Category Archives: கட்டுரைகள்

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

எழுத்தாளன் முகவரி-7: நடைவாசல்கள்

“பத்திரிகையாளரான சகோதரி ஒருத்தி என்னைத் தடுத்து, ” ஒரு புனைகதை ஆசிரியர் எப்படி உருவாகிறார்?” எனக் கேட்டார். இது காலங் காலங்காலமாய் வெற்றிபெற்ற எழுத்தாளரிடம் முன்வைக்கபடும் புளித்துபோன கேள்வி. ‘என்னிடம் அதற்கு பதிலேதுமில்லையென்று ‘ கூறினேன். எனது தயக்கத்திற்குக் காரணம், இக்கேள்விக்கொரு பொதுவான பதிலை சொல்லமுடியாதது. ஒவ்வொரு எழுத்தாளரும் சிலகாரணங்களை சொல்லக்கூடும், பிறகு அப்பத்திரிகையாளரே, “நீங்கள் ஒரு நல்ல புனைகதை ஆசிரியராக எப்படி மாறினீர்கள்?”, எனக்கேட்டார். இக்கேள்விக்கு என்னால் ஓரளவிற்கு பதிலளிக்க முடியுமெனத் தோன்றியது. கதை சொல்லலில் எனக்கு நாட்டம் ஏற்பட காரணத்தை யோசித்தபோது, நீண்டா காலமாகத் தொடர்ந்து வாசிப்பது, சொற்களின் மீதுள்ள பிரியம் போன்றவை உடனடியாக ஞாபகத்திற்கு வந்தன, எனினும் இது தவிர வேறுகாரணங்களை இருக்கின்றன”, என்று தமது கட்டுரையொன்றினைத் தொடங்குகிறார் B.J. Chute. (1913-1987)

பேயாத்ரீஸ் ஜாய் ஷ¤ட் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். அமெரிக்க எழுத்தாளர் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சிறுவர் இலக்கியம், பதின்ம வயதினர், பெரியவர்களென வயதிற்கொத்த படைப்புகளை எழுதியவர். அவருடைய நாவல்களில் ‘Greenwillow”(1956) முக்கியமானது.

பத்திரிகையாளர் கேட்டகேள்வி (What makes you a fiction writer?) அவரை உறங்கவிடாலற் செய்திருக்கிறது. பலமுறைத் தனக்குத்தானே இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தம்மை ஜாய் என அழைத்துக்கொள்வதில் அல்லது அழைக்கப்படுவதில் விருப்பம் அதிகமாம். அவரது விருப்பத்திற்கு மரியாதை அளித்து இக்கட்டுரையில் ஜாய் என்றே அழைக்கிறேன். நமது ஜாய் ஓர் எழுத்தாளனாக சாதனைப்படைக்க நான்கு யோசனைகளை முன்வைக்கிறார்.மூன்றாம் திருமுறையில் வரும் வள்ளலார் பாடலோடு ஜாயின் யோசனை மிகக் கச்சிதமாக பொருந்துகிறது. கட்டுரையின் முடிவில் உங்கள் வாசிப்புக்கு அப்பாடல் காத்திருக்கிறது.

படைப்பு தரிசினத்திற்கு எழுத்தாளனுக்கென்று பிரத்தியேகமாக நான்கு நடைவாசல்களை ஜாய் திறக்கிறார்:

1. கற்பனை:

சிறுகதை ஆசியரனாக வரவேண்டுமென்றாலும் சரி, நாவலாசிரியனாக ஜெயிக்க வேண்டுமென்றாலும் சரி கற்பனை முதலாவது நடைவாசல். ஜாய் எழுத்தாளனை சிலந்தியென்றும், எழுத்தை சிலந்திவலையென்றும் கூறுகிறார். வாசகன் அவ்வலையில் சிக்கும் இரை. ஜாயைப் பொறுத்தவரை கற்பனையே எழுத்துக்கான அடிப்படைத் தூண்டுதல் – Muse என்ற கிரேக்க பெண்தெய்வம். கிரேக்க புராணக்கதைகளின்படி பல்வேறு கலைகளுக்குப் பொறுப்பேற்று வழிபடுத்துகிற ஒன்பது பெண்தெய்வங்களுள் ம்யூஸ¤ம் ஒருத்தி. அவளுடையப் பணி அகத்தூண்டுதலுக்கு வழிகோலுவது. கதையாசிரியனுக்கு இம் ம்யூஸின் கடாட்சம் வேண்டும். ஆனால் அதற்காக 108 தேங்காய், நேர்த்திக்கடன் போன்ற வழிமுறைகளை ஜாய் போதிப்பதில்லை. ‘கற்பனை’ என்பது வரமாகப் பெறுவதல்ல அல்லது கடைக்குப்போய் சிறுகதை எழுதலாமென்றிருக்கிறேன் 200 கிராம் கற்பனை கொடுங்கள் அண்ணாச்சியென்று கேட்கவும் முடியாது. பால் கறக்கிற பசுமாட்டுக்குத் தீனி வைப்பதுபோல, எழுதும் மூளைக்கு தீனிகொடுக்கவேண்டும், கறந்து பழக வேண்டும். ஒரு படைப்பாளி நித்தம் நித்தம் எழுதவேண்டும் எழுதத் தவறினால் தொழிற்படும்  கற்பனையும் துருபிடிக்கலாம், உற்பத்தியும் (எழுத்தும்) பாதிக்கலாம். சிலந்தி வலைபின்னும் சாமர்த்தியத்தை கவனித்திருக்கிறீர்களா? பிடிப்பற்ற வெளியில் ஒரு பாய்ச்சல், கசியும் மிக மெல்லிய இழையினூடே தொடர்ந்து வியப்புக்குரிய வகையில் நேர்த்தியாக உருவெடுக்கும் வலை, அந்தரத்தில் ஒருமாய்மாலத்தையே நடத்தி, சுற்றியிருக்கிற ஈக்களுக்கு அதில் காலார உட்காரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித் தருகிறது.  வாசகனைச் சிலந்திவலையிற் சிக்கும் ஈக்களோடு ஒப்பிடக்கூடாதென்றாலும் உண்மை அதுதானே.

2. அனுதாபம்:

ஜாய் கூறும் இரண்டாவது நடைவாசல். அனுதாபம். ஆங்கிலச்சொல்லான ‘Embathy’ என்ற சொல்லை இதற்கு உபயோகிக்கிறார். அகராதியில் பொருள் தேடினால்: மாற்றார் உணர்வு அறிதல் அல்லது மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து அவரது அனுபவத்தை கற்பனையாக அனுபவித்தல்’ எனப்பொருள் கிடைக்கிறது. கற்பனையைப் போலவே அடுத்தவர் நிலைகண்டு பரிதாபப்படுவதற்கும் பயிற்சிவேண்டும், மன அளவில் எதிராளியாக நம்மை நிறுத்தி அவ்வுணர்வில் திளைக்கவேண்டும். சில நேரங்களில் அவ்வனுபவத்தை வார்த்தைகளிற் சொல்ல இடற்பாடுகள் நேர்ந்தாலும் கல்யாண்ஜி போலவும் எழுதலாம்:

“இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என்று
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்ச்சிக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை
மேலும்
எம் வலியும் ஆகாது
உம் வலி”

தலித் பிரச்சினைகளை ஒரு தலித் எழுத்தாளர்தான் எழுதமுடியும், பெண்ணியப்பிரச்சினைகளை பெண்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்பதுபோன்ற உதவாக்கரை கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்துவிட்டாள் ஏற்படுத்திய பிரளயத்தைத் பெண் எழுத்தாளர்கள் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை உட்பட. மதாம் பொவாரி நாவலின் நாயகி ‘எம்மா’வுடைய  பேரார்வமும், வாழ்க்கைமீதான எரிச்சலும், கோபமும், சலிப்பும், விரக்தியும், வேதனையும் பிரெஞ்சில் வேறொரு பெண்ணாற் சொல்லப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. நாவலாசிரியர் ·ப்ளோபெர் (Gustave Flaubert) தமது வாழ்க்கையில் எங்கேயோ சந்தித்த பெண்ணொருத்தியின் மீது ஏற்பட்ட பரிவு அவரை ‘எம்மா’ வாக உருக்கொள்ள வைத்தது. சென்ற அத்தியாயத்தில் உருமாற்றம் என கேல் காட்வின் கூறியதையே ஜாய் “மாற்றார் உணர்வை அறிதல்’ என்கிறார்.

3. எழுத்து நடை அல்லது பாணி:

B.J. Chute திறக்கும் மூன்றாவது நடைவாசல்  எழுத்துநடை. கதை சொல்லலில் இது மிகவும் முக்கியமானது. தொனி, சொற் தேர்வு வாக்கிய அமைப்பு என மூன்று பண்புகளையும் உள்ளடக்கியது நடை. கதை மாத்திரமே ஓர் படைப்பின் தலைவிதியைத் தீர்மானிப்பதல்ல. ஒரு நாவல் கவனிப்பைப்பெறுவது சொல்லப்படும் விதத்தைச் சார்ந்தது. கதை சொல்லலையும் புனைவையும் பிரித்துப்பார்க்கக்கூடாது. ஒரே கதையை பத்து எழுத்தாளர்கள் சொல்லமுடியும். ஆனால் சொல்லுகிறவிதம் ஒன்றுபோலவே இருக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் படிக்கிறபோது ஒரு வசனத்தை அவர் சொன்னால் எப்படியிருக்கும் இவர் சொன்னால் எப்படியிருக்குமென மிமிக்ரி செய்வதுபோல, ஒரு கதையை ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், கல்கி, புஷ்பா தங்கதுரையென பல எழுத்தாளர்கள் மொழியில் எழுதிப்பார்த்து நண்பர்களிடம் வாசித்துக்காட்டுவேன். நல்ல நடை நிச்சயமாக உங்கள் கதையைத் திரும்பவும் வாசிக்கவைக்கும்.

கதை சொல்லலில் இந்த நடை அல்லது பாணி எப்படி பிறக்கிறது. ஜாயைப் பொறுத்தவரை கதையின் நடை என்பது, தெளிவான சிந்தனை. அதாவது பேனா பிடிக்கும் முன்பாக அல்லது விசைப்பலகையில் தட்டுவதற்கு முன்பாக உங்கள் தலைக்கு வேலைகொடுக்கவேண்டும். இரண்டொரு நிமிடங்கள் எதைச் சொல்லபோகிறேன் எப்படிச் சொல்லபோகிறேன் எங்கே தொடங்கப்போகிறேன் என்பதில் தெளிவு இருப்பின் நடையிலும் தெளிவு இருக்கும், ஓர் அழுத்தம் வரும். சிந்தனையிற் தெளிவு, அதற்குரிய சொற்கள் (இச்சொற்கள் தேர்விலேயே ஓர் எழுத்தாளனின் இடம் படைப்புலகில் தீர்மானிக்கப்படுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. மர்செல் ப்ரூஸ்டு என்ற பிரெஞ்சு எழுத்தாளருடையப் படைப்பை நண்பர்கள் வாசித்திருக்கலாம் அவர் நடையை சூ-ழஸாங்(Sous-Jacent) எனப்பிரெஞ்சில் சொல்வார்கள் (ஆங்கிலத்தில் – The underlying tune). அடக்கிவாசிப்பது, ஆழ்ந்து அல்லது கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாக உணரமுடியாதது, இலைமறைகாயாக ஒன்றை தெரிவிப்பது என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். அது அவருடைய பாணி. ஆனால் அதையே எல்லா எழுத்தாளரும் பின்பற்றவேண்டுமென நினைப்பது நமது தனித் தன்மைக்குக் கொள்ளிவைப்பதாகும். எனக்குப் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப மொழியைக் கையாளலாம்.
தமிழில் நடையில் சுஜாதாவுக்கென ஒரு தனித்தன்மையுண்டு. சாண்டியல்னைக்காட்டிலும் கதைசொல்லலில் கல்கி தேர்ந்தவர். ஆங்கிலத்தில் பிலிப் ரோத், நத்தானியெல் ஹாத்தோர்ன் இவர்களையெல்லாம் கதை சொல்லலிலுள்ள தொனிக்காகவே வாசித்திருக்கிறேன். கி மொப்பசான் கூட கதை சொல்லலில் அசகாயசூரர். கா·ப்காவும் ச¨ளைத்தவரல்ல.

4. இடையறா ஊக்கம்

ஜாய் திறக்கும் நான்காவது நடைவாசல் பொறுமை. கற்பனைகதவுகள் திறக்கின்றன. கதைமாந்தர்களின் மீது அனுதாபம்சுரந்து அவர்களிடத்தில் உங்களை வைத்து அவ்வனுபத்தில் திளைக்கமுடிகிறது, எழுத்து நடையைத் தீர்மானிக்கிறீர்கள். இப்பொழுது படைப்பில் மேற்கொண்ட மூன்றையும்  ஒன்றிணைப்பதில் தேவைப்படும் சோர்வற்ற உழைப்பே நான்காவதாகும். Joyce Cary, ‘to see the thing and throw the loop of creation around it” என்கிறார். இங்கே ‘the thing’ என்பது வேறொன்றுமல்ல கதைக்கரு  அல்லது கதைப்பொருள். இலையில் சாதத்தை வைத்தாகிவிட்டது. பருப்பு, கூட்டு, பொரியல், நெய் என எல்லாம் தயார் நிலையில்; எதை எப்படி ஆரம்பிப்பது, எப்போது சாம்பார், எப்போது ரசம் என வரிசைபடுத்திக்கொண்டு பிசைவதற்குத்தோதாக படைப்பை உருவாக்கமுடிந்தால், வாசகர்களும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கலாம்.

மூன்றாம் திருமுறையிலுள்ள இப்பாடலை இனியொரு எழுத்தாளனாக வாசியுங்கள்.

படித்தேன்பொய் உலகியநூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேனெம் பெருமான்ஈ தொன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

—————————————————

எழுத்தாளன் முகவரி -6: உருமாற்றம்

“கடுமையாக உழைக்கவும் பொறுமைகாக்கவும் உள்ளுணர்வுகள்மீது நம்பிக்கைவைத்து பொய்யான அச்சங்களை தவிர்க்கவும் முடிந்தால் எவர் ஒருவரையும்போல கூடுபாய என்னால் முடியும்”- கேல் காட்வின்

கேல் காட்வின் ( Gail Godwin) எழுத்தாளர் அதாவது வெற்றிகரமான எழுத்தாளர் (சிறுகதைகள், நாவல்கள்). அவரது நாவல்கள் கவனத்திற்கொள்ளும் அளவிலும், விற்பனையில் சாதனைபடைத்தவைகளாகவும் இருக்கின்றன. கேல் காட்வினுடைய  ‘A mother and two daughters, The Odd woman, இரண்டு நூல்களையும் சந்தர்ப்பம் அமைந்தால் வாசியுங்கள். கருவறைக்குச்சென்று பெண்களை தரிசிப்பீர்கள். அம்முகங்களில் ஒளிரும் கருமையிலும், இறுக்கத்திலும், உதடுபூக்கும் பார்வையிலும், இருபுருவருங்களிக்கிடையில் நெளியும் கேள்விகளிலும் பார்வையைத் திருப்பாது அவதானித்தால் பெண்ணென்ற ஜீவனின் முழுதரிசனத்திற்கு வாய்ப்புண்டு. தமது எழுத்தில் உருப்பெறும் பாத்திரங்களாகக் கூடுபாயும் திறனை, பத்து பன்னிரண்டு வயதிலேயே தாம் பெற்றிருந்ததாக கேல் தெரிவிக்கிறார். இளம்வயதிலேயே எழுத்தில் உயிர்ப்பிக்க நினைக்கும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறும் மோடிவித்தை எளிதாகக் கூடிவந்திருக்கிறது: மனைவிக்குத் தலையாட்டும் கணவன், கவனிப்பாரற்ற பணக்கார சிறுவன், உல்லாசமாகச் சுற்றித் திரிந்த நாயொன்றின் சொந்த அனுபவமென்று எதையும் அதனதன் இடத்திலிருந்து சொல்ல அவருக்கு சாத்தியமாகிறது.

பதின் வயதை எட்டியபோது வேறொரு அனுபவம். அது பொதுவாக சுயபுரிதலுக்கு உதவத்தொடங்கும் வயது. அன்றி தன் செயல்பாடுகளைப்பற்றிக் கேள்வியும் எழுப்பக்கூடியது.  கதைசொல்லலைக்குறித்து இவருக்கு வழிகாட்டியவர்கள் அந்நேரத்தில்’உனக்குத் தெரிந்ததை எழுது’ – எனக்கூறியிருக்கிறார்கள். விளைவாகத் தமது கற்பனைப்பரப்பை சுருக்கிக்கொண்டிருக்கிறார். இளம்வயது பெண்ணைக்குறித்து எழுதுவதென்றாலும், நடுத்தர வயது பெண்மணியைப்பற்றிய எழுத்தென்றாலும், முற்றுமுதலாக தம்மையே முன்நிறுத்தி அக்கதைமாந்தர்களைப் படைத்திருக்கிறார். இவ்வணுகு முறையில் அதுவரை அனுபவித்திராத உள்ளுணர்வுகளும், உத்தியும் வாய்த்தபோதிலும் அவருக்கு நாட்டமில்லை, இப்புதிய சிக்கலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதெப்படி என்ற கவலை அவரை அரித்திருக்கிறது.

ஜெர்மன் சொல்லான ‘Zeitgeist’ (The Spirit of the Times) என்பதற்கு ஒரு கால கட்டத்தின் பண்பாடு, புத்திகூர்மை, அரசு, சமூகம் மற்றும் சமய நெறிமுறைகளின் கலவையென்று பொருள். விழிப்புணர்வு, தன்னை உணர்தல் மற்றும் அறிதல் ஆகியவற்றிற்கும், காலத்தின் பாற்பட்ட மேற்கண்ட கூறுகளுக்கும் அடிப்படையில் தொடர்புண்டு. இலக்கிய வரலாறுகளை அறிந்தவர்களுக்குக் கதைசொல்லலில் நிகழ்ந்துள்ள மாயத்திற்கும், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்குங்கூட இக்கூறுகளே  காரணமென்பதை அறிவார்கள். மேற்கத்திய உலகில் விக்டோரிய காலத்து இலக்கியத்திற்கும் இன்றைய இலக்கியத்திற்கும் இடையில் நிகழ்ந்த இரசவாதம் இந்திய கதைசொல்லலிலும் நிகழ்ந்திருக்கிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையையும் புதுமைப்பித்தன் கதையையும் ஒப்பீடு நோக்கில் வாசித்தாலே இந்த உண்மைத் தெளிவாகும்.

மகாபாரத்திற்குத் தேவைப்பட்ட நூற்றுக்கணக்கான கதைமாந்தர்களை இன்று எந்த இலக்கியவாதியும் அழைப்பதில்லை. சுந்தரராமசாமிக்கு ஒரு ஜோசப் ஜேம்ஸ் போதும். ஏக நாயகன் அல்லது ஏக நாயகி கதைக்கு அச்சாணி.  சக்கரத்தின் குடம்போல படைப்பும் அதன் ஆரங்களென பிறமாந்தரும், சம்பவங்களும் சுற்றிவருகிறார்கள். மைய நாயகன் ஏதோஒரு குணத்திற்கு ஏகபோக உரிமையாளன், கதையை முன் நகர்த்த பிறகுணங்களும் அவனிடம் தற்செயலாக எட்டிப்பார்ப்பதுண்டு. உதாரணமாக ஜே.ஜே. சிலகுறிப்புகளில் வரும் ஜோசப் ஜேம்ஸ் ஓர் அறிவுஜீவி சகமனிதனின்று வேறுபட்டவன். முளங்காடு கிருஷ்ணப்ப வைத்தியர் அய்யப்பனால் “அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல பரவசம் ஊட்டக்கூடியது” என வியந்தோதப்பட்டவன். ஜே.ஜே. அறிவாளி மட்டுமல்ல, கூர் உணவிற்குச்சொந்தக்காரன், அடுத்து அவனை மொய்க்கும் கூட்டமிருக்கிறது: முதலாவதாக நம்மிடம் வளவளவென்று உரையாடுகிற கதைசொல்லி, (உண்மையில் தான் தேடி அலையும் ஜே.ஜேவைக் காட்டிலும் விஷயஞானமுள்ளவனென எனச் சொல்லாமல் சொல்கிற பாத்திரம், அடுத்து அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா என ஒவ்வொருவரையும் காலார நடக்கவிட்டு கதைசொல்கிறார் சு.ரா.

ஜே.ஜே., கதைசொல்லி, அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா எங்கிருந்து முளைத்தார்கள். இவர்களை சு.ரா. எப்படி கண்டுபிடித்தார். அம்மனிதர்களின் குணங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன. அவர்களுக்குள்ளே ஆசிரியரா? அவர்களுக்கு வெளியே ஆசிரியரா? என்ற கேள்விகளுக்கு விடைகள் அறிய உங்களைப்போலவே எனக்கும் ஆர்வம். கேல் காட்வினிடம் இதற்குப் பதிலிருக்கிறது. A Mother and Two daughters நாவலில் தமக்கேற்பட்ட அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாவலின் கதை மூன்று வெவ்வேறு குணத்துடனான பெண்களுக்கிடையேயான பந்தத்தைச் சொல்வது. ஒவ்வொருத்திக்கும் பிரத்தியேக குணமிருக்கிறது அப்பிரத்தியேக குணம், பிற இருவரின் குணத்துடனும் செயல்பாடுடனும் உரசுகிறபோது ஏற்படுகிற சிக்கல்களால் எவ்வாறு மாற்றி கட்டமைக்கப்படுகிறதென்பதை கதையில் தெரிவிக்கவேண்டும்.

மூன்று பெண்களின் பிரத்தியேகக்குணத்தை காட்சிஊடகத்தில் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்துவது சுலபம். ஆனால் இலக்கியமென்று வருகிறபொழுது. அவள் முகம் தட்டையானது, பெரிய கண்கள், கோபக்காரி எனக்கூறி வர்ணனைபோல குணத்திற்கும் ஒரு சொல்லைப்போட்டு முடித்துக்கொள்ளலாமா? கூடாதென்கிறார் கேல் காட்வின். மூன்று பெண்களின் குணத்தை பிரித்தறிவதற்கான சூழலை நாவல்களில் வாசகனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டுமென்கிறார். நாவலின் ஏதாவதொரு பக்கத்தை புரட்டி அங்கு வாசிக்கிற சொற்களை, அதன் தொனியைவைத்து கதைமாந்தர் யார்? அவளுடைய குணம் என்ன? என்று கண்டுணர வேண்டுமாம். அதைச்செய்யமுடிந்தால் நாம் நல்ல எழுத்தாளன்.  அக்கதைமாந்தரை எப்படி உருவாக்குவது, எங்கே கண்டுபிடிப்பது?

A Mother and Two daughters நாவலை ஆரம்பித்தபோது அவரது மனதில் கீழ்க்கண்டவகையில் சிந்தனை ஓடியிருக்கிறது. நாவலில் இடம்பெறவிருக்கிற  மூன்று பெண்களில் ஒருத்திகூட இவரது குணத்தின் அடிப்படையில் உருவாக்கப்படபோவதில்லை என்கிறபோதும், தம் ஒருத்தியால் மூன்று பேர் இடத்தையும் இட்டு நிரப்பமுடியுமென தோன்றியிருக்கிறது. முதலில் நாவலில் தாயாக வருகிற ‘நெல்’ (Nell) என்ற பாத்திரத்தின் விதவை என்ற அடையாளமோ, இரண்டு பெண்களுக்கு அன்னையென்ற குடும்பத் தகுதியோ, அவளுக்கு வயது 63 ஆக இருக்கலாமென தீர்மானித்ததோ ஆகிய எதுவுமே கேல் காட்வினோடு தொடர்பு உடையதல்ல, பதிலாகச் சுதந்திரத்தின் பெயரால் தனிமை நம்மை அநாதையாக்கிவிடுமென்ற உண்மையை இவரைப்போலவே நாவலில் இடம்பெறும் வயதானப்பெண்மணியும் தெரிந்துவைத்திருப்பவளென்று  எழுத்தாளரால் காட்டமுடிந்தது. நாவலில் வரும் இரண்டாவது பாத்திரம் கேட், பெண்மணியின் மூத்த மகள். ஒரு கலகக்காரி, மரபுகளுக்கு எதிரானவள். வாழ்க்கையில் சிற்சில சமயங்களில்  இவரும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறாராம், அக்குணத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவும் விரிவுபடுத்தியும் சொல்லநினக்க, கேட் பெண்பாத்திரம் உருவாயிற்று என்கிறார். நாவலில் வரும் மூன்றாவது பெண்ணும் அவ்வாறே உருவானதுதானாம். ஆக எந்தவொரு பாத்திரத்திலும் நம்மை நுழைத்து அப்பாத்திரத்தின் வழியில் சிந்தித்து செயல்பட கதைமாந்தர்கள் உயிர்ப்பித்துவிடுகிறார்கள்.

இனி கதையின் துணைமாந்தர்கள், படைப்பிற்குள் எப்படி நுழைகிறார்கள்?  உதாரணமாக கதையில் வரும் மூத்த பெண் கேட் என்பவள் எதிலும் முரண்பட்டவள், அவளொரு ஆணைச் சந்திக்கவேண்டும். சண்டைபிடிக்கும் குணத்தவளான கேட்டிற்கு இருவகையான ஆண்களைப் படைக்கலாம். கேல் காட்வின் தீர்மானித்தது அவளைச் சீண்டக்கூடிய ஆணை. அதிகம் பணம்படைத்த மனிதர்களை அவள் நம்புவதில்லை என்பதால், ஆணை ஒரு கோடீஸ்வரனாகப்படைக்கிறார். அவன் எப்படி கோடீஸ்வரனானான்? அவளுக்குப் பிடிக்காத இரசாயண பூச்சிக்கொல்லி வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவனாக அவனை மாற்றுகிறார். தமது தொழிலை நியாயப்படுத்த அவனுக்கும் காரணங்கள் இருக்கின்றன. கதையில் வரும் கேட் என்பவளுக்குமட்டுமல்ல பொதுவாக நம்பகத்தனமைக்கொண்ட கதைமாந்தர்களை உருவாக்கவேண்டும். அப்பாத்திரம் என்ன பேசினால் எப்படி நடந்துகொண்டால் அதன் பண்பிற்கு நம்பகத்தனமையை ஏற்படுத்தித்தரமுடியுமென சிந்திக்கவேண்டுமாம்.

பாத்திரங்களின் தேர்வும், மொழியும்:

1 பாத்திரங்களின் தோற்றம்: பூனைக்கண்கள், சுருட்டைமுடி, அரும்புமீசை என்று எழுதிக்கொண்டிராமல்  அவர்கள் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கிற உடல்மொழி சமிக்கைகளில் கவனம் செலுத்துவதென்பது முதலாவது.

2. பிறரைச் சந்திக்கிறபோதும், உரையாடுகிறபோதும் கதை மாந்தரின் மன நிலை, அவர்கள் கவனம் மற்றும் கவனமின்மை -இரண்டாவது

3. பாத்திரங்களின் உரையாடல் எப்படி அமையவேண்டும்: வளவளவென்று பேசுவதா? உளறுவதா? சுருக்கமாகவா? திணிக்கின்ற வகையிலா? – என்பது மூன்றாவது.

4. பேச்சும் பேச்சின் தொனியும்: கட்டளை, கிண்டல், வருத்தம்?  என எழுத்தில் நுண்ணுணர்வைப் பாய்ச்சுவது நான்காவதாகச் செய்யவேண்டியது

கதைமாந்தர்களையும், துணமாந்தர்களையும் அவர்களுடனான உறவுகளையும் தீர்மானிக்கமுடிந்தால் கதைசொல்லலில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். இனி மிச்சமுள்ள கிணறைத்தாண்ட நாம் செய்யவேண்டியது பாத்திரங்கள்தோறும் கூடுபாய்ந்து கதைமாந்தருடைய தனித்த அடையாளத்தை இறுதிவரைக் கட்டிக்காப்பது.

———————————————–

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

 1. Domaine de Courson

நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் உத்தரவாதம் சொல்லலாம். இயற்கையின் எல்லா கோலத்தையும் காணலாம். பர்வதத்திற்குப் பதிலாக, பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த நன்கு பராமரிக்கப்பட்டுவருகிற கோட்டை. வெர்சாய் மாளிகை¨க்கும் அதனை ஒட்டிய பூங்காவிற்கும் நீங்கள் இரசிகரென்றால், நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் (19-21 தேதிகளில்) நடைபெறும் தாவரஇயற் கண்காட்சியில் ஐரோப்பாகண்டத்தைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த தோட்டக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வருடத்திய நிகழ்ச்சி நிரலில் எனது பிரத்தியேக கவனம் பெற்ற செய்தி ·பபியன் டுஷெ (Fabien Ducher) என்ற தோட்டக் கலைஞர் தாம் உருவாக்கிய மஞ்சளும் ஊதாவுமான புதிய ரோஜாமலரொன்றுக்கு பிரான்சு நாட்டின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான பெனுவாத் க்ரூ (Benoச்te Groult) பெயரைச் சூட்டுகிறார்.

2. பெனுவாத் க்ரூ (Benoîte Groult)

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டிய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி. நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. Picasso, Picabia, Jouhandeau, Paul Morand போன்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம். தாயாரின் வழிகாட்டுதலில் இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம். பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன், கிரேக்கம் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலுக்கு வருகிறார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை ஏற்படுத்தவென்று மொழியியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவல் JOURNAL A QUATRE MAINS 1958ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற LA PART DES CHOSES, ‘AINSI SOIT ELLE என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியை அளித்தன. LES TROIS QUARTS DU TEMPS, LES VAISSEAUX DU COEUR முக்கிய நாவல்கள்.

பெனுவாத் வாழ்க்கையும் எழுத்தும், இற்றை நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்துவதல்ல. ஆணுக்கு நிகரென்று பெண்ணைச் சொல்கிறார். எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்கிறார்: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம் என ஓயாமல் எழுதுகிறார். தற்போது அதற்கான வயதில் (92) – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இவரது ‘நட்சத்திர தீண்டல்’ நாவலில்  ‘மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டும் என்றார். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிசத்திற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது வாதம். சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது.

3. பிலிப் ரோத்

பிலிப் ரோத்த்திற்கும் விக்கி பீடியாவிற்குமான யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர்மாதம் 7ம் தேதி நியுயார்க்கர் இதழில் விக்கிபீடியாவிற்கு பிலிப் ரோத் திறந்த மடலொன்றை எழுதவேண்டியிருந்தது. http://www.newyorker.com/online/blogs/books/2012/09/an-open-letter-to-wikipedia.html – விக்கிபீடியாவுடன் தனிப்பட்ட அளவில் தாம் எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட பிறகு வெளியுலகம் அறியவந்தால் தமக்கு வேண்டுகோளுக்கு நியாயம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் விக்கிபீடியாவிற்கு எழுதிய பகிரங்க கடிதமது. தம்மைப்பற்றி என்னதான் விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒருநாள் நமது எழுத்தாளர் எட்டிபார்த்திருக்கிறார். பிறந்ததேதி, பெற்றோர்கள், பூர்வீகம், படிப்பு, பார்த்த உத்தியோகம், கைப்பிடித்த பெண்கள், எழுதிய நூல்கள், எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரங்களின் குலம் கோத்திரம்- முக்காலே மூணு வீசம் எல்லாம் சரி- என எழுந்திருக்கையில் ஏதோவொன்று கண்ணிற்பட்டிருக்கிறது, மனிதர் கொதித்துப்போய்விட்டார். எப்படி அபாண்டமாக தீர விசாரிக்காமல் அதை எழுதப்போயிற்று? என்ற கேள்வி. அவரைக் கோபமூட்டும் அளவிற்கு விக்கிபீடியாவில் வந்திருந்த தகவல் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவரது ‘The human stain’ நாவல் பற்றிய தகவலது. “நாவலில் வரும் கதைநாயகன் பேராசிரியர் சில்க், உண்மையில் ‘அனத்தோல் ப்ரொயார்'(Anatole Broyard) என்றும், அவரது வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டே நாவல் எழுதப்பட்டதென்றும்  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (தலவற்)களஞ்சியத்தில் நெல் மணிகளோடு, பதர்நெல்லும் கலந்திருக்க வாய்ப்புண்டென எழுத்தாளர் அறியாததது குற்றமல்ல; பதரை நெல்லென்று வாதித்த விக்கிபீடியாவின் பிடிவாதம் அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது. விக்கிபீடியாவை உடனே தொடர்புகொண்டிருக்கிறார். ‘நீங்கள் தெரிவித்துள்ள தகவல் அபத்தம், அதை உடனடியாக நீக்கவேண்டும் அல்லது திருத்தம் செய்யவேண்டும்’ என்றிருக்கிறார்.

விக்கிபீடியா தகவலுக்கு ரிஷிமூலம்: ‘The human Stain’ நூலை விமரிசனம் செய்த நியுயார்க் டைம்ஸ் இதழியலாளர், நாவலில் வரும் பேராசிரியர் சில்க் ஐயும், அக்கதையில் அவர் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாத ‘ஆப்ரோ- அமெரிக்கர்’ என்ற உண்மையும் மறைந்த அமெரிக்க எழுத்தாளர் அனத்தோல்ப்ரொயார் என்பவரோடு தொடர்புடையன என்றொரு ஒரு முடிச்சைப் போட்டிருந்தார். இதன் அடிப்படையிலே விக்கிபீடியாவும் தகவலைச் சேர்த்திருக்கிறது. இத்தகவல் பொய்யானது என்ற ரோத் உடைய வாதத்தை விக்கிமீடியா நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய பதில் “உங்கள் தகவல் நம்பகமானதல்ல” பிலிப் ரோத் தமது திறந்த மடலில் பிரச்சினையை நமக்கு விரிவாகவே சொல்கிறார். எழுத்தாளர் அனத்தோல் ப்ரொய்யாரை இரண்டு மூன்றுதடவை சந்தித்ததை ஒப்புக்கொள்ளும் ரோத், நூலை எழுதியபோது தமது கதைநாயகன் சில்கிற்கும் எழுத்தாளர் அனத்தோலுக்கும் உள்ள ஒன்றிரண்டு ஒற்றுமைகளைத் தெரியாதென மறுக்கிறார்.

‘ரோத்’ஐ பொறுத்தவரை, சில்க் பாத்திரம் அவரது நெருங்கிய நண்பர் மெல்வின் டுமன் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது. சில்க்கைப்போலவே கல்லூரியில்  வகுப்புக்கு வராத இரு மாணவர்களை ‘Spooks’ (அவர்கள் கறுப்பரினத்தவர் என்ற உண்மை அறியாமலேயே) என்று சொல்லப்போக, நிறவெறியில் உதிர்த்த வார்த்தை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி எதிர்ப்பு வலுக்க கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மெல்வின் டுமனை பணி நீக்கம் செய்ததாகவும், நண்பர் நிறத்தில் வெள்ளைத்தோல் கொண்டவரென்றபோதும்  உண்மையில் ஒரு ஆப்ரோ- அமெரிக்கரென்றும், அவரதுவாழ்க்கை நெருக்கடிகளே நாவலில் சொல்லப்பட்டதென்கிறார், ரோத்.

நமக்கும் எழுத்தாளர் வாதத்தை ஏற்காத விக்கிபீடியாவின் பிடிவாதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. நான் இப்படித்தான் எழுதினேன் எனச் சொல்கிற எழுத்தாளரை நம்பாமல் ( பிள்ளைக்குத் தகப்பன் யாரென்று பெற்றவளையன்றி வேறொருவர் சொல்லமுடியுமாவென தெரியவில்லை) , ‘அவர் அப்படி எழுதியிருக்கலாம்’ என்கிற ஒரு விமரிசகரின் ஊகத்தை நம்பும் விக்கிபீடியாவின் தகவல்களை சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. The human Stain நாவல் பற்றிய பக்கத்தில் விக்கிபீடியா தற்போது எழுத்தாளர் மறுப்பையும் பதிவுசெய்திருக்கிறது.

———————————–

எழுத்தாளன் முகவரி -5: ‘அங்கே இருப்பது’

கிராம் மாஸ்ட்டன்(Graham Masterton) திகில் கதை மன்னன். நாஞ்சில் பி.டி சாமி, மேதாவி ஆகியோர் தமிழில் பேய்க்கதை எழுதிக் குவித்த காலமொன்றுண்டு. இப்போதும் அப்படியொரு பரம்பரை தமிழில் தொடர்கிறதாவென்று தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் அவை நடக்கின்றன. இத்துறையில் ஆங்கிலமே இன்றளவும் முன்னணியில் இருக்கிறது.

இளமைக்காலத்தில் குற்ற புனைவுகளையும், திகில் புனைவுகளையும் விரும்பி படித்திருக்கிறேன். அவ்வகையான திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வகை எழுத்துகள், திரைப்படங்களைப் பேசுகிறபோது வெகுசன ரசனைக்குரியவை என்பதுபோன்ற கருத்தியங்கள் நிரந்தரமாக உள்ளன அதில் உண்மை இல்லாமலில்லை.

மனிதன் ஒரு பழகிய விலங்கு. மூர்க்கமும், மெலியாரைத் தாக்கும் குணமும் நம்மிடம் நிரந்தரமாக இருக்கின்றன. அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பவை கல்வி அறிவும், சமூகச் சூழலும்.  மூர்க்கத்தோடு இணைந்த செய்திகளிலும், வன்முறையைத் தர்கிக்கும் வாழ்வியல் சம்பவங்களிலும் நமக்குள்ள ஆர்வத்திற்கு, நம்முடைய இயற்கை குணத்துடன் அவற்றுக்குள்ள ஒட்டும் உறவுமே காரணங்கள்.

இணையதளங்கள் கிராம் மாஸ்ட்டனை சிறுகதைகள், வரலாற்று புனைவுகள், பாலியல்கட்டுரைகள், கதைகளென எழுதிக்குவித்து படைப்பின் எல்லா கூறுகளையும் தெரிந்துவைத்திருப்பவர் என்கின்றன. அவர் இலக்கியவாதியா இல்லையா என்ற விவாதத்தை ஒதுக்கிவிட்டு, வெற்றிகரமான ஊரறிந்த உலகறிந்த எழுத்தாளரென்பதை மறுக்காமல் ஏற்கவேண்டும். அவரது நாவலை அடிப்படையாகக்கொண்டதொரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன், மற்றபடி அவரது நாவலெதையும் வாசித்ததில்லை. ஆயினும் வெற்றிகரமான எழுத்தாளனாவதற்கு அவர் முன்வைத்த  ‘Being there’ முத்திரை சொல் மிகவும் அந்தரங்கமாக என்னுடன் பழகிவந்திருக்கிறது.

“விவரணை நுட்பம் குறித்த ஞானமென்று ஏதேனும் என்னிடம் இருக்குமெனில் அது ‘Being there’ ஆகத்தான் இருக்க முடியும்”, என்கிறார் கிராம் மாஸ்ட்டன். தொடர்ந்து, “நாவலெழுதுவதற்கு தட்டச்சுமுன் எப்பொழுது உட்கார்ந்தாலும் மனக்கண்ணில் தட்டச்சு, மறைந்து கானல் நீர் நிரம்பும், அதில் நிலமும், நீரும், ஓசையும், வாசனையும் மக்களும் தோற்றம் பெறுவார்கள். கற்பனை உலகில் உலாவரத் தொடங்குவேன்,  கற்பனைத் தெருக்களில் எச்சரிக்கையுடன் காலெடுத்து வைப்பேன், எதிர்ப்படும் அசலான மனிதர்களுடன் உரையாடுவதைப்போலவே எனது கற்பனை பாத்திரங்களுடனும் உரையாடச் செய்வேன்.

‘எழுதுவது’ என்பதை வாக்கியம், இலக்கணம்  சொற்கள் ஆகியவற்றில் கவனமாக இருப்பதென்ற முறையில் பார்க்காது சாதாரணமாக எதைப்பார்க்கிறேனோ, காதில் எது விழுகிறதோ, காற்றில் என்ன மணக்கிறதோ, என்னை எதுத் தொடுகிறதோ அதை எழுதுகிறேன். அதனால்தான் எனது புதினங்களில் அதிகமாக உரையாடல்களைப் பார்க்கிறீர்கள்” -என்கிறார். தொடர்ந்து, ஓவியம் அல்லது புகைப்படம் ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கான உத்வேகத்தை எனக்குத் தருகிறது எனும் கிராம் மாஸ்ட்டன், H.A.W Tabor என்ற அமெரிக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு Silver என்ற சரித்திர நாவலை எழுதிமுடிக்க, அந்த அமெரிக்கர் மனைவியின் புகைப்படத்தை காணநேர்ந்ததே மூல காரணமென்கிறார். புகைப்படத்தில் பெண்மணி உடுத்தியிருந்த ஆடையும், அம்முகத்திலிருந்த சோகமும், கருமையான கண்களும் நாவலை எழுத அவருக்கு உதவிற்றாம்.

“விருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற காளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ஆடி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.”

வண்ணதாசனுடைய  ‘போய்க்கொண்டிருப்பவள்’ என்ற சிறுகதையையில் வரும் விவரணை இது. கிராம் மாஸ்ட்டனுடைய முத்திரை சொல்லான ‘அங்கே இருப்பது'(Being there) என்ற அனுபவமின்றி வண்ணதாசனுக்கு இவ்விவரணைச் சாத்தியமில்லை. விருத்தாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் கதை சொல்லியின் மனநிலையை அவதானியுங்கள்.

கிராம் மாஸ்ட்டன் நாவலொன்றை தொடங்குகிறபோது, எழுதும் காட்சியில் தமதிருப்பை நிறுத்திக்கொள்ளும் போக்கும், ஒரு நாவலுக்கு புகைப்படமோ அல்லது  ஓவியமோ தூண்டுகோலாக அமையுமுடியுமென்ற அவரது வாக்கியங்களையும் படிக்கிறபோது வண்ணதாசன், வண்ண நிலவன் போன்றவர்களின் எழுத்துக்கள் பிரத்தியேகமாக நம்மை வசீகரிப்பதற்கான காரணங்களை விளங்கிக் கொள்கிறோம்.

ஒரு காட்சியைத் விவரிக்கும் முன்பாக, அக்காட்சிக்கு முன்னால் நம்மையும் நிறுத்திக்கொள்வது அவசியமாகிறது. இடம்பெறும் பொருளும், தளவாடங்களும், மனிதர்களும், விலங்குகளும், அசைவும் வாசமும், உரையாடலும், உபயோகிப்படும் ஒவ்வொரு சொல்லும், பார்வையும் தீண்டலும் நம்மோடு நிகழ்த்தப்படுகிறது என்ற உணர்வு அவசியம்.  கதைநிகழ்வில் உங்கள் இருப்பு உறுதிசெய்யப்படாதவரை உருப்படியான கதை சொல்லலுக்கு சாத்தியமில்லை.

நமதிருப்பை கதைசொல்லலில் உறுதிசெய்வதில்  வேறுபல நன்மைகளும் இருக்கின்றன: கதைசொல்லல் எளிமையாக நிகழ்கிறது. முடிச்சுகள் சிக்கல்கள் விழுவதில்லை. ஒரு காட்சியை நேரில் கண்டவர் விவரிப்பதற்கும், பிறர் சொல்ல கேட்டேன் எனச்சொல்பவருக்குமுள்ள பேதங்களை கவனித்திருக்கிறீர்களா? முன்னவர் தங்குதடையின்றி சரளமாக விவரிக்கத் தொடங்குவார். பின்னவர் எதை எங்கே தொடங்குவதென்று குழம்பலாம், கோர்வையாகச் சொல்லவராமல் தடுமாறலாம். இதை நாம் வாசிக்கிற நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறியவரலாம். எழுத்தில் எளிமையும், பாசாங்கற்ற வெளிப்படையும் வேண்டுமெனில் நாவல் சொல்லப்படும் தளங்களுக்குள் எழுத்தாளன்இருப்பு கட்டாயமாகிறது: மனிதனாக விலங்காக; பெண்ணாக, ஆணாக; தாவரமாக, எந்திரமாக, காற்றாக, தூசாக மொத்தத்தில் எல்லாமுமாக கூடுவிட்டு கூடுபாய்தல் அவசியம், தேவை, கட்டாயம்.

———————————–

எழுத்தாளன் முகவரி-3

எழுத்தும் செயல்திறனும்

ஓர் எழுத்தாளர் ஓயாமல் இயங்குவதில் சங்கடங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளர் பலரும் செயல் திறனுடன் இருப்பார்களென்பது கட்டாயமில்லை. ஐசக் அசிமோவ் ரஷ்யராகப்பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். எழுதிக்குவித்த எழுத்தாளர்களென்று ஒரு வரிசையை உருவாக்குவோமெனில், ஐசக் அசிமோவிற்கு கட்டாயம் அதிலிடமுண்டு.

நன்றாக எழுதுவதென்பதுவேறு, வேகமாக எழுதிமுடிப்பதென்பது வேறு. இரண்டும் இணைவதென்பது அரிதாகவே நிகழ்கிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். நன்றாக எழுதவேண்டுமென்று நினைக்கிறபொழுது, அதிக நேரத்தைச் செலவிட்டாக வேண்டிய கட்டாயம். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர் ஒரு நாவலை முடிக்க குறைந்தது ஒருவருடமென்ற கணக்கில் இயங்குகிறார்கள். பிறதுறைகளைப்போலவே படைப்பிலக்கியத்திற்கும் பொதுவாக காலம், நேர்விகித்தில் உதவுகிறது. செலவிடும் நேரம் கூடுதலாக இருப்பின் படைப்பின் தரமும் நன்றாகவே அமையும். எங்கேயேனும் பிழைகள் நிகழலாம்.

படைப்பாற்றல் அல்லது ஒரு படைப்பாளியின் செயல் திறன் என்பதென்ன? பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா? போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை  தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’  என்று ஓரினம் இருக்கிறதா என்ன? .

1. எழுத உட்காரவேண்டுமென்ற விருப்பம்.

எழுத்தை நேசிப்பதாலும், அதிக வாசிப்பாலும் நூற்றில் ஐந்துவிழுக்காட்டினருக்கு எழுத்தின்மீது உருவாகும் பற்றுதல் முதலாவது. இவ்விருப்பம் இல்லையெனில் எழுதிக்குவிக்க சாத்தியமில்லை. உங்களுக்கான கதவு அடைபட்டுவிட்டதென்று பொருள்.  எந்த ஒன்றுக்கும் முதற்தேவை விருப்பம், அதுவன்றி எதுவும் அசையாது. படைப்புத் திறனுக்கும் அதுவே முதற்படி. ஐசக் அசிமோவ் கருத்தின்படி விருப்பமென்பது உந்துதலோ, மிகப்பெரிய கனவோ அல்ல. எழுத்தில் அக்கறைகொள்ள அல்லது எழுத உட்கார கனவும் உந்துதலும் அவர்வரையில் அத்தியாவசியமுமல்ல. எழுதவேண்டுமென்று நினைக்கிற நம்மில் பலரும் உந்துதலன்றி வேறு காரணங்களை முன்னிட்டு இத்துறையை தேர்வுசெய்திருக்க சாத்தியமில்லை. ஆனால் அந்த உந்துதலுக்கும், உங்கள் கற்பனை அல்லது சிந்தனை புத்தகமாக உருப்பெறுவதற்குமிடையில் ஆற்றவேண்டிய வினைகளுள்ளன. அவ்வினைகள் வெள்ளை காகிதத்தையும் எழுதுகோலையும் இணைக்கும் பணியாக இருக்கலாம், கணினியின் விசைப்பலகையைத் தொட்டு கற்பனை வடிவத்தை வார்த்தைகளில் உருமாற்றம் செய்வதாகவும் இருக்கலாம். வினையை விருப்பமின்றி, ஆர்வமில்லாது நிறைவேற்றுபவராக இருப்பின்; கதைசொல்லலில் உங்களுக்குள்ள அபார ஞானம் எத்தகைய பயன்பாட்டையும் அல்லது முன்னேற்றத்தையும் உங்கள் எழுத்தில் சேர்த்திடாது.

2. எழுதுவதைத்தவிர வேறெதையும் தேடுவதில்லை என்ற பிடிவாதம்

” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்/ கண்ணன்எம் பெருமான் என்றென்றே” என்பது திருவாய்மொழி. எழுத்தாளனுக்கும் எழுதுவதன்றி, பிறவற்றை நேசிப்பதில்லை என்ற பக்தியை எழுத்தின்மீது செலுத்த வேண்டியவராக இருக்கவேண்டும். எழுத்தாளனும் பிற மனிதர்களைப்போலவே எண்ணற்ற ஆசைகளால் இழுபடுகிறவன். இந்த இழுபறியிலும் எழுத்தை தேர்வுசெய்து இறுகப்பற்றி பக்தி செலுத்துவதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் எழுதிக்குவிக்கவும் நமக்கு முடியும். எழுதுவதன்றி வேறொன்றை விரும்புவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைத் திடப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. எழுத உட்காருகிறீர்கள், அச்சமயம். இயற்கையின் எல்லாகுணாம்சமும் இணைந்து,  ‘வாழ்க்கையில் இதைக்காட்டிலும் சுவாரஸ்யமானவை வேறு இருக்கின்றன, ‘எழுந்திரு’, என்கிறது. அதற்கென்ன நாளைக்கு உட்கார்ந்து எழுதுகிறேன்’, என நீங்கள் பதில் கூறிக்கொள்கிறீர்கள். அப்போதே செயல் திறனுள்ள எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நமது கனவு இடிந்து நொறுங்குகிறது.

3. சொந்த உழைப்பின் மீதான நம்பிக்கை.

உங்கள் எழுத்து இப்போதெல்லாம் உங்களை திருப்திபடுத்துவதில்லை. ஒரு முறைக்கு இருமுறை என்று ஆரம்பித்த பழக்கம் பத்து பன்னிரண்டுமுறை வளர்ந்திருக்கிறது. எழுத்தைத் திருத்துகிறீர்கள். ‘நான் அவனிடம் பேசினேன்’ என்ற வாக்கியத்தில் ‘நான்’ என்ற எழுவாயை அதிகப்பிரசங்கித்தனமாக உணருகிறீர்கள். ‘அவனிடம் பேசினேன்’ என்று மாற்றினாலும் சொல்ல வந்தது சொல்லப்படுகிறது என நினைக்கிறீர்கள் முன் வாக்கியத்திலும் ‘பேசினேன்’ என்று வருகிறது, எனவே அடுத்த வாக்கியத்தை ‘அவனிடம் உரைத்தேன்’ என மாற்றி, அமைக்கிறீர்கள். இப்படி அடித்து, திருத்தி சொற்கள், வாக்கியம், பத்தி பின்னர் மொத்த நூலையும் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அமைத்து … அவ்வாறு செய்தாலன்றி அமைதியாக தொடர்ந்து எழுத முடியாதெனில் இத்திருத்தமும், மாற்றமும் தேவை. சில நேரங்களில் முதலில் எழுதப்பட்ட வரியே மீண்டும் வந்தமரலாம். இருந்தாலும் மாற்றத்தை செய்தே ஆகவேண்டுமென்கிறார் ஐசக் அசிமோவ். இந்த வாக்கியத்தை இப்படியே அனுப்பினாலென்ன? இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள்? ‘லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும் என்று பதிப்பாளரும், பணம் கொடுத்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தி நம்மைப்புகழ்வதற்கு நான்கு பேரை திரட்டமுடியுமென்ற எண்ணமும் எழுத்தாளருக்கும் வருகிறபோது இதுபோன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் பெரிய எழுத்தாளனாகவரவேண்டுமென்ற கனவுகாண்போருக்கு இச்செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

4. நேரம்…நேரம்…நேரம்.

ஐசக் அசிமோவ் நான்காவதாக அறிவுறுத்துவது நம்மில் பலரும் அறிந்த விஷயத்தை அதாவது: காலம் பொன்போன்றது- கறந்தபால் முலைக்குத் திரும்பாதது என்பதுபோல கழிந்த விநாடியை திரும்ப ஈட்ட முடியாது. அசிமோவ் கூறுகிறார்: உலகில் பல இழப்புகளை ஈடு செய்யலாம். நேரத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது இருபது வயதில் ஒருவனுக்குக்கிடைக்கும் ‘ஒரு நிமிடத்திற்கும்’ அறுபது வயதில் அவனுக்கு கிடைக்கும் ‘ஒருநிமிடத்திற்கும்’ வேற்பாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்கு அமையும் நிமிடம் அவனைப்போலவே ஆரோக்கியமானது, ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் ஒருவனுக்கு அமையும் நிமிடம்: தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சுவாங்கும், பலருக்கு அது பல்போன நிமிடமாகக்கூட இருக்கலாம். செயல் திறன்மிக்க எழுத்தாளனுக்கு நேரத்தை மிச்சப்படுத்த அனேகவழிகளிருக்கின்றன. அது அவரவர் திறன் சார்ந்தது. சிலர் கதவை அடைத்துக்கொள்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் கூட பார்ப்பதில்லை என்கிறார்கள். ஐசக் அசிமோவ் பணியாளர், செயலாளர், முகவர் என எவரையும் அவர் நியமித்ததுகொண்டதில்லையாம். தனது காரியங்களை தானே பார்த்துக்கொண்டதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததென்கிறார். இது அவரவர் தேவையையும் சூழலையும் பொறுத்தது.

செயல் திறன்கொண்ட எழுத்தாளராக  வரவேண்டுமா? மனத்தை அலையவிடாதீர்கள், ஓயாமல் செயல்படுங்கள்.

————————————-

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’

The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.

1. Nightwood – Djuna Barnes.
2. A tale of a Tub – Jonathan swift
3. The Phenomenology of the sprit -G.F. Hegel
4. to The light house -Virginia Woolf
5. Clarissa, or the History of a Younglady – Samuel Richardson
6. Finnegans Wke – James Joyce

7. Being and Time Martin Heidegger
8. The Faerie Queen – Edmund Spenser
9. The Making of Americans -Gertrude Stein
10.Women and Men -joseph McElroy

இப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.

பிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு  நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:

இந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள்  நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.

இறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:

உங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.

http://www.publishersweekly.com/pw/by-topic/book-news/tip-sheet/article/53409-the-top-10-most-difficult-books.html

—————————

2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.

இரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா? எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை  கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோது கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.

உலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள்,  எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை(?) மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ?

ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலாது. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம்.  நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.

1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும்.  தங்கம் நிச்சயம் உண்டு

2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.

3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.

4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம்  விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.

5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.

————————————————-

எழுத்தாளனென்ற முகவரி -1:

கற்பனை வளர்தல்வேண்டும்

கவிநயம் பிறப்பில்வேண்டும்

சொற்பொருள் அறிவும் வேண்டும்

சுவைபட உரைத்தல் வேண்டும்.

– கண்ணதாசன்

“A Poet who could only sit on chair and write verses would never write any verses worth reading” -Thomas Carlyle

சிறந்த எழுத்தாளனாக வருவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? எழுத்தாளர்களென்று ஒரு சிலரைமட்டுமே இந்த உலகம் அறிந்திருக்கிறது, எதனால்? ஏன்? அண்மையில் உள்ளூர் நூலகமொன்றில் பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்களின் தொகுப்பை வாசித்தேன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அநேகமாக  உங்களில் சிலருக்கு உதவலாம்.

 கடின உழைப்பும் – எழுதவேண்டுமென்ற விருப்பமும்

தேடிவந்த இளம் எழுத்தாளர் ஒருவருக்கு செக்கோவ் கூறிய யோசனை.”இரவுபகல் பாராது தொடர்ந்து எழுது, படி; இரண்டையும் ஒரு வெறியொடு செய்”. இளைஞர், தனது குருவின் வார்த்தைகளை செயல்படுத்தினாரா, வெற்றிபெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. பல நேரங்களில் உபதேசங்களைக் கேட்பதோடு சரி, நாம் பின்பற்றுவதில்லை. அவற்றைச் செயல்படுத்துவதற்கும் செக்கோவ் கூறியதுபோல விருப்பம் வேண்டும். ‘எனக்கு எழுதவேண்டுமென்று ஆசை’ ஆனால் நேரமில்லையென பதினைந்து ஆண்டுகளாக நண்பரொருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். வேறு சிலர், தமிழை முறையாகப்படித்திருக்கிறேன், எனக்கு எழுத்து வசப்படாமல் போய்விடுமா என எழுத உட்காருவார்கள், வேர்த்து விறுவிறுத்து அதை முடித்தும் இருப்பார்கள், பலன் என்ன வென்று சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைதான் சொல்லமுடியும். சைவ சமயத்தில் ஸத்காரியவாதம் என்ற சொல் உள்ளது. அதற்கு உள்ளது போகாது, இல்லது வாராது என்பது பொருள். ஆக எழுத்துக்கு உழைப்பு மட்டும் போதாது, உழைப்பு அல்லாத ஒரு ஜீன் தேவைப்படுகிறது.

இரவுபகலென்று பாராமல் உழைக்கவேண்டுமென செக்கோவ் கொடுத்த யோசனை கடின உழைப்பின் தேவையை வற்புறுத்துகிறது. ஒரு வெற்றிக்கு கடின உழைப்பு தேவைதான். மாதத்தில் நிலையாக ஒரு வருமானம் இருந்தால் போதுமென்று நினைப்பவன் அவனுக்கு விதிக்கப்பட்ட நேரம்வரை உழைக்கிறான். கூடுதலாக இரண்டு மணி நேரம் உழைத்தால் அக்கூடுதல் பணமாக அவனுடைய வங்கிக்கனக்கில் உருமாற்றம் பெறுகிறது. கடின உழைப்பு அவன் எதிர்பார்க்கிற பணத்தைக்கொடுக்கிறபோது திருப்தியுறுகிறான்.

ரூமெர் காடென் (Rumer Gooden) என்ற பெண்மணியை நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் வாழ்ந்த சிறந்த எழுத்தாளர்.   புனைவுகள், அபுனைவுகளென்று எழுதிக் குவித்தவர். செக்கோவ் ஓர் எழுத்தாளனுக்குத் தேவையென வற்புறுத்துகிற கடின உழைப்பு ரூமர் காடோனை பொறுத்தவரை எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையும், நோக்கத்தில் உறுதியும், அதை முடித்தே தீருவதென்ற சிந்தையும்’ ஆகும். கடினமாக உழைப்பது பிற காரியங்களுக்கு உதவலாம். ஒரு கலைஞனுக்கு உதவுமா? பற்றுதலின்றி  மாடுபோல உழைக்க படைப்பாளிக்கு ஆகுமா? எந்தத் துறையிலும் வெற்றியென்பது பக்தியுடன் அளிக்கும் உழைப்பினாற் கிடைப்பது. எழுத்தை படைப்பாக மாற்ற, மிகக்கூடிய பற்றுதலும் ஆர்வமும்  தேவைபடுகிறது.

ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடின உழைப்பு,  என்வரையில் கீழ்க்கண்டவகையில் தொடங்குகிறது:

– முதலில் நாம் பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை, உள்வாங்கிக்கொண்டதை பிறறிடம் சொல்ல கற்றிருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அமைதியாக இருக்கிறபோது யோசித்துபார்ப்பது நல்லது, எழுதி வரிசைபடுத்துவது அதைவிட நல்லது. உங்கள் கற்பனைகளை கலக்காமல் உண்மையைமட்டும் பிற நண்பர்களிடம் முழுமையாகச் சொல்ல முடிகிறதா என முயன்றுபாருங்கள். எவையேனும் விடுபட்டிருந்தால் சொல்லலில் அவை விடுபட்டதற்கான காரணங்களை யோசியுங்கள்.

நீங்கள் நடந்ததனைத்தையும் அல்லது சொல்லவந்தது முழுவதையும் ஒருவரிடம் தெரிவித்திருந்தும் அவர் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை என்பதற்கான மூலத்தையும் கண்டுபிடியுங்கள். அதற்கு அவர் காரணமா நீங்கள் காரணமா எனத் தீர்மானியுங்கள், நீங்கள் காரணமெனில் எப்படிக்கூறினால் அவர் புரிந்துகொள்வார் என யோசியுங்கள்.சொல்லலை எழுத்தில் வடிக்கிறபோது வேறு கவனங்கள் தேவை. ஒரு சமையல் செய்முறையை நடமுறைபடுத்துவதுபோல. அது அவர்போலவோ இவர்போலவோ என்பதைத் தவிர்த்து உங்கள் எழுத்து என்பதை நிறுவும் முயற்சி. உலகில் எத்தனை மில்லியன் மனிதர்கள், எனினும் ஒருவரைப்போல மற்றொருவர் நூறு விழுக்காடு ஒற்றுமையுடன் உருவத்தில், குணத்தில் இருக்க வாய்ப்பே இல்லை மயிரிழை வேறுபாடேனும் இருக்கத்தான் செய்யும் அந்தப்பேனை பெருமாளாக்க முடிந்தால் உங்களுக்குள் எழுத்தாளர் இருக்கிறார்.

ரெபெக்கா வெஸ்ட் ஒவ்வொரு முறையும் எழுதத் தொடங்குகிறபோது எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டுபோவதென்பதை யோசிப்பதற்கே பல மணி நேரங்கள் செலவிடுவாராம்; நாவலுக்கான அத்தியாயமொன்றை  ஒரு முறை இருபத்தாறு தடவை சளைக்காமல் எழுதிப்பார்த்திருக்கிறார். பிறரிடமிருந்து நமது எழுத்து நமது குழந்தை வேறுபட்டதென சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு கதையை எழுதவேண்டுமென தீர்மானிக்கிறீர்கள். அக்கதை நடபெறும் இடம் நீங்கள் முன்பின் அறிந்திராத இடம் என வைத்துக்கொள்ளுங்கள் என்ன செய்வீர்கள். ரூமெர் காடென் பின்பற்றும் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளோடு இசைகிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்லவிருக்கிற கதை என்ன என்பதை முதலில் தீர்மானிக்கிறார். “அக்கதையை எந்தப் பின்புலத்தில் சொல்லலாமென முடிவுசெய்வதும், அவ் வாழ்க்கைமுறையை எழுத்தில் கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அடுத்து வருபவை”, என்கிறார். “நிச்சயம் அங்கு ஏற்படும் வெற்றிடங்களை கற்பனைகளால் நிரப்புவது அவசியம் ஏனெனில் எழுதுவது ஆவணமல்ல, புனைவு. எனது பாத்திரங்களை உயிருள்ள பாத்திரங்களென எனது வாசகர்கள் நம்புகிறார்கள்”. என்கிறார். பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களும் அவருக்கு முக்கியமாம். பெயரிடாத கதைமாந்தர்களின் அதன் குணங்களை கட்டமைக்க அவருக்கு ஆவதில்லையாம்.

கதையைத் தீர்மானியுங்கள், கதைமாந்தர்களை தேர்வுசெய்யுங்கள், பெயர்சூட்டுங்கள்; எழுத உட்காருங்கள் பிற எழுத்திடமிருந்து உங்கள் எழுத்து வேறுபடுத்திக்காட்ட எத்தனைமணி நேரம் செலவிடவேண்டியிருந்தாலும், சோர்வுறாதீர்கள்.

(தொடரும்)

மொழிவது சுகம்-ஜூலை 29

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.

மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)

1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

3. அண்மையில் வாசித்த பதிவுகள்

அ. மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது.  இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.

பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.

இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.

http://malaigal.wordpress.com/

ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது.  இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.

நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்

இறைவா!
இருட்டும்  வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!

அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!

வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!

வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்

“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!

ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?

***
http://abedheen.wordpress.com

—————————————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-17

சம்பிரதாயமும் – பாவனைகளும்

Faire le Bise – முத்த பரிமாற்றம்

முத்தபரிமாற்றத்தை விளக்குமுன் பிரெஞ்சில்  உள்ள ‘Tutoient’ என்கிற சொல்லைக்குறித்து சொல்லவேண்டும்.  Tutoient’ என்றால் ஒருமையில் அழைப்பது. இதற்கும் முத்தங்களுக்கும் தொடர்பு உண்டு. தமிழைபோலவே பிரெஞ்சில் ‘நீ'(tu) என்று ஒருமையிலும், நீங்கள்(Vous) என பன்மையிலும் அழைக்கும் வகையில் சொற்கள் உள்ளன.

பொதுவாக தமிழில் முன்னிலை சொற்களில் ஒருமை பன்மை என்ற வேறுபாட்டினை  பெரியவர் சிறியவர் என்ற புரிதலின் அடிப்படையில் உபயோகித்தால் போதும்.

பிரெஞ்சில் அப்படியில்லை. உதாரணமாக Tu (‘நீ’)யென்று யாரை அழைக்கலாம் பாருங்கள்:

– நண்பர்கள்.
– உடன் பணியாற்றுகிறவர்கள்
– உறவினர்கள்.
– குழந்தைகள்.
– செல்லப்பிராணிகள்.

நன்கு கவனியுங்கள் மேற்கண்ட தகுதிமட்டுமே அடிப்படை. வயதோ, கல்வியோ, சமூக அந்தஸ்தோ, ஆண் பெண்பேதமோ பொருட்டல்ல. ஆக மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையுங்கூட ‘நீ’ போட்டு அழைக்கலாம்..

‘Vous’ (நீங்கள்) என யாரை அழைக்கவேண்டும்:

– நன்கு பரிச்சயமில்லாத ஒருவர்
– உறவினரல்லாத வயதான மனிதர்
– அதிகாரி, சமூகத்தில் உயர்ந்த மனிதர்
– உண்மையில் மரியாதை செலுத்த வேண்டுமென நினைக்கிற நபர். (இது மிகவும் அரிதாக நடக்கிற விஷயம்)

ஒரு தொலைகாட்சி நேர்காணல் நிகட்சியின்போது, பிரான்சு அதிபரை நீங்கள் போட்டு அழைத்த பத்திரிகையாளர், முறைசாரா உரையாடலின்போது நீ யென்று ஒருமையில் அழைத்தார். அண்மையில் இரண்டு மாத அறிமுகத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவர் ‘கிருஷ்ணா’ உன்னை நீயென அழைக்க அனுமதிப்பாயா, இல்லையெனில் நம்மிருவருக்குமிடையில் அந்நியம் இருப்பதைபோல  உணர்கிறேன் என எழுத, இருவரும் தற்போது ஒருமையில் அழைத்துக்கொள்கிறோம். பல வருடங்களாக அறிந்திருந்தும், நண்பர் நாயக்கரும் நானும் நீங்கள் போட்டே அழைத்துகொள்கிறோம். நமது கலாச்சாரத்திலிருந்து இன்னமும் விடுபடமுடியாமல்  தவிப்பது காரணமாக இருக்கலாம்.

மீண்டும் முத்தங்களுக்கு வருகிறேன்.

காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது பொதுவாக மேற்கத்திய நாடுகளில்  சம்பிரதாயமெனில் பிரான்சுநாட்டில் கூடுதலாக கவனம் பெறுகிறது.

Bise அல்லது  Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே முத்தத்தைக் குறிக்கும் சொல்.

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. ஆனால் உறவுகள் நட்புகளை – (முன் பின் தெரியாதவர்களை அல்ல) சந்திக்க செல்கிறபோதும் அவர்களிடம் விடைபெறுகிறபோதும் முத்தமிடும் இடம் கன்னங்கள்.

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் முத்தமிடலாம்- அதாவது கன்னத்தில். குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை.

முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும். கை குலுக்கும் முறை குறித்து பிறகு எழுதுகிறேன்.

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

–  கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது பிரான்சு முழுக்க மேற்கண்ட காரனங்களின் அடிப்படையில்(நட்பு, நெருங்கிய உறவுகள்…) பொது வழக்காக இருக்கிறது.

– Provence என்ற பகுதியில் மூன்று முறை முத்தமிட்டுக்கொள்கிறார்களாம். சில நேரங்களில்  சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

– நான் இருக்கிற பகுதிகளில் இரண்டும் இருக்கிறது நான்கும் இருக்கிறது.

எனது அனுபவம் வேறு.  முகத்திற்காக முத்தமிட நெருங்கி, அவர்களின் வாய் வீச்சத்தால் அவதிபட்டிருக்கிறேன். வெள்ளையர்களிடம் கைகுலுக்குவதே உத்தமம்.

——