Category Archives: nouvelles

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-2

ர்ர்.. கீச்..கீச்…

கதை பிறந்த கதை:

புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களில் மெத்தப்படித்தவர்கள் என்பவர்கள் மிகவும் சொற்பம். ஓர் ஐந்து விழுக்காட்டினர் பல்கலைக் கழகங்களிலும் வேறு முக்கிய அரசு பணிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களென்கிற பொது நீரோட்டத்தில் அதிகம் கலப்பதில்லை. பெண்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். 1985ல் பிரான்சுக்கு நான் வந்தபோது பெண்கள் அநேகரின் அதிகபட்ச படிப்பு பள்ளி இறுதிவகுப்பாக இருந்தது. அத்தி பூத்தாற்போல கல்லூரிக்குள் நுழைந்து இளங்கலை பட்டத்துடன் வெளிவந்த பெண்கள் ஒன்றிரண்டுபேர் எதிர்ப்படுவார்கள். இவர்களுக்கும் வெளிநாட்டுவாழ்க்கை சிறைவாழ்க்கையாகத்தான் முடிந்தது. பெரும்பாலானாவர்கள் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டிருப்பார்கள். சென்னை விமான நிலையம் தெரியும். ஏர் இந்தியாவின் புண்ணியத்தினால் பாம்பே, டில்லி விமான தளங்களில் காத்திருந்திருப்பார்கள். வேறு விமானங்களில் பயணம் செய்ய நேர்ந்தால் அதுவும் வாய்க்காது. அங்கிருந்து நேராக பிரான்சுநாட்டிற்கு வந்ததும் தங்கள் குடியிருப்பில் போய் அடைந்துவிடுவார்கள்.

முதல் ஒருவாரம் இந்தியாவில் பிறபெண்களுக்கு அமையாத வாழ்க்கை கிடைத்த சந்தோஷத்தில் தூக்கமின்றி அலைவார்கள், பெற்றோருக்கு போன் போட்டு மகிழ்வார்கள். இதற்குள் ஒன்றிரண்டு பிரெஞ்சு வார்த்தைகள் பழகியிருக்கும், அவர் இல்லை இப்பதான் கூர்ஸ் பண்ண போயிருக்கிறார்’, என்பார்கள். எல்லாம் இரண்டு வாரகாலம். பிறகு சமைத்துவிட்டு ஓய்ந்த நேரங்களில் தலைணையில் விழுந்து மாலை வரை அழுதுகொண்டிருப்பார்கள், அதாவது இப்புதிய சிறைக்குப் பழகிக்கொள்ளும் வரை. இவர்களுக்கு பொழுதுபோக்கு, வாகன வசதிகள் உள்ள குடும்பங்களில் கணவர் பிள்ளைகளோடு கடைகளுக்குப் போய் (மாதத்திற்கு ஒரு முறை) வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கிவருவது, கணவருக்குப் பிடித்த சமையலை இவரும் சாப்பிடுவதில் ஆரம்பித்து, அவருக்குப்பிடித்த நடிகர்களுக்கு இவரும் ரசிகையாவது; அவருக்கு வேண்டிய நண்பர்களை இவரும் உபசரிப்பது, அவர் சொல்லும் அசட்டு ஜோக்கை இவரும் ரசிப்பதென தொடரும். அவரவர் வசதிக்கேற்ப பரோலில் இந்தியா சென்று வர வாய்ப்பு அமையும். மீண்டும் விமான தளங்களுக்கிடையே பயணம், பெற்றோர்கள், பிரிவுகள் -சிறைவாசமென்கிற தொடர் சுற்றோட்டம் . இப்பெண்களைச் சந்திக்கிறபோதெல்லாம் இறக்கைகளை உதறி க்றீச் க்றீச்செனும் கூண்டில் அடைபட்ட கிளிகள் நினைவுக்கு வந்தன, எழுதினேன். குமுதம் -07-12-2000. இதழில் பிரசுரமானது.
———————————————————————————————————-

ர்ர்.. கீச்..கீச்…

வரவேற்பறையில் அந்தக் கிளி தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. ரஞ்சனி மூன்றாவது முறையாக அதனை அடக்கிவிட்டுவந்தாள். அவளின் குரல்போக்கில் ஏற்பட்டிருந்த இந்த திடீர்மாற்றத்தைக் கிளி உணர்ந்திருக்கவேண்டும். சத்தம் போடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவரை இப்படியில்லை. இன்றைக்குத்தான் இப்படி. ஏன்.. ? விடை தேட நேரமில்லை. சமயலறைக்குள் நுழைந்துவிட்டாள். காலையில் வேலைக்குச் சென்ற முரளிக்குக் காபியை கலந்து கொடுத்தவள், மறுபடியும் படுக்கைக்குச் சென்று, எழுந்திருக்க மனமில்லாமல், அந்தக் கிளியப் போலவே பிரான்சு வாழ்க்கையில் சோர்ந்தது நிஜம். ஆனால் கிளியைப் போல கிரீச்சிட முடியுமா என்ன ?

ர்ர்.. கீச் மறுபடியும் கிளியின் சத்தம். அவளுக்கு அது பரிச்சயமான குரல்தான். முரளிக்குப் பிறகு தினமும் கேட்டு கேட்டு அட்சரம் பிசகாமல் அவளோடு ஒட்டிக்கொண்ட குரல். இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி உடைந்து உருமாறி, சன்னமாய் அவளைச் சுற்றிவந்து அபயம் கேட்கிறது.

‘பசியோ ?.. ‘

வழக்கமாக இந்த நேரத்தில் எதுவும் கொடுத்துப் பழக்கமில்லை. வறவேற்பறையின் விளக்கைப் போட்டுவிட்டுக் கூண்டைப் பார்த்தாள். இவளைப் பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டதோ ? இருமுறை சிறகை உயர்த்திப் படபடவென உதறிக் கொண்டது. தலையை வளைத்து அலகினால் பாந்தமாக அடிவயிற்றைச் சொறிந்துவிட்டு இவளைப் பார்த்தது. இரண்டு கைகளையும் குவித்துக் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

சமயலறையில் இருந்த வாழைப்பழத்தின் சரிபாதியை உரித்து விள்ளலாக எடுத்து அலகைப் பிரித்துத் திணித்திடமுயல, கிளி முகத்தைத் திருப்பிக் கொண்டது, வேண்டாம் என்பது போல.

‘இங்க பாரு.. என்னால ஒங்கிட்ட மல்லு கட்ட முடியாது நாகமணி! சொன்னாக் கேட்டுக்கணும். இன்றைக்கு என்ன வந்தது உனக்கு ? சொல்லுடா.. ‘

உண்மையிலே நாகமணி-அவளது அந்தக் கிளி என்ன நினைத்ததோ ? ரஞ்சனியின் கைகளைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்க, அவள் வலுக்கட்டாயமாகக் கூண்டினுள் திணித்துவிட்டு மூடிவிட்டு வந்தாள்.

‘ர்ர்.. கீச் ‘ மறுபடியும் முனகல். அவளது உள்ளத்தை ரணப்படுத்துகின்றவகையில். அப்படியும் இருக்குமோ ? இந்தியாவிலிருந்து நிறையக் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விமானித்து இறங்கியவளுக்கு அனைத்துமே இவ்வளவு சீக்கிரம் கோடை மழையாய்ச் சோவென்று அடித்து ஓய்ந்துவிட்டது குறித்து அதிருப்தி. இந்த இரண்டு மாதத்தில் நாகமணியைப் போன்று அவளும் அந்த அப்பார்ட்மெண்டில் குறுக்கும் நெடுக்குமாக வலம் வரப் பழகிக் கொண்டாள்.

ஜனவரிமாதம் என்பதால் வீட்டில் ஹீட்டரால் கதகதப்பு அதிகமாக்கப்பட்டிருந்தது. அவளது மனநிலையில் ஜன்னல்களைத் திறந்துவைத்து அப்படியே உறைந்துபோக நினைத்தாள்.

மார்கழி மாதத்தில், காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளிக்க, தளும்பத் தளும்ப வாளியிற் தண்ணீரை எடுத்து, நைட்டியை நனைத்துக்கொண்டு வாசலுக்குக் வரும்போது,

‘ஏண்டி..! இன்னும் கொஞ்சம் விடியட்டும்னு காத்திருக்கக்கூடாதா ? என்ன அவசரம் ? அம்மா கேட்பாள். அவளுக்கு அவசரம்தான். பின்னே அவளது எதிர் வீட்டுத் தோழி நாகமணிக்கு முன்னால், எழுந்து கோலம் போட வேண்டாமா ? அதைபற்றிக் கல்லூரியில் அவளிடம் வன்பு செய்ய வேண்டாமா ?

எல்லாமே மளமளவென்று முடிந்தது. என்றைக்கும் போல அன்றைக்குப் புதுவை சென்று திரும்பிய அப்பா, காலைக் கழுவிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தவர், ஏதோ முகங்கொள்ளா சந்தோஷத்தில் இருப்பதாகப் பட்டது.

‘பார்வதி.. நம்ம ரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டார் வர்ராங்க. பையன் பிரான்சுல இருக்கான். ஏர் பிரான்சுல, ட்ரா·பிக் அஸிஸ்டெண்ட்டாம். நல்ல சம்பளம் அவங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கலை. பொண்ணு லட்சணமா, படிச்சவளா இருந்தாப் போதுமாம் ‘. அவர் சொல்லிக் கொண்டே போனார்.

வீட்டில் எவரும் எதுவும் பேசவில்லை, ரஞ்சனி உட்பட. பேசுவதற்கு என்ன இருக்கிறது ? இதோ இதோ.. என்று அந்த இதோவும் வந்துவிட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் இவளுக்கு வந்த வாழ்வுபற்றிதான் வீடு முழுக்கப் பேச்சு. தம்பி சரவணனில் தொடங்கி .. அப்பாவரை ஆளாளுக்கு உசுப்பேத்தி அப்போதே விமானத்தில் ஏற்றி அவளைப் பறக்க விட்டார்கள். அம்மா, அப்பா தம்பி சரவணன், தோழி நாகமணி, மொட்டை மாடி, முக்குட்டுப் பிள்ளையார், செவலைப்பசு, உறித் தயிர் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்லனும்ணா.. அவளை என்னவோ செய்தது. இவளை வழி அனுப்புவதற்கு எல்லோருமே தயார் நிலையில். இதுதான் ‘நிஜம் ‘ என்று அறிய வந்தபோது, முதன் முறையாக ரஞ்சனி கதவை அடைத்துக் கொண்டு அழுதாள்.

மறுநாள் தோழி நாகமணி அவளைத் தேடிவந்தபோது, கையோடு அவள் வளர்த்தக் கிளியையும் கூண்டோடு கொண்டுவந்தாள்.

‘ரஞ்சனி என்னை மறந்துடாதடி. உனக்காகத்தான் இதனைக் கொண்டுவந்தேன். இதுக்குப் பேர் என்ன தெரியுமா ? நாமணின்னு வச்சுக்கோ. அப்பத்தான் என்னை மறக்கமாட்ட.. ‘

ரஞ்சனி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் தன் தோழியைக் கட்டிக் கொண்டாள். கூண்டினைப் பார்த்தாள். உள்ளே பவள மூக்கும், குறுகுறு கண்களுமாய் அவளைப் பார்த்து கிளி சந்தோஷப்பட்டது.

அதற்குப் பிறகு சிரமமெல்லாம் அவளது புதிய கணவன் முரளிக்குத்தான். டிராவல் ஏஜென்சியைப்பார்த்துக் கிளிக்கும் பயண ஏற்பாடுகள் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இதோ பிரான்சுக்கு வந்து இரண்டு மாதங்கள் கரைந்து போயிருந்தன. கேட்ட, சொல்லப்பட்ட, வளர்த்துக் கொண்ட கனவுகள் அனைத்தும் அரிதாரத்தைக் கலைத்துக் கொண்டன. காலை ஆறுமணிக்குச் சென்று மாலை ஆறு மணிக்குத் திரும்பும் முரளியைத் தவிர்த்து, கிளியைப் போலவே சுகங்கள் ஊட்டபட்டு, சிறகினை வெட்டி என்ன வாழ்விது ? அலுப்பாகத்தானிருந்தது. வண்ண வண்ணமாயுடுத்தி இந்தியாவில் வலம் வந்ததுபோக, ஓவர் கோட்டில், எப்போதாவது இந்தியக்கடைகளுக்கும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கும் காரில் போய் வருவதும், அழைப்பின் பேரில் முரளியின் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதையும் தவிர்த்து வேறு என்ன கண்டாள் ? முரளியின் அன்பைக்கூட வாழைப்பழ விள்ளல்களாக அங்கீகரித்து, கொஞ்ச கொஞ்சமாக கூண்டு வாழ்க்கையை மனம் ஏற்றுக் கொண்டது.

ர்ர்..கீச்.கீச்..

நாகமணி மற்படியும் கீச்சிட்டது. அந்த அபயக் குரலின் பொருள் ரஞ்சனிக்குப் புரிந்தது. தீர்மானித்துவிட்டாள். ‘முரளி வரட்டும் ‘ அவள் சொல்வதை மறுக்கமாட்டான் என்பதால் மனதில் சந்தோஷம்.

‘நாகமணி.. ! நீயாவது கூடிய சீக்கிரம் நம்ம காத்த சுவாசிச்சு, நம்ம தண்ணிய குடிடா..! ‘

நாகமணிக்கு என்ன புரிந்ததோ, சந்தோஷமாக சிறகினைத் தூக்கி மறுபடியும் ‘ர்ர்ர்ர்…கீச்..கீச் ‘

***

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-1

எனக்குப்பிடித்த எனது சிறுகைதைகளில் முக்கியமானவற்றை மீண்டும் நண்பர்களுக்காக அவ்வப்போது மீள் பிரசுரம்செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

நாளைபோவேன்

கதை எழுந்த கதை:

காரணம் எதுவாயினும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஏக்கம் பின்னிரவு கனாக்களாக மட்டுமின்றி பகற்பொழுது உரையாடல்களில் கூட வந்துபோகும். ஒவ்வொரு நாளும்,  வந்ததற்கு ஏதோ கொஞ்சம் பணம் திரட்டிக்கொண்டு  ஊர் திரும்பிவிடமாட்டேனா? என அவர்கள் ஓயாமல் கூறியதை நீங்களும் காதுகொடுத்துக் கேட்டிருப்பீர்கள். தோட்டமென்ன, காணி என்ன? ஆற்றின் சலசலப்பு என்ன, ஆத்தா வைக்கும் குழம்பு ருசியென்ன என்கின்ற இவர்கள்தான் வந்த ஊரின் வசதிகள், தரும் சௌகரியங்கள், கூரையைப்பிரித்துக்கொட்டிய தளுக்கான வாழ்க்கை, பதியமிட்ட புதுநிலத்தில் தளிர்விடும் சந்ததிகள் இவற்றை பிரிய மனமின்றி சொந்த மண்ணுக்குத் திரும்புவதை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டு பின்னர் தம் மனதை சமாதானப்படுத்த புதுப்புதுக்காரணத்தை தேடிக்கொண்டிருப்பார்கள்.  இந்தியாவில் குக்கிராமமொன்றில் பிறந்து பொருளாதாரக் காரணத்திற்காகவே புலம்பெயந்த எனது வாழ்க்கையும் கனவும் அதற்கு விதிவிலக்கல்ல.

17-6-2001ல் கல்கியில் வெளியான இச்சிறுகதையை ஆனந்தவிகடன், கல்கி இருவருமே தேர்வு செய்திருந்தார்கள். கல்கியிடமிருந்து முதலில் பிரசுரத்திற்குத் தேர்வுசெய்து கடிதம் வந்ததால் விகடன் திரு. வீயெஸ்விக்கு உரிய நேரத்தில் கடிதம் எழுதி தவிர்க்கவேண்டியதாயிற்று.

நாளைபோவேன்

வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது.

இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக இவனுக்குள் தீர்மானம். இயற்கைகூட தமது காரியங்களை அட்டவணைபடுத்திச் சாதிக்கிறதோ? முன்னதாக் கணிக்கப்பட்டு காரியங்கள் ஆற்றப்படுவதில், எதிர்பார்த்தபடி நடைபெறுவதில் சுவாரஸ்யமில்லையென்பது அவன் எண்ணம். வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அத்தியாயங்களால்  எழுதப்படவேண்டும். சந்தோஷமோ துக்கமோ சொல்லிக்கொண்டு வரக்கூடாது. பிறப்பைப்போல இறப்பைப்போல ‘இன்றோ நாளையோ’ எனும் நிகழ்வுகளால் அமையவேண்டும்.

திரைச்சீலையை விலக்கி, சன்னலின் இரட்டைக் கண்ணாடியினூடே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்ற நிகழ்ச்சி.  இந்நிகழ்வில் இவனுக்குள் முரண்பாடு. எந்தத் திட்டமிடலை எதிர்க்கின்றானோ, அதனிடமே சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போகிறான். புறவாழ்க்கையை உடைத்துக்கொள்ள சிந்தனை அவசரப்படுவதும், அந்நேரங்களில் அதனை அமைதிப்படுத்துகிறவகையில், போதும் இந்த வாழ்க்கைபோதும் என தீர்மானிப்பான். இந்த பொம்மலாட்ட வாழ்வு வேண்டாம் இக்கயிற்றிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

வானிலிருந்து இரைச்சலாக சப்தம். அவன் உள்ளத்தைபோல இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் விமானம். அதனுடைய காரியங்கள்கூடத் திட்டமிடப்பட்டவை. புறப்படும் இடம், சேர இருக்கிற இடம், எடுத்துக்கொள்ளும் நேரம், பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என எல்லாமே. இரைச்சலிடும் இவ்விமானம் போகும் ஊர் எந்த ஊராக இருக்குமென்பதனை அவனுடைய பூகோள அறிவு விடை தராமலேயே  தேடுதல் சுவாரஸ்யத்தைக் கலைக்காமல் ஒளிந்துக்கொண்டது.

காலை ஆறுமணி. அதிகாலை விழிப்பினை ஐரோப்பா அறியாதது. இவன் மட்டும் விழித்திருந்தான். காலை ஐந்துமணியிலிருந்து சன்னலை ஒட்டி நிற்கிறான். அதிகாலையில் எழுந்திருக்கிற பழக்கம் அவனுக்கு இந்தியாவில்தான் வந்தது. மார்கழித் திங்களில் சின்னவயதில், காலையில் எழும்பி, கிணற்று நீரை வாளி வாளியாக உடம்பில் கொட்டிக்கொண்டு, பஜனை பாட ஓடியதும், பஜனையின் முடிவில் சுண்டலைத் தின்று சட்டையில் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவில் வந்து போயின. அன்றைக்கு பஜனைக்குக்கூடும் பையன்களில் யார் முந்திக்கொள்வதென்பதை முன்னிட்டு பிறக்கும் உற்சாகம் இன்றைக்கில்லை. என்றாலும், ஐரோப்பிய மண்ணிலும் காலையில் விழிப்பு பிறக்கிறது. தனதில்லத்தில் பிறர் காலை பத்து மணிவரை உறக்கத்தை அனுபவிப்பதைக் கண்டு எரிச்சலும் கோபமும் வருகிறது.  இந்த எரிச்சலும் கோபமும் எதிர்தரப்பிலுள்ள அந்தப் பிறருக்கும் உண்டு.

பிரேமா- அவன் மனைவி எழுந்தவுடன் அவளிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தான்.

சன்னலில் பார்க்கிற காட்சிகள் மாறவேண்டும். காகம் கரைதலைக்கேட்கவேண்டும். கூரைவேய்ந்த வீடுகளைக் கடந்துசெல்லும் புகை மூட்டத்தைக் காணவேண்டும். காலைப்பேருந்துகளில் ‘மார்க்கெட்’டிற்கு கொண்டுபோவதற்காக இறக்கப்படும் காய்கறி மூட்டைகளில் ‘தொபீர்’களைக் கேட்கவேண்டும். போர்வையை விலக்காமல் கலைந்த தலையும் கண்களில் தூக்கமுமாக டீக்கடைக்குள் நுழையும் ‘என் முகங்களைக்’ காணவேண்டும். மழையில் நனைந்த சோர்வை வெளிக்காட்டாமல், சாராயத்திற்கு வழி பிறந்ததென்ற தெம்பில் ரிக்ஷாவின் பெடல்களை அழுந்த மிதிக்கும் ‘என் கால்களைக்’ காணவேண்டும். தண்ணீரில்  நனைத்த விரல்களைக் சொடுக்கிக் காம்புகள் வலிக்காமல் கால் இடுக்கில் குவளையைத் தொற்றவைத்துப் பால் கறக்கிற ‘என் கைகள்’ வேண்டுமென சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஊரில் நிறையபேர் இருந்தனர். ஆனால் அதுதான் எப்போது? என்றைக்கு? நாளையா? நாளை மறுதினமா? அடுத்த மாதமா? அடுத்த வருடமா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்து எல்லாவற்றிலும் பிரம்மித்தது நிஜம். அந்தப் பிரம்மிப்பு இப்படித் தன்னை இவ்வளவு சீக்கிரம் குறுக்கிக்கொள்ளும் என்று அவன் நினைத்ததில்லை. தீர்மானித்துவிட்டான். இன்றைக்கு இதற்கொரு முடிவு கட்டியாகவேண்டும். ஸ்டீரியோவைத் திருப்பினான். சி.டியி யில் நித்யஸ்ரீ யின் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்ற பாடல். சிரித்துக்கொண்டான். பிரேமா எழுந்துவிட்டாள். கட்டிலைச்சரி சரி செய்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் கேட்பாள் என்னங்க கப்பூசீனாவா? ஹார்லிக்ஸா? இக்கேள்வியைக்கூட அவள் மாற்றினால் தேவலாம்.

பூசனிப்பூவும் கோலமுமில்லாமல் இங்கே மார்கழி விழித்துக்கொள்வதில் அவனுக்குள் கசப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இவனது வாரிசுகள் அறைகளில் “குளோஸ் ஆல் மை ஐஸ்” ஸோ அல்லது விட்னி ஹ¥ஸ்டனின், “மை லவ் ஈஸ் யுவர் லவ்”வோ ஒலிக்கத் தொடங்கும். இவன் தேடுகிற தருமபுரம் சுவாமிநாதனுக்குகோ, சின்ன மௌலானாவுக்கோ இங்கே இடமில்லை என்கிற்போது மனதுக்குள் புழுக்கம் கூடிவிடும்.

முகத்தைத் திருத்திக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள் அவன் மனைவி.

“பிரேமா! கொஞ்சம் சாக்லேட் அதிகமாகவிட்டு கப்புச்சீனோதான் கொண்டுவா, உன்னோட பேசணும்”

” உங்களுக்கு ஞாயிற்றுகிழமையானா இந்தியா ஞாபகம் வந்திடுமே. இன்றைக்கே இந்தியாவுக்குக் கிள்ம்பவேண்டும்னு காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு குதிப்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டதே?”

“அப்படியில்லை பேரேமா! இன்றைக்குத் தீர்மானமா இருக்கேன். இப்படி உட்கார்.”

” எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” சென்றவள் வங்கியிலிருந்து கடந்த மாத இறுதியில் வந்திருந்த நிலவரத் தாள்களை மேசையிற் பரப்பினாள்.

அவசர அவசரமாக அவற்றைப் புரட்டினான். எத்தனை முறை புரட்டினாலும் அதில் இருப்பதுதான் இருக்குமென்ற அடிப்படை உண்மையில் நம்பிக்கையற்றுப் புரட்டினான். எண்களும் பூஜ்ஜியங்களும் கண்ணாமூச்சி ஆடின.

இங்கே வந்த ஆரம்பத்தில் இந்தியப் பெரியவர்களைப் பார்த்து அவன் கேட்கிற கேள்வி:

“ஏங்க..! எப்படி இந்த ஊர்ல இருக்கறீங்க? ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நம்ம ஊருபோல வருமா?”

“என்ன செய்வது தம்பி? நம்முடைய தலைவிதி அது. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கணும்னுதான் வரோம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளைகள் இச்சூழலில் வளரும்போது, அவர்களோட நாமும் இங்க வாழவேண்டிய நிர்ப்பந்தம்.”

“இல்லைங்க.. அப்படிச்சொல்லாதீங்க! எனக்கு மட்டும் தேவையான பணம் கெடைச்சுதுன்னா ஊருக்குத் திரும்பிவிடுவேன்.”

பெரியவர் சிரித்தார்.

அவனுக்கு அந்தத் ‘தேவையானப் பணத்தை’ நிர்ணயிப்பதில்தான் சிக்கலே. வந்த புதிதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வரித்துக்கொண்டு ‘தேடுதலைத்’ தொடங்கியவன் இன்றுவரை நிறுத்தியபாடில்லை. வருடங்கள் கூடக்கூட அவன் மனதில் வரித்தத் தொகை தனது நீள அகலத்தை, பரிமாணத்தைக் கூட்டிக்கொண்டு உச்சுகொட்டியது. கைக்கெட்டிய சுகங்கள் அவனுக்குத் திகட்டவில்லை. பதிலாக இன்னும் இன்னும்.. என்ற ஏக்கத்தை வளர்த்தன.

வங்கித்தாள்களில் விடுபடமுடியாமல் தலையைச் சொறிந்துகொண்டான்.

“பிரேமா?”

“கூப்பிட்டீங்களா?”

“ஆமாம். நம்ம வங்கிக்காரனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும். இந்தியாவிலேயே இன்னுமொரு வீடோ அல்லது இங்கேயே இன்னுமொரு அப்பார்ட்மெண்ட்டோ வாங்கணும்.”

“அப்போ.. இந்தியாவுக்கு எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“இப்போதைக்கு இல்லை” சலித்துக்கொண்டு பதில் வந்தது.

அடுத்த ஞாயிற்றுகிழமையும் சன்னல் திரையை விலக்கி வைத்துக்கொண்டு, ஐரோப்பிய வாழ்க்கையைச் சாபமிடுவான். இந்தியாவிற்குப்போக நாள் குறிப்பான்.

——————————

அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக்கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

ருமேனியா நாட்டிலிருந்தும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புறப்பட்டு பரவலாக மேற்கு ஐரோப்பிய நாடுகளெங்கும் அலைந்து திரியும் நாடோடி மக்களின் பூர்வீகம் இந்தியா என்கிறார்கள். ஆக அவளுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது, நானொரு இந்தியன் என்பதால் மட்டுமல்ல, நானுமொரு நாடோடி என்பதால், அதாவது புலம் பெயர்கிறவர்களெல்லாம் நாடோடிகளெனில் நானும் நாடோடி என்கிற அடிப்படையில். இரண்டாவது முறையாக சிரிக்கிறாள். சிரிப்பில் ஒத்திகையின் பலன் வெளிப்படையாகவே தெரிகிறது. பாசாங்கில்லை. வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக துவங்கியிருக்கிற மே மாத வெக்கையைத் தணிக்கும் குளுமையும் அச்சிரிப்பில் இருக்கிறது. சிரிப்பில் ஓர் ஒழுங்கு. உதடுகள் சீராகப் பிரிந்து பற்களின் முன்வரிசையை, என்னை ஒரு புகைப்படக்காரனாகப் பாவித்து வெளிப்படுத்தியதைப்போல  உணர்ந்தேன். இளம்சிவப்பாக தெரிந்த அதரங்களின் மினுமினுப்பிலும் கன்னங்களின் இரு கதுப்புகளிலும் புத்தம் புதிய அச்சிரிப்பு மெல்லிய சவ்வுபோல ஒட்டியிருக்கிறது. அவளுடைய முதல் சிரிப்பும் கிட்டத்தட்ட இதுபோலத்தான் இருந்ததென்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். ஆனால் அச்சிரிப்பு அதற்கான விளைவை ஏற்படுத்த தவறிவிட்டதென்ற ஐயம் அவளுக்கு இருந்திருக்கவேண்டும். தலையை வணங்குவதுபோல தாழ்த்தியபோது, காத்திருந்ததுபோல விழுந்த தலைமுடியை விரல்தொட்டு காதுமடலுக்கும் தலைக்குமிடையே அனுப்பியபடி இரண்டாவது முறையாகச் சிரித்தபோது கூடுதலாக உதடுகள் பிரிகின்றன. இரு உதடுகளும் சேரும் இடங்கள் இம்முறை பின்னோக்கி இழுபட்டு மீண்டும் சுய நிலைக்கு வருகின்றன. சிரிப்பின் உபயோகம் என்னைப்போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். எதிராளியின் கவனத்தை தமக்கு இலாபம்தர தக்கதாக மாற்றவேண்டும். அவளுடைய எண்னமும் அதுவாகத்தான் இருக்கிறது. என்னை – என் கண்களை- குறிவைத்தே தாக்குதல் நிகழ்ந்தது. வேட்டையாடல் அநிச்சையாக நிகழ்ந்ததைப்போன்ற தோற்றம் தரினும் குறி தப்பவில்லை. குறிப்பொருள் வீழ்த்தப்பட்டது. வீழ்ந்திருந்தேன்.

கையை எனக்காக நீட்டியதும் சிரித்ததும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததா? கை நீட்டியது முதலிலும் சிரிப்பு இரண்டாவதுமாக நிகழ்ந்ததா? அல்லது சிரிப்புக்குப் பின் கையை எனக்காக நீட்டினாளா? என்ற கேள்விகள் எனக்குள் தேவையில்லாமல் ஒன்றன் பின்னொன்றாக தொடர்கின்றன. அவள் சிரிப்பினையும் நீண்டிருக்கிற அவள் கையையும் கவனியாதவன்போல நடந்துகொள்கிறேன். அதற்கான காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று  அப்பெண்ணை நான் அலட்சியம் செய்கிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றொன்று அதன் மூலம் அவளுடைய உடல்மொழியை நிராகரிப்பதும் வாய் திறந்து பேசவைப்பதுமென்ற எனது எதிர்பார்ப்பு. எனவே அவளுடை இவ்விளையாட்டில் எனக்குப் பற்றில்லை என்பதுபோல நடந்துகொள்கிறேன். எனது மனதைப் படித்தவைபோல ஸ்டியரிங்கில் விரல்கள் ஏற்ற இறக்கத்துடன் தாளமிட ஆரம்பிக்கின்றன. பெண்ணிடமிருந்த கொத்தாகப் பறித்த எனது பார்வையையை  வெப்பத்தில் நனைத்து சிக்னல் விளக்கின் மீதி பதியமிடுகிறேன். அவளிடம் நெருக்கடியொன்றை ஏற்படுத்திய குரூரத்துடன் மனம் குதூகலிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து பதட்டத்துடன், தற்காலிக மகிழ்ச்சியை ஒதுக்கியவன் ஜாடையாக அவளைப் பார்க்கிறேன். இப்போது பிரச்சினைகள் எனக்கு. விளையாட்டென்றாலும் ஆண் ஜெயிக்கவில்லையென்றால் எப்படி? என்னிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்பதை வாய் திறந்து சொல்லட்டுமே. வெள்ளந்தியாக ஒரு சிரிப்பினை உதிர்த்து சுலபமாக எதிரியை வீழ்த்திவிடலாமென்ற நாடோடிப்பெண்ணின் திட்டத்தை முறியடிக்கவேண்டும்.

அவளிடத்தில் தொடர்ந்து பதிலில்லை. மென்மையான சிரிப்பும், கை நீட்டலும் போதுமென்று நினைத்திருக்கவேண்டும். பொறுமையின்றி ஒரு நொடி திரும்பிப்பார்த்தபொழுது அவள் தலையைக் குனிந்துகொண்டாள். தாமதித்தால் வேறு வாகனங்களை, வேறு நபர்களைத் தேடி போய்விடுவாளோ என்றும் தேவையின்றி ஒரு அச்சம். பெண்ணின் ஊமை கெஞ்சுதலுக்கு மசிவதில்லையென்பதில் திட்டவட்டமாக இருக்கிறேன். நொடிகள் நிமிடங்களாகப் ஊதிப்பெருக்கின்றன. மௌனத்தின் நீட்சி என்னவாக முடியக்கூடும், என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. நிலவிய அமைதியை குலைத்துவிடக்கூடாது என்பதுபோல இருவரும் மௌனத்தை கையிலெடுக்கிறோம். அதனைக் கலைப்பதில் அவள் முந்திக்கொண்டால் எப்படி நடந்து கொள்ளலாம், என்ன கூறலாம் என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை இருவர் பார்வையும் ஓசையற்ற சூன்யத்தில் முட்டிக்கொள்கின்றன, ஒருசிலவிநாடிகள் அசைவின்மைக்குப்பிறகு அவை மேய்ச்சலில் இறங்குகின்றன. ஒருவர் மற்றவரின் பலவீனத்தை துகிலுரிந்துவிடுவதென்று செயல்படுகிறோம். “பிச்சைக்காசு அதற்கு போயிட்டு இப்படி யோசிக்கிறான்?”, என்று அவளும்; “எதற்காக இந்த கழுதை ஊமை நாடகமாடுகிறது? வாயைத் திறந்து கேட்கவேண்டியதுதானே?”  என்று நானுமாக இருக்கிறோம்.

பரிதாபத்திற்குரிய அவளது செயல்பாடு, வாய் திறந்தால் வரவிருக்கிற சொற்கள் ஆக எதுவென்றாலும் அவற்றை சந்திப்பதென்ற முடிவோடுதான் இருக்கிறேன். என்னை அணுகிய விதமும், காட்டிய பணிவும், நீட்டிய கையும் கடந்த ஒரு சில நொடிகளில் அவளை ஓர் அடிமையாகவும், என்னை எஜமானாகவும் கற்பித்துக்கொள்ள தூண்டுகின்றன. அவள் இருப்பின் மீது ஒரு தற்காலிக உரிமையை ஏற்படுத்திக்கொள்கிறேன். பெண்ணின் உடல்மொழிக்குப் பொருத்தமான வகையில், சரியான தருணத்தில், எனது பின்னூட்டம் அமையவேண்டும். சிக்னல் வழக்கமான நேரத்தைத்தான் எடுத்துக்கொள்கிறதென்ற போதிலும் எனக்கு முடிவுறாமல் நீள்வதாகத் தோன்றுகிறது. அவ்வப்போது அவளைப் பார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. மீண்டும் அடுத்தடுத்து கேள்விகள், வரிசையாக கரும்பலகையில் எழுதபட்டு கையில் பிரம்புடன் முகமற்ற ஒருவர் வாசிக்க சொல்லி அவளைக் கேட்கிறார்: பிறந்தநாடு, நாடோடி வாழ்க்கை, யாசிக்கும் குணம், மௌனம், முகம், சமிக்கைகள்- வாய் திறந்தால் பிரெஞ்சில் அவள் உபயோகப்படுத்தவிருக்கிற சொற்கள்?  இதுபோன்ற பலவும் மின்னணு தகவற் பலகையில் வருவதுபோல கோர்வையாய் தொடர்கின்றன. அவள் வாய்திறந்தால் வரக்கூடிய சொற்களெல்லாம் ஏற்கனவே வேறொரு சாலையில், வோறொரு சிக்னலில் வாகனத்தை நிறுத்திய பொழுது கேட்டதுதான். எனினும் திரும்பவும் கைநீட்டும் குறியீட்டிற்கான பொருளை அவள் தெளிவுபடுத்திட வேண்டுமென்பதில் கறாராக இருக்கிறேன். .

காத்திருப்பது அநாவசியமாகப்பட்டது. ஏதோ அவளுக்காகவே சிக்னலும் அதற்கான விதிமுறைகளும், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் இயங்குவதுபோன்ற எண்ணம் மனதில் சிலுசிலுவென்ற பரவ, உடலொருமுறை அதிர்ந்து மீள்கிறது. சென்னையில் ஒரு எழுத்தாள நண்பரைபார்க்கப்போக, மதிய உணவுக்கு முதலமைச்சர் வீடு திரும்புகிறார் எனக்கூறி வாகனங்கள்  நிறுத்தபட்டதும், மற்றொரு ஆட்டோகாரர் (எதிர்கட்சி அனுதாபி) ஏக வசனத்தில்  பிறர்காதுபட அந்த முதலமைச்சரை திட்டிதீர்த்ததும் நினைவுக்கு வந்தது. எனது தரப்பில் அவளாக வாய்திறக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்த்திருந்த நியாயங்கள் பாலினத்தில் எனக்கு எதிர்த்திசையிலிருக்கிறவள் என்ற அடிப்படையிலும், அவள் வயது காரணமாகவும் குலையத் தொடங்கிய அதேவேளையில் உலகெங்கும் ஏதோஒருவகையில்  பிறரை எதிர்பார்க்கும் கைநீட்டல்கள் அதாவது கொடுக்கின்ற கைகள் மேலேயும் வாங்குகின்ற கைகள் கீழேயுமென காட்சிகள் ஒன்று இரண்டு, நூறு ஆயிரம்  லட்சமென என்னை சுற்றிலும் வலைப்பின்னல்களாக தொடர்கின்றன.

அவளுக்கும் எனக்குமிடையில் இடைவெளியென்று ஒன்றுமில்லை.  என்னை அவளிடத்தில் நிறுத்தி அவள் நடவடிக்கைகளை எனது சரீரத்தின் செயல்பாடாக முன்னிறுத்தி யோசித்தபோது அது உண்மைதானென்று புரிந்தது. அவ்வுண்மை அவளுக்கு முன்பே எனது மௌனத்தை கலைத்துக்கொள்வதிலுள்ள நியாயத்தை தெளிவுபடுத்தியது. முடிவுகள் காரண காரியங்களை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுக்கவா முடியும். நாடோடிப்பெண்ணுக்கும் எனக்கும் இடையில் விழுந்த திரையை விலக்குவதில் அவளுக்குள்ள பொறுப்பு எனக்கு முண்டு. இப்படி இருவருமாக பார்வைகளை சாதனங்களாகப் பாவித்து எவ்வளவு நிமிடங்கள் உரையாடமுடியும். முன்பின் அறிந்திறாத இரு மனிதப்பிறவிகளுக்கிடையேயான சங்கடங்களுள் தொடக்க உரையாடலுமொன்று என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையென்பதை நினைக்க வெட்கமாக இருந்தது. தவிர இதை நான்தான் தொடங்க வேண்டும். தராசு முள் சமூகத்தில் ஓரவஞ்சனையாக என்தரப்பை சார்ந்திருக்கிறது. அதை நிரூபிக்க எனக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறபொழுது எதற்காக விட்டுகொடுப்பானேன்? நாடோடிப்பெண்ணின் நீட்டிய கைக்கும் எனது உடலுக்குமுள்ள இடைவெளி ஒரு சில அங்குலங்கள் இருக்கலாம் அல்லது தோராயமாக ஓர் அளவினைக் குறிப்பிடவேண்டுமானால், அவள் சுவாசம் என்னைத் தொடும் தூரத்தில் என்று வைத்துக்கொள்ளலாம். இக் குறுகிய இடைவெளியைவைத்துக்கொண்டு இத்தனை நேரம் அமைதியாக இருந்தததே ஆச்சரியம், வியப்புக்குரிய விடயம். யோசித்துப்பாருங்கள். கைநீட்டுகிற நபரை கூடுமானவரை தவிர்க்க  எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் நமது பார்வையிலிருந்து தவிர்க்க நினைக்கிறோமா இல்லையா? எனக்கும் அது உரைத்திருக்கவேண்டும் எனது சட்டைப் பையை துழாவி முடித்து பர்ஸ் எடுப்பதுபோல பாவனை செய்கிறேன். எனது தேடலுக்கிடையிலும், அவள் வாய்திறந்து என்னிடம் பிச்சை கேட்கவேண்டுமென்கிற இளக்காரமான எதிர்பார்ப்பு. எனது தேடல் அவளுக்கு தெம்பூட்டியிருக்கவேண்டும், வாய் திறப்பதுபோலிருந்தது, குரல் வெளிவரவில்லை, கட்டைவிரலால் ஆட்காட்டிவிரலைத் தொட்டு சுண்டியவளாய், அவளுக்குத்தேவை ஒன்றிரண்டு நாணயமென குறிப்பால் உணர்த்துகிறாள்.

நாடோடி பெண்ணிடம் தோற்றுவிட்டேன் என்பது புரிந்தது.  என்ன நடக்கவிருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டவள்போல இப்போது மெல்ல சிரிக்கிறாள். விரும்பினால் கொடு, விருப்பம் இல்லையென்றால் இல்லையென்று சொல்லு, அடுத்த வாகனத்தைப்பார்க்கிறேன் என்பது போலத்தான் அவளது அடுத்த பார்வையும் இருக்கிறது. எனது பொல்லாத நேரம் சில்லறை நாணயங்களென்று எதுவுமில்லை. சட்டைப்பை சுத்தமாகத் துடைக்கபட்டிருந்தது. என்னிடம் காசில்லை, போவென்று சொல்லிவிடலாமா? போயும் போயும் ஓர் இந்தியனிடம் கேட்டேன் பார் என அவள் நினைத்திடக்கூடாது. ஏதோ ஒட்டுமொத்த இந்தியர்களின் மரியாதைக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று நினைப்பு. சபித்தபடி  ஐந்து யூரோ தாளை அவள் கையில் வைத்தேன். புறப்பட இருந்தவளிடம், “கொஞ்சம் பொறு நாமெல்லால் ஒர் இனம் தெரியுமா?”, என்றேன். அவள் விழித்தபடி நிற்கிறாள். தொடர்ந்து பேசினேன்: “அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.”. காதில் வாங்கினாளா என்று தெரியவில்லை. அவளது முழுக்கவனமும் அடுத்த வாகனத்தின் மீதிருந்தது.

————————————————–

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

இதற்கு முன்பும் தோல்விகளை மகா சன்னிதானம் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம்முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர்  இப்பொழுது சாட்டையை கையிலெடுக்க பயம். சாட்டையைக் கையிலெடுத்து பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில், ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்ந்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர் இறக்கப்பட்டது குறித்த கவலைகளோடு வாரிசுகளின் பார்வையில் தெறிக்கிற கோபமும், துச்சமும் வேறு கழுத்தை அன்றாடம் நெறிக்கின்றன.

எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. பூஜ்யத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாதுர்யமும் சவடாலும் இருபதாம் நூற்றாண்டிற்குத் தோதான ஆசாமியென்ற பெயரை வாங்கித்தந்திருந்தது. தொட்டதெல்லாம் துலங்கிற்று. ஆடுபுலி ஆட்டத்தில், இவர் மட்டுமே புலி – பசித்த புலி. எத்தனை ஆடுகளை குரல்வளையைக் கடித்து உயிரை வாங்கியிருப்பார், இரத்தம் தோய காடு கரம்பைகளிலும், முட்புதர்களிடையேயும் இழுத்துச்சென்று வாய்கொள்ள கவ்வியும், பற்களால் கிழித்தும் மென்றும் விழுங்கியும் பசியாறியிருப்பார். கடைவாய்ப்பற்களில் நிணச்சாறு வழிய முகவாயை அடிமரத்தில் துடைத்திருப்பார், நிதானமாக அசைபோட்டிருப்பார். சோர்வுகளில்லை, கண் துஞ்சலில்லை. திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்,  வெற்றியின் களிப்பு உதட்டோரங்களில் ஆரம்பித்து பிடறி மயிர்க்கால்கள்வரை சிலுசிலுவென்று உணரப்பட்டிருக்கிறது. மலமிருக்க புதருக்குப்பின்னால் ஒதுங்கியது போக, கழிவறைக்குக்கூட தொண்டர்கள் பொன்வேய்ந்து அழகுபார்த்தார்கள். படகைச் செலுத்துவதில் சாமர்த்தியம் அதிகமென்று ஊர்மெச்சியது. எதிர் நீரோட்டத்திற்கும் சுழலுக்கும் வெகு எளிதாக தப்பித்ததுண்டு. காலம் பொல்லாதது. வழக்கம்போல இந்த ஆனையின் அடிசறுக்கவேண்டுமென்பதற்காக காரணங்களுக்கென காத்திருந்திருக்கிறது. ஆகப் படகு கரைதட்டிவிட்டது. காரணங்கள்: ஒன்றா இரண்டா? திசைகள்தோறும் இருக்கின்றன. இங்கே கொலையாளியும் கொலையுண்டவரும் ஒருவரே என்றால் நம்பவா முடியும்.

அழைப்பு மணி பொத்தானை நான்கு அழுத்தினார். தலையை படியவாரி, சந்தனப்பொட்டும் சாம்பல் வண்ண சபாரியுமாக எட்டிப்பார்த்த காரியதரிசி ‘கூப்பிட்டிங்களா! என்றார். சில நொடிகள் தம்மை ஏறிட்டுப்பார்ப்பதை காரியதரிசி சிலிர்ப்புடன் ஏற்றுக்கொண்டார். அச்சு அசலாக தாம் செல்லமாய் வளர்க்கும் நாயின் முகவாயைப் போலவே காரியதரிசியின் முகவாயும் இருப்பதாக ஒருமுறை கூறியிருந்தார். அவர் தலையை உயர்த்திய மாத்திரத்தில் அழைப்பின் காரணத்தை ஊகிந்திருந்த காரியதரிசி, ‘எதுவும் வரலீங்க. அம்மாவையும் கேட்டேன், இல்லைண்ணு சொன்னாங்க’, என்றார். ‘சரி நீ போ’ என்றதும்” காரியதரிசி தலையைத் தாழ்த்தி விடைபெற்றார். வெளியேறி கதவை மூடும் வேளை, ‘நில்லுய்யா! என்றார். காரியதரிசி நின்றார். ‘வா!’, என்றார். வந்தார். தனக்கும் அவருக்குமான இடைவெளி சாசுவதமானதென்பதைப்போல பாதங்களை யோசித்து எண்ணி நான்கடிகள் வைத்த காரியதரிசி, தோராயமாக தமது மனதிற்குள் கிழித்திருந்த எல்லைக்கோட்டுக்குள் நின்றார். “நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா?, அதட்டல்போல பிறந்த குரலுக்கு “ம்” என்ற முனகலைத் தொடர்ந்து காரியதரிசியின் தலை காற்றுக்கு ஆடும் கிளைபோல இரண்டொருமுறை அசைந்து கொடுத்தது. தொடர்ந்து, “பார்சலை நீதான் வாங்கணும். நேரே இங்கே கொண்டுவரணும், ஒருத்தர் கிட்டேயும் இதுபற்றி மூச்சுவிடக்கூடாது”, என்று கோர்வையாக வாக்கியங்களைக்கூறி அமைதியானதும், மறுபடியும் காரியதரிசியிடமிருந்து தலையாட்டல்கள். அடுத்து ‘நான் போகலாமா?’ என்ற கேள்வியையும், ‘நீ போகலாம்’ என்ற பதிலையும் இருவர் பார்வைகளும் நடத்தி முடித்தன. இவருடைய கட்டளையை மனதில் எழுதிக்கொண்டவராக கால்களை பின்வைத்து பவ்யமாக வணங்கி காரியதரிசி வெளியேற, கதவு மூடிக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. எதிரியிடம் பீடத்தை தொலைத்திருந்த தினம்.  அக்கறையுடன் அனுதாபம் தெரிவிக்கவந்தவர்களைக் காட்டிலும், மீசையில் மண் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்கவந்தவர்கள் அதிகம். எல்லோரும் புறப்பட்டுப்போனதும், இவரது பிரத்தியேக தொலைபேசிகளையெல்லாம் துண்டிக்கும் படி ஆணைபிறப்பித்துவிட்டு இவரது நெருங்கிய சகாவோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், காரியதரிசி தன்னுடைய செல்லிடபேசியை தூக்கிக்கொண்டுவந்தார். அமெரிக்காவிலிருந்து போன் என்றார். காரியதரிசியை வெளியிற் போகச்சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த நண்பரிடம், ‘என்னவென்று கேளேன்’- என்றார். வாங்கிய நண்பர் ஓரிரு நொடிகளுக்குப்பிறகு, ‘கடைசியா ஒரு லைசென்ஸ¤க்கு அரசாங்கத்திடம் சொல்லி ஏற்பாடு செஞ்சு கொடுத்தோமில்லையா, அந்த ஆள். உங்கக்கிட்ட மட்டும்தான் பேசுவாராம்.

‘உனக்குத் தெரியாத ரகசியமா? என்னன்னு நீயே விசாரிச்சுட்டு சொல்லு..”

தொலைபேசி உரையாடல்  உதடுகளில் ஏற்ற இறக்கங்களும், இடைக்கிடை சன்னமான வார்த்தைகளுமாக  நான்கைந்து நிமிடங்கள் நீடித்திருக்கக்கூடும். இவர் ஓரளவிற்கு யூகித்திருந்தார். இருந்தபோதிலும் நண்பர் சொல்லட்டுமென காத்திருந்தார். தொடர்பு துண்டிக்கப்படவும், நண்பர் இவரது திசைக்காய் திரும்பினார்.

– ‘ஏதோ அன்பளிப்பொன்று சென்னைக்கு வந்து சேர்ந்துட்டுதாம், வீட்டுக்கு எப்ப அனுப்பிவைக்கட்டுமென்று கேட்கிறார்கள்..

 

– எந்த எழவும் இப்போது வேண்டாமென்று சொல், ஏற்கனவே தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

– என்ன செய்வது நேற்றே அனுப்பியாச்சாம். உங்கள் துணைவியார் பெயருக்கு, வீட்டு முகவரிக்கு..

– போய்யா, போய் உன்வேலையைபாரு. போனைக்கூட ஒழுங்காக கையாளத் துப்பில்ல.

– அனுப்பிட்டேன்னு சொல்லும் போது என்ன பண்ணமுடியும்.

– இப்படி சொல்லி சொல்லியே, நீங்க.. போய்டுவீங்க.

 

– ஏதோ இந்த நிலமைக்கு நாங்கதான் காரணங்கிற மாதிரி பேசறீங்க

– நேற்றுவரை நீ இப்படி பேசினவனில்லை, இப்போ எங்கிருந்து ஒனக்கு தைரியம் வந்திருக்கு? சுண்டல் விற்றவனையெல்லாம் பக்கத்துலே உட்காரவெச்சன்பாரு.

– இப்படி எடுத்தெரிஞ்சு பேசறது நல்லா இல்லை.  நம்ம பிரச்சினைகள் சந்திக்கு வந்தா நாளைக்கு எல்லோருக்குந்தான் கேடு.

– இன்னும் என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கறே.

– நேரம் சரியில்லைன்னா, வார்த்தைகள் கூடவா யோசிக்காம வரணும். எங்களையெல்லாம் பகைச்சுகுகிட்டா உங்களுக்கு நல்லதில்லைன்னு சொல்லவந்தேன்.

– என்ன மிரட்டறியா? குரல்வளையை அறுத்து இங்கேயே புதைச்சுடுவேன், நாயே வெளியிலே போ

நண்பர் போய்விட்டார். போனாலும் வருவாரென்று இவருக்குத் தெரியும்.

அண்ணாந்து உட்தளத்தைப் பார்த்தார். உத்திரங்களையும் பிறவற்றையும் பலமுறை எண்ணியாயிற்று. இப்பொழுதெல்லாம் மேலே அண்ணாந்து பார்த்தாலே எண்ணத் தொடங்கிவிடுகிறார். விசாலானமான அறை, தரையில் கடப்பைக்கற்கள், இரத்தின கம்பளம். மெருகுக்குலையாமல் பாதுகாக்கப்படும் பொன்வேய்ந்த கட்டில்கள், செதுக்கு வேலைபாடுமிக்க நாற்காலிகள், அலங்கார மேசைகள் அவற்றின் வண்ணப் பூச்சில் தீப்பறியதுபோல வெள்ளித் தகடுகளாய் மினுங்குகிற குழாய் விளக்கின் ஒளி. அலங்காரமான கண்ணாடி அலமாரி,  உள்ளே வெள்ளியும் பொன்னுமாய் இழைத்து இழைத்து உருவாக்கியிருந்த விருதுகள் கேடயங்கள், ஒருகளித்த நிலையில் புத்தகங்கள். அலங்காரப் பொருட்கள், தவிட்டு நிறத்தில் சுவர், சுவரில் பூர்வாசிரமத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் நிழற்படம். அவ்வளவும் அலுத்திருந்தன.

கண்களில் பணிவும், ஈறுகடித்த பற்கள் தெரிய முக தரிசனத்திற்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் மனிதர்களை இரண்டு நாட்களுக்கு முன்புவரை சுமந்த வீடு. நடைவாசல் திறக்காதா, மகா சன்னிதானத்தின் பார்வை படாதா என்று பயபக்தியுடன் காத்திருந்த பக்தர்களில்லை. சலவை மணம் கிஞ்சித்தும் குறையாத ஆடைகளின் சலசலப்புகூட நிசப்தத்தைக் கு¨லைத்துவிடலாம் என்பதுபோல அச்சத்துடன் நிற்பார்கள். இவர் விழிப்பைக்கூட கலைத்து விடக்கூடாதென்பதுபோலவும் இவர் கால்களை நலன் விசாரிக்க வந்தவர்கள்போலவும் தரையையில் பாதியும் அவர் கால்களில் பாதியுமாக பார்வையை பங்கிட்டிருப்பார்கள். எழுந்தவர் தடுமாறி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். இந்த வயதிலும் பிறர் துணையின்றி அவரால் எல்லாம் செய்ய முடியும். ‘சோ’வென்று மழைபெய்து முடித்த நிலத்தில் இறுக்கமும், ஈரக்கசிவும் உடலில் இருக்கிறது, ஆனால் மனம் தான் நூலறுந்த பட்டம்போல நீரில் அமிழ்வதும் நிலத்தில் மோதுவதுமாக, இவர் துரத்தலுக்கு பிடிகொடுக்காமல் நழுவிச்செல்கிறது.

எப்பொழுதும் தலையை நாற்காலியில் அணைத்து சாய்ந்து உட்கார அவருக்குப் பிடிக்கும். பகல் நேரத்திலுங்கூட  அங்குள்ள அத்தனை மின்சார விளக்குகளும் பழுதின்றி முதல்நாள் ஜ்வலிப்புடன் எரியவேண்டும். பிரகாசத்தில் தொய்வு கூடாது, ஒளிநாக்குகள் விறைத்து நிற்கவேண்டும். அதைச் செவ்வனே செய்து முடிக்க திரும்பும் திசையெல்லாம் ஏவலாட்கள், சீடர்கள், நண்பர்கள், பிள்ளைகள். இனி ஒருவரும் வேண்டாம், விளக்குகள் உமிழும் ஒளியின் நிழலுட்பட. ஒளிகள் கடந்த கால அகங்காரங்களை, பெருமைகளை நினைவிற் கிளறி பெருமூச்சிடவைக்கின்றன.

கதவு மெள்ள திறப்பட்டிருக்கவேண்டும், முனகியது. மீண்டும் காரியதரிசி. தலைமட்டும் கதவிடுக்கில் சிக்கிக்கொண்டதுபோல நிற்கிறது. “ஐயா மணி அடிச்சீங்களா?’ காரியதரிசி.

– என்னய்யா வந்துச்சா?

– இல்லைங்க, வந்ததும் சொல்றேன். வேற ஏதாச்சும்?

– நீ கூட என்னை மறந்துட்டியா? இந்த நேரத்துலே நவதானிய கஞ்சிண்ணு ஒண்ணைக்கொடுப்பியெ இரண்டு நாளா என்ன ஆச்சு?

– நான் மறக்கலை. என்னாச்சுண்ணு வீட்டுலே கேட்கறேன்.

– கேட்கவேண்டாம் நீ போ.

தனிமை வேண்டியிருந்தது. தனிமையைச் கடைசியாக எப்போது சந்தித்தது? நினைவில்லை.  அந்திமாலையிலும், புலரும் காலையிலும் காணக்கூடிய பஞ்சுபோல காற்றில் அலைகிற இளம் இருள் யாருமற்ற அவரது தனிமைக்குப் பொருந்துகிறது. இந்த ஒற்றை இருப்பு இவராகத் தேர்வு செய்ததுதான். பாதகுறடுகளை கையிலேந்திநிற்கிற சேவகர்களையும், பல்லக்குப் பயணமும், பேரிகையின் அதிர்வும், முழவின் தும்..தும்மும் கசந்துவிட்டது. நான்கு சுவர்களுடனும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. கணக்கின்றி அவர் வாழ்நாளில் இந்த அறையையும் நாற்காலியையும் மேசையையும் உபயோகித்திருக்கின்றார், குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து மணிநேரமாவது அவைகளுடன் கழித்திருக்க வேண்டுமென மனதிற்குள் கணக்கைப்போட்டார். எஞ்சியிருக்கிற நாட்களையாவது அவைகளுடன் கழிக்கவேண்டும்.

அவ்வப்போது தலையை நிமிர்த்தி எதிரிலிருந்த சுவரைப் பார்க்கிறார், இவர் எதிரே சுவர் பவ்யமாக நிற்பதுபோலவும், இவர் பேசுவதைக்கேட்க தயார் என்பதுபோலவும் காதுகள் விடைக்க நிற்கிறது. பேசவும் செய்கிறார். கோர்வையாக இல்லையென்கிறபோதும் சொல்லவந்ததை இரண்டொரு சொற்களில் தெளிவு படுத்தமுடிகிறது. சுவர்களும் இவரது  பழம்பெருமைகளை அவற்றின் இழப்புகளைக் கேட்டு சோர்வின்றி தலையாட்டுகின்றன. சிற்சில நேரங்களில் அவரது ஒருதலை உரையாடல் முனகலாகவும் பின்னர் விசும்பலாகவும் தேங்கி நிற்கிறபோது, அத்தடையை உடைப்பதோ அல்லது குறைந்த பட்சம் சீண்டும் வழக்கமோ சுவர்களுக்கில்லையென்பது கூடுதல் சௌகரியம். பிறகு இருவரும் கருத்தொருமித்தவர்களாய் உரையாடலை துண்டித்துக்கொண்டு அவ்விடத்தில் நிசப்தத்தை இட்டு நிரப்பி விடுவார்கள்.

சிலவேளைகளில் இத்தனிமையை அநியாயமாக அவரற்ற பிறர் தன்மீது சுமத்தியதாகவும் உணர்வதுண்டு.  அதுபோன்ற தருணங்களில் அகத்தில் மார்பில் அறைந்துகொள்வார். அதன் விளைவாக புறத்தில் விழிகளில் நீர் தளும்புவதும் – ஒன்றிரண்டு நீர்முத்துகள் இரப்பை விளிம்பில் மயிற்கால்களை சுற்றிவந்து பின்னர் விழிமூலையில் தயங்கி தயங்கி இறங்கவும் செய்யும். இப்போதும் அது நிகழ்ந்தது. துண்டை எடுக்க கைமுனையவில்லை. மனதை சமாதானபடுத்த உயிர்ப்பின் தன்னிச்சையான இயக்கம் செய்யும் உதவி. அழுவதற்கும் கொடுப்பினை வேண்டும். மனம் வெக்கையில் அவிய விம்மி அழுவது அவர் வாழ்க்கையில் அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது.  ஏதோ நினைத்தவராய் நாற்காலியைவிட்டு எழுந்து அறைக்கதவு வரை மெல்ல மெல்ல நடந்து வந்துவிட்டார். கதவின் தாழ்ப்பாளை திறக்கப்போனவேளை, வேண்டாம் என்பதுபோல மீண்டும் நிதானமாக நாற்காலிபக்கம் திரும்பிவந்தார். வியப்பு. சரீரமும் ஆன்மாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லையோ? கடந்த இரண்டு நாட்களாக ஓர் அந்நியனைப்போல தனது செயல்பாடுகளை வேடிக்கைப் பார்க்கின்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர் கை பொம்மைபோல சில நேரங்களில் சீராட்டப்படுகிறார், பல நேரங்களில் கேட்பாரற்று கிடக்கிறார். காலத்திற்குக்கூட இவரிடம் வன்மமிருக்கவேண்டும், அதுகூட எஞ்சிய வாழ்நாளை கனவுகளிலும் நம்பிக்கைகளிலும் தோய்த்து அசைபோட பணித்துவிட்டு ஒளிந்துகொண்டது. எங்கேயாவது தொலைந்து போ என்று விட்டுவிட்டார். அதைக் கண்டுபிடித்து பரணி பாடவெல்லாம் இப்போதைக்கு இயலாது, சரீரத்தில் அதற்கான தெம்புமில்லை. இவர் வாழ்ந்ததுதான் வாழ்க்கை என பிறர் கற்பிதத்தில் ஜீவித்திருக்கிற கடந்தகால வாழ்க்கையின்  ஒவ்வொரு கணத்தையும் நினைவூட்டுகிற நிலவையும், நட்சத்திரங்களையும், ஆற்றின் பாய்ச்சலையும், பெருவெடிப்பையும், பெருநதியின் சுழலையும் மறக்க எத்தனிக்கிறார். இயலாதபோது அத்துவானக் காட்டில் தன்னைக் கொண்டுவந்த சக்திக்கு பெயரிடத் தெரியாமல் குழம்பினார். இக்கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் சூட்சமங்கொண்ட திறப்பு யாரிடத்தில் இருக்கும்? அவரது எதிர்கால இருப்பின் தலைவிதியை எழுதும் ஆற்றல் கிடைக்கவிருக்கும் திறப்பையும், அது கையில் கிடைக்கிற கால அலகினையும் பொறுத்தது. சுவரிலிருந்த சிங்கப்பூர் கடிகாரம் மணி பதினொன்றென அறிவித்தது. இரண்டு மணி நேரத்திற்குமேல் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூடிக்கிடக்கும் சன்னலை திறக்கலாமா? ஏசியை நிறுத்தி, கொஞ்சம் இயற்கை காற்றை சுவாசிக்கலாமென்ற எண்ணம் போயிற்று. ஒற்றை மனிதராக இவரது சுவாசத்தையே திரும்பவும் சுவாசிப்பதும், உள்ளிருக்கும் ஒவ்வொரு பொருளும் தத்தமக்கொரு வாசத்தை வாயிலடக்கி இவர்மீது துப்புவதும் எரிச்சலையும் அலுப்பையும் உடல் கொள்ள திணித்திருந்தது.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த காரியதரிசி தயங்கி நின்றார்.

– என்ன விஷயம்?

– டாக்டர் வந்திருக்கிறார்

– உள்ளே அனுப்பு.

– வாங்க டாக்டர், காலையிலே ஒன்பதுமணிக்கெல்லாம் வந்துடுவீங்களே இன்றைக்கு என்ன ஆச்சு?

– எதிர்பாராம ஒரு பிரச்சினை, வீட்டுக்குப் போன்பண்ணியிருந்தேனே?

– அப்படியா? இதற்கு முன்னாலே இப்படி பிரச்சினைகள் உங்களுக்கு வந்தததா ஞாபகமில்லை.

– மன்னிக்கணும், எனக்கு எப்போதும் நீங்கள் ஒரேமாதிரிதான், என்னை சந்தேகிக்கவேண்டாம். அப்படி எனக்கு சிக்கல்களென்றால் அவசரத்திற்கென இன்னும் இரண்டு டாக்டர்களை வச்சிருக்கீங்க. அப்படி இருக்கச்சே உங்களுக்கு  நான் தான் வரணுமென்று அடம்பிடிச்சா எப்படி? எல்லா நாட்களிலும் அது சாத்தியமா சொல்லுங்க. வாங்க வந்து இப்படி படுங்க. உடம்பைப் பற்றி சொல்லுங்க.

இவர் மௌனமாக இருந்தார். நாடி, இரத்தம் அழுத்தம் என்று ஆரம்பித்து வழக்கமான சோதனைகள் நடந்து முடிந்தன.

– உடம்பிலே எந்தக் குறையுமில்லை. வயதுக்குத் தகுந்த உடல்நிலைதான். ஆரோக்கியமென்றுதான் சொல்லணும்.

– டாக்டர் பக்கத்திலே வாங்க. எத்தனை வருடமா எனக்கு டாக்டரா  இருக்கீங்க, ஞாபகபடுத்தி சொல்ல முடியுமா?

– இதிலென்ன கஷ்டம் போன ஏப்ரலோட முப்பத்தெட்டு வருடங்கள் ஆகபோகுது.

– ஆமாம். முப்பத்தெட்டு வருடங்கள் ஆகுது. நீங்கள் டாக்டர் இல்லை. குடும்ப நண்பர் அதனாலே சொல்றேன். எங்கிட்டே இன்னொரு நோயிருக்கு, மருத்துவ பரிசோதனைகளோ, ஆய்வுக்கூட சோதனைகளோ கண்டறிவதற்கு சாத்தியமற்ற நோய். அந்த மலைப்பாம்பு என்னை கொஞ்சகொஞ்சமா விழுங்கி வருது. நேற்று ராத்திரி தலைமட்டும் தான் என்பதுபோல கனவு கண்டேன்.

– எனக்குப் புரியலை?

– புரியாது. அதற்கெல்லாம் மருத்துவபடிப்பு உதவவும் உதவாது. வாழ்க்கைதான் புரியவவைக்கணும். எனக்கே இப்பதான் புரிஞ்சுது, புரிஞ்சு என்ன புண்ணியம், ரொம்ப லேட்.

காரியதரிசி உள்ளேவந்தார்.

-என்னய்யா? டாக்டர் இருக்கும்போது உள்ளேவரக்கூடாதுண்ணு தெரியுமில்லையா?

– பார்சலொண்ணை எதிர்பார்த்திருந்தீங்களே வந்துட்டுது, அம்மா பேர்லேதான் இருக்குது, இப்போதான் கொடுத்துட்டுப் போனாங்க கையில் பிடித்துக் காட்டினான்.

– தூக்கி குப்பையிலே போடு.

– பிரிக்கவேண்டாமா?

– வேண்டாம்.

– சித்தே முன்னே ஏதோ நோயொண்ணு ரொம்பகாலமா இருக்குதுண்ணு சொன்னீங்களே, அதற்கான ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுட்டீங்கண்ணு சொல்லுங்க.

மருத்துவர் இங்கிதமற்று சிரித்தார். மகா சன்னிதானம் அமைதியானார். எதிரே சுவர் தமது காதுகளை விடைத்துக்கொண்டு, உமது புலம்பல்களை கேட்க தயாராக இருக்கிறேன் என்கிறது

மருத்துவரும் காரியதரிசியும் ஒருவர் பின்னொருவராக புறப்பட்டு போனதன் அடையாளமாக கதவு விசுக் விசுக்கென்று அசைந்து பின்னர் இறுக மூடிக்கொண்டது. சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்தார். சுவரை மீண்டும் பார்த்தார், ‘எனது பிறவி நோயை குணப்படுத்திட்டேன் தெரியுமா? என்றார்.  சுவர் சிரித்தது.

அன்றிரவு மறுபடியும் இவரது அந்தரங்க எண்ணிற்குப் போன் வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் கரகரவென்று ஒரு குரல். ஐயா பார்சலை பிரிச்சீங்களா? உள்ளே என்ன இருந்ததுண்ணு தெரியுமா? மர்லின்மன்றோவின் ஸ்கர்ட். ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்தோம். நீங்கள் செஞ்ச உதவிக்கு  ஏதோ எங்களாலான சின்ன அன்பளிப்பு..  மகா சன்னிதானத்தின் கையியிலிருந்து தொலைபேசி நழுவியிருந்தது.

நன்றி: காலச்சுவடு நவம்பர் 2011

——————————–