என்னதான் பிறநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் மனதிலும் உடலிலும் ஒட்டிக்கொண்டுள்ள பிறந்த மண்ணை அத்தனை எளிதாக உதறிவிடமுடியாது, அது வெறும் மண் அல்ல சதையும் இரத்தமும், சாகும் வரை உடலோடு கலந்தே இருக்கும். பிரான்சு நாடு வென்ற 10 தங்கப்பதக்கங்களைக் காட்டிலும் ‘இந்தியா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு’ வென்ற ஒரு தங்கபதக்கம் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. கணவன் வீட்டுக்கு வந்த பின்னரும் பிறந்த வீட்டை மறக்க முடியாமல் பெருமூச்சுவிடும் பெண்களின் நிலைதான் எங்கள் வாழ்க்கையும். நீரஜ் சோப்ரா இந்தியக்கொடியை முதுகில் சுமந்தபோது, காந்திசிலையை அந்நிய மண்ணில் கண்டு மகிழும் அதே சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உணர முடிந்தது.
இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் பதக்கம் வெற்றவர்களை ஊக்குவிக்க பரிசு மழையில் நனைப்பதுபோல பிற வீரர்களையும் வீராங்கனைகளையும் ஊக்குவிக்க வேண்டும். உண்மையான போட்டியாளர்களாகச் சென்று எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியவர்கள் உற்சாகத்தையும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வென்ற பிறகு வீரர்களைப் பரிசு மழையில் நனைக்கின்ற அதே ஆர்வத்தை, ஒலிம்பிக் விளையாட்டிற்குத் தயார் செய்வதிலும் காட்டவேண்டும். சீனாவை வெகு சீக்கிரம் மக்கள் தொகையில் மிஞ்ச இருக்கும் தேசத்தில் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் பதக்கங்கள் பெறுவது கௌவுரவம். குறைந்தபட்ச திட்டமிடல் வேண்டும். பாரீசில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கம்பெறுவோம் என பிரான்சு ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து அதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டார்கள். பதக்கம் பெற்ற்வருக்கும் அளிக்கிற பரிசுத் தொகை வரவேற்க கூடியது, அதேவேளை அதில் பாதியையாவது ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக தகுதியானவர்களை தேர்வுசெய்து பயிற்சி தர செலவிட அரசுகள் முன்வரவேண்டும்.
1973 ஆண்டு சென்னை பி எ மூன்றாம் ஆண்டு தேர்வு முடித்துவிட்டு ஊர் திரும்பியிருந்தேன். எனது பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி என்பவரை புதுச்சேரியில், அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அங்கு புதுச்சேரி நேரு யுவக் கேந்திரா இயக்குனர் துரைக்கண்ணு என்பவர் இருந்தார். பேச்சின்போது, “புதுதில்லியில் விஷ்வ யுவக் கேந்திரா சார்பில் கூட்டப்படும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் பத்து நாட்களுக்குள் தயாராக இரு” என்றார்கள். அதற்கு முந்தைய நிமிடம்வரை எனக்கும் நேரு யூத் கேந்திராவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்கு வாரங்கள் தில்லியில் தங்கினோம், சுற்றியுள்ள ஊர்களை அரசாங்க செலவில் பார்த்தோம், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் படம் எடுத்துக்கொண்டோம். இது போன்ற அவசரகதி தேர்வுகள் நமது ஒல்ம்பிக் தேர்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. “இங்கே சும்மாதான சுத்திவர டோக்கியோவை போய் பார்த்துட்டு வாயேன்” என அமைச்சர் வீட்டு திருமதி மகனை டோக்கியோவிற்கு அனுப்பி இருக்கவும் இந்தியாவில் வாய்ப்புண்டு. இதுபோன்ற குறைகளைதவிர்க்க முடிந்தால் பாரீசில் ஒலிம்பிக்க்கில் இரண்டொரு பதக்கம் கூடுதலாக வாங்கலாம், என்னைப் போன்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வாய்க்கரிசி இடாமல் வயிற்றில் பால் வார்க்கலாம்.
– A phamphlet distributed in India (at the end of 19th century)
அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட்புதர்கள், மூங்கிறபுதர்களென இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.. இப்படி ஓடுவதென்பது அவனுக்குப் புதிதல்ல. வெறும்வயிற்றோடு ஓடுவதால், பார்வைபடுமிடங்களில் பூச்சிகள் பறக்கின்றன. வியர்வையில் நனைந்த உடல். சோர்வு தட்டுகிறது. முடிந்தவரை ஓடவேணும். பண்ணை ஆட்களிடம் பிடிபடாமல் ஓடவேணும். மூத்திரம் பெய்து முடித்த பத்தாவது நாழிகையில், கங்காணி கறுப்பன் இவனில்லாததைக் கவனித்திருப்பான். நாய்களும், பண்ணை ஆட்களும், குதிரை வீரர்களும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துவிட்டுக் காடுகளை நோக்கியே ஓடிவருவார்கள். இப்போதைக்கு ஓடவேணும். இலக்கிலாமல் ஓடுகிறான். எங்கே? எவ்விடத்திற்கு? யோசிக்கும் நேரமா இது? சாவு நெருங்கும்வரை ஓடவேணும். சித்திரவதைகளைச் சந்திக்காமல் செத்துப்போகவேணும். இப்போதைக்கு அவனது புத்தி ஓடச்சொல்லி வற்புறுத்துகிறது. கால்கள் பின்புறம் இடிபட, தலைதெறிக்க ஓடுகிறான். பெரிய வேரொன்று, பூமியிலிருந்து நன்கு பெயர்ந்து குறுக்காக நீண்டிருக்கிறது. காத்தமுத்துமேல், அதற்கு என்ன வன்மமோ, வேகமாய்ப் பதிந்த கால்களை இடறுகிறது, அடுத்தகணம் இடப்புறம் அடர்ந்திருந்த முட்புதரில் தலைகுப்புற, விழுந்திருந்தான்.
சாவு நிர்ப்பாக்கியமாய் சம்பவிக்கவேண்டுமென்று அவன் மனது கேட்க்கிறது. ஆனால் அதற்கான தைரியம் காணாமலிருந்தான். சாவு எந்தப்படிக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: விழிகள் பிதுங்க, நாக்கைத் தொங்கவிட்டு, கழுத்துப் புடைக்க, தாம்புக் கயிற்றில் புளியமரத்தில் ஈமொய்க்கத் தொங்கிய வீராச்சாமியும், ஒர் உச்சிவேளையில் மூன்றுமுலை மலையின் அடிவாரத்திலிருந்த நீர்ப்படுகையில் குதித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளுத்து உப்புசம்கண்டு மிதந்த கதிரேசனும், ஞாபகத்தில் வந்துபோனார்கள். ஏன்?துரைத்தனம் பண்ணிய கறுப்பனை, கரும்பு வெட்டும் சூரிக்கத்தியால் சாய்த்துப்போட்டு, தப்பித்து ஓடி, பிடிப்பட்ட மரூன் மஸெரியின் முடிவுகூட ஒரு வகையிலே, தற்கொலை என்றுதான் கொள்ளவேணும்..
காத்தமுத்துக்கு எப்போது தீவுக்கு வந்தோமென்று ஞாபகமில்லை. ஆனால் வந்த வயணமும் அனுபவமும் மனசுல கல்லுல செதுக்கினமாதிரிக் கிடக்கிறது. காற்றுமழையின் காரணமாக, துறைபிடிக்க முடியாமல் இவன் வந்த கப்பல், நாலஞ்சு நாள் தாமதிச்சு நங்கூரம் போட்டிருந்தார்கள். கப்பல்கள் பாயெடுக்கும்போதும், துறைபிடிக்கும்போதும் குண்டுகள் போடுவார்களெனக் கிராமத்தில்வைத்துக் கேட்டிருக்கிறான். புதுச்சேரியில் இவனது கப்பல் பாயெடுத்தபோது குண்டுபோட்டிருக்கலாம். இவனையும் மற்றவர்களையும் சரக்குக்கட்டுகளோடு ஏற்றியிருந்ததால் குண்டுபோட்டது கேட்காமற் போச்சுது. கடல் சீர்பட்டபிறகு, புதுச்சேரியில் கண்ட சலங்குமாதிரியான படகொன்றில், இவனையும் சேர்த்து, பத்துநபர்களை முன்னே தள்ளி… “வீத்.. வீத்” (சீக்கிரம்.. சீக்கிரம்..)என்று கூச்சலிட்டுக் கொண்டுபோய் கடற்கரையில் நின்றிருந்த ஐய்யாமாரிடம் சேர்த்துப்போட்டார்கள்.
காத்தமுத்துவும் மற்றவர்களும் ஒன்றைரைமாதக் கடல்யாத்திரையில் ஆரோக்கியத்தைத் தொலைத்திருந்தார்கள். எலிப்புழுக்கை மிதந்த சோற்றுக்கஞ்சியைக் குடிக்காமல் பாதி நாட்கள் குலைப் பட்டினிக் கிடந்திருக்கிறான். மற்றவர்களின் நிலமையையும் அந்தப்படிக்கென்றுதான் சொல்லவேணும். படகிலிருந்து தீவில் இறக்கப்பட்ட இரவில், கடலலைகளின் இரைச்சலும், பூதகாரமாய் நின்றிருந்த மலைகளும், நிழலாய் அடர்ந்திருந்த மரங்களும், அவனை மிகவும் பயமுறுத்திப் போட்டதென்றே சொல்லவேணும்.
அங்கிருந்து, இராத்திரியோடு ராத்திரியாக ஒரு மாட்டுவண்டியில் இவர்களை வாரிப்போட்டுக்கொண்டு வரும்வழியில், இவனோடு வண்டியிலேற்றப்பட்ட ஒரு பெண்மணி மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு, “எம்மவளைக் காணோம், எம்மவளைக் காணோம், வண்டியை நிறுத்தவேணும் சாமி.. தயவுபண்ணவேணும் சாமியென்று ஒப்பாரிவைக்கிறாள். வண்டியோட்டியும், வண்டியிலிருந்த இரண்டு கறுப்புமனிதர்களும் நிர்ச்சிந்தையாய் இருக்கின்றார்கள். காத்தமுத்துக்கு மட்டும் மனத்திற்குள் அவளது வியாகூலம் தொற்றிக்கொள்கிறது. ஓரிடத்தில் அப்பெண்மணி வண்டியினின்று குதிக்க எத்தனித்தபோது, இவந்தான் அவளைத் தடுத்தான். வண்டியோட்டி, “உனதுபெண் கப்பலிலேயே இருக்கவேணும், கரைவரை வந்திருந்தால் நமது வண்டியில் வந்திருக்கவேணுமென” சொன்னபோதும் அவள் புலம்பல் ஓயவில்லை. வழிமுழுக்க அழுதழுது, அவளுக்கு இழுப்பு கண்டிருந்தது. வண்டியில், நான்குகல் கிழக்காக காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு கொட்டடியை அடைந்தார்கள். பாகூர்ல உடையார் வீட்டுத் தொழுவத்தைவிட பெருசாய் தெரிந்தக் கொட்டடி. அர்த்தராத்திரியைக் கலைக்கின்ற வகையில் இரட்டைக்கதவுகள் ஊளையிட்டுக்கொண்டு திறந்துகொள்ள அதனுள்ளே தள்ளிப்போட்டு, மீண்டும் “வீத்..வீத்” என கூச்சலிடும் முரட்டு மனிதர்கள். கருப்பந் தட்டைகளும் கோரைப்புற்களும் இறைந்துகிடந்தன. திடீரென்று லாந்தர் விளக்கொன்றினைப் பிடித்தவனின் சிவந்த கண்கள். கொட்டடி முழுக்கப் பொதிகள், சிப்பங்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் பொதிகளும் சிப்பங்களும் சனங்கள் சகலருமாக, குஞ்சு குளவான்களுடன் எழுந்து உட்காருகிறார்கள். கிழிந்த ஆடைகள், அழுக்கு முகங்கள், பீளைவழியும் கண்கள், எச்சிலொழுகிய வாய்கள்; ஊத்தை மனிதர்களாய் இவனது தமிழினம்.
லாந்தர் பிடித்தவன் மீண்டும் இவனுக்குப் புரியாத தொரைத்தனத்தார் பாஷையில் என்னவோ சொல்கிறான். இரு கைகளைத் தட்டி என்னவோ புரியவைக்கிறான். பழைய உயிர்கள் வந்த உயிர்களைப் பார்க்கின்றன. காத்தமுத்துவும்,,பெண்மணியும், மற்றவர்களும் அவர்களை நெருங்குகிறார்கள். இனி, இரு தரப்பினரும், ஒருவர் மற்றொருவருக்குத் தாய் தகப்பன், பந்து சனங்கள், தம்பி, தமையன், உடன்பிறந்தார் என்று விளங்கிக் கொண்டான். இவனது விதி, கூடவே வந்திருக்கவேணும் என்று புரிந்தது. எப்படி எப்போது தூங்கிப்போனான் என்று தெரியாது. பயணக்காலமும், பயணம் செய்த வகையும், அடிச்சுப் போட்ட களைப்பில் குறட்டைவிட்டுத் தூங்கிப் போனான். அதிகாலையிலே காத்தமுத்துவும், மகளைத் தொலைத்திருந்த பெண்மணியும், மற்றவர்களும் எழுப்பப்பட்டார்கள்.
அதற்கப்புறம் பக்கத்திலேயே, கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் சென்றார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேணுமென்று ஒருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. விழுந்தது. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று விழுகிறது.. இம்முறை சில்லென்று ஆரம்பித்து, பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம்.
சொந்த மண்ணுல, கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அப்படியே அடிச்சிருந்தால்கூட. மஞ்சளை இழைச்சு வீரம்மா பத்துப் போட்டா, மறுநாள் வீக்கங்கள் காணாமப் போயிடும். ஒருமுறை சித்திரை மாசத்திலே, பதினெட்டாம்போர் தெருக்கூத்தை விடிய விடிய பார்த்துட்டு, குடிசையிலே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கப்போக, வீட்டெதிரே இருந்த தென்னைமரத்துல கட்டி வச்சு உடையார் அடிச்சதா ஞாபகம். இரண்டாவது முறை, மூத்த மவன் ஏகாம்பரம் சரீர சொஸ்தமிலாமல் பிராண அவஸ்தை கண்டு, மல ஜலம் படுக்கையிற் போக, உள்ளூர் வைத்தியர் ஐயா, “கோழி கொண்டுவந்து சுத்தியும், சோறு சுத்திப்போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லி, ஒரு கவுளி வெத்திலையும் அரை பலம் பாக்கும், ஒத்தைப் பணமும்” கொண்டுவாடான்னு சொன்னபோது, ஆபத்துக்குப் பாவமில்லைண்ணு உடையார் ஆண்டையிடம் சொல்லாம பக்கத்துப் பண்ணைக்கு, ‘அண்டை’ வெட்டப் போயிருந்தான்.,குடிசைக்குத் திரும்பினால், ‘பெரிய ஆண்டை, உன்னை உடனே வரச்சொன்னாருன்னு” வீரம்மா, புகையிலைச் சாற்றைத் துப்பியபடி சொல்கிறாள் அன்றைக்கும் இப்படித்தான் அடிபட்டிருக்கான்.
கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக’விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் பச்சைவாழியம்மன் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா? என்று நினைத்து அழுதான்.
“தீவில் சாதியில்லை, எஜமான், பண்ணையாள்னு பாகுபாடு கிடையாது. இந்த ஊர்லதான் வேதத்துல விழுந்தவங்ககூட வித்தியாசங் காட்டறாங்க. அங்கபோனா எல்லோரும் சமமாம், வயிற்றுக்குச் சாப்பாடு, கட்டிக்கத் துணி எல்லாத்தையும் குடுத்து கவுர்தையாய் நடத்தறாங்களாம்”, தொரைமாருங்கக் கிட்ட சேவகம் பண்ணும் தேவராசன் சொன்னா சத்தியவாக்காதான் இருக்கும்னு மனசு சொன்னது. எரவாணத்தில் ஒட்டியிருந்த கெவுளி ‘நச் நச்’ன்னு நாக்கை அண்ணத்திற் தட்டி ஆமாம் போட்டுச்சுது..ஆனால் வீரம்மாவுக்கு விருப்பமில்லை. அவள் யோசனையைக் கேட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தறதைக் குடிச்சிட்டு தொழுவ சாணியும், ஏரும் கலப்பையுமா அவனுடைய முப்பாட்டன் வழியில் உடையார் ஆண்டை காலில் விழுந்து கிடந்திருக்கலாம். உள்ளூர் மாரியம்மனுக்கு ஆடிமாசத்துலக் கூழு, புதுச்சேரி மாசிமகம், மயிலத்துல பங்குனி உத்திரம்னு வருஷம் ஓடியிருக்கும். வந்திருக்க வேண்டாம். வரும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சுது.
காத்தமுத்துக்கு பூர்வீகம், புதுச்சேரிக்கிட்ட பத்து பதினைஞ்சு கல் தள்ளியுள்ள பாகூர். தலைமுறை தலைமுறையா ஆஸ்திபாஸ்தியுள்ள உடையார் வீட்டிலே படியாள் சேவகம். வெள்ளி முளைக்கும் வேளையில், மற்ற சேரிவாசிகளைப் போலவே புருஷனும் பொண்டாட்டியும் கம்பத்து வேலைக்கு வந்தாகவேணும். காத்தமுத்து தும்பை அவிழ்த்து மாடுகளை இடம்மாற்றிக் கட்டிவிட்டு, உடையார் வீட்டு நஞ்செய்க்கோ புஞ்செய்க்கோ காத்திருக்கின்ற வேலைக்குப் பேகவேணும். பெண்ஜாதி வீரம்மா, சாணி நிலைகளைக் கூடையில் வாரிக்கொண்டுபோய், குப்பையில் சேர்த்துவிட்டு, மாட்டுமூத்திரமும், சாணமும் கலந்த புழுதியைப் பெருக்க ஆரம்பிப்பாள். நெய் மணக்கச் சோறும் கறியுமா, போஜனம் முடித்த வாழை இலைகளைப் பின்வாசல் வழியாக வெளியே எறிந்து ஓய்வெடுக்கும் நேரங்களில், உடையார் சம்சாரம் மனோரஞ்சிதம் அம்மாளுக்கு, வீரம்மா ஞாபகம் வந்தால் குடத்தில் எஞ்சியிருக்கும் கம்பங் கூழையோ, கேழ்வரகுக் கூழையோ காந்தலுடன் கொண்டுவந்து மட்டையில் ஊற்றுவாள். மிச்சமிருப்பதை காத்தமுத்துக்கான கலையத்தில் ஊற்ற, வீரம்மாள் ஓட்டமும் நடையுமாக கொண்டுவருவாள். இவன் வரப்பில் உட்கார்ந்து கொண்டு பசியாறும் அழகை, கட்டெறும்புக் கடிகளுடன் பக்கத்திலிருந்து ரசிப்பாள்.
பால் பிடிக்காத நெற்கதிர்மாதிரி காத்தமுத்து வெளுக்க ஆரம்பிச்சான். வழக்கம்போல சாமியாடி, வேப்பிலையால மந்திரிச்சுப்போட்டு, விளக்கு வச்சுப் பார்த்ததிலே, “உருமத்துல கன்னிமார் அறைஞ்சிருக்கிறா, பொங்கவச்சி கழிப்பு எடுக்கணும், வெடைக்கோழி காவு கொடுக்கவேணும்.”.என்று சொல்லிப்போட்டு தட்சணை கேட்கிறான். காத்தமுத்துவ அறைஞ்சிருப்பது, கன்னிமார் சாமி இல்லை மனோரஞ்சிதம் சாமின்னு வீரம்மாவுக்குந் தெரியும், சேரிக்குந் தெரியும், உள்ளூர் சாமியாடிக்குந் தெரியும். மனோரஞ்சிதம்அம்மாளுடன் காத்தமுத்து சந்தைக்கும், புதுச்சேரி, கூடலூர், வில்லியனூரென அவள் போகவேண்டுமென்று நினைக்கின்ற ஊர்களுக்கும் வில் வண்டியைப் பூட்டிக்கொண்டு போய்வருபவன் என்பது ஊரறிந்த சேதி. வண்டியை வழியில் நிறுத்தி பசியாற உட்கார்ந்த வேளைகளில் அந்த அம்மாள், காத்தமுத்துவை அழைத்துச் சோற்றுருண்டைகளை உருட்டிப் போட்டு உரச ஆரம்பித்தாள். அவளுக்கு நெய்ச்சோறு கண்ட உடம்பு.. இருட்டு நேரங்களில் ஓடைவெளி, வைக்கோல் போர், மாட்டுத் தொழுவம் எனஇருவரும் ஒதுங்கியது போக, உடையார் இல்லாத நேரங்களில் சகல சம்பிரமத்துடன் எதிர்கொண்டு, கூடத்தில் அழைத்து பாயையும் விரிப்பாள்.
இந்த விவகாரம் சேரியில் புகைய ஆரம்பிக்க, வீரம்மாளுக்குப் பேதி கண்டது.
“வேணாம் சாமி.. நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. அவ ஏதோ குண்டி கொழுத்து அலையறான்னா, நீயும் கார்த்திகை மாசத்து நாய்மாதிரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போற.. நாளைக்கு அந்தாளுக்குச் தெரிஞ்சா வகுந்துடுவான். பெரிய குடும்பத்துக்காரனெல்லாம் ஒண்ணா சேந்துடுவாங்க. புதுச்சேரி தொரமாருங்க கோன்சேல் ஆக்கினை வயணம், சனங்கள் பார்க்க தூக்கில் போடுவார்கள். நான் ரெண்டு புள்ளைக¨ளை வச்சிட்டு என்ன செய்வேன். வேணும்னா நாம்ப புதுச்சேரிக்குப்போய், தொரைமாருங்கக் கிட்டச் சேர்ந்து பொழைச்சிகலாம்யா”.
வீரம்மாள் புலம்பலில் நியாயம் இருந்தது. ஆனாலும், தினைச் சோறும், புளிக்குழம்பும், மனோரஞ்சிதம் அம்மாளின் மீசைமுளைத்த கருஞ்சிவப்பு உதடுகளும், வீரம்மாளுக்கில்லாத மார்பு வளப்பமும், பெரிய இடுப்பும் அவன் மனதில் பாரதக் கூத்தில் பார்த்த சந்தனு மகாராஜா செம்படவப் பெண்ணிடம் கொண்டிருந்த பிரேமையை ஏற்படுத்தலாச்சுது..
இந்தக் கூத்தெல்லாம் ஒரு பங்குனி மாசத்திலே முடிவுக்கு வந்தததென்று சொல்லவேணும். பக்கத்து ஊருலே அங்காளம்மன் திருவிழா. உடையாருடைய கிழக்குவெளிக் கார்த்திகைசம்பா அறுவடைமுடிந்து கட்டுகளாகக் களத்துமேட்டில் கிடக்கிறது. ‘கோட்டை அழிப்பைப் பார்த்துட்டுச் சடுதியிற் திரும்பலாம்’ என்ற எண்ணத்திற் கிளம்பியவனை, தோட்டக்கால் பக்கம் தடுத்து நிறுத்தியவள், மனோரஞ்சிதம் அம்மாளின் எடுபிடி, அம்புஜம். “அம்மா வரச்சொன்னாங்க ” என்று ஒரு வார்த்தையில் ஆக்கினை பண்ணிப்போட்டு, மறைந்து போனாள். மனோரஞ்சிதம் அம்மாளைத் தேடிப்போனவனுக்கு, உடையார் வாங்கிவந்திருந்த காரைக்கால் அல்வாவும், அவள் கைப்படச் செய்த எண்ணை பணியாரமும் கிடைத்தது. ஆசைநாயகன் தின்று முடிக்கவேண்டுமென காத்திருந்ததுபோல, மனோரஞ்சிதம் அம்மாள் அவசரப்பட்டாள். இவனது எண்ணமெல்லாம் முறமெடுத்து ஆடும் காளிமீதும், களத்துமேட்டில் உள்ள கட்டுப்போரிலும் கிடந்தது. ஆர்வமில்லாமலே தழுவினான். சில நாழிகைகள் கடந்திருக்கும். இவர்கள் சேர்ந்திருந்த அறையின் கதவு எட்டி உதைக்கப்பட, படீரென்று திறந்துகொள்கிறது. நிலைப்படியை அடைத்தவாறு மல்வேட்டியை மடித்துக் கட்டியவண்ணம் உடையார்.
“எச்சில் நாயே..” என்பதைத் தொடந்து ஏராளமாய் வசவுகள். அவரைப் பிடித்துக் கீழே தள்ளிப்போட்டு ஓடியவன். விடிவதற்கு ஒரு சாமமிருக்கையில், புதுச்சேரியில், சாவடித் தெருவில் வசித்த தேவராசனை அவன் வளவில் கண்டு, காலில் விழுந்தான்.
நடந்த வர்த்தமானங்களை முழுவதுமாகத் தேவராசனிடம் தெரிவித்து, “அண்ணே.. நான் எங்கனா கண்காணாத தேசத்துக்குப் போகவேணும். நீர் தயவுபண்ணித் தீரவேணும்” என்று மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே, தேவராசன் அனுகூலம் செய்வானென்று காத்தமுத்து மெத்தவும் நம்பிக்கைவைத்தான்.
‘நாளைக் காலமே.. பாகூர் உடையார் புதுச்சேரியிலதான் நிற்பார். அவருக்கிங்கு பெத்ரோ கனகராய முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள் உண்டு.. உன்னை கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேணுமென்றால், அடுத்தகிழமை கப்பல் ஏறவேணும். ஆனால் அக் கப்பலுக்கு தேவையானபேர் இருப்பதாலே, உன்னை அனுப்பிவக்க முடியுமென்று உறுதியில்லை.”- என்று வயிற்றில் புளியைக் கரைத்தான் தேவராசன்.
– நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது ரொம்ப சிரமம். உனக்குக் கிடைக்கும் இருபது வராகனில் என் பங்காகப் பத்து வராகன் கணக்குத் தீர்த்தால், உன்னை மஸ்கரேஞ்க்கு (Mascareignes) போகின்றக் கப்பலில் ஏற்பாடு பண்ணலாம்.
“நீங்க பிரயாசைப்பட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்து கொள்வேன்” என்று உபசாரமாய்க் காத்தமுத்து சொல்லிப்போட அன்றிரவே ஒரு துரைமார் வீட்டுல கொண்டுபோய் தேவராசன் சேர்த்தான். அங்கு ஒருவாரம் இவனை வேறு சிலரோடு அடைத்துவைத்து, ஒரு நாள் ராத்திரி, இரண்டு சாமத்திற்குப் பிறகு, சலங்கில் இவர்களை ஏற்றிக்கொண்டுபோய் புடவைக் கட்டுகள் ஏற்றின கப்பலில் அடைத்து, அங்கிருந்து மாஹே சென்று மிளகு ஏத்திக்கொண்டு சீமைக்குச் செல்லும் வழியில், இவர்களைப் பிரெஞ்சுத் தீவில் இறக்கிப்போட்டார்கள்.
இவ்விடத்தில் வந்ததினத்திலிருந்து முப்பொழுதும் நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டையினால் விளாசுகிறார்கள். அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவன் சரீரத்திற்குத் தெம்பில்லை. இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற கூலிகளுக்கு அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கரும்பினை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து இருபுரமும் சமனாய் இறங்குகிறது. முதுகு முழுக்க கன்றிப்போய், திகுதிகுவென்று எரிகிறது, இரண்டொரு ஈக்கள் எப்படியோ மோப்பம்பிடித்து, முதுகை வட்டமிடுகின்றன. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான். சாட்டையை மறுபடியும் சொடுக்கினான். அவன் கைகளைப் பாம்பு பிடுங்க. கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பின் புண்ணை ருசிபார்த்தவண்ணம் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான்.
– ம்.. எழுந்து வேலையைப்பாரு. நான் மறுமுறை வருகின்றபோது, இந்தத்திட்டை நீ முடித்திருக்கவேணும்”- வளர்ந்து சாய்ந்துக் கிடந்தக் கரும்புகளைக் காட்டிவிட்டு ஓடிப்போனான்.
அவன் ஓடுவது, எதற்காகவென்று காத்தமுத்து அறிவான். மற்ற அடிமைகளும் அறிவார்கள். மூத்திரம் வரும்போதெல்லாம் இப்படித்தான் பதறிக்கொண்டு ஓடுவான். தீட்டுப்பட்டபெண்ணிடம் படுத்து அவதிப்படுவதாகப் பண்ணை முழுக்கப்பேச்சு. மூத்திரம்பேய கனக்க நேரம் எடுத்துக்கெள்வான். அவனுக்குச் சுலபத்தில் மூத்திரம் வராதென்று சொல்ல கேட்டிருக்கிறான். காத்தமுத்து இதற்காத்தான் காத்திருந்தான். அவன் மறையும்வரைக் காத்திருந்தான். பாவாடைராயன், அங்காளம்மா, மாரியாத்தா, காத்தவராயனென கிராமத்தில் அவன் நெருங்கி பொங்கவைக்க முடிஞ்ச சாமிகளை நேர்ந்துகொண்டான்.
மேலே கழுகொன்று பறந்து கொண்டிருக்கிறது……. வெட்டப்படாத கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தான், மேற்கு திசையைக் குறிவைத்து ஓடினான். முதுகைக், காய்ந்திருந்த கருப்பங்கழிகள் கிழிக்கத் தொடங்கின. சாட்டை அடிகளுக்கு இது தேவலாம் என்றிருந்தது. ஓடிமுடிக்க இடப்புறம் மரங்கள் அடர்ந்திருந்தன. நிம்மதியாய் நின்று மூச்சுவாங்கிக்கொண்டான். அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட் புதர்கள் மூங்கிற்புதர்கள் என இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..
நாள் விழித்துக்கொண்டது. காலைச் சூரியன் மரங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய ஒளியை மண்ணுக்கும் தயவுபண்ணியிருந்தான்.காத்தமுத்துவை எறும்புகள் மொய்த்திருந்தன. மண்ணிற் கிடந்தற்கு அடையாளமாக உடல் முழுவதும் அடையடையாய் நெருஞ்சி முட்கள். கசையடிப் புண்கள் கருஞ்சிவப்பிற் கனிந்து, அவற்றின் கொப்புளங்களில் நீர்வடிகின்றது. அவற்றைச் சீண்டி வேதனைப் படுத்தும் ஈக்களை விரட்டி அலுத்துபோனான். எழுந்து நிற்க முயற்சித்தான், நின்றான், விழுந்தான். இயற்கை உபாதை, சுதந்திரமாய் மலசலம் போகவேணும் போலிருக்கின்றது. போகிறான்.
இனி, அவன் எவருக்கும் அடிமை இல்லை. கையிற் பிரம்பும், சிவந்த கண்களுமாய் குதிரையிற் வலம்வருகின்ற பறங்கியர்கள் இங்கில்லை. கசையும், கெட்ட வசவுகளுமாய், அடிமைகளைப் பிழியப் பழகிய கறுப்பு கங்காணிகள் இங்கில்லை. தங்கள் கள்ள புருஷனைப் பல்லக்கில் சுமந்துவரப் பணிக்கின்ற துரைசாணி அம்மாக்கள் இங்கில்லை. மிசியேக்கள் இல்லை, மதாம்கள் இல்லை, எஜமான்கள் இல்லை, எஜமானிகள் இல்லை. ஐயாமார்களோ, ஆண்டைமார்களோ இல்லை.. இல்லை.
அதோ சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறதே, அந்த ஆற்றினைப்போல நிற்காமல் காட்டின் அடுத்தமுனைவரை இவன் இப்போது ஓடலாம். கேட்பாரில்லை. இவனைச் சந்தோஷபடுத்தவென்று ஒரு குரங்கும் அணிலும் அவ்விடம் கட்டுப்பாடின்றி ஓடிவிளையாடுகின்றனவே, அவற்றைப் போலவும் ஓடலாம், தடுப்பாரில்லை. சொந்தத் தேசத்தில் பார்த்திராத விசித்திரமான மரமொன்றில், தவிட்டுப் புறாவொன்று கிளைகிளையாய்ப் பறந்துசென்று உட்காருவதும் எழுந்திருப்பதுமாய் வேடிக்கைக் காட்டுகிறது. அதனைத் தலைசாய்த்துப் பார்த்துவிட்டு இளம் பச்சைக்கிளியொன்று இறக்கைகளை உதறுகின்றது. கறுவண்ண இறகுகள் கொண்ட வெண்குருவியொன்று, பப்பாளிமரத்தின் கனிகளைக்கொத்தி அலகிலெடுத்து மிகத்தாழ்வாகப் பறந்து பின்னர் மேலேபோகிறது. கைகளையும், கால்களையும், கங்காணியின் அனுமதியின்றிச் சுதந்திரமாய் இனி அசைக்கமுடியும் என்பதை நினைக்கச் சந்தோஷம். மெல்ல அடியெடுத்து, தன் வலி மறந்து ஓடிப் பார்க்கிறான். தலையில் இடித்த கிளையை உடைத்து அலட்சியமாகத் தூக்கி எறிகிறான். காய்ந்து கிடந்த தேங்காயொன்றை எட்டி உதைக்கிறான். காற்றுச் சுழன்று சுதந்திரமாய் வீசுகிறது. காம்புகளோடு சிவப்பும், ஊதாவுமாய் மலர்கள் சுதந்திரமாகத் தலைகுனிந்து நிமிர்கின்றன. ஆவலாய்ப் பறந்துவரும் வண்டுகள் அம்மலர்களில் அமர்ந்து, வயிறுமுட்டத் தேன்குடிக்க, இவனுக்கும் பசி. வரப்பு நண்டுகளைப் பிடித்து வீரம்மா வைக்கும் சாறும், நத்தை கறியும் ஞாபகத்தில்வர, எச்சில் ஊறுகிறது. அருகிலிருந்த ஈச்சங்கன்றைப் பலங்கொண்டமட்டும் ஆட்டிப் பிடுங்குகிறான். அவற்றைப் பிய்த்துபோட்டு குருத்தினைத் தின்று, தண்ணீர் குடிக்கிறான்.
திடீரென்று பயம் வந்துவிட்டது. வேட்டை நாய்களும், கறுப்பர்களும், வெள்ளை சிப்பாய்களுமாக துரத்தி வரும் மனுஷர்களிடம் இவன் எப்படி தப்பப் போகிறான் என்கின்ற பயம். கறுப்பர்களால் பண்னைகளிலிருந்து தப்பவும், காட்டில் மறைந்துவாழவும் முடியும். அவர்கள் பிடிபடாமலிருந்தால் அடுத்துள்ள தீவுகளுக்குத் தப்பித்துப் போவதும் நடக்கலாம். தன்னாலப்படிக் காட்டில் மறைந்து வாழ முடியுமோ? விஷஜந்துக்களிடமிருந்து தப்பிக்க வேணும். விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேணும். நரமாமிசம் சாப்பிடுகின்ற கறுப்பர்களிடமிருந்துத் தப்பிக்கவேணும். அப்படிய தப்பிக்க முடிந்தால், காட்டில் கிடைப்பதை உண்டு உயிர்வாழத் தெரியவேணும். எத்தனை நாட்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு, எத்தனை மாமாங்கத்திற்கு, முடியுமா? ஏதோவொரு வேகத்தில் கசையடிகளுக்குப் பயந்து காட்டுக்குள் புகுந்தாகிவிட்டது. இனி எங்கே போவது? எப்படிப் போவது? இவன் பண்ணையிலிருந்து தப்பியவொரு அடிமை. இனி தீவுடைய சட்டதிட்டத்தின்படி, இவனுக்கு மரூனென்கிற பேரு. பிடிபட்டானென்றால், இரண்டு காதினையும் அறுத்து கொட்டடியில் அடைத்துக் கஞ்சி தண்ணி காட்டாமே, உசுரிருந்தால் மீண்டும் நாள் முழுக்கக் கரும்புவெட்டவும், கசையடிகளுக்கும் பழகிக்கச் சொல்வார்கள். சாமி கண்ணைத் தொறக்கணும். ‘அஞ்சு வருஷம், தீவுல காலந்தள்ள முடிஞ்சா பணம் பவுஷோட நாடு திரும்பலாம்னு’ புதுச்சேரியிலவச்சு, தேவராசன் சொன்னவன். கிட்டங்கிச் சுவற்றில் இவன் கிழித்திருந்தக் கோடுகள் பிரகாரம், இரண்டு அஞ்சு வருசம் வந்துபோச்சுது. இவனுக்கு முன்னாலே தீவுக்குவந்ததாகக் கேள்விபட்டிருந்த கொத்தனார் சின்னப்பனையோ, தச்சுவேலைசெய்யும் ஆசாரி முருகேசனையோ இதுவரைக்கும் பார்த்ததில்லை. தன்பெண்பிள்ளையைத் தொலைத்துப்போட்டு சதா சிந்தியமூக்கும் அழுத கண்ணுமா இருந்த ஸ்த்ரீயையும் மற்ற புதுச்சேரி சனங்களையும்கூட முதல் நாள் பண்ணையில்வைத்துக் கண்டதுதான், அதற்கப்புறம் பார்க்கமுடியாமற் போச்சுது. தீவுக்குக் களவாய் அழைத்துவந்தவர்களைக் கடேசிவரைக்கும் திருப்பி அனுப்ப மாட்டார்களாம். இன்னும் கொஞ்ச காலம் தலையெழுத்தேன்னு ஊரு பண்ணையிலேயே கிடந்திருக்கலாம். எப்பேர்பட்ட காரியம் பண்ணிப்போட்டேன். கோவிந்தா….! இனிப் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்கவே முடியாதோ?
அப்போதுதான் அவனைக் கவனித்தான். பார்த்தவிதத்தில் பண்ணையில் இவனைமேய்த்த கங்காணி கறுப்பனாகவிருக்குமோவென சந்தேகம். இல்லை இவன் இதுவரை பார்த்திராத ஒருவன், அந்நியன். கண்டமாத்திரத்தில் சாவு நெருங்கிவிட்டதாய் நினைத்து ஓட முயற்சித்தான். ஓடினான். இவனைத் தொடர்ந்து அவன் ஓடிவருவதன் அறிகுறியாக, நெருக்கத்திற் காலடிச் சத்தம். பண்ணையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், நேற்றுமுழுவதும் ஓடியிருக்கிறான், அந்த அலுப்பு காத்தமுத்துவை அதிகதூரம் ஓட முடியாமற் தடுக்கிறது. ஓடிவந்த கறுப்பன் இவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டான். இனி அவனிடமிருந்து தப்புவது கஷ்டமென்று புரிந்துபோகின்றது. திரும்பிப்பார்க்கிறான். கங்காணி அல்ல. இவன் வேறு. இப்போதைக்கு இவனால் ஆபத்தேதும் நேர்ந்துவிடாது என்பதை நிச்சயபடுத்திக்கொண்ட திருப்தியில் அவன் இழுத்தபோக்கிலே, இவனும் ஓடினான். குறுகிய ஒற்றையடிப்பாதை நெளிந்து நெளிந்து ஓடியது. பாதை சிலவிடங்களில் மளுக்கென்று முறிந்து போனது. அவ்வாறான இடங்களில் கறுப்பன், அங்குள்ள செடிகளின் வாசத்தை முகர்ந்து அதன் பின்புறம் மறைந்துகிடக்கும் பாதையைக் கண்டுபிடித்து மீண்டும் ஓடுகிறான். விதிப்படி ஆகட்டுமென காத்தமுத்துவும் அவன்பின்னே ஓடுகிறான்.
நெடிதுயர்ந்து து வளர்ந்து நிற்கும் மரங்கள், அடர்த்தியாய்ச் செடிகொடிகள், புதர்கள். அருகில் செவிகளை அதிகம் உறுத்தாமல் விழுகின்ற அருவி. அங்குமிங்குமாக வானத்தைக் கிள்ளியெடுத்து இறைத்தத் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் நீர் நிலைகள். இவற்றுக்கிடையில் ரகசியமாய் பதுங்கிக்கிடந்தது அவ்விடம். தினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற்கொள்ளைக்காரர்களின் புழக்கத்திலிருந்த மறைவிடம், இலைதழைகளின் பராமரிப்பில் ஆழமானதொரு பள்ளம். ஏணியின் உதவியோடு, பள்ளத்திற் கிடக்கும் பாம்புகளையும் விஷ ஜந்துக்களையும் கண்டு அஞ்சாதவர்களே வந்து போகலாம்.
அருணாசலத் தம்பிரான் காலமே புறப்பட்டு வந்திருந்தார். ஏற்கனவே பலமுறை தொரை போல் அஞ்ஞெலை இங்கேவைத்து சந்தித்திருக்கிறார். இவர் வந்து அரைமணித் தியாலமிருக்கலாம். தொரை எப்போதும் சொன்னபிரகாரம் வந்திடுவான்.
அவ்விடத்துக் காட்சிகள், அவர்மனதிற்குச் சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. பண்ணைகளிலிருந்து தப்பியோடிவந்த மரூன்கள் எனப்படும் அடிமைகளும், மதகாஸ்கர், மொசாம்பிக் பகுதிகளிருந்து வியாபாரத்திற்கெனக் கள்ளத்தனமாய்க் கொண்டுவரப்பட்டிருந்த கறுப்பரின அடிமைகளும் கைகால்கள் விலங்கிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். இரவோடு இரவாக நடுக்கடல்வரை படகிலும், பிற்பாடு வாணிபக் கப்பல்களிற் கள்ளத்தனமாகவும் கொண்டு செல்லப்பட்டு, அநேகமாய்த் தென்அமெரிக்கப் பண்ணைகளுக்கு விற்கப்பட இருப்பவர்கள். உணவின்றி தேவாங்குகளைப்போல தம்பிரான் திரும்பும் திசைதோறும் மொய்க்கும் கண்கள். அவையளித்த பீதியில், “சிவசிவா” என்று முனகியவாறு முகத்தைத் திருப்ப, இவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த துரை போல்அஞ்ஞேல் முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் சகிதம் வந்து சேர்ந்தான். தம்பிரான், நெடுஞ்சாண்கிடையாக அவன் கால்களில் விழுந்தார்.
– தம்பிரான் மன்னிக்கவேணும். நேற்று தெலாக்குருவா பண்ணையிலிருந்து புதுச்சேரி அடிமை ஒருவன் தப்பியோடியிருக்கிறான். அவனைச் தேடிப்பிடிப்பத்தற்கு எமதுபண்ணை குதிரைவீரர்களை உதவிக்குக் கேட்டிருந்தார்கள். அவர்களை அவ்விடம் அனுப்பிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நீர் இவ்விடம் வந்து வெகுநேரமாகிறதோ?
– அப்படிச் சொல்ல வேண்டாமே. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள துரைமார்கள் நீங்கள். உங்களைப் போன்ற எசாமனர்கள் தயவில் ஜீவிக்கவேணுமாய் எங்கள் தலையில் எழுதியிருக்கிறது. அடிமைகள் வியாபாரம் நல்லபடியாய் நடக்க வேணும். நீர் எம்பெருமான் கிருபையினால் குபேரனைப் போல வாழப்போகிறீர் பாரும். இது சத்தியம். நீர் ஷேமமாய் வாழ்ந்தால்தானே, எங்களைப் போன்றவர்கள் கடவுள் அனுக்கிரகத்தால் நாலு பணம் பார்க்கமுடியும்.
– மெர்சி(நன்றி) தம்பிரான். வழக்கம்போல பணத்தில் குறியாயிருக்கிறீர். மொக்காவில் தரிசாகக் கிடக்கும் காணிகளை மலபாரிகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதாய்க் கும்பெனியில் பேச்சு. இயேசுவை விசுவாசிக்கும் மலபாரிகளுக்கு மாத்திரமே அவ்விதமான சலுகைகள் போய்ச்சேரவேணுமென்று எங்கள் கிறிஸ்த்துவ குருமார்கள் யோசனை சொல்கிறார்கள். எப்படியும் கும்பெனிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுமென தெரிகிறது. நான் குவர்னரிடம் முறையிட்டு உம்மை அந்தப் பட்டியலில் சேர்ப்பிக்கிறேன். இனி இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக அழைத்துவரும் ஒவ்வொரு அடிமைக்கும் உமக்குப் பிரத்தியேகமாக இருபது பவுண் கொடுக்க ஏற்பாடு செய்வேன்.
– இங்குள்ள அடிமைகளை தொரை எவ்விடம் அனுப்புகிறீர்?
– இவர்கள் தொர்த்துய்கா (Tortuga) தீவுக்கு அனுப்பப்படவேண்டியவர்கள். அங்கிருந்து தென் அமெரிக்காவிலுள்ள ஸ்பானிய பண்ணை முதலாளிகளுக்கு அனுப்பப்படவேணும். இங்கேயுள்ள தேவைகளுக்கும் அடிமைகள் காணாது. எங்கள் சனங்களும், கும்பெனியை நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென தீர்மானித்துள்ளார்கள். ஆக அடிமைவியாபாரம் தற்சமயம் நல்ல எதிர்காலம் உள்ளது. உமக்குப் புதுச்சேரியிலிருந்து ஏதேனும் தகவல் வந்ததா?
– துரை ஷமிக்கவேணும். தைமாசம் வரவேண்டிய புதுச்சேரிச் சரக்குக்கப்பல்கள் நெசவுத் துணிகள் காணாமல் தவக்கப்படுது. ஆனாலும் என் சினேகிதர் புதுச்சேரி வேலாயுத முதலியார், கும்பெனி எசமானரான பிரான்சுவா ரெமியின் வளவில் ஒரு சில கட்டுமஸ்தான ஆட்களையும், பெண்டுகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பதாக அண்மையில் வந்த கப்பல்மூலம் கடுதாசி கொடுத்துவிட்டிருந்தார். அதனைத் தங்கள் சமூகம் அடிமை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதுவன்றி வேறு தகவல்கள் எம்மிடமில்லை.
– தம்பிரான் தீவில் நடப்பதெல்லாம் நீர் அறிந்ததுதானே. இங்கே பண்ணை வேலைகளுக்குப் போதிய அடிமைகள் இல்லை. இருக்கின்ற அடிமைகளை கும்பெனிக்குத் தேவையான காலங்களில் கொடுத்துதவுமாறு தீவு நிர்வாகம் வற்புறுத்துகின்றது. ஆகவே களவாய் நமக்கு அடிமைகள் அவசரமாக வேண்டும். முக்கியமானதொன்றையும் சொல்ல வேணும்.
– கேழ்க்கச் சித்தமாயிருக்கிறேன்.
– தற்சமயம் உங்கள் சனங்களில், கைத்திறனுள்ளவர்களுக்கு இங்கே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. உள்ளூர்க் கறுப்பர்கள் அநேகவிசை மற்ற அடிமைகள் வெட்டிச் சாய்ப்பதும், சில்லறைச் சாமான்களைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கின்றபடியால் கடந்த சில வருடங்களாகத் தீவில் மரூன்கள் பிரச்சினை விபரீதமாகிப் போச்சுது. உங்கள் சனங்களால் அப்படியானப் பிரச்சினையில்லை. அதுவுமன்றி உங்கள் மக்களுக்கு எஜமான விசுவாசம் இரத்தத்திலே ஊறி இருக்கவேணும், சுலபமாய் அடங்கிக்கிடக்கிறார்கள். இந்த விசுவாசத்திற்கு கைலாசம்மாதிரியான மனுஷர்களால் விக்கினம் நேராம பார்த்துக்கொள்ளவேணும். அவனது விடயம் என்னவாயிற்று? அவனைக் கொன்றுபோடுவது அவசியமெனச் சொல்லியிருந்தேனே?
– கைலாசத்தைக் கொல்லவேண்டி எமது ஆட்கள் இருவரை ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் சமுசயப்பட வேணாம். நல்ல சேதி வந்தவுடன் நானே நேரில் உமது பண்ணைக்கு வந்து தெரிவிப்பேன் .
– எம்முடைய பண்ணைக்கருகே நீர் வராதேயும். எனது ஆள் ஒருவனை மொக்காவுக்கு அனுப்பித் தகவல் தெரிந்துகொள்வேன்.
– துரை..! நீங்கள் கைலாசம்குறித்தான கிலேசத்தை விடவேணும். அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படவேணுமென நாள் குறித்துப்போட்டோம்.
– காமாட்சி அம்மாள் குடும்பத்தின் மீது உங்களுக்கென்ன அப்பேர்ப்பட்ட வஞ்சம்.”
– அந்த ஸ்திரீ காமாட்சி அம்மாள் தமிழ்த்தேசத்திலே, ராசகுடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாகப் பேச்சு. அவளது ஏக புத்ரி தெய்வானை ராசகுடும்பத்தின் வாரிசென்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரமும் அவர்களிடத்திலே இருந்திருக்கிறது. எங்கள் சினேகிதர்கள் காமாட்சியம்மாள் புத்ரி அரசபதவியை ஏற்பதைத் தடுக்கவேணுமென்பதில் உறுதியாய் இருக்கிறார்கள்.
– நீர் ஏற்கனவே ஒருமுறை இதுபற்றி கூறியிருக்கிறீர். ஆனால் ஏதோ ரகசியமிருக்குமென்று சந்தேகப்பட்டப் பெட்டியைத்தான் உமது ஆட்கள் கோட்டைவிட்டுவிட்டார்களே?
– உண்மைதானுங்கோ. எனது யூகம் சரியாகவிருக்கும் பட்சத்தில், நான் தேடிக்கொண்டிருந்தப் பெட்டி தற்சமயம் நமது மற்றொரு எதிரியான பெர்னார் குளோதன் வசமிருக்கவேணும். ஆகவே எனது புதுச்சேரி சினேகிதர்களுக்கு இது விபரமாக எச்சரித்துக் கடுதாசி எழுதிப்போட்டேன்.
-அப்படியே புதுச்சேரி மண்ணிலேயே அவனுக்குக் கல்லறையும் ஏற்பாடு செய்யுமாறு உங்கள் ஆட்களிடம் கூறிவையும். இங்கே போர்லூயியில் உள்ள லாஸாரிஸ்துகளுக்கு* அவனது நடவடிக்கைகள் மீது கிஞ்சித்தும் விருப்பமில்லை. என்னுடைய மகளை அவன் கல்யாணம் கட்டியிருக்கலாம். விருப்பமில்லையேல், எங்கள் நாட்டிலிருந்து ஒரு ஸ்த்ரீயை வரவழைத்துக் கல்யாணம் செய்துகொள்ளவேணும். அவ்வாறில்லாமல் உங்களின ஸ்த்ரீயை கல்யாணம் செய்துக்கொள்வேன் என்பது நியாயம் அல்லவே. தெய்வானையின் சகோதரன் கைலாசமும், நான் முடித்து வைக்கிறேனென சொல்லித் திரிகிறானாமே? உம்மோட சனங்களுக்குப் புத்தி எவ்விடம் போச்சுது. காமாட்சி அம்மாளிடம் இந்த விடயங்கள் குறித்து நீங்கள் பேசவேண்டாமோ?”.
– அந்தத் ஸ்த்ரீயானவள், சீனுவாச நாயக்கர் வார்த்தையன்றி, மற்றவர்களின் வார்த்தையை ஒருபொருட்டாக மதியாதவள். குவர்னரையும் நைச்சியம் பண்ணிவச்சிருக்கிறாள். இந்து தேசத்து சனங்கள், நாய்க்கருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் அடங்கிக் கிடப்பது கும்பெனிக்கு நல்லதல்லவென்று, தொரை நாசூக்காய் குவர்னரண்டை போட்டுவைக்கவேணும். பிழைக்கவந்த இடத்தில் எசமானர்களுக்கு விசுவாசமாய் இருக்கவேணுமென்று இந்தச் சண்டாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது கும்பெனியின் மரியாதைக்கு அபகீர்த்தி அல்லவோ.
காவலரிருவர் காத்தமுத்துவையும், கறுப்பனையும் உரையாடிக்கொண்டிருந்த தம்பிரான் போல் அஞ்ஞெல் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றனர்..
– மிஸியே!..இவர்கள், சந்தேகப்படும் வகையில் நம் வளவுக்கருகே நின்று கொண்டிருந்தார்கள். இவ்விருவரையும் கொன்றுபோட்டிருப்போம். இந்தக் கறுப்பன் நமது தம்பிரானைத் தெரியுமென்று சொல்லுகிறான்”
– தம்பிரான் யார் இவன்? எப்படி இவ்விடம் வந்தான். இந்தவிடம் உம்மைத் தவிர வேறு எவருக்கும் தெரியவரக்கூடாதென்று எச்சரித்திருந்தது மறந்து போச்சுதா?
– துரை மன்னிக்கவேணும். இதோ நிற்கும் கறுப்பன் நமக்கு வேண்டியவன், பெயர் அனாக்கோ. கைலாசத்தைக் கொல்வதற்கு எம்மால் ஏற்பாடு செய்யபட்டவன். மற்றவனை இப்போதுதான் பார்க்கிறேன். தோற்றத்தை வைத்துப் பார்த்தால், மலபாரியாக இருக்கவேணும்.
– தம்பிரான் எவராக இருப்பினும், இவ்விடத்தின் ரகசியம் தெரிந்தவர்களை நான் வெளியே செல்ல அனுமதிக்கமுடியாது. இவர்களை தூக்கிலிடுவதைத் தவிர வேறுமார்க்கமில்லை.
– வேணுமானால் மலபாரியைக் கொன்று போடலாம். கறுப்பன் அனாக்கோ நமக்கு உதவுபவன், அவனுக்கு நான் ஜவாப்தாரி.
– உமது விருப்பபடிச் செய்யும்.
– அனாக்கோ! கைலாசம் என்னவானான், இவன் யார்?
– மன்னிக்கவேணும் ஐயா, முட்டாள் லூதர் செய்த குளறுபடியால் இம்முறையும் அவன் தப்பித்துவிட்டான். எனக்கு வேறொரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவன் சிரஸோடு வருகிறேன். இல்லாதுபோனால் உங்கள் கையாலேயே அடிமையை வெட்டிப்போடுங்கள்.
– லூதர் இப்போது எங்கே?
– அவன் கடற்கரையில் எங்கள் கிறேயோல் மக்களிடம் பிடிபட்டிருக்கிறான்”
– நமது ரகசியங்கள் எல்லாம் சில்விக்கும், பின்னர் கைலாசத்திற்கும் தெரிந்திருக்குமோ?
– அப்படியானப் பாதகங்கள் ஏதும் நடக்காது. முட்டாள் லூதர் பலமுறைத் தங்களைச் சந்திக்கவேணுமாய் பிரயாசைப் படுத்தினான். நான் அதற்கு இணங்காமற் போனது நல்லதாய்ப் போச்சுது.
-எனக்கு வியப்பாயுள்ளது. இக்கறுப்பனின் பூர்வோத்திரம் பிரெஞ்சுதீவுதானே. உங்கள் மொழியில் சம்பாஷிப்பதெப்படி? – போல் பிரபு வினவினான்.
– துரை, இவன் தகப்பனொரு மலபாரி என்கிறான். தமிழனாம்.
“அப்படியா?” என்று வியந்த போல் அஞ்ஞேல், கறுப்பன் அனாக்கோவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவனது முகம் பல வருடங்களுக்கு முன், எங்கோ வைத்துக் கண்டிருந்த முகம்போல் தெரிந்தது. எப்போது? எவ்விடமென்று ஞாபகமில்லை?” இப்போதைக்கு இவனைக் கொல்லக் கூடாது என்று தீர்மானித்தான்.
-தம்பிரான் உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் நீர்தான் பொறுப்பு” நான் புறப்படவேணும். இந்த மலபாரியைத் தற்போதைக்கு இங்கேயே அடைத்துப்போடுவோம். இவன் நேற்று தெலகுருவா பண்ணையில் தப்பிய மரூனாக இருக்கவேண்டும். மற்ற அடிமைகளோடு இவனையும் விலங்கிட்டு வைக்க, எமது ஆட்களுக்கு உத்தரவிட்டுச் செல்கிறேன். கறுப்பனை வேணுமானால் நீர் உடன் அழைத்துச் செல்லும்.
-துரை மன்னிக்கவேணும். இந்த மலபாரிக்கும் நான் பொறுப்பு. தற்சமயம் எனக்கு லூதரின் இடத்திற்கு வேறொரு ஆள் தேவைப்படுகிறது. பொறுத்திருந்து சரிபட்டுவரவில்லையென்றால், தங்கள் விருப்பப்படி இவனுக்கு முடிவு கட்டுவோம்.
– ஏதோ கவனமாய்ச் செய்யும், தவறு நடப்பின் உம்முடைய உயிருக்கு பிறகென்னால் உத்தரவாதம் கொடுக்கமுடியாது.- போல் அஞ்ஞெல் புறப்பட்டுச் சென்றான்.
“வெள்ளைப் பன்றியே, உன் ஈரலை ருசிபார்க்கவே என் சீவன் காத்துக்கிடக்குது” புறப்பட்டுச் சென்ற போல் துரையைப் பார்த்தவண்ணம் கறுப்பன் அனாக்கோ முணுமுணுக்க, பயந்துபோன காத்தமுத்து அவன் வாயை அடைத்தான்.
எதிர்வருகிற 28 நவம்பரில் குளோது லெவி-ஸ்ற்றோஸ¤க்கு (Claude Levii-Strauss) நூறுவயது( கட்டுரை 10 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது) மனிதம்-மானிடம் என்ற அறிவியல் பிரவாகத்தில் மூழ்கி எழுந்த மாபெரும் சிந்தனாவாதி. மானிடவியலை எவரெஸ்டின் உச்சத்தில் நிறுத்தியதற்கான காய்ப்புகள் அவரது வயதுக்கு நிறையவே உண்டு, இன்றைக்கு ஆசுவாசமாக கால் நீட்டி முதுமை தூணில் சாய்ந்தபடி அதன் பெருமை பிரவாகத்தில் மூழ்கி சந்தோஷிக்கிற மனிதர்.
மானிடவியலை ‘அமைப்பியம்'(Structuralism) ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவி-ஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம்’ என்ற சொல்லை அறிமுகத்தியவர் ·பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்ர்(Ferdinand de Saussure) என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர். அவர் மொழிகளை ஒரு முறைமையாகக்(System) கருதி அறிந்திடவேண்டுமென்றதோடு, முறைமையில் அடங்கியுள்ள தனிமங்களுக்கு இடையேயான பரஸ்பர பொருத்தம் மற்றும் பொருத்தமின்மையை ஒட்டியே, ஒவ்வொரு தனிமத்தினைப் பற்றிய வறையறையைத் தீர்மானிக்க முடியுமென்றும் சொன்னார். வாசிப்பு, கிரகித்தல், புரிதல் போன்ற சொற்களுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது. விமர்சனம், ‘எழுத்தை-சொல்லை’ கட்டுடைத்து அதன் ஜீவதாதுக்களை ஆய்வுக்குட்படுத்தியது. பிறதுறை சார்ந்த அறிவு ஜீவிகளும் – மானிடவியலறிஞர்கள், சமூக அறிவியல் வல்லுனர்கள், இலக்கிய படைப்பாளிகளென பலரும் அதன் ஈர்ப்புச் சக்திக்கு வயப்பட்டவர்கள் – அமைப்பியல் வாதத்தில் தங்களை இணைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருத ஆரம்பித்தனர். மானிடவியலைப் பொறுத்தவரை குளோது லெவி-ஸ்ற்றொஸ் அமைப்பியம் பேசியவர். அவரது நூல்கள் மானிடவியல் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவின, உதவிக்கொண்டிருக்கின்றன. அவை அத்துறை சார்ந்த அறிஞர்களுக்கான செஞ்சோற்றுக்கடன்கள். ஒரு சிந்தனை அல்லது ஒரு படைப்பின் வீச்சினை அளவீடு செய்யவேண்டுமெனில் அச்சிந்தனை அல்லது படைப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நடத்தப்படும் விவாதங்கள், வைக்கப்படும் எதிர்வினைகள், எழுப்பப்படும் கலகக்குரல்கள், உருவாகும் புதிய சிந்தனைகள் எவை எவையென்று பார்க்கவேண்டும். ஒரு சிந்தனைக்கான வரவேற்பு, அல்லது வெற்றி தோல்வியை மதிப்பீடு செய்யும் உறைகல்கள் அவை. மானிடவியலை பல்வேறு தளங்களிலும் நிறுத்தி அதன் முழுமைக்கு வழி வகுத்த அல்லது அதன் இயல்பான உருவாக்கத்திற்கான காரணிகளைக் குறித்த பரந்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர் லெவி. 1930 களில் அமேஸான் காடுகளில் கடுவியோ, பொரோரோ, நம்பிக்வாரா, துப்பி கவாயி மக்களுக்கிடையேயான உறவுகள், உணவு முறைகள், உடைகள், அணிகலன்கள் ஆயுதங்கள், சம்பாஷனைகள், இசைகள் குறித்து அவர் மேற்கொண்ட பண்பாட்டு அவதானிப்புகள் மானிடவியலுக்குக் கிடைத்த கொடையென சொல்லப்படுகின்றன.
இளைஞர் குளோது லெவி-ஸ்ற்றோஸ், இளமைக்காலத்தில் எதிர்காலம் குறித்து உறுதியான திட்டங்களேதும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு தேர்ந்த சித்திர கலைஞர், மனிதர்களை தத்ரூபமாக வரைபவர், லெவி-ஸ்ற்றோஸ் தந்தையைபோல ஒரு ஓவியராக வந்திருக்கலாம்; தென் அமெரிக்க காடுகளில் அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கிறவர்கள், சிறந்த புகைப்படக் கலைஞருக்கான திறனும் அவருக்குள் ஒளிந்திருந்ததாகச் சத்தியம் செய்கிறார்கள், எனவே புகைப்படக்கலைஞராகவே வந்திருந்தாலும் ஜெயித்திருப்பார் போலிருக்கிறது; மேடை அலங்காரம், காட்சிக்குத்தேவையான பின்புலங்கள் வடிவமைப்பு கலைஞராகக் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதற்கு அவரது நண்பரொருவர் உருவாக்கிய இசை நாடகத்திற்கான அவரது பங்களிப்பு சாட்சி; நல்ல நாடக ஆசிரியராக கூட பரிணமித்திருக்கலாம் என்பதற்கான உதாரணங்களும் உண்டு, ஆனால் எதுவுமில்லையென்றானது. மொத்தத்தில் அவருக்குள் கலைஞர் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு. கலைஞர்களுக்கு இயல்பாய் இருக்கக்கூடிய பார்வை கூர்மையும், அவதானிப்பும் லெவி-ஸ்ற்றோஸிடமும் இருந்திருக்கவேண்டும். ஆசிரியர் ஆந்த்ரே கிரெஸ்ஸோன் (Andrளூ Cresson) யோசனையின்படி கல்லூரியில் தத்துவமும், சட்டமும் படித்தபோதிலும், அவை இரண்டும் அவர் உயர்கல்விக்கு வழிகோலினவே அன்றி, சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாட்டினை அவருக்குத் தரவில்லை. உயர்கல்வி படித்து முடிந்திருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ராபர்ட் எச். லவி (Robert H. Lowie) என்பவர் எழுதியிருந்த முதன்மைச் சமூகம் (Primitive Society) என்ற நூலை, அது பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதைப் படித்து முடித்ததும் திடீரென்று அவருக்கு இனவரைவியலர் (ethnographer) ஆக வரவேண்டுமென்று ஆசை. பிரேஸில் உள்ள சாவோ போலோ(Sao Paulo) நகரில் சமூக அறிவியல் போதிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் அமைகிறது. நகரத்தின் வெளியே புற நகர்களில் வசிக்கும் அடிதட்டு சிவப்பு இந்தியரைப்பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அதனை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்கிறார். குளோது லெவி-ஸ்ற்றோஸ் வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணத்தின்” ஆரம்பம். சமூக அறிவியல் போதிக்கவந்தவர் நிலவியல், அகழ்வாராய்ச்சி என ஆர்வம்காட்டி தென்அமெரிக்க மண்ணில் தொலைந்திருந்த சிவப்பிந்திய மக்களின் இனவரலாற்றை, பண்பாட்டு தடயங்களைத் தேடிப் பதிவு செய்தார். பதினேழுவயதில் படித்திருந்த மார்க்ஸியத்தை நடைமுறை வாழ்க்கையில் அடையாளபடுத்துவதும் அங்கே அவருக்கான சவாலாக அப்போதிருந்தது. நிலவியல், உளப்பகுப்பாய்வு, மார்க்ஸியம் என்ற மூன்றின் ஊடாக அவர் விளங்கிக்கொண்டது: 1. ஒர் உண்மையை வேறொன்றாக எவ்வாறு கற்பிதம் செய்து ஏமாறுகிறோம். 2. நிஜத்தில் அசலான உண்மை தன் இருப்பை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. 3. இயல்பில் உண்மை தன்னை ஒளித்துக்கொள்வதில் ஆர்வமுடையது(1)
பாறையொன்றில் தங்கள் கூட்டுக்குள் ஒடுங்குவதென்கிற போட்டியில் இறங்கும் இரண்டு நத்தைகளின் செயல்பாடுகளின் சமநிலையின்மை, அவைகளுக்கான கால அவகாசத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளுக்கான சாட்சியம் அதாவது போட்டியொன்றில் கலந்துகொள்ளும் இரண்டுபேருக்குமான தருணமும் வெளியும் ஏற்ற தாழ்வற்று அமைவது அவசியம் – மனித வாழ்க்கையில் அநேக முரண்களுக்கு அவையே காரணம் என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ். இக்கால-வெளி மயக்கம் காலங்காலமாய் நிரந்தரமாக தங்கிவிட்டதுகுறித்த கவலைகள் அவருக்கு நிறையவே இருக்கின்றன, விளைவு தனது வாழ்க்கை முழுக்க முரணற்ற இணக்கமான சூழலைத் தேடுவபராக லெவி-ஸ்ற்றோஸ் பார்க்கிறோம்.
லெவி-ஸ்ற்றோஸ் படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள(2)வேறுபாட்டினைக் குறித்தும் நிறைய பேசுகின்றன. தென்அமெரிக்க இந்தியர்களுடைய ஒரு கூடை; கருநீல வண்ணம் தீட்டிய கவர்ச்சியான முகங்கொண்ட கடூவியொ பெண்மணி; பலதார மணமுடிக்கும் வழக்கம் கொண்ட துப்பி இன குடும்பத்தலைவனின் சிறுமியொருத்தியை மணமுடிக்கும் பேரவா; அட்லாண்டிக் கடலின் சூரிய அஸ்தமனம் என்பது புலன்களால் வியந்துணர்ந்த அனுபவங்கள். மாறாக, சுழற்றி எறிந்தால் துள்ளி குதிக்கக்கூடும் என்ற கூடையின் திறனுக்குள்ளே அடங்கியுள்ள புதிர்; பெண்ணினுடைய வடிவ இயல் சித்திர தோற்றப் பின்னணிக்குக் காரணமான அவளுடைய சமூக படிநிலை அதன் பிரதிபலன்கள்; நான்கு பெண்களை மணக்க அதிகாரம்பெற்ற குடும்பத்தலைவன் எட்டுவயது பெண்ணுக்குத் தரும் வாக்குறுதிகள்; சூரியன் மறையும் காட்சிமாத்திரம் பிடிபடமறுக்கிறது. படகுக்கு மேலாக கண்ணிற்பட்ட அக்காட்சி, பிறக்கும் இரவுக்கான நெகிழவைக்கும் அடையாளச் சின்னம். அக்காட்சியில் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டென்பது அறிவு தரும் புரிதல்.
1949ம் ஆண்டு உறவின் ஆரம்ப கட்டமைப்புகள் (Les Structures ளூlளூmentaires de la parentளூ) என்ற நூலில் குடும்பங்களுக்கிடையேயான உறவுகள் பரிமாற்றத்தை விளக்குவதற்கு கணித வல்லுனர் ஆந்த்ரே வேய் (Andrளூ Weil) உதவியுடன் கணக்கியல் தருக்கங்களூடாக(Logico-mathளூmatique) சமூகக் கட்டமைப்பை லெவி-ஸ்ட்ரோஸ் விளக்கினார். உறவுகள் என்பது பெண்கள் மற்றும் பொருட்கள் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க மனித இயல்பும்-பண்பாடும் பிணைப்பற்று இருந்தகாலமென்று அதனைத் தீர்மானித்தார். உண்மைநிலையை அறிவதென்பது மிகவும் சிக்கலானது என்ற காலக்கட்டத்தில் பெண்களையும் பொருட்களையும் ஒரே தளத்தில் நிறுத்திய லெவி-ஸ்ற்றோஸ¤டைய ஆய்வு பிற்காலத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சித்தவர்கள், இம்முடிவு லெவி-ஸ்ற்றோஸ¤டைய அறிவைப்(l’Intelligible) பிரதிப்பலிக்கிறதேயன்றி அவருடைய உணர்வைப்(le Sensible) பிரதிபலிக்கவில்லை என்றார்கள்.
1949ம் ஆண்டில் அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மற்றொரு பொருள் மந்திரச் சொற்கள். அமெரிக்காவின் நியூ மெக்ஸிக் பகுதியைச் சேர்ந்த ஸ¥னி இனத்தவர், கனடா நாட்டின் வான்கூவர் பகுதி க்வாக்யூட்ல் இனத்தவர், பனாமா நாட்டு குனா இனத்தவர் ஆகியோரை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டார். உடலுக்கோ உயிருக்கோ ஏற்படும் நன்மை தீமைகளை ஒரு சில சொற்கள் எப்படி தீர்மானிக்கின்றன, அச்சொற்களுக்கென்று ஏதேனும் பிரத்தியேக ஆற்றலுண்டா என்பது கேள்வி. பிராய்டுவின் உளபகுத்தாய்வின்படி சொற்களுக்கு எப்படி உயிர் காக்கும் வல்லமையுண்டோ அதுபோலவே உயிரை வாங்கும் சக்தியுண்டென்பது லெவி-ஸ்ற்றோஸ் கண்ட முடிவு. மந்திர சொற்களால் உண்டாகக்கூடிய அச்சம் குண்டுமழை பொழிகிற யுத்தகளத்தில் உண்டாகும் அச்சத்திற்கு ஈடானது என்கிறார். வூடு(Voodoo),பில்லி சூனியகாலத்தில் உபயோகிக்கப்படும் சொற்கள் சம்பந்தப்பட்ட மனிதர்களின் அமைதியைக்கெடுக்கிறது அவர்கள் பதட்டமடைவதால் உடலில் இரத்தத்தின் அளவு குறைகிறது பின்னர் நாடித் துடிப்பும் அடங்க, இறுதியில் அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடிவதில்லை. பிராய்டு (Freud) எவ்வாறு உள-உடலியக்கவியல்( Psycho-physiologiques) குறித்து அக்கறைகாட்டினாரோ, அதுபோலவே லெவி-ஸ்ற்றோஸ், உயிர்- உடலென்று தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறார். 1949ம் ஆண்டு சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், நரம்பு செல்களில் பாலிநியூக்கிளியோடைடினுக்குள்ள (polynuclளூotides) முக்கியத்துவத்தை அறிவிக்க அதனை ஆதாரமாகக்கொண்டு லெவி-ஸ்ற்றோஸ் மனச் சிக்கல்களுக்கு வார்த்தைகளைக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியுமென நம்பினார். சிகிச்சைகாலத்தில் ஆற்றல்மிக்க சொற்களை உபயோகிப்பதால் உயிர்ப்பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள், திசைமாறிய மனிதமனத்தினை மீண்டும் மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதோடு, எதிர்காலத்தில் நெருக்கடிகாலங்களில் மீள்வதற்கும் மனத்தினை தயார் படுத்துகிறது, என்பது அவரது கருத்து. “உலகில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனில் ரெம்போவின்(3) உணர்வுபூர்வமான சொற்கள் போதும்” என்பது லெவி-ஸ்ட்ரோஸ் தரும் யோசனை.
” எதிர்காலத்தில் அறிவியல் சிந்தனைகளும் மரபுவழி சிந்தனைகளும் ஒத்துபோகலாம் ” என்பது 1955ல் ‘லெவி’ கணித்த ஆரூடம்(4). அக்கணிப்பை மெய்யாக்க நினைத்தவர்போல, 1962ம் ஆண்டு ஆதிவாசிகளின் மந்திரம்- மரபு, படித்த பண்பட்ட உலகின் அறிவியற் செயல்பாடுகள் என இரண்டையும் சமதளத்தில் நிறுத்தி எழுதப்பட்டதே விலங்கு மனம்(5) அவருடைய மிகப்பெரிய படைப்பு எனச் சொல்லப்படுவது புராணக்கதைகள்-(Mythologiques). 1964 தொடங்கி 1971 வரை நான்கு பாகங்கள் வந்துள்ளன:வெந்ததும் வேகாததும், தேனிலிருந்து சாம்பல்வரை, உணவு உட்கொள்ளும்முறைகளின் பூர்வீகம், நிர்வாண மனிதன்(6). தென்அமெரிக்க பொரோரோ மக்களின் மரபுவழிக் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. முறைதவறி பிறந்த மகனொருவன் தகப்பனால் தண்டிக்கப்பட அவன் தனது குறைகளை நிவர்த்திசெய்துகொண்டு தகப்பனை பழிவாங்குவதாகக் கதை. எண்ணூற்று பதின்மூன்று நாடோடிகதைகள் அதிலுள்ளன. ஒரு சில ஜப்பானிய கதைகளும் அதிலுண்டு/ கதைகளினூடாக செவ்விந்திய மனிதனொருவனுடைய அனுபவங்கள் சொல்லப்படுகின்றன. அவ்வனுபவத்தில் பங்குதாரர்கள்: விலங்குகள், பெண்கள், தாவரங்கள், கடவுள்கள்.. தீயின்றி மானிடத்தின் இன்றைய பிரம்மாண்டமான வளர்ச்சி ஏது? தீ மூட்டுவோம் என்ற சங்கேதத்துடனேயே கதை ஆரம்பமாகிறது. விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிற கதையில் ‘ஹாம்லெட்டும்’ அவனது புகழ்பெற்ற இறப்பதா இருப்பதா?என்ற கேள்வியுடன் வருகிறான். தனது உயிர் வாழ்க்கையை ‘இருப்பு’ உறுதிபடுத்துவதால் மனிதன் வாழ நினைக்கிறான், ஆனால் அவன் உள்மனம், உலகம் தோன்றிய நாள்தொட்டு நீ இருந்ததில்லையே, என எச்சரிக்கிறது. இடையில் தோன்றிய மனிதரினம் இடையிலேயே அழிந்தும்போகலாம் என்பதுதான் உண்மை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
மானிடவியலாளர்கள் பொதுவாக இயற்கைவாதிகளாகவும் திகழக்கூடியவர்கள், ஆனால் லெவி இயற்கையை நேசிக்க புத்தர் காரணமென்று சொல்லப்படுகிறது. இயற்கைக்கு முன்னே எல்லா உயிர்களும் சமம் என்ற புத்தரின் வாக்கு அவரைப் பெரிதும் பாதித்ததாம். ‘விடுதலை குறித்த சிந்தனை'(Rளூflection sur la libertளூ) என்ற நூலில் நமது இனவரைவியலர் லெவி அடிப்படை மனித உரிமைககளை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்கிறார். “மனிதரின் அடிப்படைகுணமென்று ஒழுங்குணர்வினைச் சொல்கிறோம். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. இயல்பாகவே நமக்கு நம் ‘இருப்பை’ அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும், அதற்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறோம், எனவே நாம் ஒழுங்குணர்வுகொண்ட இனமல்ல பிற உயிரினங்களைப்போல நாமும் ஓர் உயிரினம் அவ்வளவுதான். மனிதரினமும் சராசரி உயிரினம் என்கிறபோது பிற உயிரினங்களைக் காட்டிலும் கூடுதலாக அல்லது பிரத்தியேகமாக சலுகைகளையோ உரிமைகளையோ எதிர்பார்ப்பது நியாயமாகாது, என்பது அவருடைய கருத்து. “சுற்றுச் சூழல் குறித்து இன்றைக்கு கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறோம், உண்மையில் மனிதர்களுக்குச் சுற்று சூழலிடமிருந்து பாதுகாத்துகொள்ளும் உரிமை வேண்டியதில்லை, சுற்றுச்சூழலுக்கே மனிதர்களிடமிருந்து தமமைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை வேண்டியிருக்கிறது”, என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ்.(7). இயற்கைக்கு மாத்திரமல்ல மனிதகுலத்திற்கும் மேற்கத்தியர் இழைத்த அநீதிகள் அதிகமென்று குற்றஞ்சாட்டினார், விளைவு அப்போதைய நாஜிகள் ஆதிக்கத்திலிருந்த பிரெஞ்சு அரசு, அமலிலிருந்த யூதர்களுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அவரை பதவி நீக்கம் செய்கிறது. எனவே நியூயார்க்கில் அடைக்கலமானார். அங்கிருந்துகொண்டு சுதந்திர பிரெஞ்சு ராணுவமென்ற எதிரணியில் அங்கம் வகித்து ஜெர்மானியர் ஆக்ரப்பிலிருந்த பிரான்சின் விடுதலைக்கு உழைத்தார்.
விவாதம் குறித்த விமர்சனம் (Critique de la raison dialectique) என்ற நூல் சார்த்துருவால் எழுதப்பட்டு 1961ல் வெளிவந்து புயலைக் கிளப்பியது. ஒருவகையில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் லெவி-ஸ்ற்றோஸ் எழுதி வெளிவந்ததே ‘விலங்கு மனம்’.(1962). நமது இனவியலாளர் புத்தகத்தில் முக்கியத்துவம்பெற்ற பழங்குடிகளை(primatif) மனிதரினத்தின் கேவலமான மனிதர்கள் என்று சார்த்துரு சித்தரித்திருந்தார். ஆனால் லெவி-ஸ்ற்றோஸோடு மோதுவதற்கு சார்த்துருவுக்கு வேறு விஷயங்கள் இருந்தன. முதலாவது மனித குல வரலாறு பற்றியது. வரலாறு என்ற சொல்லுக்கு ஏதேனும் பொருளுண்டா? உண்டென்பது சார்த்துருவின் வாதம். சார்த்துருவின் கருத்துப்படி, லெவி-ஸ்ற்றோஸ¤க்கு வரலாறென்பது மர்மம்- புரியாத புதிர், வரலாற்றாசிரியர்கள், மர்மக் கதையின் ஆசிரியர்கள். சார்த்துருவின் விமர்ச்னம் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும்; லெவி-ஸ்ற்றோஸ¤டைய கருத்தில் உண்மை இல்லையென்று நம்மால் சொல்ல முடியுமா? ஆப்ரிக்காவில் ஒரு பழமொழியுண்டு, சிங்ககத்துக்கென வரலாற்றாசிரியர்கள் இல்லாதவரை, வேட்டைபற்றிய வரலாறு என்பது வேட்டை ஆடியவர்களுக்குச் சாதமாகத்தான் இருக்குமென்பது உண்மை. வரலாற்றை அவரவர் விருப்பபடி திசை திருப்பலாம். ஆதாரங்கள், ஆவணங்கள் யாருக்குவேண்டும்? அவரவர் விருப்படி தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை விடுத்து எழுதபட்ட உலகவரலாறுகள் ஏராளம். காலனிநாடுகளின் வரலாறுகள் அனைத்துமே வேட்டைஆடியவர்களால் தீர்மானிக்கபட்டதுதான். நமது லெவி-ஸ்ற்றோஸ் பற்றி பேசுவோம். அவரது ‘விலங்கு மனத்தில்’ சொல்லப்பட்டவை அனைத்துமே தெளிவானவை, கால நேரங்களுக்கு கட்டுண்டவையல்ல என்பது அவரது அழுத்தமான வாதம். லெவி-ஸ்ற்றோஸை பொறுத்தவரை வரலாறுக்குப் பொருளேதுமில்லை: வரலாறு மனிதச்சமுதாயத்தை காலங்களால் பிரிக்கிறதென்றும், இனவரைவியல் வெளிகளால் பிரிக்கிறதென்றும் கூறியவரல்லவா?
—————————————————————————
1. Triste tropiques Edition Plon p62
2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible
3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷
4. Ibid Magie et Religion, La structure des mythes p255
5. La Pensee Sauvage- The Savage Mind
6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu
7. Le Regard élignée. éd.Plon 1983 P 374
1. Triste tropiques Edition Plon p62
2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible
3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷
4. Ibid Magie et Religion, La structure des mythes p255
5. La Pensee Sauvage- The Savage Mind
6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu
25 ஏப்ரல் 2007 எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. அப்போதைய இந்திய ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் ஐரோப்பிய ஒன்றிய பாராளு மன்றத்தின் விருந்தினர். சிறப்புரை ஆற்றினார் ஐரோப்பிய பாராளுமன்றம் நான் இருக்கிற Strasbourg ல் உள்ளது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை நகருங்ம் ஆகும்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அவர் ஆற்றிய உரையைக் கேட்கும் வாய்ப்பு, குறைந்த எண்ணிக்கையில் அழைப்பிதழுடன் அனுமதிக்கப்பட்ட இந்தியர்களில் நானும் ஒருவன்
கனியன் பூங்குன்றனாரின் « யாதும் ஊரே யாவரும் கேளீர் » என்கிற சங்கப் பாடலை முழுவதையும் தமிழில் கூறி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கவும் செய்து தமது உரையைத் தொடங்க மெய் சிலிர்ந்த து. எழுந்து நின்று வந்திருந்த நான்கைந்து தமிழர்கள் எழுந்து நின்று கைதட்டினோம்.
தொடர்ந்து அவர் ஆற்றிய உரையும் முக்கியமானது, சுவாரஸ்யமானது மாத்தாஹரி நாவலில் அந்த உரையை இடம்பெறச் செய்தேன் :
« ……
இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு திரு அப்துல்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்றனர். பாராளுமன்றத் தலைவர், செயலாளர் புடை சூழ, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக காலெடுத்து வைக்கிறார். வரவேற்புரைக்குப் பின்னர் சிறப்புரை:
“ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில், அதன் உறுப்பினர்களோடு இருக்க முடிந்தமையில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு இருக்கையில் எம்மாதிரியான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதென்றும் யோசித்தேன். கோடிக்கணக்கான மக்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்கள் என பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை ஏற்படுத்தித் தந்த அனுபவம் இந்தியாவிற்கு உண்டு. அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள எனக்குப் பெரிதும் விருப்பம்.” என்று ஆரம்பித்து ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டிப் பேசுகிறார்.
– அரவிந்தன் நாம புறப்படுவதற்கு முன்னாலத்தான் மதத்தைப் பத்தி விவாதிச்சோம், ஜனாதிபதி அற்புதமா சொன்னார் கவனிச்சியா. மதமும் அறிவியலும் விரோதிகளல்ல, விரும்பினா அவங்க சேர்ந்து செயல்படமுடியுங்கிறதுக்கு அவரது குருவே நல்ல உதாரணமென்பதுபோல விளக்கினார்.
அரவிந்தனும், ஹரிணியும், பாராளுமன்ற மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஜானாதிபதி உரை நிகழ்த்திமுடித்தபிறகு, ஹரிணி அதன் பிரம்மிப்பிலிருந்து மீளமுடியாமலிருந்தாள்.
– நான் சரியா காதுல வாங்கலை ஹரிணி, என்னுடைய நாற்காலியிலிருந்த மொழி பெயர்ப்புச் சாதனத்தை எப்படி இயக்குவது என்பதிலேயே நேரம் போயிட்டுது
– 1960ல இந்திய விண்வெளிமையத்திற்கு உரிய இடந்தேடிப் பேராசிரியர் விக்ரம் சாராபாயும், அவரது சீடரான அப்துல்கலாமும் மற்றவர்களும், நாட்டின் பலபாகங்களிலும் அலைந்திருக்கிறார்கள். இறுதியில் கேரளாவிலுள்ள தும்பா அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. அரசாங்கம் பரிசீலனை செய்தபோது, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய சிக்கலிருப்பது புரிந்தது, முக்கியமாக அங்கே இருந்த தேவாலயம். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அவர்களை வெளியேற்றினால் தங்கள் ஓட்டுவங்கியை இழந்து விடுவோம் என்ற கவலை, பிரச்சினையை பெரிதாக்குவதெற்கென்றே காத்திருந்த மதவாதிகள் வேறு. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு அந்த இடத்தை எப்படியாவது பெற்றே தீருவதென்று தீர்மானமாக இருந்தார். ஒரு யோசனை பிறந்தது. தேவாலயத்தின் பங்குத்தந்தை பீட்டர் பெர்னார் பெரைராவைச் (Rev. Peter Bernard Pereira¡ ) சென்று சந்தித்திருக்கிறார், பங்குத் தந்தை, விக்ரம் சாராபாயிடம்,” என்ன விக்ரம், கடைசியில் என் பிள்ளைகள் இல்லத்தையும், எனது இல்லத்தையும், கடவுள் இல்லத்தையும் சேர்த்தே அல்லவா கேட்கிறீர்கள்? எப்படி முடியும்? எனச் செல்லமாக கடிந்துகொண்டாராம். பிறகு அவரை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேவாலயத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். பங்குத் தந்தை கேட்டுக்கொண்டபடி, விக்ரம் சாராபாயும் அவரது குழுவினரும், ஞாயிற்றுக்கிழமை போனபோது பிரார்த்தனை நடந்துகொண்டிருந்திருக்கிறது. தந்தை பெரைரா பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருந்தவர் முடித்துவிட்டு, விக்ரம் சாராபாயை பக்கத்தில் அழைத்திருக்கிறார். இவர் அவர் அருகில் போய் நின்றவுடன், கணீரென்ற குரலில், ” பிள்ளைகளே இதோ ஒருவரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். பெயர் விக்ரம் சாராபாய், இவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத்தின் பலனைத்தான் நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இந்தத் தேவாலயம் உட்பட. இங்கேயுள்ள விளக்குகள் மின்சாரத்தால் எரிகின்றன, நான் உங்களிடம் உரையாடுவது தொழில்நுட்பத்தின் விந்தையில் உருவான ஒலிபெருக்கியின் உதவியால். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் தரமுடிகிறதென்றால் அதற்கும் அறிவியலே காரணம், பங்குத் தந்தையாகிய நான் என்ன செய்கிறேன்? உங்கள் நன்மைக்காகவும், உங்கள் சுபிட்ஷத்திற்காகவும், அமைதி வேண்டியும் பிரார்த்திக்கிறேன், நமது விக்ரம் சாராபாயும் அதைத்தான் செய்கிறார். அவர் நமக்கு மேலும் நல்லதைசெய்யவேண்டுமென்று நினைக்கிறார், ஒரு மாபெரும் அறிவியல் அர்ப்பணிப்பிற்காக நமது இல்லங்களைக் கேட்கிறார், அதற்கு அரசாங்கத்தின்மூலம் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமென உறுதி அளிக்கிறார். இப்போது சொல்லுங்கள் நமது இல்லங்களைக் கொடுக்கலாமா?” கூட்டத்தினரிடையே முழு அமைதி, எழுந்து நின்றவர்கள் ‘ஆமென்’ என்கிறார்கள். இன்றைக்கு அந்த இடம் விக்ரம்சாராபாயுடைய கனவுகளை மட்டுமல்ல, இந்தியாவின் விண்வெளிக்கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.
– அவர் பேசினதை அப்படியே வரி பிசகாமற் சொல்லுவேண்ணு நான் நினைக்கலை.
– இதிலே இன்னொரு நீதியும் இருக்கு, இங்கே மதமும் சரி விஞ்ஞானமும் சரி இரண்டுமே மக்களுக்கு நன்மைங்கிற குறிக்கோளில் இணைஞ்சிருக்கின்றன. மக்களுக்கு நன்மை செய்வதுதான் இவர்கள் நோக்கமென்றால், மதமும் விஞ்ஞானமும் மாத்திரமுமல்ல, மதமும் மதமுங்கூட இணைந்து பணியாற்றமுடியும். இப்படியொருவரை இந்திய ஜனாதிபதியா பார்க்கிறது, இதுதான் முதன் முறை.
« திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு மற்றவர்களின் உத்தி ஆளும் குணம், நமக்கோ சுலபமாக அடிமையாகும் குணம். அது இன்றளவும் தொடர்வது தமிழனின் சாபக்கேடு. ‘ஆண்டே’, ‘அண்ணே’, ‘தலைவரே’, ‘சார்’, ஐயா, ‘எஜமான்’ வரிசையில் இன்றைக்கு ‘அம்மா’ வையும் சேர்த்துக்கொண்டு, கைகட்டி, வாய்புதைத்து, உடலைக் குறுக்கிவாழ்வதென்பது, மற்ற இனத்தைவிட நம்மிடம் அதிகமாகிப் போன வயிற்றெரிச்சல் இப்புதினத்துக்கான காரணங்களில் ஒன்று. »
« என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும் »
ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதையை விரிவாக எழுதிய 2005ல் வெளிவந்த நீலக்கடல் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறேன்.
இளம் படைப்பாளிகள் முதல் மூத்த எழுத்தாளர்வரை தங்கள் எழுத்துக்குறித்த பெருமைகள் இருக்கவே செய்யும். எனக்கும் இருக்கிறது.
வாழும் காலத்தில் கிடைக்கிற ஆராதனைகள் பெரும்பாலும் நமக்கு வேண்டியவன் நம்ம குலம் , நம்ம கோத்திரம் அல்லது நாம் இன்றைக்கு மாலை போட்டால் நாளைக்கு நமக்கு அவன் மாலை போடுவான் என்கிற வணிக நியதிகளுக்கு, நீதிக்கு உட்பட்ட வை.
காலம் கையூட்டுவாங்காத நீதிபதி, விலைக்கு வாங்க முடியாதது. ஈவிரக்கமற்றது, அதன் தராசு துல்லியமானது, இந்தக் காலத்தின் தயவை நம்பி வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
கிராமத்தில் தந்தை மணியக்காரர் உறவினர்களெல்லாம் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் கர்ணம் ஆகவோ மணியம் ஆகவோ இருந்தார்கள். ஊரில் முதல் மெத்தைவைத்த வீடு எங்களுடையது. நஞ்செய் புன்செய் என செல்வாக்காக வாழ்ந்த குடும்பத்தில் கடன் காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. எனது தந்தையின் வாழ்க்கை ஒரு பாடம்.
ஒரு வெறியுடன் ஆரம்பித்த இளமை,கல்லூரியில் படிக்கிறபோது ட்யூஷன் சொல்லிகொடுத்தேன். புதுவையில் வருவாய் துறையில் எழுத்தராக பணிபுரிந்த போது காலையில் Alliance Française பிரெஞ்சு மொழி படிப்பேன், மாலையில் the Hindu நடராஜன் புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் நடத்திய கென்னடி டுட்டோரியலில் History Geography பாடம் எடுத்தேன். சென்னை சௌகார்பேட்டை யில் பேண்ட் பிட், சட்டை பிட்களை எடைக்கு வாங்கி வருவாய் துறை சக ஊழியர்களுக்கு விற்றிருக்கிறேன். புதுச்சேரியிலும் முன்னள் நீதிபதி அம்புரோஸ் பிள்ளைகளுக்கு , காந்திவீதியில் அவர் பெத்தி செமினேர் பள்ளிகருகிலிருந்த அவர் உறவினர் வீட்டு பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்திருக்கிறேன். வருவாய்துறை தேர்வில் கிடைத்த துணைத்தாசில்தார் உத்தியோகத்தை, எனது மாமியார்வீட்டு அண்டைவீடுக்காரரான திருநெல்வேலிக்காரர் லேபர் கமிஷனர் பாக்கியம் பிள்ளை புத்திமதியை மீறி உதற்விட்டு, ஏதொவொரு துணிச்சலில் பிரான்சுக்கு வந்தேன். இங்கும் ஆரம்ப நாட்கள் எளிமையானவை அல்ல, அந்த அனுபவங்களையும் ஒரு நூலாக வெளியிடலாம். நான் படித்திருந்த முதுகலை சமூகவியல் அங்கீகரிக்கப்பட இங்குள்ள பல்கலையில் DEUG சேரவேண்டியிருந்த து. எரிச்சலூட்ட பாதியில் வெளியேறி DPECF சேர்ந்தேன், இது Accountancy, commerce க்கு சமம், இதற்கிடையில் புதுச்சேரியில் இருக்கும் மனைவி பிள்ளைகள் ஏக்கம், வேலை தேட தூண்டியது, ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால், முதலில் உள்ளூர் நகரசபையில் கணக்கெழுதும் உத்தியோகம், இடையில் ஒருவருட ஆங்கிலம் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு டிப்ளோமா . சுதந்திர ஆக்ஜிஜன் தேவைப்பட சிறிய முதலீட்டில் வணிகம். 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இன்றைய நிகழ்காலம், எனது இறந்த காலத்தின் கொடை.
காலம் என்னை ஏமாற்றவில்லை. உழைப்பும், உண்மையும் போராட்டகுணமும் எனக்கு உதவி இருக்கின்றன. ஆம் நன்றும் தீதும் பிறர் தர வாரா.நீகலக்கடல் நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல எழுத்துக்கும் காலத்தை பெரிதாக நம்புகிறேன், காலமும் காலத்தையொத்த ஒன்றிரண்டு மனிதர்களும் நீதியைச் சரியாக வழங்குவாரகள் என்பதென் அசைக்கமுடியாத நம்பிக்கை. .காலத்தின் தீர்ப்பு எனக்குரிய நியாயத்தையும் உரிமையையும் இன்றுவரை உணர்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது,
இந்த நீலகடல் எடிட்செய்யப்படவேண்டும் , செம்மையான பதிப்பாக வெளிவரவேண்டுமென்ற என்ற எனது குறை தீர்ந்துள்ளது என்ற செய்தியை மட்டும் தற்போது தெரிவித்துக்கொள்கிறேன்.
நாகரத்தினம் கிருஷ்ணா
நீலக்கடல் நாவல் குறித்து …..
« உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் » – பிரபஞ்சன்
இன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகிய தமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்த தேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்று பலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும் ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற ‘சொர்க்கத்தில் ‘ தம் உயிரை பலி கொடுத்தார்கள். இந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும் வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும் மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக, உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணாகுணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.
சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.
“உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார்.
இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!
நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலான வற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.
வெயில், பனி, மழையென இயற்கையில் உறையும் காலம் தன் இறும்பூதலுக்குத் தேடும் உயிர், கவிஞன். அவனுக்குப் பிறப்புண்டு இறப்பில்லை ; தரிப்பதுண்டு மரிப்பதில்லை. உலகில் ஒவ்வொரு மொழியும் தமது உன்னதத்தை அறிய, மேன்மைபடுத்த, மெருகூட்ட தவமிருந்து பெற்ற, பெறும் பிள்ளை. உலகறிந்த கவிஞர்கள் சிலரை நினைவுகூர்ந்து பார்க்கிறேன் ஷேக்ஸ்பியர், பொதுலேர், தாகூர் என்கிற வரிசையில் பாரதியின் கவிதை நிலமும் பரந்தது, வளம்கொழித்த வண்டல்மண் பூமி, நஞ்செய் புஞ்செய் இரு வகைச் சாகுபடியையும் செய்து உயர்ந்த கவிதை மகசூலைத் தமிழுக்குப் படியளந்த நிலம். மகாகவி என்றொரு அடைமொழியை அவனாக வரித்துகொண்டவனில்லை. அவன் கவிதையில் தோய்ந்தவர்கள் சூட்டியபெயர். பாரதி என்ற சொல்லே போதும், சட்டென்று முண்டாசுடன் முன்னால் நிற்பான், அப்படியொரு ஆகிருதி, தேஜஸ். அவனுக்கெதற்கு அடைமொழிகள். கூழாங்கற்கள் மார்தட்டிக்கொள்ளட்டும். அவன் மலை, இமையமலை, சிகரங்களின் கொள்ளிடம். இயற்கை, சமயம், தேசியம், சமூகம், பெண், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், என எதையும் பாடியிருக்கிறான், எதுவாகவும் வாழ்ந்திருக்கிறான். இலக்கணத்திற்கு உள்ளே வெளியே இரண்டிலும் தேர்ந்தவன்.
உங்களில் பலரைப் போலவே தமிழில் திரும்பத் திரும்ப வாசிக்க நேர்வது பாரதி கவிதைகள். அப்படி வாசிக்கிறபோது அவருடைய வசன கவிதைகளில் ‘இன்பம்’ என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற இரண்டு கவிதைகள் கூடுதலதாக எனக்குச் சில செய்திகளை, சித்தாந்த உரையிலிட்டுக் கையளித்ததுபோன்ற உணர்வு :
‘தான்’ வாழ்க
எல்லா உயிரும் இன்ப மெய்துக.
எல்லா உடலும் நோய் தீர்க.
எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.
‘தான்’ வாழ்க.
அமுதம் எப்போதும் இன்பமாகுக.
விந்து ‘தான்’ ஆக தாயொருத்தியின் வயிற்றில் கருவாகிறது. சிசுவாகப் பிறக்கிறது. தொடக்கத்தில் தாயைக் கொண்டு ‘தான்’-ஐ அல்லது குழந்தையை அடையாளப்படுத்துகிறோம். பிறகு நமது சமூக நெறி, குழந்தையை அடையாளப்படுத்த தாய்மட்டும்போதாது எனக் கூற, பெற்ற குழந்தைக்கு உரிய தந்தையைக் காட்டி, ‘தான்’ அடையாளத்திற்கு வலு சேர்க்கிறாள் தாய். ஆக பெற்றோர்களைக் கொண்டு குழந்தைக்கு அல்லது இந்த ‘தான்’ -உக்கு முதல் அடையாளம் கிடைக்கிறது. தந்தை தாய் இருவரும் பிறகு ஆவணங்களைக்கொண்டும் குழந்தைக்கும் தங்களுக்குமுள்ள உறவை உறுதிசெய்கிறார்கள். தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குகிறது, இனி கல்வி, வேலை, பிற காரியங்கள் எனப் பலவற்றிர்க்கு வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டும். குழந்தை போகும் இடமெல்லாம் பெற்றோர்கள் உடன் சென்று இன்ன நிறம், சுருட்டை முடி, கன்னத்தில் மட்சம் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டுக்கொண்டிருக்க முடியாதில்லையா, எனவே தங்களுடைய குழந்தைக்கு ஒரு பெயரை (‘தான்’ – புறத்தோற்றத்திற்கு) சூட்டுகிறார்கள். உதாரணத்திற்குப் பாரதி என வைத்துக்கொள்வோம். பாரதி என்ற பெயரைக்கேட்டதும், பாரதியின் உறவினர்களுக்கு பாரதியின் பெற்றோர் மட்டுமல்ல, பாரதியின் தாத்தா பாட்டி பெயர்களெல்லாம் நினைவுக்கு வரும். நமக்கு பாரதியின் மனைவி செல்லம்மா பெயராவது நினைவுக்கு வருமா ? சொல்வதற்கில்லை. ஆனால் பாரதி என்றதும் நமக்கு முறுக்கிய மீசை, நெற்றியில் கூரைபோட்டிருக்கும் முண்டாசு, நேர்கொண்ட பார்வை, அடர்ந்த புருவங்கள், பொட்டு, புதுச்சேரி, எட்டயபுரம், திருவல்லிக்கேணி, பாரதிதாசன் எனப் பலவும் கண்முன்னே வந்துபோகும். ஐந்துவயதில் சுப்பிரமணியாக இருந்த ‘தான்’-உம் நாற்பது வயதில் திருவல்லிக்கேணியில் இறந்த பாரதிக்கும் பலவேறுபாடுகள், இருந்தும் ‘அவர்’தான்’ இவர்’ என்பதில் நமக்கு ஐயங்கள் இருப்பதில்லை, காரணம் பொதுவாக ஒவ்வொரு ‘தான்‘ -உடனும் ‘ஒரு தனித்துவம்’ நிழலாகத் தொடர்கிறது.
இதனை புரிந்துகொள்ள மேற்குலக மெய்யியல் சிந்தனையில் ஓர் புராணக் கதை உதாரணமுண்டு, உபயம் கிரேக்க நம்பிக்கைகள். இக்கிரேக்க கதையின்படி ஏதன்ஸ் நகரத்திற்கு மகாபாரத ஏகசக்கர கிராமத்து பகாசூரன் கதைப்போல ஒரு தலைவலியிருந்தது,அதன்படி ஒன்பதுவருடத்திற்கொருமுறை, மனித உடலும் எருதுவின் தலையும் கொண்ட மினோத்தோர்(le Minautaure) என்கிற அரக்கனுக்கு ஏழு இளம்பெண்களையும், ஏழு இளைஞர்களையும் உணவாக வழங்கவேண்டுமென்பது,ஏதன்ஸை வென்ற எதிரி மன்னனின் கட்டளை. தீசஸ் (Theseus)மனித விலங்கோடு யுத்தம் செய்ய ஏதன்ஸ் நகரத்திலிருந்து படகில் செல்ல வேண்டியிருக்கிறது.மிருகத்தைக் கொன்றபின் நாடுதிரும்பும் தீசஸ் படகு ஏதென்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்படுகிறது. ஆண்டுகள் பல கடக்கின்றன. படகுக்கு வயது கூட அவ்வப்போது பழுதாகும் பகுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் முற்றிலும் புதிய படகாக ஜொலிக்கிறது. உண்மையில் படகின் எந்த பாகமும் பல வருடங்களுக்கு முன்பு தீசஸ் எடுத்துச்சென்ற படகுக்கு உரியவை அல்ல. இருந்தும் ஏதன்ஸ் நகரைவிட்டு புறப்படும்போது படகு எத்தகைய பொலிவுடன் இருந்ததோ அப்படியே இருக்கிறது, தொடர்ந்து அப்படகை தீசஸ் படகென்றே மக்கள் நம்பினர். மனிதன் தீசஸ் படகுபோல மாற்றத்திற்கு உட்பட்டபோதிலும் அவன் சார்ந்த உண்மைகள் நிரந்தரமானவை, அழிவற்றவை. இளம் வயது பாரதிக்கும், தேசியக் கவிஞனாக இருந்த பாரதிக்கும் கால இடைவெளியில் அவன் உடலும், உள்ளமும் தீசஸ் படகுபோல புதுப்பிக்கப்பட்டவை எனினும் வெளியுலகிற்கு – உங்களுக்கு – எனக்கு பாரதி என்ற கவிஞனின் பிம்பம் நிரந்தரமானது அழிவற்றது.
ஆங்கிலத்தில் identity ( அடையாளம்) என்கிற வார்த்தையின் மூலம் இலத்தீன் ‘idem’, பொருள் : « அதுதான் இது ». ஒரு வகையில் அடையாளம் என்பது ‘தான்’ அன்றி வேறில்லை. சுருங்கக் கூறின் அடையாளப்படுத்துவதென்பது பெருங்கூட்டத்திலிருந்து ‘ தான்‘-ஐ பிரித்துணர்வது. ஒன்றை அடையாளப்படுத்த பல தனிமங்கள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் கூட்டாக அடையாளப்படுத்துவது அந்த ஒன்றையே : அது ‘தீசஸ் படகு’ அல்லது ‘பாரதி’ என்கிற உண்மை. ‘தான்‘ எத்தனை அவதாரம் எடுத்தால் என்ன, அது எப்போதுமே ‘தான்’ அன்றி வேறில்லை. அது ஒருபோதும் A =B ஆகமுடியாது.A=A ஆக மட்டுமே இருக்கமுடியும்.
இந்திய துணைக்கண்டத்தின் வேதமரபுகளில் ‘தான்’ என்ற சொல்லின் பூர்வாங்க வேரைத் தேடினால் ஒன்று, பரம்பொருள், முழுமுதல், ஆத்மா எனபொருள் தருகின்றன. பாரதி ‘ஆண், பெண் , மனிதர், தேவர்….’ என ஒரு பட்டியலிட்டு அனைத்தும் ஒன்று என்கிறான்.
‘தான்’ தெய்வம்
ஆண், பெண்,மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு – இவை அனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலையருவி,
குழல், கோமேதகம்- இவை அனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி – இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி – இவை ஒரு பொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-
இவை ஒரு பொருளின் பலத்தோற்றம்.
உள்ளதெல்லாம் ஒரு பொருள் ; ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் « தான் »
‘தான்’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.
அனைத்தயும் ஒன்றாகக் காண்பதன் மூலம் தன்னை பலவாக பார்க்கிறான், பாரதி. « முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய் புற வொன்றுடையாள் – இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற் சிந்தனை ஒன்றுடையாள் », எனப் பாடியவனும் அக்கவிஞன்தான். ஜீவராசிகள், பஞ்சபூதங்கள், தாவரங்கள் எல்லாம் ஒன்றே என்பதன் மூலம் பாரதி தெரிவிக்கின்ற உண்மை பாலுள் நெய்போல் ஞாலம் எங்கணுமூலமுதலுளது, என்ற உண்மை. நம்மில் அவனும் அவனில் நாமும் உய்த்திருக்கிற உண்மை, அவன் மரணத்தைவென்ற கவிஞன். ‘தான்’ தெய்வம். ‘தான்’ அமுதம், இறவாதது எனப்பாடியதற்கு வேறென்னபொருள் இருக்க முடியும் .
Tu Connais la Nouvelle? என்ற் பிரெஞ்சு அமைப்பு இலக்கிய ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் என்னுடைய இறந்த காலம் நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ‘Je vis dans le Passé’ பிரதியிலிருந்து தமாரி ( Tamari Tchabukaidze) என்கிற மேடை நாடகை நடிகையால் வாசிக்கப்பட்ட பகுதி
“………….கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து துய்ப்ளே சிலைவரை இருவருமாக நடந்து திரும்பியபின், பழைய கலங்கரை விளக்கிற்கெதிரே இருந்த சிமெண்ட் கட்டையில் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். இதுவரை சராசரி மனிதர்களைப் போலவும் வழிகாட்டிப்போலவும் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதிப்பூங்கா, ஆயி மண்டபம், கவர்னர் மாளிகை, இந்தோசீனா வங்கி யுகோ வங்கியாக மாறிய கதை கடற்கரை ஓரமிருந்த தேவாலயம்.என்று அறிமுகப்படுத்திக்கொண்டும் இடைக்கிடை குட்டிகுட்டிக் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்துக்கொண்டுமிருந்த மாதவன், இருவரும் உட்காரக் காத்திருந்ததுபோல, “ புதுச்சேரி பற்றி உன் அபிப்ராயமென்ன?” என்று கேட்டான்.
சிலநொடிகள் தாமத த்திற்குப் பின் பதில் வந்தது. – எந்தப் புதுச்சேரி பற்றி என்னுடைய கருத்தைசொல்ல. மேற்கின் எச்சங்களாகத் தங்கிப்போன வீதிகள், காலனி ஆதிக்க வரலாற்றுச்சின்னங்கள் ஆகியவற்றிற்கிடையே கடந்த நான்கு மணி நேரமாக நான் கண்ட கடற்கரை, ஆஸ்ரமம், இந்துக்கோவிலென்றிருக்கிற கிழக்குப் புதுச்சேரியைப் பற்றியா அல்லது பேருந்துநிலையம், காளான்கள் போன்ற புறநகர்பகுதிகள் என்றிருக்கும் மேற்குப் புதுச்சேரி பற்றியா? இவை இரண்டில் உனது தேர்வு எது? என்னைக்கேட்டால் காலையில் உன்வீட்டிற்கு வருவதற்கு முன்பாக பார்த்த மேற்கு புதுச்சேரி அழகு. அது இயற்கையாக இருக்கிறது. சரண்யா, மாதவன், ரங்கநாயகி அம்மா, ஈஸிசேரில் ஒரு அப்பா என்றிருக்கிற குடும்பத்தைப்போல. உன் அம்மாவையும், சரண்யாவையும் எங்கள் வீட்டிற்கு கடத்திப் போகலாமா என்றுபார்க்கிறேன். என் அம்மாவிற்கும் ரங்கநாயகி அம்மாள் பற்றி ஒரு மின்னஞ்சல் எழுதும் எண்ணமிருக்கிறது. அபிப்ராயம் புதுச்சேரி என்ற ஊரைப்பற்றியது என்றால் அவரவர் ஊர், அவரவருக்கு அழகு. உனக்குப் புதுச்சேரி அழகெனில். அமெரிக்கா ஜெஸிக்காவிற்கு அவள் பிறந்த பசடீனா அழகு. அந்தவகையில் பாரீஸ் எனக்கு அழகு. பாரீஸை மறந்துவிட்டு புதுச்சேரியியின் அழகைப்பேசு என்றால் ஆரோவில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பார்த்த பேருந்து நிலையம் அழகு, ஆட்டோவில் வந்தபோது விநோதமான குழல் வாத்தியமும், டமடம மேளமுமாக, கொத்தாக இலைகளை பிடித்துக்கொண்டு மஞ்சள் ஆடையில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியபடி நடந்த பெண்மணி அழகு. கோணிப்பையை விரித்து, வெற்றிலைச் சாறை துப்பிய வேகத்திலேயே கொத்தமல்லி புதினாவென்று கூவி விற்ற பெண்மணி அழகு, வெத்திலை எச்சிலை காலில் வாங்கிய மனிதர் முகம் சுளித்தது அழகு, அவர் மீது மோதிக்கொண்ட சிறுவன் அழகு, Tiens! எப்படி அதைச் சொல்ல மறந்தேன், கோவிலில் பார்த்த குழந்தைகூட அழகுதான். புதுச்சேரியைக் காண என்பதைக்காட்டிலும் புதுச்சேரி மனிதர்களைப் பார்க்க வந்தேன் என்று சொல்வதுதான் சரி. மனிதர்கள் மூலமாகத்தான் ஒரு நகரம் அழகைப் பெறுகிறது. உண்மையில் புதுச்சேரியைத் தேடி வந்தேன் என்று சொல்வது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும். பாரீசில் இல்லாத சில புதுச்சேரியில் இருக்கின்றன. புதுச்சேரியில் கிடைக்காத சில பாரீசில் கிடைக்கலாம். மனிதர்கள் பயணம் செய்யும் நோக்கமே இங்கே இல்லாதவை அங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அரவிந்தர் தோழி புதுச்சேரிக்கு வந்தது அவருக்குப் பாரீஸில் கிடைக்காத அரவிந்தரைத் தேடி. அரவிந்தரால் அவர் தோழிக்குப் புதுச்சேரி அழகு. எனக்கும் நான் தேடும் பொருள் கிடைக்கும் இடமெல்லாம் அழகுதான்……..
சரி உனக்கென்ன ஆரோவில் என்ற பெயர் மேல அப்படியொரு கோபம்.
– எங்க வீட்டுக் கூடத்தில் மாட்டியுள்ள படத்தில் இருக்கிற தாத்தாவைத் தெரியுமில்லையா? இந்தக் கோபம் அவர்கிட்டே இருந்து எனக்கு வந்திருக்கலாம். காந்தி அபிமானி. பிரிட்டிஷ் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவிற்கு இங்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்கிறவர். இங்கு போராட்டமென்று நடந்ததெல்லாம் கலவரம் என்பது அவர் கருத்து. தியாகிகள்னு சொல்லனும்னா ஆலைத் தொழிலாளிகளைத் தான் சொல்லனும் என்பார். அவருடைய பங்காளிவீட்டுல ஒரு குடும்பமே அதனாலப் பாதிக்கப்பட்டதென்கிற வருத்தம் அவருக்கு. நீ தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாய் எனில் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆரோவில்லில் இருக்கும் உங்களுடைய ஆட்கள் பலருக்கும் தாங்கள் உயர்ந்த இனமென்கிற எண்ணம் நிறைய. அக்கம்பக்கத்திலிருக்கிற ஏழைத் தமிழர்களை காலனிகால கூலிகளாகப் பார்க்கிறார்கள். காலனி ஆதிக்கத்தின்போது புதுச்சேரி நகரத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்கென உங்கள் மக்கள் ஒதுக்கிக்கொண்டார்கள். பிறகு அரவிந்தரோடு மிரா அல்ஃபஸ்ஸா சேர்ந்துகொள்ள பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆன்மீக ஜோடிக்கு, கேட்டவரத்தையெல்லாம் கொடுத்தது. வெள்ளையர் பகுதிகளெல்லாம் ஆஸ்ரமத்தின் கைக்கு வந்தன. இதன் அடுத்த கட்டமாகத்தான் ஆரோவில்லைப் பார்க்கவேண்டும். பெருகும் அபிமானிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஆஸ்ரமத்தை விரிவாக்க ஆரோவில், அரவிந்தரின் தோழிக்குத் தேவைப்பட்டது. உலகமெல்லாம ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிபடையில் சமயமில்லை, எல்லையில்லை, பொருள் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆரோவில்லில் தற்போதைய நிலமை என்ன? பணமில்லாதவர் உள்ளேநுழையமுடியாது. சுதந்திரம் சமத்துவம் என்ற உங்கள் தேசத்து வார்த்தைகளெல்லாம் இங்கும் உச்சரிக்கப்பட்டன. அரசியல் மார்க்ஸியம் எப்படியோ இந்த ஆன்மீக மார்க்ஸியம் கண்டது என்னைப் பொறுத்தவரை தோல்வி. சமத்துவத்தை நிலைநாட்ட ஆசைபட்டால் சுதந்திரத்தைத் துறக்கவேண்டும், சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவத்திற்கு வாய்ப்பேஇல்லை. இரண்டையும் இணைப்பது எப்படிச் சாத்தியம்? சமயம் பாமர மக்களை அடிமைப்படுத்த என்றால், ஆன்மீகம் அறிவாளிகளை அடிமைகொள்ள. ஜெஸிக்காவை சந்தித்ததுபோல பிரான்சுவாஸ், செலின், எதுவார், கிற்ஸ்டோபர் என ஆரோவில் மனிதர்களை சந்தித்துப் பேசு, ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவகையான ஆரோவில் கனவு இருப்பது புரியும். அதுபோல அக்கம்பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் பேசிப் பழகு. நீ புரிந்துகொள்ளவேண்டிய இன்னொன்று, ஆரோவிலியன்கள் எல்லோருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃப்ஸ்ஸாவுமல்ல. , வாழ்க்கையின் முதிர்ச்சியில், வயதின் முதுமையில், அவர்கள் கண்ட கனவுலக வீட்டின் கதவைத் தட்டுகிறவர்களெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்திராத மனிதர்களாக இருப்பது பெரும்பிரச்சினை. இங்கு வருகிறவர்கள் கர்ம யோகிகள் அல்ல, வாழ்க்கை போகிகள், சராசரி மனிதர்கள். தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். ஊர்கூடி தேர் இழுக்கிறபோது, மொத்தபேருக்கும் எந்த திசையில் தேர் போகவேண்டும், எங்கெங்கு ஆராதனைக்கு நிற்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். சில நல்லது நடந்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விடியல் நகரம் இன்னும் வைகறையைக்கூடகாணவில்லை….”
நாவலின் ஒரு பகுதியை அல்லது ஒரு அத்தியாயத்தை வாசிக்கவிருந்த ‘ தமாரி’ என்ற பெண்மணி நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து தாம் தேர்வு செய்த பகுதியை அனுப்பியிருந்தார். அப்பகுதி மறைந்த திரு கி. அ. சச்சிதானந்தம், நாவலின் தமிழ் பதிப்புப் பற்றிய தம்முடைய கட்டுரையில் சிலாகித்திருந்த பகுதி. இநாவலைக் குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக பின்னர் எழுதுகிறேன்.
30 மே அன்று வாசிக்கப்பட்ட பகுதி கீழே :
‘வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று’ எனப்படித்தப் பாரதியின் ‘காட்சி நினைவில் விரிந்தது. மழையின் எல்லாப் பரிணாமங்களும் பவானிக்குப் பிடித்தமானது: சினம், நிதானம், பாய்ச்சல், பரிவு, விழுமியம், குரூரம், ஆளுமை, வன்மம், விதுப்பு, உடல், மனம், விளிம்பு, நுனி, ஓரம், கூரை விழல்முனையின் குன்றிமணிக் காய்ப்புகள், இலைச் சரிவுகளில் எடுக்கும் ஓட்டம், நீர்க் காளான்களாய் நிலத்தில் இறங்குமுன் உள்ளங்கைகளில், உதடுகளில், பற்களில், கண்களில், கண்மடல்களில், இமை மயிர்களில், மார்பகங்களில், இதயத்தில் நிகழ்த்தும் அதன் செப்படி வித்தைகள், ஆனந்தப்படும் உடல், ஏற்படுத்தும் கிளர்ச்சி, அதன் முன்பின் காலங்கள், போதிக்கும் பாடங்கள், கற்றுத் தரும் அனுபவங்கள் எல்லாமே விருப்பமானது. அதை எதிர்கொள்ள, முடிந்ததைச் செய்திருக்கிறாள். ஒதுங்கிக் காத்திருந்து சிறுமியாய் ஓடும்நீரில் கப்பல் விட்டு அது கவிழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்; பதின்வயதில் பாவடை நாடாவை இறுக்கிக்கட்டிக்கொண்டு, வாசல் நீரில் தபதபவெனக் குதித்திருக்கிறாள், விலாப்புறங்களில் இடித்துக்கொண்டு கூத்தாடி இருக்கிறாள், தெறித்து உயரும் நீரை முகத்தில் வாங்கி இருக்கிறாள், ஒருசிலதுளிகள் சந்தடிச்சாக்கில், இவள் சட்டையின் அனுமதிப்பெற்று, முதுகுப்பரப்பிலும், மார்பிலுமாக இறங்கிப்பரவ, கிறங்கி இருக்கிறாள், பாட்டியுடைய இளஞ்சூட்டுக் கோபத்திற்கு அஞ்சியவளாக மூக்கால் அழுதபடி ஏறிவந்திருக்கிறாள், இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல தும்மிக்கொண்டு, அவள் அரவணைப்பில் வேதுபிடித்திருக்கிறாள். வாலைக்குமரியாய் மழைக்காதலைப் புரிந்து குடை விரிக்காமல் நிதானமாக நடந்து அதன் அன்பில் நனைந்திருக்கிறாள்; இன்றைக்கு உடல் தழுவும் அதன் தாபத்தைப் தெரிந்து, கலவிக்கு உடன்படுகிறாள், முடிவில் பரவசம் காண்கிறாள். இடியும் மின்னலுமாய் ஊடலை வெளிப்படுத்தும் மழையையும் எதிர்கொள்ளத் தெரிந்தவள், அவள் மண் அல்ல குன்று, பேய் மழையிற் கரைவதில்லை. சூறாவளி நண்பனுடன் சிநேகிதம் கொள்ளும் மழையை வெறுக்கிறாள். கெஞ்சுதலுடன் அந்த உறவு வேண்டாமே என்கிறாள். அதன் வெள்ளப் பிரவாகத்தில் நீச்சல் தெரிந்தவர்களுங்கூட மூழ்கடிக்கப் படுகிறார்களே என்கிற வருத்தம் அவளுக்கு.
புதுச்சேரியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும், மழைக்கு முன்னும் பின்னுமான காலங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கடற்கரையில் நின்றபடி, மழைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் வானத்தை ஏதோ புதையலைக் கண்டவர்போல அப்பாவின் விழிகளும், உடலும் வாங்கிக்கொள்வதும், அவர் கைவிரல்தொட்டு தன்னுள் பாயும் அனுபவ மின்சாரத்தில் சிறுமி பவானி அதிர்வதும் நிறைய நடந்திருக்கிறது. மழையை வரவேற்கும் அப்பா மேலுக்குச் சட்டை அணிவதில்லை. துண்டைக்கூட வீட்டில் போட்டுவிட்டுத் திறந்த மார்புடன் ஆவேசம் வந்தவர்போல இவளை இழுத்துக்கொண்டு நடப்பார். ‘பார் பார் மேலே பார்.. அங்கே… இதோ இந்தப்பக்கம் அடிவானில்….’ தவறவிட்டால் இனிக் கிடைக்காது என்பதுபோல. அதற்குப் பிறகு அவர் புலன்களின் காட்சித்தரவுகள், துணுக்குச் சித்திரங்களாகத் துளிர்விட்டு கொடிகளாகச் சுற்றிக்கொள்வதும், பல நேரங்களில் கிளைபரப்பி அசைவதும் அவளிடத்தில் நடந்திருக்கிறது. “மழை ஒரு மகத்தான ஜீவன். நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது, கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது, என அப்பா சொல்லிமுடித்துவிட்டு அடிவானத்தைப் பார்க்கவும், சோர்ந்திருக்கும் சூரியனை மேகங்கள் சூழ்ந்துகொள்ளும். பின்னர் அவற்றைக் காற்றின் கைகொண்டு சூரியன் வழித்துப்போடுவதும், அவ்விடத்தை வேறு மேகங்கள் ஆக்ரமிப்பதும் நடக்கும். சாம்பல் வண்ணத்தில் இருள் படர, பகல் தியானத்தில் ஆழ்ந்துவிடும். நெளிவுகளில் தன் உடல்காட்டி பகலின் மோனத்தை குலைக்கவென்று கடல் அலைகள் மூலம் முயற்சிக்கும், தொடர்ந்து நாசித் தமர்களில், ஈரத்துடனான கவிச்சி. தனது உடலைக் குறுக்கித் திணிப்பதுபோல பவானி உணரும்போது, ‘அப்பா வீட்டிற்குத் திரும்பலாமே’, என்பாள். அவர், இவளைத் திரும்பிப் பாராமலேயே, ‘ஸ்ஸ்ஸ்ஸ்..’.என்பார். ‘மழையில் நனைந்து பழகிக்கொள். பனிக்குளிருக்கும், அலைக்கும் காற்றுக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இல்லாத மகத்துவம் மழைச் சஞ்சீவியில் இருக்கிறது மகளே! வாழ்வியல்மேட்டையும் பள்ளத்தையும் சமதளத்தில் நிறுத்துவதற்கான வல்லமை நீருக்கும் அதன் தாயான மழைக்கு மட்டுமே உண்டு. நமது பிறப்பிற்கும், உயிர்வாழ்க்கைக்கும் மழையே ஆதாரம். வயிற்றுக்கு உணவு இல்லையென்றாற்கூடச் சக்கரவாகப் பறவைபோல எனக்கு மழையை உண்டு பசியாறமுடியும், நமது எல்லா வலிகளுக்கும் மழையே நிவாரணம்’, என்பார்.
கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை, ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாகச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை, போது போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடை விடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி, நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மழையிற்தான் எத்தனை விதம். தனது இறப்புக்கூட ஒரு மழை நாளில் நடைபெறவேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தி இருந்த அப்பாவை எரிக்க, ஈரவிறகிற்கு டின் டின்னாய் மண்ணெண்ணெய் தேவைப் பட்டதை, அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவரது உடலை எரிக்கவேண்டி இருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட மழையிற் கரைத்திருக்கலாம்.
அறையைவிட்டு வெளியில்வந்தாள், தென் திசையில் பார்வையின் முடிவில் நீள் வரிசையில் மரங்கள். என்னென்ன மரங்கள் அவை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவை அரியாங்குப்பம் ஆற்றின் கரை ஒட்டியும் ஒட்டாமலும் வளர்ந்து நிற்கும் தென்னை, பலா, மாமரங்கள். வெண்புள்ளிக் கூட்டமாய் மடையான்கள், கொக்குகள், நாரைகள். மேலாக ஐம்பதில் நரைத்த மனிதத்தலைபோல கறுத்தமேகம். இவள் பார்த்துக்கொண்டிருக்க சருகுகள் சிவ்வென்று மேலெழும்பி, சிட்டுக்குருவிகள்போலத் தட்டாமாலையாகச் சுற்றிவிட்டு மயக்கத்துடன் பூமியில் விழுகின்றன. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மரங்கள், இரண்டொருமுறை அசைந்துகொடுத்துவிட்டு, ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டதைப்போல நிறுத்திக்கொள்கின்றன. அடுத்து அதிகாலைநேரங்களில் கடற்கரைமணலில், கால் புதைய நடக்கிறபோது, உடலைச் சுற்றிக்கொள்ளுமே குளிர்ந்த காற்று, அப்படியான காற்று. இப்போது இடைக்கழி, கூடமென்று நடந்து வாசலுக்கு வந்திருக்கிறாள். காற்று ஓய்ந்து உடலில் இதமாய்ப் பரவும் வெப்பம். இடக்கையால் உலக்கை மாதிரி இடப்புறம் நிற்கிற தூணைப் பிடித்தாள். பிறகு இடதுகாலால், கவனமாக குதிகாலைப் பின்னே தள்ளி தூணைக் கெந்தி அணைத்தைப்படி வாசலூடாக மீண்டும் விண்ணைப் பார்க்கிறாள். காற்றில் வழுக்கும் முதல் நீர்முத்து, மீன்கொத்திபோலச் செங்குத்தாக அவள் கண்மணியைக் குறிவைத்து இமைமயிர்களில் விழுந்து ஊசலாடி முடிக்கும் முன்பு, சட்டென்று விழிமடல்களில், அடுத்தடுத்து குதித்து விளையாடுகிறது, த¨லையை சிலுப்பிக்கொள்ள நேரிடுகிறது, கிறக்கத்தில் வலது கையைக் குவித்து நீட்டுகிறாள், உள்ளங்கையில் நீர்த் துளி விழுகிறபோதெல்லாம் உடல் சிலிர்க்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பவானியின் விருப்பமானவைகள் பட்டியலில் காற்றும், தீயும், மண்ணும் ஆகாயமுங்கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கும், மழையேகூட காரணமாக இருக்கலாம். அப்பா இருந்திருந்தால் காரணம் சொல்லி இருப்பார். பிடிக்காதது அவைகளை மறந்து வாழ்வது. அவற்றின் கோபத்தோடும், சாந்தத்தோடும் வாழப்பழகி இருக்கிறாள். வானில் வேர் விடவும், மண்ணில் கிளை பரப்பித் துழாவவும், காற்றைப் பருகவும், நீரைச் சுவாசிக்கவும், தீயில் விரல் நனைக்கவும் அவளுக்கு முடிகிறது. இலையுதிர்காலத்தில் பூக்களையும், கோடையில் மழையையும், எதிர்பார்க்கும் சாராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டு, அவற்றுக்கான குறியீடுகளுடன் தனது கதவைத் தட்டுகிறபொழுதெல்லாம் தாழ் திறக்கிறாள். நெஞ்சு பிசையப்பட சர்வமும் சிலிர்த்திருக்கிறாள். பிறரைப்போல நாம் இருப்பதில்லை என்பது இருக்கட்டும், சில நேரங்களில் நாமாகக் கூட நாம் இருப்பதில்லை. அதுதானே உண்மை. நேற்றுப் பாருங்களேன் ‘கா·ப்கா’ போலவே பாய்ச்சலிடும் குதிரை ஒன்றில் செவ்விந்தியனாகச் சவாரிசெய்கிறாள், அவனைப்போலவே அவளது தலையற்ற உடலைப் பார்க்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த பவானி இல்லை. இவள் வேறு.
– ‘மழையோடு இப்படி ஆட்டம்போடுவது, பிறகு இரவெல்லாம், மூக்கை உறிஞ்சியபடி தும்மிக்கொண்டு இருப்பது. நாளைக்கு பிரச்சினைகள் என்றால், கிழவி என்ன செய்வேன்’ -பாட்டி.
இச்சொற்களையும், வாக்கியத்தையும் நினைவு தெரிந்த நாளில் இருந்து கேட்டுக்கேட்டு பவானிக்கு அலுத்துவிட்டது.
– இப்படிப் புலம்புவதை விட்டாகணும். இல்லைண்ணா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீ வேண்டாமென்று சொல்லிட்டுப் புறப்பட்டுடுவேன்.
பாட்டியின் கண்களை, மறுகணம் கண்ணீர் மறைத்தது. ஒடுங்கிய கண்களின் இடநெருக்கடி காரணமாக ஒன்றிரண்டு துளிகள் சுருங்கிய முக வரிகளில் விழுந்து பரவின.
– அய்யோ பாட்டி! உன்னை விட்டுட்டு எங்கே போவேன். இறுகக் கட்டிகொண்டாள். தளர்ந்த உடலென்றாலும், அவளது, அன்பின் கதகதப்பு தனது உடலில் பரவட்டும் என்று காத்திருந்து, விலகிக்கொண்டாள். அவள் கண்களைத் துடைத்தாள்.
மெள்ள சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் ஈரப்பதத்துடன் திறந்துமூட, பற்களற்ற சூன்யத்தை ஒளிரும் கண்கள் நிரப்புகின்றன. இருகண்களிலும் சேர்ந்தாற்போல நீர்த்திரை. முந்தானையைத்தேடி அவள் கை அலைவதைக் கவனித்தாள். அவளை மீண்டும் அணைத்துக்கொண்டாள். பாட்டியின் கண்ணீர் இவளது கன்னத்தில், இவளது கண்ணீர் பாட்டியின் முகத்திலுமாகச் சங்கமித்து உதட்டினைத் தொட்டு கரித்தது. இடியும் மின்னலுமாக மழை இன்னமும் சடசடவென்று பெய்து கொண்டிருக்கிறது. வாசல் நிரம்பி, நீர்க் குமிழிகள் உண்டாவதும், விலகுவதும், உடைந்து தெறிப்பதுமாக இருக்க, பாட்டியை விலக்கிக்கொண்டு கவனிக்கிறாள்.
“இதில் யார்யாருக்கு எந்தக் குமிழி? படைப்பிலக்கணத்தின் விதிப்படி நான் தொடக்கம், உடைந்து தெறிக்கிற நீர்க்குமிழி பாட்டியாகவும் இருக்கலாம், பிறகு அங்கே அதோ அதுபாட்டுக்கு எனது கவனத்திற்படாமல் உடைந்து நீர்த்துப்போகிற குமிழிகளில் அப்பாவும் அம்மாவும் இருக்கலாம். தொடக்கமென்று நான் குறிப்பிட்ட குமிழி, பார்த்துக்கொண்டிருக்க விலகிப் போகிறது, எத்தனை தூரம் போகும்? வாழ்க்கையே விலகல் சார்ந்ததா? இந்தவீட்டையும், பாட்டியையும் விட்டுவிட்டு எப்படி?”
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த « Tu connais la nouvelle ? » என்கிற இலக்கிய அமைப்பு குறித்து எனக்கு நவம்பர் 2020 முன் பாக தெரியாது. பிரெஞ்சு தெரிந்த நண்பர்கள் இருப்பின் அவர்கள் அனுப்பிவைத்த கடிதத்தை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் என்னை அணுக இரண்டு காரணங்கள் ஒன்று அம்பை சிறுகதைகள் மொழி பெயர்ப்பில் எனது பங்களிப்பு, Short Edition ல் வெளிவந்த எனது சிறுகதைகள்.
நிகழ்ச்சி என்னை மையமாக வைத்து என்பதை மாற்றி தமிழை முன்வைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன். எனகுக் கிடைத்த விலாசம் தமிழுக்கும், பிரெஞ்சு மொழிக்கும் சொந்தம், என்பதால். இது விஷயத்தில் யாரை கலந்தாலோசிக்கலாம் என யாரை பங்கு பெறச் செய்யலாம் எனது நினைத்தபோது பேராசிரியர் பஞ்சாங்கம், திருவாளர்கள் மாலன், கண்ணன என்கிற பெயர்கள் நினைவுக்கு வந்தன.
அ. பேராசிரியர் க. பஞ்சாங்கம் தி. சு நடராஜன், அ.க.பெருமாள், தொ.மு பரமசிவம், நலங்கிள்ளி, லெனின் தங்கப்பா.பக்தவச்சல பாரதி வரிசையில் என் கவனத்தைபெற்ற தமிழறிஞர் அவர் எனக்கு நண்பர் என்பது அடுத்த கட்டம், இன்றுள்ள தமிழ் அறிஞர்களில் அவர், போற்றப்படவேண்டியவர்.தமிழ் தமிழினம் என பேசினால் மட்டும் போதாது எனவும், தன்னை பின் நிறுத்தி தமிழை முன் நிறுத்தும் அரிதான தமிழர்களில் ஒருவர். அவர் நூல்களை பட்டியலிட்டால் அல்லது தமிழைக் கேட்டால அடுக்கடுக்காக காரணங்களைச் சொல்லும்
ஆ. மாலன் என்கிற எழுத்தாளரை பத்திரிகையாளரை பல ஆண்டுகளாக அறிவேன். எனது கதை சொல்லலை மட்டுமே விரும்பி என்னை அணைத்துக்கோண்ட நண்பர். சிற்பி கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் கடந்த தமிழர்களை அழைத்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தபோது நண்பர் மலேசிய பேர்சிரியர் ஊடக வியலாளர மறைந்த திரு ரெ. கார்த்திகேசு – எழுத்தாளருடன் இணைந்து அம்மாநாட்டில் நானும் ஒரு சகவிருந்தாளியாக அழைக்கபடக் காரணமாக இருந்தவர், எனது சிறுகதையையும், கவிதைகளையும் சாகித்ய அகாதமி வெளியீடுகளில் இடம்பெறச் செய்தார். என் அனுபவத்தில் பதிலுக்கு இதுநாள்வரை எந்தவொரு புத்தக வெளியீட்டு விழாவிற்காகவேனும் ஆழைத்திருப்பேனா என்றால் இல்லை, அதை நேர் செய்யவேண்டுமென்கிற நன்றிக் கடனோடு அவரைக் கலந்தேன்.
இ. கண்ணன் பதிப்பாளர், நண்பர் என்பதைக் கடந்து பல நல்ல பிரெஞ்சு மொழி படைப்புகளை நியதிகளுக்கு உட்பட்டு பொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார் என்பது பிரதான காரணம். அடுத்து அம்பையின் மொழிபெயர்ப்பு பிரெஞ்சில் வருவதற்கு காலச்சுவடு முக்கியம் என்கிற நியாயமும் இருந்தது. எனவே இந்நிகழ்வில் இம்மூவரின் துணையோடு தமிழை முன்னிலைப்படுத்த என்ன செய்யலாம எனத் தொடர்பு கொண்டேன், எழுத்தாளர் நண்பர் நாஞ்சில் நாடனிடமும் இது குறித்து பேசினேன். விழா ஏற்பாட்டாளர்களுக்கு கொரோனா காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கொரோனா பிரச்சனை, மார்ச் மாத விழா ஏப்ரல், என தள்ளிக்கொண்டே போயிற்று. ஒரு கட்டத்தில் விழா நடத்துவதே கூட சந்தேகம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு திடீரென மே இறுதியில் என்றார்கள். வெளிப் பிரமுகர்வர்கள் கலந்துகொள்வதற்குப் பதிலாக மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி என்றார்கள். எனக்கு அதில் பழக்கமில்லை என்றதும் ஒரு புதுச்சேரியை அறிந்த பிரெஞ்சுப் பெண்மணியை Yanne Dimay என்பவரை ஏற்பாடு செய்தார்கள். தவிர தமிழ் இலக்கிய விழா பிரெஞ்சு மொழியில் நடைபெற்றது என்கிற அதிசயத்தையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
இரண்டு கிழமை, ஒவ்வொரு கிழமையும் ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் முதல் நாள் என்னையும் என்னுடன் கந்துகொண்ட பிரெஞ்சு எழுத்தாளரை பற்றிய அறிமுகம், இரண்டாம் நாள் எழுத்து ப்பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள், ஊர்கள், தமிழ்ச் சொற்களைக்கொண்டு சுருக்கமாக கதை சொல்லும் பயிற்சி, . மூன்றாம் தமிழ் நாட்டின் கலை, பண்பாடு, முக்கிய ஊர்கள் பற்றிய ஓளிப்படம் Dadier Sandman என்பவர் இதனை செய்தார். நான்காம நாள் La Compagnie Triloka வின் பரத நாட்டியம் ஐந்தாம் நாள் எனது நாவல்கள் Bavâni, l’avatar de Mata Hari (மாதா ஹரி) , Je vis dans le passé (இறந்த காலம்) நாவல்களிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன. வாசித்தவர் நாடக நடிகை Mlle Tamari என்பவர். இவர் நண்பர் வெ.சு நாயக்கர் மொழி பெயர்த்திருந்த முத்தொள்ளாயிரம், பேராசிரியர் மொழிபெயர்த்திருந்த பேராசிரியர் பஞ்சாங்கம், திரு தேவமைந்தன் ஆகியோரின் கவிதைகளையும் வாசித்தார். தமிழ் இலக்கியம் குறித்த எனது அரை சிறிய உரைக்குப் பிறகு சிறு கலந்துரையாடல், பின்னர் நமது சிறுகதைகளையும், பெண்படைப்பாளிகள் கவிதைகளையும் நாடக நடிகர்கள் வாசித்தார்கள். வாசித்தவர்களின் படங்கள் கீழே உள்ளன.
அண்மையில் பிரான்சு நாட்டில் நடந்த தமிழிலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினனாக கலந்துகொண்ட எனக்கு போக்குவரத்து செலவு, பதினைந்து நாட்கள் ஓட்டல் தங்கும் செலவுபோக சிறு தொகையைக் கையிலும் கொடுத்தார்கள். தங்கதுரை(அஜீத், சூர்யா ரஜனி வரிசையில் அவரும் தமிழக அரசாங்கத்தின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவியவர்தான், ஆனால் எனக்கு அவர்களையெல்லாம்விட இவர் பெரியவர்), « இப்பணம் தமிழுக்குரியதே அன்றி உன்னுடையதல்ல வென எனது கனவில் தெரிவித்தார். அவர் கூற்றில் நியாயம் இருந்தது. இந்த உபரித் தொகை உண்மையில் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் போகவேண்டிய தொகை என நினைத்து, பிரெஞ்சு இலக்கிய அமைப்பாளர்களிடம் தமிழ்நாடு முதல்மைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துவிடும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களோ எங்கள் கணக்கில் அப்படி எழுதமுடியாது , உங்களுக்கு கொடுக்கவேண்டும், கொடுக்கிறோம் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் எனக்கூற எனது வங்கிகணக்கில் அவர்கள் போட்ட தொகையில் ஒரு பாதியை (ஐம்பது ஆயிரம் ரூபாயை) தமிழ்நாடு அரசுக்கு வழங்கினேன். முதலில் மொத்த தொகையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கும் எண்ணமிருந்த து. புதுச்சேரிக்கும் நான் சொந்தமானவன், இடையில் இந்த மாறுதல். இதனைப் பதிவிட பல நாட்களாக தயங்கினேன். பஞ்சுபோன்ற நெருங்கிய நண்பர்களிடமும் பேசத் தயக்கம். ஏதோ ஒரு பேச்சில் பாரீசில் இருக்கும் நண்பர் அலென் ஆனந்தனுடன் பகிர்ந்துகொள்ள நேரிட்டது, பதிவிடுவது அவசியம் என்றார் அதனால் பிறரும் முன் வருவார்கள் என்றார். எனக்கும் சரியெனப் பட்டது, தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கும் உத்துதலை அளித்தவர் தங்கதுரை.
தங்கதுரை இரவு நேர பாதுகாவலர், அவருடைய 10 ஆயிரம் ரூபாய் நன்கொடைபற்றிய செய்தி பலரையும்போல என்னையும் வியப்பில் ஆழ்த்தியது, நெகிழவைத்த து. மனிதர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 10 வருடங்களுக்கு மேலாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், “எனக்கு யாரும் இந்த பணத்தைக் கொடுக்க கூறவில்லை. நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அதில் சிறுவன் ஒருவன் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்த செய்தி வந்தது. இதைப் பார்த்து எனக்கும் வழங்க வேண்டும் என்று தோன்றியது. » என்றார். அவருக்கு சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன் உந்துகோலோக இருந்ததுபோல, எனக்கு தங்கதுரை உந்துகோலாக இருந்தார். பத்தாயிரம் ரூபாய் அவருடைய ஒரு மாத ஊதியமாக இருக்கலாம் , இரவும் பகலும் உழைத்து, சம்பாதித்த பணம். தானும் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பசியாற வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார். இத்தொகை உண்மையில் பல கோடிக்குச் சமம். அம் மனிதரின் காலில் செய்தியை வாசித்த அன்று மானசீகமாக் விழுந்து வணங்கினேன்..
உகல் அரசியலோடு ஒப்பிடுகிறபோது. இந்திய அரசியலின் ஆரோக்கியம் கொரோனாவுக்கு நிகரான ஊழல் தொற்றால் நலிவடைந்திருக்கிறதென்பது வெள்ளிடை மலை. கொரோனாவுக்கு தடுப்பூசி உதலாம், நாளை மக்கள் இந்த தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டு ஆரோக்கிய வாழ்வில் சங்கமிக்கலாம், ஆனால் ஊழல் என்கிற பெருந்தொற்றில் உலக அளவில் அதிகம் பாதித்துள்ள இந்தியாவுக்கு விடுதலை எப்போது என்பது பதிலிறுக்க முடியாதகேள்வி.
எதிர்கட்சியாக இருக்கிறபோது, வேட்பாளர்களாக களத்தில் இறங்கும்றபோது ஏழைபாங்களர்களாக தோற்றம் தரும் நமது அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் முடிமன்னர் அரசியலை பின்பற்றும் வரலாறும் நமக்குப் புதிதல்ல. அப்படிப்பட்ட அவநம்பிக்கையிலேயே தமிழ் நாட்டின் புதிய திமுக அரசை நினைத்தேன். ஆனால் எண்ணத்திற்கு மாறாக மக்கள் நலனில் இவர்கள் காட்டும் அக்கறை இன்றைய தேதியில் சந்தோஷ மளிக்கிறது. கொரோனா பிரச்சனையை இந்த அரசு கையாளும் விதம் நம்பிக்கை அளிக்கிறது
இந்நிலையில் கொரோனா பேரிடர் சூழலை எதிர்கொள்ள அரசின் நிதியிருப்பு போதாத நிலையில் கொடைகள் பெறப்பட்டன. நல்லுள்ளம் கொண்ட பொருள் மிகுந்தவர் கள் அவற்றின் ரிஷிமூலம் நதிமூலம் முக்கியமல்ல மனமுவந்து கொடுக்கிறார்கள் என்பது முக்கியம். இவர்களைக் காட்டிலும் சாதாரண மக்களில் ஒரு சிலர் உதவ முன்வருவது வியப்பைத் தருகிறது., அநேகமாக உங்களில் பலர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவியிருக்கலாம், அதை என்னைப்போல பதிவிட தயங்கியிருக்கலாம். உடல் சந்தோஷத்திற்காக சில என்பது போல, மனச் சந்தோஷத்திற்காகவும் ஒன்றிரண்டு காரியங்களை நமக்குள் இருக்கிற இருத்தல் விழைகிறது, செய்கிறது. மனிதர்கூட்டத்தின் விளங்கிக்கொள்ள இயலாத அதிசயப் பண்புகளில் இதுவும் ஒன்று. மானுட அறிவியலில் புதைந்துள்ள இதுபோன்ற அனிச்சை செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் புரிந்துகொண்டதை பகிர்ந்துகொள்வதும், பிறமனிதர்களும் தம்மிடமுள்ள தங்கதுரைகளை தேட உதவும்..
மீண்டும் தமிழுக்கும், பிரெஞ்சுக்கும் , தங்கதுரைக்கும் எனது பணிவான நன்றிகள்.