Category Archives: மொழிவது சுகம்

பின் – பின்நவீனத்துவம்

நண்பர் தமிழவனுடன் ஒரு முறை உரையாடியபோது, பொதுவில் இன்றைய தமிழ் கதையாடல்கள் மேற்கு உலகோடு இணைந்து பயணிக்கவில்லை என்றேன். கிழக்குக்கென்று (நமக்கென்று?) ஒரு மரபு, பண்பாடு, இருந்தது. எண்ணமும் சிந்தனையும் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்த காலமொன்றும் இருந்தது. இன்று பழங்கதைகளாகிவிட்டன. எஞ்சி இருப்பவற்றை விதந்தோதக்கூட மேற்கத்திய மொழிகளும் மேற்கத்திய உத்திகளும் தேவை என்கிறபோது ஒப்பீடல் தவிர்க்க முடியாததாகிறது. தமிழில் ‘புதினம்’ என்று நாம் பொருள் கொண்டிருக்கிற சொல் நாவல் (Novel) ஆங்கிலச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. பிரெஞ்சு மொழியில் அதனையே ரொமான் (‘Roman) என்கிறார்கள். இடைக்காலத்தில் மேட்டுக்குடிகள்,  கல்வியாளர்கள், மதகுருமார்களுக்குரிய மொழி லத்தீன். அதேக்காலத்தில் சாமான்ய மக்களுக்கென எழுதப்பட்டவை ‘ரொமான்’ அல்லது ‘புதினம்’. பதினாறாம் நூற்றாண்டில் வெகுசனத்திற்கென எழுதப்பட்ட ‘புதினங்களுக்கு’ இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. எதார்த்த உலகை முன்னெடுத்துச்சென்ற பாத்திரங்களைக்கொண்டு புனையப்பட்டவை அவை. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேட்டுக்குடியினரும் இணைந்துகொள்ள, பிற எழுத்துகளைப்போலவே  அறத்தைப்போதிக்கப் ‘புதினங்களுக்குப்’ பரிந்துரைக்கப்படுகிறது. வடிவமைப்பில் மாற்றங்கள் நுழைகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அண்மைக்காலம் வரை புறத்திலும் அகத்திலும் பல மாற்றங்களுக்கு மேற்கு நாடுகளில் புதினங்கள் உள்ளாயின.

எனினும் புதின உலகில் இருபதாம் நூற்றாண்டு தனித்துவம் பெற்றது: கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் படைப்பிலக்கியவாதிகள்  உலகம், சமூகத்தின் அமைப்பு, அவற்றில் மனிதர்களின் பங்களிப்பு முதலானவற்றை – எதார்த்த பார்வையில் சொல்லவேண்டுமென்கிற கோட்பாட்டுடன் இயங்கினார்கள். சார்த்துரு (Sartre), செலின்(Céline), ப்ரூஸ்டு(Proust) போன்றவர்கள் அவர்களில் சிலர். உண்மையில் இவர்களுடைய பார்வைக்கு எல்லைகற்களற்ற நிலையில், இப்படைப்பிலக்கியவாதிகளின் புதிய முயற்சிகள் எதார்த்தம் பற்றிய பொதுஅறிவைக் கேள்விக்குட்படுத்தின.  இருபதாம் நூற்றாண்டில் அடுத்து வந்தவர்கள் வேறுவகையானவர்கள். வாய் வேதாந்தத்தில் நம்பிக்கைக் கொண்ட கூட்டமிது. கற்பனையில் வாழ்ந்த உளப்பிணியாளர்கள் என அழைப்பதிலும் தவறில்லை. முன்னோடிகள் என அழைக்கப்படும் அவான் – கார்டிஸ்டுகள் (avant-gardiste) என சொல்லப்பட்ட இவர்களே மீஎதார்த்தம்,  நவீன புதினம் என்கிற le nouveau- roman முதலான வகைமைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், நிகழ்காலத்திலும் பிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறதென்பதை அறிவதற்கு முன்பாக புதினங்களின் வடிவமைப்புகளையும், அவற்றின் கட்டுமானத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

வடிவங்களைப்பொறுத்தவரை பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் அவை மூன்றுவகை:

1- மரபு வழி புதினங்கள் (The traditional novel): ‘அந்தக் காலத்திலே’, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு’ அல்லது நேற்று நடந்ததென ஆரம்பித்து கதை சொல்லலை தொடங்குவது. இறந்தகால சம்பவங்களை நிகழ்காலபடுத்துவது. இங்கே பாத்திரங்கள் நாய், பூனையாகக்கூட இருக்கலாம், அவை அறிவு ஜீவிகள். கதைசொல்லல் படர்க்கையில் அமைய எழுத்தாளன் தூண் துரும்பு எங்குமிருப்பான். மேற்கத்திய உலகைப்பொறுத்தவரை, இவ்வடிவம் அருகிவருகிறது.

2. சுய சரிதை புதினங்கள் (The autobiographical novel):  உண்மையும் புனைவும் கலந்தது – கதைசொல்லியின் வரலாறு, அனுபவங்கள், எதார்த்த உலகத்திடம் அவனுக்குள்ள முரண்கள், பிணக்குகள்.. முதலானவை தன்மையிற் வெளிப்படும். கதைசொல்லி ஆசிரியனாகவும் இருக்கலாம், துணைமாந்தர்கள் அவனுடைய உறவுகள் நண்பர்களாகவும் இருக்கக்கூடும். கடந்தகாலம், நிகழ்காலமென்று எதையும் கதைப்படுத்த முடியும். இவ்வகையான சுயசரிதை புதினங்களை ஒருவனுடைய சுயத்தைப் பேசும் எழுத்துக்கள் என்றவகையில் பிரெஞ்சு மொழியில் ‘Les écritures de soi’, என்கிறார்கள். பெரும்பாலான இன்றைய புனைவுகள் சுயசரிதைகளுக்குள் அடங்குபவை. இவற்றில் பல உட்பிரிவுகளுண்டு: சுயபுனைவு என்கிற Autofiction, புற உலகுடனான மோதலிலுறும் தனது அகவய வலிகளுக்காகப் புலம்பிக்கொண்டே, பிறர்சார்ந்த தனது வாழ்க்கையை  நியாயப்படுத்தும் சராசரி மந்தர்களைப்பற்றிய Auto mythobiographie, பிறகு நாம் பலரும் அறிந்த Curriculum vitae அவற்றுள் சில. இவற்றைப் பற்றி விரிவாக தமிழ் படைப்புலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும்.

3. கதைக்குள் கதை இதனைப் பிரெஞ்சில் ‘le Roman à tiroirs’ அன அழைக்கிறார்கள். பிரதானக் கதையாடலுக்கிடையே உபகதைகளை சேர்ப்பது. இவ்வடிவம் இந்திய மரபிற்குப் புதிதல்ல.

புனைவுகள் வடிவங்கள் அடிப்படையில் வேறுபடுவதைப்போலவே அவற்றின் கட்டுமானத்தின் அடிப்படையில் வேறுபடுத்தலாம்

1. படைப்பிலக்கிய இயக்கங்களோடு தொடர்புடையவை (Le Classicisme, le Symbolisme, le Surréalisme etc..).

2. மனக்கிளர்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளை மையயமாகக்கொண்ட ரொமாண்டிக் புதினங்கள்

3. எதார்த்தவகை புனைவுகள். நடைமுறை உலகை, கருப்பொருளாகக்கொண்டு எழுதப்படுபவை

4. கதை சொல்லலில் புதிய நுட்பங்களையும், வழமைக்கு மாறான புதிய முயறசிகளையும் மேற்கொள்ளும் ‘நவீன புதினங்கள்’ – le Nouveau- Roman..

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்- இருபத்தோராம் நூற்றாண்டில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவும் பிரெஞ்சு படைப்புலகம் வடிவத்திலும், கட்டுமானத்திலும் இறுதியாகசொல்லப்பட்ட இரண்டின் வழிமுறைகளையே தேர்வு செய்து இயங்குகின்றன. இலக்கியகோட்பாடுகளையெல்லாம் உதறிவிட்டு வடிவத்திலும் கதை சொல்லலிலும் கடந்த 30 ஆண்டுகளாக விட்டேத்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள் நுழைந்திருக்கிறார்கள்.  இவர்களில் சிலருக்கு அகவயமும், நடப்பியல் வாதமும் கூடாப்பொருட்கள். கடந்தகாலத்தில்  மானுடவியல், மொழியியல், உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இலக்கிய மாந்தர்களெல்லாம் இலக்கிய உற்பத்திகளேயன்றி படைப்புகளல்ல என்பது இவர்கள் வாதம். இங்கே கவிஞரும், மெய்யியல் அறிஞருமான போல் வலெரி கூறுவதுபோல அவான்-கார்டிஸ்டுகளின் படைப்புகள், ” காகிதக் குடல்களாலான மனித உயிரிகள்(1). இந்நிலையில் எதார்த்தம், அகவயம் பற்றிய இலக்கியங்களைப் படைக்கிறோம் என்பதெல்லாம் ஒருவித ஏமாற்றுவேலை. இவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் அடைப்புக்குறிக்குள் இயங்கவேண்டிய மொழி அதாவது அல்ஜீப்ராகணிதத்தின் சூத்திரத்தைப்போல; அதுவன்றி தன்னைப்பார்த்துக்கொள்கிற கண்ணாடியாகவும், தனக்குரிய விருப்பமான களமாகவும், நேரங்காலமின்றி எதையாவது தோண்டிகொண்டிருக்கிற தனது கட்டுமானப்பணி கேந்திரமாகவும் இலக்கியத்தை அமைத்துக்கொள்வதென்பது இவர்களின் தேர்வு, அவற்றில் கடந்தகால வரலாறுகளும் இருக்கலாம், சொந்தக் கதைகளும் இருக்கலாம். விமர்சனங்களைக் குறித்தோ, இலக்கிய சூத்திரங்களைக்குறித்தோ துளியும் அக்கரையற்றவர்களாய், செயல்படுகிறார்கள்.  வேண்டாமென்கிறபோதும் இலக்கிய விமர்சகர்கள் விடுவதாக இல்லை, இப்புதிய படைப்பிலக்கியத்தை ‘செயப்படுப்பொருள் குன்றா வினை சார்ந்தது’ (Transitive), என அழைக்கிறார்கள், அதாவது செயப்படுபொருளை அனுமதிக்கும் வினைச்சொல்லின் செயல்பாட்டுடன் இப்புதியவகை படைப்புகளைப் பொருத்துகிறார்கள்.

இப்புதிய அணியின் வரவு 1979 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை தாங்கள் ஒவ்வொருவரும் தனித்தவர், மற்றவரிடமிருந்து வேறுபட்டவரென தங்கள் இருத்தலை உறுதிசெய்தது. அலென் ரோப் கிரியே (Alain Robbe Grillet ) நத்தாலி சர்ரோத் (Nathalie Sarraute), மார்கெரித் துராஸ் (Marguerite Duras), குளோது சிமொன் (Claude Simon) ஆகியோர் அவர்களில் முக்கியமான ஒரு சிலர். இன்றைக்கு அவர்கள் கிளேசியோ (Clèzio), மிஷெல் ஹ¥ல்பெக் (Michel Houellebecq)  பத்ரிக் மொதியானோ (Patrick Modiano, மரி தியாய் (Mari Ndiaye) என வேறுபெயர்களில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இவர்களின் நூல்களை வாசித்தவர்கள் நிகழ்ந்த மாற்றத்தை உணருகிறார்கள். இப்படைப்பிலக்கியவாதிகளின் எழுத்துக்களில் முந்தைய படைப்பாளிகளின் சாயலில்லை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிரெஞ்சு படைப்புலகத்தை ஆட்டிப்படைத்திருந்த ‘சடங்கிய விதி’களைத் தளர்த்திக்கொண்டு , பதிலாக ‘தனிமனித இருப்பு, ‘குடும்பம்’ சமூக அமைவு ஆகியனவற்றினை ஊடுபாவாகக்கொண்டும், பிரெஞ்சு இலக்கிய உலகம் பாராமுகமாக இருந்த துறைகளிலும் அக்கறை காட்டுகிறார்கள். வேடிக்கை என்னவெனில் இல்லாத ஒன்றையும் இவர்களுக்கு எழுத்தாக்க முடிவது, தமிழிற் சொல்வதுபோல மணலில் கயிறு திரிக்கவும் இவர்கள் அறிந்தவர்கள். எழுத்தாளரும் விமர்சகருமான பியர் ழூர்து (Pierre Jourde), “இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே, எல்லாவகையான வரைமுறைகளையும்”, கடந்து எழுதிக்கொண்டிருக்கிறோம்”, என்கிறார். இந்திய இலக்கிய மரபை அறிந்த நமக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. படைப்புலகில் இருவகையான எழுத்துகள் இன்றுள்ளதாய் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதிலொருவகை நுட்பமும், அழகியலும் இணைந்த புனைவு; மற்றது வெகுசன இரசனைக்குரியவை. மேற்குலகைப் பொறுத்தவரை இவை இரண்டுமே கலந்ததுதான் இன்றைய இலக்கியம் என்கிறார் பியர் ழூர்து.

– நன்றி -மீண்டும் அகரம்

———————————————————————————–

1. “être aux entrailles de papier” Cd. page 14, la littérature française aujourd’hui- Dominique Viart et Bruno vercier

மொழிவது சுகம் ஜூலை -27 2013

குறவர்கள், ஜிப்ஸிகள், ழித்தான்கள்(Gitans): தென் இந்தியா  – ஐரோப்பா: ஓர் உறுத்தும் உண்மை

முழங்கால் முட்டியைத் தாண்டாத சிறுகட்டங்களிட்ட நிறமங்கிய பாவாடை, மார்புகளின் பாரத்தை மறக்க அடிவயிற்றையும், மேற்கைகளையும் கடித்து சமாளிக்கும் இரவிக்கை, வெத்திலை சாறில் ஊறி காவியேறிய மஞ்சள் பற்கள் கத்திரிவெயிலில் வேர்ப்பதும் உலர்வதுமாக இருக்கிற பின்கழுத்து, செம்பொன்நிறப் புழுதிவாடை தணியாத  கொண்டை, கடுகளவுமணிகளின் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், காவி வண்ண அலங்கார அணிவகுப்பு, தோளில் தொங்கும் தூளியில் ஈக்கள் மொய்க்கும் குழந்தை, தலைச் சும்மாடில் ஒரு கோரைப்பாய் என வருடங்கள் தோறும்  சித்தேரிக்கரையில் புளியமரங்களுக்கடியில் டால்டா டின்களுடன் வந்திறங்கும் குறத்திகள், வெக்கை சூடிய பரதேவதைகள்.

கிராமத்து நண்பணிடம் அப்போது நடத்திய உரையாடல் பசுமையாக நினைவில் இருக்கிறது. பூனையாக இருந்த நாம நாயாக அலையறோமே இது தேவையா? என்ற எனது கேள்விக்கு, ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்த அவன் பதில், நாம எப்போது பூனையாக இருந்தோம்?

அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில், படித்த நூல்களில் ஆர். எல். ஸ்டீவன்ஸன் என்று நினைவு. நூலில் பெயர் Kidnapped அல்லது The Black arrow வாக இருக்கலாம், அல்லது இரண்டுமே அல்லாத வேறொரு நூலாக இருக்கலாம், ஜிப்ஸி பெண்ணொருத்தி வருவாள். வயதான பெண்மணி என்றாலும் அவளை எனக்குப் பிடித்திருந்தது. பிறகு ‘ஷோலே’ இந்திப்படத்தில் ஜட்கா ஒட்டுகிற பெண்ணாக வந்து வளவளவென்று பேசியே கவனத்தை ஈர்க்கிற ஹேமாமாலினி உடை அலங்காரம், ஜிப்ஸிபெண் தோற்றத்தில் அத்தனை ரம்மியம், எந்தக் காரணத்திற்காக ‘ஷோலே’ படம் சக்கைபோடுபோட்டதோ எனக்குத்தெரியாது, நான் ஐந்துமுறை படத்தைப்பார்க்க ஹேமாமாலினி என்கிற ஜிப்ஸி தேவதை ஒரு காரண அருவம். அண்மையில் ஜெய்ப்பூரில், முழங்கை மறைத்த சட்டையும் கண்ணாடிச்சில்லுகள் பதித்த மஞ்சளும் அரக்குவண்ணமும் கலந்த கணுக்கால் பாவாடையும், முலைக்காம்பைக் கவ்வியிருந்த குழந்தையை பக்கத்திலிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ப்ரும்ப்ரும்ர்ர்ர்ம்.. என்று முழங்கிய மேளத்திற்கு, இராஜஸ்தானியா இந்தியா என்ற  குழப்பமானதொரு மொழியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிக்குப் பாட்டுபாடினாள்.

பிரான்சு நாட்டிற்கு 1985ல் வந்தேன். பிரான்சு நாட்டில் எல்லா நாட்டினரும், எல்லா மதத்தினரும், எல்லா நிறத்தினரும் இருக்கிறார்கள், அவர்களில் தனித்த ஒரு கூட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. கணுக்கால்வரையிலான பாவாடை, மார்புகள் புடைத்திருக்கும் சோளி, முன் தள்ளிய வயிறு, நைலான் ஸ்கார்பிற்குள் பத்திரப்படுத்தப்பட்ட தலை. இருபது முப்பது வாகனங்களில் அநேகமாக பென்ஸ், பிம்டபுள்யு, காரவான் என விலையுயர்ந்த வாகனங்களாக இருக்கும், நகராட்சி இவர்களுக்கென தண்ணீர் வசதி, மின்சாரவசதி ஏற்பாடு செய்துள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார்கள், அநேகமாக நகரத்தில் திருடு, கொள்ளை என்று நடந்தால் போலீஸ்காரர்கள் நேராக இவர்களைத்தான் தேடிவருவார்கள். பிரெஞ்சு மொழியில் இவர்களை ‘Gitanes’கள் என அழைக்கிறார்கள். இதே பெயரில் குறைந்தது மூன்று பிரெஞ்சு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. என்பங்கிற்கு ஒரு சிறுகதையை எழுதினேன். காரணம் இருக்கிறது.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த கதைபோல ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்து வந்த கதையொன்று இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு  அங்கேரி நாட்டைச்சேர்ந்த வயி இஸ்தவன் (Valyi Istvan) என்ற இளைஞர் இறையியல் படிக்க லேய்து (Leyde) பல்கலைகழகத்தில் சேருகிறார். ஊரில் அவர் குடும்பத்திற்கு பெரியதொரு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் Tsigans (Gitans) உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் நாடோடிமக்கள் வேலை செய்தார்கள். அவர்கள் பேசும் மொழிக்கும் அதே பல்கலைகழகத்தில் சகமாணவர்களாகவிருந்த மலபாரிகள் பேசிய மொழிக்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டாராம். ஆயிரம் மலபாரி சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து தனது பண்ணை ஆட்களிடம் -Tsigans- காட்டியிருக்கிறார். அவர்கள் அச்சொற்களின் பொருளை சரியாகச் சொன்னார்களாம். இப்பட்டியல் எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் ப்ரே (George Pray) என்கிற பல்கலைக்கழக ஆசாமி ஒருவரிடம் சிக்க  அவர் 1776ம் பல்கலைகழக ஜர்னல் ஒன்றில் பதிசெய்ததாக ஒரு கிளைக்கதையும் உண்டு. .

1990 ஆண்டு இயான் ஆன்கோக் (Iyan Hancock) என்ற டெக்ஸாஸ் பல்கலைக் கழக ஆசிரியர் ஒருவர், ரொமனிகளைப் பற்றி நிறைய ஆய்வு செய்தவர், ரொமானியர். ருமேனிய நாட்டில் இந்நாடோடிமக்களுக்கு ரொமானிகள் என்றுபெயர். இன்றும் ஐரோப்பாவெங்கும் பயணிக்கிற இந்நாடோடிமக்கள் (Gitans) அதிகம் வசிப்பது ருமேனிய நாட்டில்தான். இயான் ஆன்கோக், வயி இஸ்தவன் ஆய்வு செய்ய நினைத்தார். உண்மையில் அப்படி ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. லேய்டு பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். பல்கலை ஆவணங்களை ஆய்வுசெய்ததில் அப்பெயரில் எவருமே அங்கே படித்ததில்லை என்ற உண்மையைக் கண்டறிகிறார். அவ்வுண்மை தெளிவற்ற பல பதில்களுக்குக் காரணமாயிற்று. பல்கலைகழக மாணவராக இல்லாமலிருந்து அங்கு அவ்வப்போது வந்துபோனவராக இருக்கலாமென்று சிலரும், அக்கண்டுபிடிப்பே அவருடையது இல்லை என்பவர்களும் இருக்கின்றனர்.

எது எப்படியிருப்பினும் இந்நாடோடிகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பூர்வீகப்பந்தம் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடபெற்றுவருகின்றன.  மொழிவகையில் ஒற்றுமைகள் இருக்கின்றனவாம். உதராணமாக ‘சூரி’ (கத்தி), நாக் (மூக்கு) போன்ற சொற்கள் அதே பொருளில்  ரொமானி மொழியிலும் உபயோகத்தில் இருக்கிறது என்கிறார்கள். அதேபோல பீஸ் (இருபது) என்ற சொல்லும் ரொமானி மொழியில் இருக்கிறதாம். இவற்றைத் தவிர வேறு வார்த்தைள் இல்லையெனவும் நினைக்கிறேன். நான் சந்தித்த ழித்தான்கள் (நாடோடிகள்) இரண்டு மூன்று பேர் , எங்களுக்கு இந்தியா பூர்வீகமென்று கூறிவிட்டு இச்சொற்களை மட்டுமே நினைவுபடுத்துகிறார்கள். ‘ஷோலே படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள், இந்திப்படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். தவிர இந்நாடோடிமக்களில் ஒரு பிரிவினரின் பெயர் சிந்திகள்.

அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்பதற்கு ஆதாரமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவர்கள் ஓரிடத்திலும் நிலையாக இருப்பவர்களில்லை என்பதால், இந்தியாவின் வடமேற்குபகுதிகளில் குடியேறி சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போயிருக்கலாம், என்கிறார்கள். ஆனால் அரபு மொழியின் தாக்கமேதும் அவர்களிடத்தில் இல்லையென்பதால் குறுகிய காலத்திலேயே அங்கிருந்து பைஸாண்ட்டின் பேரரசு ஊடாக ஐரோப்பாவிற்குள் வந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

அங்கேரிய நாட்டு மொழியியலாளர் ஜோசெப் வெக்ரெடி (Jozef Vekredi)யின் ஆய்வுப்படி (1988) இவர்கள் குற்றபரம்பரையினரென்றும் 7ம் நூற்றாண்டில் அரசாண்ட இந்திய மன்னர்களுக்கு வேண்டாதவர்களாகிஇருக்கலாம் என்கிறார். மாறாக அமெரிக்கப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கென்னத் ப்ளாசு (Kenneth Blachut) 2005ல் வரையறுத்துள்ள முடிவின்படி, இவ்வெளியேற்றம் 6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம். கி.மு. 1500ல் தென் இந்தியாவிலிருந்து வெளியேறி (அவரது கருத்தின்படி ஆரியர்கள் இப்பிரதேசத்திற்கு வந்ததும், இவர்கள் வெளியேற்றமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாம்.) பஞ்சாபில் பலகாலம் வசித்துவிட்டு அதன் பின்னர் ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள்.

ஆன்கோக் வேறொரு கருத்தையும் முன்வைக்கிறார். கஜின்யின் படையெடுப்பால் இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவர்கருத்து. அவரால் கைது செய்யப்பட படைவீர்கள் (ஷத்திரியர்கள்) பின்னாளில் துருக்கியருடன் கலந்து ரொமானி என்ற இனத்தவ்ர்களாக மாறியிருக்கலாம் என்கிறார்.

ஆனால் இன்று Tsigans, Roms, Gypsys, Gitans என பலபெயர்களில் அழைக்கப்படும் இம்மக்கள் ஐரோப்பியர்களுக்கு வேண்டாதவர்கள். நாடற்றவர்களான இவர்கள் இரண்டாம் உலகப்போரில் யூதர்களைவிட அதிக எண்ணிக்கையில் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டபோதிலும், இவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை.அண்மையில் பிரான்சுநாட்டின் ஒரு நகரத்தின் மேயர் தனது நகரத்தில் இம்மக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதென்று சொல்லவந்தவர், ‘இட்லர் இன்னும் அதிகம்பேரைக் கொன்றிருக்கலாம், அப்படிக்கொன்றிருந்தால் நமக்கு இவர்களால் பிரச்சினகள் வந்திருக்காது’ – எனத் தெரிவிக்கப்போக, மனித உரிமைகள் அமைப்பு வழக்குபோட்டிருக்கிறது, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்ளது.

நன்றி :  Courrier International le 18 juillet 2013, Cidif
———————————————————————-

மொழிவது சுகம்: ஜூன் 22-2013

1. அண்மையில் புதுவையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்

துளிப்பா சீனு தமிழ்மணிTamizh maNi -2ஏதோ ஒரு பறவை அல்லது விலங்கு, தின்றதைப் போடுகிறது, பூமிப்பெண் சூல்கொள்கிறாள், விதைகருவாகிறது; மேகமும் சூரியனும் நீராகவும் ஒளியாகவும் உதவிக்கு வருகிறார்கள்; விதைகள் முளைவிடவும், துளிர்விடவும் அவை கன்றாகி மரமாகி, பூவும் காயுமாகி மீண்டும் ஒரு சுழற்சிக்கு காரணமாகி, காரியங்களைச் செய்கிறது. இவ்வுலகும் நேற்றுக்கும் மேலானதொரு நாளை சமைத்து திருப்தியுறுகிறது. தன்னை வளர்த்த மனிதனுக்கு மட்டுமே நிழல், தன்னை உபயோகிக்கத் தெரிந்தோருக்குமட்டுமே எதிர்காலமென மரமோ, ஞானமோ அல்லது உலகின் ஏனையோ கூறுகளோ இயற்கையோ நியதிகளை வகுத்துக்கொண்டு ஒழுகுவதில்லை. மனிதன்மட்டுமே, தன்னைச்சுழன்றுவரும் வெளி என்ற மையத்தை மனதில் வைத்து இயங்குகிறான்; தான், தன் நலனை அடிப்படையாகக்கொண்ட உறவுகள் என வாழப் பழகியிருக்கிறான். தனது பசியும், தன் காமமும், தன் கோபமும், தன் தேவையும் அவனது அக்கறை பட்டியலில் மட்டுமல்ல; உறவுகள் நட்புவட்டங்கள், அண்டைமனிதர்கள், இவனை யாரென்றே அறிந்திறாத மனிதர்கள் ஆகியோர் பட்டியலிலும் முதலில் இடம்பிடித்து பராமரிக்கபடவேண்டியவை என நினைக்கிறான். தான் எத்தனை பெண்களைத் தேடினாலும் படுத்தாலும் தப்பில்லை, மனைவி இன்னொரு ஆணிடம் பேசானிலேத் தப்பு, தான் எத்தனை நண்பர்களைத் தேடினாலும் தப்பில்லை ஆனால் தன் நண்பன் இன்னொரு நண்பனைத் தேடிக்கொண்டால் அவனோடு நேரத்தை செலவிட்டால், இவனுக்குக் காய்ச்சல், தூக்கம் பிடிப்பதில்லை. மனிதரிடமுள்ள இந்த இயற்கை குணத்தோடு முரண்படும் மனிதர்களும் இல்லாமலில்லை. இவ்வுலகம் தொடர்ந்து இயங்கவும் மானுடம் மேலானதொரு வாழ்க்கையை நாளை எட்டவும் அமைதியாக எவ்வித சலசலப்புமின்றி உயிர்வாழ்க்கையை நகர்த்த அறிந்திருக்கிறார்கள், ‘பிறருக்காக’ வாழ்கிறோம் என்ற பிரக்ஞைகூட அவர்களுக்கு வருவதில்லை, புதுவை ‘இலக்கியம் சீனு தமிழ் மணி’ அவர்களில் ஒருவர்.

குயவர்பாளையம் என்ற பகுதி புதுச்சேரியின் தோள் போன்றது. புதுச்சேரியில் நூற்பாலைகளின் மின் தறிகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த காலங்களில், ஆலைத்தொழிலாளர்களால் நிறைந்திருந்த பகுதி, அதன் எச்சசொச்சங்கள் இன்றும் ஆங்காங்கே அப்பகுதியின் சந்துபொந்துகளில் தங்கள் கடைசிமூச்சை விடுவதற்கான தருணத்தை எதிர்பார்த்து நிலைகுலைந்திருக்கின்றன. அங்கே மருத்துவர் இல்லங்கள், மருந்துக்கடைகள், தேனீர்கடை, பெட்டிக்கடை, நொறுக்குத் தீனி கடைகள், இரு சக்கர வாகனங்கள், மனிதர்கள் – அவற்றின் பேரிரைச்சல்களுக்கு மத்தியில் –  லெனின் வீதி என்ற பெயரில் தெற்கு வடக்காக ஒருவீதி. அங்கு நீங்கள் வருகிற திசைக்கேற்ப வலப்புறமோ இடதுபக்கமோ ஒருவீட்டில் மாடியில் இலக்கியம் என்ற பெயரில் பலகையொன்று தொங்கும். எழுபதுகளில் அதிகம் படித்திராத சமைந்த பெண்கள் தரிசனம் வீடுகளில் அபூர்வமாகத்தான் நிகழும், ‘இலக்கியம்’ புத்தக விற்பனைகடையும் அந்த வகைதான்.

சீனு தமிழ்மணியை முதன் முதலாகச் சந்தித்தது அப்புத்தகக்கடையில்தான். புதுவை அரசு அச்சககத்தில் பணியாற்றும் நண்பர் சீனு தமிழ்மணியும் சரி அவரது சகோதரரும் சரி அன்றிலிருந்து நேற்றுவரை என்ன காயகல்பம் சாப்பிடுவார்களோ இளமையுடன் இருக்கிறார்கள், நண்பர் நாயக்கரின் இளமை இரகசியம் வெந்நீரில் இருக்கிறது, சீனு தமிழ்மணியின் இளமைக்கு எது காரணமென்று அடுத்தமுறை இந்தியா வருகிறபோது அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். கணீரென்ற குரல், ஆனால் அளந்துதான் பேசுவார், தேவையின்றி சொற்களை விரயம் செய்வதில்லை. சொல்லவேண்டியதைச் சுருக்கமாக, பொருத்தமான வார்த்தைகளின் உதவிகொண்டு, வெளிப்படுத்திவிட்டு, தனது காரியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவார், தமிழ் மொழியும் தமிழ் தேசியமும் இரு கண்கள். உடல் வாழ்க்கைக்கு அரசு உத்தியோகத்தையும், உயிர்வாழ்க்கைக்கு ‘இலக்கியத்தையும்’ சார்ந்து வினைபுரிகிறார். பிற (தமிழ்) புத்தகக்கடை விற்பனையாளர்களிடமிருந்து வேறுபட்டவர், இவருக்கு படைப்புலகையும், படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகள்குறித்தும் சொல்ல இருக்கின்றன, மதிப்பீடுகள் உள்ளன. அடிப்படையில் ஓர் படைப்பிலக்கியவாதியாக இருப்பது காரணமாக இருக்கலாம். சீனு. தமிழ்மணியின் குடும்பமே தமிழுக்காக வாழ்கிற குடும்பமென அறியவந்தபோது பிரமித்துவிட்டேன். அவரது சகோதரர் தமிழ் நெஞ்சனும் ஓர்  சிறந்த கவிஞர், வாரிசுகளும் இவர்களின் வழித் தடத்திலேயே பயணிக்கிறார்கள், நடுத்தர குடும்பமாக இருந்தபோதிலும், தந்தை பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி வருடந்தோறும் அறிவுஜீவிகளைக்கொண்டு சொற்பொழிவு ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

துளிப்பா கவிஞர்:

சொற்களின் கடைவிரிப்புகளின்றி ஆழமாகவும், நுணுக்கமாகவும், சாதுர்யமாகவும் கையாளப்படவேண்டிய கவிதை வடிவம் ‘ஹைக்கூ’ கவிதைகள். ஜப்பான் நாடு அதன் நதிமூலம். இன்று உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் அதன் இயங்குதளத்தை விரிவாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழில் துளிப்பா துறையில் நாட்டம்கொண்டு, தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் சீனு. தமிழ்மணி. இலக்கிய நண்பர்கள் பலரும் அவரை துளிப்பா சீனு தமிழ்மணியென்றே அறிந்திருக்கிறார்கள். தமிழில் துளிப்பாவுக்கென முதல் இதழைக்கொண்டுவந்த பெருமை சீனு. தமிழ்மணியெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதழின் பெயர் ‘கரந்தடி’. அவ்வாறே பத்தாண்டுகளுக்கு முன்பு ‘காவியா’ பதிப்பகத்தின் “இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற நூலுக்குத் தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவர் கவிஞர் மாத்திரமல்ல சுற்றுசூழல் போன்ற சமூல நலன் சார்ந்த துறைகளிலும் நாட்டம் கொண்டவர். அண்மையில் அவரும் அவர் நண்பர்களும் கடுமையாக உழைத்து வே. ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம்வர காரணமாக இருந்திருக்கிறார்கள்

துளிப்பாக்களில் சில பாக்கள்:

ஆங்கிலம்பேசும்
தமிழ் குழந்தை
தமிழ் பேசும் ஆங்கிலப்படம்
——
விற்ற மனையே
விற்கப்படுகிறது
“ரியல்” எஸ்டேட்
——

கோடை
மிந்துறையைத் திட்டியபடி
ஓய்வுபெற்ற மின் ஊழியர்
———-
நன்றி:
தகவல்கள் மற்றும் படங்கள்
என்விகடன் -புதுச்சேரி,

வெ.சுப.நாயகர்

நண்பர் மு.இளங்கோ வலைப்பூ

————————————————————————————

2. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

இசைவிழா

திருவையாறில் இசைகலைஞர்கள்கூடி தியாகராசர் ஆராதனைசாக்கில், இசை வல்லுனர்களும், மேடை ஏறாத கலைஞர்களுமாக கலந்து இசைமுழக்கம் செய்வதில்லையா? அப்படியொரு விழா பிரான்சிலும் நடப்பதுண்டு.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ந்தேதியன்று நடைபெறும் இவ்விழாவுக்கு அடிகோலியவர், பிரெஞ்சு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜாக் லாங் என்ற மனிதர். அதிகாரபூர்வமாக 1983ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாட ஆரம்பித்தார்கள்.

எதற்காக ஜூன் 21ந்தேதி?

கோடைகாலத்தின் கதிர் திருப்ப நாளாம் -Solstice- அதாவது சூரியன் தனது பயணநேரத்திற்கு அதிகம் அல்லது குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதை கதிர் திருப்ப நாள் எனச்சொல்லப்படுகிறது -தகவல் உபயம் விக்கிபீடியா. அந்த வகையில் ஜூன் 21ந்தேதி சூரியன் மறையாமல் வெகுநேரம் இருக்கும் நாள்.

Fête de la musiqueஇந்த இசைவிழா பிரான்சின் குக்கிராமங்கள், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் எங்கும் பொது வெளிகளில், மிகப்பெரிய அரங்குகளை அமைத்து, பெருந்திரளான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுவதோடன்றி; ஆங்காங்கே நாற்சந்திகளில், வீதிமுனைகளில், தெருவோரங்களில் பத்து அல்லது பதினைந்து ரசிகர்கள் கூடியிருக்க அமெச்சூர் கலைஞர்கள் பங்கேற்கிற எளிய நிகழ்ச்சிகள்வரை ஆயிரக்கணக்கில் நடபெறுகின்றன. நேற்று எங்கள் ஊரில் (ஸ்ட்ராஸ்பூர்)மட்டும் இருநூறுக்கும் குறையாத நிகழ்ச்சிகள். விடியவிடிய நடந்தன. திரும்பியபக்கமெல்லாம், கிடார், ட்ரம்ஸ் ஆகியவற்றின் ஓசை, கும்பல் கும்பலாக இளைஞர் பட்டாளம், ஜோடி ஜோடியாக இசை எல்டராடோவில் திளைத்த ஹிப்பிகால மனிதர்கள். எங்கும் சந்தோஷத்தின் மூச்சு. உலகம் இப்படியே நீடித்தால் எத்தனை சுகம்…

———————————————

மொழிவது சுகம் ஏப்ரல் 15

1. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி கருத்தரங்கம்

வரும் ஞாயிறு அன்று  செஞ்சியில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வரலாறு புதினம் தொடர்பாக நண்பர் புதுவை ‘இலக்கியம்’ சீனு. தமிழ்மணியும், செஞ்சியைச் சேர்ந்த நறுமுகை என்ற நண்பரும் குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் ஓர் கருத்தரங்கையும்,தொடர்ந்து கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இடம்: செஞ்சி- திருவண்ணாமலை சாலை, ஏ.என்.ஏ சிற்றரங்கு,

நேரம்: காலை 9.30  அளவில்.

சிறப்பு விருந்தினர்:
திருவாளர்கள்: பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி
ந. முருகேசபாண்டியன், திருச்சி
மீனா, திருவண்ணாமலை

நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1 (1)

2. இந்தியப் பயணம்:

கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருக்கிறேன், வெகுகாலத்திற்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம். விமான சேவை நன்றாகவே இருந்தது. புறப்பாடும், அடைதலும் உரிய நேரத்திலிருந்தன. லூ·ப்தான்சா வைக் காட்டிலும் அனைத்திலும் மீசுரமெனச் சொல்லவேண்டும். ஸ்ட் ராஸ்பூர்(Strasbourg) நகரில் வசிப்பதால் எனக்கு ஜெர்மன் – பிராங்பர்ட்நகரம் பக்கமென்பதால்,ஜெர்மன்நாட்டு விமானமான லூப்த்தான்சா (Lufthansa)வில் (இந்தியா வருவதென்றாலும், அமெரிக்கா போவதென்றாலும்)பயணிப்பதுண்டு. இம்முறை திடீரென பயணிக்க நேர்ந்ததால் லூப்த்தான்சாவில் எதிர்பார்த்த வகுப்பு பயணசீட்டு கிடைக்கவில்லை. 800 யூரோவுக்குமேல் ஓரு நபருக்கு கொடுக்கப் பொருளாதாரம் ஒத்துழைக்காதென்பதால்
ஏர் இந்தியாவில் பயணம் செய்வதெனத் தீர்மானித்தோம். ஆயிரம் யூரோவில் மனைவியும்நானும் பயணம் செய்ய முடிந்தது. எட்டாம் தேதியே காரில் பாரீஸ்வந்தாயிற்று. ஒன்பதாம்தேதிமாலை பாரீஸ்-டில்லி பயணம். பத்தாம் தேதி காலை இந்தியநேரப்படி காலை 9.30க்கு புதுதில்லி வந்தடைந்தது. அங்கிருந்து 12.30க்கு மாற்றுவிமானத்தில் சென்னைக்குப் பிற்பகல் 3.30க்கு வந்தடைந்தோம். மாலை 7மணிக்கெல்லாம் புதுச்சேரிக்கு வந்தாயிற்று.

3. காலச்சுவடு கலந்துரையாடல்

ஏப்ரல் 12,13, 14 மூன்று நாடகள் காலச்சுவடு நண்பர்களிடையே கன்னியாகுமரியில்  ஓர்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இரயில் பயணச்சீட்டினை முன்னதாகவே எனது புதுவை முகவரிக்கு அனுப்பியிருந்தனர். முதல்வகுப்பு ஏ.சி கோச், பெர்த் வசதியென சொல்லப்பட்டாலும் எனக்கு உறக்கமில்லை. வசதியான பயணமில்லை. கன்னியாகுமரி அடைந்தபோது காலை 6.50. முதல்நாள் விழுப்புரத்தில் மாலை 8.15க்கு ஏறியது. இரயில் நிலையத்திற்கு கண்ணனும், நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். நான் பயணம் செய்தசென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சலபதி, யுவன்சந்திரசேகரர், மகாலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்துகொண்டேன். பி.எ.கிருஷ்ணன், சுகுமாரன், சலபதி, பெருமாள் முருகன், மோகனரங்கன், குப்புசாமி,தேவிபாரதி, யுவன் சந்திரசேகரர், பழ.அதியமான் எனபல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. பதின்மூன்றாம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4மணிக்கு விழுப்புரம், பின்னர் புதுச்சேரிக்கு காலை 6 மணிக்கும் வந்து சேர்ந்தேன்.

4. 14 மற்றும் 15 ஏப்ரல்

இரண்டுநாட்களும் சகோதரர் மகன் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. வழக்கம்போல புதுவைஇலக்கிய நண்பர்களுடன் வெயில் தணிந்தநேரங்களில் சந்திப்பு எனப்போய்க்கொண்டிருக்கிறது.
மற்றவை அடுத்த மடலில்….

மொழிவது சுகம் மார்ச் -17 -2013

1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:

பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல  இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.

பிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:

– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.

– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை

– வாக்கிய அமைப்பு முறை  சிக்கலானது.

– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.

எனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.

பிரெஞ்சு மொழி குறித்தும்,  அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்:  http://www.merriam-webster.com/info/2012words.htm

—————————————-

2. “Rem Tene, Verba sequentur’

ஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்?

போதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால்  எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம்.  “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான  ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி  குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும்  உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர்  வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது,  ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).

—————————————————————————————————————-

மொழிவது சுகம் Dec. 27-2012

தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

dgressieux உலகின் பிறபகுதிகளைப் போலவே பிரான்சு நாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து  வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி பொதுநலனுக்கென தங்கள் நேரத்தை செலவிடுவதைப் போற்றத்தான் வேண்டும்.

ஏனைய இந்தியச்  சங்கங்களைக் காட்டிலும் இந்தியத் தமிழர்களை அடையாளப்படுத்துகிற புதுச்சேரி தமிழர்களின் சங்கங்கள் நீங்கள் நினைப்பதுபோலவே எண்ணிக்கையில் அதிகம். இத்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்கள் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரமுகர்களை வரவேற்று அவர்களுக்குக் கரசேவை செய்து ஊருக்கு அனுப்பிவைப்பார்கள். அதற்கு பிரதியுபகாரமாக அப்பிரமுகர்களும் இவர்களிடம் காசு வசூலித்து நன்றிக்கடனாகப் பாராட்டுவிழா நடத்துவார்கள். இன்று உலகத் தமிழிலக்கிய மாநாடு, அருந்தமிழ் விருது என்றெல்லாம் கூத்துகள் அரங்கேறுகின்றன. இவற்றை நடத்த எத்தகுதியும் வேண்டாம் ‘குப்பனும் கடைக்குப் போனான் கூடவே அவளும்போனாள்’ என்றெழுதவோ, பேசவோ, அப்படி பேசுவதைக்கேட்டு புளகாங்கிதம் அடைவதற்குண்டான சொற்ப அறிவோ போதுமானதென்பதுதான் இதிலுள்ள விபரீதம். பிரான்சு நாட்டின் தொடர்பால் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறவர்கள் இல்லாமலில்லை. ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்’ தொல்லிலக்கியங்களைப் பிரெஞ்சுக்குக்கொண்டுசேர்த்த பெருமகன்களின் பட்டியல் பெரிது, அவர்களை இவர்களுக்குத் தெரியவும் தெரியாது:  உதாரணத்திற்கு தாவிது அன்னுசாமியையும், பிரான்சுவா குரோவின் உழைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. பிரெஞ்சு தமிழிலக்கியம் பற்றிய குறைந்த பட்ச ஞானமுள்ளவர்களுக்குக்கூட இவ்வுண்மை விளங்கும்.

இதுபோன்ற கூத்துகளில் நாட்டமின்றி இந்திய விழுமியங்களை மேம்படுத்துவதே, விளம்பரமின்றி பிரெஞ்சுக்காரர்களிடம் அவற்றைக் கொண்டுசெல்வதே எனது மூச்சு என செயல்படுகிறவர்களில் ஒருவரை அண்மைக்காலத்தில் சந்தித்தேன்: பெயர் தூக்ளாஸ் கிரெஸ்ஸியே, ‘Les Comptoirs de l’Inde’ (1) என்றொரு அமைப்பை நடத்திவருகிறார். தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஒரு பிரெஞ்சுக்காரர்.  ஆனால் பிறந்ததும் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியைப் புதுச்சேரியில் கழித்ததும், பிரான்சு நாட்டினைக் காட்டிலும் கூடுதலாக இந்தியா மீது நாட்டம்கொள்ளவைத்திருக்கிறது.  ‘இந்தியாவின் நிறைகளை மட்டுமே கவனத்திற்கொண்டு, அதன் பெருமைகளைப் பிரெஞ்சு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி’ என தன்னடக்கத்தோடு கூறுகிறார்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு பேராசிரியராக பணிபுரியும் வெங்கட சுப்பராயநாயக்கர் என்பரும் நானுமாக இணைந்து ‘Chassé-Croisé -France Inde’ என்றொரு வலைத்தளத்தைத் தொடங்கி நடத்திவருகிறோம். அதைப்பார்த்த தூக்ளாஸ் கிரெஸ்ஸியே என்னைச் சந்திக்க விரும்புவதாக மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அவர் இருப்பது பாரீஸ் நகரில், நான் வசிப்பது பிரான்சுநாட்டின் தென்கிழக்கிலுள்ள அல்ஸாஸ் பிரதேச தலைநகரான ஸ்ட்ராஸ்பூர் நகரத்தில். பாரீஸ¤க்கும் எனது நகருக்கும் கிட்டத்தட்ட 500 கி.மீ தூரம். அடிக்கடி பாரீஸ் செல்கின்ற வழக்கமுமில்லை. வியாபார நிமித்தமாகப் பாரீஸ் வருகிறபோது அவசியம் சந்திக்கிறேனென்று தொலைபேசியில் அவரிடம் தெரிவித்தேன். ஒரு மழைநாளில் அவரைத் தேடிச்சென்றேன். அவருடைய அமைப்பு இயங்கும் இடத்தைப் பார்க்க வியப்பாக இருந்தது. பாரீஸில் வேறொருச்சங்கம் நானறிந்து முறையாக அத்தனை பெரிய இடத்தில் இயங்கி பார்த்த ஞாபகமில்லை.

Indian-soldiers-exhbn-070“Les comptoirs de l’Inde என்ற இவ்வமைப்பை பிரெஞ்சு குடியுரிமைப்பெற்ற புதுச்சேரி நண்பர்களும், இந்திய பூமியை நேசிக்கும் பிரெஞ்சு நண்பர்களும் இணைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார்கள். இச்சங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு புதுச்சேரி மக்கள் ‘இந்தியா’, ‘பிரான்சு’ என்ற இரட்டை பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள். புதுச்சேரி மக்களின் இவ்வபூர்வ அடையாளத்தைப் பேணுவதும்  பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழிருந்த புதுச்சேரியின் பழைய நினைவுகளை நினைவுகூர்வதும் தங்கள் குறிக்கோள் என்றார் கெரெஸ்ஸியெ. சங்கத்தின் பெயர் கடந்தகாலத்தை நினைவூட்டிய போதிலும் தங்கள் கவனம் முழுக்க முழுக்க எதிர்காலம் பற்றியதென்றும், அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த பிரக்ஞையை பிரெஞ்சு மக்களுக்கு (இந்தியாவைக்குறித்து சரியானப் புரிதலற்ற)  தெரிவிப்பது தங்கள் நோக்கமென்றும், அப்பபணியை மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் கூறினார்.

9782849100721இந்தியா மற்றும்

புதுச்சேரி பற்றிய ஆவணக் காப்பக மையம் ஒன்றை 1997ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து  தொடங்கி நடத்திவருகிறார்கள். மூவாயிரத்திற்குக் குறையாத ஆவணங்களும், நூல்களும் இம்மையத்தில் வாசிப்பிற்கும், தகவல் சேகரிப்பிற்கும் கிடைக்கின்றன. புதுச்சேரி மற்றும் இந்தியா குறித்து ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடியவை. புதுச்சேரி மற்றும் இந்தியா பற்றிய கருத்தரங்குகள் பலவற்றை பல்கலைகழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். இந்தியாவைக்குறித்த நான்கு ஆய்வு நூல்களை வெளியிட்டிருப்பது மிகப்பெரிய சாதனை. இந்தியப் பதிப்பகங்களுடன் தொடர்புகொண்டு படைப்பாளிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் பிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிற பணியையும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர் செய்துவருகிறார். வருடத்தோறும் சங்கத்தின் அரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தொடர்ந்து இந்தியா, புதுச்சேரி, பிரெஞ்சு பண்பாட்டோடு தொடர்புடைய தமிழர்களைப்பற்றிய புகைப்படங்கள், ஓவியங்கள் கண்காட்சியையும் நடத்திவருகிறார்கள். பிரெஞ்சு தமிழர்களைப்பற்றிய பாரிய ஆய்வொன்றை (இவ்வாய்வு மொரீஷியஸ், மர்த்தினிக், குவாதுலூப், ரெயுனியோன் போன்ற கடந்தகாலத்திலும், இன்றும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்புடைய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது) கிரெஸ்ஸியெ சங்கம் நடத்தி, ஆவணப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு பலகலைகழகத்தைச்சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தேடலுடன் இங்கே வருகிறார்கள்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்திலிருந்து 9782849105047பணிஓய்வுபெற்றுள்ள தூக்ளாஸ் கிளெஸ்ஸியெ தமிழை வாசிக்கவும், பேசவும் செய்கிறார். படைப்பிலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது: மொழிபெயர்ப்பாளர்,  எழுத்தாளர். புதுச்சேரி வரலாறோடு தொடர்புடைய இரு நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தமிழில் கொண்டுவருவது அவசியமென நினைக்கிறேன்.  இந்தியப் படைப்பிலக்கியங்களை பிரெஞ்சுக்கு அறிமுகப்படுத்தும் ஆர்வம் அவரிடம்  நிறைய இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். 2011ல்இருந்து இந்திய புத்தகக் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார். அண்மையில் நவம்பர் 17 18 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நியூயார்க்கில் வசிக்கும் Abha Dawesar என்ற பெண் எழுத்தாளர் கலந்துகொண்டார்.

மேலும் தகவல்கள் அறிய:

http://www.comptoirsinde.org

——————————————

 

 

1. Les comptoirs de l’Inde, என்பதற்கு ‘இந்திய வணிகத் தளங்கள்’ என மொழிபெயர்க்கலாம். காலனிய ஆதிக்கத்தின்போது பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த இந்தியப் பிரதேசங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் இவை நான்கும் பிரெஞ்சு நிர்வாகத்தினரால் ‘Les comptoirs de l’Inde’ என அழைக்கப்பட்டன.

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012


1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

Poomaniபிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.

2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல்  ட்ரூயோ (Lyonel Trouillot)  – தருமபுரி – மாதவ் சவாண்.

Lyonel ‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்.  ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன? என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.

ஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது.  தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்கரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா? கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’  நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.

Madav Chavanஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழுக்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில்,   இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க  வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.

Strasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த பிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம்? தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும்.   Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது? இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா? La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும்.  . ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.

—————————————

மொழிவது சுகம் நவம்பர் 15-2012

எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும்   மாக்ஸ் ப்ரோடும்

நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில்  சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.  உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.

‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான்! என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா? தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான்! என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள்  சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்!” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா? எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா? எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன? எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்லது கடந்து வந்திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள்.  தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.

எழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை.  காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக்குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.

1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து  எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த  பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன.  மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார்.  டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாமே வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”,  என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள்.  இஸ்ரேல் தேசிய நூலகம்  மேற்கண்ட  தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது.  பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.

எஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா.  இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவிட்டாள். இப்போது ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது.  ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.

காப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா? தீமையா? ஒரு பட்டிமன்றத்திற்கான தலைப்பு.

——————-

 

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

 1. Domaine de Courson

நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் உத்தரவாதம் சொல்லலாம். இயற்கையின் எல்லா கோலத்தையும் காணலாம். பர்வதத்திற்குப் பதிலாக, பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த நன்கு பராமரிக்கப்பட்டுவருகிற கோட்டை. வெர்சாய் மாளிகை¨க்கும் அதனை ஒட்டிய பூங்காவிற்கும் நீங்கள் இரசிகரென்றால், நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் (19-21 தேதிகளில்) நடைபெறும் தாவரஇயற் கண்காட்சியில் ஐரோப்பாகண்டத்தைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த தோட்டக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வருடத்திய நிகழ்ச்சி நிரலில் எனது பிரத்தியேக கவனம் பெற்ற செய்தி ·பபியன் டுஷெ (Fabien Ducher) என்ற தோட்டக் கலைஞர் தாம் உருவாக்கிய மஞ்சளும் ஊதாவுமான புதிய ரோஜாமலரொன்றுக்கு பிரான்சு நாட்டின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான பெனுவாத் க்ரூ (Benoச்te Groult) பெயரைச் சூட்டுகிறார்.

2. பெனுவாத் க்ரூ (Benoîte Groult)

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டிய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி. நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. Picasso, Picabia, Jouhandeau, Paul Morand போன்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம். தாயாரின் வழிகாட்டுதலில் இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம். பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன், கிரேக்கம் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலுக்கு வருகிறார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை ஏற்படுத்தவென்று மொழியியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவல் JOURNAL A QUATRE MAINS 1958ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற LA PART DES CHOSES, ‘AINSI SOIT ELLE என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியை அளித்தன. LES TROIS QUARTS DU TEMPS, LES VAISSEAUX DU COEUR முக்கிய நாவல்கள்.

பெனுவாத் வாழ்க்கையும் எழுத்தும், இற்றை நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்துவதல்ல. ஆணுக்கு நிகரென்று பெண்ணைச் சொல்கிறார். எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்கிறார்: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம் என ஓயாமல் எழுதுகிறார். தற்போது அதற்கான வயதில் (92) – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இவரது ‘நட்சத்திர தீண்டல்’ நாவலில்  ‘மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டும் என்றார். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிசத்திற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது வாதம். சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது.

3. பிலிப் ரோத்

பிலிப் ரோத்த்திற்கும் விக்கி பீடியாவிற்குமான யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர்மாதம் 7ம் தேதி நியுயார்க்கர் இதழில் விக்கிபீடியாவிற்கு பிலிப் ரோத் திறந்த மடலொன்றை எழுதவேண்டியிருந்தது. http://www.newyorker.com/online/blogs/books/2012/09/an-open-letter-to-wikipedia.html – விக்கிபீடியாவுடன் தனிப்பட்ட அளவில் தாம் எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட பிறகு வெளியுலகம் அறியவந்தால் தமக்கு வேண்டுகோளுக்கு நியாயம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் விக்கிபீடியாவிற்கு எழுதிய பகிரங்க கடிதமது. தம்மைப்பற்றி என்னதான் விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒருநாள் நமது எழுத்தாளர் எட்டிபார்த்திருக்கிறார். பிறந்ததேதி, பெற்றோர்கள், பூர்வீகம், படிப்பு, பார்த்த உத்தியோகம், கைப்பிடித்த பெண்கள், எழுதிய நூல்கள், எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரங்களின் குலம் கோத்திரம்- முக்காலே மூணு வீசம் எல்லாம் சரி- என எழுந்திருக்கையில் ஏதோவொன்று கண்ணிற்பட்டிருக்கிறது, மனிதர் கொதித்துப்போய்விட்டார். எப்படி அபாண்டமாக தீர விசாரிக்காமல் அதை எழுதப்போயிற்று? என்ற கேள்வி. அவரைக் கோபமூட்டும் அளவிற்கு விக்கிபீடியாவில் வந்திருந்த தகவல் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவரது ‘The human stain’ நாவல் பற்றிய தகவலது. “நாவலில் வரும் கதைநாயகன் பேராசிரியர் சில்க், உண்மையில் ‘அனத்தோல் ப்ரொயார்'(Anatole Broyard) என்றும், அவரது வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டே நாவல் எழுதப்பட்டதென்றும்  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (தலவற்)களஞ்சியத்தில் நெல் மணிகளோடு, பதர்நெல்லும் கலந்திருக்க வாய்ப்புண்டென எழுத்தாளர் அறியாததது குற்றமல்ல; பதரை நெல்லென்று வாதித்த விக்கிபீடியாவின் பிடிவாதம் அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது. விக்கிபீடியாவை உடனே தொடர்புகொண்டிருக்கிறார். ‘நீங்கள் தெரிவித்துள்ள தகவல் அபத்தம், அதை உடனடியாக நீக்கவேண்டும் அல்லது திருத்தம் செய்யவேண்டும்’ என்றிருக்கிறார்.

விக்கிபீடியா தகவலுக்கு ரிஷிமூலம்: ‘The human Stain’ நூலை விமரிசனம் செய்த நியுயார்க் டைம்ஸ் இதழியலாளர், நாவலில் வரும் பேராசிரியர் சில்க் ஐயும், அக்கதையில் அவர் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாத ‘ஆப்ரோ- அமெரிக்கர்’ என்ற உண்மையும் மறைந்த அமெரிக்க எழுத்தாளர் அனத்தோல்ப்ரொயார் என்பவரோடு தொடர்புடையன என்றொரு ஒரு முடிச்சைப் போட்டிருந்தார். இதன் அடிப்படையிலே விக்கிபீடியாவும் தகவலைச் சேர்த்திருக்கிறது. இத்தகவல் பொய்யானது என்ற ரோத் உடைய வாதத்தை விக்கிமீடியா நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய பதில் “உங்கள் தகவல் நம்பகமானதல்ல” பிலிப் ரோத் தமது திறந்த மடலில் பிரச்சினையை நமக்கு விரிவாகவே சொல்கிறார். எழுத்தாளர் அனத்தோல் ப்ரொய்யாரை இரண்டு மூன்றுதடவை சந்தித்ததை ஒப்புக்கொள்ளும் ரோத், நூலை எழுதியபோது தமது கதைநாயகன் சில்கிற்கும் எழுத்தாளர் அனத்தோலுக்கும் உள்ள ஒன்றிரண்டு ஒற்றுமைகளைத் தெரியாதென மறுக்கிறார்.

‘ரோத்’ஐ பொறுத்தவரை, சில்க் பாத்திரம் அவரது நெருங்கிய நண்பர் மெல்வின் டுமன் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது. சில்க்கைப்போலவே கல்லூரியில்  வகுப்புக்கு வராத இரு மாணவர்களை ‘Spooks’ (அவர்கள் கறுப்பரினத்தவர் என்ற உண்மை அறியாமலேயே) என்று சொல்லப்போக, நிறவெறியில் உதிர்த்த வார்த்தை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி எதிர்ப்பு வலுக்க கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மெல்வின் டுமனை பணி நீக்கம் செய்ததாகவும், நண்பர் நிறத்தில் வெள்ளைத்தோல் கொண்டவரென்றபோதும்  உண்மையில் ஒரு ஆப்ரோ- அமெரிக்கரென்றும், அவரதுவாழ்க்கை நெருக்கடிகளே நாவலில் சொல்லப்பட்டதென்கிறார், ரோத்.

நமக்கும் எழுத்தாளர் வாதத்தை ஏற்காத விக்கிபீடியாவின் பிடிவாதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. நான் இப்படித்தான் எழுதினேன் எனச் சொல்கிற எழுத்தாளரை நம்பாமல் ( பிள்ளைக்குத் தகப்பன் யாரென்று பெற்றவளையன்றி வேறொருவர் சொல்லமுடியுமாவென தெரியவில்லை) , ‘அவர் அப்படி எழுதியிருக்கலாம்’ என்கிற ஒரு விமரிசகரின் ஊகத்தை நம்பும் விக்கிபீடியாவின் தகவல்களை சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. The human Stain நாவல் பற்றிய பக்கத்தில் விக்கிபீடியா தற்போது எழுத்தாளர் மறுப்பையும் பதிவுசெய்திருக்கிறது.

———————————–