Category Archives: கட்டுரைகள்

ஆனந்தரங்கப்பிள்ளை – 1

(   இத் தொடர் கடந்த ஆறு  மாதங்களாக யாம் என்ற இதழில் வெளிவருகிறது. யாம் இதழ் ஆசிரியர் குழுவினருக்கு குறிப்பாக  கபிலன் அவர்களுக்கு நன்றி சொல்ல்\ வேண்டும்.  ” யாம் இதழுக்கு  ஆனந்த ரங்கப்பிள்ளை குறித்து ஒரு தொடர்  எழுதவேண்டும்!’  என்ற வேண்டுகோளை வைத்தார். நான் அதனைத் தவிர்த்துவிட்டு சொல்லும் சொல் சார்ந்த வெளியும் என்ற தலைப்பில் வெற்றிபெற்ற நவீன புதினங்களின் குறிபாக எனது வாசிப்பு ரசனைக்கு உட்பட்ட எழுத்தாளர்களின்  சொற்களின் பயன்பாடு கலை நுணுக்கம் குறித்து எழுத நினைத்தேன். முதல் கட்டுரையை அனுப்பியும் வைத்தேன் பிரசுரமும் ஆனது. ஆனால் இதழின்  பிற ஆக்கங்களைவாசித்த தும் ஆனந்தரங்கப்பிள்ளை தொடரே பொருத்தமானது என முடிவுசெய்தேன். கட்டுரையின் நோக்கம் பிள்ளையின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவது. சிலதிருத்தங்களுடன் பிரசுரம் ஆகிறது)

          

மண்ணில் மனிதராய்ப்பிறந்த எல்லோரும் வரலாறு படைப்பதில்லை, வாரலாறாகவும் ஆவதில்லை.

வரலாறு என்பது  மானுட வாழ்க்கையில் சாதனைப் படைத்த மனிதர்களையும், அவர்களை மையப்படுத்திய நிகழ்வுகளையும் பேசுவது. உலகின் முக்கியத் தலைவர்களைப்பற்றிப் பேசுகிறபோதெல்லாம் அவர்களோடு பிறந்த வாழ்ந்த மண்ணின் வரலாறும் உடன் பயணிக்கிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தை, அக்காலத்திற்குச் சொந்தமான அரசியலை அத்ன் வெற்றிகளை, தோல்விகளை அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளை அவை  தெரிவிக்கின்றன.

இன்றைக்கும் புதுச்சேரி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது, 18ஆம் நூற்றாண்டின் ஆளுமையாகத் திகழ்ந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும், வரலாறும், அவரின் தலைமைப் பண்பும் முன் நிற்கின்றன. ஆவணங்கள் அடிப்படையில், கல்வெட்டுகள் அடிபடையில், தொல்பொருள் ஆய்வில் கிடைக்கும் உண்மைகள் அடிச்சுவட்டில் பிற்காலத்தில் வரலாறாசிரியர்கள் சரித்திரத்தைப் எழுதுவதுண்டு.  1736 செப்டம்பர் மாதம் தொடங்கி 1761 ஆண்டு சனவரி மாதம் வரை தமது வாழ்வை ஒட்டி நிகழ்ந்த சம்பவங்களை நாட்குறிப்பாகப் பதிவு செய்து ஓர் இருபத்தைந்து ஆண்டுகால அரசியல், சமூகம் சார்ந்த நிலமைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ஆனந்தரங்கப் பிள்ளை உதவி இருக்கிறார்.   நாட்குறிப்பென்பதால் சிறு சம்பவங்களைக்கூட கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார். அரசியல், அதன் பண்பிற்கு ஒப்ப சுயநலங்கள் சூழ்ச்சிகள், சதிகள், உட்பகைகள், தந்திரங்கள் உபாயங்கள், ஆங்கிலேயர் பிரெஞ்சுக்கார்களுகிடையிலானப் பங்காளிச் சண்டைகள், உள்ளூர் ஆட்சியாளர்களுக்கிடையிலான குத்துவெட்டுகள் ;  காலனித்துவகால சமயப் பிரச்சினைகள், சமூக சிக்கல்கள், கலகங்கள், அபாயங்கள் ; வணிகக் கொள்கைகள், இலாப நோக்கு, ஆசைகள், முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து என ஒரு பெரும் பட்டியலுக்கான தலைப்புகளில் விவாதிக்கப் போதுமான தகவல்களை தெள்ளத்தெளிவாக பிள்ளை  பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது 1709  மார்ச் மாதம் 30ந்தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார். பிரெஞ்சு நிர்வாகத்தின் வணிகச் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்த நெருங்கிய உறவினர் நைனியப்ப பிள்ளயின் வேண்டுதலை ஏற்று, அவரது பணிகளுக்கு துணை நிற்க புதுச்சேரிக்கு வருகைதரும் ஆன ந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை, நைனியப்பிள்ளையின் வீழ்ச்சிக்குப் பிறகு அவருடைய மகன் குருவப்பபிள்ளையுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் தந்தையின் மறைவுக்குப் பிறகு காலனிய பிரெஞ்சு அரசாங்கத்தின் முதுகெலும்பாக, உந்துவிசையாக தொடக்கத்தில் துபாஷ் பின்னர் தலைமை துபாஷாக  அவருடைய மகன் ஆனந்தரங்கர்  இருந்தாரென வரலாறு தெரிவிக்கிறது.

1735 ல் இன்றைய பரங்கிப்பேட்டையில், ஆனந்தரங்கப் பிள்ளையை அவருடைய இருபத்தாறுவயதில்  பிரெஞ்சிந்திய நிறுவனத்தின் வரத்தக பிரதிநிதியாக அப்போதைய பிரெஞ்சு ஆளுனர் லெனுவார் (Lenoir)  நியமிக்கிறார். அதுமுதல் அவர்காட்டில் மழைதான். அதற்கு மறுவருடமே இன்றைக்கு உலகமே வியக்கின்ற அவருடைய « தினப்படி  சேதி குறிப்புl » அல்லது « சொஸ்த லிகிதம் » எழுதப்படுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள் கிட்டத்தட்டட 10000 நாட்கள் 10000 பக்கங்கள். பிரமிப்பூட்டுகிறது. ‘செயற்கரிய செய்வார் பெரியார்’ என வள்ளுவன் சொற்களுக்கு சாட்சியமாக நாட்குறிப்புகள் இருக்கின்றன. 1761 ஆம் ஆண்டு எழுதி முடித்த நாட்குறிப்பு,  85 ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 1849 ஆம் ஆண்டு அ. கலுவா மொம்பிரன்(A. Gallois-Montbrun) என்பவரால் வெளி உலகிற்குத் தெரியவருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  கீழ்த்திசை வழக்கு மொழி கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த ஜூலியன் வான்சான் (Jelien Vinson) என்ற  தமிழறிந்த பேராசிரியரால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இன்று புதுச்சேரி அரசு பன்னிரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மிகவும் சிரத்தையுடன் தொகுத்ததில் பெரும்பணி ஆற்றியவர் ரா. தேசிகம் பிள்ளை.

தலைவர் என்பவர் யார் ? அவர்கள் வழி நடத்தும் மனிதர்கள் யார் ? அம்மனிதர்களுக்கும் தலைமைக்குமான உறவைக் கட்டிக்காக்கவும், அதிகாரமின்றி அன்பாக அரவனைத்து  திட்டமிட்ட இலக்கினை எட்டுவதற்கும் வழிமுறைகள் எவையெவை?  தேவையான பண்புகள்,  செயல் முறைகள் எவை ?  போன்ற கேள்விகளெக்கெல்லாம் பிள்ளையின்  நாட்குறிப்பில் பதில்கள் கிடைக்கின்றன. ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை அரசியல், நவீன உலகின் நிர்வாக அரசியலுக்குத் தேவையான அத்தனை நுட்பமான கூறுகளையும் உள்ளடக்கியது என்பதனை அவருடைய நாட்குறிப்புகளைக் கொண்டு தெரிந்து கொள்கிறோம்.

தலைமைத்துவம் என்பது முதன்மைப் பணி. தன்னைச்சேர்ந்த மனிதர்களை மட்டுமல்ல, தன்னையும் வழிநடத்திச் சாதிப்பது. அத் தலைமைத்துவப் பண்பு எத்தகையது ? அதன் சக்கரங்கள் பழுதற்றவையா, அவை சரியான அச்சில் சுழல்கின்றனவா, திட்டமிட்ட நேரத்தில்  இலட்சியத்தை எட்டுவதில் அதன் பங்களிப்பு நம்பகத் தன்மைக்கொண்டதா ? என்பதை பகுத்தறியும் முயற்சியில் நமது சிந்தனையைச் செலுத்துவதேகூட ஒருவகையில் தலைமைத்துவ நலன் சார்ந்ததே. இடியின் நிழலில் மின்னலாய் தோன்றி மறையும் மனிதர் உதாரணங்கள் நமக்கு வேண்டாம் ; நமக்குத் தேவை காலவானில் சூரியனாய், உயிர்களின் பச்சையத் தேவையாய் நீடித்து பிரகாசிக்கிற அசாதாரண மனிதர்களின் தலைக்குப்பின்னே ஒளிர்கிற ஒளிவட்டங்களுக்கான காரணத் தேடல்கள்.   பாரதி பாடியதுபோல « கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திடவும், மண்ணில் தெரியும் வானம் வசப்படவும் »   கனவுகள் உண்டெனில், உங்களுக்கு ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும் அவர் எழுதிய ‘தினப்படி சேதிக்குறிப்பு’ உதவும்.  வெற்றி என்பது தனிமனிதனுக்குரியது மட்டுமல்ல தனித்து சுவைப்பதைக்காட்டிலும், பெற்ற வெற்றியை பிறருடன் பகிர்ந்து சுவைப்பது கூடுதல் இன்பத்தைத் தரும். ஒட்டுமொத்த குழுவினரின், கூட்டத்தின், சமூகத்தின், தேசத்தின் வெற்றியில், நலனில்  அக்கறைகொண்டு அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு உறுதுணையாக நின்று சாதிப்பவனே சிறந்த தலைவனாக இருக்க முடியும், என்பதை ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கைத் தரும் செய்தி.

 

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண்டனைத்துஇவ்வுலகு.

 

என வாழ்ந்துகாட்டியவர் ஆனந்தரங்கப்பிள்ளை

 

தலமைப் பொறுப்பு இரு வகைகளில் கிடைக்கிறது, சுய உழைப்பில் சுய திறமையில் தலைமைப் பொறுப்பை எட்டுவதென்பது ஒன்று. வாரிசு என்றவகையில் தலைமையை எட்டுவதென்பது பிரிதொன்று. பின்னவர்களைக் காட்டிலும் முன்னவர்களே தலைமைப் பண்பை இயல்பாகச் சுவீகரித்து வாழ்க்கையிலும் தொழில்முறையிலும் சாதித்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை இவர்களோடு இசைந்து பயணிப்பவர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஆனந்தரங்கப்பிள்ளை  வேந்தனோ, படைத் தளபதியோ அல்ல. எனினும் அவர் ஈட்டிய வெற்றி, புகழ் அவர்கள் சாதனைக்கு இணையானதே.

உலக வரலாற்றில் மன்னர்களைக் காட்டிலும் அவர்களை வழி நடத்திய அமைச்சர்கள், அரசியல் குருக்கள் வழிகாட்டுதலால் சம்பந்தப்பட்ட அரசுகள் வெற்றிகளை குவித்திருகின்றன. பிள்ளை ஒர் அரசியல் சாணக்கியர். அவர்காலத்தில் பிரெஞ்சு அரசு அடைந்த பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே உரிமைகோரத் தக்கவர்.  பிள்ளையின் நாட்குறிப்பை, அவருடைய வாழ்க்கையை தன் முனைப்பு கட்டுரைகளாகவோ, ஆர்வத்தை த் தூண்டுகிற கதைகளாகவோ, காலத்தின் கண்ணாடி ஆகவோ, பிரெஞ்சு காலைத்துவத்தின் அத்தியாயங்களாகவோ, ஒரு தமிழனின் சாதனையாகவோ அவரவர் ரசனைக்கேற்ப வாசித்து மகிழலாம். அடுத்துவரும் அத்தியாயங்களின் உங்களின் அனுபவம் அதுவாக இருக்க என்னால் இயன்றவரை முயன்றிருக்கிறேன்.

பிரெஞ்சு காலனிய அரசு இருவகை சலுகைகளின் அடிப்ப்டையில் மதமாற்றத்தை ஊக்கப்படுத்தியது :

சமூகத்தின் அடிதட்டுமக்களை ‘Renonciation’ (பூர்வீக அடையாளத்தை துறத்தல்) என்கிற சிறப்பு ஆணையின் கீழ் பிரெஞ்சு குடிமக்களாக மாறினால் அடித்தட்டு மக்கள், மேல்தட்டு மக்களுக்கு இணையாகிவிடுவார்கள் என்பது முதற் சலுகை.

கிறித்துவத்தை தழுவியவர்களுக்கு காலனி நிர்வாகத்தில் முன்னுரிமை என்பது இரண்டாவது சலுகை.

ஆனால் மதமாற்றத்திற்குப் பின்னரும் கிறித்துவ தேவாலயங்களில் அன்றைக்குச் சாதிபாகுபாடுகள் இருந்தன. பிரெஞ்சு குடிமக்கள் ஆனபின்னரும் ஐரோப்பியருக்கு இணையாக ஊதியமோ சலுகைகளோ வழங்கப்படவில்லை குளோது மரியுஸ் (Claude Marius), புதுச்சேரி தமிழர்  தம்முடைய இருபதாம் நூற்றாண்டு இந்தோ சீன அனுபவத்தை எழுதுகிறார். இதனை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்தரங்கப்பிள்ளை ஊகித்திருக்கவேண்டும். அவர் உறவினர் குருவப்ப பிள்ளைபோல  மதம் மாறியிருந்தால் உட னடியாக தலைமை துபாஷ்  உத்தியோகம் கிடைத்திருக்கும். காலம் காத்திருந்த து, கவர்னர் துய்ப்ளே தமது மனைவி ழான் என்பவளின் தலையணை மந்திரத்தை  உதாசீனம் செய்து தகுதியின் அடிப்படையில் அப்பதவியைப் பெற நெருக்கடியை உருவாக்கியது.  யாரை எங்கே வைக்கவேண்டுமென காலத்திற்குத் தெரியம். ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் பல துபாஷிகள் பல்லக்கு ஏறினார்கள். காலம் இன்றளவும் சுமப்பது புதுச்சேரி ஆனதரங்கப்பிள்ளையை.கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக் குறைவாக இருந்தகாலத்தில் (பதினெட்டாம் நூற்றாண்டில்) கல்வியும்பெற்று, சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையையையும் பின் தங்கிய வகுப்பினர் ஒருவரால் சாதித்து காட்டமுடிந்ததெனில் அது சாதாரண விடயமல்ல.  தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்ட மனிதர்கள்  வெற்றிபெறுவார்கள் என்பது எழுதப் படாதவிதி.

 

தொடரும்

மொழிவது சுகம் டிசம்பர் 1 2019

அ. திறனாய்வு பரிசில்

பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது.  உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.

 

பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020

வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு’ எனும் க.பஞ்சாங்கம்.

தமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.

தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.

முகவரி: பாரதிபுத்திரன்
எண்10, நான்காம்குறுக்குத்தெரு
துர்கா காலனி
செம்பாக்கம்  ,   சென்னை-600073
மின்னஞ்சல்: nayakarts@gmail.com
செல்பேசி:94442 34511

 

ஆ. எது சுதந்திரம் ?

சுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.

அதற்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறதா ? விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என  நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.

மனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.

ஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். «  என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ? ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.

என்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை.  அதற்கு முன்னதாக செக்‌ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன்.  « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.

அப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த  தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன்.  இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன்.  பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு,  உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4  வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில்  DPECF, பின்னர் DECF (accountancy).  அதன் பின்னர்  மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா.  கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு  சொந்தமாகத் தொழில்.  தொழிலில் கூட்டு எனது சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக்கருதி என்னுடன் இணைந்துகொள்ள  விரும்பிய பிரெஞ்சு நண்பனின் உதவியை நிராகரித்ததென முடிந்தவரை இழப்பினைபொருட்படுத்தாது எனது சுதந்திரம் என நினைப்பவற்றை   காப்பாற்ற நினைக்கிறேன்.

எனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது ?  எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம். இறுதியாக நாமார்க்கும் குடியல்லோம் என வாழும் சுதந்திரம்.  ஒக்கல் வாழ்க்கை  எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகளில் சில. இவற்றை முடிந்தமட்டும் மூன்றுபேருக்கு எதிராக உபயோகிப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஒன்று :  கண்ணாடியில் தெரியும் எனது பிறன்,

இரண்டு :  மனைவியின் கண்கள்

மூன்று : என்னை நானாக  இருக்க அனுமதிக்கும் நட்புகள். மனிதர்கள்.

—————————————

 

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

 

 

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் தமிழ் படைப்புலக நண்பர்கள் வருகையால் இல்லம் நிறைந்திருந்தது. ஒருவர் நாஞ்சில் நாடன், மற்றவர் பதிப்பாள நண்பர் கண்ணன். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் வந்திருந்த நண்பர் நான்சில்நாடனை பாரீஸில் வழி அனுப்பிவிட்டு, இறுதியில் இரண்டு நாட்கள் காலச்சுவடு நண்பர் கண்ணனையும்  அவர் துணைவியாரையும் வரவேற்க ஸ்ட்ராஸ்பூர் திரும்பவேண்டியிருந்த து. பின்னர் அவர்களை வழி அனுப்பிவிட்டு விடுமுறையில் இருந்த பேரப்பிள்ளைகளுடமன் திரும்பவும் பத்து நாட்கள். 4 ந்தேதி ஸ்ட்ராஸ்பூ திரும்பினேன்.  இதற்கிடையில் விபத்து. பிரச்சினை வாகனத்திற்கென்றாலும், கடைபிடித்தாகவேண்டிய சில சடங்குகள் இருக்கின்றன.

இந்திய இலக்கிய நண்பர்களுடன்  உரையாட விடயங்கள் இருந்தன. அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாதது என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன். படைபாளிகள் பதிப்பாளர்கள் அரிதாக புத்தகவாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் என அனைவரையும்  உள்ளடக்கிய எழுத்தாளர் உலகம், பிற மனிதர்களையும் பார்க்க பார்க்க மேன்மக்களைக் கொண்ட உலகம்.

அக்டோபர் பத்தொன்பது அன்று பாரீஸில் நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  சொற்கள் குறித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து நல்லதொரு கருத்துரையை வழங்கினார். கலந்துரையாடலில் இருகேள்விகள் எனக்கு முக்கியமாகப் பட்டன. ஒன்று  அன்றாட வழக்கில் தமிழர்கள் மிக க் குறைவான சொற்களையே தமிழர்கள் கையாளுகிறார்கள் என்பதைக் கவலையுடன் நாஞ்சிலாருடன் தெரிவித்தபோது, தங்கள் உபயோகத்திற்கு அதுபோதும் என்று நினைக்கிறார்கள், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றார் ஒரு நண்பர். நாஞ்சிலார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமாக கையாளப்படுகிற சொற்கள் பல,  பழந்தமிழுக்குச்சொந்தம், இன்று வழக்கில் அவற்றினை உபயோகிக்கத் தவறுவதால் தமிழுக்குப் பெரும் தீங்கிழைக்கிறோம் என்ற பொருளில் பதில் அளித்தார். எனக்குச் சொற்கள் உபயோகம் விதவிதமாக உண்டு பசி ஆறுவதுபோல. கம்பன் விருந்து படைக்க நாஞ்சில்போன்ற மனிதர்கள் பரிமாறுகிறபோது, வெறும் சோறுபோதும் பசியாறிவிடுவேன் என்பது பேதைகுணம்.   மற்றொரு நண்பர் தமிழ்ச் சொற்களில் வடமொழியைக் கலப்பது தவறென்கிற தொனியில்   « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேள்வியை எழுப்பியவர் இயல்பாகவே அக்கேள்வியை வைத்தார். எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.  எனினும் பாரீஸில் இக்கேள்வியின் பின்புல அனுபவம் எனக்குப் புதிதல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கும் அல்வா, ஆப்பிள் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தேடும் நண்பர்களுக்கும் எனது அனுபவ அறிவின் பாற்பட்டு ஒரு பதிலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறி இருக்கிறோம்.  ‘கிருஷ்ணா’ போன்ற பெயர்களை தமிழில் எழுத மறுப்பதால்  தமிழ் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை நான் நம்பத் தயாரில்லை. கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலப்பது தமிழைப் பாழ்படுத்திவிடும் ? என்கிற திறனாய்வைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.   எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்கானது.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் René Descartes «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்) அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தாய்மொழி : உயிர்மொழி, கருவில் காதில் வாங்கிய மொழி, தாலாட்டு மொழி, வீட்டில் தம்பி தங்கைகளுடன் சண்டையிட்ட மொழி, கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி. சிந்தனை மொழி.

வாழ்க்கை மொழி : உடல்மொழி, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி, பிழைப்பு மொழி.

ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெய்ன், நார்வே, சுவீடன் ஜப்பான், தென்கொரியா என பல நாடுகளை இந்த வரிசையில் அடுக்கலாம்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம்.. உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள்  பொருளாதார காரணங்களுக்காக பிரான்சு நாட்டில் குடியேறி  வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் பிரச்சனைகாரணம் என்று சொல்லமுடியாது. சிரியா நாட்டில் பிரச்சினையெனில் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகலாம், இடையில் குறுக்கிடும் நேற்றுவரை கம்யூனிஸப்பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக குடியேறுவது ஜெர்மன் பிரான்சு போன்ற நாடுகாளில். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்  வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைப் பேசினாலும், வீட்டை விட்டு   வெளியில்வந்தால்  உபயோகித்தே ஆகவேண்டிய மொழியாக இருப்பது  பிரெஞ்சு மொழி.  காரணம் எங்கள் வாழ்க்கை மொழி அது. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும்  அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும்  அந்நிய மக்களின்  தாய்மொழி இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். முப்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து 31 வயதில் பிரான்சு வாழ்க்கையை ஏற்கிற்போது வீட்டில் தமிழையும், வெளியில் வந்தால் வாழ்க்கைமொழியாக பிரெஞ்சு மொழியை நாங்கள் ஏற்கிறோம். எஞ்சிய காலத்தில்  தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற மனிதர்கூட்டத்துடன்   போட்டியிடமுடியாமல் இரண்டாம் குடிகளாக வாழவேண்டிய சிக்கல். பின்னாட்களில் இங்கேயே பிறப்பும் வாழ்க்கையும் என்கிறபோது மூதாதையர் மொழியைக் காட்டிலும் எதார்த்த வாழ்க்கைக்கான மொழி எது என்ற தேடல் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.  மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை இது.

இன்று தமிழ் நாட்டின் நிலமை என்ன. பிரெஞ்சுக்கார ர்கள்போல  ஜெர்மனியரைப்போல,  ஜப்பானியரைப்போல  தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்  தமிழர்களுக்கு ஒன்றா ?  புலபெயர்ந்த எங்களைப்போலத்தான் தமிழர்கள், வாழ்க்கைமொழியாக தாய்மொழி அல்லாத ஒன்றை கல்விக்கூடங்களில், அலுவலங்களில், பொது வெளிகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் அன்று  தமிழ்நாட்டில் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் காலை முதல் மாலைவரை தமிழ்பேசாமலேயே நாளைத் தள்ளிவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம். புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களுளும் தங்கள் அறிஞர் பெருமக்களுக்கு குலம் கோத்திரம் தேடி நேரத்தை செலவிடுபவர்கள் அல்லர். தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. நமக்கு தமிழ்ப்பற்று என்பதும் ஓர் பிழைப்பு, அரசியல். புறவாசல் களஞ்சியத்தில் பெருச்சாளிகளை அனுமதித்து.  தெருவாசலில் பந்தல்போட்டு வள்ளுவன் எந்த சாதியென வாக்குவாதம் செய்கிறோம்,  ஆப்பிளுக்கும் அல்வாவிற்கும் தமிழ்சொற்கள் தேடி வியர்வை சிந்துகிறோம்.

——————————————————-

 

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து )

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை நாட்களுக்குத் தற்கூற்றுமொழியில் தனக்குத்தானே அல்லது சூன்யத்துடன் கதையாடமுடியும். தமது பால்ய வயது அனுபவங்களையும், தாமறிந்த கதைகளையும் இவரது ‘போ’ மொழியில் புரிந்துகொள்ளவல்ல ஒரே மனித உயிராகவும் துணையாகவுமிருந்த அவரது அன்னை இறந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்று தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பொழுதை இயற்கையோடு கழித்தவராம்: பறவைகளும் விலங்குகளும் தமது மூதாதையார் மொழிகளை அறிந்தவைகள் என்ற வகையில் அவற்றுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிவருவாராம்.

 

கடந்த மாதம் முதல் வாரத்தில் 85வது வயதான அம்மூதாட்டி இறந்துபோனாள். அவளோடு இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்டுவந்த மிகப்பழமையான மொழிகளில் ஒன்றும் ஒப்பாரிக்கு ஆளின்றி புதைக்கபட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சொற்கள் உலகை நமக்கு புரியவைக்கின்றன. சொற்கள் கட்டமைக்கும் உலகமென்பது எல்லகளற்ற பரந்த வெளி, பேரண்டம். ஒவ்வொரு மொழியும் தமது சொற்களுக்கென தனித்துவத்தைக் கூர்தீட்டிவைத்திருக்கிறது. சொல்லின் புரிதல் அகராதிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. எண்பத்தைந்து வயது போவா பெண்மணியோடு ‘அவளுடைய மொழிமாத்திரமல்ல, அம்மொழிகொண்டிருந்த அறிவுத் திரட்சியும் – வரலாறு, பண்பாடு, சடங்குகள், மரபுகளென்ற பிற விழுமியங்களும் காற்றில் கலந்தன. போவா பெண்மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பல்வேறு வகையானத் தாவரங்களின் பெயர்கள் மனப்பாடமாகத் தெரியுமாம், வேறு மொழிகளில் மூங்கிலுக்கு அவ்வளவு பெயர்களில்லை என்கிறார்கள். ஆக ஒரு மொழியின் இழப்பென்பது பண்பாட்டின் இழப்பு மாத்திரமல்ல பல நேரங்களில் இயற்கையையும் அதன் கூறுகளைப்பற்றிய ஞானத்தையும்  தன்னகத்தே கொண்ட இழப்பு. .

 

அந்தமான் நிக்கோபார் தீவு  மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமொழிகளுள் போவாமக்களின் போ(Po) மொழியுமொன்று  என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 5000பேர்கள் பேசிவந்த மொழி. உலகில் அதிகமொழிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கியநாட்டு சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிலிலுள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1635, அவற்றுள் 37 மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானபேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவிலுள்ள மொழிகளுள் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகுமென்றும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது(1). இந்திய அரசியல் சட்டம் 22 பிரதான மொழிகளை அரசு மொழியாக ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் நாடு தழுவிய மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் இருக்கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள 85 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய் மொழி அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடியேறிவசித்துவரும் அவர்களுக்கு இன்று இந்திதான் பிரதான மொழி. வளர்ந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் இன்ன பிற மொழிகள் இந்திக்காகத் தம்மை அங்கே அழித்துக்கொண்ட பிறகு ஆதரவற்ற ‘போ’மொழி இத்தனை நாள் நீடித்ததே கூட வியத்தலுக்குரியது. தனிமனிதன், அவன் சார்ந்த சமூகம், அரசு இம்மூவரும் மொழியின்பால் அக்கறைகொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்திய மைய அரசைப்பொறுத்தவரை மாநிலத்திலுள்ள மொழிகளுக்கு ஆதரவாக எடுக்கும் எந்த முடிவும் இந்திய ஸ்திரத் தன்மைக்கு எதிராக முடியுமென்ற உண்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தவிர குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இராஜஸ்தானியர்களும், பீகாரிகளும் தங்கள் மொழியிடத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டபிறகு, பிறருக்கு ஒரு நீதியெனில் எப்படி? ஆக பிறமொழிகளைப்போலவே தமிழின் தலையெழுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழர்களைச் சார்ந்தது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கநாடுகளில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மொழிகளும். ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சும் ஆங்கிலமும் எஜமானர்கள். எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் வேலைசெய்தவர்களிற் பலர் பின்னாட்களில் சென்னைக்குச் சென்று துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலைபார்த்து பொங்கலுக்கும் ஊர் திருவிழாவுக்கும் கிராமத்துக்கு வருவார்கள். கூட்டுறவு வங்கிகளிலும், சில நேரங்களில் சென்னையிலுள்ள தங்கள் பண்ணையாட்களிடமும் கடன்பட்டு வரப்பில் குடைபிடித்து நடக்கப்பழகிய ஒன்றைரை ஏக்கர் நிலக்கிழார்கள் ஜமீன்தார் மனோபாவத்துடன்  தனது முன்னாள் பண்ணையாட்களை விசாரிப்பார். அந்த முன்னாளும் வேட்டியும் சட்டையும் போட்டபின்பும், ‘ஐயா ஏதோ உங்கள் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்’, என்று கூறிவிட்டு கொத்தவால் சாவடியிலிருந்து கொண்டுவந்த வாழைப்பழதாரை கொடுத்துவிட்டு காலில்விழ, ஆசீர்வாத கூத்தும் நடக்கும். காமன் வெல்த் நாடுகள் என்ற முத்திரையும், கிரிக்கெட் மட்டையை தூக்கிபிடிக்கிறபோதும், ஆங்கிலத்தைப் பேசுகிறபோதும் அதுதான் நடக்கிறது. மேதகு விக்டோரியா மகாராணிக்கு நாம் நிரந்தர அடிமைகள். ஆண்டானிடமிருந்து அடிமை விடுதலை பெறுவதும், முதலாளியியத்திடமிருந்து தொழிலாளியின் விடுதலையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமுமென அரசியல் விடுதலையைச் சந்திக்க முடிந்தது, ஆனால் பண்பாட்டு விடுதலை என்பது வேறு, அதற்கு விடுதலைக்கான கதவுகள் அடைப்பட்டதுதான் ஒருபோதும் திறவாதவை.  நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றானபிறகு,  மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்.

 

அந்தமான் தீவு போவாப் பெண்மணியின் உதாரணத்தை பிரான்சு நாட்டிலுள்ள மொரீஷியஸ் தமிழர்களின் வீட்டிலும் சந்திக்கிறேன். ஒவ்வொரு மொரீஷியர் தமிழர் வீட்டிலும் எழுபது அல்லது எண்பது வயதில் ஒரு முதியவரோ அல்லது மூதாட்டியோ இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் வருமென்று சம்பந்தப்பட்டவர்களின் மகனோ மகளோ தெரிவிப்பார்கள். பிறகு திடீரென்று ஒருநாள் அந்த முதியவரையோ அல்லது மூதாட்டியையோ கைப்பிடித்து அழைத்து வருவார்கள். இருக்கின்ற மூன்று படிகளை ஏறிமேலேவர ஐந்து நிமிடமெனில், மூச்சிறைப்பு அடங்கி சுவாசம் தனதியல்புக்கு வர ஒரு ஐந்து நிமிடம்பிடிக்கும். அதற்குள் அவரது மகனோ மகளோ பேசு பேசு என்று அவசரப்படுத்துவார்கள். வெகுகாலமாக உபயோகமின்றிக் கிடந்த ‘தமிழ்’, காற்றும் உமிழ்நீருமாக கலந்து வரும்: ‘வணக்கம்’ என்பார், பதிலுக்கு ‘வணக்கம்’,  என்பேன். ‘பொண்டாட்டி எப்படி?’ என்று அடுத்த கேள்விவரும், ‘இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று? தெரியாமல் நான்  என் மனைவியைப் பார்க்க, அவள் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டிருப்பாள். நான் விழிப்பதைவைத்து, தமிழில் பேசி என்னை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். அடுத்த சில மாதங்களில் அம்மொரீஷியரின் குடும்பத்தில் தமிழறிந்த அந்த ஒரு உறுப்பினர் இறந்திருப்பார். தமிழ்மொழியும் அவரோடு சேர்ந்து  அக்குடும்பத்திலிருந்து விடுபட்டிருக்கும். இது பெரும்பாலான மொரீஷியஸ் தமிழ் குடும்பங்களின் நிலை. இன்றைய மொரீஷியர் தமிழரின் தமிழர் பண்பாடு¦ன்பது நிறம், பெயர்கள், கடவுள் வழிபாடுகளில் மட்டுமே முடங்கிக்கிடக்கிறது, மொழி அடையாளமில்லை. தென் ஆப்ரிக்கா, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள் தமிழரிடத்திலும் எஞ்சியிருப்பது மேற்கூறப்பட்ட குறியீடுகள்தான். அதாவது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்ட நமது மூதாதையர்களின் இன்றைய நிலைமை இது. ஒரு நூறாண்டுகாலம் கடந்ததென்றால்  அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அல்லது இந்திய தமிழ்க்குடும்பங்களுக்கும் இதுதான் நேரும்.

 

தமிழர்கள் தமிழை மறக்காலிருக்க எனக்குத் தெரிந்த யோசனை, பேசாமல் தமிழை வரமளிக்கிற தேவதையாக மாற்றி, மாநாடுகளைக்கூட்டாமல் குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வது. நமது  பொதுப்பண்பின்படி தீமிதித்தோ, தேர் இழுத்தோ, கிறிஸ்துவ சகோதரர்களெனில் தமிழ்பூஜை வைத்தோ மொழியை நாம் மறக்காமலிருக்க இது உதவும். தமிழர்களின் நலன்கருதி இனமானத் தலைவர் வீரமணியும்  கலைஞரிடம் இதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், இப்போதுள்ள சூழலில் அவரும் கேட்பார் போலத்தான் தெரிகிறது.

————————————–

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் – 2:

சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை

 

(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)

அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.

 

பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான்.  இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.

 

கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.

 

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.

 

1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை  எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை  ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.

 

லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

 

——————————

 

  கடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்

கடந்த காலத்தின் குரல்

  • ஜிதேந்திரன்

  நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘இறந்த காலம்’ நாவல் சந்தியா பதிப்பகம் வெளியீடாக டிசம்பர், 2018-இல் வெளிவந்திருக்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி, ரணகளம் முதலிய ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ‘இறந்த காலம்’ அவருடைய ஆறாவது நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வரலாற்றுப் பின்புலத்திலேயே தன்னுடைய படைப்புகளை அமைத்துக் கொள்கிறவர். புதுச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிப்பதனால், பிறந்த தேசத்தைப் பற்றிய வரலாற்றைத் தன்னுடைய படைப்புகளில் வரைந்து கொள்கிறார். புதுச்சேரி வரலாற்றைப் பேசுபவை பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள். புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அதே திசையில், ஆனால் மாறுபட்ட கதைசொல்லல் திறமையில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பிரதிகளைச் செய்கிறார். இவருடைய நீலக்கடல் நாவல் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்கத் தீவு மொரிஷியஸ் பற்றியது. மாத்தா ஹரி நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டவள். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் புதுச்சேரி மற்றும் செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்கிறது. காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் புதுச்சேரியிலிருந்து பிரான்சு, செக் குடியரசுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. ரணகளம் நாவல் தமிழக அரசியல் பற்றியது.

மிரா அல்ஃபஸ்ஸா (அன்னை) புதுச்சேரி வந்த 1914 முதல் புதுச்சேரி அரசு இந்திய அரசுடன் இணைந்த 1954 வரையிலான அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது இந்நாவல். புதுச்சேரி நகர உருவாக்கமும், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையும் இதில் இருக்கின்றன. ஆரோவில் ஒரு கண்ணியாகவும், புதுச்சேரி விடுதலை மற்றும் புலம்பெயர் அரசியல் மறு கண்ணியுமாக நாவல் அமைகிறது. இரண்டையும் இறுதியில் இணைக்கும் லாவகம் சிறப்பு.

மனிதன் இறந்த காலத்திலிருந்து மீள முடியாது. இறந்த காலம் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கும், அவனுக்குள் மனமாக. சுற்றியிருப்பவர்களும் அவனை அவனது இறந்த காலத்தின் நீட்சியாகவே காண்கிறார்கள். தனது நேற்றைய சம்பவங்களை; நேற்றைய தவறுகளை; அவமானங்களை தனிமனிதன் மறக்கலாம். ஆனால் அவனைக் குறித்த அந்நிகழ்வுகளை மற்றவர்கள் மறந்துவிடுதில்லை. அதிலும், வரலாற்றுத் தவறுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில்தான், பிரெஞ்சிந்திய விடுதலைச் சிக்கலும் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில்  பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த புதுச்சேரியின் நிலை தர்மசங்கடமானது. வேறு வழியில்லாமல் அவர்களும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. நாவலில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆரோவிலியன்களாவது என்பது ஏமாற்று வேலை. எந்த மனிதனும் முழுமையாகப் புனிதனாகிவிட முடியாது. ஆரோவில் குழுமத்தில் இணைபவர்கள் சில காலம் புனிதர்களாக நடிக்கலாம். தவம், தியானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகப் பாலியல் சிக்கலுக்குள் தத்தளிக்கின்றனர். உலகின் எந்தத் தியான ஆஸ்ரமும் பாலியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்ததில்லை. ஓஷோ கம்யூன், நித்யானந்தா ஆஸ்ரமம் உட்பட, வட இந்தியச் சாமியார்கள் பட்டியல் பெரிது. காலங்காலமாக மனிதன் காமத்திலிருந்து விடுபட முடியாதா? என்ற சிக்கல் இருக்கிறது. ஏன் விடுபட வேண்டும்? ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கிற வழியைக் காட்டுகிறார். தியானம் செய்கிறவர்கள் காமத்தை அடக்குவதன் மூலம் தங்களுக்குள் மனப் பிளவுகளை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனை அடக்குவதன் மூலம் பாலியல் சிக்கல் வெறி கொண்டதாகிறது.

குருவால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் தங்கள் சொத்துக்களை தாங்களாகவே ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுகின்றனர். அல்லது வசியத்தால் சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டலாலும்கூட. இங்கு அவர்கள் சீடர்கள் அல்ல; பொதுமக்கள். ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, பணம் சேர்கிறது. ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி, ஆஸ்ரமத்தை விஸ்தரித்துக் கொண்டே போகிற யதார்த்தத்தைப் பார்க்க முடிகிறது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சுற்றியுள்ள மக்கள், சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளின் குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படித்தான் ஆரோவில்லும். “இந்த நகரத்தை (ஆரோவில்) உருவாக்க 50 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக் கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தொழில் தொடங்குவதற்காகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை” (ப.180).

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆரோவில் அமைப்பிற்கு உள்ளது என்று விவரிக்கிறார் நாவலாசிரியர். வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியப் பெண் ஆரோவில் நகரத்தில் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட செய்தி, ஆரோவில் நகர விரிவாக்கம் ஆகிய இரண்டும் சமீபத்திய உண்மைச் செய்திகள். ஆனால், ஆரோவில் உருவாகும்பொழுது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு எதிரான திசையில் இப்போதைய ஆரோவில் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத்தான் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் முன்வைக்கிறார்.

நில அபகரிப்பு என்பதில் ஆரோவிலுக்கு பிரெஞ்சு அரசாங்கமே குறைந்த விலையில் நிலத்தைக் கொடுத்தது என்பதும் அடங்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆஸ்ரமவாசிகள் / ஆரோவிலியன்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்கிற உண்மையை நாவல் விவரிக்கிறது. ஆரோவிலின் ஆன்மீக சோஷலிஸம் என்பதே ஏமாற்றுத் தந்திரம். புளி ஏப்ப ஆன்மீகவாதிகள், பசி ஏப்ப ஆன்மீகவாதிகள் உண்டு என்கிறார் நாவலாசிரியர். தங்கம் பூசப்பட்ட மாத்ரி மந்திர் கோளம் ஆன்மீகத்திலிருந்து விலகிய நிலை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்குகிற ஆஸ்ரமவாசிகள், ஆரோவிலுக்கு வெளியே வாழும் புதுச்சேரி ஏழை மக்கள் எனப் பெரும் பிளவுகளைக் கொண்டிருக்கிறது ஆரோவில் நகரம். ஆரோவிலுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, ஆரோவிலுக்கு உள்ளேயே எடுபிடி வேலை பார்க்கும் ஏழை மக்களும் இருக்கிறார்கள்.

நர்மதா குடும்பத்திடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்ட ஆல்பர்ட், நர்மதாவைக் கற்பழித்த ஆல்பர்ட், ஆரோவிலுக்கு வருகிற பெண்களைச் சீரழிக்கிற துய்மோன் என ஆரோவில் நகரக் களங்கத்திற்கு உருவகமாக இரண்டு கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வருகிற ஜெஸிக்கா, பிரான்சிலிருந்து வருகிற மீரா இருவருமே ஆரோவில் நகரில் கற்பழிக்கப்படுகிறார்கள். ஜெஸிக்கா எந்தப் புகாரும் அளிக்காமல், நாடு திரும்புகிறாள். மீரா காவல் நிலையத்தில் புகாரளித்தாலும், சாட்சியங்கள் இல்லையென்று கூறி, காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது. மீரா ஜெஸிக்காவைத் திரும்ப அழைத்துவந்து, அஸ்ஸாமிற்குச் செல்கிற துய்மோன், ஆல்பர்ட் இருவரையும் குழந்தை கடத்துபவர்களாகச் சித்திரித்து, அங்கு வைத்து அவர்கள் இருவரும் கொல்லப்படும் சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

அன்னை, அரவிந்தரின் நல்ல நோக்கம் தற்போதைய நிகழ்வுகளால் அடிபட்டுப் போகிறது. ‘ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃபஸ்ஸாவுமல்ல’ (ப.103). ஆரோவிலுக்கு எதிரான கருத்துக்கள் மாதவன் வழியாகச் சொல்லப்படுகின்றன. நாவல் முழுக்க அன்னை, அரவிந்தருக்கு எதிரான பார்வை இருக்கிறது. அன்னை, அரவிந்தரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. “முடிகொட்டிய நரைத்த தலைக்கு ஒரு சல்லடைத் துணியை முக்காடிட்ட சூன்யக்காரி போல ஒரு மூதாட்டி” (ப.39) என்கிற அன்னையின் முகத் தோற்றத்தைச் சொல்லும் வரிகள் அன்னையின் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரும். அன்னையின் கண்கள்தான் பிரசித்தமானவை. மாறாக, இந்த நாவலில் அன்னையின் ‘குரல்’ பேசுகிறது. பிரான்சிலிருக்கிற மீராவை (நாவலின் நாயகி) இந்தக் குரல்தான் தொந்தரவு செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் வருகிற அந்தக் குரல், இறுதியில் மீரா கற்பழிக்கப்பட்டபின்தான் வருகிறது. மீராவை இங்கு அழைத்து வந்த குரல், ஆரோவிலின் பெருமைக்குக் களங்கம் செய்கிறவர்களை அழிக்க விரும்பும் குரல்.. அவள் கற்பைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘இறந்த காலம்’ நாவல், அன்னையின் கடந்த (இறந்த) கால வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுகிறது. துய்மோன், ஆல்பர்ட் கொல்லப்பட்ட பிறகு, ஆரோவில் களங்கங்களைப் போக்கிய பிறகு,  அன்னையின் இந்தக் குரலில் அமைதி ஏற்படுவதாக நாவல் முடிகிறது.

நாவலின் மற்றொரு தளம் – புதுச்சேரி அரசியல். இறந்த காலம் – புதுச்சேரியின் கடந்த காலம். புதுச்சேரியிலிருந்து பிற நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தோ சீனாவிற்குப் (சைக்கோன்) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது. சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட, சமத்துவ உரிமையைப் பெற விரும்பி பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்க நாடுகளில் வாழும் மக்கள் ‘ரெனோன்சியாசியோன்’ (La renonciation) எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு மாறியவர் ‘ரெனோன்சான்’ (காலனிவாசி) எனப்படுகிறார். சுப்பராயன் அப்படி ரெனோன்சானாக, ஃபெலிக்ஸ் சுப்பராயனாக மாறிக்கொண்டார். சிங்காரவேலர் எதுவார் என்று மாறிக்கொண்டார். இவர்கள் சிப்பாய்களாக பிரெஞ்சு தேசத்திற்காகப் போர்க் களத்தில் உயிரைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதாவது ரெனோன்சானாவதற்கு இது ‘இரத்த வரி. ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தை மட்டுமே அறிந்திருந்த தமிழ்ச் சூழலுக்கு இந்தப் பிரெஞ்சிந்தியக் காலனியாதிக்கச் சிக்கல்கள் புதிது. பிரெஞ்சு தேசத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். பூர்வீகப் பிரெஞ்சு மக்கள், கிரேயோல் மக்கள் (தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் ஐரோப்பியர்), ரெனோன்சான் மக்கள். இவர்களில் ரெனோன்சான் மக்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை. பதவி, வேலை, ஆடம்பர வாழ்க்கை, சாதியத் தடைகளிலிருந்து விடுதலை என ஆசை வார்த்தைகாட்டி, இந்தோ சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி மக்களின் நிலையை சுப்பராயன், சிங்காரவேலர், வேதவல்லி வழி நாவலாசிரியர் புலப்படுத்துகிறார். அதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விளக்குகிறார். சைக்கோனின் நிகழ்வுகளை வேதவல்லியும், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளை அவரது தம்பி சதாசிவமும் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள் மூலமாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

புதுச்சேரி நிகழ்வில் அரவிந்தர் ஆஸ்ரமம் அமைத்தது, ஆரோவில் உருவாக்கப்பட்டது, காந்தியின் புதுச்சேரி வருகை, அரவிந்தரைச் சந்திக்க காந்தி தூது அனுப்பியபோதும் அரவிந்தர் மறுப்பு தெரிவித்தமை, இந்தோ சீனா வங்கி, புதுச்சேரி அரசியலின் நாயகன் ‘வி.எஸ்’ எனப்படுகிற வ. சுப்பையாவின் அரசியல் போராட்டங்கள், பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம், சவானா மில், ரோடியர் மில், கெப்ளே மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு, கவர்னர் எதுவார் குபேர் என்பவரின் அரசியல் மீதான விமர்சனம் எனப் பல பக்கங்களை நாவலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததை, தற்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த உணர்வெழுச்சியோடு பொருத்தி எழுதியிருக்கிறார்.

வரலாற்றுப் புனைவை எழுதும்போது, நிகழ்வை எழுதுகிற அதேநேரத்தில், கற்பனையும், படைப்பாற்றல் மிக்கவராகவும், தனித்த பாத்திரங்களை உருவாக்கி, ரசனை குன்றாமல் நாவலை எழுதிச் செல்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனித்திறமையே கதைசொல்லும் உத்திதான். கதையில் ஏற்படுத்துகிற சுவாரஸ்ய முடிச்சுகள், வாசகர்கள் கண்டுபிடிக்கிற அளவில் ‘பொடி’ வைத்து எழுதுகிற எழுத்து நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுடையது. இந்த நாவலில் மட்டுமல்ல, அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்தத் தனித்திறனைப் பார்க்கலாம். நாள், தேதியிட்டு காலத்தை மாற்றி மாற்றி எழுதும் உத்தி இவருடைய பொதுவான தன்மை. கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமாக இவரது மொழி, கதை சொல்லும் உத்தி மாறி, மாறிப் பயணிக்கும். காலத்தை இணைக்கும் புள்ளியைக் கூர்ந்த அவதானிப்புடன் செய்கிறார். நிகழ்கால அரசியலை; சம்பவங்களை; அரசியல்வாதிகளைக் குறிப்பால் உணர்த்தும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்.

மீரா, ஜெஸிக்கா, மாதவன் தவிர பிரான்சிலிருக்கும் மீராவின் தாய் இஸாபெல், அவரது இரண்டாவது கணவர் லூயிஸ், புதுச்சேரியில் மாதவனின் குடும்பம், மீரா தங்கும் வீட்டில் ஆல்பர்ட்-தேவகி, ஆரோவிலியன் துய்மோன், நர்மதா, கலைவாணி முதலியோர்தான் கதாபாத்திரங்கள். அரூபப் பாத்திரங்களான வேதவல்லி, சதாசிவம் கடிதங்களின்படி மாதவனும், மீராவும் திருமண முறை உறவினர்கள். இந்த முடிச்சை அவிழ்ப்பதில்தான் நாவலின் சுவாரஸ்யம் இருக்கிறது. வேதவல்லியின் மற்றொரு தம்பி சிங்காரவேலர் புதுச்சேரியிலிருந்து இந்தோ சீனாவிற்குச் சென்று, அங்கு வியட்நாமியப் பெண்ணை மணம் செய்து, அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்வதாகச் சொல்கிறது வேதவல்லியின் கடிதம். மீரா தன்னுடைய தாத்தா பற்றிக் குறிப்பிடும்பொழுது, இதே குறிப்பைச் சொல்கிறாள். கதாபாத்திர உறவுகளை சஸ்பென்ஸாக வைத்து, வாசகர்கள் கண்டுபிடிக்கும்படியான எழுத்து முறை இவருடைய மற்ற நாவல்களிலும் காணப்படுகிறது. மீராவின் தாய் இஸாபெல்லும் புதுச்சேரியில் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மீராவின் தந்தை யாரென்றே தெரியாத சூழலில், துய்மோனாக இருக்கலாம் என இஸாபெல் கூறுகிறாள். துய்மோன் – இந்தப் பெயர் ஏன்? 1735ஆம் ஆண்டு கவர்னராகப் புதுவைக்கு வந்தவர் துய்மா. இவர் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரைக் குறிப்பிடும் விதமாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதோ என ஐயம் தோன்றுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வீணாக்கவில்லை. சாதாரணமாக ஒருமுறை டிராப் செய்கிற டிரைவர்கூட இறுதியில் மறுபடியும் வருகிறார், மணிகண்டனாக. மீராவின் திட்டங்களுக்கு உறுதுணையாக. மீராவை ஆரோவில் நகரில் சைக்கிளில் பின்தொடர்கிற பத்திரிகையாளர், விமான நிலையத்தில் தற்செயலாகப் பக்கத்தில் அமர்பவர் நாவலின் இறுதியில் மீண்டும் வருகிறார்கள். முதலில் ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி. அதற்கு நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் விடை என்கிற ரீதியில் நாவலின் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அண்மையில் தமிழகத்தில் குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தவர்களைக் குழந்தை கடத்தல் கும்பலென அடித்துக் கொன்ற (உண்மை) செய்தியை, இரண்டாகப் பிரித்து, முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தை சாக்லேட் பெறுவது குற்றமாகப் பார்க்கும் நாடு இது என்று ஒரு பகுதியிலும், குழந்தை கடத்துபவர்கள் எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, இருவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொலை செய்கின்றனர் என்பதை இறுதிப் பகுதியிலும் அமைத்திருக்கிறார்.

‘இறந்த காலம்’ நாவல் புதுச்சேரியில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமவாசிகளால் இந்த நாவல் நிச்சயம் விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

 

நாமார்க்கும் குடியல்லோம்

நாமார்க்கும் குடியல்லோம்

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து  )

“காலையில் எழும்ப வேண்டியது

ஒரு கோணியோடு

ஒரு தெருவு நடந்தால் போதும்

கோணி நிறைந்துவிடும்

காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன

தலை நிமிர்ந்து வாழலாம்”

 

என்கிற வரிகளும்,  “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை”  என்ற வரியும் தமிழர்களைப் பற்றிய சித்திரமாக கவிஞர் மு. சுயம்புலிங்கத்தினால் சுட்டப்படுகிறது. அவரவர்க்கு ஒரு கோணி கைவசம் இருக்கிறது, நிரம்புகிறது. தலை நிமிர்ந்து வாழ்கிறோம். சுதந்திரமென்றும் சொல்லிக்கொள்கிறோம். கோணி மனிதர்களுக்கு மாத்திரமல்ல தன்மானமிக்க ஆனைகளுங்கூட மேடை தானமாகக் கிடைத்தால் கால் மடக்கி, பணிவு காட்டும் சுதந்திரம். தார்மீகச் சுந்திரமா? சட்டம் தரும் சுதந்திரமா என்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நாம் பிழைக்கிறோம் என்பது முக்கியம். மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ, எனக்கேட்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் சாத்தியமா? என்ற கேள்வி கவிஞர் சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசித்த பிறகு எழுகிறது.

 

மரிதியய் கம்பனுக்கு வேண்டியவர்(இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து எழுதியிருந்தேன், இக்கட்டுரையை அதன் தொடர்ச்சி எனலாம்). பிரெஞ்சில் இன்றைய தேதியில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்: கறுப்பரினம், பெண்மணி என்பது இலக்கியத்திலும் கோட்டாவை வற்புறுத்தி அடையாளம் பெற நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய தகவல். 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசினை, நியாயமானத் தேர்வில் வென்றவர். ஆனாலும் அப்பெண்மணி பரிசுக்குரியவரல்ல என்ற விமர்சனம் வந்தது. விமர்சித்தவர்கள் அப்பெண்மணியின் எழுத்தாளுமையையோ, பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த அவரது நூலையோ கேள்விக்குட்படுத்தவில்லை, அவரது பிரெஞ்சு அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபராக உள்ள நிக்கோலாஸ் சர்க்கோசியினுடைய கடந்த கால செயல்பாடு பிரான்சு நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருந்ததென்ற குற்றசாட்டு உண்டு. நகரின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்த கறுப்பரின மக்களும், அரபு மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அவரை இனவெறியாளரென்றே சித்தரித்திருந்தார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அறிவு ஜீவிகளை முகஞ்சுளிக்க வைத்தன. சர்க்கோசி 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது கறுப்பரினத்தை சேர்ந்த அறிவுஜீவிகள், கலையுலக பெருமக்கள், பாடகர்கள் எனப் பலர் அவருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்படி சர்க்கோசியின் எதிரணியிலே இடம்பெற்றவர்களுள் மரி தியய்யும் ஒருவர். அதிபர் தேர்தல் முடிவு சர்க்கோசிக்கு ஆதரவாக இருந்தது. வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டார். நிக்கோலாஸ் சர்க்கோசி ஒரு மிருகம், அத்தகைய மனிதரின் கீழ்வந்த பிரான்சும் எனது நம்பிக்கையை இழந்துவிட்டது, இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன், என்ற கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் தமது கணவருடன் வசித்து வருகிறார்.

 

மரி தியய்க்கு பரிசளித்திருக்கக்கூடாதென்று சொல்ல நினைத்த எரிக் ராவுல் என்ற ஆளும் கட்சி உறுப்பினர்: “2009ம் ஆண்டிற்கான கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கென அறிவிக்கபட்ட முடிவு தவறானது. தேர்வுக்குழுவினர் சரியான நபரை தேர்வு செய்ய தவறிவிட்டனர். பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் அடையாளம் கொண்டவராகவும் அதன் பெருமைகளை போற்றுகிறவராக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இப்பெண்மணி (மரி தியைய்) நமது (பிரான்சு) நாட்டையும் நமது அதிபரையும் சிறுமைபடுத்தி பேசியிருக்கிறார். விமர்சித்து இருக்கிறார். இவ்விடயத்தில் நமது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்றார். அவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க அதிபரின் துதிபாடிகளும் முன் வந்தனர். ஆனாலும் இப்பிரச்சினையில் கலை பாண்பாட்டுதுறை அமைச்சரும், பரிசு அளித்த கொன்க்கூர் அமைப்பும், தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்களும், பரிசுபெற்ற எழுத்தாளர் பெண்மணியும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 

மரிதியய் பெண்மணியை பரிசுக்குரியவராகத் தேர்வுசெய்த படைப்பாளிகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூச்சலை வன்மையான கண்டித்தனர். “அரசியல் வாதிகள் ஓய்ந்த நேரங்களில் இலக்கியமென்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கிய பரிசினை ‘மிஸ் பிரான்சு’ தேர்வு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மரிதியய் என்ன எழுதியிருக்கிறார் எனப்பார்த்து பரிசினை அளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப்பார்த்து பரிசுவழங்குவதில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாது என்று தெரிவிப்பதன்மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள். சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்? என்ற கேள்வியையும் அரசாங்கத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் களத்தில் குதித்தனர்.

 

கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு வருவோம். இவர் பெயர் பிரெடெரிக் மித்தரான் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானின் சகோதரர் மகன். இடது சாரி சிந்தனையாளர், எழுத்தாளர், கலை விமர்சகர். தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட சர்க்கோசி ஆட்சிக்கு வந்தவுடன், எதார்த்தவாதியானார். உலக அரசியலில் இனி தீவிர வலதுசாரிகளுக்கோ அல்லது தீவிர இடது சாரிகளுக்கோ இடமில்லை என்ற உண்மையை சர்க்கோசியும் அறிந்திருந்த காரணத்தால், தமது கட்சி அமைச்சரவையில் இடதுசாரி சிந்தனைவாதிகள் பலரை சேர்த்துக்கொண்டார். அவர்களுள் பிரடெரிக் மித்தரானும் ஒருவர். கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது. வலது சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும் அவரது இடதுசாரி சிந்தனையை எவரும் சந்தேகித்ததில்லை.

 

போலந்தில் பிறந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமான பிரபல திரைப்பட இயக்குனரான ரோமன் போலஸ்கியை (Rosemary’s Baby, Chinatown) சமீபத்தில் ஸ்விஸ் காவல்துறை கைது செய்தது.  அவர் கைது செய்யப்பட காரணம் 1977ம் ஆண்டு திரைப்படமொன்றை இயக்குவதற்காக அமெரிக்காவில் தங்கி இருந்தபொழுது இளம்வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் பாலியியல்குற்றச்சாட்டு. இப்பிரச்சினையில், ரோமன் போலஸ்கி ஒரு பிரெஞ்சு குடிமகனாகவும் இருந்ததால் அமெரிக்காவைக் கண்டித்து  பிரடெரிக் மித்தரான் அறிக்கை வெளியிட்டார். முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு வழக்கில் வெறும் குற்றசாட்டுகளின் அடிப்படையில் ஒரு சாதாரண மனிதரைபோல ரோமன் போலஸ்கிபோன்ற கலைவிற்பனரை கைது செய்யவேண்டும், விசாரணைக்குட்படுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பது நியாயமல்ல என்றார். இவரது அறிக்கையை பலரும் கண்டித்தார்கள். போலன்ஸ்கியின் தவறை நியாயப் படுத்துகிறார் என்றார்கள். எனினும் அமைச்சர் ரோமன் போலஸ்கியை உணர்வு பூர்வமாக ஆதரித்ததைப் பலரும் சிலாகித்தார்கள். எனவே அமைச்சரின் கருத்து எழுத்தாளர் மரிதியய்க்கு ஆதரவாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு. ஓடோடிச்சென்று ரோமன் போலஸ்கியை ஆதரித்தவர், எழுத்தாளருக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை..ம் இல்லை. எழுத்தாளருக்கு உண்டான பேச்சு சுதந்திரம் எழுத்தாளரை விமர்சிக்கிறவர்களுக்கும் உண்டு எனக்கூறி தமக்கு அமைச்சர் பதவி அளித்த சர்க்கோசிக்கு விசுவாசமாக நடந்துகொண்டார். “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரிக்கொப்ப.

 

பிரான்சு நாட்டையும், அதிபரையும் விமர்சனம் செய்துவிட்டு, பிரெஞ்சு இலக்கிய பரிசினை வாங்குவது தவறு என்ற ஆளும் கட்சியின் விமர்சனத்தை பரிசுபெற்ற பெண்மணி மரி தியய் எப்படி எடுத்துக்கொண்டார். “இங்கே பாருங்கள் எனக்குப் பரிசினைக்காட்டிலும் பேச்சு சுதந்திரம் முக்கியம், அதிபர் சர்க்கோசி குறித்தும், அவர் நிர்வாகத்தின் கீழுள்ள பிரான்சு குறித்தும் எனக்கு இப்போதும் ஒரே அபிப்ராயந்தான். பரிசுக்காக அதிபரிடமோ, பிறருடனோ சமரசம் செய்துகொள்ள நான் தயாரில்லை”, எனக் கறாராகச்சொல்லிவிட்டார்.

 

“தனது எண்ணத்தையும் கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிப்பதே மனித உரிமைகளுள் மிகவும் உன்னதமானது” என 1789ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 26ந்தேதி மனித உரிமை பிரகடனத்தின் பிரிவுக்கூறு எண் 11 தெரிவிக்கிறது. அதன்படி ஒரு குடிமகன் சுதந்திரமாக பேசவும், எழுதவும், எழுதியதைப் பிரசுரிக்கவும் அது வழிவகுக்கிறது. ‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ – ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல். எழுத்து வெளியைப்போல ஒரு சுதந்திர உலகம் இருக்க முடியாது. எழுத்து என்னை வசீகரித்ததற்கும் பிரதான காரணம் இதுவே. சுதந்திரம் என்ற சொல் தனி மனிதன், சமூகம் என்ற இரு முனைகளுக்கும் கயிற்றில் நடக்க முயல்கிற கழைக்கூத்தாடியொருவனின் கவனத்தைப் பெற்றது. இரு முனைகளும் ஒத்துழைக்கவேண்டும். சில சில்லறைவிதிகளென்ற கம்பைக் கையிலேந்தியபடி பிசகாமல் அடியெடுத்து வைக்கும் வித்தை. சுதந்திரத்தினை இருவகையில் தனிமனிதன் பிரகடனபடுத்தமுடியும்: எதிர் தரப்பு அதிகாரத்திற்கு அடிபணிவதில்லை, கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை, இச்சைக்கு இணங்குவதில்லையென எதிர்வினைகளூடாக தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பதென்பது ஒரு வகை. எனது எண்ணம், எனது சிந்தனைகள், எனது முடிவுகளென சொந்த விருப்பத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக சுதந்திரத்தைப் போற்றுவதென்பது இன்னொருவகை. இரண்டிற்கும் நோக்கமொன்றுதான்: நாமார்க்கும் குடியல்லோம்.

(மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து)

__________________________________________

 

 

 

படித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை

பிரெஞ்சு மொழியில் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் :

–  மூன்றாம்  உலக நாடொன்றில் பிறந்து அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக புலம்பெயர்ந்து, தங்கள் பிழைப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் படைப்புலகிற்குள் நுழைகிறவர்கள் ஒருவகை ;

– அதேகாரணத்திற்காக சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரான்சு நாட்டில் குடியேறி கல்வியைப் பிரஞ்சு மண்ணில் முடித்து, பிரஞ்சு பண்பாட்டில் திளைத்து, மிகத் திறமையாக மொழியைக் கையாண்டு கவனம் பெறுகிற கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொருவகை.

ஆந்த்ரேயி மக்கீன், இரண்டாவது அணியினரைச் சேர்ந்தவர்.  முன்னாள் சோவியத் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டில் வாழும் எழுத்தாளர். கம்யூனிஸ நாடுகளின் அடக்குமுறைக்குத் தப்பித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கையைத் தொடரும்  ஐம்பதைக் கடந்த கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் இங்கிலாந்தைப்போல ஜெர்மனைப்போல பிரான்சு நாட்டிலும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த எழுத்திற்கென்றுசில  பொதுவான குணங்கள் உண்டு : சொந்தமண்ணையும் உறவுகளையும் பிரிந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் அடகுவைத்து ;  தனது அடையாளம் வேரா கிளையா என்பது தெரியாமல் ; தொலைத்தவற்றையும், கண்டெடுத்தவற்றையும் சமன்செய்ய வக்கின்றி ; கடந்தகாலம்x நிகழ்காலம் ; தாய்நாடுxதஞ்சமடைந்த நாடு ; வாழ்ந்த ஊர்x வாழ்கின்ற  ஊர் எனும் இருமைப்பண்புகளில் சிக்குண்டு ; எங்கிருக்கிறேன், நான் யார் ? என்ற கேள்வியில் உழன்று ; ஆசிய சதுப்புநிலத்தில் சிக்கிய சைபீரிய பறவைபோல இரை மறந்து திசை நினைத்து வாடும் எழுத்து புலம்பெயர்ந்தவர் எழுத்து :  பிறந்த மண்ணைக்குறித்த ஏக்கம், பெருமிதம் – குடியமர்ந்த நாடு அளிக்கும் ஏமாற்றம் சோர்வு –   எனக் கதைக்கும்முறை.   ஆந்த்ரேயி மக்கீனிடமும் இவை எதிரொலிக்கின்றன.

‘ ஒரு நாள் மாலை நேரம். இருவரும் மலைச் சரிவொன்றில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சாட்டையால் அடிப்பதுபோலக் குளிர்காற்று அவர்கள் முகத்தில் வீசிக்கொண்டிருந்தது உறைந்த பனித்துகள்கள் காற்றில் கலந்து  அவர்கள் கண்களை மறைத்தன. இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்தபோது, பின்னாலிருந்த அவ்விளைஞன் அவள் காதில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா’, ’ என்கிற செக்காவ் வரிகளுடன்  நாவல் தொடங்குகிறது. ‘புலம் பெயர்ந்த ஒருவரின் தாயகம் அவர் தாயகத்தின் இலக்கியம்’(பக்கம் 24) என யாரோ ஒருவர் குறிப்பிட்டதாக நவலில் வரும் கூற்றை  ஆந்திரேயி மக்கீன் இங்கு நியாயப்படுத்துகிறார்.

செக்காவ் கதையில் வருகிற அத்தகைய சந்தர்ப்பமொன்றில், இந்நாவல் கதைநாயகன் ஷூட்டோவ் தன்னுடைய முன்னாள் ரஷ்யக் காதலி ‘யானா’ என்பவளிடம் உரைத்த காதல் மொழி என்பதோடு நேற்றைய லெனின் கிராடு அனுபவங்களைத் திரும்பப்பெறவும்,  தன் வேரினைத் தேடி அவன் பயணிக்கவும் உந்துதலாக அமைகிற மொழியும் இதுவே.  இருநூறுபக்கமுள்ள நாவலில் முதல்  79 பக்கங்களில்  சொல்லப்படும் கதைநாயகனின்  இரண்டு பெண்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஒரு புலம்பல். மாறாக நாவலின் பிற்பகுதியில், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் ஓட்டலொன்றில் (ஷூட்டோவ் முன்னாள் காதலி யானாவிற்குச் சொந்தமானது) வேண்டா விருந்தாளியாகக் கட்டிலில் கிடக்கிற வோல்ஸ்கி என்ற ‘முன்பின் தெரியாத’ கிழவனின்  இறந்த கால மீட்டெடுப்பு காட்சிகள் ஆந்திரேயி மக்கீன் ஒரு பேரிலக்கியவாதி என்பதை உறுதி செய்பவை. உண்மையில்  நாவலின்  இதயத் துடிப்பிற்குத் தமணியும் சிறையுமாக இருப்பவர்கள் வோல்ஸ்கி – மிலா ஜோடியினர் :  தம்பதிகளின் வாழ்க்கைப்பாதை  செப்பனிடப்படாத பாதை, கற்களும் முட்களும் நிறைந்த பாதை. பகைவர்கள் லெனின்கிராடை முற்றுகையிட்டிருக்க, தோழர்கள் என நம்பப் பட்ட ஆட்சியாளர்கள் சொந்த மக்களின்  வாழ்க்கையை முடமாக்கிய காலம்.

எழுத்தாளன் ஷூட்டோவுடைய  நிகழ்காலம், இறந்தகாலத்தைக்கொண்டு  மூன்று ஓவியச்சீலைகளை  ஆந்திரேயி மக்கீன் நம் கண்முன் விரிக்கிறார்.ஷூட்டோவ்-லெயா-பாரீஸ், ஒன்று ; ஷூட்டோவ்- யானா – செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், இரண்டு ; வோல்ஸ்கி-மிலா-லெனின் கிராட், மூன்று.

 

அ. ஷூட்டோவ்-லெயா- பாரீஸ்

கதை நாயகன் ஷுட்டோவ், ‘ ஐம்பது வயதாகிறது, நிறையப் படித்திருக்கிறான், ஆய்வு செய்திருக்கிறான், வறுமையைக் கண்டிருக்கிறான். அவ்வப்போது கொஞ்சம் வெற்றியையும் பார்த்திருக்கிறான்’  என்கிற தன்னைப்பற்றிய அவனது கர்வம்  அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.  அவனுக்குத் தான் வாசித்த நேற்றைய ரஷ்யக் காதல் கதை’மிக எளிமையானது, இருந்தாலும் சரியானது, பொருள் பொதிந்தது’ மாறாக இன்றைய பிரெஞ்சுக் காதல் கதைகள் ‘ நூறுபக்கம் பாரீஸ் நகர காமக் களியாட்டங்கள், பின்னர் மனச்சோர்வு’ இவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது ‘பிரெஞ்சு மொழி பேசும் கறுப்பரின எழுத்தாளன் ஒருவன் ‘அங்கிள் பென்’ விளம்பரத்தில் வருபவன்போல இளித்துக்கொண்டிருந்தான், மெல்லிய கண்ணாடி அணிந்த  சீனன் ஒருவன் தன்பார்வையை இங்கும்மங்கும்  சுழலவிட்டுக்கொண்டிருந்தான், அதிலும் குறிப்பக ரஷ்யனான ஷூட்டோவை  அடிக்கடிப்பார்த்துக்கொண்டிருந்தான், பிரஞ்சு இலக்கியம் உலக மயமானதற்கு முத்தான மூன்று சான்றுகள்’  என தன் எண்ணத்தில் எச்சிலைச் சுமக்கும் கதைநாயகனோடு, இளைஞர்களை இன நிற வேறுபாடின்றி மோகிக்கிற  பிரெஞ்சு வாலைக் குகமரி ஒருத்தி இரண்டரை ஆண்டுகள் குப்பைக் கொட்டியதே  நமக்கு அதிகமென்று தோன்றுகிறது  பாரீஸ் காதலி லெயா,பிரிவதென்று தீர்மானித்து அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிடுகிறாள் . அவனைவிட்டுப் பிரிந்து, இன்னொருவனுடன் செல்ல ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கு இருக்கின்றன :

* முதலாவதாக அவனுடைய வயது முக்கியக்காரணியாகப் படுகிறது. அவனுக்கு அவள் தந்தை வயது, அவளுக்கு அவன் மகள் வயது. இங்கே மாக்ஸ் கலோ(Max Gallo) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘பெண்களின் பார்வை’ (Le regard des femmes) கதை நாயகன் பிலிப் இதே வயது காரணமாக காதலி லிசா தன்னைவிட்டு விலகிப்போவதாக புலம்பும் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

* இரண்டாவதாக இவன் செக்காவ் ரசிகன், ‘கிரங்கவைக்கும் குளிர், எளிதில் மருளும் காதலர்கள் ‘ என செக்காவ் படைப்புக் காட்சியை ஒரு எழுத்தாளனாகப் பார்ப்பவன். ஷூட்டோவிற்கு, செக்காவ்  ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா ‘ என்ற வரியைக்கூட காவியமாக்கும் திறமைசாலி.  ஆனால் லெயா தெய்வமாகக் கொண்டாடும்  எழுத்தாளர்கள் புத்தகங்களில் ‘…காதல் மணம் வீசுவதில்லை. எச்சில் நாற்றம்தான் வீசுகிறது… அருவருப்பு ….  ‘  என்கிற  நிலமை.

இப்படி நடுத்தர வயதைக்கடந்த எழுத்தாளனுக்கும், அவன் மகள் வயதுடைய பெண்ணொருத்திக்கும் இடையிலான பேதங்கள் அவர்களுக்கிடையே தீராத வாக்குவாதத்திற்குக் காரணமாக ஒரு நாள் அவன் ரஷ்யப்பெயரை ‘சர்க்கஸ் கோமாளி’ எனக் கோபத்துடன் நக்கல் செய்து அவர்கள்  உறவுக்கு விடைகொடுக்கிறாள்.

‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பு, கதை நாயகனை பாரீஸிலிருந்து லெனின்கிராடிற்கு அதாவது இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ் பர்கிற்கு துரத்துகிறது. அவன் நினைவில் நிழற்படமாகவிருக்கிற  ‘யானா’ என்கிற முன்னாள் காதலியையும் அவள் சார்ந்த லெனின்கிராடு நினைவுகளையும் உயிர்ப்பிக்க ‘வெகு நாட்களுக்கு முற்பட்ட முகவரிகள் ! வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் ! பழைய பயண பையிலிருந்த எடுத்த கையேட்டுக் குறிப்புகளைப் படித்து பழைய வாழ்க்கையை  தம்முடைய இளமைக்காலத்தை மீட்டெடுக்க நினைப்பது, நாவலின் முதல் பகுதி.

 

ஆ. ஷூட்டோவ் – யானா- செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்

சோவியத் யூனியன் ருஷ்யாவாகவும், லெலின் கிராடு  செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் எனவும் மறுபிறவி கண்டபிறகு , ஷூட்டோவ்  தன் காதலி ‘ யானா’விடம் கடந்த கால லெனின்கிராடு நினைவுளை எதிர்பார்ப்பது கேலிக்குரியது. எதையோ நினைத்து தாயகம் திரும்பும் கதைநாயகன் நாம் நினைப்பதுபோலவே ஏமாற்றத்திற்குள்ளாகிறான். பழைய லெனின் கிராடு இல்லை, ‘மேற்கத்திய நாகரிகத்தின் சாரத்தை அவன் பிரான்சில் கூட காணத வகையில் இங்கு கொண்டுவந்துவிட்டார்கள்.’  புரட்சியின் பேரால் கொல்லப்பட்ட  இரண்டாம் நிக்கலிஸின் கொள்ளுப்பேரனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் அது.  ‘கிரேக்க பாதிரிமார்கள் புனிதரின் எச்சமிச்சங்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஓரின சேர்க்கையை விரும்பும் இரண்டு ராக் பாடகிகள் ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய நாணத்தைச் சாடுகிறார்கள். பெர்லுஸ்கோனி பவரோத்தியுடன்  டூயட் பாடுகிறார். ரஷ்ய சிலவராட்சி உறுப்பினர் ஒருவர் ஆல்ப்ஸ் மலையில் ஆறு சேலட்கள் வாங்குகிறார்’ கதை நாயகன் எதிர்பார்த்த  ‘லெயா’ வயது ‘யானா’ இன்று முதுமை வயதில் ருஷ்யா எடுத்துள்ள புதிய அவதரத்திற்கேற்ப ‘கொத்து கொத்தான ஹாலோஜன் மின் விளக்குகளின் கீழ் பிரகாசிப்பவள் ‘. மேற்குலகின் நகலாக காட்சி அளிக்கும் இன்றைய ருஷ்யாவின் நடைமுறைகள் அவனுடைய இனத்தோடு சேரும் சுக உணர்வும்,இருபது ஆண்டுகள்கழித்து நம்முடைய உலகத்தோடு தொடர்புகொள்வோம்  என்ற நம்பிக்கையும்’ பொய்க்க காரணமாக இருக்கின்றன.   

        ‘ ரஷ்யா அதற்கும் அதன் விதிப்பயனுக்குமிடையே  குறுக்கிட்ட அறுபது எழுபது ஆண்டுகால  நிகழ்ச்சிகளைத் துடைக்க முயலுகிறது. ஆம் அழகான ஒன்றை அச்சமும், அறிவுசார் அடிமைத்தனமும் ஆயிரமாயிரம் கொலைகளும் கலந்து சேறும் சகதியுமாக ஆகிவிட்டன’, ‘ஷூட்டோவ் மனதுக்குகுள் சிரித்துகொண்டான். தெளிவு மனதைக் காயப்படுத்தியது. அவனைக் கண்டு கொள்ளாமலேயே வரலாறு தன் போக்கைத் துறந்து மீண்டும் தூய்மை ஆகின்றது. அவனோ எல்லோரும் மறக்க விரும்பும் அம்மோசமான காலக்கட்டத்தின் சேற்றிலேயே உழன்றுகொண்டிருந்தான். ‘நான் வந்தது தவறு’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்’(பக்கம் 74), என ஷுட்டோவ் நினைக்கிறான்.

 

இ. வோல்ஸ்கி – மிலா – லெனின்கிராட்

        ‘ யாரிடமாவது மனம் திறந்து தனது பயனற்றுப் போன பயணம், யானாவிடம் மீண்டும் இணைய முடியாத சோகம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’(பக்கம் 78) என்றிருந்த ஷுட்டோவுக்கு  புதையலைப் போல ஒரு சந்திப்பு. பாரீஸ் வாழ்க்கையிலிருந்தும், தன்னைக் கைவிட்ட ‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பளித்த துயரத்திலிருந்தும் தப்பிக்க ஷூட்டோவ் தேடிவரும் லெனின்கிராட் நகர இளமைக்காலத்தையும்  நாற்பதுகளில் கண்ட சோவியத்யூனியனையும்  ஒரு முதியவர் வடிவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் இவனுக்கென்றே பத்திரபடுத்தி வைத்திருக்கிறது.  

        பத்து நாளைக்கு முன்னால் ஒரு முதியோர் இல்ல த்தில் சேர்க்கப்பட இருந்தார். அதற்குள் மூன்றாவது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எல்லாம் மூடப்பட்டுவிட்டன. விளைவு,  எங்களுக்கு  ஒட்டும் உறவும் இல்லாத இந்த வயோதிகரை நாங்கள் வைத்திருக்க வேண்டியதாயிற்று !’(பக்கம்54 ) என முதியவரை ஷூட்டோவின் முன்னாள் காதலி அறிமுகப்படுத்துகிறாள். அவள்  கூறியதுபோல பத்துநாளைக்கு முன்பாக கிழவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், இந்த நாவலே இல்லை. ஷூட்டோவ் மட்டுமல்ல நாமும் ஏமாந்திருப்போம். முன்பின் தெரியாதவன் வாழ்க்கை என நாவலுக்கு பெயரிட்டதும், எழுத முற்பட்ட தும் முதியவரின் கல்லறை காரணமாகத்தான், என்பது நாவல் இறுதியில் தெரிய வருகிறது.

சில நேரங்களில் மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களின் விதியைத் தீர்மானிக்கிற சம்பவமாகவும் அமைவதுண்டு.  வோல்ஸ்கி ஓர் இசைநாடகக் கலைஞன், தொழிலுக்கேற்ப நன்குபாடவும் செய்வான். அவனைப்போன்றே இசைநாடகப் பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவள் மிலா. இருவரின் முதல் சந்திப்பு  எதேச்சையாக  இசைக்கல்லூரி  மாணவர்கள்காக  இருந்தபோது நிகழ்கிறது. ‘செம்பட்டை முடியுடன் கூடிய ஓர் இளம்பெண்’ ஆன  ‘மிலா’வை, ‘தன்னுடைய பாட்டின் மென்மையினால் வாழ்ந்து விடலாம், தன்னை வெற்றிகொண்டவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, இருளிலும் கூடப் பிரகாசிக்கும் கண்களைக்கொண்ட பெண்களைக் கவரமுடியும்’ என்று வோல்ஸ்கி மனப்பால் குடித்திருந்த தருனத்தில்  சந்திக்கிறான்.   பிரிவோம் சந்திபோம்’  என்ற சூத்திரத்தினால் முடையப்பட்ட வோல்ஸ்கி – மிலா உறவில் எதிர்பாலின வேட்கைக்கு அதிகப் பங்கில்லை. அவர்கள் பரஸ்பர அன்பிற்குச் சாட்சியாக இருப்பது  நூற்றுக்கணக்கான லெனின்கிராட் வாசிகளைப்போல  ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன் அன்பே’, என்ற பாடல் மட்டுமே.  ‘மிலாவுக்கு எப்படியோ, அவனுக்கு ஊர் மெச்சும் இசைநாடகக் கலைஞனாக புகழ்பெறும் கனவுகள் இருந்தன.  ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.   இவர்களுக்கிடையே நிகழும் மூன்று சந்திப்புகளும், அவை துளிர்க்கின்ற தருனம் முதல்  இற்றுவிழும் நொடிவரை சொல்லப்படும் வாழ்க்கையும், பின்புலமாகச் சித்தரிக்கப்படும் சோவியத் யூனியனும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை.

இரண்டாவது சந்திப்பு  நிகழும்போது : இரண்டாம் உலகப்போர், லெனின் கிராட் முற்றுகை, குண்டுவீச்சு, தினம் தினம் கல்லறையாக மாறும் வகையில் ஆயிரமாயிரம்பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சமும் பசிநோயும் மக்களை வாட்டுகிறது. தற்போது அவன் இசைநாடகக் கலைஞன் இல்லை. பிணம் சுமப்பவன். ஆம் தங்களைச் சுற்றிலும் இறந்து கிடக்கும் சடலங்களை உயிரோடிருப்பவர்கள்தான் கல்லறைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதன்படி ஒரு பிணத்தை வண்டியில் போட்டு இழுத்துச் செல்கிறான். இவனைப்போலவே பெண்ணொருத்தி பிணவண்டியை இழுத்து வருகிறாள். இருவரும் மூச்சுவாங்க சற்று ஓய்வெடுத்து, கைவசமிருக்கும் காய்ந்த ரொட்டியைக் கடிக்கிறபோது, தங்கள் காரியத்தை இலகுவாக்கும் நோக்கில் வோல்ஸ்கி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்கிறான் :

– நான் என் அணடைவீட்டுக்காரர்  பிணத்தை இவ்வாறு சுமந்து செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை .வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய பிணம் யாருடையது ?

        – என் அம்மா !  என்று அவளிடமிருந்து பதில் வருகிறது.

        இருவரும் ஒரு நிமிடம் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மவுனமாக நின்ற இடத்திலேயே  நின்றார்கள். குளிர் பூஜ்யத்துக்குக் கீழ் முப்பது டிகிரி. அழுவதற்கு அதுவல்ல நேரம். ‘ (பக்கம் 98  )என ஆந்திரேயி மக்கீன் எழுதுகிறார்.

எதிரபாராமல் இசை நாடக அரங்கும் இவர்களுக்குக் கதவைத்திறக்கிறது. புணர்வாழ்வு கிடைத்த தென கலைஞர்கள் இருவரும்  கிடைத்தப் பாத்திரமேற்று நடிக்கின்றனர். இவர்களின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிப்பதில்லை. யுத்தம் வோல்ஸ்கி – மிலா ஜோடியைப் பிரிக்கிறது. வோல்ஸ்கி லெனின்கிராடை காப்பாற்றும் பொருட்டு போர்முனைக்குச் செல்கிறான். யுத்தம் செய்யும் களம் நிலையாக ஓரிடம் என்று சொல்லமுடியாததால் இருவருரிடையே கடிதப்போக்குவரத்துகள் இல்லை. ஆகத் திரும்பப் பிரிவினைச் சந்திக்கின்றனர்.

மூன்றாவது சந்திப்பு –  நீண்ட இடைவெளி,  ஒரு சனிக்கிழமை நிகழ்கிறது.  வோல்ஸ்கி  தனது கடந்த காலத்தில் மூழ்கி இருக்கிறபோது முகவரியொன்று நினைவுக்கு வர  ‘மிலா’ வைப்பற்றி விசாரிக்கலாம் என்று அங்கு போகிறான்.  வழியில்  பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருந்தியை ‘செம்பட்டை முடி பரத்தை, போரின் விளவு’ என்று முனுமுனுத்துவிட்டு, சற்று தூரத்தில் துணி காயவைத்துக் கொண்டிருந்த  பெண்மணியிடம் ‘மிலா’வைப் பற்றி விசாரிக்கிறான். அவள் காறித் துப்பிவிட்டு ‘உன் சல்லாபங்களைத் தொடங்க இரவுவரைகூட காத்திருக்க கூடாதா, வெட்க க்  கேடு, இனி பகலில்கூட வருவார்கள்’, என்கிறாள். திரும்ப வருகிறபோது பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்னை மறுபடியும்  காண்கிறான் :

அவள் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தாள். தாலாட்டைப்போல, அவள் அன்பே உன்னோடு மட்டும் என் கனவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று பாடினாள். அடுத்த அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று உரத்த குரலில் பாடினான். அப்போது அவள் உதடுகள் அசைந்த து அவனுக்கு வியப்பாக இல்லை. கண்கள் மூடியபடியே ஒரு புன்னகையைச் சிந்தி அவளுக்குள் இருந்த இன்னொரு ஜீவனை எழுப்பிவிட்டு பாடவைத்தாள். வோல்ஸ்கி அவளைத் தூக்கிவிட்டான். அவனுடன் அவள் சென்றபோது ஓர் இனிய கீதத்தின் தாக்கத்தால் அவள் தள்ளாடி நடந்தாள்.

‘என்று மக்கீன் அந்த ஜோடியின்  சந்திப்புகளை எழுதுகிறபோதெல்லாம்  படைப்பு அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  இந்த இடைப்பட்டக் காலத்தில்  அநாதைச் சிறுவர்களைக் காப்பாற்றத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர்களின் ஒரு வேளை ரொட்டிக்காக தாய்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிஒருவனுக்குச் சோரம் போகத் தொடங்கி இன்று ஓர் வேசியாக வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ள அவலத்தையும் பகிர்ந்துகொள்கிறாள்.

மிலா ஓர் இசை ஆசிரியை ஆகவும், வோல்ஸ்கி ஓர் அஞ்சல்துறை ஊழியனகாவும்  மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஸ்டாலின் அரசாங்கத்தின் இரகசியக் காவற்படை பொய்யானக் குற்றச் சாட்டை முன்வைத்து இவர்களைச் கைது செய்கிறது. அன்றைய வழக்கபடி விசாரனை, கடுங்குளிர் நிலவும் பிரதேச முகாம்களில் சிறையென,  பிரிவு இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் குறுகிடுகிறது. ‘மிலா’ உடனான நான்காவது சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வோல்ஸ்கி  ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்.

 

நாவலின் இறுதியில் கூறுவதுபோல ‘எழுதுவதற்குத் தகுதியான வார்த்தைகள், மொழியில் சொல்லமுடியாத வார்த்தைகள்தான்’  என்பதாலோ என்னவோ, அந்த சொல்லமுடியாதவை  நெஞ்சில் ஏதேதோ அனுபவங்களாக விம்மித் துடிப்பதை உணருகிறோம். உணர்ச்சிப்பெருக்கில்  வார்த்தையின்றி  வோல்ஸ்கி கிழவனைப்போலவே பேச்சை வெறுத்து மௌனத்தில் ஆழ்கிறோம்.  ‘போர்கள், முகாம்கள், இரண்டு உயிர்களின் வலுவற்ற உறவுகள் என இப்படித்தான் கோல்ஸ்கி – மிலா ஜோடி வாழ்க்கை இருக்கின்றது.

வாழ்க்கையில் முதன் முதலாக எந்த ஊரும் சொந்த ஊர் இல்லையென்றும், அவன் போகும் இடங்கூட விரும்பிப் போகும் இடமில்லையென்றும், ஆயினும் இதுவரை இல்லாத அள்வுக்கு அவனுடைய சொந்த நாட்டின் மீது பற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நாடு ஓர் இடத்தைக் குறிக்கவில்லை. ஒரு சகாப்தத்தைக் குறித்த து – வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்தம். …ஆம் வெட்கப்படவேண்டிய அரக்கத்தனமும் கொலைவெறியும் தலைவிரித்தாடிய அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலையைத் தூக்கி ஒருவன் வானத்தைப் பார்த்திருக்கிறான்’  என்பது பாரீஸுக்கு திரும்பும் ஷூட்டோவ் மனநிலை. நம்முடைய மனநிலையும் அதுதான்.

இதுபோன்ற நூல்கள் தமிழில் வருவதனால், தமிழ் படைப்புகள் கூடுதல் வளம் பெறும். பதிப்பகத்திற்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் தமிழ் படைப்புலகம்  நன்றி கூற கடமைப்படுள்ளது.

—————————————————————-

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை (நாவல் )

தமிழில் பேராசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

 

————————————————————————————————-

 

 

படித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி

அர்ச்சுனன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள்- சா.பாலுசாமி   

 

ஒரு கால கட்டத்தின் கலை இலக்கியத்தை வாசிப்பதென்பது, அக்காலகட்டத்தின் சமூகத்தையும், மக்களின் வாழ்நெறியையும் அறிதலாகும் கலைக்கூறுகள் எவ்வடிவமாயினும் அது பண்பாட்டின் அடையாளம். மனித இனம் தனது பண்பாட்டினை, உணவு, உடை, உரையாடும் மொழி, கொண்டாடும், பண்டிகை, ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகம் என வெளிப்படுத்துவதோடு திருப்திகொள்வதில்லை, அது சார்ந்த மகிழ்ச்சியை,  துயரை, அச்சத்தை, கவலையை, கோபத்தை, வியப்பை, அன்பை, பரிவை, காமத்தை உணர்வுகளைக்கொண்டு  தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களுடன் உரையாடவும்  செய்கிறது,    பார்த்தலும், நுகர்தலும், சுவைத்தலும், கேட்டலும், தொட்டுணர்தலும், நம்மைசுற்றியுள்ள நிகழ் உலகை புரிந்துகொள்ளவும் ; அப்புரிதலால் இசைந்தோ முரண்பட்டோ  வாழ்க்கையை நகர்த்தவும் செய்கிறோம். இந்த அடிப்படை உணர்வுகள் இல்லையேல் பிரபஞ்சமே பொய் என்றாகிவிடும். சா. பாலுசாமி போன்றவர்கள் கடந்த காலத்தையும் புரிந்துகொள்ள  முயற்சிக்கிறார்கள். சிக்மண்ட் பிராய்டு கூறுவதைப்போல « சிதைந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ».  பிராய்டு உளவியல் அறிஞர் என்பதால், தொல்லியல் முயற்சிகளுக்கு, உளவியல் அகராதியில் விளக்கம் தேடுகிறார். தொல்லியல் அறிஞர்கள் மானுடம் கடந்துவந்த பாதையைச் தேடிச்செல்பவர்கள்.காலத்தால் புலம்பெயர்ந்திருக்கும் மனித கூட்டத்திற்கு, புறப்பட்ட புள்ளியின் மகத்துவத்தை நினைவூட்டும் பணி.

 

மூதறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி  « தமிழ் அழகியல் பற்றிய மதிப்பீடு, தமிழ்க்கலைகளின் ஒட்டுமொத்தமான மொத்தமான மதிப்பீட்டிலிருந்து வெளிவரவேண்டும் » என்ற ஒரு விருப்பத்தை நாயக்கர்கால கலைக்கோட்பாடு நூலின்அணிந்துரையில் தெரிவித்திருக்கிறார்.  தமிழ் நிலத்தின்  இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ;  இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக்கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது ? எப்படி அடையாளப்படுத்துவது ? நண்பர் சா.பாலுசாமி,  நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது.  தொடர்ந்து தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி :

« சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ …..வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச்(இந்திய) ஒழுங்கமைவு » என முன்வைக்கும்  குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தில் இலக்கியப் படைப்பாளிகளைப்போல பிறதுறைசார்ந்த கலைஞர்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை. நாமறிந்த தமிழகத்தில் ஓவியர் என்றால் பேனர் வரைபவர்கள்,  வீர சந்தாணத்தின் மரணத்தை சினிமா நடிகர் மரணமென சொன்னால்தான் தமிழர்கள் விளங்கிக் கொள்வார்கள் எனும் கொடுமை. ஐரோப்பிய நாடுகளிலோ  குழாய் பழுதுபார்ப்பவர், ரொட்டி சுடுபவர் கூட கலைஞர்(l’artisan).  இந்நாடுகளில் ஓவியம் சிற்பம் முதலான துறைகள் மட்டுமல்ல சமையல், நிழற்படம், ஆடை அலங்காரம், ஆபரணம், பேச்சு  இப்படி அனைத்தையும் கலையாக பார்க்கும் மரபு. நமது மரபில் இன்றுங்கூட தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர் ஆகியோரை கலைஞர்களாகப் பார்ப்பதில்லை சாதிக்குள் அடக்கி, கலைக்கு புறத்தில் வைத்து தொழிலாளிகளாகப் பார்க்கும் விநோதம் உள்ளது. இத்தகைய சமூக ஒழுங்கமைவில்  சா. பாலுசாமி போன்றவர்களின்  உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘ அர்ச்சுனன் தபசு’நூலுக்கு வழங்கியிருக்கிற அணிந்துரையில் :

« ஆய்வு, நுட்பம், விருப்பு வெறுப்பற்ற நடுநிலை பிறழாத அணுகுமுறை, அறிஞர் தம் கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி காணும்பண்பு, தொன்மங்கள் குறித்த ஆழமான பார்வை, எல்லா மொழிகளையும் நேசித்து உண்மைகாணும் திறம், கலையியல் கோட்பாடுகளின் வெளிப்பாடு, ஜடமென உலகப் பார்வையில் திகழும் பாறையினை நம்மோடு பேசவைத்துள்ள பாங்கு » என ஆய்வாளர் தொழிற்பட்ட முறையைப் பாராட்டியுள்ளார். காரணம் நம்மிடத்தில்  சார்பற்ற ஆய்வாளர்கள் குறைவென்பதை, அவர் நன்கறிவார்.

சா. பாலுசாமி நேற்றைய தமிழகம்  அங்கீகரிக்க மறந்த முன்னிலை படுத்தத் தவறிய படைப்பாளிகளைக் குறிப்பாக ஓவியர்களையும் சிற்பிகளையும் அவர்கள் படைப்பூடாக  பெருமைபடுத்துகிறார். இலக்கியத்திற்கு உ.வே. சா என்ன செய்தாரோ அதனையே சா.பாலுசாமி போன்றவர்கள் சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் செய்திருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் தொழில் செய்தோம், கருத்தரங்குகளில் கலந்துகொண்டோம், நான்கு ஐந்து ஆட்டோ ரிக்‌ஷாக்களை வாங்கிவிட்டு காசுபார்த்தோம் என்றில்லாமல் கள ஆய்வுக்கு நேரத்தை ஒதுக்கி, முடிவின்றி பயணம் செய்து இறுதியில் கண்டறிந்த உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

இது போன்ற ஆய்வுகளில் அக்கறைகொள்ள  முதலாவது தேவை தேர்வு செய்த பொருள் குறித்து ஞானமும், பேரார்வமும். அடுத்ததாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருளைத் துல்லியமாக அவதானித்தல். இறுதியில் கிடைத்த தகவல்களை ஒரு முறைக்குப் பலமுறை பிற அறிஞர்கள் கண்ட உண்மைகளோடு  ஒப்பீடு செய்து, நடுநிலமையோடு தம்முடைய கருத்தைப் பதிவு செய்தல். வருங்காலத்தில் இந்நூல்களெல்லாம் ஆய்வுக்கு உதவலாம் என்பதால் பொறுப்புடனும், கவனத்துடனும்  அக்கருத்துக்களை பதிவுசெய்வதும் அவசியம். நண்பர் பாலுசாமி கூடுதலாகவே உழைத்திருக்கிறார் என்பதுதான் நூல்கள் தெரிவிக்கும் உண்மை.

 

. ஆய்வுப் பொருள் பற்றிய ஞானமும், பேரார்வமும்

செய்யும் தொழில் எதுவாயினும் அதில் முழுமையாக ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அதிலும் ஆய்வாளர்களுக்கு இக்குணம் பெரிதும் இன்றிமையாதது. ஆசிரியரின் நூல்களைப் புரட்டிப்பார்க்கிறபோது, ஏதோ கடமைக்குச் செய்தவரல்ல என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், தேர்வு செய்த தலைப்புகளிலும், அவற்றை அணுகும் முறையிலும், காட்டும் ஆதாரங்களிலும், அறிஞர்பெருமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி தேடிப்பெற்றதிலிருந்தும் அறிகிறோம்  கீழ்க்கண்டவரிகளும் இத்துறைமீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன :

 

« 1933 ஆம் ஆண்டு டாக்டர் தயா எங்களை மாமல்லைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு நோக்கில் அவர் விவரித்தபோது ஏற்பட்ட கலையறிவும் கலையனுபவமும் எல்லையற்ற பரவசத்தை ஏற்படுத்தின. கலைச்சின்னங்களை அணுக வேண்டிய முறையும் புரிந்தது. பின்னர் அவருடனும் மாணவர்களுட னும் பலமுறை மல்லைக்குச் சென்றுவரும் வாய்ப்பால் பல்லவக் கலைகுறித்துப் பயிலும் ஆர்வம் தொடர்ந்தது » (  நூண்முகம், அர்ச்சுன ன் தபசு பக்கம் 19)

 

இந்நிலையில்  குமர குருபரர் பாடுவதைப்போல :

 

« மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார் »

 

என்ற நிலைக்கு நமது ஆய்வாளரும் ஆளானார் என்பதைக்  கீழ்க்கண்ட வரிகள் உறுதிசெய்கின்றன.

 

« ……..அவ்விளக்கங்களால் நிறைவுபெறாத மனநிலை தொடர்ந்து தேடச்செய்தது. ஆயினும் , நம்பத்தகுந்த உறுதியான முடிவுக்குப் பல்லாண்டுகளாக வர இயலவில்லை. இருப்பினும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு தீவிர மனநிலையோடு தொடர்ந்து தேடியதில், பல்வேறு கருதுகோள்கள் எழுந்து, மாறி, இறுதியாக ஒன்றை உறுதி செய்து, விளக்க முடிந்தது. » (நூண்முகம், அ.த. பக்கம் 19).

 

ஆய்வில் கண்டறிந்த முடிவுகள் அறிஞர்பெருமக்களுக்கு மட்டுமின்றி பிறமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு ஆய்வுகுறித்த தெளிதலின்றி சாத்தியமில்லை. ‘நாயக்கர் கால கலைக்கோட்பாடுகள் நூலில், ஆசிரியர், விஜயநகர அரசு, தமிழ் நாட்டில் அவர்கள் காலூன்றியது, அவ்வரசின் பிரதிநிதித்துவ ஆட்சிகள், அவர்கள்வீட்சிக்குப்பின் சுயாதீனமாக ஆண்ட நாயக்கர்கள், என நாயக்கர் கால கலைத் தடத்தை அரசியல் வரலாற்றுடன் தொடங்கி, கலையின்பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் உள்ளடக்கங்களென்று பரந்து விரிந்த கலைஆகாயத்தை, வாசகனின் கண் சிமிழுக்குள் அடைப்பதற்கு அசாத்திய துணிச்சலும் ஞானமும் வேண்டும்.  அவ்வாறே ‘அர்ச்சுனன் தபசு நூலில் ஒவ்வொரு சிற்பத்தையும் விவரிக்கும் முன்பாக அச்சிற்பத்தோடு  இணைந்த இலக்கியம், புவியி யல் தகவல்களை ஆதார த்துடன் தெரிவித்துள்மை ஆய்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நூலின் நன்றியுரையில் அவர் சுட்டும் அறிஞர் பெருமக்களின் பெயர்கள், இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் நூலுக்கும், ஆசிரியரின் ஞானத்திற்கும் பெருமை சேர்ப்பவை.

 

. அவதானிப்பும்  ஆய்வாளரும்

 

ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய சிறப்பு குணங்களில் மிகமுக்கியமானது அவதானிப்பு, பொறுமையுடன் ஒரு பொருளை கண்களால் துழாவ அறிந்திருத்தல், உற்று நோக்குதல். இந்நூல்களில் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நாமும் சென்றிருக்கிறோம். நம்பில் பெரும்பாலோர் கோபுரங்களையும், மண்டபங்களையும், தூண்களையும், சிற்பங்களையும், சுதைகளையும்   பார்க்கவும் செய்கிறோம். வீட்டிற்கு வந்ததும் மதுரைக்குச்சென்றேன், மாமல்லபுரம் சென்றேன் என்று நமது பயணம் புள்ளிவிவரத்தை த் தாண்டி பெரிதாக உதவுவதில்லை. ஆனால் பாலுசாமி போன்றவர்கள் சிற்பங்களையோ, ஓவியங்களையோ பார்ப்பவர்களில்லை அவதானிக்கிறவர்கள்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.(குறள்  703, குறிப்பறிதல்)   குறளுக்கிணங்க ஒருவரின் முக க் குறிப்புக்கொண்டே  அவரது உள்ளக்குறிப்பை உணரக்கூடிய  ஆற்றல் சா.பாலுசாமிபோன்ற ஆய்வாளர்க்கு உண்டு..

« தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில்  வாலி, சுக்ரீவன் போர்க்காட்சி ஒரு தூணிலும், வாலிமீது ம்பு தொடுக்க வில் வளைத்துள்ள இராமர் உருவம் மற்றொரு தூணிலும் காட்டப்பட்டுள்ளன. இராமன் உள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும்படியும், வாலி உள்ள தூணிலிருந்து பார்த்தால் இராமன் உள்ள தூண் தெரியாதபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். »(பக்கம் 135 நா.க.கோ)

 

18 ஆம் நூற்றாண்டைச்சார்ந்த சிதம்பர சிவகாமியம்மன் ஆலய ஓவியம் : பெண்கள் இருவர் சமைக்கும் காட்சி

« அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, பச்சை ஆகிய மூல வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆடைக்கும் உடலுக்கும் ஏறக்குறைய ஒரேவண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுப்புக்கற்கள், எரியும் தீ, உறிக்கயிறு, உறியிலுள்ள பானைகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சமைக்க வைத்துள்ள காய்க்கும் , புடவைகளின் முந்தானைக்கும் ஒரே வண்ணம் கொடுக்கப்படெடுள்ளது. உருவங்கள் ஒரே திசை நோக்கி  அமைந்துள்ளன. அமர்ந்துள்ள பெண்ணின் தோள்களும் சமைக்கும் பெண்ணின் கைகளும் அளவொப்புமை யற்றுள்ளன. காட்சியில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களே மேற்பகுதியை அலங்கரிக்கவும் தரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (பக்கம் 206, நா.க.கோ)

« அவர் முன்னர் நிற்கும் தபசி, ஒற்றைக்காலில் நின்றவண்ணம் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, விரல்களைக் கோர்த்துள்ளார். மார்பில் எலும்புகள் துருத்தி க் காணப்படுகின்றன. இடையில் ஒரு சிறு ஆடை உள்ளது. முகம் மிக மேல் நோக்கியுள்ளதால் நேர்பார்வைக்கு மீசையும் தாடியுமாக வாய்ப்பகுதிமட்டுமே பெரிதாக த் தெரிகிறது.(பக்கம் 36 , அ.த)

சா. பாலுசாமியின் நூல்களில் இது போன்ற பல உதாரணங்களை அவதானிப்பிற்குச் சான்றாக எடுத்துக்காட்ட முடியும். நாயக்கர்கால கலை கோட்பாடுகளினும் பார்க்க அர்ச்சுன ன் தபசுவில் கூடுதலாக உதாரணங்கள் இருக்கின்றன.

 

 இ. ஒப்பீடும் முடிவும்.

 

ஓர் ஆய்வாளர்  எடுத்துக்கொண்ட பொருளை கவனமாக அவதானித்தபின் கிடைத்த தகவல்களை பிறசான்றுகளுடன் ஒப்பிட்டு பின்னர் தீர்க்கமான தொரு முடிவுக்கு வருகிறார். அம்முடிவு குடவாயில் பாலசுப்பிரமணியம் பாராட்டுவதைப்போன்று நடுவு நிலைமையோடும் எடுக்கப்பட்டுள்ளது.

 

« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். » என்கிறது குறள்.

 

« காடுகள் மிகுந்த இமயத்தின் இயற்கை இட து புறபாறையில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் பாயும் சிங்கத்திற்கு அடுத்தும், இரண்டு வேடர்களுக்கு இடையேயும் உடும்பு ஏறுவதாகவும் பெரு மரங்கள் காட்ட ப்பட்டுள்ளன. வானரத்திற்கும் முயலுக்குமிடையே தொகுப்பாக மரங்கள் செதுக்கபட்டு அடர்வனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த சிகரங்களைக்கொண்ட இமயத்தின் மலைகளும் ஆழ்ந்த பள்ளதாக்குகளும் பொங்கிப்பாயும் ஆறுகளும் விலங்குகள், வனங்கள் முதலிய இயற்கைப்பொருட்களும் இச்சிற்பத்தொகுதியில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (பக்கம் 69 அ.த)

 

« பனைமரம்போல் உயர்ந்த மலைகளில்  உச்சியிலிருந்து இறங்கிவந்துள்ள இந்த யானைகள் வைடூர்யம்போல் மின்னுகிற இப்பெரிய தடாகத்தைக் கலக்குகின்றன.

என அமையும் மகா பாரத த்தின் வருணனைக்கு ஏற்ப இந்த யானைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. »(பக்கம் 172 அ.த)  போன்றவற்றைக்கொண்டு முடிவுகளை தகுந்த ஒப்பீடுகளுக்குப் பின்னரே எடுத்துள்ளார் என்பது தெளிவு.

 

அவதானித்து கிடைத்த தகவல்கள், பிறசான்றுகள் அடிப்படையில் பகீரதனா ? அர்ச்சுனனா ? தவசி உண்மையில் யார் என்பதை இமயமலையின் இயற்கைப் பண்பு சான்றுகளை, மகாபாரத சான்றுகள் ஆகியவற்றோடு மாமல்லபுர சிற்பத்தொகுதியில்  இடம்பெற்றுள்ள மரங்கள், விலங்குகள், கந்தர்வர்கள், மலைவேடர்கள் ஆகிய உருவங்களை ஒப்பிட்டு தவசி அர்ச்சுனன்  எனத் தீர்மானத்திற்கு வரும் ஆய்வாளர் முடிவு இங்கே மிகவும் வலுவானது.

 

ஆய்வாளர் சா.பாலுசாமியைப்போல , பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப்போல மொழித்துறையிலும் பிறதுறைகளிலும் உண்மையாக உழைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போற்றுகிற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

* அர்ச்சுன ன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் இரண்டும் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.

படித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு

 

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

 

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

 

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

 

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

 

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கியவேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

 

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

 

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

 

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

 

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

 

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

 

 

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

 

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

 

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

 

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

 

 

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

 

(மல்லியும் மழையும்)

 

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

 

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

 

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

 

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

 

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

 

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

 

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

 

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

 

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

 

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

 

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

 

– வேஸ்ட் ஓ·ப் டைம்

 

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

 

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

 

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

 

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

 

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

 

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

 

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

 

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

 

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441 e.mail: umapublications@gmail.com

———————————-