ இயலும். சொற்பிறப்பியல் அடிப்ப்டையில், கிளர்ச்சியாளன் (Le révolté) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு புறங்காட்டுதல், முகத்தைத் திருப்பிக்கொள்ளல் என்றாகிறது  எஜமானின் சாட்டையின்கீழ் காரியங்களைச் செய்தான். தற்போது என்ன நடக்கிறது?  விருப்பம் அல்லாதவற்றை நிராகரிக்கிறான். எல்லா விழுமியங்களும் கிளர்ச்சியில் முடிவதில்லை ஆனால் ஒவ்வொரு கிளர்ச்சியும் மறைமுகமாக விழுமியத்தை முன்வைக்கிறது. நாம் நினைப்பதுபோல உண்மையில் இப்பிரச்சினை விழுமியத்தை அடிப்படையாகக்கொண்டதா?

தெளிவின்மையுடன் என்றாலும்,   கலகம் அல்லது கிளர்ச்சியில் உள்ளுணர்வு விழித்துக்கொள்கிறது.  புரிதல் ஓர் ஒளிகீற்றுபோல திடீரென நிகழ தன்னிடம் ஏதோ ஒன்று இருப்பதும் அந்த ஏதோ ஒன்றை தன்னில் அடையாளம் காண்பதும் அம்மனிதனிடத்தில் நிகழ்கிறது. அக்கணத்திற்கு முன்பாக அவன் தன்னை உண்மையில் அடையாளப்படுத்திகொண்டவனல்ல. கிளர்ச்சிக்கு முன்பாக இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டவன். இதைக் காட்டிலும் கூடுதலாகக் கிளர்ச்சியில் இறங்கவேண்டிய ஆணைகளுக்கெல்லாம் மறுபேச்சின்றி பணிந்திருக்கிறான். அவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கடைபிடித்தவன் – ஒரு வேளை மறுப்பை வெளியிற்காட்டாமல் அவனுக்குள் வைத்திருந்திருக்கக்கூடும். ஆனால் வாய் மூடியிருந்ததைவைத்து உரிமைப்பற்றிய விழிப்புணர்வைக்காட்டிலும் உடனடி நலனில் அக்கறை கொண்டிருந்திருக்கிறான் எனக்கருத வேண்டியிருக்கிறது. பொறுமையை இழந்த நிலையில், பதற்றத்தால் உருவான இத்திடீர் எதிர்வினை முன்பு எவற்றுக்கெல்லாம் மறுப்பின்றி செயல்பட்டானோ அவைகளோடும் சம்பந்தப்பட்டதாகிறது, ஆக இத்திடீர் மறுப்பை கடந்தகாலத்தின் மீதான செயல்பாடெனக் கருத இடமுண்டு. அடிமை தன்னை சிறுமைபடுத்துகிற எஜமானின் கட்டளையை நிராகரிக்கும் கணத்திலேயே தன்னுடை அடிமை நிலமையையும் நிராகரிக்கிறான். வெறுமனே மறுத்தலால் அவன் எட்டிய இலக்கிற்கும் கூடுதளான நிலமைக்கு தற்போது கிளர்ச்சி உதவுகிறது. தனது எதிராளிக்கென கிழித்திருந்த எல்லைக்கோட்டைத் தற்போது மீறுவது இவன். மீறுவதோடன்றி தன்னை சரிநிகராக நடத்தவேண்டுமென்கிறான். தொடக்கத்தில் மூர்க்கமானதோர்  பண்பாக மனிதனிடம் இருக்கிற எதிர்ப்புசக்தி மனிதனை முழுமையாக அபகரித்து, அவனூடாகத் தன்னை முன்நிறுத்துகிறது.அவனுள் உள்ள இப்பகுதியை பிறர் மதிக்கவேண்டும், அதுவே அவன் விருப்பம், எனவே பிற அனைத்தினும்பார்க்க மேம்பட்டதாக அதை நினைக்கிறான், தனது உயிர் உட்பட பிறவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்க்கிறான், கிடைத்தற்கரிய செல்வம், அது மட்டுமே மனதிற்கு உகந்ததாக இருக்கிறது.  இதற்கு முன்பாக  சமரசம் என்றபெயரில் முடங்கிக்கிடந்த அடிமை,  சட்டென்று விழித்துக்கொள்ள, அதன விளைவாக துள்ளிக்குதிக்கிறான் (« ஏறக்குறைய அதுபோலத்தான் »), இனி சமரசத்திற்கே இடமில்லை என்பதுபோல, முடிந்தால் ‘அனைத்தும்’ தவறினால் ‘ஒன்றுமின்மை’ (Tout ou Rien) என்கிற முடிவுக்கு வருகிறான்,  திடீரென்று உதித்த ஞானோதயம், கூடவே கலகமும் பிறக்கிறது.

ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. அவனுக்குள் நிகழும் இந்த ஞானோதயம்  ‘அனைத்துமாக’ ( குழப்பங்களுக்கிடையிலும்) தன்னைப்  பிரகனடபடுத்திக்கொள்கிற அதேவேளை அவனது உயிரை அந்த ‘அனைத்திற்காக’வும் இழக்க அவன் தயார் என்கிற மனநிலை காரணமாக  ‘ஒன்றுமின்மை’ ஆகவும் இருக்கிறது. போராளி தன்னை அனைத்துமாக கட்டமைத்துக்கொள்ள விரும்புகிறான். திடீரென்று தன்னில் கண்டுணர்ந்து போற்றுகிற விழிப்புணர்வில் தன்னை முழுமையாகக்  காண அவன் விழைகிறான், இயலாதெனில்  ‘ஒன்றுமின்மை’ ஆவது அதாவது தனது ஆதிக்க சக்தியிடம் முற்றாக தோற்றொழிந்துபோவதென தீர்மானிக்கிறான். கடைசியில் தான் புனிதமென்று கருதுகிற சுதந்திரத்தைப் பறிகொடுப்பதைக்காட்டிலும் இறுதித் தோல்வியாக மரணத்தைக் தழுவவும் அவன் சித்தமாக இருக்கிறான். ஒருவர் காலடியில் அடிமைப்பட்டுக்கிடப்பதைக்காட்டிலும், அந்த ஒருவர் காலடியில் உயிரை விடுவது மேல் என்பது அவனது இறுதிக்கட்ட சித்தாந்தம்.

-புரட்சியளன் நூலிலிருந்து

——————————-

புரட்சியாளன்

அல்பெர்கமுய்

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு. நாகர்கோவில்

—————————–

 

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் : இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள் -3 (தொடர்ச்சி)

 

  • கமலா மரியுஸ், வருகைப்பேராசிரியர், பொர்தோ பல்கலைக் கழகம், பிரான்சு;பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

 

  1. அதிகாரம், வலிமை சார்ந்த ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளும் பாலின வன்முறையும்

பல நூற்றாண்டுகளாகவே இந்தியப் பெண்கள்மீது அடக்கு முறை தொடர்வது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்துவருகிறது. இது போதாதென்று பாலின வன்முறையின் அடிப்படையிலான வலிமை,அதிகாரம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளையும் காண்கிறோம். இந்தியாவில் இரண்டு வன்புணர்ச்சி குற்றங்களுக்கு ஒன்று என்ற  வீதத்தில்தான்,  தண்டனைக்குரிய வாய்ப்புள்ளது. ஆண்களை முன்னிறுத்தும் சமூகம் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட 2011 ஆம் ஆண்டு ஆய்வில்  தங்கள் வாழ்க்கைத் துணைக்கு எதிராக ஆண்கள் இழைக்கும் வன்கொடுமைகள் இந்தியத் துணைக்கண்டத்தில்  அடிக்கடி நிகழ்வது தெரியவருகிறது. 20 சதவீத இந்திய ஆண்கள் தங்கள் மனைவிக்கு அல்லது வழ்க்கைத் துணைக்குப் பாலியல் துன்பத்தினைக் கொடுக்கின்றனர் என்பது ஒருபுறமிருக்க, தங்கள் மனைவிக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு பாலியல் வன்கொடுமை இழைப்பது உண்மையென தயக்கமின்றி  ஒப்புக்கொள்கிற ஆண்கள் 14 சதவீதம். இந்தியர்கள் பொதுவாகவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். இப்படி நியாயப் படுத்துகிறவர்களில் 68 விழுக்காட்டினருக்குக் குடும்ப வாழ்க்கையை சீராகக் கொண்டுபோக ஒரு பெண் உடல்சார்ந்த வன்கொடுமைகளை சகித்துக்கொள்வது கட்டாயம். « சில காரணங்களை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தேவைப்படுகின்றன » என்கிற இந்திய ஆண்கள் 65 விழுக்காட்டினர். கருத்தாய்வின்படி 37 விழுக்காட்டினர் பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் இழைப்பது தெரியவந்துள்ளது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் 92 விழுக்காடு ஆண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குச் சட்டப்படி தண்டனைகள் உண்டு என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்திய மனிதவள மேம்பாட்டு  நிறுவன ஆய்வு முடிவுகள்  ஓரளவு இதனை உறுதிசெய்கின்றன.  அவ்வாய்வில், 39 சதவீத பெண்கள் தங்கள் கணவர்களின் அனுமதியின்றி வெளியிற் சென்ற காரணத்திற்காகவும் ; 35 சதவீதப் பெண்கள் வீட்டு அலுவல்களைப் பொருட்படுத்தவில்லை என்கிற காரணத்தின் பொருட்டும் ; சமைக்கவில்லை என்பதற்காக 29 சதவீத த்தினரும் தண்டிக்கப்படிருக்கின்றனர்(fig.10). கல்வி, பெறும் ஊதியம், நகரவாழ்க்கை ஆகியவை குடும்ப வன்முறைகளை, ஓர் வரம்பிற்குள் நிறுத்த உதவும் காரணிகள் என்றறிகிறோம்.

10-violence-percue-hommes-inde

குறைந்த பட்சம் பள்ளி இறுதிவகுப்பை முடித்த ஒரு மனிதர்  மணவாழ்க்கையில் ஆண்பெண் உறவை புரிந்து நடந்துகொள்ளும் போக்குள்ளவர் என்பதை 2011 ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இருந்தும் சில ஆய்வாளர்கள் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்புள்ள பெண்களுக்கும் வன்கொடுமை அவர்களுடைய ஆண் துணையினரால்  இழைக்கப்படுவது அதிகரித்துவருகிறதென்றே தெரிவிக்கிறார்கள்.  அதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கிற  ஒருவரையும் சார்ந்திராத சுயாதீன நிலமை தங்களைப் பாதிக்கும் என்ற அச்சம் அவர்களுடைய கணவன்மார்களுக்கு  உள்ளதென்கிற காரணத்தைச் சொல்கிறார்கள்.

இப்படி அடுக்கடுக்கான ஏற்றத் தாழ்வுகள் தெளிவாக உள்ள நிலையில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் பொருளாதார முன்னேற்றம் எற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

5 . சமத்துவமற்ற வேலைவாய்ப்பும், முறைசாரா பெண்கள் பணியும்

கடந்த இருபது ஆண்டுகளில் 7லிருந்து 8 சதவீத சராசரி வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தியப்பொருளாதாரம் சாதித்து, கடந்தகால இழப்பை வேகவேகமாக சரிசெய்துள்ள போதிலும்  அது பெண்களின் பணித்தகுதிக்கும், திறனுக்கும் பெரிதாக உதவ வில்லை.

அண்டை நாடான சீனாவில் பணிசெய்யும் தகுதியுடைய பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்து செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரே அத்தகைய வாய்ப்பை ப் பெறுகிறார்கள். வேலை செய்யும் பெண்களின் விழுக்காடு நகர்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகம், அவ்வாறே வடமாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வேலைக்குப் போகும் பெண்களின் விழுக்காடு அதிகம். (OCDE, 2014). [11]

வளர்ந்துவரும் பிற நாடுகளுக்கு மாறாக இந்தியாவில் வேலைக்குப்போகும்  பெண்களின் விழுக்காடு கடந்த பத்துவருடங்களாக குறைந்துவருகிறது. அதேவேளை வேலைக்குப் போகும் ஆண்களின் விழுக்காட்டில் எவ்வித மாற்றமுமில்லை. இவ்வீழ்ச்சியை  2005 ஆம் ஆண்டு தொடக்கம், ஊதியமேதுமின்றி , சுயதொழில்களில் ஈடுபடுகிற  பெண்களிடத்தில் குறிப்பாக விவசாயத் துறையில், அதிகம் காணமுடிகிறது.

2000த்திலிருந்து 2012வரை , வேலைக்குப்போகும் வயதிலுள்ள பெண்களின் எண்ணிக்கை 99 மில்லியன் அதிகரித்திருக்க, அவர்களுக்குரிய பணிகளின் எண்ணிக்கை ஆறுமில்லியனைமட்டுமே தொட்டிருக்கிறது.இதேகாலகட்ட த்தில் பணிவாய்ப்பைப் பெற்ற ஆண்களின் எண்ணிக்கையோ 69 மில்லியன் (Marius,2013)

ஆக எண்பதுகளில் ஆரம்பித்துவைத்த  பொருளாதார  தாராளமயம், பெண் தொழிலாளர்களின்  எண்ணிக்கைப் பெருக்கத்திற்கு சாதகமாக இருந்திருக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் என்ற நிலமைக்குப் பின்னும் , பெண்கள் வேலையைப்பொறுத்தவரை எவ்வித நெறிமுறைக்கும் அடங்காத தொரு பெரும்  மாற்றத்திற்கு – குறிப்பாக எண்ணற்ற இடைத்தரகர்கள் குறுக்கீட்டுடன், கீழ்-ஒப்பந்த அடிப்படையில்    வீட்டிலிருந்தே பணிபுரியும் கைவினைக் தொழில்களில் (கூடைமுடைதல், எம்பிராய்டரி,கைவினைப் பொருட்கள், ஊதுபத்திகள்…) -உள்ளாகியிருப்பதைக் காண்கிறோம்,  குடும்பச் செலவை சரிகட்ட ,  இளம்வயதிலேயே வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதன் பலனாக குறைந்த ஊதியம், முறைசார பணிகள் என்ற நிலமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இங்கே நாம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருப்பது ‘இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2009) தரும் விளக்கம். முறைசாரா பணிகளின் பரிமாணம்  மற்றும் அதன் வளர்ச்சி குறித்த அவ்விளக்கம் தெளிவானது :

முறைசாரா துறையிலுள்ள முறைசாராபணி : சுய தொழில் : சொந்த முதலீட்டுடன் உழைக்கிறவர்கள், முதலாளிகள், குடும்பத்தொழிலில் ஈடுபடுவோர், ஐந்துபேருக்கும் குறைவான தொழிலாளர்களை அல்லது தொழிலாளப்பெண்மணிகளைக் கொண்ட சிறுநிறுவங்களைச் சேர்ந்த  ஊதியம்பெறும் முதலாளிகளும் ஊழியர்களும்

–  முறைசார்ந்த துறையில் முறைசாராதபணி : ஐந்து அல்லது அதற்கும் குறைவான சிறு நிறுனவங்களில் எவ்வித சமூக பாதுகாப்புமின்றி ஊதியம் ஒன்றிர்க்காக மட்டுமே உழைக்கிற தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர் பெண்மணிகள் ; சமூக பாதுகாப்பின்றி வீடுகளில் ஊதியத்திற்காக மட்டும் பணியாற்றுகிறவர்கள்.13-img_7352_dxo

இதன்படி தெரியவருவது, பன்னாட்டுச் சந்தைப்போட்டி நிலவும் சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்தி நிறுவனங்களை கிராமப் பகுதிகளிலும், புறநகர்களிலும் தொடங்குகிறார்கள். இத்தேர்வுக்கு உற்பத்திச்செலவில் சிக்கனம்,    தொழில் அளவுசார் ஆதாயங்கள் முதலியவை காரணம். பொதுவாக, குறைவான ஊதியத்திற்குப் பெண்களை  வேலைவாங்கலாம் என்பது முதலாவது, அடுத்து நகர்ப்புறங்களைக்காட்டிலும் கிராமப்புற பெண்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்கலாம் என்ற கருத்திருப்பதாலும், பெண்களுக்கு வேலையைபற்றிப் போதிக்க ஒரு சில நாட்கள்போதுமென்பதாலும் முதலாளிகள் பெண்தொழிலாளர்களைத் தேடுகிறார்கள், அதிலும் மணமாகாத இளம்பெண்களெனில் அவர்களுக்கு  முன்னுரிமைகொடுக்கிறார்கள். தவிர பெண்கள் திறமைசாலிகள், பணிவானவர்கள், குறைந்த ஊதியத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் என்ற கருத்து முதலாளிகளிடை இருப்பதுமொரு காரணம்.  உண்மையில் போதிய அளவு கல்வியோ, வேலைக்குரிய தகுதியோ பெற்றிராத நிலையில் வேறுவழியின்றி முறைசாரா துறைகளில் குறைந்த ஊதியத்திற்கு, பாதுகாப்பும், உத்தரவாதமுமற்ற  வேலைகளைச் செய்ய பெண்கள் தயார். அடுத்ததாக பெண்கள், தங்கள் பணியில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பவர்களாக உள்ளார்கள், அதாவது அவர்கள் வருகை  அத்தனை முக்கியத்துமானதல்ல, குறைந்த அளவு திறன் அல்லது தகுதிபோதும்  எனக் கருதும் துறைகளை அவர்கள் தேர்வுசெய்கின்றனர், அதன் மூலம் தங்கள் குடும்ப நலனின் அக்கறைசெலுத்த முடியுமென  நினைக்கின்றனர் . முறைசாரா நிறுவனங்களுக்குரிய தேசிய ஆணையத்தின் (le NCEUS (2007))கருத்தின்படி முறைசார்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்ற  குறைந்த பட்சம் பத்தாண்டு  கல்வியாவது வேண்டுமென்ற நிலையிருக்க,   முறைசாரா துறையில் பணியாற்ற நான்காண்டு கல்விபோதுமானது(K.Marius-Gnanou 2013) . முறைசாரா தொழிலாளர்களுக்குள்ள பரிதாபமான நிலமைகாரணமாக, அரசு  2008 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம்  ஒரு சட்ட வரைவை முன்வைத்தது.  அடையாள அட்டையொன்றின் அடிப்படையில் முறைசாராதுறை  தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றிர்க்கு வகைசெய்வது திட்டத்தின் நோக்கம்.

மொத்தத்தில் முறைசார் துறையில் பணி செய்யும் பெண்கள் 7 சதவீதத்திற்கும்  முறைவு. மிகக் குறைவான உற்பத்தியைத் தருகிற விவசாயம் ; மரபுவழிபட்ட சிறு அளவிளான உற்பத்தி நிறுவனங்கள் ; சேவைத் துறைகள் உதாரணத்திற்குக் கல்வித்துறை, வீட்டுப்பணிகள் ஆகியவற்றில் பெண் ஊழியர்களை அதிகம் காணமுடிகிறது. இந்தியா : வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையின் விளைவுகள் (l’OCDE -2014, பக்கம் 39) அறிக்கையின்படி 2012 ஆம் ஆண்டில் ஊதியமுள்ள ஒருவேலையில்  அல்லது தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில்  60 விழுக்காட்டினர், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளத்திற்கு உழைக்கிறவர்கள், அதேவேளை ஆண்களென்று எடுத்துக்கொண்டால் அவர்களில் 25 விழுக்காட்டினரே அப்படிக் குறைவான ஊதியத்திற்கு உழைக்கின்றனர்.  முக்கியமற்ற துறைகளிலும், சேவை துறைகளிலும் வேலைவாய்ப்புச் சந்தையிலுள்ள நெகிழ்வற்றத் தன்மை, பெண்களை இத்துறைகளை தேர்வு செய்யாமல் தடுக்கிறது.  அவ்வாறே நல்ல ஊதியத்திற்குச் தொழிற்சாலைகளில் சாத்தியமிருந்தும் அவ்வேலைகளை பெண் விவசாயக்கூலிகள் ஏற்கமுடிவதில்லை  காரணம்  100 தொழிலாளர்களுக்குமேல் வேலைசெய்கிற உற்பத்தித் துறை நிறுவனங்களில், ஒரே ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்குவதென்றாலும், உரிய அனுமதிபெறுவதுகட்டாயம். பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ஆய்வொன்று விளக்குவதைப்போல  ஆசியாவிலேயே  தமது உழைப்பை, விவசாயத்துறையிலிருந்து தொழில்துறைக்குக் கொண்டுபோக சாத்தியமின்றி மிகவும் பின்தங்கி இருப்பவள்  இந்தியப்பெண்மணி.  பணியில் சமத்துவமின்மையை அளவிட மிகவும் பொருத்தமான அடிப்படைகாரணியென்று எடுத்துக்கொண்டால் அதாவது ஓர் ஆண்டில் வேலைசெய்யும் நாட்களின் அடிப்படையில் பார்க்கிறபொழுது வயதும்,  நகரவாழ்க்கையும் பெண்களின் வேலைநாட்களைப் பாதிப்பவை.  அவ்வாறே ஆண்களோடு ஒப்ப்டுகிறபோது பெண்களிடத்தில் வேலை சமத்துவமின்மை மிக அதிகம், விளைவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பு வேலையில் மிகக் குறைவு(fig.11).

11-tx-activite-genre-urbain-rural

நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் வேலைசெய்யும் பெண்களின் விழுக்காடு குறிப்பிட்டுச்சொல்லும் அளவில் உள்ளது என்பது உண்மையென்கிறபோதும் நகர்ப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கை (180) கிராமப்புற பெண்களின் வேலை நாட்களின் எண்ணிக்கையைக் (106) காட்டிலும் உயர்ந்த அளவிலுள்ளது. இதற்கு, ஐயத்திற்கிடமின்றி பெண்கள் முறைசாரா பிறபணிகளிலும் ;  சுயதொழில்கள் என்று சொல்லக்கூடிய (fig 12),  அதே சமயத்தில்  உறுதிபடுத்தவியலாத  விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்ற பணிகளிலும் ஈடுபடுவதாகும். கணக்கெடுப்பின்படி, செயல்படகூடிய 127. 3 மில்லியன் பெண்களில் 90 விழுக்காடு பெண்கள் முறைசாரா துறைகளில்( சுயதொழில், தற்காலிக பணி ஆகியவையும் இதிலடக்கம்) பணிபுரிகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும், குறிப்பாக பெண்குழந்தைகள், இப்போக்கு கிராமப்புறங்களில் அதிகம் பரவியுள்ளது. பந்தினைந்துவயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகளில் 9விழுக்காட்டினர் வேலைக்குச் செல்கின்றனர்.  ஏழைக்குடும்பங்களில் வேலைச்சுமைகளால் பாதிக்கப்படும் பெண்குழந்தைகளும் ஏராளம். வீட்டில் வயதில்குறைந்த தங்கை, தம்பியரைப் பார்த்துக்கொள்வது, சமைப்பது, கூட்டிப்பெருக்குவது, தண்ணீருக்காகக் குட த்தையும், பாத்திரங்களையும் சுமப்பது  என்று இப்பெண்குழந்தகளுக்குப் பொறுப்பு அதிகம். சற்று வயதுகூடிய பெண்குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வயல்வெளிக்குச் சென்று விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல் அறுவடை செய்தல் முதலான காரியங்களுக்கு உதவிசெய்கின்றனர்.

எனினும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் ( NSSO 2009,22) அமிதாப் குண்டு (A.Kundu)  ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தரவுகளின்படி, 1980 லிருந்து நிரந்தர ஊதியப்பணிக்குச் சாதகமாக  தற்காலிக பணிகளில்  சரிவினைக் காண்கிறோம். 1983 ஆம் ஆண்டில் நிரந்தர ஊதியப்பணியில் இருந்தோர் எண்ணிக்கை 25.8 விழுக்காடு. இது 2004-2005ல் 35.6 விழுக்காடாக(fig.13) உயர்ந்துள்ளது . பெரிய அளவில் இல்லை என்கிறபோதும், இவ்வளர்ச்சி உலகமயமாக்கல் காரணமாக உற்பத்திநிறுவனங்கள் புறநகர்கள், மாவட்டத்  தொழிற்பேட்டைகள் என இடம்பெயர்ந்ததால் நிகழ்ந்தது. உண்மையில் செயல்படும் தகுதியுள்ள பெண்களில் 12.3 விழுக்காடுபெண்களே உற்பத்தித் துறையில் உழைபிற்குரிய  ஊதியம் பெறுகிறவர்கள். தவிர ஊதியம்பெறாமல் பணிசெய்யும் விழுக்காடு குறிப்பாக கிராமப்புறங்களில், இன்னமும் குறைந்தபாடில்லை. 2007-2008ல் 43 விழுக்காட்டினர் அவ்வாறு ஊதியமின்றி உழைக்கிறவர்களாக இருந்துள்ளனர். வேலைசெய்து சம்பாதித்தபெண்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 67 சதவீத த்தினர் தற்காலிக பணிமூலம் சம்பாதித்தவர்கள், 26சதவீதத்தினர் சுய தொழிலில் சம்பாதித் தவர்கள், நிரந்தரவேலையில் சம்பாதித்தவர்கள் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே.

13-categories-emploi

வேலைக்குப் போகும் இந்தியபெண்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறபோதும் அவர்களில் பெரும்பான்மையோர் (அதாவது மிகவும் வறிய நிலையிலுள்ள பெண்கள்) ஆண்கள் ஊதியத்தைக்காட்டிலும் குறைவான ஊதியம்பெற்று(அரசு பணிகளில் இதற்கு விதிவிலக்குண்டு) வேலைக்குப் போவதற்குக் வேலைக்குச் செல்லும் வாய்ப்பை இதுவரை அவர்கள் பெறாததும் ஒரு காரணமாகும். மாறாக ஓரளவு படித்த பெண்கள், ஏற்புடைய  வருவாயுள்ள ஆண்களை மணக்கிற பொழுது அப்பெண்களுக்கு வேலைக்குப் போகவேண்டுமென்ற நெருக்கடி குறைவு, குறிப்பாக இதனை கிறமப்புறங்களில் காண்கிறோம் (S.Desai et al.,2010). இருந்தபோதிலும் ஊதியத்தில் சமத்துவமற்ற நிலையினால்  பெரும்பாலான  பெண்கள் பாதிக்கப்படவே செய்கிறார்கள் (fig.14). உதாரணத்திற்கு பத்து ரூபாய் ஆண் சம்பாதித்தால்  கிராமப்புறங்களில் பெண்ணின் சம்பாத்தியம் 5 ரூபாய் 40 காசாகவும், நகர்ப்புறங்களில் 6ரூபாய் 80 காசென்ற நிலமைதான் உள்ளது (HDS 2009)

14-revenu-journalier

 கிராமப் புறங்களில் ஊதியங்கள் பணமாகவோ, பண்டமாககவோ அல்லது இரண்டுமாகவோ வழங்கப்படுகின்றன. விவசாயத் தொழிலாளியின் ஒருநாள் ஊதியம் இரண்டு யூரோ (2015-2016ல் நாளொன்றிர்க்கு 150 ரூபாய்). விவசாயவேலைகளில் (விதைத்தல், நாற்றுநடல், களைஎடுத்தல், அறுவடை, உலர்த்துதல்)  பெண்களின் பங்களிப்பிற்கும் ஆண்களின் பங்களிப்பிற்கும் அதிக பேதமில்லை என்கிறபோதும் ஆண்கள் பெண்களைக்காட்டிலும் ஒன்றரைமடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விவசாயத் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்குக் கூடுதலாகச் சம்பாதிக்கின்றனர். முரணாக நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம்  என மாற்றத்தைக்கண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கூட விவசாயத் தொழிலாளிகளின் நிலைமை பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் நிலமைக்கு இணையாகவே உள்ளன.

இந்தியாவில் சந்தைப்போட்டிகளால் உருவான பாகுபாடுகள்,  நிறுவனங்கள் தரும் நெருக்கடிகள், காலம்காலமாகத் தொடரும் சமூக மரபுகள் ஆகியவை  பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு வலுசேர்ப்பதில் ஒன்றிணைந்திருக்கின்றன  எனவே பொருளாதார வாய்ப்புக்களிலிருந்து பிரித்துப் பெண்களை உற்பத்தி த் திறன்குறைந்தவர்கள் என்ற பொறியில் அடைத்துவைக்கும் காரணிகளைச் சமாளிப்பது  அவசியமாகிறது.

மாறாக  நகருக்கு வெகுதொலைவில் உருவாகும் இதுபோன்ற புதிய  தொழிற்பேட்டைக்கள்  சுதந்திரம்,  தன்னுரிமை போன்றவற்றில் புதிய  வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் அதே நேரத்தில், புதிய சார்பு நிலைகளுக்கும் (கேலிக்குரிய ஊதியம், வேலை நேரத்தை தவறாக பயன்படுத்துதல், வேலை பளுவை அதிகரித்தல்….) காரணமாகின்றன.

முடிவு

இந்தியச் சூழலில்  பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வினை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணி என்ற கருத்தில் மாற்றமிருக்கமுடியாது.  ஆனால் சாதி, வர்க்கம், புவியியல் இடவமைப்பு ஆகிய விடயங்களில் அதுமட்டுமே தனித்ததொரு  பிரச்சினை அல்ல. கேரள மாநிலத்தின் அனுபவங்களிலிருந்தும் ; நகரமயமாக்கம், தொழில்மயமாக்கம்  ஆகிய பண்புகளுக்குட்பட்ட மாநிலங்களின் ஓரளவு அனுபவங்களிலிருந்தும்  நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது, திறன்வாய்ந்த குடும்ப நலதிட்டக்கொள்கை யொன்றினைக்கொண்டு  பெண்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம்பற்றிய விழிப்புணர்வு, ஆகியவற்றோடு, பண்பாட்டு வழிமுறையில்  மாற்றத்தையும், பொதுவாக பெண்கள் நிலையில்  மேம்பாட்டையும் கொண்டுவர முடியுமென்ற உண்மையை.

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிய இக்குறுக்குவெட்டு ஆய்வின் அடிப்படையில் சமூகச் சிந்தனையில் நீதிக்கு முதலிடம் கொடுக்கவேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 1950 ஆம் வருடமே அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக நாட்டில் ஏற்றுக்கொள்ளபட்ட காலத்திலேயே பெண்களுக்குரிய நீதியை வழங்குதல் குறித்த விவாதத்தை தொடங்கியிருந்தார்கள்.  கோட்பாட்டளவில் இந்திய அரசமைப்புச் சட்டபிரிவுக்கூறுகள் 15ம் 16ம் இனம், சாதி, சமயம், பாலினம் இவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து நேர்மறை பாகுபாட்டிற்கு ஊக்கமளித்து (அதாவது சட்டசபைகள், பாராளுமன்றங்கள், கல்வி, பொதுத்துறைகள் ஆகியற்றில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்)  அனைத்து இந்தியர்களையும் பாதுகாக்கிறது.  இருந்தபோதிலும், பாலினசமத்துவமின்மையால் விளையும் பாதகங்கள் சாதி அமைப்பு முறை பிரச்சினைகளுக்குக் காரணமாயினும், அவை சிறுபான்மை மதப்(குறிப்பாக இஸ்லாம்)  பிரச்சினைகளென  கருதபட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

சாதி, இனம், சிறுபான்மை மாற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டக்கூடாதென்ற கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தைப்போலவே அந்தந்த  சூழலுக்கேற்பவே செயல்பட்டுள்ளதென்பது தெரியவ்ரும் உண்மை, விளைவாக சாதி அமைப்புகளும், அவை சார்ந்த குழுக்களும் (உதாரணத்திற்கு ‘பின் தங்கிய பிறசாதியினர்’(OBC) ) முன்னுரிமை விடயத்தில்  பாலின அடையாளம், சிறுபான்மையினர் ( தங்களுக்கென தனிநபர் சட்ட வாரியத்தை இவர்கள் நியமித்துக்கொண்டுள்ள போதிலும் – Hasan, 2014)  என்ற பிரிவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி,  வாகைசூடுபவர்களாக இருக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் சாதிகளும், பழங்குடியினரென அங்கீகரிக்கப்பட்டவர்களும், பின் தங்கிய வகுப்பினரும் வீதாச்சார கொள்கையால் பயனீட்டும் பிரிவினராக உள்ளனர்.

பெண்கள் அனைவரையும் ஒரேவகையான பிரிவினர் எனக் கூறமுடியாதென்பது நிச்சயம். அவர்கள் சாதி, வர்க்கம், சமயம், இடம் என பல்வேறுகாரணங்களால் பிரித்துப் பார்க்கப்படுபவர்கள். எனினும் OBC யினர் அழைக்கப்படும் பிற பிற்பட்ட வகுப்பினர் வெவ்வேறானவர்கள், சிதறிய வகுப்பினர் என்ற நிலையை, தங்களுடைய   கூட்டம்சேர்க்கும் அரசியலாலும்,  இடஒதுக்கீடு வீதாச்சாரம் ஆகியவற்றின் தயவினாலும் இவர்கள்  கடக்க முடிகிறது, காரணம் இவை இரண்டும் அரசியல் வெற்றியை இன்று தீர்மானிக்கும் காரணிகள்.  இருந்தும் சமூக மரபுகளில் அழுத்தம்கொடுக்கக்கூடிய சக்திகள் பாலின சமத்துவத்தில் குறிப்பிடத்தக்க அனைத்து பரிணாம வளர்ச்சியையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன, இவ்வளவிற்கும்  சமூக சட்டங்களை  நடைமுறை படுத்துவது  அரிதாக என்றாலும் தொடரவே செய்கிறது, குறிப்பாக வடபகுதிகளில்.

உண்மையில் நீதிமன்ற முடிவுகள் மற்றும் விளக்கங்களின்படி  மனைவி, தாய், நலிந்தவள், அடக்கமானவள், பாதுகாப்பு வேண்டுபவளென என பலவகையில்  பெண்கள் பிரதிநித்துவபடுத்தப் படுகிறார்கள். கடைசியில் வழக்கம்போல குடும்பம் என்பது  சட்ட உரிமையின் குறுக்கீட்டிலிருந்து தப்ப முடிந்த தனிப்பட்ட உலகமாக இருந்து வருகிறது(K. Marius, 2016).

பெண்களின் சுய உரிமையை க் கருத்திற்கொண்ட பல்வேறு முற்போக்கான சட்டங்கள், அவற்றை உறுதியாக க் கையாளக்கூடிய தனிநபர் சட்டம் மற்றும் சம்பந்தப் பட்ட சமுகத்தின் மரபுகள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள இந்த அடிப்படை முரண்பாடுகளை இந்திய அரசின் சட்டத் துறை முதலிற் களைந்தாக வேண்டும்.

—————————————————–

Compléments bibliographiques

Voir aussi

 

Kamala MARIUS
Géographe, maîtresse de Conférences HDR,
Université Bordeaux Montaigne, 
UMR LAM (CNRS/Sciences Po Bordeaux)
Institut Français de Pondichéry, UMIFRE 21 CNRS/MAEE

Merci à Anne Le Fur pour la réalisation des cartes de ce corpus.

mise en web : Jean-Benoît Bouron

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)

[7] LiveMint, 22/10/2015 Par comparaison, la France compte 52 000 écoles primaires publiques et privées.

[8] Les données pour cet article proviennent essentiellement de Sonalde, Desai et al., Human Development in India, challenges for a society in transition, OUP, 2010. Ce rapport récent est sans doute le mieux documenté sur les questions de développement humain en Inde. Il a été réalisé par des chercheurs de l’Université du Maryland et du NCAER entre décembre 2004 et novembre 2005. L’enquête a été menée auprès de 41 554 ménages (soit 215 000 personnes) dans 33 États.

[9] Réalisée dans six pays (le Brésil, le Chili, la Croatie, l’Inde et le  Rwanda), l’enquête menée par l’International Centre for Research on Women (ICRW) basé aux États-Unis et en Inde, ainsi que l’Instituto Promundo au Brésil, a pris en compte plus de 8 000 hommes et 3 500 femmes entre 18 et 59 ans. La conception des relations hommes-femmes y est étudiée notamment à travers les situations de violences conjugales, sexuelles, ou encore la distribution des tâches au sein de la famille. L’Inde partage le pire bilan avec le Rwanda en termes de violences conjugales et d’inégalités hommes-femmes. Les Indiens sont en tête des inégalités des sexes concernant la répartition des tâches domestiques. http://www.icrw.org/publications/evolving-men

[10] Sahoo, Raju, 2007, Social change, vol 73, n°4 p. 131-152

[11] http://www.oecd.org/fr/eco/Inde%202014%20Synthese.pdf

 

மொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்……

நமக்கென்று மெல்வதற்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் கிடைக்கின்றன. ஜெயல லிதா மர்மச்சாவு  போய் ஜல்லிக்கட்டு வந்திருக்கிறது ….

தமிழ்நாட்டில் தென் மாவட்ட த்தில் காலம் காலமாய் ஜல்லிக் கட்டு நிகழ்ந்து வருகிறது இதைத் தடுப்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலுவானவை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினில் ‘corrida de toros’ , என்ற பெயரிலும் பிரான்சின் சில பகுதிகளில் ‘la Corrida’ என்ற பெயரிலும், போர்ச்சுகல், பெரு, கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இக்காளைச்சண்டைகள் ஜாம் ஜாமென்று எதிர்ப்பையெல்லாம் மீறி நடந்துவருகின்றன. இங்கும் விலங்குப் பாதுகாப்பாளர்களின் (la Société Protectrice des animaux (SPA)கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி நீதிமன்றங்கள் வரை(குறிப்பாக பிரான்சுநாட்டில்) பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.  எனினும் காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டுவரும் மரபு என்ற வகையில் நீதிமன்றம் அனுமதித்ததால் அவை நடைபெற்று வருகின்றன. Corrida வீரர்களை காளயைக் கொல்பவர் என்ற பொருளில் Matador என அழைக்கிறார்கள். அதாவது தமிழர் மரபுக்கு மாறாக இவர்கள் காளையைக் கொல்பவர்கள். நமது மரபு காளையை அடக்குவது தான். இதனைத் தடுப்பதில்  எவ்வித நியாமும். இருப்பதாக த் தெரியவில்லை. நடிகர் கமலஹாசன் சொல்வதைபோல உணவுக்காக கொல்லப்படும் விலங்கு கள் வதையின்றிக் கொல்லப்படுகின்றனவா எனப்பார்க்கவேண்டும். இங்கே காளைகள் துன்புறுவது மிகமிக க்குறைவு. தார்க்குச்சி பாய்ச்சி பாரவண்டிகளை இழுக்கும் மாடுகள் நாடெங்கும் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. கிராமங்களில் சுமையை இழுக்கமுடியாமல் படுத்து அடம் பிடிக்கும் மாடுகளை வாலச்சுருட்டுவதும், மிலாறுகளால் கைவலிக்க அடிப்பதும், கண்களில் மிளகாய்த் தூளைத் தூவுவதையும் சிறுவயதில் பார்த்துப் பதறியதுண்டு.  இப்பிரசினைகள் எல்லாம் இக்காளைகளுக்கில்லை. தவிர சொல்லபோனால் சபரிமலைகளுக்குப் போகும் மனிதர்களைப்போல குடும்பத்தின் மற்றவர்களை பட்டினிபோட்டு பிரத்தியேக கவனிப்பு.

 

இருந்தும் சில கேள்விகள் ஐயங்கள்  எனக்கு வருகின்றன.

 

மேற்குலகில் விருபுகின்றவரெல்லாம் காளையுடன் சண்டை யிட முடியாது. Matador ஆக விரும்புவர்கள் கடுமையானத் தேர்வுக்குப் பிறகு உரிய பயிற்சியைப் பெற்று களத்தில் இறக்கிவிடப்படுபவர்கள். அந்த நிலை தமிழ் நாட்டில் இல்லை. தவிர இச்சண்டைக்கென உரிய வகையில் பாதுகாக்கப் பட்டத் ‘திடலும்’, இத்துறைக்கென சிறப்பு பயிற்சிபெற்ற மருத்துவக் குழுவும், வீர ர் காயம்பட்டாலோ, உயிர் இழந்தாலோ கணிசமானத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களும்,  உதவித்தொகையை அரசும், காளைச்சண்டை ஏற்ப்பாட்டாளர்களும்  அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இசெய்து தருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு உத்தரவாதங்கள் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு வீர ர் களுக்கு உண்டா ?

 

இது தவிர எனக்கு வேறு சில சந்தேகங்கள்….

 

  1. தமிழ் நாட்டில் காளைகள் பலசலியாக இருக்கின்றன, காளையை அடக்குகிறேன் என கள மிறங்கும் வீர ர் கள் அந்த அளவிற்கு இல்லையே ஏன்

 

  1. தமிழ்நாட்டில் பேய் பிடி த்த து என்று சொல்லி ஆடுகின்றவர்களைப் பார்த்திருக்கிறேன், உயர் சாதி இந்துக்கள் பெண்களுக்கோ பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ இப்படியெல்லாம் தெருவில் இறங்கி ஆடுவதில்லை. அதுபோல காளையைப் பிடிக்கிறேன் என களத்தில் இறங்கும் இளைஞர்களெல்லாம் பின் தங்கிய மக்களாகவே ஏன் இருக்கிறார்கள் ? இந்த வீரம் மார் தட்டும் மற்ற தமிழர்களிடம் எப்படி இல்லாமல் போயிற்று ?

 

3. இந்த அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசு தரும்                 பாதுகாப்புகள் என்ன ?  அவர்களின் இழப்பினை ஈடு செய்ய அரசின்                                      உத்தரவாதம் என்ன ?

 

  1. தமிழக முதலமைச்சரோ, ஸ்டாலினோ, வைகோவோ, திருமாவளவனோ, அன்புமணியோ இம்மாதிரியான சிக்கலான நேரத்தில் பொங்கல் நிமித்தமாக ஆளுக்கொரு களத்தில் இறங்கி காளையை  அடக்கித் தமிழர் பெருமையை  ஏன் நிலை  நிறுத்தக்கூடாது ?

 

——————————–

 

 

மொழிவது சுகம் ஜனவரி 2 2017

முகமற்ற மனிதர்கள்jazz-artist

 

நேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால்  கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக,  மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல்  சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

உலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில்  பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய  நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை  மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.

 

மோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு  மக்களும் ஒபாமா யார்,  புட்டின் யார் ஏன் ? நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா ?

 

ஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான்.  இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும்  முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.

 

இருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் ? பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா ? அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக  இருக்கலாமில்லையா ? ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களைப்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல  வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான்,  விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான்.  வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம்  இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

————————————————————————

மொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்

1000_rupee_note_-_still_-_h_-_2016‘ஆயிரம் ரூபாய் நோட்டு ‘என்றொரு படத்தை netflixல் அண்மையில் பார்க்க நேர்ந்த து.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அறுபதுகளில் வந்த ‘ஆயிரம் ரூபாய்’ என்றொரு தமிழ்த் திரைப்படத்தை அது நினைவூட்டியது.  படத்தில் தெருவில் ஆடிப்பாடி பிழைக்கும் சாவித்திரிக்கு ஒரு நாள் ஆயிரம் ரூபாய் தாளொன்று  கிடைக்கிறது.   அதைப் பாதுகாக்க அல்லாடுகிறார், அவசரத் தேவையை முன்னிட்டு உபயயோகிக்கலாம் என்று போனாலும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தாளம்போடும்  பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் எப்படி வந்ததென்ற கேள்வி. முடிவில்  ஒரு கட்டத்தில் பைத்தியங்கூட அவருக்குப் பிடிக்கிறது.

 

‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ (1000 Rupee Note) ஒரு மராத்திய திரைப்படம். அடிப்படையில் ‘ஆயிரம் ரூபாய்’ கதையின் மையக் கருத்தை ஒட்டியதுதான், திரைக்கதை அமைப்பிலும் பிரமாதமான வேறுபாடுகளில்லை. எனினும் தமிழ் ‘ஆயிரம் ரூபாய்’ நாம்  நன்கறிந்த மெலோ டிராமா வகையறா, அதாவது ‘சோப்  ஒபேரா‘ (soap opera)ரகம். ஆனால் மராத்திய ‘ஆயிரம் ரூபாய் நோட்’ சிக்கல்களைத் திணிக்காத, எளிமையான திரைக்கதையும் சம்பவக் கோர்வையுமாக விசும்பல்கள் தேம்பல்களின்றி எதார்த்த முறுவல்களுடன்  நகரும் சினிமா.  எத்தனை யுகங்கள் வந்துபோயினும், ராஜபாட்டை அறியாது முட்டுச் சந்துகளில் உறைந்து துன்பத்துடன் வலுவில் கை கோர்க்கும் வாழ்க்கைக்கு உரியவர்கள் ஏழைகள் என்பதை  நியோ ரியலிஸத்துடன் காட்சிப்படுத்தும் சினிமா.

 

சாவித்திரி இடத்தில் இங்கே உஷா நாயக், ஆட்டம் போடவந்த இளமையும் கவர்ச்சியுமிக்க நாயகிஅல்ல, வயதானப் பெண்மணி. மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமமொன்றில் உழலும் கதை. விவசாயியான ஒரே மகன் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலைசெய்துகொள்கிறான் (இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மல்லையாக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை), கொள்ளிவைக்க உதவும் என்பதுபோல அரசுசெய்த அற்ப உதவியையும் மருமகள் சுருட்டிக்கொண்டுபோக, நிர்க்கதியாய் விடப்பட்ட விதவை.  கிராமத்தில் ஒருபணக்கார குடும்பத்தில் பத்துபாத்திரம் தேய்த்து, வீடுபெருக்கி, நாளெல்லாம் அவர்கள் வீட்டுத் துணிகளை அலசி  அவர்கள்  தின்று மீந்த தில் பசியாறும் பெண்மணி. வீட்டில் அடுப்பு மூட்டுவது டீ போட மட்டும் தான். தொடக்கத்தில் இந்த அடுப்பைமூட்டும் முயற்சியில் தீப்பெட்டியில் இருந்த நான்கு குச்சிகளில் மூன்று பயனற்றுப்போக, நான்காவது குச்சியிலாவது அடுப்பு பற்றவேண்டுமென கடவுளை வேண்டுவதும், மெல்ல மெல்ல விறகில் தீப்பிடித்து பரவ, தீச்சுவாலையின் செழுமை கன்னக்கதுப்பிலும், கண்மணிகளிலும் மினுங்குவதும், அந்த மினுங்கலை  உதட்டோரங்களில்  வழியவிடுவதும் கணநேரக் காட்சியென்றாலும் கோடிபெறும். ஏழைகள் வாழ்வில் மகிச்சிக்கூட  ரேஷனுக்கு உட்பட்டதில்லையா ?  இருந்தும்  அதையும் அண்டைவீட்டுக்காரனான சுதாமா என்ற ஆட்டிடையன் குடும்பத்துடன் பகிர்ந்து வாழ்பவள். « யாருடனாவது சேர்ந்து குடித்தால் தான் டீ சுவைக்கிறது » எனும் பெண்மணி.  அறுந்த செருப்பைத் தைக்கவும், ஐம்பது காசு செலவழித்து ஒரு தித்திப்பு ரொட்டி வாங்கவும் பலமுறை யோசிப்பவள், காரணம் சிக்கனம் அல்ல,  அவள் கையிறுப்பு அவ்வளவுதான்.

 

இந்த அன்றாடம் காய்ச்சியின் வாழ்வில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறுக்கிட,  வாழ்க்கைத் திணறுறது. வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிற ஓர் அரசியல்வாதி  வாக்குகளை விலைகொடுத்துவாங்குகிறான். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஒருவேளை நல்ல சாப்பாடும், பணமும் கிடைக்குமென்கிற சுதாமா குடும்பத்துடன் இவளும் தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள். உணவுப் பொட்டலத்துடன், வயதான பெண்மணிக்கு விவசாயியான மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலால் வேட்பாளரிடமிருந்து கூடுதலாக இரண்டொரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றன. தலைவலி அன்றே ஆரம்பிக்கிறது. எங்கே பாதுகாப்பாக வைப்பதென்ற கவலையில் உறக்கமின்றி தவித்து (எந்த வெண்டைக்காய் வங்கியும் அவளுக்குத் தெரியாது), தனக்கிருக்கும் சில ஆசைகளை (உடைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியை சரி செய்வது, தன் மகன் படத்திற்கு பிரேம் போடுவது, தனக்கும் சுதாமா குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுப்பது) நிறைவேற்றிக்கொள்வதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாமென நினைக்கிறாள். நகரம்  நோக்கிப் பயணம். பேருந்து நடத்துனர் ஆயிரம் ரூபாயை மறுக்க, உடன் பயணிக்கும் சுதாமா பணம்கொடுக்கிறான். கண்ணாடிகடை, படத்திற்கு பிரேம் போடும்கடை அனித்திலும் இதே அனுபவம். துணிக்கடையில் மாற்றிக்கொள்ளலாமென நினைத்து அங்குபோகிறார்கள்.  கடைமுதலாளி சந்தேகித்து ரோட்டோரம் போகுகும்  போலீஸ்காரரை அழைக்கிறார், பாகிஸ்தானில் அடித்த கள்ளப் பணமாம், எனவே வயதான பெண்மணியும் துணைக்குவந்த அப்பாவி சுதாமாவும் விசாரணை யென்ற பெயரில் அடிபடுகிறார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், இறுதியாக சுதாமா கைவசமிருந்த பணத்தையும் இழந்து வீடு திரும்புகிறார்கள். இச்சம்பவத்தில் வழக்கம்போல இலாபம் பார்ப்பது போலீஸ்காரர்கள். வேட்பாளர்மீதான புகாரை பதிவு செய்வதைத் தடுக்க 50000 ரூபாயும், வேட்பாளரைக் காப்பாற்ற செய்த உதவிக்குச் சில ஆயிரங்களும் கைமாறுகின்றன.

இந்தியாவில் ஏழைகள் கையில் 500 ரூபாய் நோட்டையும், 1000 ரூபாய் பார்க்க முடிவதற்கு ஒன்று தேர்தல்  காரணமாக இருக்கலாம் ;  அல்லது சிறுகச் சிறுக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேர்த்ததாக இருக்கலாம். திடீரென்று 500 ரூபாயையும் 1000 ரூபாயையும்  செல்லாதாக்கியதன் மூலம் இந்திய  மத்திய அரசு உண்மையில்  யாரைத் தண்டிக்கிறது ? ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம்  ஆனால்  வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல்,  உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம்?   எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ? இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா ?  இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன ? இவற்றிலெல்லாம் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவராமல் ஓர் உலக்கையை நட்டு புதிய இரண்டாயிரம் எனும் பணமுடிச்சை வைத்து முடிந்தால் எடுத்துக்கொள் எனக்கூறும் மோடி மந்திரம் சொல்வதென்ன ?

கட்டுக் கட்டாய் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் புதிய 2000 ரூபாய் இடவசதியைப் இரட்டிப்பாக்கி கூடுதலாக பதுக்க உதவி செய்திருப்பதைத் தவிர்த்து  கண்டபலன் என்ன ?

———————————————————–

 

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் இந்தியப் பாலின ஏற்றத் தாழ்வுகள் -2 கமலா மரியுஸ்

கட்டுரை ஆசிரியர்  –  கமலா மரியூஸ், வருகைப் பேராசிரியர் பொர்தொ பல்கலைகழகம், பிரான்சு; பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

  1. வாய்ப்புகளில் சமத்துவமின்மை

 

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்புடன்   ஒப்பிடுடுகையில்  கல்விபயின்றவர்  விகிதாச்சாரம் 2001 ஆம் ஆண்டில்  64.83  சதவீதமாக இருந்தது, இவ்வெண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது தெரிய வந்தது. எனினும் பெண்கள் நிலமையில் காண்கிற சமத்துவமின்மை  அவர்களுடைய கல்விவாய்ப்பிலும் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை நிலை. தமிழ்நாடு மாநிலத்தில்  கவனிக்கத்தக்க வகையிற் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக  1982 ஆம் ஆண்டில்  இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைவருக்குமென நடைமுறை படுத்தியது, ஆரம்பக் கல்வி மட்ட த்திலேயே  பள்ளிக் கல்வியைத் தொடராமல் வெளியேறும் மாணவர்களைத் தடுக்கும் வகையில்  கட்டாயக் கல்வியைச் சட்டமாக்கியது போன்றவை  அன்றையத் தமிழ்நாடு அரசின் முயற்சிகள். அடுத்ததாக  நாட்டின் 2010 ஆண்டு ஏப்ரல்  முதல் தேதியிட்ட சிறுவர்க்கான கட்டாய இலவசக் கல்வி அரசு ஆணை (Right of children to free and compulsory education act  2009) கடைசியில்  6லிருந்து 14 வயதுவரையிலான  அனைத்து சிறுவர் சிறுஅனைவருக்கும் தொடக்கக் கல்வியைப்  பெறுவதற்கான உரிமையை முதன் முதலாக வழங்கியது. 80 சதவீத மாணவர்க்குக் கிடைத்த மதிய உணவுத் திட்டமும், 70 சதவீத மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டப் பாடப் புத்தகங்களும் கூடுதற் பலனை அளித்தன.

tx-alphab-inde-par-caste-par-age

எனினும் கல்விவாய்ப்பில்  பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவே செய்கின்றன. உதாரணத்திற்கு இருபாலினத்திரிடை கல்வி அறிவை,  2011ஆம் ஆண்டில்  ஆண்களில் 82.1 விழுக்காட்டினரும், பெண்களில் 65.5 விழுக்காட்டினரும் பெற்றிருந்தனர். அதாவது பாலின அடிப்படையில் பார்க்கிறபொழுது 2001 ஆம் ஆண்டில் வேறுபாட்டின் சதவீதம் 21.6 விழுக்காடு  என்றிருந்தது, 2011 ஆம் ஆண்டில் 16, 7 விழுக்காடு குறைந்துள்ளது  தெரிய வந்தது.  எனினும் எழுத்தறிவு பெற்றவரெனத் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையினரில் கணிசமான ஒரு பகுதியினர் அரசின் கல்வித் திட்டம் வகுத்துள்ள கல்வி அறிவை நிறைவு செய்யாதவர்கள், தவிர இந்தக் கல்வி அறிவு பெற்றவர்களென மக்கள் கணக்கெடுப்பு கையாளும் சொல்லாடலின் பொருளேகூட ஒரு குடும்பத் தலைவர் அளிக்கிற தகவலை அடிப்படையாக க் கொண்டது. தவிர  எழுதப்படிக்கத் தெரிந்தவர்  என்பவர் ஒரு குறிப்பிட்ட மொழியை ஓரளவு வாசிக்கவும் எழுதவும் கூடியவர்  என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.  இந்த எழுதப்படிக்கத் தெரிந்தோர் வீதாச்சாரம் வயதின் அடிப்படையில்  இருபாலினரிடையே வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  ஆண்கள் 54 சதவீத த்தினரும் பெண்கள் 19 சதவீத த்தினரும் கல்வி அறிவு உடையவர்கள். 10 வயதிலிருந்து 14 வயதுகுட்பட்ட பிரிவினரில்  பையன்கள் 82 சதவீதமும், பெண்கள் 78 சதவீதமும் கல்வி கற்றவர்கள். 14 வயதிற்கும் 17 வயதிற்கும் உட்பட்ட பிரிவினரிடை எழுதப் படிக்கத் தெரிந்தவர் சதவீதம் பெண்களித்தில்  32 சதவீத த்திலிருந்து  54 சதவீத த்தை இன்று எட்டியுள்ளது.

2-2012-09-27-11-32 7-img_3162_dxo

ஆயினும் இந்திய தேசத்தில் சராசரியாக எழுதப் படிக்கத்  தெரிந்தவர்களின்   விகிதாச்சாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்  வெறுமனே வயது, சாதிகள், வாழ்விடத்தின் நகரத் தன்மை ஆகியவற்றைப் பொருத்தவை மட்டுமே  அல்ல. உயர்சாதியினர் வசிக்கும் நகரப்பகுதிகளில் கல்விஅறிவுபெற்றொர் விகிதாச்சாரம் அதிகம். இம்மாதிரியான இடங்களில் இந்துக்கள் கிறித்துவர்கள் என்ற பேதங்கள் கல்வியறிவு ஏற்றத்தாழ்வில் தெரிவதில்லை. அவ்வாறே குடும்ப வருவாய் அதிகரிக்கிறபொழுது, அதற்கிணையாக  அக்குடும்பத்தில்  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணும் எழுத்தறிவு சமத்துவமின்மை வீதாச்சாரம்  குறையவும் செய்கிறது (fig 5 ).

5-abandon-scolarite-table

6-carte-alphab-femmes

பள்ளிபடிப்பைத் தொடராமல்  வெளியேறும் விழுக்காடும்  பெண்களிடத்தில் அதிகம். அதிலும் குறிப்பாக  தலித் , பழங்குடி மக்கள்  மற்றும்  இசுலாமியர் ஆகியோரிடை  மிகவும் அதிகம். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, நகரத்தில் வாழும் வாய்ப்புள்ள இசுலாமியர்   போன்ற சாதமாகனச் சூழ்நிலைகளுக்குப் பின்னரும் தொடரவே செய்கிறது. பள்ளிக் கல்வியை முடிக்காத  உயர்சாதி இந்துப் பிள்ளைகள்  8 சதவீதம் ஆனால் அதேவேளை , இசுலாமியடரித்தில் 26 சதவீதமும், தலித் மற்றும் பழங்குடிகளிடத்தில்  31 சதவீதம் என்றிருக்கிறது. உழைக்கும் வயதுடைய உயர் சாதி இந்துக்கள், ஜெயின்கள், கிறித்துவர்களிடை  ஆண்களில் 16லிருந்து 17 சதவீத த்தினர் பட்டமோ , டிபளாமோவோ பெற்றிருக்கிறபோது; தலித், பழங்குடியினர், இசுலாமியர்கள் ஆகியோரிடை 4லிருந்து 6 சதவீத த்தினரும் அதிலும் பெண்கள் என்றுவருகிறபோது  இப்பிரிவினரில் 2 சதவீத த்தினரே அத்தகுதியைப் பெற்றுள்ளனர்.

 

கல்வி அறிவில் காணும் இந்த ஏற்றத் தாழ்விற்கு கல்வி நிறுவனங்களில் நிலவும் சூழல்களுங்கூட காரணம். உபகரங்கரண ங்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை தேவைக்கேற்ப அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதாதது, அல்லது பணிக்கு ஒழுங்காக வராதது,  அவர்கள் கல்வி அறிவிலுள்ள குறைபாடுகள், கல்விநிறுவன செயல்பாடுகளில் காணும் குறைபாடுகள் போன்றவை இன்னொருபக்கத்தில் முறைசாரா கல்விமுறைக்கு வழிவகுக்கின்றன ( மாலைக் கல்வி, பிரத்தியேகமான கல்வி ஏற்பாடுகள் ..). அடுத்துப்  பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி ஸ்தாபனங்கள் என்றாலே மேல்தட்டு மக்களுக்கு என்பதுபோல இவ்விடயத்தில் அரசு காட்டும் மெத்தனமும்  சமூகத்தில் கல்வி அறிவில் காணும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம். எனினும் 2008க்கும் 2013க்கும் இடைபட்டக் காலத்தில் 58000 அரசுப் பள்ளிகளும் 70000 தனியார் பள்ளிகளும்  கட்டப் பட்டுள்ளன.

 

மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறபோதும் மாநில அரசுகளில் சொந்தத் திட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இத்துறை உள்ளதாலும் மாநிலங்களிடை சீரற்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணம்(fig 8). இதன் விளைவாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,இமாசலப்பிரதேசம், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் விகிதாச்சாரம்  70 சதவீத த்திற்கு அதிகம்: மாறாக ஜர்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, பீகார், ராஜஸ்த்தான் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலைமை, குறிப்பாக கடைசி இரண்டு மாநிலங்களிலும் கல்வி அறிவு 53 சதவீதம்(fig 7 ).இருந்தபோதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் பாலின அடிப்படையிலான கல்வி அறிவிலுள்ள  ஏற்றத் தாழ்வு வெகுவாக க் குறைந்துள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை,

 

என்னதான் கல்வி அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் பாலின அடிப்படையில் காணும் சமத்துவமின்மைக்கு மக்களின் சமூகம் மற்றும் பண்பாடுகள் காரணம் என்பதும் தெளிவு. பெண்பாலின எண்ணிக்கையை வரம்பிற்குட்படுத்துதல், சமயத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் பொதுவிடத்திற்கெனப்  பின்பற்றும் ஒழுங்கு போன்றவையும் இப்பிரச்சினையில் முக்கிய ப்பங்கினை வகிக்கின்றன.

 

3          பொதுவெளிப் பயன்பாட்டில் பாலின அடிப்படையிலான நிர்ப்பந்தங்கள்

 

ஆண்கள் பெண்கள் இருபாலினருமே பொதுவெளிகளில் காணக்கிடைத்தாலும், உடலளவில் பெண்களின் அண்டைவெளி புழக்கத்தை   சமூகத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகிற  பண்பாட்டு நெறிமுறைகள் அனேகம்.  கூட்டுக்குடும்பம் அல்லது  சார்ந்திருக்கும் சமுதாயம் காரணமாக, ஒருவித க் கட்டுப்பாடு  ஒருவித சமூகக் கெடுபிடி  இயல்பாக செயல்பட்டு ஆண்களிடமிருந்து பெண்களை விலக்கிவைப்பதில் சறுக்கல்களை தவிர்க்கும் முனைப்புத் தெரிகிறது. அன்றாடப் புழங்கும் இடங்களிலிருந்து வெளியில் வருகிறபோது  ஒருவித அநாமதேயத்தையோ, பிறர் பார்வைக்குத் தப்பிக்கும் உருவத்தையோ தேடிப்பெறவேண்டிய நெருக்கடி பெண்களுக்கு. உள்ளது. இஸ்லாமியப்பெண்களுக்கு பர்தா, சில வடமாநிலப்பெண்களுக்கு (உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்த்தான்)  குங்காட் (Ghunghat)  போன்றவை பொதுவிடங்களின்

உபயோகத்திற்கென்று நிர்ப்பந்திக்கப் பட்டவை. ஆக பொதுவிடங்களில் பெண்கள் புழங்கப் பொழுதுபோக்கு காரணிகளினும் பார்க்க (பூங்கா, காப்பி பார்கள், அழகு நிலையங்கள்  ..) குடும்பம்  அல்லது சமுதாய சார்ந்த காரணிகளே( சந்தை, பள்ளி, குழந்தைகள் பூங்கா, வேலை செய்யும் அலுவலகம், சமய வழிபாட்டு இடங்கள், பண்டிகைகள்) முக்கியத்துவம் பெறுகின்றன. நகரங்களின் பொதுவாக  எங்கும் காண்கிற பூங்காக்கள், திரைப்படக் கூடங்கள் காப்பி பார்கள், பேரங்காடிகள் போன்ற பொதுவிடங்களில் புழங்குகிற உரிமை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கிறது, இம்மாதிரியான பொதுவிடங்கள்  ஒருவகையில் சிலவரம்புகளுடன் நெறிமுறையைக் க்டக்கவும்  ஆண்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முகத்திரையிட்ட பெண்களை அனுமதிக்கின்றன. அதேவேளை  வீதிகளில் கடைவிரித்துள்ள துரித உணவகங்கள், மதுக்கடைகள், மதுவருந்தும் விடுதிகள் ஆண்களுக்கு மட்டுமே புழங்குவதற்குரியவை.

 

எனினும் பொதுவிடங்களில் பெண்களின் நடமாட்டம் என்ற உரிமைக்கான விலை  இப்பிரச்சினையை கையாளுதல், அதனை உணர்வு பூர்வமாக எதிர்கொள்ளுதல்  ஆகிய விடயங்களில் பேரத்திற்கு  உட்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டுஇந்திய மனித வளர்ச்சி  கணக்கெடுப்பின்படி பெரும்பான்மையான பெண்கள் அதாவது மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 73 விழுக்காட்டினர் மருத்துவ மனைகளுக்குச் செல்வதென்றாலுங்கூட தனியே போவதெனில் ஆண்களின் குறிப்பாக தங்கள் கணவர்களின் அனுமதியை பெறாமல் செல்லமுடியாதென்றும் , அவ்வாறான அனுமதியும் 34 விழுக்காட்டினருக்கு மறுக்கப்பட்டிருக்கிறதென்றும் தெரிவிக்கிறது.(fig 8)

8-autonomie-table

வடமாநிலங்களைப்  பொறுத்தவரை கல்வி, வயது, ஏன் பெருநகரங்களில் வசிபதுகூட மருத்துவமனைகளுக்கு செல்லும் வாய்ப்பில் குறுக்கிடுபவையாக உள்ளன. புர்க்கா மற்றும் குன்காட் வழக்கிலுள்ள இந்த வடமாநிலங்களில் பொதுவிடங்களில் பெண்களுக்கான  சமத்துவமின்மை மிக க் கடுமையாக உள்ளது (fig 9 ). ஆனால் இப்பிரச்சினை அதிகம் நகரவாழ்க்கையைக்கொண்ட மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்) இப்பிரச்சினை அதிகமில்லை. அரசு ஆவணங்களில் பெண்கள் தங்கள் பெயரை இடம்பெறசெய்வதேகூட பெண்களின் சுய அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக  தொழில் அபிவிருத்திபெற்ற குஜராத், கர்னாடகா மாநிலங்களில் கருதப்படுகிறது

9-cartes-autonomie-femmes

தவிர கூட்டுக்குடும்பம் (la famille indivise)அல்லது விரிந்தக் குடும்பம் (la famille élargie)என்கிற அமைப்புமுறை பெண்ணை அடிமை நிலையில் வைத்துள்ளது. விளைவாக இந்தியக் குடும்ப அமைப்பில்  அதிகம் வன்முறையில் பாதிக்கப்படுபவளாக அவள் இருக்கிறாள். மாமியாரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற பெண் அவ்வாறில்லாத பெண்ணைக்காட்டிலும் அதிகம் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக இது குறித்த பல ஆய்வு முடிவுகள் ( Jejeebhoy, 1998 ) தெரிவிக்கின்றன. எனினும் இக்கருத்தை ஒரு குடும்பத்தில்  மாமியார்  என்பவர் தன் குடும்பத்தின் நன்மதிப்பில் அக்கறைகொண்டு கணவன் – மனைவிப் பிணக்கைக் குறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரியவந்த கணத்தில் , பொதுமைப் படுத்தக்கூடியதல்ல என்பதாகிறது.

.

.(தொடரும்)

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

(அதிகாரம் மூச்சிழந்தால் அதன்காலில் மிதிபட்ட  காலத்தை மறந்து அமைதிகாத்தால்கூட ஏற்றுகொள்ளலாம், ஆனால் அதனைப் பரணிபாடும்  சிற்றெறும்பு மந்தைகளின் போக்கை எப்படி எடுத்துக்கொள்வது.  ‘அதிகாரம் நின்றாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம்பொன்’ என்ற புதுமொழியாகப் பொருள் கொள்ளலாமா ?    ‘இன்குலாப்’  என்ற  கவிக்குரல், புரட்சிக்குரல்  சில நாட்களுக்கு முன்பு அடங்கிப்போனது . அந்த இன்குலாப் குறித்து நண்பர் பா.ஜெயப்பிராகாசம் கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ இணைய இதழுக்கு எழுதியக் கட்டுரை சொரணையுள்ள தமிழ் நண்பர்களுக்காக.)inkulab

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

 

கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம்.   பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில்  அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் தவிர  கால எல்லை இல்லை.தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக்காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல்   என்ற பேர் கல்லூரிக்கு!

கவிஞர்கள் மீரா,அப்துல்ரகுமான், அபி    என தமிழில் தடம்பதித்த   கவிஞர்கள்  மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம்;  அப்போது தமிழ் முதுகலையில்   . கவிஞர் நா.காமராசன் முதலாண்டு மாணவர்;   தமிழ்இளங்கலையில் இறுதியாண்டு மாணவன்  நான்.  இரண்டாம் ஆண்டு மாணவராக எஸ்.கே.எஸ் .என அறியப்பட்ட இன்குலாப்.  அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.

           தியாகராசர் கல்லுரியில் முதுகலை முடித்த கவிஞர் மீரா ‘சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக இருந்த வேளையில் அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் (Pre university  course) வாசித்தவர் எஸ்.கே.எஸ். சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்இளங்கலை சேருகிறார். இறுதி ஆண்டு முடிக்கும் வரை  அவர் எஸ்.கே. எஸ். சாகுல் அமீது.

எஸ்.கே.எஸ். சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். அவை யாப்பு சார்ந்த

மரபுக் கவிதைகள்.

மண்னின் குழந்தைகளாய்- இங்கு

வாழும் உயிர்களுக்கு

விண்ணின் ஒளிமுலையில்-இருந்து

வீழும் வெயில் பாலே.

முதிர வைப்பாய் அரும்பை-அனல்

முத்தம் கொடுப்பதனால்

முதிரவைத்தல் முறையோ –அந்த

ஊமை மலர்க் குலத்தை.

சுரண்டிக்  கொழுப்பவர்கள்உன்

சூட்டில் பொசுங்க வில்லை

சுரண்டப் படுபவர் தாம்- உன்

சூட்டில் பொசுங்குகிறார்.

இவை ’வெயில் ‘   தலைப்பில்   அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.

பாடகன் வருகின்றான்’ என்று மற்றொரு கவிதை.

பாலைவனத்தின் சோலைகளே –ஒரு

பாடகன் வருகின்றான் அவன்

பயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு

பாடல் தருகின்றான்

நீலவானத்திற் கப்பால் –எதையோ

நினைத்துப் போகின்றான்

நீண்ட உலகத் துயர் களைய

நெஞ்சை நனைத்துப் போகின்றான்”

மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார்.பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் இன்னும் வீரியமான சொல்லாடல்களை கைவசப்படுத்தினார்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) .இஸ்லாமியரில் கீழ் சாதியான ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

     இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த “நாவிதக்குடி“ – அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன.     தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு -மரைக்காயர் முஸ்லீம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது.   நாவித முஸ்லீம் இளைஞர்களின் அயராத முயற்சியால்நாசுவக்குடி’ என்னும் அந்தப்பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள்   எதிர்ப்புக் கங்கு சீராய்   வளர்ந்தது.        பிரச்சனைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை எதிர்கொள்ள இயலாமல் , ஊதி அணைத்து விட்டு, அல்லது உடன்பட்டுப்  போனவர்கள் பக்கம் அவர் போகவில்லை. மரபுக்கவிதை   விதைத்த போதும் எதிர்க்கருத்தியலின் வேர் அவருக்கு இந்த ஒடுக்கபட்டோர் குரலிலிருந்து உருவானது.

–2–

     1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, தமிழ்நாட்டில் சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல்   வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில்  தமிழ்நாடு முழுதும் கூட்டம் நடத்தி  உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி   தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள். மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் இரா.சேதுவும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாலையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

     பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது.     வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களை விட கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா. முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்)- போன்றோர் ஏற்றுச் செய்தனர்.

     1965 ஆகஸ்டு 15 –ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம்.   கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாபை, ஐ. செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும் வரை அடித்தது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். ” இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது)” என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கிமானவர். ஆயுதப் போராட்டக்   கருத்து 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோது தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றது   உண்மை.

இளங்கலை முடித்த பின் ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor).; 1967 –ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக   நடத்தியகார்க்கி’ இதழில் எஸ்.கே..சாகுலமீது -இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே கார்க்கியில்   பா. செயப்பிரகாசம்,  சூரிய தீபன் ஆகிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற.அப்போதிருந்தே(1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர்   ஆகியது போல் எஸ்.கே. எஸ், சாகுல்அமீது மறைந்து இன்குலாப்   இயற்பெயராகியது.

           “ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்.” என்கிறார்.

செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை . சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி ”ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை“ புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.

பள்ளியில் பயின்ற போது அவரும் நானும் தி.மு.கழகத்துக்காரர்கள். அக்காலத்தின் இளைய தலைமுறை   எப்படி உருவாகிற்றோ   அப்படியே நாங்களும் உருவானோம் . சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 . டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை மார்க்சியத்திற்கு உறுதியான   அடித்தளம் அமைத்தது.   அரசதிகாரத்திலிருந்த தி.மு.க. வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.

     “ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச்செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும்.“

      அவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி , மார்க்சிஸ்ட்   இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர்   புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசியவிடுதலையில் ஊன்றி நிற்பதுவும்  அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

     புரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்த போதுமனிதன்’ ‘புதிய மனிதன்’ என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். எனது தடமும் இன்குலாப் நடந்த பாதை போலவே அமைந்திருந்தது.  பின்னர் புரட்சிகர மா.லெ.இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர   விடுதலை என்னும்   முனைப்பில் ஒன்றாய் இருந்தோம்.

     .

     இன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்த போது ‘மனிதன்’புதிய மனிதன்’ இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே, தவிர முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.

     .”ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதற்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

     கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

  -3-

     கருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே  இன்றும் உயிரோட்டமாய்ச் சுமந்து வருகின்றன. இதனைத் தெளிவுபடுத்துகிறது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்கிற  மார்க்சிய வாசகம். இந்த முழக்கத்தை

வெள்ளையாய்த் தோன்றும்

எந்தச் சொல்லும்

வெள்ளையாய் இல்லாததால்

இல்லை எனது சொல்லும்

வெள்ளையாய்”

என்று  கவித்துவத்துவத்துக்குள் பொதிந்து தருகிறார் இன்குலாப்.

அவரின் சமகாலத்தவர்கள் எவரும் செல்லாத அளவுக்குச் சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார்.   தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது, ஒரு போதும் அந்தச் சுரப்பு வற்றிப்போக விடாமல் இதழ்ப் பணி,   கவிதை, கட்டுரை, நாடகம், சொற்பொழிவு எனப்  பலப்பல   வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.

முதுகில் சுமந்தாய்

அவர்கள் பல்லக்கு

முகத்தில் சுமந்தாய்

அவர்கள் எச்சில்

இன்றும் சுமப்பாய்

அவர்கள் மலங்கள்”

என்று   முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அது இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது.அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலைத் தரும் வகையில்

இனியும் சுமப்பாய்

அவர்கள் தலைகள்”

என வைக்கிறபோது இன்குலாப் என்னும்   கவி வெளிப்படுகிறார்..

முதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய  அனுபவ வெளிப்பாடு; இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.

     ” மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கங்களில் இன்றும் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.

   உயரம் கூடக்கூட அதிகாரமும்   சீரழிவும் அதிகரித்துக் கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும்.    அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், தேர்தல்அரசியலோடு கைபிணைத்தவர்கள்   அனைவரையும் கண்டார்.  எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்ப முடியும் என்பதற்கு சாட்சிகளாக அவர்கள் உருமாறினார்கள்.

சமகால அரசியல் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை .

நவீன கவிதை , நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை.  ஆயினும் அவை பொருட்டேயல்ல.    மனிதனாய் வாழ்ந்த பதிவு தான் முக்கியம்!  சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு வாழ்ந்தார்.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்:

எழுதியநாடகத்தால் நினைக்கப்படுவார்.                                                                                           

 எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

–4–

தோழரே, நினைவிருக்கிறதா?

1983- ஜூலை, இலங்கையின் கொழும்பில், பிறபிற பகுதிகளில் நடந்த தமிழர்மீதான இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி,   ஆகஸ்டு, செப்டெம்பர்மனஓசை’இதழ்களைக் கொண்டுவந்தோம்.செப்டம்பர் இதழில் ”கரையில் இனியும் நாங்கள்…. ” என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள்.

காற்று

ஈழத்தின்

கனலாய் வீசுகிறது.

கரைகளில்

இனியும்

நாங்கள் கைகட்டி நிற்கவோ? “

உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.

ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்

இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!

ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்

எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!

ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்

இன்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!

ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்

இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க! “

மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என குரலைப் பெய்தீர்கள்.

நினவிருக்கிறதா?

தோழரே. நீங்கள் இப்போது ஞாபக அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.

கவிஞராக நீங்கள், எழுத்தாளராக நான்,ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி,அரசியலாளராக தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பலகலைக் கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும்,   விடுதலைப் புலிகளின் “ கலைப் பண்பாட்டுக் கழகம்” பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே,   இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.

நான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு  அந்த உலகுதழுவும் குரலை அடையாளம் கண்டு,கவிதை எழுதிய கரத்தைத் தடவி 2002- அக்டோபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே,   தோழரே!

நேற்று நீங்கள் நடந்தீர்கள்

இன்று நீங்கள் நடக்கிறீர்கள்

நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.

சென்று வாருங்கள் தோழரே! வீர வணக்கம்.

——————————————————————————————–

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் – கமலா மரியுஸ்

இந்தியா : மக்கட்தொகையும்  வெளியும்

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள்

கமலா மரியுஸ், வருகைப் பேராசிரியர்

  • பொர்தோ-மோந்த்தேஜ்ன் பல்கலைக் கழகம், பிரான்சு;
  • பிரெஞ்சுஅரசின் மொழி மற்றும் பண்பாடு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, இந்தியா.

 

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ; கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றமும் பலரும் அறித்ததுதான், இருந்த போதிலும் சமூகத்தில் மக்களிடையே பெரும் எற்றதாழ்கவுகள் இருக்கவே செய்கின்றன. 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்கிற விகிதாச்சாரமும் ; குறைவான ஊதியமும் ; பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ; ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிறுவ பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. எனவே பாலினம் என்கிற முப்பட்டகக் கண்ணாடியின் உட்கட்ட வேறுபாடுகளை நிலவியலை முன்வைத்து ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டிலிருந்ததே, இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி உதாரணமாக எடுத்தாளப்பட்டு வருகிறது, நியாயமான எடுத்துகாட்டே, இருந்தபோதிலும் அடைந்துள்ள இப்பொருளியல் முன்னேற்றம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளென்று வருகிறபோது வரைமுறைக்கு உட்பட்டதாகிறது . கிடைக்கும் அனேக சமூக அமைப்பின் தரவுகளின் படி ( அதாவது  மக்கட்பெருக்கம், கல்வியறிவு, குடும்பத்தைத் தவிர்த்து பிற பணிகளில் பெண்களின் பங்களிப்பு, மக்களின் ஆயுட்காலம், மருத்துவ வாய்ப்பு ஆகியவற்றில்) பாகிஸ்தானைத் தவிர்த்து பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது, ஆனால் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியென்று வருகிறபோது சிறந்த பலன்களை அது அடைந்துள்ளது. இதனை அமர்த்தியா சென் « வளர்ச்சிப்பாதையில் காண்கிற ஒரு களங்கத்தின் » குறியீடு (2014) என்கிறார்.

இனம், மதம், சாதி, பாலினம் அடிப்படையில் வேறுபடுகிற அனைத்து இந்தியரையும் கோட்பாட்டளவில் பாதுகாப்பதற்கு சமத்துவ அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்றிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும், தனித்தன்மையுடனும் வினையாற்றும் சாதி அமைப்பும் அதன் செல்வாக்கும் நவீன இந்திய சமூகத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் அனைத்து மட்டங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் வலுப்பெற்ற காரணமாக இருக்கின்றன என்பதும் உண்மை

12-img_6112 இந்த வெவ்வேறான ஏற்றதாழ்வுக்கான அடிப்படை காரணங்களை ஒட்டுமொத்தமாக அணுகுவதா அல்லது அவற்றின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை தெளிவுபடுத்துவதன் மூலம் அனைத்தையும் சேர்ந்தார்போல விளங்கிக்கொள்வதா ? என்பதே தற்போது நமக்குள்ள கேள்வி.  பாகுபாடு தாக்கக் கருத்தியத்திலும் ( le concept d’intersectionnalité ) [1] இது எதிரொலிக்கிறது  இக்கருத்தியம் எற்றத்தாழ்வுகளிலுள்ள ஒருங்கிணைந்த  பண்பினையும் ; சாதிப்பிரிவுகள், வர்க்கப் பிரிவினைகள், பிற அடையாளங்கள், பாலின நோக்கு, மத வேறுபாடுகள், புவிசார்  இடஅமைப்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய அடக்குமுறையையும்  மறு பரிசீலனை செய்வதற்கு பொருத்தமான ஆய்வுக்கருவி. ஆனால் பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினையின் ஒரு கூடுதல் காரணி  என்பது உறுதி. ஆனால் இதனைப்  வர்க்கம் மற்றும் சாதிய வேறுபாடுகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அமர்த்யா சென் கூறுவதைப் போல (2007,233) , « ஐயத்திற்கிடமின்றி  இருவகை உரிமை பாதிப்புகளின் தலையீடு பாலின வேறுபாட்டில் உள்ளது- பெண்ணாகவும் அதேநேரத்தில் பிற்பட்டவகுப்பினளாகவும் அவள்  இருக்கிறாள்  என்ற உண்மை- இது  ஏழ்மையில் உழலும்  குறைந்த அளவு சலுகைகளுடனும் வாழ்கிற  வகுப்பினைச் சார்ந்த பெண்களை பெருமளவில் தண்டிக்கிறது. »

எனினும் சாதி அமைப்பு பாலினவேறுபாட்டில் சிற்சில பிரிவினருக்குச் சாதகமாக வும் அமைத்துள்ளது. பிராமண பெண்ணுடைய நிலமை (2)   ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணைக் காட்டிலும்  பொறாமைப்படக் கூடியதாக இருக்கிறது  தவிர பாலின எல்லைகள் இருப்பினும் சலுகைபெற்ற வகுப்பைப் பின்புலமாகக் கொண்ட பெண்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் இராச்சியத்திற்கு  எதிராகவும், பின்னர் இந்திய அரசியல் உயர் பதவிகளிலும் ஆற்றிய,ஆற்றும்  பங்களிப்புகள் சாதி அமைப்பின் பலன்களைத் தெரிவிப்பவைதான். இந்திரகாந்தி பல ஆண்டுகள் (1966 -1977 ; 1980 -1984) நாட்டைஆள முடிந்தது இதற்கொரு நல்ல உதாரணம். பெண் என்பவள் வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒருபக்கம், நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக ஆவதென்பது இன்னொரு பக்கம் என்ற நிலையில் , இந்தியாவில் நிலவும் பாலின சமன்பாடின்மையை ஓர் இந்தியப் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் ?

சமத்துவமின்மைக்கு மாறுபட்ட பல காரணிகளைப் போலவே, மாறுபட்ட அதன் வடிவங்களும்  அதாவது வெளி சாரந்த பாகுபாடுகள், வன்முறைகள் அல்லது அமர்த்யா சென்  மொழியில் (2005) சொல்வதெனில் : வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவப் பாதுகாப்பின்மை  போன்றவையும் காரணமாகின்றன. உடல் சார்ந்த ஒரு சில வன்முறைகள் ( வரதட்சணை கொலைகள் , பெண் சிசுக்கொலைகள், பாலுறவு அடிபடையிலான வன்முறைகள்) நீண்ட நாட்களாகவே வெளிப்படையான பாகுபாடுகளாக இருந்து வந்துள்ளன என்பது மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது (கபாடியா 2002). மாறாக கவனத்திற்கு வராத வெளிசார்ந்த பாலின சமத்துவமின்மை பற்றிய விடயம் ஆய்வுக்கு மிக க் குறைந்த அளவிலேயே இதுவரை உட்படுத்தப்பட்டுள்ளது. « இடங்கள் மற்றும் வெளிகள் சார்ந்தும் பாலினப்பாகுபாடுகள் இருக்கின்றன » என்ற அனுமானத்துடன் அண்மைக் காலத்தில்தான் ஆய்வாளர்கள் (சார்லஸ் 2008, தேசாய் 2007, ரனதீவ் 2002) புதுவிதமான ஆய்வுப்பணிகளில்  இறங்கினார்கள்.

பாலின சமத்துவமின்மையின் பல்வகையான முகங்களுடன் இணைந்த பேதங்களின் பரப்பை அமர்த்யா சென் வழி முறையில் (2007,251)(3) வெவ்வேறான தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தி அவற்றில் வெளிசார்ந்த பரிமாணத்தையும் (மரியுஸ் 2016) கருத்தில் கொண்டு நாம் பரிசீலிப்போம்.

4-2012-09-30-11-18

  1. நிலவியல் அடிப்படையிலான பாகுபாடு

ஆசியாவில் மிக க் குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் பெண்களின் இறப்பு வீதம் அசாதாரண வகையில் அதிகரிப்பது, தொடரும் ஆண்குழந்தைகளின் பிறப்பினால் நிகழும் ஆண்மயம் இவ்விரண்டின் தாக்கத்தினாலு ம் பாலின ஏற்றத் தாழ்வு விகிதம்அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆசியாவின் பாலினப் பாகுபாட்டை நிலவியல் பரப்பு, மக்கள் அடர்த்தி அடிப்படையில்  ஐயத்திற்கிடமின்றி சிறப்பான முறையில் ஆய்வு மேற்கொண்ட மக்கட்தொகை வல்லுனர் கி. கில்மோட்டோ 2010 ஆம் ஆண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் 91 மில்லியன் ஆண்கள் கூடுதாலாக இருப்பார்களெனக் கணித்திருந்தார்.  இவ்விரண்டு தேசங்களிலும் பாலின  விகிதாச்சாரமென்பது உலகின் பிறநாடுகளையொத்ததாக இருக்குமெனில்  20 மில்லியன் பெண்களைக் கூடுதலாக கணக்கெடுக்க நேர்ந்திருக்கும். கணித்த எண்ணிக்கைக்கும், பின்னர் அவதானித்தமைக்கும் மக்கட்தொகையில் காண நேர்ந்த இப்பெரிய இடைவெளியை இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பொருளியல் நிபுணர் அமர்த்யா சென் இந்தியாவிலும் சீனாவிலும் பல மில்லியன் பெண்களை இழக்க நேரும், என்பதை « Missing women » என்ற பெயரில் தெளிவாக க் அனுமானித்திருந்தார்.  இம்மக்கட்தொகை பேரழிவிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய அமைப்பு முறையில் நெறிமுறை மற்றும் மதிப்பீடுகளில் தொடரும் இழப்புகள் மட்டுமின்றி நாட்டில் பிரத்தியேகமாகப் பின்பற்றப்பட்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு அரசியலும் காரணம்.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக இளம்வயது திருமணங்கள் வழக்கில் இருப்பினும், குழந்தைப்பேறு அளவோடு இருப்பதற்கு, தம்பதிகளிடையே பாலியலுறவில் கடைபிடிக்கும் ஒழுங்குகள்  உதாரணத்திற்கு பிரசவத்தை அடுத்து பாலியலுறவை தள்ளிவைத்தல் ; பாட்டியாக நேர்ந்தால், குழைந்தைப் பேற்றை தவிர்ப்பது (அதாவது நாற்பது வயதில்) போன்ற வலுவான சமூக நெறிமுறையும் காரணம்.  தவிர கடுமையான உணவுத் தட்டுப்பாடு என்ற சூழலில், சமூக அமைப்புகள் மற்றும் மால்தஸீயன் சர்வதேச  நிறுவனங்கள( ஐக்கிய நாட்டு சபையின் மக்கட்தொகை நிதியமைப்பு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவி, உலகச் சுகாதாதார அமைப்பு)போன்றவற்றின் தாக்கத்தினால் « மக்கட்தொகை வெடிகுண்டுக்கு  (the Population Bomb) » எதிராக அரசாங்கம் விரிவானதொரு  குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதனொரு பகுதியாகக் கருக்கலைப்புச் சுதந்திரமும் (கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் 1971) ஆண்களுக்கு வாசக்டமியும் நடைமுறைக்கு வந்தன. 1975 -1977ல் இந்திராகாந்தியால் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையிலிருந்த நெருக்கடி நிலையின்போது மிதமிஞ்சிய அளவில் கருத்தடைகள் செய்யப்பட்டன. 1975-1976 ல் வருடத்திற்கு 2.7 மில்லியனாக இருந்த கருத்தடை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை, அதற்கடுத்த வருடம் 8.3 மில்லியனைத் தொட்டது, அவர்களில்  வாசக்டமி செய்துகொண்டவர்கள் மட்டும் 6 மில்லியன்கள் (கில்மொட்டோ, குல்கர்னி, 2010,41). கருத்தடை அறுவைச் சிகிச்சியைத் மிகத் தீவிரமாகக் கையாண்டதன்  விளைவாக காங்கிரஸ் கட்சி 1977 பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது, அதன்பின்னர் கருத்தடை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கையில் விரைவான சரிவையும், மாறாக பெண்களின் எண்ணிக்கையில் உயர்வையும் காண முடிந்தது

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை 250 மில்லியன் பிறப்புகளைத்  தவிர்த்தது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கருத்தடையின் தயவினால்  நடந்தது.(கில்மொட்டோ, குல்கர்னி2010,68). இக்குடும்பக் கட்டுப்பாடு  அரசியலின் மிகக் கொடூரமானதொரு விளைவுகளிலொன்று பெண்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது :  1911 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு  972 பெண்கள் இருந்தார்கள் இன்று 933,  ஆக எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. அதாவது சீனாவை அடுத்து ( 100 பெண்களுக்கு 117 ஆண்கள் என்ற பிறப்பு வீதம்) உலகிலேயே ஆண்பெண் விகிதாச்சாரத்தில் பாதகமான நிலையிலுள்ள நாடு இந்தியா.  2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை  121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர்.  அதன்படி ஆண்கள் எண்ணிக்கையுடன் சரிநிகராக்க 38 இலட்சம்  பெண்கள் கூடுதலாகத் தேவை (624 இலட்சம் ஆண்களுக்கு  586 இலட்சம் பெண்கள்) (fig1). பெரும் எண்ணிக்கையில் தாய்மார்கள் வாரிசாக ஓர் ஆண்குழைந்தை வேண்டுமென்று இடையில் பிறக்கும் பெண்குழந்தைகளை மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன் கொன்றுவிடுகிறார்கள். கடந்த  இருபது ஆண்டுகளில் தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு நடமுறையினால் ஆண்ழந்தைகளின் பிறப்புவீதம் கணிசமாக பெருகியுள்ளதையும் பெண்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆண்களுக்கு 945 என்று 1991ல் இருந்தது  2011 ஆம் ஆண்டு 914 ஆக குறைந்துள்ளதன் மூலம் அறியமுடிகிறது. (4)

1-sex-ratio-evolutionகிராமப்புறங்களில் தந்தைவழிச் சமூக சொத்துரிமைச் சமச்சீரற்ற ஆண் பெண் விகிதாச்சாரத்திற்கு சாதகமாக உள்ளதென்பதை பெரியநாயகம் ஆரோக்கியசாமி மற்றும் சீனுவாசன் கோலி இருவரின் (2012) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி (National Family Health Survey (2005-2006), ஒரு குடும்பத்தில் எந்த அளவிற்கு நில உடமையின் அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவிற்குப் பெண்களின் சுயமாக செயல்படும் உரிமை  மட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மை தெரியவந்துள்ளது. அதாவது பெண்களின் இடம் பெயரும் உரிமை, முடிவெடுக்கும் உரிமை, பணிக்கான ஊதியம் இவற்றில் பாதிப்பினைக் காண்கிறோம், தவிர இக்குடும்பங்களில் பையன்கள் பெண்கள் விகிதாச்சாரமும் (0-6 வயது) பையன்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் அக்குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 107 பையன்கள் என்றிருக்கிறார்கள். ஆனால் பத்து ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருக்கிற நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் , அங்கே 100 சிறுமியருக்கு 128 பையன்கள் என்ற நிலை. ஆந்திரப் பிரதேசத்தில் நிலமை மிகவும்மோசம், 4 ஹெக்டார் நிலமுள்ள குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 170 சிறுவர்கள் என்றிருக்கிறார்கள். மாறாக கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய தாய்வழிச் சொத்துரிமை வழக்கிலிருக்கும் மாநிலங்களில் நில உடமை ஆண் பெண் விகிதாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

carte-sex-ratio-indeபாலினப் பாகுபாட்டில் தந்தை வழி சமூகக் கட்டமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை ஒருசில ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள், அதன்படி இஸ்லாமியர்களைபோலவே  இந்துக்களும் காஃப் பஞ்சாயத்தின் கீழ்(அதிகாரம் பரவலாக்கப்பட்ட பின்பு ஆண்கள் மட்டுமேஅங்கம் வகிக்கிற மரபுவழியில் அமைந்த ஆனால் நெறிமுறைகளைப் பின் பற்றாத கிராம சபை)  கௌவுரவத்தை முன் நிறுத்தினார்கள். விளைவாக மிதமிஞ்சிய வகையில் எங்கும் எதிலும் ஆண்கள் என்றொரு நிலைப்பாட்டினை பஞ்சாப், அரியானா மாநில இந்துக் குடும்பங்களிலும் கீக்கியரிடையே ஜாட் எனும் ஆதிக்க வகுப்பினரிடமும், இத்துடன் நில்லாது  கௌவுரவக்கொலைகள், சிசுக்கொலைகளென்ற குற்ற நடைமுறைகளை குஜராத், ராஜஸ்தான் மாநில பழமைவாத இந்துக்களிடமும் இஸ்லாமியர்களிடமும் காண்கிறோம். «  மேல்தட்டுமக்களின் கருத்தியங்கள் அல்லது உயர்சாதி பிராம்மணர்கள் மற்றும் பிரதிநித்துவ அமைப்பெனக் கூறிக்கொண்ட நவீனம், இவற்றுடன் ஆணாதிக்கம், இப்படி அனைத்துமாகவிருந்த இக்காவலரண்கள் பெண்களை வேட்டையாடுவதற்கு பெரிதும் ஆதரவாக இருந்தவை »(ஹெஸே 2014,277). மேலும் பிராந்தியப் பிரிவினைகளும் பாலினப் பாகுபாட்டில் குறிப்பிட்டுசொல்லும்படியாக ஏற்றத்தாழ்வுகளைத் தெரிவிப்பவைகளாக உள்ளன : வடமேற்கு மாநிலங்களை (ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்த்தான், குஜராத் ) தென்மாநிலங்கள் அல்லது கிழக்குப்பிராந்தியங்களுடன் ஒப்பிடுகிறபோது பிந்தியவற்றுள் ஆண் பெண் விகிதாச்சார  ஏற்றத்தாழ்வு அத்துணை முக்கியத்துவம் பெறவில்லை என்பது கண்கூடு.  (fig. 2).

carte-sex-ration-enfants-indeஎனினும் இந்தியச் சமூகங்கள் பாலின விகிதாச்சாரத்தைத் தாங்கள் தேர்வு செய்யும் நிலையிலில்லை என்பதையே இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் அல்லது தலித்துகள் மூலம் அறிகிறோம். அங்கு நாட்டின் இதரப் பிராந்தியங்களைக் காட்டிலும் ஆண்பெண் விகிதாச்சார எற்றத்தாழ்வுகள் கூடுதலாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும் அதன் பிரத்தியேக பண்பாடுகள், சமூகப் பண்புகள் ஆகியவற்றைபோலவே, அவர்கள் வாழும் இடமும் மேற்கூறப்பட்ட ஏற்றத்தாழ்விற்குக் காரணமாகிறது(கில் மோட்டோ, 2010).  உண்மையில் பாலினத் தேர்வு தொடக்கத்தில் செல்வாக்குடன் இருந்த பகுதி, வரலாற்றளவில் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடு எங்கு வலுவாக இருந்ததோ அப்பகுதி, அது குறிப்பாக குஜராத் தொடங்கி பஞ்சாப் வரை விரிந்துள்ள மேற்குப் பிராந்தியம்.  அங்கு பெண் சிசுக்கொலை பரவலாக வழக்கிலிருந்த காலத்தில் , அதனை ஒழிக்க காலனிய அரசாங்கம் கடுமையாக போராடியது.  ஆனால் பெண்களுக்கு எதிரான இப் பாகுபாடு மெள்ள மெள்ள  புதிய பிராந்தியங்களையும் தமது ஆதிக்கத்தின் கொண்டுவர வரைபடம் (fig3) தெரிவிவிப்பதைப்போல தேசத்தின் ஒரு கணிசமான பகுதியை  இன்று அப்பாகுபாடு தமக்குரிமையாக்கிக்கொண்டுள்ளது.  இறுதியாக வெளிசார்ந்த  அண்மையும், பாகுபாட்டின் இயல்புகள் மற்றும் நெறிமுறைகளின் பிரச்சாரத்திற்கு உதவியது(மனியெ,2015) ; பாகுபாட்டின் இயக்கத் தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள சமூகம் மற்றும் பொருளியல் காரணிகளன்றி, கில்மோட்டோ  ஆய்வின் உதவியால் (2004,2006,2008, 2010) இன்று  புவிசார் காரணங்களும் உதவுகின்றன.

மக்கட்தொகையில்  இதுபோன்ற இடையூறு கள் ஏற்படுத்தும் தீங்கான பலன்களை அளவிடத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக்கால தலைமுறையில் எற்பட்டுள்ள பெண்கள் பற்றாக்குறையினால் முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் திருமண வயதை அடைந்துள்ள இளைஞர்கள், விளைவாக தந்தைவழி இனப்பெருக்கமுறை மட்டுமின்றி மரபு வழிபட்ட பாலின கருத்தியமும் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இப்புதிய சூழல் பெண்களின் நிலையில் உண்மையில் மாற்றத்தைத் தந்துள்ளது, அவர்கள் தற்போது தங்கள் வரதட்சணையைக் குறைக்கும்படி பேரத்தில் ஈடுபடவோ அல்லது தங்கள் சாதிக்கு வெளியே மணம் செய்துகொள்ளவோ இயலும் (கௌர் 2014). காஃப் பஞ்சாயத்து அனுமதியுடன் கலப்புத் திருமணங்கள் ஜாட் வகுப்பினரிடையே  நடைபெறுவதைக் காண்கிறோம், அண்மைக் காலம் வரை இதனை நினைத்துப் பார்க்க இயலாது.  குடும்ப அமைப்புமுறை  இன்று கணவன்,மனைவி, பிள்ளைகள் எனும் தனிக்குடும்பமாக மாறிவருகிறது, இப்போக்கிற்கு, உலகமயமாக்கப் பட்டப் பொருளாதாரம் தரும் ஒத்துழைப்பினால்  பெண்களுக்கு வேலைவாய்ப்ப்பும்  அதனால் அவர்களுக்கு வாய்க்கிற தனித்து செயல் பட முடியுமென்ற  நம்பிக்கையும் தந்தைவழி சமூகத்தைக் கலகலக்கச் செய்வதோடு ஆண்பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தியத்தை உபயோகமற்றதாவும் ஆக்கியுள்ளது.  சமச்சீரான பாலின விகிதாச்சாரத்தை  அடைய ஊக்கத்தொகை, பலவகையான நிதி உதவிகளைப் பெண்களுக்கு மட்டுமே(5)  வழங்கி பாலினவேற்றுமைக்கு எதிராகப் பிரச்சாரத்தையும் மேற்கோள்ளவேண்டும்.  பாலின விகிதாச்சாரம் எதிர்பார்க்கின்ற காலக்கெடுவில்  இல்லையென்றாலும் சிறிது முன்போ பின்போ அந்தந்த மாநிலங்களைப் பொறுத்து ஓர் எல்லையைத் தொட்டு  தைவான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப்போல பின்னர் குறையும்,  அதற்கு இங்கும்  பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை பரவலாக்கவேண்டும் என்பது  கில் மொட்டோவின் யோசனை(6), அவ்வழியில் நாமும் சிந்திக்கலாம். இதை உறுதி செய்வதைபோலவே வரை படம்( fig2)வடமேற்கு மாநிலங்களில் (பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், அரியானா)  இந்நிகழ்வு உண்மையாகியிருப்பதை  அம்மாநிலங்களில் பெண்களுக்கு அனுகூலமாக இருக்கும் பாலின விகிதாச்சாரம் தெரிவிக்கிறது, அதேவரைபடத்தில் கிழக்குப் பிராந்தியங்களிலும், ஆந்திர மாநிலத்திலும், பாலின விகிதாச்சாரத்தில் உள்ள  சரிவையும் காணமுடிகிறது.

(தொடரும்)

———————————————–

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)

 

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

 

(பிரெஞ்சுமொழியில் வந்துள்ள எனது இச்சிறுகதை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா சன்னிதனமும் மர்லின் மன்றோ  ஸ்கர்ட்டும்’  என்ற  சிறுகதைத் தொகுப்பில் அடங்கியது.)

ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கிய, காக்கி நிற பெர்முடா; மேலே பூக்கள் அச்சிட்ட பொத்தான்களிடப்படாத அரைக்கை பருத்திச் சட்டை; பூத்த சாம்பல்போன்ற நரைத்த ரோமங்களுடன் மார்பு, கொளகொளவென்று மடிந்த வயிறு; தலையில் ஓலையில் முடைந்த வெள்ளை நிற ஹவாய்த் தொப்பி. தோட்டங்களில் உபயோகித்திற்கென்று தயாரிக்கப்பட்ட மேசைமீது ஒரு பீர் பாட்டிலும் கண்ணாடி கிளாஸ¤ம் இருக்கின்றன. கிளாஸின் அடிப்பகுதியில் மிச்சமிருக்கிற தேன்நிற திரவத்துடன் இணைந்துகொள்ள, விளிம்பிலிருந்து கண்ணாடி சுவரில் எச்சிலும் நீர்த்த நுரையுமாக வடிகிறது. ‘ஏவ்’ என்று புளித்த ஏப்பம் உதடுகளால் பூட்டப்படிருந்த வாயை அகலமாகத் திறக்க வைத்தது. மனைவி பிரான்சுவாஸ் பக்கத்தில் இல்லாத தைரியத்தில் புட்டத்தை உயர்த்தி அபாணவாயுவை இலகுவாக வெளியேற்றியதும், வயிறு இலேசானது. மண் தரையிலிருந்து இறக்கைமுளைத்த எறும்பொன்று தலையை இருபுறமும் அசைத்தபடி முழங்கால் ரோமங்களைச் சாதுர்யமாகப் பற்றி முன்னேறுவதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மேசையில் பேட்டிருந்த இடதுகை ஒத்துழைப்புடன் அதைத் தட்டி விட்டார். அவர் அங்கே உட்கார்ந்திருப்பது செரீஸ் பழங்களுக்கென்று வேலி தாண்ட முனையும் சிறுவர்களைத் தடுக்கவென, பிரான்சுவாஸ் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்திலிருக்கிற அரபு நாட்டவர் பிள்ளைகள் வேலியைத் தாண்டிக்குதித்து செரீஸ் மரங்களில் ஏறி விடுகிறார்கள். பூமியில் அழிந்தாலும் பரவாயில்லை, அப் பிள்ளைகள் வாயில்மட்டும் போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாகப் பிரான்சுவாஸ் இருக்கிறாள். அவளுக்குக் கடந்த மேமாதத்திலிருந்து வயது ஐம்பத்தைந்து. அந்தோணிசாமிக்கு இரண்டொரு வருடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக்கூடும். அவளைப் போல துல்லியமாக அவர் வயதைக் கணக்கிட முடியாது. அவர் பிறந்ததேதியோ வருடமோ நமக்குமட்டுமல்ல அவருக்கும் தெரியாது. பெயர்கூட பீட்டர் சாமியார் வைத்ததுதான். பெற்றவள் என்ன பெயர் வைத்திருப்பாளென்று ஒருவருக்கும் தெரியாது. ‘கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்’ அவரை பெற்றுபோட்டுவிட்டு காணாமற் போனதாகச் சொல்லப்பட்டது. பிரான்சுவாஸை ஒரு சுற்றுலாபயணியாக புதுச்சேரியில்வைத்து சந்திக்க நேர்ந்தது. ரிக்ஷா ஓட்டும் ஒரு நபருக்கும், சேவையொன்றிர்க்கான விலையைச் செலுத்த தயாராக இருந்த பயனாளிக்குமான சந்திப்பாகத்தான் அது தொடங்கியது. இருவருக்கும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் அந்த முதற் சந்திப்பில் இருந்திருக்க முடியாது. அவளுக்கு எப்படியோ, நம்முடைய அந்தோணிசாமிக்கு இல்லை.

 

முப்பது வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. மதியம் கடந்த நேரம்.  பள்ளிக்கூடப் பிள்ளைகள் சவாரியை முடித்துக்கொண்டு வழக்கம்போல தமது ஸ்டாண்டிற்கு அந்தோணிசாமி திரும்பியிருந்தார் எதிர்வெய்யிலுக்காகப் படுதாவை இறக்கிவிட்டு ரிக்ஷாவில்  கண்ணயர்ந்திருந்தார். சொடுக்குப்போட்டதுபோல திரண்ட மேகங்கள் சூரியனைச் சூழ்ந்துகொண்டன. தூறலும் காற்றுமாக இணைந்து மனிதர்களை விரட்ட ஆரம்பித்தது. இறக்கியிருந்த படுதா விலக தூறலில் நனைந்த கால்களா, மனிதர் குரலா அல்லது இரண்டும் சேர்ந்துமேவா?  அந்தோணிசாமியின் தற்காலிகத் தூக்கத்தை ஏதோ ஒன்று கலைத்தது. திடுக்கிட்டு எழுந்தபோது, வெள்ளைக்கார பெண்ணொருத்தி புருவ மயிர்களில் நீர்சொட்ட கழுத்தை இறக்கிக்கொண்டு இவர் எதிரே நிற்கிறாள். சவாரி வரமுடியுமா? என அவள் கேட்டதுபோலிருந்தது. இரண்டவது முறை குரலைச் செலவிட விருப்பம் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஒன்று இரண்டு என விழ ஆரம்பித்த மழைத்துளிகள் பல்கிப் பெருகி அடுத்த சில நொடிகளில் பறைபோல சடசடவென கொட்ட, அந்தோணிசாமி ரிக்ஷாவிலிருந்து இறங்கினார். அவள் ரிக்ஷாவில் அமர்ந்ததும் போக வேண்டிய இடத்தைச்சொன்னாள். லுங்கியை மடித்துக்கட்டினார். துண்டைத் தலையிற்போட்டுக்கொண்டார். ஹேண்ட்பாரில் ஒரு கையும், சீட்டின் பின்புறம் ஒருகையும் கொடுத்து வேகக்கால் வைத்து ரிஷாவைத் தோள்கொடுத்து தூக்க முனைபவர்போல சில அடிகள் தள்ளிக்கொண்டு ஓடினார். அதற்கு அடுத்தகட்டமாக இடப்பக்க பெடலில் ஒருகாலை ஊன்றி மறுகாலால் அடுத்த பெடலைத் தொட்டு மிதித்து உடலில் மொத்தபாரத்தையும் அதில் இறக்கினார். ரிக்ஷா உருளத் தொடங்கியது. வண்டி சீராக ஓடவும், தமக்கும் பிரெஞ்சு மொழி வரும் என்பதுபோல, “மதாம் சவா?” எனக் கழுத்தை ஒடித்துக் கேட்டார். அவள் காதில் விழவில்லையா அல்லது பதில் சொல்ல விருப்பமில்லையா எனத் தெரியவில்லை, அமைதியாக இருந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பத்து ரூபாயோடு கூடுதலாக ஒர் இரண்டு ரூபாய் தாளை அவள் நீத்தியபோது அந்தோணிசாமி மறுத்தார். அவள் வற்புறுத்திக் கையிற் திணித்துவிட்டுச் சென்றாள். அதற்கும் மறுநாளே அவளை மறுபடியும் சந்திக்கவேண்டிவருமென அவர் நினைக்கவில்லை. நேருவீதியில் தமது ரிக்ஷாவில் சவாரி வந்த உள்ளூர் தம்பதிகளை இறக்கிவிட்டு எதிரே பார்த்தபோது அரிஸ்டோ ஒட்டல் வாயிலில் பூ விற்கும் பெண்மனியுடன் அதே பெண் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். “வண்டியை உடனே எடு!” என்ற போலீஸ்காரரின் அதட்டலைக் பொருட்படுத்தாது  அவர்கள் பிரச்சினையில் குறுக்கிட இரண்டொரு நிமிடங்கள் தேவைப்பட்டன. பூவிற்கும் பெண்மணியின் கையில் மல்லிகைச் சரம் மடித்த பொட்டலம். பிரெஞ்சுப் பெண்ணின் கைவிரல்களிடை இரண்டுரூபாய் தாள் ஒன்று. அந்தோணிசாமிக்குப் புரிந்தது “மல்லிதானேம்மா, எத்தனை முழம்கொடுத்த?”, என்ற அவரின் கேள்விக்கு, ” ஒரு முழம்தான் தம்பி கொடுத்தேன், ஆனா முழம் ஐந்து ரூபாய்ண்ணு அஞ்சு விரலைக் காட்டினேன். அந்தப் பொண்ணு, இரண்டு ரூபாய் தாளை நீட்டுது” எனப் பூ விற்கிற பெண்மணி, அந்தோணிசாமியின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவருக்குக் கோபம் வந்தது, “ஏம்மா கொஞ்சங்கூட மனசாட்சிவேணாம், முழம் ஒரு ரூவாண்ணுதானே விக்கிற, அந்தப் பொண்ணு ரெண்டு ரூவாவை நீட்டுது. வாங்கிக்கிணு சந்தோஷமா போவியா” என்றவர் அவள் கையிலிருந்த பூச்சரத்தைப் பிரெஞ்சு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த இரண்டு ரூபாய் தாளை வாங்கி பூக்கார பெண்மணியிடம் கொடுத்தார். பிரெஞ்சுப் பெண் முகம் மலர “மெர்ஸி” என்றாள். அச்சம்பவத்திற்குப் பிறகு  பலமுறை இருவரும் குறுக்கிட்டுக்கொண்டது எதேச்சயாக நடந்ததென்று அந்தோணிசாமி நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளாவே இவரைத் தேடிவந்ததாக நினைத்தாள். ஒரு முறை “என்னை மணம் செய்துகொள்ள விருப்பமா” என அவரிடம் கேட்டாள். வெகுநாட்கள கேட்பாறின்றி சிதிலமாகக்கிடந்த வீடொன்றின் திண்ணையிற் குடிவைத்திருந்த “பொண்டாட்டியும் பிள்ளைகளும்” அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவளிடம்  மறைத்துவிட்டார். இருவரும் அவள் விருப்பப்படி ஒரு கோவிலில் மணம் செய்துகொண்டார்கள். பிரான்சுக்குப்போன ஆறுமாதத்தில், அவரை அழைத்துக்கொண்டாள். இன்றுவரை ஊர் திரும்பவில்லை. பலமுறை பிரான்சுவாஸிடம் கேட்டுப்பார்த்தார்  அவள் சம்மதிக்கவில்லை. ஆகாயத்தில் விமானங்களைப் பார்க்கிறபோதெல்லாம் ஊர் ஞாபகம் வருகிறது. இப்போதும் வாழைக்கு மேலே மெல்ல உருமிக்கொண்டு ஒரு தெற்கு நோக்கி விமானமொன்று போகிறது. குறுக்கிய விழிகளுடன் அந்தோணிசாமியின் பார்வையும் அதனுடன் பயணித்தது.

 

விமானம் அடிவானத்தில் மறைந்ததும் மீண்டும் அந்தோணிசாமியின் கவனம் வாழையின் பக்கம் திரும்பியது. தோட்டத்தில்   பருவத்திற்கேற்ப பிரான்சுவாஸ் பூச்செடிகள், பிறதாவரங்களென வளர்ப்பதும் புதுபித்தலுமாக இருப்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு தோட்டக்கடைக்கு அவளுடன் சென்றபோதுதான் இந்த வாழையைப் கண்டார். ஊரின் ஞாபகமாக இருக்கட்டுமென்று அதை வாங்க நினைத்தார், பிரான்சுவாஸ் கூடாதென்றாள். அந்தோணிசாமி தமது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். வீட்டுத் தோட்டத்தில் அதைப் பதியமிட்டார். ஒருவாரத்திலேயே குருத்து நீண்டு இலையாக உருமாறி சிரித்தபோது, இவரது நெஞ்சில் பூபூத்து, குலைதள்ளியது. தினப்படிக்கு நீர்வார்த்தார். தழை உரம், இராசயன உரமென்று பார்த்து பார்த்து வைத்தார். குருத்துகள் தொடர்ந்தன. ஓரிலை இரண்டிலை ஆனது. முன்னிரவுகளில் விஸ்கிபோதை தலைக்கேறியதும் அதனோடு உரையாடத்தொடங்கி,  பல நாட்கள் மண்தரையில் உறங்கிவிடுவார். பிரான்சுவாஸ் பிரம்பும் தண்ணீருமாக வருவாள். தண்ணீர் முகத்தில் விழும்போதே பிரம்படிகள் உட்காருமிடத்தில் விழும். சரியாக ஐந்தாவது அடியில் எழுந்து உட்கார்ந்து வாயைத் திறவாமல் கட்டிலுக்குத் திரும்புவார். அந்நாட்களில் இரவு சாப்பிடுவதில்லை. அவளும் அதற்கெல்லாம் கவலைகொள்வதில்லை. அந்த வாழைதான் திடீரென்று ஒருநாள் நிலைகுலைந்ததுபோல வாடி நின்றது. இலைகள் சுருண்டு, பசுமையெல்லாம் உறிஞ்சப்பட்டு துவண்டு தலைசாய்ந்து நிற்கிறது. அந்தோணிசாமிக்கு அதற்கான காரணங்கள் விளங்கவில்லை. பிரான்சுவாஸிடம் கேட்க தைரியமில்லை. கேட்டாலும் “உனக்கெல்லாம் அதைச் சொல்லி புரியவைக்க முடியாது” என்பாளென்று அவருக்குத் தெரியும்.

 

ஒரு நாள் அமெரிக்க சீரியலொன்றைப் பார்த்துவிட்டு, பார் மேசையைத் திறந்து ஆரோக்கியத்திற்கும் அவளுக்குமாக விஸ்கி பரிமாறிக்கொண்டு பிரான்ஸ¤வாஸ் சோபாவில் புதைந்தாள். தம்முடைய விஸ்கி கிளாஸ்கொண்டு, அவள் கரத்திலிருந்த கிளாஸைத் தொட்டு ‘உனது உடல் நலனிற்காக’ எனக்கூறிவிட்டு ஒரு மிடறு விழுங்கியதும் அந்தோணிசாமி: “இரண்டு வருடம் தாக்குப்பிடித்த வாழை மூன்றாவது வருடம் ஏன் கருகவேண்டும்?” எனக்கேட்டார். அவள் பதில் சொல்ல விருப்பமில்லாதவள் போல ஒரு மிடறு விஸ்கியைத் தொண்டைக்குழியில் இறக்கினாள். கண்களை மூடி, அச்சுகத்தை நரம்புகள் உடலெங்கும் கொண்டுசேர்த்து முடிக்கட்டுமெனக்  காத்திருப்பவள்போல இரண்டொருநிமிடங்கள் மௌனமாக இருந்தாள்.  அந்தோணிசாமி நிதானமிழந்தார். அவள் கையிலிருந்த விஸ்கி கிளாஸைப் பறித்து, அருகிலிருந்த மேசைமீது வைத்தார். “இல்லை எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும், நான் விடமாட்டேன்” என்று உதடுகள் துடிக்க அவர் கூறியபோது, மது நெடிசுமந்த எச்சில் அவள் முகத்தில் தெறித்தது. இரண்டொரு நிமிடங்கள் சுவாசிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டு ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். என்னவோ நடக்கப்போகிறதென அவர் உள்மனம் எச்சரித்தது. ‘எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்” என அதே மனம் அவருக்குத் தைரியமும் சொன்னது. அவள் எழுந்தாள். நெருங்கியவள் கையிலிருந்த அவர் விஸ்கி கிளாஸைப் பிடுங்கித் தரையில் வீசினாள். அது உடைந்து நான்குபக்கமும் சிதறியது. “ஒவ்வொண்ணுக்கும் உயிர்வாழ சில அடிப்படை தேவைகள் இருக்கு, அதை நம்மால சரியா கொடுக்க முடியாதென்றுதான், அன்றைக்கு வாங்க வேண்டாம் என்றேன். உங்கள் வாழைமரத்தின் முடிவுக்கு நீங்கள் தான் பொறுப்பு” எனக் கோபத்துடன் அவள் கூறியபோது, அந்தோணிசாமியும் ஏதோகேட்கவேண்டுமென்று நினைத்தார். அவள் முகத்தைப் பார்த்ததும் ‘நா காப்பது’ உத்தமமென அடங்கிப்போனார். அதன் பிறகு அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டா¡ள். வழக்கம்போல அன்றிரவும் சோபாவிலேயே அந்தோணிசாமி உறங்கவேண்டியிருந்தது. வாழை இருந்த இடத்தில் “ஒயிட் டேஸ்லர்’ வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்றாள், பிறகொரு நாள்.

 

“அந்தோணி! என்ன செய்யற? கூப்பிடுவது காதுலே விழலை. ஏற்கனவே மணி பத்து ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்குத் தொடங்குமென்று சொன்ன ஞாபகம்” –  தோட்டத்திற்குள் காலெடுத்து வைக்காமல், வீட்டிலிருந்தபடி பிரான்சுவாஸ் குரல் கொடுத்த்தாள். வாழைமீதிருந்த கவனத்தை கரகரப்பான அவள் குரல் சிதைத்தது. நெஞ்சில் உணர்ந்த வலியை “நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்கு” என்ற சொற்களிம்பு குறைப்பதுபோல தோன்றியது. அவர்கள் வீட்டுக்கு நான்குவீடுகள் தள்ளி மொரீஷியஸ் குடும்பமொன்று இருக்கிறது. அந்தோணிசாமி ஒரு ‘தமுல்’-(Tamoul-தமிழர்) என்று அறியவந்த நாளிலிருந்து அவர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அழைப்பார்கள். ஆனால் அந்தோணிசாமி-பிரான்சுவாஸ் தம்பதிகள் எங்கும் போவதில்லையெனத் தீர்மான இருந்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது.  பிரான்சுக்கு வந்த புதிதில் புதுச்சேரிகாரர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். நகரசபையில் பதிவு திருமணத்தை முடித்தபின் இரவு விருந்து. விஸ்கியும், ஒயினும் தாராளாமகக் கிடைத்தது. அந்தோணிசாமி – பிரான்சுவாஸ் மேசைக்கருகே மற்றொரு கணவன் – மனைவி ஜோடி. கணவன்  இவரைப்பார்த்து: “மிஸியே அந்தோணி! ஊருலே நீங்க ரிக்ஷா ஓட்டினவர் இல்லை, இங்கே என்ன பண்ணறீங்க” எனக்கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியதுபோல கலகலவென்று சிரிக்கிறார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். பலரின் முன்னிலையில் தமது கடந்த காலத்தை அந்தப் புதுச்சேரிக்காரர் நினைவூட்டியவிதம் போதையிலிருந்த அந்தோணிசாமியைத் சீண்டிவிட்டது. சிவ்வென்று கோபம் தலைக்கேறிவிட்டது. பிரான்சுவாஸ¤க்கு அங்கு நடந்த தமிழ் உரையாடல் விளங்காமற்போனாலும், உரையாடல் நடுவே வந்து விழுந்த ரிக்ஷா என்ற சொல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்திவிட்டது. அந்தோணிசாமியின் கோபத்தைத் தணிக்க நினைத்தவள்போல அவருடைய கையைப் பிடித்து இழுத்தாள். ” அந்தோணி! வம்பெதுவும் வேண்டாம், புறப்படுவோம்”, என்றாள். அந்தோணிசாமி தணியவில்லை,” ஆமா உங்க பொண்டாட்டியக்கூட லாட்ஜ்லே கொண்டுபோய் விட்டிருக்கேனே. அவங்களுக்கு இங்கே எப்படி, தொழில் பரவாயில்லையா?” எனத் திருப்பிக் கேட்க,  சம்பந்தப்பட்ட இருவரும் கட்டிப்புரண்டார்கள். மற்றவர்கள் சிரமப்பட்டு விலக்குபடி ஆனது. சம்பவத்திற்குப் பிறகு, பிரான்சுவாஸே எபோதாவது சம்மதித்தாலும், அந்தோணிசாமிக்குத் தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. அந்த விரதத்தை முடித்து வைத்தவர் மத்யாஸ் மாஸ்ட்டர். பிரான்சுவாஸ¤ம் மது சம்பந்தப்டாத எதுவென்றாலும் வீடே கதியென்று கிடக்கிற லனுஷன் வெளியிற் போய்வர உதவுமென்றால் பரவாயில்லை என்பதுபோல அனுமதிக்கிறாள்.

 

போன கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக ஒரு பகல் வேளையில் இரண்டு பெண்கள் சூழ, மத்யாஸ் மாஸ்ட்டர் அந்தோணிசாமியின் இல்லத்திற்கு வந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்ததும் “வணக்கம்” என்று ஏகக் காலத்தில் மூன்று குரல்கள்.  அந்தோணிசாமி  “வணக்கம்” என்ற சொல்லை புத்துச்சேரியில் கூட கேட்டதில்லை. பீட்டர் சாமியார் கூட, “வாடா அந்தோணி” என்றுதான் முகமன் கூறியிருக்கிறார். “அந்தோணி! அவர்களை உள்ளே கூப்பிடு, எதற்கு வெளியிலே நிக்கவச்சிருக்க” என்றாள் பிரான்சுவாஸ். வந்திருந்த மூவரும் உள்ளே வந்தார்கள். இவரை வந்தவர்களுடன் பேசச்சொல்லிவிட்டு பிரான்சுவாஸ் போய்விட்டாள்.  அந்தோணிசாமி மூவரையும் சோபாவில் உட்காரவைத்தார். “என்ன குடிக்கிறீர்கள்”, எனக்கேட்டார். நாசூக்காக மறுத்த  மத்யாஸ் மாஸ்டர்தான் முதலில் பேசினார். பெண்கள் இருவரும் அவர் பேசுவதை ஆமோதிப்பவர்களைப்போல ஓயாது புன்னகைப்பதும் தலை அசைப்பதுமாக இருந்தார்கள்.

 

“நாங்கள் மூவரும் யெகோவா சாட்சிகள். தேவனுடைய சாம்ராச்சியப் புகழைப் பரப்பும் பிரசங்கிகள். யெகோவாதான் கடவுள் என்பதை நீங்கள் நம்பவேண்டும். பரிசுத்த ஆவி என்பதெல்லாம் சுத்தப் பொய், அவர் கடவுளே அல்ல. நித்திய நரகம், நித்திய தண்டனை என்பதெல்லாம் ஏமாற்று பேச்சு. சிரியாவில் போர், ஈராக்கில் பங்காளிச் சண்டைகள், உக்ரைன் பிரச்சினை இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கிற ஒரே தீர்வு தேவனரசு நிறுவப்படுவது” – என மாத்யாஸ் மாஸ்ட்டர் மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டுபோக, அந்தோணிசாமிக்கு சோர்வைத் தந்தது.

 

– “நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு விளங்கலைங்க மிஸியெ”, எனக் குறுக்கிட்டார்.

 

– ” இதை புரிந்துகொள்வதில் என்ன  சங்கடம்? நீங்கள் தமிழ் வாசிப்பீர்கள் இல்லையா?”

 

– “ஓரளவு எழுத்தைக்கூட்டி வாசிப்பேன்”.

 

– ” பிரெஞ்சு அல்லது ஆங்கிலமாவது தெரியுமா? ”

 

– “எனக்குத் தெரியாது. மனைவி பிரெஞ்சு வாசிப்பாங்க”

 

– ” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன்  புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

 

இப்போது ஒரு மொரீஷியக் குடும்பம் “மாரியம்மன் கஞ்சிக்கு” அழைத்திருக்கிறது.  மாத்யாஸ் மாஸ்ட்டருக்குப் போன்போட்டு “மொரீஷியஸ் தமிழர்கள் ‘மாரியம்மனுக்குக் கஞ்சி’ படைக்கிறார்களாம், அழைத்திருக்கிறார்கள், இந்த ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்க வரமுடியாது” என்றார். மாத்யாஸ் மாஸ்ட்டருக்குக்கோபம் வந்தது.

 

– “உண்மையில் உங்களை அழைத்திருப்பது யார் தெரியுமா?

 

– “——” – இவர் பதில் சொல்லவில்லை.

 

– பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் உங்களை இணைத்துக்கொள்ளபார்க்கிறான். பைபிள் படிப்பதைவிட்டு இப்படி சாத்தானுக்குப் பலியாகாதீர்கள்.

 

– மிஸியே. எனக்கு இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்போதாது. பைபிள் படிக்க நீங்க கூப்பிட்டீங்க வந்தேன், அவங்க மாரியம்மன் கஞ்சிக்கு கூப்பிடறாங்க போகிறேன்.

 

– இப்படியொரு பதிலை சொன்னால் எப்படி? தெளிவா ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

 

– எனக்குச்சொல்ல தெரியலை.

 

மத்யாஸ் மாஸ்ட்டரின் கையில் தொலைபேசி இருக்கிறபோதே, அந்தோணிசாமி உரையாடலைத் துண்டித்துக்கொண்டார்.

 

பிரான்சுவாஸ¤ம் அந்தோணிசாமியும் மண்டபத்தை நெருங்கும்போது, நான்கு பேர் மாரியம்மன் சிலையை சுமந்தபடி நடந்தார்கள். நான்கைந்தடி துராத்தில், அவர்களுக்கு முன்பாக ஒருவர் கரகத்துடனிருந்தார். சிறுவன் ஒருவன் தோளில் சூலத்தைத் தாங்கியபடி நடந்தான். இரண்டு பெண்கள்  “களிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுட்டே, யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுட்டே” எனப்பாட, மற்றவர்கள் கோரஸாக ‘ஓம் ஷக்டி’ என்றார்கள். அந்தோணிசாமியின் அண்டை வீட்டு மொரீஷியஸ் நண்பர் இவர்களைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க இப்போதுதான் ‘ஷிவ் ஜீ’ பூஜா முடிந்தது, உள்ளே போய் உட்காருங்க” என்றார். மண்டபத்திற்குள் அந்தோணிசாமியும் -பிரான்சுவாஸ¤ம் நுழைந்தார்கள். பெரும்பாலோர் வெளியிலிருந்தால் பாதி நாற்காலிகளுக்கு மேலே காலியாக இருந்தன. எதிரே வரிசையாக நான்கைந்து பஞ்சலோக சிலைகள் சுவர்களில் தகுந்த இடைவெளிகளில் சாமிப்டம்போட்ட காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வலதுபக்கம் நாற்காலிகளை அடுத்து, நடக்க இடம்விட்டு சுவர் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில்  அவரவர் வீட்டில் செய்துகொண்டுவந்த உணவுவகைகளையும் கஞ்சிக்குடத்தையும் எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் தமிழ் திரைபடபாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மொரீஷியஸ் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். புதுச்சேரி மற்றும் ஈழத்தமிழர்களின் குடும்பங்களும் இருந்தன. திடீரென்று மண்டபத்தில் சலசலப்பு. வெளியில் ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டு வந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பது போலவும் இருக்கிற முகங்கள். பிரான்சுவாவும்-அவரும் எதிரெதிரே அமர்ந்து நடத்திய உரையாடல்களும்; மத்யாஸ் மாஸ்டரின் சாத்தான்பற்றிய விளக்கங்களும் பிறவும் ஒரு பெருங்கனவு சமுத்திரத்தின் ஜெல்லிமீன்களாக ஆழ்மனைதில் நீந்திக்கொண்டிருக்க இதுவரை உபயோகித்திராத பலத்துடன் கைகால்களை உதறி பெரும்பாய்ச்சலுடன் வெளியில் வந்தார். எல்லா நாற்காலிகளிலும் அந்தோணிசாமிகள். பெஞ்சிலிருந்த பஞ்சலோகச் சிலைகள்கூட அந்தோணிசாமிகளாகத் தெரிந்தன.

 

– பிரான்சுவா கொஞ்சம் உன்னுடைய மொபைலைக் கொடேன்.

 

– எதற்கு?

 

– அவசரமா ஒருத்தருக்குப் போன்பண்னனும்.

 

– இந்த நேரம் போன் பண்ணக்கூடாது. பிறகு செய்யலாமே.

 

– இப்பவே சொல்லியாகணும், பிறகென்றால் மறந்துபோகும்.

 

போனை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். மத்யாஸ் மாஸ்ட்டரைப் போனில் பிடித்தார்.

 

– ஹலோ! மத்யாஸ் மாஸ்ட்டரா? அந்தோணிசாமி பேசறேன். நான் உங்களிடம் பைபிள் படிக்க வந்தற்கும் மொரீஷியர்கள் அழைத்தார்களென்று  “மாரியம்மன் கஞ்சி”க்கு வந்ததற்கும் காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்.

 

– என்ன அந்த எழவு காரணம்?

 

அந்தோணிசாமிகளைப் பார்க்க முடிவது

 

——————————————————–

எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம்

RK

அடுத்தடுத்து சில பணிகள் காரணமாக முக நூல்பக்கம் அதிக வர இயல்வதில்லை. எனவே ‘எப்படி நடந்தது, என்று நடந்தது என்பதை உணரப்படாமலேயே அந்தி சாய்வதுபோல தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக அதிகம் கவனத்திற்கு வராமலேயே   ரெ. காரத்திகேசுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது..

எனக்கு அவருக்குமான தொடர்பு என்பதைவிட  அறிமுகம் ராயர் காப்பிக் கிளப்  மூலமாக ஏற்பட்ட து. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை  இணைய இதழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது, அவற்றில் சிலவ்ற்றை வாசித்து என்பீது அன்புகொண்டு, நான்  வெளி உலகிற்கு வரவேண்டும் என ஆசைப் பட்டவர்கள் பட்டியலைக் கவிஞர்  சதாரா மாலதியிடமிருந்து தொடங்கவேண்டும்.  மிகச்சிறந்த ஆர்ப்பாட்டமற்ற கவிஞர். இரண்டு  கிழமைக்கு ஒரு முறையாவது மின்ன ஞ்சல் எழுதுவார். பெரியவர் கி.அ. சச்சித்தானந்த த்தை  இலண்டன் வந்திருந்தபோது, அவரைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்து, ஸ்ட்ராஸ்பூர்வரை  அவரும் வந்து மூன்று நாட்கள் தங்கிச்சென்று எனது படைப்புகளைப் பற்றி சந்தியா நடராஜனிடம் கூறி பதிப்பிக்கவைத்தவர். மாத்தாஹரி  நாவல் வெளிவந்தபோது எனி இந்தியன் பதிப்பகத்திற்குச் சென்று கையோடு நாவலைக்கொண்டுபோய் அதற்கு கி.அ சச்சிதானந்தம் எழுதிய மதிப்புரை சம்பிரதாய விமர்சனமல்ல. இன்றளவும் அந்த அன்பு நீடிக்கிறது. அவர் வரிசையில் தான் அமர ர்கள் வே.சபாநாயகம், ரெ.கார்த்திகேசு போன்றவர்களையும் நிறுத்தவேண்டும். இவர்கள் இழப்பு எனது சொந்த இழப்புபோல. ரெ. கார்த்திகேசு கதைகள் எளிமையானவை, பன்முக ஆளுமை கொண்டவர். ஆனாலும் பிறர் எழுத்துக்களை பிடித்திருந்தாமல் மனமுவந்து பாராட்டுவார். பாரீஸில் ஒரு தமிழ் மாநாட்டைக்கூட்டினார்கள். தமக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் ‘நாகி’ உங்களைப் பார்ப்பதற்காக க் கலந்துகொள்ளப் போகிறேன். என எழுதினார். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லையென நினைக்கிறேன். ஆனால் வெளியில் எங்கேனும் சந்திக்கலாமென எழுதினேன்.  ரெ.கா. பிரான்சு வரவில்லை, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அக்குறை  பின்னர் கோவையில் ‘தாயகம் கடந்த தமிழ்’ நிகழ்வில்  தீர்ந்தது.  நண்பர் மாலன், திரு சிற்பி ஆகியோரின் பெரும் பங்களிப்பில்   நடந்த இரு நாள் நிகழ்வில்  ஓர் அமர்விற்கு என்னைத் தலமை தாங்கச்சொல்லியிருந்தார்கள். அது கார்த்திக்கேசுவிற்கும் மாலனுக்குமுள்ள உயர்ந்த நட்பின் விளவாக சாத்தியமாகி இருக்கவேண்டுமென்பது என் ஊகம்.   நிகழ்வின் போது இரண்டு நாட்களும்  ரெ.கா வுடன்  போதிய அளவிற்கு உரையாட முடிந்தது.

மாத்தாஹரி பிரெஞ்சில் 2017ல் வந்துவிடுமென்று நம்பிக்கை.செய்தியை அறியவந்தால்  உண்மையில் மகிழக்கூடியவர்களில் அவரும் ஒருவர். .

எனக்கு சிலர் யோசனைகூறியதுபோல, அவர்கூட மலேசியாவில் ஒரு பரிசொன்றை  ஏற்படுத்தி வருட த்திற்கு ஒரு மூத்த எழுத்தாளருக்கு ஐந்தாயிரம் மலேசிய வெள்ளி  பரிசு கொடுத்திருந்தால், தமிழகச் ஜாம்பவான்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் பகலும், இரவும், காலையும், மாலையும், பூத்தலும், காய்த்தலும் யார் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது?.