Category Archives: கட்டுரைகள்

மொழிவது சுகம் – ஜூலை-17

 அவ்வைக்கு 75

வணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென்று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கிக்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில்  அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும்  பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.

வாழ்க நீ எம்மான்.

காதலும் காதல் சார்ந்த இடமும்

ஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள்,  சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை?) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.

காதல் ஒன்று:

1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர்  மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே  கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள்  திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார்.  ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும்  இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன்  வெளிநாட்டிலிருக்கிறாள். ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).

எனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,  குறிப்பிட்டிருந்த  குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.

 காதல் இரண்டு

இது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். .  அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்  பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல்,  அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும்  பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.

காதல் மூன்று:

‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்லப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).

தந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன்  ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல.  இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை  நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் புழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது?

கதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:

பாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது அவள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட்,  அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார்.  அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள்.   அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும்,  அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள்.  பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ,  தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி  சிறையில் அடைக்கப்டுகிறார்.

அலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக  வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்)  இஸ்டான்புல்செல்கிறான்.  துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்தி (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த  ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை  சிறையிலடைக்கிறது.

இஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். முதலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள்.  அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் கிடைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.

இம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.

——————–

அணமையில் வாசித்த பதிவுகள் -june 16

அ. தமிழில் விமர்சகர்களே இல்லை:

“விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படும் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன் -“வண்ண நிலவன்.

பெருமதிப்பிற்குரிய வண்ண நிலவன் தளத்தில் வாசித்த கட்டுரை “தமிழில் விமர்சகர்களே இல்லை” ஓர் எல்டாரோடாவை கட்டிக்கொண்டு  இதுதான் இலக்கியமென பரமார்த்த குருகதை அளந்துகொண்டிருக்கிற இன்றைய தமிழ் படைப்புலகத்தின் கன்னத்தில் அறைகிறது.

வண்ண நிலவன் சொல்வதுபோல ஒரு தேர்ந்த சார்பற்ற விமர்சகன் வேண்டும். அதுவன்றி தற்போதைக்கு விமோசனமில்லை. கிணற்றை எட்டிப்பார்த்து இதுதான் கடல் என்கிற  வாசகர்கூட்டத்திற்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. படைப்புலகம் ஆரோக்கியமாக இருக்க முதுகு சொறியாத விமர்சனமும், தேர்ந்த வாசகர்களும் தேவை. அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழில் வலைத் தளங்களில் எழுதும் இளைஞர்கள் (இவ்வளவிற்கும் தீவிர இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்போல தெரிகிறது) எப்போதேனும் அமெரிக்காவின் இன்றைய நவீன எழுத்துக்கள் பற்றியோ, நவீன எழுத்தாளர்கள் பற்றியோ எழுதுவார்களென எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். தமிழ் நாட்டெல்லைக்குள் வாசிக்க போதிய வசதியற்றிருக்கும் வாசகர்களை இங்கே நான் கணக்கிற்கொள்ளவில்லை.  எங்கே பாரபட்சமற்ற விமர்சகர்களும், வாசிப்பில் பரந்த ஞானமும் உண்டோ அங்கே மட்டுமே இலக்கியம் வளரும்.

http://wannanilavan.wordpress.com/2012/06/06

ஆ. கசல் கடவுள்

“அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் ‘இசைமௌனம்’ அப்படிப்பட்டது. அதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் தியாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்.. ” (கசல் கடவுள் கட்டுரையில் ஷாஜி)

கசல் கடவுள்: மெஹ்தி ஹசன் என்ற தலைப்பிலுள்ள ஷாஜியின் பதிவு வாசிக்கவேண்டிய ஒன்று. தமது நண்பரும் பாடகருமான ஸ்ரீனிவாஸ் ஊடாக ஹசனை அறிந்துகொண்டது தொடங்கி கசல் பாடகரின் சரிதை, சாதனை, இசையாற்றல் அவ்வளவையும் உணர்வுபூர்வமாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.

http://www.musicshaji.blogspot.fr/

இ. Pattu’s terrace Garden

ஊர்வம்பில்லாத வலைத்தளங்களை தேடிப்பிடித்து வாசிக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Pattu’s terrace Garden. நண்பர் இயற்கை தாவரவளர்ப்பில் ஆர்வலர். அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். உபயோகமான பதிவு. வீட்டில் தோட்டமும் அல்லது வேறு வகையில் வசதிகளுமிருப்பின்  நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள குறிப்புகளிருக்கின்றன;

Seethaphal (Custard Apple)

ஈ நெஞ்சின் அலைகள்

திண்ணை இணைய இதழில் தொடர்ந்து காணக்கூடிய பெயரொன்று உண்டெனில் அநேகமாக திரு. ஜெயபாரதன் என்ற பெயராக இருக்கும். எளிய தமிழில் சிக்கலான அறிவியல் கூறுகளையும் தெளிவுபடுத்தும் ஆற்றலில் அணமையில் இவருக்கு நிகராக வேறொருவரைக் கண்டதில்லை. அன்னாருடைய வலைத்தளமே நெஞ்சின் அலைகள். கோவையிலிருந்து வெளிவந்த கலைக்கதிர் என்ற நூலை எழுபதுகளில் விரும்பி வாசித்ததுண்டு. அதற்குப்பிறகு அதுபோன்றதொரு மொழியில் அறிவியலில் அக்கறையற்றவர்களையும்  வசீகரிப்பதில் நண்பர் தேர்ந்திருக்கிறார். வாசித்த கட்டுரை, கூடிய சீக்கிரம் செவ்வாய் கோளில் இறங்கவிருக்கும் தளவூர்தி பற்றியது.

http://jayabarathan.wordpress.com/

உ. கணையாழின் கதை

அன்பிற்குரிய திரு வே.சபாநாயகம்  தமது நினைவுத் தடங்களில் கணையாழியின் வரலாற்றை தொடக்கமுதல் இன்றுவரை பதிவு செய்திருக்கிறார். திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது. கணையாழி பற்றிய பொதுவான தகவல்களை அறிந்திருக்கிறேன். கணையாழின் தொடக்கம், ஆரம்பாகால முயற்சிகள், பங்களிப்புகள் வெளியான படைப்புகள் கணையாழியால் அறியப்பட்ட எழுத்தாளர்கள், இன்று ம. ராஜேந்திரனிடம் கணையாழி வந்திருப்பதுவரை தெளிவாக்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வருகின்றன. நிலைத்து நிற்க ஆர்வமும், உழைப்பும், புதிய யுக்தியும், நிதியும் வேண்டும். கணையாழிக்கு வாழ்த்துகள்

http://ninaivu.blogspot.fr/
——–

துருக்கி பயணம்-3

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-28

காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் உட்கார்ந்திருக்க தயக்கமாக இருந்தது. எனது தயக்கத்தை டெலிபதியில் அறிந்தவர்போல குழுவின் வழிகாட்டி உள்ளேவந்தார். அவர் நாற்பது வயது இளைஞர். சுறுசுறுப்பான ஆசாமி. வளைகுடா நாடுகளைத் தவிர பிற இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்களை கூடுதலாக நேசிப்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஹெய்டென் என பெயர்கொண்ட அத்துருக்கி வழிகாட்டியும் அப்படி பட்டவராக இருந்தார். பொதுவில் எல்லா வழிகாட்டிகளையும்போலவே தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். அவருடைய பாலிவுட் பற்றிய கேள்விகளுக்கு எனது அஞ்ஞானம் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும். இந்தித் திரைப்படங்களில் நான் அரிச்சுவடியைத் தாண்டியவனில்லை. A for Aradhana B for Bobby யென எழுபதுகளில் வந்த படங்களையும் அவற்றின் நாயக நாயகிகளயும் அறிவேனே தவிர மற்றபடி ஞானசூன்யம். தவிர ஹெய்டெனைப் போன்றவர்களுக்கு இந்தியர்களென்றாலே பம்பாயிலிருந்து வந்திறங்கியதாக எண்ணமிருக்கிறது. திலிப் குமார், மீனாகுமாரியில் ஆரம்பித்து அமீர்கான் ஷாருக்கான் வகையறாக்களைத் தொட்டுக்கொண்டு எழுபதுக்குள் நுழைந்தார். ஒருவரையும் விடவில்லை: ராஜேஷ் கன்னா, அமிதாப், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், கபூர் குடும்பம், ஹேமாமாலினி, ஜீனத்.. பாலிவுட்டின் அம்பாசடராக பணிய புரியலாமென்ற எனது யோசனையைக் காதில்வாங்கினதாக தெரியவில்லை. ‘மேரே சப்னொ கீ ராணி’யை மெல்லிய குரலில் பாடிக்காட்டினார். அசப்பில் கிஷோர் குரல். அவருக்கு நேரத்தை நினைவூட்டினேன். எழுமணிக்கு அறையப்பூட்டிக்கொண்டு இறங்கிவந்த மனைவியுடனும் டாக்டர் தம்பதியுடனும் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்துக்கொண்டு, பெட்டிகளுடன் ஏழரைமணிக்கு இறங்கிவிட்டோம். அன்றிரவு கப்படோஸில் தங்க இருந்ததால் ஓட்டலை காலிசெய்யவேண்டியிருந்தது.

ஓட்டலிலிருந்து புறப்பட்ட பேருந்து நேற்று பார்த்த மனவ்காட் நதியைத் தொட்டுக்கொண்டே சென்றது. சுமார் ஐம்பது கி.மீட்டர்தூரம் சமவெளி. கொன்யா நகருக்குச் செல்வதற்கு முன்னால் இடையில் குறுக்கிடும் தொரொஸ் மலைத் தொடரைப் பற்றி எழுதாதுபோனால் இன்றைய தினம் நிறைவுறாது. அண்ட்டால்யாவிலிருந்து கப்படோஸ் சுமார் அறுநூறு கி.மீட்டர். சமவெளிகளும் மலைத்தொடர்களும் மிடையில் குறுக்கிட்டன. சமவெளியெனில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தரிசு நிலங்கள் பயன்பாடற்று இருந்தன. கிராமங்களில்  குறைவான எண்ணிக்கையில் வீடுகள். அண்ட்டால்யாவுக்கும் கொன்யாவுக்குமிடையில் நானூறு கி.மீட்டர் இருக்கலாம்.இதில் குறைந்தது மூன்றுமணிநேரமாவது பனிமூடிய தொரொஸ் (Taurus) மலைத்தொடரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.

 தொரொஸ்: மத்தியதரைகடல் நிலப்பரப்பையும் அனத்தோலியன் பீடபூமியையும் இம்மலைத் தொடர் பிரிக்கிறது. நீள்சதுர கற் படிமங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியதுபோன்றிருந்தது இம்மலைகள். தொடக்கத்தில் அந்நியரென்று உணராமல் முகத்தை மறைக்காமலும், பின்னர் சட்டென்று அன்னியர் இருப்பு நினைவுக்கு வந்ததைபோல துருக்கிப்பெண்களில் ஓரிருவர் முகத்தை மறைத்து உரையாடுவதைக்கண்டேன். அவர்களைப்போலவே தொரொஸ் மலைத்தொடரும் ஆரம்பத்தில் முகத்தை மறைக்கமறந்தும் பின்னர் பனிமூடியும் இருந்தது.  வெள்ளிச்சங்கிலிபோல தொடரும் மலைககளுக்கிடையே நீலக்கற்களை பதித்ததுபோல ஆங்காங்கே நீர்ப்பரப்பு. கரு நீலநிற ஏரிகளில் சர்க்கரைப்பொடியைத் தூவியதுபோல பனித்துகள்கள் மிதப்பதை நின்று நிதானமாக ரசிக்க ஆயிரம் ஆண்டுகளாவது குறைந்த பட்சம் வேண்டும். சாலை பல இடங்களில் 1500 மீட்டர் உயரத்திற்கு குறையாமலிருந்ததை அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தன. உலகெங்குமுள்ள நவீனசாலைகளை ஒத்திருந்தன. எனினும் ஐரோப்பிய நகரங்களில் இருக்கிற பராமரிப்பு இல்லை. ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் நிறைய. நாங்கள் சென்ற பேருந்துவில் அமர்ந்திருந்த பகுதிக்குக் கீழே ஏதோ விடுப்பட்டதுபோல சப்தம் வந்தது. அதை வழிகாட்டியிடம் தெரிவிக்கவும் செய்தோம். அவர் ஓட்டுனரிடம் தகவலைச்சேர்த்தார். முதல் அரைமணிநேரம் ஓட்டுனரிடம் எதிர்வினையேதுமில்லை என்பதால் நிம்மதியாகவே பேசிக்கொண்டு வந்தோம். மலைத்தொடருக்கிடையே ஒரு பள்ளத்தாக்கில் சாலையோரமாக வண்டியை நிறுத்த, நேர்ந்துள்ள சிக்கல் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பது விளங்கிற்று. இறங்கினோம். ஒரு சிறிய கிராமம். பள்ளிவாசல் அருகில்  தேனீர்கடை, மளிகைக் கடையொன்று, கிராம நிர்வாக அலுவலகம், கழிவறை- அவசர தேவைக்கு பிரச்சினைகளில்லை.  வழிகாட்டியும் ஓட்டுனரும் பேருந்துக்கேற்பட்ட இடற்பாட்டை கைத்தொலைபேசியில் நிர்வாகத்திற்கு தெரிவித்தார்கள். அவ்வழியாகச்சென்ற எங்கள் சுற்றுலா நிறுவனத்தின் மற்ற பேருந்துகள் நின்றன. அனுதாபங்கள், நலன் விசாரிப்புகள். ஒரு சிலமுகங்களில், நமக்கு பிரச்சினையில்லை என்பதுபோன்ற நிம்மதி. விடைபெற்றுகொண்டார்கள். எங்களுக்கு அன்றையபொழுது அங்கேயே தங்க நேருமோ என்ற அச்சமிருந்தது. . ஒரு முறை இந்தியாவில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வழிகாட்டியின் தகவல் சமாதானம் செய்தது. ‘பெரிய பிரச்சினையென்றில்லை, அடுத்து இருபது கி.மீட்டர் தூரத்தில் பேருந்து பழுது சரிபார்க்கப்படுமென்றார். ஓட்டுனரின் மௌனம் அதை அங்கீகரிக்க பேருந்துக்குள் ஏறி அமர்ந்தோம். வழிகாட்டியின் கூற்றுக்கேற்ப பேருந்து அடுத்த பள்ளத்தாக்கில் நின்றது. கூடுதலாக இரண்டுமணிநேரம் செலவிடலாமென்பதுபோல அங்கே இயற்கை அழகு, ஆனால் அரைமணிநேரத்தில் பேருந்து சரி செய்யப்பட, பயனத்தைத் தொடர்ந்தோம்.

கொன்யா: மத்திய துருக்கியின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. இரண்டு மில்லியன் மக்கள் வசிப்பதாகச்சொல்லப்படுகிறது. சரித்திர புகழ்வாய்ந்த நகரம். இரண்டு இடங்களை அங்கே பார்த்தோம்.

அ. மெவ்லானா நினைவிடம்:

கொன்யா சூ·பிஸப் பிரிவினரின் முக்கிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. செலாலெதின் ரூமி அல்லது மெவ்லானா (Celaludin Rumi Mevlana) துருக்கிய சூபிஸ மெய்யியல்வாதி. அரபுமக்களால் ரொமானியர் பிரதேசமென நம்பப்பட்ட துருக்கியின் அனாத்தொலி பிரதேசத்தில் வாழ்ந்ததால், இவரை ரூமி எனவும் அழைத்தார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும் ஈரானுக்குமிடையிலிருந்த பிரதேசமொன்றில் 1207ல் பிறந்த செலாலெதின், மங்கோலியரின் படையெடுப்பு காரணமாக குடும்பத்துடன் துருக்கிக்கு வருகிறார். தந்தையின் இறப்புக்குப் பிறகு மெவ்லானா சிரியா, டமாஸ்கஸ் போன்ற நகரங்களில் இறையியல் கற்கிறார். 1244ம் ஆண்டு   அவர்  நாடோடியாக சுற்றித் திரிந்த செமா என்கிற தெர்விஷ் துறவியை சந்திக்கிறார். அப்பெரியாரை ஆன்மீக குருவாக ஏற்கவும் செய்கிறார். தெர்விஷ் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட  அவருடைய நெறிமுறைகள் ரூமியைப் பெரிதும் ஈர்க்கின்றன. செமா (Sema) என்கிற சூபிநடனமும் சூபிஸமும் உருவாகிறது. சூபிஸ நடனம் – (Dervish)ஓர் ஆன்மீகப்பயணம். அன்பினூடாக, தன்முனைப்பை தொலைத்து உண்மையைத் தேடும் பயணம் என்கிறார்கள். அப்படியொரு நடனத்தை காணும் வாய்ப்பு பேறு கப்படோஸில் தங்கியிருந்த முதல் நாள் வாய்த்தது. அதை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

மெவ்லானாவின் சமாதியும், அவரும் அவர் சீடர்களும் தங்கிய மடமும் இங்கு உள்ளன. மடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது ஆடை, அவர் வாசித்த திருமறை, அவர் அணிந்த தலைப்பாகை, அவர் உடலோடு ஒட்டிய பொருட்கள் என பலவும் காட்சிக்கு உள்ளன. ஆக்ரா தாஜ்மகாலில் வழங்கப்படுவதுபோல காலணிகளைத் தவிர்க்க பிளாஸ்டிக் உரைகளை கால்களுக்குக் கொடுக்கிறார்கள். வெகுதூரத்தில் வருகிறபோதே தாஜ்மகால் கலசம்போன்ற  நீலமும் பச்சையும் கலந்த பளிங்குக்கல் முகட்டைக் காண்கிறோம். முற்றமும்வாசலுங்கொண்ட பெரிய தொரு ஜமீன் வீட்டை நினைவுபடுத்துகிறது. நீண்ட நடைபாதையின் இடப்புறம் திரும்பியதும் முகப்பில் அழகான நீரூற்று, கைகால்களை சுத்திசெய்துகொள்ள வலப்புறம் நீண்ட தாழ்வாரத்துடன் கூடிய புறாக்கூண்டுபோல மிகச்சிறிய கொள்ளளவுடன் கூடிய அறைகள் இருக்கிந்றன. அறைகளில் டெர்விஷ் நடனக்கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் வெறும் நடனக் கலைஞர்களல்ல,   எளிமையான  வாழ்க்கையை நெறியாகக்கொண்டவர்கள். பிச்சுகள் வாழ்க்கை. பக்தியின் அடிப்படையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வளையவரும் நடனமொன்றை நிகழ்த்தியவர்கள். அடிப்படைகடமையான இவர்களுக்கு தொழுகையுமுண்டு.  இடப்புறமுள்ள மண்டபத்தில் நுழைந்ததும் அங்கே மெவ்லானாவின் செனொதாப்கள்(Cenotaph). இருக்கின்றன. செலாலெதினுடையது, அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்களுடையது, அவரது சீடர்களுடையது என பலவுமுண்டு. அலங்கரிப்புகள் அவ்வளவும் தங்க முலாம் பூசப்பட்டோ தங்கச் சரிகை வேய்ந்த பட்டுத்துணிகளாகவோ இருக்கின்றன. சுவரெங்கும் பிறவற்றிலும் குர் ஆன் வாசகங்களை மிக அழகாக சித்திர எழுத்துகளில் தீட்டியிருந்தார்கள். இந்த செனொதாப்களின் மீது மெவ்லானாக்களின் பிரத்தியேக தலைப்பாகையுமிருந்தன. அருகிலிருந்த மற்றொரு மண்டபத்திலும் மெவ்லானாவுக்கு வேண்டியவர்களின் செனோதா·ப்களிருந்தன. இவற்றைதவிர மெவ்லானா உபயோகித்த பொருட்களனைத்தும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய ஜாடி, உலகத்தின் மிகச்சிறிய குர்ஆன், மெவ்லானா இசைத்த கருவி, கம்பள விரிப்பு, உயர்வகை கற்கள்..இவை தவிர வேறு பொருட்களுக்கும் குறைவில்லை. இங்கே சிறிய பேழையில் வைத்திருந்த அவரது தாடி மயிரையும்குறிப்பிடலாம்.

 ஆ. காரவான்செராய் (Caravanserail de Sultanhan) பயன்பாட்டளவில் நம்ம ஊர் சத்திரங்களையும், பாதுகாப்பில் கோட்டைகளையும் நினைவூட்டக்கூடியது.  இங்கே இரவு நேரங்களில் பயணிகளும் வியாபாரிகளும் கொள்ளையரியமிருந்து தங்களை காத்துக்கொள்ள தங்குவது வழக்கமாம். இதனுள்ளே குதிரைகளும், ஒட்டகங்களும் நூற்றுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பொழுது சாய்வதற்குள் உள்ளே போய்விடவேண்டும். இல்லையெனில் அதன் மிகப்பெரிய கதவுகள திறக்கப்படமாட்டா. நாங்கள் பார்த்த காரவான் செராய் துருக்கியிலேயே மிகப்பெரியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கைக்கோபாத் எனும் சுல்தானால் கட்டப்பட்டது.  பெரியகதவுகளைக் கடந்து சென்றால் உள்ளே பயணிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், தொழுகைக்கான மசூதியும், துருக்கி குளியலுக்கான ஹமாமும் விலங்குகளுக்கான கொட்டடிகளும் இருக்கின்றன. இந்நேரத்தில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ‘Birds Without Wings'(Louis de Berniere என்பவர் எழுதிய) நாவல் நினைவுக்கு வருகிறது. இதில் காரவான்சாராயைப்பற்றிய விவரணை வருகிறது. இந்நாவல் பற்றி திண்ணையில் எழுதிய ஞாபகம். இந்நாவலுக்கு முன்னால், My name is Red ல் ஒன்றுமே இல்லை என்பேன்.

மதிய உணவு கொன்யாவிலேயேஒரு ஓட்டலிமென்று ஆயிற்று. துருக்கி ஓட்டல்களில் சைவ உணவுவகைகள் நிறையக் கிடைக்கின்றன. பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் துருக்கியில் சிவப்பு ஒயின் கிடைக்கிறது. ஆனால் அன்று நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட ரெஸ்டாரெண்ட்டில் தடைசெய்யப்பட்டதென்றார்கள்.  உணவின் இறுதியில் எடுத்துக்கொள்ளும்  டெசெர்ட்களில் ஐஸ்கிரீமை காணமுடிவதில்லை. இந்திய இனிப்புகளோடு நிறைய ஒற்றுமைகள். கொரிக்க நிறைய கிடைக்கிறது விலையும் மலிவு: பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்ந்த பழவகைகள், உப்பு கடலை. மக்காசோளமென்று பட்டியல் போடலாம்.

கொன்யாவிலிருந்து மீண்டும் இரண்டரமணிநேர பயணம். கப்படோஸ¤க்கு மாலை ஆறுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். பேருந்தின் வெளித்தோற்றம் பயமுறுத்தியது. ஆனால் அறைகளும், கவனித்துக்கொண்டவிதத்திலும் எவ்விதகுறைகளுமில்லை. ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலுக்குரிய அத்தனை சௌகரியங்களுமிருந்தன. துருக்கியர்களின் ஹமாம் சேவை உட்பட.

(தொடரும்)

 

 

துருக்கி பயணம்-2

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் –     மார்ச்-27

முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும்  பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு மருத்துவர்)  முதல்நாள் பேருந்தில் அமர்ந்த அன்றே கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். தவிர அன்றிரவு டாக்டர் தம்பதிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையும் அவர் சகோதரியின் அறையும் எங்கள் அறைக்கு அருகருகே இருந்தன. ஐந்துபேரும் ஓட்டல் ரெஸ்டாரெண்ட்டில் காலை 8.30க்குச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம். ஓட்டல் அறைகளில் Wi-Fi தொடர்பு ஒழுங்காகக் கிடைக்கவில்லையென்பது ஒரு குறை. எனவே கொஞ்சம் முன்னதாக இறங்கிவிட்டேன். லாபியில் ஒழுங்காக கணிணிக்குத் தொடர்பு கிடைத்தது. எட்டரை மணிக்கு அனைவருமாக ரெஸ்டாரெண்ட்டிற்கு காலை உணவிற்குச்சென்றோம். எங்கள் கைகளுக்கு அறைஎண்ணுடன்கூடிய ஒரு கங்கணத்தை கட்டிக்கொள்ளுமாறு முதல் நாள் இரவே வரவேற்பில் கொடுத்திருந்தார்கள். ஐரோப்பிய துருக்கிய உணவுகள் கிடைத்தன. துருக்கியரின் பிரத்தியேக சாயலுடன் கூடிய ஐரோப்பிய காலை உணவென்றும் சொல்லல்லாம். எக்மெக் என்கிற ரொட்டி, தெரெயா என்கிற வெண்ணெய் (கொஞ்சம் அதிகமாக வாடை இருக்கிறது) முதலில் தயக்கமாக இருந்தது. ஒரு முறை ருசித்துவிட்டால் விரும்புவோம். அடுத்து இஸ்லாமியமக்கள் விரும்பி எடுக்கும் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் (கறுப்பு, பச்சை, சாம்பல் வண்ணமென்று பல வகைகளில் மசாலா கலந்தும், கலவாமலும் கிடைக்கிறது) தக்காளி, வெள்ளரி துண்டுகள் மேற்கத்தியர்களைபோலவே  தேன்; பாற்கட்டி, முட்டை, தயிர் இவற்றுடன் பிற இஸ்லாமியா நாடுகளிலுள்ள ஓட்டல்களில் பார்க்க  வியலாத பன்றி சாசேஜ்களுமிருந்தன.

காலையில் அண்ட்டால்யா (Antalya) நகரின் அருகிலுள்ள ஒரு சரித்திரபுகழ்வாய்ந்த அரங்கொன்றையும் பிற்பகலில் மனவ்கா( Manavgat) நதியில் படகுச்சவாரியென்றும் எங்கள் பயணத்திட்டத்திலிருந்தது. முதல் நாள் கண்ட மூன்று இடங்களைக்குறித்து எழுதுவதற்கு முன்பாக அண்ட்டால்யாவைப் பற்றி சில தகவல்கள்:

அண்டால்யா துருக்கிக்கு தென்பகுதியிலுள்ள பிரதேசம். பிரதேசத்தின் பெயரையே தலை நகரத்திற்கும் வைத்துள்ளார்கள். நீர்வளம் நிலவளமும் என்று நம்முடைய பழம் நூல்களில் எழுதுவார்கள். அதுபோன்று நீர்வளமும் நிலவளமும் சேர்ந்து அமைந்ததால் சில ஆண்டுகள் வரை விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வருமானமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சுற்றுலா தொழிலில் ஆக்ரமிப்பிற்குத் தப்பிய இடங்களில் ஆலிவ், அப்ரிகாட், ஆரஞ்சு, திராட்சையைக் காணமுடிகிறது. அண்டல்யாவின் வரலாற்று எச்சமும் [ பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதுமானியர்கள் (Ottomans)கீழ் வருவதற்கு முன்பாக இப்பகுதி ரோமானியர்கள், கிரேக்கர்கள் வசம் இருந்திருக்கிறது] நீலப்பச்சையில் பகற்பொழுதில் ஜொலிக்கும் மத்தியதரைகடலும், இயற்கை உளிகொண்டு கடற்கரையில் அது புரிந்துள்ளவிந்தையும் இப்பிரதேசத்தை ஒரு சுற்றுலா தலமாக அண்மைக்காலத்தில் மாற்றியுள்ளது.

பேருந்தில் சென்றபொழுதே பிரதேசத்தின் வளத்தை உணரமுடிந்தது. முதல்நாள் தொடங்கி இறுதிநாள்வரை சுற்றுலா அண்டல்யா வில் மும்முரமாக செயல்படுவதற்கான காரணிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஐரோப்பியர்கள் உதவியுடன் துருக்கியர்கள் ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவில் மத்திய தொல்பொருள் இலாக்காவின் பராமரிப்புலுள்ள இடங்கள் எந்த இலட்சனத்தில்லிருக்கின்றனவென ஐரோப்பியர்களுடன் ஒப்பிடவேண்டாம் துருக்கிபோன்ற நாடுகளோடு ஒப்பிட்டாலேபோதும்.

காலையில் சுமார் பத்து பத்தரை மணி அளவில் எங்கள் ஓட்டலிலிருந்து சுமார் நாற்பது கி.மீட்டத் தூரத்திலிருந்த அஸ்பெண்டோஸ் என்னும் இடத்திற்குச் சென்றோம். சுற்றுலா தலத்தில் பொதுவாக நாம் பார்க்கிற காட்சிகளை இங்கேயும் பார்க்கமுடிந்தது. நாங்கள் பயணித்த ஒருவாரமும் மக்கள் உபயோகத்தில் ஒட்டகங்கள் இல்லையென்றாலும் இதுபோன்ற இடங்களில் அலங்கரித்த ஒட்டகங்களை சுற்றுலா பயணிகளில் நிழற்படங்களுக்காக காத்திருந்தன. பிறகு சுவெனிர் கடைகள். குளிர்பானங்கள், தேனீர், 1யூரோவுக்கு நல்ல தண்ணீர் கலவாத ஆரஞ்சு பழச்சாறுகளும் (அதிகமாக விளைவதால்)  கிடைக்கின்றன.

அஸ்பெண்டோஸ்( Aspendos). பண்டைய கிரேக்கர்களின் செல்வாக்கு மிகுந்த நகரமாக இருந்திருக்கிறது. நகரத்தின் சிதிலங்கள் ஆங்காங்கே பராமரிப்புடனிருந்தன. இந்நகரத்து குதிரைகள் அவ்வள்வு பிரசித்தமாம். இதனை நான்காம் நூற்றாண்டில் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் தமக்குத் திரைப்பணமாக குதிரைகளைத் தரவேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தியதாக வழிகாட்டி கூறினார். இந்த வழிகாட்டிகள் கூறுபவை பல நேரங்களில் புனைவுகளாக இருக்கக்கூடும். இங்கே நாங்கள் பார்த்தவற்றுள் காலத்தின் அரிப்பினால்  அதிகம்  பாதிக்கப்படாததாக  ரோமானியர்கள் இந்நகரை ஆண்டபொழுது உபயோகித்திருந்த திறந்தவெளி நாடக அரங்கமிருந்தது. மார்க் ஒரேல் என்ற ரோமானிய மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் செனோன் என்கிற உள்ளூர் கட்டிடகலைஞரால் உருவாக்கப்பட்ட அரங்கம். அப்போதே நடிப்பவர்களுக்கு உயரமான மேடை, அலங்கரிந்துக்கொள்ள தனி அறைகள், எதிரே பார்வையாளர்களுக்கு  சமூக வாழ்நிலை அடுக்கிற்கு ஏற்ப இருக்கைகள். சூரிய ஒளியிடமிருந்து பகற்பொழுதில் நடிகர்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பார்வையாளர்களின் இருக்கை, பேசும் வசனங்கள் பழுதின்றி  பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஓசை தடுப்புகள் என இருபது நூற்றாண்டுகளுக்குமுன்னரே ரோமானியர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் கலைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம் தெரிந்தது.

பிறகு அருகிலேயே சுண்ணாம்பு படிமங்களுடன் பயணிக்கும்  மனவ்காட் (Manavgat) நதியோடு பயணித்து பல இடங்களில் பேருந்தை நிறுத்தி அதன் அழகைப் பருகினோம். வெள்ளி திரவமாக பிரவாகமெடுத்ததுபோலவிருந்த வெயிற்பொழுதிற் மரகதப்பச்சையில் விரித்திருந்த நீர்ப்பரப்பின் அழகைக்குறித்து எழுத பாரதியோ பாரதிதாசனோ தேவை. பகல் ஒரு மணிக்கு எங்களுக்குப் படகுகுசவாரி. இரண்டு அடுக்கு கொண்ட படகில் மேல் தளத்தில் பயணிப்பதை தவிர்த்து முதற்தளத்தில் அமர்ந்தோம். பிரான்சு நாட்டு அரசியல், இந்தியாவின் வளர்ச்சி, ஐரோப்பாவின் நெருக்கடியென பலவற்றை விவாதிக்க முடிந்தது. மருத்துவரைக் காட்டிலும் அவரது சகோதரி அதிகம் அரசியல் பேசினார்.  வலது சாரிகளை வெறுப்பதாகத் தோன்றியது. அப்போது பிரான்சில் முதல் சுற்றுக்காக அதிபர் தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரம். அதிலும் டாக்டர் பெண்மணி தீவி இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து பேசியதும் என்னையும் அந்தவேட்பாளருக்கே வாக்களிக்குமாறு வற்புறுத்தியதும் வியப்பளித்தியது. வெயில் கடுமையாக இருந்தது. நான்கைந்து கி.மீட்டரில் கடற்கரை ஓரமாகவே நதி நீள்கிறது. பிறகு ஒரு தீவு போன்ற இடத்தில் படகை நிறுத்தி எங்களுக்கு உணவை வழங்கினார்கள். நல்ல சாலட், ரொட்டி, புதிதாகப்பிடித்த ட்ரௌட் (Trout)இளஞ்சூட்டில் சுவையாக அவித்து தருகிறார்கள்.  ஆசிய ஐரோப்பா பறவைகள் பலவற்றை இங்கே காணமுடிந்தது. பிற்பகல் நான்கரை மணிக்கு நதிப்பயணம் நாங்கள் வந்த வழியே திரும்ப முடிவுற்றது.

மாலை ஐந்து மணி அளவில்  அண்டல்யாவின் புறநகர் பகுதியில் மனவ்காட் நதிக்கு வெகு அண்மையில் செலிமியெ (Selimiye)வில் இஸ்டான்புல்லின் நீலமசூதியை வடிவிலும் அழகிலும் ஒத்திருந்த ஓரு மசூதியைக் காண்பித்தார்கள். இஸ்டான்புல் மசூதிதைப்பார்த்தது இல்லை. ஆனால் இதைப்பார்த்தபொழுது அதையும் பார்க்கவேண்டுமென்றிருக்கிறது. மசூதியில் நான்கு மினாரேக்கள் இருந்தன. மசூதியின் வாயிலுக்கு எதிரில் கால்கைகளை சுத்திசெய்வதற்கான இடம் பால்நிரபளிங்கு கற்களால் கட்டப்பட்டிருந்தது. நீல நிறம் மசூதியை பெரிதும் ஆக்ரமித்திருந்தது. உள்ளேயும் நுணுக்கமான கலைவேலைப்பாடுகள். பளிங்குகற்களில் சித்திரங்கள் பதித்த  பட்டிகள், வண்ணகண்ணாடி சில்லுகளால் அலங்கரிக்கபட்ட சன்னல்கள், கூண்டுகள், தொழுகைக்ககான இரத்தினக் கம்பளம், மிருதுவாய் தொட்டுணரக்கூடிய ஒளி. அனுமதி தந்த இமாமுக்கு நன்றி சொல்லவேண்டும்.

மாலை ஏழு மணிக்கு ஓட்டல் திரும்பினோம். நேற்று வழங்காத காக்டெய்லை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கினார்கள்; அது காக்டெய்ல் என்றபெயரில் கொடுப்பட்ட  அமெச்சூர்தனமான ஒரு பானம், வாயைக்கெடுத்தது. அறைக்குத் திருப்பியதும் ஒரு குளியல். ஒருமணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு எட்டு மணிக்கு சாப்பிட இறங்கினோம். மீண்டும் பு·பே உணவு. எல்லாமிருந்தது. இரவில் கடுமையாக உண்பதில்லை என்ற வழக்கப்படி நான் சூப்பும் சாலட்டென்று முடித்துக்கொண்டோம். மறுநாள் காலை ஆறுமணிக்கு புறப்படும் வேண்டுமென்றதால் அரைமணிநேரம் லாபியில் உட்கார்ந்து டாகடர் தம்பதிகளுடன்உரையாடிவிட்டு  அறைக்குத் திரும்பினோம். .

(தொடரும்)

துருக்கி பயணம்-1

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி       
மார்ச்-26

[துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் முஸ்தபா கேமால்  மொழி சீர்திருத்தத்தையும் கொண்டுவந்தார், அவரால் அறிமுகப்படுத்தபட்ட இன்றைய துருக்கிமொழி அராபியமொழியை விலக்கிக்கொண்டு இலத்தீன் வடிவத்தைபெற்றுள்ளது. துருக்கிமக்கள் அரபு மொழியை முற்றுமுதலாக மறந்தவர்கள் அல்லது அதன் தேவையின்றி வாழப்பழகியவர்கள்; குர்-ஆன் கூட துருக்கிமொழியில் எழுதப்பட்டு (மொழி பெயர்க்கப்பட்டு அல்ல) வாசிக்கப்படுகிறது.]

எங்கள் துருக்கிப்பயணம் மார்ச் 26ந்தேதி என திட்டமிடப்படிருந்தது. இப்பயணத்தில் மனைவியும் நானும் பங்குபெற்றோமென்றாலும், இரண்டு நாட்கள் முன்னதாக பாரீஸில் நான் இருக்கவேண்டியிருந்தது. நண்பர் காலச்சுவடு கண்ணன் பாரீஸ் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார். துருக்கி யணப்படுவதற்கு முன்னால் அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். என்ன புரிந்துகொண்டேனோ அல்லது எப்படி புரிந்துகொண்டேனோ, பாரீஸில் 26ந்தேதிவரை கண்ணன் இருப்பதாக  நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து கிடைத்த மின்னஞ்சல் 23ந்தேதியன்றே பிற்பகல் மாலை 5.30க்குப் பாரீஸிலிருந்து புறப்பட்டு இலண்டன் செல்வதாக தெரிவித்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. 23ந்தேதி மாலை 4.30க்கு பாரீஸை அடைகிறேன் என்றாலும், இலண்டன் செல்லவிருந்த அவருடைய பயண இரயில் பத்து நிமிட தூரத்தில் இருந்ததால் சந்தித்து ஒரு முப்பது நிமிடம் அவருடன் உரையாடமுடியுமென்றாலும் போகிறபோக்கில் அவரை சந்திப்பது நாகரீகமல்ல என்பதால் 23ந்தேதியென்றிருந்த எனது முன்பதிவை ரத்துசெய்து ஒரு நாள் முன்கூட்டியே பாரீஸ் செல்ல முடிவுசெய்தேன். பாரீஸ் பிரான்சுவா மித்தரான் தேசிய நூலகத்தில், செஞ்சி நாவல் தொடர்பாக சில தகவல்களை பெறவேண்டியிருந்ததால் இத்தேதிமாற்றம் உதவக்கூடுமென  நினைத்தேன்.

எனவே 22 மார்ச் அன்று பிற்பகல் இரண்டேகால்மணிக்கு TGV பிடித்து நான்கரை மணிக்கெல்லாம் பாரீஸ் கிழக்கு திசை பயண இரயில்நிலையமான Gare de l’estக்கு வந்தாயிற்று. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்ட்ராஸ்பூர் – பாரீஸ் இரயில் பயணத்திற்கு( சுமார் 500 கி.மீட்டர் தூரம்) நான்கு அல்லது நான்கரை மணிநேரத்தை நாங்கள் ஒதுக்கவேண்டும். அது பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் ஒன்றே முக்கால் மணி நேரம் என்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்துவது உபயோகமான காரியம். 22ந்தேதி பிற்பகல் நான்கரைமணிக்கு Gare de l’estல் இறங்கினேன். அங்கிருந்து பத்துநிமிடத்திற்கு குறைவான தூரத்தில் பிரான்சு நாட்டின் வடபகுதிகளுக்குச் செல்லக்கூடிய இரயில் நிலையம் (Gare du Nord)இருக்கிறது- கண்ணன் மறுநாள் இலண்டன் செல்ல இந்த நிலையத்திற்குதான் போகவேண்டும். இப்பகுதி தமிழர் கடைகள் அதிகமாக குவிந்துள்ள இடம். தொடக்ககாலங்களில் இந்தியர் கடைகள் விரல் விட்டு எண்ணகூடிய அளவில் ஒன்றிரண்டு அங்கிருந்தன. பின்னர் இலங்கைத் தமிழர்கள் வரத்தொடங்கியபிறகு குறிப்பாக 90களில் புற்றீசல்கள்போல தமிழ்க்கடைகள் முளைத்தன. மளிகைக்கடைகள், குறுந்தட்டு, இசைதட்டு கடைகள், ஆடை ஆபரணக்கடைகள் எண்ணிக்கையில் அதிகமிருப்பினும், இவற்றுக்கிடையில் அறிவாலயம், தமிழாலயம் அத்தியும் பூத்திருக்கிறது. இரண்டும் பாரீஸிலிருக்கும் புத்தகக்கடைகள்.

ஐந்துமணிக்கெல்லாம் பெட்டியை இழுத்துக்கொண்டு அறிவாலயம் வந்துவிட்டேன். நண்பர் கண்ணனை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டாரெண்ட்டிற்குச் சென்று இருவருமாக தேனிர் அருந்தினோம். பாரீஸில் அவரது சந்திப்புகள் எப்படியிருந்தனவென கேட்டேன். பிரெஞ்சு பதிப்பாளர்கள் தமிழிலிருந்து படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் அக்காரியத்தை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே செய்யவேண்டுமென்டுமென எதிர்பார்க்கிறார்களென்றார். “அவர்கள் சொல்வதும் நியாயமே நான் எந்தவொரு பிரெஞ்சுக்காரரும் தமிழில் செய்கிறேனென முன்வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேனென்று, பிரெஞ்சு பதிப்பாளர்களின் கூற்றை நியாயப்படுத்தவும் செய்தார்.

பாரீஸ் நகரில் தமிழ்வாணி என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வருடம்தோறும் உழைப்பையும் பணத்தையும் தனி ஒருவராக அளித்து இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜெயராமன் என்ற நண்பர். எதிர்வரும் ஜூலைமாதம் தமிழிலக்கிய மாநாடு என்ற ஒன்றை கவிஞர் இந்திரனின் உதவியுடன் நடத்த இருக்கிறார்.  அவர் அவ்வபோது விழா தொடர்பான ஏற்பாடுகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார். இவ்விடயத்தில் எனக்கு அதிக ஆர்வமில்லை என்பதற்குப் பலகாரணங்கள் இருக்கின்றன. எனினும் ஜெயராமனைப்போன்றவர்கள் பிழைப்புக்காக மொழியை கையில் எடுப்பவர்களல்ல, மொழியின் பிழைப்புக்காக தங்கள் கையிலிருப்பதை கொடுக்கிறவர்கள் என்ற வகையில் அவரை மதிக்கிறேன். இந்த நண்பர் ஜெயராமனும், வொரெயால் தமிழ்ச் சங்க தலைவரும் நண்பருமான இலங்கைவேந்தனும் காலச்சுவடு கண்ணனை சந்திக்க விரும்பினர். அறிமுகப்படுத்தினேன். கண்ணனிடம் நாளை சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு அன்றிரவு மகன் வீட்டில் சென்று தங்கினேன்.  23 -3-2012 காலை பிரான்சுவா மித்தரான் நூலகத்திற்கு சென்றுவிட்டு கண்ணனுடன் மதிய உணவிற்கு திட்டமிட்டிருந்தபடி பன்னிரண்டரைக்கெல்லாம் மீண்டும் அறிவாலயம் வந்துவிட்டேன். கண்ணன் தயவில் பாரீஸில் தீவிர இலக்கியசார்ந்து இயங்கவும், சிற்றிதழ்களை வாசிக்கவும் செய்கிற நண்பர்களை சந்திக்க முடிந்தது. மாலை நான்கு மணிவரை உரையாடிமுடித்து கண்ணனை அழைத்துக்கொண்டுபோய் இலண்டனுக்கு இரயிலேற்றிவிட்டு இரவு எட்டுமணிக்கு பாரீசில் வசிக்கும் மகன் வீடுதிரும்பினேன்.

24-3-2012 காலை மீண்டும் பிரான்சுவா மித்தரான் நூலகம் போகவேண்டியிருந்தது. மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருந்த பாதரெ பிமெண்ட்டா போர்ச்சுகீசிய மொழியில் எழுதிய நாட்குறிப்பின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு அங்கு கிடைத்தது. இந்நூல்நிலையம்பற்றி முடிந்தால் தனியாக ஒரு கட்டுரை எழுதவேண்டும். பிற்பகல் கைவசமிருந்த சாண்ட்விச்சை நூலகத்திலேயே முடித்துவிட்டு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து ரயிலில் வந்திருந்த மனைவியை எதிர்பார்த்து மீண்டும் பிற்பகல் Gare de l’est பின்னர் மகன் வீடென்றானது. 25.-3-2012 ஞாயிற்றுகிழமையும் 26 -3-2012 திங்கட்கிழமை நான்கு மணிவரை நடந்தவைக்கும் துருக்கி பயணத்திற்கும்(மீண்டும் ஒருமுறை பெட்டிகளை சரிபார்த்து சுமையைக் குறைத்து அவரவர் தேவைக்குரியவை இருக்கிறதாவென எனது மனைவி திருப்திபட்டதைத் தவிர்த்து)  பெரிதாய் சம்பந்தமில்லை. திங்கட்கிழமை மாலை நான்குமணிக்கு கால் மணி தூரத்திலிலிருந்த இரயில் நிலையத்திற்குச்சென்றோம்.  RER B வழித்தடமது. அங்கிருந்து Charles -De-Gaulle விமானதளத்திற்குச் செல்ல நாற்பது நிமிடம் தேவைப்படுகிறது விமான தளமென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். விமான தள வரியை இரயில் பயணச்சீட்டில் சேர்த்திருந்தார்கள். விமான பயணச்சீட்டில் ஏற்கனவே அவ்வரியை அதை செலுத்தியிருக்கிறபோது இரண்டாவது முறையாக இரயிலிலும் விமான தள வரியை கேட்பது நியாயமா என்று இரயில் பயணச்சீட்டு விற்பனைசெய்த பெண்மணியிடம் கேட்டேன். “சொல்வது நியாயம்தான், என்ன செய்வது உங்கள் கோரிக்கையை வருகிற அதிபராவது பரிசீலிக்கிறாராவென்று பார்ப்போம், என்றாள், அப்பெண்மணி. மறுபேச்சின்றி அவள் கொடுத்த பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு நாற்பது நிமிடத்திற்குப்பிறகு சார்ல் தெகோல் விமானநிலையத்தில் இரண்டாவ்து முனையத்தில் இறங்கிக்கொண்டோம்.

நாங்கள் செல்லவேண்டிய விமானம் மூன்றாவது முனையத்திலிருந்து புறப்படுகிறது. 200 அல்லது 300 மீட்டர் தூரம் பெட்டிகளை இழுத்துக்கொண்டு நடந்திருப்போமென நிற்கிறேன். மூன்றாவது முனையத்தை ஒட்டுமொத்தமாக சுற்றுலா அமைப்பாளர்கள் வசம் ஒப்படைத்திருந்தார்கள். சுற்றுலா நிறுவனங்களின் பெயர்களை வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது. எதிர்பட்ட தடுப்புகளையும் கணிணி விளம்பர பலகையும் கடந்துவந்து பார்த்தபோது நான்கு முனையங்களிலும், எங்களைப்போலவே துருக்கி சுற்றுலாவிற்கு பதிவுசெய்திருந்தவர்கள் எட்டுவரிசைகளில் காத்திருந்தார்கள். வரிசையில் எங்களுக்குப்பிறகு வந்து நின்ற மூவரும் அடுத்துவந்த நாட்களில் தொடர்ந்து நட்பு பாராட்டுவார்களென தோன்றவில்லை. நாங்கள் பயணம் செய்த தருணம் பிரான்சில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சத்திலிருந்த நேரம், தீவிரவாத தாக்குதலில் நான்கு ராணுவீரர்களும், பள்ளி மாணவர்களும் சுடப்பட்டிருந்தனர்.  பாதுகாப்பு கெடுபிடி வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக இருந்தது. அன்று வரிசையிலிருந்த பயணிகளில் ஒரு ஆப்ரிக்க குடும்பத்தை அடுத்து நானும் எனது மனைவியும் நிறத்தால் வேறுபட்டவர்கள். ஆப்ரிக்க மக்களுக்கும் சப்பை மூக்கு சீனருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியத் துணைக்கண்டமென்றால் பிரச்சினை கூடைகூடையாக  வரும், அன்றும் வந்தது. நம்முடைய முகங்களில் அப்படியென்ன எழுதப்பட்டிருக்கிறதோ. விதிமுறைகளை நமக்கென்றால் கூடுதலாக எழுதிவைத்திருப்பார்களென நினைக்கிறேன். ஆனானப்பட்ட அப்துல் கலாம், ஷாருக்கான் போன்றவர்களுக்கே சனிதிசை என்கிறபொழுது நம்மைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. படுக்கவைத்து ஸ்கேனின் வருடலுக்கு அனுப்பவில்லையே தவிர மற்ற சடங்குகளெல்லாம் நடந்தேறியது.

விமானம் புறப்படும்போது இரவு 10.30.மணி. விமானத்தில் சேவை குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாமென மகனும் மருமகளும் எச்சரித்திருந்தார்கள். விமானம் புறப்பட்டு பறந்துகொண்டிருந்த நேரத்தில், சேவையென்று தொடங்கியதுமே தள்ளுவண்டியில் கொண்டுவந்த பானங்களையும் கொறிப்பான்களையும் பயணிகளிடம் விற்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அதிபர்களுக்கு அரசாங்கத்தின் கஜானா இருக்கிறது, இந்திய அதிபரெனில் உற்றார் உறவினர் பேரன் பேத்திகளுக்கெல்லாங்கூட மக்கள் வரிப்பணம் உதவக்கூடும். நாம் அப்படியா எண்ணிபார்த்துதான் செலவிடவேண்டியிருக்கிறது.  இரவு உணவென்று எதுவும் விமானத்தில் கிடைக்காதென்கிற ஐயம் எங்களுடன் பயணம்செய்த பலருக்கும் இருந்திருக்கும்மென நினைக்கிறேன். ஒவ்வொரு பயணியும் ஐந்து யூரோவாவது செலவிட்டிருப்பார்கள். தோராயமாக  900 யூரோ சுற்றுலா ஏற்பாட்டாளருக்கு கிடைத்திருக்குமென மன ஸ்லேட்டில் கணக்கைப் போட்டேன். . எங்களை சமாதானப்படுத்தவென்று இரவு பதினொன்றரை மணியளவில் (உறங்கியவர்களை எழுப்பி) சாண்ட்விச் கொடுத்தார்கள். நள்ளிரவு ஒரு மணி அளவில் மத்திய தரைகடலில் உள்ள அண்ட்டல்யா துறைமுகத்தை நெருங்கும்போது வானிலிருந்து பார்க்க லாஸ்வேகாஸ் நினைவுக்கு வந்தது. முழுமுழுக்க சுற்றுலாவாசிகளை நம்பி அண்டல்யாவின் தற்போதைய பொருளாதாரம் இருப்பதாக அறிந்தேன். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் பயண ஏற்பாட்டாளர் எங்களுரிய பேருந்துக்கு அழைத்து போனார். 30 சுற்றுலாபயணிகளுக்கு ஒரு பேருந்தென ஒதுக்கியிருந்தார்கள்.  பேருந்தில் அமர்ந்ததும் வழிகாட்டி தம்மையும் பேருந்து ஓட்டுனரையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் நாளைக்கு கல்வடோஸ் பயணிப்பதற்கு பதிலாக இறுதிநாள் நிகழ்வை வைத்துக்கொள்ளலாமா என்றார். ஏற்கனவே அவர்கள் தீர்மானித்திருந்ததை தகவலுக்காக தெரிவிப்பவர்போல பேசினார். எனினும் வழிகாட்டிகளுக்கே உரிய நாவன்மை அவரிடமிருந்தது. பிரெஞ்சுமொழியை மிக நன்றாக பேசினார். எங்களுக்காகாவே துருக்கியில் பிறந்து பிரெஞ்சு மொழி பயின்று வழிகாட்டி தொழிலுக்கு வந்ததுபோல இருந்தது ஆசாமின் பேச்சு. 30நிமிட பயணத்தில் எங்கள் ஓட்டல் வந்தது. ஓட்டலைப்பற்றி எந்தகுறையும் சொல்வதற்கில்லை. முதல் நாள் ஆரம்பித்து இறுதிநாள்வரை ஓட்டல், உணவு பயணம் அனைத்தும் இனிமையாகவே கழிந்தது. உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு துருக்கியில் வேறு அனுபவங்கள் இருக்கின்றன, சொல்கிறேன்.

(தொடரும்)

பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தலும் மாப்பசானும்

மாப்பசான் கதைகளில் மொரென் என்பவனின் கதை சுவாரசியமானது. இந்த மொரென் நடுத்தர வயது வியாபாரி தையற் தொழிலுக்கு வேண்டிய பொருள்களையும் உபகரணங்களையும் விற்பது தொழில். கடைக்கு சரக்கு பிடிப்பதற்காக பாரீஸ¤க்குச் செல்லவேண்டும். உண்மையில் பாரீஸ¤க்கு செல்வதற்கெனவே கடைக்குச் சரக்குகள் பிடிக்க என்ற காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். வெளி மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பாரீஸ் நகரத்தில் பதினைந்துநாள் தங்குவதற்கான வாய்ப்பெனில் சொர்க்கத்தை திறந்துவைத்திருப்பதுபோல, அதிலும் எத்தனைவிதமான பெண்கள்: இறுக்கமான உடையணிந்த நாட்டியக்காரிகள், திறந்த மார்புடன் வலம்வரும் நடிகைகள்; அழகிய கால்களுக்குச் சொந்தக்காரிகள், என மாப்பசான் நீளமாக எழுதிக்கொண்டுபோகிறார். கொஞ்சம் தில்லுள்ள ஆசாமியெனில் தொட்டுப்பார்க்கலாம் என்பதுபோல கைக்கெட்டும் தூரத்தில் கிடைப்பார்கள்.  ஆக பாரிஸ¤க்கு இரயில் பிடித்தபோது எல்லா மனிதர்களையும்போல நம்ம ஆசாமிக்கும் அப்படி இப்படியென்கிற கொஞ்சம் சபலமிருந்ததில் தவறில்லை, ஆனால் சாமர்த்தியம்தான் போதுமானதாக இல்லை. யாரிடம் தமது சரக்கு விலைபோகுமென முகம்பார்த்து தமது வாடிக்கையாளரை அடையாளப்படுத்தத் தெரிந்தவர், உடன் ரயிலில்வந்த பெண்ணைப் புரிந்துகொள்ள தவறிவிட்டார். போதாதற்கு அவரது அசட்டுத்தனமும் தோற்றமும் கூடுதலாக துரோகமிழைக்கின்றன. ஆமாம் இரயிலில் ஓர் இரவுமுழுக்க பெண்ணொருத்தியுடன் பயணம் செய்கிற மொரென், இப்பபடி யொரு வாய்ப்புகிடைத்தும் தவறவிட்டால் தம்மைவிட ஓர் அசடனிருக்கமுடியாது என்று முடிவெடுத்து ஒரு வேகத்தில் அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுவிடுகிறார். காமம் சிலநேரங்களில் இப்படித்தான் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடும். இவரது எல்லைமீறல் காவல் துறையின் தலையீடு, வழக்குப்பதிவு என்று நீள, வீடு திரும்பினால் ஏற்கனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ஆர்ப்பரிக்கிற இவரது மனைவி பத்ரகாளியாக மாறியிருப்பாள். வெளியில் தலைகாட்ட முடியாத நிலை. காலில் விழாத குறையாக தமது பத்திரிகையாள நண்பனை பெண்ணின் குடும்பத்திடம் தூது அனுப்பி வழக்கை வாபஸ் பெற வைக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை வாழ்நாள் சேமிப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரென் இறக்கவும் செய்கிறார். தூதுபோன பத்திரிகையாளன் வேறுரகம்.  தந்திரப்பேச்சால் அப் பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்காலத்தில் அவள் உதவியால் அரசியல் படிக்கட்டுகளைத் இரண்டிரண்டாக தாவிச்செல்லவும் அவனுக்கு முடிகிறது. ஆக இருவேறுமானிதர்கள் இருவேறு அணுகுமுறைகள், இருவேறு முடிவுகள். இடறிவிழுந்தால் அதுவும் ஒரு வித்தையென்று சொல்லத்தெரியாதவர்கள் எங்கேயும் ஜெயிப்பதில்லை. டொமினிக் ஸ்ட் ரோஸ்கான் முன்னாள் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவர், நடக்கவிருக்கும் பிரான்சு அதிபர் தேர்தலில் நின்று ஜெயித்து அதிபராகியிருக்க வேண்டியவர்.  சோஷலிஸ்டுகட்சியின் அதிகார பூர்வமான அதிபர் வேட்பாளாராக தம்மை அறிவித்துக்கொள்ள பாரீஸ¤க்கு திரும்ப இருந்த அன்று நியூயார்க்கில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணிடம் பாலியல்வன்முறையில் இறங்கியதற்காக கைதுசெய்யப்பட்டார்.  பின்னர் அக்குற்றத்தித்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பினும், ஆசாமியின் அன்றையதின அத்துமீறலை யாரும் மறுக்கவில்லை. காத்திருந்ததுபோல அடுத்தடுத்து அவர்மீது பாலியல் குற்றசாட்டுகள். அரசியல் எதிரிகளின் சூட்சியென்ற வதந்தியும் உண்டு. ஆசாமிக்குப் பெண்களிடத்திலுள்ள பலவீனத்தை அறியவந்த உலகம் வதந்திகளை கணக்கில் கொள்ளவில்லை. மாப்பசானின் கதைநாயகன் மொரென் மனைவிக்கு மாறாக சீண்டுவாரின்றி தனித்திருக்கும் இந்த சோஷலிஸ்டுகட்சியின் பிரமுகருக்குள்ள ஒரே ஆதரவு பத்திரிகையாளரான அவரது மனைவிதான். இந்த டொமினிக் ஸ்ட்ரோஸ்கான் இடத்தில் மாற்றுவேட்பாளாக சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரான்சுவா ஹொலந்து அடுத்த அதிபர் என்பதாகக் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் சொல்கின்றன. இப்பத்தியை நான் எழுதுகிறபோது பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முடிந்திருக்கவில்லை.

 

இரண்டு சுற்றுகளாக நடைபெறுகின்ற பிரெஞ்சு அதிபர் தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 22 நடைபெறும். முதல் சுற்றில் களத்தில் பத்து வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கிற வேட்பாளர்களுக்கிடையே இரண்டாவது சுற்று தேர்தல் இருக்கிறது. நடைபெறும் தேதி மே 6. அன்றிரவே பிரான்சின் புதிய அதிபர் யாரென்று தெரிந்துவிடும். 1965லிருந்து இந்திய அதிபர் போலன்றி பிரெஞ்சு அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடைபெறுகிறது. எழு ஆண்டுகளாகவிருந்த பிரெஞ்சு அதிபரின் பதவிக்காலம்  கடந்த 2000த்திலிருந்து ஐந்தாண்டுகள். பிரான்சுநாட்டில் பொதுவான கட்சிகளை தீவிர இடதுசாரிகள், இடதுசாரிகள், நடுவர்கள், வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் என்று பிரித்துவிடலாம். இப்பிரிவினை கூட முதல் சுற்றில்தான். இரண்டாம் சுற்றில் வலதுசாரி கட்சியான UMPயின் வேட்பாளர் நிக்கோலா சர்க்கோஸிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டு வேட்பாளர் பிராசுவா ஹொலந்துக்கும் நேரடி போட்டியாக இருக்கும்.  ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் சர்க்கோஸி இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார். தம்மால் மட்டுமே நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியுமென்கிறார். துணிச்சலான ஆசாமியென பெயரெடுத்தவர். ஆனால் பெருவாரியான மக்களின் வெறுப்பினை சம்பாதித்துக்கொண்டிருப்பவர். தீவிர வலதுசாரிகளின் ஓட்டுகளுக்காக அவர் வெளிநாட்டினர்மீது காட்டும் வெறுப்பு, சென்ற தேரதலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கராச்சி நீர்மூழ்கி கப்பல் ஊழல், இறுதியாக வழக்கம்போல அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிரான மக்கள் மனநிலை இவருக்குப் பாதகமாக உள்ள காரணிகள். இவருக்கு எதிராக இடதுசாரிக கட்சிகளில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹொலாந்து என்பவர் நிற்கிறார். இவரிடமுள்ள குறைபாடுகள், அனுபவமின்மை, மெத்தனம், துணிச்சல் போதாது போன்ற குற்றசாட்டுகள். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சோஷலிஸ்டு வேட்பாளருக்கே சாதகமாக உள்ளன. கருத்து கணிப்பு உண்மையாக இருப்பின் அவரை பற்றி அடுத்தமாதம் எழுதுகிறேன்.

இசைவானதொரு இந்தியப்பயணம்

பிப்ரவரி 11

அதிகாலை திண்டுகல்லிலிருந்து திரும்பியிருந்தோம். இம்முறை நந்திவர்மன் வீட்டெதிரேலேயே அறை எடுத்து தங்கினோம். அரவிந்தர் ஆஸ்ரமத்தோடு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது விடுதி. மறுநாள் அதிகாலை அறைகளை காலி செய்துவிட்டு சென்னை திரும்புவதாக இருந்தது. வாடகை இரண்டுநா¨ளைக்குக்கொடுப்பதா ஒரு நாள் கொடுப்பதா என்ற சிக்கல் இருந்தது. நிர்வாகிகளில் ஒருவரைத் தவிர இருவர் (‘முதல் நாள் சந்தித்த ஆஸ்ரமத்து பெண்மணி உட்பட) ஒரு நாள் வாடகை செலுத்தினால் போதுமென்றார்கள். எனக்கு அவர் ஒரு நாள் வாடகை என்கிறாரே, இவரிடம் செலுத்தினால் பிரச்சினை முடிந்தது நாளைக்கு எப்படியோ? என நினைத்து எனது நிலமையை விளக்கினேன். அவர் போகும்போது கொடுங்களென்றார். பதினோராம் தேதி விடுதிப் பொறுப்பிலிருந்தவர் வாடகை வசூலிப்பதைக்காட்டிலும் தம்மையும் தமது நண்பரையும் போகும் போது கவனித்துவிட்டுப்போங்கள் எனக்கெஞ்சுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். நானும் இரண்டுநாள் வாடகை செலுத்தவேண்டியிருக்குமோவென நினைத்திருக்க ஒருநாளாக குறைந்திருந்த சந்தோஷத்தில் (உண்மையில் ஒரு நாள் வாடகை நாங்கள் கட்டுவதுதான் நியாயமுங்கூட) 50 ரூபாயைக் கொடுத்தேன். அவனுக்குக் கொடுத்தேன் ( மன்னிக்கவும் நான் காசுகொடுத்தபிறகு அந்த மானுடப்பிறவி சிறுத்துப் போனது. இவர்களில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசுவக்கீல் இத்தாலிவிவகாரத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகெதிராக முகத்தில் கரியைப்பூசுவதை மரக்கட்டை இந்தியர்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், உணர்வுள்ள இந்தியன் கொதித்துதான் போவான்.

மீண்டும் பதினோறாம் தேதி அதிகாலைக்கு வருகிறேன். நண்பர் இந்திரனும் சென்னையிலிருந்து எங்களுடன் திண்டுக்கல் பயணத்திற்காக இணைந்துகொண்ட ஆரோக்கியராஜ் என்பவரும் நாமக்கலிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தவுடனேயே புறப்பட்டு போனார்கள். மதியம் புதுச்சேரி அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், என்று நண்பர் நந்திவர்மன் கூறினார். எனக்கு இதில் விருப்பமில்லை. இதுபோன்ற விருந்துகளினால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னவென்று தெரியாது. தவிர எனக்கு மழைக்கு முளைத்த காளான்போல இந்த தேர்தலில் நட்சத்திரமாகி அடுத்த தேர்தலில் உதிர்ந்து விடுகிற எரிநட்சத்திரங்கள் மீது பிடிப்பு எப்போது இருந்ததுமில்லை. அமைச்சரைக்காட்டிலும் நந்திவர்மனை மதிப்பது முக்கியமாகப் பட்டது, சம்மதித்தேன். பன்னிரண்டு மணிக்கு வருவதாகக்கூறிய அமைசர் ஒரு மணிக்கு என்றாகி பின்னர் இரண்டு மணிக்கு வந்தார்.  அமைச்சர் என்கிறபோது இதைக்காட்டிலும் முக்கியபணிகள் இருந்திருக்கலாம். நாசூக்காக அவரும் இதை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை பிரசுரிக்க எனக்கு ஆர்வமில்லை

எங்கள் வீட்டு கல்யாண ஆல்பத்தில் ஒரு சிறுவன் எடுத்திருந்த நிழற்படங்களில் பெரும்பாலானவற்றுள் நிற்பான். இப்போது அச்சிறுவன் வளர்ந்து வாலிபநாக இருக்கிறான். இப்போதும் அப்படி போட்டோக்களுக்கிடையே ஓடி ஓடி நிற்பானா எனத்தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இதற்கெனவே மெனக்கெட்டு அலையும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். பிணத்தின் பக்கத்தில் படுத்து அவர்கள் போட்டோ எடுத்து பார்த்ததில்லை. பிணம் விஐபி உடையதாக இருந்தால் அதனுடனும் படமெடுத்து வீட்டில் மாட்டிவைப்பார்கள். ஒரு சிலர் விஐபிக்கள் தெருக்களில் பொதுமக்களுடன் கைகுலுக்கிறபோது இடையிற் கைகொடுத்து நண்பர்களை நிழற்படம் எடுக்கச்சொல்லி வீட்டில் மாட்டிவைத்திருக்க பார்த்திருக்கிறேன். கிளி ஜோஸ்யக்காரன் அண்ணாவுக்குப்பார்த்தேன், பெரியாருக்கு ஜோசியம்பார்த்தேன் என போட்டோக்களை காண்பிப்பதுபோல இவர்களுக்கு இப்படியொரு நோய். இதில் வேடிக்கை என்னவெனில் பிறரிடம் கேமராவைக்கொடுத்தால் எங்கே தவறிப்போகுமோ என நினைத்து மனவியை விட்டே போட்டி எடுக்கச் சொல்கிறார்கள். அந்த மனைவி இவர் மீது என்ன அபிராயங்களை வளர்த்துக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒரு சிறுகதைக்கூட உருவாகியது. . உளவியல் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துக்கொண்டு கூட ஆய்வு செய்யலாம்.

மாலை 7மணி அளவில் ஆசிரியர் வெங்கிடேசனாரைச் சந்தித்ததையும் இங்கே பதிவுசெய்யவேண்டும். இவர் ஒரு மரபுக் கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், புல்லாங்குழல் கலைஞர். அவர் வீட்டிற்குள் நுழையும்போது கர்ணகடூர குரலில் ஏசு அழைக்காமலிருந்தால் அவருக்குச் சந்திக்க நேரிட்ட தருணங்கள் கூடுதல் மகிழ்ச்சியைத்  தந்திருக்கும். அவர் லால்பகதூர் சாலையில் வசிக்கிறார். இந்திய சம்பிரதாயப்படி காரமும் இனிப்பும் வழங்கப்பட்டன. வயது எழுபதுக்குமேல் என்றார் நம்பமுடியவில்லை. அடிக்கடி தலைகாட்டிய கருப்பானை அவர் அதட்டியபோதும் அஞ்சாமல் உலாவந்ததைக்கொண்டே அவர் வயதை நம்பவேண்டியிருந்தது. புல்லாகுழலில் ஒரு இசைத்துண்டை வாசித்துக்காட்டினார். அவர் எழுத்தைக்காட்டிலும் இசை எங்களை கூடுதலாக வசீகரித்தது. அவருடைய மூத்தமகள் திருமதி பூங்குழலியையும் அவரது துணைவர் திரு பெருமாளையும் அறிவேன். இருவரும் புதுச்சேரியில் ஆசிரியப்பணி ஆற்றுகிறவர்கள். சிலகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரான்சுநாட்டில் வந்து தங்கியிருந்தார்கள். அவ்வமயம் திருமதி பூங்குழலி பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு நன்றாக பேசுவார். கத்தரித்ததுபோல விவாதங்களைவைத்து, எடுத்துக்கொண்ட தலைப்பினின்று பிறழாமல் உரையாடும் வல்லமை அவருக்குண்டு.
———————-

கதையல்ல வரலாறு 4 -1

 இட்லரின் பிணம்

-1. 1945ம் ஆண்டு நேசநாடுகளின் படைத் தளபதிகள் பெர்லினின் கூடினார்கள். இச்சம்பவத்திற்கு 28 மணிநேரத்திற்கு முன்பாக ஹிட்லர்வசமிருந்த ஜெர்மன் எவ்வித முன்நிபந்தனைமின்றி சரணடைந்திருந்தது. ஏறக்குறைய இதற்கெல்லாம் முன்பாக ஒரு பாதாள அறையில் உலகனைத்தும் ஜெர்மனால் ஆளப்படவேண்டும் எனக் கனவுகண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டிவிட்டாரென்று பேச்சு. உலக அரசியலில் ஹிட்லர் மரணமென்ற வதந்தி ஒரு பூம்பத்தையே நிகழ்த்தியதெனலாம். வெற்றியின் களிப்பில் நேசநாடுகள் திளைத்திருந்தாலும் அதைக்காட்டிலும் உலக நாடுகளுக்கிடையான உறவில் பரஸ்பர நல்லெண்ணத்தையும், சுமுகமான நட்பையும் வளர்த்து அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு முதற்பணியாக இருந்தது. பத்திரிகையாளர்களும், இதழியிலாளர்களும் முக்கியத்துவமறிந்து பெருந்திரளாக நேசநாடுகளில் ராணுவ தலைவர்களின் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். குறிப்பாக ரஷ்ய படையின் தளபதி ஜூக்கோவ் அங்கே பத்திரிரிகையாளர்களின் கவனத்திற்குள்ளானார். காரணம் இவர்தான் ஹிட்லரின் இறுதி நாட்கள் குறித்து விளக்குவதற்கென பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். நடிகை ஏவாவுடனான ஹிட்லரின் திருமணத்தை வெளி உலகிற்கு அறிவித்தவரும் இவரே. ஆனால் அன்றையதினம் ஒரு நடிகையையுடனான ஹிட்லரின் திருமணத்தைக் காட்டிலும் பத்ரிகையாளர்களுக்கு ஈர்ப்பினை தந்த தகவல், அவரது மரணம் சம்பந்தமானது.

நடந்ததனைத்தும் புதிராக உள்ளது. ஹிட்லரில் உடலை எங்களால் அடையாளப்படுத்தவியலாததால், அவருக்கு நேர்ந்த முடிவை உறுதிப்படுத்த முடியாவர்களாகவிருக்கிறோம். பெர்லினிலிருந்து கடைசி நிமிடத்தில் எங்கேயாவது இட்லர் தப்பித்திருக்கவும் சாத்தியமுண்டுஎன்ற ஜூர்க்கோவின் வார்த்தைகள் முக்கியமானவை.

பெர்சாரின் என்ற மற்றொரு ராணுவ அதிகாரியின் குறுக்கீட்டிலும் இச்சந்தேகம் உறுதிப்பட்டது:

முக்கியமான ஜெர்மன் அதிகார வட்டத்தைச் சேர்ந்தவர்களின் பிணங்களைக் கண்டோம். ஆனால் அப்பிணங்களில் ஹிட்லர் பிணமென்று எதனையும் குறிப்பிட்டு சொல்ல எங்களால் முடியாது. எனவே அவர் மரணத்தை சந்தேகிக்க வேடியிருக்கிறது. ஐரோப்பாவில் எங்கோ ஒரிடத்தில் இன்னமும் பதுங்கியிருக்கலாமோவென சந்தேகிக்கிறோம். எங்கள் சந்தேகம் ஸ்பெயின் சர்வாதிகாரியான பிரான்க்கோ அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாமென்பது, அது அபத்தமாகக் கூட இருக்கலாம். இப்போதைக்கு எங்கள் நிலை இதுதான்.”

இச்செய்தி ஐரோப்பிய அரசியல் சூழலைக் கலவரப்படுத்தியது. நேசநாடுகளின் படைகளிடம் பிடிபட்டால் அவருடைய தலைவிதி எப்படி முடியும் என்றறியாதவரல்ல இட்லர். எனவே அவர் தப்பியிருக்கக்கூடுமென சோவியத் ராணுவத்தினர் அறிவித்தபோது பலரும் நம்பவே செய்தனர். ஆனாலும் யுத்தத்தின்ப்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமையை ஏற்றிருந்த ஜெனரல் ஐசனோவர் அத்தனை சுலபமாக ரஷ்யர்களின் பேச்சை நம்ப மறுத்தார். கூன் 9ந்தேதிவரை அவரைபொறுத்தவரை இட்லர் உயிரோடிருக்கிறார் என்பதை நம்பத் தயாரில்லை. ஜூன் பத்தாம் தேதி நேரிடையாகவே ரஷ்யர்களிடம் கேட்டார். ‘ ரஷ்யர்களான உங்களுக்கு இட்லர் இறப்பு பற்றிய திடீர் சந்தேகங்கள் தோன்ற காரணமென்ன? என கேட்ட ஐசனோவினவினார்.

முதல் நாள் தாம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்த தகவலை ஜூக்கோவ் மீண்டும் உறுதிபடுத்தினார்

கிடைத்த பிணங்களில் இட்லரின் உடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதுதான் காரணம்வேறென்ன சொல்ல, எனக்கூறிவிட்டு, இட்லர் ஸ்பெயின் நாட்டிற்கோ அல்லது அர்ஜெண்டைனாவிற்கோ தப்பித்து சென்றிருப்பாரென நினைக்கவும் சாத்தியங்கள் நிறைய உண்டென்றார். இக்கூற்றை ஏற்கின்றவகையிலிருந்தது பின்னர் டைம்ஸ்இதழுக்கு ஐசனோவர் அளித்திருந்த பேட்டி. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜாலந்து நாட்டிற்குச்சென்றிருந்த அவர் தமது பேட்டியில், உண்மையில் இட்லர் இறந்ததாக ஆரம்பத்தில் நம்பியது உண்மை, அவர் இப்போது உயிரோடிருக்கவேண்டுமென நம்புவதும் உண்மை, அதற்கான காரணங்களுமுண்டென தெரிவித்தார்.

2. ரஷ்யர்களைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே அவர் உயிரோடிருக்கவேண்டுமென என்பதில் உறுதியாகவிருந்தார்கள். செப்டம்பரில் அவர்களின் இந்த சந்தேகம் ஆங்கிலேயர்களுடனான அவர்களின் உறவையே சீர்குலைக்கும் வகையில் வளர்ந்தது. “இட்லரும் ஏவாவும் உங்கள் வசமிருக்கும் ஜெர்மனிலேயே ஒளிந்திருக்கவேண்டும்என ஆங்கிலேயர்களைக், குற்றம் சாட்டினார்கள். இக்குற்றச்சாட்டை மறுதலிபதற்கான நடவடிக்கையாக ஆங்கிலேயர்கள் ஒரு பேராசிரியை நியமித்து இட்லரின் இறப்பு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டுமாறு வேண்டிக்கொண்டார்கள். இப்பேராசிரியர், பிராங்பர்ட்டிற்கு வந்திருந்த ஐசனோவரிடம், இட்லர் இறந்துவிட்டாரென உறுதிபடுத்த இயலாதெனினும் அவர் உயிரோடிருப்பதாக நம்புவதும் அபத்தமானதென்று, கூறியிருக்கிறார். மாறாக ஸ்டாலின் அமெரிக்க அதிபரின் பிரதிநிதியிடம், இடலரும் அவரது சகாக்களான போர்மன் (Bormann), கோயபல்ஸ், (Goebells) கிரெப்ஸ் (Krebs) ஆகியோரும் தப்பித்து எங்கோ ஒளிந்திருக்கவேண்டுமென, கூறியிருக்கிறார், காரணம் சோவியத் தரப்பில் நுணுக்கமாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் இறந்திருப்பாரென சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லையெனவும் மீண்டும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டது. இதை படித்துக்கொண்டிருக்கும்போதே உலகில் எங்கேனுமொரு வரலாற்றாசிரியர் தோன்றி இரண்டாம் உலகபோருக்குப்பின்னும் இடலர் உயிர்வாழ்ந்தார் என்று எழுதிக்கொண்டிருக்கலாம். ஏற்கனவே நேதாஜியைக்கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புனைவுகளுண்டு, நாளை தமிழீழ தலைவர் பிரபாகரனைச் சுற்றியும் வரலாறு கதைகள் எழுதலாம். ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும் வரலாறு அறிவியலல்ல, கலைப்பிரிவைச் சார்ந்தது எனவே புனைவுகளுக்கு அங்கே பஞ்சமில்லை. ஜூக்கோவ் என்கிற ரஷ்ய ராணுவ தளபதியும், ஸ்டாலினும் இட்லர் உயிரோடிருக்கிறாரென திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தபோது இடலர் இறந்துவிட்டாரென்பதும் உண்மை அதனை ரஷ்யர்கள் அறிவார்களென்பதும் உண்மை என்கிறது மற்றொரு வரலாறு.

(தொடரும்)

மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ?

      புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?

மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி  பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்)  காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை நினைவுகூர்தல் வேண்டும்.  இன்றைக்கும் எதிர்கால வல்லாதிக்க நாடுகள் என தீர்மானிக்கபட்டிருக்கிற இந்தியாவிலும் சீனாவிலும்(?) என்ன நடக்கிறது, ஏன் இந்த நாடுகளைத் தேடி மேற்கத்தியநாடுகளின் மூலதனம் வருகிறது? மார்க்ஸிடம் கேட்டால் காரணம் சொல்வார். தொழிலாளிகளின் ஊதியத்தை முடிந்த மட்டும் குறைத்து உபரிமதிப்பை அதிகரிப்பதென்ற விதிமுறைக்கொப்ப முதலாளியியம் தொழிற்பட இங்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன என்பதுதான் உண்மை.

ஆக மார்க்ஸின் தீர்க்க தரிசனம் சாகாவரம்பெற்றது, ஆனால் பாதி கிணறுமட்டுமே  தாண்டுகிறது. முதலாளியியமோ நெருக்கடியிலிருந்து மீளும்  சாமர்த்தியம் பெற்றதாக உள்ளது. எனவே யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்வுண்மைகளின் அடிப்படையில் மார்க்ஸ் அன்றைய காரணகாரியங்களின் அடிப்படையில் கட்டமைத்த கருத்தாக்கத்தை மாறுபட்ட இன்றைய சூழலில்  மறு ஆய்வுசெய்வது அவசியமாகிறது. அவர் கருதுகோள்களில் சில இன்றைக்கு ஒத்திசைவானவை அல்ல. உ.ம். மார்க்ஸ் காலத்தில் ஓரிடத்தின் இயற்கை மூலகூறுகளை சரக்காக மாற்றும் போக்கு, உற்பத்தி நிகழ்முறையாக இருந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில் இன்று உற்பத்திநிகழ்முறையில் பங்கெடுப்பவர்களையும், இறுதியில் இலாபம் பார்ப்பவர்களையும் அத்தனை சுலபமாக அடையாளபடுத்திவிடமுடியாது. தொழிலாளிகளுக்கு எதிராக முதலாளிகள் என்றவரிசையில்  இடைத்தரகர்களாக செயல்படும் அரசியல்வாதிகள் போன்றோரையும் கணக்கிற் கொள்ளவேண்டும். அதுவன்றி ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.

பொதுவுடமையை வீழ்த்தியதாக பரணிபாடும் முதலாளியியம் வென்றிருக்கிறதென்று உருதியாய் சொல்வார்களா என்றால், இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியலாம் என்ற நிலமை. மேற்கத்திய நாடுகளும்; தன்னை வெல்வார் இல்லையென இருமாந்திருந்த அமெரிக்காவும் தலையில் கைவத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் பிரேசிலும், ரஷ்யாவும் இவர்களுக்கு கைகொடுத்து கரையேற்றவேண்டிய கட்டாயம் நாளை நிகழலாம். ஆக மார்க்ஸை மறுவாசிப்பு செய்து மாற்று வழிமுறைகளை கண்டெடுத்தாக வேண்டிய சூழலில் உலகம் இன்றிருக்கிறது. நூலாசிரியர் டெனிஸ் கொலன் தன் பங்கிற்கு சிலவற்றை முன்வைக்கிறார்.

தத்துவ பேராசியராக பணியாற்றிவரும் டெனிஸ் கோலன்(Denis Collin). கார்ல்ஸ் மார்க் சிந்தனையில் தோய்ந்தவர். மார்க்ஸிய சிந்தனையை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீன காலத்திற்கொப்ப மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சிந்தனாவாதி. பதினைந்துக்கு மேற்பட்ட அவரது நூல்கள் (தத்துவம் மற்றும் மார்க்ஸிய சிந்தனையை மையமாகக்கொண்டவை) அனைத்துமே உலகின் கவனத்தைப் பெற்றவை, விவாதத்திகுரியவை.

மார்க்ஸின் கொடுங்கனவு -தனியுடமையென்பது தொடர்கதையா (Le Cauchemar de Marx Le capitalisme est-il une histoire sans fin ?, Max Milo னditions, 2009) இந்த நூல் நிச்சயம் வரவேற்பை பெறுமென்பதில் ஐய்யமில்லை. இந்திய மொழிகளில் ஏனைய மொழிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழுக்கு கிடைத்திருக்கிறது. நூலுக்க்காக திரு தியாகுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தமிழ் ‘மூலதனம்’ நூலையும், பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் வெளிவந்த ‘Le Capital’ நூலையும் படிக்கவேண்டியிருந்தது. நூலின் வெற்றிக்கு தியாகுவும் மறைமுகமாக உதவி செய்திருக்கிறாரென சொல்லவேண்டும். அவருக்கு நன்றிகள். இந்நூலின் பதிப்பிற்கு வழிவகுத்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும்  நண்பர் கண்ணனுக்கும், வழக்கம்போல அரிய யோசனைகளை வழங்கி மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைய காரணமாகவிருந்த மரியாதைக்குரிய திரு.எம்.எஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல.

“மனிதன் என்பவன் இயல்பிலேயே தனித்தவன் பிறருடனான சூழலில் மகிழ்ச்சிகொள்பவனல்ல” என்ற ரூஸ்ஸோ வின் வரிக்கும் இந் நூலுக்கும் நிறையவே தொடர்புள்ளது அன்னாருக்கு இந்நூல் சமர்ப்பணம்.

(மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ?

நூலுக்கு  மொழிபெயர்ப்பாளர் முன்னுரை)

மார்க்ஸின் கொடுங்கனவு

–          தனியுடமை என்பது தொடர்கதையா ?

விலை ரூ 200

Kalachuvadu Publications Pvt.Ltd.

669 K.P. Road, Nagarcoil -629001

இசைவானதொரு இந்தியப் பயணம் – 5

பிப்ரவரி -5

நேற்றையைபோலவே இன்றும் காலை உணவு நேரு வீதிக்கருகிலிருந்த ‘Hot Bread’ ல் என்றானது பிரான்சு நாட்டிற்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய உணவு முறையை வழக்கப்படுத்திக்கொண்டாயிற்று. பிரெஞ்சு நண்பர்களுக்கு இந்திய உணவுகளில் அதிக நாட்டமிருப்பதில்லை, குறிப்பாக தென்னிந்திய உணவுகளில். வட இந்தியர்களைப்போலவே தோசையை மட்டும் விரும்பிச்சாப்பிடுகிறார்கள். சில புதுச்சேரி நண்பர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பிரெஞ்சு நண்பர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பார்கள். அவர்கள் காசு கொடுத்து சாபிடும்போது எதைச் சாப்பிடுகிறார்களென்று பாருங்கள் அதுதான் அவர்களது விருப்பமாக இருக்குமென அவர்களிடம் சொல்வதென் வழக்கம். மனிதர் வாழ்க்கைப் பன்முகக் கலாசாரத்தை  ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரலாறு மட்டுமல்ல உலகின் பண்பாடும் வாகைசூடியவர்களுக்கும், எஜமானர் இருக்கையில் நீண்டகாலமாக அமர்ந்து கோலோச்சியவர்களுக்கும் சொந்தமானது. இந்திய முதுகுகள் வெகுகாலமாகவே மேற்குலக பண்பாட்டை சுமந்துகொண்டிருக்கின்றன. எனக்கும் காலை நேரத்தில் இட்டளி, தோசையென்று உண்டு இந்தியாவிற்கு வந்து போகும் நாட்களைத் தவிர்த்து வெகு காலமாயிற்று:

நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியில் இருந்தது. அங்கிருக்கும் பள்ளிவாசலைக் கடந்தால் முல்லா வீதி சந்திப்பு வருகிறது. முல்லா வீதி யில் இறங்கி வடக்கு நோக்கிநடந்தால் லால் பகதூர் சாஸ்திரி வீதி. அதற்குப்பிறகு எங்களது தேவைக்கான திசையில் கால்கள் பயணிக்கும். நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்து வாசலிலேயே எதிர்பட்டார் அவர். அதிகம்போனால் 25 வயதிருக்கலாம். பள்ளிக்கல்விவரை முடித்திருக்கலாமென்பது என் ஊகம், ஆனால் பிரெஞ்சில் தட்டுதடுமாறி பேசினார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது பிரெஞ்சு நண்பர்களை குறிவைத்து பேசத் தொடங்கினார். அவரது பெயரை தவிர்த்திருக்கிறேன். தாம் பிரெஞ்சு ஓரளவு கற்றிருப்பதாகவும், மொழியை மறந்துவிடக்கூடாதென்பதற்காக பிரெஞ்சு சுற்றுலாவாசிகளை தேடிப்படித்து அவர்களோடு பழகுதாகவும், நான் உங்களுடன் இருப்பதில் தயக்கமெதுவுமில்லையே என தடாலடியாக எங்களிடம் விண்ணப்பமும் போட்டார். எனக்கு இது வேண்டாத வேலையாக இருந்தது. வேறு சில ஐயங்களிருந்தன. கேட்டவர் ஒர் இளம்பெண் என்பதால் தயக்கங்கள். ஆனால் பிரெஞ்சு நண்பர்கள் அதற்கென்ன தராளமாக வாயேன் என்றார்கள்; அந்தப் பெண்ணும் ஓரளவு சமாளிக்ககூடிய பிரெஞ்சில் உரையாடியபடி எங்களைத் தொடர்ந்துவந்தார். சுஜாதா எழுதும்போது பல்லி சொன்னதென எழுதுவார். எனக்கும் அப்படி ஏதோவொன்று அவரைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது. எனது பிரெஞ்சு நண்பர்களைத் தனியாக அழைத்து அப்பெண்ணிடம் பிரான்சுவாஸ் – அவர் எங்கள் குழுவிலிருந்த ஒரே பெண்மணி- வேண்டுமானால் அப்பெண்ணிடம் உரையாடட்டும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே உரையாடுவது நல்லது, நாம் வந்திருப்பது இரண்டுவாரத்திற்கு, இதில் என்னால் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் அலைந்துகொண்டிருக்க முடியாது. கிளம்பிப் போய்க்கொண்டே இருப்பேன், என்றேன். அதற்குப் பிறகு பெண்ணுடனான அவர்கள் பேச்சு நிதானத்திற்கு வந்தது. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தார்கள். தவிர நான் அறிவுறுத்தியதைப்போன்றே, பிரான்சுவாஸ் என்பவரை அப்பெண்ணிடம் உரையாடவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.

இன்றைக்கு சவியே காலையில் இந்திய உணவு விடுதிக்குச் செல்லலாமே என்றான். மனே (பிரான்சிஸ் பிரான்சுவா) தம்பதியினருக்குத் தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்ளும் உத்தேசங்களில்லை என்பது புரிந்தது. அவர்களுக்காக ‘ஹாட் பிரெட்”டுக்குள் நுழைந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அனைவருமாக இந்தியவிடுதியொன்றிர்க்குச்சென்று சாப்பிடுவதென தீர்மானித்தோம். நண்பர் பிரான்சிஸ¤ம், அவரது மனைவியாரும் பிறகு அங்கேயே சாப்பிடுவதென தீர்மானித்து சுயமாக பறிமாறிக்கொள்ளும், அந்த விடுதியின் வழக்கப்படி ஒரு தட்டில் காலை உணவுக்கான ரொட்டிகளை தேர்வு செய்து எடுத்துவந்தனர். அப்பெண்ணும் அவருக்குத் தேவையானவற்றை  எடுத்துவர அதற்குண்டான பணத்தை மனே தம்பதியினர் செலுத்தினர். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இப்போது நானும் சவியேவும் சாப்பிடவேண்டும். இந்திய உணவு விடுதி அருகிலிருந்தது. மேசையை பிடித்து மனே தம்பதியினர், சவியே, காலையிலிருந்து எங்களை தொடர்ந்து வந்த இளம்பெண், பிறகு நான் என அனைவரும் அமர்ந்தோம். நாங்கள் சாப்பிடலாமென்று சர்வரைக்கூப்பிட்டு ஆர்டர் செய்ய நண்பர் சவியே ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அப்பெண்ணிடம் விசாரித்தார். நீங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுகிறேன் எனக்கூற, பிறகு அவரவர்க்கு விருப்பமானதை கொண்டுவரசெய்து சாப்பிட்டோம்.  இடையில் நடைபெற்ற உரையாடலில் இளம்பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிவதாகவும், பிரெஞ்சு நண்பர்கள் வேலை கடினமா எனக்கேட்க ஆம் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதென்றும், ஒரு குடிகார சகோதரனிருப்பதாகவும், அம்மாவுக்கு மகளை எப்படியாவது பிரான்சுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்கிற கனவுகள் இருப்பதாகவும், அதற்காக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அம்மா இப்படி பிரெஞ்சுக் காரர்களோடு இருக்கிறேன் எனக்கூறினால் மிகுந்த சந்தோஷப்படுவார்கள், என முடித்தார்.

சவியேவிற்கு எனது கிராமத்தையும் எங்கள் ஊர் மக்களையும் பார்க்கவேண்டுமென்று தெரிவித்திருந்தான். எனவே நண்பர் நந்தி வர்மனிடம் வாகனத்திற்கு சொல்லிவைத்திருந்தோம். முதல் நாள் சொல்லாததால், காலையில் அவரிடம் சொன்னபோது உடனே வாடகைக் கார்கிடைப்பது அரிதென்ற பதில் வந்தது. வாடகைக்கார் கிடைக்கவில்லையெனில் பேருந்து பிடித்து போவதென்று நினைத்திருந்தோம். இளம்பெண் எங்களை விடுவதாக இல்லை. எங்களோடு கிராமத்திற்கு வர விருப்பம் வரலாமலில்லையா? என்றார். பிரெஞ்சு நண்பர்கள் வருவதால் எந்த பாதிப்புமில்லை என்பதுபோல இருந்தார்கள்; எனக்கென்னவோ ஆரம்பத்திலிருந்தே அப்பெண்¨ணைக் கூட்டிக்கொண்டு அலைவதில் உடன்பாடில்லை. இதோ பாரம்மா நாங்கள் ஏற்கனவே நான்கு பேர் இருக்கிறோம் டிரைவரோடு சேர்த்து ஐந்துபேர் ஆகிறது என்னதான் வருவது பெரிய வண்டியென்றாலும் வேறொரு நண்பர் வருவதால் உன்னை அழைத்துச்செல்லமுடியாதென்று தெளிவாகக் கூறிவிட்டேன். புறப்பட்டுப்போனபோது அப்பெண் என்னைத் திட்டியிருப்பாளென தெரியும்.  ஆனாலும் அவள் புறப்பட்டுபோனபிறகே என்னால் நிம்மதியாய் மூச்சு விடமுடிந்தது.

காலை 9.30மணி அளவில் புறப்பட்டு புதுச்சேரியிலிருந்து 20.கி.மீட்டர் தொலைவிலிருந்த எங்கள் கிராமத்தை அடைந்திருந்தோம். காலை பத்து பதினைந்துக்கு,  சிதிலமடைந்திருந்த எனது பால்ய வயது வீட்டின் முன் வாகனம் நின்றது. எனது பிள்ளைத்தமிழ் இடிபாடுகளுக்கிடை சிக்கி முனகிக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் கண்களை இறுக மூடினேன். ஒரு துளி கண்ணீர். அதற்குமேல் சிந்த ஒன்றுமில்லையென்பதுபோன்ற பாலை வெக்கை எனக்குள் இருந்தது. செரிபடாத நினைவுகள் குமட்டிக்கொண்டு விடுபட கசப்புகள் வாய் நெஞ்சு இதயமென்று நிறைந்து வழிந்தன. மனம் பல்லியின் நாக்கிற்கு எட்டாத தூரத்தை தேடி பாச்சையாக அலைந்தது. இலை உதிர்த்த மரக் கிளையின் கூடுபோல உடல் கால் மாற்றி நின்று வெந்து தவித்தது. கடைசிப் பந்தியிலும் உனக்கு இடமில்லை எழுந்திரு என்பதுபோன்றதொரு மூர்க்கமானதொரு குரல் காதில் விழக் கேட்டேன்.

இளநீர்வந்தது, சிந்திய ஒரு துளிகண்ணீரை இட்டு நிரப்பவாக இருக்கலாம். நெஞ்சில் நிழலாய், நுணி மடிந்த பழுப்பேறிய, காலத்தின் வடுக்களை வயதுடன் சுமக்கமுடியாமல் சுமந்தமடி கைகளைப் பற்றும் மனிதர்கள். கண்களைத் தொட்டிருந்த அவர்கள் மூப்பு எனது இளமையைக் கசக்கி ஆசுவாசப்பட்டது. அந்தி வேளையில் வீடு திரும்பும் மாடுகள்போல, தெருவில் இறங்கி நடக்கிறோம். வயதையும் வாழ்க்கையையும் இழந்து திண்னைகளில் ஒருக்களித்து படுத்திருந்தவர்கள் எழுந்து உட்காருகிறார்கள்.

– யாரு சின்னத் தம்பியா?

– ம்…

– உள்ளே வாயேன். ம். நீதான் எங்களையெல்லாம் மறந்திட்ட .

என்னிடத்தில் பதிலில்லை. நெஞ்சு வெப்பத்தால் நிரைகிறது. மூச்சுமுட்டுகிறது. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்கின்றன. தலையாட்டுகிறேன். பற்றிய கைகளை விலக்கி நடக்கிறேன். வழியெங்கும் விசாரிப்புகள். அவர்கள் முந்திக்கொள்கிறார்கள்.  அவர்கள் விசாரிப்பு எனது அக வாழ்க்கைப்பற்றியதா புற வாழ்க்கைக்குறித்ததா?  வாழ்க்கை பண்டமாற்றுகளால் கொண்டுசெலுத்த முடியுமெனில் எவ்வளவு சௌகரியமாக இருக்கும். நாகரீகங்கருதி பல நேரங்களில் நட்டத்திற்கு விற்கவேண்டியிருக்கிறது. என்ரேனும் ஒருநாள் இலாப தரிசனத்திற்கு ஓடி வருகிறபோது நடைவாசல் மூடும் நேரம் என்கிறார்கள்.

சவியேவும் மனே தம்பதியினரும் புகைப்படக் கருவிகொண்டு தருணங்களை ஆவணப்படுத்துகிறார்கள். புதுச்சேரி திரும்பியபொழுது நண்பர் இந்திரன், அகவெளி நண்பர்களுடனும் கடற்கரையுடனும் வந்திருந்தார். இந்திரன் கொண்டு வந்திருந்த கவிதை வாசிப்புக்கென தாயாரிக்கபட்ட சிறிய புத்தகங்களை நந்தி வர்மன் வீட்டில் இறக்கிவைத்துவிட்டு நாங்கள் மதிய உணவிற்கு வந்தோம். வெகுநேரம் கழித்து நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் எங்களோடு இணைந்துகொண்டார். சாப்பிட்டு முடிந்ததும், நண்பர் எஸ். ஆரிடம் அவரிடம் தங்க ஏற்பாடு செய்திருப்பதைக்கூறினேன்.

– இல்லை கிருஷ்ணா நாளைக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே அறை எடுத்திருக்கிறார்கள். எதற்காக வீண் செலவு என்றார்.

– கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்றேன். – பிரெஞ்சு நண்பர்கள் இருந்ததால், அவருடன் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம்

– இல்லை நண்பர்களுடன் பேசியிருந்துவிட்டு மாலை நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறேன் என்றார்

அன்று மாலை நடந்த கவிதை வாசிப்பு குறித்து தனியாக எழுதுகிறேன்.

(தொடரும்)