Category Archives: Uncategorized

முனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்து

panchu
பேராசிரியர் பஞ்சு இடதுசாரி சிந்தனையாளர், மொழி அறிஞர், திறனாய்வாளர், நவீனப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டவர், பெண்ணியவாதி என்றெல்லாம் அறியப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் தலித் இலக்கிய ஆதரவாளராகவும் இருப்பதில் வியப்புகளில்லை. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே என்று தமது படைப்புகளைக்கொண்டும்(1), உரைகளிலும், தமது தலித் ஆதரவு நிலையை தொடர்ந்து உறுதி செய்துவருபவர்.
தமிழ்ச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் கடந்த காலத்தினும் பார்க்க இன்றைக்குக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பங்களிப்பை மறுக்கவியலாதென்றாலும், அவர்கள் இன்றியும் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும். பேராசிரியர் கட்டுரைகளிலேயே அதற்கான விடைகள் உள்ளன. மனிதர்களைக் காட்டிலும் நீதியை எண்பிக்க, ‘காலம்’ ஒருபோதும் தவறியதில்லை எனினும் அதற்கு நாம் காத்திருக்கவேண்டும். எப்போது அதனைச்செய்யும் இன்றா நாளையா, அடுத்த தேர்தலிலா? நூறு வருடங்கள் கழித்தா? நமக்குத் தெரியாது என்பது அதிலுள்ள சிக்கல். அதுவரை? ஒடுக்கப்பட்டவர்களின் கதியென்ன? பள்ளிகூடத்தைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதால் மழைக்கு அங்கு ஒதுங்கிக்கொள்ளலாமா? பொறுமையுடன் சகித்துக்கொண்டு அல்லது மைக் கிடைத்ததென்று படபடவென்று பொறிந்துதள்ளி கண்ணைக் கசக்கி மீடியாவில் இடம்பிடித்ததால் தீர்வு கிடைத்துவிடுமா? பிறவிடயங்களைப்போலவே இப்பிரச்சினையிலும் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கிறது. அது, பொதுவில் பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் முயற்சியில் விமோசனத்திற்கு வழிகாணவேண்டுமென்கிற உண்மை. மீட்பதற்கு ‘மெசியா (Messiah) என்றொருவர் வரமாட்டார் என்ற உண்மை. இன்னொரு அய்யோத்தி தாசரோ பெரியாரோ, அம்பேத்கரோ, உடனடியாக வருவார்களென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்ற உண்மை. ஏழேன் பொத்தியே (Eugène Pottier) என்றொரு பிரெஞ்சுக் கவிஞர் பாடிய புரட்சி பாடல்வரிகள்தான் இந் நேரத்தில் நினைவுக்கு வருகிறது:

மகா இரட்சகரென்று எவருமில்லை
கடவுளில்லை, சீசரில்லை,
மனிதர் உரிமையைக் காட்டிக்காக்கும்
ரொமானியர்களின் ட்ரிப்யூனும் இன்றில்லை
உற்பத்தியாளர்களே, நம்மை நாமே
காப்பாற்றிக்கொள்வோம்! (1)
இங்கே கவிஞர் உற்பத்தியாளர்கள் என்றழைப்பது முதலாளிகளை அல்ல, தங்கள் உழைப்பை நல்கி உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் தொழிலாளர்களை. உழைக்கும் வர்க்கம் புத்தி தெளிந்தாலன்றி விமோசனமில்லை என்கிறார் கவிஞர்.
ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவர்க்கும் பாடல் பொருந்தும். இந்தியாவை பொறுத்தவரை வெகுகாலமாகவே இங்கே வர்க்கபேதம் பற்றிய புரிந்துதுணர்வை சாக அடிப்பதே சாதிய வெறிதான். ஓரிடத்தின் சமூகம், பூகோளம், பண்பாடு, தனி மனிதனின் அபிலாஷைகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாத மார்க்ஸியமும் இதற்குப் பெரிதும் உதவமுடியாது. இந்தப்பின்னணியில்தான் இந்தியாவில் தலித் அரசியல், தலித் இலக்கியம் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்
க. பஞ்சாங்கம் தலித் சமூகத்திற்கு எதிரான அவலங்கள், தலித் இலக்கியம் இரண்டையுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஓடி ஒளிதலோ, மழுப்பலோ இன்றி மனதிற்கு நேர்மையாகத் தோன்றுபவற்றைச் சொல்வதில் வழக்கம்போல தெளிவும் துணிவும் இருக்கின்றன. ‘தலித்’ சமூகத்தை முன்வைத்து கட்சி அரசியல், இலக்கிய அரசியல் இரண்டையும் பேசுகிறார். இரண்டிலுமே விடியல் என்பது முற்றாக அச்சமுதாயமக்களைச் சார்ந்தது என்பதை நம்பும் க.பஞ்சு, அச்சமூகத்திற்கு தலித் ஆதரவாளர்களின் பங்களிப்பும் அவசியமானதுதான் என்பதைத் தெரிவிக்கும் பஞ்சு, அதனைத் தலித் அல்லாத பிறமக்களின் கண்ணோட்டத்துடன் எடைபோட்டுப் பார்க்கிறார்.
‘தலித்’ என்ற சொல்லை தலித் அல்லாதவர்கள் பயன்படுத்துகிறபோது பொதுவில் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. தலித் ஆதரவாளர்கள் அனைவருமே பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப் போன்றவர்கள் அல்ல. இங்கு தலித் ஆதரவாளர் எனப் பிரகடனபடுத்திக்கொண்டு அரசியல், இலக்கியம் போன்றவற்றில் ஒரு பாசாங்கு அரக்கு மாளிகையை எழுப்புபவர்கள் அநேகம். நூறு குறைகள் இருந்தாலும், புல்லுக்கும் நீர்பாய்ச்சுபவர்களாக இருப்பினும், தலித் மக்களுக்கு நம்பகமானவர்களாக தலித் தலைவர்களே இருக்க முடியும். அதுபோலவே பூரணமானதொரு தலித் இலக்கியத்தைத் தலித் அல்லாதார் படைத்துவிடமுடியாது. தலித்திற்கு ஆதரவாக இருப்பதுபோல தலித் தலைவர்கள் அல்லாத கட்சிகளும் காட்டிக்கொள்கின்றன. இடது சாரி கட்சிகளைத் தவிர்த்து பிறவற்றை இவ்விடயத்தில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கட்சி சார்ந்த தலித் அரசியலை மறந்துவிட்டு, இலக்கிய அரசியலில் தலித்’ என்ற சொல்லின் நிலமைஎன்ன? அதன் ஆகிருதி என்ன, வீச்சு என்ன? நிகழ்த்தும் விளையாட்டுகள் என்ன? தன் இருத்தலை ஆழமாக வேரூன்றிக்கொள்ள போதுமான அடியுரம் அதற்குண்டா? பிறர் ஆதரவு அவசியமா என்பதை இனி பேராசிரியர் எழுத்துக்கொண்டே பரிசீலிக்கலாம்.
1. தலித் இலக்கியத்தில் ஆதரவாளர்களின் பங்கு
இக்கட்டுரை முழுக்க முழுக்க தலித் அல்லாத பிறர், தலித் இலக்கியவாதிகளுக்கு, தலித் எழுத்துக்களுக்கு உதவக்கூடிய யோசனையை வழங்குகிறது. ‘இது தலித் இலக்கியத்திற்கான காலம்’ என்ற முழக்கத்துடன் கட்டுரை தொடங்குகிறது. அதை நியாயப்படுத்த தலித் எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இலக்கியத்தில் முன்னெப்போதும் கண்டிராத வகையில் விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருப்பது முனைவர் க. பஞ்சுவினால் சுட்டப்படுகின்றன.
தலித் எழுத்து’ யார் எழுதுவது? என்ற கேள்வியும் ‘தலித் ஆதராவளர்’ செய்ய வேண்டியதும்.
தலித் எழுத்தை தலித்தாகப் பிறந்தவர்தான் எழுத வேண்டுமா? தலித் அல்லாத பிறர் எழுத முடியாதா என்ற கேள்வியைக்கேட்டு, அதற்குப் பதிலளிக்கின்ற வகையில் நீண்டதொரு விளக்கத்தைப் பஞ்சு தருகிறார். இங்குதான் ‘தலித் ஆதரவாளர்’ என்ற பதம் கட்டுரை ஆசிரியரின் உபயோகத்திற்கு வருகிறது.
“படைப்புத் தளத்தில் தலித் ஆதரவாளர்கள், தலித்தியத்திற்கு சார்பாக நின்று கவிதையோ, கதையோ, நாவலோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துக்கள் « தலித் ஆதரவாளர்களின் எழுத்துக்கள் அல்லது படைப்புகள »” என்ற தனித் தலைப்பின் கீழ் பகுக்கப்பட்டு தலித் இலக்கியத்திற்குப் பக்கபலமாக நின்றுதான் வினை புரிய முடியுமே ஒழிய தலித் இலக்கியமாகக் கருதிவிட முடியாது.” எனக்கூறும் பேராசிரியர், ” இலக்கியத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ‘நம்பகத் தன்மை’ இந்த ந்ம்பகத் தன்மையை தலித்தாகப்பிறந்து, வாழ்ந்து வளர்ந்த ஓர் உயிரிதான் சரியாகக் கட்டமைக்க முடியும்” எனக்கூறி தலித் இலக்கியத்தை யார் எழுதவேண்டுமென்ற விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறார்.
இந்த இடத்தில் எனக்கு அமெரிக்க வரலாறு நினைவுக்கு வந்தது. 17ம் நூற்ராண்டில் அடிமைகளாக வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களாக அடையாளம் பெற்றபோதும், ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்க மண்ணிற் குடியேறிய ஐரோப்பிய அமெரிக்கரோடு ஒப்பிடுகிறபோது வாழ்நிலை மெச்சத்தகுந்ததாக இல்லை. ஒரு மனித உயிரிக்குத் தரவேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு பலகாலம் துன்பத்தில் உழன்று, விரக்தியின் உச்சத்தில் புரட்சியில் குதித்தனர். அமெரிக்க வெள்ளை இனத்தவருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்தாகவேண்டும் என்ற சூழலில் அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் இசை, தங்கள் உள்ளக் குமுறலைப் பறையடித்து தெரிவிக்க விரும்பியர்களைப்போல Drums அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. ( ஆய்வு மாணவர்கள் கவனத்திகொள்ளவேண்டிய பொருள்) கையில் கிடைத்தவற்றையெல்லாம் (கரண்டி, தட்டு, எதையும் விடுவதில்லை) தட்டி ஓசையை எழுப்ப ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக பின்னாளில் ஜாஸ் இசை, இலக்கியம் எனத்தொட்டு அவர்களின் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்தனர்:
“The black folks make the cotton
And the white folks get the money.”
என்றெல்லாம் எழுதி, தங்கள் ஆறாத் துயரை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் எஜமானர்களாக இருந்து இவர்களை துன்புறுத்தி வேலைவாங்கிய வெள்ளை துரைமார்களில் ஒன்றிரண்டு நல்ல துரைமார்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களால் இவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? அதை பாதிக்கப்பட்ட கருப்பரின மக்களின் குரலாகக் எடுத்துக்கொள்ள முடியுமா? இசைக்கும் இலக்கியத்திற்கும் நேர்மையாக நடந்துகொண்டதாகப் பொருள்படுமா?ஆக, நண்பர் க. பஞ்சு கூறுவதுபோல தலித் இலக்கியத்தையும் ஒரு தலித் படைப்பதுதான் முறை, நியாயம். பேராசிரியர் கூறுகிற நம்பகத் தன்மைக்கும், இலக்கிய நேர்மைக்கும், அவை மட்டுமே உதவும்.
அ. வாசகர்கள்
தலித் ஆதரவாளர்கள் செய்யவேண்டியது தலித் இலக்கியத்திற்கு பக்கபலமாக நிற்பது. க.பஞ்சு தரும் யோசனை. வாசகர்களாக இருந்து, அப்படைப்புகளுக்கு முன்னுரிமைதருவது: “வாசகர் என்ற தளத்தில் தலித் ஆதரவாளர்கள் தலித் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பினை தலித் எழுத்துக்களை விலைக்கு வாங்கி விற்பனைக்குப் பக்க பலமாக நிற்க முடியும்” என்கிறார்.
ஆ. திறனாய்வாளர்கள்
“தலித் இலக்கியத்தினை ஒரு தலித்தாகப் பிறந்தவர்தான் படைக்கவேண்டும் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்ததுபோல தலித் இலக்கியத்தை மற்றொரு தலித்தே திறனாய்வு செய்யவேண்டும் என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை” – என க. பஞ்சு வருத்தப்படுவதில் முழுவதாக உடன்பாடில்லை. தலித் இலக்கியங்கள் ‘தலித்’ அடையாளம் என்கிற சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்தாதுலும், அவை தமிழ் இலக்கியத்தின் கிளைப் பிரிவை சேர்ந்தது. மாராத்திய தலித் இலக்கியமும், தமிழ்த் தலித் இலக்கியமும் வேறுபட்ட மொழியையும், வேறுபட்ட உரையாடலையும் நடத்த வாய்ப்பிருக்கிறது இதனையெல்லாம் உள்வாங்கிக்கொள்கிற திறனாய்வாளர் பொது நிலத்திலிருந்துதான் வரவேண்டும். தலித் திறனாய்வாளர் தலித் சார்பு நிலை எடுக்கும் ஆபத்துமுள்ளது. தலித் இலக்கியத்தின் குரல், தலித் மக்களுடைய குரலென்றாலும், தலித் அல்லாத பிறரிடத்திலும் போய்ச்சேரவேண்டும், அவர்கள் வலிகளை தலித் அல்லாத பிறர் உணர்வதுதான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும். இந்நிலையில் அவ்வலியை பகிர்ந்துகொள்ள முடிந்த, இலக்கியம் அறிந்த, வாசிப்புத் திறன்கொண்ட நடுநிலை திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்வதில் எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாதென நினைக்கிறேன். முனைவர் க.பஞ்சுவே நல்ல உதராணம்.
இ. இதழ்கள் பதிப்பகங்கள்
இங்கே தமி¢ழ் ஊடகங்கள், சிற்றிதழ்கள் தலித் இலக்கியத்திற்குச் செய்துவரும் பங்களிப்புகளும், இவற்றைத் தவிர தலித் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ்கள் அளித்துவரும் பிரத்தியேகப் பங்களிப்புகளும் நினைவுகூரப்படுகின்றன. தலித் இலக்கியத்திற்கு ஆதரவாக இருந்துவரும் பதிப்பகங்களைப் பட்டியலிடும் க.பஞ்சு அவற்றை சந்தேகிக்கவும் செய்கிறார். “தலித் அரசியலும் தலித் இலக்கிய சொல்லாடலும் முதலிடத்தை நோக்கி நகர்கிற ஒரு காலகட்டத்தில், அவைகளை நுகர்வுபண்டமாக மாற்றிச் சந்தைச் சரக்காக விற்க முயல்கிற பதிப்பகத்தாரையும் வெகுஜன ஊடகத்தையும் தனியே அடையாளம் கானவேண்டும் என்றும் சொல்லத் தோன்றுகிறது” என்கிற பஞ்சுவின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் தலித் இலக்கியத்தின்மீது பதிப்பகங்கள் காட்டும் அக்கறைக்குக் காரணம் எதுவாயினும், அவர்கள் தரும் ஒத்துழப்பு தலித் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. தலித் இலக்கியமும் தலித் ஆதரவாளர்களும்
க.பஞ்சுவின் இக்கட்டுரை தலித் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என்னென்ன சிக்கல்களைப் எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறது.

அ. ‘பிராமணர் அல்லாதவர்களும்’ – ‘தலித் அல்லாதவர்களும்’
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறியவந்த ‘பிராமணர் அல்லாதவர்கள்’, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறியவந்த தலித் அல்லாவதர்கள்’ ஆகிய இரண்டு சொற்களையும் கொண்டு சில உண்மைகளை விளக்குகிறார்.’ « பிராமணர் அல்லாதவர்’ என்று கட்டும்போது அல்லாதார் நடுவில் பிராமணர்களுக்கு ஆதரவாளர்களாகச் சிலரும் உருவாயினர் என்பதைப்போல, ‘தலித் அல்லாதவர்’ என்ற மனப்பான்மை உயர்சாதியினர் நடுவில உருவாகும்போது ‘தலித் ஆதர்வாளர்கள்’ எனச் சிலரும் உருவாலியுள்ளனர். ஆனால் ‘பிராமணர் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ‘தலித் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ஒன்றல்ல என்பதை யாரும் எளிதாக புரிந்துகொள்ள முடியும் »” – என்கிற பேராசிரியரின் கூற்று முழுக்க முழுக்க உண்மை . இதனை அடிப்படையாகக்கொண்டு தலித் ஆதர்வாளர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை வரிசைப்படுத்துகிறார்.
ஆ. தலித் ஆதரவாளர்கள் புறக்கனிக்கப்படுகின்றனர்
“பிராமண ஆதரவாளராக இயங்கும்போது சமூக அந்தஸ்தும் உயர்வும் கூடுவதற்குத் தமிழ்ச் சமூகத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால் தலித் ஆதரவாளராக இயங்கும்போது தலித்துகளுக்கு ஏற்படுவதுபோலவே தாழ்வும் புறக்கனிப்பும் இழிவும் வந்து சேர்கின்றன” – என்கிறார்
பிராமண ஆதரவாளர்கள் ஒரு படிமேலே போய் பிராமணர்களே வியக்கும்வகையில் தங்களைப் பிராமணர்களாக கற்பிதம் செய்துகொண்டு வலம் வந்ததும் இங்கு நடந்துள்ளது. அதற்கு மாறாக தலித் ஆதராவாளர்கள், தாங்கள் தலித் அல்லவென்று அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் கூறுவதைப்போல தலித்துகளுக்கு ஏற்படும் தாழ்வும் புறக்கணிப்பும் தமக்கு நேர்ந்துவிடக்கூடாதென்கிற எச்சரிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இ. தலித் ஆதராவளர்களிடத்தில் தலித் மக்கள் கொள்கிற சந்தேகம்.
‘தலித் ஆதரவாளர்கள்’ தங்களை முன் நிறுத்திக்கொள்ளாமல் தங்களைத் தாங்களே கண்கானித்துகொள்ளவேண்டியதிருக்கிறது, காரணம் தலித் ஆதரவாளர்களிடத்தில் தலித் மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. குறிப்பாக இலக்கிய தளத்தில் இத்தகைய சந்தேகப் பார்வைகள் தீவிரமாக வெளிப்படுகின்றன. இலக்கிய தளத்தில் இயல்பாகவே விளங்குகின்ற போட்டி, பொறாமை, தன்னை நிலைப்படுத்த முயலும் தந்திரம் எல்லாம் சேர்ந்து தலித் ஆதரவாளர்களாக இருப்பது பன்மடங்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது . இந்த நிலையில் “மேல் சாதி மேட்டிமைப்பார்வை உனக்குள்ளும் இறைந்து கிடக்கிறது” என்ற குற்ற சாட்டிற்கு உள்ளாவோம் என்ற நிலைக்கு தலித் ஆதரவாளர்கள் தள்ளப்படுகின்றனர்.” என்கிற பேராசியரின் கூற்றும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
தலித்துகள் நம்மை ஏன் சந்தேகிக்கிறார்கள்?” எனத் தலித் ஆதரவாளர்கள் யோசிக்க வேண்டும்; “நம்மை ஆதரிக்கிறவர்களை ஏன் சதேகிக்கிறோம்?” என்ற கேள்வியைத் தலித்துகளும் தம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்

.
தலித் ஆதராவளர் ஒரு சிலரின் திருதராட்டிர தழுவலை, தலித்துகள் புரிந்துகொண்டிருப்பது அவற்றில் ஒன்று. சூடுபட்ட பூனைகள் எல்லா பாலையும் சந்தேகிக்கவே செய்யும் என்பதுமனித இயல்பு. தவிர மனிதர் பண்பில் ‘ஆதரவாளர்’, ‘பாசக்காரர்’, ‘உடன் பிறவா’ சொற்களெல்லாம் பயணாளிக்கு இலாபத்தைத் தருமென்றால் கொண்டாடப்படுவதும், நட்டத்தைத் தருமென்றால் தூக்கி எறியப்படுவதும் இயற்கை. நம்வீட்டுக் குழந்தையைக் தூக்கலாம், கொஞ்சலாம், பரிசுகள் அளிக்கலாம். தவறிழைக்கிறபோது தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அடுத்தவீட்டுக் குழந்தையென்றால் தூக்கவும் கொஞ்சவும் பரிசளிக்கவும் மட்டுமே உரிமையுண்டு. பத்து நாள் கொஞ்சியிருக்கின்றேனே, ஒரு நாள் கண்டித்தால் என்ன தப்பு என்று நினைத்தோமென்றால் முடிந்தது. இனி எங்கள் வீட்டிற்கு வராதே எங்கள் குழந்தையைத் தூக்காதே என்கிற கண்டிப்புக் குரலைக் கேட்க வாய்ப்புண்டு. தலித் படைப்பாளிகளும் தங்களுடைய எழுத்தைப் பாராட்டுகிற தலித் அல்லாதாரை வாழ்த்துவதும், அதே தலித் அல்லாதார் எதிர்மறையான கருத்துகளை வைக்கிறபொழுது அவர் நேர்மையைச் சந்தேகிக்கவும் செய்வதென்பது இயல்பு.
ஈ. தலித் ஆதரவாளரின் இருப்பு
« தலித் இலக்கியத்தைத் தலித்துதான் படைக்க முடியும் என்ற நிலையில் தலித் ஆதரவாளர் எழுத்தும் தலித் எழுத்தாக முடியாத நிலையில், அவருடைய இருப்பே வினாக்குறியாகிவிடுகிறது. இன்னிலையில் தலித் இலக்கியம் குறித்தே பேசிக்கொண்டிருந்தால், தன் எழுத்துக்குறித்து பேசுவதற்கான சூழலைஎப்படிக் கட்டமைப்பது » என்ற நெருக்கடி அவருக்கு ஏற்படுகின்றது. எனவே « சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தலித் ஆதரவாளராக வெளிப்படுகிற படைப்பாளிகளில் சிலர், இலக்கிய தளத்தில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர் » எனப் முனைவர் க.பஞ்சு கூறுவதிலும் பொருளுண்டு. தலித் எழுத்தாளர்களே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள மந்திர தந்திர பிரயத்தனங்களில் பெரும் பொழுதைக் கழித்துக் கவனமாக இருக்கிறபோது, ஊருக்கு உழைத்து என்ன பலன் கண்டோம் என்ற கேள்வி ஆதராவாளருக்குத் தோன்ற தவறினாலும், அவர் நலனின் அக்கறைகொண்ட நான்குபேர் நினைவூட்டவே செய்வார்கள். « தலித் இலக்கியம் தோன்றிய அளவிற்குத் தலித் இலக்கியம் குறித்த எழுத்துகள் பெரிதும் தோன்றவில்லை » என்கிற க.பஞ்சுவின் ஆதங்கத்தை துறைசார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

உ. தலித் இலக்கியங்கள் இரக்கத்தை எதிர்பார்க்கின்றனவா?
“பொதுவாக எல்லா இலக்கியத்திற்குள்ளும் உள்ளோடும் ரத்தத் துடிப்பாக நின்று இயங்கிக்கொண்டிருப்பது “இரக்க உணர்வை- கருணை மனோபாவத்தை” உற்பத்தி செய்கிற முயற்சிதான், தலித் இலக்கியத்திற்கும் இந்த இரக்க உணர்வை உற்பத்தி செய்வதுதான் அடிப்படையாக அமைந்துள்ளது; தலித் கவிதைகளிலாவது ஒரு வகையான முழக்கமிக்க அர்சியல் கவிதைகளைக் கானமுடிகிறது. புனைகதைகளில் இந்த இரக்க உணர்வு உற்பத்திதான் பிரதானமான ஒன்றாகச் செயல்படுகிறது. அதனாலேயே கூடத் தலித் புனைகதைகள் பலவும் எல்லா மொழியிலும் சுயசரிதை இலக்கியமாகவே வெளிப்பட்டு பலருக்கும் வாசிப்புப் பொருளாக விளங்குகின்றன, எனக் கருத வாய்ப்பிருக்கிறது” – என்ற பஞ்சுவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “தலித் இயக்கமும், தலித் இலக்கியமும் பாரதம் தழுவியதாக உலகம் தழுவியதாக பரந்து விரிந்த தளத்திற்கு நகர்ந்திருக்கின்றன” என்கிற பஞ்சாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொண்டாலும், பஞ்சு தெரிவிக்கிற உலகத்தில் ( நமக்கு உலகம் எனப்படுவது இன்றுவரை மேற்குலகும், வட அமெரிக்காவுமாக இருப்பதன் அடிப்படையில்) தலித்துகளின் குரலாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பார்க்கப்படுகிறதே அன்றி இலக்கியமாக பார்க்கப்படுவதில்லை, என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு எமே செசேரோ (Aimé Césaire,) லெயோ போல்ட் செதார் சங்கோர்( Léopold Sédar Senghor) ஈடான கவிஞர்களைத் தலித் இலக்கியம் தரவில்லை அல்லது அவ்வாறான கவிஞர்கள் இருந்தும் அவர்களை முன் நிறுத்த தமிழ்ச்சூழல் மட்டுமல்ல இந்தியாவேகூட தவறிவிட்டதோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
தொடர்ந்து க.பஞ்சு வெகுசனப்பரப்பில் தலித் இலக்கிய வாசகர்கள் குறைவு என்றும், கல்லூரிகளிலும் தலித் படைப்புகளிடத்தில் தலித் அல்லாத மாணவர்கள் காட்டும் அக்கறை குறைவென்றும் வருத்தப்படுகிறார். தொடர்ந்து தலித் அல்லாத பேராசியர்களிடத்திலே கூட இத்தகைய மனநிலை இருக்கிறதென்று அவர் குமுறுவது கவலை அளிக்கிற ஒன்றுதான். அதுபோலவே இடது சாரி இயங்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள் ஆகியவை தலித் இயக்கத்தையும் தலித் இலக்கியத்தையும் தங்கள் செயல்திட்டத்தில் ஒருபகுதியாகப் பார்ப்பதும் பேரசிரியரைச் சங்கடப்படுத்துகிறது.

3. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே!
புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காரக்காலில் பேரசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் இப்பகுதி. தொன்றுதொட்டு தமிழர் சமூகத்தில் தலித் மக்களின் நிலமை என்ன? சமயசீர்திருத்தவாதிகள் தலித்துகளை ஆதரித்ததில் உள் நோக்கம் இருக்க முடியுமா? ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தலித் மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவந்ததா? கடந்த காலத்தில் தலித மக்களின் முன்னேற்றத்திற்கென உழைத்த தலித்தின தலைவர்கள் யார் யார்? அவர்களின் எழுச்சி இடையில் தொய்வு அடைய எதுகாரணம் ? என்றெல்லாம் பேசிவிட்டு இன்றைய தலித் இலக்கியம் குறித்து ஓர் விரிவான விளக்கத்தைத் தருகிறார். கவிஞர்கள், புனைகதை ஆசிரியர்கள், திறனாய்வாளார்கலென தலித் படைப்பிலக்கியவாதிகளின் பட்டியலையும்; தலித் மக்களைப் பொருளாகக்கொண்டு எழுதுகிற தலித் அல்லாத எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியலையும் க.பஞ்சு தருகிறார். இன்றைய தலித் எழுத்துக்களில் காணப்படும் பண்புகளென்று சிலவற்றைக் குறிப்பிடவும் அவர் தவறுவதில்லை: அ. “புனித உடைப்புக்களை, அதன் மூலம் வெளிப்படும் ‘அதிர்ச்சிகளை’ உற்பத்தி செய்வதைத் தனது எழுத்துப்பாணியாக கொள்ள முயலுகிறது”. ஆ. தலித் மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பினை உரத்து கூவுதல். இ. தலித்து இலக்கியம் உயிரோட்டமுள்ள பேச்சுமொழியை அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. ஆகியவை அவை.
எனினும் « கொடியன் குளம் நிகழ்வு, பொருநையாற்றில் அடித்து தூக்கி எறியப்பட்ட நிகழ்வு, இவையும் பல சாதிக் கலவரங்களும் கள ஆய்வு செய்யப்பட்டுக் கட்டுரைகளாக , தகவல் படங்களாக வெளிவருகின்றன. ஆனால் ஒரு கவிதையாக, ஒரு நாவலாக, ஒரு சிறுகதையாக ஏன் எழுதப்படவில்லை? » என்ற பேராசிரியரின் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் காணவேண்டும்.

இறுதியாக நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முன்வைத்து:

அ. ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள்
முதலாவதாக இன்றையத் தமிழ் சமூகத்தில் பெருவாரியான மக்கள் தலித் ஆதரவாளர்களாக இல்லாமலிருக்கலாம், ஆனால் தலித்தியத்திற்கு உண்மையில் -சுயத்தில் – எதிரானவர்களும் அல்ல. தினசரிவாழ்க்கையே போராட்டமாக இருக்கிறபோது, அவர்களுக்கு இதுபோன்ற அரசியல் வீணற்றவேலை. ஆனால் தன் இருத்தலை சமூகத்தில் முன் நிறுத்துகிறபோது, அச்சமூகத்தின் தராசு தன்னை எப்படி எடைபோடுமென்கிற கேள்வி எழுகிறது. இதில் படித்தவர்களேகூட ‘பரம்பரைபரம்பரையாக’, ‘தொன்றுதொட்டு’, ‘முன்னோர்கள்’ ஏற்படுத்திய அறமென்று சாதி அரசியலை நம்புவதோடு, தங்களைச் சுற்றியுள்ள நாலுபேர் என்ற இருட்டைக் கண்டு அஞ்சுகிற இந்திய சமூகத்தில், பாமரர்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த நாலுபேர் பற்றிய அச்சம் தலித் அல்லாத மக்களிடம் மட்டுமில்லை, தலித்துகளிடமும் இருக்கிறது. இக் கற்பிதம் செய்யப்பட்ட அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பி, அதன் பலனை அறுவடை செய்ய, பலவீனமானவர்களைத் தேர்வு செய்து அவர்களை மீட்கவந்த இரட்சகர்களாக சிலர் தங்களை முன் நிறுத்துகிறபோது, ‘நாலுபேர் இருட்டை’க்கண்டு அஞ்சும் மனோபாவம் உடைய மனிதர்கள் வழித்துணைக்கு ஆள் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வார்கள். தலித்தியத்திற்கு எதிராகக் களத்தில் இறங்குவது இப்படித்தான் தொடங்குகிறது. இன்று தலித்தியத்திற்கு அதிகம் எதிரிகளாக இருக்கிறவர்கள் ‘பிராமணர் அல்லாதவர்கள்தான்’, பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் அதாவது கிராமங்களைப் பொறுத்தவரை அல்லது முகங்கள் அதிகம் தெரிந்தவையாக உள்ள இடங்களில்.
அவ்வாறே தலித் மக்கள் ஆதரவாளர்களெனக் கூறிக்கொண்டு அடிமடியில் கை வைக்கிற ‘அனுகூல சத்ரு’க்கள் பற்றிய எச்சரிக்கையாகவும் க.பஞ்சுவின் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கட்சிகளில், தலித்திய ஆதரவில் இடதுசாரிகளின் நேர்மையை எவ்வாறு சந்தேகிக்க முடியாதோ அவ்வாறே இலக்கியவாதிகளில் க.பஞ்சு அ.மார்க்ஸ் போன்றவர்களைச் சந்தேகிக்கமுடியாமலிருக்கலாம், ஆனால் தலித் ஆதரவாளரென நேசக்கரம் நீட்டுகிற எல்லா கைகளும் சூதற்றவை அல்ல.
ஆ. தலித் தலைவர்களும் தலித் எழுத்தாளர்களும்
க.பஞ்சுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல தலித் அறிவுஜீவிகளைப் பட்டியலிட்டு, பின்னாளில் அதுபோன்ற முயற்சிகள் தொய்வடைந்துபோனதற்கு என்ன காரணமென ஓரிடத்தில் கேட்டிருக்கிறார். அதுபோலவே காரைக்காலில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தலித்மக்கள் சாதிக்கட்சிக் காண்பதில் தவறில்லை என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். கட்சி அரசியலில் நியாயங்கள் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அது தலைவர்களை அடையாளப்படுத்த மட்டுமே உதவியிருக்கிறது. சமூகத்திற்கு அவர்கள் சாதித்ததென்ன என்ற கேள்வி எழுகிறது. தலிதியசாதிக் கட்சிக்குள்ள நியாயத்தை தலித் அல்லாத அறிவு ஜீவிகள் புரிந்துகொள்ளலாம், ஆனால் படிக்காத பிற சாதியிலுள்ள பாமரமக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதன் விளைவுகள் என்ன? என்பது பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும். பஞ்சுவைப்போன்ற நடுநிலை மனிதர்கள்தான் இது குறித்தும் ஆழமாக விவாதிக்கவேண்டும்.தலித் மக்களின் விடுதலைக்கு, கட்சி அரசியலைக்காட்டிலும் சமூக அரசியல்தான் நம்பகமானது. அரசியல் கட்சிவைத்து திராவிடக் கட்சிகள சாதித்ததைகாட்டிலும்(?) பெரியார் என்ற தனிமனிதர் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு அதிகம். அயோத்திதாசர் போன்றவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, நிரப்ப தலித் அறிவு ஜீவிகளில் எவரும் முன்வராதது இங்க்கு பெருங்குறை, அவ்வாறு வந்திருந்தால் இன்று தலித்துகள் கூடுதலாகப் பலனடைந்திருப்பார்கள்.
தலித் கட்சித் தலைவர்க்கு ஏற்படும் நெருக்கடி தலித் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. தலித் அல்லாத வசிஷ்ட்டர்களின் ஆசீர்வாதத்திற்கு அவர்கள் காத்திருப்பது ஒரு பக்கமெனில் ; தலித் அல்லாதவர்களின் இதழ்களால், தலித் அல்லாத பிற ஜாம்பவான்களால் அரவணைக்கப்படாதத் தலித் எழுத்துகள், அடையாளம் பெறாமற்போகிற ஆபத்தும் இங்கிருக்கிறது. மேற்குலகில் கறுப்பரினத்தைச் சேர்ந்த தீவிர இலக்கிய வாதிகள் Négritude’ என்ற சொல்லாடல் கொண்டு நிகழ்த்திய ‘இலக்கிய அரசியலை’ தலித் இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்; அதன் வீச்சும் வேகமும் தலித் இலக்கியத்துடன் கலக்கவேண்டும்; தலித் எழுத்தென்பது ஒடுக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலாக இல்லாமல், கலகக் குரலாய் ஒலிக்கவேண்டும். பேராசிரியர் க.பஞ்சு போன்றவர்களின் கனவை நானவாக்குவதற்கு அதொன்றுதான் வழி.

——————————————————————
1. நவீன இலக்கியக் கோட்பாடுகள் (காவ்யா வெளியீடு) கட்டுரைத் தொகுப்பிலிருந்து
2. N’est pas de sauveurs suprêmes
Ni Dieu, ni César, ni tribun ;
Producteurs, sauvons-nous nous-mêmes !

——————————————-

பிரான்சும் நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்

un-hommage-au-double-attentat-a-beyrouth-le-13-novembre-2015_5463584அ. நவம்பர் 13 இரவு 8.30 மணி

– ஷெரி வீக் எண்டிற்கு, நம்ம முதல் வருட திருமண நாளைக் கொண்டாட, ‘Le Bataclan’ இசை அரங்கில் ராக் நிகழ்ச்சியொன்றிர்க்கு இரண்டு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன், சர்பிரைசாக இருக்கவேண்டுமென்று உங்கிட்ட சொல்லல, போகலாமா?
ஆ. நவம்பர் 13 இரவு 9 மணி

– Salut mon pote! என்ன செய்யற? ”
– பிரான்சு – ஜெர்மன் மேட்ச் பார்க்கனும்னு இருக்கேன், எங்கும் வெளியிலே வர்ரதா இல்ல.”
– இன்றைக்கு என்பிறந்த நாள ரெஸ்ட்டாரெண்ட்ல கொண்டாடப்போறேன் வந்திடுன்னு சொல்லியிருந்தேனே மறந்துட்டியா? ”
– நல்லவேளை ஞாபகப் படுத்தின, நான் மறத்துட்டேன் என்னை மன்னிச்சுடு அரைமணிநேரத்துலே அங்கே இருப்பேன்.
– எங்கேன்னு ஞாபகம் இருக்கா?
-Paris 11ème, “la Belle équipe தானே வந்திடறேன்.
இ. நவம்பர் 13 இரவு ஒன்பது மணி

தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்குள் கணவன் மனைவி பிள்ளைகள் இருவர் என நுழைகிற குடும்பத்தினரை le Petit Cambodge, உணவு விடுதி ஊழியர் வரவேற்று அவர்கள் ரிசர்வ் செய்திருந்த மேசையில் உட்காரவைக்கிறார்.

 

இப்படி ஏதேதோ காரணத்தை முன்னிட்டு தினசரி வாழ்க்கையில் சங்கடங்களிலிருந்து விடுபட்டு கணநேர சந்தோஷத்திற்காக வீட்டில் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியிற் சென்ற பலர் வீடு திரும்பமாட்டோம் என நினைத்திருக்கமாட்டார்கள். அடுத்தடுத்து ஆறு இடங்களில் நடந்த பயங்கரவாதத்தின் தாக்குதல் இவர்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை, அவர்களின் கனவுகளை, வாழ்க்கை மீதான பற்றுதல்களை, அவர்களிடம் உறவாடியும் நட்புகொண்டும், அவர்களை ஆதரித்தும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து வாழ்ந்தவர்களின் நம்பிக்கைகளையும் சிதற அடித்திருக்கிறது. உயிரைப் பறிகொடுத்தவர்கள் 129 பேர், படுகாயமுற்றும் உயிர் பிவைப்பார்களா என்ற நிலமையில் இருப்பவர் 80 பேர், 300க்கும் அதிகமாக காயம்பட்டோர் என்கின்றன கிடைக்கும் தகவல்கள். பிள்ளையும் தாயுமாக சாப்பிட உட்கார்ந்து மகனை பறிகொடுத்த தாய், காதலனைப் பறிகொடுத்த காதலி, ஒரு குடும்பத்தில் தந்தை தாய் மூத்த சகோதரி மூவரையும் பறிகொடுத்துவிட்டு அனாதையான சிறுவன், பெரும்பாலோர் வயது 30க்கும் கீழ். .  இப்படி இறந்தபின்னம் தொடரும் அவலங்கள்

 

பாரீஸ்லிருந்து 500 கி.மீ தள்ளி வசிக்கிறேன் என்னிடமும் பத்திரமாக இருக்கிறாயா என்ற கேள்வியை நண்பர்களும் உறவுகளும் வைக்கிறார்கள். மனித மனத்தின் இயல்புப்படி நம்முடைய உறவுகள் நன்றாக இருக்கிறார்கள் அது போதுமே என்கிற குரூரத் திருப்தி நமக்கு. பாதிக்கக்கப்பட்டவர்களைப்பற்றிய உரையாடல் சில நாட்கள் நீடிக்கும், அதன் பிறகு அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள் கவலைகள் இருக்கின்றன. இதுதான் வாழ்க்கை, எதார்த்தம் என்கிற சமாதானம் இருக்கவே இருக்கிறது. தொலைபேசியில் “கடலூர்தான் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது, புதுச்சேரியில் பிரச்சினை இல்லை” என்ற செய்தி தருகிற அதே அற்ப சந்தோஷம்.

 

கொலையாளிகளும் கொலையுண்டவர்களும்
எதிர்பாராத மனித உருவில்வந்த சுனாமித் தாக்குதலால் மனித உயிர்களுக்குப் பெருஞ்சேதம். கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் என்ன பிரச்சினை. முன் விரோதமா ? பங்காளிகளா? வரப்பு அல்லது வாய்க்கால் சண்டையா? இவர்கள் தின்ற சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டார்களா? கூட்டு வியாபாரத்தில் மோசடியா? அல்லது தொழிற்போட்டியா ? அல்லது குறைந்த பட்சம் தங்கள் வாழ் நாளில் இதற்கு முன்பு கொலையாளிகளும் கொலையுண்டவர்களும் சந்தித்ததுண்டா ?

 

ஒவ்வொரு வருடமும் தற்போது நவம்பர் மாதம் பிறக்கிறபோதெல்லாம் திக் திக் என்கிறது. புண்ணியவான்கள் அப்படியொரு வரத்தை அந்த மாதத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். நவம்பர் 13த்ந்தேதியும் பிற நவம்பர் பயங்கர வாதத் தாக்குதல் தேதிகள்போல வரலாற்றில் இடம் பிடித்துவிடும். மனித மனங்கொண்டோரை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனையைப் பெற்றவைதான். இயற்கை எப்போது அதனை நிறைவேற்றுமென்கிற தேதியை மட்டும்  அறியாமலிருக்கிறோம், அவ்வளவுதான். தேதி தெரியவந்தால் வாழ்க்கை சுவாஸ்யமற்று போய்விடும். தங்கள் கொலைச்செயலைபுரிந்த கணத்திலேயே, அதற்குரிய தண்டனையைக் கொலையாளிகள் பெறவேண்டுமென்பது இயற்கையின் தீர்ப்போ என்னவோ அவர்களுக்குரிய தண்டனையையும் அப்போதே நிறைவேற்றிவிடுகிறது. ஆனால் கொலையுண்டவர்களுக்கு வேண்டுமானால் அவர்களின் மரணம் எதிர்பாராததாக இருந்திருக்கலாம், ஆனால் கொலையாளிகளுக்கு தங்கட் செயலை அரங்கேற்றும் தினத்துடன், மரணமும் இணைந்திருப்பது விந்தை.

 

பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை. ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு தங்கள் உயிரை தாங்களே முடித்துக்கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், ஆனால் அப்பாவி உயிர்களைக்கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நீட்சே கூறுவதுபோல “அவர்கள் என்னுடைய விரோதிகள், வீழ்த்துவதொன்றுதான் அவர்கள் விருப்பம், சுயமாக படைப்பதல்ல”. என்றுதான் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

பிரெஞ்சுமக்களுக்குள்ள பொறுப்பு
“குர்ஆனை படித்த எந்த முஸ்லீமும் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டான். உலகின் எல்லா ஜமாஅத்களிலும், இந்த ISIS தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு ஐ.நா . சபைக்கு அனுப்பி உலக மக்கள் அனைவரையும் இதில் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.” _என்று முகம்மது நைனாமுகம்மது என்ற நண்பர் ‘தி இந்து’ (நவம்பர்14) தமிழ் தினசரியில் கருத்துத் தெரிவித்ததை வாசித்தேன். இவர் கருத்தொப்ப மனிதர்கள் இஸ்லாமிய சமயத்தில் நிறையபேர் இருக்கிறார்கள். பாரீஸிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களில் பலரும் நவம்பர் 13 பாரீஸ் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள். பாரீசில் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் பேசுகிற இஸ்லாமியத் தலைவர்களைக்காடிலும் திரு நைனா முகம்மது’ போன்றவர்களின் பதிவு முக்கியமானது. பிறரைக்காட்டிலும் கொடிய வன்முறைச்சம்பவங்களை இஸ்லாமியச்சகோதரர்களே முன்வந்து கண்டிக்கிறபோது அது கூடுதலாகக் கவனம் பெறும்.

 

இந்நிலையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு மக்களக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. முதலாவதாக இவர்களைக் குழப்பவென்றே காத்திருக்கிற தீவிர வலதுசாரிகள் விரிக்கின்ற வலையில் விழமாட்டார்கள் என நம்புகிறேன். ISIS தீவிரவாதிகள் இழைத்தக்குற்றத்திற்காக நாம் தினம்தோறும் சந்திக்கிற எதிர்கொள்கிற, உங்களைப்போன்றும் என்னைபோன்றும் சமூகத்துடன் இணக்கமாக வாழும் இஸ்லாமிய குடும்பங்களை சந்தேகிக்க முடியாது. ஒன்றினைந்து வாழ நினைக்கிற சமூகத்தில் குழ்ப்பத்தை உண்டுபண்ணுவதுதான் ISIS அமைப்பின் நோக்கம் அதன் மூலம் கூடுதலான இஸ்லாமியர் ஆதரவை பெறமுடியுமென்பது அவர்கள் கனவு, அக்கனவினை நிறைவேற்ற பிரெஞ்சு மக்கள் உதவமாட்டார்களென நம்புவோம். இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு உள்ள பொறுப்பு மேற்குலக அறிவுஜீவிகளுக்கும் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும் மேற்குநாடுகளுக்கும் கணிசமாக பங்குண்டு. ஒரு சில நாட்களுக்கு முன்பாக பிரெஞ்சு தொலைகாட்சிகளில் பிரான்சு நாட்டின் அண்மைக்கால சாதனையாக ர•பால் (Rafale) என்ற போர் விமானங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பெருமையுடன் செய்தியில் தெரிவித்தார்கள். எகிப்துக்கு 24, கத்தார் நாட்டிற்கு 24, இந்தியாவிற்கு 36 என்கிற அவ்விற்பனை நமது கற்பனைக்கு எட்டாத தொகையை, பிரான்சுக்கு வருமானமாக கொண்டுவருமெனச் சொல்கிறது. மேற்குலக நாடுகளின் இதுபோன்ற காரியங்களும் பயங்கரவாதம்தான். எதிராளியைக் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நம்மையும் விசாரணைக்குட்படுத்துவது அவசியம்.

 

இறுதியாக நாம் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டியது இன்றைய உலகம் பன்முகத்தன்மைக்கொண்டதென்ற உண்மையை. மனிதர்க்கிடையே முரண்பட்ட நம்பிக்கையும், கொள்கைத் தேர்வும் தவிர்க்கமுடியாதவை. எனினும் ஒரு சமூகத்தின் அமைதியான பொதுவாழ்க்கைக்கு அச்சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களிடையே இணக்கம்வேண்டும் தவறினால் குழப்பங்களும் கலவரங்களுமே மிஞ்சும்.

நன்றி. சொல்வனம் நவம்பர் 15
————————————-

சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி

சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர்-20 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி

mathuumita32
1.பாண்டிச்சேரியிலிருந்து பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பூருக்குச் சென்றிருக்கிறீர்கள். இந்த 25 வருட வாழ்க்கையில் பாண்டிச்சேரிக்கும் இந்த நகருக்குமான பிணைப்பு குறித்து சொல்லுங்கள்?

 

புதுச்சேரிக்கு அருகில் பத்து கி.மீதூரத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கொழுவாரி என்ற கிராமம்தான் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் இருந்ததெல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளிதான். எனவே கல்வி, பணி, திருமணமென வாழ்க்கை புதுச்சேரியோடு என்றானது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வேறுபட்ட புதுச்சேரிக்கென ஓர் அழகு இருந்தது. புதுச்சேரியை பாரதி தேடிவர பிரெஞ்சு நிருவாகத்தின் அரசியல் கவர்ச்சி ஒரு காரணம் எனில், அம் மகாகவியைத் தொடர்ந்து தன் மடியில் கிடத்திக்கொள்ள ஆயிரமாயிரம் அழகுக் காரணங்களைப் புதுச்சேரி வைத்திருந்தது. பிரெஞ்சுக் கலையும் பண்பாடும், வைகறைத்தொடக்கம் இருள்கவியும்வரை புதுச்சேரி வாழ்வோடு இணைத்திருந்த மென்மையான சிலிர்ப்பு அவற்றுள் ஒன்று. புதுச்சேரி அளித்த பொன்முட்டை வாழ்க்கையில் அமைதியுறாமல், பேராசைகொண்ட மனம் பிரான்சுக்குப் போ என்றது. மனைவியின் மூலம் கிடைத்த பிரெஞ்சுக்குடியுரிமையும் ஒரு காரணம். ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)? தேர்வு தற்செயலாக நிகழ்ந்தது. ஒரு பேச்சுக்கு சென்னையை பாரீஸ் என வைத்துக்கொண்டால்; சென்னையை நிராகரித்து புதுச்சேரியைத் தேர்வுசெய்ய மனம் சொல்லும் நியாயங்களை, பாரீஸைத் தவிர்த்து ஸ்ட்ராஸ்பூரை தேர்வு செய்ததற்கும் சொல்லமுடியும். 1985ல் இங்குவந்தேன். வருடம் தோறும் புதுச்சேரிக்கு வருகிறேன், இரண்டுவாரங்கள் தங்குகிறேன். பல நண்பர்களை, உறவுகளை காலம் தின்று செரித்துவிட்டது. புதுச்சேரியில் காண்கிற என் முகம் அதிகம் சிதைந்திருப்பதுபோல தெரிகிறது. சிலிர்ப்பு தற்போது நடுக்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி என்னிடம் புலம்பவும் செய்யும், எனக்கும் புலம்பல்கள் இருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எனது கதைகளிலும் நாவல்களிலும் புதுச்சேரியும் -ஸ்ட்ராஸ்பூரும் தொடர்ந்து இடம்பெற்று அவற்றிடையேயான பிணைப்பை உறுதிசெய்வதாகவே நினைக்கிறேன்.
2.பணிகளுக்கிடையில் இலக்கிய வாசிப்பு எழுத்தை இடைவிடாமல் செய்வதற்கான சூழலை எப்படிப் பெற்றீர்கள்?

writer nagarathinam 75 copy1
எழுத்து உபதொழில்தான், இந்தியப் பொருள் அங்காடி ஒன்றும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றும் இருக்கிறது. இரண்டுமே சிறிய நிறுவனங்கள் என்கிறபோதும் சுமைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் இளம்வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் என்னுடன் இணைந்து பயணித்துவந்திருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணி என வாழ்க்கைப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுத்து உதவியது. எதையாவது வாசிக்காமலோ, குறைந்தது ஒருபக்கமோ எழுதாமல் இருக்கமுடிவதில்லை. பிரான்சுக்குவந்த புதிதில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டி வாணிபத்தில் கவனம் செலுத்தவேண்ட்டியிருந்தது. குடும்பமென்று ஒன்றிருக்கிறதில்லையா? இருந்தபோதிலும் இலங்கை நண்பர்களுடன் இணைந்து ஸ்ட்ராஸ் பூர் தமிழ் முரசு, பிறகு தனியொருவனாக ‘நிலா’ என்ற இதழ் என்றெல்லாம் ஆசிரியனாக இருந்து நடத்தினேன். சொந்த எழுத்தில் கவனம் செலுத்த முடியாததும்; வாகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இறங்கிப்போகவேண்டியிருந்ததும்; ஓசியில் இதழ்களை எதிர்பார்க்கிற கூட்டம் பெருகியதும், பொருளாதார நட்டத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை என்பதும் அவை நின்றுபோகக் காரணம். எழுத்தின் மீதான காதல் அதிகரித்தது.. வியாபாரத்திலோ, பணத்தினாலோ பெறமுடியாததை எழுத்தில் பெற முடியுமென்று தோன்றியது. கடையை விரிவாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எடுத்த முடிவில் தவறில்லையெனவே தோன்றுகிறது. பெற்றோர்காட்டிய பெண்ணை திருமணம் செய்வதென எடுத்த முடிவு, அரசுவேலையை உதறிவிட்டு, பிரான்சுக்கு வரத் தீர்மானித்த முடிவு, வியாபாரம்போதும் எழுத்துதான் முக்கியமென பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு அனைத்துமே எனக்குத் தவறானதாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். எழுதுவதற்கென காலை நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன்.  நேரடியாக கணினியில் தட்டுவது வழக்கமில்லை. ஒரு தாளில் மை பேனாவினால் குறைந்தது ஒரு சிலவரிகளாவது எழுதவேண்டும், எழுதும் பொருளின் தரிசனம் கிடைத்துவிடும், மூளையில் இக்கதகதப்பு உணரப்பட்ட மறுகணம் விசைப்பலகையில் எஞ்சியதைத் தொடர்ந்து எழுதுவேன். சில நேரங்களில் வீட்டின் பின்புறமிருக்கிற அரசாங்க பூங்காவில் நேரத்தை அமைதியாகச் செலவிடுவதும் நல்லபடைப்பிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.

3.மாத்தாஹரி குறித்து எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. உண்மைக்கும் புனைவுக்குமான பிணைப்பினை எவ்விதம் கையாள்கிறீர்கள்?

Matahari1
‘மாத்தா ஹரி’ நாவல் எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்நாவலில் வரும் ‘பவானி’ என் உறவுக்காரபெண். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், புதுச்சேரி கல்லூரியில் புகுமுக வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பத்தினை வாங்கிகொண்டு அதை நிரப்புவதற்காக அப்பெண்ணின் வீட்டிற்குச்சென்றேன். அவருடைய சகோதரர் புதுச்சேரி தாகூர்கலைக்கல்லூரியில் பி.எ படித்துக்கொண்டிருந்தார். இதற்கு முன்பும் அப்பெண்ணைப் பார்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் என்றால் பாவாடை சட்டை போட்டவராக. கொஞ்சம் வளர்ந்தவராக பாவடை தாவணியில் அன்றுதான் பார்த்தேன். அந்த நாட்களில் பல வீடுகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் அந்த வீட்டிலும் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிமிடம் பேசியிருப்பேன் அதுகூட அப்பெண்ண்ணின் சகோதரரை பார்த்து கல்லூரியில் எந்த குரூப் சேரலாம் எனக் கேட்கவந்தேன் என்று அவளிடம் தெரிவித்த சேதி. அதற்குள் அப்பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். பெண்ணை மிரட்டி உள்ளேபோகும்படி கூறியவர் என்னிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் று தெரியாதா? எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக? பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா? தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது?’ என மாத்தாஹரி நாவலில் ஒரு கேள்வி வரும். நம் ஒவ்வொருவரிடமும் நாமும் பங்குபெற்ற அல்லது நாம் அறியவந்த சம்பவங்களின் கோர்வைகள் ஏதோ ஒரு உண்மையை மையமாகவைத்து அல்லது அடிப்படையாககொண்டு எண்ணிக்கையற்று உள்ளன. அவை பெரிதும் புலன்களோடு இணைந்தவை. அவற்றைப் புற உலகுக்குக்கொண்டுக் கொண்டுசெல்லும் வழிமுறையாகவே எழுத்தென்ற கலைவடிவைப் பார்க்கிறேன். உண்மை பொய்போல அத்தனைக் கவர்ச்சியானதல்ல, எனவே சுவாரஸ்யமாகசொல்ல அருவருப்பூட்டாத அலங்காரம் தேவை. அதற்குப் பொய் கைகொடுக்கிறது. ஒரு நல்ல புனைகதை உண்மையும் உண்மையைப்போலத் தோற்றங்கொண்ட பொய்களும் சேர்ந்தது. இதுதான் உண்மையைப் புனைவாகச்சொல்ல நான் கையாளும் தந்திரம்.

 

4.சிமொன் தே பொவ்வார் ஆளுமை குறித்து தமிழுக்கு முழுமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க. சிமொன் தனக்கு அல்கிரென் அளித்த மோதிரத்தை இறுதித் தூக்கம் வரையிலும் அணிந்திருந்ததும், சார்த்தருக்கான முழு சுதந்திரத்தை அவர் அளித்திருந்ததையும் வாசிக்கையில் இன்னொரு பரிமாணத்தில் மனித உறவுகளின் மேன்மையை உணர முடிந்தது. இன்றும் அங்கே சிமொனின் இலக்கிய சமூக சிறப்புகள் பேசப்படுகின்றனவா?

writer nagarathinam 76-77 copy
சிமோன் தெ பொவார் படைப்புலகிற்குள் வந்தபோது உலகின் பிற பகுதிகளைப்போலவே பிரான்சிலும் பெண்களின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகள், கடப்பாடுகள், எழுத்தூடாக அவர் மொழிந்தவை, செய்தப் பிரச்சாரங்கள், அறிவித்த பிரகடனங்கள் அனைத்துமே தன் ‘இருத்தலை’ உறுதி செய்ய என்பதைக்காட்டிலும் ‘பெண்’ என்ற பாலினத்தின் இருத்தலை உலகிறகுத் தெரிவிக்க முனைந்தவை. இதைப் பிரெஞ்சு பெண்ணினம் மறக்கவில்லை. அவரது ‘இராண்டாம் பாலினம்’- பெண்ணினத்தின் மறை நூல் எனப்புகழப்பட்டது. இன்றளவும் அதற்கீடான நூல் எழுதப்படவில்லை. இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும் என்பது மூத்த இலக்கியவாதி கி. அ, சச்சிதான்ந்தத்தின் கனவு, கன்னடத்திலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, ஆங்கில மொழிபெயர்ப்பென்று வந்தவை மூலத்தின் பல பக்கங்களைத் தவிர்த்துவிட்டு மொழிபெயர்க்கப்பட்டவை, அதற்கான காரணத்தை மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லவில்லை. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்க மேற்ககுலகு ஆர்வம் காட்டுவது இதுபோன்ற காரணத்தினால்தான். இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும்.  நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே பிரெஞ்சு மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘France Culture’ என்ற பிரெஞ்சு வானொலி நிலையம் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒருவாரத்திற்கு நடத்தினார்கள். அதுபோலவே ‘Arte’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வருடம் முழுக்க ஏதாவதொரு இதழில் அவரை முன்வைத்து கட்டுரைகள் வரவேசெய்கின்றன. அவருடைய இரண்டாம் பாலினம் இன்றளவும் தொடர்ந்து விற்பனை ஆகிறது. அவரைப்பற்றி பிறர் எழுதிய நூல்களும், குறும்படங்களும், ஆவணப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடத்தில் காணும் பொதுப்பண்பு அவர்கள் ஒட்டுமொத்த மானுடம் சார்ந்த பிரச்சினை கையிலெடுத்துக்கொண்டு, அதன்மீது தங்கள் சொந்த சிந்தனையைக் கட்டமைப்பவர்கள். தங்கள் பூகோளப் பரப்பைக்கடந்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இதனை முக்கிய காரனமாகப் பார்க்கிறேன்.

5.வணக்கம் துயரமே பிரெஞ்ச் நாவல் வாசித்து அந்த கலாச்சார பாதிப்பின் துயர உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர மூன்று நாட்கள் ஆனது. பிரான்சுவாஸ் சகாங் அந்த ஒரு நாவல் தான் எழுதியுள்ளாரா?
வணக்கம் துயரமே பிரான்சுவாஸ் சகானுடைய (Françoise Sagan) முதல் நாவல், 1954ம் ஆண்டு வெளிவந்ததபோது அவருக்கு வயது பதினெட்டு. அதற்குப்பின்பு பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன. திரைப்படங்களிலும் பாங்காற்றி இருக்கிறார். எனினும் அவர் முதல் நாவல்தான் இன்றளவும் கொண்டாடப்படுகிறது
6.அம்பையின் சிறுகதைகளை பிரெஞ்சுக்கு அளித்திருக்கிறீர்கள். அங்கே நம் தமிழ் படைப்புகளுக்கான வாசக வரவேற்பு எப்படி இருக்கின்றது?

Ambai li
இது நான் தனியே செய்ததல்ல. டொமினிக் வித்தாலியோ (Dominique Vitalyos) என்ற பிரெஞ்சு பெண்மணியுடன் இணைந்து செய்தது. அவர் மலையாளத்திலிருந்து நேரடியாகப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர். வருடத்தில் சிலமாதங்கள் கேரளாவில் தங்கியிருப்பவர். அவர் நினைத்திருந்தால் தமிழறிந்த ஒரு மலையாளியை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கக்கூடும். நாமென்றால் அதைத்தான் செய்வோம். நமக்கு நம்முடைய நாவல் இன்னொரு மொழியில் வந்தாலே போதும் பூரித்து போவோம். நாவல் எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப்பற்றிய பிரச்சினைகளெல்லாம் அடுத்தக் கட்டம். தவிர டொமினிக் வித்தாலியோ இந்திய நாவல்களை ஆங்கிலத்திலிருந்தும் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர், இருந்தபோதிலும் மூல மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற பிரெஞ்சு பதிப்பாளர்களின் மொழிபெயர்ப்பு கொள்கைகளுக்கேற்ப தமிழிலிருந்து அம்பையின் சிறுகதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். பதிப்பகம் என்னைத் தொடர்புகொண்டு பிரெஞ்சுப் பெண்மணியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா எனக்கேட்டார்கள், சம்மதித்தேன். சில பக்கங்களைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து அனுப்பினேன், பதிப்பாளர் குழுவிற்குத் திருப்தியாக இருந்தது, டொமினிக்கும் ஓகே என்றார். இருவரும் பல முறை விவாதித்து, நானும் ஒரு எழுத்தாள்னாக இருப்பதால், சக எழுத்தாளரின் படைப்பில் குறையின்றி போய்ச்சேரவேண்டும் என உழைத்தேன். மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்வரிசையில் என் பெயரை முதலில் பதிப்பாளர்கள் போட்டிருந்தார்கள். டொமினிக் கும் அதுபிரச்சினையே இல்லை கிருஷ்ணா என்றார், எனக்கு நியாயமாகப் படவில்லை ஆட்சேபித்தேன். பதிப்பாளர்கள் பின்னர் திருத்தம் செய்தார்கள். நீங்கள் இணைய தளத்தில் அம்பை அல்லது மொழிபெயர்ப்பாளகளில் ஒருவரின் பெயரையோ தட்டிப்பார்த்தீர்களென்றால் ‘Zulma’ என்ற பிரெஞ்ச்சுபதிப்பகம் வெளியிட்டுள்ள ‘De haute lutte’க்கு வாசகர்கள் அபிப்ராயங்க்களை வைத்து அதற்கு எத்தகைய வரவேற்பிருக்கிறது என்று அறிவீர்கள். தமிழ் நூல்களுக்கு பெரும் வாசக வரவேற்பென்று தற்போதைக்கு எதுவுமில்லை. முதலில் தமிழ் படைப்புகள் சக மாநிலங்களில் எத்தகைய வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் அதன் பிறகு மேற்குலகு வரவேற்பை பற்றி பேசலாம்.

7.தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்து அளிக்கிறீர்கள். இரண்டுக்குமான பிணைப்பை இன்னும் வலுப்படுத்த முக்கியமாக என்ன செய்யவேண்டும். இருமொழியாளர்கள் இணைந்து ஏதும் செய்து வருகிறீர்களா?

Ambai 2
இது தனிமனிதனாக் செய்யும் விஷயமல்ல. பிரெஞ்சு படைப்புலகை பொறுத்தவரை அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் கொண்டு செல்லவேண்டுமென அக்கறைகொண்டு செயல்படுகிறார்கள். பதிப்பகங்களும், அரசாங்கமும் அவரவர் வழிமுறைகளில் தனித்தும் தேவையெனில் இணைந்தும் செயல்படுகின்றனர். தமிழில் அல்பெர் கமுய்யோ, லெ கிளேஸியோவோ வாசிக்கப்பட்டால்தான் தங்கள் படைப்பிலக்கியம் உலகில் அங்கீகாரிக்கப்பட்டதாகபொருள் என்கிற கனவெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. இருந்தபோதும் தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகம் இதனைக் கடமையாகக்கொண்டு புத்தகத்தின் பதிபுரிமை, மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையென அளித்து வெளிவரவேண்டுமென துடிக்கிறார்கள். இத்துடிப்பு நம்மவர்களிடத்திலும் வேண்டும். பிரெஞ்சு பதிப்பகங்கள் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பவர்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவிற்கு பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறுவதில்லை. நல்ல எழுத்துகள் சிபாரிசு அற்று பிரெஞ்சுப் பதிப்பகங்களிடம் போய்ச்சேரவேண்டும், பிரெஞ்சு பதிப்பகங்கள் வைத்திருக்கிற தேர்வுக்குழுவினருக்கு அவை திருப்தி அளிக்கவேண்டும்
8.பிரெஞ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பண்டைய காலத்து படைப்புக்கும் தற்கால படைப்புக்கும் இடையில் இருக்கும் நூதன வளர்ச்சியின் சிறப்பைக் காண்கிறீர்களா?

பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கியத்துறையை பண்டையகாலத்து படைப்பு தற்கால படைப்பென குறுக்கிவிட முடியாது. இந்தத் தற்கால படைப்பு பல படிகளைக் கடந்து பெறப்பட்டது. ஒவ்வொரு படிநிலையும் அவற்றை முன் எடுத்தவர்களால் உரிய வாதங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. மாற்றத்தை மூச்சாகக்கொண்டவர்கள் மேகுலகினர், மறுப்பு அவர்கள் இரத்தத்தோடு ஊறியது. ‘இருத்தல்’ என்பது இயக்கத்தால் நிரூபணமாவது, முடங்கிக் கிடப்பதல்ல. பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் தமிழ்மொழிபோல நெடிய வரலாற்றக்கொண்டதல்ல என்றபோதிலும் அதன் தொடக்ககாலத்திலிருந்தே ஏனைய பிறதுறைகளைபோலவே பல மாற்றங்களை சந்தித்தது. பிரான்சு நாட்டின் வரலாற்றில் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாம் கலை இலக்கியத்திலும் எதிரொலித்தன. முதல் இரு உலகப்போர்கள், பாசிஸத்தின் ஆதிக்கம், சமூகத்திலிருந்த ஏற்ற தாழ்வுகள், ஆட்சியில் சமயங்களுக்கிருந்த செல்வாக்கின் சரிவு, மொழியறிஞர்களால் திறனாய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இவை அனைத்திற்கும் மேற்குலகின் கலை இலக்கிய நூதன வளர்ச்சியில் பங்குண்டு, அது இன்றளவும் தொடர்கிறது.

9. பிரெஞ்சில் பின் நவீனத்துவத்தின் தற்போதைய நிலையென்ன – உங்கள் நாவல்கள் பின் நவீனத்துவம் சார்ந்த எழுத்தா?
அதுபோன்ற எந்த லேபிலையும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை. இன்றைக்கு மேற்குலகில் படைப்பாளி எவரும் தனது படைப்பு பின்நவீனத்துவம் என அறிவித்து எழுத உட்காருவதில்லை. அவரவர் படைப்பு சார்ந்து எடுத்துரைப்பில் உத்தியையும் வழிமுறையையும் கையாண்டு எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து பிரெஞ்சு படைப்புலகம் மிகச்சிறந்த எழுத்தாளர்களென்று ஏற்றுக்கொண்டிருக்கிற – அண்மைக்காலத்தில் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ, பத்ரிக் மோதியானோ உட்பட தங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவமென்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பின் நவீனத்துவத்தை மேற்குலகம் கடந்து, ஆண்டுகள் பல ஆகின்றன. உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் அமெரிக்கர்களிடம் அதிகம் புழங்கிய ஒரு முன்னொட்டு சொல் ‘பின்'(Post). அவர்கள் அமைப்பியல்(structuralism), பெண்ணியல் (feminism), காலனியத்துவம் (colonialism) போன்ற பலவற்றுடன் ‘Post’ஐச் சேர்த்திதிருக்கிறார்கள். ‘பின்’ என்ற சொல்லைக்கொண்டு சம்பந்தப்பட்டக் கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்சென்றார்கள் -குறிப்பாக அதற்கு முந்தைய கட்டத்தின் வீழ்ச்சியை வற்புறுத்திச்சொல்ல. இவற்றுள் பின் அமைப்பியல் வாதம், பின் பெண்ணியவாதம், பின் காலனியத்துவம் என்கிறபோது அதில் நியாயம் இருப்பதுபோல தெரிகிறது. ஏனெனில் அவைகளெல்லாம் ஒரு கருத்தியத்தியத்தின் கால அளவைக் குறிப்பிடுபவை. மாறாக பின்நவீனம் அல்லது பின்நவீனத்துவம் அத்தகைய நியாயத்துடன் ஒலிப்பதில்லை. இலக்கியத்தில் நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டம் பின் நவீனத்துவம் எனில்? நவீனத்துவத்தின் காலம் முடிந்துபோனதா?  பின் நவீனத்துவத்தைக் கோட்பாடாக வரையறுக்க முயன்ற ழான் பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard), ழாக் தெரிதா (Jacques Derrida) ழான் பொதுரிய்யார் (Jean Beaudrillard) மூன்று பிரெஞ்சுக்காரர்களுமே மெய்யியலாளர்கள், மொழியின் கூறுகளை ஆய்ந்து சில உண்மைகளை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் இலக்கியவாதிகளா என்றால் இல்லை. மொழியின் உபயோகம், சொற்களை வெட்டுதல், கூறுபோடுதல், சல்லடைகொண்டு சலித்தெடுத்தல் போன்ற, சோதனைச்சாலை ஆய்வு முடிவுகளெல்லாம் திறனாய்வாளர்களுக்கு உதவலாம் அல்லது பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் எடுபடக்கூடியவை. இலக்கியமென்பது அறிவைமட்டும் சார்ந்த விஷயமல்ல, புலன்களும் சேர்ந்தது. பின் நவீனத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்ட படைப்பிலக்கிய வாதிகளேகூட அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தவை எவை என்ற கேள்விக்கு கைகாட்டுவது, பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த டான் க்ய்க்ஸ்டோட்(Don Quichotte) நூலையும் கர்ணபரம்பரைக் கதையாக அறியப்பட்ட இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் பிறந்த ஆயிரத்தொரு இரவுகள் (Les Mille et Une Nuits) நூலையும், அது போன்றவற்றையும். ஆக பின் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டாலுங்கூட உந்துதலுக்கு அவர்கள் வழியிலேயே (ஆயிரத்தொரு இரவுகள் வழியில்) நாம் மகாபாரதத்தையோ? கருட புராணத்தையோ தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்; அறுபதுகளில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையை படித்து இருக்கிறேன், பின் நவீனத்துக்கு அது கூட நல்ல உதாரணம். அதன்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறுத்த ‘ பின்-பின் நவீனத்துவம்’ (Post -Postmodernism) குரல்கள் கேட்கின்றன. எத்தனை பின் வேண்டுமானாலும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப போட்டுக்கொள்ளலாம், நமக்கு வாசிக்கும்படி இருக்கவேண்டும்.
10. .இன்றைய தலைமுறையினரினிடையே பிரெஞ்ச் படைப்புகளை வாசிக்கும் வழக்கம் உள்ளதா?
பிரான்சு நாட்டிலும் வாசிக்கின்ற மனநிலை குறைந்துவிட்டதென்கிறார்கள். எனினும் அறிமுக எழுத்தாளர் என்றால்கூட குறைந்தது 5000 பிரதிகள் என்று அச்சிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுத்தன்றி வேறு பணிவேண்டாம். பெரிய எழுத்தாள்ர் எனில் ஐந்தாண்டுக்கு ஒரு நூலைக்கொண்டுவந்தால் கூட அவரால் நன்கு ஜீவிக்க முடியும்.
11. தற்கால பிரெஞ்ச் படைப்பாளிகளின் சிறந்த படைப்பு சிறந்த எழுத்தாளர் என நீங்கள் கருதுபவர்களைக் குறித்து சொல்லுங்களேன்

இதற்கு முன்பு கூறியதுபோல பிரெஞ்சு இலக்கியத்திற்கு தற்போதைக்கு நவீனமென்றோ, பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag). இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென: லெ கிளேசியோ (Le Clézio) பத்ரிக் மொதியானோ(Patrick Modiano), மிஷெல் ஹூல்பெக் (Michel Houelbeque) ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ருஃபன் (Jean-Christophe Rufin) நினைவுபடுத்த முடிந்த சிலர்.
13. ஆங்கில படைப்புகளில் நீங்கள் இந்த வருடம் விரும்பி வாசித்த 5 புத்தகங்கள் என்னென்ன?
இவ்வருடம் ஆங்கில படைப்புகளென்று வாசித்தது குறைவு. தாமஸ் பின்ச்சன் (Thomas Pynchon) எழுதிய “The Crying of Lot 49” நாவலை வெகுகாலமாய் வாசிக்க நினைத்து, அண்மையில் அமெரிக்கா போயிருந்தபோது வாங்கிவந்திருந்தேன். அடுத்தது கிரண்தேசாய் எழுதியிருந்த The Inheritance of Loss என்ற நாவல். இந்த இரண்டு ஆங்கில நாவல்கள்தான் இந்த வருடத்தில் நான் வாசித்தவை. இரண்டுமே வருட ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை. காலச் சுவடுக்காக Albert Camus யுடைய L’homme révolté என்ற நூலை மொழிபெயர்க்கிறேன் நேரம் சரியாக இருக்கிறது, திரும்பத் திரும்பப் பலமுறைவாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிற வாசிப்புகள் குறைவு .
14. நீலக்கடலுக்கான தமிழ் நாடு அரசின் விருது பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பெற்றுவரும் விருதுகள் படைப்புக்கான ஊக்கத்தை அளிப்பதாக உணர்கிறீர்களா?
2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற மற்றொரு நாவலுக்கும் கிடத்திருக்கிறது. இரண்டும் பின்வாசல் அணுகுமுறையால் பெறப்பட்டதல்ல என்பதால் உண்மையில் பெருமை. இதுபோன்ற அங்கீகாரங்கள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியவைதான். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியை விருதைக்கொண்டு அடையாளப்படுத்த முடியாது. உண்மையைசொல்லட்டுமா சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் இருவேறு துருவங்கள் என்கிறபோதும் அவர்கள் விருதுகளால் அடையாளம் பெற்றவர்கள் அல்ல. பிரான்சு நாட்டிலும் நிறையபேரை சொல்ல முடியும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காணும் வாசக நண்பர்கள் நடு நிலை திறனாய்வாளர்கள் தமிழிலும் இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் எனக்குக் கிடைத்த கூரை அவர்கள் வேய்ந்ததுதான்.
15. இந்த வருட புத்தகக்கண்காட்சிக்கு வெளிவரும் தங்களின் படைப்புகள் என்னென்ன?
காலச்சுவடுக்காக ஒரு மொழிபெயர்ப்பு – அல்பெர் கமுய்யுடையது, பிறகு நண்பரும் திறனாய்வாளருமான க.பஞ்சாங்கத்தைக்குறித்து இலங்கு நூல் செயல்வலர் என்றொரு புத்தகம் என்ற இரண்டு நூல்களும்.
நன்றி. ,  மதுமிதா , சூரியகதிர்

 

———————————————————————————————————-

பிரான்சு நிஜமும் நிழலும்- 8 : குடிமக்களும் ஆட்சியாளர்களும் -1.

“Arrête ce cinéma” என அலறுகிறார் ஒரு மேயர் அவருக்கு என்ன பிரச்சினை. நகரில் கேட்பார்ற்றுச் சுற்றித் திரிகிற ஒன்றிரண்டு மாடுகள் தான் பிரச்சினை. அலறிய இடம். நீதிமன்றம்.

 
இரவு பதினோறு மணிக்குக் களைத்து படுக்கிறார். விவேக்கின் பிரெஞ்சு மேக் உள்ளூர்வாசி ஒருவர், “சன்னலை திறந்தால், தெருவாசலில் ஒரு பசுமாடு நிற்கிறது, நகராட்சி காவல் துறைக்கு போன் போட்டு அரைமணி ஆயிற்று, இதுவரை பதிலில்லை, ஏதாவது செய்ய முடியுமா? இந்த மாட்டை அப்புறப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடியுமா?” என மறுமுனையில் கேட்டுக்கொண்டால், தொலைபேசியை எடுத்த மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் படுக்கை, மனைவி எல்லாம். தவறினால் நீதிமன்றத்தில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தலாம்.

 
“1988ம் ஆண்டே மாட்டுக்குச் சொந்தக்காரருக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டது 2004ம் ஆண்டு மேயரானேன், சம்பந்தப்பட்ட நபருக்கு பல கடிதங்கள் நகராட்சியின் சார்பில் எழுதியிருக்கிறேன். எனினும் அவருடைய மாடுகள் எங்கள் நகராட்சியின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் அவ்வப்போது சுற்றித் திரிவது தொடர்கின்றது. அம்மாடுகளை பிடித்துச்சென்று அடைத்தும் பார்த்தாயிற்று, ஒவ்வொரு முறையும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லும் மாடுகளுக்குச் சொந்தக்காரர், மாடுகளை கவனியாமல் அலைய விடுவது தொடர்கிறது. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு இங்கு வரவேண்டிய தாயிற்று”  என நீதிமன்றத்தில் புலம்பிய மேயர் “ரூலான்ஸ்’ என்ற நகரைச் சேர்ந்தவர். உள்ளூரின் நிர்வாகப் பிரச்சினைகளோடு, சுற்றித்திரியும் மாடொன்று ஒரு நாயை முட்டினால் கூட, காற்றில் ஒரு மரக்கிளை முறிந்து அப்புறப்படுத்தாமல் கிடந்தால் கூட ஒரு மேயர் தண்டிக்கப்படலாமென பிரெஞ்சு சட்டம் சொல்கிறது.

 
நாட்டின் அதிபர் பிரான்சு நாட்டின் கப்பல் கட்டும் தளமொன்றிர்க்கு (Saint-Nazaire) வருகை தருகிறார். அங்கிருந்த தொழிலாளர்களுடன் வரிசையாக கைகுலுக்கிக்கொண்டு வருகிறார் ஆனால் ஒர் இடது சாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் (Sébastien Benoît), அதிபர், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாகக்கூறி, அவருடன் கை குலுக்க மறுக்கிறார். நீங்கள் பிரெஞ்சு குடிமகனாக இருந்தால், தனி ஆளாக நின்று மேயரை மட்டுமல்ல நாட்டின் அதிபரைக்கூட சாலையில் தடுத்துநிறுத்தி பிரச்சினைகளை வைக்க, உங்கள் கோபத்தைக்காட்ட, விமர்சிக்க முடியும் என்பதற்கு அண்மை உதாரணம் இது. இந்த பிரெஞ்சுக் குடி மகன் யார்?

 

பிரெஞ்சுக் குடியுரிமை.

 

பிரான்சு நாட்டில் பிரெஞ்சுக் குடியுரிமை நான்கு வழிமிறைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது:
1. Droit du Song இரத்த அடிப்படையிலான உரிமை: பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் பிரெஞ்சுக் குடிமகனாக இருப்பின் அவர்களுடைய குழந்தையும் இயல்பாகவே பிரெஞ்சுக் குடிமகனாக முடியும்.

 

2. Droit du sol: பிறந்த இடத்தை அடிப்படையாகக்கொண்ட உரிமை: இது இரு வகைப்படும்:

 
அ. Double droit du sol: பிறந்த மண்சார்ந்த (பிரான்சு) சார்ந்த இரட்டை உரிமை இதன்படி பெற்றோர் வெளிநாட்டினராக இருந்து, அவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டில் பிறந்திருந்து, அவர்களுடைய குழந்தை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால், இவ்வுரிமையின் அடிப்படையில் குடியுரிமைத் தானாகக் கிடைக்கும்.

 

ஆ. Droit du sol simple différé: பிறந்த நாட்டின் அடிப்படையிலான ஒற்றை உரிமை: பெற்றோர்கள் இருவருமே வெளிநாட்டில் பிறந்தவர்களாக இருந்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால் குடியுரிமைக்கு வழியுண்டு. பதினாறுவயதிலிருந்து விண்ணப்பிக்கலாம். தவிர பதினோறு வயதிலிருந்து தொடர்ந்தோ, விட்டுவிட்டோ ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்திருக்கவேண்டும். பதின்மூன்று வயதிலிருந்து பதினாறு வயதிற்குள் விண்ணப்பம் செய்த்வதாக இருப்பின் பிள்ளையின் பெற்றோர் அதனைச் செய்யவேண்டும்.

 

3. Naturalisation – தனது பூர்வீகக் குடியுரிமையைத் துறந்து பிரான்சுநாட்டின் குடியுரிமையைப் பெறும் முறை. சட்டப்படியான தகுந்த வயதை அடைந்து, குறைந்தது ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு வெளிநாட்டவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர் உயர்கல்வி பெற்றவராக இருந்தாலோ, அவரால் பிரான்சு நாட்டிற்குப் பயன்கள் உண்டு என அரசாங்கம் நினைத்தாலோ இரண்டு ஆண்டுகள் பிரான்சு நாட்டில் தங்கியிருந்தாலே போதுமானது. ஆனால் நீதிமன்றத்தால் அவர் தண்டிக்க்பட்டவராக இருக்கக் கூடாது. ஆனாக் இவ்வகை விண்ணப்பத்தை அரசாங்கம் காரணத்தை வெளிப்படையாகக்கூறாமல் நிராகரிக்க முடியும். தவிர நேர்காணலில் விண்ணப்பதாரர் பிரெஞ்சு மொழியில் அவருக்குள்ள தேர்ச்சியையும், பிரெஞ்சு சமூகத்துடனும், பண்பாட்டுடனும் அவர்க்குள்ள இணக்கத்தை உறுதி செய்தல்வேண்டும்.

 

4. Le Mariage – திருமணத்தின் அடிப்படையிலும் குடியுரிமை கோரலாம். பிரெஞ்சு குடுடியுரிமைபெற்ற ஓருவரை மணமுடித்த ஆண் அல்லது பெண் நான்காண்டு குடும்ப வாழ்க்கைக்குப்பிறகு விண்ணப்பிக்கவேண்டும், விண்ணப்பிக்கும் தருணத்தில் விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவி பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இருக்கவேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதிகளாக இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குபிறகு விண்ணப்பிக்கலாம். இங்கும் விண்ண்ப்பதாரர் பிரெஞ்சு மொழி தேர்ச்சி, பிரெஞ்சு பண்பாடு, சமூகம் இவற்றுடனான ஆர்வம் இவற்றை உறுதி செய்வது அவசியம்.
2010 கணக்கின்படி 143000 வெளிநாடினர் புதிதாக பிரெஞ்சுக்குடியுரிமை பெற்று பிரான்சு நாட்டில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரான்சு நாட்டில் குடி உரிமை மறுத்து அந்நியர்களாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடருகிற மக்களும் இருக்கவே செய்கின்றனர். பிரான்சு நாட்டின் மக்கள் தொகையில் அவர்களின் விழுக்காடு ஆறு. அதாவது 3.8 மில்லியன் மக்கள்

 

வாக்குரிமை – பெண்கள், அந்நியர்கள்

 

பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில் சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ழ்வாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789 வாக்கில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதே கடைபிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமை இருந்த்து. பிரெஞ்சுப் புரட்சியில் பெண்கள் பங்கெடுத்திருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர்வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அவர்கள் ஒன்றரை நூற்றாண்டுகாலம் தங்கள் வாக்கைப்பயன்படுத்த காத்திருந்தார்கள். 1944ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 21ந்தேதிதான் பிரெஞ்சுப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை ஆண்களுக்கு ஈடாகப் பெற்றார்கள். தவிர 1946 வரை மேற்கு ஐரோப்பா பிரெஞ்சுப் பிரதேசத்தில் வசித்த ஐரோப்பியர்களுக்கே வாக்குரிமை இருந்தது. பிரான்சு நாட்டின் கடல்க்டந்த பிரதேசங்களில் வாழ்ந்த கறுப்பரின மக்களுக்கும் பிரான்சு நாட்டின் காலனி மக்களுக்கும் ஓட்டுரிமை இல்லை. அவ்வாறே 1988வரை நிரந்தர முகவரி இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. 18வயதை அடைந்த ஆணும் பெண்ணும் வாக்குரிமையைப் பயன் படுத்த முடியுமென்றாலும் இந்த உரிமையை பிரான்சு நாட்டில் வாழும் பிரெஞ்சுக் குடிமைபெற்ற பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்த மக்களே பயன்படுத்த முடியும். அவர்களைப்போலவே பிரெஞ்சுக் குடியுரிமையற்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் (உதாரணம் :ஜெர்மன், இங்க்கிலாந்து குடியுரிமையைப் பெற்றவர்களும் பிரான்சு நாட்டின் தேர்தல்களில் வாக்கு அளிக்க முடியும்) ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் வசித்தாலும் அவர்கள் சட்டத்திட்குட்பட்ட பிரஜைகளாக, நாட்டின் பொருளாதாரம் பிற துறைகளில் உதவுபவர்களாக இருப்பினும் பிரெஞ்சு குடியுரிமையைத் தேர்வு செய்யாததால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.

(தொடரும்)

பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்

மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.

 
பிரான்சு நாட்டின் நிலப்பரப்பு 675000 ச.கி.மீ, இந்தியாவின் நிலப்பரப்பில் (3288000 ச.கி.மீ) ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு ஆனால் மக்கட்தொகையில் இந்தியாவினும் பார்க்க பலமடங்கு குறைவு (67.5 மில்லியன் மக்கள்). ஹெக்டார் ஒன்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மக்கட்தொகை என்பதால் பொருளாதாரப் பகிர்வில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லை. கிருத்துவ மதம் 80 விழுக்காடு மக்களின் மதமாக இருந்தபோதிலும், தீவிரமாக மதச்சடங்குகளை; சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் குறைவு. இனவெறி, நிறபேதம் ஆகியவை அண்மைகாலங்களில் தலைதூக்கியிருப்பது உண்மை என்கிறபோதும் நாஜிக்கள் கால அனுபவங்களை நினைவுகூர்ந்து, அக்கொடூரங்களைத் திரும்ப அழைப்பதில்லை என்றிருப்பவர்களே அதிகம். நாட்டின் ஒரே மொழியாக பிரெஞ்சு இருப்பது மிகப்பெரிய அனுகூலம்.

 
பொதுவாகவே பிற ஆயுதங்களினும் பார்க்க மொழி ஆயுதம் ஒப்பீடற்றது. தங்கள் மொழியின் பலத்தை அதன் வீச்சை மேற்கத்தியர்கள் நன்கு உணர்ந்தவர்கள். மார்க்ஸ் சமயத்தை போதைப்பொருள் என்றார். எனக்கென்னவோ மொழிதான் போதைப்பொருளாகப் படுகிறது. மேற்கத்தியர்கள் கொண்டுவந்த ஆங்கிலமும், பிரெஞ்சும், ஸ்பானிஷும்- உலகின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி இவைதான் என கற்பிதம் செய்யப்பட்டபோதையில் மயங்க்கிக் கிடக்கிறோம். கல்வி, அறிவியல், மற்றும் பொருளாதார வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இன்று உலகின் இயல்புகளை இம்மொழிகள் புரட்டிப்போட்டிருக்கின்றன. இப்போதைக்கு அசலான சிகிச்சை அளித்த நாடுகள் மீண்டிருக்கின்றன. தங்கள் மொழிக் கயிறுகொண்டு உலகின் பல பகுதிகளில் சுதந்திரக் குரல்வளைகள் வெகு எளிதாக நெறிக்கப்பட்டன. அதிகாரத்தால், பொருளால் சாதிக்காததை மொழியால் சாதித்தார்கள். சிறுபான்மையினரை அடிமைப் படுத்த மொழி ஒர் ஆயுதம். காலனி ஆதிக்கத்தின்பேரால் பிற நாடுகளை இவர்கள் தேடிச் சென்றபோதும், இன்று அகதிகளாக இவர்களைத் தேடிவரும் மக்களிடமும் – இவர்களின் மொழிதான், அற்புத விளக்காக அட்சயபாத்திரமாக கையில் கொடுக்கப்படுகிறது- இவர்கள் கொடுக்கும் அட்சய பாத்திரம் மணிமேகலைக் கையிலிருக்கிற அட்சய பாத்திரமல்ல, பரதேசிகள் கையிலிருக்கும் திருவோடு, பிச்சையெடுக்க மட்டுமே பயன் தரும். நம்மைப் பிச்சைகார்ர்களென அவர்கள் மேற்குலக நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன.

 
உண்மயைச்சொல்லப்போனால் பிரான்சு நாடு மேற்கு ஐரோப்பிய நாடுமட்டுமே அல்ல. அதன் பெரும் அளவு நிலப்பரப்பு ஐரோப்பாவில் இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். கிட்டத்தட்ட 1000 கி.மீ நீளம் கிழக்கு மேற்காகவும் 1000கி.மீ நீளம் வடக்குத் தெற்காகவும் பரந்துகிடக்கிற மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பிரான்சு நாட்டின் 22 பிராந்தியங்களிலும் (தற்போதையை கணக்கின்படி கூடிய விரைவில் நிர்வாகச் செலவைக் குறைக்க இவற்றில் பதினைந்து பிராந்தியங்களை ஒன்றோடொன்று இணைத்து ஏழு பிராந்தியங்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது) தென் அமெரிக்காவில் கயானா; அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள குவாதுலூப், மர்த்தினிக் முதலான பிராந்தியங்கள்; பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு போலினெஸி, நூவல் கலெதொனி பிராந்தியங்கள்; இந்தியப் பெருங்கடலிலுள்ள ரெயூயூனியன், மயோத் முதலானவை; பிறகு அண்டார்டிக்க்கில் ‘லா த்தேர் அதெலி’ ஆகிய அனைத்துப் பிரதேசங்களிலும் புவியியல் அமைப்பு,இனம், சமயம், பண்பாடு என மக்கள் வேறுபட்டிருப்பினும் அவர்களை அடக்கியாள நாட்டின் ஒரு மொழிக் கொள்கை உதவுகிறது. பிரெஞ்சு மொழிதான் பிரதான மொழி. பிரெஞ்சுப் பிரதேசங்களைப் பற்றி எழுத நினைத்த இவ்வேளையில், மொழிக்கும் பிரான்சுநாட்டின் அதிகாரத்தை ஆளுமையை திடப்படுத்தும் ஊட்டசக்தியாக பிரெஞ்சு மொழியின் பயன்பாடு இருக்கிறது என்பதைக் கூறுவது அவசியமாகிறது. பிரான்சு நாட்டில் பிராந்திய மொழிகள் உதாரணத்திற்கு அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் போன்றவை இருக்கின்றன. ஆனால் அவை இன்று செல்வாக்கின்றி இருக்கின்றன. இவற்றின் காரணத்தை விளங்கிக்கொண்டால் எதிர்காலத்தில் தமிழுக்கும் அப்படியொரு நிலமை ஏற்படாதவாறு தடுக்கவியலும், குறிப்பாக ‘தமிழ் வாழ்க’ என மேடையேறும் கூட்டம் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.
அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் எனப் பல மொழி சிறுபான்மை மக்களிடையே ‘கனாக்’ மக்கள் மேற்குலக ஐரோப்பியரிடமிருந்து இனத்தால், பண்பாட்டால், மொழியால் வேறுபட்டவர்கள். தாங்கள் அடிமைப் பட்டிருப்பதாக நினைத்தார்கள், தங்கள் இருத்தலை தெரிவிக்க நினைத்தார்கள். ‘இதுவரை சரி ! இனி சரிவராது !’ எனச் சொல்ல நினைத்தார்கள். அவ்வப்போது கிளர்ச்சியில் இறங்குகிறார்கள், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் கிளர்ச்சி அடைந்தால் விடுதலை தவறினால் அவர்களின் உயிரிழப்பில் முடிந்த்தாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன. கனாக் மக்கள் விடயத்திலும் அதுதான் நடந்த து.

 

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேதி 22: நாட்டில் அதிபர் தேர்தல் முதற் சுற்று நெருங்கிகொண்டிருந்த நேரம், பிரான்சு நாட்டுக்குச்சொந்தமான கடல் கடந்த பிராந்தியங்களில் நூவல் கலெதொனி பிராந்தியத்தில், கனாக் சோஷலிஸ்ட் விடுதலை முன்னணி (Front de la Libération nationale Kanak Socialiste) அமைப்பைச் சேர்ந்த இரு அங்கத்தினர்கள், யூனியன் கலெதொனியன் அமைப்பின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த அல்போன்ஸ் தியானு என்பவரைச் சந்திக்கிறார்கள். FLNKS உறுப்பினர்கள் இருவரும், யூனியன் கலெதொனியன் இளைஞரைச் சந்தித்த நோக்கம் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது. ஏற்கனவே அப்படியொரு கோரிக்கையையை முன்வைத்து காவல் நிலையமொன்றை முற்றுகையிட அவர்கள் கோரிக்க நிறைவேறியுள்ளது. ஆனால் இம்முறை அவர்கள் கோரிக்கை: நடக்கவிருக்கும் தேர்தலில் குறிப்பாக பிராந்திய நிர்வாகத் தேர்தலில் வாக்களிக்கிற உரிமை தீவின் பூர்வீக மக்களுக்கே உரியதென்றும்; அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட ஐரோப்பியருக்கு தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்க உரிமை இல்லையெனக்கூறி அரசாங்கத்திடம் தேர்தலை நடத்தக்கூடாதென்றார்கள். காவல் நிலையத்தை முற்றுகையிட முனைந்தபோது காவலர்கள் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இரண்டு காவலர்கள் உயிரிழக்கிறார்கள். காவல் நிலைய முற்றுகை இப்படியொரு இக்கட்டான் நிலமையில் முடிந்ததற்கு யூனியன் கலெதொனியனே காரணமென சொல்லப்படுகிறது. சிறை பிடித்தவர்கள் பிணைக்கைதிகளுடன் இரு பிரிவாக ஆளுக்கொரு திசைக்குச் சென்றனர். ஒரு பிரிவு அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு நிர்வாகத்திற்கு அடிபணிந்து சரணடைந்தது. மற்றொரு பிரிவு இடது சாரி அதிபர் பதவிலிருந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என நினைத்தார்கள். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்தது.

 

 

அப்போது அதிபராக சோஷலிஸ்டுக் கட்சியை சேர்ந்த பிரான்சுவா மித்தரான் என்பவரும் பிரதமராக வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் என்பவரும் இருந்தார்கள். இருவரும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள், எதிரெதிர் அணியில் நின்றார்கள். இப்பிரச்சினையில் கனாக் சுதந்திரப்போராளிகளுக்கு ஆதராவக எந்த முடிவினை எடுத்தாலும் அது பெருவாரியான ஐரோப்பிய பிரெஞ்சு மக்களின் வாக்கினை இழக்கக் காரணமாகலாம். எனவே வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ராணுவத் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளாக உள்ள காவலர்களை மீட்பதென்று முடிவெடுத்தார். இடதுசாரி அதிபர் மித்ரானும் இதை ஏற்கவேண்டியக் கட்டாயம். விளைவாக ‘விக்டர் நடவடிக்கை யினால்’ (Opération Victor) 19 கனாக் போராளிகளைக் கொன்று ராணுவம் பிணைக்கைதிகளாக இருந்த காவலர்களை ராணுவம் மீட்டது. இந்நடவடிக்கையில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பல போராளிகளை அவர்கள் பிடிபட்டபிறகு கொல்லப்பட்டார்கள் என்ற விமர்சனத்தை மனித உரிமை ஆணையம் வைத்திருக்கிறது. கனாக் அமைப்பினர், ராணுவம், நூவல் கலெதொனி தொடர்ந்து பிரெஞ்சு நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்கிறவர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கைக் குறித்து மாறுபட்ட கருத்தினை வைக்கிறார்கள். இந்நிலையில் வேறுவழியின்றி FLNKS பிரதிநிதி அரசாங்கத்த்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு சில உறுதிமொழிகளைப் பெற்றதைத்தவிர பெரிதாக பலனேதுமில்லை. அதிலொன்று 2014 -2018க் குள் பூர்வீகமக்கள் விரும்பினால் படிபடியாக ராணுவம், காவல்துறை, நீதித்துறை, நாணயம் இவை நீங்கலாக பிறவற்றில் சுதந்திரமாக செயல்படுவதற்கான அனுமதி. ஆனால் இவையெல்லாம் உண்மையில் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. நூவல் கலெடொனிதவிர, கோர்ஸ், பாஸ்க் மக்கள் கூட தங்கள் சுதந்திரத்திற்காக கனவுகொண்டிருப்பவர்கள்தான்.

 

ஆக 1960 களில் ‘நூவல் கலெதொனி ‘பூர்வீக மக்கள் சொந்த நாடு குறித்த கண்ட கனவு 1988ல் சிதைந்த கதை இது. பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சிக்குப் பின் பிரெஞ்சு குடிமக்களுக்கு அறிவித்த ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ பொய்யாய் பழங்கதையாய் போனகதையின் சுருக்கம்.
.
———————————————————

மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -3

வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்
(‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் குறித்து முனைவர்.க.பஞ்சாங்கம்)kirushnappar_nayakar__21225

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.
செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.

இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.
இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.
மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.
மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.
அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.
“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.
இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.
வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.
இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.
ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.
நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.
‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013

————————————————————————————

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

————————————————————————————————————————————

மொழிவது சுகம் செப்டம்பர் -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

“காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு விளக்கம் தருகிறார். வீதியில் நடந்துபோகிறீர்கள் ஆயிரம்பேரில் ஒருவர் தனித்துத் தெரிவார். எஞ்சியிருக்கிற 999 பேர்கள் நிர்ணயித்தியிருக்கிற ஒழுங்குகளிலிருந்து தோற்றத்திலோ நடையிலோ அவர் முரண்பட்டிருக்கக்கூடும். அது அம்மனிதரின் விருப்பத்தின் பேராலும் நடக்கலாம், விருப்பமில்லாமலும் நடக்கலாம். மரபுகளை மீறுவதில், மறுப்பதில், முடியாது என்பதில் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பது உண்மை. இருட்டை மறுப்பது, அதனுடன் முரண்படுவது எடிசனுக்கு அவசியமாயிற்று. அதேவேளை மறுப்பெல்லாம் புரட்சியாகிவிடமுடியாது. அம்மறுப்பு மறுப்பாளனின் சமூகத்திற்காக அல்லது மனிதகுலத்திற்காக நடைபெறவேண்டும், அல்பெர் கமுய்யின் l’homme révolté வற்புறுத்துவது அதைத்தான். விளைவது நன்மையெனில் எவ்வித நிர்ப்பந்தமுன்றி உங்கள் மறுப்பிற்கு வலுவூட்ட பகிர்ந்துகொள்ள எஞ்சியிருக்கிற 999 பேர்களும் என்றில்லாவிட்டாலும் கணிசமான எண்ணிக்கையினர் முன்வருவார்கள், துணைநிற்பார்கள். மறுப்பின் பலனால் நன்மையெனில், அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பைக் காலம் எடுத்துக்கொள்ளும் இரண்டு உலக யுத்தங்களும் அதன் விளைவுகளும், மேற்கத்திய கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் கோபத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுகளே இப்புதுமைகளெல்லாம். ஓர் இலக்கியப் படைப்பு கலை நுட்பத்தை அனுமதிக்கலாம், ஆனால் அதன் அடிநாதமான கலையை அதன் உணர்வுகளை, அழகியலை நிராகரிக்கிற; கலையைத் தொழில் நுட்பத்த்தால் ஆக்ரமிக்கிற முயற்சிகள் உகந்ததல்ல. சுதந்திரத்திற்குக்கூட எல்லைகள் அவசியம். எல்லைகள் மீறப்படுகிறபோது அங்கு குழப்பங்களும் கலவரமுமே மிஞ்சும். எந்தச் சுதந்திரத்தை வேண்டி நின்றார்களோ அச்சுதந்திரமே சீற்றமெடுக்கிறபோது, சம்பந்தப்பட்டவர்களைப் பலிகொண்டதாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

தன்நிகழ்பாடு படைப்பை மீ எதார்த்த்வாதத்திடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதென்பது உண்மைதான். ஆனால் இம்முறையிலான எழுத்துமுறை திடீரென்று வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. மெய்யியிலாளர்களுக்கும், உளவியல் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. மீஎதார்த்தவாதத்திற்கு முன்பாகவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கற்பனை நவிற்சிவாதிகளில் சிலர் குறிப்பாக ஹைன்ரிக் ஃபொன் கிளைஸ்ட் (Heinrich Von Kleist), நியாயம் நிராகரிக்கிற இருண்மைகளை இலக்கியத்தில் பயன்படுத்திக்கொள்வதென தீர்மானித்தது கி.பி 1810லேயே நடந்தது. தன்நிகழ்பாடு படைப்பூடாகத் தோற்றப்பாடு ஒப்புமைகளை, குறிப்பாக ஆழ்மனதின் விழிப்பை, ஆவி வசப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை மீ எதார்த்ததிற்கு முன்பாகவே எழுத்தாக்க முனைந்திருக்கிறார்கள், கற்பனை நவிற்சிவாதிகளின் இம்முயற்சி அப்போது பகுத்தறிவு வாதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டது. 1889ம் ஆண்டில் ஜெர்மனைச் சேர்ந்த மெய்யியல் வல்லுனர் மெயெர் (Meyer), ஓர் உளவியல் ஆய்வு அமைப்பை நிறுவி ‘டெலிபதி’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஹிப்னாட்டிஸம், உளப்பகுப்பாய்வு போன்ற ஆழ்மனதை அறிவதற்கு எடுத்துக்கொண்ட அறிவியல் முயற்சிகள் பின்னாளில் இலக்கியத்தில் புது முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு உதவியது. ஆக மீஎதார்த்தவாதிகளுக்கு முன்பாகவே தன் நிகழ்பாடு எழுத்திற்கு வித்திடப்பட்டுவிட்டது, அதன் பலனை அறுவடைசெய்தவர்கள் என வேண்டுமானால் மீ எதார்த்தவாதிகளைக்கூறலாம். அவான் கார்டிஸ்ட்டுகள் (avant-gardistes) அல்லது நவீன கலை மற்றும் பண்பாடுகளுக்கு முன்னோடிகள் எனக்கூறிக்கொண்டவர்கள் செய்தப் பிரச்சாரமும், பேரார்வத்துடன் இலக்கியத்தில் இயங்கியவர்களை விருப்பம்போல கலையையும் இலக்கியத்தையும் கையாளவைத்தது, எனவே அதனையும் மீ எதார்த்தத்திற்கும், தன் நிகழ்பாடுஎழுத்திற்கும் ஒரு காரணி எனலாம். 1889ல்  “உளவியல் தன்நிகழ்பாடு”(l’automatisme psychologique) என்கிற சொல்லை முதன் முதலாக உபயோகித்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய உளவியல் அறிஞர் எனக்கொண்டாடப்படுகிற பிரான்சு நாட்டைசேர்ந்த பியெர் ழனெ(Pierre Janet). அவர் தன்னுடைய உளவியல் தன்நிகழ்பாட்டிற்குத் தந்த விளக்கம்: “மனிதச் செயல்பாடுகளில் எளிமையானதும் அடிப்படையானதும்”. அவர் இருவகையான தன்நிகழ்பாடுகளைக் கூறுகிறார்: ஒன்று முழுமையான தன் நிகழ்பாடு, மற்றது முழுமையல்லாத தன்நிகழ்பாடு. இவ்விரண்டு தன்நிகழ்பாடுகளும் ஆழ்மனதின் பரப்பை அடிப்படையாகக்கொண்டவை. அடுத்ததாக ஆந்தரே ப்ரெத்தோன் (André Breton), பிலிப் சூப்போ (Philippe Soupault) என்பவருடன் இணைந்து எழுதி 1919ல் வெளிவந்த “காந்தப் புலங்கள்”(‘les champs magnétiques) பிறகு 1924ம் ஆண்டு அவரே எழுதிய “மீஎதார்த்த சித்தாந்த விளக்கம் (Manifeste du surréalisme ) என்ற நூலிலும் மீஎதார்த்த கோட்பாட்டிற்கு விளக்கங்கள் கிடைத்தன. அதன்படி “பேச்சு ஊடாகவோ, எழுத்தின் வழியோ அல்லது வேறு வழிமுறைகளிலோ சிந்தனையின் உண்மையான செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் உளவியல் தன்நிகழ்பாடு”. பாரீஸில் கண்ணுக்குப் புலப்படுகிற பொருளைமட்டுமே வரைவது (Art figuratif), என்ற இயக்கம் மும்முரமாக செயல்பட்டகாலத்தில், அதற்கு எதிராக மீஎதார்த்தத்தின் தாக்கத்தில் அரூப ஓவியங்களில் நாட்டங்கொண்ட கனடா நாட்டு ஓவியர்களில் சிலர் 1940களில் தன்நிகழ்பாட்டில் கவனம்செலுத்தினார்கள், அவர்களைத் தொடர்ந்து கவிஞர்கள் சிலரும் இத்  ‘தன் நிகழ்பாடு’ எழுத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். தன் நிகழ்பாடு என்ற எழுத்துமுறையின் புரவலர்கள் மீஎதார்த்தவாதிகள் (Surréalistes), கற்பனை நவிற்சிவாதத்தை(Romantisme) அதீதக் கற்பனை என்ற இவர்கள்தான் அதீதக் கற்பிதத்தை எழுத்தில் திணித்தார்கள் என்பது சகித்துக்கொள்ள முடியாத முரண்நகை.

ஆ: சிரியா
சிரியா நாட்டின் குழந்தையொன்று போரின் காரணமாக ஐரோப்பிய நாடொன்றிர்க்கு அகதிகளாகக் குடும்பத்துடன் புற்றப்பட்டபோது கடல் விபத்தில் இறக்க, சடலம் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது, உலகறிந்த செய்தி. அப்புகைப்படம் உலகத்தின் மன சாட்சியை உலுக்கியதோ என்னவோ, ஐரோப்பிர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது 4மில்லியன் ஏழை மக்கள், அகதிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜோர்டான், லிபி, துருக்கி, ஈராக்கென்று, அகதிகள் முகாம்களில் குவிந்ததுபோக, ஆட்கட த் தல் தொழில் செய்பவர்களுக்குப் பணத்தை ஏற்பாடு செய்வதற்கு முடிந்த வசதி படைத்தவர்கள், நடுத்தர குடும்பங்ககள் வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இம்மக்களை ஏற்பதற்கு எல்லைகளில் இருக்கிற இஸ்லாமிய நாடுகள் முன்வருவதில்லை. இதில் செல்வத்தில் கொழிக்கும் வளைகுடாநாடுகளும் அடக்கம். அவர்கள் அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லையாம், மகாக்கேவலமான சப்பைக்கட்டு. சிரியா பிரச்சினையில் அம்மக்களின் பிரச்சினைகளினும் பார்க்க சிரிய அதிபர் பஷாரெல் ஆஸாத் திற்கு ஆதரவாளர் அணி எதிரிகள் அணி அவரவர் சுயலாபத்தை அடிப்படையாகக்கொண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பிரிந்தும் சிரியா தீர்வு எதையும் எட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். யுத்தத்தை தொடர்ந்து அனுமதிப்பதிலும் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது, காலம்காலமாக காப்பாற்றிவருகிற கௌளவுரவத்திற்கும் எதுவும் நேர்ந்திடக்கூடாது என்ற சூழலில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சும் – ஜெர்மனும் அகதிகள் எந்த விகிதாச்சாரத்தில் பகிர்ந்துகொள்ளலாமென ஆலோசிக்கிறபோது, மேற்கத்தியர்களின் மற்றொரு தரப்பு: கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேச்சே வேண்டாம் என்கிறார்கள். செக் நாடு கிருஸ்துவர்களை மட்டும் அகதிகளாக ஏற்போம் என்கிறது. ஹங்கேரி ஒருவரும் வேண்டாம் என்கிறது. பிரச்சினை அகதிகள் மட்டுமல்ல, காம்ரேட்டுகள் நிர்வாகம் வைத்துவிட்டுபோன தரித்திரம் இன்னும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிறது. அம்மி குழவியே காற்றில் பறக்கிறபோது, அவர்கள் என்னசெய்வார்கள். அகதிகளை ஏற்பதா கூடாதா என்ற விவகாரம் அரசாங்கங்களிடம் மட்டுமல்ல மேற்கத்திய மக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு தத்துவவாதிகளுள் ஒருவர் பெர்னார் ஆரி லெவி (Bernard-Henri Lévy): “சிரியா குழந்தையின் ஒதுங்கிய சடலத்தின் புகைப்படம் என்னை உலுக்கிவிட்டது, நமக்கொரு பாடத்தை புகட்டியிருக்கிறது” எனக்கூற , மற்றொரு தத்துவவாதி மிஷெல் ஓன்ஃப்ரே ( Michel Onfray) திரைப்பட ஆளுமை மிஷெல் ஒதியார் வார்த்தைகளில் , “அட முட்டாப் பயல்களா! அவர்கள் எதற்கு துணிந்தவர்களென்று தெரியாதா. அப்படி செய்ததால் தானே, நமக்கும் பிரச்சினை என்னன்னு புரியுது” எனப்பதிலுரைக்க, எதிர்வரும் தேர்தல்களில் ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பியரல்லாத மக்கள் விவாதப் பொருளாக இருக்கப்போகிறோம் என்பது உண்மை அதன் எதிரொலிதான் ரிப்ப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஓர் தலைவர் « பிரான்சு நாடு வெள்ளையர் இன நாடாக இருக்கவேண்டு ம்» என்ற தம் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தது.
—————————————————-

——————–

மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -2

« மாத்தாஹரி « நாவல் பற்றி மூத்த இலக்கியவாதி திரு கி அ. சச்சிதானந்தன் அவர்கள்

Matahari-2புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
– கி. அ. சச்சிதானந்தம்

Matahari1ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.
—————————————————————————————————

நூல்: மாத்தாஹரி – புதுச்சேரியிலிருந்துபுறப்பட்டஒருபெண்ணின்கதை
ஆசிரியர்: நாகரத்தினம்கிருஷ்ணா
பக்கங்கள்: 288 விலை: ரூ. 150
வெளியீடு: எனிஇந்தியன்பதிப்பகம்
102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57, தெற்குஉஸ்மான்சாலை,
தி. நகர்,, சென்னை – 17.

என்னைக் கவர்ந்தப் பெண்கள்

20150916_094052

ஓர் உயிரி தனது இருப்பை உறுதிபடுத்தவும், தன்னை முன்னெடுத்துச் செல்லவும், தொடக்கக்காலத்தில் ‘இயற்கை’ நெறியின்படி வினையாற்றியது. காலப்போக்கில் தனிமனிதன் கூட்டமாக வாழ முற்பட்டபோது சமூகம் என்ற அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ் நெறிகளை அமைத்துக்கொடுத்து அதன்படி வாழவேண்டுமென ‘உயிரியின் இருப்பை’ நிர்ப்பந்தித்தது, ஒரு கூட்டுச் சமூகத்தில் தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள், அவை கற்பிக்கும் செயல்பாடுகள், பிற மனிதர்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஓர் உயிரியின் இருப்பை உறுதிபடுத்தும் முனைப்பு, மற்றொரு உயிரியின் இருப்பை மறுக்ககூடாதென்பதுதான் நவீன சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நாம் விரும்புவதும் விரும்பாததும்; உண்பதும் உடுத்துவதும்; கட்டுவதும் இடிப்பதும் நம்முடைய தேவை நிமித்தம் நடைபெறவேண்டுமென்றாலும், நம்மைச் சார்ந்த நம்மோடு கூட்டாக இயங்குகிற பிற உயிரிகளின் தேவைகளையும் குறைந்தளவேனும் அவை பூர்த்திசெய்யாதுபோனால் குழப்பமும் கலகமுமே மிஞ்சும், காரணம் இச்சமூகத்தில் ஒரே நேரத்தில் நாமாகவும் பிறராகவும் நாம் இருக்கிறோம்.

எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் என்பதே கூட ஒருவகையில், சிலரைக்கூட குறிப்பிட்டு நேசிக்க நாம் தயாரில்லை என்பதாகத்தான் பொருள். பேச்சுக்கு என்று வைத்துகொண்டால் கணவன் என்றால் மனைவி, காதலன் என்றால் காதலி அல்லது இதற்கு எதிர்மாறாக; அடுத்து பிள்ளைகள் என்றால் பெற்றோரிடத்திலும்; பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளிடத்திலும்; சகோதரர்கள் சகோதரரிகளுக்கிடையிலும் பரஸ்பர அன்பு நிலவுமென சமூகம் நம்புகிறது, பிறகு நட்பின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவரை நேசிக்கிறோம் அன்பு பாராட்டுகிறோம். எனினும் நவீன உலகில் இவ்வுறவுகளின் ஆயுட்காலம் பரஸ்பர அன்பைக் காட்டிலும், பரஸ்பர எதிர்பார்ப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நித்தம் நித்தம் பிறரைச் சந்திக்கிறோம். மனைவி, மக்கள், அண்டைவீட்டுக்காரர், உடன் பயணிப்பவர், அலுவலகங்கள், கடைகள், பொது இடங்கள்: எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள். இவற்றில் ஒரு சில முகங்களே ஏதோ சில காரணங்களால் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டு, நம்மில் இருக்கின்றன, பெரும்பாலாவை பனிபோல, மலர்போல, மழைபோல இயற்கை நிகழ்வாக வருவதும் போவதுமாக இருக்கின்றன. இக்கூட்டத்திடை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, எதிர்ப்பார்ப்புகளின்றி ஒரு சில முகங்களை, அம்முகங்கள் தாங்கிய மனிதர்களை நேசிக்கிறோம். ஓர் வாசகன் எழுத்தாளனை நேசிப்பது, ஒரு ரசிகன் தன்னுடனை நடிகன், நடிகைக்கு, பாடகன் இப்படி யாரோ ஒருவனை ஆராதிப்பது, சமூக நலனில் அக்கறைகொண்ட ஒருவன் சமூக ஆர்வலர் ஒருவரிடம் காட்டும் மரியாதை ஆகியவை நிர்ப்பந்தகளற்ற எதிர்பார்ப்புகளற்ற அன்பு. சிற்சில நேரங்களில் நாம் முரண்பட நினைக்கும் விஷயங்களில், இன்னொருவர் முரண்படுகிறார்; நாம் நமது எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய தயங்குகிறபோது, துணிச்சலின்றி முடங்குகிறபோது வேறொருவர் அதனைச் செய்கிறார். அது எதிர்ப்புகுரலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை பிறரிடத்தில் காட்டும் கரிசனமாக இருக்கலாம், அந்த வினைக்காக, நமது மனநிலைக்கு ஒத்திசைந்து ஆற்றும் செயலுக்காக அம்மனிதரை போற்றுகிறோம். அப்படி நமது அன்பிற்குரியவர்களாக, நமக்கு மனதுக்கு இசைந்தவர்களாக, நமது விருப்ப இலக்கணங்களுக்கு உட்பட்டவர்களென்று ஒரு கூட்டத்தையா கைகாட்ட முடியும். விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் அவ்வகையில் பெண்கள் நால்வரைப்பற்றி பதிவு செய்ய விருப்பம். ஏன் பெண்கள், ஆண்களில்லையா? “பெண் உயராவிட்டால் ஆண் ஏது?” என்பான் பாரதி, ஆணித்தரமான உண்மை. அரசியல், நிர்வாகம், அறிவியல், பொருளாதாரம் எனப் பலதுறைகளிலும் சாதனைப் படைத்துள்ள பெண்களிடம் ஆண்களின் ஆளுமையும், கம்பீரமும் ஒருபுறமிருக்க, ஆண்களிடம் காணக் கிடைக்காத கருணையும் தாயுள்ளமும் அவர்களை -பெண்களை உயரத்தில் நிறுத்துகிறது.

 

அ. பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா ஓர் அழகு தேவதை, மித். ‘கண்ணம்மா’ என்ற சொல்லின் அடர்த்தியை, அதன் திரட்சியை, மணத்தை, பசுமையை ‘கற்பனை நவிற்சியின்’ ஒட்டுமொத்த பருமையை, உபாசிப்பவனாய் அதன் இண்டு இடுக்குகளைதொட்டுப் பரவசத்தில் திளைக்கிற பாரதியைக் ‘கண்ணம்மா’ பாடல்களில் காண்கிறோம். கண்ணம்மா பாரதியுடைய செல்லம்மா. குயிற்பாட்டில் தத்துவத்தை சொன்னவனுக்கு, ‘கண்ணம்மா’ பெயரில் ஒரு செல்லம்மா கிடைத்திருக்கிறாள். பாரதி பாடிய, ஆராதித்த, மருவ ஆசைகொள்ளும் கண்ணமாக்களை இன்றளவும் படிமங்களாக, ஜீவன் சொட்டும் காட்சிகளாக மனதில் அசைகின்றன, மல்லிகை மணம் தோய்ந்த ஈரக்காற்றாக நெஞ்சைக் குளிருவிக்கின்றன. அந்நாட்களில் : தெருவாசலில் கோலமிடும்போதும், அன்றலர்ந்த பூசனிப் பூவை கோலத்திடை பூக்கவைக்க நடத்தும் ஒத்திகையின்போதும், கோலமிட்டு பாவாடைத் தடுக்க தலைவாசலைக் கடக்கிறபோதும்; தெருவாசலில் அண்டைவீட்டுப் பெண்ணுடன் உரையாடியபடி பார்வையைத் தெருவில் சிந்துகிறபோதும் ; ஒரு கையில் ஊஞ்சல் சங்கிலியும் மறுகையில் புத்தகமுமாக, ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருப்பவள், ஆண்வாசனை உணரரப்பட்ட கணத்தில் ஓடி மறைகிற போ¡தும்; கிணற்று நீர்ல் முகம் அலம்பி புழக்கடையின் முந்தானை விசிற நடந்து வருகையிலும் சந்தித்தத இளம்வயது செல்லம்மாக்கள் பலரும் கண்ணம்மாக்கள்தான்.

பெண்ணியம் பற்றி தமிழில் அதிகம்பேசிய ஆண் பாரதி. இன்று வரை அவன் அளவிற்கு பெண்கள் உட்பட கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்விடுதலைக் குறித்து மேசியவர்கள் குறைவு. பெண்களைக் காட்டிலும் கூடுதலாக எதிர்பாலினத்திடம் கிறங்கிக் போகிறவர்கள் ஆண் கவிஞர்கள். பாரதி அழுது ஆர்பாட்டம் பண்ணுபவனல்ல, மறந்துங்கூட கண்ணைக் கசக்கியவனில்லை; தமிழைத் தாயென்றும், இந்திய நாட்டைப் பாரதமாதாவென்றும், பாரத தேவியென்றும் உருவகப்படுத்தியவன்; எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ குறவள்ளி, சிறுகள்ளி எனப் பொங்கினவன். வீரத் தாய்மார்களை வேண்டியவன். “அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும் இந்நாட்களிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆ நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இந்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக்காட்டிலும் ஒரே அடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாகயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது” (1) என இந்திய நாட்டைக் குறித்து வருந்துகிற நேரத்திலும் பெண்களைத் தோளில் சுமக்கிறான். அவனுடையக் ‘கண்ணம்மா’ இந்த பெருமிதத்தின் விளைச்சல். அவள் மாசறு பொன், அப்பழுக்கற்ற நீதி. மனித இன உயர்பாலினத்தின் ஒரு துளியென்றாலும் பாரதியின் கவிதைக் கடலிற் கலந்து ஆண்கள் மனதில் ஒரு பெரும் சூறாவளியையை வாசிப்புதோறும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவள்.

கண்ணம்மாவைக் காதலியாகக் காண்கிறபோது, காதலில் திளைப்பது போலவே பாரதியிடம் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தெற்கத்திய காற்றின் அணுகுமுறை அவனிடம் தெரிகிறது, அவளுடைய வட்ட கருவிழிகள், மலரொளியொத்த புன்னகைகள், நீலக்கடலையொத்த நெஞ்சின் அலைகள், குயிலோசையொத்த குரலோசை இன்னும் இதுபோன்ற தகுதிகள் அனைத்துமே காதல்வயப்படும் எல்லா ஆண்களுக்கும் – அவனொரு கவிஞனாகவும் இருப்பான் எனில் எளிதாக அமையக்கூடும். மாறாக அவள் “பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம் வாய்த்த செல்லம்மாவாக, கண்ணம்மாவாக வாய்க்கும் பேறு ‘பாரதி’க்கு மட்டுமே வாய்க்கும். அந்தக் கண்ணம்மாவை ‘மருவ’, பாரதி ‘மூத்தோர் சம்மதி’க்குக் காத்திருந்தது வியப்புதான், மாறாக அவளைக் கொண்டாடவும் குலதெய்வாகப் போற்றவும் ஒருவர் சம்மதியும் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் அவசியமல்ல, தமிழும் அதன் சொற்களும் சம்மதிக்க வேண்டும், அதொன்றுதான்.

ஆ. சுதா ராமலிங்கம்:

Sudha“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்” என்ற குறள் நினைவுக்கு வருகிறபோதெல்லாம் தோழியர் சுதா இராமலிங்கத்தை நினைத்துக்கொள்வேன். ஆண்நண்பர்களென்றாலும் பெண் நண்பர்கள் என்றாலும் பரஸ்பர தேவைகளை ஒட்டியே நட்பு உருவாகிறது. அதன் ஆயுளும் அத்தேவைகள் நீட்சியைப் பொருத்தே அமையும். என் வாழ்நாளில் பல நண்பர்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள், பழகி இருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி, பணி, இருந்த நாடு, இருக்கிற நாடு, என்ற கூறுகளுக்கேற்ப நட்பு உருவாகிறது. உருவாவது போலவே சில ஆண்டுகளுக்குப் பிறகு உருக்குலைந்து சருகாகி காற்றில் கலந்தும் போகிறது. காரணங்கள் இரு தரப்பிலும் இருக்கின்றன. நானே கூட காரணமாக இருக்கலாம். அவர்களது எதிர்பார்ப்பிற்கு நானோ எனது எதிர்பார்ப்பிற்கு அவர்களோ பொருந்தாதது நட்பின் முறிவுக்குக் காரணமாக இருக்கலாம். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானவர். இன்றைக்கும் இலக்கிய எல்லைக்கு அப்பால், இரத்த உறவுகளைக் கடந்து இந்தியாவிற்கு வருகிறபோதெல்லாம் தவறாமல் நேரில் சந்தித்து பரஸ்பர நலன் விசாரிப்புகளை பரிமாறிகொள்ளும் அளவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நட்பு தொடருகிறது.

நட்பு தொடங்கிய காலத்தில், அவர் நாடறிந்த வழக்கறிஞர் என்பதோ, அவருடைய இடது சாரி சிந்தனையோ, மனித உரிமை ஆனையத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவரென்றோ, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தமது ‘யாதுமாகிநின்றாய்” கட்டுரைத் தொகுப்பில் அவரைப்பற்றியும் எழுதியிருப்பாரென்றோ எனக்குத் தெரியாது. அப்போதைய நிலையில் ஏன் இப்போதும் கூட அவரது சமூகத் தகுதி என்னிலும் பார்க்கக் கூடியதே. எனினும் எங்கள் இருவரிடத்திலும் பாசாங்கற்ற, உண்மையான அப்பிப்ராயங்கள் இச்சமூக அமைப்பின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் சொல்ல இருந்தன, இருக்கின்றன. அநீதிக்கு எதிராக கோபமும், பாதிக்கபட்டோரிடம் சுயாதீன உத்வேகத்துடன் கூடிய அக்கறையும் பரிவும் இருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அமைகின்றன. நட்பு என்பது ஏதோ ஒரு தளத்தில் – ஒரு புள்ளியில் – இரு வேறு மனிதர்களிடை உணர்வு ஒத்துப்போகவேண்டும், அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். ஒத்தக் கல்வியோ, ஒந்த பொருளாதார நிலமையோ, ஒத்த துறையோ அதனைக் கையளிப்பதில்லை. அவர் இந்தியாவிலும் நான் பிரான்சு நாட்டிலென்று வாழ்ந்தாலும்; அவர் மூத்த வழகறிஞராகவும், People’s Union for Civil Liberties உறுப்பினர் எனத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்க; நான் எழுத்து, வாணிகம் எனக் கவனம் செலுத்த நேரிட்டாலும் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் தொலைபேசி, முகநூல், சந்தர்ப்பம் அமைகிறபோது நேரில் என்று அளவளாவிக்கொண்டு இருக்கிறோம். “மாத்தா ஹரி” என்ற எனது நாவலில் கற்பனை மாந்தர்களைத் தவிர்த்து வாழும் காலத்து படைப்புலக நண்பர்களும் இடம்பெற்றிருப்பார்கள். படைப்புலகம் சார்ந்திராது நாவலில் இடம்பெறுகிற ஒன்றிரண்டு பெயர்களில் வழக்கறிஞர் சுதா இராமங்கமும் ஒருவர்.

 

இ. சிமொன் தெ பொவ்வார் (Simone de Beauvoir):Simone

 

பொவ்வார்’ ஓர் அக்கினி தேவதை. இருபதாம் நூற்றாண்டின் பெண் அதிசயம்.”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” எனப் பாரதி எதிர்பார்க்கிற புதுமைப் பெண் இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெண்மணி. ” நான் சந்தித்த பெண்களிலேயே சிமொன் தெ பொவ்வார் ஒருத்திதான் புத்தி கூர்மையும் அழகும் ஒருங்கேப் பெற்ற பெண்மணி அல்லது உங்களுக்கு அப்படி யாரேனும் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் அவர்களில் இவரும் ஒருவர்” என ஜெர்மன் பத்திரிகையாளரும் பிற்காலத்தில் பெண் இயங்களில் ‘சிமொன் தெ பொவ்வாருடன் இணைந்துகொண்ட அலிஸ் ஷ்வார்ஸெர் சொல்கிறார். பெண்கள் அழகாகவும் புத்திகூர்மையுடைவர்களாக இருப்பவர்கள் அரிது, அதிசயமாக நடைபெறக்கூடியது. பெண்களுடைய ‘பைபிள்’ எனப்படும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற அரியதொரு படைப்பை வாசிக்க நேர்ந்தது. பெண்கள் படைப்பை, உயிரியல் கட்டமைப்பை, மானுட இருப்பை அவர்கள் உயிர் வாழ்க்கையை அத்ன் சிக்கல்களை, காலம் காலமாய் அந்த அழகியலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அன்றாட அவலங்களை அமிலச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்தார். சமயத்தின் பேராலும், மரபின்பேராலும் பெண்களை இழிவுபடுத்தும் மூடர்களின் இழிந்தப் போக்கை அவரளவிற்கு கண்டித்தவர்கள் உலகிலில்லை. அறிவு, அழகு, நுண்ணுணர்வு, அள்ப்பரிய மனோபாவம், நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்:சிமொன் தெபொவ்வார்.
அரசியல் இலக்கியம் இரண்டிலுமே சில பக்கங்கள் அவர் காலத்தில் பிரான்சு நாட்டில் ஒளிர்ந்ததெனில் அதில் சிமொன் தெ பொவ்வாரின் பங்களிப்பு பிறர்கவனத்தில் கொள்வதற்குரிய நியாயங்களுடன் இருந்துள்ளது. “நான் நானாக இருப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார்” என்ற வாக்கியம் “கடமை தவறாத இளம்பெண்ணொருத்தியின் நினைவுகள் என்றொரு நூலில் இடம்பெறுகிறது. பெற்றோர் நிழலிலிருந்து மீளத் துணிந்த இள்ம்பெண்ணின் அசட்டுக்குரலென அதை ஒதுக்கிவிடமுடியாது. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருவரிடத்திலும் வயது பேதமின்றி, சமயங்களைக் கடந்து, எல்லைகளை மறந்து ஒலிக்கவேண்டிய குரல். இந்த நூற்றாண்டிலும் குறிப்பாக, விளக்கப்போதாதா அல்லது நியாயப்படுத்த சாத்தியமற்றவைகளை மதம், மரபுகொண்டு பெண்களை அடிமைப்படுத்தி சுகங்கண்ட மனிதர் கூட்டத்துக்கு ( இதிலும் பெண்களும் அடக்கம் என்பதை கிஞ்சித்தும் மறக்கக்கூடாது) எதிராக ஒலிக்கவேண்டிய குரல். அது நாள்வரை சிமோனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக இருந்த அவருடைய தந்தையும் தாயும், பிறரும் ஆதி அந்தமின்றி அவர் நிறுத்துகிற ‘நான்’ என்ற வார்த்தையின் முன்பாக துவளுகிறார்கள். எதை விரும்பவேண்டுமோ அதை விரும்ப எதை நிராகரிக்கவேண்டுமோ அதை நிராகரிக்க, சிந்தனைக்கு உகந்ததைச் தேர்வு செய்ய தன்னைத் தயார்படுத்திக்க்கொண்டு காலத்தை எதிர்கொண்ட சிமொன் தெ பொவ்வாரை, நாம் விரும்பாமற் போனால்தான் ஆச்சரியம்.

 

இ. பிரான்சுவா சகான் ( Françoise Sagan):

 

Sagan
“அழகான இளம் ராட்சஸி” என பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமர்கர் ‘மொரியாக்’ (François Mauriac)கினால் வர்ணிக்கபட்டவர். “பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ் ஒரு வாணவேடிக்கை” என நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த நூலின் பெயர் “வணக்கம் துயரமே” ( Bonjour tristesse), எனது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவந்தது. அந்த எழுத்தாள பெண்மணியை நேசிக்க நேர்ந்தது அப்படித்தான். சமகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களில் உலகமெங்கும் பரந்த அள்வில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் ஒருவர் உண்டென்றால் அவர் பிரான்சுவா சகன் மட்டுமே. ஏற்கனவே பல மில்லியன் பிறதிகள் விற்பனை கண்ட அவரது நாவல் இன்றளவும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இவரது பலவீனமாகக் மதுவும் போதைப் பொருட்களூம், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைபட்டது. விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் விருப்பமானவை. விபத்தொன்றில் ஆறுமாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது வலிகளிலிருந்து நிவாரணம் பெற போதைமருந்துக்கு அடிமையானார். அவரைச் சந்திக்க பத்திரிகயாளரும் ஊடகத்தினரும் சூதாட்ட விடுதிக்கும், இரவு விடுதிகளுக்கும் தேடிப்போகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம், விபத்து, கோமாவென அடிக்கடி மருத்துவமனை, மரணத்தோடு நெருக்கம் என வாழ வேண்டியிருந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த உலகப் புகழ்பெற்ற அவருடைய சிறுநாவலை எழுதிய நிகழ்வும் விபத்தென்று தான் சொல்லவேண்டும். பிரென்சுக் கவிஞர் ரெம்போ (Arthur Rimbaud) வின் கவிதை ஒன்றை (Illuminations) படித்து முடித்துவிட்டு அதன் பாதிப்பில் நாவலை எழுதப்போக, பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் ஒரு பெரும் புயலை உண்டாக்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்களை மிகுந்த எதார்த்தத்துடன் கூறியிருப்பார். நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை, பத்தாம் பசலி கொள்கைகளை நிராகரித்திருந்தது. இருபது புதினங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் கவிதைகள் என இவர் எழுதிக்குவித்திருந்தபோதிலும் எனக்கு ‘வணக்கம் துயரமே’ பிரான்சுவா சகனை மட்டுமே பிடிக்கிறது, பிடிக்கிறது என்ற வார்த்தை எனக்கு அவர் மீதுள்ள காதலை ஒரு சதம்கூடத் தெரிவிக்கப்போதாது.
——————————————————————————————
1. பக்கம் – 10 – மலாலவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள் -தொகுப்பு முனைவர் க.பஞ்சாங்கம்.

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்.

“savourer de bons petits plats”

“உலகில் எந்த நாட்டுமக்களும் தங்களைப் போல திருப்தியாக சாப்பிடுவதில்லை” என 80 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் நினைப்பதாக வாக்கெடுப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.. இங்கே திருப்தியாக என்பதற்கு ‘வயிறார’ சாப்பிடுவதென்ற பொருள் இல்லை. உணவை சமைப்பது, பரிமாறுவது, விருந்தினர்களுடன் உண்பது எனபவற்றில் சில நாகரீகமான விதிகளை வைத்திருக்கிறார்கள் அதைத் தாங்கள் கடைபிடிப்பதாக நம்பவும் செய்கிறார்கள். யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய உடமைப்பட்டியலில் பிரெஞ்சு உணவு இடம் பெற்றுள்ளதும் அவர்கள் பெருமிதத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஓர் உயிரியின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடத்தைப் பெறுகிறது. உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே என்கிறார் திருமூலர். மனித இனம் ஓரிடத்தில் நிலையாய் வாழத்தொடங்கியபிறகு அந்தந்த இடத்தின் தட்பவெப்பநிலைக்கேற்பக் கிடைத்தவற்றை உண்ணத் தலைப்பட்டு, அவற்றிற்குப் பற்றாகுறை ஏற்பட்டபோது தாங்களே உற்பத்திசெய்து, விலங்குகளென்றால் வேட்டையாடி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டனர். தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, அதியாவசியமான நீர் என்று இயற்கையைச்சார்ந்தே உணவு தானியங்கள், காய் கனிகள், கீரைவகைகள், கால்நடைகளென்று உண்ணும் பொருட்களின் உற்பத்தித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயற்கை சாராத கூறுகளான சமயம், சமூகம், மரபு, பண்பாடு போன்றவை நாம் எதைச் சாப்பிடவேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என முடிவெடுக்கின்றன. இவற்றைத்தவிர அறிவியல், போக்குவரத்து, தகவல்தொடர்புசாதனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சமையல் புத்தகங்கள், குறிப்புகள், பரவை முனியம்மாக்கள், தாமோதரன்கள் இப்படி வயிற்றினை நாக்கினை வழிநடத்த பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள்.

உணவுக்கும் மனிதரின் குணத்திற்கும் தொடர்பிருக்கும் போலிருக்கிறது. கொடிய விலங்குகள் என வர்ணிக்கப்படுபவைகளுக்கும், சாதுவான விலங்குகள் என வர்ணிக்கப்படுபவற்றிர்க்கும் உணவுமுறையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆடு, மாடு, முயல் போன்றவை சாதுவாக இருப்பதற்கும்; புலி, சிங்கம்போன்ற காட்டுவிலங்குகளின் மூர்க்கத்திற்கும் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணியா? அஹிம்சை வழி முறையை காந்தி தேர்வு செய்ததில் அவரது உணவுமுறைக்கும் பங்கிருக்கிறதென்பது உண்மையா?

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். எல்லா உணவுகளும் எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன. பிரெஞ்சு பர்ப்யூம்களைபோலவே, பிரான்சு நாட்டு ஒயின்களும் இந்திய முக்கிய நகரங்களில் கிடைக்கின்றன. இந்தியத் தந்தூரி, நான்(Nan), மசாலா (curry) ஆகியவை உலகெங்கும் அறியப்பட்டிருப்பதைபோலவே பிரான்சிலும் கிடைக்கின்றன. தீபாவளியென்றால், எங்கள் வீட்டில் அதிரசம், முறுக்கு, சோமாஸ், போளி, லட்டு( அதுவும் பூந்தி லட்டு எப்போதாவதுதான் ரவா லட்டே அதிகம்) இதைத்தான் செய்திருக்கிறார்கள். மைசூர்பாகு, ஜாங்கிரியை கல்கி, விகடன் தீபாவளி மலர்களில்தான் பார்க்கவேண்டும்.தவறினால், புதுச்சேரி உறவினர்கள் யாரேனும் அபூர்வமாக வாங்கிக்கொண்டுவந்தால்தானுண்டு. ஆனால் தற்போது கிராமத்தில்கூட ‘ஸ்வீட் ஸ்டால்கள்’ திறந்துவைத்திருக்கிறார்கள். கலர் கலராக அடுக்கிவைத்திருக்கிறார்கள், கவர்ச்சிக்கு ஈக்களின் ரெக்கார்ட் டான்ஸ் வேறு. புதுச்சேரிக்கு ஒர் அமெரிக்கன் KFC என்றால், குக்கிராமத்திற்கு ஒரு பாம்பே ஸ்வீட்ஸ்டால் ஏன் கூடாது, தாராளமாக வரலாம், ஆனால் கொழுக்கட்டைகளுக்கு பாதிப்பிருக்கக்கூடாது.

பிரான்சு நாட்டிலும் உலகின் ஏனைய நாடுகளைப்போலவே உலக நாடுகளின் ரெஸ்ட்டாரெண்ட்கள் இருக்கின்றன. ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

‘உணவென்பது உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலை’ (l’alimentation est un art de vivre)

பிரெஞ்சுக்காரகள் உணவுப்பொருட்களையும், உண்பதையும் உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலையாகத்தான் பார்க்கிறார்கள். உலகெங்கும் “பிரெஞ்சு உணவுக்கலை”க்கும் (la gastronomie française), பிரெஞ்சு சமையலுக்கும் (la cuisine française) எத்தகைய வரவேற்பும், மரியாதையும் இருக்கிறதென்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஓவியம், சிற்பம், படைப்பிலக்கியத்தைப்போல சமையலும் அவர்கள் கலைகளுள் ஒன்று. வெறும் வார்த்தை அலங்காரத்தோடு இது முடிந்துவிடுவதல்ல. நீங்கள் விருந்தினர் என்றால் சாப்பிடுவதற்கு முன் – சாப்பிடும்போது – சாப்பிட்டபின் -உங்களை வழி அனுப்பும் வரை உங்களைத் தொடர்வது. உணவின் சுவை என்பது அழைத்தவர் ‘காரம், கரிப்பு, உவர்ப்பு, இனிப்பு இவற்றின் கூட்டுத் தொழில்நுணுக்கத்தின் தயாரிப்பு மட்டுமல்ல சமைத்த உணவிற்குப் பொருத்தமான தட்டுகளைத் தேர்வுசெய்வது, சாப்பிடத்தூண்டும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துவது, பவ்யமாகப் பரிமாறுவது; அழைக்கப்பட்ட விருந்தினர் கண்கள், கைகள், வாய் மூன்றையும் நளினமாகத் தொழிற்படுத்தி உண்பது அவ்வளவும் அடங்கும். பிரெஞ்சு உணவில் நான்கு சொற்கள் அடிப்படையானவை: ரொட்டி, மாமிசம், பாற்கட்டி, ஒயின். இவற்றைத் தவிர சிம்பொனி இசைக்கலைஞர்கள் உபயோகிக்கிற பகத் ( Baguette) என்கிற பெயரிலேயே அழைக்கப்டுகிற குச்சிபோன்ற நீண்ட ரொட்டியும் பிரெஞ்சுக்காரர்களின் அடையாளம். இங்கும் பிரதேச அடையாளங்களைக்கொண்ட உணவுவகைகளுக்கு உதாரணமாக அல்ஸாஸ் (Alsace)பிரதேசத்தின் ‘தார்த் ஃப்ளாம்பே(Tarte flambée) ஷுக்ரூத்(choucroute); அக்கித்தேன்(Aquitaine) பிரதேச ‘லெ ஃபுவா கிரா'(le foie gras), ‘லெ கொன்ஃபி தெ கனார்’ (le confit de canard); தொர்தோஜ்ன் (Dordogne) பிரதேச ‘லெ தூரன்'(le tourin), ‘லெ ஃபிலெ தெ பெஃப்’ (le filet de bœuf), ‘சோஸ் பெரிகெ’ (sauce Périgueux) போன்றவற்றைக் கூறலாம். அதுபோல பிரனெ அட்லாண்டிக் (Pyrénées-Atlantiques), கோர்ஸ்(Corse), ப்ரெத்தாஜ்ன் (Bretagne) உணவுகளும் பிரசித்தம். பாரீஸுக்கென்று பிரபலமான உணவுகள் இருக்கின்றன, தவிர பிரெஞ்சு ஷேஃப்(Chef)களும் புதிது புதிதாய் தாயாரித்து வாடிக்கையாளரின் பாராட்டுதலுக்காகக் காத்திருக்கிறார்கள். உலகின் பிறபகுதிகளைபோலவே இயற்கை விவசாய உற்பத்திப்பொருகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உணவு வேளைகள்:

1. Le Petit déjeuner – காலை உணவு: இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாகச் சாப்பிடுகிற (அட்டைப்பெட்டிகளில் அடைத்த) céréale பிரெஞ்சுக்காரர்கள் இல்லங்களை ஆக்ரிமித்திருந்த போதிலும், பிரான்சு நாட்டின் தேசிய காலை உணவாக இடம்பிடித்திருப்பது க்ருவாஸ்ஸான்(Croissant). இப்பிறை வடிவ பேஸ்ட்ரி வகை ரொட்டி; பால் கலவாத காப்பி, ஆரஞ்சு ஜூஸ், தேநீர், ஷொக்கொலா என்கிற சாக்லேட் பானம் இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் காலை நேரங்களில் அவசரமாகத் தினசரியை மேய்ந்தபடி ஒரு பேஸ்ட்ரி (viennoiserie) கடையிலோ, ரெஸ்ட்டாரெண்டிலோ, நட்சத்திர ஓட்டலொன்றின் டைனிங் ஹாலிலோ ஐரோப்பியர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் அநேகமாக அவர் பிரெஞ்சுக்காரராக இருப்பார். இன்று புதுச்சேரி உட்பட உலகெங்கும் க்ருவாஸ்ஸான் கிடைத்தாலும் பிரான்சு நாட்டுத் தயாரிப்புக்கு ஈடாக இல்லை. அப்படி பிரான்சு அல்லாத வேறு நாடுகளில் நன்றாக இருந்தால் அநேகமாக அந்தப் பூலான்ழெரி (Boulangerie) என்ற ரொட்டிக்கடையை நடத்துபவர் மட்டுமல்ல அங்குள்ள ரொட்டிகளைத் தயாரிப்பவரும் பிரெஞ்சுக்காரராக இருக்கவேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் வேறு ஏதேனும் (Pain au chocolat, baguette avec de la beurre, du miel, de la confiture) காலை உணவாக எடுக்க நேர்ந்தாலும் அது எளிமையானதாகவே இருக்கும், ஆங்கிலேயர்போல காலையிலேயே பேக்கன், ஆம்லேட் என்று வயிற்றில் திணிக்கும் வழக்கமில்லை.

2. Le déjeuner அல்லது le repas du midi- மதிய உணவு: மதிய உணவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போதெல்லாம் பணிநேரத்தில் ஒரு மணிநேரமே சாப்பிடுவதற்கான நேரமென்று ஒதுக்கப்படுகிறது இதில் ஓர் அரைமணிநேரத்தை உண்பதற்கென்று ஒதுக்கி அவசரகதியில் சாப்பிடுவதற்குப் பெயர் கஸ்க்ரூத் (le casse-croûte). சாண்ட்விச், ஹாம்பர்கர் இரகங்கள் அவை. வீடுகளிலும் அநேகமாக சமைக்க நேரமில்லையெனில் டின்களில் அடைத்துவைத்த உணவுகளை சுடவைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. மாறாக வார இறுதிநாட்களில் நிதானமாக( பன்னிரண்டு மணிக்கு உட்கார்ந்தால் இரண்டு இரண்டரைமணி நேரம்) மேசையில் அமர்ந்து பேசியபபடி சாப்பிடுவார்கள்

3. Le dîner அல்லது le repas du soir. மாலை உணவு: இதனை இரவு உணவு என அழைப்பதில்லை. பொதுவாக மாலை ஆறுமணியிலிருந்து இரவு எட்டுமணிக்குள் முடித்துக்கொள்வார்கள். விருந்தினர் வந்தால் இரவு மேசையைவிட்டு எழுந்திருக்க பன்னிரண்டு மணி ஆனாலும் பெயர் என்னவோ ‘le repas du soir’ தான். இரவு வேளைகளில்தான் அதிகம் அனுபவித்து உண்பார்கள். எனவே திருமணங்கள், பிறந்த நாள், வேறுவகையான கொண்டாட்டங்கள் அனைத்துமே முகூர்த்தநாள் பார்க்காமல் வார இறுதிநாட்களில் நடபெறுகின்றன, விருந்தும் இரவுவேளைகளில். இவ்விருந்தும் கொண்டாட்டமும் விடிய விடிய நீடித்தாலுங்கூட ‘la soirée’ என்றுதான் பெயர். மற்றபடி மதியம் இரவு இரண்டுவேளைகளிலும் முறைப்படி உண்பதெனில் எடுத்துக்கொள்ளும் உணவு வரிசைகளில் வேறுபாடுகளில்லை. அவை பொதுவாக ஆந்த்ரே (l’entrée), பிளா ஃப்ரன்சிபால் (le plat principal), தெஸ்ஸெர் (le dessert) என்று மூன்று கட்டமாக நடைபெறும்.

அ. l’Entrée அல்லது l’hors d’œuvre : ஆங்கிலத்தில் இதனை appetizer என்கிறார்கள். முக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எளிமையான உணவு அநேகமாக சலாத் (salade) அல்லது தெரீன் (terrine) அல்லது சூப் இவற்றில் ஏதேனும் ஒரு வகை சார்ந்ததாக இருக்கும்.

ஆ. Le plat principal பிரான்சு நாட்டில் கிடைக்கும் காய்கறிகள், கடலுணவுப்பொருட்கள், மாமிசங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி (charcuterie) ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுபவை

இ. Le Dessert இனிப்பு பண்டமாகவோ, ஐஸ்கிரீம் ஆகவோ, பாற்கட்டி ஆகவோ இருக்கலாம்.
பெரும்பாலும் ஒயினுடனேயே சாப்பிடுகிறார்கள். சாதாரண நாட்களில் குடும்பங்களின் வசதி மற்றும் படி நிலையைப் பொறுத்தது அது. மாறாகப் விருந்தினரை அழைத்திருந்தால் ஒயின் கட்டாயம், முக்கியப்பண்டிகை நாட்களில் அல்லது கொண்டாட்டங்களில் ஷாம்பெய்னும் முக்கியம். ஷாம்பெய்னும் பிரெஞ்சு சொத்துதான். பிரான்சு நாட்டில் Champagne என்றொரு பிரதேசத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவகை வெள்ளை ஒயின் (le vin blanc)தான் பின்னாளில் ஷாம்பெய்ன் ஆனது. அதுபோல பிரெத்தாஜ்ன் பகுதியில் ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்பட்டும் ‘Cidre’ம் பிரசித்தம்.அதுபோல பிரான்செங்கும் ஒயின் தயாரிக்கப்பட்டாலும் பொர்தோ (Bordeaux) என்ற பிரதேசம் பிரபலமானது.

உணவு மேசையில் கடைபிடிக்கப்படவேண்டியவை

விருந்துக்கு அழைத்திருந்தால், நல்ல ஒயின் பாட்டிலொன்றை பரிசாகக்கொண்டுபோவது நலம். கன்னங்களில் முத்தம் கொடுத்து வரவேற்ற பிறகு முதன்முறையாக அந்த வீட்டிற்கு வந்திருக்கிறவர்கள் என்றால், உங்கள் ஓவர் கோட்டை வாங்கி அதற்குரிய இடத்தில் மாட்டுவார்கள். உணவு உட்கொள்ளப்படுவதற்கு முன்பாகப் பொதுவாக அப்பெரித்திஃப்( l’apéritif’)ஐ வரவேற்புக் கூடத்தில் வைத்துக் கொடுப்பார்கள். இது அநேகமாக விஸ்கியாக இருக்கும். முடிந்ததும் « மேசைக்கு » என்பதைக் குறிக்கும் வகையில் “à table” என விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணி கூறினால், உணவு தயார், மேசையில் உட்காரலாம் என்று அர்த்தம். அப்பெண்மணியே அவரவர்க்கான இருக்கையையும் காட்டுவார் அல்லது வாய்மொழியாகத் தெரிவிப்பார். பெரிய விருந்துகளில் நாற்காலிக்கு முன்பாக மேசையில் அழைக்கப்பட்டவ்ர்களின் பெயர்கள் இருக்கும். பொதுவாக தம்பதிகள் எதிரெதிராகவோ, ஒரு ஆண் ஒரு பெண்ணென்ற வரிசையிலோ உட்காருவது வழக்கம். மேசையில் கையைப் போடாமல் நேராக உட்காரவேண்டும். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாக விருந்துக்கு அழைத்தப் பெண்மணியே ‘போன் அப்பெத்தி’ (Bon appétit) எனக்கூறி விருந்தை ஆரம்பித்துவைப்பார். விருந்தினர்கள் பதிலுக்கு ‘போன் அப்பெத்தி’ எனக்கூறகூடாது. ‘merci’ என நன்றியைத் தெரிவித்தால் போதும்.உணவுப் பரிமாறல் (l’entrée, le plat principal) இடப்புறமிருந்தும், le dessert வலப்பக்கமும் பரிமாறத் தொடங்கவேண்டும். ஏதாவதொரு உணவு பிடிக்காதவகை எனில் ‘நன்றி வேண்டாம்’ எனக்கூறி மறுக்கவேண்டும். கைகளால் பொதுவாகச் சாப்பிடக்கூடாது, ஏதாவதொரு உணவுப்பொருளுக்குக் கையை உபயோகிக்க வேண்டியதெனின் எதிரில் அமர்ந்திருக்கும் விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணியே வழிகாட்டுவார். கூடையில் ‘Pain’ எனும் ரொட்டித்துண்டுகளை வைத்திருப்பார்கள். அவற்றைக்கையால் எடுக்கலாம். ஆனால் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கேட்டால் ரொட்டித்துண்டைக் கையில் எடுத்துக்கொடுக்கக்கூடாது, ரொட்டித்துண்டுகள் கூடையை எடுத்துக் கையில் தரலாம். பிரெஞ்சுக்காரர்கள் பொதுவாக நிறைய பேசுவார்கள், அதிலும் இரவு உணவின்போது அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்ககள். பொதுவாக ஒயின் பாதிக் குடிக்கபட்டு வைத்திருந்தால், உங்களுக்கு இனி ஒயின் வேண்டாம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். வேண்டியிருந்தால் ஒயின் கோப்பைக் காலியாக இருக்கவேண்டும். உணவு உட்கொள்ளும்போது வாயில் உணவை வைத்துக்கொண்டு பேசக்கூடாது. அதுபோலவே முட்கரண்டியையோ கத்தியையோ ஆட்டிபேசவும் கூடாது, பிரெஞ்சுக்காரகளுக்கு ஏப்பம் விடுவது நாகரீகமல்ல, அசம்பாவிதமாக ஏதேனும் நடந்தால் ‘பர்தோன்’ (pardon) எனக்கூறி மன்னிக்கக்கோருவது வழக்கம். சாப்பிட்டு முடிந்ததும் சில வீடுகளில் டிழெஸ்திபிற்கு (Digestif ) என்றிருக்கிற அதாவது செரிமானத்திற்கு உதவுகிற மதுவைத் தருவார்கள். சிலர் காப்பியோ, தேனீரோ பருகிவிட்டு விடைபெறுவது உண்டு. புறப்படுகிறபோது அழைத்த விருந்தினர்கள் உங்கள் ஓவர்கோட்டை மறக்க வாய்ப்புண்டு, தவறாமல் கேட்டு அணியுங்கள். புறப்படும் முன்பாக சக பாலினத்திடம் கைகுலுக்கலும், எதிர்பாலினத்திடம் கன்னத்திற்கு இரண்டென முத்தங்களும் விடைபெறலை பூர்த்திசெய்யும்.
(தொடரும்)