Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம் பிப்ரவரி 22 -2015

1  அல்பெர் கமுய் கூற்றை பொய்யாக்கிய பாரீஸ் மெட்ரோ பயணிகள்

 

1893 ஆம் ஆண்டு அப்துல்லா சேத், காந்தியை வழக்கறிஞ்ராக பணியமர்த்திய இந்தியர். தனது வழக்கறிஞரின் தகுதி மற்றும் பணி நிமித்தம் கருதி இரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டொன்றை அவருக்கு கொடுத்தார். டர்பன்னிலிருந்து பிரிட்டோரியா பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு அது. இருந்தும் இடையில் ஏறிய ஓர் ஐரோப்பியர்,  ஓர் இந்தியருக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யம் உரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காடி வலுக்கடாயமாக முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து காந்தியை வெளியேற்றுகிறார். காந்தியின் சுயவரலாற்றில் இடம்பெறும் இச்சம்பவத்தை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்கு களமாக தென் ஆப்ரிக்கா இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. அங்கு போராடிய கறுப்பின மக்கள் சொல்கிறார்கள்.

 

நாம் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு அல்ல, இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இனவாதத்தைக் கொள்கையாகக் கொடிண்ருந்த தென் ஆப்ரிக்காவில்  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமுமல்ல., ஒரு மாதத்திற்கு முன் ‘சுத்ததிரத்திற்குப்’ பங்கம் ஏற்பட்டுவிட்டதென ஊர்கூடி தேர் இழுத்த பிரான்சு நாட்டில் நடந்திருக்கிறது. பாதிக்கப்படவர் காந்திஅல்லவென்றாலும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என முழங்குகிற  ஒரு நாட்டின் குடிமகன், அவர் செய்த குற்றம் கறுப்பராக பிறந்தது.
‘Richelieu – Drouot’ பாரீஸிலுள்ள மெட்ரோ  ரயில் நிலையம்,  தட எண் 9 செல்லும்  இரயில் நிலையம்.  கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.30 மணி அளவில் நடந்த சம்பவம். அன்றிரவு பாரீஸிலுள்ள Parc des Princes காற்பந்தாட்ட மைதானத்தில் பாரீஸ் விளையாட்டுக் குழு ஒன்றிற்கும் ( PSG) இங்கிலாந்து குழு ஒன்றிற்கும் (Chelesa) இரவு சுமார் 9 மணி அளவில் காற்பந்துபோட்டி இருந்தது.  போட்டியைக்காண இங்கிலாந்திலிருந்து வந்திருந்த  சம்பந்தப்பட்டக் குழு இரசிகர்களில் சிலர் மேற்கண்ட தட எண் 9 மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள். ‘Richelieu-Drouot’ இரயில் நிலையத்தில் இப்பெட்டியில் ஏறப்போன ஓர் ஆப்ரிக்கரை ” நிற வெறியர்கள் நாங்கள் ” எனக் த் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு அவரை இந்த ரசிகர்களில் ஒரு சிலர் ஏறவிடவில்லை. இரண்டொருமுறை அவர் முயன்றும்  தங்கள் பெட்டியில் அவரைத் தடியர்கள் அனுமதிக்கவில்லை. காந்திக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுகிற அதே சம்பவம். இச்செயல் காலம் தாழ்ந்து,  வீடியோவாக இணைய தளங்களில் வலம் வர ஆரம்பித்த பிறகு அனைவரும் கண்டிக்க ஆரம்பித்தார்கள். கண்டித்தவர்களில் இரு நாட்டுத் தலைவர்களும் அடக்கம். பிரெஞ்சு அரசாங்கம் சட்டப்படித் தண்டிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து காற்பந்தாட்ட அமைப்பும் குற்றவாளிகளைத் தண்டிக்க பிரெஞ்சு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது

 

எனினும் சில கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தேவைப்படுகின்றன. இங்கே காந்தியைப்போல பாதிக்கபட்டவர் தமது சுயவரலாற்றை எழுதுவாரா எனத் தெரியவில்லை. அப்படி அவர் எழுதினால், அதுபோன்றதொரு சம்பவமே நடக்க இல்லை எனக்கூற இப்போதும் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால் அவர்களுக்கு சில சங்கடங்கள் உள்ளன. காந்திகாலத்தில் ஸ்மார்ட் போன்களோ ஐ பாட்களோ இல்லை. இப்போதெல்லாம் உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பிரசுரிக்கவென தன்னார்வ பத்திரிகையாளர்கள் நம்மில இருக்கிறார்கள். எனவே இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது.  பிரெஞ்சு குடிமகன்களும் அந்தத் தடியர்கள் ஆங்கிலேயர்கள்!  எங்களுக்கும் நிறவெறிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி தப்பித்துவிடமுடியாது.   குற்றத்தைச் செய்தது ஆங்கிலேயர்கள் எனில் கறுப்பர் இனத்தவரை பெட்டியில் ஏறக்குடாதென நிறவெறி மனப்பான்மையுடன் சில குண்டர்கள் தடுத்ததை (அந்த ஆப்ரிக்கரை ஏறவிடாமல் தடுத்ததோடு ‘Dirty Black man’ என்று வருணித்திருக்கிறார்கள்.) அங்கே பயணிகாளாக இருந்த பல பிரெஞ்சுக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்ல நடைமேடையிலும் நூற்றுகணக்கானவர் இருந்திருக்கிறார்கள். எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர ( இதில் காவல் துறையும் அடக்கம், பொதுவாக பிரச்சினைகளெனில் இரயில் நிலையங்களில் உடனுக்குடன் காவலர்கள் தலையிடுவது வழக்கம்.) ஆனால் இங்கு அதிசயம்போல  பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவரும் முன்வரவில்லை.

 

அல்பெர் கமுய் தன்னுடைய ‘போராளி’ நூலொன்றில் போராளி என்பவன் யார் எனக்கேட்டு விளக்கம் சொல்கிறார். முழுமையான விளக்கம் இங்கு அவசியமில்லை. அதன்படி ஒவ்வொரு சம்பவத்திலும் நேரடியாக பாதிக்கப்படுகின்றவனே கிளர்ச்சியாளனாக மாறுவான் என்பதில்லை. வேறொருவர் பாதிக்கபடுதைக் காண்கிறவனும் பாதிக்கபட்டவன் இடத்தில் தன்னைவைத்து போர்க்குரல் எழுப்ப முடியும், போராளியாக உருமாற முடியும் என்கிறார். அவரின் கூற்று இங்கே பொய்த்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த இழிவான சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்த ஐரோப்பியர்களின் அமைதிக்குள்ள அறம் நாம் அறிந்தததுதான். ஆனால் நித்தம் நித்தம் மேற்கத்திய மண்ணில் நிறவெறியால் பாதிக்கபடுகிற பலர் அக்கூட்டத்தில் இருந்திருப்பார்கள் : ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள், சீனர்கள் அல்ஜீரியர்கள், துனீசியர்கள் இப்படி உலகத்தின் அத்தனை நாட்டவரும் ஐரோப்பியர் நீங்கலாக ஒருவகையில் கறுப்பரினம்தான். ஆனால் எல்லோருக்குமே ‘நமக்கென வந்தது” என்ற மனப்பாங்கு இருந்திருக்கிறது.

 

பொதுவில் போராளி என்பவன் பொது பிரச்சினையையும் தன் பிரச்சினையாக பார்ப்பவன். இன்று வேறான மனநிலையைக் நம்மிடம் காண்கிறோம். ‘என் பிரச்சினையை ஊர் பிரச்சினையையாகக் காண்பேன்’ ஆனால் ஊர்ப்பிரச்சினையெல்லாம் என் பிரச்சினையல்ல’ இது இருபத்தோராம் நூற்றா¡ண்டு மனநிலை. எனக்கு முன்னால் பத்துபேராவது ஓடவேண்டுமென நினைக்கிற மாரத்தான் கும்பல் மனநிலை. இந்த மன நிலைக்கு பதில் என்ன? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

பாரீஸ் சம்பவம் வீடியோவில்:

http://www.huffingtonpost.fr/2015/02/18/supporteurs-chelsea-racistes-metro-paris-histoire-headhunters_n_6703840.html
———–

 

மொழிவது சுகம் -பிப்ரவரி 17 2015

1. அண்மையில் வெளியான எனது புத்தகங்கள்

அ. De haute lutte – AmbaiAmbai li

அவருக்கு உலகத்து பாஷைகளில் 32 தெரியும் என்பார்கள். அத் தமிழரின் பன்மொழிப் புலமையைப் பாராட்டுபவர் யாரென்று பார்த்தால் மற்றொரு தமிழராக இருப்பார். இவ்வளவு திறமையாக ஆங்கிலம் எழுதுகிறீர்கள் என்று ஓர் ஆங்கிலேயரோ இத்தனை திறமையாகப் பிரெஞ்சு பேசுகிறீர்கள் என்று ஒரு பிரெஞ்சுக் காரரோ பாராட்டினால்தான் அந்த மொழியைக் கற்று உபயோகிக்கிறவருக்குப் பெருமை மட்டுமல்ல அதில் நியாயமும் இருக்கிறது. இது மொழி பெயர்ப்பிற்கும் பொருந்தும். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் படைப்புகள் குறித்து தமிழர்களே விமர்சித்து பாராட்டி சீராட்டி, மொழிபெயர்த்தவருக்கு கிளுகிளுப்பூட்டுகிற கட்டுரைகளையெல்லாம் வாசிக்கிறபோது மேற்கண்ட காரணத்தை முன்வைத்து சிரித்திருக்கிறேன். ஆகையால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டதென்பதை ஒரு தகவலாகவே அளிக்கிறேன்.நண்பர்களிடம் பாராட்டுதலை எதிர்பார்ப்து  நியாயமில்லை. இத்தொகுப்பை பிரெஞ்சுக் காரர்கள் பாராட்டினால்தான் மொழிபெயர்த்த எங்களுக்குப் பெருமை. இதைத் தனியாகச் செய்ய இல்லை ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது. மொழி பெயர்ப்பை தாய்மொழிக்குக் கொண்டுபோகிறபோதுதான் சிறப்பாக செய்யமுடியும். தமிழ் படைப்பு ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கொண்டுபோகவும் அதை உலகறியவும் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் அதனை நேரடியாக ஓர் ஆங்கிலேயரோ அல்லது பிரெஞ்சுக்காரரோ (தாய்மொழிக்கே மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லவேண்டும் என்ற விதிப்படி) மொழிபெயர்க்கவேண்டும், அல்லது தாய்மொழியாகக்கொண்டவரின் பங்களிப்பு அதில் இருக்கவேண்டும். இல்லையென்றால் “எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்” என்ற கதைதான்.

De haute lutte –Ambai – Diffusion Seuil – 18€
Nouvelles traduites du tamoul par Dominique Vitalyo et Krishna Nagarathinam

Editions ZULMA
18, rue du Dragon
Paris 6ème

ஆ. தத்துவத்தின் சித்திர வடிவம்thathuvathin

அல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.

தத்துவத்தின் சித்திரவடிவம்
– நாகரத்தினம் கிருஷ்ணா
விலை ரூ 90

காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை
நாகர்கோவில் -629001

2. பிக்காஸோவும் எலெக்ட்ரீஷியனும் (இத்தலைப்பில் சிறுகதை ஒன்று எழுதும் எண்ணமிருக்கிறது)

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இந்தியாவில் இருந்தேன். திடீரென்று மழைபெய்திருந்த ஓர் இரவு, தெருக்கம்பத்திலிருந்த வீட்டிற்குக் கொடுத்திருந்த மின் இணைப்பு வயர் எரிந்துவிட்டது. புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். இந்தியாவில் எதுவும் ‘அது’ கொடுக்காமல் நடக்காது என்பது விதி. (ஊழலில் தண்டிக்கப்பட்டால் கூடுதல் வாக்கு என்பது புது மொழி). புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். ஆளுக்கு ஐந்நூறு கொடுக்கவேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? மின்கம்பத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு வருகிற வயர் இணைப்பு முழுதும் உங்கள் செலவு என்றார்கள். பொதுவாக இரண்டாயிரம் ரூபாய் வாங்குவோம், நீங்கள் 1500 கொடுக்கவேண்டும் என்றார்கள். வேலை செய்யுங்கள் தருகிறேன் என்றேன். முடித்துவிட்டு பணத்திற்கு வந்தபோது பணம் ரெடியாக இருக்கிறது அதற்குப் பில் தருவீர்களா எனக்கேட்டேன். ஓர் அற்ப புழுவைப்போல பார்த்த ஊழியர்களில் ஒருவர், ” நாங்கள் இனாமா செஞ்சதா இருக்கட்டும் நீங்களே அதை வச்சுக்குங்க” எனக் கூறிவிட்டு முறுக்கிக்கொள்ள எனது அண்ணன் மகன் இந்திய அறத்திற்கேற்ப சமாதானம் செய்வித்து அவர்களை மலையேற்றினான்.

இதுவும் எலெக்ட்ரீஷியன் சம்பந்தப்பட்ட கதைதான் கொஞ்சம் வித்தியாசமான கதை. பிரபல ஓவியர் பிக்காஸோவோடு சம்பந்தபட்டது. அவர் பிரான்சு நாட்டில் தங்கி யிருந்தபோது நடந்த சம்பவம். அவர் அண்டைவீட்டுக்காரராக இருந்த பியெர் லெ கென்னெக் (Pierre Le Guennec) ஒரு எலெக்ட்ரீஷியன். மின்சாரம் சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கும், சின்ன சின்ன இதர வேலைகளுக்கும் இந்தப் பியெர் லெ கென்னெக் உதவியை பிக்காஸோ நாடினாராம். அவரும் தன்னால முடிந்தபோதெல்லாம் வந்து செய்துகொடுத்திருக்கிறார். ஜாக்லீன் பிக்காஸோ அதாவது பிக்காஸோவின் துணைவி, ” ஏதோ அந்த பிள்ளை நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் நேரம் காலம் பார்க்காம வந்து உதவி செய்யுது வெறுங்கையோட அனுப்பினா எப்படி? ஏதாவது பதிலுக்க்கு நாம் செய்வதுதானே முறை” எனப் புலம்ப, “நம்மகிட்ட என்ன இருக்கு கொடுக்க, வேணுமான நான் கிறுக்கி வச்சிருக்கிற படங்களை அந்த புள்ளைகிட்டே கொடு” ன்னு பிக்காஸோ மறுமொழிசொல்ல அந்தம்மா சுருட்டிவைத்திருந்த கணவரின் ஓவியங்களில் சிலவற்றை கொடுத்ததாக பியெர் லெ கென்னெக் துண்டைபோட்டுத் தாண்டுகிறார். எலெக்ட்ரீஷியன் வார்த்தைப்படி, அவர் கைக்கு ஓவியங்கள் வந்த ஆண்டு 1971 அல்லது 72. ஜாக்லின் பிக்காஸோ, அவர் கனவர் சம்மதத்துடன் அப்படி கொடுத்தது ஒன்றிரண்டல்ல, பல மில்லியன் மதிப்புள்ள 271 ஓவியங்கள். அத்தனையும் 1905 -1932 வருடங்களில் தீட்டப்பட்டவை. அதற்குப்பிறகு அந்த ஓவியங்களைச் சுத்தமாக மறந்துபோனாராம். நினைத்திருந்தால் பணமாக்கியிருக்கலாம் என்கிறார். 2010ல் திடீரென்று நினைவுக்கு வர ஒவியங்களை மதிப்பிட பிக்காஸோ வாரிசுகளிடமே உதவியை நாடியிருக்கிறார். அங்குதான் பிரச்சினை வந்தது. அவர்கள் “இத்தனை ஓவியங்களை பிக்காஸோ சும்மா தூக்கிக்கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. பிக்காஸோவிற்கு அப்போதெல்லாம் அவருடைய ஓவியங்களின் மதிப்பு என்னவென்று தெரியும், அவர் இப்படியெல்லாம் தானம் பண்ணுகிற ஆளல்ல” என்பது அவர்கள் வாதம். கடந்தவாரத்தில் கிராஸ் (பிரான்சு) நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அத்தனை சாட்சியங்களும் எலெக்ட் ரீஷியனுக்கு எதிராகவே இருக்கின்றன. தீர்ப்பு மார்ச் 20ல் சொல்லபட இருக்கிறது. சற்று விரிவாக தீர்ப்பிற்குப் பிறகு எழுதுகிறேன்.

—————————-

மொழிவது சுகம் ஜனவரி 12 -2015

1. பிரான்சு நாட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு சுதந்திற்காக அது எந்தவிலையையும் கொடுக்கக்கூடிய நாடென்பது தெரியும்

Paris2
பிற ஐரோப்பியநாடுகளைப்போலவே பிரான்சுநாட்டில் உலகின் அத்தனை நாட்டவரும், அத்தனை இனமக்களும், நிறத்தவர்களும் வாழ்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்சிலும் காலனி ஆதிக்கத்தினால், பொருளாதாரக் காரணங்ககளால் புலம்பெயர்ந்த மக்கள் என்பதற்கு அப்பாற்பட்டு அரசியல் மற்றும் வேறுகாரணங்களால் பாதிக்கப்படுகிறவர்களுங்கூட இங்கு அடைக்கலம் கோரி வருகிறார்கள். எத்தனை சிரமபட்டாவது, எவளவு செலவானாலும் பரவாயில்லை நிம்மதியான வாழ்க்கைக்கு மேற்கு மட்டுமே உத்தரவாதம் என நம்பி இலட்சக்கனக்கானவர்கள் நேர்வழியிலும், பிற வழிமுறைகளிலும் மேற்கத்திய நாடுகளைத் தேடி வருவது – மேற்குலகு நாடுகள் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிற இக்காலத்திலும் – தொடரவே செய்கிறது. கற்கால மனிதன் கூட்டமாக புலம்பெயர்ந்து சென்றதும் பாலையை நோக்கியல்ல, ஆற்றோரங்களையும் புல்வெளிகளையும் நோக்கி. இவ்விஷயத்தில் பிரான்சுக்கென தனி வரலாறு உண்டு. நாஜிகள் காலத்திலும், அதன் பிறகு கிழக்கு ஐரோப்பியநாடுகள் கம்யூனிஸத்தின் பிடியில் சிக்கித் தவிதபோதும், ஆளுகின்ற வர்க்கத்துடன் அல்லது உள்ளூர் அமைப்பு முறையுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாத இஸ்லாமிய அறிவு ஜீவிகள் ஆகியோரும்- சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென நினைக்கிறவர்கள் – மேற்கு நாடுகளுக்கே குறிப்பாக பிரான்சு நாட்டையே நம்பிவருகிறார்கள்.

இன்று இரண்டாவது மதமென்ற தகுதியை இஸ்லாம் பிரான்சுநாட்டில் பெற்றிருக்கிறதெனில், அதன் வளர்ச்சிக்கு பிரெஞ்சுக் காரர்களும் காரணம். இங்கே எவித பேதமுமின்றி பிரெஞ்சின் இறையாண்மைக்கு ஒத்துழைக்கிற பெரும்பான்மையான இஸ்லாமியரை குழ்ப்பத்தில் ஆழ்த்த, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சிறுகூட்டம் முயன்றுவருகிறது. ஒரு பெரும் அணியாகத் திரண்டு உலகில் முதன்முதலாக முடியாட்சிக்கு எதிராக புரட்சிசெய்து வரலாற்றில் இடம்பெற்றவர்கள் பிரெஞ்சுக் காரர்கள். அவர்கள் சுதந்திரத்திற்கு கொடுத்த விலை அதிகம். அதற்கான விலையைக் கடந்தகாலத்தைபோல எதிர்காலத்திலும் கொடுக்கும் நெஞ்சுரம் அவர்களுக்குண்டு என்பதை பிரான்சு நாடெங்கும் வன்முறைக்கு எதிராகத் திரண்ட கோடிக்கணக்கான மக்களின் கூட்டம் நேற்று நிரூபித்தது. ஷார்லி ஹெப்டோ இதழ் வழக்கம்போல புதனன்று விற்பனைக்கு கிடைக்குமென சொல்லியிருக்கிறார்கள், இம்முறை பல மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு வருகின்றன.
தி இந்து தினசரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல தலையங்கங்கள் வந்துள்ளன
படிக்க: http://tamil.thehindu.com/opinion/editorial/பேனாவைக்-கொல்ல-முடியாது/article6

 

2. எனது கதைகளின்கதை -வே.சபாநாயகம்

 

Sabanayagamதங்கத்திற்குச் செம்புசேர்ப்பதுபோல கதையின் முழுமைக்கு கற்பனை துணை எவ்வளவு அழகாகச்சொல்லியிருக்கிறார். திரு வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் புதிதாக ஒரு தொடரை தொடங்கி யிருக்கிறார். தலைப்பு ‘எனது கதைகளின் கதை’ – அவருடைய கதைகளுக்கான வேரினை அறிய இத் தொடர் நமக்கு உதவுமென நம்புகிறேன். வே.சபாநாயகம் என்ற படைப்பாளியையும் நாமறியச் செய்யும். படைப்புத்துறையில் சோர்வின்றி செயல்படும் மூத்த எழுத்தாளர். விருதுகளை நம்பி எழுத்தாளர்களை வாசிப்பவன் இல்லை நான். முதல் இரண்டுவரிகளே போதும் ஓர் எழுத்தின் மனத்தையும் பலத்தையும் உணர்வதற்குப் போதுமென நம்புகிற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அதனாலேயே திரு வே. சபாயகம் தனது முதல்கதையின்”தொடக்கவரி’ வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்கவேண்டும் என்பதற்காக ‘கல்கி’ ‘துமிலன்’ பாணியில் எழுதியதாக கூறி இருப்பதை இரசிக்க முடிந்தது, எனக்கும் அதில் உடன்பாடுண்டு. வாசகரை ஈர்ப்பதென்பது ஓர் எழுத்தின் முதற்படி. விளையும் பயிர் முளையிலே என்பது எழுத்துக்கும்பொருந்தும். வே. சபாநாயகத்தின் விளைச்சலுக்கு அவர் நல்ல நாற்றாக இருந்திருக்கிறார். கலை இலக்கிய நாட்டம் என்பது ஒரு வரம், அவ்வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்களில் ஒருசிலரே, அவ்வரத்தின் பயனை பிறருக்கும் அளிக்கும் திறன்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஆசிரியர் பற்றியும் பிற செய்திகளையும் அவரது நினைவுத் தடத்தில் வாசித்திருக்கிறேன், அவற்றை நினைவூட்டி ‘எனது கதைகளின் கதைத்’ தொடரை ஆரம்பித்திருக்கிறார். வே. சபாநாயகம் போன்ற்வர்கள் எதுபற்றி பேசினாலும் கேட்கவும் வாசிக்கவும் சுவாரஸ்யமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில் தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
http://ninaivu.blogspot.fr/

 

3. மிஷெல் ஹூல்பெக்:

 

Mishel Houellebecqஷார்லி ஹெஃப்டோ படுகொலை சம்பவத்திற்கு முன்பாக பிரெஞ்சு ஊடகங்களில் பரபரப்புடன் விவாதிக்கபட்ட விஷயம் மிஷெல் ஹூல்பெக்கின் நாவல் Soumission. மிஷெல் ஹூல்பெக் மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். ஒவ்வொரு முறையும் அவரது நூல் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவரும். இம்முறையும் பெயரை மிகவும் ரகசியமாக வைத்திருந்து இம்மாதம் முதல்வாரத்தில் புத்தககக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது. புதல் பதிப்பே ஒன்றரை மில்லியன் பிதிகள் எனச்செய்திகள் சொல்கின்றன. தன்னிலையில் சொல்லப்படும் கதை, ஓர் அறிவு ஜீவி கதை சொல்கிறார், அவர் வாழ்க்கையில் எதிர்கொள்கிற சம்பவங்கள் கதையாக வருகின்றன. நாவலில் இன்றைக்கு பிரெஞ்சு அரசியலில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனவரும் வருகிறார்கள். 2022ல் பிரான்சுநாட்டு அதிபர் தேர்தல் வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவில் தீவிர வலதுசாரி வேட்பாளரான திருமதி லெப்பென் (Marie Le Pen) முதலாவதாகவும், அடுத்த வேட்பாளராக இஸ்லாமிய வேட்பாளரும், மூன்று நான்கு இடத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் வருகிறார்கள். வலது சாரி பெண்மணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளரைத் தேர்தலிலிருந்து விலக்கிக்கொண்டு இரண்டாவது இடத்திலிருக்கும் இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கின்றன. நாட்டின் பிரதான இடது சாரி கட்சிகளும் ( Partie Socilaiste, Communist…) மிதவாத வலதுசாரிகளும் ( UMP etc..), நாட்டின் பொது எதிரியாக தீவிர வலதுசாரியைக் கருதி அவருக்கு எதிராக இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். ( முந்தைய தேர்தல்களில் எப்போதெல்லாம் தீவிர வலதுசாரிக்கு வெற்றி வாய்ப்பு வந்ததோ அப்போதெல்லாம் மேற்கண்ட கட்சிகள் கூட்டுசேர்ந்து தோற்கடித்திருக்கிறார்கள்) தேர்தல் முடிவில் வழக்கம்போல தீவிர வலதுசாரி வேட்பாளர் மரி லெப்பென் தோற்கடிக்கப்படுகிறார். இனி மரபான குடும்பம், அதாவது ஆண்களுக்கு மட்டுமே கல்வி பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் தீவிர கிறிஸ்துவர்களையும் ஈர்ப்பதால் மிதவாத இஸ்லாமியர் பிரான்சு நாட்டின் அதிபராகிறார். பிறகென்ன நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பது எளிதாகிறது (பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் எபதால்) வளைகுடா நாடுகளின் முதலீட்டால் நாட்டில் பல்கலைகழகங்கள் இஸ்லாமியப் பல்கலைகழகங்களாகின்றன என்றெல்லாம் ஒருவகை இஸ்லாமியா ஃபோபியாவுடன் எழுதப்பட்டுள்ள நாவலை விமர்சகர்கள் ஜார்ஜ்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலுடன் ஒப்பிடுகிறார்கள்.
——-

மொழிவது சுகம் டிசம்பர் – 20 , 2014

1தமிழர்கள்

A. புதுச்சேரி நகரசபை

Collapse_THSSKumar_2227111g

B. உ.வே.சா. இல்லம்

U.V.SAMI House

நன்றி: தி இந்து

2. விகடன் எஸ். பாலசுப்பிரமணியத்தின் மறைவு

விகடன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தியை ‘தி இந்து’ வில் வாசிக்க நேரந்தது. அவரின் பெருமைகளை பட்டியலிட அவசியமில்லை வெகுசன இதழ்கள் இன்றைக்கு நவீன இலக்கியத்தைபரவலாக அறியக் காரணமானவர். தமிழர்களின் பாமரத்தனமான கலை இலக்கிய இரசனையை உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார். இலக்கிய வட்டம் மட்டுமே அறிந்திருந்த படைப்பாளிகளை வெகுசன மேடைக்கும் கொண்டு சென்றவர். தி இந்து தமிழ் தினசரி அவரைக் குறித்து எதைச் சொல்லவேண்டுமோ அதை நன்றாக எழுதியுள்ளது. ஆனால் அவரை சிறையில் அடைத்து பெருமைபெற்ற முதலமைச்சரையும் அவரது கட்சியையும் எழுதும் வேளையில் மறதி குறுக்கிட்டிருக்கிறது.
3. பாரீஸில் அம்பை

உயிர்நிழல் லட்சுமி நவம்பர் மாதத்தில் அம்பைக்கு ஒரு நிகழ்வை பாரீஸில் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அந்நிகழ்வு டிசம்பர் 13 அன்று நடப்பதாக தகவல் வந்தது. புதுச்சேரி நண்பர்களுக்கும் தெரிவித்தேன். இதே பகுதியில் அந்நிகழ்வு பற்றி குறிப்பிட்டிருந்த அறிவிப்பில் தேதி உள்ளது, ஆனால் அதனை புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்தபோது தேதியைக் குறிப்பிட தவறி இருக்கிறேன். உண்மையில் அக்கறை இருப்பவர்கள் எழுதிக் கேட்பார்கள் என்று நினைத்தேன். அந்த நல்ல காரியத்தைச் செய்தவர்கள் ஒன்றிரண்டுபேர்தான். அவர்களிலும் கலந்துகொண்டவர் நண்பர் முத்துகுமரன் மட்டுமே. அவர்கூட அம்பை எழுத்துக்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை. முத்துக்குமரன் தவிர பிரெஞ்சில் சிறுகதைகள் எழுதிவரும் மத்மசல் ‘மிரெய் சாந்த்தோ’வும் காந்தியைக்குறித்து அண்மையில் புத்தகமொன்று எழுதியுள்ள திரு ஜோசெப் தம்பியும்  வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்திருந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது. நண்பர்கள் மத்மசல் மிரெய் மற்றும் ஜோசெப் தம்பி இருவரும்  ‘தேடல்’ இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உதவவில்லையெனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே திரும்பியிருப்பேன். ஒருவழியாக அங்குபோய்ச்சேர்ந்தபோது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தார்கள். அம்பை இன்னும் பேசத்தொடங்கவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும் அம்பையை வாசிக்காத முகங்களே இடத்தைப் பிடித்திருந்தன. வாசித்திருக்கக்கூடும் என்று நம்பிய இலங்கைத் தமிழ் எழுத்தாள நண்பர்களையும் காணமுடியவில்லை. அம்பையின் பேச்சு monotonous ஆக இருந்தது. பெண்ணியம் குறித்து புதிதாக ஏதேனும் அவருக்குச்சொல்ல இருக்கலாம் என்று சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்.
4. நண்பர் பெஞ்சமின் லெபொவுடன் சந்திப்பு

அம்பையின் வரவு குறித்த செய்தியை பிற புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்ததுபோன்றே அவருக்கும் தெரிவித்தேன். ஒருவருடத்திற்கு முன்பு தான் இதயச்சிகிச்சை பெற்றதைக்குறிப்பிட்டு தற்போது அதிகம் வெளியிற் செல்வதில்லை என  மடலிட்டிருந்தார். எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனச்சென்றேன். தெளிவாக முகவரியைக் குறிப்பிட்டிருந்தார், இடத்தைக் கண்டுபிடிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லை. இந்த வயதில் எதிர்பார்க்கக்கூடிய பிரச்சினைகள்தான். உற்சாகமாக, எப்போதும்போல சுவாரஸ்யமான உரையாடலைத் தொடங்கினார். அறிவு ஜீவிதத்துடன் கூடிய தமிழ்த் தம்பதிகள் பிரான்சில் அபூர்வம். பெஞ்சமின் தம்பதிகள் விதிவிலக்கு. ஒரு மணிநேரம் இலக்கியம், தமிழ்நாடு, தமிழர்கள் என்று பேச்சு இருந்தது. அம்பை நிகழ்ச்சி இல்லையெனில் கூடுதலாக ஒருமணி நேரம் பேசிவிட்டு வந்திருக்கலாம். சகோதரிகள் திருமதி சிமோன் – திருமதி லூசியா லெபொ பொறுப்பேற்று நடத்தும் வலைத்தளத்தில் நண்பர் பெஞ்சமின் லெபொ (எழிலன்) எழுதியுள்ள பாரீஸ் பாதாளசாய்க்கடைகள் கட்டுரை அவசியம் வாசிக்க வேண்டியது:

http://francekambanemagalirani.blogspot.fr/
————————————————————

மொழிவது சுகம் டிசம்பர் 5 -2014

1.அம்பை பாரீஸ் வருகிறார்.Ambai 2

தமது ஸ்பாரோ அமைப்பு ஊடாக கௌரவிக்கப்பட்டிருக்கிற அம்பை தமது ஐரோப்பிய வருகையின்போது பிரான்சில் உயிர் நிழல் லட்சுமி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார். ‘தேடலும் பகிர்தலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவும் உள்ளார். பாரீஸில் உள்ள நண்பர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்வு. அவரைக் காணும் ஆவல் உள்ளது. சந்தர்ப்பம் அமையுமாவென்று தெரியவில்லை. முதலில் நிகழ்ச்சி டிசம்பர் 14 என்று சொல்லபட்டது. அதற்கேற்ப எனது ப்யணத்தை ஒழுங்கு செய்திருந்தேன். தற்போது டிசம்பர் 13 மாலை 5 மணி என்பதால், சனிக்கிழமை காலையிலேயேயே ஸ்ட்ராஸ்பூரிலிருந்து கிளம்பவேண்டும், சாத்தியமாவென்று தெரியவில்லை.

“தேடலும் பகிர்தலும்”

நிகழ்ச்சி நேரம்: மாலை 4.40
5, Rue Pierre l’Ermite
Paris-18
Metro: La Chapelle

——————-

2. படித்த படிக்கிற நாவல்கள்

அண்மையில் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலையும், சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலயும் படித்தேன். சாயாவனம் கடந்த காலத்தினும்பார்க்க தற்போதைய சூழலில் கூடுதல் ஜொலிப்புடன் இருக்கிறது. முதல் வாசிப்பு காலத்தில், நாவலை ருசித்து வாசிக்க தவறி இருக்கிறேன் என்று புரிந்தது. சாயாவனத் தேவர் போன்ற்வர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள். மனிதர்கள் அனைவருமே தனித்தன்மையோடிருப்பவர்கள்தான், என்றாலும் தேவர் போன்றவர்கள் அத்தனித் தன்மையைத் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் முன்னெடுத்து தங்கள் இருப்பை உயர்த்திக்கொள்கிறார்கள். சாயாவனம் மனதில் நிற்கிறது.

Philippeதமிழவன் பிலிப் சொலெர் (Philipe Sollers) எழுத்துவகைமையை தமது சிற்றேடு இதழில் உதாரணம்காட்ட அவரது படைப்பில் ஒரு சிலபக்கங்களை மொழிபெயர்த்து அனுப்ப முடியுமாவென கேட்டார். தமிழ் புனைகதை உலகை மேற்குலகோடு இணைத்து கொண்டுபோகவேண்டுமென வார்த்தை செயல் இரண்டின்மூலமும் தமிழவன் வற்புறுத்திவருபவர். பிலிப் சொலெர் எழுத்தை அதிகம் நேசிப்பதில்லை. கலைநேர்த்திக்குப்பதிலாக, அறிவியல் கூறுகள் அதிகம் தலைவிரித்தாடுவதுபோல உணர்வேன். தேன்கூட்டைக்கலைத்ததுபோல சொற்களை சிதறடித்து, புனைகதை என்பதைக்காட்டிலும், மொழிநூலொன்றை படிப்பதுபோல இருக்கும். நிறைய எழுதுவதிலும், எதையாவது சொல்லிவிட்டு பிறபடைப்பாளிகளிடம் வாங்க்கிக்ட்டிகொள்வதிலும் ஒருவகையில் பிரெஞ்சு ஜெயமோகன். தமிழவன் மீதுள்ள மரியாதை மற்றும் விசுவாசம் காரணமாக Eclaircie என்ற நாவலை பிடிப்பின்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

3. மொழிபெயர்ப்’பு

காலச்சுவடிற்காக அல்பெர் கமுய் கட்டுரைத் தொகுப்பொன்றை மொழிபெயர்க்கிறேன். கடுமையான் சவால்தான் பல நேரங்களில் சரியாக த் தமிழ்சொற்கள் அமைவதில்லை. உதார ணமாக நூலின் பெயரிலேயே பிரச்சினை தொடங்குகிறது. ‘L’homme révolté’ என்ற பிரெஞ்சு சொல்  செய்திக்கும், ஆங்கில மொழிபெயர்ப்பில் அதனை ‘The Rebel’ எனக்கூறுவதற்கும் நிறைய வித்தியாசம். தவிர தமிழில் ‘புரட்சி’ என்ற சொல்லை முடிந்த அளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழர்களின் ‘புரட்சியை’ தத்தெடுத்தால் அல்பெர் கமுய் என்னை மன்னிக்கவேமாட்டார். புரட்சி என்ற சொல்லை சரியாககக்கையாண்டவர் பாரதிதாசன் மட்டுமே, இன்றைக்கு அது கட்டெறும்பாக இருக்கிறது . இரண்டாவது பிரச்சினை நூலில் ஆங்காங்கே வேற்று நூல்களில் அவர் படித்த செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ளன, குறிப்பாக அவருடையதும், பிற அறிஞர்களுடையதுமான பல மெய்யியல் கோட்பாடுகள். உதாரணம் Respirer, c’est juger. தமிழில் “சுவாசிப்பதே, தீர்ப்பளித்ததுபோலத்தான்” என்ற பொருளில். அல்பெர் கமுய் யின் அபத்தவாதத்தை படித்தறியாதவர்களுக்கு இது போன்ற வரிகள் குழப்பததை அளிக்கக்கூடும். அதை தெளிவுபடுத்தவேண்டிய கடமையும் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதாக நினைக்கிறேன்.

4. Marché de Noël de Strasbourg

எங்கள் ஊரில் ( Strasbourg) கிறிஸ்துமஸ் அலங்காரம், கடைகள் என்று சூடுபிடித்துவிட்டன. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கிறிற்துமஸ்ஸ¤க்குத் தனியாக கடையொன்றை (இந்திய கலைப்பொருட்கள், ஆரோவில் ஊதுபத்திகள்) போடுவதுண்டு, ஒரு மாத காலம் நீடிக்கும். க்டந்த இரண்டுவருடங்களாக அதை நிறுத்திவிட்டேன். அலுத்துவிட்டது. பிரான்சுநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு அதிகம் உல்லாசChoucrouteப்பயணிகள் கூடும் நகரம் ஸ்ட்ராஸ்பூர். கிறிஸ்துமஸ் கடைகளை பார்க்கவென்றே, ஐரோப்பா அமெரிக்க சுற்றுலாவாசிகள் இந்நகருக்கு வருவார்கள். அக்காலங்களில் சூடான ஒயின், தார்த் •பிளாம்பே, வறுத்த மரோன், மசாலா சேர்த்த இனிப்பு ரொட்டி ஆகியவற்றை கிறிஸ்துமஸ் கடைகளைப் பார்க்கவருகிற பயணிகள் வாங்கத் தவறமாட்டார்கள், தவிர ரெஸ்டாரெண்ட்டில் ஷ¤க்ரூத் (Choucroute) சாப்பிடாத வெளியூர்வாசிகளைப் பார்க்கமுடியாது.


————————————-

மொழிவது சுகம் : நவம்பர் 15 -2014

அ.    இரண்டு லட்சுமிகள்

 

இக்கணத்தில் இரண்டு லட்சுமிகளை நினைவுகூரவேண்டியவாக இருக்கிறேன். எனது புதிய நாவலோடு சம்பந்தப்பட்ட லட்சுமி ஒருவர், மற்றவர் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர். இரண்டு நூல்களுமே விரைவில் வர இருக்கின்றன. இரண்டுமே காலச்சுவடு சம்பந்தப்பட்டவை. ஒன்றுகாலச்சுவடு க்காக நான் எழுதியுள்ள புதிய நாவல், மற்றது காலச்சுவடின் முயற்சியால் பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் இணைந்து பணியாற்றிய மொழிபெயர்ப்பு. மூல நூலின் ஆசிரியர் அம்பை என்கிற மற்றொரு லட்சுமி.

 
உயிர்நிழல் லட்சுமி.

பிரான்சு என்றதும் பல இலக்கியவாதிகளுக்கு பாரீஸில் உள்ள லட்சுமி என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். ‘உயிர் நிழல் லட்சுமி விளம்பரமின்றி, தன்னை ஒளித்து இலக்கியபணி ஆற்றிக்கொண்டிருக்கும் பெண்மணி.  காலச்சுவடு வெளியிட உள்ள எனது நாவலுக்கு சில அத்தியாங்களில் பாத்திரங்களுக்கு ஈழத் தமிழ் சொற்கள் அவசியமாகப்பட்டன. லட்சுமி தகுதந்த ஈழத்தமிழ்ச் சொற்களை இட்டு உரையாடலுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார் நாவல் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  பேசப்படின் அவ்வெற்றியில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது.

 

அம்பை லட்சுமி

வரும் ஜனவரியில் அம்பையின் சிறுகதைகள் De Haute lutte என்ற பெயரில் ZULMA பிரெஞ்சு பதிப்பகம் கொண்டுவருகிறது. Doiminique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் நான் இணைந்து பணியாற்றியது. அம்பையின் சிறுகதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. நாளை இம்மொழி பெயர்ப்பு பேசப்படுமெனில் அம்பையின் கதைகளுக்காக மட்டுமல்ல டொமினிக் என்ற பெண்மனியின் உழைப்பிற்காவும் பேசப்படவேண்டும். டொமினிக் வித்தாலியோ மலையாளம் ஆங்கிலம் இரண்டிலிருந்தும் பல இந்திய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

 

ஆ. புதிய நூல்கள்
இவ்வருட தொடக்கத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து எனது நான்கு நூல்கள் வருகின்றன. நாவலொன்றையும் இலக்கிய கட்டுரைகளையும் காலச்சுவடு கொண்டுவருகிறது. சிறுகதைத் தொகுப்பையும் பயணக்கட்டுரைகள் தொகுப்பையும் நற்றிணை பதிப்பகம் கொண்டுவருகிறது.

நாவல் – எனது பிராஹா பயணத்தின் தாக்கம் என்று சொல்லவேண்டும், பெயர் முடிவாகவில்லை, முடிவானதும் அறிவிக்கிறேன். காலச்சுவடு வெளியிட உள்ள மற்றொரு நூலான கட்டுரை தொகுப்பின் பேயர் ‘தத்துவத்தின் சித்திர வடிவம்’. நற்றிணை வெளியிட உள்ள சிறுகதை தொகுப்பு: மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்’. பயணக்கடுரைகள் தொகுப்பிறகு ‘காப்காவின் பிராஹா – (பயணக்கட்டுரைகள்)’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்.

 
இ. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை

தமிழ்நாட்டில் பொய்யான காவலதிகாரியாக, சுங்க அதிகாரியாக, இலஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பின்னர் கைதான மனிதர்களைப்பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். இம்மனிதர்களின் தேர்வு தமிழ்நாட்டில் மேற்கண்ட சிலதுறைகளை மட்டுமே குறிவைக்கிற காரணத்தை, பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவர்கள் தண்டிக்கபட்ட வழக்குகளும் தெரிவிக்கின்றன.  மனிதர்கள் இயல்பும் தேடும் பொருளின் குணமும் இவ்வினையை எழுதுகின்றன. இதற்கான ஆதாரங்களை மனித மனங்களில்தான் தேடவேண்டும். இரு பூதவியல் விஞானிகளில் ஒருவர் ஆக்கத்திற்கும் மற்றவர் அழிவிற்கும் உதவுகிறார். எனக்குத் தெரிந்த, பிரான்சில் வாழ்ந்த ஒரு தமிழர் நல்ல வேலையில் இருக்கவேண்டியவர், தமது தொழில் நுட்ப அறிவை தவறான காரியங்களில் முதலீடு செய்து சிறைதண்டனை பெற்றார். சிலர் கள்ள நோட்டு அடிப்பதில்லையா? மனித மனங்களை வளைப்பவை அவர்களுக்கமையும் சந்தர்ப்ப சூழல்கள்தான், அதனடிப்படையில் அவர்கள் விதியைத் தீர்மானிக்கறபொறுப்பை அவர்கள் சொந்த அறிவு எடுத்துக்கொள்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு தினசரியில் வந்த செய்தியும் அப்படியொரு தேர்வை பற்றியதுதான். பிரெஞ்சு ஆசாமி குறிவைத்த துறைவேறு, நாட்டைப்பொறுத்து குற்றங்கள் தேர்வும் அமையும் போலிருக்கிறது. அவர் பாரீஸ் நகரசபையில் பணியாற்றுகிறவர், சாலை பராமரிப்பில் ஊழியம். சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது கலை இலக்கியங்கள், இசை பண்பாட்டிற்கென சேவைசெய்துவரும் அரசு வானொலியின் (France Culture) பத்திரிகையாளராக (பொய்யாக) தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பாடகர்கள், நாடக- திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர்களை நெருங்கவில்லை. பேட்டி அளித்தவர்கள் தாங்கள் பேட்டி அளித்தபின் சம்பந்தப்பட்ட வானொலியில் அந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பரப்பாகிறதா என்பதில் அக்கறை காட்டுவதில்லை. “என்னுடைய பேட்டி இதில் வருகிறது அதில் வருகிறது” என மெனக்கிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களும் இல்லை என்பதால் பேட்டிக்குப் பிறகு என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாமலேயே போயிருக்கிறது. இது தவிர பிரான்செங்கும் கலை விழாக்கள், இசைவிழாக்கள், திரைப்படவிழாக்கள் நடக்கிறபொழுது பத்திரிகையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள்போல நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்புப் பயணம் போன்ற சலுகைகளை விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்பதில்லை, சாதாரண ஓட்டல்கள், இரண்டாம் வகுப்பு பயணம் என அடக்கிவாசித்திருக்கிறார். தவிர எந்த ஏற்பாட்டாளராவது இவருடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையின் ஒரிஜினலைக் கேட்டால் நழுவி விடுவாராம். ஒரு முடிவு இருக்குமில்லையா எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும், மற்றொரு பத்திரிகையாளர் சந்தேகப்பட்டு போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்படியொரு தவறான தேடலைத் தொடங்கியது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ஆம் ஆண்டு. ஏன் அப்படி நடந்துகொண்டார்? நடச்சத்திர மனிதர்களை நெருங்குவதற்கும் அவர்களுடன் கூடுதலாக நேரத்தைச் செலவிடவும் வேறுகாரணங்கள் தனக்குக்கிடைக்கவில்லை என்கிறார்.

 
நேற்றுவரை நாம் எதைத் தேடினோமோ அதுதான் நம்மைக் கட்டமைத்திருக்கிறது. நமது ‘இன்று’ நேற்றைய தேடலால் கிடைத்தது. ஒரு கும்பலில் ஆறுமுகத்தைத் தேடினால் ஆறுமுகம்தான் கிடைப்பார், அங்கே ஆறுமுகம் இல்லையேன்றால் வெறும் கையோடு திரும்பவேண்டியதுதான். ஆறுமுகத்தைத் தேடிவிட்டு ராமசாமி கிடைக்கவில்லையே எனப்புலம்புவதால் எவ்வித பயனுமில்லை. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை என்பதொரு சொலவடையுண்டு, தான் தேடியது எதை, அல்லது தேடுவது எதை என்பதில் தெளிவு வேண்டும். ஐம்பது வயதிலும் அறுபதுவயதிலும் உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அல்லது போதாமல் மிஷெல் ஒபாமா மாதிரி மனைவி அமைந்தால், அவர் பிள்ளைகள்போல எனக்குப் பிள்ளைகள் அமைந்தால், அந்தத் தேதியில் பிறந்திருந்தால் அமெரிக்க ஜானாதிபதியாகியிருப்பேன், சூப்பர் ஸ்டாராராகி இருப்பேன் என்பதெல்லாம் அபத்தம். ஒபாமாவும், ஏ. ஆர் ரஹ்மானும் ஜெயகாந்தனும் எதைத் தேடினார்களோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நாளோ, கோளோ, மனைவியோ, சுற்றமோ நட்போ அவர்களுக்கு உச்சத்தை கொடுப்பதில்லை.
—–

மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014

1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி

URAநீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். மேலை நாட்டில் “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லவும் கடவுள் இருக்கிறார்” என்று சொல்லவும் அறிஞர்கள் வேண்டும். இந்திய ஞானம் “மூத்தோர் சொல் அமுதம்” என்பதில் பிறந்தது. மூத்த அரசியல் வாதி, மூத்த எழுத்தாளர், எங்கா தாத்தா சொன்னார், எங்க அப்பா சொன்னார், அவரே எழுதிவிட்டார் என்ற புலம்பல்கள் நமக்கு அதிகம். பூர்வபட்சம், சித்தாந்தம் என்பதெல்லாம் இந்திய மரபில் அரத்தமற்ற சொற்ககளாவே இருந்து வந்திருக்கின்றன. அனல் வாதம் புனல்வாதம் என்பதெல்லாம் மேடையைவிட்டு இறங்கினால், நீர்த்துபோகும், மூச்சடங்கிவிடும். இந்தியத் தத்துவங்கள் வளர்ச்சியடையாமைக்கு அதை யாரும் தொட்டுவிடக்கூடாதென்கிற பழமைவாதமும் ஒரு காரணம். நியாயமான அனுபவங்களுக்கு தலை வணங்கவேண்டியதுதான், வயதுக்கு அல்ல. முரண்படவேண்டிய சித்தாந்தத்திற்கு, முரண்பட வேண்டிய அதிகாரத்திற்கு முரண்படுவதுதான் அறிவு. தலை ஆட்டுவது அறிவின் பண்பாகது.

நீட்சே, கடவுள் இறந்துவிட்டார் என்றதுபோல “படைப்பாளி இறந்துவிட்டார்” என்ற ரொலான் பர்த் புதைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன, ஆனால் அவர் பெயரை பிரான்சு உச்சரிக்க மறந்தாலும் நாம் மறப்பதில்ல்லை. “படைப்பாளி இறந்துவிட்டார்” இறந்துவிட்டார் எனச்சொல்லியே கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியானதொரு “சாகாவரம்” வேண்டியே இக்கருத்தை அவர் முன்வைத்திருப்பாரோ என்ற ஐயமும் எழாமலில்லை. செர்ழ் தூப்ரோஸ்கி என்ற மற்றொரு பிரெஞ்சு எழுத்தாளர்: “சுயசரிதையில் படைப்பாளி மறுபிவி எடுப்பதில் வியக்க என்ன இருக்கிறது, அவர் இறந்தார் எனச் சொல்லப்படுகிறபோது” என்றொரு சமாளிப்பை வைக்க, ரொலன்பர்த் தம் பங்கிற்கு ஒரு சுயசரிதையை எழுதி (Roland Barthes par Roland Barthes) அவருடைய சித்தாந்தத்தை அவரே பொய்யாக்கினார். நல்ல படைப்பாளி இறப்பதில்லை. ஒரு நல்ல படைப்பில், அது வாசிக்கப்படும் தருணத்தில் ஆசிரியன் குறுக்கிடுவதில்லை. வாசிப்பவனின் கற்பனைக்கு வழிவிட்டு அவன் ஒதுங்கிக்கொள்கிறான். ‘படைப்பாளி இறந்துவிட்டார்’ என்ற ‘பர்த்’தின் கூற்றை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி பேரிலக்கியங்களை படைத்தவர்கள் அனைவருமே சாகாவரம் பெற்றவர்கள். கம்பன் முதல் பாரதிவரை இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், அவர்கள் மரிப்பதில்லை.

பதினந்து நாட்களுக்கு முன்பு அருந்ததிராய் பிரச்சினையில் யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘பாரதிபுரம்’ நினைவுக்குவந்தது, எழுதியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்ததாக செய்தி. இந்திய இலக்கிய ஆளுமைகள் என்றதும் சில பெயர்கள் தவிர்க்கமுடியாதவை, ‘யு.ஆர் அனந்தமூர்த்தி’ அவைகளுள் ஒன்று. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஓர் அறிவு ஜீவி. எழுத்தாளர்களெல்லாம் அறிவு ஜீவிகள் அல்ல ஆனால் அறிவு ஜீவிகள் எழுதுகிறபோது அந்த எழுத்துக்கு கூடுதல் மகத்துவம் கிடைக்கிறது. மேற்கத்திய எழுத்தாளர்களில் பெரும்பானமையோர், தத்துவவாதிகளாகவோ, மொழி வல்லுனர்களாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். அந்த மேதமையும் நுண்ணறிவும் அவர்கள் எழுத்திலும் வெளிப்படும். யு.ஆர் அனந்தமூர்த்தி அத்தகைய இனத்தைசேர்ந்தவர். அவர் படைப்புகளை வாசித்துமுடித்தபின்னும் அவர் எழுத்தைவிட்டு விலகமுடியாதது அவரது பலம். பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறோம், பல பெண்களைச் சந்தித்திருக்கிறோம், தினசரி நடந்துபோகும் பாதையில் பார்த்துப் பழகிய காட்சி சித்திரங்கள் பல. இருந்தும் சில மனிதர்கள், சில பெண்கள், சில ஆசிரியர்கள், சில காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அனந்த மூர்த்தியின் கதைமாந்தர்களும் அப்படியானவர்கள். ‘சமஸ்காராவை’ எழுதும் துணிச்சல் சராசரி எழுத்தளர்களுக்கு வராது. அதுவேறு மனம். ஆங்கிலத்தில் ‘the Great’ என்ற சொல்லை வரலாற்றாசிரியர்கள் பின்னொட்டு ஆக சிலருக்குச் சேர்ப்பார்கள். அவர்கள் சரித்திரத்தை மாற்றி எழுதியவர்கள். இந்த நூற்றாண்டிற்கு கொர்பச்சேவ், மாண்டெலா இருவரும் உதாரணம். இலக்கியத்திலும் அவ்வாறான படைப்பாளிகள் இருக்கவே செய்கிறார்கள். மலரைக்கூட சூடவேண்டியவர்கள் சூடினால் தான் பெருமை. யு.ஆர் அனந்தமூர்த்தியை அழகுபடுத்தி ஞானபீடபரிசு தன்னை உயர்த்திக்கொண்டது. சமஸ்காராவும், பாரதி புரமும் உள்ளவரை யு.ஆர் அனந்தமூர்த்தியும் வாழ்வார். அவருக்கு இறப்பில்லை.

2. Vengeance sans fin ( தொடரும் பழிவாங்கல்) ஒரு ஜெர்மன் திரைப்படம்:

vengeanceபால்டிக் கடலையொட்டிய அமைதியான கிராமமொன்றில் நடக்கும் கதை. ரா•ல்ப், ஹன்ஸென் என்ற இரண்டு குடும்பங்கள், அக்குடும்பத்தைசேர்ந்த பிள்ளைகள், ஒருமேயர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள். நாம் எல்லோரும் அலுத்துக்கொள்கிற அல்லது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகள் குறுக்கிடாதவரை, நமது மனது சித்திரம் தீட்டி வைத்திருக்கிற சராசரி நாள். கணவன், மனைவி, நான்கு வயது சிறுமிகொண்ட ஒரு குடும்பத்தின் வழக்கமான காலை: டாய்லெட், பிரேக்•பாஸ்ட், அவசகரகதியில் அலங்காரம், உடுப்புகள், சினுங்கள், சேட்டை, கோபம், கொஞ்சல், சிக்கனமான வார்த்தையாடல்கள் போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட காலை- ஒரு விபத்து காத்திருக்கிறது என்பதை நிமித்தமாகச் சொல்லப் போதாத காலை. விபத்துகளைச் சந்தித்தவர்களை கேட்டோமெனில். “எப்போதும்போலத்தான் அன்றைக்கும் அலுவலகம்போனேன், அவன் குறுகே வந்தான, ப்ரேக்கை மிதித்தேன், வண்டி நிதானமிழந்து மரத்தில் மோதி… என்ற பதிலை விம்மலும் வெடிப்புமாகக் கண்களைத் துடைத்து முடிப்பார்கள். அதுபோலவே ஒரு வாகனவிபத்து நிகழ்ந்து இரு குடும்பங்களின் வாழ்க்கைமுறையை கிழித்துப்போடுகிறது. விபத்தில் பலியான உயிரின் குடும்பம் மட்டுமல்ல விபத்துக்குக் காரணமான குடும்பமும் அல்லாடுகிறது. கிராமமே ஒரு குடும்பத்திற்கு எதிராக அணி திரளும் அவலத்திற்கு அந்த பெருநிகழ்வு காரணமாகிறது.

ஹன்ஸென் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் வழக்கம்போல ரொட்டிவாங்க கிராமத்திலிருக்கும் ஒரே கடைக்கு செல்கிறார்கள். ரொட்டிக் கடைக்கு எதிரே, பிள்ளைகள் முதுகில் ஏறி விளையாட சைத்தான் ரூபத்தில் குட்டியானையொன்று காத்திருக்கிறது. சிறுமி லிஸா தாயிடம்” ஆனை முதுகில் ஏறி சவாரி செய்யப்போகிறேன் என்கிறாள். தாய் அனுமதித்துவிட்டு, ரொட்டிக் கடைக்குள் நுழைகிறாள். அதே ரொட்டிக் கடையில் ஊதியத்திற்கு பணிசெய்கிறவளாக ரால்•ப்ப்பின் மனைவி. திருமதி ஹஸ்ஸன் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பவும் அந்த விபத்து நிகழ்கிறது. ரொட்டிவிற்கும் பெண்மணியும் பார்க்கிறாள். ரொட்டிவாங்கிகொண்டு திரும்பிய பெண்மணியும் பார்க்கிறாள். விபத்துக்குக் காரணமானவன் ரா•ல்ப். அவன் ஓட்டிவந்த காரால் உயிர் இழந்த சிறுமி ரொட்டிவாங்கவந்த திருமதி ஹன்ஸனின் ஒரே மகள். விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிவந்த ரா•ல்ப்பிற்கு நடந்தது விபத்து, எதிர்பாராமல் நடந்தது. விபத்தில் மாண்ட சிறுமியியின் குடும்பத்திற்கு அவன் கொலைகாரன். ரால்•ப் நியாயப் படுத்துவதுபோல வாகனத்தை ஓட்டிவந்த அவனுக்கு திடீரென்று ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் ஊரும் மனிதர்களும் அக்குடும்பத்தை வெறுக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? திரைக்கதை இரு குடும்பங்களையும் கருத்தில்கொண்டு இருவேறு படிமங்களை எதிரெதிராக தீட்டி காட்சிபடுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் விபத்தில் பலியான சிறுமியால் கணவன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையே தள்ளாடுகிறது. ஏதோ இதுவரை அவர்கள் வாழ்க்கையே சிறுமிக்காக பிணைக்கப்பட்டிருந்ததுபோல. இன்னொரு பக்கம் நடந்த விபத்திற்குத் தாங்களும் பொறுப்பென குற்ற உணர்வுடன் குமுறும் குடும்பம். இது எத்தனை நாளைக்கு? எரிமலையென்றால் இன்றோ நாளையோ வெடித்தே ஆகவேண்டுமில்லையா? விபத்து ஏற்படுத்திய ரா•ல்ப் வீட்டின் சன்னல் கண்ணாடி கல்லெறியில் உடைபடுகிறது. அவனுக்கு வேலை கொடுத்த நிறுவனம் “உன்மீது குற்றமில்லையென நீதிமன்றம் ஏற்கட்டும்” அதன் பிறகு பணிக்கு வரலாம் என்கிறது. அவன் மனைவியை, “நீ பணிக்கு வந்தால் வடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்கள் எனக்கூறி” ரொட்டிக்கடை வேலை நீக்கம் செய்கிறது. ஆஸ்மா நோயில் அவதியுறும் அவர்கள் இளையமகனை பள்ளிப் பிள்ளைகள் பாடாய்ப் படுத்துகிறார்கள். கடலோரம் தனது காதலிக்காகக் காத்திருக்கும் அவர்களின் பெரியமகன் ஏமாற்றத்துடன் திரும்புகிறான். இறுக்கமான சூழலில், ரால்ப்ப்பும் – மனைவியும்; பெரிய மகனும் ரால்ப்பும் தினசரி வாழ்க்கையை யுத்தகளமாக மாற்றிகொள்கின்றனர். ஒரு நாள் வீட்டு சன்னல் கண்ணாடியை பழுதுபார்க்க முனையும் ரால்ப் மண்ணில் இறந்து கிடக்கிறான், தலையின் பின்புறம் அடிபட்டிருக்கிறது. புலன் விசாரணை செய்யும் காவலதிகாரி ஹன்ஸன் குடும்பத்தை முதலில் சந்தேகிக்கிறார்.பின்னர் அந்த சந்தேகம் ரா•ல்பின் குடும்பத்தின் மீதே விழுகிறது. படம் முழுக்க முழுக்க இருபெண்களின் உடல் மொழியை நம்பியிருக்கிறது. ரால்ப் மனைவியாக நடிக்கிற பெண்மணியும், விபத்தில் மகளைப் பறிகொடுத்த தாயாக வரும் பெண்மணியும் பிரம்மிக்கவைக்கிறார்கள். தண்டனைகள் வலிகளை அதிகரிக்க உதவுமேயன்றி குறைக்க உதவாது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தை ரசிக்க கண்கள் போதும், மொழி அவசியமல்ல:

http://www.arte.tv/guide/fr/047883-000/vengeance-sans-fin
—————————————————–

மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது?

un-couple-sur-le-pont-des-arts-recouvert-de-cadenas-a-paris-le-30-aout-2013_4910607காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். தொடக்கத்தில் அழகாகத்தான் இருந்தது, வருடந்தோறும் பூட்டுகளை அகற்றும் செலவு அதிகரித்துவருவதால், இன்று தொல்லைதரும் பிரச்சினையாக முடிந்திருக்கிறது. குறிப்பாக le pont des Arts பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள மொத்தப்பூட்டுகளின் எடை Le Parisien என்ற செய்தித்தாளின்படி 54 டன். பாரீஸ் நகரின் புதிய மேயர் புதியதொரு யோசனையை அரங்கேற்றியிருக்கிறார். “பூட்டுகள் இல்லாத காதலை” வரவேற்போம் என்ற ஸ்லோகத்துடன் கூடிய காதலர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துமாறு காதலர்களை கேட்டுகொள்ளப்போகிறா¡ராம். ஆயிரக்கனக்கில் ஸ்டிக்கர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

2. அருந்ததிராய் – யு.ஆர் அனந்தமூர்த்தி

காந்தியைபற்றி மிகப்பெரிய நூலை எழுதியுள்ள ரொமன் ரொலான் (Rimain Rolland ), காந்தியின்நண்பர். நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், இருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான இலக்கியவாதி. அருந்ததிராயைக் காட்டிலும் உலகளவில் நன்கறியப்பட்டவர். காந்தியின் மிகப்பெரிய சாதனை ஆப்ரிக்க கண்டத்திற்கு ஒரு மண்டேலா, அமெரிக்கக்கண்டத்திற்கு ஒரு மார்ட்டின் லூதர் கிங் என இரு மாமனிதர்களை தமது அனுதாபிகளாக உருவாக்கியது. உலக வரலாற்றில் வேறொருவருக்கு இப்படியொரு புகழில்லை. கேரளப் பல்கலைக்கழக கருத்தரங்கில் கலந்துகொண்ட அருந்ததிராய் “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது'” என்று பேசியதும் அதற்கு நாடெங்கும் பரவலாக கண்டனமும் எழுந்துள்ளது. காந்தியை அருந்ததிராய்தான் ஏதோ முதல் முறையாக விமரிசிப்பதுபோல கண்டனக்குரல்கள் எழுகின்றன. காந்தி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. காந்தியைத் தொடுவதால் எழுத்தாளர் அருந்ததிராய்க்குக்கூடுதலாக விளம்பரம் கிடைக்கக்கூடும். எல்லா மனிதருக்கும் இயல்பாக வரக்கூடிய வியாதிதான். அருந்ததிராயைக் கண்டிப்பதன்மூலம் அருந்ததிராயின் எதிர்பார்ப்பை காந்தியின் பக்தர்கள் நிறைவேற்றிவைக்கிறார்கள். “ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” எனச் சொல்வதுண்டு. வியாபாரம் ஆவதைத்தான் சந்தைக்குக்கொண்டுவரமுடியும். புக்கர் பரிசு வாங்கிய அருந்ததிராய்க்கு இந்த அடிப்படை ஞானங்கூடவா இருக்காது. காந்தியைப் புகழ்வது இகழ்வதும் சம்பந்தப்பட்டவரின் ‘இருப்பை’ அடையாளப்படுத்தும் விஷயம். தற்போது “எழுதி சோர்ந்தவர்கள்” பலருக்கும் தங்களை இருப்பை நிலை நிறுத்திக்கொள்ளும் தந்திரமாக இதுபோன்ற சர்ச்சைகள் பெரிதும் உதவுகின்றன. காந்தி சலவை செய்யப்பட்ட மனிதரல்ல. அப்படி அவர் சொல்லிக்கொண்டவரும் அல்ல. ஆனால் அவர் ஓர் அசாதாரண மனிதர், அபூர்வ மனிதர்.

இந்த நேரத்தில் யு.ஆர் அனந்தமூர்த்தியும், அல்பெர் காம்யூவும் எனது நினைவுக்கு வந்தார்கள். பாரதிபுரம் நாவலைப் படித்தபோது அவருள் ஓர் ‘அல்பெர் காம்யூ” இருந்தார். பாரதிபுரகதைநாயகன் ஜகன்னாதனும் ஒரு கலகக் காரன்தான். காந்தியத்தின் தாக்கத்தில் பிறந்த கலகக்காரன். அருந்ததிராய் போன்றவர்களின் கலகக்குரலுக்கும் பாரதிபுர ஜெகன்னாதனின்(அனந்தமூர்த்தியின்) கலகக்குரலுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருப்பதை ஒர் அப்பிராணி வாசகன்கூட அறிவான்.

“கலகக் காரன் என்பவன் யார் ( உபயம் – அல்பெர் காம்யூ)?

“மறுப்பவன்”, “கூடாது” என்பவன்” “இனி முடியாது” என்பவன். அதாவது அவன் மறுப்பவனேயன்றி நிராகரிப்பவனல்ல என்பதை கவனத்திற்கொள்லவேண்டும். ஓர் அடிமை, தனது வாழ்நாள்முழுவதும் எஜமான், முதலாளி அல்லது அதிகாரி இடும் ஏவல்களுக்கு அடிபணிந்து பழக்கப்பட்டவன் – அது ஒரு கொள்கையாகக்கூட இருக்கலாம் -மரபாகக் கூட இருக்கலாம் – திடீரென்று ஒருநாள் முடியாது என்கிறான். இந்த ‘முடியாது’ என்ற சொல்லை எப்படி விளங்கிக்கொள்ளலாம். “ஐயா! ஏதோ என் தலையெழுத்து இதுவரை சகித்துக்கொண்டேன், இனி ‘முடியாது’ என்பதாகக் கருதலாம். இதுவரை நீங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினேன், வாஸ்த்துவம். இனி ‘முடியாது’ என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது “போதும் சாமி! அததற்கு ஓர் அளவிருக்கு, நீங்க அந்த அளவைத் தாண்டினா எப்படி? நானென்ன மாடா மனுஷனா? ‘முடியாது’ என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இக்கலககுரலில் வேறொரு உண்மையும் இருக்கிறது. மறுக்கிறவன் தனக்காக மறுப்பதில்லை, தன்னிலையில் இருக்கும் பெருவாரியான அடிமைகளின் நிலமையிலிருந்து அக்குரல் எழுகிறது. ஒற்றைக்குரல் அல்ல ஒட்டுமொத்த அடிமைகளின் குரல். தன்னலம் சாராத கலகக்குரலாக அந்த மறுப்பு அமையவேண்டும். உலகில் எல்லா புரட்சிக்கும் இதுதான் அடிப்படை. அது ர்ஷ்யப் புரட்சியாக இருக்கட்டும், பிரெஞ்சு புரட்சியாக இருக்கட்டும் அல்லது வேறு புரட்சியாகக்கூட இருக்கலாம். காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டமும் அத்தகையதுதான். இக்கலகக்குரல் பிறமைக்கு எதிராக தனிமனிதனுக்குள்ளும் ஒலிக்கும். பாரதிபுர நாவலின் ஆரம்பவரியே ஜகன்னாதன் உள்ளிருக்கும் கலககாரனை அடையாளப்படுத்துகிறது; ” தனியாக நடக்கும் ஜகன்னாதன் குழிகளைச் சுற்றிக்கொண்டு போவதில்லை, பறப்பதுபோலத்தான் தாண்டுவான்”.

பாரதிபுர ஜகன்னாதன் மஞ்சு நாதர் மீது கட்டமைக்கபட்ட ஒரு சமூகத்தின் பழமை நியாயங்களைத் தகர்க்க நினைக்கிறான். அவன் தனது முன்னாள் இங்கிலாந்து காதலிக்கு எழுதும் கடிதத்தைப் பாருங்கள்: « Life has ceased to be creative here – மஞ்சு நாத சுவாமி இந்த உலகவாழ்க்கையின் புற்று நோய். இந்த கடைவீதி அவனுக்காக வளர்ந்த கேன்ஸர் »
அனந்தமூர்த்தியின் ஜகன்னாதன் உடை உள்ளம் இரண்டிலும் கோவணாண்டிகளாக வாழும் புலையர்களுக்கு கோவில் பிரவேசத்தினூடாக விமோசனத்தை ஈட்டுத் தரலாம் என நினைக்கிறான். பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த மனிதர்கள் ஒரு நாள் ஆலயப் பிரவேசத்தினால் உயர்ந்திடமாட்டார்கள். ஆனாலும் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்கு ஜகன்னாதனைக்கொண்டு அனந்தமூர்த்தி நடத்துவதும் புரட்சிதான். இக்காந்திய புரட்சி உலகில் நடந்த ஏனைய புரட்சிகளுக்கு எந்தவிதத்திகும் குறைந்ததல்ல. காந்தியப்பிரட்சியில் குறையுண்டு என்றால். உலகில் ஏனைய புரட்சிகளும் தோல்வியில் முடிந்ததாகத்தான் இன்றையை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அனந்த மூர்த்தியைகுறித்து நேரமிருக்கும்போது தனியே எழுதவேண்டும். இந்திய எழுத்தாளர்களில் யு.ஆர் அனந்தமூர்த்தி முக்கியமானவர். மாண்டெலா, மார்ட்டின் லூதர்கிங் போல பாரதிபுர ஜெகன்னாதனும் காந்தியின் வாரிசுதான். அருந்ததிராய் போன்றவர்களின் விமர்சனங்கள் காந்தியையோ காந்தியத்தையோ ஒரு போதும் பாதிக்காது.

பாரதிபுர நூலுக்கு மதிப்புரை எழுதிய டி.ஆர்.நாகராஜ் சொல்கிறார்:

” ஒரு கருத்தை மறுப்பதற்குச் செய்கின்ற நடவடிக்கை, அதை மேலும் உறுதிபடுத்துவது வேடிக்கைதான்”.

எனவே காந்தியத்தின் அனுதாபிகள் கலகக்குரல் எழுப்பவேண்டியது அருந்ததிராய்க்கு எதிராக அல்ல, காந்தியத்திற்கு ஆதரவாக.

நன்றி: திண்ணை ஆகஸ்டு 8 2014

——

மொழிவது சுகம் ஜூலை 26 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள்

                   ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது?

 2. காஸா பிரச்சினை
காஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம். இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

டாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

மருந்துக்கு ஒரு உதாரணம்:

 

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

“வலிக்குது மவனே
சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

“இறக்கி வைத்தேன் அம்மா
கவிதைகளாக
அதற்குள்ளும்
அழுகின்றன அம்மா
நமது வலிகள்.”
—-

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்
மருத்துவ கேள்வி-பதில்
ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

உமா பதிப்பகம், கோலாலம்பூர்
umapublications@gmail.com
——————————
நன்றி: திண்ணை 27/07/2014

மொழிவது சுகம் ஜூலை 10 2014

1.உண்டாலம்ம இவ்வுலகம்: செல்வேந்திரா

Asaiஅச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

 

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத்தேழு வருடங்கள் காத்தனன்;
வந்தனம்; அடி பேரருள் அன்னாய்!
வைரவீ! திறர் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன்
திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்!

 
நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். ‘தமிழ் வானொலி -தொலைபேசி’- ஆசை: ஒரு முக்கோண வாழ்க்கை. இலண்டனிலிருந்து ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்றின் தீவிர ரசிகர். ஆசுகவி ! கவிதைகள் அவர் கவனமெடுத்து செய்யும்போதெல்லாம் பரவாயில்லை என எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு கவிதையா? தமிழ் வானொலியா? எதுவேண்டும் எனக்கேட்டால், தமிழ் வானொலியென்று பதில் வரும். கவிதையை என்றைக்குத் தேர்வு செய்கிறாரோ அன்றைக்கு நன்றாக கவிதை வருமென சொல்லிக் கொண்டிருக்கிறேன். நண்பர் க.பஞ்சாங்கம் ஸ்ட்ராஸ்ஸ்பூர் வந்திருந்தபோது, எங்களுடன் ஜூரிச் வரை வந்தார். அவருக்கொரு வானொலி நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்து தமது அன்பினை வெளிப்படுத்திக்கொண்டவர். பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். நண்பர் பெருமிதத்துடன் மற்ற்வர்களிடம் பகிர்ந்துகொள்ளுபடியான வாழ்க்கையை அவர்கள் நடத்துகிறார்கள்; இருந்தும் அவர் தனிமனிதராக “உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்” என ஒரு சித்தரைபோல வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த இருமாதங்களுக்கு முன் அவர் அறிவித்த செய்தி ‘இறந்த பிறகு’ எனது உடலை மருத்துவ கல்லூரிக்குப் பயன் படவேண்டும் என முடிவெடுத்து எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்றார். அவர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் என்னிடம் காட்டினார். ஊரெல்லாம் கண்தானம் பற்றி பேசுகிறார்கள். சிலர் துணிச்சசலாக அதை செயல் படுத்தவும் செய்கிறார்கள். இறந்த பிறகுதானே? என நக்கலாக சிரிப்பவர்களுமுண்டு, அந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இதுவரை எனக்கில்லை. “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்/தமியர் உண்டலும் இலரே வகை மக்களால்தான் “உண்டாலம்ம இவ்வுலகம்” என பாடப்பட்டது. நமக்கு எழுதவும் சொல்லவும் அழகாகவும் வருகிறது. ஆனால் செயல்படுத்த துணிச்சலில்லை. செல்வேந்திராவைப் போன்றவர்கள் சொல்வதில்லை. நற்காரியங்கள் என நாம் நினைப்பதை அல்லது சிந்தனைகளை வாய்கிழிய பேசி சாதித்ததென்ன என பல முறை யோசிக்கிறேன். பேசும் மனிதர்களால் அல்ல செயல்படுத்தும் மனிதர்களால் ‘இவ்வுலகம் உண்டாலம்ம!

 

2. பிரியங்களின் அந்தாதி – இவள் பாரதி

 
இன்றைக்குக் கவிதை என்பது உருவகங்களாற் கட்டமைத்த படிமங்களாக; பரவசங்கள், குமுறல்கள், கோபங்கள் ஆகியவற்றை அடர்த்தியான சொற் சிக்கனத்துடன் மன அனுபவத்தின் வரிசையில் சொல்வது என்றாகி இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை ஓகோவென்றிருந்த கவிதை இடையிற் சோர்ந்து இன்றைக்கு மீண்டும் இளைய தலைமுறையினரின் வரவால் புத்துயிர் பெற்றுள்ளது. இலக்கியம், ஓவியம், சிற்பம் எனச் சொல்லப்படும் மூன்றுமே கலையின் பன்முக வெளிப்பாடுகள். கலைத்துறை, உணர்ச்சியும் அறிவும் இணைந்து செயல்படும் களம். கலைத்துறைக்கு இரண்டும் வேண்டும். உணர்ச்சியோ அறிவோ தனித்து சாதிக்க முடியாது. எனினும் கலைஞன் என்பவன் அறிவைக்காட்டிலும் புலன்களால் வழிநடத்தப்படுபவன். புலன் உணர்வுகளை அறிவூடாக புரிந்துகொள்வதும், மற்றவருடன் பகிர்ந்துகொள்வதும் கலை ஆகிறது. ‘கலை’ என்பது அழகின் ‘ஞான’ வடிவம் என்றும் பொருள்கொள்ளலாம். படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறுகதை, பெருங்கதை என்கிற பிற வடிவங்களைக் காட்டிலும் ‘அழகின் அறிவு வடிவமாக அடையாளப் படுத்த உதவும் மொழியாடல். சாபக்கேடுபோல அண்மைக்காலங்களில் கவிதைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை, கவிஞர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. (வருகிற தகவல்கள் சிறுகதை, நாவல்களுக்கும் சாதகமாக இல்லை. கட்டுரைகள வாசிப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறதாம். கட்டுரைகள், பிரமுகர்களின் சுயசரித்திரம் ஆகியவற்றைப் பதிப்பிக்கவே, பதிப்பகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.

 

இளம்பாரதி
இக்கவிஞருடைய ‘பிரியங்களின் அந்தாதி என்ற தொகுப்பை அண்மையில் வாசித்தேன். கவிதைக்கு கலை வடிவமென்று ஒன்றிருக்கிறது. அது அழகியல் சார்ந்தது. அக்கலை வடிவம் வார்த்தைத் தேர்வுகளிலும் வாக்கியங்களைச் செதுக்குவதிலும் கிடைப்பதாகும். இவரது கவிதையிலுள்ள பூடகமற்ற மொழி, நேரான வாக்கியங்கள், அவர் கவிமனத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கின்றன. நவீன இலக்கியம் வகுத்துள்ள கருத்தியம் இவரது கவிதைகளுக்குப் பொருந்தவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவைமட்டுமே ஒரு கவிஞனை எடைபோடக் காணுமா? அதனால் ஒட்டுமொத்த கவிதைகளையும் குறைத்து மதிப்பிட முடியாதில்லையா? சொல் அலங்கராத்தை தவிர்த்த அவர் கவிதைமொழி, பாசாங்கற்ற தொனியில் உரையாடுவதே கூட அழகுதான். எதிர்காலத்தில் பல நல்ல கவிதைகளைப் படைக்ககூடிய ஆற்றல் கவிஞருக்கு உண்டென்பதை இத்தொகுப்பு தெரிவிக்கிறது. . இன்றைய தேவை இயற்கையைக் கண்டு பரவசப்படும் கவிஞர்கள் அல்ல, இச்சமுதாயத்த்தைக்குறித்து சில கணங்களேனும் அக்கறைகொள்ளும் கவிஞர்கள். எது நடந்தால் என்ன? யார் எக்கேடு கெட்டால் என்ன? ‘நான்’ ‘எனது’தான் வாழ்க்கையென வாழப்பழகிய உலகில் ( படைப்பிலக்கிய உலகும் இதில் அடங்கும்) தமது கவிதைகள் கொண்டு ஊழியம் செயும் கவிஞராக இவரைப் பார்க்கிறேன். காட்சிகளைக் கண்டு குதூகலிக்கும் மனநிலைக்கு மாறாக, அக்காட்சிக்கான காரண காரிய தேடல்களில் பங்கெடுப்பவராக, இச்சமுயாதத்தின் ஒழுங்கிசைவுக்குக்குக் குரல்கொடுப்பவராக – கலை மக்களுக்காக – என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தும் கவிஞராக இருக்கிறார்.
புவி, ‘வெப்பமயமாதல்’ குறித்து அவருக்குள்ள கவலையும், அக்கவலையூடாக அவர் கட்டுகின்ற நம்பிக்கையும் இக்கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

வெப்பமயமாதல்

வெப்பமயமாதல் பற்றி
அடிக்கடி கனவு வருகிறது
தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக
வேரோடு அறுத்தெரியப்பட்ட
ஆண்டுகள் பலவான மரங்களைக்
கடந்து சென்ற பயணத்திற்குப்பின்

கனவிலிருந்து தப்பிக்கும்
உபாயம் ஏதும் தெரியாதபோது
நான் சாப்பிட்டுத் தூக்கியெறிந்த
மாமரத்தின்கொட்டை
கொல்லையின் ஈரப்பதம் உள்வாங்கி
முளை விட்டிருந்தது

அன்று முதல் நீரூற்றி வளர்க்க
ஆரம்பித்தேன்
அதற்கடுத்த நாளிலிருந்து
அந்தக் கனவு வருவது
நின்றுவிட்டது.

‘தப்பிய சொல்’ என்றொரு கவிதையும் இக்கவிஞர் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இரு சக்கர வாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக்கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக்கொண்டேன்

அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழிந்து வந்தது
அந்தச் சொல்லுக்கான நினைவு
மீண்டும் மீண்டும்
நினைவு படுத்திப் பார்க்கிறேன்
அந்தப் பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை

பல பிரயத்தனங்களிலிம் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய

‘காதலை’ பாடாத கவிஞர்கள் இருக்க முடியுமா? இளங்கவிஞர்கள் தாண்ட முடியாத சொல். இத்தொகுப்பிலும் காதல் கவிதைகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை. இவரும் தன் பங்கிற்கு நிறையவே எழுதியுள்ளார். ‘வெற்றிடத்தின் கடைசிப்புள்ளி’ என்ற கவிதையில் இடம்பெறும் இவ்வரிகள் முக்கியமானவை:


இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்
………………….
…………………….

வெற்றிடத்தின்
கடைசிப்புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைபோல நீயும்
ஒரு தோழியைபோல நானும்
—-
இத்தொகுப்பில் ஓரிடத்தில் கவிஞர் “எதில் தொடங்கப்படுகிறதோ அதிலே முடியவும் கூடிய விசித்திரங்களைக்கொண்டது வாழ்க்கை” எனக் குறிப்ப்டிருப்பார். அவ்வரியே இத்தொகுப்பைப் பற்றி நான்கைந்து வரிகள் எழுத தூண்டுகோலாக அமைந்தன.

பிரியங்களின் அந்தாதி
ஆசிரியர்: இவள் பாரதி
முகவரி வெளியீடு
6/25 பத்மாவதி நகர்,
இரண்டாவது குறுக்குத் தெரு
விருகம்பாக்கம், சென்னை-92

 

3.The Land of Green Plums

 

Herta Muller என்பவரின் இந்த நாவலை அண்மையில் வாசித்தேன். . தன்மையில் சொல்லப்படும் கதை. கதை சொல்லி ஓர் இளம்பெண் அவள் பெயர் நாவலில் இல்லை. ஆசிரியரின் சுயசரிதைதான் நாவல் என்று சொல்லப்படுகிறது. ருமேனிய கம்யூனிஸ அரசாங்கத்தின் இறுதிக்கால சர்வாதிகாரியாக இருந்தவர் நிக்கோலா சௌசெஸ்கு(Nicolae Ceausescu). மிக்கேல் கார்பச்சேவின் பெரெஸ்றோயிகா, ருமேனியாவையும் விட்டு வைக்கவில்லை. பிற இடங்களில் அமைதியாக கம்யூனிஸம் வீழ்ந்தது. இங்கே மட்டும் இரத்த களறியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. பலியான உயிர்களில் (1989) சர்வாதிகாரியும் அவருடைய துணைவியாரும் அடக்கம். புரட்சியாளர்கள் தம்பதிகளை கைது செய்து அவசரமாய் தீர்ப்பளித்து தீர்ப்பின் மை உலர்வதர்க்குள் சுட்டுக்கொன்றார்கள். இன்றளவும் இப் புரட்சிகுறித்து மர்மம் நீடிக்கிறது. இந்த ருமேனிய அதிபர் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடந்துகொண்டவர். அன்றைய செக்கோஸ்லோவோகியா தன்னிச்சையாக செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களை தடுத்த நிறுத்த சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நேசநாடுகளின் உதவியோடு பிராகு நகரை ஆக்ரமிக்கிறது(1968) இந்த ஆக்ரமிப்பின்போது வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் போலந்து, அங்கேரி போன்ற நாடுகள் தங்கள் படைகளை சோவியத் யூனியன் படைக்குத் துணையாக அனுப்பிவைத்தன. இதில் பங்கேற்காத நாடு ருமேனியா. இதுபோல பல விஷயங்களில் சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்கத்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சௌசெஸ்கு. எனினும் வடகொரிய நாட்டின் அப்போதைய அதிபரை ரோல் மாடலாகக்கொண்டு ஆட்சி செய்தமையால் அமெரிக்கர்களின் கோபத்திற்கும் ஆளானவர் எனவே இவரை வீழ்த்த KGB, CBI இரண்டுமே காத்திருந்தன. இந்த சர்வாதிகாரியின் ருமேனியாவிலிருந்து, ஜெர்மன் மொழிபேசிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞர் கூட்டம் தப்பநினைக்கிறது. இடையில் நாம் எதிர்பார்ப்பதுபோல கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளிள் அசல் முகத்தை எதிர்கொள்கிறோம். பேசகூட உரிமையற்ற மக்கள், சிறைக்கைகதிகளின் உபயோகம், பன்றிகள், மாடுகள் இறைச்சிக்காக கொல்லும் இடங்களில் இரத்தத்தைக் குடித்தும், அதன் வயிற்றிலிருக்கும் கழிவுகளை வீட்டிற்குக் கடத்திச்சென்றும் பசியாறும் தொழிலாளிகள். சர்வாதிகாரியைப்பற்றிய துதிபாடல்கள். செக்யூரிட்டேட் உளவுப்படை காவலர்களின் சந்தேக வளையம், நண்பர்களைக்கூட நம்பமுடியாத கொடூரம், கேள்விமுறையற்ற கைதுகள், சிறைவாழ்க்கை என கதை சொல்லி ருமேனிய நாட்டின் சர்வாதிகார வாழ்க்கையை விவரிக்கிறார். ஆனால் அவ்வளவும் அங்கத மொழியில் உருவகக் கதைபோல சொல்லப்படுகிறது. நாவலாசிரியர் கவிஞர் என்கிறார்கள்; கதை கவிதை மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மிகமிக எளிமையாகசொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நாவல் நெடுக குறுக்கிடும் ஐரோப்பிய தாவரங்களின் பெயர்கள் நம்மை அந்நியப்படுத்துவதைபோன்ற உணர்வை ஏற்படுத்தித் தருகின்றன.

நன்றி: திண்ணை July 14 2014

————————————————————-