Category Archives: Uncategorized

மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ?

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.:

பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல்  la vie sécreteஅபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள்   விற்பனையில்  சாதனை புரிந்துள்ள  நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில்   வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்,  Bernard Mangiante.  நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . பிரான்சுநாட்டிலும் நூலுக்கு நல்ல வரவேற்பென்று,  பிரெஞ்சு மொழியில் கலை இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமாகச் செயல்படும் France Culture வானொலி மூலம் அறியவந்தேன்.  நூல்,  மரங்களின் வாழ்க்கை நெறிகளை பேசுகிறதென்று சொல்லப்படுகிறது, இதுவரை வாசித்ததில்லை.

இயற்கை என்றால் பசுமை, வயல்கள், காடு, மரங்கள் செடி, கொடிகள் என்றே பொருள்கொண்டு பழகியிருக்கிறோம். ஆனால் ஆதனை இப்பிரபஞ்சத்தின் இயல்பு நிலை எனபொருள்கொண்டால்  மனிதர் உட்பட, பாரதி சொல்வதுபோல நிற்பது, நடப்பது, ஊர்வது பறப்பது அனைத்தும்( அவற்றின் தோற்றம்,  இயல்பான வாழ்க்கை முதலான), பிரபஞ்சத்தின் உண்மை நிலை (Reality), இயற்கை ஆகிறது. பிரெஞ்சு மொழியில் « tel qu’il est » என்றும்,  ஆங்கிலத்தில்   « As it is » என்றும் ஒன்றைப் பார்ப்பது. தமிழில் சொல்வதெனில்  எதுவாக இருக்கிறதோ அதனை அதுவாகப் பார்ப்பது. « Il vaut mieux être que paraître. »   என பிரெஞ்சு மொழியில் சொல்வதைப்போல , « பாசாங்கு தோற்றத்தைக்காட்டிலும் உண்மைத் தோற்றம் மேலானது » . ஆனால் அது மனிதரால் முடிகிற காரியமா ?

எதையும் கூட்டியோ குறைத்தோ ; பார்த்து, மதிப்பிட்டு விலை பேசி , விமர்சித்து வாழப்பழகிய மனித குணம் இயற்கைக்குரிய நியாயமான மதீப்பிட்டை அளித்து, உள்ளது உள்ளவாறு வாழப்பழகியதுண்டா என்றால் இல்லை. தேவைசார்ந்து பழகிய கண்களுக்கு மலரும் முள்ளும் அதனதன் கடமையை, அதனதன் இருத்தலை  அதனதன் கடப்பாட்டை நிறைவேற்றப் பிறந்தவை என்பதை மறந்து போவதும் இயற்கை. ஏன் எனில் அந்த « முள்ளும் மலரும் » எனக்கென்ன செய்கிறது என்ற பார்வை எடுத்த முடிவு. இதற்கு மலரோ முள்ளோ பொறுப்பு அல்ல. இங்கே « இயற்கையைப் பூதம் » என வர்ணித்து  எழுதுகிறேன் எனவைத்துக்கொள்ளுங்கள், என்னுடைய பூதத்திற்கும்,  நீங்கள்  கற்பனையில் காண்கிற பூத த்திற்கும் வேறுபாடிருக்கலாம்.  இந்த இரண்டு அணுகு முறைகளும்கூட ஒரு வகையில் இயற்கைக்கு, எதார்தத்திற்கு சேதம் விளைப்பவைதான். நகைக் கடையின் பெயர்கள் தான் வேறு, ஆனால் செய்கூலியில் சேதாரத்தைச் சேர்க்காத மனித வியாபரிகள் இருப்பதில்லை. இம்மனித உயிரிகளைத் தவிர பிற ‘இயற்கைக்’கூறுகள்  பொய்யின்றி அலங்காரமின்றி, ஜோடனையின்றி, வாசனாதி தைலங்களின்றி, அறிவை விருத்தி செய்யும் முனைப்பின்றி, அகந்தையின்றி ஆசையின்றி, கனவுகளின்றி  பிரபஞ்சத்தில் தமது பிறப்பையும் பதிவு செய்கின்றன. இறப்பையும் மருத்துவரிடம் போகாமல் ஏற்கின்ற பக்குவம் அவற்றுக்கு மட்டுமே உண்டு. தமது பிறப்பின் பயனை  தமக்கென கொள்ளாமல் இப்பிரபஞ்சத்திற்கு அர்பணித்துவிட்டு,  கல்லறை பற்றிய கனவுகளின்றி, ஈமச்சடங்குகள் குறித்த எதிர்பார்ப்புகளின்றி, சமயச் சடங்குகளின்றி மண்ணில் அவை மக்கிப்போகின்றன. மக்கி எருவாகி இறந்த பின்னும் ஈட்டிய கடனை திருப்பித் தரும் நேர்மை இயற்கைக்கு மட்டுமே உண்டு.

அண்மையில் மொழிபெயர்த்திருந்த ‘புரட்சியாளன்’ நூலில் அல்பெர் கமுய் (Albert Camus), கலை இலக்கிய படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது, இயற்கையை, இவ்வுலக உண்மையை , எதார்த்தத்தை  தாம் எதிர்பார்க்கின்ற வகையில் திருத்த முற்படுபவர்கள் என்ற  பொருளில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மனிதர்கள் முயல்வதற்கு  இயற்கையின் குறைய நிவர்த்தி செய்யவேண்டும் என்ற விருப்பம் மட்டுமே  காரணமல்லவென்றும், இயற்கையை உள்ளது உள்ளவாறு முழுமையாகச் சொல்வதற்குரிய இயலாமையும் காரணமென்று அதில் விளக்கியியுமிருப்பார். உண்மைதான் ஒரு காட்சியை, ஓர் எதார்த்தத்தை  எத்தனை வரிகளில், எத்தனைச் சொற்களில் உபயோகித்தாலும், முழுமையாக மொழிப்படுத்த, கலையில் வடிக்க, சித்திரமாகத் தீட்ட சேதாரமின்றி இயலாததுதான், இயற்கை எந்தவொரு கண்ணிக்கும் , பொறிக்கும், வலைக்கும் பிடிபடாத விலங்கு.

அண்மையில்,  பியர்லெமேத்ர் (Pierre Lemaître) என்பவர் எழுதியிருந்த ‘Au revoir la-haut)  எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது. அவருடைய இவ்வரிகள் மறக்கமுடியாதவை : « Son cerveau mélangeait la réalité et des dessins, des tableaux, comme si la vie n’était rien d’autre qu’une œuvre supplémentaire et multiforme dans son musée imaginaire. »Au-revoir-la-haut

« வாழ்க்கை என்பதும் ஒரு கலை படைப்பு, பல வடிவங்களால் ஆனது என்பதன்றி வேறல்ல என்பதைப்போல எதார்த்தத்தடன் சித்திரங்களையும், ஓவியங்களையும் தனது கற்பனை அருங்காட்சியகத்தில், ஒன்று திரட்டினான் » என்ற படைப்பாசிரியரின் வரிகளை அல்பெர் கமுய் எழுப்பும் பிரச்சினை சார்ந்த தீர்வாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியர் சொல்வதைப்போல வாழ்க்கையையும் கலைபடைப்பாக அது எத்தனை கோணல்மாணலாக தீட்டப்படிருப்பினும், எதார்த்தத்திற்கு அல்லது இயற்கைக்குச் சமதையாக, கதை மாந்தனைப்போல  (அவன் முதல் உலகப் போரில் படுகாயமுற்று சிகிச்சைபெறும் வீரன், ஓவியனும் கூட)   மனதில்  நிறுத்தி திருப்தியுறுவதைத்  தவிர மனிதர்க்கு வேறுவழிகள் இருப்பதாக தெரியவில்லை. அதுவொன்றுதான், மனிதரினும் பார்க்க பெருமை மிக்க இயற்கையை, அதன் அகந்தையை வெல்ல பொய்யாகவே வாழப்பழகிய  மனிதன் கைகொள்ளக்கூடிய நிரந்தர தந்திரமாக இருக்க முடியும்.

. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பி கூடம் (Café littéraire) 420px-Café_de_Flore

இலக்கிய காப்பிக்கூடம் என்ற பெயரில் காப்பி இருப்பினும் காப்பி, தேநீர், பீர், தண்ணீர், பழரசங்கள், சோடா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பரிசாரகரிடம் கொண்டுவர பணித்துவிட்டு  உரையாட, விவாதிக்க, அல்லது தன்னந்தனியாக அமர்ந்து எழுத இலக்கியவாதிகள், ஓவியர்கள் தேர்வு செய்யும் விடுதிகளுக்கு இலக்கிய காப்பிக்கூடம் என்று பெயர். பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இத்தகையை கலை இலக்கிய காப்பிக்கூடங்கள் பிரசித்தம் என்றாலும் பாரீஸ் நகரத்திற்கு கூடுதல் பெருமையுண்டு. தவிர கலைஇலக்கியத்தின் பல பிரிவினரும் தொன்று தொட்டு இத்தகைய இடங்களுக்கு வந்து போவதை ஆண்டுகள் பலவாக தொடர்ந்து பின்பற்றிவருகின்றனர்.

இவர்கள், முழுக்குடியர்களாக  சட்டையைப் பிடித்துக்கொள்வதற்கென்றே பாருக்குச்  செல்லும் படைப்பாளிகள்  அல்ல, தவிர குருவை அரியாசனத்தில் அமர்த்தி, அவரின் பிரதாபத்தை அரசியல் தலைவர்- தொண்டர்கள் உறவின் அடிப்படையில் வாய்பிளந்து கேட்கும் சிஷ்யர்கள் இலக்கணத்தையும் அவர்கள் படித்ததில்லை, எனவே இந்தக் காப்பிக் கூடங்களின் இலக்கிய உரையாடல்கள் அனைத்துமே சக படைபாளிகளுடன், சிந்தனையாளர்களுடன், கவிஞர்களுடன், ஓவியர்களுடன் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடின்றி சரி சமமாக அமர்ந்து உரையாடும், விவாதிக்கும் களம். பதினேழாம் நூற்றாண்டிற்கு முன்பே le cabaret என்கிற இரவு விடுதிகள், மதுவை பிரதானமாக அருந்துகிற le taverne  விடுதிகள் ஆகியவற்றிற்குச் சென்று உரையாடும் வழக்கம் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது.  ஆனால் இத்தகைய காப்பி பார்களுக்கான செல்வாக்கு பதினேழாம் நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அழகியல், தத்துவம், அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் தங்கள் சொந்த இல்லங்களைத் தவிர்த்த சிறப்பு பொதுவெளியாக துறைசார்ந்த நண்பர்களுடன் விவாதிக்கும் களமாக காப்பி பார்கள்  உருவான காலமிது. அந்தவகையில்  முதலாவது இலக்கிய காப்பிக்கூடம் என்ற தகுதியைப் பெற்றது ‘le Procope’ (1986). இங்கு நாடகம் சார்ந்த புதிய முயற்சிகள் குறித்த கருத்துக்களை அத்துறை சார்ந்த நண்பர்கள் பகிருந்துகொண்டதாகச்  சொல்லப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இக்காப்பிக்கூடம் நாடக ஆசிரியர்களிடை பயன்பாட்டில் இருந்த இந்த இடம், பின்னர் பிரெஞ்சு புரட்சியின் போது முன்னணி தலைவர்கள் பலரும் அவ்வப்போது கூடி விவாதிக்க உதவி இருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறுகிய வீதிகளில் இருந்த காப்பி பாரை  விரும்பாத கலை இலக்கிய படைப்பாளிகள் அந்நாளில்  பாரீஸ் நகரில் Les grands boulevards எனப்புகழ்பெற்ற  பகுதியில் இருந்த காப்பிபார்களுக்கு வந்து செல்ல தொடங்கினர். இப்ப்குதியில் அவரவர் ஈடுபாட்டிற்கொப்ப துறை சார்ந்த நண்பர்களுடன் ஒரு பகுதியில் அவான் கார்டிஸ்டுகளும் (les avant-gardes), குறியீட்டாளர்களும்  சேன் நதியின் இதுடப்பக்கமிருந்த le Soleil d’or, le café de Cluny, le Vachette போன்ற காப்பி பார்களுக்கு வந்துபோக ;  சேன் நதியின் வலது பக்கமிருந்த காப்பிபார்களுக்கு போல்-ழான் தூலெ, கூர்த்தலின், ப்ரூஸ்ட் போன்றவர்கள் வந்து சென்றார்கள் அதேவேளை பாரீஸ் நகரின் மோன்மார்த்ரு  (Monmartre)பகுதியிலிருந்த  le chat noir காப்பி பாருக்கு வான் காக் முதலான நாடோடி வாழ்க்கை நடத்திய ஓவியக்கலைஞர்களும், க்யூபிஸ (Cubism) அபிமானிகளும்   வத்துபோவது வாழக்கமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோன்மார்த்ரு பகுதியிலிருந்து மோன்பர்னாஸ் பகுதியிலிருந்த காப்பிபார்களுக்கு போக ஆரம்பித்தார்கள், மீ எதார்த்த்வாதிகள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப இப்பகுதியிலிருந்து விலகி வெகுதூரத்திலிருந்த காப்பிபார்களில்  சென்று உரையாடினார்கள். நாற்பதுகளில் (1940) இத்தகைய காப்பி பார்கள் கலை இலக்கியவாதிகள் கூடும் இடமாக மட்டுமின்றி, அவர்களுக்கு எழுதவும் பயன்பட்ட து. அவ்வகையில் சிமொன் தெ பொவ்வார் அதிகம் வந்துபோகும் காப்பி பாராகLe Flore இருந்த து. பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இன்றும் இலக்கியவாதிகள் மட்டுமின்றி, தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோரும் காப்பி பாரில் கூடுகிறார்கள், அவற்றிர்க்கு Café Philosophique என்று பெயர்.

 

. பிரான்சில் என்ன நடக்கிறது.

அடுத்த மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல். இதுபற்றி விரிவாக அடுத்த மாத த்தில் எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட் ரம்ப் போன்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்த முகூர்த்தம் பிரான்சிலும் அதுபோன்ற தலவர்களுக்கு இன்று செல்வாக்கு.  அந்நியர்களை வெளியேற்றினால், பிரான்சு  ஐரோப்பாவிலிருந்து  வெளியேறினால் நாட்டின் மொத்த பிரச்ச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற பேச்சை நம்பும்  வெகுசன அரசியல் பிரான்சிலும் பிரசித்தம். அண்மைக்காலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் இந்த மாற்றத்தில் பங்கிருக்கிறது. இன்று பரவலாக ஐரோப்பிய நாடுகளில் வலது சாரிகளின் பேச்சு சாதாரண மக்களை எளிதாக ஈர்க்கிறது.  ஏற்கனவே ஆஸ்த்ரியா, நோர்டிக் நாடுகள் சிலவற்றில்  தீவிரவாதம் ஜெயித்துவிடுமோ என்ற அச்சத்தில் நடுநிலையாளர்கள் கவலைப்பட,  தேர்தல் முடிவுகள் தீவிர வலது சாரிகளுக்கு எதிராகவே இருந்தன.  அந்த  அச்சம் பிரான்சில் இன்று இருக்கிறது. Front National  எனும்`பாசிஸக் கட்டியின் தலைவர் மரி லெப்பென்(Marie Le pen)  என்ற பெண்மணி கருத்துக் கணிப்பின்படி தற்போது போட்டியாளர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர். பொதுவாக பிரான்சு நாட்டில் இனவேற்றுமை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராகலாம், பிரான்சு நாட்டில் சாத்தியமில்லை.   இந்த நிலையில் அண்மைக்காலத்தில் பிரெஞ்சு பொலீசாரின் தாக்குதலுக்கு ஒரு கறுப்பரின இளைஞர் உள்ளானார், பெரும் கொந்தளிப்பு உருவாகித் தணிந்தது. தற்போது சீனர் ஒருவர் பாரீஸில் சுடப்பட்டுள்ளார். இறந்த சீனர் கத்தியால் தாக்கவந்ததாகவும் தற்காப்புக்காக தாங்கள் ஆயுத த்தை உபயோகித்த தாகவும் பொலீஸார் கூறுகின்றனர். பாதிக்கபட்டவர் தரப்பினர் வாதமோ அதை முற்றாக மறுக்கிறது. விளைவாகத் தொடர்ந்து சீனர்கள் வீதியில் போராடுவது தொடர்கிறது(இப்போராட்டத்திற்குப் பின்புலத்தில் சீன அரசு இருக்கிறதென்ற குற்றச்சாட்டை, பிரான்சு உளவுத் துறை தெரிவிக்கிறது, அதைக் இறந்த சீனரின்  வழக்கறிஞர் கடுமையாக மறுத்திருக்கிறார்) இதற்கிடையில் சீன அரசு தங்கள் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பிரெஞ்சு அரசுக்குத் தெரிவிக்க, அடுத்த சில நாட்களில்   பிரெஞ்சுக்கார ர் ஒருவர் சீனாவில் தாக்கப்பட்டாரென்று செய்தி.

உலகெங்கும் தேசியவாதம் தலைதூக்கியிருக்க, இதே ஐரோப்பாவில்  பிரான்சுக்கு அண்டை நாடான சுவிஸ்ட்ஸர்லாந்து,  நான்கு மொழி பேசும் மக்கள் அவர்களின் வெவ்வேறு கலாச்சாரம், கணிசமான புலம்பெயர்ந்த மக்கள்  என்ற நிலையிலும் அமைதியான வாழ்க்கையைப் பேதமின்றி தம் பிரஜைகளுக்கு வழங்கிவருகிறதென்ற  உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

—————————————————————————–

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. க. பஞ்சாங்கம் ‘(புரட்சியாளன் நூல் முன்னுரை

puratchiyalan        “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981) நாவலை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அல்பெர் கமுய் (இதுதான் சரியான உச்சரிப்பு என்கிறார் கிருஷ்ணா) எனக்குத் தெரிய வந்தார். சுந்தர ராமசாமி சுட்டுகிற பெயர் என்பதனாலேயே மனதில் கிடந்த அந்தப் பெயர், பின்னாட்களில் “அந்நியனை” வாசிக்க நேர்ந்தபோது என்றும் அழியாத பெயராக எனக்குள் நிலைத்துவிட்டது. என் குணச் சித்திரத்தைக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுபோட்டுக் கிழித்து எறிந்துவிட்டு எனக்குள் இருந்த புதிய சித்திரத்தைக் கண்டடையப் பெரிதும் பயன்பட்ட படைப்பு அது. வாசிப்பு மூலம் புதிதாகப் பிறக்கலாமென்று உணர்த்திய உன்னதம் நிகழ்ந்த காலமாக என் நினைவில்  அது பதிந்துள்ளது. சூழலை எப்படி உள்வாங்குவது, கணங்களில் வாழ்தல் என்பது என்ன, மற்றவர் நமக்கு என்னவாக இருக்கிறார், நிச்சயமற்ற உலகில் நிரந்தரமென்கிற பாவனையில் வாழ்தல் எப்படிச் சாத்தியமாகிறது முதலிய பல்வேறு விசாரணைக்குள் என்னை இழுத்தடித்தது ‘அந்நியன்’. அந்த அனுபவத்தை எல்லாம், இப்பொழுது அவருடைய கட்டுரை நூலைப் ‘புரட்சியாளன்’ என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்ப்பில் வாசித்து முடித்த கையோடு எண்ணிப் பார்க்கிறேன். இத்தகைய முந்தைய கால நிகழ்வுகள் குறித்த நினைவுகள் தரும் ஒருவிதக் களிப்புணர்வோடு இந்த முன்னுரையை எழுதத் தொடங்குகிறேன்.

II

ஓரிடத்தில் கமுய், ‘புரட்சி பற்றிய பிரச்சனையை மேற்கத்திய சிந்தனை மட்டுமே துல்லியமான பொருளில் கையாண்டிருக்கிறது’’ (ப – 26) என்று எழுதுகிறார்; இந்தக் கூற்றிற்கு மிகப்பொருத்தமாக, கிரேக்க நாகரிகம் தொடங்கி, நவீனத் தொழிற்சமூகம் வரை, இலக்கியவெளியிலும் சமூக வரலாற்று வெளியிலும் தத்துவச் சிந்தனைத் தளத்திலும் ஐரோப்பாவில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ள புரட்சிகளின் அல்லது கிளர்ச்சிகளின் வரலாற்றை, வரலாறு என்ற முறையில் தொகுக்காமல், மனிதர்களின் எதிர்கால நலனை நோக்கிய தத்துவ விசாரணை என்ற நெறிமுறையில் நின்று இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும்,  “கொலைச்செயல், கலகக்குரல் – இரண்டையும் முன்வைத்து, தற்கொலை மற்றும் அபத்தவியல் கருத்தின் அடிப்படையில் ஆரம்பித்து வைத்த சிந்தனையென இக்கட்டுரையைக் கருதலாம்” (ப – 8) என்று தன் முன்னுரையில்  “ இது ஓர் ஆரம்பம்தான்’ என்கிறார். அந்த அளவிற்கு நவீன நூற்றாண்டில் மனிதப் பிரச்சனைகள் பெரும் புதிராகவும் சிக்கலாகவும் வளர்ந்து கிடக்கின்றன.

‘தான் வாழும் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி’ (ப – 6) என்று 1951 – இல் வெளிவந்த இந்த நூல் குறித்துக் கூறுகிறார். அவர் வாழ்ந்த அந்தக் காலம் எப்படிப்பட்டதாக இருந்தது. அவரே எழுதுகிறார் :  “தனித்தொதுங்கியிருந்த குற்றம், இன்றைக்கு அறிவியல் போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்று வரை  தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது’ (ப – 6) திரும்பும் திசைதோறும் கொலைச் செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது. நாசுக்காகப் புலம்பிக் கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாம் உலகப் போர் (1939 – 1945) முடிந்த பின்னணியில் அமைந்த, அவர் வருணிக்கும் அந்தச் சமூகச்சூழல், இன்றைக்கும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் கூடுதலான கொடூரங்களோடு தொடர்கிற யதார்த்தச் சூழலில், இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் சூழலைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்து கொள்ளப் பேருதவியாக இருக்குமென்று உறுதியாக நம்பலாம்.

மிகவும் தீர்க்கத்தரிசனத்தோடு 1951 – லேயே  “தண்டிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள இந்த யுகம் (அதற்கு முன்பாக அதன் குற்றமும்  புரிந்து கொள்ளப்படவேண்டும்) அடுத்த ஐம்பது ஆண்டுகளில் எழுபது மில்லியன் மனித உயிர்களைக் கொத்தடிமைகளாக்கவோ, கொன்று குவிக்கவோ அல்லது அவர்கள் வாழ்ந்த அடையாளத்தை முற்றாக அழித்துவிடவோ கூடுமென்று கருதப்படுகிறது.” (ப – 6) என்று எழுதுகிறார். அவர் கருதியதற்கும் மேலாக, இரண்டு உலகப் போரிலும் சமயப் போரிலும் கொன்றொழித்த மனித உயிரிகளை விட அதிகமான உயிரிகளை, அதற்குப் பின்னால் வந்த நமது காலகட்ட வரலாறும் கொன்றொழித்திருக்கிறது. கொலைகளின் வரலாறுதான் மனித சமூக வரலாறா?. “நமக்கு விடப்பட்டுள்ள இந்தச் சவாலை ஏற்பதும் தெளிவாக விளங்கிக் கொள்வதுமே இதைக் கடப்பதற்கான வழிமுறை. தன் கட்டுரையின் நோக்கமும் இதுதான்” என்கிறார்.

III

தங்கள் எஜமானர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கக் கொல்லவும் வேண்டும், கொல்லப்படவும் வேண்டும் என்கிற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அடிமைகளின் கிளர்ச்சியை விளக்குகிறார். எழுபது அடிமைகளுடன் தொடங்கிய அந்தக் கிளர்ச்சி, எழுபதாயிரம் கிளர்ச்சியாளர்களைக் கொண்ட படையாக மாறி, ரோமானியரின் இராணுவத்தைத் தோற்கடித்து ரோம் நகருக்குள்ளே அணிவகுத்துச் சென்றது; ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கி நடத்திய இந்தக் கிளர்ச்சி புதிதாக எதையும் கொண்டுவரவில்லை; “அடிமைகளின் இராணுவம் அடிமைகளை விடுவித்துப், பதிலாக அவர்களுடைய முன்னாள் எஜமான்களை அவர்களிடம் அடிமைகளாக ஒப்படைத்தது” என்கிறார். விளைவு, மனிதர்களை மீண்டும் கொல்வதற்கு வழிகாட்டியதொன்றே அதன் பலன் என்கிறார். இறுதியில் ரோம் நகரை முற்றுகையிட, ஸ்பார்ட்டகஸ் படை அணிவகுத்துச் செல்லுகிறது; ரோம் நகரின் புனிதச் சுவர்களைக் கண்டதும், தொடர்ந்து செல்லத் தயங்கித் திரும்ப நினைக்கிறது. இப்பின்வாங்கல் முடிவிற்குப் பிறகு தோல்வியும், உயிர்த்தியாகமும் மீண்டும் அடிமைகள் வாழ்வில் கோலோச்சத் தொடங்குகின்றன. ரோமானியத் தளபதியுடன் நேர்க்கு நேர் சரிசமமாக நின்று போரிட ஸ்பார்ட்டகஸ் முன்னேறிச் செல்ல முயலுகிறான்; ஆனால் அவனால் முடியவில்லை; கொல்லப்படுகிறான்; கொன்றது எஜமானர் படையல்ல; கூலிப்படை. அவனைப் போன்றே அடிமைகளாலான கூலிப்படை. அவர்கள் கொன்றது ஸ்பார்ட்டகஸ் விடுதலையை மட்டுமல்ல, தங்களுடைய விடுதலையையும் சேர்த்துக் கொலை செய்தார்கள் என்று எழுதுகிறார் கமுய். தொடர்ந்து, அடிமைகளால் சிலுவையில் அறையப்பட்ட ஒரு ரோமானிய உயர்குடிமகனுக்காக, படைத்தளபதி கிராஸ்ஸஸ், ஆயிரம் சிலுவையில் ஆயிரம் அடிமைகளை ஏற்றிக்  “காப்புவால்” ஆரம்பித்து,  “ரோம்” வரை நெடுகச் சாலையில் நிறுத்திக் காட்டினான். இந்தக் கிளர்ச்சி இறுதியில் உணர்த்தியது என்ன? இத்தனை மனிதக் கொலைகளால், அழிவுகளால் அறிந்து கொண்ட செய்தி என்ன?  “முதலாவதாக அதிகார உலகில் சரிநிகர் சமம் என்பதற்கு இடமில்லை; அடுத்ததாக தங்கள் குருதிக்கு, மிகக் கடுமையான வட்டி கணக்கிடக் கூடியவர்கள் எஜமானர்கள் என்ற உண்மை” என்கிறார். இப்படித்தான் எந்தச் சங்கிலியிலிருந்து விடுபட முயல்கிறோமோ அதைவிடக் கடினமான சங்கிலிக்குள் சிக்கிக் கொள்ளுவதுதான் புரட்சிகளின் வரலாறாக இருக்கிறது என்பதைத்தான் பலவாறு தனக்குள் செறிந்து கிடக்கும் தத்துவச் சிந்தனைகளின் மூலம், ஒரு படைப்பாளிக்கே உரிய உருவகம், அங்கதம், கவித்துவம், துக்கம், தொனி முதலியவைகளைச் சுமந்துவரும் ஒருவகையான கனமான மொழியால் உரையாடலை வளர்த்தெடுத்துக் கொண்டு போகிறார். தத்துவச் சொல்லாடல் என்றாலே, எளிதில் புரியாத மொழியாடல் வந்து கூடிக் கிடப்பதும் தவிர்க்க முடியாதது; அப்படியான இடங்கள் மூலத்திலேயே அமைந்து கிடப்பதால் மொழிபெயர்ப்பிலும் அத்தகைய இடங்கள் தொடர்கிறது என்று நினைக்கிறேன். புரியாமை என்பதும் மனித இருப்பின் ஓர் அம்சம்தான். கவர்ச்சியின் இரகசியமும் அதுதான்.

IV

ஸ்பார்ட்டகஸ் நடத்திய கிளர்ச்சியை எப்படி வர்ணித்தாரோ அதுபோலவே ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சி, அரசக் கொலை நடத்திய பிரெஞ்சுப் புரட்சி, மீஎதார்த்தவாதிகள் நடத்திய கிளர்ச்சி, மார்க்சிய அடிப்படையில் நடந்த இரஷ்யப் புரட்சிகள், முசோலினி, ஹிட்லர் நடத்திய புரட்சிகள் என நடந்த அனைத்துப் புரட்சிகளாலும் நடந்த விளைவு என்ன? இந்தத் தற்கொலைகளும் கூட்டுக் கொலைகளும் மானுட நலத்திற்கு வழங்கியது என்ன? தனிமனிதப் பயங்கரவாதத்தையும் அரசுப்பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுத்த இந்தப் புரட்சிகளால் மானுட சமூகம் கண்டதென்ன? இப்படியான ஓர் அணுகுமுறையில் நடந்த புரட்சிகளை எல்லாம் விமர்சித்துச் செல்வதால், இவர் புரட்சிக்கு எதிரானவரா என்றால் இல்லை.  ‘புரட்சியாளன்’ என்ற இந்த நீண்ட கட்டுரையைப் பொறுத்த வரை, புரட்சிக்கு ஆதார சக்தியான  ‘கிளர்ச்சி’ மனிதர்களின் இயல்பான உணர்ச்சி சார்ந்தது, மனித வளர்ச்சிக்கு அதுவே ஆதாரசக்தி என்றே கருதுகிறார்.

  1. மனிதர்களின் இன்றியமையாத பரிமாணங்களில் கிளர்ச்சியும் ஒன்று (ப – 28)
  2. மனிதர்களிடையிலான ‘ஒருமை’ உணர்விற்குக் கிளர்ச்சிதான் அடித்தளம் (ப – 29)
  3. “நான் கிளர்ச்சி செய்கிறேன்; எனவே நாம் இருக்கிறோம்” (ப– 30)
  4. தத்துவக் கொள்கைகளில் “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்ற சொற்றொடர் ஆற்றும் அதே பங்களிப்பை இங்கே கிளர்ச்சியும் செய்கிறது. (ப – 30)
  5. இன்றைய உயிர் வாழ்க்கை என்பதே ‘ஒரு மரண தண்டனை’ எனப் பொருள் கொள்ளப்படும் நிலையில்  ‘கிளர்ச்சியை’ அதனுடைய சமகாலத்து இயக்கமாகப் பார்க்க வேண்டும். (ப – 33)
  6. கலகம் – ஒருவகையான துறவு (ப – 145)
  7. யுகங்கள் பலவாக, மனித இதயத்திலிருந்து உள்ளுணர்வு பிறப்பித்த கிளர்ச்சிப் பயணம். (ப – 146)

இன்னும் கிளர்ச்சியாளன், களைப்பின்றித் தீமையுடன் மோதுகின்றான் (ப – 474), கலையும் கிளர்ச்சியும் இறுதிமனிதன் உள்ளவரை உயிர்வாழும் (ப – 474), கிளர்ச்சி, பைத்தியக்காரத்தனமான பெருந்தன்மை மிக்கது, (ப – 471) பிரதிபலனை எதிர்பாராத கண்ணியம் மிக்கது, அநீதியை மறுப்பது, அதற்காக வலிமை மிக்க தன் அன்பை வழங்கத் தயங்குவதில்லை. (ப – 476), தன் இருப்பின் மூலம் இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. அன்பு, நற்பலன் – வேறு நோக்கம் அதற்கில்லை. மனிதனுடைய ஒரே ஆற்றல் கிளர்ச்சி. இது அவனிடமுள்ள விநோதமான ‘அன்பு’ ஒன்றை நம்பியிருக்கிறது (ப – 476) என்றெல்லாம் அல்பெர் கமுய் எழுதிக் கொண்டு போகும்போது, வெறுப்பு அரசியலால் நடந்த புரட்சிகளுக்கு எதிராக அன்பு நெறிப்பட்ட கிளர்ச்சியை, மனித விடுதலைக்கு முன் வைக்கிறார் எனப் படுகிறது. பன்னாட்டு நிதிக் குழுமங்களால் உலக வளங்கள் எல்லாம் சுருட்டப்பட்டு மூலதனக் குவியல் வெறித்தனமான அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது கேடுற்ற யுகத்தில், கமுய் போல நாமும்

“சொந்த நிலத்தில் அளவான மகசூல், திட்டமான அன்பு, பூமி மூன்றையும் திரும்பவும் வெல்ல, வில்லில் நாணை ஏற்ற வேண்டும்” (ப – 480)

அதற்குக் கிளர்ச்சி நெருப்பை அவியாமல் காப்பாற்றிக் கொண்டுவரத் தெரிய வேண்டும். அதற்குத்தான் இந்தப் பிரெஞ்சுப் மொழிப் படைப்பின் தமிழ்மொழிபெயர்ப்பு நூல் என்று கருதுகிறேன். வாசிக்கும்போது படைப்பாளியின் கருணை உணர்வுகள் ததும்பும் நடையைச் சுவாசித்துப் பன்மடங்கு உயிர்ப்புடன் வாழ்வதாய் உணர்ந்தேன். இப்படியொரு வெற்றிகரமான மொழிப்பெயர்ப்பை நிகழ்த்திக் காட்டிய கிருஷ்ணாவையும் படைப்பாளியை வியந்தது போலவே வியந்து பாராட்டுகிறேன். வாழ்வு குறித்தும், மனிதம் படும் வதை குறித்தும் தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான் இத்தகையக் கடுமையானதொரு மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் இத்தகையச் சிந்தனை வளத்தைக் கொண்டுவந்து தரும் பதிப்பகத்தாரையும் பெரிதும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.;

—————————————————————————————————

புரட்சி யாளன்

அல்பெர் கமுய்

பிரெஞ்சிலிருந்து   தமிழில்  நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு பதிப்பகம்

நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா

 

 

 

 

 

 

 

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) இடைக்காலம் தொடர்ச்சி

ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில்  ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் கருதப் பட்டன.  இந்நிலையில் இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த ‘ரொமான்’ எனும் சாமானியர்மொழியில் சொல்லப்பட்ட இலக்கியங்கள் ‘ரொமான்’ என்று அழைக்கப் பட்டன.  தமிழைப்போலவே தொடக்க காலத்தில் பண்பளவில் வெவ்வேறு அடையாளங்களுடன் இருந்த போதும் அவை கவிதைவரிகளில் சொல்லப்பட்டன. புதினம் என்றப் பொருளில் கையாளப்படும் பிரெஞ்சு ‘ரொமான்’ அந்நாளில்  பிற இலக்கிய பிரதிகளைப்போலவே (ஏற்கனவே கூறியதைப்போல) படைத்தவர் கற்பனைக்கு முழுமையாக உரியவை அல்ல. ஓர் எழுத்தாளர் தம்முடையதென முழுமையாக ஒரு படைப்புக்கு உரிமை கோரமுடியாது. இச்செயல்பாட்டிற்கு அந்நாளில் வழக்கிலிருந்த பெயர், « ரொமான் மொழிக்கு கொண்டு போதல் (mettre en roman) »அதாவது  « ரொமான் மொழியில் செய்தல் அல்லது படைத்தல் (faire en roman »  அல்ல. இலத்தீன் மொழியில் சொல்லப்பட்ட படைப்புகளை கொண்டுவருதல் அல்லது ரொமான் மொழிக்குப் பெயர்த்தல்  என்ற வகையில் அது நடைமுறைபடுத்தப் பட்ட து. ‘ரொமான்’ எனும் வெகு சன மொழியில் தொடக்கத்தில் சமயகுருமார்களின், திருச்சபை குருக்களின் உண்மை வாழ்க்கை வரலாறு  சொல்லப்பட் ட து . இதன் பின்புலத்தில் சமயம் இயங்கியது. புனைவுக்கு அந்த  இட த்தை அளித்தவர் கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) என்ற கவிஞர்.

.

கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) : s et பிரெஞ்சு ரொமான் வகமையின் முன்னோடி, கற்பனாவாதத்தின் அவான் – கார்ட் (avant-garde) என அழைப்பதிலும்  தவறில்லை. ‘படைப்பு’ என்கிற சொல்குறித்த விவாத த்தை முதன்முதலில் தொடங்கிவைத்தவரும் இவர்தான். ஒழுங்கு, விரிசல் இரண்டையும் கதை சொல்ல லில் உள்ளடக்கி சம்பவங்களுக்கிடையே ஓர் ஒத்திசைவைக் கையாண்டவர். தொனி, அங்கதம், கதைமாந்தர்களிடமிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளல்  ஆகியவை இவருடைய படைப்புகளின் சிறப்புக் கூறுகள். காதலும் வீரமும் மையப்பொருள்கள். காதல் மணவாழ்க்கையை அடிப்படையாக் கொண்டது.  ஆயுதத்தை நெறியுடன் உபயோகிக்க வேண்டுமென்றார். சமூகத்தைக் குறித்த குறிப்பாக மேட்டுக்குடியினரைப்பற்றிய விமர்சனங்களும் உண்டு.  ஐந்து ரொமான்களை அல்லது புதினங்களை (கவிதை வடிவில்)  எழுதியிருக்கிறார், அனைத்துமே பிரத்தொன் பிரதேசத்தில், வழக்கிலிருந்த செவிவழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை.

இடைக்க்காலத்தில் மூன்றுவகை ‘ரொமான்கள்’ இருந்தன. 1. தொன்மக்கால வீரர்களின் சாகசங்களைச் சொல்பவை  தொன்ம ரொமான்(le roman antique) என்றும் ; 2. பிரபுக்களின் அவையிலோ, அல்லது கல்விமானகள் பலர்கூடிய அவையிலோ சொல்லப் பட்டவை பிரெத்தோன் வகை ரொமான்(le roman breton  என்றும் ; கீழைநாடுகளின் கதைகளை ஒரியண்ட்டல் ரொமான் (le roman oriental) என்றும் வகைபடுத்தப்பட்டிருந்தன.

த்ரிஸ்த்தானும் இஸேவும்(Tristan et Iseut)

இடைக்கால நூல்களில் முக்கியமான ரொமான். பிரெத்தோன் பிரதேச கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாக க்கொண்ட து. கிரெத்தியென் தெ த்ருவா கூட இப்பெயரில் புதினமொன்றை அதாவது ரொமான் ஒன்றை எழுதியாகச் சொல்லப்படுகிறது. தற்போது  இப்பெயரில் இரண்டு ஆசிரிரியர்கள் எழுதியுள்ள நூல்கள் கிடைத்திருக்கின்றன.  ஒருவர் பெரூல் (Béroul) மற்றவர் தொமா தங்கலெத்தெர் (Thomas d’angleterre). ராஜா, இளவரசன், அழகான இளம்பெண், அரக்கன், சூனயக்காரி ஆகிய கதைமாந்தர்களைக்கொண்டு, காதலையும் வீரத்தையும் சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.  கதையின் முடிவில் கதைநாயகனும் கதைநாயகியும் காதலில் தோல்வியுற்றபோதும், மரணத்தில் இணைகிறார்கள் என்கிற கற்பனாவாத இலக்கணத்திற்குப் பொருந்தும் ரொமான் அல்லது புதினம்.

(தொடரும்)

..

 

மொழிவது சுகம் மார்ச் 18 2017       

 

 . இலக்கிய சொல்லாடல்கள்

 ஆ. சத்யானந்தன் சிறுகதை

இ. கமலஹாசன் குரல்

 

. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres)

பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில்.  அக்காலக் கட்ட த்தில்  சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து  (Lettres-saintes) என்றும்,  இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து (Bonnes lettres என்றெல்லாம் எழுத்துக்களை வகைப்படுத்தி  அழைத்துவந்தார்கள். இந்நிலையில் , வரலாறு , கவிதை நாடகம் ஆகியவற்றை, பிறவற்றிலிருந்து வேறு படுத்தி  அழகியலோடு இணைத்து கலையாகப் பார்க்கத்தொடங்கினர், கலைத்துவ எழுத்தென்ற பெயரையும்  பெற்றது. மானுடவாத த்துடன் (l’humanisme) இணைந்து கலைத்துவ எழுத்துக்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி படைப்புகளை சாமானியர்களும் புரிந்துகொள்ள உதவியுள்ளன. பைபிள் கூட எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசரின் சொந்த நூலகத்தில் இவ்வகை நூல்கள்(கலைத்துவ நூல்கள்) இருந்தனவென்று, அரசவை நூலகத்தின் பட்டியல் தெரிவிக்கிறது. ‘கலைத்துவ  எழுத்துவ’ எனக்கூறி எழுத்தை வெகுசனப் புரிதலுக்கு உட்படுத்துவது குறித்த விமர்சனங்களும் எழுந்தன.  Richelet-Front-1680 1680ல் வெளிவந்த பியர் ரிஷ்லெ (Pierre Richelet ) என்பவரின் பிரெஞ்சு அகராதி « கலைத்துவ எழுத்தின் அறிவியல், இலக்கியம்  » என இக்கலைத்துவ எழுத்திற்கு விளக்கம் தந்தது. பின்னாளில் இலக்கியம் என்பதே ‘கலைத்துவ எழுத்து’ என்றாயிற்று. இக்கட்ட த்தில் வரலாறு கலைத்துவ எழுத்திலிருந்து வெளியேற்றப்பட அவ்விட த்தை ‘roman’ எனும் புதினவகைகள் ஆக்ரமிக்கின்றன, அவற்றைத் தொடர்ந்து, கட்டுரைகளும் இப்பிரிவுக்குள் வந்து சேர்ந்தன.  தவிர பதினெட்டாம் நூற்றாண்டுவரை இலக்கியம் மட்டுமின்றி, இலக்கியம் பற்றிய திறனாய்வுகளும் கலைத்துவ எழுத்தாகக் கருதப்பட்டன. இன்று, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்பு ‘கலைத்துவ எழுத்து’ என்பது அதன் பெயருக்கேற்ப அழகியல் கூறுகளுடன், அநீதியுடன் முரண்படுவது,  வாசகனின் உணர்வைத்தூண்டுவது, அவன் கற்பனைக்கும் சிந்தனைக்கும் தளம் அமைத்துக் கொடுப்பது…முதலான நெறிகளையும் தனக்கென உரிமையாக்கிக் கொண்டுள்ளது.  ஆனால் இன்று இலக்கியமென வெளிவருவதனைத்துமே கலைத்துவ எழுத்தா ? என்ற கேள்வியும் எழுகிறது.

 

.  வாசித்ததில் பிடித்தது : மார்ச் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்த சத்யானந்தன் என்பவரின் தடாங்கம் சிறுகதைக்குறித்து

sathyanadan1தடாங்கம்  சிறுகதையை வாசித்தபின்புதான், இம்முறை இலக்கிய சொல்லாடல்கள் வரிசையில் கலைத்துவ எழுத்து (Belles -Lettres) என்ற சொல்லை தேர்வு செய்தேன். ஆனால்  கதையாசிரியர் நாட்டியம் என்ற கலையை, கதையின் மையப் பொருளாகக்  கையாண்டுள்ளார் என்பதால் அல்ல. எனினும் கதையில் இடம்பெரும் இருவகைப்பெண்களுக்குமே நாட்டியம் ஆதாரமாக இருக்கிறது என்பதும் உண்மை. மறுமலர்ச்சிகால  கலைத்துவ எழுத்தின் பூர்வாங்கம் என்ன ?  இன்றைய தேதியில் அதனை எப்படி பார்க்கவேண்டும் என்பதை அச்சொல்குறித்த விளக்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன்.  அவ்விளக்கத்தோடு ஒர் அசலான கலாரசிகராக நாட்டியத்தை ரசிப்பதுபோல இச்சிறுகதைக்குள் இருக்கும் கலைத்துவ குறிப்புகளை மொழியால் பிரதிப்படுத்தி விளங்கிக்கொள்ளக் கூடுமெனில் கதையாசியரின் நட்டுவாங்கத் திறமையை விளங்கிக் கொள்வோம். ஆகுபெயர், உருவகம், படிமம் என்றெல்லாம் தேடிப்பார்த்து வாசிக்கும் வாசகரும்விரும்பும் கதை அதேவேளை, எழுத்தென்பது அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும் எனக்கருதும்  மானுடவியல் அபிமானிகளும் விரும்பக்கூடியக் கதை.   எல்லோராலும் விரும்படுவதென்பது வேறு,  நவீன இலக்கியத்தின் எதிர்பார்ப்பை எளிமையாக நிறைவேற்றுவதென்பது வேறு. ஒரு கலைஞன் தனக்காகவும் படைக்கிறான், ரசிகனுக்காகவும் படைக்கிறான், இருதரப்பினரையும் திருப்தி செய்வ துதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். இறுவேறு உலகம், இருவேறு காலங்கள், இருவகையான கதைமாந்தர்கள் ஆனாலும் மெலிதான ஓரிழை இம்மூன்றையும் ஒன்றிணைத்து,  குறியீடுகளைப் புள்ளிகளாக க் கொண்டு தீட்டிய கதை. நம்மில் பலருக்கும் ஹெமிங்வே கனவு இருக்கிறது.  வண்னதாசன், வண்ண நிலவன் ஆகும் ஆசைகள் இருக்கின்றன. ஒரு ஹெமிங்வே தான் ஒரு வண்ணதாசன் தான் உருவாக முடியும். சுந்தராமசாமியும், ஜெயகாந்தனும் தனித்தன்மையை பெற்றிருந்தார்கள், ஜெயித்தார்கள். சத்யானந் தன் எழுத்தில் நவீனம் இருக்கிறது, கலைத்துவம் இருக்கிறது, தனித்துவமும் இருக்கிறது.

. கமல்ஹாசன் குரல்

Kamal_Haasan_at_Promotions_of_'Vishwaroop'_with_Videocon_(03)அண்மை காலத்தில் கமல்ஹாசன் குரல் அடிக்கடி ஒலிக்கிறது. அவர் ஒரு பேட்டியில் இப்போதுமட்டுமில்லை எப்போதும் எனது கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன் என்கிறார். இருக்கலாம். இருந்தும் தற்போதுதான் அவர் அதிகம் வாய்திறப்பதுபோல தெரிகிறது. ஒரு வேளை, கடந்த காலத்தினும் பார்க்க ஊடகங்கள் ,  சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இருக்கலாம்.  காரணம் எதுவாக இருப்பினும் கமலஹாசன் குரல் வரவேற்க க் கூடிய குரல். எதற்கு வம்பு என்று ரஜனிபோலவோ (சூடு பட்ட பூனை ?)  பிற நடிகர்கள்போலவோ, படைப்புலக வீரர்களைப் போலவோ (பிழைக்கத் தெரியாத ஆசாமிகளை விடுங்கள்) இருந்திருக்கலாம். டி. ராஜேந்தர் போல  உளறிக்கொட்டாமல் உருப்படியான விடயங்களைப் பேசுகிறார். புரட்சிக் குரல் அல்லவென்றாலும் கலகக் குரல். நாடறிந்த மனிதர் என்பதால் எளிதாய் பெருவாரியான மக்களை அடையும்குரல். ஆளும் கட்சினர்மீது இவருக்குக் கோபமிருக்கிறது என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்.  ஏன்  பாதிக்கப்பட்டார் ? எதற்கேனும் மறுப்பு தெரிவித்திருப்பார், என்னால் முடியாது என்றிருப்பார், பணிந்திருக்கமாட்டார், எனவே பாதிக்கப்படுவது இயற்கை. ஆக மொ த்த த்தில் அவருக்குத் தமது உரிமை குறித்த பிரக்ஞை இருந்திருக்கிறது, நமக்கேன் வம்பு  என்றிருக்கிற மனிதரில்லை என்பது தெளிவு.  எல்லாமனிதர்களிடமும் சுய நலமிருக்கிறது, யாரிடமில்லை ? சந்தை உலகில் தியாகத்தைக் கூட சந்தைப் படுத்த முடிந்தவனே தியாகி என அங்கீகரிக்கப்படுகிறான். வணிகச் சூத்திரத்தின் படி வெகுசன ரசிகர்களைத் திருப்திபடுத்தவென்று நான்கு படங்கள்  எடுத்தாலும், ஓர் அசலானக் கலைஞனுக்கு காலம் நினைவில் நிறுத்தக்கூடிய வேரு அடையாளங்கள் தேவை என்பதை உணர்ந்து, புதிய முயற்சிகளில்,  இறங்குகின்ற மனிதர், அபாயங்களைச் சந்திக்கிற மனிதர் ; இப்படிக் கலகக் குரல் எழுப்புவது அதிசயமில்லை.

இதுபோன்ற குரல்கள், வெறும் ஊடங்களில் வலம்வந்தால் மட்டும்போதாது, பலன்களைத் தருகிற கலக க் குரல்களாக  நண்பர்களின் பேச்சில், தேநீர் கடைகளில். திண்ணைகளில் தமிழ்நாடெங்கும் ஒலிக்க வேண்டும். உலகில் வேறெங்கும்  குற்றவாளிகளை முன்னிருத்தி ஓட்டுக் கேட்கும் துணிச்சல் வருமா ? தமிழர்களை மொத்தபேரையும் திருடர்களாக, குற்றவாளிகளாகச் சித்தரிக்கிற அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும். ஆனால் தினகரன் டெபாசிட்டையும் இழக்கவேண்டும் என்பதுதான் நமது பேராசை.  இன்றைக்குத் தமிழர் மானம் ஆர். கே நகர் வாக்காளரை நம்பி  உள்ளது, ஆனால் அது விலைக்கும் உரியது என்பதால் அச்சங்கள் நிறைய.

————————-

 

 

 

 

 

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)

 

பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு:

இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், மக்களைக் கொலுவாக்கள் என்றும், அவர்கள் பேசிய மொழி   கொலுவா என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரோமானியர்  படையெடுத்துப்பின் விளைகாக இலத்தீன் மொழி உள்ளே நுழைகிறது. இந்த இலத்தீன் உள்ளூர் மொழியோடு கலந்து  வெகுசனப் பயன்பாட்டிற்கு வருகிறது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில் ரொமானியர்களின் செல்வாக்கு ஜெர்மானியர்களின் படையெடுப்பினால் சரிவுற்றதும், ஜெர்மானிய பிராங்க் இன மக்கள் ரொமானியர் இடத்தைப்  பிடிக்கின்றனர்,  இந்நிலையில்  இடைக்காலத்தின் போது பிரான்சுநாட்டில் செல்வாக்குடனிருந்வை மூன்று வெகுசன மொழிகள். அ. ஓக் மொழி (la langue d’oc); ஆ. ஓய் மொழி (la langue d’oïl ); இ. பிராங்ஃகோ – ப்ரொவொன்சால்(le franco-provençal). இவற்றைத் தவிர பேச்சு வழக்கிலிருந்த மொழிகளும் அனேகம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்  ஈல் தெ பிரான்சு (ile de france) அரசவை  மொழியை  இலத்தீன் மொழிக்குப் பதிலாக பயன்படுத்துவதென,  1539 ஆம் ஆண்டில் தீர்மானிக்கிறார்கள். ஆக முதன்முறையாக இலத்தீன் மொழியின் இடத்தில், வெகுசனமொழியாக மட்டுமே இருந்து வந்த இன்றைய பிரெஞ்சு மொழி அதிகாரமொழியாக, அரசு மொழியாக, சமயமொழியாக, இலக்கியமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இடைக்காலத்தில்  எழுதவும் படிக்கவும் தெரிந்த மக்கள் குறைந்த எண்ணிக்கையினர், அதுவும் தவிர  ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அறிந்திராத மக்களின் வாய்மொழியாக  இலக்கியம் அறியப்பட்ட காலம். ‘les troubadours’ அல்லது ‘les trouvères’  என்கிற   பாணர்கள் நிலமானிய  பிரபுக்களின் வரவேற்பறைகளில்,  அவைக் களத்தில்  இட்டுக்கட்டிக் பாடியவைதான் அன்றைக்கு இலக்கியம்.  வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டவை என்பதால் மறக்காலிருக்க ஓசையால் சொற்களை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியமாயிற்று. அவர்களின் படைப்புத் திறன் என்பது நினைவு படுத்த இயலாத சொற்களை, வரிகளை இட்டு நிரப்புவது.  எனவேதான் இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தில் படைப்பாளிகள் பெயரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.  திரும்பத் திரும்ப ஒரே கதை  கூறுபவரின் சொல்வன்மையைப் பொறுத்து புதிய புதிய கற்பனைகளுடன் சொல்லபட்டன. பொதுவாகவே இடைக்கால இலக்கியங்களைத் தழுவல்கள், மொழிபெயர்ப்புகள் என்றுதான் ( இலத்தீன் மொழியிலிருந்து வெகுசன மொழிக்கு)  கூறமுடியும். நிலமானிய முறை வழக்கில் இருந்தகாலம். எனவே பணம் படைத்த, அதிகாரம் படைத்த செல்வந்தர்களின்  ஆதரவினை நம்பியே  இலக்கியங்களுமிருந்தன.

 

‘படைப்பு’,  ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்  பதின்மூன்றாம் நூற்றாண்டில்  வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி  கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம்,  மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.  இந்த இரண்டாவது வகையினர்  பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும்,  பிரபுக்கள்  அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.  இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’   என்கிற குதிரைவீரர்கள்  இருந்தனர்.   இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன.  இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் பரணி இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம்.  இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால்  முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

  1. சிலுவைப்போர்கள் (les croisades)

நிலமானிய சமூகம் மூன்று அடுக்குகளைக்கொண்டது :  முதலாவது அடுக்கு மதகுருமார்களையும், திருச்சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இரண்டாவது அடுக்கில் ‘les Guerriers’  என்கிற சத்திரிய வர்க்கத்தில்  நிலப்பிரபுக்களும் குதிரை வீரர்களும் அடங்குவர் ; மூன்றாவது அடுக்கென்பது  les travailleurs எனும் தொழிலாளர்வர்க்கத்தில் குடியானவர்களும், கைவினைஞர்களும் அங்கம் வகித்தனர். இம்மூவரும் ஒருவரையொருவர் சார்ர்ந்திருந்தனர். ஒரு வர்க்கம் பாதிக்கப்பட்டால் மற்றவர்க்கம் உதவவேண்டும்  என்ற நிலை.  புனிதத் தலத்தை அல்லது புண்ணிய பூமியை(la terre sainte) மீட்பதென்ற  சிலுவைப்போரில் ‘les chevaliers’ எனும் குதிரைவீரர்களின் பங்களிப்பு அவசியமாயிற்று.

  1. நயப்பண்பு (la courtoisie). ‘ courtois’ என்ற பிரெஞ்சுசொல்லுக்குப் பொதுவெளியில் நாகரீகமாக நடந்துகொள்வதென்று பொருள். இங்கே பிரபுக்கள் அவையில் அதிலும் பெண்களும் இடம்பெற்றிருக்கிற அவையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியதே நயப்பண்பு என்கிற ‘la courtoisie’. அதிலும் இடைக்காலத்தின் பிற்பகுதியில் (குறிப்பாக பதினோராம் நூற்றாண்டில் இன்றைய பிரான்சு நாட்டின் தென்பகுதியிலும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடபகுதியிலும்) நிலமானிய  சமூகத்தில் பிரபுக்கள் அவையில் உருவான இப்புதிய வழக்கின்படி உயர்குடிப்பெண்கள் இடம்பெற்ற  அவைக்களத்தில் இப்பெண்களின் நன்மதிப்பினை பெறவும்,  அவர்கள் காதலைச் சம்பாதிக்க்கவும்  குதிரைவீரர்கள் முனைப்பு காட்டினர். அவர்களின்  பார்வைக்கும், வார்த்தைக்கும், அன்பிற்கும், நயப்பண்பு அவசியமாயிற்று, அப்படி நடந்துகொண்ட குதிரைவீரர்கள், அரசவை சீமாட்டிகளின் அபிமானத்தைப் பெற்றதால், அவர்களுக்கு நட்சத்திர தகுதி கிட்டியது. விளைவாக பரணிபாடல்களில் குதிரைவீரர்கள்  கதை நாயகர்கள் ஆனார்கள்.

 

இப்’பரணி’ வகைப் (la chanson de gestes) பாடல்களின் பொதுப்பண்புகள் :

அ. கதைநாயகர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஆ. உலகம் நல்லது கெட்ட து என எதிரெதிர் நிலையில்வைத்து கையாளப்பட்டது

இ. ஈட்டும் வெற்றி எதிர்காலத்திற்குரியதாக  இருந்த து.

ஈ. அரசர், பிரபுக்கள் ஆகியோரிடம் தீவிர விசுவாசத்தை வற்புறுத்தின .

உ. கதை நாயகர்கள் சமூகத்தின் முன்னுதாரணங்கள் எனக் கருதப்பட்ட னர்.

முக்கிய நூல் ‘La Chanson de Roland’   பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் அநாமதேயக் கவிஞரால்  பாடப்பட்ட து. ரொலான்  என்ற வீரனின் புகழப்பாடும் நூல். இருபதாயிரம் படைவீரர்களோடு ஒருலட்சம் படைவீரர்களைக்கொண்ட எதிரியோடு மோதி பலியானபின், அங்குவரும் மன்னன், ஷார்ல்மாஜ்ன்(Charlemagne)  எஞ்சியிருந்த எதிரிப்படையின்  மூன்று இலட்சம் வீரர்களை  முற்றாக அழிக்கிறான். இறுதியில் தேவதூதன் கப்ரியல் ரொலானுடைய ஆத்மாவை சொர்க்கத்திற்குக் கொண்டுபோகிறான்.

 

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பியர் ரிஷார்

( இச்சிறுகதை இருபது  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெகு சன இதழான குங்குமத்தில் பிரசுரமானது.  பிரான்சிலும் பின்னர் புதுச்சேரியிலும் சந்திக்க நேர்ந்த ஒரு பிரெஞ்சு மனிதரைப்பற்றிய  கதை எனலாம்.  மனிதர்களை மட்டுமல்ல, இவ்வுலகையும் எல்லைக்குள் குறுக்கிவிடாத மனிதர். இன்றைக்கும் எப்போதாவது அந்த அதிசய மனிதரை சந்திக்கிறேன் 100 வயதை நெருங்குகிறபோது அநாயசமாக சைக்கிளை ஓட்டுகிறார். எப்போதுமே அவரது வாகனம் அது தான்.  எதிர்மாராமல் நேற்று அவரச் சந்தித்ததேன்.  திண்ணை இதழிலும்  இதனைப் பதிவிட்டிருந்தேன். எனது முதல் தொகுப்பான கனவு மெய்ப்பட வேண்டும்  என்ற சிறுகதை தொகுப்பிலும் இடம்பெற்ற சிறுகதை.  அந்த அதிசய மனிதர் நினைவாக….. பகிர்ந்துகொள்கிறேன்)

பியர் ரிஷாரைத் தெரியுமா‘ ? பார்த்திருக்கீங்களான்னு ? கேட்டா, உங்கக்கிட்ட இல்லங்கற பதில்தான் வரும். பிரான்சுல இருந்துகிட்டு உங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது அபத்தமாகப் படலாம். சரியாச் சொல்ல்லணும்னா, ஒரு விண்டர்ல, கம்பளி ஓவர்க் கோட்டில், சைட் பாக்கெட்டுகளில் கிளவுஸ் கைகளைப் புதைத்துக் கொண்டு, குளிரினால், தலையை ஒரு 45டிகிரி முன்னோக்கிச் சாய்த்துக் கொண்டு இந்தியக் கடையொன்றில் நான் நுழைந்தபோது போயிட்டு வருக்கிறேன் ‘ என்று கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டு எதிர்ப்பட்டார். அந்த வித்தியாசமான தமிழ் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. பார்த்தேன்.

வயது ஐம்பது இருக்கலாமா ? இருக்கலாம். ஐரோப்பியர்களின் சராசரி உயரம், சுருட்டுப் புகையின் நிறத்தில் தாடி. அம்புலி மாமா புத்தகத்தில வருகின்ற அத்தலெட் சாமியார் மாதரி உடலை வைத்துக் கொண்டு, சிக்கலாகத் தென்பட்ட சிகையை வாரி, ஒரு ரப்பர் வளையத்தில் இட்டு அதன் கழுத்தை இறுக்கியிருந்தார். எதிர்பட்டவரை, அங்கீகரிக்கின்ற வகையில் பார்த்தேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

இரண்டொரு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு எங்களது இரண்டாவதுச் சந்திப்பு அந்தக் இந்தியக் கடையிலேயே நடந்தது. புதுவையிலிருந்து வந்திருந்த அரவிந்த ஆஸ்ரம அகர்பத்திகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

‘ழே நெ த்ரூவ் பா சந்த்தால் ‘ ? என்ற கேள்வியை கடைக்காரரிடம் எழுப்பியபோது, நான் குறுக்கிட்டு அவர் தேடிக் கொண்டிருந்த அந்த சந்தனவத்தியை எடுத்துக் கொடுக்க

‘மெர்ஸி என்றார்.

‘தெரியன் ‘ என்றேன் பதிலுக்கு.

‘வூஸெத்தியே தேழா அ பொந்திஷேரி ? ‘ (பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கிறீர்கள ‘ ?). அந்த குறிப்பிட்ட அகர்பத்திகளை எடுக்கவே, எனக்குச் சந்தேகம், கேட்டு விட்டேன்.

‘உய்.. உய்.. ப்ளுசியர் ஃபுவா. சேத் உய்ன் பேல் வீல் (ஆமாம். அனேக தடவைகள்,.. அழகான நகரம்).

அதற்குப் பிறகு, அவர் தொட்ட விஷயங்கள் என் சுவாரசியத்தைக் கூட்டியது.

பாண்டிச்சேரி என்றவுடன் ஆஸ்ரமம், ஆரோவில், அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் என்கின்ற பிரெஞ்சு சுற்றுலா வாசிகளிடமிருந்து வேறுபட்டு எடுத்த எடுப்பில் ‘பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ‘ தெரியுமா ? என்று கேட்க, எனக்கு தெரியாது என்று சொல்வதற்கு தயக்கம்.

‘மன்னிக்கவும். தெரியாது. ‘ என்று உண்மையை ஒத்துக் கொண்டேன்.

‘அங்கே ஆகமங்களை ஆய்வு செஞ்சிருக்கேன். தேவாரம், திருவாசகத்தில் கூட எனக்கு ஈடுபாடு உண்டு. சமஸ்கிருதத்திலும், கிரந்தத்திலும் எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் அங்கே இருக்கின்றன ‘

‘……………….. ‘

‘ஆகமங்களோட இந்தியக் கணிப்பு தப்பு என்பது என்னோட அபிப்ராயம். அவை மதம் சார்ந்த இலக்கியங்கள் மட்டும் அல்ல. ஆரோக்கியமான சமூகத்தைப் பற்றியவை. அவை கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற நுண் கலைகளைப் பற்றி தெளிவாகப் பேசுகின்ற ஆவணங்கள் ‘.

என் கண்முன்னே பியர் ரிஷார் என்னைத் துரும்பாக்கிவிட்டு, கிடு கிடுவென்று உயர்ந்து நின்றார்

‘நேரமிருக்குமானால், இந்த முகவரிக்கு வாயேன். நான் ஒரு அமைப்பினை வைத்திருக்கிறேன். ‘ என்று சொல்லி தனது அடையாள அட்டையைக் கொடுத்தார்.

‘சந்தோஷம் ‘ என்று வாங்கிக் கொண்டேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை எனக்குத் திடீரென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கிளம்பி விட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இருந்தது. எக்ஸ்பிரஸ் வே- A4 என்றாலும் அதிக வேகத்தில் செல்ல முடியாதபடி பனி இறுகி சாலை வழுக்கலாக இருந்ததால் அவரது அந்த ஆஸ்ரமத்தை அடைவதற்கு முக்கால் மணி நேரம் பிடித்தது. முக்கிய சாலையை விட்டு ஒதுங்கி மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் ,  பச்சைகளை விலக்கிக் கொண்டு பிரம்மாண்டமான சிலை ஒன்று அசப்பில் புத்தர் போன்று நின்று வழிகாட்ட அத்திசையை நோக்கி காரை டிரைவ் செய்ய ஒரு பெரிய கேட்டின் முன்னால் போய் நின்றது.  அடுத்து சில நொடிகளில் எனது உருவம் நிழலாக மாற்றப்பட்டு, வாயிலைக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்களின் டெலிவிஷனில் என் பிம்பம் ஏற்கப்பட்டு நான் உள்ளே அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் பியர் ரிஷார் எதிர் பட்டார்.

‘போன்ழூர் மிசியே ரமேஷ் ‘

‘போன்ழூர் ‘

கைகுலுக்கிக் கொண்டோம்.

‘வழி கண்டுபிடிக்கச் சிரமமாக இருந்ததா ? ‘ பிரெஞ்சில் கேட்டார்.

‘இல்லை ‘ என்று சொன்னேன்.

நடந்து கொண்டே பேசினோம்.

‘இது எங்கள் ராச்சியம். ‘

‘அப்போ நீங்கள் மன்னரா ? ‘

அவரது முகம் சுருங்கிவிட்டது.

‘உண்மைதான் மிஸியே ரமேஷ். அப்படித்தான் என் நண்பர்கள் கூட நினைக்கிறார்கள். ஒரு நாளைக்கு, அவர்களது அந்த நினைப்பைக்கூட பொய்யாக்கவேண்டும் என்று ஆசை. ‘

‘……………… ‘

‘அதோ அந்தச் சிலை நராயண ‘ என்றார்.

ஆச்சரியத்தோடுப் பார்த்தேன்.

‘நராயண ‘ என்றால், என்ன பொருள் தெரியுமா ?

தெரியாது என்பதன் அடையாளமாகத் தலையாட்டினேன்.

‘நர ‘ ‘ மனிதன், மானுடம். ‘அயண ‘ லியெ தெ தெஸ்த்தினாசியோன், மனிதனின் முடிவு. ஆர். ஜி பண்டிர்கரின் வைஷ்ணவிஸம் படி. நிறைய புரியும். அதோ அந்த முத்திரைகள் பற்றியாவது தெரியுமா ? அது பதாகம் மற்றது சுகதுண்டம் ‘ சொல்லிக் கொண்டேப் போனார்.

நான் மெளனமாகத் தொடர்ந்தேன்.

மெல்லிய நூலாக ஆரம்பித்த அவரது வசீகரக் கயிறு மெள்ள மெள்ள இறுகி அவரை நோக்கி இழுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு இருக்கையைத்தேடி உட்கார்ந்தோம்.

‘இந்தியர்களுக்கு தேநீர் விருப்பமாயிற்றே, என்ன குடிக்கின்றீர்கள் ? தே அ லா மாந்த்(புதினா கலந்த தேநீர்) ?

சற்று நேரத்தில் தருவிக்கபட்டது. மண் குவளையில் வந்த அந்த தேநீரை சுவைத்துக்க் கொண்டே உரையாடலைத் தொடர்ந்தோம். அவர் பேசியதுதான் அதிகம். எங்கே வாழ்ந்தாலும் கருணாநிதி, எம்ஜிஆர், கமல், ரஜனி என அக்கறைக் காட்டும் சராசரி தமிழனான எனக்கு அவரது பேச்சு அசுவாரசியமாகப் பட்டது. கொட்டாவி வர, அவர் அதனை ஊகித்துக்கொண்டு வழி அனுப்பி வைத்தார். மறுபடியும் அவசியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன்.

அதற்குப் பிறகு ஐரோப்பிய சந்தை வாழ்க்கை முறை அவரை முற்றிலுமாக அன்னியப் படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவரும் அந்தச் சந்திப்பும் எந்த முக்கியத்துவமும் பெறாமல் என் வாழ்வின் சராசரி நிகழ்வுகளில் ஒன்றாகி, வருடங்கள் கடந்திருந்தன.

அந்த வருடம் இந்தியாவுக்கு வந்திருந்தேன். ஒரு நாள் புதுவையிலிருக்கும் என் ஆன்மீக நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, கிரி வலத்திற்காக பெளர்ணமியன்று திருவண்ணாமலைக்குச் செல்வதாகச் சொன்னவன், என்னையும் வற்புறுத்தவே உடன் புறப்பட்டிருந்தேன். மனதுக்கு ஆரோக்கியமோ என்னவோ ? நடப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் கிளம்பியிருந்தேன்.

தெளிவான நிலவு, இதமாக வீசிக் கொண்டிருந்த காற்று எங்களை உற்சாப்படுத்த வரிசையாக சென்று கொண்டிருந்த மக்களை நாங்கள் பின்தொடர்ந்தோம். இந்திர தீர்த்தம், சேஷாத்திரி சுவாமிகள் சமாதி, ரமண ஆஸ்ரமம் என வரிசையாகக் கடந்து தரிசித்துவிட்டு மாணிக்க வாசகர் கோவில் அடைந்தோம். சற்று ஓய்வெடுக்கலாம் என்று யோசித்து தள்ளியிருந்த ஒரு பெட்டிக் கடையை நெருங்கி அதனை ஒட்டியிருந்த பலகையில் அமர்ந்தோம்.

‘சாரைப் பார்த்தா வெளிநாட்டில இருந்து வந்த மாதரி தெரியுது ? கரெக்டா சார் ?

பெட்டி கடைக்காரரின் கேள்வி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எப்படியோ மோப்பம் பிடித்து கேட்கப்படும் கேள்வி. ஆமாம் என்பதன் அடையாளமாகத் தலையாட்டி வைத்தேன்.

‘எந்த நாடுன்னு தெரிஞ்சுக்கலாமா ? பாண்டிச்சேரியாயிருந்தா, பிரான்சு நாட்டிலிருந்து வந்திருப்பீங்க  சரிதானே ? ‘

‘உண்மைதான், பிரான்சுல இருந்துதான் வந்திருக்கான். கிரிவலத்துக்கு நான்தான் அழைச்சுகிட்டு வந்தேன். இவனுக்கு இஷ்டமில்லை’, என் நண்பன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான். ‘

‘கிரிவலத்தைப் பத்தி சாருக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். இங்க வராத வி.ஐ.பிங்களே கிடையாது சார் ‘.

‘இருக்கலாம். ஆனா கிரிவலம்ங்கற பேர்ல மலையைப் பாழ்படுத்தாம இருந்தா சரிதான். ‘

‘ஆரம்பிச்சுட்டியா ? ‘ என் நண்பன் குறுக்கிட்டான்.

‘ சார் முதல்ல கொஞ்சம் முன்னாலே கீழே போட்டீங்களே சிகரேட் துண்டு அதை அங்கால இருக்கிற கூடையிலே போடுங்க. அப்புறம் இந்த மலைய நாங்க பாழ்படுத்தறதப்பத்திப் நீங்க பேசலாம். ‘

நான் ஆச்சரியத்தோட கடைக்காரரைப் பார்த்தேன்.

‘ உங்க பிரான்சுல இருந்து சாமியார் ஒருத்தர் வந்திருக்கார். அவர் தன்னை இந்தியன்னு சொல்லிக்குவார். இந்தியாவை உண்மையா நேசிக்கிற எவனுமே இந்தியன்னு சொல்லுவார். வெளி நா ‘ட்டுக்குப் போயிட்டுவர நம்மவங்களுக்கு இங்கே உள்ள குறைதான் தெரியுது. ஆனா இங்கே வர வெளிநாட்டுக்காரன் நம்ம பெருமைகளைத்தான் பார்க்கிறான். ‘

‘தப்பா ஒண்ணும் சொல்லலேயே, இங்கே நாம ஒழுங்கா இருந்தா மத்தவங்க ஏன் குறை சொல்றாங்க. நீயே சொல்லு கிரிவலம் போற நாம்ப, கொஞ்சம் பொறுப்போட நடந்துகிட்டா நமக்குத்தானே நல்லது ‘ என் நண்பன் கடைகாரரை சமாதானப்படுத்த முனைந்தான்.

‘சார் நான் மறுக்கல. ஆனா வெளி நாட்டிலிருந்து வர நம்மவங்க, இப்படி இருக்கிற இந்தியாவுக்கு நாம என்ன செய்யலாம்னு கொஞ்சம் யோசிக்கணும். அதுக்கு விருப்பமில்லைன்னா இந்தியாவை குறை சொல்றதை விட்டுடனும் ‘

‘என்னப்பா கடையை வச்சுகிணு இப்படிப் பேசினா வியாபாரம் என்னத்துக்கு ஆகும் ‘

‘நேத்தும் இப்படித்தான் அமெரிக்காவுல இருந்து வந்த ஒருத்தர். இஷ்டத்துக்கும் பேசறார். மனசை நோக அடிச்சுடுச்சு. ‘

பெட்டிக்கடைக்காரர் வைத்தத் தீ என்னுள் எரிந்து கொண்டிருந்தது. நண்பனைப் பார்த்தேன். என்னைப் புரிந்துகொண்டு மெளனமாகப் பின் தொடர்ந்தான்.

எவ்வளவு தூரம் நடந்திருப்போம் என்று தெரியாது. ‘இதுதான் ஈசானிய மடம் ‘ என்ற நண்பனின் குரல் கேட்டு அவன் காட்டிய திசையில் அந்தவித்தியாசமான காட்சி.

சில இளைஞர்களைச் சேர்த்துகொண்டு குளத்தருகே கிரிவலம் வந்தவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்களையும் இதர பொருட்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார் ஒருவர். நெற்றியில் திருநீரும், நீண்ட தாடியும் அவர் ஒரு சராசரி சாமியார் என்றாலும், அந்த பழுத்து சிவந்த முகம்: எதையோ யாரையோ ஞாபகப் படுத்தியது. பரபரப்புடன் அவரை நோக்கி ஓடினேன். உங்கள் ஊகம் சரிதான். பிரான்சில் கண்ட பியர் ரிஷார்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரை நெருங்கிச் சென்று வணங்கினேன்.

‘என்னைத் தெரியுதா ? ‘ பிரஞ்சில் கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே ‘ ஆம் ‘ என்பதுபோல தலையாட்டினார்.

‘இங்கே எப்படி ? ‘

‘சாமி இன்றைக்கு மெளன விரதம். பேசமாட்டார். ‘ பக்கத்திலிருந்தவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்தது போல பியர் ரிஷார் வலது கையின் ஐந்துவிரல்களை ஒரு சேரக் குவித்துக் காட்டினார். பஞ்ச பூதங்களைக் குறிக்குமோ ? மற்றொரு கையின் கட்டைவிரலை மடக்கி இதர விரல்களை உயர்த்திக் காட்டினார்.

எனக்கு சரியா விளங்கலை. என் நண்பனுக்கும் அப்படியே. என்னைக்காட்டிலும் பியர் ரிஷார் ஒரு சிறந்த இந்தியனோ ? துரத்துகின்ற இந்த கேள்விக்குப் பதில் தெரியலை.

***

 

 

 

 

இலக்கிய சொல்லாடல்கள்-8: கலை-இலக்கிய கிளர்ச்சியாளர் (Avant-Garde)

பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள். ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற அதன் விளைவுகளையும் முன்நின்று எதிர்கொள்கிற படைக்காவலர் அல்லது படைவீரர் ‘Avant-Garde’, அதாவது ‘படைக்கு முந்தி’, என்று இருப்பவர்கள், முன்னணி வீரர்கள். இச்சொல்லை முதன் முதலில் தற்போது அனைவரும் அறிந்துள்ள பொருளில் உபயோகித்தவர் குளோது ஹாரி தெ சேன் சிமோன் (Claude Henri de Saint-Simon (1825). அவருடைய நூலொன்றில் (Opinions littéraires, philosophiques et industrielles) ராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த சொல்லுக்கு , தமது சோஷலிஸ சிந்தனையின் பாற்பட்ட விளக்கமொன்றை அளித்திருந்தார். பின்னர் அரசியல், கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் அவர் விரும்பிய பொருளிலேயே அச்சொல் கையாளப்பட்டது.
 
கலை மற்றும் பண்பாட்டியியல் இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் அவற்றின் போக்குகள் தங்கள் செயல்பாட்டின் கருவியாக இக்கருத்தியத்தைப் பார்த்தன. இனி வருங்காலத்தில் கலையிலும் பண்பாட்டிலும் நிகழவிருக்கும் மாற்றத்திற்கு தங்கள் இயக்கமே காரணமாகவிருக்குமென இதன் பங்குதாரர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் மரபுக்கு எதிரானவர்கள், புதுமை விரும்பிகள், புரட்சியாளர்கள் எனத் தங்களை அழைத்துக்கொண்டனர்.
 
ஆரம்பத்தில் கூறியதுபோல பத்தொன்பதாம் நூற்றாண்டு இதன் தொடக்கம். பழமைக்கும் பழமைவாதிகளுக்கும் இனி இடமில்லை, தங்கள் இயக்கம் காலத்தால் முந்தியது என்பதெல்லாம், அவான் கார்டிஸ்டுகள் தெரிவித்தக் கருத்துகள். அவ்வகையில் தொன்மத்திற்கு எதிரான கற்பனாவாதம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சுநாட்டிலிருந்த பர்னாஸ் (Parnasse) எனும் கவிதை இயக்கம், எதார்த்தவாதம் அனைத்தும், இந்த இலக்கியப்போக்கிற்கு உட்பட்டவை. மொத்த த்தில் புதிது புதிதாய் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பழைய மரபுகளுக்கு எதிராகத் தோற்றுவிக்கபட்ட இலக்கியவாதங்கள், அவற்றின் அபிமானிகள் அனைவரையும் அவான் – கார்டிஸ்டுகள் என்றே அழைக்கவேண்டும்.
 
« படைப்புகளின் பெருமையென்பது, அவற்றின் அசாதாரண, இதுவரை அறிந்திராத பண்பு சார்ந்த விடயம் ; அழகியல் விடயத்தில், நிரந்தர முன்னுதாரணம் இல்லை ; படைப்பவன் சிந்தனைக்கு முடிவென்று எதுவுமில்லை, எனவே படைப்பாளி நவீனத்தின் சாரத்தில், அதன் உற்பத்தி யில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் ; மரபிலிருந்து முற்றாகத் துண்டித்துகொண்ட தாங்கள் இனி அனைத்து படைப்பிற்கும் முன்னோடிகள், என்பதெல்லாம் அவான் – கார்டிஸ்டுகள் முன்வைத்த வாதங்கள். அனைத்துக்கும் மேலாக, தங்கள் கலை இலக்கிய செயல்பாட்டை பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான யுத்தமாகக் கருதினர்.
 
ஆனால் ஒவ்வொரு முறையும் இஸங்கள் உருவாயின, அவற்றின் கர்த்தாக்கள் தங்களை முன்னோடிகள், புதுமை விருபம்பிகள், புரட்சிகர சிந்தனைக்குச் சொந்தக் காரர்கள் என அழைத்துக்கொண்டு செயல்பட, ஏற்கனவே இஸம் கண்டவர்களை பழைய ஆசாமிகள், பழைய சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் எனக்கருதப்போக அவர்களே அவர்களுக்கு எதிரிகளாக மாறினார்கள்.
 
தொடக்க கால அவான் கார்டிஸ்டுகளுக்குப் பழமையென்பது பதினேழாம் நூற்றாண்டு படைப்பிலக்கிய நெறிகள் மற்றும் கலை இலக்கிய கூறுகள். விளைவாக, உயர் இலக்கியத்திற்குச் சான்றாகத் திகழ்ந்த ‘Belles-Lettres வகைப்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிராகரிக்கப்பட்டு அவ்விடத்தை அவான் -கார்டிஸ்டுகள் கைப்பற்றுகின்றனர். தவிர மரபார்ந்த இலக்கிய திறனாய்வாளர்கள் புதியதலைமுறை இளம் எழுத்தாளர்களை , அவான்-கார்டிஸ்டுகள் என்ற பார்வையை வைத்தனர். மல்லார்மே, லொத்ராயோன் போன்ற படைப்பாளிகள் அவான்-கார்டிஸ்ட்டுகளானது இப்படித்தான். அரசியலிலும் இது எதிரொலித்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின்னர் பூர்ஷ்வாக்களுக்கு எதிரான சாமன்யர்களின் இயக்கமென்று அவான் கார்டிஸ்டுகள் இயக்கம் கருதப்பட்டது. அவ்வாறே முதலாளித்துவத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தினர் இயக்கமென மார்க்ஸிய வாதிகளும் நினைத்தனர்.
 
1890 -1914 க்கும் இடையிலுருவான இஸங்களின் செயல் திட்டங்களில் அரசியலும் கலந்தது, உயிர்வாழ்க்கையோடு கலையையும் இணைத்துப் பார்த்தன. விளைவாக 1902ல் ஜீவாதாரவாதம் ( le vitalisme) மானுட வாதம் (l’humanisme) போன்றவையும் 1913ல் ; வருங்கால வாதம்( le futurisme), புதிய உணர்வு (l’esprit nouveau) போன்றவை மனிதர்வாழ்க்கையில் பிரதான நோக்கு, ஒருமைப்பாடு, முரண்பாடுகளைக் களைதல், வளத்தைப் பெருக்குதல் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பிறந்தன. ஆனால் கலையும் இலக்கியமும் தீவிரமாக கட்டுப்பாடற்று, எதேச்சையாக இயங்க வேண்டும் என ஒரு சிலர் நினைக்கத் தோன்ற 1916ல் சுவிஸ் நாட்டில் நாட்டில் தாதாயிசம் (le Dadaisme) பிறந்தது . அதன் தந்தை ஜெர்மன் கவிஞர் த்ரிஸ்தன் ஸாரா ( Tristan Tzara). தாதாயிஸ வாதிகள் படைத்தலைக்காட்டிலும், ஏற்கனவே நிறுவபட்டிருந்த அமைப்பு முறைய, அல்லது ஒழுங்குமுறையை தகர்க்க விரும்பினர்.
 
முதல் உலகப்போருக்குப் பின்பு்க் சிந்தனாமுறையை பிரிவினையின்றி தீவிரமாக செயல்படுத்துவது அவசியம் என உணர்ந்த ஆந்த்ரே ப்ரெத்தோன் (André Breton), லூயி அரகோன் போன்றவர்கள் ஸாராவின் சீடர்களிடமிருந்து,( தாதா இயக்கத்திடமிருந்து) பிரிந்து மீ எதர்த்தவாத த்தைப் படைத்தனர்,  1919 லிருந்து 1924 வரை இவ்வியக்கம் மிகுந்த செல்வாக்குடனிருந்த து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்யநாட்டில் அரசாங்கம், சமயம் ஆகியவற்றிற்க்கு எதிராக உருவான சூன்யவாத த்தை (le nihilisme) (இலக்கிய வெளியில் இதன் தீவிர ஆதரவாளர்கள் ரஷ்யாவில் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, பிரான்சு நாட்டில் எமில் ஸோலா) , மீஎதார்த்தவாதிகள் எதிர்த்தனர்.
 
இரண்டாம் உலகப்போருகுப்பின், சோஷலிஸக் கொள்கையைத் தீவிரமாக க் கையிலெடுத்த அவான்கார்டிஸ்டுள் உள்ளே நுழைந்தனர். பிரான்சுநாட்டில் மூன்று இலக்கிய இதழ்கள் அப்போது பிரசித்தமானவை, அவற்றின் அடிப்படையில் மூன்று குழுவினராகச் செயல்பட்டு காலனித்துவத்தை எதிர்த்தனர். எழுத்துக்கலையும் பிரதியும் முக்கியத்துவம் பெற்றன. படைப்புகளை இனம் பிரித்து பார்ப்பது குறைந்தது. சொல்லின் நேரடிப்பொருள், நிறுவப்பட்ட குறியீடு ( முதற் பொருள் / குறிப்பிட்ட பொருள் ; குறிப்பொருள்/உட்பொருள் ; வரையறுக்கபட்ட பொருள்/ பரந்தபொருள்) முக்கியத்துவமிழந்து , வடிவம் செல்வாக்கினைப் பெற்ற காலம்.
 
இறுதியாக சிங்மண்ட் ப்ராய்டும், கார்ல் மார்க்ஸ்ஸும் இவ்வியக்கத்தின் இறுதிப் படைவீரர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள். இருந்தபோதும்,
ழான் -லுய்க் மொரோ வின் (Jean-Luc Moreau ) என்கிற எழுத்தாளர் 1992 முன்வைத்த புதிய புனைவு (la Nouvelle Fiction), அடுத்து l’OuLiPo (Ouvroir de littérature potentielle -1962) போன்றவை புதியவகை அவான் கார்ட்களை – கலை இலக்கிய கிளர்ச்சியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. எனினும் அரசியல் களத்தைப்போலவே இலக்கிய களத்திலும், பின் நவீனத்துவ சுகத்தில் புரட்சி, மாற்றம் போன்றவை தங்கள் வீரியத்தை இழந்திருப்பதாகத்தான் படுகிறது

————————————-

 

 

வெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -(தொடர்ச்சி) – க. பஞ்சாங்கம்

வெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும்  -(தொடர்ச்சி)

க. பஞ்சாங்கம்

(காக்கைச் சிறகினிலே மார்ச் 2017 இதழில் வெளிவந்துள்ள  கட்டுரை. நண்பரின்  அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

 

முதலாளித்துவம் மக்கள் தொகையும், உற்பத்திக் கருவிகளும், சொத்துக்களும் பரவலாகப் பரவிக் கிட க்கும் நிலையை எடுத்துக் காட்டிவிட்டு, மக்கள் கூட்டத்தை(நகரம் என்ற பெயரில்) ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது ; உற்பத்திச் சாதனங்களையும் கையகப் படுத்தியுள்ளது ;  சொத்துக்களை ஒரு சிலர்  கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்க இயலாத விளைவாக அதிகாரமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே அது தனக்கெனத் தன் (பணவெறி) நலனுக்கேற்பச் சட்டங்கள், வரிவிதிப்புகள், அரசாங்க நிறுவனங்கள் என உருவாக்கி, சுயேச்சையான எதையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, ஒரே அரசாங்கம், ஒரே சட்டத்தொகுப்பு, ஒரே சுங்கவரி,(ஒரே மொழி ஒரே மதம், ஒரே பண்பாடு)முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைத்துக்கொண்டது என்று  முதலாளித்துவத்தின் கோர முகத்தைப் படம் பிடிக்கிறது, பொதுவுடமை அறிக்கை. சமீபத்தில் ‘சாம்சாங்’ கம்பெனியின் சேர்மனை கொரிய நாட்டு உள்துறை கைது செய்துள்ளது. தனக்கேற்றவாறு சட்ட வரைவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது உறுதியாகியுள்ளது. தனது மூலதனக் குவிப்பிற்கு முதலாளித்துவம் எதையும் செய்யும் : செய்துகொண்டும் இருக்கிறது. எனவேதான் பொதுவுடைமை அறிக்கை இப்படிச் சொல்கிறது :

  • முதலாளித்துவ சமூகத்திலுள்ள உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேகரிப்பதில்லை; சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை.

ஊழல் செய்து, சொத்தைக் குவிப்பது ஒன்றே வாழ்வின் இலட்சியமாக முதலாளித்துவம் இயங்குவதால், தனது இந்த லட்சியத்தை வாழ்வின் பொதுவான லட்சியமாக அனைவரும்கொள்ளும்படியாக தனது மறைமுக விளம்பர உத்திகள் மூலம் மக்களை வடிவமைத்து விடுகிறது. விளைவை வாழ்வெனும் பன்முகத்தில் பறந்து திரிந்து திளைத்து வாழ்தல் என்பதை மறந்து, பணவேட்டை என்ற ஒற்றைத் தன்மைக்குள் வாழ்வெனும் பிரமாண்ட வெளியை சுருக்கிச் சுருக்குப்பையில் போட்டு நம் கையில் கொடுத்துவிடுகிறது முதலாளித்துவம்.

இத்தகைய மூலதனக் குவிப்பிற்கு முதலாளித்துவம் கையாளும் தாரக மந்திரம் என்பது சுதந்திரமான வணிகம் ; சுதந்திரமான பண்ட பரிவர்த்தனை என்பதுதான். முதலாளித்துவ அகராதியில் சுதந்திரம் என்பதற்குப் பொருள் இதுதான். பொதுவுடமை அறிக்கை இப்படிச் சொல்கிறது :

« துறக்கவொண்ணாத, எழுதிவைக்கபட்ட, எண்னற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாக ‘சுதந்திர வணிகம்’ எனும் ஒரேயொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது »

இத்தகைய சுதந்திரமான வணிகம் என்ற ஒன்றில்தான் உலக வளங்களை எல்லாம் சுருட்டி ஒரு சிலரின் மூலதனமாக க் குவித்துக்கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்கிக்கொண்டுள்ளது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைஉஎனும் வலிமை மிக்கப், பீரங்கிகளைக்கொண்டு சீன மதில் சுவரைப் போன்ற தடைச் சுவர்களையெல்லாம் தகர்த்தெறிகின்றது. முதலாளித்துவத்தின் அதிகாரமையமான ஐரோப்பா தனது விவசாயிகளுக்கு70% க்கு மேல் மான்யம் கொடுத்து விவசாயப் பொருட்களை பெரும்பெரும் விவசாய எந்திரங்களின் துணையோடு உற்பத்திச்செய்து மலிவான விலைக்கு உலகச் சந்தைக்கு கொண்டுவருகிறது. அதே நேரத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுகொடுக்கும் விவசாய மானியங்களைப் பல்வேறு ஒப்பந்தங்கள் மூல நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. விளைவு, உற்பத்திச்செலவு அதிகமாகும்போது உள்நாட்டுப்பொருள்களின் விலை அதிகமாகிவிடக்கூடியச்சூழலில், உள்நாட்டு உற்பத்தியே இனித் தேவையில்லை என்ற நிலைக்குத் தள்ளுகிறது சுதந்திரமான முதலாளித்துவ வணிகம். அரசாளுவதென்பது தனக்கு வரிகட்டும் மக்களுக்கான வாழ்வின் தரத்தை உயர்த்துவதற்குப் பாடுபடுதல் என்ற நிலையிலிருந்து விலகி, உலக முதலாளிகளுக்கான வணிகச் சந்தையை எந்த நிபந்தனையுமின்றி திறந்து விடுவதற்குக் கமிஷன் வாங்கிக்கொண்டு உல்லாச வாழ்வு வாழும் முகவர்களாக உள்நாட்டு அரசியல்வாதிகளைச் சீரழிப்பதும் இந்த முதலாளித்துவத்தின் மூலதன வேட்டைதான்.

இத்தகைய சூழலில் மார்க்கண்டேய கட்ஜு முன்வைக்கும் நிலை : இருக்கின்ற சுரண்டும் அமைப்பையே ஒழித்தும் அழித்தும்புதிய அமைப்பைக் கட்டும் ‘புரட்சியை’ நட த்திக்காட்டுவதென்பது முதலாளித்துவ அமைப்பை அறவே துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் மார்க்சியம் முன்வைக்கும் « சொத்துக்குவிப்பை ஒழிப்பது » என்கின்ற சமதர்ம சமுதாயத்தைச் சமைத்துக் காட்டுவதில்தான் இருக்கிறது. 1969 இல் அண்ணாதுரை மறைவுக்குப்பிறகு, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசாட்சி, அரசியல் வாழ்வு என்பன « சொத்து சேர்ப்பது » என்கிற ஒரு புள்ளியிலேயே சுழன்றுள்ளது. அந்த த் தீமையைத்தான் இப்பொழுது அனைத்து மட்டத்திலும் அனுபவிக்கிறோம். இந்தச் சொத்துக் குவிப்பு மனப்பான்மை அருவருக்கத் தக்க அளவிற்கு அதன் உச்சத்தை அடைந்திருக்கும், ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

இத்தகையச் சூழலில் வர்க்க அரசியலை முன்னெடுத்து « மனித வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்ட வரலாறுதான் » எ,ன்ற பொதுவுடைமை அறிக்கையின் முழக்கத்தை ஓங்கி  ஒலிப்பதுதான்சரியான வழிமுறை. அதற்கான வரலாற்றுக் காலக் கட்டம் கனிந்துவந்துள்ளது. வலது இட து, மூன்றாம் அணி என முன்னூறு அணிகளாகச் சிதைவுண்டு கிடக்கும் மார்க்சிய  தத்துவத்தின் அடிப்படையிலான அமைப்புகள் ஒன்று திரண்டு , மானுட த்தின்  மகத்தான வாழ்வை வெறுமனே ‘சொத்து குவிப்பது’ என்ற ஒற்றை மனப்பான்மைக்குள் தலைகுப்புறத் தள்ளி மனித வாழ்வை மட்டுமல்ல, பிரமாண்டமான இயற்கையையே சீரழித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பின் கோர முகத்திற்கு எதிரானப் போர்க்குரலை வளர்த்தெடுக்க முயல்வ துதான் சரியான திசையை நோக்கிய பயணமாக இருக்கும். மார்க்ஸ் அன்றைக்கே முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் நெருக்கடியைச் சுட்டிக்காட்டியுள்ளார் :

« தனது மூலதனக்குவிப்பு வெறியினால் மாய வித்தைகள் செய்த முதலாளித்துவ சமூகம், இப்போது தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டி எழுப்பிகொண்டு வந்த வேதாள சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திர வாதியின் நிலையில் இருக்கிறது »

 

இத்தகைய நிலைமையில்தான், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பயந்துபோன முதலாளித்துவம் « முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவோம் » என்ற பதாகையின் கீழ் ஒன்றுதிரண்டு பல்வேறு உத்திகளை கடைபிடிக்க முயன்று வருகிறது. ஆனால் இங்குள்ள புரட்சிகர சக்திகளே நிலைமையைத் தெளிவாக, நுட்பமாக அலசி ஆராய்ந்து அறிந்துகொள்ளும் திராணியைக் கொண்டு இருந்தாலும் ஒன்று திரண்டு போராட்டத்தை வரவழைத்து முன்னெடுத்துச்செல்லும்  போர்த்தந்திரங்களில் பின்தங்கிக் கிடக்கிறது. தீமைக்கு எதிராகப் போராடுவதென்பது பிரெஞ்சுப் புரட்சிபோல, மெரினாப் புரட்சிபோல ஒரு கட்டத்தில்  தன்னெழுச்சியாகப் பெரும் போராட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்; சமூக வரலாற்றின் அறம் அப்படிப்பட்ட துதான் என்றாலும், அதற்கான அடித்தளங்களை அமைத்து, முளைத்துக் கிளைகளாக விரிந்து பரவும் விதைகளை விதைத்துக் கொண்டே இருப்பது புரட்சிகார சக்திகளின்  கடமை. தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமூக சீரழிவிற்கான காரணிகளையும், அதற்கான தீர்வுகளையும், நான் அப்படித்தான் பார்க்கிறேன். வெறுமனே ஊடகங்கள் தனிமனிதர்களை முன்னிறுத்தித் திரைப்பட காட்சியாக்கி ரசனைகளை விதைத்து ரசிக்க வைப்பதுபோலக் கொடூரமானது வேறொன்றுமில்லை ; இதையும் முதலாளித்துவத்தின் நுண்ணரசியல் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் மக்கள் மத்தியிலிருந்து வரவேண்டும் ; அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவர்கள்தான் புரட்சிகார சக்திகள். அங்காங்கே பிரதேச அளவிலுள்ள பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவது என்பதையும் தாண்டி ஒட்டுமொத்தமாக வர்க்க அரசியலை முன்வைத்து, என்பதை நோக்கி இயங்க வேண்டும். சமூகத்தின் அறம் சார்ந்து  சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் அங்காங்கே இல்லாமலில்லை. ; அவர்களுக்கெல்லாம் ஒரு ‘களம்’  அமைத்துக்கொடுத்துப் பெரும் சக்தியாகத் திரளுவதை நோக்கி நகர வேண்டும் ! தீமையை அழிக்க வேறுவழி ஏதும் இருப்பதாக த் தெரியவில்லை.

———————————————–

\

 

வெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும்  -1 க. பஞ்சாங்கம்

 

panchu(காக்கைச் சிறகினிலே மார்ச் 2017 இதழில் வெளிவந்துள்ள  கட்டுரை. நண்பரின்  அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

பாசிசத்தின்  தமிழ் அடையாளமாகத் தமிழ்நாட்டு அரசியல் வெளியில்  ஆடிமுடித்த ஜெயலலிதா என்ற  அதிகாரத் தலைமை மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து , தற்போது முதலமைச்சர் என்ற பேரில் ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்ததுவரை கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக மக்களை ஒரு வகையான அதீத உணர்ச்சி சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்போல கட்டிவைத்து பரபரப்பான செய்திகளை 24 மணி நேரமும் மட்டும் அல்லாமல் காட்டியதையே , சொன்னதையே திரும்பத் திரும்பக் காட்டியும் சொல்லியும் ஓய்ந்து வழக்கம்போலத் தம் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கின்றன தமிழ் ஊடகங்கள் . பல் வேறு உள்நோக்கமும் சுயநலமும் கொண்ட இந்த ஊடகங்களின் வலைப் பின்னலில் சிக்கிய படித்த நடுத்தர வர்க்க மக்கள்,  ஊடகங்கள் சொன்னவற்றையே தாங்களும் திரும்பத் திரும்பச் சொல்லி (திரைப்படத்தில் வரும் முத்திரை வசனங்களையும் வடிவேலு வார்த்தைகளையும் திரும்பச்சொல்லி மகிழ்வதுபோல) அலுவலகத்தில், காலை நடையில், காய்கறிச் சந்தையில் , பயணத்தில் என எங்கு பார்த்தாலும் உரையாடிக் களித்தனர் என்றே சொல்லவேண்டும். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே ஊழல்வாதிகள் ; கொள்ளை அடிப்பவர்கள் ; மிரட்டி ஆக்ரமிப்பவர்கள் ; கார்பரேட் முதலாளிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு  தன்னைத் தலையில் வைத்துக்கொண்டாடும் பெருவாரிப் பொது மக்கள்நலத்தைக் கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் தாரைவார்ப்பவர்கள் ;  குடும்ப அரசியல் செய்பவர்கள் என்றெல்லாம் பொது வெளியிலேயே பேசிக்கொண்டு  போகக்கூடிய ஒரு சூழல்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே நிலவிக்கொண்டிருக்கிறது என்பது யாதார்த்தம். அது கூடுதலாக ஊடகங்களின் துணையோடு நோய்ப்படுக்கை, சாவு, அதிகார வேட்டை என்கிற ஒரு பரபரப்பைத் தூண்டும் புதிய பின்புலத்தில் மிக வேகமாகப் பேசப்பட்டது என்பதைத் தவிரப் புதிதாக ஒன்றுமில்லை. இதே போன்றுதான் அண்னாதுரை இறந்தவுடன் நெடுஞ்செழியனை ஓரம் கட்டிவிட்டு, எம்ஜிஆர் துணைகொண்டு கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றியபோதும், எம்ஜிஆர் இறந்த போது ஜானகிக் குழுவை அமுக்கிவிட்டு ஜெயலலிதா வென்றெடுத்த போதும் பரபரப்பான  பேச்சுகள் மக்களுக்குத் தீனியாக க் கிடைத்தன என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய பரபரப்பான பேச்சுக்களை சமூகத்தில் பரப்பிவிடும்போது, குடும்பத்திற்குள் ; உறவுகளுக்குள் ; அலுவலக அதிகாரப்போட்டி பொறாமை நிகழ்வுகளுக்குள் தீயாய் கனன்று கொண்டிருக்கும் பல  முரண்களும் , பிரச்சனைகளும்கூடத் தற்காலிகமாக மட்டுப்பட்டு தனிமனிதர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து ஒருவிதமான விடுதலை உணர்வை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத்தான் முதலாளிகளின் ஊடகங்கள் இரண்டு கொள்ளைகாரர்களுக்கு நடுவில் முரண் ஏற்பட்டுச் சண்டைவந்து சதுராடும்போதுகூட அவற்றுள் ஒருத்தரைப் புனிதமானவராக, ஓரளவிற்குப் பரவாயில்லை என்று சொல்லத் தக்கவராக, ஏமாந்தவராகப் புனைந்து காட்டி, ஒரு திரைப்படம் போல தன் பார்வையாளர்களால் பார்த்து மகிழவைத்துவிடுகிறது. இதைத்தான் ஊடகங்கள் வழங்கும் குருட்டு மகிழ்ச்சி என்பர்.

உண்மையில் சமூகத்தைப் புற்று நோயாக அழித்துத் தின்னும் இந்த த் தீமைகளுக்கு வேர் எங்கே இருக்கிறது ? அந்த வேர் அடியோடு அழிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகள் யாவை ? என்பனக் குறித்தெல்லாம் இந்த ஊடகங்கள் பேசமாட்டா. இந்த நடுத்தர வர்க்கத்திற்கும் அவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்கக்கூடிய த் தேடலும் இல்லை. வாசிப்பும் இல்லை. அவர்களுக்கு ஊடக முதலாளிகளும் அதிகார வர்க்கமும், வடிகட்டித் தரும் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான் வேதவாக்கு; அவை தரும் செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் ஆதிக்க அரசியலைக்கூட  மோப்பம் பிடிக்க க்கூடிய  திராணியற்ற  மூக்கையுடையவர்களாக மாற்றப்பட்டவர்கள் இவர்கள்.

முகநூலில் ஒரு நண்பர் « கழுதை விட்டையில் எந்த விட்டை நல்லவிட்டை »  என்று கேட்டிருந்தார். அந்த அளவிற்கு இன்றைக்கு அதிகாரவர்க்கமும் அரசியல்வாதிகளும்  முற்று முதலான குற்றவாளிகளாக, தீமையின் முழு உருவமாக மாறிப்போனார்கள். எந்த அளவிற்கு என்றால், தாங்கள் தீமையானவர்களாக மாறியது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தையே « குற்றவாளிகளின் கொள்கலமாக » மாற்றிக்காட்டுவதை நோக்கியும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தீமை ! இதனால்தான் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு நேர்காணலில் இப்படிப்பேசுகிறார் :

ஓட்டுவங்கிக்காக மக்களை சாதி, மதம் இனம் என்று பிரித்து விளையாடுகிற ரவுடிகளாக இந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஆகிவிட்டார்கள் ; நாட்டைச் சூறையாடும் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட த் தகுந்தவர்கள் என்கிறார். இவ்வளவு பெரிய தேசத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதிலிருந்து விடுபட வழியே இல்லையா என்றால், உண்டு !    ஒரேவழி புரட்சிதான் என்கிறார்.  இந்தக் கட்டிடம் இடிபாடுகள் நிறைந்ததாகி விட்டது ; இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்டவேண்டும் ; அழிவு இல்லாமல் ஆக்கமில்லை என்கிறார். நம்முடைய அரசியல் அமைப்பே காலாவதி ஆகிவி ட்டது ; அனைத்து நிறுவனங்களும்  சிதைந்து உருக்குலைந்துவி ட் டன ; மாற்றி எழுத வேண்டிய தருணம் வந்துவிட்டது. பாராளுமன்றம் ஒன்று இருக்கிறதா ? நடந்துமுடிந்த பாராளுமன்றக்கூட்டம் ஒரு நாளாவது ஒழுங்காக நடந்த தா ?பிறகு இங்கே எங்கே அரசாங்கம் இருக்கிறது, ஆளும் அமைப்பு இருக்கிறது ? எனக் கேட்கிறார். சரி நீதிமன்றம் எப்படி இயங்குகிறது ? ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 18 ஆண்டுகளா ?  எனவே நீதிமன்றங்களும் கெட்டுச் சீரழிந்துவிட்டன, என்கிறார் ; எல்லாமே அழிவு நிலையை அடைந்துவிட்ட ன.  புரட்சி வந்துதான் புதுப்பிக்கவேண்டும்.பிரஞ்சுப் புரட்சிபோல என்று ஓர் எடுத்துக்காட்டும் கொடுக்கிறார் கட்ஜு.

சரி ! புரட்சிவந்துதான் தீமையைத் தூக்கி எறியமுடியுமென்றால் , அந்த த் தீமைக்கான காரணகர்த்தாக்கள் யார் ? அவர்களை நோக்கித்தானே புரட்சிவெடிக்க முடியும் ! இந்த த் தீமைகளுக்கெல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் என்பன கருவிகள்தான்.உண்மையில் இந்த த் தீமைகளின்வேர் முதலாளித்துவ உற்பத்திமுறையில் இருக்கிறது. இதை 1848ல் பொதுவுடமை அறிக்கை எழுதிவெளியிட்ட மார்க்ஸ்- எங்கெல்ஸ் அன்றைக்கே அழுத்தம் திருத்தமாக அழகான மொழியில் தர்க்கபூர்வமாக நிறுவியுள்ளனர். லஞ்சம், ஊழல், கொலை,  குற்றம், ஆக்ரமிப்பு, பகைவெறி, மூலதனக் குவிப்பு என மனிதர்களைப் பணம்தேடும் எந்திரமாக மாற்றிப்போட்டது இந்த முதலாளித்துவ சமூக அமைப்புதான் என்கின்றனர். இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு :

  • மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே அப்பட்டமான சுயநலம், கருணையற்றப் பணப்பட்டுவாடாதவிர வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்ட து.
  • பல நூறு ஆண்டுகளாக மானுட சமூகம் பலவாறு அடிபட்டுத் தேடி அடைந்த மனித மாண்பினை எல்லாம் வெறும் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது.     மதகுரு, மருத்துவர், வழக்குரைஞர், கவிஞர், விஞ்ஞானி என மதிப்புக்குரியவர்களாகப் பார்க்கபட்டுவந்த அனைவரையும்  தன்னிடம் கூலிபெறும் கூலிக்காரர்களாக ஆக்கி விட்டது.
  • மதம் மற்றும் அரசியல் எனும் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக இந்த முதலாளித்துவம் அப்பட்டமான, வெட்கமற்ற நேரடியான கொடூரமானச் சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்பொழுது புரிகிறதா ? ஜெயலலிதா என்ற பாசிசம் தனக்குப் பின்னால், ஒரு குடும்பத்தையே குண்டர்களாக மாற்றிவைத்துக்கொண்டு, எந்தச் சட்டதிட்டத்திற்கும்  உட்படாமல்  சதிசெய்து  « சொத்தைக் குவிப்பது » என்கிற ஒரே நோக்கில் இயங்கி இருக்கிறது என்ற இன்றைய நீதிமன்ற தீர்ப்பில் வெளிப்படும் உண்மை ? இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகமுழுவதும் முதலாளித்துவ சமூக மைப்பில்  ஆங்காங்கே ஜெயலலிதாக்களும் சசிக் கலாக்களும் தான்  உருவாகிக் கொண்டிருப்பார்களென்ற காரணத்தை ப் பொதுவுடைமை அறிக்கை மேலும் தெளிவாக க் கூறுகிறது.

 

(கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த வாரத்தில்)

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :

கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறானோ  அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.  அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற  விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு. என்னவாக இருக்கிறோமோ, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை  அவன்  விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும்.   அவை  ஆன்மாவின் பலம், அறிவின் பலம்.

கலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவன் கூறுவதைப்போல  அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.   « கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித  வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள்.. தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு.

 

எனவேதான் ஒருநாட்டைக்குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கிறபோது இலக்கியமென்கிற எடைக்கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.  பிரெஞ்சு,  தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது.  பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி.   இருந்தும்,  உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று. பிரான்சு நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள  மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்சுநாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக்க முடியாமல் தொடரும் மொழி.  உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம்,  பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம், உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சுமொழி பயன்பாட்டில்  உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.

பிரான்சு நாட்டின் தனித்தன்மை

மொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும்,  இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில்  உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்து தல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் உள்ள வலுவான காரணங்கள் பல. நூற்றாண்டுகளைக்கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம்,அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் துறை ;  படைப்பாளிகளை, இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம்ம ;  தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே  பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என வரிசைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவும் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட ழூல்ஸ்ஃபெரி  சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு, அதனை ஓர் தார்மீக க் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்ட த்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.

இயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள்,  கலை இலக்கியத்திலும் அம்மதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசை யென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள்  படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துள்ளது,  என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கிறவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப்பொறுப்பேற்பவர்கள்  காலத்திற்கும்,  சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பர்யபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இஸங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவானப் பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை.

இடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழிவந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல் , தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர்வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும்  இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள்வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

(தொடரும் )