Category Archives: கட்டுரைகள்

எழுத்தாளன் முகவரி -15 : தன்மைக் கூற்று கதை சொல்லல்

இன்று, ‘அம்மா இறந்திருக்கிறார்’, ஒருவேளை சம்பவம் நடந்தது நேற்றாகக் கூட இருக்கலாம். ‘அம்மா இறந்தது  இன்றா? ஒருவேளை நேற்றா? என்னிடத்தில் பதில் இல்லை. காப்பகத்திலிருந்து தந்தி வந்திருந்தது, “அம்மா இறந்துவிட்டார்கள்”, நாளை அடக்கம் – ஆழ்ந்த அனுதாபத்துடன்” என்கிற வாசகங்களில் என்ன பெரிதாய் புரிந்துகொள்ள இருக்கிறது. ஒருவேளை நேற்றுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு. முதியோர் காப்பகம் ‘அல்ஜீயஸ்’ நகரிலிருந்து 80. கி.மீ தூரத்திலிருக்கும்  ‘மராங்கோ’ வில் உள்ளது. அதிகாலை இரண்டுமணி பேருந்தைப் பிடித்தால், பிற்பகல் அங்கிருக்க முடியும், ஆதலால் ‘அடக்கத்தை’ முடித்துக்கொண்டு நாளை மாலை ஊர் திரும்பலாம். முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறேன், இதுபோன்ற காரணத்திற்கு விடுமுறையை அவரால் மறுக்க முடியாது. மனிதரிடத்தில் சந்தோஷமில்லை. ‘தவறு என்னுடையதல்ல’, என்றேன். மனிதர் வாய் திறக்கவில்லை. அப்படி சொல்லியிருக்கக்கூடாதென நினைத்தேன்.  இவ்விவகாரத்தில் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியவன் நானில்லை, அவர்.  தனது வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் அவர்தான் இருந்தார். நாளை மறுநாள் அடக்கத்திற்குப் பிறகு, துக்கச் சடங்கைக் கடைபிடிக்கிற சூழலில் என்னை சந்திக்கிறபோது தெரிவிப்பாரென நம்பலாம். இதைக் கொஞ்சம், தற்போதைக்கு அம்மா இறக்கவில்லை’  என்பதாக வைத்துக்கொள்ளலாம். அடக்கத்திற்கு பிறகு நிலமை வேறு, அது முடிந்தபோனதொரு விடயம், அவ்வளவிற்கும் உத்தியோக பூர்வமானதொரு புதிய வடிவம் கிடைத்துவிடும்.” – ‘அல்பெர் கமுய் எழுதிய ‘அந்நியன்’  நாவலின் தொடக்க வரிகள் இவை.

இவ் வரிகள் சொந்தத் தாயின் மரணச் செய்தியைக்கேட்ட, பிள்ளையின் கூற்றாக வருகின்றன. இவ்வரிகளை படர்க்கைக் கூற்றாக எழுதிப் பாருங்கள். என்ன சொல்ல முடியும் என யோசித்துப் பாருங்கள். படைப்பாசிரியனுக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே உள்ள இலட்சுமணக்கோட்டை உங்களால் உணரமுடிகிறதா? அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா? படர்க்கையில் கதைசொல்ல முற்படுகிறபோது ஆசிரியர் எதை எழுதுவார்?

– தந்தியைபடித்த கதைநாயகனின் கண்ணீரை, சிவந்த கண்களை, மூடிய இமைகளை, உதடுகளின் அதிர்வுகளை, கன்னக்கதுப்புகள், முகவாய் இரசாயண மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம் எழுதலாம்.

கதை மாந்தனின் புற உலகின் முள்வேளியை தாண்டமுடியாத ஒரு கணம் அங்கே வரும், அந்நேரத்தில் படைப்பாசிரியர், கதைநாயகனின் சமூகம் அதன் பண்புகள், மரபுகள், வழக்காறுகள், வாழ்க்கை நெறிகள் ஆகிய சட்டப்புத்தகங்களைப் புரட்டி அதன் அடிப்படையில் கதைநாயகனைப் புரிந்துகொள்ள நம்மைக் கூவி அழைப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகம், புறம் என்ற இரண்டு இயக்கங்கள் உள்ளன. புறவாழ்க்கை நமது அக உணர்வுகளைத் தண்டித்தே வாழப் பழகியிருக்கிறது, பெண் என்ற பிறப்பு ஆணுக்கென்று பழகிக்கொண்டதுபோல. அதன் சுதந்திரமெல்லாம் அடுக்க¨ளைவரை என்கிற ஆணாதிக்கத்திற்கேயுரிய அறமும், கோட்பாடும் செல்நெறியும், மனித வாழ்க்கையின் புற உலகு அரசியலோடு பெரிதும் பொருந்தக்கூடியது. இந்த அகமென்ற அடுக்களை பெண்ணை எப்படி புரிந்துகொள்வது, எளிதான வழி அவளாக வாழ்ந்து பார்ப்பது, அவளாகச் சிந்திப்பது, அவளை பேச வைப்பது, அவளை செவிமடுப்பது, அவளை செயல்படவிடுவது. அதைத்தான் தன்மைக்கூற்றில் கதை சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் செய்கிறார்கள். ‘அந்நியன்’ கதை நாயகன் என்ன சொல்கிறான் எனக் காதைக் கூர்மைப்டுத்திக் கேளுங்கள்; அச்சொற்களை மூளையின் உணர்வுதளத்தில் இசைகோர்வையை எடைபோடுவதுபோல இரசியுங்கள், அதன் துடிப்பும் சுவாசமும் சொல்லவருவதென்ன என்பது எளிதாக விளங்கும். ‘அம்மா இறந்துவிட்டாள் இன்றா நேற்றா என்றைக்கு நடந்ததென்ற ஒரு கேள்வி? தந்தி வந்திருக்கிறதே போய்த்தானே ஆகவேண்டுமென்பதுபோல பேருந்து பிடித்து அடக்கத்தில் கலந்துகொண்டு நாளை திரும்பிவிடுவேன் என, சமூக எதிர்பார்ப்பிற்கு, சமூக நியதிகளுக்காக ஒரு பதிலை வைத்திருக்கிறான். சொந்தத் தாயின் இறப்பு அவனுள் எவ்வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற ஓர்மை நாவலின் தொடக்கத்தில், ஒரு சித்தன் போல உரைப்பதில் தெளிவுபடுத்தப்படுக்கிறது. சொல்லப்படவிருக்கும் நாவலில் கதைமாந்தனின் பிரம்மாண்டமான ‘இருப்பை’ அவ்விருப்பில் ‘நாடா புழுக்களாக நெளியும்’ முரண்களுக்கு, கதைமாந்தனின் ஆரோக்கியத்தில் உள்ள பங்கை கோடிகாட்டிவிடுகிறது. வாசகன் முதல் வரியைப் படித்ததும் அதிர்ந்து போகிறான். கா·ப்காபின், ‘விசாரணை’ நாவலையும் தன்மைக் கூற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பன்மைக்கூற்றில் பொதுவாக என்ன நடக்கிறது. கதைமாந்தர்களிடையே கூடுபாய்ந்து விவரணையைகூட்ட முடியுமென்கிற பொதுவானதொரு உண்மையைத் தவிர, கிடைக்கும் பிறபலன்கள் என்ன? என்ற கேள்வியை நானும் பலமுறைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, ஆக அதற்கேற்ப ஒரு தந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாகப் பன்மைக்கூற்றில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். வேணியோ வாணியோ ஒருத்தியை கூடுதலாகவோ குறைத்தோ – பெண்னென்றால் குறைத்து என்பதற்கு சாத்தியமில்லை, எழுதுகிறோம் முதல் அத்தியாயத்தில் என்றில்லாவிட்டாலும் மூன்று அத்தியாயங்களுக்குள் கூந்தலை முடித்துக்கொண்டோ  முடியாதவளாகவோ வந்துவிடுவாள், அவள் கதை நாயகனை அலுவலகத்திலோ, பேருந்து பிடிக்கிறபோதோ சந்திக்கலாம், தற்போது கதைநாயகி ஊடாக ஆசிரியர் கதைநாயகனின் மகோன்னதங்களை எழுதுவார். படைப்பாளி ஆணாக இருந்தால் கதை நாயகனை முதலிலும், படைப்பாளி ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை முதலில் அறிமுகப் படுத்துவது நடைமுறையில் உள்ளது.

வாசகராக இருந்து இதற்குப் பதில் நேடுவோம். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரம்; நான் நிறைய வாசித்திருக்கிறேன், எனக்கு எல்லாவற்றையும் குறித்து அபிப்ராயங்கள் இருக்கின்றன, அதுபற்றி சொல்லப்போகிறேன்:. கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் நல்லது, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பிற்கோ, கொத்ஸ¤ செய்து சாப்பிடாலோ அத்தனை ருசி; அடுத்து இந்தத் திராவிடக் கட்சிகளெல்லாம் குப்பை தமிழர்களின் மூளையை பிரச்சாரமொழிக்குப் பழக்கி, வெட்கமின்றி பிறர்காலில் விழவைத்துவிட்டன; மார்க்ஸ் மூலதனம் நூல் ஓர் பழங்கதை என்று எதையாவது மூச்சுவிடாமற் பேசிக்கொண்டிருக்கலாம், பேசுவதை அல்லது நினைத்ததை எழுத படைப்பாளிக்கு பூரண உரிமை இருக்கிறது, ஆனால் வாசகனாகிய நாம் இதனைச் சகித்துக்கொள்வோமா?

சில எழுத்தாளர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும் படர்க்கையில் சொல்லப்படுகிற படைப்புகள் வெற்றி பெறாமலா இருக்கின்றன, உலகமெங்கும் நாள் தோறும், பல மொழிகளில் வரத்தான் செய்கின்றன, வாசகர்களால் வாசிக்கவும் படுகின்றன. வியாபார அளவில் போட்டமுதலை எடுக்கவே செய்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் நூலக ஆ¨ணைகிடைத்தால் போதாதா, அதை நம்பித்தானே பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் படர்க்கையில் சொல்லப்படுவது கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலவென்றும் அது வெளிப்புற காட்சிகளை படம் பிடிக்க மட்டுமே உதவும், பாத்திரங்களுக்குள் உள்ளே நுழைந்து அவர்கள் மனங்களை எடைபோட அவ்வெழுத்துக்கு இயலாது என ‘டொனால்டு ஹாமில்டன் என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறுகிரார். இவர் தீவிர இலக்கியவாதி அல்ல, குற்றபுனைவுகளையும், வட அமெரிக்காவின் மேற்குலகு மரபு கதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு நல்ல வாசகன் கங்காரு வகை எழுத்தை ( ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவும்), அதாவது படர்க்கையில் சொல்லப்படும் எழுத்தை இரசிப்பதில்லை என்கிறார். தனது எழுத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லவிரும்பும் எந்த எழுத்தாளனும் தன்மை கதைசொல்லல் வகையையே தேர்வு செய்வார்கள் என்கிறார்.  கா·ப்கா, அல்பெர் கமுய், துராஸ், பிரான்சுவா சகாங், குந்தெரா  தன்மைக்கூற்று எடுத்துரைப்பை தேர்வு செய்து, படைப்பை சாசுவதப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சங்ககால கவிதைகளிலேயே இம்மரபுக்கு வித்திடப்பட்டுள்ளது.

உண்மையைச் சொல்வதெனில் தன்மைக்கூற்று கதை சொல்லலில் சில நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெல்ல தனித் திறமையும் பயிற்சியும், ஆழ்ந்த உளவியல் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இவற்றில் எத்தனை விழுக்காடுகள் நீங்கள் தேர்ச்சி பெற்றவரோ அதற்கு நேர்மறை விகிதத்தில் உங்கள் படைப்பும் சோபிக்கும், எழுத்தும் வெற்றி பெறும். தன்மைக்கூற்று எடுத்துரைப்பில் உள்ள தலையாய பிரச்சினை விளிம்பையும் மையத்தையும் கையாளும் திறன். இத்தன்மைக் கூற்றில் ஒற்றை உயிரியை  முதன்மைப்படுத்துகிறோம் அதாவது மையம்; பிற பாத்திரங்கள் விளிம்புகள், மையக்கோளைச் சுற்றிவருபவை.  இவ்விளிம்புநிலை பாத்திரங்கள், மையத்தை நம்பி இருக்கின்றன, இவற்றின் இருப்பும் அசைவியக்கமும் மையத்தினால் தீர்மானிக்கப்பட்டவை – ஆக விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளி இம்மையத்தின் ஊடாக விளிம்புகளைப்பார்க்கிறான். ஒருவித ஒற்றை பார்வை, எதேச்சதிகார நோக்கு- எனக்கு முன்னால் நீங்கள் (விளிம்புகள்) எல்லாம் குப்பைகள் என்ற பார்வை. இச்சர்வாதிகாரபோக்கு பிறமனிதர்களை -பிற உயிரிகளை பருண்மை அற்றவைகளாக -செல்லாக் காசுகளாக மாற்றிவிடுகின்றன.

இந்த அபாயத்திலிருந்து தப்பவும், இந்த ‘உப’ பாத்திரங்களுக்கு சாப விமோசனம் தரவும் எனது நாவல்களில் அப்பாத்திரங்களுக்கு அவ்வப்போது தன்மைக்கூற்றின் குரலை இரவல் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன், இவ்வுபாயம் ஓரளவு வெற்றியையும் ஈட்டியுள்ளது.படர்க்கையில் சொல்லுகிறபோதும் எனக்கென ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவுகிறபோதும் அங்கே ஆசிரியனாகிய என்னை ஒளித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாத்திரங்களே கதையை நடத்துவதுபோல கொண்டு செல்வேன். வாசக நண்பர்களுக்கு ஒரு படர்க்கை கதை சொல்லலில் தன்மைக்கூற்று எடுத்துரைப்பிலுள்ள அத்தனை நன்மைகளையும் அளிக்க முயற்சிக்கிறேன்.

——————————————-

எழுத்தாளன் முகவரி -14: முதல் வாசகன் – முதல் விமர்சகன்

எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு.  சொந்த நூலை வாசிப்பது பெற்ற பிள்ளையைத் தாலாட்டிக்கொண்டிருப்பதுபோல. ஆனால் விமர்சகனாக இருப்பது என்பது வேறு.

‘எனது முதல் நாவல் நீலக்கடல்’. என்னைக்குறித்து எவர் பேசினாலும் நினைவுக்கு வருகிற ஒரு படைப்பாக இருந்தபோதிலும், நெருங்கிய நண்பர்களிடத்திலும், எனது படைப்புகளைக்குறித்து எழுதுகிறபோதும் நீலக்கடல் எனக்கு திருப்தியானதொரு நாவலல்ல என்பதாகவே கருத்து தெரிவித்து வந்திருக்கிறேன். நீலக்கடல் நாவல் மொழியிலோ,உத்தியிலோ, எடுத்துரைப்பிலோ, கதைமாந்தர்கள் வார்ப்பிலோ குறைசொல்லக்கூடியதல்ல. எனினும் அந்நாவல் நன்கு எடிட் செய்யபட்டு வந்திருந்தால் மிகக்கூடுதலான வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. எனது எழுத்து அனுபவம் நாவலின் மறுவாசிப்பில் அநேகத் தவறுகளை காலப்போக்கில் உணர்த்தியது. அவற்றை, அடுத்துவந்த நாவல்களில் நாவல்களில் தவிர்த்திருக்கிறேன்.

மார்கரெட் சிட்டெண்டென், ஒரு பெண் புனைகதையாளர். அவர் ஆற்றலைத்தெரிவிக்க நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் இலக்கியங்கள் உண்டு. அவரது புனைகதைகள் விறுவிறுப்பாகவும், மர்ம முடிச்சுகளுடனும் சொல்லப்படுபவை. அவரது பெயர் பெரிய எழுத்திலும், நூலின்பெயர் சிறிய எழுத்திலும் போட்டு புத்தகங்கள் விற்பனையாகின்றன என்பதைவைத்து  வெற்றி பெற்ற எழுத்தாளர் என சொல்லலாம். இவ்வெழுத்தாளர் ஒரு படைப்பில் தொடக்கம் – நடுப்பகுதி – முடிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் பெயர்: How to be your own critic.

மனித உடல்போல மூன்று பகுதிகள் ஒரு நாவலுக்குமுண்டு. முதலாவதாக தலைப்பகுதி. படைப்பில் அல்லது ஒரு புனைவில் தலையென்று நான் நினைப்பது நாவலின் தொடக்கம். புனைவின் ஆரம்பம். எனது கட்டுரைகளில் பல முறை நாவலின் தொடக்கத்திற்குள்ள முக்கியத்துவத்தை எழுதியிருக்கிறேன். வாசகனின் கையைப்பிடித்து நூலின் இறுதிச்சொல் வரை தரதரவென்று இழுத்துச்செல்வது புனைவின் தொடக்கம். நான் படித்த பல புனைவுகள் பலவற்றுள் தொடக்கம் மிக மெதுவாக -கொட்டாவி விட்டுக்கொண்டு எழுத்திருக்க மனமில்லாமல் போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு உறங்கும் மனிதர்களைப் போல இருந்திருக்கின்றன. அதனாற் படிக்கத் தயங்கியிருக்கிறேன். உங்களுக்கும் அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். நாவலின் தலைப்பகுதியை அடுத்து வருவது மார்பும் வயிறும் சேர்ந்த இடைப்பகுதி. இப்போதெல்லாம் ஆயிரம் கி.மீட்டர் நடக்கவேண்டும் என்பதுபோல பக்கங்களை எவ்வளவு கூட்டமுடியுமோ அப்படி கூட்டினால் பெரிய நாவல் (?) என்றதொரு கருத்தியல் இருக்கிறது. அவைகளுக்குப் பரிசுகள்  கொடுப்பதும் சுலபம், படிக்க வேண்டியதில்லை. எடைபோட்டு பார்த்து தேர்வு செய்யலாம். மூன்றாவதாக உடலின் இடுப்பும் காற்பகுதியும்போல இருக்கிற அதன் முடிவுப் பகுதி. அநேக புனைவுகளில் அவை நீளமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கின்றன.

அ. தலைப்பகுதி யென்கிற நாவலின் தொடக்கம்:

ஒரு நாவலின் தொடக்கத்தில் இடம்பெறும் சொற்கள் அல்லது வாக்கியம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவையென ஏற்கனவே இத்தொடரில் எழுதியிருக்கிறேன். இது தவிர நாவலின் தொடக்கத்திற்கென வேறு சில குணங்களும் இருக்கின்றன. அக்குணங்கள் பொருந்துகின்றதா என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். முக்கிய கதை மாந்தர்கள் அறிமுகம், கதைக் களம், எப்பிரச்சினையைவைத்து கதைபின்னல் நிகழ இருக்கிறது ஆகிய மூன்றும் ஒரு புனைவின் தொடக்கத்தில் தவறாது இடம்பெறவேண்டியவை என்கிறார் ‘மார்கரெட்’. இவை மூன்றிர்க்கும் மார்கரெட் கூற்றை ஆமோதித்து புனைவின் தொடக்கத்தில் இடம் கொடுத்தால் பிரச்சினை முடிந்ததா? நாவலின் முதல் பக்கத்தில் இடம் பெறும் முதல் வார்த்தை எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்பதை பலமுறை அழுத்தமாகக் கூறியிருக்கிறேன். அதற்கென, கதையை முன்நகர்த்துமுன்பே வாசகனை சொற்குவியலில் மூழ்கடிக்க வேண்டுமென்பதில்லை. பெரும்பாலான புனைவுகளின் முதல் பத்திகள், கண்ணன் பாஞ்சாலிக்கு அருளிய ஆடைபோல முடியாது நீளும். நாமும் துச்சாதனன்போல வாசித்து களைத்து விழவேண்டும். ஆரம்பத்திலேயே நெட்டிமுறித்து வர்ணனைகளை நீட்டி முழக்குவது அவசியல்ல. அவ்வாறே முதல் அத்தியாயத்திலேயே முக்கிய கதை மாந்தரின் பூர்வாங்கத்தை விலாவாரியாகச்சொல்லவேண்டுமென்ற அவசியமுமில்லை. அவ்வப்போது நேரம் கிடைக்கிறபோது சொல்வதற்கென்று சிலவற்றை ஒதுக்கிக் கொள்ளலாம். ஒரு புனைவைத் தொடங்குவதற்கு முன்பாக பாத்திரங்கள்: அவரின் குலமென்ன கோத்திரமென்ன, படித்த ஆசாமியா படிக்காத ஆசாமியா, பழகுவதற்கு எளிமையானவாரா, உம்மனாமூஞ்சியா? அவருக்கு என்ன நடந்தது? என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் நமது பாத்திரங்களைக்குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்போம், ஆனால் அவற்றை உடனுக்குடன் எழுதியாகவேண்டுமென்ற கட்டாயமில்லை. முதல் பத்தியிலேயே: வயது; தலைமுடியின் நிறம், பெற்றோர்கள், காதல், வாங்கிய பட்டம், படித்த கல்லூரி  வேண்டவேவேண்டாம். முக்கிய பாத்திரத்தைக்கொண்டு தொடங்கும் புனைவு. அது ஆணோ பெண்ணோ ஏதாவது செய்வதுபோலவோ, எங்காவது போய்க்கொண்டிருப்பதுபதுபோலவே, எவருடனாவது உரையாடுவதைப்போலவோ, தொடங்கலாம். தொடக்கத்தில் அதிகம் உறுத்தாத சிறிய முடிச்சைப் போட்டு அதைக்கொண்டு கதையை நகர்த்துவதற்கு பழகியிருக்கிறேன். எனது மூன்று நாவல்களிலும் இது ஒரு மரபாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. தீக்கங்குபோல அது கனிய ஆரம்பித்து நாவலின் இடைப்பகுதியில் நன்கு தீப்பிடித்து இறுதியில் இயல்பாக அணையும்படி கவனமாக எழுதலாம்.

ஆ. புனைவின் மார்பும் வயிறும் என்கிற இடைப்பகுதி:

ஒரு புனைகதையை நீட்டிச்சொல்ல இப்பகுதி உதவுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பிட்ட பக்கங்களுக்குப் பிறகு ஏற்கனவே தீர்மானித்த வகையில் புனைகதை சுருக்கத்தை எழுதி வைத்திருப்பீர்கள். அச்சுருக்கத்தை அத்தியாயங்களாகப் பிரித்து இங்கே கதையை நீட்டுகிறோம். இங்கும்ங்கூட முக்கிய கதைமாந்தரை தலைமுதல் கால்வரை தெளிவாக வாசகனுக்கு அறிமுகப்படுத்திவிடவேண்டுமென்ற நினைப்புகள் வேண்டாம். நமது முக்கிய கதைமாந்தர்களின் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் எப்படி நடந்கொள்வார்கள் என்பதை நமது வாசகர்களைக்கொண்டே ஊகிக்க வைக்கலாம். அல்லது வெவ்வேறு பகுதிகளில், அவ்வப்போது உரையாடலில், பிறருடைய பேச்சில், கதை மாந்தரின் எண்ணத்தின் ஊடாக தெரிவிக்கலாம். புனைகதையின் சுருக்கத்தை எழுதுகிறபோது முக்கிய நிகழ்வுகள் அனைத்துமே நாவலின் இம்மைய்யப் பகுதியில் அமையுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நாவலை நீட்டுகிற களம் இதுவென்றாலும், நாவலின் தொடக்கத்தில் நீங்கள் கட்டமைத்திருந்த விறு விறுப்பை இப்பகுதி ஒருபோதும் குலைத்துவிடக்கூடாதென்பதில் நண்பர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இம் மைய்யப் பகுதிக்கென மார்கரெட் தரும் யோசனை ‘காரணமும் விளைவும்’ என்கிற சூத்திரம். அடுத்தது என்ன என்ற கேள்வி வேண்டாமென்றும், இக்காரணத்தால் என்ன விளவுகள் வரும்? என நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டுமென்கிறார். புனைகதை சுருக்கத்தை எழுதிமுடித்தபிறகு ‘காரணமும்-விளைவும்’ என்கிற சூத்திரத்தோடு, நாம் எழுதுகிற புனைவு எத்தனை விழுக்காடு பொருந்துகிறது என்பதைப்பொருத்ததே இப்பகுதியின் வெற்றி என்கிறார்.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ – நாவலை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதன் கதைச் சுருக்கம் என்ன? ஹரிணி என்றொரு பெண் தனது சொந்தவாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளால், தனது தாய் பிறந்த மண்ணிற்கு வருகிறாள். புதுச்சேரியில் ‘ழான் தெலொஷ்’ என்கிற செஞ்சிக்கோட்டை ஆய்வாளரை சத்திக்கிறாள், அவரால் இவளிடம் ஏற்பட்ட உந்துதல் என்ன? சந்திக்கிற மனிதர்கள் யார்? அவர்களால் அவளுக்கு நிகழ்வது நன்மைகளா? தீமைகளா? அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? என்கிற மாரகரெட்டின் ‘காரணம்-விளைவு’ சூத்திரம் பெரிதும் எனக்கு உதவி இருக்கிறது, நீங்களும் முயற்சிக்கலாம்.

இ. புனைவின் இடுப்பும் கால்களூம்:

‘காரணமும் -விளைவும்’ என்ற சூத்திரத்தைப் ஒழுங்காகப் புரிந்து கதை சொல்ல தெரிந்தால், புனைகதையின் முடிவும் பொருத்தமானதாக நம்பக்கூடியதாக அமையும் என்கிறார் மார்கரெட். எனது நாவல்களில் மாரகரெட் சொல்வது போன்று அது நீலகடலாக இருக்கட்டும், மாத்தா ஹரியாக இருக்கட்டும் அண்மையில் வெளிவந்த செஞ்சி பற்றிய நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியிலும் மர்மம் ஓர் ஊடுபாவாகத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நீள்கிறது. விளைவாக வாசக நண்பர்களை நிர்ப்பந்தமின்றி இயல்பாக இறுதிபக்கம் வரை வாசிக்கவைக்க என்னால் முடிந்தது.

” நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.” – நீலக்கடல் விமர்சனம் – முனைவர் -ரெ.கார்த்திகேசு

“பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தா?ரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.” – மாத்தாஹரி -விமர்சனம் திரு வெ.சபாநாயகம்.

நாவலின் முடிவுக்கு வேறொரு பண்பையும் மார்கரெட் சிபாரிசு செய்கிறார். அது ‘நம்பகத்தன்மை’. உதாரணத்திற்கு, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் வருவதைப்போன்றோ அல்லது ஒரு சில திரைப்படங்களில் காண்பதைப் போன்றோ, 120 நிமிட வில்லனை ஓரிரு நொடியில் நல்லவனாக மாற்றி கதை நாயகியோடு சேர்த்துவைக்கிற உத்தி, நாவலின் நம்பகத்தன்மைக்கு எதிரிகள்.

விமர்சகராக மாறுங்கள்:

ஒருவழியாக நாவலை எழுதி முடிக்கிறீர்கள்: நெருங்கிய நண்பர், மனைவியென கருத்தை கேட்குமுன் முதலாவதாகச் செய்யவேண்டியது தொடக்கத்திலிருந்து இறுதிவரை அதனோடு சம்பந்தப்படாத மூன்றாவது பேர்வழியாக இருந்துகொண்டு அதனை நாம் படிப்பது -விமர்சகனாக இருப்பது. உங்களால் வாசிக்க முடிகிறதா? வாசிக்கிறபோது சங்கடங்களை உணர்கிறீர்களா? எதைச் சொல்லவேண்டுமோ அதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர் என்ற நினைப்பு உங்களுக்கு வருகிறதா? எங்கேனும் தேவையில்லாமல் எதையோசொல்ல நினைத்து அவரோடு நம்மையும் ஏமாற்றுகிறார் என்றெல்லாம் உள்மனது பேசுகிறதா? அவ்விமர்சனத்தை எவ்வித தயக்கமுமின்றி ஏற்று, திருத்த வேண்டிய இடத்தில் திருத்தம் செய்து, ஒருமுறைக்கு பலமுறை வாசித்து உங்களிடத்திலுள்ள விமர்சகன் அனுமதித்தால் பிறறிடம் காண்பியுங்கள்.

தொடக்கத்திற் கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறேன்:

எந்தப் படைப்பிற்கும் முதன் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது.
————————————————-

பிரெஞ்சு புனைவுவுலகம் இன்று

நேற்றைய சிந்தனைகள் என்பது இன்றைய சிந்தனைகளின் ஆணிவேர், படைப்பிலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இயல்பாகவே கட்டற்றச் சுதந்திரத்தில் ஆர்வங்கொண்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் தங்கள் மன உந்துதலுக்கேற்ப புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள். பிரெஞ்சு படைப்புலகில் நேர்ந்த இவ்வுருமாற்றங்கள் பெற்ற ஞானஸ்தானங்களையும் அறிந்திருக்கிறோம். பட்டியல் நீளமானது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்து மறைந்த கவிஞர் பிரான்சுவா வியோன் ஆகட்டும்; ஹ¤மானிஸம் என்கிற மனிதநலக்கோட்பாடு வழிவந்த கவிஞர் பிரான்சுவா ரபெலெ ஆகட்டும்; மதம், சமூக நெறி முரண்பாட்டாளர்களைக்கொண்ட ‘லிபெர்த்தென்’ கூட்டத்தினராகட்டும்; உயர்ந்த கோட்பாடு, மேட்டிமைத்தனமென்று மரபுகளில் நம்பிக்கைக்கொண்ட ‘கிளாசிஸம்’ என்கிற செந்நெறிவாதத்தினராகட்டும்; அவர்களைத் தொடர்ந்து வந்த ‘ரேஷனாலிஸ்டுகள்’ என்கிற நியாயவாதிகளாகட்டும்; உணர்ச்சிகள், மிதமிஞ்சியக் கனவுகள், ஏக்கங்கள், அனுபவப் பங்கீடுகளென விரிந்த ரொமாண்டிக்யுக படைப்பாளிகள் விக்தொர் யுகோ, ஷத்தோபிரியோன் போன்றவர்கள் ஆகட்டும்; இருத்தலியல் புரவலர் ழான் போல் சார்த்துரு ஆகட்டும்; இன்றைக்கு எழுதிக்கொண்டிருக் கிறவர்களாகட்டும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பிரெஞ்சு படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்று பிரெஞ்சு படைப்புலகத்தின் நிலையென்ன?

இன்றைய படைப்புலகம் என்பதை இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டு படைப்புலகம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தாக்கத்திலிருந்து முற்றாக நாம் விடுபட இல்லை. இன்றைய  இலக்கிய உலகைப்புரிந்துகொள்ள இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1. படைப்பாளியின் மரணம்  2. எழுத்தாளன் யார்? விவாதங்கள் தவிர்க்கமுடியாதவை:

படைப்பாளிகளில் பலரும், ‘நாம் சாகாவரம் பெற்றவர்கள்’ என எண்ணிக்கொண்டிருக்க, அப்படியொரு எண்ணமிருப்பின், கிள்ளி எறியுங்கள், எனக்கூறி ‘எழுத்தாளன் மரணத்தை'(1968) அறிவித்தவர் ரொலான் பர்த் (Roland Barthes). அவரைத் தொடர்ந்து மிஷெல் பு·க்கோ (Michel Foucault), ‘எழுத்தாளன் என்பவன் யார்? எனக்கேட்டு அக்கேள்விக்குரிய பதிலையும் அளித்தார். இரண்டு கருத்துகளுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு வரலாறு என்ற நூலைப்படைத்த குஸ்ட்டாவ் லாசன் (Gustave Lanson) என்பவர் காரணம். இக்குஸ்ட்டாவ் லாசனுக்கு பல்கலைகழக மட்டத்தில் பிரெஞ்சு இலக்கியத்தின் தராதரம் பற்றி விமர்சிப்பதும், படைப்பாளியைப் படைப்பிலிருந்து தனிமைப்படுத்துவதும் ஏற்புடையதில்லை. அவருக்கு எதிராக மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust) ‘சேன் பேவ்க்கு எதிராக’ என்ற நூலை எழுதுகிறார். அத்தகைய சூழ்நிலையில்தான் மேற்கண்டவை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டன. ரொலன் பார்த்தும், மிஷெல் ·பூக்கோவும் பின்-அமைப்பியத்தையும் அதனைத்தொடர்ந்து ‘வாசிப்பு ஒழுங்கைப் புரட்டிப்போட்ட ழாக் தெரிதாவையும் கொண்டாடும் மனநிலையிலிருந்தனர். படைப்பு – படைப்பாளி இருவருக்குமான பந்தங்களும், ஒரு படைப்பு தரும் புரிதலில் நூலாசிரியனின் பங்களிப்புக் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ரொலான் பர்த் படைப்பாளிகளை இருவகைபடுத்துகிறார். முதலாவது வகையினர் ‘Ecrivant’ – தாம் கற்றதை, பெற்றதை பிறருக்கு கூடுதல் அல்லது குறைவின்றி கொண்டுபோய் சேர்க்கிறவர்கள்- மொழி இவர்களுக்கொரு கருவி: கட்டுரையாளர்கள், உரையாசிரியர்கள், பத்திரிகையாளர்களை இதற்கு உதாரணம். இரண்டாம் வகையினர் Ecrivain-  இவர்கள் மொழியைச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள், இலாவகமாகக் கையாளுவதிற் தேர்ந்தவர்கள். மொழியைக் கலைநேர்த்தியுடனும், தொழில் நுட்பத்துடனும் பயன்படுத்துபவர்கள். இவர்களிடத்திலும் பிறருக்குத் தெரிவிக்க தகவல்கள் உள்ளன, உண்மைகள் இருக்கின்றன. பிறரிடம் சேர்ப்பதற்குமுன் அவ்வுண்மைகளை இவர்கள் பரிசோதிக்கிறார்கள். மனக்குப்பியில்  அவ்வுண்மையைப் பலமுறைக் குலுக்கி, தெளிவுற்றபோதும் நிறைவின்றி, பிறரை அழைத்து தங்கள் சோதனையின் முடிவையும் தங்களையும் மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வற்புறுத்துகிறவர்கள். ரொலான் பர்த்துடையக் கருத்தின் படி படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே தொடர்பென்று எதுவுமில்லை  அல்லது சராசரியான செய்தித் தொடர்புகள் இவ்விருவருக்குமிடையில் இல்லை. ‘அதாகப்பட்டது’ என்ற கதா காலட்சேபம் செய்யும் பணியில் எழுத்தாளனில்லை. இதை மறுக்கிறவர்கள் இரூக்கிறார்கள். எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்துப்பார்க்கக்கூடாது, பிரித்துப்பார்க்க இயலாது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். எழுத்தாளன் இறந்துவிட்டான் என்ற பார்த்தின் முழக்கமே, ரொலான் பார்த்தோடு இணைந்ததுதான். ஒரு படைப்பாளியின் தொகுப்பை எழுத்தின் அடிப்படையிலல்ல, படைப்பாளியின் பெயரால் தொகுக்கிறோம். எழுத்துடனான எழுத்தாளன் உறவு துண்டிக்கப்பட்ட பிறகு காப்புரிமைகேட்பது எந்த உரிமையில்? என்பதுபோன்ற கேள்விகளை அவர்கள் வைக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் மேட்டுக்குடியினருக்கென்றிருந்த இலக்கியம் எல்லோருக்கும் என்றானது. இந்த ‘எல்லோரையும்’ ஒருபடித்தான பண்புடன் அடையாளப்படுத்த சாத்தியமில்லை. அடிப்படையில் இவர்கள் ஒருவர் -மற்றவர்-பிறர். உயிரியல் தன்மையினாலும், பிற காரணிகள் அடிப்படையிலும் வேறுபட்டவர்கள். சந்தைபொருளாதாரத்தைச் சார்ந்த இருபதாம் நூற்றாண்டு இலக்கியமும் இதை மறந்து செயல்படுவதில்லை. பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டிலும் படைப்புலம் விமரிசனங்கள், விளம்பர உத்திகள், எழுத்தாளரின் புகழ், வெற்றிபெற்ற படைப்புகளை முடிந்தவரை காசாக்கும் தந்திரம் என்பதுபோன்ற செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நூலாசிரியன்- அவன் நூல் இரண்டிற்குமிடையே பந்தம் குறித்துக் கேள்விகள் எழுகின்றன. இன்றெழுதும் எழுத்தாளனை- அவன் படைப்பு சார்ந்து அல்ல – எழுதும் பொருள்சார்ந்து மூன்றாகப் பிரிக்கலாம். வேறுவகையான கோட்பாடுகள் இஸங்களின் கீழ் அவர்களுக்கு நிழல்தர வாய்ப்புகளில்லை.

– ‘இது விலைபோகும்’ என்பதற்காக எழுதுபவர்கள்.

– ‘தான்’, எழுத்து வினை குறித்த அக்கறை – என்பதுபோன்ற சிந்தனைகள் வழிநடத்த – எழுத்துக்காக எழுதுபவர்கள்.

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகமுரண்கள், வரலாறு ஆகியவற்றைப் பதிவுசெய்ய எழுதுபவர்கள்.

ஒரு நாடு அதன் மக்கள்; ஒரு சமூகம் அதன் பண்பு என்ற சுவருக்குள்ளிருந்த பிரெஞ்சு படைப்புலகம் இன்றில்லை. மனிதம், மானுடம் அவற்றின் அனுபவங்கள், செயல்பாடுகள், நெருக்கடிகள்  “Poetry is not a turning loose of emotion, but an escape”, எனக் எலியட் (T.S. Eliot) கூற்றிர்க்கொப்ப ‘தப்பிக்கும் மனப்பாங்குகள்’ கொண்ட எழுத்துக்களை எங்கிருந்தாலும் பிரெஞ்சு படைப்புலகம் வரவேற்கிறது. பல்சாக், கி மாப்பசான், அல்பெர் கமுய் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களுக்கு ஈடாக காப்கா, ஜாய்ஸ் போன்றவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். பலவேறு இயக்கங்களைக் கண்ட பிரெஞ்சு படைப்புலகத்திற்குத் தற்போதைக்குப் புதிதாக ஓர் இஸத்தினை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை. ஒவ்வொருமுறையும் சுதந்திரமென்ற பேரால் தங்கள் எழுத்துக்கு இலக்கணம் கற்பித்த ஊக்க எழுச்சிகளின் சமிக்கைகளைக் காண அரிதாக இருக்கிறது.  புகழ்பெற்ற Saint-Germain-des-Prés மதுச்சாலைகளில் எழுத்தாளர்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.

எழுத்து எழுத்தாளன் உறவில் கவனம் செலுத்திய இலக்கிய உலகம், தமது வளர்ச்சியில் கவனம் செலுத்தியதா அல்லது செலுத்துகிறாவென்றால், ‘இல்லை’ என்று ஒருமித்தக் குரலில் அபயக்குரல் எழுப்புகிறார்கள் படைப்புலகினர். உலகெங்கும் கல்வி நிறுவனங்களில் இலக்கியத்தைச் சீந்துவாரில்லை என்கிற நிலையிலிருப்பதைப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு வலைவிரித்து ஏமாந்து இன்று தூண்டிலாவது உதவுமா? எனக்கேட்கும் கையறு நிலையில் இலக்கியத்துறைகள் உள்ளன. நேற்றிருந்த மொழிப் பற்றும் அதனூடாகப் பெற்ற இலக்கிய தாகமும் இன்றில்லை. அதன் தாக்கம் படைப்புலகிலும் எதிரொலிக்கிறது, முன்னெப்போதும் கண்டிராத சோர்வு. இலக்கியத்தியத்தில் பல வடிவங்கள் நிறமிழந்து வருகின்றன. பிரெஞ்சு படைப்புலகில் இன்று சிறுகதைகளும், கவிதைகளும் அரிதாகவே வெளிவருகின்றன. ஊருக்கு ஒன்றிரண்டு அபிமானிகள் அவற்றிர்க்கு இருந்தபோதிலும்,  இணைய தளங்களையே இன்றவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. படைப்பிலக்கியத்தின் பிற வடிவங்கள் படுக்கையிற் கிடப்பதின் அடிப்படையில் இலக்கியமென்பதற்கு உரைநடை புனைவுகள் என்றே சுருக்கிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பம் நாளை புனைவிலக்கியத்தின் தலைவிதியையும் மாற்றி எழுதலாம். புனைகதை வடிவத்தை (புதினம்) ஆங்கிலத்தில் Novel என்றும், பிரெஞ்சு மொழியில் Roman ( Nouveau Roman?) என்றும் அழைக்கிறோம். ரொமாண்டிக் (Romantique), ரொமாண்ட்டிஸம், (Romantisme), Roman என்ற மூன்று சொற்களுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.  ரொமாண்டிக் பிரெஞ்சுமொழியில் உரிச்சொல் மட்டுமல்ல பெயர்ச்சொல்லுமாகும்: கற்பனைவாதத் தன்மைய, கற்பனைநவிற்சிவாதி என இருவகையில் அதனைப்பொருள்கொள்ளலாம். ஒரு ரொமாண்ட்டிக் என்பவன் அறிவைப் பின்னொதுக்கி உணர்வை முன்வைப்பவன், மரபுகளை ஒதுக்குகிறவன்.

‘ரொமாண்டிக்’ என்ற சொல் இன்று பலவீனமடைந்திருக்கிறது. மாறாக கூருணர்ச்சியைப் கதைபடுத்துகிறது. அப்பழுக்கற்ற ஒற்றை நாயகன், நாயகியை வியந்தோதும் கிலுகிலுப்பைகள் இன்றில்லை. அவர்களை உத்தமர்கள், அசகாய சூரர்கள் அநீதிக்கு எதிரானவர்கள் போன்ற தேன் தடவிய சொற்களை கொடுப்பாருமில்லை கொள்வாருமில்லை, அவை பழங்கதைகள். சூப்பர் ஹீ ரோக்களை கேலிச்சித்திரங்களில் மட்டுமே நாம் சந்திக்க முடியும். இன்றைய பிரெஞ்சு இலக்கியத்திற்கு நவீனமென்றோ பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq),  சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag).

நூற்றுக்கணக்கில் புனைவுகள் வருடந்தோறும் எழுதி பிரெஞ்சில் வெளிவருகின்றன. அவை இலக்கியமா? இலக்கியமில்லையா என்று எப்படித் தீர்மானிப்பது?

– மொழிஆளுமையும், சிந்திக்கவும் சிந்திக்கவைக்கவும் முடிந்தால் இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டால் இலக்கியம்.

இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வருடத்திற்கு 1,5 மில்லியன் புத்தகங்கள் விறபனையாகும் வெகுசன எழுத்தாளர் மார்க் லெவி (பொறியாளரான இவர் எழுத்துக்கள் தமிழில் சுஜாதாவை நினைவூட்டுகின்றன ), அன்னா கவால்டா  என்ற பெண்மணி மற்றொரு வெகுசன எழுத்தாளர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் இவரது நூல்கள் விற்பதாகச் சொல்கிறார்கள். இலக்கிய புனைவுகள் எனப்படுபவை புதிய எழுத்தாளர்களெனில் இருபதாயிரமும் பரிசுபெற்ற அல்லது விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளும் நூல்கள் அதிகபட்சமாக ஏழு லட்சம் பிரதிகளும் விற்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையிற் கிடைத்த தகவலின் படி  2012ல் பிரெஞ்சில் மொழிபெயர்ப்புகளையும் சேர்த்து 646 புதினங்கள் வெளிவந்துள்ளன. வெளிவரும் அனைத்துப் புதினங்களுக்கும் உடனுக்குடன் விமர்சனங்கள் எழுதும் மரபைக் கடைபிடிக்கிற பிரெஞ்சு இதழியல்துறைக்கு இதொரு சவால். 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இது மிகவும் குறைவு. மற்றொன்று புதிதாக எழுத முற்படும் இளைஞர்களில் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு. சுமார் எட்டுவருடத்திற்கு முன்பு சராசாரியாக வருடத்திற்கு 100 புதிய எழுத்தாளர்களின் அறிமுகம் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்ந்தது. இன்று அவ்வெண்ணிக்கை ஐம்பது விழுக்காடிற்கும் குறைவாக இருப்பது பிரெஞ்சுப் படைப்புலகை கவலைகொள்ள வைத்திருக்கிறது. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென ஒரு நூறு பெயர்களைக் குறிப்பிடலாம்: லெ கிளேசியோ, பத்ரிக் மொதியானோ, மிஷெல் ஹ¥ல்பெக்,  ஜொனாத்தன் லிட்டெல், லொரான் கொடெ, மரி தியாய், அத்திக் ராயிமி, ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp),  ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ரு•பன் (Jean-Christophe Rufin) ஆகியோர் முக்கியமானவர்களில் ஒரு சிலர்.

———————————————–

 

 

 

எழுத்தாளன் முகவரி- 11:

கதையும் காலமும்

ஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில்? அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு  தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.

புனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்சன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை,  – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.

கதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.

முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே?” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.

” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும்? அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட?” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.

எழுத்தைத் தொடர்ந்துப் படிக்க  வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக   தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.

ஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம்  இரண்டுவகை: ஒன்று ஒரு கதையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”

வாசித்தீர்களா? இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம்.  கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும்,  அதற்கான தருணமெது? என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன? என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று? என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கேள்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்தியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.

காலமும் வினைச்சொற்களும்.

பொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது.  ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா? அத்தகைய  Visual effects  கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.

அவரவர் விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன? வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும்  அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும்  தெரிந்திருக்கவேண்டும்.

மீண்டும் உங்கள் கவனத்திற்கு:

“Go on still you come to the end, then you stop.
——————————————————

மொழிவது சுகம் – 10 மார்ச் 2013

1.  முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி:

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்தேன்,  எனது இனிய நண்பரும் பேராசிரியருமான நாயக்கருடைய நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் உடன் வந்திருந்தார்.  பேச்சு இலக்கிய திசையிற் பயணித்தது. அவரது வலைத்தளம் பற்றியும் உரையாடினோம். பின்னர் என்னைப்பற்றிய செவ்வியாக நீண்டது. அச்செவ்வியை நண்பர் தமது வலைத்தளத்தில் இடப்போவதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் கட்டுரை வடிவில் அச்செவ்வி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னையில் வாசிக்கப்பட்டதாக அறிந்தேன். அக்கட்டுரையைத் தமது வலைத்தளத்திலும்  நண்பர் இட்டிருக்கிறார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

http://muelangovan.blogspot.fr/2013/03/blog-post_8.html
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/writer-nagarathinam-krishna-171242.html
———————————————————–

2. மீண்டும் இந்தியா?

எனது சகோதரர் இல்ல சுப நிகழ்ச்சிகாரணமாக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 10ந்தேதி இந்தியா வருகிறேன். நண்பர்கள் துணையுடன் செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலைக்குறித்த ஓர் கலந்துரையாடலை  ஏற்பாடு செய்ய உள்ளோம். புதுவை ‘இலக்கியம்’ நண்பர் சீனு தமிழ்மணியின் ஆதரவுடன் நடபெற உள்ளது. வெகுவிரைவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கிறேன். ஏப்ரல் இறுதிவரை இந்தியாவில் இருக்கிறேன். நண்பர்கள் விருப்பப்படின் சந்திக்கலாம்.

——————————————————

3.  உன்னைப் போல் ஒருவன்

poster_294774Fernando Cortes அல்லது Hernando Cortez பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவைக் கைப்பற்றவும், அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிறுவவும் காரணமாக இருந்தவர். ஸ்பானிய தொல்லிலக்கியங்களை நினைவு கூர்பவர்களுக்கு முதலிற் கவனத்திற்கு வருவது ‘Don Quichotte’ (Cervantes), அடுத்தது ‘The Seducer of Seville and the Stone Guest’ ( Tirso de Molina). இவை இரண்டிற்கும் ஈடானதொரு படைப்பொன்றும் இருக்கிறது பெயர்: The True History of the Conquest of New Spain, ஆசிரியர் Bernal Diaz Castillo. 1580ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாகவே முதலிரண்டு இடத்தைப்பெற்றிருக்கிற நூல்களைப்போலவே விற்பனையில் சாதனைப் படைத்து வருமொரு படைப்பு. மெக்சிகையும் இதர பகுதிகளையும் கொர்ட்டெஸ¤ம் துணைக்குச்சென்ற அவரது படைவீரர்கள் 500பேரும் இரண்டுவருடப் போராட்டத்திற்குப் பிறகு எவ்வாறு கைப்பற்றினார்கள், அங்கிருந்த 18மில்லியன் மக்களையும் அவர்தம் மண்ணையும் ‘அஸ்டெக்’ வம்சாவளி ஆட்சியினரிடமிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதை அழகியலையும், செவ்வியலையும் சரிசமமாகக் கலந்து சொல்லப்பட்ட நாவல். முதல் இரண்டு நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் இந்நாவலை தங்கள் வீட்டிலில்லை எனசொல்வதற்கு ஸ்பெயின் மொழி பேசுபவர்கள் பல முறை யோசிப்பார்களாம். நூலைப்பற்றிய புகழுரைகளை மறந்துவிட்டு, நூலாசிரியர் பற்றிய தகவலுக்கு வருவோம்.  இவரைக்குறித்து பெரும் புதிர் இருப்பதாக நம்பப்பட்டது. அந்நாவலை வாசித்தவர்கள் நூலாசிரியர் வேறுயாருமல்ல  நாவலில் வருகிற வெற்றிவீரனான கொர்த்தெஸ் உடன் சென்ற 500 படைவீரர்களுள் ஒருவரென இதுவரை நம்பினார்கள். அதுதான்  இல்லை என்கிறார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ‘Duverger’.

Bernal Diaz Castilloவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியபோது அவரைப்பற்றிய உண்மைகள் சில இந்த ஆய்வாளருக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் நூலாசிரியரின் பூர்வீகத்தைப் பற்றிய தேடலில் மிகத் தீவிரமாக இறங்கினார்.  கௌதமாலா மற்றும் ஸ்பெயின் ஆவணங்களை இரவுபகலாக ஆய்ந்ததற்குப் பலன்கள் கிடைத்தன: நூலாசிரியரென நம்பப்பட்ட Bernal Diaz மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியவரல்ல, தவிர கொர்த்தெஸின் தென் அமெரிக்க படையெடுப்பை பெர்னால் மிகத் துல்லியமாக விவரித்திருந்தார்.  ஸ்பெயின் மன்னருக்கும் படைத்தளபதிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கும் தர்க்கமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன.- இவைகளெல்லாம் பிரெஞ்சு ஆய்வாளரை யோசிக்க வைத்தன. இத்தனைபெரிய காவியத்தை ஓர் எழுத்தறிவற்ற சாதாரண வீரன் படைத்திருக்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் மேலும் ஆவணங்களைத் தோண்டியதின் விளவு,  Bernal Diaz Castillo என்கிற பெயர் ‘புனைபெயர்’ என அறியபட்டது.  The True History of the Conquest of New Spain என்ற நூலின் உண்மையான ஆசிரியர் வேறுயாருமல்ல அது கடைசியில் நூலின் கதை நாயகனாகச்சொல்லப்பட்ட  கொர்ட்டெஸ்தான் என்ற முடிவுக்கு வருகிறார் பிரெஞ்சு ஆய்வாளர். சொந்த பெயரில் எழுதிய ஆக்கத்தை மன்னரின் ஆணைக்கேற்ப முதலில் கொர்ட்டெஸ் தீயிட வேண்டியதாயிற்று. ஸ்பெயின் மன்னர், பிறகு தெளிவாக தடையும் பிறப்பித்து விட்டார், அதன்படி நூலை மீண்டும் எழுதி அரங்கேற்ற கொர்ட்டெஸ¤க்கு வாய்ப்பு மறுக்கப்பட, கொர்ட்டெஸ் கண்டுபிடித்த தந்திரமே, தனது படைவீரன் ஒருவன் பெயரில் சொந்த அனுபவத்தை நூலாகக் கொண்டுவரத் துணிந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறந்து (பின்-பின் நவீனத்துவம்?) வேறு பாதைகளில் மேற்கத்திய நாவலுலகம் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தமது சொந்த அனுபவத்தை நூலாக எழுதுவது. உண்மையில் இதை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொர்ட்டெஸ் பின்பற்றியிருக்கிறார் என அறியவருகிறோம்.  1980லிருந்து மேற்கத்திய புனைகதை உலகத்தின் பாதை என்ன என்பதைத் தொடராக எழுதும் எண்ணமிருக்கிறது.
————————————————————————————————————————————-

எழுத்தாளனின் முகவரி-10 – உங்களுக்காக எழுதுங்கள்

எல்லோருக்கும் பிடித்தது?

மேற்கத்திய உலகில் புத்தக கடைகளுக்குச் சென்றால் புதிய நூல்களைப் பார்வைக்கு வைப்பதுபோலவே ‘Best seller’ நூல்களையும் வரிசைபடுத்தி பார்வைக்கு வைப்பார்கள். இப் ‘பெஸ்ட் செல்லர்’களில் இரண்டுமுண்டு: வேர்க்க விறுவிறுக்க அல்ல மூச்சிறைக்க ஓடிவந்து  மெட்ரோ அல்லது பேருந்து பிடித்து, எதிரில் அல்லது பக்கத்து இருக்கைக்காரர்களின் சாடையான பார்வைகள் மொய்த்தொதுங்க, காப்பி போட்டோமே கேஸை நிறுத்தினோமா என்ற பிரதான கவலைக்கிடையில் நுணிப்புல் மேயப்படும் நாவல்கள் ஒரு ரகம்; முதுகின் பின்புறம்  நிற்கும் மனைவியிடம், கொஞ்சம் படிக்கணும் என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறிவிட்டு இரவு எட்டுமணிக்குமேல் தீவிரமாகப் பக்கங்களைப் புரட்டவைக்கும் நாவல்கள் மற்றொரு ரகம். முதற் பிரிவை ‘வெகுசன ரசனை’க்குரியவை என்கிறார்கள். இரண்டாம் வகைமைக்கு படைப்பிலக்கியங்களென்று பெயர்.

பிரான்சில் இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார் ‘மார்க் லெவி’ (Marc Levy) பெருவாரியான மக்களின் திணவுகளைப் புரிந்துகொண்டு எழுதுகிறவர். கணிப்பொறியாளர். சொந்த முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் கைகொடுக்கவில்லை, எழுத்தாளராக மாறினார். 2000 மாவது ஆண்டில் முதல் நாவல் வெளிவந்தது. நாவலின் பெயர். Et si c’était vrai (If Only It Were True). நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 32 நாடுகளில், இதுவரை ஐந்து மில்லியன் புத்தகங்களென்கிறது அதன் வெற்றி. அவர் படைப்புகள் வெகுசன இரசனைக்குரியவை.

படைப்பிலக்கியங்கள் எனப்படுகிற இரண்டாவது வகைமைக்கு மரி தியாய்( Marie NDiaye) பெண் எழுத்தாளரை உதாரணத்திற்குச் சொல்லலாம். பிரெஞ்சு படைப்பிலக்கிய  ஆளுமைகளுள் முக்கியமானவர். இவரைப்பற்றி ‘மொழிவது சுகம்’  கட்டுரையொன்றில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மரி தியாய் நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் ‘பெஸ்ட்- செல்லர்’ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘Ladivine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘Ladivine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.

தமிழுக்கு வருவோம். இங்கே பெஸ்ட்-செல்லர் என்ற சொல் வழக்கிலிருக்கிறதா? மேற்கத்திய நாடுகளைப்போல நீண்டவரிசையில் காத்திருந்து எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்று புத்தகங்களை வாங்கிச்செல்லும் காட்சிக்கு சாத்தியமுண்டா? பெரும்பாலான பதிப்பகங்கள் ‘அரசு நூலகத்தேவைக்கு’ வாங்குவார்களா? அதற்கான அரசாணை கிடைக்குமா? என தவமிருக்கிற அவல நிலை.  ‘பெஸ்ட்-செல்லர்’ என்பதெல்லாம்  நமக்கு அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வசதிக்காக இக்கேள்வியை மாற்றி எழுப்புகிறேன்.

” எல்லோரும் விரும்பும் வகையில் எழுதுவதெப்படி? “

என்னைக்கேட்டீர்களெனில் தெரியாதென்பேன்.  சிட்னி ஷெல்ட்டனை, ‘பெஸ்ட் நாவலைக்கொடுக்க என்ன செய்யணும்? எனக் கேட்டபொழுது அவர் கூறிய பதிலும், ‘ எனக்குத் தெரியாது’, என்பதுதான்.  ‘ஒரு கப் காபிகொண்டு வா, எல்லோரும் விரும்பற மாதரி நாவலொன்று எழுதணும்’, என்றெல்லாம்  மனைவியிடம் இதுநாள்வரை சொன்னதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்கிறவன், எல்லோருக்கும் இப் பொருளைக் கொண்டு போக நினைக்கிறேன்’ எனச் சொல்கிறபோது, ‘மலிவு’ என்ற சொல் மூக்கிய சூத்திரமாக ஏற்றுக்கொள்ளபட்டு பொருளின் தரத்தில் சமரசம் செய்துகொள்கிறான். கவனிக்கப்படவேண்டுமென்பது வேறு, வீதியில் போகிறவர்கள் அவ்வளவுபேருக்கும் காட்சிப்பொருளாக இருக்கப்போகிறேன் என்பது வேறு. தமிழில் எழுதப் படிக்க்கத் தெரிந்திருக்கிற எல்லோரையும் சென்றைடைய வேண்டுமெனில் அரிச்சுவடிதான் எழுதவேண்டும், நாவல் எழுதமுடியாது. உண்மையில் எல்லோரையும் திருப்தி செய்ய எழுதுகிறேன் என்பதற்குப் பொருள் ஒருவரையும் திருப்திசெய்யப்போவதில்லை என்பதுவே. பொதுவாக ஒரு நல்ல எழுத்தாளன் பிறருக்காக எழுதுவதில்லை, தன்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள எழுதுகிறான்.

ஏதோ ஒரு கதைப்பொருள் திடீரென்று துளிர்த்து அதன் பசுமையை மூளையெங்கும் தூவுகிறது. உறங்குவதற்கு முன்பும், விழிப்பின்போதும், டாய்லெட்டிலும், எங்கோ எதற்கோ யாருக்காவோ காத்திருக்கிறபோதும் – ஆக மொத்தத்தில் அவன் ஒற்றையாக இருக்கிறபோதெல்லாம் அக்கதைப்பொருள் கொசுபோல மொய்க்கிறது. நாய் ஈபோல விடாமற் துரத்துகிறது. குழந்தைப் பிச்சைக்காரர்களைப்போல எளிதிற் விலக்க முடியாததொரு விலங்கு.  அடுத்துக் கதைப்பொருளுக்கான பாத்திரங்கள் வேண்டும்: அவர்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம்;  வீட்டைப்பூட்டிக்கொண்டிருக்கிறபோது வந்து இறங்குகிற விருந்தாளிகளாக இருக்கலாம்; எட்டாம் வகுப்பு தோழியாக இருக்கலாம், மழையில் நனைகிற கழுதையாக இருக்கலாம்; வீட்டில், வீதியில், சக பயணத்தின்போது, மழைக்காக குடைவிரிக்கிறபோது, “எதிரில் ஆள்வருவது கண்ணுக்குத் தெரியலை” எனத் திட்டிவிட்டுப் போகிறவர்களாக இருக்கலாம். கதைப்பொருளும், கதைமாந்தர்களும் தயார் என்றானதும் எழுதுகிறான். எழுதும் உத்தி அவனது சுயமுயற்சி. பரந்த வாசிப்பு அனுபவம், வடம்பிடித்து அவனை இழுத்துச்செல்கிறது. எப்படிச் சொல்லலாமென்பதில் மட்டும் தெளிவும் அக்கறையுமிருந்தால், மூன்றாம் சாமத்தில் கூட கண்விழித்து விதியுலாவைக் காண்கிற வாசகனைப் பெறமுடியும்.

பிறர் அறிவுரைகள் வேண்டாம்- தேர்வு செய்து வாசியுங்கள் -பிடித்ததை எழுதுங்கள்

எப்படி எங்கே எதைத் தொடங்குவது? சான்கிளேர் லூயி (Sinclair Lewis) என்கிற நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க எழுத்தாளருக்கு நேர்ந்த சம்பவம். அவருடைய  Main street நாவலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்ததும், எழுதுவதுகுறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டுமென்று பல பல்கலைகழகங்கள் கேட்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள்  தவிர்க்க முடியவில்லை. ஐவி லீக் காலேஜ்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் (அல்லது இச்சிக்கலுக்கு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்திருக்கவேண்டும்) அந்த நாளும் வந்தது, அதற்கான நேரமும் வந்தது.  நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு தப்ப முடியாத மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருக்க கல்லூரி ஆடிட்டோரியத்தின் அரங்கு நிரம்பியிருந்தது. எதிர்காலத்தில் சான்க்கிளேர் லூயி போல எழுதிப் பேர்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வந்திருந்த மாணவர்களும் கூட்டத்திலிருந்தனர்,  சான்க்ளேர் வழிமுறையைக் கேட்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அவரை நிர்வாகத்தினர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்தவர் அதனை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக தாண்டுகால் வைத்தார். இரண்டொரு நிமிடங்கள் கேட்டறிய வந்த கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார்: இங்கே எதற்காக காத்திருக்க வேண்டுமென்பதுபோல,  “வீட்டில் உட்கார்ந்து ஏன் நீங்கள் எழுதக்கூடாது?” என்று கேட்டுவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டாராம். அவர் சொல்லவந்தது, “பிறர் அறிவுரைகளுக்காகக் காத்திருக்காதீர்கள்.”

எழுத்து சுதந்திரம்?

தமிழ் படைப்பிலக்கிய சூழலில் ‘பெஸ்ட்- செல்லர்’களுக்கு வாய்ப்பில்லாத நிலையில்,  உயிர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்காக கூடுபாயவேண்டியிருக்கிறது. தொலைகாட்சிக்கோ, திரைப்படத்திற்கோ எழுதுகிறபொழுது அறிவுசார் கொத்தடிமைகளென்கிற ஒப்பந்தத்தில் படைப்பாளர்கள் கையொப்பமிடுகிறார்கள். அங்கே அவர் எழுதுவதில்லை, அவரோடு சேர்ந்து ஆயிரம் பேர் பேப்பரும் கையுமாக அலைகிறார்கள். “சார், நடிகர் பொண்டாட்டி ஒரு மாதரியான பொம்பளை, என்னை தப்பா நினைப்பாங்க. கதையை மாத்த முடியலைன்னாலும்
பரவாயில்லை, வசனத்தையாவது மாற்றுங்கண்ணு, ” இயக்குனர் மூலமாக நடிகை சிபாரிசு செய்யலாம். வியாபாரமாகிற நடிகரெனில், முழுக்கதையையும் வசனத்தையும் அவரது ஒளிவட்டமே தீர்மானம் செய்யும். இயக்குனர்,  தம் பங்கிற்கு “பிரிவியூவில்  பத்திரிகையாளர்கள் நம்ம படத்தின் முடிவு சரியில்லைண்ணு அபிப்ராயப்படுகிறார்கள். அதனாலே ஆவிக்கு கதைநாயகன் தாலிகட்டுவதுபோல திரும்ப ஒருகாட்சியை ஷ¥ட் பண்ணி சேர்த்துக்கலாம். ஒரு வடகொரியா படத்துலே அப்படியொரு காட்சி வருது,” என்பார். வடகொரியா படத்துலே தாலியெல்லாம் கட்டுறாங்களாண்ணு? எழுத்தாளர் அவரைக் கேட்கமுடியாது. கேட்டால் மாலை அவர் ஆட்டோவிலே வீட்டுக்குத் திரும்பவேண்டியிருக்கும், கார் அனுப்பமாட்டாங்க. கேமராமேன் தம்பங்கிற்கு கோணம்பார்த்தே, உரையாடல்களை கத்தரித்திருப்பார். எழுத்தாளர் அங்கே படைப்பாளியல்ல. பணியாளர். எஜமானர்கள் கட்டளையை நிறைவேற்ற கடமைப்பட்டவர். சுதந்திரமாக எழுதமுடியாதது படைப்பாகாது.

எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் எதைப் பற்றி எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். நாவலுக்குண்டான பிரதான கரு உங்களிடம்தான் உருவாகிறது. நாவல் எழுதத்தொடங்குகிறபோதும் எழுதுகிறபோதும் நான் வாசிப்பதில்லை. அதுகூட எனது எழுத்தை நிர்ப்பந்திக்குமென நம்புகிறேன். எப்படி கொண்டுபோகவேண்டும் என்றும் ஆரம்பத்தில் தீர்மானிப்பதில்லை. பிரதான பாத்திரங்கள், ஒன்றிரண்டு துணைபாத்திரங்களென்று என்னோடு உரையாட ஆரம்பித்துவிடுவார்கள். நமது திரைப்படங்களில் முதற் பிரவேசம் அநேகமாக கதைநாயகனுக்குச்சொந்தமாக இருக்கும், அதை நான் விரும்புவதில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன். தெருக்கூத்துகளில் முக்கியபாத்திரங்களின் அறிமுகம் நடு நிசியில்தான் அரங்கேறும். அதைத்தான் நானும் எனது நாவல்களில் உத்தியாகக் கையாளுகிறேன். துணைப்பாத்திரங்களைக்கொண்டு நாவலைத் தொடங்கிவிடுவேன், முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை எப்படி முடிக்கப்போகிறோமென்றே தெரியாது. பிறகுதான் ஒன்றன் பின் ஒன்றாக பூக்கள் இதழ்பிரிப்பதுபோல அத்தியாயங்கள் விரிந்து என்னை பரவசமூட்ட, அப் பரவசத்தில் திளைத்தபடி எழுதிக்கொண்டிருப்பேன். இப்படியொரு பத்து அத்தியாங்களை எட்டியதும், பதினொன்றாவது அத்தியாயத்திலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதப்போகிறேன் என்பதை எண்களிட்டு அத்தியாயச் சுருக்கங்களை எழுதிக்கொள்வேன். அப்படிச்சுருக்கங்களை எழுதுகிறபோது, முதல் பத்து அத்தியாயங்களை திரும்பவும் எழுதவேண்டியிருக்கும். திட்டமிடுதலும் முக்கியம், நாவலை முடிக்கும் வரை அதனோடும், நாவலில் வரும் பாத்திரங்களோடும் வாழப் பழகிகொள்ளுங்கள்.  பெஸ்ட்-செல்லரை எட்டமுடிகிறதோ இல்லையோ, மனமார ஒரு சிலர் பாராட்டுகிறபோது அதன் இனிமையை நெஞ்சில் ருசிப்பீர்கள்.

————————————————

பிரெஞ்சு புதுவருடம்:

reveillonபிரெஞ்சு மரபுப்படி ‘டிசம்பர் 31’ஐ – Saint Sylvestre’ என்று அழைப்பார்கள். நண்பர்களும் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டாடுகிற இரவு விருந்துக்கு ‘La Réveillon de Saint-Sylvestre’ என்று பெயர். எனது பெற்றோருடன் இருந்தவரை அதிரசமில்லாமல் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. (பிரான்சுக்கு வந்த பிறகு ஞாபகப்படுத்தினால், பாகு பதம் வரவில்லையென்று அரிசிமாவையும் வெல்லத்தையும் கையிற்கொடுக்கிறாள் மனைவி) தமிழ்நாட்டைப் பொருத்தவரை திபாவளிக்கு அதிரசம் முக்கியம் அதுபோல பிரெஞ்சுக்காரர்களுக்கு டிசம்பர் 31 இரவு விருந்து சாப்பாட்டிற்கு ஷாம்பெய்னும் – வாத்து ஈறலும் ( Foie -gras), தவிர்க்க முடியாதவை. Foie grasஅவவருடத்திலேயே ஆடம்பரமான விருந்தை குடும்பத்துடன் சாப்பிடுவதில் ஆரம்பித்து – நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நடனம் ஆடுவதென்பது வரையிலான சடங்குகள் அதிலுண்டு. டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12மணிக்கு விருந்தினர்கள், உறவுகள், நண்பர்கள் ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதென்பது பிரெஞ்சு மரபு. புதுவருடத்தின் முதல்நாள் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வார்கள். ஜனவரி 6வரை பொதுவில் நீடிக்கும் இக்காலத்தை ‘Épiphanie’ என அழைக்கிறார்கள். la galette de roisஅதன் முடிவில் ‘ La Galette des rois’ என்ற இனியப்பம் வாங்கிச் சாப்பிடுவார்கள்.

 

 

————————————————————-

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012


1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

Poomaniபிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.

2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல்  ட்ரூயோ (Lyonel Trouillot)  – தருமபுரி – மாதவ் சவாண்.

Lyonel ‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்.  ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன? என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.

ஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது.  தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்கரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா? கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’  நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.

Madav Chavanஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழுக்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில்,   இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க  வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.

Strasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த பிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம்? தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும்.   Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது? இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா? La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும்.  . ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.

—————————————

தாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு

சுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை  இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வருவாய், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.

“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப்புகளையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.

 கபாரே வொல்த்தேர் :

தாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு  சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது.  1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது.  யுகொ பால்  என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]

முதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்கள் என அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன்  விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி)  ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.

மழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை   இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள்.   தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.

“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா  சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, கவிஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.

” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா

தாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள்.  இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.

மீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).

இலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”.  ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம்  கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில்,  புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர்  உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே  “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:

“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த  பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.

‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:

ஆனால் கியோம்/அப்பொலினேர்/  சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்ளப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த  “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

மீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும்.  இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.

இவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.

சேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.

இறுதியாக போட்டோகிராம் (Photogram) என்ற பெயரில்  மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.

அல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின்  ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.

கட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.

நன்றி: காலச்சுவடு

——————————–

எழுத்தாளன் முகவரி -8

புனைவும் -உண்மையும்

பிரெஞ்சு மொழியியல் அறிஞர்  ரொலான் பர்த் (Roland Gerard Barthes)  ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.

Écrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு  மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப்  பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது

Ecrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது.  சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.

ரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.

தகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க  கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா? மண்டோதரியா? என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.

படைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.

மேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை
‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.

நடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே.  சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற  விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.

இன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.

எனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன்  பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள்.  நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.

உண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று  நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா!” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத )  ஒத்துழைப்பதில்லை.

உண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.

———————————————————