Category Archives: Uncategorized

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு ஆளுமை – 5

ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம்

« செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம் » என்பது பழைய திரைப்படமொன்றில் இடம்பெறும் பாடல். பாடலாசிரியர் பட்டுக்கோட்டையார். அப்பாடல் உங்களில் பலரைப்போலவே  எனக்கும் விருப்பமான பாடல். எனினும் இப்பாடலில் தொடர்ந்து  இடம்பெறும் வரிகள் உடலுழைப்பை மட்டுமே கருத்தில்கொண்டு பாடப்பெற்றிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொழில் என்பது உழைப்பை அடிபடையாகக் கொண்டது என்பது பொதுவில் ஏற்கக் கூடியது. அதேவேளை அவ்வுழைப்பு  உடல் திடத்தையும் அதன் திறனையும் மட்டுமே சார்ந்தது எனச் சித்தரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. உழைப்பு என்பது, உடலுக்கு எப்படியோ அப்படி  மன வலிமையையும், மூளையின் ஆற்றலையும் உள்ளடக்கியது என்கிற புரிதல் நமக்கு வேண்டும். மூளையைப் புறக்கணித்து உடலை மட்டுமே அண்டியிருக்கிற உழைப்பு நம்மை அவையில்  கூட்ட த்தில் ஒருவராக, பார்வையாளராக இருக்க மட்டுமே உதவும். மாறாக மூளையையும் உடலுடன்  இணைத்துக்கொள்ளும் உழைப்பு அவையில் முந்தியிருக்கச் செய்யும். உடலுழைப்பு அடிமைகளுக்கானது, மூளையின் பயன்பாட்டையும் உள்ளடக்கிய உழைப்பு ஆளுமைக்குச் சொந்தமானது.

வையம் காப்பவரேனும் – சிறு

வாழைபழக் கடை வைப்பவ்ரேனும்

பொய்ய கலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர் !

என கவி பாரதி சுட்டுகிற மேலோர் வரிசைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிற ஆளுமை, ஆனந்த ரங்கர்.

நமக்கு கிடைத்துள்ள  அவருடைய நாட்குறிப்பு 1736ம் ஆண்டு தொடங்குகிறது. ஞானு தியாகு என்பவர் பிள்ளையின் அச்சிட்ட நாட்குறிப்பின் முதல் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் :

« முதல்  அதிகாரி முதற்கொண்டு  சிப்பந்திவரையில் எல்லோரிடத்தும்  சம அன்பைக் காட்டிவந்தவர். ஆகையால் யாவரும்  அவரிடம் பதிலுக்கு முழுநம்பிக்கை வைத்துத் தங்களுக்கு தெரிந்த தை ஒளியாமல் சொல்லிவந்தார்கள். இதனால் அன்றோ, அரசியல் ரகசியங்கள் முதற்கொண்டு தனிப்பட்டவர்கள் குடும்ப வாழ்க்கைகள் வரையில் யாவற்ரையும் அறிந்து ஒரு தீர்மானத்துக்கு வர அவரால் முடிந்தது. » எனக்குற்ப்பிட்டிருப்பது கவனத்திற் கொள்ளதக்கது.

வணிக நடவடிக்கைகளில் பிள்ளை :

இளம்வயதிலேயே பிள்ளைக்கு இடைத் தரகர் பொறுப்பு . இடைத்தரகர் பணி என்பது இங்கே இரு தேச மனிதர்களுக்கிடையில் ,  இருவேறு இனத்திவரிடையில், இருவேறு பண்பாடுகளின் பின்புலத்திலிருந்து வந்த மனிதர்களுக்கிடையில், இரு வேறு மொழிகளுக்கிடையில் கடமையை நிறைவேற்றவது. துபாஷியாக நியமிக்கப்பட்டு  அதனல் தான் அடையும் பலன்களுக்கு யார் காரணமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு பக்கம் ;  சுதேசி வியாபாரிகளுக்கு, தனது மண் சார்ந்த மனிதர்களின் நம்பிக்கைக்கு உரிய மனிதராக நடந்துகொள்வது இன்னொரு பக்கம்.  இருகுதிரையில் சவாரி செய்யவேண்டிய நெருக்கடி. இரு தரப்பினரும், மகிழ்ச்சியும் நிறைவும் அடைகின்றவகையில் பணியாற்றவேண்டும்.  தரமான நெசவுத் துணிகளை வாங்க வேண்டும், தான் ஊழியம் பார்க்கிற நிறுவனத்திற்கு இலாபம் தரும் வகையில் பேரமும் அமையவேண்டும்.  உள்ளூர் வியாபாரிகளும் மன நிறைவுடன் தங்கட் பொருளை விற்று காசாக்க வேண்டும்.

இப்பணியில் வேரு சில நெருக்கடிகளும் பிள்ளைக்கு இருந்தன. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகளில் ஒரு சிலர், நிறுவனத்தின் இலாபத்தில் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கமுடியுமென கணக்கிட்டு கொள்ளையடித்த பின்,  பிடிபடும்போது  பழியைத் தரகர்கள்மீது சுமத்திவிட்டு தப்பிக்கின்றவர்கள். நைனியப்ப பிள்ளையின் வழக்குத் தெள்ளத் தெளிவான சான்று. எனவே இவற்றை நன்கு விளங்கிக் கொண்டிருந்த ஆனந்தரங்கர் கணக்கு வழக்குகளில், போடும்  ஒப்பந்தங்களில், எச்சரிக்கையாக இருந்தார். வணிக நடவடிக்கைகளை  பிறர் குறைகாணாத வகையில் அமைத்துக்கொண்டார் அவற்றை எண்பிக்க எழுத்துப் பூர்வமாக குறித்தும்வைத்தார். பிள்ளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள பல உதாரணங்கள் :

நள வருடம், புரட்டாசி மாதம் 21 ந்தேதி,1736ம் ஆண்டு  ஒக்தோபர் மாதம் 3 ந்தேதி புதன் கிழமை

« காலை பத்துமணிக்கு  சுங்குவார் சேஷாசல் செட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்து பாவைகட்டு ( the bales of piece-goods) 1471க்கு மூணாந்தர விலைப்படிக்கு சுமார் லட்சத்திருப்பதினாயிரத்து நானூத்தி தொண்ணூற்று ஒன்றரை வராகனுக்கு கொந்திராத்துலே (contract) கையெழுத்துப்போட்டு பிற்பாடு பதினோரு பீரங்கியும் போட்டு (once the contract was executed, guns were fired.)அவன் தம்பியும்கூட கையெழுத்துப் போட்டபடியினாலே சேஷாசலசெட்டிக்கு ஆறு கெஜம் சிவப்பு சகலாத்தும் மேற்படி லட்சுமிபதி  செட்டிக்கு ஆறு கெஜம்  சகலாத்தும் கொடுத்தார்கள்.  » –

– ( பக்கம் 3,ஆ.நா.குறிப்பு vol.I)

                                  கணக்கு வயணம்

வர்த்தகர் வெள்ளி வாங்கிப்போய்  ரூபாய்யோடு விச்சு முசே லெகுவுக்கு (Monsieur Legou)செலுத்தினது.

நள வருடம் மார்கழி மாதம்  25ந்தேதி 1737 ஆம் வருடம் ஜனவரி மாதம்  4ந்தேதி

        பத்தருக்கு சேர் விராகனிடை 65க்கு சேர் 100க்கு  ரூபா…..2335

ஆக க் கூடின ரூபாய் 5259. 11/16

ரெண்டு குலானு போட்டிருக்கிற (coins stamped with double head)

காசு பத்தருக்கு சேர் 100க்கு ரூபாய் …2318

ஆக 324-க்கு கூடின ரூபாய் …..7567 1/16

இதுக்கு கூலிக்கு பிடிச்சுக்கொண்டது  1000-க்கு  ரூபாய் 16 ஆக

ரூபாய் 121 1/16  போக நீக்கி  முசே லெகுவுக்கு செலுத்தினது            ரூபாய் ……7446

– (பக்கம் 8 ஆ. நா.குறிப்பு vol 1)

 

துய்மா (M.Dumas) என்கிற அதிகாரிக்கு மயிலாப்பூர் துறைமுகம் சார்ந்த பிரச்சனை ஒன்றை துய்புவா(M.Dubois) என்பவர் கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.  அதன்படி கடலூரில் பிள்ளை அவர்கள் ஏற்றியதாகக் கூறி இரசீது வைத்திருக்கும் நான்கு கட்டுத் துணிகள்,  கப்பலில் ஏற்றப்படவில்லையென்றும், அது மயிலாப்பூரை வந்தடையவில்லை என்பது கடிதத்தில் சொல்லபட்டுள்ள குற்றச்சாட்டு. பிள்ளை நான்கு கட்டுகள் அனுப்பியதற்கான ஆதாரங்களை உரிய சான்றுகளுடன் தெரிவிக்க, அவர்மீது சுமத்தப்பட்டக் குற்றச் சாட்டு பொய்யானதென நீரூபணம் ஆகிறது. இத்தகவலை 1737 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 20 ஆம் நாளிட்ட நாட்குறிப்பில் நமக்கு வாசிக்க கிடைக்கிறது.

உண்மையும், நியாயமும் தன் தரப்பில் இருக்கிறதெனில் பிள்ளை அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் 1738 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந்தேதி நடந்த மற்றொரு சம்பவம்.

“காலமே நான் முசே எலியாசு (M. Elias) வீட்டுக்குப்போய் அவருடனே பேசியிருக்கச்சே கும்பெனி சேவகன் கோன்சேல் கூடியிருக்கிறார்கள் (meeting of the Council). துரை உங்களை அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் என்று சொன்னான். அதன் பேரிலே கோன்சேல் வீட்டுக்கு வந்த இட த்தில் …….துரை அவர்களுக்கு ஆசாரம் (வணங்கி) பண்ணி மற்ற கோன்சேலியோரவர்களுக்கும் (the other Council members)

ஆசாரம் பண்ணி நின்றேன். அப்போது துரை அவர்கள் என்னைக் கிட்ட வர்ச்சொல்லி ரங்கப்பா உன்பேரிலே முசே பிலவுவான் (M.Pilavoine) மூவாயிரத்து எழுநூத்து வராகன் வரவேணுமென்று கணக்கெழுதிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறான், என்று சொன்னார். நான் அதற்கு கொடுக்கவேண்டியதில்லை. எந்தச் சம்மதி (under what) என்று கேட்டேன் . அதற்கு அவரிருந்து கொண்டு 1734 வருஷத்தில் நாற்பத்தெட்டு பவழப்பெட்டி வாங்கின சம்மதிக்கு கெடுவு போக நின்ற நாளுக்கு வட்டி என்று சொன்னார். அதற்கு நான் அய்யா பவழ வட்டியை நான் கொடுக்கமாட்டேன். இது கும்பெனிக்குப் பெரிய காரியமல்ல. இப்பவழச் சரக்குக்கு நான் பிணை இருந்ததற்கு நாலாயிரம் அய்யாயிரம் வராகன் மட்டுக்கும் மூழ்கிப்போனதுமல்லாமல்(நட்டமடைந்ததும் அல்லாமல்) சிறிதுபேர் மானுஷமாய் (insolvent condition) செலுத்த தவறினார்கள் பேரிலே மூவாயிரம் வராகன் மட்டுக்கும் எனக்கு வரவேணும். அதற்குக் கணக்கும் தாஸ்த்தாவேசுகள் சீட்டுகள் எல்லாம் இருக்குதென்று …..”  கவர்னரிடத்தில் துணிச்சலுடன் பேசுகிறபோது, அவர் பணியில் சில நெறிகளை வகுத்துக்கொண்டு கடமை ஆற்றியிருக்கிறார். அதற்கு சோதனை வருகிறபோது, அஞ்சுவதில்லை என புரிந்துகொள்கிறோம்.

 

தொடரும்…

 

மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020


நலம் நலமறிய ஆவல்

பொதுவாக  மார்ச் முதல் மே வரை  வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளின் ஜமாபந்தி நாட்கள் மீண்டும் நினைவுக்கு வரும்  அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக வேலை பார்த்தார்கள். ஜமாபந்தி நாட்களில் நாங்கள் அவர்களுக்கு உதவேண்டும். விழி பிதுங்கிவிடும். சிட்டா, அடங்கலை கூட்டிக்  கூட்டிக் கண்கள் பூத்துவிடும், முத்தாய்ப்பாக சில நாட்கள் திண்டிவனம் தாலுக்கா ஆபிஸில் பழியாய் கிடக்கவேண்டும். கிடைத்த பலன் கணக்கில் ஆர்வத்தை கொடுத்தது.   விளைவாக எனவே எனது நிறுவனக் கணக்குகளை இன்று நானே பா பார்க்கிறேன் அதாவது எழுதுகிறேன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக.

எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் தங்கள் பிரதான பணிபோக இங்கு தோட்டப்பராமரிப்பு, தேனிவளர்த்தல், தச்சு வேலை, எதையாவது பழுதுபார்த்தல் என செய்கிறார்கள். நான் பெரிதாக வெட்டி முறிப்பதில்லை.  பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்புக் கல்விக்கென்று  செலவிட்டது மாதங்கள்தான் ஆனால் அக்கவுண்டன்ஸிக்கு செலவிட்டது கிட்டத்தட்ட 3 வருடங்கள். சில வருட  தொழில் அனுபவமும் அதிலுண்டு.  தவிர இதற்கென உள்ள மென்பொருள்கள், கணக்கெழுதுவதை சுலபமாக்கி உள்ளன.   தெரிய வேண்டியதெல்லாம் வரவு செலவு கணக்கை,  1 முதல் 8 வரையிலான எண்களின் உட்பிரிவுகளின் கீழ் அந்தந்த journal ல் , debit aல்லது crédit பதிவு செய்யத் தெரிந்திருந்தல். பிறகு….Grand Livre, Balance, Compte de Résultat, Bilan அனைத்தும் உங்கள் விரல்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.

 

வாசிப்பு

இந்நெருக்கடியிலும்சில நூல்களை வாசிக்க முடிந்த து.1சிரியாவின் தலை மறைவு நூலகம்  2. உயிர்த்தேன் 3. சாமத்தில் முனகும் கதவு 4. La Tresse ஒரு பிரெஞ்சு நாவல்

  1. சிரியாவின் தலை மறைவு நூலகம்

பிரெஞ்சு மொழி பெயர்ப்ப்பு, மொழி பெயர்த்திருப்பவர்  பேராசியர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி. ஏற்கனவே சில நூல்களைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்து நன்கறியப்பட்டவர். பேராசியரும் மற்றொரு மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கடசுப்பராய நாயக்கரின் கல்லூரி ஆசிரியரும் கூட. இந்நூல் காலச்சுவடு வெள்யீடு.

நூலாசிரியர் டெல்ஃபின் மினூய் (Delphine Minoui), மினூய் தந்தையின் பெயர், ஈரானியர். தாய் பிரெஞ்சு பெண்மணி. அரசு வானொலிகளில் பணியாற்றியவர், தற்பொழுது நன்கறியப்பட்ட பிரெஞ்சு பத்திரிரிகை குழுமத்தின் சிறப்பு செய்தியாளராக பணியாற்றுகிறார். தந்தை ஈரானியர் என்பதாலேயே என்னவோ தமது பத்திரிகையாளர் பணியை இஸ்லாமிய நாடுகள் சார்ந்து எனத் தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே  ஈரான் ஈராக், ஏமன் ஆகிய நாடுகளை மையமாக கொண்டு எழுதியிருக்கிறார். இந்நூல் துருக்கியில்  பிரெஞ்சு இதழொன்றின் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் அண்டை நாடான சிரியா உள்நாட்டு யுத்தத்தால் சின்னாபின்னபட்டுக்கொண்டிருந்த நிலமையைப் பேசுகிறது.  தலைக்குமேலே யுத்த விமான ங்கள் தாக்குதலை நடத்த சகோதர யுத்த்திற்கிடையிலும் நூலகம் உருவாக்கிய மனிதர்களின் தலைவிதியை நூல் பகிர்ந்து கொள்கிறது.

அரபு வசந்தம் :

இலங்கையை அடுத்து உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்டநாடு சிரியா.  பொதுவாக அரபு நாடுகளில் நாடு என்பது ஆள்பவரின் உடமை. சுதந்திரம் என்பது அவரவர் வீட்டு எல்லையைப் பொறுத்தது.  பொதுவெளி உபயோகத்துக்கு அல்ல.  அண்மையில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த Al-arab News ல் பணியாற்றிய பத்திரிகையாளர் ஜமால் ஹஷோஹி (Jamal Khashoggi) துருக்கியில் சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டது உலகறிந்த செய்தி. செய்த குற்றம்  சௌதி அரசை  அவர் விமர்சனம் செய்தது.  சுதந்திர ம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்காவோ பிற மேற்கு நாடுகளோ உத்தியோகபூர்வமாக சவுதி அரேபியாவை இதுநாள்வரை கண்டித்ததில்லை.

அரபு நாடுகளுக்கே உரிய இத்தகைய நெருக்கடியில் பிரான்சு நாட்டின் முன்னாள் காலனி நாடான துனீஸிய மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை வற்புறுத்தி  வீதியில் இறங்கினாகள். 2010ல் தொடங்கிய இப்போராட்டம்  « அரபு வசந்தம் » என்ற பெயரில் மளமளவென பிற அரபுநாடுகளிளும் பரவிற்று. அடிப்படைத் தேவைகளுக்காக தொடங்கிய போராட்டம் முடியாட்சி, சர்வாதிகாரம் ஆகியவமற்றிற்கு எதிரானதாக பின்பு திசை மாறியது. இக்கட்டத்தில் போராட்டக்காரர்கள்  மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகளென  சித்தரிக்கப்பட்டனர். இவ்விமர்சனத்தில் ஒரளவு நியாயமும் இருந்தது. எதிர்பார்த்ததுபோல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்த அரபுநாடுகள் இத்தகைய போராட்டத்தை எதிர்கொள்ளவில்லை. அரபு வசந்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று.அதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்தினர். அவர்களை மேற்கு நாடுகள் மறைமுகமாக ஆதரித்தன. இச்சம்பவத்தைப் பயன் படுத்தி இசுலாமிய தீவிரவாதம் கலிபா அரசாங்கம் அமைக்கும் கனவுடன் உள்ளே நுழைய வழக்கம்போல அப்பாவி மக்கள் உயிச் சேதத்தையும், உயிர் வாழ்க்கை சேதத்தையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. சிரிய மக்களின் விதியில் விளையாடியவர்கள் நால்வர்:1. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற  “அரபு வசந்த” போராளிகள், 2; ரஷ்யாவின் ஆதரவுபெற்ற சிரியா முடியாட்சி, 3. இஸ்லாமிய தீவிரவாதிகள், 4.இச்சம்பவத்தைப் பயன்படுத்தி  தங்கள் நிரந்தர எதிரிகளான குர்தின மக்களை அழிக்க முனைந்த துருக்கி அரசு.

சிரியாவின் தலைமறைவு நூலகம்

பல மேற்கத்திய பத்திரிகையாளர்கள், யுத்தமுனைகளிலிருந்து செய்திகளை அனுப்புவதை அறிந்திருக்கிறேன், ஆஃப் கான் யுத்தம், தலிபான்கள், தீவிரவாதிகள் இவர்களையெல்லாம் நேரில்  சென்று, கண்டு  பணயக் கைதிகளாக பிடிபடக்கூடும்  என்ற அச்சம் எதுவுமின்றி தகவல்களைக் கட்டுரைகளாக தருவது வழக்கம். இந்நூலாசிரியர் இஸ்தான் புல்லில் பணியாற்றியபொழுது தமக்குச் சிரியாவிலிருந்து சமூக ஊடகமொன்றின் உதவியால் கிடைத்த புகைப்படைத்தைக் கொண்டு நூலைத் தொடங்குகிறார்.  புகைப்படத்தை  அனுப்பிய அஹமத்  என்வருடன் தொடர்புகொண்டு நூலாசிரியர் அவர் தரும் தகவல்களைக்கொண்டு இஸ்தான்புல்லில் இருந்தபடி  நூலின் பக்கங்களை நிரப்புகிறார். இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு நூலகத்தை அஹமத் தம் நண்பர்களின் துனையுடன் ரகசியமாக உருவாக்குகிறார். அவர்களின் முயற்சிக்கு« வயிற்றுப்பசியை விரட்ட இலை தழைகளிலான சூப் ! அறிவுப்பசியை விரட்ட தொடர்வாசிப்புகள் ! » எனக் காரணத்தை முன் வைக்கிறார் ஆசிரியர். சிரியா தலைமறைவு  நூலகம் ஊடாக டமாஸ்கஸ் அருகிலிருந்த  தராயா நகரின் போராளிகள், நகர்மீதான அரசுப்படைகளின் தாக்குதல்கள், அப்பாவி மக்களின் அவல வாழ்க்கை என விரியும் நூல் இறுதியில் நகரம் அரசுப் படைகளின் கைவசம் போக முற்றுப்பெறுகிறது. துனிசீயாவில் தொடங்கிய “அரபு வசந்தம் “அரபு நாடுகளைபொறுத்தவரை கானல் நீர் என்பதை நூல் உறுதி செய்கிறது.  சிரியா உள்நாட்டு யுத்தத்தை செய்திகளாவும் புகைப்படங்கள் ஊடாகவும் அறிந்திருப்போம். நூல் நேரடி விவரணையைத் தருகிறது. கறிப்பாக அஹமது, ஷாதி,ஹூஸ்ஸும் ஓமர் மறக்க முடியாத மனிதர்கள்.

 

பிற நூல்கள் குறித்து அடுத்து வரும் கட்டுரையில்….

——————————————————————————————

 

நலம் நலமறிய ஆவல்……

தற்காத்துத் தற்கொண்டார் தள்ளி தகைசார்ந்த
சொல்லேற்று சோர்விலார் கண் » – எதிர்கால மானுடம்
.
மனிதரைவிட இயற்கை சக்திவய்ந்தது.

நாட்டாமைகள் அவசரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

முகவரி அற்ற கிருமியுடனான மூன்றாம் உலகயுத்தம், ஆயுதங்களைக் குவித்த நாடுகளைக்கூட திடுக்கிட வைத்துள்ளது.

எதைக்கொண்டு எதிரி கொரோனாவை களம் காண்பது என்பதில் குழப்பம் ? சமாதானமாகப் போய்விடலாமென்றால், கைகுலுக்கவும் அனுமதிக்கமாட்டேன் என்கிற வம்பனிடம் என்ன செய்யமுடியும்.

ஒரே ஆறுதல் கொரோனா கழுகு, பசி க்கென அலையும் பாம்புகளை மட்டுமல்ல பரமசிவன் கழுத்தைச் சுசற்றியுள்ள பாம்புகளையும் கொத்தவல்லது என்கி்ற உண்மை.

என்ன செய்வது, நீதிக்குத் தப்ப முடிந்த நிர்பயா குற்றவாளிகளில் பலர், பரமசிவன் பாம்புகளாகத்தான் உள்ளனர்.

இயற்கைப் புல்லுக்கு இறைக்கின்ற கொரோனா, நெல்லுக்குப் பொசிவதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இடுக்கண் வந்திருக்கிறது நகுவோம்` !

யாவர்க்குமாம் ஒரு பிடி….

வாசலில் வேப்பிலைக்கொத்து

காதலும் ஆலிங்கனமும்

தட்டுமுட்டு சாமான்களுடன்.

கட்டில்கள் தள்ளிப்போடப்படுகின்றன.

கேளும் கிளையும்

நல்லோர்க்கும் இல்லை.

மனிதருக்கிடையே பெரும்பள்ளம்

இட்டு நிரப்ப வார்த்தைகள்.

இடம்பிடித்த நரியோ

கிடை மொத்தத்தையும் கேட்கிறது

பெயர் கொரோன

மேட் இன் சைனா

யாவர்க்குமாம் ஒரு பிடி….

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2

சென்னையில் பிறந்த  ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சு நிர்வாகத்தில் உள்ளூர் மக்களின் தலைவராக,  துபாஷாக ஆட்சியாளர்களை பின்னிருந்து இயக்கிய கர்த்தாவாக மாறுவதற்கு முன்பாக புதுச்சேரி வரலாற்றைச் சுருக்கமாக அறிவது நண்பர்களுக்கு உபயோகமாக இருக்குமென நினைக்கிறேன்.

புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் வரலாறு என்பது ஆனந்தரங்கப்பிள்ளையின் வரலாறு என்றால் அது மிகையில்லை. பதினேழாம் நூற்றாண்டில் சென்னையும் புதுச்சேரியும், மதுரையைப் போலவோ தஞ்சையைப்போலவோ  வரலாற்றுத் தலங்கள் அல்ல, நெடிய வரலாற்றினை கொண்டவையும் அல்ல.  பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரரர்கள் வசம் புதுச்சேரியும் அதனைச் சூழ்ந்த கிராமங்களும் வருவதற்கு முன்பாக வெகுகாலம் அவை செஞ்சி குறுநில மன்னர்களின்  ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கிடையில் ஆசிய நாடுகளை வணிக நோக்கில் கைப்பற்றுவதில் போட்டிகள் நிலவின. பிரெஞ்சுகாரர்களின் முதல் வணிகக்கிடங்கு ஔரங்கசீப் அனுமதியுடன் கி.பி.1666 ஆம் ஆண்டு சூரத் அருகே உருவாயிற்று. 1672ம் ஆண்டில் பிளாங்க்கே தெ லா ஹயே (Blanquet de la Haye) கோல்கொண்டா ராணுவத்தைத் தோற்கடித்து சென்னை சாந்த்தோமை கைப்பற்றுகிறார்.  செஞ்சி அதன் கட்டுப்பாட்டிலிருந்த வலிகொண்டாபுரம்(பெரம்பலூர் அருகிலுள்ள) பகுதிகளில் ஆட்சியிலிருந்த ஹைதராபாத் நிஜாமின் பிரதிநிதிகள் பிரெஞ்சு ராணுவம் தங்களுக்குப் பக்க பலமாக இருக்குமெனக் கருதி  புதுச்சேரி மற்றும்  பறங்கிப்பேட்டையில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள(கி.பி1673) அனுமதிக்கின்றனர். பின்னர்,  நிறுவனத்தின் முதல் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் பிரான்சுவா மர்த்தேன்(François Martin). பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்யும் நோக்குடன் வணிக முயற்சியோடு இவர் ஆதிக்க அரசியலிலும் கவனம் செலுத்துகிறார்.  வலிகொண்டபுர ஹவில்தார் ஷெர்கான் லோடியிடமிருந்து பணம்கொடுத்து புதுச்சேரியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் வரிவசூலிக்கும் உரிம ம் பெறுகிறார். செஞ்சி ஆட்சி கைதராபாத் நிஜாம் பிரதிநிதிகளிடமிருந்து மாராட்டியர் கைக்குப் போகிறது. அவர்களிடமும் அன்பளிப்பாக 50000பகோடாக்களை (ஒரு பகோடா – அக்காலத்திய 3 ரூபாய்க்குச் சமம்.) கொடுத்து பிரான்சுவா மர்த்தேன் வரி வசூல் செய்துகொள்ளும் உரிமத்தை உறுதி செய்துகொள்கிறர். தொடர்ந்து கோட்டைக் கட்டிக்கொள்ளவும் அனுமதி பெறப்படுகிறது. இதற்கிடையில் செஞ்சி ஹவில்தார் பணமுடை காரணமாக புதுச்சேரியை டச்சுகாரர்களுக்கு விற்றுவிட, அவர்களால் முற்றுகை இடப்பட்ட புதுச்சேரி கோட்டை இடிக்கபட்டு, கவர்னரும் சிறைபிடிக்கபட்டார். ரிஸ்விக் ஒப்பந்தம் புதுச்சேரியையும் கவர்னரையும் பிரெஞ்சுக்காரர்கள் திரும்பப் பெற காரணமாகிறது. மீண்டும் ஒரு கோட்டையைப் புதுச்சேரியில் ழுப்பிய பிரான்சுவா மர்த்தேன் 1706ல் புதுச்சேரியிலேயே மரணமடைந்தார். நம்முடைய ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கைச் சரித த்தை இங்கேதான் தொடங்க வேண்டியுள்ளது.

பிள்ளையின் பிறப்பும் புதுச்சேரி  வருகையும் :

அதிகம் அறிதலின்றி நிகழும் ஒரு மனிதரின் பிறப்பு பெருமை அடைவது ஊரறிய தனது இறப்பை அது முடித்துக்கொள்கிறபோதுதான். ரா. தேசிகன் பிள்ளையின் ஆனந்த ரங்கப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்பின்படி சருவதாரி வருடம் (கி.பி 1709) பங்குனி மாதம்  21 ந்தேதி (மார்ச் மாதம் 30) பிள்ளை சென்னை பெரம்பூரில் பிறந்தார். ஆந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை வணிகம் செய்து பொருளீட்டி வந்தவர்.  பொருள்தேடி புலம்பெயரவேண்டிய நெருக்கடிகள் எதுவும் அக்குடும்பத்திற்கு சென்னையில்  இல்லை. இதேவேளை பிள்ளையின் தந்தை திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர்  நைனியப்ப ப்பிள்ளை என்பவர் சென்னையிலிருந்து வணிகம் செய்வதற்கென்றே புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்திருந்தார். அங்கு தொடங்கப்பட்டிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி, தன் வணிக அறிவுக்கு உரிய பலனைத் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

உள்ளூர் (இந்திய) மொழி அறிவற்ற பிரெஞ்சுக்கார்களுக்கு உள்ளூர் வணிகத் தொடர்புகட்கு  குறிப்பாக பருத்தி நெசவு அது சார்ந்த உற்பத்திப்பொருட்கள், மேற்கத்திய நாடுகளில் கீழை நாடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் பொருட்கள் அல்லது அங்கு விலைபோகக்கூடியவை இவற்றை பேரம்பேசிவாங்கவும், உரியகாலத்தில் ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் மேற்குலப் பொருட்களை இந்திய வணிகரிடத்தில் விற்கவும் முதலான பணிகள்  நிமித்தமாக  உள்ளூர் மனிதர்களுடன் தொடர்புகொள்ள, புதுச்சேரி நிலப்பகுதி சார்ந்த ஆட்சியாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோருடன் தங்கள் வணிகத்திற்கு பிரச்சனைகள் வராது காத்துக்கொள்ளும் வகையில் இணக்கமான உறவினைப் பேண நம்பிக்கைக்கு உரிய, கூர்மையான அறிவும் பக்குவமான அணுகுமுறையும்கொண்ட, பிரெஞ்சு மொழியும் தமிழ் மொழியும் நன்கு அறிந்த இடைத் தரகர்கள்  தேவைபட்டனர். அவர்கள் இரு மொழிகள் அறிந்தவர்கள் என்பதால்  துபாஷிகள் – அக்காலத்தில் இப்பகுதி  இஸ்லாமியர் ஆதிக்கத்தின் கீழிருந்தது காரணமாக இருக்கலாம்,  தோ பாஷா, துபாஷி  –  நைனியப்ப பிள்ளைக்கும் துபாஷ் ஆகும் யோகம் வாய்த்தது. பிரெஞ்சுக் காரர்களின்  வணிபத்திற்கு உதவியதோடு, தங்கள் சொந்த வாணிபத்தையும் இவர் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் எல்லாவற்றையும், தாம் ஒருவரே கவனிக்க முடியாத நிலையில் சென்னையிலிருந்த  நெருங்கிய உறவினர் திருவேங்கடம்பிள்ளையை தமக்குப் பணிகளில் துணையாக இருக்க புதுச்சேரிக்கு அழைக்கிறார். திருவேங்கடம்பிள்ளையும் அதனை ஏற்று மைத்துனருக்குத் துணையாக புதுச்சேரி வருகிறார். ஆனால் நைனியப்ப பிள்ளைக்கு வேறுவிதமான  முடிவை விதித் தீர்மானித்து வைத்திருந்த து. எந்த பிரெஞ்சு அதிகாரத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களையும் வளர்த்து தன்னையும் வளர்ந்துக்கொண்டாரோ அதே பிரெஞ்சு கம்பெனியின் தலைமையால் சிறையில் அடைக்கப்பட்டு, மாளவும் வேண்டியிருந்தது.

« அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். »

அதிகார கட்டிலில் இருப்பவர்களுடன் பழகுகிறபோது நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும் அதிகமாக நீங்கிவிடாமலும் பழகவேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனந்த ரங்கப்பிள்ளையின் யின் உறவினரான நைனியப்ப பிள்ளை கவனமாக இருந்திருக்கலாம். தலைமை என்பது ஒற்றைச் சொல் அல்ல அது பல்வேறு பல்வேறு பண்புகளின் கொலாஜ்.சம தளத்தில் நடக்கிறபோது சங்கடங்கள் அதிகமில்லை. ஆனால் மலையேறுகிறபோது எச்சரிக்கையுடன் கால் வைக்கவேண்டும்.

நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த முடிவு

பிரான்சுவா மர்த்தேனுக்குப்பிறகு கியோம் ஆந்த்ரே எபேர் என்பவர் பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகியாக  ஆனார். அப்போது முத்தியப்ப முதலியார் என்பவர் தரகராக  அதாவது துபாஷாக பணிபுரிந்தார். முத்தியப்ப முதலியாரின் தரகுப் பணியைச் சந்தேகித்த  எபேர் அவரை நீக்கிவிட்டு அவருக்குத் துணையாக பணிபுரிந்த நைனியப்ப பிள்ளையை1708 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய தரகராக அதாவது துபாஷாக நியமித்தார். ஆனால் நைனியப்ப பிள்ளையின் தரகர் நியமனத்தை  புதுச்சேரி கிறித்துவ மதகுருமார்கள் ஏற்கவில்லை, கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே பிரெஞ்சு முடியாட்சி எபேரை நீக்கிவிட்டு முதல் அதிகாரியாக  பியர் துலிவேர்(Pierre Duliver) என்பவரை நியமனம் செய்கிறது. துபாஷ் நைனியப்ப பிள்ளைக்குப் பதில் ஒரு கிறிஸ்துவரை நியமிப்பது என்றும் முடிவாயிற்று. ஆலோசனை சபையில் நைனியப்ப பிள்ளை நீக்கம் குறித்து விவாதிக்கபட்டது. « அவர் தரகரகராய் அமர்ந்தது முதல், மொகலியர்களால் ஏற்பட்ட சகல சங்கட ங்களிலிருந்து , புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார் » என்றும் «  பிரஞ்சு சங்கத்தின் உள் விஷயங்களையும் வெளி விஷயங்களையும் நன்கறிந்தவரான படியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன் , மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தை த் தேடிவிடுவார். » என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவருடன் ஒரு கிறித்துவரை துணை  தரகரகராக நியமனம் செய்து பிரச்சனையைச் சமாளிக்கலாம் என முடிவெடுத்து  நைனியப்ப பிள்ளையுடன் சவரி முதலியார் என்ற கிறிஸ்துவரையும் தரகராக நியமித்தனர்.  இக்காலக் கட்டத்தில்தான் நைனியப்ப பிள்ளை தம் உறவினர் திருவேங்கடம் பிள்ளையை (ஆனந்தரங்கப்பிள்ளையின் தந்தையை) புதுச்சேரிக்கு வருமாறு அழைத்தது நிகழ்ந்தது.

ஒரு துபாஷ் இருக்கவேண்டிய இட த்தில் இருவர். இருவரையும் ஒரு நுகத்தடியில் கட்டி பிரெஞ்சிந்திய கம்பெனி சவாரி செய்ய நினைத்தது.  பின்பற்றிய சமயத்தால் வேறுபடினும் இரண்டுபேரும் தமிழர்கள்.  அவர்கள் விலங்குகள் அல்ல மனிதர்கள். நைனியப்பிள்ளையின்  திறமையும் சாமர்த்தியமும் சகித்துக்கொள்ளக்கூடியதா ? அடுத்த் தெருவில் இருப்பவன் வளர்ந்தால் கொண்டாடுவோம், அண்டைவீட்டுக்காரன் வளர்ச்சியை மனிதர்கள் அங்கீகரிப்பது எப்படி ? அதுவும் தமிழராய் இருந்துகொண்டு.  நைனியப்ப பிள்ளை முதல் துபாஷ், சவரி முதலியார் துணை சுபாஷ் என்பது எத்தனை நாளைக்கு ? தவிர, சவரி முதலியார் அதற்கு முன்பாக சுபாஷ் பதவியிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட முத்தியப்ப முதலியாரின் மருகர்.

பிரெஞ்சு வணிப நிறுவனத்தின் முதல் அதிகாரியாக இருந்த எபேர் மகன் புதுச்சேரி நிர்வாக சபையின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று புதுச்சேரி வந்தவர், கிறித்துவ மத குருமார்களின் தூண்டுதலால் தன் தகப்பனார் கொடுத்த தரகுவேலையைத் தவறாகப் பயன்படுத்தி நைனியப்பப் பிள்ளை பொருள் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டி, அப்படிச் சம்பாதித்த தொகையை த் தம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென கட்டளையிட்டார். பொய்யான வழக்கை ஜோடித்து வழக்கின் முடிவில் 50 சவுக்கடிகள், மூன்றுவருஷம் சிறைதண்டனை, 8888 வராகன் கம்பெனிக்கு நஷ்டை ஈடு, 4000 வராகன் அபராதம், சிறை தண்டனை முடிந்து நாடுகடத்தல் என தீர்ப்பாகிறது. இந்நிலையில் நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த நெருக்கடியால் திருவேங்கடம்பிள்ளை சென்னை திரும்புகிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் நைனியப்ப பிள்ளையைச் சிறையில் அடைக்கிறது. புதிய துபாஷாக முத்தியப்ப முதலியாரின் மகன் கனகராய முதலியார் நியமனம் ஆகிறார். சிறையிலேயே நைனியப்ப பிள்ளை இறக்கவும் செய்கிறார்.

நைனியப்ப பிள்ளையின்  மூத்தமகன் குருவப்பா பிள்ளை என்பவர் தன் தகப்பனார் குற்றமற்றவரென்றும், அவருக்கு எதிராக பொய்சாட்சிகளை உருவாக்கினார்கள் என்பதையும் பிரான்சு சென்று அரசரிடம் முறையிட அவர் தந்தை மீதான் வழக்கு மறுவிசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுகிறது. இறந்த பிள்ளையிடம் அபராதமாக பெற்ற தொகையை கம்பெனி வட்டியுடன் கொடுக்கவேண்டுமென்றும், அதுபோல குற்றம் சாட்டிய எபேர் குடும்பம் பிள்ளையின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பாகிறது. நன்றிக்கடனாக குருவப்பாபிள்ளை கிறிஸ்துவ மத த்தைத் தழுவுகிறார். குருவப்பிள்ளை துபாஷ் ஆகிறார். திருவேங்கடம்பிள்ளை சென்னையிலிலிருந்து திரும்பி பிரெஞ்சுகிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றுகிறார். தந்தையுடன் வந்த  ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் கம்பெனியின் அதிகாரிகளுடன் நெருக்கம் எற்படுகிறது.  குருவப்ப பிள்ளையின் இறப்பிற்குப்பிறகு (கி.பி. 1725) தரகராக அதாவது துபாஷ் ஆக கனகராயமுதலியார் நியமனம் ஆனபோதும் திருவேங்கிடம்பிள்ளையையும் அவர் இறப்பிற்குப் பிறகு (கி.பி.1726)  உடன் பணியாற்றிய அவருடைய மைந்தர் ஆனந்த ரங்கப் பிள்ளையின் திறமையையும் ஆற்றலையும் அருகிலிருந்து பார்த்த   கம்பெனியின் அப்போதைய முதன்மை அதிகாரி லெனுவார் (Le Noire Pierre Christope(1721 – 1735) பதினேழே வயதான பிள்ளைக்கு பரங்கிப்பேட்டையில் கம்பெனிக்காகவும் சில்லறை வியாபாரங்களுக்காகவும் ஒரு நெசவுச் சாலையையும் , சாயக் கிடங்கையும் ஏற்படுத்தி அவற்றீர்க்கு தலவராக்கினார்.

ஆனந்த ரங்கப்பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து புதுச்சேரி  வரலாறு காத்திருந்திருந்தது.  பிள்ளையின் வருகைக்குப் பிறகு அவர் காலத்திய நிர்வாகிகளால்  புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி  உயர்வுற்றதைப்போலவே,  அவர் காலத்துக்குப்பின் « ……..தேய்ந்து கட்டெறும்பும் ஆனது ». «ஆய வாழ்வு உற்றாருடன் போம்’ » என்ற அவ்வைக் கூற்றுக்கு இணங்க  ‘ஆனந்தரங்கப்பிள்ளையோடு பிரெஞ்சிந்திய கம்பெனியின் பெருமைபோய்ச் » சேர்ந்தது எனலாம்.

(தொடரும்)

 

உதவிய நூல்கள் :

  1. புதுவை வரலாறு, ஆசிரியர் க. நாராயணசாமி, பிருந்தா பதிப்பகம், புதுச்சேரி
  2. தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும், முனைவர் சு. தில்லைவனம் சிவசக்திபதிப்பகம், புதுச்சேரி
  3. ஆன ந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, தொகுதி 1 கலைபண்பாட்டுத் துறை, புதுவை அரசு.

 

____________________________________________________________

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் -4

ஒளியும் நிழலும்

ஒரு பொருளின் மாற்று வடிவங்களில்  நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல.  ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மா (Alexandre Dumas) விற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கப்பட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், “துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?” என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் “கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே” எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது.  மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம். இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய  இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.

துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.

 

இம்மாதம் (பிப்ரவரி) பத்தாம் தேதி வெளிவந்துள்ள திரைப்படத்தின் பெயர் ‘L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது.  இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.

 

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து  பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில்.  தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?

 

————————————————————-

 

 

 

 

நேற்றொரு விதி செய்தோம்!

நேற்றொரு விதிசெய்தோம் !

 

தருமபுரி பேருந்து

கும்பகோணம் பள்ளி

தூத்துகுடிப் போராட்டம்

திருச்சி நடுகாட்டிப்பட்டி

தீவிர ரசிகர்களுக்கென்றே

ஸ்பெஷல் காட்சிகள்.

அடுத்தடுத்து  ரிலீஸுக்குப் படங்கள்

காத்திருப்பதால்

ஒருவாரம்

அவை நிறைந்து ஓடினாலே, அதிகம்.

 

நேற்றொரு விதி செய்தோம் அதை

நித்தமும் காப்பதெம் கடமை !

நினைவேந்தல்,  இழந்தபிள்ளையின்

படத்திறப்பென்று

ஒப்பனையுடன் கதாவைத் தட்டுவோம்- நீ

கண்ணீருடன் திற,

அதிஷ்ட்டமிருப்பின்

ஐந்து லட்சம் பத்துலட்சம்

மொய்யும் எழுதுவோம் ! தவறினால்

ஒரேஒரு ஸ்டில்

எங்கள் கவலை தீரும் !

————————————————————-

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் – 2:

சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை

 

(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)

அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.

 

பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான்.  இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.

 

கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.

 

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.

 

1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை  எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை  ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.

 

லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

 

——————————

 

மொழிவது சுகம்,  செப்டம்பர்  7, 2019  

 

அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட …….

நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். இந்த மிஷலன் என்கிற நிறுவனம் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்கும். அவர் யார், எப்போது வருவார், அவர் எப்படி இருப்பார் என்கிற எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. வாடிக்கையாளர்களுள் ஒருவராக வந்துபோகும் அம்மனிதர் (அல்லதுமனிதி) உணவு விடுதியின் சூழல், வாடிக்கையாளர்களை வரவேற்கும் முறை, அவர்களை நடத்தும் விதம், உணவின் தரம், பரிமாறும் விதம் முதலான கூறுகளின் அடிப்படையில் முடிவுகளை ஒன்று இரண்டு மூன்று என நட்சத்திர எண்ணிக்கையில் மதிப்பிடுவார்கள்.  இந்த நட்சத்திர மதிப்பீடு ஓட்டலின் தரத்தை நிர்னயிக்கும்.

நண்பர் க.பஞ்சாங்கம் பேராசிரியர் என்றோ, முனைவர் என்றோ  கவிஞர் என்றோ, திறனாய்வு திலகர் என்றோ அல்லதுவேறு  பட்டுக்குஞ்சலங்களாலோ,  தன்னை அலங்கரித்துக்கொண்டு  படைப்புக்களை அணுகுவதில்லை. (நூலட்டை அதற்குச் சாட்சி).   அதுபோலவே படைப்புக்களின் தரத்தை எழுதியவரின் பாலினம், எத்தனைமுறை தன்னை வந்து பார்த்தார், அவருடைய பின்புலமென்ன என்று அணுகுவதில்லை. பிரான்சு மிஷலன் நிறுவனத்தைப்போலவே  அவருடைய இதயமும் திடமானது. « அசல் நெய்யினால் தயாரிக்கப் பட்டது » என்பதுபோன்ற  படைப்பாளிகளின் முன்னொட்டுச் சான்றிதழ்கள் உதவாது.    நூலில் இடபெற்ற கவிஞர்கள் க. பஞ்சாங்கத்தால்விரும்பி வாசிக்கப்பட்ட வர்கள். நூலாசிரியர் நண்பர் க.பஞ்சாங்கத்தையும் நூலில் இடம்பெற்றுள்ள  கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்.

 

ஆ.  கட்டற்ற சுதந்திரம் ( Liberalism)  என்கிற காட்டாறு

அண்மையில் படித்த நூல் பிரெஞ்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களுடன் அண்மையில் மறைந்த Max Gallo – மாக்ஸ் கலோ- என்பவரின் « Le regard des femmes » ( பெண்களின் அவதானிப்பு)என்கிற நாவல்.  பார்த்த திரைப்படம்  « Partir » ( திரைக்கதையைக்கொண்டு  ‘ஓடுகாலி என்பது தமிழில் சரி). நாவலுக்கும் திரைப்படத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் அதிகம் : ஆண்பெண் – உடல் சேர்க்கை – மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கை முறை சமூகப்பாதையில்  இந்த இருகோடுகளுக்குள் நிகழும் திசைமாற்றம், தடம் புரளும் குடும்ப இரயில் என லென  அந்த ஒற்றுமைகளை வகைப்படுத்தலாம்.

Le regard des femmes (பெண்களின் அவதானிப்பு ) நாவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் பிலிப்  அவருடைய இளம் மனைவி லிசா இடையிலான உறவுகள் ;  பிலிப்பின் தாய், தந்தை இருவரின் குடும்ப வாழ்க்கை  அதில் ஏற்படும் விரிசல் ஆகியவற்றைப் பெண்களின்  பார்வையில் விவரிக்கிறது. பிலிப்பும் அவர் தந்தையும்  அவர்களுடன்  குடும்பம் நடத்திய (என்று சொல்ல இயலாது, கூடி வாழ்ந்த  என்று சொல்வது சரி )பெண்களின்  எதிர்பார்ப்பின் அடிப்படையில் விமரிசனத்திற்கு உள்ளாகின்றனர். தங்களின் பிற ஆண்களுட னான உறவுக்கு அல்லது எல்லை மீறலுக்கு தங்கள் உடல் உள்ளம் இரண்டையும் புரிந்துகொள்ளாத பிலிப்பும் அவர் தந்தையும் குற்றவாளிகளென  வாதிட்டு பிற ஆண்களுடனான படுக்கைப் பகிர்வுகளை  இப்பெண்கள்  நியாயப்படுத்துகிறார்கள்.

Partir ( ஓடுகாலி) : இத்திரைப்படத்தை அண்மையில் Arté என்கிற பிரெஞ்சு தொலக்காட்சிஅலை வழியாகக் காண நேர்ந்த து. கத்ரின் கொர்சினி (Catherine Corsini) இயக்கத்தில் வெளிவந்த படம் . ஒரு மருத்துவர் அவர் மனைவி, இரண்டு  வளர்ந்த பிள்ளைகள்.  மருத்துவர்,தமது  பிசியோதெராப்பிஸ்ட் மனைவிக்கென்று ஒரு பணி அறையை தனது வீட்டில் ஏற்படுத்த முனைந்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அவர்கள் ‘இவான் ‘ என்றொரு  தொழிலாளியை  அனுப்பிவைக்கிறார்கள், இவான் ஒரு முன்னாள் சிறைவாசி. ஒரு நாள்  சுஸானும், தொழிலாளியும் சில பொருட்களை வாங்க கடைக்குச் சென்று திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது.  இவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுஸான் விபத்துக்குத் தானும் ஒருவகையில் காரணமென்று கொண்ட அனுதாபம் தொழிலாளி  மீது தணியா  மோகத்தில் முடிகிறது.  சமூகத்தில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர் மீதான அன்பு, வளந்த இருபிள்ளைகள் மீதான பாசம் இரண்டையும் ஒதுக்கிவிட்டு  உடல் இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி அன்றாடக் கூலியுடன் படுக்கிறாள்.  முடிவில்  இந்த வேட்கையை ஆற்றிட கணவனைக் கொலை செய்கிறாள்.

மேற்கண்ட இரண்டிலும் சொல்லப்பட்ட இன்றைய எதார்த்தம், « பண்பாடு பண்பாடு » என்று கூச்சல் போடுகிற இந்தியாவிலும் நடப்பதுதான். நடுத்தரவயது  பெண்மணியின் இன்னொரு ஆணுடனான  ‘Passion’ (அதி தீவிர காதல்  )  திரைக்கதைக்கான மையப்பொருள் என்ற வகையிலும், திரைப்படம் ஓரு காட்சி ஊடகம் என்பதாலும்,  அதனை அழுத்தமாக தெரிவிக்க  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு காட்சிகள்.  ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுபவன் எனவைத்துக்கொண்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழுதுவதைக்காட்டினால்  கோபம் வராதா. இயக்குனரின் கற்பனை பஞ்சம் எரிச்சல் ஊட்டியது. கதையோ கட்டுரையோ எழுதும்போது திரும்பத் திரும்ப ஒரே சொல்லை  உபயோக்கும் படைப்பாளிகளைப்போன்று

சுற்றுச்சூழல் மட்டுமல்ல பண்புச் சூழலும் நடைமுறை உலகில் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. உதாரனத்திற்கு இன்று ஐரோப்பியர்களிடையே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சிக்காக, குடும்பம் என்ற பாரத்தை சுமக்க அல்ல. விளைவாக பிள்ளைகள் வேண்டுமா ? இந்தியா போன்ற மூன்றாம் உலக  நாடுகளில் வாடகை த் தாயை ஏற்பாடு செய்துகொள்ளலாம்( இந்திய மருத்துமனைகளில் சில உடல் உறுப்புகள் வியாபாரத்தில்  அக்கறைகாட்டுவதைபோலவே, வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனவாம். மேகத்திய நாடுகளைக்காட்டிலும் மிகவும் மலிவாக வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொள்ளலாமாம்) என்கிற எண்ணம் வலுபெற்றுவருகிறது,

கர்ப்பம் தரிப்பதும் குழந்தையைப் பாராமரிப்பதும் மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கைக்கு இடையூறு தருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இது நிகழலாம்.

மேற்கத்திய நாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுவில் வலது சரிகள் x இடதுசாரிகள்  என இருவகையாக பிரித்துபார்க்கப்படுகின்றனர். (இதனை  முற்போக்கு  x பிற்போக்கு என்கிற  அபத்தபார்வையில் பொருள்கொள்ளகூடாது.) வலதுசாரிகளும் இடதுசாரிகளைபோலவே சுதந்திரச் சிந்தனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதாவது வலதுசாரிகளும் பழமைவாதிகள் அல்லர்,  முற்போக்குவாதிகளே. பின் பிரச்சினை எங்கே எழுகிறது. கடைப்பிடிக்கும் சுதந்திரத்தின் பார்வையில் உள்ளது. மேற்குலக வலது சாரிகள் தன்னல சுதந்திரத்தில் (personal interests ) அக்கறை கோண்டவர்கள்.   மாறாக (மேற்குலக) இட து சாரிகள் கூட்டுச் சுதந்திர த்தை  (collective interests. )முன் நிறுத்துபவர்கள்.  அதாவது முன்னவர்களுடையது அதிகம் தனி நலம் சார்ந்த து , பின்னது பொது நலன் சார்ந்த து.  இத்தன்னல சுதந்திரத்தை எதிர்மறை சுதந்திரம்(Negative liberty) என்றும்  பொதுநலனை அடிப்படையாக்கொண்ட மேற்கத்திய இதுசாரிகளின் சுதந்திரத் தேர்வை நேர்மறை சுதந்திரம் என்றும், (Positive liberty)  கருதுகிறார்கள்.  சுதந்திரத்தை கூறலாம். தயவு செய்து இதனை இந்திய முற்போக்கு பிற்போக்குடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்.

 நேர்மறை சுதந்திரம் :  கட்டுப்பாடுடை யது. ஒரு மனிதனை, சமூகத்தை கட்டுக்குள் வைத்து அனைவருக்கும் பொதுவான  இலக்கினை அடைவது. ஒரு தேசம், சமூகம்  ஆகியவற்றின் நலனில் அக்கறைகொண்டது.  நேர்மறை சுதந்திரம் கரையுடைய ஆறுபோல முறையான பாசனத்திற்கு வழிவகுப்பது அல்லது பொது நன்மைகருதி போக்குவரத்து விதிகளை மதித்து விரும்பிய  ஊர் போய்ச்சேர உதவுவது. சிற்சில பாதிப்புகள் தனிமனித சுதந்திரத்திற்கு உண்டென்கிறபோதும் சமூகத்தின் நன்மை கருதி அச்சமூகத்தில் நாமும் ஒருவர் என்ற உண்மையினால் ஏற்கிறோம்.

எதிர்மறை சுதந்திரம் : தன் சுதந்திரம்பற்றி மட்டுமே அக்கறைகொண்டு பிறரை, பிறவற்றைக் கூடாதென்பது. காட்டாறு போன்றது, நீரென்றாலும் பயனாளிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம் இதிலுண்டு. பொதுநன்மைக்காக விதிக்கபட்ட போக்குவரத்து விதிகளை மீறுவேன் என்கிற எதிர்மறை சுதந்திரத்தில் போகவேண்டிய ஊருக்குப்பதிலாக எமலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்க கூடிய வாய்ப்புகள் அதிகம். globalisation வேண்டும் என்பவர்கள் வலியுறுத்தும் சுதந்திரம். பொருளியலில்  Liberal economy  அல்லது negative economy என்பது இதுதான். விற்பவர் சாமர்த்தியம் வாங்குபவன் சாமர்த்தியம் இடையில் ஒருவரும் குறுக்கிடக்கூடாது, அரசாங்கம் சட்டம்  எதுவும் வேண்டாம். மாறாக Social economy  பொருளாதாரம் வணிகம் ஆகியக் கொள்கைகளில்   சமூகத்தின் நன்மைகருதி, பெருவாரியான மக்களின் நலன் பொருளியல் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடவேண்டும் என்கிறது.

Marquis de Sade  என்கிற  பத்னெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு  பிரமுகரை அநேக மாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  உடலுறவில் மிருகத்தனமான இச்சைகளுக்கு அடித்தளமிட்டவர், ‘Libertin’  என்கிற  சுதந்திரமான உடல் இச்சை இயக்கத்தின் மூலம் வக்கிரமான  ஆசாபாசங்ககளுக்கும் அடித்தளமிட்டவர். அகராதியில் Sadism, Sadiste சேர்க்கபட காரணமானவர்.  எதிமறையான சுதந்திர த்திற்கு நல்லதொரு உதாரணம்.

 

அமிர்தம் மட்டுமல்ல  சுதந்திரமும் அளவுக்கு மிஞ்சினால் உயிரைக்குடிக்கூடியதுதான் என்பதெல்லாம் தெரிந்தும் நாம் மீறத்தான் செய்கிறோம்.  வாழ்வியல் போக்குவரத்தில், பெண்களைக்காட்டிலும் விதிமீரல்களில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் உண்மையில் ஆண்கள். «  கவனக்குறைவு »எனக்கூறி  ஆண்கள் தப்பிக்க முடியாது.  குடும்பப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்களான  மனைவியர் இந்த சால்ஜாப்புகளை நம்புவதில்லை. அவர்களுக்கு அபராதத் தொகையை எப்படிப்பெறுவதென்பது தாய்வீட்டுச் சீதனம்.

 

———————————————————————–