ஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு

காத்திருக்கிறேன். ஆவல், அச்சம், சடங்கு, சங்கடம், எதிர்பார்ப்பு, பதற்றம் என்ற பல முகத்திற்குரிய காத்திருப்பில், எந்த ஒன்று எனது முகத்திற்குப் பொருந்தும் எனபது பற்றிய அக்கறை இன்றி காத்திருக்கிறேன்.

கடும் வெயிலில் நிழல் சில்லுபோலவும், முன்னிரவில் தடித்த தொரு கரும்புள்ளிபோலவும்  காட்சி தரினும் பலவேளைகளில் கரு நீல இறக்கைகளும், பொன்வண்டு கண்களும், மிளகளவுத் தலையில் உறிஞ்சுகுழலும், உணர்வுக்கொம்புகளுமாக இரண்டொரு கிழமைகளில் ஆயுள் முடியவிருக்கும் எனக்கு  காத்திருக்கும் இத்தருணம் முக்கியமானது. காலை கண்விழித்ததிலிருந்து, வெக்கை படர்ந்திருக்கும் மாலையின் இப்பகுதிவரை   இடைக்கிடை வயிற்றுப்பசிக்குப் பறந்து அலுத்து, அது மீண்டும் நடக்காதாதாவென்று சில நாட்களகவே  காத்திருக்கிறேன், இம்முறை அது 30 நிமிடங்களுக்கு மேல் கடந்துவிட்ட து என்பதால் கூடுதலாகப் பதற்றமும் அச்சமும்.  சற்றுதூரத்தில் நகராட்சியின் நீளமான மர இருக்கையில் அமர்ந்து தொண தொணவென்று ஒய்வின்றி முதுமையை உரசும் வயதில் தம்பதியர் இருவர் பேச ஆரம்பித்த கணத்திலிருந்து என்று தோராயமாகத் தெரிவிக்க முடியும். சூரியன் மேற்கை நெருங்க நெருங்க  அச்சமும் கவலையும் சேர்ந்துகொள்ள எனது இறக்கைகள் ஒன்றோடொன்று  ஒட்டிப் பிரிகின்றன, உடல் நடுங்குகிறது.

கடந்த சில நாட்களைபபோலவே, இன்றும் இவ்விடத்தில் வேறு வண்ணத்துபூச்சிகள் இல்லை. இதுபோன்ற வேளைகளில் இதே இடத்தில்  என்னைப்போலவே பல வண்ணத்துப் பூச்சிகள் காலை தொடங்கி இருள் சூழும்வரை மரமல்லி பூக்கள் போதாதென்று பிற பூக்களைத்தேடி பறந்திருக்கலாம். அவற்றைக் கண்ட  மகிழ்ச்சியில், இருக்கையை இதழ்களில் காலூன்றி உறுதிபடுத்திக்கொண்டு பிற உயிர்களின் நடமாட்டம், எழுப்பும் அரவம் போன்றவைக்குறித்த கவலையின்றி, தமது காரியத்தில் அவை கவனமாக இருந்திருக்கலாம், தேனுண்டு மகிழ்ந்திருக்கலாம்.  மாறாக அதுபோன்ற எதுவும் தற்போதில்லை என ஆகிவிட்டது. இங்குவந்த நாள்முதல் எங்கு சென்றாலும் ஒற்றையாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு என் சுற்றத்தாருக்கு நேர்ந்தது இங்கும் நேர்ந்திருக்குமோ ?

போன கிழமை முழுவதும் பூங்காவின் மேற்குப் பகுதியில் வாழ்க்கை. வயிற்றுக்கு எவ்வித குறையுமின்றி பொழுதுகள் கழிந்தன.  பெற்றோர், சுற்றத்தார், உடன்பிறந்தார், என்று கூடிவாழ்ந்த காலம் அது. எனது சகோதரிகளில் ஒருத்தி   ஒரு நாள் புதிர் போட்டுப் பேசினாள். வயிற்றுக்காக பூக்களைத் தேடிப்பறப்பதும், இனவிருத்திக்காக ஆண்வண்ணத்துப்பூச்சிகளை கூடுவதும் என்ற  இந்த வாழ்க்கை அலுக்கவில்லையா ? எனத் தொடங்கினாள்.  நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா ? என அவள் கேட்க நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புரியவில்லை என்பதாய் தலையை ஆட்டினோம். யோசித்துப்பாருங்கள் மண்டூகங்களா எனத் தலையிலடித்துக்கொண்டு பறந்து சென்றாள். அதற்கான காரணத்தை தெரிவிப்பாள் என்று காத்திருந்த  நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. நகராட்சி ஊழியர் எதையோ முதுகில் சுமந்துவந்து பீய்ச்ச அடுத்த சில நிமிடங்களில் அவ்வளவுபேரும் அவரவர் அமர்ந்திருந்த இடத்தில் பூவிதழ்களைப்போல இறக்கைகள் உதிர்ந்து எலிப்புழுக்கைகளாக உறைந்து கிடந்தார்கள்.  நான் மட்டும் உயி தப்பினேன்.

சுற்றத்தை இழந்து தனித்திருந்த  உயிர் வாழ்க்கைச் சுற்றில் இரண்டாம் நாள்  முதன்முதலாக அச் சம்பவம் நிகழ்ந்தது. சூரியகாந்தி பூவொன்றில் அமர்ந்து பசிஆறிக்கொண்டிருந்தவேளை, சேர்ந்திருந்த எனது  இறக்கைகள் இரண்டிலும் மெத்தென்ற  அழுந்தம். இரு பிஞ்சு விரல்களின் பிடியில் சிக்கியிருந்தேன். நெஞ்சு தட தடவென அடித்துக்கொள்கிறது. வயிறு பெருத்து சுருங்குகிறது. ஆணுடல் ஒன்றுடன்கட்டுண்டு கிடகிற அதே அனுபவம். தலைச்சுற்றல். கிறக்கம். அனைத்துமே நீடித்த கணம் என்பது ஓரிரு நிமிடங்கள்.  இறக்கைகளின் இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்த மறு நொடி மெலிதாக ஒரு கைத்தட்டல். சலங்கை குலுங்குவதுபோல ஒரு சிரிப்பு. திரும்பினேன், சிறுமியொருத்தியை அவள் தாயென்று நினைக்கிறேன், முதுகில் தட்டி கணுக்கையை இறுகப்பற்றி இழுத்துச் செல்கிறாள். நீர் கோர்த்த கண்களுடன்  தயங்கியபடி சிறுமி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வை, பெற்றவள் அவளை விசுக்கென்று  தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டபோதும் தொடர்கிறது.   ஏமாற்றத்துடன் திரும்பிப் பறந்து அருகிலிருந்த குத்துச் செடியில் அமர்ந்தேன். « நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா ? » என சில நாட்களுக்கு முன்பு என் சகோதரி கேட்டது நினைவுக்கு வந்தது.

சிறுகுழந்தையின் தீண்டல் ஓர் ஆண் வண்ணத்துப் பூச்சியுடனான சேர்க்கையைக் காட்டிலும் கூடுதல் இன்பம் தரக்கூடியதென்பதை என் உடல் உணர்த்திய அக் கணத்தில்தான், சிறுவருக்கான விளையாட்டுத் திடலொன்று கண்ணிற்பட்டது. அருகில் சிறியதொரு நீர் நிலை, மத்தியில்  எதிரெதிர் கரைகளை இணைப்பது போல படிகள், பெணொருத்தி குட த்தை சாய்த்துப் பிடித்திருப்பதுபோல ஒரு சுதை உருவம் நீர் நிலையை ஒட்டி நாதசுவர அணைசுபோல கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் மரமல்லி, விரல்விரலாய் இதழ்கள்  சுண்டி இழுக்கும் மணம், மரத்தைச் சுற்றி பராமரிப்பிற்குத் தப்பிய அல்லது பராமரிப்பை அறியாத தான் தோன்றித்தனமாக வளர்ந்து, மண்டிக்கிடக்கும்கோரைகள், குத்துச்செடிகள், பச்சையும் மஞ்சளுமாய் அருகம்புற்கள். தமாதிக்காமல் குடிபெயர்ந்துவிட்டேன்.

அன்று ஜூன்மாத இறுதி நாளொன்றின் பிற்பகல். மாலை முடிந்திருந்தது. ஆனாலும் இரவு வெகு தூரத்திகிருந்தது.வெக்கை அதன் உச்சத்தைதொட்டு தணிந்திருந்த நேரம்.  மெலிதானக் காற்று அவ்வப்போது இலைகளை அசைத்துப்பார்க்க போதுமானது என்பதைப்போலவே என்னையும் சில கணங்கள் அமைதியாக இருக்கவிடாமல் எழுந்தலையச் செய்தது. உணர்வுக்குழல்களில் ஒட்டிக்கிடந்த மகரந்தத்தை இரண்டொரு  முறை ஒன்றோடொன்று தேய்த்து  உதிர்த்து  மேல் எழுந்து  திரும்பவும் புதரில் நீண்டு முன்பக்கமாக வளைந்திருந்த கொம்பொன்றில் அமர்ந்து அக்கம்பக்கத்தில் கவனத்தைச் செலுத்தினேன்.

அண்மையில் மணமுடித்திருக்கவேண்டும்(?). – இரட்டையராகப்பிறந்து  உடல் ஒட்டிவாழ சபிக்கப்பட்டவர்களைப்போல- ஒரு ஜோடி கடந்து சென்றது. ஆண், பெண்ணிடம் ஏதோ கூற காலதாமதமாக அதன்பொருளை உணர்ந்தவள் போல, உதட்டை ஓர் மலர்ந்த பூப்போல பிரித்து நிறுத்தி புருவத்தை உயர்த்தி ‘ஓ’ என்றாள். அவன் தலையில் குட்டுவதுபோலக் கையை எடுத்துச் சென்ற கையை பின் வாங்கி, அவன் தோளைத் தொட்டு  தள்ளுவது போல பாவம் காட்டிச் சிணுங்கினாள்.  அவர்கள் சென்ற கால்மணி நேரத்திற்குப் பிறகு நான்கு பையன்கள், முகத்தில் மண்டிக்கிடந்த தாடியைவைத்து இளைஞர்களென ஊகிக்க வேண்டியிருந்தது. ஒருவன் கைக்குட்டையை முக்கோணமாக நெற்றிப்பொட்டை மறைத்து தலையில் கட்டி இருந்தான். மற்ற மூவரும் அதனையே முன்கையில் மணிக்கட்டை ஒட்டிச் சுற்றியிருந்தனர். சற்று முன்பு மது அருந்தி இருக்கவேண்டும், சென்னை திரும்பும் அவசமில்லை என்பதுபோல பூங்காவிற்குள் நுழைந்திருக்கிறார்கள், ஆயி மண்டபத்தில் பார்வை இருந்தது. ஆபாசமாக எதையோ கூற நண்பர்கள் கைத்தட்டி உரத்துச் சிரிக்கிறார்கள். ஓர் ஐரோப்பியர் நாயை இழுத்துக்கொண்டு சைக்கிளில் சென்றார். எனது கவலையெல்லாம் சறுக்கு மரம், ராட்டினமென்று மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்  சிறுவர் சிறுமியரில் ஒருவராவது தங்கள் கவனத்தை  என்பக்கம் திரும்பமாட்டார்களா என்பதைப் பற்றியதாக இருந்தது.

மனதைத் தேற்றிக்கொண்டு நம்பிக்கையை தளரவிடாமல் கவனத்தை   தற்போது மரத்தாலான நீள்  இருக்கையொன்றில் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருந்த பெண்மணிகள் பால் திருப்பினேன். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். விளையாடும் சிறுவர்கள் கூட்டத்தில் அவர்களுடைய பேரனோ பேர்த்தியோ இருக்கலாம். எதைப்பற்றிப்பேசுவார்கள். சாமர்த்தியமற்ற மருமகள், மோசமான வேலைக்காரி, தராசை சரியாக பிடிக்காத காய்கறிகாரன், சாப்பிட்ட இலையை தங்கள் வீடுமுன்பாகப் போடும் அண்டைவீட்டுக்காரி, முன்னாள் ஊழியை என்பதை ஏற்கமறுக்கும் அலுவலகம், அன்றையதினம் பார்த்திருந்த தொலைக்காட்சித் தொடர்கள், இரண்டு நாட்களுக்குமுன்பாக அண்டைவீட்டுக்காரன் மகளை பீச்சில் எவனுடனோ பார்த்தது, ஆக பேசுவதற்கு நிறைய இருக்கின்றன.  பேச்சின் சுவாரஸ்யத்திலும் என்னைக்கடந்து, இருவரில் ஒரு பெண்மணியின் பார்வை, சன்னற் கதவுகளை  படாரென்று திறந்து எட்டிப்பார்ப்பதைபோல, சட்டென்று  விளையாட்டில் தீவிரமாக இருக்கும் பிள்ளைகளிடம் சென்றது.

–  டேய் செல்லக்குட்டி போகலாமா ?

பெண்மணியால் செல்லக்குட்டி என்றழைக்கப்பட்ட த்த சிறுவன் அல்லது சிறுமி அக்கூட்ட த்தில் யாராக இருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆவல்.

– ஆயா ! இன்னும் கொஞ்ச  நேரம் விளையாடிட்டு வரட்டா ?  – வாயைத் திறந்தது ஒரு சிறுமி.

–   நான் செல்லங்குடுத்து உன்னைக் கெடுத்துட்டன்னு ஓங்கம்மா சொல்றாளாம். ரமேஷ் பாட்டி, இப்பத்தான் கதைகதையா சொன்னாங்க. ஒங்கப்பன் சரியா இருந்தா எனக்கு ஏன் இந்த கதி. கிளம்பு கிளம்பு.

விருப்பமின்றி விளையாட்டு நண்பர்களைப் பிரிந்துவந்து  சிறுமி பாட்டியின் கையைப் பிடித்த மறுகணம் தற்செயலாகத் திரும்புகிறாள். என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்க்கிறாள். மடல்கள் உயர, விழிவெண்படலம் வியப்பில் நிரம்புகிறது. அவள் கண்மயிர் எனது இறக்கைகள் போலவே இரண்டொருமுறை படபடத்து அடங்குகின்றன. பிடித்திருந்த பாட்டியின் கையை உதறிவிட்டு என்னிடம் ஓடிவருகிறாள். நான் அசையவில்லை. வட்டமான முகம், பாப் வெட்டப்பட்டதலைமுடி ; முன் தலையின் மயிற்கால்கள், நெற்றி, காதோரம், முன் கழுத்தின் இறக்கம், எங்கும் நிறமற்ற வியர்வையின் தடம். இத்தருணத்திற்காகத்தானே கடந்த ஒரு கிழமையாக காத்திருக்கிறேன். நின்று என்னை தன் கண்களால் படம் பிடிக்க நினைத்தவளைப் போல சிறுமி பார்க்கிறாள். நான்கைந்து வயதிருக்கவேண்டும். விழி மடல்களிரண்டும் சுருங்கிப்  புருவத்துடன் ஒட்டிக்கொள்ள  குறுகுறுவென்று கண்மணிகளை அசைக்காமல் என்னை நோக்கிச் சிரிக்கிறாள். அவளுடைய அடுத்தக்கட்ட நகர்வுக்கு இணக்கம் தெரிவிப்பதுபோல இறக்கைகளை திரும்பத் திரும்ப ஒட்டிப் பிரிக்கிறேன். இறக்கைகளை மட்டும் அசைத்து, அச்சமின்றி அந்த இடத்தைவிட்டு அகலாமல் இருந்த என் இருப்பு, சிறுமிக்குத் தைரியத்தை அளித்திருக்கவேண்டும். வலதுகையை தாமரை மொக்குபோல குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும்அதிலிருந்துபிரித்து குறடுபோல குறுக்கிக்கொண்டு என்னை நெருங்கினாள். சிறுமியின் செயலுக்கு இசைவாக திரும்பி பக்கவாட்டில் உட்கார்ந்தேன்.

– பட்டாம் பூச்சியை பிடித்து விளையாட இது நேரமில்லை, மணி ஆறுக்கு மேலாகிறது, வா வா !

– கொஞ்சம் பொறு ஆயா

– சொன்னா கேட்கனும் அடுத்த முறை வரும்போது பிடிச்சுக்கலாம், எங்கியும் போவாது. இங்கதான் எங்கனாச்சும் பறந்துகிட்டு இருக்கும்

பெண்மணி கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் விரலிரண்டும் என் இறக்கைகளை ஒன்று சேர்த்து அழுந்தப்பிடித்து பின்பு தளர்ந்தன. கால் கள் பின்வாங்கி விலகி, பெண்மணியின் புடவையை ஒட்டி நிற்கின்றன. என்னைத் திரும்பிப்பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் :

– அடுத்த முறை   நேரா இங்கத்தான் கூட்டிக்கிட்டு வரணும், எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சுவிளயாடணும்.

– அதற்கென்னடா கண்ணு வந்தாப்போச்சு

——————————————————————————————–

படித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை

பிரெஞ்சு மொழியில் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் :

–  மூன்றாம்  உலக நாடொன்றில் பிறந்து அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக புலம்பெயர்ந்து, தங்கள் பிழைப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் படைப்புலகிற்குள் நுழைகிறவர்கள் ஒருவகை ;

– அதேகாரணத்திற்காக சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரான்சு நாட்டில் குடியேறி கல்வியைப் பிரஞ்சு மண்ணில் முடித்து, பிரஞ்சு பண்பாட்டில் திளைத்து, மிகத் திறமையாக மொழியைக் கையாண்டு கவனம் பெறுகிற கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொருவகை.

ஆந்த்ரேயி மக்கீன், இரண்டாவது அணியினரைச் சேர்ந்தவர்.  முன்னாள் சோவியத் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டில் வாழும் எழுத்தாளர். கம்யூனிஸ நாடுகளின் அடக்குமுறைக்குத் தப்பித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கையைத் தொடரும்  ஐம்பதைக் கடந்த கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் இங்கிலாந்தைப்போல ஜெர்மனைப்போல பிரான்சு நாட்டிலும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த எழுத்திற்கென்றுசில  பொதுவான குணங்கள் உண்டு : சொந்தமண்ணையும் உறவுகளையும் பிரிந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் அடகுவைத்து ;  தனது அடையாளம் வேரா கிளையா என்பது தெரியாமல் ; தொலைத்தவற்றையும், கண்டெடுத்தவற்றையும் சமன்செய்ய வக்கின்றி ; கடந்தகாலம்x நிகழ்காலம் ; தாய்நாடுxதஞ்சமடைந்த நாடு ; வாழ்ந்த ஊர்x வாழ்கின்ற  ஊர் எனும் இருமைப்பண்புகளில் சிக்குண்டு ; எங்கிருக்கிறேன், நான் யார் ? என்ற கேள்வியில் உழன்று ; ஆசிய சதுப்புநிலத்தில் சிக்கிய சைபீரிய பறவைபோல இரை மறந்து திசை நினைத்து வாடும் எழுத்து புலம்பெயர்ந்தவர் எழுத்து :  பிறந்த மண்ணைக்குறித்த ஏக்கம், பெருமிதம் – குடியமர்ந்த நாடு அளிக்கும் ஏமாற்றம் சோர்வு –   எனக் கதைக்கும்முறை.   ஆந்த்ரேயி மக்கீனிடமும் இவை எதிரொலிக்கின்றன.

‘ ஒரு நாள் மாலை நேரம். இருவரும் மலைச் சரிவொன்றில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சாட்டையால் அடிப்பதுபோலக் குளிர்காற்று அவர்கள் முகத்தில் வீசிக்கொண்டிருந்தது உறைந்த பனித்துகள்கள் காற்றில் கலந்து  அவர்கள் கண்களை மறைத்தன. இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்தபோது, பின்னாலிருந்த அவ்விளைஞன் அவள் காதில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா’, ’ என்கிற செக்காவ் வரிகளுடன்  நாவல் தொடங்குகிறது. ‘புலம் பெயர்ந்த ஒருவரின் தாயகம் அவர் தாயகத்தின் இலக்கியம்’(பக்கம் 24) என யாரோ ஒருவர் குறிப்பிட்டதாக நவலில் வரும் கூற்றை  ஆந்திரேயி மக்கீன் இங்கு நியாயப்படுத்துகிறார்.

செக்காவ் கதையில் வருகிற அத்தகைய சந்தர்ப்பமொன்றில், இந்நாவல் கதைநாயகன் ஷூட்டோவ் தன்னுடைய முன்னாள் ரஷ்யக் காதலி ‘யானா’ என்பவளிடம் உரைத்த காதல் மொழி என்பதோடு நேற்றைய லெனின் கிராடு அனுபவங்களைத் திரும்பப்பெறவும்,  தன் வேரினைத் தேடி அவன் பயணிக்கவும் உந்துதலாக அமைகிற மொழியும் இதுவே.  இருநூறுபக்கமுள்ள நாவலில் முதல்  79 பக்கங்களில்  சொல்லப்படும் கதைநாயகனின்  இரண்டு பெண்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஒரு புலம்பல். மாறாக நாவலின் பிற்பகுதியில், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் ஓட்டலொன்றில் (ஷூட்டோவ் முன்னாள் காதலி யானாவிற்குச் சொந்தமானது) வேண்டா விருந்தாளியாகக் கட்டிலில் கிடக்கிற வோல்ஸ்கி என்ற ‘முன்பின் தெரியாத’ கிழவனின்  இறந்த கால மீட்டெடுப்பு காட்சிகள் ஆந்திரேயி மக்கீன் ஒரு பேரிலக்கியவாதி என்பதை உறுதி செய்பவை. உண்மையில்  நாவலின்  இதயத் துடிப்பிற்குத் தமணியும் சிறையுமாக இருப்பவர்கள் வோல்ஸ்கி – மிலா ஜோடியினர் :  தம்பதிகளின் வாழ்க்கைப்பாதை  செப்பனிடப்படாத பாதை, கற்களும் முட்களும் நிறைந்த பாதை. பகைவர்கள் லெனின்கிராடை முற்றுகையிட்டிருக்க, தோழர்கள் என நம்பப் பட்ட ஆட்சியாளர்கள் சொந்த மக்களின்  வாழ்க்கையை முடமாக்கிய காலம்.

எழுத்தாளன் ஷூட்டோவுடைய  நிகழ்காலம், இறந்தகாலத்தைக்கொண்டு  மூன்று ஓவியச்சீலைகளை  ஆந்திரேயி மக்கீன் நம் கண்முன் விரிக்கிறார்.ஷூட்டோவ்-லெயா-பாரீஸ், ஒன்று ; ஷூட்டோவ்- யானா – செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், இரண்டு ; வோல்ஸ்கி-மிலா-லெனின் கிராட், மூன்று.

 

அ. ஷூட்டோவ்-லெயா- பாரீஸ்

கதை நாயகன் ஷுட்டோவ், ‘ ஐம்பது வயதாகிறது, நிறையப் படித்திருக்கிறான், ஆய்வு செய்திருக்கிறான், வறுமையைக் கண்டிருக்கிறான். அவ்வப்போது கொஞ்சம் வெற்றியையும் பார்த்திருக்கிறான்’  என்கிற தன்னைப்பற்றிய அவனது கர்வம்  அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.  அவனுக்குத் தான் வாசித்த நேற்றைய ரஷ்யக் காதல் கதை’மிக எளிமையானது, இருந்தாலும் சரியானது, பொருள் பொதிந்தது’ மாறாக இன்றைய பிரெஞ்சுக் காதல் கதைகள் ‘ நூறுபக்கம் பாரீஸ் நகர காமக் களியாட்டங்கள், பின்னர் மனச்சோர்வு’ இவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது ‘பிரெஞ்சு மொழி பேசும் கறுப்பரின எழுத்தாளன் ஒருவன் ‘அங்கிள் பென்’ விளம்பரத்தில் வருபவன்போல இளித்துக்கொண்டிருந்தான், மெல்லிய கண்ணாடி அணிந்த  சீனன் ஒருவன் தன்பார்வையை இங்கும்மங்கும்  சுழலவிட்டுக்கொண்டிருந்தான், அதிலும் குறிப்பக ரஷ்யனான ஷூட்டோவை  அடிக்கடிப்பார்த்துக்கொண்டிருந்தான், பிரஞ்சு இலக்கியம் உலக மயமானதற்கு முத்தான மூன்று சான்றுகள்’  என தன் எண்ணத்தில் எச்சிலைச் சுமக்கும் கதைநாயகனோடு, இளைஞர்களை இன நிற வேறுபாடின்றி மோகிக்கிற  பிரெஞ்சு வாலைக் குகமரி ஒருத்தி இரண்டரை ஆண்டுகள் குப்பைக் கொட்டியதே  நமக்கு அதிகமென்று தோன்றுகிறது  பாரீஸ் காதலி லெயா,பிரிவதென்று தீர்மானித்து அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிடுகிறாள் . அவனைவிட்டுப் பிரிந்து, இன்னொருவனுடன் செல்ல ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கு இருக்கின்றன :

* முதலாவதாக அவனுடைய வயது முக்கியக்காரணியாகப் படுகிறது. அவனுக்கு அவள் தந்தை வயது, அவளுக்கு அவன் மகள் வயது. இங்கே மாக்ஸ் கலோ(Max Gallo) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘பெண்களின் பார்வை’ (Le regard des femmes) கதை நாயகன் பிலிப் இதே வயது காரணமாக காதலி லிசா தன்னைவிட்டு விலகிப்போவதாக புலம்பும் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

* இரண்டாவதாக இவன் செக்காவ் ரசிகன், ‘கிரங்கவைக்கும் குளிர், எளிதில் மருளும் காதலர்கள் ‘ என செக்காவ் படைப்புக் காட்சியை ஒரு எழுத்தாளனாகப் பார்ப்பவன். ஷூட்டோவிற்கு, செக்காவ்  ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா ‘ என்ற வரியைக்கூட காவியமாக்கும் திறமைசாலி.  ஆனால் லெயா தெய்வமாகக் கொண்டாடும்  எழுத்தாளர்கள் புத்தகங்களில் ‘…காதல் மணம் வீசுவதில்லை. எச்சில் நாற்றம்தான் வீசுகிறது… அருவருப்பு ….  ‘  என்கிற  நிலமை.

இப்படி நடுத்தர வயதைக்கடந்த எழுத்தாளனுக்கும், அவன் மகள் வயதுடைய பெண்ணொருத்திக்கும் இடையிலான பேதங்கள் அவர்களுக்கிடையே தீராத வாக்குவாதத்திற்குக் காரணமாக ஒரு நாள் அவன் ரஷ்யப்பெயரை ‘சர்க்கஸ் கோமாளி’ எனக் கோபத்துடன் நக்கல் செய்து அவர்கள்  உறவுக்கு விடைகொடுக்கிறாள்.

‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பு, கதை நாயகனை பாரீஸிலிருந்து லெனின்கிராடிற்கு அதாவது இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ் பர்கிற்கு துரத்துகிறது. அவன் நினைவில் நிழற்படமாகவிருக்கிற  ‘யானா’ என்கிற முன்னாள் காதலியையும் அவள் சார்ந்த லெனின்கிராடு நினைவுகளையும் உயிர்ப்பிக்க ‘வெகு நாட்களுக்கு முற்பட்ட முகவரிகள் ! வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் ! பழைய பயண பையிலிருந்த எடுத்த கையேட்டுக் குறிப்புகளைப் படித்து பழைய வாழ்க்கையை  தம்முடைய இளமைக்காலத்தை மீட்டெடுக்க நினைப்பது, நாவலின் முதல் பகுதி.

 

ஆ. ஷூட்டோவ் – யானா- செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்

சோவியத் யூனியன் ருஷ்யாவாகவும், லெலின் கிராடு  செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் எனவும் மறுபிறவி கண்டபிறகு , ஷூட்டோவ்  தன் காதலி ‘ யானா’விடம் கடந்த கால லெனின்கிராடு நினைவுளை எதிர்பார்ப்பது கேலிக்குரியது. எதையோ நினைத்து தாயகம் திரும்பும் கதைநாயகன் நாம் நினைப்பதுபோலவே ஏமாற்றத்திற்குள்ளாகிறான். பழைய லெனின் கிராடு இல்லை, ‘மேற்கத்திய நாகரிகத்தின் சாரத்தை அவன் பிரான்சில் கூட காணத வகையில் இங்கு கொண்டுவந்துவிட்டார்கள்.’  புரட்சியின் பேரால் கொல்லப்பட்ட  இரண்டாம் நிக்கலிஸின் கொள்ளுப்பேரனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் அது.  ‘கிரேக்க பாதிரிமார்கள் புனிதரின் எச்சமிச்சங்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஓரின சேர்க்கையை விரும்பும் இரண்டு ராக் பாடகிகள் ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய நாணத்தைச் சாடுகிறார்கள். பெர்லுஸ்கோனி பவரோத்தியுடன்  டூயட் பாடுகிறார். ரஷ்ய சிலவராட்சி உறுப்பினர் ஒருவர் ஆல்ப்ஸ் மலையில் ஆறு சேலட்கள் வாங்குகிறார்’ கதை நாயகன் எதிர்பார்த்த  ‘லெயா’ வயது ‘யானா’ இன்று முதுமை வயதில் ருஷ்யா எடுத்துள்ள புதிய அவதரத்திற்கேற்ப ‘கொத்து கொத்தான ஹாலோஜன் மின் விளக்குகளின் கீழ் பிரகாசிப்பவள் ‘. மேற்குலகின் நகலாக காட்சி அளிக்கும் இன்றைய ருஷ்யாவின் நடைமுறைகள் அவனுடைய இனத்தோடு சேரும் சுக உணர்வும்,இருபது ஆண்டுகள்கழித்து நம்முடைய உலகத்தோடு தொடர்புகொள்வோம்  என்ற நம்பிக்கையும்’ பொய்க்க காரணமாக இருக்கின்றன.   

        ‘ ரஷ்யா அதற்கும் அதன் விதிப்பயனுக்குமிடையே  குறுக்கிட்ட அறுபது எழுபது ஆண்டுகால  நிகழ்ச்சிகளைத் துடைக்க முயலுகிறது. ஆம் அழகான ஒன்றை அச்சமும், அறிவுசார் அடிமைத்தனமும் ஆயிரமாயிரம் கொலைகளும் கலந்து சேறும் சகதியுமாக ஆகிவிட்டன’, ‘ஷூட்டோவ் மனதுக்குகுள் சிரித்துகொண்டான். தெளிவு மனதைக் காயப்படுத்தியது. அவனைக் கண்டு கொள்ளாமலேயே வரலாறு தன் போக்கைத் துறந்து மீண்டும் தூய்மை ஆகின்றது. அவனோ எல்லோரும் மறக்க விரும்பும் அம்மோசமான காலக்கட்டத்தின் சேற்றிலேயே உழன்றுகொண்டிருந்தான். ‘நான் வந்தது தவறு’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்’(பக்கம் 74), என ஷுட்டோவ் நினைக்கிறான்.

 

இ. வோல்ஸ்கி – மிலா – லெனின்கிராட்

        ‘ யாரிடமாவது மனம் திறந்து தனது பயனற்றுப் போன பயணம், யானாவிடம் மீண்டும் இணைய முடியாத சோகம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’(பக்கம் 78) என்றிருந்த ஷுட்டோவுக்கு  புதையலைப் போல ஒரு சந்திப்பு. பாரீஸ் வாழ்க்கையிலிருந்தும், தன்னைக் கைவிட்ட ‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பளித்த துயரத்திலிருந்தும் தப்பிக்க ஷூட்டோவ் தேடிவரும் லெனின்கிராட் நகர இளமைக்காலத்தையும்  நாற்பதுகளில் கண்ட சோவியத்யூனியனையும்  ஒரு முதியவர் வடிவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் இவனுக்கென்றே பத்திரபடுத்தி வைத்திருக்கிறது.  

        பத்து நாளைக்கு முன்னால் ஒரு முதியோர் இல்ல த்தில் சேர்க்கப்பட இருந்தார். அதற்குள் மூன்றாவது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எல்லாம் மூடப்பட்டுவிட்டன. விளைவு,  எங்களுக்கு  ஒட்டும் உறவும் இல்லாத இந்த வயோதிகரை நாங்கள் வைத்திருக்க வேண்டியதாயிற்று !’(பக்கம்54 ) என முதியவரை ஷூட்டோவின் முன்னாள் காதலி அறிமுகப்படுத்துகிறாள். அவள்  கூறியதுபோல பத்துநாளைக்கு முன்பாக கிழவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், இந்த நாவலே இல்லை. ஷூட்டோவ் மட்டுமல்ல நாமும் ஏமாந்திருப்போம். முன்பின் தெரியாதவன் வாழ்க்கை என நாவலுக்கு பெயரிட்டதும், எழுத முற்பட்ட தும் முதியவரின் கல்லறை காரணமாகத்தான், என்பது நாவல் இறுதியில் தெரிய வருகிறது.

சில நேரங்களில் மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களின் விதியைத் தீர்மானிக்கிற சம்பவமாகவும் அமைவதுண்டு.  வோல்ஸ்கி ஓர் இசைநாடகக் கலைஞன், தொழிலுக்கேற்ப நன்குபாடவும் செய்வான். அவனைப்போன்றே இசைநாடகப் பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவள் மிலா. இருவரின் முதல் சந்திப்பு  எதேச்சையாக  இசைக்கல்லூரி  மாணவர்கள்காக  இருந்தபோது நிகழ்கிறது. ‘செம்பட்டை முடியுடன் கூடிய ஓர் இளம்பெண்’ ஆன  ‘மிலா’வை, ‘தன்னுடைய பாட்டின் மென்மையினால் வாழ்ந்து விடலாம், தன்னை வெற்றிகொண்டவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, இருளிலும் கூடப் பிரகாசிக்கும் கண்களைக்கொண்ட பெண்களைக் கவரமுடியும்’ என்று வோல்ஸ்கி மனப்பால் குடித்திருந்த தருனத்தில்  சந்திக்கிறான்.   பிரிவோம் சந்திபோம்’  என்ற சூத்திரத்தினால் முடையப்பட்ட வோல்ஸ்கி – மிலா உறவில் எதிர்பாலின வேட்கைக்கு அதிகப் பங்கில்லை. அவர்கள் பரஸ்பர அன்பிற்குச் சாட்சியாக இருப்பது  நூற்றுக்கணக்கான லெனின்கிராட் வாசிகளைப்போல  ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன் அன்பே’, என்ற பாடல் மட்டுமே.  ‘மிலாவுக்கு எப்படியோ, அவனுக்கு ஊர் மெச்சும் இசைநாடகக் கலைஞனாக புகழ்பெறும் கனவுகள் இருந்தன.  ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.   இவர்களுக்கிடையே நிகழும் மூன்று சந்திப்புகளும், அவை துளிர்க்கின்ற தருனம் முதல்  இற்றுவிழும் நொடிவரை சொல்லப்படும் வாழ்க்கையும், பின்புலமாகச் சித்தரிக்கப்படும் சோவியத் யூனியனும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை.

இரண்டாவது சந்திப்பு  நிகழும்போது : இரண்டாம் உலகப்போர், லெனின் கிராட் முற்றுகை, குண்டுவீச்சு, தினம் தினம் கல்லறையாக மாறும் வகையில் ஆயிரமாயிரம்பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சமும் பசிநோயும் மக்களை வாட்டுகிறது. தற்போது அவன் இசைநாடகக் கலைஞன் இல்லை. பிணம் சுமப்பவன். ஆம் தங்களைச் சுற்றிலும் இறந்து கிடக்கும் சடலங்களை உயிரோடிருப்பவர்கள்தான் கல்லறைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதன்படி ஒரு பிணத்தை வண்டியில் போட்டு இழுத்துச் செல்கிறான். இவனைப்போலவே பெண்ணொருத்தி பிணவண்டியை இழுத்து வருகிறாள். இருவரும் மூச்சுவாங்க சற்று ஓய்வெடுத்து, கைவசமிருக்கும் காய்ந்த ரொட்டியைக் கடிக்கிறபோது, தங்கள் காரியத்தை இலகுவாக்கும் நோக்கில் வோல்ஸ்கி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்கிறான் :

– நான் என் அணடைவீட்டுக்காரர்  பிணத்தை இவ்வாறு சுமந்து செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை .வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய பிணம் யாருடையது ?

        – என் அம்மா !  என்று அவளிடமிருந்து பதில் வருகிறது.

        இருவரும் ஒரு நிமிடம் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மவுனமாக நின்ற இடத்திலேயே  நின்றார்கள். குளிர் பூஜ்யத்துக்குக் கீழ் முப்பது டிகிரி. அழுவதற்கு அதுவல்ல நேரம். ‘ (பக்கம் 98  )என ஆந்திரேயி மக்கீன் எழுதுகிறார்.

எதிரபாராமல் இசை நாடக அரங்கும் இவர்களுக்குக் கதவைத்திறக்கிறது. புணர்வாழ்வு கிடைத்த தென கலைஞர்கள் இருவரும்  கிடைத்தப் பாத்திரமேற்று நடிக்கின்றனர். இவர்களின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிப்பதில்லை. யுத்தம் வோல்ஸ்கி – மிலா ஜோடியைப் பிரிக்கிறது. வோல்ஸ்கி லெனின்கிராடை காப்பாற்றும் பொருட்டு போர்முனைக்குச் செல்கிறான். யுத்தம் செய்யும் களம் நிலையாக ஓரிடம் என்று சொல்லமுடியாததால் இருவருரிடையே கடிதப்போக்குவரத்துகள் இல்லை. ஆகத் திரும்பப் பிரிவினைச் சந்திக்கின்றனர்.

மூன்றாவது சந்திப்பு –  நீண்ட இடைவெளி,  ஒரு சனிக்கிழமை நிகழ்கிறது.  வோல்ஸ்கி  தனது கடந்த காலத்தில் மூழ்கி இருக்கிறபோது முகவரியொன்று நினைவுக்கு வர  ‘மிலா’ வைப்பற்றி விசாரிக்கலாம் என்று அங்கு போகிறான்.  வழியில்  பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருந்தியை ‘செம்பட்டை முடி பரத்தை, போரின் விளவு’ என்று முனுமுனுத்துவிட்டு, சற்று தூரத்தில் துணி காயவைத்துக் கொண்டிருந்த  பெண்மணியிடம் ‘மிலா’வைப் பற்றி விசாரிக்கிறான். அவள் காறித் துப்பிவிட்டு ‘உன் சல்லாபங்களைத் தொடங்க இரவுவரைகூட காத்திருக்க கூடாதா, வெட்க க்  கேடு, இனி பகலில்கூட வருவார்கள்’, என்கிறாள். திரும்ப வருகிறபோது பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்னை மறுபடியும்  காண்கிறான் :

அவள் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தாள். தாலாட்டைப்போல, அவள் அன்பே உன்னோடு மட்டும் என் கனவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று பாடினாள். அடுத்த அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று உரத்த குரலில் பாடினான். அப்போது அவள் உதடுகள் அசைந்த து அவனுக்கு வியப்பாக இல்லை. கண்கள் மூடியபடியே ஒரு புன்னகையைச் சிந்தி அவளுக்குள் இருந்த இன்னொரு ஜீவனை எழுப்பிவிட்டு பாடவைத்தாள். வோல்ஸ்கி அவளைத் தூக்கிவிட்டான். அவனுடன் அவள் சென்றபோது ஓர் இனிய கீதத்தின் தாக்கத்தால் அவள் தள்ளாடி நடந்தாள்.

‘என்று மக்கீன் அந்த ஜோடியின்  சந்திப்புகளை எழுதுகிறபோதெல்லாம்  படைப்பு அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  இந்த இடைப்பட்டக் காலத்தில்  அநாதைச் சிறுவர்களைக் காப்பாற்றத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர்களின் ஒரு வேளை ரொட்டிக்காக தாய்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிஒருவனுக்குச் சோரம் போகத் தொடங்கி இன்று ஓர் வேசியாக வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ள அவலத்தையும் பகிர்ந்துகொள்கிறாள்.

மிலா ஓர் இசை ஆசிரியை ஆகவும், வோல்ஸ்கி ஓர் அஞ்சல்துறை ஊழியனகாவும்  மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஸ்டாலின் அரசாங்கத்தின் இரகசியக் காவற்படை பொய்யானக் குற்றச் சாட்டை முன்வைத்து இவர்களைச் கைது செய்கிறது. அன்றைய வழக்கபடி விசாரனை, கடுங்குளிர் நிலவும் பிரதேச முகாம்களில் சிறையென,  பிரிவு இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் குறுகிடுகிறது. ‘மிலா’ உடனான நான்காவது சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வோல்ஸ்கி  ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்.

 

நாவலின் இறுதியில் கூறுவதுபோல ‘எழுதுவதற்குத் தகுதியான வார்த்தைகள், மொழியில் சொல்லமுடியாத வார்த்தைகள்தான்’  என்பதாலோ என்னவோ, அந்த சொல்லமுடியாதவை  நெஞ்சில் ஏதேதோ அனுபவங்களாக விம்மித் துடிப்பதை உணருகிறோம். உணர்ச்சிப்பெருக்கில்  வார்த்தையின்றி  வோல்ஸ்கி கிழவனைப்போலவே பேச்சை வெறுத்து மௌனத்தில் ஆழ்கிறோம்.  ‘போர்கள், முகாம்கள், இரண்டு உயிர்களின் வலுவற்ற உறவுகள் என இப்படித்தான் கோல்ஸ்கி – மிலா ஜோடி வாழ்க்கை இருக்கின்றது.

வாழ்க்கையில் முதன் முதலாக எந்த ஊரும் சொந்த ஊர் இல்லையென்றும், அவன் போகும் இடங்கூட விரும்பிப் போகும் இடமில்லையென்றும், ஆயினும் இதுவரை இல்லாத அள்வுக்கு அவனுடைய சொந்த நாட்டின் மீது பற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நாடு ஓர் இடத்தைக் குறிக்கவில்லை. ஒரு சகாப்தத்தைக் குறித்த து – வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்தம். …ஆம் வெட்கப்படவேண்டிய அரக்கத்தனமும் கொலைவெறியும் தலைவிரித்தாடிய அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலையைத் தூக்கி ஒருவன் வானத்தைப் பார்த்திருக்கிறான்’  என்பது பாரீஸுக்கு திரும்பும் ஷூட்டோவ் மனநிலை. நம்முடைய மனநிலையும் அதுதான்.

இதுபோன்ற நூல்கள் தமிழில் வருவதனால், தமிழ் படைப்புகள் கூடுதல் வளம் பெறும். பதிப்பகத்திற்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் தமிழ் படைப்புலகம்  நன்றி கூற கடமைப்படுள்ளது.

—————————————————————-

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை (நாவல் )

தமிழில் பேராசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

 

————————————————————————————————-

 

 

மொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்

பிராமணர்களால் இந்தியச் சமூக அமைப்பில் பிரச்சினை  என்பது பொய்யா

« – இன்றைய தேதியில் அதுபொய்யாகத்தான இருக்க முடியும்முதன் முதலாக இந்தியா வந்தபோது என் எண்ணமும் அதுதான். நான் தங்கியிருக்கிற சினேகிதரின் குடும்பம் புதுச்சேரிக்கருகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமம். 60 களில் ஊரை காலிசெய்துகொண்டு அவர்கள் மூதாதையர்களெல்லாம் புதுச்சேரி சென்னையென்று பிழைககப் போய்விட்டார்களாம்அவர்களின் கூற்றின்படி இன்றைக்கு 95 விழுக்காடு பிராமணர்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தாமுண்டு, தங்கள் பிழைப்புண்டு என்று இருப்பவர்கள்.   இவர்களில் உயர்சாதி திமிரோடு இருப்பவர்கள் ஐந்து அல்லது பத்து சதவிகிதத்தினர்தானாம். ஒரு மாதம் தொடர்ந்து செய்தித் தாள்களை வாசித்துப்பாருங்கள். உங்களுக்குத் உண்மை தெரியவரும்இதுல பாத்தீங்கன்னா இங்குள்ள கீழ்த்தட்டு மக்களுக்கும், நடுத்தரவர்க்கத்திற்கும் தங்கள் வாழ்க்கை பற்றிய கவலையில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. ஆனால் இவர்களில் சில மேட்டுவர்க்கத்தினருக்கு, தங்கள் இருத்தலை உறுதிசெய்ய சாதி அரசியல் தேவைப்படுது. “புதுச்சேரி கடைத்தெருவுல நம்ம சாதிக்காரப் புள்ளையோட அந்தச் சாதிக்கார பையனைப் பார்த்தேன். ஒதுங்கியிருந்து பயலுவ, நாங்களும் வடம் பிடிக்கிறோம்னு, தேர் வடத்துல கை வைவைக்கிறான், அவங்க குளத்துல தண்ணி வத்திப்போச்சாம் நம்ம குளத்துல இறங்கிட்டாளுவஎன்கிற காரணத்தைவைத்து ஒருவரை ஒருவர் வெட்டிமாள்வதும், கோர்ட்டுக்கு நடப்பதும் யார்சாதி என்ற சொல்லை விட்டுடுவோம், ஆதிக்க சக்தியா தன்னை வைத்துப் பார்க்கிற எந்தக்கூட்டமும் ஆரோக்கியமான சமூகத்துக்கு எதிரானதுதான். »

 

இது ‘இறந்த காலம்’ என்கிற நாவலில் கதைமாந்தர்களில் ஒருத்தியின் கருத்து. நாவலில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் படைப்பாளியின்  பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. பொதுவாக  எனது நாவல்களில் இடம்பெறும் கதை மாந்தர்களின் கருத்தில்  எனக்கு இணக்கம் முரண்பாடு இரண்டுமுண்டு. ஆனால் இவ் விஷயத்தில், இப்பெண்ணின் கருத்தில் உடன்படுகிறேன்.   இக்கருத்தை சற்று விரிவாகக் காண்பது  இக்கட்டுரையின் நோக்கம்.

இந்திய உப கண்டத்தில் பிறந்து, தங்கள் ஆயுளில் கணிசமான காலத்தை இந்திய மண்ணிலே கழிக்க நேரும் சராசரி மனிதனுக்கு  சாதியும் சமயமும் ஓர் உடும்பு, பிடித்தால் விடுவதில்லை. அவற்றின் பிடியிலிருந்து தப்பிப்பது எளிதும் அல்ல. அதிலும் சாதியின் பிடி சமயத்தின்பிடியைக் காட்டிலும் வலிமையானது. சாதியையும் சமயத்தையும் விலக்கி வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிற  ஒன்றிரண்டு விழுக்காட்டில் போலிகளும் உண்டு உண்மைகளும் உண்டு, அதுபோல சாதிய சமய வாழ்க்கைக்குத் தங்களைச் சமரசம் செய்துகொண்டு  வாழ்பவர்களிடத்திலும் தீவிரவாதம் மிதவாதம் இரண்டுமுண்டு.

என் வீட்டில்  மனைவியின் சமய நம்பிக்கையில், சாதியப் பிடிப்பில்  நான் குறுக்கிடுவதில்லை. எனது பகுத்தறிவு எனது உயர்வுக்கும் தாழ்வுக்கு நானே பொறுப்பு கடவுள்கள் தீர்மானிப்பதல்ல என நம்புகிறது. அவளுடைய பகுத்தறிவு  அவள் முடிவு சார்ந்து வேறு காரணங்களை முன் வைக்கிறது. நாம் பகுத்து அறிந்து ஒன்றை சரி அல்லது தப்பு எனத் தீர்மானிக்கிறோம். எடுக்கின்ற முடிவு நமக்கானது. அதைப் பிறருக்கு தெரிவிக்கவும் செய்யலாம் ஆனால் நாம் பகுத்தறிந்த முடிவு பிறருக்கும் சரியாக இருக்கும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது என்பதும் பகுதறிவின்பாற்பட்ட துதான். எனவே எனது மனைவியின் பகுத்தறிவில் நம்பிக்கைவைத்து அவள் தனக்கென்று எடுக்கும் முடிவில் நான் குறுக்கிடுவதில்லை.

புலம்பெயர்ந்த மண்ணில் சாதியை மறந்து சமயத்தை மறந்து வாழநேரினும் இந்தியாவிற்குத் திரும்பும் போது என்  பெற்றோர் வழி குடும்பம், என்மனைவி வழி குடும்பம் எனப் பார்க்கும் போது, புலம்பெயர்ந்த மண்ணில் மறந்திருந்த சாதி பிறப்பெடுக்கிறது. சாதிக்காரர் கள் என்கிறவர்களெல்லாம் என் மூதாதையர்களாக  என் பாட்டனுக்கு, முப்பாட்டனுக்கு பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் விலகிச்சென்றவுடன் சாதியும் விலகிசெல்வதை உணர்கிறேன். ஆக சாதியை இலைமறை காயாக எனது ஆயுள் உள்ளவரைவரை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் தெரிகிறது.  எனது பிள்ளைகளுக்கு அப்பிரச்சினை இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையிலிருந்து யாதவச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயர் விருதுக்குப் பரிந்துரை செய்து என்னைத் தொடர்புகொண்டார்கள். பரிந்துரை செய்தவர்களில் முக்கியமானவர் மதுரை யாதவா பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியை  திருமதி அழகி கார்மேகம். அவர் உறவினர் மட்டுமல்ல எனது படைப்புகளை தொடர்ந்துவாசித்துப் பாராட்டிவரும் முதிர்ச்சி பெற்ற வாசகர். தொ.மு. பரமசிவத்திற்கு விருதளித்த விபரத்தைச் சொன்னார்கள். அப்படியும் தயங்கினேன். நண்பர் க.பஞ்சாங்கம், தமிழ்மணி ஆகியோருடன் எனக்குள்ள சங்கடத்தை த் தெரிவித்தேன். அவர்களின் சமாதானத்தின் பேரில் விருதைப் பெறுவதென முடிவாயிற்று. யாதவச் சங்கத்தின் அன்பின் காரணமாக புதுச்சேரி ஆன ந்த ரங்கப்பிள்ளைப் பற்றிய தொடர் ஒன்றையும் எழுதப் போகிறேன். சாதியின் பேரால் நல்லது எது நடந்தாலும் வரவேற்கிறேன். மனிதர் மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய சாதிகள் மறையா.

சமூக  அமைப்பின் இயற்பியல் நிகழ்விற்கு – அது  முன்னெடுத்துச் செல்லப்பட – நேர்வகை , எதிர்வகை மின் தூண்டல்களுக்கிடையே   இணக்கம் வேண்டும், அன்றேல் சமூகம் தேங்கிய  குட்டைஆகிவிடும்.  தன் வேரினை அறியவும் பெருமிதம் கொள்ளவும்  உதவும் மனிதரின அடையாளம், தான் அல்லாத மற்றமைகளை இணைத்துப் பார்க்க விருப்பமற்று உருவான இன அடையாளங்களும், வேற்றுமைகளும் ஒருவகைச் சாதிப் பிரிவினைதான். சாதிகள் எங்கில்லை.  எதில் இல்லை. சமூக அமைப்பில் உலகமெங்கும் வெவ்வேறு பெயரில் சாதிகள் கொட்டிக்கிடக்கின்றன.  எனது தமிழ்ச்சாதி ஒருபக்கமிருக்கட்டும். இங்கே ஐரோப்பாவில் வெள்ளையருக்கு நான் ஆசிய சாதிகூட  அல்ல( இவர்களுக்கு ஆசியர்கள் என்றால் சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர்..)இந்திய சாதி. இன்னும் சொல்லப்போனால் ஓர்  இன வெறிகொண்ட வெள்ளையனுக்கு நான் தீண்ட த் தகாதவன், கறுப்பன்.  ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு மொழியில் சொல்வதானால் வெள்ளை இனவெறிக்க்கூட்ட த்திற்கு  நான் ஒரு ‘Paria’.  இக்கூட்டம் அவர்கள் அல்லாத பிறமைகளை அப்படித்தான் பார்க்கிறது.

இதற்காக ஒட்டுமொத்த வெள்ளையர்களும் எனக்கு எதிரானவர்கள் என்று வஞ்சினம் காப்பது எனது வாழ்க்கையைச் செப்பனிட உதவாது. என்னை வெறுக்கின்ற ஐரோப்பியர் எண்ணிக்கையைக் காட்டிலும், எனது முன்னேற்றத்தில் உழைப்பில் குறுக்கிடாத ஐரோப்பியர் எண்ணிக்கை அதிகம். அதுபோல, ஒட்டுமொத்த பிராமணர்களும் தப்பானவர்கள், சூட்சிக்காரரகள், தந்திரக்காரர்கள் என்கிற பிரச்சாரத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது நாகரீகமல்ல என்பதென் கருத்து.   தமிழுக்குத் தொண்டாற்றிய பிராமனர்களையும் உதாசீனபடுத்திவிட முடியாது. நிதானமாக நன்றியுடன் அசைபோடக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ச் சாதி உருப்பட உபசாதிகளுக்கிடையே இணக்கம் காண்பதொன்றே உகந்த வழி.

——————————————————————————

படித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்

‘உலக எழுத்தாளர் வரிசை: டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong)

வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

படித்ததும் சுவைத்ததும் – 10: இராஜேந்திர சோழனின் யுத்த களம்

 

அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன், பெயருக்கேற்ப   நல்ல உயரம், அதற்கேற்ப உடல்வாகு, ஈரத்துடன் மினுங்கும் கண்கள், கூரிய மூக்கு, அதை உதட்டிலிருந்து பிரிப்பதற்கு நெய்பூசி நீவியது போல, உதட்டோரம் இருபுறமும் உறையிலிட்ட வாள்போல மீசை. தலையில் மகுட த்தைச் சூட்டினால் சோழர் குல வாரிசென்பது நிச்சயம். எழுத்திலும் இந்த கம்பீரமும் மிடுக்கும் அப்படியே குறையாமல் இருப்பதுதான் அதிசயம்.

 

இராசேந்திர சோழனை நிகழ்காலத்திற்கு அழைத்து, நிலைக்கண்ணாடி முன்பாக நிறுத்தினால் அதில் நா. பார்த்தசாரதியோ, ஜெயகாந்தனோ தெரிந்தால் வியப்புமல்ல. அதிலும் பின்னவரைப்போல தனது இருத்தலை உறுதிசெய்ய உரத்து குரலெழுப்பும் அரசியல் இவருக்கு வராது என்கிறபோதும், அடித்தட்டு மக்களின் குமுறலை, ஆற்றாமையை கதைபடுத்துகிறவர்.  வாய்பேசாத மக்களுக்கு வக்காலத்து வாங்குகிற  வழிமுறையில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு.

இராசேந்திர சோழன்போல கம்பீரமானதொரு எழுத்தாளரை  நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு குறிப்பிட்டுச்  சொல்ல யாருமில்லை. அவருடைய சிறுகதையொன்றில்  . « தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் » என்று ஒரு வரியைப் படித்த  நினைவு. அதுபோலத்தான் முதன் முதலில் சந்தித்தபோது  இருந்தார். அன்று எழுத்தாளர் பிரபஞ்சனும் நானுமாக புதச்சேரி கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம்.  தலைமைத் தபால்  நிலையத்திற்கு எதிரே சரியாகச் சொல்ல வேண்டுமெனில், மத்திய தொலைபேசி இணைப்பக அலுவலகத்திற்கு எதிரில், AITUC கொடிக்கம்பத்திற்கு அருகில் அவரைச் சந்தித்தேன். ஒரு தொழிற்சங்கவாதிபோலவே இருந்தார். கணிரென்ற குரல். பிரபஞ்சன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டொரு  நிமிடங்கள் உரையாடியிருப்போம்,பின்னர் அவர் கிழக்கு திசையிலும்,  நாங்கள் மேற்கு திசையிலுமாக  நடந்தோம்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு  நண்பர்கள் ஹைக்கூ  தமிழ் மணி, மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய  நாயகர் ஆகியோர் உதவியால் மயிலத்தில் அவருடையை   இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய குடும்பம், அன்பான உபசரிப்பு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவுமொன்று.

2017 இரஷ்யப் புரட்சியின்  நூற்றாண்டு.மேற்குலகையும் அமெரிக்காவையும் வீழ்த்த மாசேதுங்கின் சீனா  தனியுடமையை சுவீகாரம் எடுத்துக்கொண்டிருக்க, லெனின் அறைகூவலில் கிளர்ந்தெழுந்த சோவியத் மண்ணில் சோஷலிஸம் இன்று நேற்றய சரித்திரம். பனிப்போரை மறந்து, உலகமயமாக்கலுக்கு உரமூட்டுவதெப்படி என்ற விடயத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பேதமின்றி  நாடுகள் கைகோர்த்துள்ள  21ஆம் நூற்றாண்டு. அல்பெர் கமுய்யில் ஆரம்பித்து இராசேந்திர சோழன்வரை பொதுவுடமை ஸ்தாபனத்தின் மீதும், அதன் அபிமானிகளிடத்திதிலும், கொண்ட கோபமும் குமுறலும்  நியாயமானவை என்பதை வரலாறு  உறுதிசெய்துள்ள காலகட்டம்.  இத்தகைய சூழலில் இராசேந்திர சோழனைப் பற்றி எழுதுவதும் பொருத்தமானதுதான்

 

கம்பீரத்தில்  இராசேந்திர சோழன் ஒரு ஜெயகாந்தன் எனில் எளிமையில் அவர்  மற்றுமொரு சு. சமுத்திரம். மூவருமே  கலையும் படைப்பிலக்கியமும் மக்களுக்காக என வாதிடும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். தங்கள் படைப்புக்களை அத்தகைய கண்ணோட்ட த்துடன் படைத்தவர்கள். மனித வாழ்க்கையின் அலங்காரத்தை மட்டுமின்றி அவலங்களையும் தமது படைப்பில் சொல்லப்வேண்டிய கடமை  படைப்பிலக்கியவாதிக்கு இருக்கிறது. அறுபதுகள் வரை நவீன தமிழ் இலக்கியம் மேலை  நாடுகளில் ஆரம்பத்தில் எழுதப் பட்டதைப்போலவே மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை, வாழ்க்கைப் பார்வையை படைப்பில் மையப்படுத்தி அல்லது அவைகளை மையமாக வைத்து, விளிம்பு  நிலை மக்களை முற்றாக  நிராகரித்து இதுதான் தற்கால தமிழர்களின் வாழ்வியல், சமூக  நெறிகள் என்று சொல்லப்பட்டன.  கர்நாடகச் சங்கீதம், அலுவலகம், வற்றல் குழம்பு, சந்தியா வந்தனம் அத்திம்பேர், பட்சணங்கள் புனைவுகளிலும், சிறுகதைகளிலும் சாகாவரம் பெற்றிருந்தன.  இவற்றிலிருந்து முரண்பட்டு ஜெயகாந்தன் சேரி மக்களுக்கு இலக்கியத்தில் இடம் அளித்திருந்தார். அவரும் பொதுவுடமை ஸ்தாபனத்தின் பிரதிநிதி என்றபோதிலும் எஜமான் தொனியில்  அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். விளிம்பு  நிலை மக்களை புரிந்துகொள்ள அவரெடுத்த முயற்சிகள் எல்லாம், பரிசோதனை முயற்சிகள். அவர்களில் தன்னை ஒருவராகக் கண்டு எழுதியதல்ல. ஆனால் சு. சமுத்திரம் போன்றவர்கள் தாங்களும் அந்த அடித்தட்டு மக்களில் ஒருவர் என்ற உணர்வுடன் படைத்தவர்கள். அத்தகைய பண்பை நமது இராசேந்திர சோழனிடம் காண முடிந்தது. அதேவேளை  எழுத்தாற்றல்,கதை சொல்லும் திறன் இரண்டிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறார். இது இராசேந்திர சோழனுடைய பலம் மட்டுமல்ல பலவீனமும் ஆகும்.

 

இராசேந்திர சோழன் சிறுகதைகள்

 

முனைப்பு : தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்ற உணர்வில் எழுதப்பட்ட கதை.  தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டிய மாநாட்டில்  சிறுகதை  நாயகனும் கலந்துகொள்கிறான்.  நண்பகல் இடைவேளையின்போது வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தைப் பிரித்தவண்ணம் :

 

« அதே பேச்சாளர்கள் அதேபேச்சு இப்படி மாநாடு நடத்திக்கினு இருந்தா எப்பத்தான் விடிவு காலமோ… » என்கிறான். « நம்மகிட்ட  என்ன செயல் திட்டம் இருக்கு அதை நடைமுறை படுத்த. அது இல்லாத வரைக்கும் சும்மா வாயாலேயே பேசிக்கினு இருக்க வேண்டியது தான் » என்ற நண்பரின் பதிலுக்கு, « எல்லாரையும் ஒரு சேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதைத் தாண்டி வேற என்ன ? » என்பது அவன் அங்கலாய்ப்பு. தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிப்பது  எனத் தீர்மானித்து அவன் படும் சங்கடங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.  இன்றைக்கு உலகமெங்கும் தம்ழ் மாநாடுகள் என்ற பெயரில் அரங்கேறும் கூத்துக்களை படைப்பிலக்கியவாதி அவருக்கே உரித்தான தொண்டை மண்டல வட்டாரத் தமிழில் சொல்லியிருக்கிறார்.

 

சூரப்பன் வேட்டை :  பெயரைக்கொண்டே சட்டென்று நம்மால் எதைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார் என்பதைச் சுலபமாக விளங்கிக் கொள்கிறோம்.  நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப அன்றைய  அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே வீரப்பன் வேட்டை என்பதை த் துணிச்சலுடன் சொல்லும் கதை.  நேர்மையான சமூக உணர்வுள்ள எழுத்தாளனுக்கு  வரும் கோபத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்திலும் இராசேந்திர சோழன் தமது வழக்கமான எள்ளல் மொழியைக் கையாள மறப்பதில்லை.  ஏமாளிதேசம், ஏமாற்று தேசம் வஞ்ச்சகப் பேரரசு, சூரப்பன், தடாலடிப்படை என்ற உருவகப்படைப்பில் ஒளிந்திருப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்வதில் அதிக சிக்கல்களில்லை. இக்கதையில் :

« தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப்பகுதியில் வீசும் மெல்லிய இளங்க்காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர் நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத் தலைவர்……. இது காட்டு விலங்குகள் விட்டதாகவே இருக்க முடியாதென்றும், அதே வேளை  இது பருப்பு, சாம்பார், காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி….உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும்…..தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியமென்றும், எனவே சூரப்பனோ அல்லது அவர் கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியுமென்றும் சொன்ன அவர் இதை உறுதிச் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அயிட்டத்தை ஆய்வுக்காக கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுனர் முடிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ….உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார் »  என்பது எள்ளலின் உச்சம்.

 

சவாரி :

 

இராசேந்திர சோழனின் சிறுகதைகளில்   நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதை. கி மாப்பசானை நினைவூட்டும் மொழி நடை.

த.கு கட்சியின் தலைமைக் குழு கூட்டம். « அஜண்டாவைச் சொல்லுங்க தோழர் » என்கிறார், உறுப்பினர்களில் ஒருவர். « வழக்கமான அரசியல் போல அறிக்கை எல்லாம் வேணாம். இண்ணையக் கூட்ட த்துலே ஒரே ஒரு சப்ஜெக்ட் தான், குதிரைப் பிரச்சினைன்னு அது மட்டும் போதும், அதுலியெ உட்பிரிவா அ.முகம், ஆ.வயிறு, இ.கால்கள், ஈ. வால், உ. சூத்துன்னு அத மட்டும் போட்டுக்குங்க போதும் », என்கிறார் மற்றவர். « இயக்கப்பணிகள் பொருட்டு தலைமைக்குழு தோழர்கள் அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடு…இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக்கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து » தலைமைகுழுப் போட்ட தீர்மானத்தை மாவட்ட வட்ட குழுக்களும் வழிமொழிகின்றன. பிறகு வழக்கமான அரசியல் கூத்துகள். ஒரு  நல்ல சாதிக்குதிரையை வாங்க ‘குதிரை  நிதி’ திரட்ட அது குறித்த ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று நீளும் கதையில் நாம் செய்தித் தாள்களில் வாசிக்கிற அத்தனை அசிங்கங்களும் அரங்கேறுகின்றன.  நல்லதொரு அரசியல் நையாண்டி கதையை படித்த மகிழ்ச்சி.

 

பிரார்த்தனைகளும் பிரசாதங்களும் :

 

மறுபடியும் மா நாடுகளைப் பகடி செய்யும் கதை. அரசியல்  மா நாடு என்றில்லை, பொதுவாக  இங்கு அனைத்துமே கிடைத்த  நிதியை செலவு செய்ய அரங்கேற்றும் காரியங்கள். எவனோ செத்திருப்பான், ஈமச் சடங்குகளில் தங்கள் தங்கள் உறவுக் காரர்களுக்கு தலைக்கட்டுதல் கன ஜோராக நடைபெறும். அதன் மாற்று காட்சிதான் இந்த மா நாடுகள்.  இந்த லட்சணத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கைத் தேடுவார்கள். மா நாட்டின் முடிவில் என்ன உருப்படியாக  நடந்தது, எனத் தேடினால் ஒன்றுமிருக்காது.

« என்னப்பா மா நாடெல்லாம் எப்படி » என நண்பனைக் கேட்கிறான் மா நாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத கதை நாயகன்.

« ரொம்ப சிறப்பா இருந்தது. மூன்று நாளும் என்.வி. தான். மொத நாள் மீன் குழம்பு. ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன் கூடவே வட பாயாசம் வேற » என்கிறான் சினேகிதன்.  இவன் சிரித்து « ஏம்பா அதையா கேட்டேன் மாநாடு எப்படி இருந்த துன்னா » என் கிறான். « எல்லாம் வழக்கம் போலத்தான் » என்கிறவன், « மா நாட்டிலே  எல்லாருக்கும் பஞ்ச்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்டுல வெல அமபது ரூபா.  நம்ப தோழர்களுக்கு பத்து ரூபா சலுகை »  என இராசேந்திர சோழன் எழுதுகிறபோது, சோரம் போகாத எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் எக்காலத்திலும் தோன்றுவார்கள் என்ற  நம்பிக்கையை அளிக்கிறார்.

 

விசுவாசம் :

 

தெரு  நாய் ஒன்றின் விசுவாசம் பங்களா நாயாக மாறியதும் இடம் மாறும் அழகு மிக  நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள து. தெரு  நாய்தான் கதை நாயகன் அல்லது கதை நாய்கன். நாய், குரைப்பு, அதனை அறிந்த மனிதர்கள்  என்று மூன்று தரப்பினருக்கிடையே நிகழும் சம்பவக் கோர்வை ஆழமான சமூக பார்வையுடன் கதையாகச் சொல்லப்படுகிறது.  இராசேந்திர சூழன் படைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள், சிறுகதை எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் கட்டாயம் படித்துப் பார்க்கவேண்டிய கதை.

 

இராசேந்திர சோழனின்  நெடுங்கதைகள்

 

தமிழினி வெளியீடான இராசேந்திரசோழன் குறுநாவல்கள்  என்ற தொகுப்பில்  இடம்பெற்றுள்ள சில கதைகளை இங்கே குறிப்பிடவேண்டும்.  அவற்றில் மூன்றினை எழுத்தாளுமைக்கு, வெவ்வேறுவகையில் படைப்பை எழுத்தாளர் அணுகும் முறைமைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.

 

அ. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்

 

‘முச்சந்தி இலக்கிய பாணி’யில்  எழுதப்பட்ட நெடுங்கதை. சமகால எழுத்தாளர் ஒருவரை அல்லது ஒட்டுமொத்தமாக பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்திருக்கிறார் எனலாம். பரதேசி எழுத்தாள்ரின் பிரம்மச்சர்ய வாழ்க்கையை முடித்துவைத்த திருமணம், இல்லறத்தில் இணைந்துகொண்ட புதுமனையுடனான ஊடல், தாம்பத்ய கடமைகள், திருவிருக்கையில் சாய்ந்து கைகளைதலைக்கு மேலே தூக்கிப்போட்டு பின்னிய கோலத்தில் கதையைத் தேடும் முயற்சிகள் நக்கல் மொழியில் இராசேந்திர சோழன் என்ற எழுத்தாளரின் இன்னொரு பரிமாணத்தை த் தெரிவிக்கின்றன.

எழுத்தாளர் பரதேசியாரைப்போல எழுத்துவாழ்க்கையை அமைத்துக் கொண்ட பரிதாப எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். இராசேந்திர சோழன் சொல்வது போல ‘மனம் லயிக்காமல், உணர்வு ஒன்றாமல், ஏதோ கடமைக்கு  என்று எழுதி, எழுத்தும் இலக்கியமாகாமல், மனசுக்கும் திருப்தியில்லாமல்’ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் ‘எழுதாமல் இருப்பது உத்தம ம்’  என்று முடிவெடுப்பின் படைப்புலகிற்கு நல்லதுதான்.

 

ஆ. 21 வது அம்சம்

 

எழுபதுகளின் மத்தியில் அமலான நெருக்கடி  நிலையையும், அப்போதைய மத்திய அரசின் இருபது அம்சத் திட்டங்களையும்  பரிகசிக்கும் கதை. இக்கதை பிரச்சினையுள்ள காலத்தில் வெளிவரவில்லை என்று தெரிகிறது. வந்திருந்தால் எழுதியவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும். சுப்பராயன் என்ற ஏழை குடியானவனுக்கு கரம்பாக க் கிடக்கும் நிலங்களை உழுது பயிரிட கடனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முனைப்புடன் ஆசிரியர் பணியிலிருக்கும் ராமச்சந்திரன் என்பவர் எடுக்கும் முயற்சிகளையும், அவருடன் சுப்பராயனும் அவன் தகப்பனும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கி படும் துயரங்களையும் ஆசிரியர் சொந்த அனுபவம்போல சித்தரிக்கிறார். இப்பிரச்சினைக்கிடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குறியீட்டை எட்ட அறுவைச் சிகிச்சைக்கு ஆட்களைப் பிடிக்க  ஆசிரியர்கள் பட்ட வேதனைகளையும் பார்க்கிறோம். வாசக்டமி என் கிற ஆண்களுக்கான அறுவைச் சிகிச்சைக்குக் கிழம் கட்டைகளையெல்லாம் ஏமாற்றி அறுவைச் சிகிச்சை செய்த  கதைகள் ஏராளம்.

 

இ. சிறகுகள் முளைத்து :

அக்காள், அம்மாள் என பாஸ்கரன் என்ற இளைஞனுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் இருவரும் அவர்கள் சேர்ந்த சமூகம் எதிர்பார்க்கிற அல்லது விதித்திருக்கிற  நெறிமுறைகளை மீறுகிறார்கள். சாம்பசிவம் வாத்தியார் என்ற பிம்பம் அவன் கண்முன்னே வெடித்துச் சிதறுகிறது. இம் மெய் நிகழ்வினை ஏற்றுக்கொள்ள திரானியின்றி மனதில் ரணத்துடன்  நாட்களைக் கழிக்கிற இளைஞன் வாழ்க்கையில், ஆறுதலாக இளம்பெண் ஒருத்தி குறுக்கிடுகிறாள். இவனும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து காதல் வயப்படுகிறான். ஊடலின் உச்சம் காதலர்களுக்கிடையே பிரிவினையை எழுப்புகிறது. அழுதகண்ணீரும், சிந்திய மூக்கும் என்கிற வாய்ப்பாடுகளை மறந்து, எளிமையான மொழியில் சொல்லப்பட்டநேர்த்தியான கதை.

 

இராசேந்திரன் சோழன் என்கிற படைப்பு பிரம்மனை உறுதி செய்யும் நெடுங்கதை. இவரது படைப்புக்கே உரிய அடிதட்டுமக்கள், அதனை உறுதி செய்து காட்சிகள். தொண்டைமண்டலப் பகுதிக்குரிய நாட்டார் வழக்குச் சொற்கள், வெள்ளந்தியான உரையாடல்கள் என  கதையின் தடிப்பையும் பொருண்மையின் வரைபடத்தையும் எழுத நமக்கு வார்த்தைகள் போதா. மேட்டுக்குடியினர் அபிநயகூத்தாக அமைத்துக்கொள்ளும் பொய்யான வாழ்க்கை முறை, அடித்தட்டு மக்களின் வயிற்றுக்கும் வாழ்விற்கும் விடையாக அமைந்து, திக்கின்றி கூனிக்குறுகி எதார்த்த த்தோடு இணங்கிப்போகும் அவலம் பச்சையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஓர் சமூக பிரக்ஞையுள்ள எழுத்தாளன் என்று அவருக்குப் படைப்பிலக்கியம் பரிவட்டம் கட்டுகிறது, இக்கதைகொண்டு.   பாஸ்கரன் என்ற புள்ளியைச் சுற்றி வட்டமிடும் மாக்கோலம் அழகு.  அவன் அக்காள், தாய் ரஞ்சிதம், தேவானை, வடிவேலு, மல்லிகா, சங்கரலிங்கம், ஏன் மரவள்ளிக்கிழக்கு ஆயா உட்பட  சமூகத்தின் பரிதாபத்திற்குரிய உயிர்களைக்கொண்டு, இரத்தமும் சதையுமாக படைக்கபட்ட கதை.

 

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடையாளப்படுத்த சொல்வண்ணம்கொண்டும் தீட்டும் ஒவியங்கள் ஒன்றா இரண்டா ?

 

« குளித்து முடித்து தலை பின்னிகொள்ள உட்காரும்போது அவள் முகத்தில் படிந்திருந்த கலவரம், ரசம் போன ஓட்டைக் கண்ணாடியில் வெளிறித் தோன்றியது »

 

« அவன் உள்ளே நுழைந்தான், வீடு சின்ன வீடு. கொஞ்சம் வேகமாக ஓடிவந்தால் தாண்டி விடுகிற அகலம். அதைப்போல ஒண்னரை மடங்கு நீளம். சுற்றிலும் இடுப்புயரம் சரிந்து மெலிந்த மண் சுவருக்குமேலே மக்கிய கீற்றுவரிசைகள். ஓரத்தில் நைந்துபோன கயிற்றுக் கட்டில். மேலே அழுக்கடைந்த கோரைப்பாய். எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய உறையில்லாத தலையணையுடன் கீழே ஒரு முக்காலி. சுவர் நீளத்துக்கு இழுத்துக் கட்டிய தேங்காய் நாரினால் தரித்த ஒரு கொடிக்கயிறு. மடித்துப்போட்ட அழுக்குச் சேலைகளும், கழற்றிப்போட்ட ரவிக்கைகளும்…மூலையில் ஓர் அடுப்பு »

 

« பிசுபிசுப்பு ஏறிய கரிய பெஞ்சுகளில் ஈக்கள் மொய்த்தன. மேசைமேல் யாரோ குடித்துவைத்துவிட்டுப் போன கிளாஸ் ஒன்றில் ஈ ஒன்று விழுந்து இறந்து போயிருந்த து. கடைப்பையன் வந்துகிளாசுகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் அழுக்கடைந்து வெள்ளையாய் தெரிந்த நீரில் அப்படியே போட்டுக் கழுவிக்கொண்டிருந்தான். வெற்றுடம்பில் வியர்வை வழிய புழுக்கமும் கசகசப்பும் நிறைந்த இத்தில் நின்று மாஸ்டர் டீ போட்டுக்கொண்டிருந்தான். »

 

எளிய மக்களின் வெள்ளந்தியான உரையாடல்களும், மல்லிகா, பாஸ்கரன் என்ற மனித உயிர்களுக்கிடையேயான பாலின ஈர்ப்பு பரிபாஷைகளும் ஆசிரியர் குரலாக ஆங்காங்கே ஒலிக்கிற வரிகளும் முக்கியமானவை :

 

« … மனுஷன வாழ வக்யறதே இந்தக் கவலைதான்… அதுதான் மனுஷன் வாழறதுக்கேத் தூண்டுது.  என்னா. யாரபத்தியும் எதப்பத்தியும் கவலைப்படாதவன் எதுக்குப் பயப்படுவான் சொல்லு… ஒண்ணுத்துக்கும் உதவமாட்டான்… அதனால்தான் சொல்றது ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதாவது ஒரு கவல அவசியம் இருக்கணம்… என்னா… »

 

« இந்த சிஸ்ட்டத்துல வாழர ஒவ்வொரு மனுஷனும் …உழைப்பை மட்டுமா விக்றான்  கருத்தை விக்றான்… மனசாட்சிய விக்றான்… தன்மானத்த விக்கிறான்… தன்னையே விக்றான். எல்லாரும் விரும்பியா விக்றான்… அவனவனும் தன் தேவையை முன்னிட்டுதான் விக்கிறான் … இப்படி நாட்டுல எத்தனை விபச்சாரங்கள் »

 

கதை மக்களுக்காக :

 

படைப்பாளியின் குடும்பம் மற்றும் சமூகச் சூழல், கல்வி, அக்கல்வியைக்கொண்டு அவர் வளர்த்துக்கொண்ட சிந்தனை, அலுவலகம், அவர் தெரிவு செய்த  நண்பர்கள், வாசித்த நூல்கள் அனைத்திற்கும் படைப்பை உருவாக்கியதில் பங்கிருக்கின்றன. ஒரு பக்கம் அதிகாரம் அ நீதி, அறசீற்றம் என வெகுண்டெழும் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை என்ற ‘ யாக அவிற்பாகத்திற்கு’  வரிசையில்  நிற்பதை காண்கிறோம். இராசேந்திர சோழனின் சிறுகதைகள் ஆகட்டும், நெடுங்கதைகள் ஆகட்டும் இரண்டுமே அவரை சமூக உணர்வுள்ள மனிதராக, சகமனிதன் கரையேற கைகொடுக்கும் மனிதராகச் அடையாளப்படுத்துகின்றன.  இவர் படைப்புகள் கலைக்கானவை என்பதோடு மக்களுக்காகவும் என்ற என்ண்ணத்துடன் படைக்கபட்டுள்ளன.

அண்மையில் (2018 பிப்ரவரி மாதத்தில்) மூன்றாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, பேராசிரியர் க. பாஞ்சாங்கம், தமிழ்மணி, நாயகர், செல்வபெருமாள் என நாங்கள்  ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள். எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.

அறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும் எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும். நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமிழ் எழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார். மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தைப் பகிர்ந்து கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும், நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம். இக்கட்டுரைரயை எழுதிக்கொண்டிருக்கிறபோதும், அக்காட்சி நெஞ்சத்திரையில் நிழலாடுகிறது.

 

————————————————————————

 

உதவியவை :

  1. http://www.sirukathaigal.com
  2. இராசேந்திர சோழன் குறு நாவல்கள், தமிழினி , சென்னை 14

—————————————————

 

படித்ததும் சுவைத்ததும் -9: கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்

கோபல்ல கிராமம்– கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்

அண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். சென்னை புழல் சிறையைக் காட்டிலும் , பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் தரும் புலம் பெயர் வலி கொடியது. இன்றைக்கல்ல, என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து வெகு ஜோராக புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது.

 

நடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள். இது தேவை தரும் நெருக்கடியால் ஏற்படும் புலப்பெயர்வு. இப்புலப்பெயர்வு போகும் தூரத்தையும், சேரும் இடத்தையும் தீர்மானிக்க கால அவகாசத்தை இவர்களுக்குத் தருகிறது.

 

கோபல்ல கிராம மாந்தர்களின் நெருக்கடி :

 

நவீன யுகத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதற்கு, பிறந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்படுவதற்கு வேறு மாதிரியான நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மான மாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நிகழலாம், எங்கேயும் நிகழலாம் என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்கள். இந்த இரண்டாம் வகைப் புலம்பெயர்தலும் அதற்கான நிர்ப்பந்தமும் ‘கொடிது கொடிது’ வகையறா.

 

வடக்கே தெலுங்கு தேசத்தில் அமைதியாகவும் செல்வாக்குடனும் வாழ்க்கையை நடத்திய மக்களின் வாழ்வில் சூராவளிபோல வீசிய நெருக்கடி, கள்ளம் கபடமற்ற ” கம்மவர், ரெட்டியார் , கம்பளத்தார், செட்டியார், பிராமணர் , செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர்….இப்படி எத்தனையோ மக்களை ” (பக்கம் 36, கோபல்ல கிராமம்) வேருடன் பெயர்த்து தெற்கே வீசிவிடுகிறது. « இவர்கள் இங்கு புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ. தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள். முஸ்லீம் ரஜாக்களுக்கு பயந்துகொண்டு வந்தவர்கள் »  என கோபல்ல கிராமத்திற்கு ஆசிரியர் கோடிட்டுக்காட்டுவது இரண்டாவது காரணம்.

« கும்பினியான் எந்த இடத்திலும் நம்முடையப் பெண்டுகளைத் தூக்கிக்கொண்டு போனதாகவோ , பிடித்து பலாத்காரமாகக் கற்பழித்ததாகவோ அவர்களுக்குச் செய்திகள் இல்லை. இந்த ஒரு காரனத்துக்காகவே அவர்களுக்குக் கும்பினியான் உயர்ந்து தோன்றினான் ! » (பக்கம் 135, கோபல்ல கிராமம்) என்கிற ஒப்பீடு புலப்பெயர்ந்த மக்களின் ஆறாமனப் புண்ணிற்குப்  பூசும் களிம்பு.

 

கோபல்ல கிராமம் பிறந்த காரணத்தை சென்னாதேவி என்ற பெயரும் பெயருக்குடையவளும் தருகிறார்கள். நாம் பார்த்திராத அந்த புவியுலக அப்ஸ்ரஸை கி.ரா எனும் விஸ்வ கர்மா வார்த்தைகளால் பிசைந்து கண்முன்னே நிறுத்துகிறார் :

« சென்னா தேவி இருக்குமிடத்தில் அவளுக்கு அருகே அவளைச் சுற்றி ஒரு பிரகாசம் குடிகொண்டிருக்கும், அவள் நிறை பௌர்ணமி அன்று பிறந்த தினாலோ என்னமோ அப்படியொரு சோபை அவளுடைய முகத்தில் »

«  அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய் ! அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனமாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். கொடிகள் ஆடாமல் நிற்கும். பூமியில் நம்முடைய பாரம் லேசாகி அப்படியே கொஞ்சமாக மேலே கிளம்பி காற்றில் மிதப்பது போல் ஆகிவிடும். பெருங்குளத்தின் நிறை தண்ணீரைப்போல ஆனந்தம் தாங்காமல் தத்தளிக்கும் நம்மனசு »

«அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படி சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பில்தான் எத்தனைவிதம் !

கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும் !

கடைகண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையைப் பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு- ஒரு சிரிப்புக் காட்டுவாள் ( அப்போது கண்கள் ஜொலிக்கும்) சிலசமயம் சற்றே மூக்கைமட்டும் விரித்து மூக்கிலும் சிரிப்பை வரவழைப்பாள் !

உதடுகள் புன்னகைக்கும்போது வாயின் அழகு பல மடங்கு அதிகமாகிவிடும்  சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும்போதுஅவைகள் இளஞ்சிவப்பின் எல்லையைத்தாண்டி குருவி இரத்தம் போல செஞ்சிவப்பாகிவிடும்.

அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான் ! புல்லாக்கில் அப்படியொரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஓர் ஆசாரிக்குத் தோணியிருக்கே. அது எப்பேர்பட்ட ரசனை !! (பக்கம் 31,32 கோபல்ல கிராமம்) »

ஆசாரியின் ரசனையைபற்றி கி.ரா சிலாகிப்பதிருக்கட்டும், நமக்கு கிரா.வின் ரசனைதான் இங்கு முக்கியம். இப்பகுதியை வாசித்தபின் நமக்கே சென்னாதேவி மேல் ஓர் ‘இது’ வந்துவிடுகிற நிலையில் துலுக்க ராஜாவைக்குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. கேள்வி ஞானத்தினாலேயே பெண்ணை அடைய நினைக்கிறான். துலுக்க ராஜாவின் ஆட்களில் ஒருவன் பெண்ணை உள்ளது உள்ளபடியே வர்ணிக்கப்போதுமான சொல்ல்லாற்றலைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது ‘ கோபல்ல கிரமத்தின்’ பிரதியில் ஒன்றை கொண்டுபோய் கொடுத்திருக்கவேண்டும். (பெண்களை வர்ணிக்கவே அவரிடம் பாடம் எடுத்துக்கொள்ள ஆசை, கதை எழுதத்தான் நண்பர்கள் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது)

சென்னாதேவியின் முடிவு மட்டுமல்ல அவளைச் சேர்ந்தவர்களின் முடிவுங்கூட மாணிக்கமாலை வடிவத்தில் வந்தது. பெண்ணுக்கு மாணிக்க மாலை செய்து போட்டுப்பார்க்க நினைத்த பெற்றோர்கள் வீட்டிலுள்ள கெம்புக் கற்களை விலைபேச ரத்தின வியாபாரிகளை அழைக்கிறார்கள். வந்தவர்கள் ரத்தினவியாபாரிகள் அல்ல துலுக்க ராஜாவின் ஆட்கள். பெண்ணின் அழகைத் தங்கள் ஆட்கள் மூலமாக அறிந்த ராஜா அவளை அடைய முயன்றதில் ஆச்சரியமில்லை. அவனிடமிருந்து தப்பிக்க அதிலும் வெட்டிய பசுமாட்டின் தலை சமையலுக்கென காத்திருக்க, அலறி அடித்துக்கொண்டு சொந்த மண்ணிலிருந்து புறப்படவேண்டியிருக்கிறது. பயணம் அவ்வளவு எளிதானதல்ல. ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு அனுபவத்தை, நல்லதங்காள் கதையைப் போல நச்சென்று சுருக்கி கிரா  :

«  நடந்து நடந்து கால்கள் வீங்கி பொத்து வெடித்து வடிந்து புண்களால் அவதிப்பட்டோம். எங்களோடு வந்த இரண்டு குழந்தைகளும் மூணு வயசாளிகளும் நோய்ப்பட்டு தவறிப்போய்விட்டார்கள். அவர்கள் இறந்துபோன துக்கம், மேலும் பலர் நோய் அடைந்த கஷ்டம்….

அனுபவித்திராதப் பட்டினி, காலம் தாழ்ந்து கிடைக்கும் அன்னம், உடம்பு அசதி, மனத்தின் சோர்வு , கூட வருவோரிடம் காரணமற்ற மனக்கசப்பு, மௌனம், குறைகூறல் இப்படியெல்லாம் துன்பப்பட்டோம் . » (பக்கம் 59, கோபல்ல கிராமம்), என்கிறார்.

கல்விக்காகவும், பொருளுக்காகவும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மற்றொரு மாநிலத்திற்கு, மற்றொரு நாட்டிற்கு, மற்றொரு கண்டத்திற்கு விரும்பியே அதாவது போகின்ற இடம் எதுவென்று அறிந்தே புலம்பெயர்கிறவர்கள் ஒருவகை. மொழி, இனம், மதத்தின் அடிப்படையில்; சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட; இன்னதிசை, இன்ன நாடு, இன்னகண்டம் என்று அறியாமல் புலம்பெயர்கிறவர்கள் , இரண்டாவது வகை. கோபல்ல கிராமத்தின் பூர்வீக க் குடியினர் இரண்டாவது வகையினர். எந்த சென்னாதேவிக்காக புலம்பெயர்ந்தார்களோ, அந்தச் சென்னாதேவியை வழியிலேயே இழக்கிறார்கள். புலம் பெயர்தல் இழப்புகளின் கோர்ப்பு

 

புலம்பெயர்தலின் வலியும் வாழ்வும் :

இக்கட்டுரையின் முற்பகுதியில் இருவகை புலப்பெயர்வைக் குறிப்பிட்டிருந்தேன். பழமரத்தைத் தேடும் பட்சிகளுக்கு பிரச்சினையில்லை, குறிக்கோளில் தெளிவிருப்பதால் அதற்குரிய மரங்களை அடைவதில் அலைச்சல் சில வேளைகளில் கூடுதலாக இருப்பினும், பயனடைவது உறுதி. இளைப்பார மரம் கிடைத்தால்போதும், பசியாற கனிகள் வேண்டுமென்பது அடுத்தக்கட்டம் என பறந்தலையும் பட்சிகளின் அனுபவம் சிக்கல்கள் நிறைந்தவை.

« நாங்கள் இதுவரை பார்த்திராத மரங்கள், செடிகொடிகளையெல்லாம் பார்த்தோம். எத்தனை மாதிரியான அதிசயப்பூக்கள், வாசனைகள் ! மனிதர்களின் ஜாடைகூட மண்ணுக்கு மண் வித்தியாசப்படும் போலிருக்கிறது. » ( பக்கம் 59 கோபல்ல கிராமம் )

புதிய பூமி, புதிய மனிதர்கள், புதிய இயற்கை என அதிசயித்த மறுகணம் புதியச் சூழலோடு தம்மைப் பொருத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டும். மலேசியநாட்டிற்குச் சென்ற தமிழர்கள், மொரீஷியஸ் தீவுக்குச் சென்ற தமிழர்கள் என்ன செய்தார்களோ அதைப்போலவே சென்ற இடங்களில் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணி கலங்கிடாமல், அரவணைத்த  பூமியைத் திருத்துகிறார்கள், உழுகிறார்கள், கிணறுவெட்டுகிறார்கள், வெள்ளாமை செய்து ஓய்ந்த நேரங்களில் பிறந்த மண்ணை நினைத்து அழவும் செய்கிறார்கள்.

« மழைக்காலங்களில் கொஞ்சம் நிலங்க்களை ஆக்கித் திருத்தலாம் என்றால் அது அவ்வளவு லேசில் முடியாது போலிருந்த து. அவர்கள் சோர்ந்துபோனார்கள் . கள்ளிச்செடிகளை தரையோடு தோண்டி வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெரிய வேண்டியிருந்தது. தோண்டும்போது பெயறும் பாறைக்கற்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது . பெரிய்ய கற்கள் பெயர்ந்த இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சமப்படுத்த வேண்டும்.  »(பக்கம் 78 கோபல்ல கிராமம்)

« சிற்றெறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்கள்….அவர்கள் முதலில் நினைத்ததுபோல் அவ்வளவு சுலபமாகவும், அவ்வளவு சீக்கிரமாகவும் அந்தப்பரப்பு பூராவையும் நிலமாக்கிட முடியவில்லை. பூமியிலுள்ள கற்பாறைகள் இவைதவிர மண்ணுக்குக் கீழே எரியமுடியாமக்ல் நின்றுபோன மரங்களின் கனமான வேர்கள் இவைகளெல்லாம் அவர்களுடைய வேலைகளுக்குத் தடங்கலாக இருந்தது. பரப்பு அவ்வளவு நல்ல நிலங்களாய் ஆகப் பல வருடங்கள் பிடித்தன. » (பக்கம் 88 கோபல்ல கிராமம்)

புலம் பெயருதல் என்பது புதிய பூமிக்கு வாழ்க்கைப்படல். பெண்ணாய் பிறந்தவளுக்குப் பிறந்தவீடு முக்கியமல்ல புகுந்தவீடுதான் முக்கியம் என்பார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் சொல்லப் படுவது அதுதான். நாள்முழுக்க புகுந்த வீட்டிற்கு உழைத்து அந்தி சாய்ந்ததும் பிறந்த வீட்டின் நினைப்பில் வாடுகிற பெண்ணின் கதைதான் புலம்பெயர்ந்தவர் வாழ்வு. பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி இயங்கவும், பின்னர் இணையவும் சாத்தியத்தினை அளிக்கவல்ல, மனித உயிர்களுக்கு இடையேயான பிரிவுகள் அவை. ஆட்டை வளர்த்தேன், கோழியை வளர்த்தேன், என ஐந்தறிவு விலங்கிடம் செலுத்தும் அன்பிற்கு நேரும் இழப்பினைக்கூட காலம் நேர்செய்துவிடும். ஆனால் மண்ணைப் பிரிவதென்பது, உயிர் மெய்யைப் பிரிவதற்கு சமம். மெய்யைத் திரும்பவும் பெறுவதற்கான முயற்சியில் உயிர்தான் இறங்கவேண்டும்.

கறந்த பால் முலைக்குத் திரும்புமா? திரும்பவேண்டுமே என்பதுதான் நமது கனவு. பொழுதுசாய்ந்தால், சொந்தகூட்டுக்குத் திரும்பலாமென்கிற உடனடி நம்பிக்கைக்கானது அல்ல புலம் பெயர்தல், என்றேனும் ஒரு நாள் திரும்பலாமென்கிற தொலைதூர நம்பிக்கைக்கானது. பூமி உருண்டை என்பது உண்மையென்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்த்தானே சேரவேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்த கனவினை நுகர்ந்தவாறே, புலம்பெயர்ந்தவன், நினைவுப்பொதிகளை சுமந்தபடி தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கைத் தடத்தில் நடக்கவேண்டியிருக்கிறது., வேதனைகளும் வலிகளும் அதிகம், இறக்கிவைக்க  சுமைதாங்கிகளுக்குத்தான் பஞ்சம். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணே புலம் பெயர்ந்தவனின் முதல்வீடு-தாய்வீடு: கண் திறந்தபோது காத்திருந்த வீடு. தாலாட்டு கேட்டு உறங்கிய வீடு. உதிர உறவுகள் உலவிய வீடு. வளையும் மெட்டியும் வாய்திறந்து பேசிய வீடு. காதல் மனையாள் நாவின் துணையின்றி பார்வையும் பாங்குமாய் குசலம் விசாரித்த வீடு, வெட்கச் செம்மையும், சிறுபதட்டமும் கொண்டு அவள் சிணுங்கிய வீடு, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்கண்ட வீடு. தன் ஆயுளில் குறைந்தது, கால்நூற்றாண்டை கண்ட ஆரம்பகால வீட்டை மறக்க அவனென்ன உணர்வற்ற உயிரா ?

« இந்த நீண்ட வேடுவ வாழ்க்கையில் அனைவருமே சந்தோஷம்கொண்டு திருப்தி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் தங்கள் பிறந்த மண்ணை நினைத்து நினைத்து ஏங்க ஆரம்பித்தார்கள். அப்படி ஏக்கம் கொண்டு வாடியவர்களில் முக்கியமாகப் போத்தணாவைசொல்லலாம். திடீரென்று குழந்தைபோல அழுவார். »( பக்கம் 83 கோ.கி) எனப் புலம்பெயர்ந்தவனின் துயர வாழ்க்கையை உரைக்கப் போத்தண்ணாவை முன் நிறுத்துகிறார் கிரா. எனினும் அவரே பின்னர், «எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து ஒரு தேசத்தில் வந்து வாழவேண்டியிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்கவேண்டாம் எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம்தான் »(பக்கம் 75 கோ.கி) . எனக்கூறி சமாதானப்படுத்துகிறார். என்ன செய்வது வாழ்க்கைப் பிணிகளுக்குப் பலநேரங்களில் அருமருந்தாக இருப்பது  இந்தச் சமாதனம் தான்.

புலம்பெயர்வதற்குரியக் காரணம் எதுவாக இருப்பினும், புலம் பெயர் மக்கள் நன்றிக் கடனாக, பெறும் வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக பிறந்த மண்ணின் கலையையும் பண்பாட்டையும் புதியபூமியில் விதைக்கிறார்கள்;  உழைப்பையும், ஞானத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களால் அடைக்கலம் தரும் நாடுகள் அடையும் பலன்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணத்திற்குப் பிரான்சு நாட்டிற்கு, பிரெஞ்சு மொழிக்குப் பெருமைசேர்த்த அந்நியர்கள் அனேகர். அந்த வரிசையில் தமிழ்நாடும் தமிழ்மொழியும் இந்தக் கரிசல்காட்டுக் கதைசொல்லிக்கு ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர் வாழ்க்கையை வேடுவ வாழ்க்கையெனச் சொல்லக்கூடிய ஞானம் வேறு எவருக்கு உண்டு.

படித்ததும் சுவைத்ததும்- 8: பாவண்ணன் ஓர் எழுத்துப்போராளி

பாவண்ணன் ஒர் எழுத்துப்போராளி

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

 

———————————————————————————-

 

பெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

 

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016

படித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்

கதை மனிதர்கள்’ – பேராசிரியர் கா. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  –

பேராசிரியர்  க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம்.

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல என்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

அக்கா (நாவல்)

ஆசிரியர் : கா. பஞ்சாங்கம்

வெளியீடு:

அகரம்

மனை என்1 நிர்மலா நகர்

தஞ்சாவூர் 613007

தமிழ்நாடு

 

 

 

 

 

 

காஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்

ஜே. அசோக்குமாரின் சிறுகதைகளை வாசித்திருக்கிறே,ன். நான் விரும்பும் நம்பிக்கைக்குறிய இளைய தலைமுறை எழுத்தாளர். இதுவைரை சந்தித்ததில்லை. இருவாரங்களுக்குமுன்பு நிகழ்ச்சிகுறித்து தெர்வித்தார். இன்ப அதிர்ச்சி. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். ஜே. அசோக்குமாருக்கும், அவருடைய தஞ்சைக்கூடல் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமற்போனது வருத்தமே. ஒருமுறை நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.