Category Archives: Uncategorized

உயிரி, உயிரிரியாக இருக்க காரணமென்று ஒன்றிருக்கிறதா ?

வணக்கத்திற்குரிய பஞ்சு, இந்திரன் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

 

லெ கஃபே -ஃபிலோ, ஸ்ட்ராஸ்பூர் ல் விவாதத்திற்குரிய தலைப்பு l’être (Being) ம் l’existence ம் ஒன்றா வெவ்வேறா என்பது பற்றியதல்ல, எனினும் கேள்விக்கானப் பதிலைத் தேடுமுன் வினைமுதலான உயிரி என்றால் என்ன என்று புரிந்துகொள்வது நலம், அதுபோலவே அதனை தமிழில் அல்லது மேற்குலக மெய்யியலில் ‘இருத்தல்’ எனக் கையாளுகிறபோது அதனை ‘உயிரி’ என்று  அழைக்கிற காரணத்தையும் விளக்கியாகவேண்டும்.

தலைப்பிலுள்ள்ள கேள்வியை மேற்குலகு பார்வையின்படி « இருத்தல், இருத்தலாக இருக்க காரணமிருக்கிறதா ? »எனத் தற்காலிகமாக  வைத்துக்கொள்வோம் .

இருத்தல் என்றால் என்ன ? இருத்தலை உறுதிசெய்கிற காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு விடையென்ன ? இவ்விடையைப் பெறுதலேகூட இருத்தல், இருத்தலாக இருப்பதற்குரிய காரணத் தேடல்தான். மெய்யியல் சிந்தனையாளர்கள் பலரும் ‘இருத்தல்’ (l’être)  என்ற சொல்லை ‘எதுவாக இருக்கிறதோ அது’ (ce qui est)  என்கிறார்கள். அந்த ‘அது’ என்பது, உண்மை நிலை(la réalité)அல்லது இயற்கை நிலை. மீயியல் (la métaphysique)  சிந்தனை வாதிகள் ‘இருத்தலை’ அவன், அவள், அது என மூன்றாகவும் கண்டார்கள்.‘எதுவாகவோ இருக்கிறதோ அது’  எதோ ஒரு வகையில் தனது ‘இருத்தலை’ உறுதி செய்ய முனைகிறது, என்பது தெக்கார்த், காண்ட், அரிஸ்டாடில் போன்றவர்களின் கருத்து. L’existence என்ற சொல்லும் ஒன்றின் உண்மைநிலை அல்லது இயல்நிலைபற்றித்தான் பேசுகிறது. ஆனால் இருத்தலியல் (l’existentialisme) சார்த்ரு, அதனை மனிதரை மையப்படுத்தியதொரு சிந்தனையாக முன்வைக்கிறார் அவருக்கு அது l’être(Being) அல்ல l’être humain (human being) – இருத்தல் அல்ல மனித இருத்தல் சார்ந்த விடயம் : இருத்தலை ‘தன்னில்’ (l’en-soi), ‘தனக்காக’ (pour-soi) என்று அவர் வரையறை செய்கிறார். இதில் ‘l’en-soi’  என்பது ஒன்றின் இயல்பான பண்பு (உண்மை நிலை). ‘pour-soi’ என்பது தன்னை உணர்வது , தன்னை உணர்ந்த தன் பலனாக அதன் தேவைக்குழைப்பது. மேற்கண்டை இரண்டின் கூட்டுப்பொருள்தான் ‘சாரம்’ (l’essence) ; இச்சாரம் தான்  சார்த்த்ருவைப் பொறுத்தவரை  ஓர் இருத்தலின் தனித்துவம்,, அதன் அடையாளம்.

 

இருத்தல் ஓர் உயிரி ஏன் ?

 

பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலுள்ளதுபோல  உயிரியைக் குறிக்க espèce என்ற சொல் உள்ளது, இருந்தும் l’être ஐ உயிரி என்றழைக்க சில காரணங்கள் இருக்கின்றன.

அ.   மீயியல்வாதிகள் இருத்தலை ஒரு சடப்பொருளாக உருவகப்படுத்துகிறார்கள்.  கீழ்த்திசையின்  பார்வையில்  எதுவும் உயிர்தான், உயிர் சார்ந்ததுதான் மெய், அல்லது உண்மைநிலை., . சார்த்ருவின் ‘l’en-soi’ ஒரு சடப்பொருளுக்கும் பொருந்தும், என்றாலும்  ‘pour-soi’ என்று வருகிறபோது  ‘தனக்காக’  அது இயங்கும்போது உயிரியாகவேத் தன்னை முன்நிறுத்துகிறது.

 

ஆ.  ‘இருத்தலை’  மேற்கத்திய மெய்யியல் உலகு ஒரு பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு, தங்கள் சிந்தனையை முன்வைக்கிறது. ஆனால் அவர்களில் சார்த்த்ரு ‘இருத்தல்’ வினை ஆற்றக்கூடியதென்கிறார் ; L’être(to be)  என்றாலுங்கூட வினையின்றிப் பெயர்ச்சொல் இல்லை. வினை  என்பது இயக்கம்மெனில், அவ்வினை உயிரிக்குமட்டுமே சாத்தியம்

 

இ. இருத்தல் என்பதை நிகழ்காலத்திற்குரியது  அது மரணித்தது அல்ல அவ்வகையிலும் அதொரு உயிரி. இருத்தல் என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலானது, இந்த இடைபட்டவெளியில் அது எங்கே இருந்தாலும் அதொரு உயிரியாக மட்டுமே இருக்கமுடியும்.

 

ஈ. பௌத்தம் சார்த்துருவின் தன்னை உணர்தலை விழிப்பு என்கிறது, விழிப்பு உயிர்ப்புள்ள ஒன்றிர்க்கே சாத்தியம்.

 

உ. மார்க்ஸ் சிந்தனையின் படி இயற்கை மனிதர் உழைப்பிற்குக் காத்திருக்கிறது, மனிதர்களின் உழைப்பால் பலனாகிறது, சுயமாக எதையும் செய்யமுடியாதது, அதன் பலவீனமாகவே இருக்கட்டும், ஆனால் மனினும் சுயமாக முளைத்தவனல்ல, அதே நிலம் உட்பட அவனது சார்புவாழ்க்கை தவிர்க்கமுடியாதது. ஆகப்பொதுவில் மாற்றம், வளர்ச்சி, ஆக்கம் பரிணாமம் அனைத்துமே அது பொருளொன்றில் நிகழ்ந்தாலும்கூட, உயிரொன்றின் படிநிலைதான்.

 

ஆக இந்த இருத்தலை ஓர் உயிரி என்று அணுகுகிறபோது.ஓர் இருத்த்ல் இருத்தலாக இருப்பதற்குகுரிய காரணத்தைத் தெரிந்துகொள்வது எளிது.

 

இருத்தல் செயல்படாமல் இருக்கமுடியாது, அச்செயலில் அதன் அடையாளத்தேடல் இருக்கிறது,

 

இக்கொள்கைக்கெல்லாம் உண்மைநிலைதான் அடிப்படை நியதியை வகுக்கிறதெனில் எதுவாக இருக்கிறதோ அது, அத மரணிக்கும்வரை எதோ ஒரு வகையில் இயங்க வேண்டுமென்பதும் அதற்குரிய நியதியே, அவ்வியக்கத்திற்காக இருத்தல் இருந்தாக வேண்டும்.

 

இருத்தல் மரமோ, செடியோ, கொடியோ மனிதனோ விலங்கோ எதுவென்றாலும் பல் சக்கரத்தின் ஒரு பல்போல இப்பிரபஞ்சத்தின், ஒரு சமூக எந்திரத்தின் அங்கம். அது சுழல பிரக்ஞையின்றியோ பிரக்ஞையுடனோ இயங்க ‘இருத்தல்’ ‘இருத்தலாக’ இருப்பது அவசியமாகிறது சார்த்ருவின் தன்னில் மற்றும் தனக்காக வென்று இயங்குகிறபோதும் அவனுடையா தனக்காக என்ற சொல்லில் பிறரும் இருக்கிறார்கள், அது குடும்பம், உறவு, சகதொழிலாளர்கள் எனக் கண்ணிகளாக நீளும் சங்கிலி. அக்கண்ணியில் அவனுமொரு கண்ணி என்பதாலும் இருத்தல் நியாயப் படுத்தப்படுகிறது.

———————————————-

 

 

 

 

 

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் கா. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  – புதினத்தை முன்வைத்து 

panchuபேராசிரியர்  க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம். IMG_20160819_181249

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல வென்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு  ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

அக்கா (நாவல்)
ஆசிரியர் : கா. பஞ்சாங்கம்
வெளியீடு:
அகரம்
மனை என்1 நிர்மலா நகர்
தஞ்சாவூர் 613007
தமிழ்நாடு

நன்றி : திண்ணை 21 -08-2016

—————————————

 

 

 

பெனுவா க்ரூல்ட்

benoit groultஎழுத்தாளர், இதழியல் ஆசிரியர் இருபதாம் நூற்றாண்டின் மூத்த பெண்ணியல்வாதி யென அடையாளம்பெற்றவர் என்பதோடு, பிரான்சு நாட்டில் பெண்களுக்குரிய பல உரிமைகளை மீட்டெடுக்க களத்தில் இறங்கிப் போராடியவர், நேற்று இறந்துவிட்டார்.

அவருடைய Ainsi soit -elle (அப்படியே ஆகுக, ஆமென் என்ற பிரெஞ்சுஸ்லோகத்திற்குரிய  Ainsi soit-il, ல் உள்ள  ஆண் பால் சொல்லான il ஐ நீக்கிவிட்டு  ‘elle’ ஐ பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்க ) முக்கியமானதொரு கட்டுரைத் தொகுப்பு அதிலிருந்து……

“பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக அவளது விதிப்படி ஆகட்டும்வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரெனநினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக்கொள்ளுமென்று எவரும் நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

 

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலைபேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு மகப்பேறு கொள்கைஅடிப்படையில் ஒரு சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் பெத்தேன்‘(Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

 

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3) பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென சட்டம் கொண்டுவந்திருந்தும், பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால் அதிர்ச்சிதருகிறது.

 தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த  இரண்டாம் பாலினம் (Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு ஜீவிகளுடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் சிமோன் தெ பொவாருக்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர் கையாண்டவிதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில் நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் சிமோன்வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில்  லிட்ரேலுடைய‘(Maximilien Paul Emile Littre) அகரமுதலியில்  பெண்ணியம்என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும் வரையறையைத் தாண்டிவிட்டதெனக்குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட பெண் விடுதலைசிந்தனையும், எழுப்பிய ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும், ‘பெண்ணென்ற  ஓர் இரண்டாமினத்தில்சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge) பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert), மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம் செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்•ப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

 யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் – பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.

 உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். பண்டை வழக்குகள்நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

 இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்; காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு. நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

 புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யபட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்ததுஎன நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1792ம் ஆண்டில் ஒலிம்ப் தெ கூர்ழ்‘(Olympe De Gourge) உரத்து குரல்கொடுத்ததைபோல: ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது‘,  அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால் அவர் சிரம் வெட்டபட்டது.

 அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த பொவாருடைய‘(Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர். உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று‘(La plus massive survivance de l’esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.

 பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு போகிறது.  அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை, எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது,’இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.சட்டென்று அவளுக்கு ஓரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

 மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டாண்டுகள் கழித்து அது கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய்  முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென சட்டம் இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.

 அவள்’(Elle) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர், மார்கெரித் துராஸ், பிரான்சுவாஸ் தோபோன், எவ்லின் சுல்லெரோ, பெனுவாத் மற்றும் •ப்ளோரா க்ரூல்ட், மொனிக் விட்டிக், சிமொன் தெ பொவார், லூயீஸ் வைஸ், அர்லெத் லகிய்யே, ழிஸேல் அலிமி, டெல்பின் செரிக், லிலியானா கவான்னி, மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் மகளிர் ஆண்டாகஅறிவித்தது. அன்னையர் தினம்என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. ஷந்தால் ஷவா•ப் பெண்ணைப்பற்றியும், ‘வீழ்ந்த பெண்கள்என்று எரென் பிஸ்ஸேவுல், ‘சூதக இரத்தம்என்று மரி கர்டினல் என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான அவள் விதிப்படி ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.

 

இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். பெண் விடுதலை இயக்கம்இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது, பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன. ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O)என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர். வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

 

இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென சொல்லிவருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்‘(DEUXIEME SEX) மிகப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்லஎன்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

——————————————————–

**.  1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.

 

  1. மே -ஜூன் –1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது, ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

 

  1. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)

 

3.. REGIME DE VICHY(1940 – 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு பெத்தேன்‘(Petain)என்ற ராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிருவாகம்

 

  1. Charle DE GAULLE (1890-1970) –இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

 

  1. Mouvement de liberation des femmes –பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.

———————————————————————————————

 

மொழிவது சுகம் ஜூன் 20 -62016

பிரான்சுநாட்டு  உயர்நிலைப்பள்ளிப்பொதுத் தேர்வும் த த்துவமும்

பிரெஞ்சுக் கல்விமுறை இந்தியாவினும் பார்க்க சற்றுக் கடுமையானதென்பது , எனதுக் கருத்து. இக்கல்விமுறைகுறித்து  பிரான்சு  நாடு பற்றிய இரண்டாவது தொடரை ஆரம்பிக்கும் பொழுது விரிவாக எழுத ஆசை. இங்கே உயர்நிலைப்பளி என்பட்து(Lycée ). . சிறப்புப் பாடமாக எதை எடுத்திருந்தாலும் , மொழிப்பாடத்தைப் போல  தத்துவமும்  கட்டாயம். பள்ளி இறுதிவகுப்பு மாணவர்கள்  பக்கலோரெயா (Baccalauréat) என்ற பொது த் தேவுக்கு தயாராகிறவர்கள்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பின் முடிவில்,  வருகிற தேர்வுக்கு  ஈடானது. இதனைச் சுருக்கமாக Bac  என குறிப்பிடுவதுண்டு. கடந்த வாரம் நடந்து முடிந்த  தத்துவத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :

1‘Bac’ இலக்கிய பிரிவினருக்கு

அ.       நமது  அறநெறி நம்பிக்கைகள், அனுபவத்தின் அடிப்படையில் உருவானவையா ?

– « Nos convictions morales sont-elles fondées sur l’expérience »

ஆ. ஆசை  இயல்பிலேயே அளவில்லாததா ?

– « Le désir est-il par nature illimité ? »

2. ‘Bac’ பொருளியல் மற்றும் சமூகவியல்

அ  ஆசைகள் பற்றிய தெளிவு எல்லாநேரங்களிலும் நம்மிடத்தில் உண்டா ?

–       « Savons-nous toujours, ce que nous désirons ? »

ஆ. வரலாற்றை அறிவதால் கிடைக்கும் நன்மை என்ன ?

– « Pourquoi avons-nous intérêt à étudier l’histoire ? »

3 .  Bac அறிவியல்

அ. குறைவான வேலை என்பதற்கு நன்றாக வாழ்வதென்று பொருளா ?

– « Travaillons moins, est-ce vivre mieux ? »

ஆ. ஒன்றைப்பற்றிய அறிதலுக்கு நிரூபணம்  அல்லது காரண காரியம் விளக்கம்

அவசியமா ?

–   « Faut-il démontrer, pour savoir ? »

  1.    Bac தொழில் நுட்பம்

அ.  சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல்  மட்டுமே நேர்மையாகுமா ?

– « Pour être juste, suffit-il d’obéir aux lois ? »

ஆ.  நம்பிக்கைகளை எப்பொழுதுமே நம்மால் நியாயப்படுத்த முடிகிறதா ?

– « Pouvons-nous toujours justifier nos croyances ?

ஒவ்வொரு தலைப்பைக் குறித்தும் எனக்குப் பட்ட தை எழுதலாமென நினைக்கிறேன், நீங்களும் உங்கள் கருத்தை நேரமிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

———————————

மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு

அகந்தை அல்லது செருக்கு

நான் இருக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரில் இரண்டு மெய்யியல் விவாத அமைப்புகள் உள்ளன ஒன்று le Café Philo மற்றது   Espace Culturel des Bateliers. முன்னதில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும், அடுத்ததில் மாதந்தோறும் நிகழ்வுகள் உண்டு. முதல் அமைப்பு கட்டணமின்றி செயல்படுவது, அடுத்தது நுழைவுக்கட்டணத்துடன் நடைபெறுவது. அதிக பட்சமாக இருபதுபேர் கூடுவார்கள். மிகவும் பயனுள்ள வகையில் மெய்யியலாளர்கள், மெய்யியல் கருத்தியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 70களில் சென்னையில் படித்தபோது, Forum of free enterprise என்ற அமைப்பு இருந்தது, அதில் உறுப்பினனாக இருந்தேன் அப்போதெல்லாம் என்.ஏ பல்கிவாலா சொற்பொழிவு பிரசித்தம், அந்த நோய் பிரான்சிலும் எந்த வேப்பிலைக்கும் இறங்காமல் இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளுக்கும் என்றில்லாவிட்டாலும் முடிந்தவரை கலந்துகொள்கிறேன் . கடந்த புதன்கிழமை le Café Philo வில் l’orgueil அதாவது செருக்கு, என்ற சொல் கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அடுத்த கிழமைக்குரிய தலைப்பினை முன்னமேயே தீர்மானித்துவிடுவார்கள். உரையாற்றவிரும்பும் நபர் எதுபற்றிய பொருளில் உரையாற்றவிரும்புகிறார் என்பதைத் தெரிவிக்கவேண்டும், ஒன்றுக்குமேற்பட்ட நண்பர்கள் வெவ்வேறு கருப்பொருளை முன்மொழிகிறபோது, அமர்வில் கலந்துகொள்ளும் நண்பர்களின் வாக்குகள் அடிப்படையில் விவாதத் தலைப்பை தேர்வு செய்வார்கள்.

இனி அகந்தைக்கு வருகிறேன். நமது புராணக்கதைகளில் அசுரர்களையெல்லாம் அகந்தையின் வடிவங்களாக முன் நிறுத்துவார்கள். இதிகாசத்திலும் மகா பாரதத்தில் துரியோதனன் இராமாயணத்தில் இராவணன் என அகந்தைக்கு உதாரணங்களைகாட்டுகிறோம். மனிதவாழ்க்கையை நெறிப்படுத்த இவ்வாறான கதைகளைக்கொண்டு உத்தமகுணங்களுக்கென்று சில மனிதர்களையும், தீயவற்றிற்கென சிலரையும் உருவகப்படுத்தி மனிதரினத்தை அடிமைப்படுத்த சமய எதேச்சாதிகாரம் பயன்படுத்திக்கொண்ட உத்திகள் இவை. ஆதாமையும் ஏவாளையும் தடைசெய்யபட்ட ஆப்பிளை உண்டு கடவுளுக்கு எதிராக அவர்களைச் சாத்தான் திசைதிருப்பி அகந்தையிற் தள்ளிய பாவக் கதை கிறித்துவத்தில் உண்டு., இந்து மதத்திலும் சபிக்கப்பட்டு பூலோகம் வந்த கதைகள் நிறைய(பூலோகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் ?), கிரேக்க இதிகாசத்திலும் இதுபோன்ற கதைகள் இருக்கின்றன. அகந்தை என்றதும், தற்புகழ்ச்சி, தற்பெருமை, மமதை, இறுமாப்பு, இனம், சாதி, நிறம், கல்வி, பதவி, பணம் தரும் அடையாளத்தினால் « தான் எனும் எண்ணம் » இப்படி நினைவுக்கும் வருகிற அனைத்துமே அகந்தையின் வடிவங்கள் என்கிறார்கள். அகந்தை என்றால் என்ன ? தம்மிடம் இல்லாத உயர்வை இருப்பதாக நினைத்து ஒழுகினால் அகந்தை, அல்லது தான் வெறுக்கின்ற ஒருவரைக்காட்டிலும் தனக்குக் கூடுதக் தகுதிகள் இருப்பதாக நினைத்தல். ஆனால் கர்வம் வேறு. பெருமிதத்தின் எல்லையை மீறினால் அகந்தை. ஒரு தமிழ் நடிகன் சூப்பர், சுப்ரீம், தளபதி, தல என்கிற கூட்டத்திடை தன்னை உலக நாயகனாக முன் நிறுத்திக் கர்வப்பட காரணங்கள் இருக்கலாம். அது ஹைதராபாத், திருவந்தபுரத்திலும்ங்கூட செல்லுபடி ஆகலாம், ஆனால் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும்ங்கூட தன்னை உலக நாயகன் என்று நினைப்பது, கேலிக்கூத்து, அகந்தைக்கு உதாரணம்.

« அகந்தையிடமிருக்கும் நல்ல விஷயம், பொறாமையைக் அது கட்டிக்காக்கிறது. ( «L’orgueil a cela de bon qu’il préserve de l’envie», de Victor Hugo) » என விக்தொர் யுகோவின் கூற்றுச் சுட்டிக் காட்டப்பட்ட து. « குற்றங்கள் அனைத்தையும் ஊட்டிவளர்க்கிற, தாயாகவும், குற்றங்களுக்கு அரசியாகவும் இருப்பது அகந்தை  » ( «La mère nourricière et la reine de tous les vices», de Saint Grégoire le Grand) என ஒரு  பிரெஞ்சு சமயகுரு கூறியிருக்கிறார் என்றார்கள். ஆத்திச்சூடி « உடையது விளம்பேல் » என்கிறது. அகந்தை இடத்தில் பணிவு வேண்டும் எனகிறது தமிழ் மரபுமட்டுமல்ல உலகமெங்கும் அறனெறிகள் பணிவை வற்புறுத்துகின்றன. அதேவேளை, சார்த்ரு உட்பட பல மெய்யியலாளர்கள் அகந்தைக்கு வக்காலத்து வாங்கியதையும், அகந்தைக்கு ஆதரவாகக் பேசியவர் நினைவூட்டினார். எனக்கும் வெபெர் என்ற அந்த நண்பர் கோடிட்டுக் காட்டிய சார்த்ருவின் இவ்வாக்கியம் பிடித்திருந்தது : « Cet orgueil, en fait, n’est pas autre chose que la fierté d’avoir une conscience absolue en face du monde » அதாவது «  இச்செருக்கு உண்மையில், உலகிற்கு முன்பாக, என்வசமிருக்கும் ஒரு முழுமையான  விழிப்புணர்வைக்குறித்த பெருமிதமன்றி வேறொன்றுமல்ல »  அந்நண்பர் ஃபூக்கோ வின் வாக்கியத்தையும்  நினைவூட்டினார் « செருக்கு என்பது, தன்னைக்குறித்த கவலையில் உருவாவது(l’orgueil est une transformation du souci de soi)  », அகந்தைகொள்வது நியாயமற்றதாக இருக்கலாம், ஆனால் கர்வப்படுவதில் நியாயமிருக்கிறது.  எனவேதான்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

என்ற குறளுடன் முழுமையாக உடன்பட எனக்கு விருப்பமில்லை. நாம் கர்வப்பட அவசியம் இருக்கிறது. தவிரக் கர்வப் படாதவர்கள் யார் ? எனது புத்தகம், எனக்குக் கிடைத்த பரிசு, ரஜனியுடன் எடுத்துக்கொண்ட படம், கலைஞரும் நானும் எனச் சொல்லிக்கொள்வதனைத்தும் கர்வம்தான், அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. செருக்கு என்பது நமது இருளைமறைத்து, ஒளியைமட்டும் காட்டும் முயற்சி. பெருமைகள் மட்டுமே என்னிடம் உள்ளன, சிறுமைகள் இல்லை, நான் தினமும் கிருமி நாசினி சோப் போட்டுக்குளிக்கிறேன் என்கிற மனோபாவம். சமூக வலைத்தளங்களை ஒருமுறை வலம் வாருங்கள் நாமனைவருமே உத்தமர்களென காட்ட முயல்கிறோம். நமது எதிரிகளைத் தேடிச்சென்று விசாரண நடத்த சாத்தியமற்ற நண்பர்களிடம் நமது பெருமைகளை அரங்கேற்ற நினைக்கிறோம். « சிறுமை அணிந்து என்னை நானே வியந்துகொள்வதும் பெருமைதான் » என வள்ளுவன் குறளுக்குப் புதிய உரை எழுதுகிறோம். கர்வத்தைச் செருக்காக மாற்றுவதில்தான் பிரச்சினை. எல்லோரும் எல்லாவற்றிலும் உயர்ந்தவராக அல்லது தாழ்ந்தவராக இருக்கமுடியாதென்பது உண்மையெனில், ஏதோ ஒன்றில் ஒருவன் அறிவாளியாகவும் பிறர் மூடராகவும் இருக்கமுடியுமென்பதும் உண்மை. அங்கே செருக்கை, தமது இருத்தலுக்கு முன்பாக அரியணையில் ஏற்றுவதுஅவசியமாகிறது. ஒரு வகையில் அது l’essence précède l’existence- இருத்தலுக்கு முன்பு சாரம்.

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்?”

என்ற கம்பனின் கர்வம் நியாயமானது.  விளம்பரமின்றி தொலக்காட்சியின் துணையின்றி, துதிபாடிகளின் துணையின்றி விருதுகளின்றி காலம் கடந்து தனது கவிதைவாழும் என நம்பிய  குரல் அது.  வள்ளுவரின் மற்றொரு குறள் வற்புறுத்தும்   வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி,அவ்வளவையும்  தூக்கிச் செயல்பட்டக்   கம்பனைப் பிழைக்கத் தெரியாதவனின் செருக்கு என கொள்ள முடியுமா ?. நாமிருக்கும் உலகம்,  நம்மைத் தாண்டிசெல்லும்  உலகமல்ல, மிதித்துக் கடக்க எண்ணூம்  உலகம், மிதிபடாமலிருக்க விழித்திருத்தல் அவசியம், கர்வம் அரைக்கண்மூடி விழித்திருத்தல்.

———–

உண்மை என்று ஒன்றில்லை: முஸல் பனி நாவலை முன்வைத்து

Musal pani புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு  எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.

“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மனிதர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:

நூலினான உரையினனான

நொடியோடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய  முதுமொழியான

மன்றமொழிகிளர்ந்த மந்திரத்தான

கூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)

என்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில்   ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.

கீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும்  பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:

1.  ஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு

2.பன்முகத்தன்மைகொண்ட இந்திய மரபு

3.தமிழ் மரபு

 

ஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.

1thamilavan_jpg_1631865gமுஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா? குறியீடுகளா? படிமங்களா? எடுத்துரைப்பா? இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில்  தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல்  உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு  மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன? விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.

காலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ  விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.

நண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.

தெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை  பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர்  அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ? என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த  நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும்  நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன்  இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே  காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.

தமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

____________________________________________________________________

மொழிவது சுகம் மே 27 2016

 

அ. தமிழருவி மணியன்

« காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்த படி இந்த முடிவை நான் மேற்கொண்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன். காந்திய மக்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை அதனுடைய நிர்வாகிகள் கூடி நிர்ணயம் செய்வார்கள்  » –      அரசியலிலிருந்து விலகிய தமிழருவி மணியன் விடுத்துள்ள செய்தி.

காந்தியே தேர்தலில் நின்றதில்லை  என்கிறபோது காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் ஆர்வம் காட்டியது தவறு. தமிழருவி மணியன் நேர்மைகுறித்து கேள்விகள் இல்லை. பிரச்சினை நேர்மையை பெரும் எண்ணிக்கையில் மக்களிடம் எதிர்பார்த்தது. உலகமெங்கும் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் அந்த விழுக்காடு 95 சதவீதம் இருக்கலாம், மற்றபடி எங்கும் இப்பிரச்சினை இருக்கிறது. மக்கள், மீடியாக்கள், அறிவு ஜீவிகள் என அனைவருக்கும் இங்கு வேறு நிறம். தவிர காந்திகூட தேர்தலை நம்பி அர்சியல் செய்யவில்லை, அவர் அடிமைப்பட்டுகிடந்த இந்தியாவில், வெறும் மேடை பேச்சுடன் ஒதுங்கிவிடாமல் களத்தில் இறங்கி, வெகு சனத்துடன் கலந்து அரசியல் செய்தவர். குறைகாண்கிற பாமரமக்களிடம், காந்திபோல காமராஜர்போல நம்பிக்கை பெறுவதற்கு தமிழ்அருவி மணியன் செய்ததென்ன ? ஜெயித்தவர்களைப் பாமரமக்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்களா என்ன ? கவிஞர் சுயம்புலிங்கம் சொல்வதுபோல : ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிற ஆனைகள் நம்மிடம் அதிகம்.

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சன ங்கள் – 11 காப்காவின் நாய்க்குட்டி நாவல் குறித்து க. முத்துகிருஷ்ணன்

காஃப்காவின் நாய்க்குட்டி ஒரு வாசிப்புப் பார்வை

.முத்துக்கிருஷ்ணன்

1

நாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.

இன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ருஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.

 வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்

இந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.

ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.

  காஃப்காவின் நாய்க்குட்டி”  பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவலின் தலைப்பினைப் போலவே பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’  காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது, நாவல் கருத்தரித்ததுஅனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்

என்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை,  நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.

காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன? நித்திலாவின் கதையா?  பாலாவின் கதையா? சாமியின் கதையா? ஹரிணியின் கதையா?  நித்திலாவின் தமக்கையின் கதையா? வாகீசனின் கதையா? அத்ரியானாவின் கதையா? இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும்,

சுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.

கதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக்  கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.

பல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப்

பார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது.  காதல் புறம் தள்ளப்பட்டு வாழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.

இந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-

மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தனபக்கம் 24

 எதுவானா என்ன?” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை பக்கம் 44

 

தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்”   பக்கம் 119

 

 “ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லைபக்கம் 164

 

நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல

அவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு

பக்கம் 187

 

நாய்க்கு என்ன பேரு பின்லாடனாபக்கம் 191

 

நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய

கவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்

எண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது.பக்கம் 250

அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்.பக்கம் 262

 

தமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

 

இன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.

 

இந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.

 

58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி. உலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” என்ற நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்நாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.

இம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.

 

  1. Muthu Krishnan,

291, Secretariat Colony,

Thuraipakkam,

Chennai- 600 097.

94444 21507

muthu77000@gmail.com <mailto:muthu77000@gmail.com>

 நன்றி :  பேசும் புதிய சக்தி

 

இரண்டாவது அரோகரா !

 

புரையோடிய நிலமும்
வற்றிய குளமும்
துப்பிய வெயிலில்
துவளும் ஆட்டைத்
தூக்கி நிறுத்தினான பூசாரி
மஞ்சள் நீர்த் தெளித்து
பூச்சரத்தைக் கழுத்திலும் இட்டான் !
சிலிர்த்தன ஆடுகள்
தலையை உயர்த்தின !
விழிகளில் தெரிவது
நன்றியா ? புரட்சியா ?
ரௌத்திரத்துடன்
பூசாரியைப்பார்த்தாள்
தொடைக்கட்டியுடன்
உட்கார்ந்திருந்த அம்மன் !
புரிந்தவன்போல
அரோகரா !வென கூக்குரல் செய்தான் !
தரை விழுந்த பின்னும்
மூடாத விழிகள் !
ஆத்திரத்துடன்
பூசாரியைப் பார்த்தாள்
அவை ஆடுகளம்மா !
புரட்சிகள் அறியாதவை என
விளக்கப் போதாத பூசாரி
இரண்டாவது முறையாக
அரோகரா ! என்றான்.
– நாகரத்தினம் கிருஷ்ணா

மொழிவது சுகம் மே 8 -2016: இருத்தலும் மறுத்தலும்

சாதிக்கான் : பாகிஸ்தானியர், சமயத்தால் இஸ்லாமியர் முதன் முறையாக மேற்கு நாடுகளில் மிகப்பெரிய, மிகமுக்கியமான  நகரமொன்றிர்க்கு, இலண்டன் மா நகருக்கு மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமைப் போராளி, பிரிட்டிஷ் உழைப்பாளர் கட்சியில்  நீண்டகால உறுப்பினர், அக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர். அவர் வழக்கறிஞர், மனித உரிமை போராளி என்பதால், சில நேரங்களில் சட்டப்பிரச்சினையுள்ள மனிதர்களை அலுவலகத்தில் வைத்து சந்திக்க நேர்ந்திருக்கிறது.  அதனைக் கொண்டு மேம்போக்காக அவர் தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறவர் என்ற குற்றசாட்டுகள் எதிரிகளால் வைக்கப்பட்டன.  இருந்தாலும் அவருடைய மதத்தையோ, அயல் நாட்டிலிருந்து வந்தவர் என்ற அடையாளத்தையோ வைத்துப் பார்க்காமல் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியின் கோடீஸ்வர, ஐரோப்பியரை, கடந்தகால காலனி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மனிதர் வெற்றிகண்டிருப்பது ஒரு சாதனை.  பாரீஸ் மா நகரில் ஒரு மேயருக்கு பிரத்தியேக அதிகாரங்கள் உண்டு : போலீஸ் மற்றும் நகரப் போக்குவரத்து அரசியலில் அவருடைய கைகள் கட்டப்பட்டவை அல்ல. இலண்டன் மா நகர் மேயர் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை என் கிறார்கள். நமக்கு அது முக்கியமல்ல, அவரது வெற்றி இரு விஷயங்களை உறுதிபடுத்துகிறது. முதலாவதாக அவர் என்னதான் மேற்குலக வாழ்க்கையெனும் பொது நீரோட்டத்தில் கலந்திருந்தாலும் பிரச்சினைகள் என்று வருகிறபோது அவரது குலமும், கோத்திரமும் பூர்வாசிரம உண்மைகளும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யப்படும்  உண்மை, அவரது மேற்குலக வாழ்க்கையை, இங்க்கிலாந்து நாட்டில் அவரது இருத்தல் எறும்பு ஊர்ந்து போட்டிருந்த மணற்கோட்டினை,  இலண்டன் மேயர் தேர்தல் கலைத்திருக்கிறது.  நாற்பது ஆண்டுகால இலண்டன் இருப்பு மறுக்கபட்டு அவரது கடந்த காலம் தோண்டி எடுக்கப்பட்டது. இரண்டாவதாகக் கடந்த பல நூற்றாண்டுகளாக நவீன வாழ்க்கைமுறையில் பலஅம்சங்களில் முன்னோடிகளாக உள்ள மேற்குலக மக்கள் இவ்விடயத்திலும் தாங்கள் முன்னோடிகள்  என்பதை எண்பித்து ஒரு புலம்பெயர்ந்த பாகிஸ்தானியரின் அரசியல் இருத்தலை மறுக்காமல் உறுதிப்படுத்தியிருக்கும் உண்மை.

மனித வாழ்க்கையில் இருத்தலும் மறுத்தலும் பரஸ்பர எதிர்வினைகள். « எனது இருத்தலை ஏற்றால் உனது இருத்தலை ஏற்பேன், இல்லையென்றால் இல்லை. » எனக்கு லைக் போட்டால் உனக்கு உடனடியாக ஒரு லைக். துறைசார்ந்த இருமனிதர்களிடத்தில் ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரிப்பது அத்தனை எளிதானதல்ல. ஜெயிப்பவன் பக்கத்து தெருவைச் சேர்ந்தவனாக இருந்தால் பிரச்சினையில்லை, மாறாக அவன் பக்கத்துவீட்டுக்காரனாக இருந்தால், வயிறு எரிகிறது.   அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களை மட்டுமல்ல அவர்களமர்ந்த நாற்காலிகளைக் கூட வெறுக்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டு, வெறுப்பு நிலை அரசியலில் வாழ்ந்த, வாழ்கிற தமிழ் அரசியல் வாதிகளை அறிவோம்.  உலகில் வேறேங்கும் கண்டிராத அளவில் நூற்றுக்கணக்கில் தமிழ் நாட்டில் கட்சிகள் உள்ளன. தமது இருத்தல் உணரப்படவில்லை என்ற ஏக்கங்களின் புறவடிவங்கள் அவை.

எழுத்து அரசியலிலும் இந்த இருத்தல் மறுத்தல் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரையோ, ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரையோ, ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றொரு மொழிபெயர்ப்பாளரையோ அவர் இருத்தலையோ « as it is » எற்பது இங்கு நடக்கக் கூடியதல்ல, தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூப்பிக்க முயல்வதுபோல சில நேரங்களில் பிற எழுத்தாளர்களுடன் (அவர் தமக்குப் போட்டியில்லை எனக் கருதினால், அவர்கள் இருத்தலை இனி தன்னால் மறுக்க முடியாதென்றால்) குரூப் போட்டோ எடுத்துக் கொள்வதுண்டு,  விதிவிலக்குகளாக சில எழுத்தாளர்கள் இருக்கலாம், ஆனால் அது பொது விதி அல்ல.

என்னிடம் தங்கள் படைப்பை மொழிபெயர்க்கச் சொல்லி கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நியாயம் கருதி அதைச் செய்ய நினைத்தாலும், எனது உள்மனம் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியவனாக இருக்கிறேன்.  எனது இருத்தலை உறுதிசெய்ய அவர்கள் கிள்ளிப்போட்டத் துரும்புகள் எத்தனை என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.  பிறர் தங்கள் இருத்தலுக்கு எத்தனை விசுவாசமாக இருக்கிறார்களோ அத்தனை விசுவாசமாக எனது இருத்தலை போற்றவும், உறுதிசெய்யவும் எனக்கும் விருப்பம் இருக்கிறது.

இக்கட்டுரையை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ எனக்குத் தெரியாது, எல்லா மனிதர்களையும்போலவே எனது இருத்தலைத் தெரிவிக்கும் முயற்சியெனக் நீங்கள் கருதினால், எனது வாக்கு மறுத்தலுக்கு அல்ல.

—————————————-