Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம் Sep. 22

 இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்

    1. உ.வே.சா

“தம்மின் தம்மக்கள் அறிவுடமையை” மருந்தாளுனர் பையன் மருத்துவர்; தாலுக்கா அலுவலக ஊழியர் மகன்  மாவட்ட ஆட்சியர்; எனப் பொருள்கொள்ளாமல் இரு வேறு காலத்தைச்சேர்ந்த ஒரு சமூகத்தின் சந்ததியினரை ஒப்பீடு செய்து பெருமிதம் கொள்ளுதல் என விளங்கிக்கொள்ளவேண்டும். .

தம்மின் தம்மக்கள் அறிவுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் நமக்களித்த பாரம்பரிய ஞானத்தை பட்டைத்தீட்டி, அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  தகவலை அனுப்புவது அல்லது பரப்புதல் என்பது உடனுக்குடன் நிகழ்வது. தகவலைக் குறைக்கவோ கூட்டவோ செய்யாமற் பெறுநரிடம் சேர்பிக்கவேண்டும். பெறுநர் சமகாலத்தவராக இருப்பார். மாறாக பாரம்பரிய அறிவை அடுத்தசந்ததியினருக்குக் கொண்டுபோக பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே, தகவல் பரப்புகை அனுப்புநர் பெறுநர் என்ற இரண்டு மனிதர்களின் பங்களிப்பினால் நடைபெறுகிறது. ஆனால் பாரம்பர்ய ஞானத்தைக் கையளிக்க மூவர் தேவைப்படுகின்றனர். முன்னோர்கள் விட்டுச்சென்றதைச் செழுமைப்படுத்தி பின்வரும் சந்ததியினருக்கு அளிக்கவேண்டுமென்பது அதன் வாய்பாடு. ஒகுஸ்த் கோந்த்’ (Auguste Compte) என்ற பிரெஞ்சு தத்துவவாதி ‘இறந்தவர்கள் உயிருள்ளவர்களை ஆள்கிறார்கள்” என்கிறார். நம்முடைய மரபுகளும், சம்பிரதாயங்களும், அரசியல் சட்டங்களும் பிறவும் இன்று நம்மிடையே இல்லாத, மனிதர்களால் எழுதப்பட்டவை. நேற்றைய தலைமுறைக்கு, அன்றையக் காலக்கட்டத்தில் எது உகந்ததோ அதை வாய் மொழியாகவும், எழுதியும் வைத்தனர். மரபு, வழக்கு, பாரம்பரியப் பெருமைகள், மூத்தோர்வாக்கு என்ற பெயரில் நம்மோடு நமது வாழ்க்கையோடு கலந்தவை அவை. மூதாதையர் சொத்து எனச்சொல்லப்படுவது ஒரு சமூகத்தை பொருத்த வரையில் மேற்கண்டவைகள்தான். நமது கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், தொல் பொருள் இலாக்காக்கள், அருங்காட்சியகங்கள், இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவை முன்னோர்கள் கையளித்த சொத்துகளுக்குண்டான ஆவணங்கள்.

மனிதர் வரலாற்றில் தொடக்கக்காலத்தில் ‘பாரம்பர்ய ஞானத்தை’ அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தார்மீகப்பொறுப்பு  ஒரு பக்கம் குருக்களிடமும், இன்னொருபக்கம் ஆட்சி, அதிகாரம் எனக் கோலோச்சியவர்களிடமும் இருந்தது:  மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், நாட்டாமைகள், குடும்பத்தலைவர்கள்  அதனைச் செய்தார்கள். பின்னர் அப்பொறுப்பை மதங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் எடுத்துக்கொண்டனர். அக்காலங்களில் மரபுகளும் நெறிகளும் கடவுளின்பேரால் திருத்தி எழுதப்பட்டன. மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சியும் அறிவியல் புரட்சியும் உள்ளேபுகுந்த பின் சமூகத்தின் மரபுகளையும் நெறிகளையும் சீர்தூக்கி எது சரி எது தப்பு என சொல்வதற்குண்டான அதிகாரத்தை ஜனநாயகத்தின் பேரால் மக்கள் எடுத்துக்கொண்டனர்..

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிர்வாணமாக காட்டில் தனது தேவைபொருட்டு  ஒற்றையாக  அலைந்த நேற்றைய மனிதனின் இன்றைய பரிணாம வளர்ச்சியில் முன்னோர் கையளித்த அறிவுக்கும் அனுபவத்திற்கும் பெரும் பங்குண்டு. இத் தொடரோட்டத்தை நடத்துபவர்கள் யார்? கல்வியாளர்கள், அறிவாளிகளென்று மொக்கையாக பதில் சொல்லலாமா? வெறும் கல்விமட்டுமே இந்த மாயத்தை நிகழ்த்திடத்தான் முடியுமா? படிப்பு, படிப்பின் முடிவில் ஒரு பட்டம், பின்னர் வேலை என்றக் கல்வி சூத்திரத்தில் நெய்யப்பட்ட இவ்வுலகில்  ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும் உழைப்பவர்கள் மிகவும் சொற்பம். இருந்தும் உ.வே சா. போல இரண்டொருவர் ‘பாரம்பர்ய ஞானத்தை’ அடுத்த தலைமுறைக்கு கையளிக்க பிடிவாதத்துடன் வண்டிபூட்டிக்கொண்டு அலையவே செய்கிறார்கள்.

ஒருநாளைக்கு 150 பறவைகளுக்கு 22 மனிதர்களுக்கு, பத்து விலங்குகளுக்கு  உதவிக்கொண்டிருக்கிறேனென எந்த மரமும் தினசரியில் அறிக்கை விடுவதில்லை. மானுடத்திற்குப் மடிபிச்சை அளித்தவனென்று துதிபாடிகளைக்கொண்டு தனக்குத்தானே விருது வழங்கிக்கொள்வதில்லை. காற்றைப்போல, ஒளியைப்போல தமது உயிர்வாழ்க்கையைப் பிறருக்கென்று அளித்து பிரபஞ்சத்தின் தொடரோட்டத்திற்கு தன் கடமையை ஆற்றிய நிறைவோடு மரம் தனது ஆயுளை ஒரு நாள் முடித்துக்கொள்கிறது. எதிர்காலத்தில் தமதில்லம் தமிழர்களால் இடிக்கப்படுமென்ற தீர்க்கதரிசனம் அவருக்கிருந்திருக்குமோ என்னவோ, ஆனால் தம்மின் தம்மக்கள் அறிவுடமைக்குறித்த கனவுகள் உ.வே.சா. விற்கு இருந்திருக்கலாம். ஆங்கில தினசரியில் இடிபடும் வீட்டைபார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உ.வே.சா. தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய பெரும்பணிக்கு நன்றிக்கடனாக நமக்கு எது சாத்தியமோ அதைச் செய்திருக்கிறோம்.

 2. அப்துல் ஹக்கீம்

கேட்பவர்களிடம் வயது நினவிலில்லை,  தோராயமாக ஐம்பது அல்லது அறுபது வயதிருக்கலாம் என்கிறார், ஆப்கானிஸ்தானத்தின் காந்தகார் பிரதேசத்தில் அலைந்துகொண்டிருக்கும் இம்மனிதர். அவரது தொழில் ஆபத்தான இடங்களில் கிடக்கிற மனித உடல்களை மீட்டெடுத்தல். பிணங்கள் தலிபான்களாகவும் இருக்கலாம், மேற்கத்தியர்கள் அல்லது அமெரிக்கர்களாகவும் இருக்கலாம். மேற்கத்திய வீரர்களின் உடல் தலிபான்களின் கட்டுபாட்டிலுள்ளதென நம்ப்பப்படும் வெளிகளில் விழுந்தாலோ அல்லது தலிபான்கள் உடல் மேற்கத்தியர்கள் கட்டுபாட்டிலுள்ள பிரதேசங்களில் விழுந்திருந்தாலோ உடையவர்களிடம் கொண்டு சேர்க்கிற பொறுப்பை ஹக்கீம் செய்கிறார்.

‘யாராக இருந்தாலும் செத்தபின் அவர்களுக்குரிய இறுதிச்சடங்கை ஒழுங்காக நடத்தவேண்டுமில்லையா? அதுவன்றி அல்லாவின் கீர்த்திக்காகவும், எங்கள் நாட்டிற்காகவும் ஏதோ என்னால் முடிந்தது, ” என்கிறார்.

இத்தொண்டுப்பணியில் முதன்முதலாக அவர் ஆர்வம் காட்ட நேர்ந்தது 2005. செஞ்சிலுவைச் சங்கத்திற்காக இதனைச் செய்திருக்கிறார். ஒரு நாள் மாலை தலிபான்கள் இவரைச் சந்தித்தனர். அமெரிக்கர்களுக்கும் தலிபான்களுக்குமிடையேயான யுத்தமொன்றில் கொல்லப்பட்ட அவர்கள் தலைவனின் உடல் தேவைப்பட்டிருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றுவதால் அவரால் முடியும் என்றிருக்கிறார்கள். அவர்கள் கூறியதைப்போலவே தலிபான் தலைவனின் உடலை அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அதற்கு அடுத்த சில தினங்களில் காந்தகார் காவற்துறை தலைவர் அவரை அழைத்திருக்கிறார். தலிபான்களுடனான யுத்தத்தில் தங்களுடைய ஐந்து வீரர்கள் மாண்டடிருப்பதாகவும் அவர்கள் உடல்களை எப்பாடுபட்டாகினும் கொண்டுவரமுடியுமா எனக்கேட்டிருக்கிறார். சாக்ரி மாவட்டத்திலிருந்த அந்த இடம் மிகவும் ஆபத்தான இடம். எனினும் தலிபான் தலைவரைச் சந்தித்து நிலமையை எடுத்துக்கூறி திரும்பும்போது ஐந்து வீரர்களின் பிணத்தோடு வந்திருக்கிறார்.

அதற்கடுத்த கிழமைகளில் ஹக்கீம்  பெயர் ஆப்கானில் பிரசித்தமாகிறது. தலிபான்களுக்காக மேற்கத்திய தரப்பிலும், மேற்கத்தியர்களுக்காக தலிபான்களிடமும் தூதுசென்று பல பிணங்கள் முறைப்படி அடக்கம்செய்ய அல்லது மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு அப்பிணங்களை அனுப்பிவைக்க ஹக்கீம் காரணமாகியிருக்கிறார். சில நேரங்களில் தலிபான்களின் தற்கொலை படையினர் வெடித்துச் சிதறியிருப்பார்கள். அவர்கள் அங்கங்களை பொறுக்கியெடுத்து உடையவர்களிடம் சேர்க்கவும் ஹக்கீம் தயங்கியதில்லை. ஹக்கீம் பலமுறை குண்டுமழையிலிருந்து தப்பியிருக்கிறாராம். மூன்று கனடா நாட்டு வீரர்களின் பிணங்களை மீட்க கண்ணிவெடி புதைத்திருந்த பகுதிக்குள் செல்லவேண்டியிருந்தது. தலிபான்கள் புண்ணியத்தில் ஆபத்தில்லாமல் மீண்டிருக்கிறார். இப்பணியில் தொடர்ந்து இயங்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு ஹக்கீம், “இளம் வயதில் ரஷ்யர்கள் நடத்திய தாக்குதலில் என் தந்தையையும், சகோதரரையும் இழந்துவிட எங்களின மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்க வேண்டியிருந்த அப்போதே பிறருக்கென என் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றதோடு, நான் இதைசெய்யாமற்போனால் இங்கே வேறு யார் அதனைசெய்ய முன்வருவார்கள்? ஒருவரும் வரமாட்டார்கள்”, என்றாராம்.

இவருக்கு மேற்கத்தியர்களின் கட்டுபாடிலுள்ள நிலப்பகுதில் சுதந்திரமாக வலம் வர பிரத்தியேக அனுமதிப்பத்திரம் வழங்கியிருக்கிறார்கள். தலிபான்களும் இவர் நம்மில் ஒருவர் அவருக்கு எவ்வித ஆபத்தும் நேராமால் பாதுகாப்பது நமது கடமையென கூறியிருக்கிறார்களாம்.  இந்த ஹக்கீமுக்கு போனவருடம் சோதனைக்காலம். தலிபான்களின் தாக்குதலால் மாண்ட இரு ஆப்கானியர் உடலை மீட்கசென்றபோதுதான் இறந்திருப்பவர்கள் அவர் பிள்ளைகளென்று தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இப்பணியிலிருக்க விருப்பமா என்க்கேட்டபோது அவர் கூறிய பதில் யுத்தம் என்றைக்கு முடிகிறதோ அன்றைக்குத்தான் நிறுத்துவேன்.

Merci à L’Express, France

—————————-

எழுத்தாளன் முகவரி -4: படைப்புக் கூட்டணி

படைப்பிலக்கிய பிரபஞ்சம்: ‘எழுத்தாளன்- வாசகனென்ற’ இருகோள்கள் இயங்கும் வெளி. எழுத்தாளன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வாசனையும் சுற்றிவருகிறான்.  வாசகன் எழுத்தாளனன்றி வேறுகோள்களையும் சுற்றவேண்டியவனாக இருக்கிறானென்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.  எனினும் இருவரும் வாசிப்பு, கலை, இலக்கியமென்ற ஈர்ப்புவிசையாற் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

“வாசகன் விரும்பிய வகையில் – அவன் கற்பனைக்கொப்ப-  சித்திரங்களை வடித்துக்கொள்ள உதவும் பொருட்களைக் கையளிப்பவன்  படைப்பிலக்கியவாதி. எழுத்தாளன் கொடுத்த கையேட்டின் துணைகொண்டு சித்திரத்தை முடிப்பவனாக வாசகன் இருக்கிறான்”- என்கிறார் ஜான் மக்டொனால்டு. குற்றவியல் மற்றும் மர்ம புனைவுகளில் எழுதிக்குவித்து புகழ் பெற்றவர். விக்கிபீடியாவில் இரண்டு ஜான் மக்டொனால்டுகள் வருகிறார்கள்: ஒருவர் ஜான் ஏ மக்டொனால்டு அரசியல்வாதி, கனடா நாட்டைச்சேர்ந்தவர். இரண்டாவது ஆசாமி ஜான் டி.மக்டொனால்டு எழுத்தாளர் அமெரிக்கர். இந்த இரண்டாவது ஆசாமியும் அவரது ‘Creative Trust’ என்ற கட்டுரையும் நமக்கு வேண்டியவை. ‘படைப்புக் கூட்டணி என்பது அக்கட்டுரைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் எழுத்தாளன் வாசகனென்ற இருவரின் உறவையும் படைப்பூடாக மேம்படுத்துவதற்குரிய வழிகளை மக்டொனால்டு விவரிக்கிறார்.

‘இயக்குனரும் நடிகரும் இணைந்து ஒரு காட்சிக்கு உயிரூட்டுவதைப்போல’ என்று இதனைச்சொல்லலாம்.  ஒரு நாவலின் வெற்றியென்பது, அதனைச் சமைத்த படைப்பாளியிடமில்லை, அதைச்சுவைக்க காத்திருக்கும் விருந்தினரிடமிருக்கிறது. காட்சிக்கான மேடை, வெளி, சூழல்; ஒலி ஒளி; ஆடைகள்; நடிகர்கள்; நடிப்பு; வசனம் என அனைத்தையும் இயக்கும் மையபொருள் இயக்குனர். காமிரா, கோணம், வசனம், ஒளி. ஒத்திகை என எல்லாம் முடிந்து,  அவரது அவ்வளவு உழைப்பையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு கூடுதலாக மெருகூட்டும் நடிகர்கள் அமைந்தால், திரைப்படம் வெற்றி பெறுகிறது. உதாரணம் கிளவுஸ் கின்ஸ்கி(Klaus Kinski)- வெர்னெர் ஹெர்ஸோக் (Werner Herzog); பீம்சிங் – சிவாஜிகணேசன் கூட்டணியில் உருவானத் திரைப்படங்கள்.

இனி ஜான் மக்டொனால்டு முன்வைக்கிற உதாரணத்தைப்பார்ப்போம். நம்மெதிரே ஒரு குழந்தை இருக்கிறது. அக்குழந்தையை மகிழ்வூட்டவேண்டும். என்ன செய்யலாம்? நம்மிடம் ஒர் அட்டை, காகிதம், கத்திரிக்கோல், பசை, சில வண்ணப்பென்சில்கள் இருக்கின்றன. காகிதத்தைப் போதிய அளவில் கத்திரித்தெடுத்து கோழி ஒன்றைச் செய்து குழந்தையிடம், “இது கோழி” என்கிறோம். அடுத்து வண்ணபென்சில் கொண்டு வரைந்து கத்தரித்தெடுத்த மற்றொரு காகிதத்தை  ”இதுதான் தானியக் களஞ்சியம்”, என்கிறோம். பின்னர் மஞ்சள் பென்சில் கொண்டு வரைந்த வாகனமொன்றை வெட்டியெடுக்து குழந்தையிடம், “இதோபார் வாகனம் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, இனி கோழி வாகனச் சக்கரத்திற் சிக்காமல் தப்பிக்கவைப்பதோடு படத்தையும் உன் கற்பனைக்கேற்ப முடிக்கலாம் எனக்கூறி நாம் ஒதுங்கிக்கொள்கிறோம். அளித்திருந்த பொருட்கள் ஆர்வத்தை தூண்டுகிறதென வைத்துக்கொண்டால், குழந்தை தனது கற்பனைக்குகந்த மரங்களைச் சேர்க்கலாம், ஒரு வீட்டைத் தீட்டலாம், அவ்வீட்டிற்கு வேலி போடலாம், சுவர் எழுப்பலாம், கிராமத்துக் குழந்தையெனில் கூரைவேயலாம். நகரத்துக்குழந்தையெனில் எங்காவதொரு தீம் பார்க்கிற் கண்ட காட்சி நினவுக்கு வர மாடுகளையோ வேறுகாட்சிகளையோ பென்சிலால் வரைய முயற்சிக்கலாம். கிராமத்துக்குழந்தையின் கற்பனையில் உதித்தவையும் சரி நகரத்துக் குழந்தை தமது மனதிற் தீட்டியதை வெளிப்படுத்தியவையும் சரி, நாம் சொல்லி உருவானவை அல்ல. நம்மால் ஆரம்பிக்கப்பட்ட படைப்புப்பணியில் குழந்தையும் தன் பங்கிற்கு இணைந்துகொண்டிருக்கிறதென்பது தெரியவரும் உண்மை.  நாம் கோழி, தானியக்களஞ்சியம், டிராக்டரென்று வரைந்துக்காட்ட நகரம் மற்றும் கிராமக் குழந்தைகள் அதனதன் கற்பனைக்கொப்ப நாம் படைத்திருந்த மூன்றோடு பொருந்தக்கூடிய பிறவற்றை வரைந்து நிரப்புகின்றன.

மக்டொனால்டு கூற்றின்படி இம்மூன்று சித்திரங்களோடு, குழந்தையின் கற்பனையில் உதித்த வீடு, வேலி, கூரைபோன்ற பிறவற்றையும் நாமே வரைந்து குழந்தையிடம் கொடுத்து, “இது கோழி, இது வேலி, இது மரம், இது டிராக்டர்” என சொல்லியிருப்போமென்றால் குழந்தை அடப் போய்யா நீயும் கெட்டது உன் சித்திரமும் கெட்டது எனக்கூறுகின்ற வகையில், கொட்டாவி விடலாம். அதைப்போலவே கோழிச்சித்திரத்தை மட்டும் போட்டுக் காட்டிவிட்டு மற்றதை நீப்போடு என சொல்லியிருந்தாலும், குழந்தைக்கு அழுகை முட்டிக்கொண்டு வரலாம். குழந்தையின் கற்பனையை வளர்க்கவேண்டுமெனில்  ஆர்வத்தோடு நாம் வரைந்த ஓவியத்தில் குழந்தையும் தம் கைப்பட சில சித்திரங்களை கிறுக்க வேண்டுமெனில் எல்லாவற்றையும் நாமே தீட்டிவிட்டுக் குழந்தையை அழைக்க கூடாது அல்லது ஒன்றை மட்டும் தீட்டி இனி உன்பாடென ஒதுங்கிக்கொள்ளவும் கூடாது. சித்திரம், குழந்தை உதாரணத்தைத் தருகிற மக்டொனால்டு வேறொன்றிலும் எச்சரிக்கை வேண்டுமென்கிறார். கோழி, தானியக் களஞ்சியம், டிராக்டர் ஆகியவற்றை வரைந்து பிறவற்றை நீ தீட்டு எனக்குழந்தையிடம் கொடுக்கிறபோது அவ் ஓவியங்களைப்பற்றிய கூடுதற் தகவல்களும் குழந்தையின் கற்பனையைப் பாதிக்கலாம் என்கிறார். உதாரணமாக படத்திலுள்ளது கோழி அல்ல, பதினோருமாத சேவல், பெயர் மெல்வின், சிறகுகள் ஒளிர சூரிய ஒளியில் நிற்பது அதற்குப் பெருமை, பிற சேவல்கள்போலன்றி நீண்ட கால்களென மூச்சு திணறும் அளவிற்குத் தகவல்களைத் திணிப்பதும் குழந்தைக்கு அயற்சியைத் தரலாம், இதில் நாம் செய்ய ஒன்றுமில்லை எனக்குழந்தை ஓடக்கூடும். இங்கே சித்திரமும் குழந்தையும்:படைப்பும் வாசகனும்.

சொல்லப்படும் பொருளின் தனித்தன்மை

நடை, செறிவு, வாசிப்புத்தன்மை ஆகியகூறுகள் வாசகன் புரிதலைத் தீர்மானிக்கின்றன. இரண்டுகுழந்தைகளிடம் ஓவியங்களைக்கொடுப்பின் அவரவர் கற்பனைக்கொப்ப அவற்றை முடிப்பதுபோல ஒரு புனைவை வாசிக்கிற இரு வாசகர்களுக்கும் வெவ்வேறு கற்பனைகளிருக்கக்கூடும். அவர்கள் கற்பனைகளைக் குறுக்குவதற்கான முயற்சியில் ஓர் எழுத்தாளன் இறங்கக்கூடாதென்கிறார் மக்டொனால்டு. எக்மோர் ஸ்டேஷனை பலரும் சொல்லியிருக்கலாம். நம்முடைய  பங்கிற்கு: டிக்கெடுக்கும் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர் இரயில்கள் புறப்பட தயாராக இருந்தன என்றெழுவதைத் தவிர்த்து பிறர் சொல்லாத எக்மோர் கண்ணிற்படுகிறதா எனப்பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். புனைவின் நம்பகத்தனமையைக் கூட்ட அது உதவும். உதராணமாக கடந்த பத்தாண்டுகளாக திருத்தப்படாத பழுதடைந்த கடிகாரம். 2012லும் எக்மோர் சந்திப்பில் காணநேர்ந்த நீராவி எஞ்சின், இடுப்புக்குழந்தையுடன் போர்ட்டர்வேலைபார்க்கும் பெண்மணி..

” ‘டிக்கெட் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்தார்கள்”- என குறைவானத் தகவல்களைக்கொண்டு எக்மோர் இரயில் நிலையத்தின் பிம்பத்தை எழுதி முடித்துக்கொள்ளலாமென்ற முயற்சியும் மெக்டொனால்டிற்கு கூடாதவேலை. பல்வேறு சேர்மங்களின் பங்களிப்பில் உருவான காட்சியொன்றை எழுத்தாளன் குறைத்து மதிப்பிட்டு வாசகனுக்கு அளிக்கிறபோது, அக்காட்சி நம்பகத்தன்மையை இழப்பதோடு, வாசகனுடைய ஆர்வத்தை குறைக்கக்கூடுமென்கிறார்.

நாம் சொல்ல விழையும் பொருள் தனித்துவமானது என்ற எண்ணத்தை வாசகன் மனதில் உருவாக்கவேண்டும். அதற்கு உதவுபவை என்ற பட்டியலில் அதிக எண்ணிக்கையில் ‘சொற்களை’ தெரிந்து வைத்திருப்பது முதலாவது. சொற்களை அறிய தொடர்ந்தும்; நேரமிருப்பின் கண்டதையும், நேரம் போதாதெனில் தேர்வு செய்தும் வாசிப்பதும் நல்லதென்கிறார். அடுத்து அவதானிப்பு. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். எங்கே இருந்தாலும், எதைசெய்தாலும் ஐம்புலன்களையும் திறந்துவைத்துக்கொண்டு செயல்படுங்கள் உங்கள் எழுத்துக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடுமென்பது மக்டொனால்டு தரும் உத்தரவாதம். நம்மைச்சுற்றியிருக்கும் உலகின் இழைநயம் அதாவது கட்டமைப்பு, வடிவம், பாணி, நிறம், அமைவு, இயக்கமென எல்லாவற்றையும் அவதானிக்கவேண்டும். நிறம், ருசி, ஓசையென நம் கண்ணிற்படுகின்ற பொருட்களின் பண்புகளை மட்டுமின்றி அப்பொருட்களோடு மனிதர்கள்கொண்டிருக்கிற பல்வேறுவிதமான உறவுகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் கட்டாயம்.

 மனிதர்கள் இருவகை

கண்களிருந்தும் அவறை உபயோகிப்பதில்லையென வாழும் மனிதர்களும் இவ்வுலகிலுண்டு என்கிறார் மக்டொனால்டு. பிரெஞ்சு உளவியல்வாதியான ‘யுங்’ வகைப்படுத்தும் மனிதர்களில் ‘ நானற்ற’ (Not I) மனிதர்களாக எழுத்தாளர்கள் இருக்கவேண்டுமாம். ‘நான்’ (I) வகை மனிதர்கள் எப்போதும் தம்மைப்பற்றியே சிந்திப்பவர்கள், தன்னைச் சுற்றி உலகம் இயங்கவேண்டுமென்ற எண்ணுபவர்கள். எனவே பிறரை அவதானிக்க, தானற்ற மற்றமைகளில் இவர்களுக்கு அக்கறை உருவாவதில்லை என்பது அவரது கணிப்பு.

வாசிப்பாலும் பிற முயற்சிகளாலும் பெற்ற சொற்திறன், புற உலக அவதானிப்பு, சொல்லும் வகை என்று எழுத்தாளன் வளர்கிறபோது, தனக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார், மக்டொனால்டு.

————————————————————___________________________________________________________________________________________

மொழிவது சுகம் – செப்டம்பர் – 12

1. கூடங்குளம் விவகாரம்: ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்

1985லிருந்து பிரான்சு நாட்டில் Strasbourg நகரில் இருக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதென்ற அனுபவமில்லை. (அதுபோலவே கடந்த இருப்பந்தைத்து ஆண்டுகளில் ஒரேயொரு பிரெஞ்சு பிராங்கைக்கூட அல்லது யூரோ அமலில் வந்தபிறகு ஒரே யொரு யூரோவைக்கூட கையூட்டாகத் தர நேர்ந்ததில்லை- 99 விழுக்காடு சாதாரண மக்களின் அனுபவமிது- அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அல்லது வேறு மேற்கு நாடுகளில் வசிக்கும் நண்பர்களைக்கேட்டுத் தகவலை உறுதிபடுத்திக்கொள்ளலாம். ) பிரான்சு நாட்டின் வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகளால் எப்போதேனும் மின்சார விநியோகத்திற்கு தட்டுப்பாடு வருவதுண்டு, அதைக்கூட அதிகபட்சமாக இரண்டொரு நாட்களில் தீர்க்கப்பட்டதாகத்தான் செய்திகளில் வாசித்திருக்கிறேன். மின்சார பற்றாக்குறையைப் பிரான்சு நாட்டில் சந்திக்காமலிருப்பதற்கு, இங்கே பெரும்பானமையான மின் சக்தி, அணு உலைகளிலிருந்து பெறப்படுகிறதென்பது முதன்மைக் காரணம். அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினகள் கடுமையான விவாதங்களுக்கு உட்பட்டன. எனினும் திறப்பு விழாவில் காட்டும் அக்கறையை அதன் பராமரிப்பிலும், பாதுகாப்பு விஷயத்திலுல் காட்டும் மேற்கத்தியர்களின் மனப்பாங்கு பிரெஞ்சு மக்களை அமைதிபடுத்தியிருக்கிறது. இதனினும் மலிவாக மின்சக்திக்கு மாற்று உபாயங்கள் கிடைக்கும்வரை அணு உலைகள்  தவிர்க்க முடியாதவை.

இந்தியாவின் நிலமை வேறு, கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்யும் சொந்தவீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கவே பலமுறை யோசிக்கும் நமக்கு பொதுசொத்து பராமரிப்பின் இலட்சணமென்னவென்பதை ஊரை ஒரு முறைவலம்வந்தால் புரியும். இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணு உலைபற்றி பேச ஒன்று மில்லை. அது 30 பேரை பலிவாங்கும் பட்டாசு தொழிற்சாலை விவகாரமல்ல, ஒரு ஆர்டிஓ விசாரனை நடத்தி நான்கைந்து ஏமாந்த சோணகிரிகளை கைது செய்து பிரச்சினைக்கு மங்களம் பாட. நமது அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார எந்திரங்களின் செயல் திறன் உலகறிந்த செய்தி, உரசிப்பார்க்க அவசியமில்லை. ஒரு பொருளை அடைவதிற் பெருமை இல்லை.  பொருளை பராமரிப்பதில், அதன் பயன்பாட்டினை முழுமையாகப் பெறுவதில் நமக்கும் மேற்கத்தியர்களுக்கும் வேறுபாடுகளிருக்கின்றன. நம்மிடம் உள்ள குறை நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது. போப்பால் யூனியன் கார்பைடு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் இன்றும் கேட்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கில் ஆரம்பித்து, தமிழ் நாட்டு லெட்டர்பேடுகள்வரை  கூடங்குளம் பிரச்சினைக்குப் பின்னால் வெளிநாட்டினர் என்கின்றனர். காஷ்மீர், அஸ்ஸாம் கலவரம், மாவோக்கள், வடகிழக்கு மக்களின் பீதி, தெலுங்கானா, காவிரி நீர் சிக்கல், நிலக்கரி சுரங்க ஊழல், 2G விவகாரம், கல்குவாரி என ஆரம்பித்து நாளை சிவகாசி விபத்து, சஹானா விவகாரம், டெங்கு சுரம், சாக்கடையில் கொசு என எல்லாவற்றிர்க்கும் வெளிநாட்டினர் சதி எனக்கூறலாம்.

இப்பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சி பிடிவாதமாக இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் சோனியா பிறப்பால் இத்தாலியர், அது தவிர கூடங்குள அணு உலையை கட்டமைத்தவர்கள் செர்ணோபில் புகழ்  ரஷ்யர்கள். இப்பிரச்சினையில் நாமறிந்த வெளிநாட்டினர் இவர்கள்தான். இவர்களைத் தவிர வேற்றுநாட்டினரின் தொடர்பிருப்பின் ஆட்சியும் உரிய அதிகாரமும் கொண்ட அரசாங்கங்கள் அதைக்கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது கடமை.

கூடங்குள அணு உலை இயங்க போராடும் மக்களின்அச்சங்களைத் தவிர்ப்பது மத்திய மாநில அரசுகளின் வேலை. இரண்டு அரசுமே அதனைச் செய்வதில்லை. இந்தியாவில் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம் என்பதுதான் விதி.

இரத்தக் கண்ணீர் என்றொரு திரைப்படம்: ஆரம்பக்காட்சியில் எம்.ஆர். இராதா கூட்டமொன்றில் பேசும் வசனம்  ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது. சத்யாகிரகிகளை ஒருகட்டத்தில் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் இறங்கிவந்து பேசியதாக இந்தியச் சுதந்திரத்தின் வரலாறு தெரிவிக்கிறது . ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்.

2. ரெ. கார்த்திகேசு வின் இரண்டு நூல்கள்:

நீர்மேல் எழுத்து என்ற சிறுகதை தொகுப்பும், விமர்சன முகம் -2 என்கிற கட்டுரை தொகுதியும் மின்னூல்கள் வடிவத்தில் Kobo books தளத்தில் 1.99 டாலருக்கு கிடைக்கின்றன. ஆசிரியர் பெயரை எழுதித் தேடவேண்டும். ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் நீங்கள் வாசித்தவரில்லையெனில் அரிதான வாய்ப்பு. காற்றும் தண்ணீரும் மலிவாகக்கிடைப்பதால் அவற்றின் தேவையை குறைத்துமதிப்பிடமுடியாது அதுபோலவே ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்களூம்.

3. நண்பர்களுக்காக ஒரு குறும்படம்:மசாலா மாமா

http://replay.fr/masala-mama-488243
__________________________

மொழிவது சுகம் செப்டம்பர் -6

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள்  விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும்.

சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் முதல் வாரம்வரை காத்திருக்கவேண்டும்.  கல்விஸ்தாபனங்கள் கோடைவிடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் முதல்வாரத்தில் கதவுகளைத் திறக்கின்றன.  இம்மாதத்தில் தொலைகாட்சிகளிலும் புதிய நிகழ்ச்சிகள் அறிமுகமாகும், தொலைகாட்சி நட்சத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். தனது  புதிய தோழன் அல்லது தோழியை பிள்ளைகள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தலாம். மிஷல், வீட்டிலிருக்கு பழைய பொருட்களை மாற்றபோகிறேன் என்ன நினைக்கிறாய்? என மனைவி ஆகஸ்டு மாத இறுதியில் தனது கணவரிடம் கேட்கிறாரெனில், அவர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பதில் சொல்வது நல்லது, அல்லது மன்மோகன்சிங் போல பதிலளிப்பதைத் தள்ளிப்போடலாம். படைப்புலகமும் செப்டம்பர் மாதத்தில் புதிய நூல்களுடன கதவைத் திறக்கின்றன. இங்கு பிப்ரவரி மாதத்தில் புத்தகக் கண்காட்சியென்கிறபோதும் பொதுவாக அதிக எண்ணிக்கையில் புதிய படைப்புகள் வாசகர்களுக்கு முகமன் கூறுவது செம்படம்பர் மாதத்தின் தொடக்கத்தில், சில நேரங்கள் அக்டோபர்மாத இறுதிவரை நீடிக்கக்கூடும். படைப்புகள் அறிமுகமாகத் தொடங்குகிறபோதே இலக்கிய இதழ்கள், தினசரிகள்,  சஞ்சிகைகளில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் வந்துவிடுகின்றன.

இவ்வருடம் உள்ளூர் படைப்புகள், மொழிபெயர்ப்புகளென மொத்தம் 646 புதினங்கள் வாசகர் வாடிக்கையாளர்களை நம்பியிருக்கின்றன.   அவற்றுள் 90 விழுக்காடு நூல்களை மூன்றில் ஒருபங்கு விலைக்கு இலக்கமுறையில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட 646 நாவல்களில் இந்திய நாவலென்றும் அறிமுகமாகியிருக்கிறது. கவிதா தஸ்வானி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய Bombay Girl என்ற நூலின் பிரெஞ்சு மொழியாக்கம். பிரெஞ்சு இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியொன்றில்  பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பவரென ஒவ்வொரு பத்தியிலும் சொல்லிக்கொள்கிறார். கதைச்சுருக்கத்தைப் படித்தேன். கதாநாயகிக்கு வீடு ஜுஹ¤வில் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். விஜயசாந்தி நடித்த படமொன்றின் திரைக்கதை சுருக்கத்தை வாசித்தது போலிருந்தது.

—————————–

3. ‘விரக்தி’யால் எழுதுகிறேன்.

இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள்,  ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.

லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள்  அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து அமெரிக்க பிரஜையாகி இறுதியில் சுவிஸ்நாட்டில்  பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய விளாடிமிரின் வாழ்க்கை ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது எனக்கு முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில், ‘விரக்தி’ எதிரும்புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.  1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத்  திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.

விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’ என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார்.  “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில்  தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.

பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.

——————————-

3. எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ?

பிரிட்டனில் அண்மையில் 49 ஆங்கில எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து Daily Telegraph ஆங்கில தினசரியில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வறிக்கைக்கு வட அமெரிக்கா எழுத்தாளார்கள் ஆதரவும் கிடைத்திருக்கிறது.  இந்த நாற்பத்தொன்பதுபேரும் கண்டித்திருப்பது R.J. Ellory என்ற எழுத்தாளரை. 49 எழுத்தாளர்களை தமக்கெதிராக ஒன்று திரட்டும் அளவிற்கு எலோரி செய்தக்குற்றம் தமது புனைவுகளுக்கு விமரிசனங்கள் என்ற பெயரில் தமக்குத்தாமே  புகழுரைகள் எழுதிக்கொள்வதும் பிறரின் படைப்புக்களை கடுமையாகத் தாக்கி எழுதுவதும் குற்றம் என்கிறார்கள் அவர் எதிரிகள் அல்லது அவரால் விமரிசனம் செய்யப்பட்டவர்கள்.

Jeremey Duns என்கிற மற்றொரு பிரிட்டிஷ் எழுத்தாளர் சமூக வலைத்தல விவாதமொன்றில் பல புனைபெயர்களில் ஒளிந்து  தமது படைப்புகளையும், தம்மையும் புகழ்ந்து எழுதிக்கொள்ளும் கூட்டத்தில் ஒருவர் Ellory என வெளிப்படையாக தெரிவிக்க பிரச்சினை வெடித்திருக்கிறது.

Elloryயின் குற்ற புனைவுநாவல்கள் அண்மைக்காலத்தில் வெற்றிகரமாக வலம் வருபவை. அவருடைய Ghost heart, A Quiet Beilef  in Angeles ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றவை என்கிறார்கள். ஜெல்லி பீன், என். ஜோன்ஸ் மற்றும் வேறு  பெயர்களில் தொடர்ந்து தமது படைப்புக்களையும் தம்மையும் புகழ்ந்து எழுதிவருவாராம். மக்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உயர்வான கருதுகோளை முன்னெடுக்க அவர் மேற்கொள்ளும் தந்திரம் என்கிறார்கள்.  A Quiet Beilef  in Angeles புனைவுக்கு அவரால் எழுதப்பட்ட விமர்சனமொன்றில், நாவலுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியதோடு, “என்னை மிகவும் நெகிழவைத்த, இதுபோன்றதொரு நூலை  இதற்கு முன்பு வாசித்ததில்லை” எனப் புகழாரம் சூட்டிக்கொள்கிறார். வேறு இரண்டு புகழ்பெற்ற இரண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தமது பெயருடன் இணைத்துக்கொண்டு இன்றுள்ள பிரிட்டிஷ் எழுத்தளார்களில் (குற்றபுனைவுகள் வரிசை) இவர்கள் மூவரும் தவிர்க்கமுடியாதவர்கள் எனக்கூறிக்கொண்டிருக்கிறார்.

எலோரி யை அறிந்தவர்கள், வியப்பதில்லை. வெகுகாலமாகவே அவர் இதைச் செய்துவருகிறார் என்கிறார்கள். சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எனது நாவல்கள் குறித்து புனைபெயர்களில் சிலாகித்து எழுதியது உண்மை. எனது படைப்புகள் குறித்து விமரிசினங்கள் வைக்கப்படுவதில்லையென்பதால், இப்படி எழுதவேண்டியதாயிற்று.” என்கிறார்.

திருவிளையாடல் திரைப்படத்தில் “ஒரு நாள்போதுமா?” பாடலின் இறுதிவரி “எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ? என முடியும். அப்போது பாலையாவை கவனித்திருக்கிறீர்களா? மீசைமுறுக்கும் ‘ஞானச்செறுக்கு’ பாலையாவின் அகங்காரத்தைக் கட்டவிழ்க்கும் கணங்கள், கலையின் மேன்மையைக் கேலிக்கூத்தாக்கும் தருணங்கள். எலோரியின் சாதுர்யத்தை ஹேம நாத பாகவதர் பெற்றிருப்பாயின் பானபத்திரரை மட்டுமல்ல சுந்தரேஸ்வரரையே வென்றிருப்பார்.

——

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’

The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.

1. Nightwood – Djuna Barnes.
2. A tale of a Tub – Jonathan swift
3. The Phenomenology of the sprit -G.F. Hegel
4. to The light house -Virginia Woolf
5. Clarissa, or the History of a Younglady – Samuel Richardson
6. Finnegans Wke – James Joyce

7. Being and Time Martin Heidegger
8. The Faerie Queen – Edmund Spenser
9. The Making of Americans -Gertrude Stein
10.Women and Men -joseph McElroy

இப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.

பிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு  நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:

இந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள்  நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.

இறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:

உங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.

http://www.publishersweekly.com/pw/by-topic/book-news/tip-sheet/article/53409-the-top-10-most-difficult-books.html

—————————

2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.

இரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா? எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை  கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோது கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.

உலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள்,  எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை(?) மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ?

ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலாது. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம்.  நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.

1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும்.  தங்கம் நிச்சயம் உண்டு

2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.

3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.

4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம்  விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.

5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.

————————————————-

மொழிவது சுகம்-ஜூலை 29

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.

மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)

1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

3. அண்மையில் வாசித்த பதிவுகள்

அ. மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது.  இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.

பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.

இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.

http://malaigal.wordpress.com/

ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது.  இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.

நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்

இறைவா!
இருட்டும்  வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!

அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!

வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!

வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்

“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!

ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?

***
http://abedheen.wordpress.com

—————————————————–

மொழிவது சுகம் – ஜூலை-17

 அவ்வைக்கு 75

வணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென்று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கிக்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில்  அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும்  பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.

வாழ்க நீ எம்மான்.

காதலும் காதல் சார்ந்த இடமும்

ஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள்,  சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை?) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.

காதல் ஒன்று:

1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர்  மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே  கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள்  திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார்.  ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும்  இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன்  வெளிநாட்டிலிருக்கிறாள். ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).

எனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,  குறிப்பிட்டிருந்த  குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.

 காதல் இரண்டு

இது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். .  அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்  பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல்,  அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும்  பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.

காதல் மூன்று:

‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்லப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).

தந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன்  ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல.  இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை  நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் புழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது?

கதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:

பாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது அவள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட்,  அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார்.  அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள்.   அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும்,  அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள்.  பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ,  தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி  சிறையில் அடைக்கப்டுகிறார்.

அலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக  வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்)  இஸ்டான்புல்செல்கிறான்.  துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்தி (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த  ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை  சிறையிலடைக்கிறது.

இஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். முதலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள்.  அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் கிடைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.

இம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.

——————–

மொழிவது சுகம் -ஜூன் 29

பிலிப் பெர்:

கடந்த வியாழனன்று பிரான்சுநாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிலிப் பெர் என்ற பிரெஞ்சுக்காரருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நட்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.

பிலிப்பெர் என்ற மனிதருக்கு பலமுகங்கள் உண்டு. இந்த பிலிப்பேர் முகத்தை பார்க்கிறவர் எவரும் சந்தேகித்துவிடமுடியாது, தேவரனையர் கயவர் ரகம். நம்மில் ஒருவரென்ற நம்பிக்கையை வெகுச் சுலபமாகப் பெற்று விடுவார். அவரதுவெற்றி இச்சாமர்த்தியத்தில் தானிருக்கிறது. இம்மனிதர்களை இனம் பிரிக்கத் தனித் திறமை வேண்டும். தமிழில் இவர்களுக்கு ஏமாற்று பேர்வழி, சூழ்ச்சிகாரர், பித்தலாட்டக்காரர், முழுப்பாய் சுருட்டி என்கிறோம். வெகுசன தமிழ் தினசரிகள் இவர்களை ‘பலே ஆசாமி’கள் என்கின்றன. பிரெஞ்சில் நானறிந்தவகையில் ஒரு சொல்தான் ‘Escroc’.

2010 மார்ச் மாதம் பிரான்சுநாட்டின் தென் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் பல கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஷரோனுமொன்று.  இந்த ஷரோன் கிராமத்திற்கு பிலிப்பேர், பிரான்சுநாட்டின் விவசாயத்துறை செயலர் போல தமது பரிவாரங்களுடன் வந்தார். கிராமத்தலைவர் ஓடோடிவந்து வரவேற்றார். செயலருக்கென தனி அலுவலகம் திறக்கப்பட்டது. தொலைபேசிவசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. விடாமல் போனில் பேசினார். கட்டளைகளை பிறப்பித்தார். எந்திரங்களும் கருவிகளும் வந்து குவிந்தன. நிறுவனங்களும் விவசாயத்துறை செயலர் கேட்கிறாரென்று வேண்டிய வாகனங்களையும் எந்திரங்களையும் அனுப்பி வைத்தன. டெண்டர் விடாமல் அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? அதே கிராமத்தில் இன்னொரு பக்கம் அசலாக அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப் பட்டிருந்தவ்ர்களால் புயல் நிவாரணப்பணிகள் நடந்தன. அங்கே வேலைகள் மெத்தனமாக நடந்திருக்கிறது.  ஒரு நாள் இரு நாள் அல்ல ஒருவாரம் கிராமத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஒப்பந்தம் கிடைத்த சந்தோஷத்தில் நிறுவனங்களும் புயல் நிவாரணத்தை இத்தனை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்துகிறாரேயென்று கிராம மேயரும் பிலிப்பேரை கவனித்துக்கொண்டார்கள். எல்லோருமா எல்லா இடத்திலும் ஏமாறுகிறார்கள். அங்கேயும் ஒரு புத்திசாலி சந்தேகிக்கிறான். சம்பந்தப்பட்டவ்ர்களிடம் சொல்ல விலங்கிடப்பட்டு அழைத்துபோய் சிறைவைத்தார்கள், வழக்கு முடிந்து நேற்று தண்டனை கிடைத்திருக்கிறது. இதுதான் முதன் முறையல்ல, இத்தொழிலை பலமுறை செய்து 20 முறை தண்டனை அடைந்திருக்கிறார். பிலிபேரின் வழக்கறிஞர் அவரை அதிகம் தண்டிக்கவேண்டாமென்று வாதாடியிருக்கிறார். அவர் சொல்லுங்காரணம்: இதனால் பெரிதாக எதையும் அவர் சம்பாதித்துவிடவில்லை. அவருடைய முதல் குற்றம் 29 வயதில் ஆரம்பித்ததாம். விவாகரத்து காரணம் என்கிறார்கள் தொடக்ககாலத்தில் சிறு சிறுகுற்றங்களென ஆரம்பித்து அண்மையில்,  அதிவேகச்சாலை போடுகிறேனென வேறொரு பகுதியில் தள்வாடங்களுடன் இறங்கியதுவரை அடங்கும். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு திரைப்படமொன்றும் வந்திருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு வேறொரு கட்டுரையும் எழுதினேன். கிடைத்தால் போடுகிறேன்.

எனக்குத் தெரிந்து இந்தியர் ஒருவர் இருந்தார், இந்த ஊரில் வசித்தார், இப்போது எங்கே வசிக்கிறாரென தெரியாது. அதிகம் படித்தவரல்ல ஆனாலும் தொழில் நுட்பத்தில் தேர்ந்தவர். இந்த அபார ஞானத்தால் தொழில் நுட்பகல்வி முடித்து  அதில் சான்றிதழும் பெற்றார். ஓரளவு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அவருக்குச் சட்டத்தை மீறவேண்டும். அப்படி மீறவில்லையெனில், ஞானத்தை தவறான காரியத்தில் பயன்படுத்தவில்லையெனில் தூக்கம் வராதோ என்னவோ அகப்பட்டுக்கொண்டு சிறை செல்வார். கணினி வல்லுனர்களில் சிலர் கடனட்டை வழக்குகளில் சிக்குவதைப் பார்க்கிறோம். தன்னை தலைவனாக வரித்துக்கொள்ளும் தகுதியிருந்தும் ஈன புத்தியினால் சாக்கடையில் விழும் மனிதர்களை அரசியலில் பார்க்கிறோம். நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய  கில்லாடி. நாற்பது லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி. நாலாயிரம்கோடியைக் கொள்ளையடித்த சாணக்யர் என்றெல்லாம் கொடுக்கப்படுகிற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். செய்யும் காரியத்தைக்காட்டிலும் இந்த அடைமொழிகள்  அவர்களை வசீகரிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? இம்மனிதர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏதேனும் ஜீன்கள் இருக்குமா? அப்படி செய்யத் தூண்டுவது எது? தங்கள் ஞானத்தில் நம்பிக்கையற்று, குறுக்கு வழியில் தமது இருப்பை நிலைநிறுத்தவும் பிழைப்பிற்கு அதொன்றுதான் வழியெனவும் மூளையில்  ஏதோ ஒரு நரம்பு அவர்களுக்குக் கட்டளையிடும்போலும். தம்மைச் சாமர்த்தியசாலிகளாகக் கட்டமைத்துக்கொள்ள ‘இந்த பலே ஆசாமிகளுக்கு’ கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ‘மது, மரியுவானா போல  ஒருவித போதைக்கு அவர்களைஅடிமைகளாக்குகின்றன. சீரியல் கில்லர்களைப்போலவே சமூகத்திற்கு எங்கே என்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  என்று சவால் விடுகிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்து, செய்யுங்காரியம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவந்தவுடன் குடித்துவிட்டு சாக்கடையோரத்தில் புரளவும் தயங்காத மனிதர்களின் மனோபாவம் இவர்களுக்கும் ஒரு கட்டத்தில் வந்துவிடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்போக்கை மாற்றிக்கொள்ளமுடியாது என்பதுபோல. ஓர் அறிவியல் கட்டுரையில் ஏனைய நோய்களைபோலவே இதுவும் ஒருவித மனநோய் என்றும்  குணப்படுத்த வியலாதென்றும் கூறுகிறார்கள்.

—-

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

துப்பறியும் புனைவுகள்: Whodunit

மேற்கத்திய நாடுகளில் குற்ற புனைவுகள் என வகைபடுத்தியபோதிலும், தமிழில் அவற்றை துப்பறியும் புனைவுகளென்றே அறிவோம். தவிர நம்முடைய துப்பறியும் புனைவுகளுக்கு நெடிய வரலாறு கிடையாது, அண்மைகாலத்தியவை. இருபதாம் நூற்றாண்டிலிருந்தே குற்றபுனைவுகளை தமிழ் எழுத்துலகம் சந்திக்க நேர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்காரும் வை.மூ கோதைநாயகி அம்மாளும் முன்னோடிகள். குற்றப்புனைவுகள் அனைத்திலுமே பொலீஸார் வரவேண்டுமென்கிற அவசியமில்லை. அண்மையில் குற்ற நூல்களின் வரலாறு என்றதொரு நூலை வாங்கினேன். நூலாசிரியர்கள் இருவரும் குற்ற நூல்களின் வரலாற்றை அகழ்ந்து ஆய்ந்து அட்டவணை படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் நூலைப்பற்றியும் நூலாசிரியர்கள் பற்றியும், நூல் உருவான விதம் பற்றியும் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். துப்பறியும் கதைகள் வாசகர்களிடம் ஏற்படுத்துகிற தூண்டலை இலக்கிய விமர்சகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் தொனிக்கிறது.

முதல் குற்ற புனைவு எந்த நூற்றாண்டில், எங்கே எழுதப்பட்டதென நினைக்கிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஊர்பேர்தெரியாத சீனர் ஒருவரால் எழுதப்பட்ட அந்நூலின் பெயர் Trois affaires criminelles résolues par le juge Ti (Celebrated Cases of Judge Deei). இதொரு வரலாற்று குற்றப்புனைவு. குற்ற புனைவிற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்கள். வரலாறு என்பதற்கு என்ன பொருளென்றும் அறிந்திருப்பீர்கள். இரண்டையும் சேர்த்து பொருள்கொண்டால் வரலாற்று குற்றபுனைவு. சற்று எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், படைப்பாளியின் உயிர் வாழ்க்கைக்கு முந்தைய காலத்தில் நடந்ததென்று ஒரு புனைவை கட்டமைப்பது வரலாற்று குற்றவியல். பாத்திரங்களின் மொழி, சமூக அமைப்பு, காட்சிகள் விவரணை அனைத்திலும் கடந்த காலத்தைத் தெளிவாய்க் கொண்டுவரவேண்டும். இவ்வரலாற்று புதினங்களில் ‘யார் செய்திருப்பர்’ அல்லது எதனால் நிகழ்ந்தது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் இதனை’ Whodunit (Who done it) என்கிறார்கள். Celebrated Cases of Judge Dee. என்ற சீன நூலை ரோபர்ட் வான் குலிக்(Robert Hans van Gulik ) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை வாசிக்கசந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக France-Culture என்கிற பிரெஞ்சு வானொலியில் பத்து பகுதிகளாக கேட்க வாய்ப்புக்கிடைத்தது. பிரெஞ்சில் தொடரைக்கேட்க விருப்பம் உள்ளவர்களுக்காக: http://www.franceculture.fr/oeuvre-trois-affaires-criminelles-resolues-par-le-juge-ti-roman-anonyme-chinois-du-xviiie-siecle-de-

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ‘பல்ஸாக்’ 1841ம் ஆண்டு எழுதிய Une ténébreuse affaire , என்ற நூலும் வரலாற்று குற்ற புனைவிற்கு நல்ல உதாரணம்.  பிறகு அகதா கிறிஸ்டி எழுதிய புனைவுகளில் சிலவும், கோனன் டாயில் புதினங்களும் அவ்வகைப்பட்டவை என்று கருதலாம். ஆனால் குற்றப்புனைவுகளை முழுக்க முழுக்க துப்பறியும் புதினங்களாக மாற்றிய புண்ணியவான்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும்.

இன்றைக்கு குற்ற வரலாற்று புதினங்கள் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இன்றைக்கு அவை இலக்கியம்: உம்பர்ட்டோ எக்கோ, குந்த்தர் கிராஸ், ட்ரூமன் கப்போட், ஓரான் பாமுக் போன்ற படைபாளிகள் குற்றப்புனைவுகளை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்தியவர்கள்.

தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்து அல்லது அதையே காரணமாக முன்வைத்து காழ்ப்பில் விமர்சனம் செய்பவர்கள்கூட கதைசொல்லலில் கல்கியின் இடத்தை என்றைக்கும்  எட்டப்போவதில்லை. எனக்கு அவருடைய பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் வரலாறு குற்றப்புனைவு வகைமை சார்ந்ததே. எனது பங்கிற்கு நீலக்கடல், மாத்தாஹரி என்ற இரண்டு நூல்களை எழுதினேன். ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துள்ளது அதில் செய்திருக்கு பல முயற்சிகளை பாராட்டுகிறவர்கள் ஒருபக்கமெனில், உள்ளார்ந்த எரிச்சலில் உதாசீனப்படுத்தும் மனிதர்களுமுண்டு. நீலக்கடலுக்கும் மாத்தாஹரிக்கும் ஏன் எனது எந்தப்படைப்பிற்கு விமார்சனங்களை லாபி செய்து பெற்றவனல்ல. எழுதியவர்களை அவர்களின் விமர்சனத்திற்குப்பிறகே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கத்திய படைப்பாளிகளின் பெயர்களை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் சற்று உரத்து பேசத் தொடங்கியிருக்கிறோம்.  இன்றைய மேற்குலகைப்பற்றியும் அதன் படைப்புகளையும் கொண்டாட வழக்கம்போல இவர்களுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படலாம்.

——————————–

மொழிவது சுகம்:ஜூன் 16

பிரான்சில் என்ன நடக்கிறது?: மூன்று பெண்கள்

ராணிகள் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கக்கூடுமென்பதால், அவர்களிடம் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிற சொலவடையில், முன்னதை ஏற்கலாம் அடுத்து வருவதை பெண்களிடத்திற் சொல்ல துணிச்சல் வேண்டும்.

ஆன் சேங்க்ளேர் (Anne Sanclair)

அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். உண்மையில் சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). சிறந்த பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர், சோஷலிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், மிதவாதி. பிரான்சுநாட்டில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில் இடதுசாரியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆதரவைப் பெற்றவர். அப்போதைய அதிபராக இருந்த சர்க்கோசி UMP எனும் வலது சாரிகட்சியின் சார்பில் அதிபரானவர். கொஞ்சம் தந்திரசாலியுங்கூட. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அவர், உள்ளூர் அரசியலிலில் இருந்து,  எதிர்காலத்தில் தமக்கு எதிராக நிற்கக்கூடிய சோஷலிஸ்டு வேட்பாளரை களத்திலிருந்து வெளியேற்றினால் – உள்ளூர் மக்களிடமிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற்றினால் – ஓரளவு தொமினிக்கின் செல்வாக்கைக் குறைக்கலாம், அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும் செய்யலாமென கருதி தந்திரமாக டொமினிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்தார். ஓர் எதிர்கட்சிதலைவரின் திறமையை மதித்து உலக அரங்கில் பொறுப்பான பதவியில் அமர்த்திய சர்க்கோசியின் தயாள குணத்தை அப்போது புகழாதவர் எவருமில்லை. சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. உள்ளூர் பிரெஞ்சு ரகசியபோலீஸார் தெரிவித்த தகவலின்படி டொமினிக் பெண்களென்றால் கார்த்திகை மாதத்து நாயாகிவிடுவார் என்ற உண்மை சர்க்கோசிக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சர்க்கோசி எதிர்பார்த்ததுபோலவே எல்லாம் நடந்தது. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் தமது பெயரை பிரேரிப்பதற்காக பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க்கில் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல் அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக டொமினிக் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, வழக்கு, சிறைவாசம். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. தொடர்ந்து பிரான்சு நாட்டிலும் அவருக்கெதிராக பல பெண்கள் குற்றம் சாட்டினர். பெண்பத்திரிகையாளரில் ஆரம்பித்து, கால்கேர்ள்கள் வரை இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமலில்லை. இதில் சர்கோசியை சுலபமாக குற்றம் சாட்டமுடியாது. டொமினிக்கின் பலவீனத்தை அவர் பயன் படுத்திக்கொண்டார். அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழிநீர் பானையில் விழுந்தார்.

ஆனால் இங்கே சொல்லவந்தது டொமினிக் பற்றியோ சர்க்கோசி பற்றியோ அல்ல  டொமினிக்கின் மனைவி குறித்து. நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. சம்பவம் நடந்தது மேற்கத்திய நாடொன்றில், குறிப்பாக பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி (பில் கிளிங்டன் போல அல்ல, இரவுவேளைகளில் இதற்கெனவே டொமினிக் அலைகிறவரென வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில்), மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது.  தாம் சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். பத்ரிகையாளர்களிடம் தம் குடும்பபிரச்சினையை பிறரோடு பகிர்ந்துகொள்ளவிருப்பமில்லையென தெரிவிக்கிறார். வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி நட்சத்திரம், பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள்.

செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். தோற்றதற்கு சோஷலிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக அப்போதிருந்த ஒலாந்து சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றசாட்டு உண்டு, இக்குற்றசாட்டிற்கு பின்புலத்தில் இருந்தவர் யாரென்று அடுத்துவரும் வரிகளை படித்தால் புரிந்துகொள்வீர்கள். 2012ல் அதிபர் தேர்தலின்போது கட்சிக்குள் ஆளுங்கட்சிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவதென்ற தேர்தல் நடந்தது.  டொமினிக் போட்டியிடவாய்ப்பில்லை என்றானபிறகு,  கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்வுக்காக சோஷலிஸ்டு கட்சியில் ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் செகொலன் ரொயால் ஒருவர். ஆனால் துரதிஷ்டவசமாக முதல் சுற்றில் தோற்றார். இரண்டாவது சுற்றில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஒலாந்தை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

செகொலன் ரொயால் பற்றிய பிற தகவல்கள் முக்கியமானவை. அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிள்ளைகளும் உண்டு. முந்தையை சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இப்பெண்மணிக்குண்டு.  2006ம் ஆண்டுவரை ஒலாந்தோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறார்.  2006ல் ஒலாந்து வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் பிரிகிறார்கள். அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்விலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைகொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது தங்கள் தந்தைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள்.  செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடதுவதைபோலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவ்ரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள். அதை கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த பிரதேசத்தில் வருகிறபோதும் அதேக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது.  புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவதுகூட பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும், அதைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். சோஷலிஸ்டுகட்சி மட்டுமல்ல பிரான்சே கொந்தளித்து போனது. இப்பெண்மணி இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகள் அனைத்தும் விளாசிதள்ளிவிட்டன. ஒரு பக்கம் மணச்சடங்குகளில் ஒப்புதலில்லை, தொடர்ந்து பத்ரிகையாளராக இருந்துகொண்டு சுதந்திரமாக இருக்கப்போகிறேன் என அறிவித்துக்கொண்டே, இன்னொரு பந்தத்தை புறவாசல்வழியாக நாகரீகமற்ற வகையில் நிரூபணம் செய்வதாக விமர்சனங்களை வைக்கப்படுகின்றன. நெருக்கடியான நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒலாந்துவிற்கு இது கூடாத தலைவலி. ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்னசங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள்.  அவரது புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதி செய்கின்றன. இதையே கையாளதவர் நாட்டின் நெருக்கடியை எப்படி கையாளுவார் என்கிறார்கள் எதிர்கட்சிகாரர்கள்.

ஆன் சேங்க்ளேர் – வலேரி திரேவிலெர் இருவருமே மேற்கத்திய கலாச்சாரத்தில் விளைச்சல். பண்பாடு நாம் கற்ற ஞானத்தின் எடைசார்ந்ததல்ல, நம்மை முன்னிருத்திக்கொள்ளும் வகைமை சார்ந்தது.
——————————–