Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம் மார்ச் 18 2017       

 

 . இலக்கிய சொல்லாடல்கள்

 ஆ. சத்யானந்தன் சிறுகதை

இ. கமலஹாசன் குரல்

 

. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres)

பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில்.  அக்காலக் கட்ட த்தில்  சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து  (Lettres-saintes) என்றும்,  இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து (Bonnes lettres என்றெல்லாம் எழுத்துக்களை வகைப்படுத்தி  அழைத்துவந்தார்கள். இந்நிலையில் , வரலாறு , கவிதை நாடகம் ஆகியவற்றை, பிறவற்றிலிருந்து வேறு படுத்தி  அழகியலோடு இணைத்து கலையாகப் பார்க்கத்தொடங்கினர், கலைத்துவ எழுத்தென்ற பெயரையும்  பெற்றது. மானுடவாத த்துடன் (l’humanisme) இணைந்து கலைத்துவ எழுத்துக்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி படைப்புகளை சாமானியர்களும் புரிந்துகொள்ள உதவியுள்ளன. பைபிள் கூட எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசரின் சொந்த நூலகத்தில் இவ்வகை நூல்கள்(கலைத்துவ நூல்கள்) இருந்தனவென்று, அரசவை நூலகத்தின் பட்டியல் தெரிவிக்கிறது. ‘கலைத்துவ  எழுத்துவ’ எனக்கூறி எழுத்தை வெகுசனப் புரிதலுக்கு உட்படுத்துவது குறித்த விமர்சனங்களும் எழுந்தன.  Richelet-Front-1680 1680ல் வெளிவந்த பியர் ரிஷ்லெ (Pierre Richelet ) என்பவரின் பிரெஞ்சு அகராதி « கலைத்துவ எழுத்தின் அறிவியல், இலக்கியம்  » என இக்கலைத்துவ எழுத்திற்கு விளக்கம் தந்தது. பின்னாளில் இலக்கியம் என்பதே ‘கலைத்துவ எழுத்து’ என்றாயிற்று. இக்கட்ட த்தில் வரலாறு கலைத்துவ எழுத்திலிருந்து வெளியேற்றப்பட அவ்விட த்தை ‘roman’ எனும் புதினவகைகள் ஆக்ரமிக்கின்றன, அவற்றைத் தொடர்ந்து, கட்டுரைகளும் இப்பிரிவுக்குள் வந்து சேர்ந்தன.  தவிர பதினெட்டாம் நூற்றாண்டுவரை இலக்கியம் மட்டுமின்றி, இலக்கியம் பற்றிய திறனாய்வுகளும் கலைத்துவ எழுத்தாகக் கருதப்பட்டன. இன்று, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்பு ‘கலைத்துவ எழுத்து’ என்பது அதன் பெயருக்கேற்ப அழகியல் கூறுகளுடன், அநீதியுடன் முரண்படுவது,  வாசகனின் உணர்வைத்தூண்டுவது, அவன் கற்பனைக்கும் சிந்தனைக்கும் தளம் அமைத்துக் கொடுப்பது…முதலான நெறிகளையும் தனக்கென உரிமையாக்கிக் கொண்டுள்ளது.  ஆனால் இன்று இலக்கியமென வெளிவருவதனைத்துமே கலைத்துவ எழுத்தா ? என்ற கேள்வியும் எழுகிறது.

 

.  வாசித்ததில் பிடித்தது : மார்ச் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்த சத்யானந்தன் என்பவரின் தடாங்கம் சிறுகதைக்குறித்து

sathyanadan1தடாங்கம்  சிறுகதையை வாசித்தபின்புதான், இம்முறை இலக்கிய சொல்லாடல்கள் வரிசையில் கலைத்துவ எழுத்து (Belles -Lettres) என்ற சொல்லை தேர்வு செய்தேன். ஆனால்  கதையாசிரியர் நாட்டியம் என்ற கலையை, கதையின் மையப் பொருளாகக்  கையாண்டுள்ளார் என்பதால் அல்ல. எனினும் கதையில் இடம்பெரும் இருவகைப்பெண்களுக்குமே நாட்டியம் ஆதாரமாக இருக்கிறது என்பதும் உண்மை. மறுமலர்ச்சிகால  கலைத்துவ எழுத்தின் பூர்வாங்கம் என்ன ?  இன்றைய தேதியில் அதனை எப்படி பார்க்கவேண்டும் என்பதை அச்சொல்குறித்த விளக்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன்.  அவ்விளக்கத்தோடு ஒர் அசலான கலாரசிகராக நாட்டியத்தை ரசிப்பதுபோல இச்சிறுகதைக்குள் இருக்கும் கலைத்துவ குறிப்புகளை மொழியால் பிரதிப்படுத்தி விளங்கிக்கொள்ளக் கூடுமெனில் கதையாசியரின் நட்டுவாங்கத் திறமையை விளங்கிக் கொள்வோம். ஆகுபெயர், உருவகம், படிமம் என்றெல்லாம் தேடிப்பார்த்து வாசிக்கும் வாசகரும்விரும்பும் கதை அதேவேளை, எழுத்தென்பது அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும் எனக்கருதும்  மானுடவியல் அபிமானிகளும் விரும்பக்கூடியக் கதை.   எல்லோராலும் விரும்படுவதென்பது வேறு,  நவீன இலக்கியத்தின் எதிர்பார்ப்பை எளிமையாக நிறைவேற்றுவதென்பது வேறு. ஒரு கலைஞன் தனக்காகவும் படைக்கிறான், ரசிகனுக்காகவும் படைக்கிறான், இருதரப்பினரையும் திருப்தி செய்வ துதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். இறுவேறு உலகம், இருவேறு காலங்கள், இருவகையான கதைமாந்தர்கள் ஆனாலும் மெலிதான ஓரிழை இம்மூன்றையும் ஒன்றிணைத்து,  குறியீடுகளைப் புள்ளிகளாக க் கொண்டு தீட்டிய கதை. நம்மில் பலருக்கும் ஹெமிங்வே கனவு இருக்கிறது.  வண்னதாசன், வண்ண நிலவன் ஆகும் ஆசைகள் இருக்கின்றன. ஒரு ஹெமிங்வே தான் ஒரு வண்ணதாசன் தான் உருவாக முடியும். சுந்தராமசாமியும், ஜெயகாந்தனும் தனித்தன்மையை பெற்றிருந்தார்கள், ஜெயித்தார்கள். சத்யானந் தன் எழுத்தில் நவீனம் இருக்கிறது, கலைத்துவம் இருக்கிறது, தனித்துவமும் இருக்கிறது.

. கமல்ஹாசன் குரல்

Kamal_Haasan_at_Promotions_of_'Vishwaroop'_with_Videocon_(03)அண்மை காலத்தில் கமல்ஹாசன் குரல் அடிக்கடி ஒலிக்கிறது. அவர் ஒரு பேட்டியில் இப்போதுமட்டுமில்லை எப்போதும் எனது கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன் என்கிறார். இருக்கலாம். இருந்தும் தற்போதுதான் அவர் அதிகம் வாய்திறப்பதுபோல தெரிகிறது. ஒரு வேளை, கடந்த காலத்தினும் பார்க்க ஊடகங்கள் ,  சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இருக்கலாம்.  காரணம் எதுவாக இருப்பினும் கமலஹாசன் குரல் வரவேற்க க் கூடிய குரல். எதற்கு வம்பு என்று ரஜனிபோலவோ (சூடு பட்ட பூனை ?)  பிற நடிகர்கள்போலவோ, படைப்புலக வீரர்களைப் போலவோ (பிழைக்கத் தெரியாத ஆசாமிகளை விடுங்கள்) இருந்திருக்கலாம். டி. ராஜேந்தர் போல  உளறிக்கொட்டாமல் உருப்படியான விடயங்களைப் பேசுகிறார். புரட்சிக் குரல் அல்லவென்றாலும் கலகக் குரல். நாடறிந்த மனிதர் என்பதால் எளிதாய் பெருவாரியான மக்களை அடையும்குரல். ஆளும் கட்சினர்மீது இவருக்குக் கோபமிருக்கிறது என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்.  ஏன்  பாதிக்கப்பட்டார் ? எதற்கேனும் மறுப்பு தெரிவித்திருப்பார், என்னால் முடியாது என்றிருப்பார், பணிந்திருக்கமாட்டார், எனவே பாதிக்கப்படுவது இயற்கை. ஆக மொ த்த த்தில் அவருக்குத் தமது உரிமை குறித்த பிரக்ஞை இருந்திருக்கிறது, நமக்கேன் வம்பு  என்றிருக்கிற மனிதரில்லை என்பது தெளிவு.  எல்லாமனிதர்களிடமும் சுய நலமிருக்கிறது, யாரிடமில்லை ? சந்தை உலகில் தியாகத்தைக் கூட சந்தைப் படுத்த முடிந்தவனே தியாகி என அங்கீகரிக்கப்படுகிறான். வணிகச் சூத்திரத்தின் படி வெகுசன ரசிகர்களைத் திருப்திபடுத்தவென்று நான்கு படங்கள்  எடுத்தாலும், ஓர் அசலானக் கலைஞனுக்கு காலம் நினைவில் நிறுத்தக்கூடிய வேரு அடையாளங்கள் தேவை என்பதை உணர்ந்து, புதிய முயற்சிகளில்,  இறங்குகின்ற மனிதர், அபாயங்களைச் சந்திக்கிற மனிதர் ; இப்படிக் கலகக் குரல் எழுப்புவது அதிசயமில்லை.

இதுபோன்ற குரல்கள், வெறும் ஊடங்களில் வலம்வந்தால் மட்டும்போதாது, பலன்களைத் தருகிற கலக க் குரல்களாக  நண்பர்களின் பேச்சில், தேநீர் கடைகளில். திண்ணைகளில் தமிழ்நாடெங்கும் ஒலிக்க வேண்டும். உலகில் வேறெங்கும்  குற்றவாளிகளை முன்னிருத்தி ஓட்டுக் கேட்கும் துணிச்சல் வருமா ? தமிழர்களை மொத்தபேரையும் திருடர்களாக, குற்றவாளிகளாகச் சித்தரிக்கிற அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும். ஆனால் தினகரன் டெபாசிட்டையும் இழக்கவேண்டும் என்பதுதான் நமது பேராசை.  இன்றைக்குத் தமிழர் மானம் ஆர். கே நகர் வாக்காளரை நம்பி  உள்ளது, ஆனால் அது விலைக்கும் உரியது என்பதால் அச்சங்கள் நிறைய.

————————-

 

 

 

 

 

மொழிவது சுகம் ஜனவரி 2 2017

முகமற்ற மனிதர்கள்jazz-artist

 

நேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால்  கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக,  மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல்  சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

உலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில்  பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய  நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை  மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.

 

மோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு  மக்களும் ஒபாமா யார்,  புட்டின் யார் ஏன் ? நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா ?

 

ஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான்.  இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும்  முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.

 

இருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் ? பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா ? அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக  இருக்கலாமில்லையா ? ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களைப்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல  வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான்,  விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான்.  வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம்  இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

————————————————————————

மொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்

1000_rupee_note_-_still_-_h_-_2016‘ஆயிரம் ரூபாய் நோட்டு ‘என்றொரு படத்தை netflixல் அண்மையில் பார்க்க நேர்ந்த து.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அறுபதுகளில் வந்த ‘ஆயிரம் ரூபாய்’ என்றொரு தமிழ்த் திரைப்படத்தை அது நினைவூட்டியது.  படத்தில் தெருவில் ஆடிப்பாடி பிழைக்கும் சாவித்திரிக்கு ஒரு நாள் ஆயிரம் ரூபாய் தாளொன்று  கிடைக்கிறது.   அதைப் பாதுகாக்க அல்லாடுகிறார், அவசரத் தேவையை முன்னிட்டு உபயயோகிக்கலாம் என்று போனாலும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தாளம்போடும்  பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் எப்படி வந்ததென்ற கேள்வி. முடிவில்  ஒரு கட்டத்தில் பைத்தியங்கூட அவருக்குப் பிடிக்கிறது.

 

‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ (1000 Rupee Note) ஒரு மராத்திய திரைப்படம். அடிப்படையில் ‘ஆயிரம் ரூபாய்’ கதையின் மையக் கருத்தை ஒட்டியதுதான், திரைக்கதை அமைப்பிலும் பிரமாதமான வேறுபாடுகளில்லை. எனினும் தமிழ் ‘ஆயிரம் ரூபாய்’ நாம்  நன்கறிந்த மெலோ டிராமா வகையறா, அதாவது ‘சோப்  ஒபேரா‘ (soap opera)ரகம். ஆனால் மராத்திய ‘ஆயிரம் ரூபாய் நோட்’ சிக்கல்களைத் திணிக்காத, எளிமையான திரைக்கதையும் சம்பவக் கோர்வையுமாக விசும்பல்கள் தேம்பல்களின்றி எதார்த்த முறுவல்களுடன்  நகரும் சினிமா.  எத்தனை யுகங்கள் வந்துபோயினும், ராஜபாட்டை அறியாது முட்டுச் சந்துகளில் உறைந்து துன்பத்துடன் வலுவில் கை கோர்க்கும் வாழ்க்கைக்கு உரியவர்கள் ஏழைகள் என்பதை  நியோ ரியலிஸத்துடன் காட்சிப்படுத்தும் சினிமா.

 

சாவித்திரி இடத்தில் இங்கே உஷா நாயக், ஆட்டம் போடவந்த இளமையும் கவர்ச்சியுமிக்க நாயகிஅல்ல, வயதானப் பெண்மணி. மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமமொன்றில் உழலும் கதை. விவசாயியான ஒரே மகன் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலைசெய்துகொள்கிறான் (இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மல்லையாக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை), கொள்ளிவைக்க உதவும் என்பதுபோல அரசுசெய்த அற்ப உதவியையும் மருமகள் சுருட்டிக்கொண்டுபோக, நிர்க்கதியாய் விடப்பட்ட விதவை.  கிராமத்தில் ஒருபணக்கார குடும்பத்தில் பத்துபாத்திரம் தேய்த்து, வீடுபெருக்கி, நாளெல்லாம் அவர்கள் வீட்டுத் துணிகளை அலசி  அவர்கள்  தின்று மீந்த தில் பசியாறும் பெண்மணி. வீட்டில் அடுப்பு மூட்டுவது டீ போட மட்டும் தான். தொடக்கத்தில் இந்த அடுப்பைமூட்டும் முயற்சியில் தீப்பெட்டியில் இருந்த நான்கு குச்சிகளில் மூன்று பயனற்றுப்போக, நான்காவது குச்சியிலாவது அடுப்பு பற்றவேண்டுமென கடவுளை வேண்டுவதும், மெல்ல மெல்ல விறகில் தீப்பிடித்து பரவ, தீச்சுவாலையின் செழுமை கன்னக்கதுப்பிலும், கண்மணிகளிலும் மினுங்குவதும், அந்த மினுங்கலை  உதட்டோரங்களில்  வழியவிடுவதும் கணநேரக் காட்சியென்றாலும் கோடிபெறும். ஏழைகள் வாழ்வில் மகிச்சிக்கூட  ரேஷனுக்கு உட்பட்டதில்லையா ?  இருந்தும்  அதையும் அண்டைவீட்டுக்காரனான சுதாமா என்ற ஆட்டிடையன் குடும்பத்துடன் பகிர்ந்து வாழ்பவள். « யாருடனாவது சேர்ந்து குடித்தால் தான் டீ சுவைக்கிறது » எனும் பெண்மணி.  அறுந்த செருப்பைத் தைக்கவும், ஐம்பது காசு செலவழித்து ஒரு தித்திப்பு ரொட்டி வாங்கவும் பலமுறை யோசிப்பவள், காரணம் சிக்கனம் அல்ல,  அவள் கையிறுப்பு அவ்வளவுதான்.

 

இந்த அன்றாடம் காய்ச்சியின் வாழ்வில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறுக்கிட,  வாழ்க்கைத் திணறுறது. வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிற ஓர் அரசியல்வாதி  வாக்குகளை விலைகொடுத்துவாங்குகிறான். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஒருவேளை நல்ல சாப்பாடும், பணமும் கிடைக்குமென்கிற சுதாமா குடும்பத்துடன் இவளும் தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள். உணவுப் பொட்டலத்துடன், வயதான பெண்மணிக்கு விவசாயியான மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலால் வேட்பாளரிடமிருந்து கூடுதலாக இரண்டொரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றன. தலைவலி அன்றே ஆரம்பிக்கிறது. எங்கே பாதுகாப்பாக வைப்பதென்ற கவலையில் உறக்கமின்றி தவித்து (எந்த வெண்டைக்காய் வங்கியும் அவளுக்குத் தெரியாது), தனக்கிருக்கும் சில ஆசைகளை (உடைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியை சரி செய்வது, தன் மகன் படத்திற்கு பிரேம் போடுவது, தனக்கும் சுதாமா குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுப்பது) நிறைவேற்றிக்கொள்வதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாமென நினைக்கிறாள். நகரம்  நோக்கிப் பயணம். பேருந்து நடத்துனர் ஆயிரம் ரூபாயை மறுக்க, உடன் பயணிக்கும் சுதாமா பணம்கொடுக்கிறான். கண்ணாடிகடை, படத்திற்கு பிரேம் போடும்கடை அனித்திலும் இதே அனுபவம். துணிக்கடையில் மாற்றிக்கொள்ளலாமென நினைத்து அங்குபோகிறார்கள்.  கடைமுதலாளி சந்தேகித்து ரோட்டோரம் போகுகும்  போலீஸ்காரரை அழைக்கிறார், பாகிஸ்தானில் அடித்த கள்ளப் பணமாம், எனவே வயதான பெண்மணியும் துணைக்குவந்த அப்பாவி சுதாமாவும் விசாரணை யென்ற பெயரில் அடிபடுகிறார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், இறுதியாக சுதாமா கைவசமிருந்த பணத்தையும் இழந்து வீடு திரும்புகிறார்கள். இச்சம்பவத்தில் வழக்கம்போல இலாபம் பார்ப்பது போலீஸ்காரர்கள். வேட்பாளர்மீதான புகாரை பதிவு செய்வதைத் தடுக்க 50000 ரூபாயும், வேட்பாளரைக் காப்பாற்ற செய்த உதவிக்குச் சில ஆயிரங்களும் கைமாறுகின்றன.

இந்தியாவில் ஏழைகள் கையில் 500 ரூபாய் நோட்டையும், 1000 ரூபாய் பார்க்க முடிவதற்கு ஒன்று தேர்தல்  காரணமாக இருக்கலாம் ;  அல்லது சிறுகச் சிறுக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேர்த்ததாக இருக்கலாம். திடீரென்று 500 ரூபாயையும் 1000 ரூபாயையும்  செல்லாதாக்கியதன் மூலம் இந்திய  மத்திய அரசு உண்மையில்  யாரைத் தண்டிக்கிறது ? ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம்  ஆனால்  வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல்,  உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம்?   எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ? இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா ?  இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன ? இவற்றிலெல்லாம் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவராமல் ஓர் உலக்கையை நட்டு புதிய இரண்டாயிரம் எனும் பணமுடிச்சை வைத்து முடிந்தால் எடுத்துக்கொள் எனக்கூறும் மோடி மந்திரம் சொல்வதென்ன ?

கட்டுக் கட்டாய் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் புதிய 2000 ரூபாய் இடவசதியைப் இரட்டிப்பாக்கி கூடுதலாக பதுக்க உதவி செய்திருப்பதைத் தவிர்த்து  கண்டபலன் என்ன ?

———————————————————–

 

மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு

அகந்தை அல்லது செருக்கு

நான் இருக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரில் இரண்டு மெய்யியல் விவாத அமைப்புகள் உள்ளன ஒன்று le Café Philo மற்றது   Espace Culturel des Bateliers. முன்னதில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும், அடுத்ததில் மாதந்தோறும் நிகழ்வுகள் உண்டு. முதல் அமைப்பு கட்டணமின்றி செயல்படுவது, அடுத்தது நுழைவுக்கட்டணத்துடன் நடைபெறுவது. அதிக பட்சமாக இருபதுபேர் கூடுவார்கள். மிகவும் பயனுள்ள வகையில் மெய்யியலாளர்கள், மெய்யியல் கருத்தியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 70களில் சென்னையில் படித்தபோது, Forum of free enterprise என்ற அமைப்பு இருந்தது, அதில் உறுப்பினனாக இருந்தேன் அப்போதெல்லாம் என்.ஏ பல்கிவாலா சொற்பொழிவு பிரசித்தம், அந்த நோய் பிரான்சிலும் எந்த வேப்பிலைக்கும் இறங்காமல் இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளுக்கும் என்றில்லாவிட்டாலும் முடிந்தவரை கலந்துகொள்கிறேன் . கடந்த புதன்கிழமை le Café Philo வில் l’orgueil அதாவது செருக்கு, என்ற சொல் கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அடுத்த கிழமைக்குரிய தலைப்பினை முன்னமேயே தீர்மானித்துவிடுவார்கள். உரையாற்றவிரும்பும் நபர் எதுபற்றிய பொருளில் உரையாற்றவிரும்புகிறார் என்பதைத் தெரிவிக்கவேண்டும், ஒன்றுக்குமேற்பட்ட நண்பர்கள் வெவ்வேறு கருப்பொருளை முன்மொழிகிறபோது, அமர்வில் கலந்துகொள்ளும் நண்பர்களின் வாக்குகள் அடிப்படையில் விவாதத் தலைப்பை தேர்வு செய்வார்கள்.

இனி அகந்தைக்கு வருகிறேன். நமது புராணக்கதைகளில் அசுரர்களையெல்லாம் அகந்தையின் வடிவங்களாக முன் நிறுத்துவார்கள். இதிகாசத்திலும் மகா பாரதத்தில் துரியோதனன் இராமாயணத்தில் இராவணன் என அகந்தைக்கு உதாரணங்களைகாட்டுகிறோம். மனிதவாழ்க்கையை நெறிப்படுத்த இவ்வாறான கதைகளைக்கொண்டு உத்தமகுணங்களுக்கென்று சில மனிதர்களையும், தீயவற்றிற்கென சிலரையும் உருவகப்படுத்தி மனிதரினத்தை அடிமைப்படுத்த சமய எதேச்சாதிகாரம் பயன்படுத்திக்கொண்ட உத்திகள் இவை. ஆதாமையும் ஏவாளையும் தடைசெய்யபட்ட ஆப்பிளை உண்டு கடவுளுக்கு எதிராக அவர்களைச் சாத்தான் திசைதிருப்பி அகந்தையிற் தள்ளிய பாவக் கதை கிறித்துவத்தில் உண்டு., இந்து மதத்திலும் சபிக்கப்பட்டு பூலோகம் வந்த கதைகள் நிறைய(பூலோகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் ?), கிரேக்க இதிகாசத்திலும் இதுபோன்ற கதைகள் இருக்கின்றன. அகந்தை என்றதும், தற்புகழ்ச்சி, தற்பெருமை, மமதை, இறுமாப்பு, இனம், சாதி, நிறம், கல்வி, பதவி, பணம் தரும் அடையாளத்தினால் « தான் எனும் எண்ணம் » இப்படி நினைவுக்கும் வருகிற அனைத்துமே அகந்தையின் வடிவங்கள் என்கிறார்கள். அகந்தை என்றால் என்ன ? தம்மிடம் இல்லாத உயர்வை இருப்பதாக நினைத்து ஒழுகினால் அகந்தை, அல்லது தான் வெறுக்கின்ற ஒருவரைக்காட்டிலும் தனக்குக் கூடுதக் தகுதிகள் இருப்பதாக நினைத்தல். ஆனால் கர்வம் வேறு. பெருமிதத்தின் எல்லையை மீறினால் அகந்தை. ஒரு தமிழ் நடிகன் சூப்பர், சுப்ரீம், தளபதி, தல என்கிற கூட்டத்திடை தன்னை உலக நாயகனாக முன் நிறுத்திக் கர்வப்பட காரணங்கள் இருக்கலாம். அது ஹைதராபாத், திருவந்தபுரத்திலும்ங்கூட செல்லுபடி ஆகலாம், ஆனால் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும்ங்கூட தன்னை உலக நாயகன் என்று நினைப்பது, கேலிக்கூத்து, அகந்தைக்கு உதாரணம்.

« அகந்தையிடமிருக்கும் நல்ல விஷயம், பொறாமையைக் அது கட்டிக்காக்கிறது. ( «L’orgueil a cela de bon qu’il préserve de l’envie», de Victor Hugo) » என விக்தொர் யுகோவின் கூற்றுச் சுட்டிக் காட்டப்பட்ட து. « குற்றங்கள் அனைத்தையும் ஊட்டிவளர்க்கிற, தாயாகவும், குற்றங்களுக்கு அரசியாகவும் இருப்பது அகந்தை  » ( «La mère nourricière et la reine de tous les vices», de Saint Grégoire le Grand) என ஒரு  பிரெஞ்சு சமயகுரு கூறியிருக்கிறார் என்றார்கள். ஆத்திச்சூடி « உடையது விளம்பேல் » என்கிறது. அகந்தை இடத்தில் பணிவு வேண்டும் எனகிறது தமிழ் மரபுமட்டுமல்ல உலகமெங்கும் அறனெறிகள் பணிவை வற்புறுத்துகின்றன. அதேவேளை, சார்த்ரு உட்பட பல மெய்யியலாளர்கள் அகந்தைக்கு வக்காலத்து வாங்கியதையும், அகந்தைக்கு ஆதரவாகக் பேசியவர் நினைவூட்டினார். எனக்கும் வெபெர் என்ற அந்த நண்பர் கோடிட்டுக் காட்டிய சார்த்ருவின் இவ்வாக்கியம் பிடித்திருந்தது : « Cet orgueil, en fait, n’est pas autre chose que la fierté d’avoir une conscience absolue en face du monde » அதாவது «  இச்செருக்கு உண்மையில், உலகிற்கு முன்பாக, என்வசமிருக்கும் ஒரு முழுமையான  விழிப்புணர்வைக்குறித்த பெருமிதமன்றி வேறொன்றுமல்ல »  அந்நண்பர் ஃபூக்கோ வின் வாக்கியத்தையும்  நினைவூட்டினார் « செருக்கு என்பது, தன்னைக்குறித்த கவலையில் உருவாவது(l’orgueil est une transformation du souci de soi)  », அகந்தைகொள்வது நியாயமற்றதாக இருக்கலாம், ஆனால் கர்வப்படுவதில் நியாயமிருக்கிறது.  எனவேதான்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

என்ற குறளுடன் முழுமையாக உடன்பட எனக்கு விருப்பமில்லை. நாம் கர்வப்பட அவசியம் இருக்கிறது. தவிரக் கர்வப் படாதவர்கள் யார் ? எனது புத்தகம், எனக்குக் கிடைத்த பரிசு, ரஜனியுடன் எடுத்துக்கொண்ட படம், கலைஞரும் நானும் எனச் சொல்லிக்கொள்வதனைத்தும் கர்வம்தான், அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. செருக்கு என்பது நமது இருளைமறைத்து, ஒளியைமட்டும் காட்டும் முயற்சி. பெருமைகள் மட்டுமே என்னிடம் உள்ளன, சிறுமைகள் இல்லை, நான் தினமும் கிருமி நாசினி சோப் போட்டுக்குளிக்கிறேன் என்கிற மனோபாவம். சமூக வலைத்தளங்களை ஒருமுறை வலம் வாருங்கள் நாமனைவருமே உத்தமர்களென காட்ட முயல்கிறோம். நமது எதிரிகளைத் தேடிச்சென்று விசாரண நடத்த சாத்தியமற்ற நண்பர்களிடம் நமது பெருமைகளை அரங்கேற்ற நினைக்கிறோம். « சிறுமை அணிந்து என்னை நானே வியந்துகொள்வதும் பெருமைதான் » என வள்ளுவன் குறளுக்குப் புதிய உரை எழுதுகிறோம். கர்வத்தைச் செருக்காக மாற்றுவதில்தான் பிரச்சினை. எல்லோரும் எல்லாவற்றிலும் உயர்ந்தவராக அல்லது தாழ்ந்தவராக இருக்கமுடியாதென்பது உண்மையெனில், ஏதோ ஒன்றில் ஒருவன் அறிவாளியாகவும் பிறர் மூடராகவும் இருக்கமுடியுமென்பதும் உண்மை. அங்கே செருக்கை, தமது இருத்தலுக்கு முன்பாக அரியணையில் ஏற்றுவதுஅவசியமாகிறது. ஒரு வகையில் அது l’essence précède l’existence- இருத்தலுக்கு முன்பு சாரம்.

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்?”

என்ற கம்பனின் கர்வம் நியாயமானது.  விளம்பரமின்றி தொலக்காட்சியின் துணையின்றி, துதிபாடிகளின் துணையின்றி விருதுகளின்றி காலம் கடந்து தனது கவிதைவாழும் என நம்பிய  குரல் அது.  வள்ளுவரின் மற்றொரு குறள் வற்புறுத்தும்   வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி,அவ்வளவையும்  தூக்கிச் செயல்பட்டக்   கம்பனைப் பிழைக்கத் தெரியாதவனின் செருக்கு என கொள்ள முடியுமா ?. நாமிருக்கும் உலகம்,  நம்மைத் தாண்டிசெல்லும்  உலகமல்ல, மிதித்துக் கடக்க எண்ணூம்  உலகம், மிதிபடாமலிருக்க விழித்திருத்தல் அவசியம், கர்வம் அரைக்கண்மூடி விழித்திருத்தல்.

———–

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)

சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த சமகாலத்தை எங்கே ஆரம்பிப்பது அதன் எல்லை எதுவரை? எண்ணிக்கையில் எத்தனை ஆண்டுகள் சார்ந்த விஷயம்? நிகழ்காலமென்றால், எது நிகழ்காலம்? இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த தருணம் நீங்கள் வாசிக்கிறபோது இறந்த தருணமாக மாறியிருக்கும் அல்லது நான் இப்பகுதியை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற நேரம் எனக்கு எதிர்காலம். ஆக நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கிறபொழுது நவீனத்துவத்தின் காலத்தை வரையறுப்பது எப்படி? எனவேதான் ஒரு தற்காப்புக்காக சுயபுனைவை நான் எழுதிய கணத்தின் இலக்கியபோக்கு எனக்குறிப்பிட்டேன். நவீனத்துவம் பின் நவீனத்துவம் குறித்த தலைப்புகளில் எழுதுகிறபோது சற்று விரிவாக இவைற்றைபற்றி பேசுகிறேன்.

சுய புனைவு என்ற பெயரில் இரண்டு சொற்கள் இருக்கின்றான. இச்சொற்களைக்கொண்டு இப்படைப்பிலக்கியம் எந்த வகை சார்ந்தது எனவிளங்கிக்கொள்ளலாம். வழக்கம்போல இதுவும் ஒரு உரைநடை புனைவுதான், மாறாக ஒரு தனிநபரின் சொந்த வாழ்க்கைபற்றிய புனைவு – கற்பனையும், எழுதும் மனிதனின் அந்தரங்கமும் கைகோர்க்கும் எழுத்து. புதியது என்பது தேடலில் பிறப்பது, போதும் அலுத்துவிட்டது என் புலன்களுக்கு, சிந்தனைக்குப் புதிதாய் என்னதரப்போகிறேன், வழக்கமான திசையில் பயணித்தபோது சோலையும், சுணைநீரும், நிழல் தரும் மரங்களும் இருந்தனவென்பது உண்மைதான், புதிய திசையில் பாலையும் வெக்கையும் குறுக்கிடலாம், இருந்தும் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன் அதுவே என் ஆண்மைக்கு அழகு என ‘நேற்றை’ மறுப்பதில் தான் ‘நாளை’ இருக்கிறது. மனித வாழ்க்கையில் மறுப்பு முக்கியமான சொல். மேற்கத்திய நாடுகளின் கலை இலக்கியம் அறிவியல் முன்னேறங்கள் மறுக்கவேண்டியவற்றை மறுத்ததால் கண்ட பலன்.

சுயபுனைவு என்ற சொல் சுய சரித்திரம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெளிவு. ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த வாழ்க்கையை சுவைபட புனைவாக்குவது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலேயே சுயபுனைவுகள் எழுதப்பட்ட வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவற்றிர்க்கு வெவ்வேறு பெயர்கள். சிலர் ” புதிய சுயவரலாறு” (Nouvelle autobiographie) என அழைத்தார்கள்; சிலர் ” நான்- புதினம்” ( Roman de je) பெயரிட்டார்கள்; வேறு சிலரோ “சுயவரலாற்றுப் புனைவு” ( Roman autobiographie) என அழைத்திருக்கிறார்கள், இறுதியாக இன்றைய பொருளில் சுய புனைவு என்ற சொல்லை 1977ம் வருடத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் செர்ழ் தூப்ரோவ்ஸ்கி(Serge Dobrovsky).

பிரெஞ்சு சுயபுனைவுகளில், avant-gardiste களின் பங்கும் நிறைய இருக்கிறது ‘காதலன்’ நாவலை எழுதிய மார்கரித் துராஸ் படைப்புகள் அனைத்துமே, அவரரது சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியதுதான். அதுபோல அண்மையில் நோபெல் பரிசுபெற்ற பத்ரிக் மொதியானோ படைப்புகளும் அவர் சொந்தவாழ்க்கையைப் பேசுபவைதான். லெ கிளேஸியொவின் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்த ‘குற்றவிசாரணை’ நாவலும் சுயபுனைவுகளில் ஒன்றே. Alain Robbe-Grillet என்பவர்தான் புதிய சுயவரலாறு என்ற அடையாளத்துடன் அவருடைய “Le Voyageur”(2001) என்ற நாவலை எழுதினார். எழுபதுகளில் ‘je'(நான்) என்றசொல்லோடு சமூகம், உடல் நோய், மரணம், குடும்பம், பாலுறவு போன்ற விடயங்கள் இணைத்த படைப்புகள்(சுயபுனைவுகள்) புத்தகச் சந்தைகளில் அதிகம் விலைபோயின. இன்றைய பிரெஞ்சு படைபுலகம் சுயபுனைவுகளைச் சுற்றி இயங்குவது என உறுதிபடக் கூற முடியும். சுயவரலாறு அல்ல என்கிறபோதும் படைப்பிலக்கியாதி தான் சாட்சியமாக இருந்தவற்றையே புனைவில் அதிகம் கொண்டுவருகிறான். இதுபோன்ற நிலையில் ‘நான்’ என தன்னிலையில் கதை சொல்ல முனைகிறபோது, அதை எழுதியவனாகவே பார்க்கிற மரபு எங்கும் இருக்கிறது, .படைப்பில் வருகிற ‘நான்’ (கதைசொல்லி) வேறு, எழுதிய ‘நான்’ (எழுத்தாளன்) வேறு என்று வற்புறுத்திசொல்லவேண்டியல் கட்டாயம் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகளுக்கும் இருந்திருக்கிறது. மர்செல் புரூஸ்டு இதற்கெனவே ஒரு நூலை (Contre Sainte-Beuve) எழுதினார்.

ஆ. கடவுளின் கடவுள்- இரா இராகுலன்.

ஒன்றை நேசிப்பது என்பது வேறு, அதை சுவாசிப்பது என்பதுவேறு. ஒரு நல்ல கவிஞன் பிறருக்காக அல்ல தனக்காக கவிதை வடிவைத் தேர்வு செய்கிறான், கவிஞன் இயல்பில் ஓர் அழகியல் உபாசகன், மென்மை உள்ளம் படைத்தவன், பிறர் துயரம் சகியாதவன், இவ்வுலகின் ஒழுங்குகளில் அக்கறை கொண்டவன் அவை பிறழ்கிறபோது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறான். அவன் தனக்காக அல்ல பிறருக்காக குரல்கொடுக்கும் கலகக்காரன், போராளி. இந்த அக்கறையை, அறச்சீற்றத்தை, பரிவை, நாம் காணாத உலகின் தரிசனத்தை, இதமான மொழியில் இலக்கியம் ஆக்குகிறான். உண்மையான கவிதை ஒரு காற்றுபோல தொழிற்படும்: மென் தளிர்களை நளினமாக அசைத்துப்பார்க்கும் வித்தையும் வரும், எச்சில் இலைகளை எங்கே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் செய்யும். நல்ல கவிஞன் காத்திருப்பதில்லை, சீண்டிய நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவன் உடலையும் உணர்வையும் ஒருசேர ஆட்டிவிக்கும் அனுபவத்தை உடனுக்குடன் மொழிப்படுத்தினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். இளைஞர் இரா. இராகுலன் அப்படிப்பட்டவரென தெரிகிறது.

குழந்தை அழலாம் என்றொரு கவிதை, பார்க்க எளிய கவிதைபோலத் தெரிகிறது ஆனால் அக்க்விதை பூடகமாகத் தெரிவிக்கும் செய்திகள், அதன் புன்புலத்தில் விரியும் காட்சிகள், கேட்கும் கேள்விகள் சாத்தியமுள்ள விடைகள், இவ்வுலகின் மீதான கோபம் – மொத்தத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் சிருஷ்டிக் கர்த்தாவின் முகத்தில் வீசுகிற கேள்வி.

குழந்தை அழலாம்

பசிக்காக
தொடரும் கொசுக்கடிக்காக
வயிற்றுக்கிரகத்திலிருந்துப் புலம் பெயர்த்தியதற்காக
அல்லது
தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு
ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக

இக்கவிதையில் பொதுவில் ‘குழந்தை அழுவதற்கு’ சராசரி மனிதர்கள் முன்வைக்கும் காரணத்திலிருந்தே பதிலைத் தொடங்குகிறார். ஆனால் அடுத்தடுத்த வரிகளில் வரும் வார்த்தைகள் சொல்ல வருவது வேறு. கொசுக்கடியை முழுமைப்படுத்த உபயோகித்த ‘தொடரும்’ என்ற வார்த்தையின் தேர்வும் அதன் இடமும் முக்கியம். ‘வயிற்றுக் கிரகத்திலிருந்து புலம்பெயர்த்தியதற்காக’ வும் குழந்தை அழலாம் என்ற யூகத்தை எழுப்புக்கிறார், யூகம்போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் ( ‘அல்லது’ என்ற சொல் உபயோகத்தைக் கவனிக்கவும்). அந்த அழுகை சீற்றத்தினால் வெடித்து எழுந்த குரலாகவும், ஏன் செய்தீர்கள்? என்ற கேள்வியாகவும் தொக்கி நிற்கிறது. படைத்தவர்கள் அனைவரிடமும் குழந்தைக்குள்ள கேள்வி இது – உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் படைப்புக் கடவுளிடமுங்கூட எனச்சேர்த்துக்கொள்ளலாம். தன்னை இந்த மண்ணில் பிறப்பெடுக்கவைத்ததில் உடன்பாடில்லை – என்பதைத் தெரிவிக்கும் அழுகை. இறுதியாக ‘குழந்தை அழுவதற்கு கவிஞர் கூறும் மற்றொரு காரணம்: “தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக “. அவ்வழுகைக்குள் ஓலிந்துள்ள உத்தரவு ஓர் எள்ளல்போல இருப்பினும், கவிஞர் சொல்ல வருவது நம்முடைய மரமண்டைக்கு அதன் அழுகைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள போதாது, தன்போன்ற இன்னொரு குழந்தை மட்டுமே புரிந்துகொள்ளும் – எனவே என்னைப்புரிந்துகொள்ளக்கூடிய ஒரு குழந்தையை என்னோடு பேசுவதற்கு அனுப்பிவையுங்கள் என்பதற்காக குழுந்தை அழுகிறது எனக்கூறுவது, விரக்தியின் உச்சம், இச்சமூகத்தின் மீது இயல்பாக மென்மை உணர்வுடையோருக்கு எழும் தார்மீகக்கோபம்.

‘நினைவுகூர்தல்’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான கவிதை. நோஸ்ட்டால்ஜியாவை இதைக் காட்டிலும் சிறபான படிமமம்கொண்டு – விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்த கவிதைகளில் அதுவொன்று

………..
தூசிபடித்த நாற்காலி மீது
வீட்டுக்காரனொருவன் அமர்ந்திருந்தான்

மேசையின் மீது புத்தகங்கள்
தூசியாலும் பூச்சிகளாலும்
வாசிக்கப்படுவதைப் போல்
கடந்த நிகழ்வுகளைப்
பாழ்பட்டுபோன வீட்டுக்குள்
ஒவ்வொன்றாய்த் தேடியெடுக்கிறான்”

இவரது கவிதைகள் அதிகம், தனிமை, நினைவுகள், நினைவுலகம் மனம் எனசுற்றி வருகின்றன அதனாலேயே இவுலகின் குறை நிறைகளை கூர்ந்து கவனித்து கவிதை வடிக்க முடிகிறது.

இத்தொகுப்பில் சுருக்கமாக இருந்தபோதிதிலும் என்னை ஈர்த்த மற்றொரு கவிதை
பெருமழை‘ என்ற தலைப்பிட்ட எளிமையான வரிகள்:

வெகு நேரமாய் மழை
காரணம் புரியவேயில்லை
பாறையின் இடுக்கொன்றில்
சிக்கிகொண்ட விதையினருகே
இப்பொழுதுதான்
பெருமழையின் ஒரு துளிவந்து சேர்ந்தது.

வாழ்க்கைமீதான அவநம்பிக்கைகள் ஏற்படுத்தித் தரும் கோபம் கடவுளிடம் திரும்புவதை இவர் கவிதைகளில் வெவ்வேறு இயற்கைநிகழ்வாக அறிமுகமாகின்றன. மேலே அதே இயறகைக்கொண்டு அவிழ்க்கப்பட்டப் புதிரை, சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டு தனி மனிதனாக அவிழ்க்கமுற்படுகிறபோது ‘நான் நானாகக்கூட இல்லையே” என்ற ஏக்கம் கவிதை மொழியில் மின்னலாகத் தோன்றுகிறது, நடப்பது சில கணமென்றாலும், தாக்கத்தால் நெஞ்சம் அதிர்வது சத்தியம்.

தொகுப்பிலுள்ள அந்த வயோதிகன், அன்பெனும் மது, இரவைக் கிழித்த கதிர்கள் எனத் தொடங்கும் கவிதை, மன நிலை, பொம்மைகள், இவ்வாறு வாழ்கிறோம் போன்றவற்றைப் பலமுறை வாசித்திருப்பேன். ‘உயிர்க் கிணறு’, ‘ஊர்ந்த நடை’, ‘உலகின் கரை’ நினைவில் நிற்ககூடிய வார்த்தை கட்டிகள். பல நேரங்களில் சொற்சிலம்பில் கவனம் செலுத்தி கவிதையின் இலக்கை தவறவிடுவதுபோலவும் தெரிகிறது. உதாரணம் ‘தெரியாது’ என்ற கவிதை.

இவரது கவிதைகளை வாசித்துவிட்டு இருவர் தங்கள் கருத்துக்களை அழகான தமிழில் உள்ளார்ந்த உணர்வோடு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், ஒருவர் மூத்தக் கவிஞர் பழமலய் மற்றவர் ஸ்ரீநேசன், அவற்றின் மீதான நம்பகத் தன்மை இரா. இராகுலன் கவிதைகளைப் படித்தபின் கணிசமாகக் கூடியிருக்கிறது. இறுதியாக இக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, புண்ணியம் தேடிக்கொண்ட ‘நறுமுகை ஜெ. இராதாகிருஷ்ணனுக்கும் நன்றி.

———

கடவுளின் கடவுள் (கவிதைத் தொகுப்பு)
விலை ரூ50.
– இரா. இராகுலன்
நறுமுகைப் பதிப்பகம்
29/35 தேசூர் பேட்டை, செஞ்சி 604202

இ. ஸ்ட்ராஸ்பூர் தேவாலய ஒலி ஒளி காட்சி

பிரான்சு நாடெங்கும் சுற்றுலா காலமென்பதால், பயணிகளை ஈர்க்கின்ற வகையில் நகரம் அதன் சுற்று புறங்களில் கண்களுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் வையில் நிகழ்ச்சிகளை செப்டம்பர்வரை ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். ஸ்ட் ராஸ்பூர் மாநகராட்சியியும் தன்பங்கிற்கு சிலவற்றை ஏற்பாடு செய்து உள்ளூர் வாசிகளையும், சுற்றுலா பயணிகளியும் மகிழ்விக்கும் பணியில் நகரமெங்கும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள், ஆயிரம் வயதைக் கொண்டாடும் உலகப் புகழ்பெற்ற தேவாலயத்தில் ஒலி, ஒளி காட்சிகள் தினந்தோறும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நேற்று மனைவியும் நானுமாகச் சென்று பார்த்தோம். சொல்ல வார்த்தைகள் போதாது. தொழில் நுட்பமும், கலையும் இணைந்து கண்களுக்கும் காதிற்கும் சுகத்தை அளித்தன.

நன்றி : You tube
———————————————————-

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie)
தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய சரித்திரம்’. Autobiographie என்ற பிரெஞ்சு சொல்லை நேரடியாக மொழிபெயர்ப்பின் அது எழுதிய நபரின் வாழ்க்கைச் சரித்திரம். ஆனால் உண்மையில் ஒருவகையான நினைவு கூரல். எழுதிய நபரின் கடந்தகால நினைவுகளை அசைபோடுதல். இக்காரியத்தில் குவிமையமாக இருப்பது: எழுதியவர் மூன்றாவது நபராக இருந்து பார்த்தக் கேட்ட சம்பவங்களல்ல; அவரே பங்காற்றிய நிகழ்வுகள். ‘இருத்தல்’ சம்பாதித்து, மறக்க இயலாமல், அவருடைய மனக்குளத்தில் தெப்பமாக மிதக்கிற சொந்த அனுபவங்கள். அவர் துணைமாந்தரல்ல, நாயகன்; சாட்சி என்று கூற முடியாது சம்பவத்தின் கர்த்தா. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் “கடந்தகால வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து தன்னுடைய இயற்கைப் பண்பை உரைநடையில் ஒருவர் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் செயல்.

 
“என்னுடைய நாவலின் மையப்பாத்திரமே நான்தான் என்கிறார் ” “Les aventures burelesques de Monsieur d’Assoucy” எழுதிய Charles Coypeau d’Assoucy (1605 – 1677). வெகுகாலம் தொட்டே தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பதிவுசெய்வது இலக்கிய உலகில் நடந்துவருகிறது. ஆனால் அப்படி யொன்றை பதிவுசெய்கிறோம் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தது பதினேழாம் நூற்றாண்டு என பிரெஞ்சு இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. சாட்சியங்கள் என்ற பெயரில் தங்கள் சுய சரித்திரத்தில் தன்னைத் தானே வியந்தோதிக்கொண்ட கதைகள் பிரெஞ்சு இலக்கியங்களிலும் தொடக்ககாலங்களில் நிறைய நடந்திருக்கின்றன. சுயசரித்திரம் எழுத மதமும் தூண்டுகோலாக அமைந்தது. குறிப்பாக கிருத்துவத்தில் சமயச் சடங்குகளில் ஒன்றாக இருக்கிற பாவ சங்கீர்த்தனம் சுய சரித்திரத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. பாவச் சங்கீர்த்தன சடங்கு அளித்த தைரியதில் தங்கள்ள் சமய குருக்களிடம் பகிர்ந்துகொண்ட சொந்த வாழ்க்கையில் இழைத்தத் தவறுகளை, அல்லது அப்படிக் கருதிய தவறுகளை, முன்பின் அறிந்திராத வெகு சனத்திடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக தங்கள் நெஞ்சின் பாரத்தைக் குறைக்கமுடியுயுமென பலர் நம்பினார்கள். உதாரணத்திற்கு மோந்தேஞ்னுடைய ( Montaigne) ” Essais, ரூஸ்ஸோவுடைய (Rousseau) ‘Les confessions’ ஆகியவற்றைக் கூறலாம். அதன் பின்னர் ஷத்தோ•ப்ரியான்(Chateaubriand ) என்பவர் எழுதிய Mémoires d’outre-tombe, சுயவரலாற்றின் புதியதொரு பயன்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு புனைவிற்குறிய குணத்தை எழுத்தில் கொண்டுவந்ததோடு, ஒரு தனிமனிதன் சமூகத்திற்குக் கையளித்த விண்ணப்பமாகவும் அது இருந்தது. “மானுடத்தின் அந்தரங்க வரலாறு ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட George Sandன் (1804-1876) ‘Histoire de ma vie”யும் அவ்வகையில் முக்கியமானதொன்று  Autobiographie என்ற வார்த்தையில் அதன் முன்னொட்டு சொல்ல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் , அடுத்து பின்னொட்டு சொல் அடிப்படையில் எழுத்தும் வாசிப்பும் எடுத்துக்கொள்கிற சுதந்திரம், இவ்விரண்டு கருத்தியங்களிலும் திறனாய்வாளர்கள் – இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கிடையிலும் முரண்கள் இருக்கின்றன. விளைவாக இன்றளவும் கோட்பாட்டளவில் குழப்பமான சொல்லாடலாகவே இருந்துவருகிறது. ஒரு சுய சரித்திரத்திற்கான வரவேற்பு என்பது ஒரு மனிதன் தனது சமூகத்தில் ஏற்கனவே சம்பாதித்திருந்த செல்வாக்கு மற்றும் இடம் சார்ந்தது. அதே வேளை அதன் வெற்றி என்பது சொல்லப்படும் செய்தியிலுள்ள நம்பகத் தன்மை, எடுத்துரைப்பிலுள்ள தனித்தன்மை மற்றும் அழகியலால் தீர்மானிக்கபடுபவை.

 

ஆ. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

 

புதுச்சேரியைசேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதி இயக்கிய ஆவணப்படம். சுந்தரேசனாரின் அருமை பெருமைகளை அவரோடு நெருங்கிப்பழக வாய்ப்பமைந்த நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காவிரி ஆற்றோடு கலந்து பாய்கிற சிலப்பதிகார கானல்வரிகள் சுந்தரேசனாரின் கணீரென்ற குரலில் அந் நதி நீர்போலவே ஓசையிலும் சுவையிலும் உயர்ந்து நிற்கிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டவரென்றும் தமிழ் நாட்டில் மிகப்பெரும் இசை விழிப்புணர்வு ஊட்டி, தமிழர்களிடத்து இசையார்வம் தழைக்க உழைத்தவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சிற்றிலக்கியங்களை அதற்குரிய இசையில் பண்முறையில் பாடிக்காட்டிய பெருமைக்குரியவர்” என்கிற குறிப்புகள் இந்த ஒளிவட்டில் இடம்பெற்றுள்ளன, அதற்குப் பொருந்துகிறவகையிலேயே ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
ண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (ஆவணப்படம்)

எழுத்து இயக்கம்: முனைவர் மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளித் திரைக்களம்
தொடர்புகட்கு: http://www.muelangoven.com

 

இ. அதிபர் அப்துல் கலாமும் – மாத்தாஹரி நாவலும்

 

அவரது மரணத்தால் நாடே உறைந்துபோய்விட்டது. இந்திய அதிபர்களில் ஒருவருக்கு நானறிந்து நாடுதழுவிய அஞ்சலி என்பது இதுதான். அதற்கான தகுதிகள் அவருக்கு கூடுதலாகவே இருந்தன. அதிபராக அல்ல ஒரு மா மனிதராக அதிபர் நாற்காலியை அலங்கரித்திருந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் சம்பிரதாயமாக அல்லாது, அண்மைக்காலங்களில் ஒர் அசாதாரண ஆசாமி என்ற நினைப்போடு கைகுலுக்கிய இந்தியத் தலைவர் இவராகத்தான இருக்கவேண்டும். தமிழர்களுக்கென்றமைந்த தனித்த குணத்தின்படி ஆராவரத்துடன் துக்கத்தை அனுசரித்தார்கள். அவர் இரண்டாம் முதறை அதிபரானால் எனது பெருமை என்ன ஆவது நினைத்த தமிழினத் தலைவர்களெல்லாங்கூட தராசில் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் கலாம் பெயரால் பரிசு என்று அறிவித்து எல்லோரினும் பார்க்க எனது அஞ்சலி எடைகூடியதென்று தெரிவித்து எதிரிகளை வாயடைக்கசெய்துவிட்டார். மறைந்த கலாமே இத்தைகைய கூத்துகளுக்குச் சம்மதிக்கக்கூடியவரா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.  ஐரோப்பிய யூனியனின் பொன்விழா (50 ஆண்டுகள்) நிகழ்வில் திரு கலாம் கலந்துகொண்டார். ஐரோப்பிய பாராளுமன்றம் இருப்பது நான் இருக்கிற Strasbourg நமரில். அழைக்கப்ட்ட இந்தியர்களில் நானும் ஒருவன். நாள் ஏப்ரல் 25, 2007. அவர் ஆற்றிய உரையை மறக்க முடியாது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எங்களைபோல அழைக்கப்பட்டிருந்த நண்பர்களுக்கு முன்னால் கனியன் பூங்குன்றனாரைபற்றி இரண்டொரு வரிகள், புறநானூற்றிலிருந்து “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” எனத் தமிழில் கூறி ” I am a world citizen, every citizen is my own kith and kin” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டு உரையைத் தொடர்ந் த போது, நாங்கள் சிலிர்த்ததும், பரவசத்தில் கண்கள் சுரந்ததும் மறக்க முடியாத அனுபவம்.  அச்சம்பவத்தை ‘மாதாஹரி ‘நாவலில் அத்தியாயம் 24ல் பயன்படுத்திக்கொண்டேன், கதையில்வரும் இளம்பெண் (ஹரிணி) இந்திய அதிபர் அப்துல் கலாம் பாராளுமன்ற உரையை நேரில் கேட்பதுபோன்று அமைத்து அவர் உரையின் சில பகுதிகளை நாவலில் கலாம் பேச்சாக பதிவு செய்தேன். ஏதோ என்னால் முடிந்தது.
———————————————————-

மொழிவது சுகம் ஜூலை 18 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

 

கலை மக்களுக்காக (Art Social)

கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் இவ்வியக்கம் தீவிரமாக செயல்பட்டது. ‘கலை மக்களுக்காக’ என்பது கலை, இலக்கியம் ஆகியவற்றைக்கொண்டு சமூக ஏற்றதாழ்வுகளை விமர்சனம் செய்வது மற்றும் சாதாரண மக்களின் முன்னேறத்திற்கு ஆதரவாக அவ்வைரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுதல். மரபை உடைத்து, புதிய போக்கில் நம்பிக்கைக்கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் இவ்வியக்கத்தின் அபிமானிகள். பதினெட்டாம் நூற்றாண்டில் மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கம், மதத்தில் தலையீடு ஆகியவற்றை மறுத்த சீர்திருத்தவாதிகள், கலைஞர்களை சராசரி மக்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படவேண்டுமென வற்புறுத்தினார்கள் அச்செயல்பாடு இரண்டுவிதமாக இருக்கலாமென யோசனையும் சொல்லப்பட்டது. சமூகக் குறைபாடுகளை படைப்புகளில் வெளிப்படுத்துதல் என்பது ஒரு முறை, அக்குறைபாடுகளை அகற்றுவதற்கு உரிய யோசனைகளை வழங்குதல் என்பது மற்றொரு முறை.

 

“கலை கலைக்காக” என்ற இயக்கம் படைப்பிலக்கியவாதிகளிடத்தில் செல்வாக்கைப் பெற்ற அதேக் காலக் கட்டத்தில் கலை மக்களுக்காக என்ற இயக்கம் ஓர் எதிர் நடவடிக்கையாக இடது சாரி சிந்தனையாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது. இவ்விரண்டு போக்குகளும், அவை பயணித்த பாதைகளும் வேறு வேறாக இருந்தபோதிலும் ஒவ்வொன்றும் மற்றதின் இயங்கா தளத்தைக் கண்டறிந்து அதில் செயல்பட்டதால், படைப்பிலக்கியதுறைக்கு இரண்டுமே உதவிபுரிந்திருக்கின்றன. இவ்வகையில் வந்த தொடக்ககால படைப்புகள்: உதாரணத்திற்கு Journal des débats என்ற பிரெஞ்சு தினசரியில் எழென் சுய் (Eugène Sue) என்பவர் ஒருவருடத்திற்குமேல் தொடர்ச்சியாக எழுதிய ‘The Mysteries of Paris’ என்ற நாவலைக் குறிப்பிடலாம். சோஷலிஸ சமூகத்தை கட்டமைக்கமுயலும் ஒரு மேட்டுக்குடி கதாநாயகன் தொழிலாளர்கள், அடித்தட்டுமக்கள் சகவாசம் என வலம் வரும் கதை. இப்படைப்புகள் ஒரு பக்கம் தொழிலாளர்கள் உலகில் ஓர் எதிர்பார்ப்பினை உருவாக்கின, மற்றொரு பக்கம், சமூக நலனில் அக்கறைகொண்டு அர்பணிப்பு மனத்துடன் செயல்படும் படைப்பாளிகளை இனம் கண்டது. ஆனாலும் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும், தம்மை நேரடியாக இணைத்துக்கொண்டு இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றிய பிரபலங்கள் குறைவு, சொற்ப எண்ணிக்கையினரே, ஆர்வம் காட்டினார்கள். மாறாக தொடர்கதைகள், கவிதகள், நாடகங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டினார்கள், அவற்றில் வேகம் இருந்தது, உண்மையும் இருந்தது, மாறாக வாசிப்புக் கணந்தோறும் சிலிர்க்கவைக்கிற, இன்பத்தில் திளைக்கவைக்கிற, எண்ணி மகிழ்கிற இலக்கிய குணங்கள் அற்றவையென்ற விமர்சனத்திற்கு ஆளாயின; எமிலி ஜோலா, பியர் த்ய்ப்போன்(Pierre Dupont) போன்றோர் அந்தக் களங்கத்தைத் துடைத்தவர்கள் என்கிறபோதும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

1851ம் ஆண்டில் இரண்டாம் பிரெஞ்சு குடியரசைக் கலத்துவிட்டு, அதுநாள் வரை அதிபராகவிருந்த லூயி நெப்போலியன் போனபார்த் இரண்டாம் பிரெஞ்சு பேரரசை ஏற்படுத்தி தன்னை மூறாம் நெப்போலியனாக அறிவித்துக்கொண்டபோது ‘கலை மக்களுக்காக’ என்ற அணியினருக்குப் போதாதகாலம். ஆனால் 1889ல் மீண்டும் இவ்வியக்கம் சுறுசுறுப்பாக இயங்கியது. A. Tabarant, L.Cladel ஆகியோர், வேறு சிலருடன் இணைந்து சமூக எழுத்தாளர்கள் கிளப் (Club de l’art social) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். L’art social (1891-94) என்ற இதழ், ‘Théâtre d’art social’ என்ற நாடக இயக்கம், B. Lazare என்ற எழுத்தாளர் நடத்திய L’écrivain et l’art social (1896) என்ற சஞ்சிகை ஆகியவைகளெல்லாம் பின்னாளில் இவியக்கத்திற்கு ஏற்பட்ட ஆதரவைத் தெரிவிப்பவை.

 
இருபதாம் நூற்றாண்டில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் ‘கலை மக்களுக்காக’ இயக்கத்தைக் கையிலெடுத்ததும், அது இலக்கிய அடையாளத்தை இழந்து அரசியல் சாயத்தை அப்பிக்கொண்டது, தொடக்கத்திலிருந்த கவர்ச்சி அதற்கில்லை. பின்னாளில் அதனாலேயே செல்வாக்கிழக்க காரணமும் ஆயிற்று. எனினும் சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது அவ்வப்போது இக்குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வியக்கத்தின் பலமும் பலவீனமும் அடித்தட்டு மக்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வரும் படைப்புகளுக்கு அம்மக்களே உரிய வரவேற்பைத் தருவதில்லை. அவர்கள் அக்கறைகொள்ள இருக்கவே இருக்கின்றன மலிவான பொழுதுபோக்கு அம்சங்கள். அடித்தட்டு மக்களை குறிவைத்து தார்மீக நோக்கம், எதார்த்தைத் தோலுரித்துக்காட்டுதல், பொழுதுபோக்கு அம்சங்கள் ( வெகு சன எதிர்பார்ப்பு?)மூன்றையும் ஒன்றிணைப்பதென்பது எளிதான விஷயமுமல்ல இன்று ‘தலித் எழுத்த்து’ ‘பெண்ணிய எழுத்து’ என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் ‘கலை மக்களுக்காக’ முன் வைக்கும் வாதங்கள்தான். நாளை ‘முதியோர் இல்லத்தில் வாடும் வயது கிழங்கட்டைகளின் எழுத்து’ என்று கூட ஒரு வகைமை உருவாகலாம், எதுவவும் தப்பில்லை, ஆனால் இயங்கும் தளம் இலக்கியம் அல்லது கலை என்பதை மறந்து அனுதாபத்தை யாசிப்பதும், பிரச்சார அரசியலை மையப்படுத்துவதும் உண்மையான நோக்கத்திற்கு ஒரு போதும் உதவாது. ‘கலை மக்களுக்காக’ என்ற கூத்தரங்கில் அதிகம் அமெச்சூர் நடிகர்கள் அரிதாரம் பூச வருகிறார்கள், விளைவாக அவர்கள் நொண்டுவதைக் கூட கலை என சாதிக்கிறார்கள், பார்வையாளர்கள் முகம் சுளித்தால் கூடம் கோணலென்கிறார்கள் அதே வேளை தற்போது தமிழில் மற்றொரு கூட்டம் (‘கலை கலைக்காக’ என்ற திருநாமத்தை அவர்கள் வெளிப்படையாக தரிப்பதில்லை, தரித்தால் வடகலையா? தென்கலையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய ஆபத்து அதில் இருக்கிறது.) கைக்கு எட்டாத இடத்தில் இலையைச் போட்டு முடிந்தால் சாப்பிட்டுக்கொள் என்கிறது.

 

வயிறு பசிக்கிறதே என்று வைக்கோலையும் புண்ணாக்கையும் சாப்பிடமுடியாது, வாய்க்கும் ருசியாக இருக்கவேண்டும் என்பது என்கட்சி.

 

ஆ. அண்மையில் வாசித்தது

சொல்வனம் இதழ் 131ல் வாசித்தவற்றுள் கவர்ந்தவை அல்லது கவனம் பெற்றவை என இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இக்கட்டுரைகளை நான் தேர்வு செய்தமைக்குக் காரணம் அவை இரண்டுமே, சித்திரத்தை அடிப்படையாகக்கொண்டவை. நூலாசிரியர்கள் கனவுபோல எழுத்தில் இயக்கிய காட்சிகளை, வாசகர் மனதில் படிமங்களாக மட்டுமே இடம்பெறக்கூடியவற்றை கோடோவியங்களைக்கொண்டு நடமாடச்செய்வதற்கு அசாத்திய ஞானம் வேண்டும், கலைஞானம் அறிந்து வருது அல்ல, கண்டு கேட்டு உற்று உணர்ந்து பெறுவது, மனிதர் காரியமல்ல, சிந்தனையில் விவேகமும் பார்வையில் நுட்பமும் அழகும் வேண்டும்.

‘கோபுலு’ மறக்க முடியாத நினைவுகள் – எஸ். சிவக்குமார்: என்ற தலைப்பில் அவரோடு பழகிய நண்பர், எஸ். சிவக்குமார் தம் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். விகடன் இதழாளர்கள் தங்கள் இதழில் இக்கட்டுரையை வெளியிடத் தவறினோமே என வருந்தி இருக்கக்கூடும். கோபுலுவுக்கு செலுத்தப்பட்ட உன்னதானமான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கமுடியும், கோபுலு என்ற பெயர் தன்னுள் விதையாக விழுந்த கதையிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. கோபுலுவின் கோட்டோவியத்தின் சௌந்தர்யமும் நளினமும் இந்த மனிதரின் எழுத்திலும் இருக்கிறது, வெகு நாளாயிற்று இதுபோன்ற நடையிற் தோய்ந்து. வெறுமனே சடங்காக எழுதிப் பிரசுரமான கட்டுரையாக தெரிவியவில்லை. கோபுலுவின் ஓவியத்துடனும், காலத்துடனும் தோய்ந்து சுவைத்து மகிழ்ந்ததை அவற்றின் Texture கொண்டே வார்த்தைகளாக வடிவமைத்திருக்கிறார். விகடனில் வெளிவந்த த. நா. குமாரசுவாமியின் நாவல் வரிகளை கோபுலு தமது தூரிகை கொண்டு உயிர்பித்திருந்த காட்சியைக் கட்டுரையாளர் விவரிக்கிறபோது, கோபுலுவின் சித்திரங்கள் திரும்பவும் உயிர்பெற, நாடகக்கொட்டகை பார்வையாளன்போல கண்களை அகல விரித்து காட்சியில் லயிக்கிறோம். எனக்கும் தேவன் எழுதிய “ஸ்ரீ மான் சுதர்சனத்தை” ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சந்திக்கிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. கோபுலுவின் ஓவியத்தைக் கட்டுரையாளர்போல அக்கறைஎடுத்துக்கொண்டு அந்த நாளில் கவனித்தது குறைவு, பின்னாளில் சில வார இதழ்களைப் பிரிக்கிறபோது ஓவியங்களை வைத்து வரைந்தது யார்? என்பதை அறிவது எளிதாக இருந்திருக்கிறது, எனினும் கட்டுரையாளர் திரு எஸ். சிவக்குமார் அளவிற்கு ஓவியங்களில் தோயும் மனம் அப்போது எனக்கில்லை.

பீமாயணம் -தீண்டாமையின் அனுபவங்கள் -ரா.கிரிதரன்: சொல்வனத்தில் நான் வாசித்து மகிழ்ந்த இரண்டாவது கட்டுரை.பொதுவாகத் தமிழில் புத்தக மதிப்புரைகள் செய்வது இலக்கிய சேவை அல்ல. இவர்களை ஐந்து வகையினராகப் பிரித்துப் பார்க்கலாம்.
முதற் பிரிவின்படி சில விடாக்கொண்டன் எழுத்தாளர்கள் ( இதில் பெண்களும் அடக்கம்) நமது கையில் புத்தகத்தைத் திணித்து அல்லது தபாலில் அனுப்பி எப்படியாவது மதிப்புரையை எழுதவைத்துவிடுவார்கள். இராண்டாவது வகையில் எழுத்தைத் தவிர வேறு கூறுகளின் நிர்ப்பந்தகளால் எழுதப்படும் மதிப்புரைகள், சொல்லக் கூச்சமாக இருக்கிறது, நான் எழுதிய 90 விழுக்காடுகள் இப்படி எழுதப்பட்டவைதான். மூன்றாவது வகைமையில் ‘இவர்’ ‘அவர்’ நூலுக்கு மதிப்புரை எழுதுவார், நன்றிக்கடனாக சில மாதங்களுக்குப்பின் ‘அவர்’ ‘இவர்’ நூலுக்கு மதிபுரை எழுதுவார். பரஸ்பரம் முதுகைச் சொரிந்துகொள்வார்கள்.மேற்கண்ட மூன்று வகமைகளிலும் மதிப்புரைகள் தரம் எப்படியென்று சொல்லத்தேவையில்லை. நூலாசிரியர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார்கள் மற்றபடி அவர்கள் எழுதிய பத்து மதிப்புரைகளை எடுத்து மறுவாசிப்பு செய்துபார்த்தால், வார்த்தைகளுக்கு அவர்களிடம் எவ்வளவு வறட்சி யென்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால் மேற்கண்ட மூன்று வகைமைக்குள்ளும், அணுகுமுறையில் தவறிருப்பினும், நியாயங்களும் நடந்திருக்கலாம், தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்கள் சொந்த முயற்சியால்தான் தங்கள் அடையாளத்தை உறுத்திப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த மூன்றுவகை புத்தக மதிப்புரையாளர்களால் ஒருவருக்கும் பாதிப்பில்லை.நான்காவதாகத் தங்களை வசிஷ்டர்கள்(?) என நினைத்துக்கொள்கிற விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கொண்டாடப்பட ஒன்று நீங்கள் அவருக்குக் குடிப்பிள்ளையாக இருக்கவேண்டும், மீடியாக்கள் தயவால் வாமணவதாரம் எடுத்தவரென்றால், உங்களுக்குச் சலுகைகள் உண்டு, வசிஷ்டர்களை அனுசரித்துப்போகத் தெரியவேண்டும். தவறினால் உங்கள் இருப்பு கேள்விக்குறியாகும், அரிச்சுவடி பாடம் எடுப்பார்கள், உங்களுக்கு பேனாவைத் தொட யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளும் வரலாம்.

 

இவற்றையெல்லாம் கடந்து ஐந்தவதாக வகை புத்தக மதிப்புரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சிற்றிதழ்களையும், இணைய இதழ்களையும் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் அறிவார்கள். நல்ல புத்தகங்கள் படித்தேன், அவற்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன், என புத்தக மதிப்புரைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒருவர் நண்பர் ரா.கிரிதரன்.

 

இவர் மதிப்புரை எழுதுகிற புத்தகங்களை நம்பி வாங்கலாம். வாசித்தபின் மதிப்புரை எழுதிய ரா. கிரிதரன் கருத்திற்கு உடன்படாமல் போக வாய்ப்புண்டு. ஆனால் மதிப்புரை என்ற பெயரால் கொடுக்கும் சிபாரிசு கடிதம் நம்பிக்கைத் தன்மை கொண்டது. அவர் மதிப்புரைக்குத் தேர்வு செய்த நூலின் ஆசிரிரியரோ, ஓவியரோ, பதிப்பாளரோ ஒருவரும் வேண்டியவர்கள் பட்டியலில்லை. அம்பேத்த்கரின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டிலும் அதனைஓவியமாக்கிய கலைஞர்கள் ரா. கிரிரனைக் அதிகம் கவர்ந்த்திருக்கிறார்கள். அதாவது ஐயத்திற்கு இடமின்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை ஓவியமொழியில் கூடுதலாக பேசவைத்திருப்பதில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.சாதாரணமாக சித்திரகதைகளில் ஒரு கலைஞனின் ஓவிய ஞானத்தை மறைக்கிற, மீறிய கதை சொல்லல் இருக்கும். சித்திரக் கதையின் உற்பத்தியில், ஓவியன் ஒரு தொழிலாளி, கலைஞன் அல்ல. மாறாக பீமாயணம் நூலை விமர்சனம் செய்திருக்கிற நண்பர் ரா.கிரிதரன் கோபுலு பற்றிய கட்டுரைரையில் எஸ். சிவக்குமார் நினைவுகூருகிற அதே அணுகுமுறையை இங்கே கையாண்டிருக்கிறார். பல நேரங்களில் ரா.கிரிதரன் காட்சியில் லயித்து அதிலேயே அமிழ்ந்துவிடுவதுபோன்ற உணர்வை கட்டுரையில் சில வரிகள் தருகின்றன. பர்தான்கோட் ஓவிய முறையை உயிர்ப்பித்த பணியில் பாரத்பவன் மட்டுமல்ல, பீமாயணம் நூல் ஊடாக தமிழ் அறிய காரணமான காலச்சுவடு, அந்நூலை அறிமுகசெய்ய நூலின் கலைத் தன்மையைப் புரிந்துகொண்டு ஓர் ஆழமான கட்டுரை எழுதிய ரா. கிரிதரன் அனைவருக்கும் நன்றி கூற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 
மேற்கண்ட இருகட்டுரைகளின் முழுப் பயனை அடைய, சொல்வனம் இணையதளைத்தில் அவற்றை வாசியுங்கள்.
http://solvanam.com

————————————————————————————————————————

மொழிவது சுகம் ஜூலை 5 2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -3

கலை கலைக்காக (Art pour l’art)

“கலை கலைக்காக” அல்லது ‘art pur’ ( ‘தூய கலை’ அல்லது அசல் நெய் என்பதுபோல ‘அசல் கலை’ ) என்ற குரல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஒலிக்கத் தொடங்கியது. படைப்பிலக்கியம் சுதந்திரமாக இயங்கவேண்டி பலரும் தீவிரமாக செயல்பட்ட நேரத்தில் இக்குரல்கள் கேட்டன. “எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தவேண்டிய அவசியம் படைப்புகளுக்கில்லை”, “தமது முடிவைத் தாமே தீர்மானிக்கக்கூடியவற்றை மட்டுமே படைத்தல்” போன்ற கனவுகளுக்குரியவையாக அக்குரல்கள் இருந்தன. இன்றைய நவீன இலக்கியத்தில், ஒரு பிரிவினரின் முன்னோடிகள் அவர்கள். “மக்களைப் பற்றியும், தங்கள் சமூகத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத மனிதர்களுக்கு இவையெல்லாம் ஒரு சால்ஜாப்பு” என எதிர் தரப்பினர் (கலை மக்களுக்காக) குற்றம் சாட்டினார்கள். கலையின் அனைத்து சாத்தியகூறுகளையும் முயற்சி செய்ததோடு, அறிவோடு முரண்பட்டு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கற்பனை நவிற்சி வாதமும் (Romanticisme) ஒருவகையில் “கலை கலைக்காக” என்ற வாதத்திற்குக் காரணம், குறிப்பாக அதன் “சுயாதீன உத்வேகம்” (Libre inspiration).

‘பல்ஸாக்'(Balzac)க்கின் ‘Illusions Perdues’ கதை நாயகனிடம், எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்வாய்? என்கிற கேள்வியை முன்வைக்கிறபோது:எளிமையான படைப்பாளிகள் கூட்டத்தோடா? ஆடம்பரமான பத்திரிகையாளன் வாழ்வா? – அவன் தேர்ந்தெடுப்பது படைப்பாளிகள் கூட்டத்தை, அதுமட்டுமே கலைஞனுக்குரிய வாழ்வாக இருக்க முடியும் என நம்புகிறான். ‘கலை கலைக்காக’ என்றவர்களுக்கு எதிராக ஒரு பெரிய சொற்போரே நடந்தது. எதிரணியில் இருந்தவர்கள் உங்கள் படைப்பில் அப்படி என்ன இருக்கிறது? அதன் உபயோகம்தான் என்ன? எனக்கேட்டபோது தெயோபில் கொத்தியெ ( Théobile Gautier): “அழகைபோற்றுகிறோமே, அது போதாதா, வேறென்ன வேண்டும்? ” எனக்கேட்டார்?

‘கலை கலைக்காக’ என வாதிட்டவர்களுக்கும், அவர்களின் எதிராளிகளுக்குமிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தம் நீதிமன்றம் வரை சென்றது. எங்கள் செயல்பாட்டில் எவரும் குறுக்கிட சகியோம், என்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போக நேர்ந்தது ஒரு முரண் நகை. கொத்தியெ, பொதுலெர், பொபெர், கொங்க்கூர் சகோதரர்கள் எனப்பலரும் தங்கள் கொள்கையைப் பறைசாற்ற தேர்வு செய்த இடம் “Le salon de Madame sabatier” ( மதாம் சபாத்தியெ ஒரு Demi-mondaine – அதாவது தாசி அபரஞ்சி ரகம்) “.

‘தூய கலை’ என்ற பெயரில் அழகியலை சுவீகரித்துக்கொண்டவர்களை, சமூகம் சார்ந்து செயல்பட்ட இலக்கியவாதிகள் நிராகரித்தனர். “அழகியல் குறித்து வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் அதில் சமூகத்தின் எதார்த்தநிலைக்கும் இடமுண்டு என்பதை எப்படி மறந்துபோனார்கள்” என்பது இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றசாட்டு.. மார்க்ஸிய அபிமானிகள் குறிப்பாக Ecole de Francfort, எங்களிடம் இதுபற்றி பேசவே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே இக்குரல்கள் அடங்கி ஒலிக்கத் தொடங்கின. சமூகம் சார்ந்த விழுமியங்களை நிராகரிக்கிற இக்குரல்கள் இன்றுங்கூட அவ்வப்போது கேட்கின்றன. ஒட்டுமொத்த சமூகமே அழிந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு (எழுத்தாளனுக்கு – இந்திரலோகத்து பிரஜை? ) ‘நகச்சுத்தி’ வந்தால் கூட அது அழகியல் – “கலை கலைக்காக” என்கிற சவடால் கூட்டம் பாரீஸில் மட்டுமில்லை சுங்குவார்பட்டியிலும் இருக்கிறது.

————————————–
ஆ. காஃப்காவின் கையெழுத்து பிரதிகள்

காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளுக்காக அவற்றின் தற்போதைய உரிமையாளருக்கும் -இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் நாட்டுக்கும் நடக்கும் சட்டப்போர் பற்றி ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துவிட்டதெனலாம்.

காஃப்கா இறக்கும் தருவாயில், தான் இறப்பிற்குப் பிறகு அழித்துவிடவேண்டுமென தன் நண்பர் மாக்ஸ் பிராட் என்பவரிடம் ஒப்படைத்திருந்த (1924)கையெழுத்து பிரதிகளின் தலையெழுத்து வேறாக இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவை ஜெர்மன் கைப்பற்றியபோது, காஃப்காவின் நண்பர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பினார்(1939), பின்னர் இஸ்ரேல் குடிமகன் ஆனார். இவரும் தன் பங்கிற்கு ஒரு உயிலை எழுதி பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கையெழுத்துப்பிரதிகளை தமது அந்தரங்கப் பெண் செயலாளர் ‘எஸ்த்தர் ஹோஃப். என்பவருக்கு உரிமை ஆக்கினார் (1968). காஃப்காவின் நண்பர் எழுதிய உயிலி வாசகம், ” இஸ்ரேல் பல்கலை கழகத்திற்கோ, தெல் அவிவ் மாநகராட்சி நூலகத்திற்கோ, வேறு நிறுவனத்திற்கோ அல்லது அந்நிய நாடொன்றிர்க்கோ “அப்பெண்மணி விரும்பினால் கொடுக்கலாம் என்றிருந்தது. உயிலிலிருந்த “அந்நிய நாடொன்றிர்க்கும் கொடுக்கலாம்” என்ற வாசகம் பிறவற்றைக்காட்டிலும் பொன் முட்டை இடுவதாக இருந்தது. எப்படியோ பல ஆண்டுகள் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளில் ஒரு சில இஸ்ரேல் நாட்டில் -டெல் அவிவ் நகரில் பெண்மணி வீட்டிலும்; பெரும்பாலானவை சுவிஸ் வங்கியொன்றின் காப்பகப் பெட்டியிலும் இருந்தன. ‘விசாரணை’ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஜெர்மன் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு விற்கவும் செய்தார். இந்நிலையில் காரிதரிசிப் பெண்மணி 2007ல் இறந்தார். இவர் தன்பங்கிற்கு ஒரு உயிலை எழுதி தமது இருமகள்களுக்கும் சீதனமாக அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து காஃப்காவின் வேர் எங்கள் மண்ணுக்குச்ச்சொந்தம், எனவே கையெழுத்துப் பிரதிகள் எங்களுக்கேச் சொந்தமென ஜெர்மன் அரசாங்கமும், அவர் மாக்ஸ் பிராட் எங்கள் குடிமகன், அவர் உயிலும் எங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது எனவே கையெழுத்துபிரதிகள் எங்களுக்கேச் சொந்தம் என இஸ்ரேல் அரசாங்கமும், எஸ்தெர் ஹோபின் வாரிதாரர்களுக்கே சொந்தமென காரிதரிரிசியின் பெண்களும் வாதிட, டெல் அவிவ் நீதிமன்றம் இஸ்ரேல் நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திடம் கையெழுத்துப்பிரதிகள் அனைத்தும் ஒப்படைக்கப்படவேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
——————————–

மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————

மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015

அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்jeyakanthan
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

 

ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.

 

ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.

 

குத்தர்கிராஸ்330px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது  வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.

இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117

 

ஆ. சுடப்பட்ட தமிழர்கள்

செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!

—————————————–