Category Archives: கட்டுரைகள்

அடித்து வளர்க்கிற பிள்ளைகள்

சராசரி தமிழனுக்கு சூடுபிடிக்கும் தேர்தல் முக்கியம்.. புவி வெப்பமாதல் குறித்து ஒரு மாநாடு கோபன்ஹேகனின் கூட்டப்படுகிறது. அதுபற்றிய செய்திக்குறிப்பு எதையும் தமிழ் தினசரிகளில் பார்க்க நேர்ந்ததில்லை. இயற்கைக்கு எதிராக நிகழும் இப்பயங்கரவாதம் குறித்து தமிழ் தினசரிகள் கவலைகொள்ள எதுவுமில்லை. கடந்த ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் பலியாவனர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட செய்தியைத் தமிழ் தினசரிகளில் பார்க்க முடிந்தது. நாடுமுழுவதும் கண்ணீர் அஞ்சலி. கூட்டுபிரார்த்தனை. பலியானவர்கள் தாஜ் ஓட்டல் வாடிக்கையாளர்கள் என்பது காரணமாக இருக்கலாம். வி.ஐ.பி. உயிர்கள். தெருவோரம், புகைவண்டி இரயிலில், கடைவீதிகளில் பயங்கரவாதத்தால் பலியான உயிர்களுக்கு இத்தனை மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

குழைந்தைகளைக் கொஞ்சி, திரைப்படம் பார்த்து, தினசரியில் மூழ்கி, கோபம் வருகிறபோது காரணகாரியமின்றி சண்டையிட்டு, கோவிலைப் பார்த்த நேரங்களில் கையெடுத்துக் கும்பிட்டு வாழப்பழகிய சராசரி உயிரின் அன்றாட வாழ்க்கை சட்டென ஒரு நாள் இதுபோன்ற சம்பவங்களால் பிறழ்கிறது, தடம் புரண்டுபோகிறது. எங்கே யாரிடமும் அழ முடியும்? இவர்களில் எத்தனைபேருக்கு சம்பவத்திற்குப் பிறகு வாய்க்கிற வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனுண்டு? உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்கள், கால்கை இழந்தவர்களென்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சம்பவத்தின்போது பத்திரிகைகாரர்களுக்காக அரசாங்க எந்திரங்கள் ஓடோடிவந்திருக்கும், பொலபொலவென்று கண்ணீரைச் சிந்தியிருக்கும், ஆறுதல் சொற்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிகளின் கதியென்ன? பயங்கரவாதத்திற்கும் சரி, அதனை அடக்க நடவடிக்கைகள் எடுக்கிறேன் என்று சொல்லும் அரசாங்க வாய்ச்சவடால் முயற்சிகளுக்கும் பலியாவதென்னவோ அப்பாவி உயிர்களே. தலிபான்களைக் காட்டிலும், அமெரிக்க மற்றும் மேற்கத்திய படைகளின் தாக்குதலுக்குப் பலியாகும் ஆப்கானியர்கள் எத்தனைபேர். பயங்கரவாதமும் தங்கள் இருப்பை உணர்த்த ஆடுகளைத்தான் தேடி அலைகின்றன. இருதரப்பினருமே எதிரிகளோடு நேரடியாக மோத வக்கற்றவர்கள், தங்கள் பலத்திற்கு நோஞ்சான்களை பலிகொடுப்பது இருவருக்கும் ஒருவகையில் சௌகரியமாக இருக்கிறது. இரக்கமற்று மெலிந்தவர்களை பலிகொடுத்துவிட்டு சந்தர்ப்பம் வாய்க்கிறபோது இரத்தத்தில் தோய்ந்த நாக்கும் பல்லிடுக்கில் சதை துணுக்குமாக சமாதானம் பேச அமர்வார்கள்.

”வெடிபட்டு சாகாமல்

வெகுளியாய்

விஷக்காற்றைக் குடித்துப் பின்

நலிவுற்று முடமாய் துடிக்காமல்

முழு உடம்பாய்

இயற்கையாய் சாவது

அரிது, அரிது இன்று மிக அரிது!’

கவிஞர் வைதீஸ்வரனின் ‘மைலாய்’ வீதி நினைவுக்கு வருகிறது.

எதிரெதிராக மோதிக்கொள்கிறபோது புலிகளை வென்ற சிங்கங்கள், உண்ட மயக்கத்தில் நித்திரைகொள்கிற நேரத்தில் வாலைக் கடிக்கிற எலிகளைத் துரத்த வகையறியாது விழிக்கின்றன. கடிபடுவது வால் என்பதால் அவ்வபோது உறக்கம் கலைந்து தலையை உயர்த்தி கர்ஜிப்பதோடு சரி, கழுத்தினை எலிகள் நெருங்காதென்கிற நம்பிக்கை சிங்கங்களுக்கு நிறையவே உண்டு. வால் அப்பாவி உயிர்கள், எலிகள் தீவிரவாதிகள். பயங்கரவாதம் தீர்வுகாணமுடியாத, குணமாவாதற்கு வாய்ப்பற்ற மற்றொரு பறவைக் காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல். காரணமில்லாத பகை ஏது. பின் நவீனத்துவவாதிகள் சொல்வதுபோல பகை-நட்பினை, கோபம்- அன்பினை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆண் பெண், பணக்காரன் ஏழை, பகல் இரவு, மகிழ்ச்சி துக்கம், வெற்றி தோல்வியென நீங்கள் சோர்வுறும்வரை இருமைப் பண்புகளால் ஆன இவ்வுலகை கட்டுடைத்துக்கொண்டுபோகலாம். பின் நவீனத்துவாதிகள் இவை அனைத்தையும் மையம் விளிம்பு என்று இரு பெரும் பிரிவுக்குள் அடக்கினர். இருப்புகளில் ஒன்று மற்றமையை மறுக்கிறது, மற்றொன்றின் இருப்பினை ஏற்க அதற்குச் சம்மதமில்லை. ஆக யுத்தம், மோதல், போட்டி ஆகியன பிறமைகளை விளிப்புநிலைக்குத் தள்ளும் முயற்சி. டோம் ஜெரி விளையாட்டு. உண்மையில் யுத்தமோ மோதலோ சமபலம் கொண்டவர்களிடம் ஏற்படுவதில்லை. பிற உயிர்கள் மீது நிகழ்த்தும் அநேக தாக்குதல்களுக்கு ஏற்ற தாழ்வுகள் காரணமாக இருக்கின்றன. ஈராக் மீது யுத்தம் செய்ய தாயாராக இருக்கும் மேற்கத்திய நாடுகள் சீனா, வடகொரியா என்றால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன. சீனாவுக்கு திபெத்தை விழுங்குவது சுலபம். ஓரளவு ஆயுதபலங்கொண்ட தைவான் நாட்டினை சொந்தமாக்கிக்கொள்வதில் அத்தனை அவசரம் காட்டுவதில்லை.

இந்த மனம் எங்கிருந்துவந்தது? இதற்கான ஆரம்பம் எங்கே? அலுவலகத்தில் ஒரு மேலதிகாரி  அவனுக்குள்ள பதவி பலத்தில் கீழீருக்கும் ஊழியனைத் திட்டுகிறான். மாலையில் வீடு திரும்பிய ஊழியனுக்கு, கணவன் என்ற தகுதி தரும் பலத்தைப் பிரயோகிக்க தம்மினும் பார்க்க எளியதொரு உயிர் தேவை, மனைவி கிடைக்கிறாள், அவள் தம் பங்கிற்கு கோபத்தைக் குழந்தைமீது செலுத்துகிறாள் ஆக எதிர்ப்பவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். கோபத்திற்கென தனி உயிரணு இருக்கிறதா, அதை பிரித்தெடுத்து சிகிச்சை அளிக்க்கும் பட்சத்தில் அத்தனைபேரும் சாந்த சொருபீகளாக மாறிவிடமுடியுமா? எப்போதோ ஒரு முறை படித்த நூலில் வன்முறைக்கு உணவும் காரணமென்று படித்திருக்கிறேன். அசைவ உணவுகாரர்கள் கோபக்காரர்களென்றும், சைவ உணவு பிரியர்கள் அமைதியானவர்களென்றும் படித்த நினைவு.விலங்குகளிடத்தில்கூட இப்பேதங்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்.

மருத்துவர் எட்விஜ் ஆந்த்தியெ இங்கே (பிரான்சு நாட்டில்) ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணி. இவரொருபுகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவருங்கூட. உலகில் வன்முறையைக் குறைக்கவேண்டுமெனில், பெற்றோர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதை தடைசெய்யவேண்டும் என்கிறார். சிறுவயதில் அடித்து வளர்க்கப்படுகிற பிள்ளைகள் அனைவருமே பின் நாட்களில் வன்முறையைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பது இவரது கருத்து. இதற்காக பிரான்சு நாட்டின் சிவில் சட்டத்தில் போதிய திருத்தம் செய்வதற்கான யோசனையை அரசுக்குக் வழங்கியிருக்கிறார். அடித்து வளர்க்காத பிள்ளைகள் உருப்படமாட்டார்களென இந்தியர்களில் பெரும்பாலோனோர் நம்புவதுபோல ஐரோப்பியர்களும் தமது பிள்ளைகள் உருப்படவேண்டுமெனில் தண்டிக்கப்படவேண்டுமென நினைப்பவர்கள். பிரெஞ்சு மக்களில் 87 விழுக்காடு மக்கள் இன்றைக்கும் தம்பிள்ளைகளைத் தண்டிப்பற்கு உகந்த இடம், அவர்களின் பின்புறமென நம்புகிறார்கள். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம்,  குழந்தைகளின் பின்புறத்தில் அடிக்கின்ற பழக்கத்தைப் பெற்றோர்கள் கைவிடுவதற்கு ஆவன செய்யவேண்டுமென தமது உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று இத்தாலி, ஸ்பெயின், சைப்ரஸ் சட்டங்கள் இயற்றின. பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுதலைப் பூர்த்திசெய்யவேண்டிய நிர்ப்பந்தம். எட்விஜை இது பற்றி ஆய்ந்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கப் பிரெஞ்சு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அவ்வறிக்கையில் சொல்லப்பட்டதுதான் மேலே நீங்கள் படித்தது. தமது 30 ஆண்டுகள் மருத்துவ அனுபவத்தில் மழலையர் பள்ளிகளில் பிள்ளைகள் கடித்துக்கொள்வதற்கும் தொடக்கப்பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலை பள்ளிகளில் பேட்டை ரவுடிகள்போல நடந்துகொள்வதற்கும், பருவ வயதில் பெண்களைச் சீண்டி, அவர்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் ஒரே காரணந்தான், சின்ன வயதில் அவர்கள் பெற்ற தண்டனைகளுக்கு பழிதீர்த்துக்கொள்கிறார்கள் அதாவது எட்விஜ் ஆந்த்தியே கூற்றுப்படி.

——-

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-6: பாந்த்தெயோன்

பாந்த்தெயொன் (Panthéon) என்பது பாரீஸிலுள்ள ஒரு நியோ-கிளாசிக்கல் வகை நினைவுக்கூடம். சொர்போன் பல்கலைகழக வளாகமிருக்கும் Quartier latin பகுதியில் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் Sainte Geneviève (புனித ழெனேவியேவ்) சவப்பெட்டியைப் பாதுகாப்பதற்கென கட்டப்பட்ட இத்தேவாலயம் பின்னர் பிரான்சு நாட்டின் பெருமைக்கு உதவிய மாமனிதர்களின் பூத உடல்களுக்கு புகலிடம் தரும் நினைவுக்கூடமாக உருமாறியது. இத்தேவாலயத்தில் 72க்கு மேற்பட்ட சரித்திர நாயகர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் உள்ளன ரூஸ்ஸோ, ஸோலா, மால்ரோ என்ற அவ்வரிசை நீளமானது. இது தவிர பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் வாசகங்களையும் சுவர்களில் பொறித்துள்ளனர். இப்பட்டியலில் Négritude இயக்கம் கண்ட அண்மையில் மறைந்த கறுப்பரின கவிஞர் ‘எமே செசேர்’ம் அடக்கம். அண்மையில் அல்பெர் கமுய் நினைவு தினத்தை பிரெஞ்சு அரசு கொண்டாடியது. அப்போது பிரான்சு அதிபர் சர்க்கோசி படைப்பாளருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக சொந்த கிராமத்தில் புதைத்திருந்த அன்னாரது உடலை இந்த தேவாலயத்துக்கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதிபர் அறிவித்தபோதிலும் பாந்த்தெயோன் தேவாலயத்திற்குள் எவரது உடலை அல்லது எஞ்சியவைகளைக் கொண்டுவரலாமென முடிவெடுக்க ஒரு குழு உள்ளது. அல்பெர் கமுய் சவப்பெட்டியை பாந்த்தெயோன் கொண்டுவர அக்குழுவிலிருந்த அவ்வளவுபேரும் சம்மதித்திருந்தார்கள். ஆனால்  கமுய் மகன் அதற்கு சம்மதிக்கவில்லை.  அதிபர் மாளிகை பலமுறை தூதுவிட்டது, இரண்டுமுறை அதிபரின் செயலர் நேரில் சந்தித்து மகனிடம் சமாதானம் பேசினார். அதிபரின் விருப்பத்தை மறுக்க அவருக்குக் காரணங்களிருந்தன. அப்பா லூர்மரைனில்
(- அல்பெர் கமுய் உடலடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுகிராமம்) அமைதியாக உறங்குகிறார் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்கிறார். அதிபர் சர்க்கோசியின் அல்பெர் கமுய் மீதான திடீர்ப்பாசத்தை எழுத்தாளரின் மகன் சந்தர்ப்பவாதமென்கிறார். பிரான்சு நாட்டில் அல்பெர் கமுய் பேரில் நூற்றுக்கணக்கான வீதிகளிருக்கின்றன, ஆனால் நெய்லி என்ற நகரில் அப்படியொரு வீதி இல்லையே என்கிறார். நெய்லி அதிபர் சர்க்கோசி இருபது ஆண்டுகாலம் மேயராக இருந்த நகரம். அதாவது அல்பெர் கமுய் மகனுக்கு அதிபர் சர்க்கோசி கற்பூர வாசனையை அறியாதவர். இவ்வாதத்தை பொதுவாகப் பலரும் ஏற்பதில்லையென்றபோதும் அல்பெர் கமுய்யின் மகன், அதிபரிடம் எழுப்பும் அடுத்த இரண்டு கேள்விகளும் நியாயமானவை என்கின்றனர்:

முதலாவது :
அப்பா விரும்பி வாசித்த மூன்று நாவல்களுள் ‘கிளேவ்ஸ் இளவரசி’யும் ஒன்று என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

(‘கிளேவ்ஸ் இளவரசியை’யெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கவேண்டமென கல்விநிறுவனமொன்றில் அதிபர் சர்க்கோசி மாணவர்களுக்கு ஆற்றிய உரை சமீபத்தில் பெருஞ்சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது.)

இரண்டாவது:

அப்பா மதங்களைக் குறித்து வைத்திருந்த அபிப்ராயங்கள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அல்பெர் கமுய் இடதுசாரி சிந்தனையாளர், கிறித்துவத்தை பலமுறை கண்டித்திருக்கிறார். எனவே அவரது உடலை பாந்த்தெயோன் தேவாலயத்துக்குள் கொண்டு போவது அவரது மகனை பொறுத்தவரை நியாயமில்லை.

———————————————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-5: Métro – Boulot -Dodo

« Au déboulé garçon pointe ton numéro
Pour gagner ainsi le salaire
D’un morne jour utilitaire
Métro, boulot, bistro, mégots, dodo, zéro ».

மே 1968 பிரெஞ்சு கலவரத்தின் போது பாரீஸ் சொர்போன் பல்கலைகழகச் சுவரில் முதன் முறையாக எழுதப்பட்டிருந்த வாசகம்.

நகரவாழ்க்கையை எந்திர வாழ்க்கையோடு ஒப்பிட்டு சலித்துக்கொள்வது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பாரீஸ் நகர வாழ்க்கையை அங்குள்ள மக்கள் Métro – Boulot -Dodo – ஆங்கிலத்தில் subway – work- Sleep என நேரடியாக மொழிபெயர்க்கலாம். இது உரிய பொருளை தருவதாக இருந்தாலும் ஆங்கிலேயர் வழக்கில் the daily grind பொருத்தமான சொல் என்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் இது. ஒரு சொல்லை மொழிபெயர்க்கிற பொழுது, அதற்குரிய சரியான பொருள்தரும் சொல்லை கண்டுபிடித்தால் மட்டும் போதாது அதற்கு ஈடான மரபான சொற்கள் வழக்கிலிருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதவிரும்புகிறேன்.

மேற்கொண்ட சொல்வழக்கிற்கு வருகிறேன். எழுபதுகளில் சென்னையில் கல்லூரியில் படித்தபொழுது குரோம்பேட்டையிலிருந்து தினசரி மின்சார ரயில் பிடித்து சென்னைக் கடற்கரைவரை செல்வது வழக்கம். அப்போதெல்லாம்(?) அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரமென்று வசித்துக்கொண்டு சென்னைவரை தினசரி இரயிலில் பயணம் செய்து பணியாற்றுவர்களை அப்பகுதிகளிலிருந்து வரும் பாசஞ்சர் இரயில்களில் காண்பதுண்டு. அவர்கள் வாழ்க்கையை மேற்கண்ட Metro – Boulot -Dodo என ஒப்பிட தோன்றும். இன்றைய தேதியில் எல்லா பெரு நகரங்களிலும் பணிசெய்து வாழ்க்கையை நகர்த்துபவர்களின் தினசரிகளுக்கு இது பொருத்தமான சொல்லே.

பாரீஸில் Métro – Boulot -Dodo என்றால் பிரான்சு நாட்டில் பிறபகுதிகளில் தினசரி வாழ்க்கையை எப்படி காண்கிறார்கள் அல்லது அந்த வாழ்க்கையை எந்தச் சொற்றொடரால் அடையாளப்படுத்துகிறார்களெனில் “Les Français bouffent, se logent et roulent’ என்பார்கள். அதாவது சம்பாதிப்பது சாப்பாட்டிற்கும், வீட்டிற்கும், வாகனத்திற்கும் சரியாக இருக்கிறதென்கிற பொருளில்:

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 100 யூரோ சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவர்:

25,40 யூரோ உணவுப்பொருள்களுக்கும்
17,40 யூரோ வீட்டு வாடகை அல்லது வீடுவாங்கிய கடன், வீட்டு பராமரிப்பு செலவுக்கும்
14,30 யூரோ போக்குவரத்து செலவு இதி சொந்த வாகனசெலவுகளும் அடங்கும்
10,30 யூரோ துணிமணிகளுக்கும்
9,10 யூரோ வீட்டு உபயோகப்பொருட்களுக்கும்
7,90 யூரோ பொழுதுபோக்கு சமாசாரங்களுக்கும்
4,80 யூரோ உடல் நலத்திற்கும்
2,70 யூரோ விடுமுறைக்கும்
8,10 யூரோ பிறவற்றுக்கும் செல்விடுவதாக அண்மையில் தெரியவந்த செய்தி அதாவது சேமிப்பும் இதிலடங்கும்.

மேற்கண்ட தகவல் அசலான பிரெஞ்சுகாரருக்கு மட்டுமே பொருந்தும். வேண்டுமெனில் இங்குள்ள ஐரோப்பியருக்கு என்று கூடுதலாகப் பொருள்கொள்ளலாம்.

ஒரு கொசுறு செய்தி இந்த Métro – Boulot -Dodo என்கிற ஸ்லோகத்தை அறிமுகப்படுத்தியவர் பத்திரிகயாளரும், வானொலியில் கலைஞராகவும் திகழ்ந்த Pierre Béarn (Louis Gabriel Besnard). அவர் இயற்றிய பாடலொன்றில் இந்த ஸ்லோகம் வருகிறது. Pierre Béarn104 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 2004ல்தான் இறந்தார்.

___________________________________

பிரெஞ்சு சினிமா -2: ஒளியும் நிழலும்

ஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல. ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மாவிற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கபட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், “துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?” என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் “கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே” எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது. மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம். இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.

துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.

L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது. இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில். தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?

————————————————-

மோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும்


காந்தி மட்டுமல்ல காந்தியை கொன்ற கோட்சேவும் வரலாறில் இடம் பெறுகிறான். பேசப்படுகிறான். சர்வாதிகாரிகளும் வரலாற்றில் வருகிறார்கள் ஜனநாயகவாதிகளும் வரலாற்றில் பேசப்படுகிறார்கள். திருடர்களும் பேசப்படுகிறார்கள் உத்தமர்களும் பேசப்படுகிறார்கள். யுகங்கள் தோறும் புழுக்கள்போல பூச்சிகள்போல விலங்குகள்போல பறவைகள் போல கண்டங்கள் தோறும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். நூறு குடும்பங்கள் இருக்கிற கிராமத்தில் ஒன்றிரண்டு குடும்பங்களைச் சுற்றி அக் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்களைச்சுற்றி அவர்கள் வீட்டுப் பெண்களைச்சுற்றிய பேச்சாக கிராமத்து வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது: நல்லதும் கெட்டதும், அடிதடியும் பஞ்சாயத்தும், திருவிழாவும் தேரும் அப்பெரிய குடுபத்தின் பேச்சை- மறுபேச்சைக்கொண்டே இயங்கும்.  குடிப்பிள்ளைகளோடு மிராசுகள் வலம் வந்தார்கள். அக்கிராமத்தை பொறுத்தவரை மிராசுதான் நாயகன். ஊர்மக்களின் தினசரியில் அவர்களதுபேச்சில் அப்பெரிய மனிதரின் (அவர் நல்லவரென்ற பொருளுக்கு அக்காலத்திலும் உத்தரவாதமில்லை) இருப்பை விலக்கி அவர்கள் உரையாடமுடியாது.

கிராமத்தைக்கடந்த நகரத்திற்கும், நகரத்தை முன்வைத்து இயங்கிய அரசாங்கத்திற்கும் மைய உரையாடலாக முடியாட்சியில் மன்னர்கள் இருந்தார்கள். முடியாட்சியில் மனித குலத்தின் இயக்கம் இயற்கையைக் காட்டிலும் மன்னர்களைச் சார்ந்ததென்று கற்பிதம் செய்யப்பட்டதால் அரசர்களின் வரலாறே நமது அரசியல் வரலாறாகவும் மாறிற்று. அவர்களின் கமறலும் தும்மலுங்கூட இலக்கியங்களாயின. பரிசிலுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் வரலாறுகளாக திரிக்கப்பட்டன, மன்னர்கள் வரலாறானார்கள். காலம் மாறியது மக்களாட்சி என்றார்கள், தொழிலாளர் புரட்சி என்றார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிமுறை இன்றில்லை. ஜனநாயகம் பிறந்தது. நீங்களும் நானும் நாளை கிரீடம் சூட்டிக்கொள்ளளாம் ஜனநாயகம் அப்படித்தான் சொல்கிறது. பரம்பரை வரலாற்றை எழுதிய மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும் ஜமீன்களையும், பிரபுக்களையும் குடியரசு அமைப்புமுறை புரட்டிபோட்டது. இங்கேயும் பேச்சுதான் தலைப்பொருள்: முடியாட்சியின் வரலாறு மன்னரைப் பற்றிய மற்றவர்கள் பேச்சால் தீர்மானிக்கப்பட்டதெனில் ஜனநாயகத்தின் வரலாறு ஆளுகின்றவனின் பேச்சால் தீர்மானிக்கப்படுகிறது. எவன் ஒருவன் பெரும் திரளான கூட்டத்தை தன்பக்கம் திருப்பும் வல்லமை பெற்றிருக்கிறானோ அவன் தலமை ஏற்கிறான். பிறகாரணிகளைக்காட்டிலும் இப்பேச்சு அவன் வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. இன்று ஜனநாயகத்திற்கும் சவால் விடும்வகையில் தகவல் தொழில் நுட்பங்கள் என்றதொரு சக்தி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பேச்சினை தொடங்கிவைக்கவும் மறுபேச்சுக்கு வாய்ப்பளித்தும் முடிவற்ற உரையாடலை நடத்தியும் மனித குலத்தை வழிநடத்திகொண்டு இருக்கின்றன. நீங்களும் நானுங்கூட உலக நாயகனென்றோ சூப்பர் ஸ்டார் என்றோ, உலகத்தமிழர்களின் ஒரே தலைவனென்றோ நமது பேச்சை கொட்டாம் பட்டியிலிருந்தபடியும் பதிவு செய்யலாம், ஹ¥ஸ்டனிலிருந்தும் பதிவுசெய்யலாம். அது பற்றிய விவாதத்தைத் தொடங்கலாம் அல்லது தொடங்காமல் விடலாம். ஒரு கணப்பொழுதில் நீங்களும் நானுங்கூட மீடியாக்கள் மனது வைத்தால் வரலாற்றில் சில பக்கங்களை நிரப்பலாம் என்பதுதான் இன்றைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள திருப்பம்.

இச்சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு முடிந்திருக்கிறது. அச்சம்பவதைப்பற்றிய மறுபேச்சில் மும்முரமாக பிரெஞ்சு தினசரிகள் இறங்கியிருக்கின்றன. ஒரு சராசரி மனிதனின் அசாதாரண செயலை எப்படி வரலாறாக செய்திகள் கட்டமைக்கின்றன என்பதற்கு இதோர் நல்ல உதாரணம்.

1911ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 21ந்தேதி. ஒரு திங்கட்கிழமை காலை 7 மணி. மோனாலிஸா பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் திருடுபோனது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு. Vincenzo Perruggia பிறப்பால் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவன். வயது 30. பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தொழிலாளி. சுவருக்கு வெள்ளை அடிப்பது தொழில். லூவ்ரு அருங்காட்சியகத்திற்குள் நுழைகிறான். அவன்   தேர்ந்தெடுத்த வாயில் பார்வையாளர்கள் நுழைவாயிலல்ல, சேன் நதி பக்கம் சுமைவாகனங்களின்   உபயோகத்திற்கென்றிருந்த வாயில். அவனுக்கு அவ்விடம் புதியதல்ல. எப்படி போகவேண்டும் எங்கே போகவேண்டும் என்று நன்குதெரியும். சம்பவம் நடப்பதற்கு முந்தைய வருடம் அப்புகழ்பெற்ற ஓவியத்திற்கு வெகு அண்மையில் அவன் வேலைசெய்யவேண்டியிருந்தது. அப்போதே ஓவியந்த்திற்காக வாய்பிளந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு பிரம்மித்திருந்தான்.

‘Une Femme disparaît’ (ஒரு பெண்மணி காணாமற்போகிறாள்) என்ற நூலாசிரியரும் பிரெஞ்சு பத்திரிகையுலகத்தைச் சேர்ந்தவருமான ஜெரோம் குவாஞ்ஞார், “Perruggia ஓவியம் சுவரில் எவ்வாறு பொறுத்தப்பட்டுள்ளதென்பதை நன்றாகவே அறிவான்”, என்கிறார். ஆம்.. ஒரு சில நொடிகளில் அந்த ஓவியம் திருடப்பட்டது. நான்காண்டுகாலத்தை அதற்குத்தந்து (1502-1506) டாவின்சியென்ற இத்தாலியரால் எழுதப்பட்ட அப்புகழ்பெற்ற ஓவியத்தை திருடியவன், இறங்கும்போது படிகட்டுகளின் கீழ் ஒரு மறைவிடத்தைக் கண்டான். அங்கேயே ஓவியத்தை சுற்றியிருந்த சட்டங்களை கவனமாக அகற்றினான். பின்னர் அதனைச் சுருட்டி தனது மேலங்கியில் மறைத்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வெளியிற் கொண்டு வந்தான்.

மறுநாள்காலை இரண்டு ஓவியர்கள் அருங்காட்சியகத்திற்கு திருடுபோன ஓவியத்தைப் பார்த்து வரைவதற்கென வந்திருக்கிறார்கள். ஓவியமிருந்த இடத்தில் இருந்தற்கான சுவடுகள் மட்டுமே இருந்தன, நிர்வாகிகள் எதற்கேனும் கொண்டுபோயிருப்பார்களோ? என நினைத்தார்கள். காத்திருந்தார்கள். நேரங்கூடக் கூட பொறுமை இழந்தார்கள். நிர்வாகிகளிடம் முறையிட்டார்கள், இதற்கிடையில் ஓவியத்தின் சட்டங்களை கண்டெடுத்ததாக செய்தி. இப்போது நிர்வாகத்திற்கு பிரச்சினையின் விஸ்வரூபம் தெளிவாயிற்று. பாரீஸ் காவல்துறையின் தலமை அதிகாரி பிரச்சினையை நேரிடையாகக் கையாண்டார். உடனடியாக அருங்காட்சியகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரெஞ்சு பத்திரிகை உலகிற்கு  மெல்லுவதற்கு அவல் கிடைத்திருந்தது. அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. பாராளுமன்றத்தில் கேள்வி- சம்பந்தப்பட்ட அமைச்சரின் வழக்கமான பதில். முடிவில் அருங்காட்சியகத்தின் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கினார்கள். இத்தனைக்கும்  அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை நவீனப்படுத்தவேண்டும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றெல்லாம் தமது துறைக்கு எழுதியிருந்தார். எல்லா நாட்டிலும் சிதம்பரங்கள் உண்டு. பிரான்சிலும் அன்றைக்கு ஒருவர் இருந்திருக்கிறார். அருங்காட்சியகத்தின் இயக்குனரை தண்டித்த கையோடு பாதுகாப்பு கோரிக்கையை தூசுதட்டி பரிசீலித்தார்கள்.

உலகின் முதல் தடவியல் துறை சோதனைக்கூடத்தை உருவாக்கிய அல்போன்ஸ் பெர்த்திய்யோன் என்பவரிடம் புலன்விசாரணை பொறுப்பை ஒப்படைத்தார்கள் அவர் ஓவியத்தின் சட்டத்திலிருந்து குற்றவாளியின் இடதுகை பெருவிரலை எடுத்திருந்தார். அப் பெருவிரல் ரேகையை அருங்காட்சியகத்திலிருந்த பதிவேடுகளில் ஒப்பிட்டுப்பார்க்க தவறினார். அங்கு வேலைசெய்யவரும் தொழி¡ளர்களின் கைவிரல்ரேகையையும் பதிவு செய்வது வழக்கம். இது வெளி ஆட்கள் வேலையாக இருக்கலாமென்ற கணிப்பில் அதனைச் செய்யத் தவறிவிட்டார். காவல் துறை ஓவியத்தை திருடினவன் தனியொருவனல்லவென்றும் பன்னாட்டு திருட்டுக்கூட்டமொன்று பின்னணியில் இருக்ககூடுமென்றும் நம்பியது.

இதில் வேடிக்கை என்னவெனில் புகழ் பெற்ற பிரெஞ்சுக்கவிஞரான கியோம் அப்போலினேரை அவ்வழக்கில் சந்தேகித்தார்கள். அதற்குக் காரணமுமிருந்தது. இத்திருட்டு நடப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு (1907) முன்பு அவருடைய பெல்ஜிய கூட்டாளியொருவன் லூவ்ரிலிருந்து சிலைகளைத் திருடிக்கொண்டுபோய் பிக்காஸோவிடம் கொடுத்திருக்கிறான், அவற்றினை ஆதாரமாக வைத்து சில ஓவியங்களையும் பிக்காஸோ வரைந்திருக்கிறார். போலீஸ் பிடி அப்போது இறுகவே, அப்போலினேர் பிக்காஸோவிடம், சிலைகளைத் திருப்பி கொடுத்தால் தண்னடனையிலிருந்து தாம் மீளமுடியுமென வற்புறுத்த பிக்காஸோ சிலைகளிரண்டையும் அப்போது பாரீஸில் புகழ்பெற்றிருந்த Le Petit journal என்ற தினசரியின் அலுவலகத்தில் ரகசியமாக ஒப்படைக்க பின்னர் காவல்துறை கைப்பற்றி  அருங்காட்சியகத்திடம் கொடுத்ததென்பது பழைய செய்தி. இதுபற்றிய தகவலை அப்போது தினசரி ரகசியமாக வைத்திருந்ததாம். எனவே மோனாலிசா திருட்டின்போதும் அப்போலினேர் கைது செய்யப்பட்டார். எட்டு நாட்கள் சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.

இரண்டு ஆண்டுகள் ஓவியத்தை Peruggia  பாரீஸிலுள்ள தமது குடியிருப்பில் மறைத்து வைத்திருந்தான், அதன் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள அரும்பொருள் வியாபாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘தம்மிடம் இத்தாலி நாட்டிற்குச் சொந்தமான தேசிய மதிப்புவாய்ந்த பொருளொன்று இருப்பதாகவும், தகுந்த விலைக்கு விற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறான்.

1913ம் ஆண்டு டிசம்பர்மாதம்,  அல்பிரெடோ கெரி என்கிற இத்தாலிய வியாபாரி  Peruggia வை ஓவியத்துடன் பிளாரன்ஸ¤க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறார் வரும்போதே வியாபாரி இத்தாலி நாட்டு அருங்கலைத்துறை இயக்குனரையும் உடன் அழைத்து போகிறார்.  திருடப்பட்ட ஓவியத்தைப் பார்த்ததும் அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை பாரீஸில் திருடுபோன ஓவியமென்று புரிந்தது. Peruggia கைது செய்யப்படுகிறான். இத்தாலி நாட்டில் விசாரணை நடக்கிறது. தேசப்பற்றுகாரணமாக திருடினேன் என அவன் கூறியிருந்தான். அதாவது இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான பொருளை பிரான்சுநாட்டின் அருங்காட்சியகத்தில் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. விசாரணையின் முடிவில்  குற்றவாளிக்கு ஓர் ஆண்டு பதினைந்து நாட்கள் சிறை விதித்து தீர்ப்பாகிறது பின்னர் அதுவும் ஏழுமாத சிறைதண்டனையாகக்குறைந்தது. ஆகத் தேசப்பற்றுடன் திருடலாம். குற்றவாளியை விசாரித்த உளவியல் அறிஞர்கள் அவனிடம் சராசரி மனிதனுக்குள்ள குணங்களே இருந்தன முரண்களில்லை என்றார்கள். இப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு புலன் விசாரணை செய்து எழுதப்பட்ட நூல் சம்பவத்தின் பின்புலத்தில் அப்போது ஜெர்மன் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது.

மோனாலிஸா இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான ஓவியமென்றாலும். மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்கிற பிரெஞ்சு மன்னனிடம் அதை வரைந்த டாவின்சி விற்றிருந்தார். எனவே மீண்டும் ஓவியம் உடையவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

—-

பிரெஞ்சு சினிமா-1 – Les Bien-Aimés- காதல் நோயாளிகள்

தமிழ் பண்பாட்டில் (அப்படியொன்று இருக்கிறதா என்ன?) ‘காதல்’ என்ற சொல் பெண்ணை மையப்படுத்தியே வலம் வரும் சொல். நமது இலக்கியங்களும், திரைப்படங்களுங்கூட அந்த அறத்தை இதுகாறும் போற்றிவந்திருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தியை அதிகம் வற்புறுத்தாத நமது சமூகம் பெண்களுக்கென விதிகளை கறாராக (ஒருத்திக்கு ஒருவன்) வைத்திருக்கிறது. பிரான்சுக்கு முதன்முறைவந்திருந்து இந்தியாவுக்குத் திரும்ப ஆறாண்டுகள் பிடித்திருந்தது. ஆறாண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்க நேர்ந்த என் புதுச்சேரி நண்பர் இம்முறை மனைவியோடு துணைவியொன்றை சிறையெடுத்திருந்தார். அப்பெண் வெளிநாட்டிலிருந்து தமது பூர்வீக நிலங்களை விற்பதற்காக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிமுகப்படுத்தினார். அவருக்குத் தமது தாலி கட்டிய மனைவியைக்காட்டிலும் துணைவி  கூடுதலாக படித்திருக்கிறதென்கிற பெருமை வேறு. என்ன இப்படி பண்ணிவிட்டாயே என்றேன். நீ இந்தியாவிலிருக்கும்போது எனது வீட்டைப்பார்த்தாய் இல்லையா? இப்போது எப்படி இருக்கிறது, என்றார். அதற்கென்ன இடித்து நன்றாகத்தான் கட்டியிருக்கிறாய் என்றேன். நன்றாக மட்டுமில்லை, பெரிதாகவும் கட்டியிருக்கிறேன் என்றார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அவரது இலக்கணப்படி அவ்வீட்டின் பரப்புக்கு இன்னும் நான்கு ஐந்தையாவது சேர்த்துக்கொண்டிருக்கவேண்டும், சேர்த்துக்கொண்டாரா இல்லையா என்று தெரியாது.

திரு அவ்வை நடராசன் ஒரு நல்ல சுவைஞர். மனம் திறந்து பாராட்டுவார். அவரைச் சந்திக்கவென்று வருகிறவர்களிடமெல்லாம் நம்மை அறிமுகம் செய்வார், நாம் எழுதிய ஏதாவதொரு பகுதியை வரி பிசகாமல் நினைவு கூர்வார். அவருடைய அண்ணா நகர் வீட்டிற்குச் ஒருமுறை சென்றிருந்தபோது எனது கவிதைத் தொகுப்பிலிருந்த கவிதையொன்றிர்க்கு காதல்கள் என்று பெயரிட்டிருந்ததைப்பார்த்துவிட்டு, காதல்கள் என்று பன்மையில் சொல்லக்கூடாதென்றார், அது காதல் என்று இருக்கவேண்டுமென்றார். நான் எனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்ததும் ஏற்றுக்கொண்டார், முதலும் கடைசியுமான அந்த கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரையும் எழுதித்தந்தார். ஆக அவ்வை நடராசன் காதல் என்ற சொல்லுக்கு பன்மையைத் தவிர்க்க நினைத்த தமிழ் பண்பாடு சென்னையிலிருந்து 125கி.மீ தள்ளியிருந்த நண்பரின் புதுச்சேரி இல்லத்தில்  வேறுபடிமத்தை அடைந்திருந்தது.

எங்கள் உறவினர் வீட்டு பாட்டியும் அவருடைய கணவரான தாத்தாவும் நேரிட்டுக்பேசி பார்த்ததில்லை. அவர் ஏன் எங்க இருக்கிற? வெத்திலை செல்லத்தை எடுத்துவா என்பார்? பாட்டி தெருக்கதவின் பின்புறத்தில் ஒளிந்தபடி கையை மட்டும் நீட்டும். என் வாழ் நாளில் நான் மட்டுமல்ல எங்கள் உறவினர்களும்  அவர்கள் எப்போதும் அப்படித்தான் என்பார்கள். ஆனால் அந்தத் தம்பதியினருக்கு பதினோரு பிள்ளைகள். பிறகுதான் வயது ஆக ஆக எங்கள் கிராமத்துக்கு ஒரு பண்பாடு, புதுச்சேரிக்கு ஒரு பண்பாடு, அங்கிருந்து சென்னைக்கு வந்தால் அங்கே ஒரு பண்பாடு என்றிருக்கக்கண்டேன். சென்னையிலிருந்து பிரான்சுக்கு வந்ததும் பாரீஸ¤க்கென்று ஒரு பண்பாடு இருக்கக்கண்டேன்.

இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் – உணர்வின் – வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண்பாடென்று முன்வைக்கப்படுபவைகளையே நமது முன்னோர்களும் கொண்டிருந்தார்களா?.  ஒரு புதுச்சேரி நண்பர் ஒருவர் எங்கேயோ ஒரு ரெஸ்டாரெண்டுக்குபோனவர் பிரியாணி நல்லா இல்லைஎன குறைபட்டுக்கொண்டார். நம்ம சாப்படை அவங்கள்ளாம் செய்ய ஆரப்பிச்சுட்டாங்க நம்ம பண்பாட்டை கெடுக்கறாங்க என்றார். கறிச்சோறெல்லாம் நம்ம இலக்கியத்திலே வருகிறதுதான் அதற்காக பிரியாணியை தமிழ்ப் பண்பாடுண்ணு பேச ஆரம்பிச்சா எப்படி?  பிறகு அந்த நண்பருக்கு பிரியாணி என்ற சொல் இஸ்லாமியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது. என்றேன், தொடர்ந்து நம்ம பண்பாட்டை ஆம்பூர் பிரியாணி, முனியாண்டி விலாஸ் பிரியாணி என்ற அடிப்படையில் பார்க்க ஆறம்பிச்சுடாதீங்க என்றேன். செப்பனிடப்பட்ட மரபு  அல்லது சீர்மைக்குளான மரபு பண்பாடாகிறது. இந்த மரபும் பண்பாடும் பிரிக்கமுடியாதவை, பண்பாடென்பதே மரபின் வழிபட்டதுதான். பண்பாடு என்பதற்கு அவரவரவர் அளவில் பொருள் இருக்கிறது.

காதலின்றி வாழ்க்கையில்லை அல்லது உயிர்வாழ்க்கையே காதலிப்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு தினமும் காதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது இதுதான் Les bien aimés – The Beloved என்ற பிரெஞ்சு சினிமாவின் ஒற்றைவரி திரைக்கதை பாரீஸில் ஆரம்பித்து பிராகு, லண்டன், மோரியால் (கனடா) பின்னர் திரும்பவும் பிரான்சு என்று சுற்றிவரும் மதெலின் அவள் மகள் வேரா இரு பெண்களின்  –  காதலை அல்ல – காதல்களை கொண்டாட்டம், குதூகலம், ஆட்டம் பாட்டம், அழுகை, இழப்பு மீண்டும் கொண்டாட்டம் குதூகலம் ஆட்டம் பாட்டம் அழுகையென ஒரு முடிவற்ற தொடக்கத்தை நிகழ்த்திக்கொண்டு – உயிர் வாழ்க்கையை நகர்த்துகிறது திரைக்கதை. தாய் மகள் இருவருக்கும் காதல்தான் வாழ்க்கை, அவர்கள் தினசரிகளில் உணவுபோல, உடைபோல, நடப்பதுபோல, பேருந்து பிடிப்பதுபோல கைவீசுவதுபோல காதல் வந்து போகிறது. காதலித்தல் என்ற வினைச்சொல்லின் கால வர்த்தமானங்களை மட்டுமல்ல அதன் பூகோள படிமத்தையும் சேர்த்தே குதறியிருக்கிறார் கதை திரைக்கதை இயக்குனர் பொறுபேற்றுள்ள  கிறிஸ்தோ·ப் ஒனோரே. 1960ல் ஆரம்பித்து இன்றையதினம் வரை வழகக்கமான துள்ளலுடனும் பொய்யுடனும் உறுதிமொழியுடனும் காத்திருப்படனும் ஏமாற்றத்துடனும் பயணிக்கிறது காதல்கள். அம்மாவும் பெண்ணும் எளிதாகக் காதல் வயப்படுகிறார்கள், மனைவியாக துணைவியாக, வைப்பாட்டியாக, கள்ளக்காதலிகளாக எல்லாவித அவதாரங்களும் எடுக்கிறார்கள். மேற்கத்திய உலகின் பண்பாடென்றதொரு சுவருக்குள் அக்காதல்களை  அடைத்து விடமுடியாது இன்றைய உலகில் எல்லா பெருநகரங்களிலும் சன்னலைத் திறந்து காற்றுவாங்குவதைப்போல காதலைத் தேடும் இதுபோன்ற மதெலின்களும் வேராக்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு ஜோடி உயர்ந்த ரக பாதணிக்காக சோரம்போகிற மதெலினை சந்திக்கிறோம். முதலில் ஒரு ஸ்லாவ் (செக்கோஸ்லோவாக்யா) டாக்டரிடம் காதல், பிறகு போலந்து நாட்டைச்சேர்ந்த ஓர் அழகான இளைஞனைச் சந்திக்க நேர்ந்ததும் அவனுடன் காதல் ஆகக் காதல் வைரஸில் அவதிப்படும் இளநங்கை. அவள் மங்கை மடந்தை அரிவை தெரிவையானபின்பும் உயிர்க்கொல்லியாக உடன் பயணிக்கிறது. அவளது மகளுக்கு வேறுமாதிரியான அனுபவங்கள், அவளுள்ளும் உந்து சக்தியாக இருந்து அவள் உயிர் வாழ்க்கையை முன் நகர்த்துவது காதல்களே. இருவரும் காதலிக்கிறார்கள் காதலிக்கப்படுகிறார்கள், எளிதாக காதல் வயப்படுகிறார்கள், காதல் தருணங்களுக்காக ஏங்குகிறார்கள். திணவெடுத்த சரீரத்தின் தேவையோடு அவர்கள் காதல்களை ஒப்பிட்டளவில் நிறுத்துவதுகூட நியாயமானதொரு பார்வை ஆகாது. வேறெங்கோ காரணங்களும் அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. நாம் அவற்றை உய்த்துணரமுடியாதவரை நமது சமூக யாப்பிலக்கணப்படி அப்பெண்கள் சவலைப்பாக்கள்.

Chiara Mastroianni மகளாகவும் Catherine Deneuve தாயாகவும் நடித்திருக்கிறார்கள். காத்தெரின் தெனேவ் பற்றிச் சொல்லத் தேவையில்லை மிக நன்றாகவே நடித்திருக்கிறார். மகளாக நடித்திருக்கும் சியாராவும் நன்றாகவே செய்திருக்கிறார். Les Bien aimés திரைப்படம் கடந்த வருடம் கான் திரைப்படவிழாவில் சிறப்புகாட்சியில் திரையிட அனுமதிக்கப்பட்ட படம். ஆகையால் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் இயக்குனர் கிறிஸ்தோப் ஒனொரே(Christophe Honoré)நம்ம ஊர் பாசத்திற்குரிய பாரதிராஜா ரகம். இதுவரை அவர் எடுத்துள்ள படங்கள் அனைத்துமே காதலை அதிகமாக முன்நிறுத்துபவை. ஆனால் நம்முடைய தமிழ் சினிமா ரகத்தில் உருக உருக  காதலைத் தெரிவிக்காது அதன் பன்முகத் தன்மையைப் பற்றி பேசுபவை.

கிறிஸ்டோப் ஒனோரே பிரெஞ்சு பாரதிராஜாவெனில் படத்திற்கு இசை அமைத்துள்ள அலெக்ஸ் போப்பென் (Alexs Beaupain) பிரெஞ்சு இளைய ராஜா.  கடந்த இருபது ஆண்டுகளாக  நாடகம் மற்று இசைத் துரையில் அரும்பணியாற்றிவரும் La Compagnie du Ressort அமைப்புடன் இணைந்து எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றிருக்கிறார். பாடலாசிரியர், இசைகோர்ப்பவர். இவருக்கும் இயக்குனர் கிறிஸ்தோ·ப் ஹொனொரேவுக்குமான நட்பு 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது சேர்ந்து பணியாற்றிய திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியின் வெற்றியைத் தெரிவிக்கின்றன:

 Je peux vivre sans tois, tu sais/Le seul problème mon amour c’est/Que je ne peux pas vivre sans t’aimer

 நீயின்றியும் உயிர் வாழ்வேன்-அதை/ நீயும் அறிவாய்-ஆனால்/உன்னைக் காதலித்தாலன்றி/உயிர்வாழமுடியாதென்பது/எனக்குள்ள பிரச்சினை.

எனபது இப்படத்தில் வரும் பாடல். படத்தின் கதையும் அதுதான்.

——–

பிரெஞ்சுத் தமிழர்கள்

‘மிஸியே’, ‘மதாம்’, பீரோ, ஒப்பித்தால், ‘சொல்தா’ ‘ருய் ரொமென் ரொலான்’, ‘ஹோட்டெல் தெ வீல்’, அல்லியான்ஸ் பிரான்ஸேஸ், லிஸ்ஸே பிரான்ஸே இதுபோன்ற சொற்களும், காவல் துறையின் ‘சிவப்பு கெப்பி, ‘ஆயி மண்டபம்’ போன்ற குறியீடுகளும், அன்னை எனப்படும் அரவிந்தரின் ஆன்மீகத் தோழியான மீரா அல்·பான்ஸாவும் என்றென்றும் புதுச்சேரியை பிரான்சு நாட்டோடு இணைத்து நினைவூட்டுபவர்கள். ஆனால் பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து,  புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல்  இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

பிரெஞ்சுத் தமிழர்களின் இன்றையை சமூக கூறுகள், பண்பாடுகளென்ன? என்பது சிக்கலானதொரு கேள்வி. நாமிருக்கும் உலகம் பொருள்முதல் வாதத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்டது. மனித இனமும் விற்பனையை மட்டுமே அல்லது விலைபோவதை மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் சரக்காகிப்போனதொரு நிலையில்: பண்பு, தொன்மம், அறம் இவைகளெல்லாம்கூட -விற்பனையின் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் அவ்வப்போது உருமாற்றம் பெற்று ஆயுளை நகர்த்தும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. பிரெஞ்சுத் தமிழர்களின் சமூகக்கூறுகள் தமிழ்நாட்டைப்போலவே பல கூட்டு வடிவங்களை முன்னிறுத்துகின்றன. பொதுவாகப் பிரெஞ்சுத் தமிழர்கள், பண்பாட்டு அடையாளமென்று  முன்னிறுத்துவது அவரவர் ‘இருத்தலை(Existence) உயர்த்திப்பிடிக்கும் குணமேயன்றி தமிழரின் அரிதானப் பெருமையை உண்மையில் மீளப்பெறும் முயற்சிகளில்லை.

பிரெஞ்சுத் தமிழர்களை ஒரு வசதிக்காகவும், மானுடவியல் தெளிவுறுத்தும் உண்மைகள் அடிப்படையிலும் மூன்றுவிதமாக அடையாளப்படுத்தலாம். தமிழை மறந்தவர்கள், மறந்து கொண்டிருப்பவர்கள், மறக்க இருப்பவர்கள். தமிழை மறந்தவர்களென்று பிரெஞ்சு மண்ணுக்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வந்துசேர்ந்த தமிழர்களின் இன்றைய சந்ததியினரைச் சொல்லலாம். இவர்கள் மேலே குறிப்பிட்ட ரெயூனியன், குவாதுலுப், பிரெஞ்சு கயானாவை சேர்ந்தவர்கள், அடுத்து புதுச்சேரி காரைக்கால் மக்களின் சந்ததியினராக ஹனாய், சைகோனிலிருந்து இவர்களுடன் இணைந்துகொண்டவர்கள், மூன்றாவதாக மொரீஷியஸிலிருந்து குடிபெயர்ந்து பிரான்சு நாட்டில் வசிப்பவர்கள். மொரீஷியஸ் தமிழர்களுள் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களைத் ‘தமுல்'(Tamul) அதாவது தமிழர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட இவர்களுக்கு ‘இல்லை’. காரணம் இவர்கள் தீ மிதிக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், கோவிந்தனுக்குப் பூசை வைக்கிறார்கள், மாரியம்மனுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். திருவாசகத்தையும், ஒன்றிரண்டு திருப்புகழையும் பிரெஞ்சில் அப்படியே எழுதிவைத்துக்கொண்டு கதிரசனும் (கதிரேசனும்) பொக்கிலியும்(பொற்கலையும்) வாசிப்பவர்கள். ஆக இவர்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவது தமிழ்த்தாயோ தமிழன்னையோ அல்ல முருகனும், மாரியம்மனும். இதுபோன்ற நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வாழ்க்கைநெறியைப் பின்பற்றுவர்கள். பிரெஞ்சுத் தமிழர்களில் இரண்டாவது வகையினருக்கு: இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து குடியேறியவர்களையும், திருமணம் மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டு (இந்த வேறுகாரணங்களில் அறுபதுவயது பெண்மணியைப் பிரெஞ்சு குடியுரிமைக்காக மணப்பதும் அடக்கம்) பிரான்சுக்குப் புலம்பெயர்கிறவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். மொரீஷியர்கள் தங்களை ‘தமுல்'(Tamoul) என்று சொல்லிக்கொள்ளத் தயங்குவதில்லை. தமிழ்ச் சங்கங்கள் வைத்து பொங்கல், தீபாவளி, பாரதி, கம்பன், அண்ணா என்று கொண்டாடினாலும் புதுச்சேரிமக்கள் அண்மைக்காலம்வரை தங்களை தமிழரென வெளிப்படையாக அறிவித்துக்கொள்வது குறைவு அல்லது அதனைத் தவிர்க்க நினப்பவர்கள். பிரான்சு நாட்டில் குடியிருக்கும் ஒரு புதுச்சேரிவாசியை நீங்கள் யாரென்று கேட்டீர்களெனில் அவர் சட்டென்று சொல்வது, ‘Je suis Pondicherien'( புதுச்சேரியைச் சேர்ந்தவன்). பிரெஞ்சு வரலாறும் அவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களென்றே (Franco-Pondicherians) கருதிவந்திருக்கிறதே தவிர ‘பிரெஞ்சுத் தமிழர்கள்’ என்ற சொல்லாட்சியின் கீழல்ல. நாற்பதுகள், ஐம்பதுகள் அறுபதுகளில் பிரான்சுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு ராணுவத்திற்குச் சேவகம் செய்யவென்று வந்தவர்கள், அவர்கள் தமிழை மறக்காமலிருக்க நீங்கள் நினைப்பதுபோல கம்பனோ திருவள்ளுவனோ காரணமல்ல சிவாஜிகணேசனும் எம்ஜிஆரும். இக்காலங்களில் நன்கு படித்த இரண்டிலிருந்து ஐந்து சதவீத புதுச்சேரி தமிழர்களும் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் பல்கலைகழகங்களிலோ உயர் பணிகளிலோ இருப்பவர்கள். தமிழால் எனக்கென்ன லாபம்? என்று வலம் வருபவர்கள். எண்பதுகளில் வந்த புதுச்சேரிகாரர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்ச்சங்கங்களை நிறுவி வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் பட்டிமன்றம், கவிதையென்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்போக்கிற்கு இதேகாலங்களில் பிரான்சுக்கு வரநேர்ந்த இலங்கைத் தமிழர்கள் காரணமாக இருக்கலாம். தமிழ், தமிழ் மக்கள் என்ற சொல்லைப் பிரெஞ்சுக்காரர்கள் அறியப்படநேர்ந்ததே எண்பதுகளில்  இலங்கைத் தமிழர்களின் வருகைக்குப் பின்பென்றுதான் சொல்லவேண்டும்,  காரணம் இலங்கைத் சகோதரர்கள் தமிழர்களென்ற குலக்குறியுடன் பிரான்சுக்கு வந்தவர்கள் அகதித் தகுதி பெறுவதில் ஆரம்பித்து, பண்பாட்டிலும் பிறவற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. இதே இலங்கையிலிருந்து எண்பதுகளுக்கு முன்பு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த அளவிற்குத் தமிழுணர்வைக் கொண்டவர்களல்லவென்பதையும் நினைவு கூர்தல் வேண்டும்.

தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழையும் கொண்டுவந்தார்கள். தமிழ் சங்கங்கள் ஊடாக தமிழைப் போதிப்பதோடு உயர் நிலைப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்விலும் தமிழை ஒரு பாடமாக எடுக்க முடிகிறதென்றால் அது இலங்கைத் தமிழர்களின் முயற்சி, அதற்கு உறுதுணையாகவிருந்த புதுச்சேரிகாரரான பாரீஸ் சொர்போன் பல்கலைக்கழகத்தின் l’Institut National des Langues et Civilisations Orientales தமிழ் பேராசிரியர் நண்பர் முடியப்பநாதனையும் இங்கே குறிப்பிடவேண்டும். எண்பதுகளுக்குப் பிறகு பாரீஸ் நகரில் Gare du Nord என்ற பகுதி தமிழர் பகுதியாக மாறி இருக்கிறது. இங்கு பெயர்ப்பலகைகளெல்லாம் தமிழில் வைக்கப்படவேண்டுமென்று சட்டங்கள் ஏதுமில்லை, இருந்தபோதிலும் பெயர்ப்பலகைகளைத் தூய தமிழில் பார்க்க முடியும். தமிழர்களுக்கே உரிய குணத்துடன் கோவில்களை நிறுவி, வழிபாடு, பூசைகள், சடங்குகள் எப்போதும்போல தொடருகின்றன. இந்து கோவில்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ தேவாலயங்களிலும் தமிழில் பூசைகள் நடக்கின்றன. இங்கு எமது நிறத்தையும் முகத்தையும் பார்த்து தமிழரல்லாத ஒருவர் பிரான்சு நாட்டில்  ‘வணக்கம்’ என்று கூறினால் அப்பெருமை இலங்கைத் தமிழர்களைச் சார்ந்தது.

இந்தியத் தமிழரோ இலங்கைத் தமிழரோ தமிழ் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் எவரென்று பார்த்தால் அவர் தங்கள் ஆயுளில் ஒரு பகுதியை இந்தியாவிலோ இலங்கையிலோ செலவிட்டவராக இருப்பார். மொழிமீதான காதல் எங்கும் அரும்பும், ஆனால் மொழிஉணர்வினை பிறந்த மண்ணில் பெற்றால்தான் உண்டு.
———-
நன்றி: அமுதசுரபி பொங்கல் மலர்

ஆந்தரே ழித் -கடித இலக்கியத்தின் பிதாமகன்

 கடிதப் பரிமாற்றங்கள் முக்கியம். உரையாடலைக்காட்டிலும் எழுத்துருவம் பெறுகிற சொற்களுக்கு வலிமை அதிகம். எழுத்தில் ஒன்றை சொல்கிறபோது, தார்மீகமாக அவ்வெழுத்துக்கு எழுதுகின்றவன் நேர்மையாக இருக்கவேண்டியிருக்கிறது, உண்மையை பேசவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது அல்லது எழுதிய பொய்யை இதுதான் உண்மை என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வாசகன் அங்கே எஜமான், எழுதுகின்றவன் அடிமை. எழுதப்பட்டது அடிமைசாசனம். இரட்டை நாக்கு இருக்கலாம், இரட்டை எழுத்தாணி இருக்கமுடியாது. எழுத்தாளன்-எழுத்து- வாசகன் என்ற மூவர்கூட்டணியில் இயங்குதளம் இலக்கியமெனில், கடிதங்கள் கூட இலக்கியமாகின்றன. இங்கேயும் எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன- எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதியது? என்ற கேள்விகளுண்டான பதில்கள் முக்கியம். இலக்கியத்தின் வடிவமைப்புக்கு, பொய்களும் கற்பனைகளும் பிரதானமாக இருக்கிறபோது, கடிதமென்பது எழுதுபவனின் மனக்கண்ணாடியாக வாசகனோடு நெருங்கிய ஒட்டுதலைக்கொண்டதாக இருக்கிறது.

இலக்கியங்களிற் கூட புனைவை உண்மையெனச் சாதிப்பவன் -எழுத்தூடாக- வெற்றிபெறுகிறான். இன்றுள்ள தொழில் நுட்பங்கள் கடிதப் பரிமாற்றங்களை வெகுவாகக் குறைத்துவிட்டன. கைவலிக்க மனம் திறந்து உண்மைகளைப் பதிவு செய்யும் மடல்கள் இன்றில்லை. கடந்த காலத்தில் நண்பருக்கு, மகளுக்கு, காதலிக்கு, அன்னைக்கு என ஒற்றைவாசகர் அல்லது வாசகியை மனதிற்கொண்டு எழுதப்பட்ட பல கடிதங்கள் இன்றைக்கு இலக்கிய மதிப்பீட்டினைப் பெற்று பிறவாசகர்களைப் பெறுவதற்கு அதிலுள்ள சத்தியங்கள் மட்டும் காரணமல்ல ஆரம்பத்திற் கூறியதுபோன்று எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன? எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதப்பட்டதென்கிற கேள்விகளுக்குண்டான பதில்களே காரணம்.

“நிழலில் ஒளியின்மையைத் தேடுவதுபோல தீயவற்றில் நல்லவை அல்லாதவற்றை தேடுபவர்கள் கலகக்காரர்கள்” என்ற ஆந்தரே ழித் 1947ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர், சிந்தனையாளர். ழித்தின் படைப்புவெளி நாவல்கள், தத்துவ விசாரங்கள், கட்டுரைகள், கற்பனை நாட்குறிப்புகள், கடித இலக்கியங்களென விரிவானதொரு எல்லைப்பரப்பினைக் கொண்டது. கடித இலக்கியத்தினூடாக தனிமனிதனை கட்டமைக்க அயர்வின்றி நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். இவரது வழிகாட்டுதலில் இலக்கிய அன்பர்கள் ஒரு சிலரால் தொடங்கி நடத்தப்பட்ட 1909 La Nouvelle Revue francaise (NRF) ஒரு தீவிர இலக்கிய இதழ். ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து பிரான்சு விடுதலை பெற்றநேரத்தில் இவ்விதழுக்கு விதித்திருந்த தடையை, ஆந்த்தே ழித் மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விலக்கிக்கொண்டனர், மீண்டும் வெளிவந்தது. ஓர் இலக்கிய இதழ் நூறாண்டுகாலம் மக்கள் ஆதரவினை பெற்று நிலைத்திருக்கமுடியுமென்பதற்கு NRF சாட்சியம்.

ஜாய்ஸ் 1921ம் ஆண்டு பாரீஸ்வந்திருந்தபோது, பல பிரெஞ்சு எழுத்தாளர்களை கடுமையாக விமர்சித்திருந்தார், தப்பித்தவர் ஆந்தரே ழித் மட்டுமே. ஓரின புணர்ச்சியை சிலாகித்து ழித் எழுதியிருந்த கொரிடோன் (Corydon) என்ற பெயரில் வந்த கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை என்றபோதும் ழித்தின் நாவல்களில் குறிப்பாக Les Caves du Vatican மற்றும் La Symphonie Pastorale என்ற இரண்டு நாவல்களையும் பாராட்டி ஜாய்ஸ் பேசுகிறார்.

‘இந்திய தேசத்தின் கீழைப் பண்பு என்னைப் பெரிதாக வசீகரிக்கவில்லை’ என்றது மாத்திரமல்ல, ‘இந்தியா என்ற சொல் எதிராளி என்ற மனநிலையிலேயே என்னை வைத்திருந்தது, அம்மந்திரச்சொல் பலருக்கும் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் ஆனல் என்னளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தவறிவிட்டது’ என்பதான ஆந்தரே ழித்தின் மனப்பாங்கை பிரெஞ்சு படைப்பாளியான மால்ரோவும் தமது எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாடும், ஆன்மீக சிந்தனையும் மேற்கத்திய கல்விமான்கள் பலரிடத்திலும் அளவற்ற காதலை தொடர்ந்து ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த காலத்தில் துய்மால், ரொமென் ரொலான் என்றறிந்த பிரெஞ்சு படைப்பாளிகளைப்போலவே இன்றைக்கு பஸ்க்கால் கிஞ்ஞார், கிளேஸியோ போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களூம் தங்கள் படைப்பியங்கு தளத்தில் அவ்வப்போது இந்திய தேசம், ஆன்மீகமென்று தேடி அலைவதுண்டு. ஆந்தரே ழித் அவர்களில் ஒருவரல்ல, “நான் தனித்தவன், பிறருடன் என்னை ஒப்பிடமுடியாது”, என தம்மைச் சுய மதிப்பீடு செய்திருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘இந்தியாவின் கீழைதேச முகத்திற்கோ, புரிந்துணர முடியாத அதன் ஆன்மீக சிந்தனைகளுக்கோ’ வசப்படாத அம்மனிதரை தாகூரின் இலக்கிய மொழி கவர்ந்தது. ஆந்தரே ழித் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜெர்மன், ஆங்கிலம் இத்தாலி ஆகிய மொழிகளை நன்கறிந்தவர், குறிப்பாக ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் அவருக்கு சிறந்த புலமை உண்டு. ஜெர்மன் மொழியினின்றும் ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்களை பிரெஞ்சுமொழிக்கு கொண்டுபோயிருக்கிறார். 1913ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு இரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலிக்குக் வழங்கப்பட்டிருந்த நேரம். மொழிபெயர்ப்பு பணியும் இன்றியமையாத இலக்கியபணியென நம்பும் ஆந்தரே அந்நேரத்தில் ஆங்கிலத்திலிருந்து பல முக்கிய படைப்புகளின் மொழிபெயர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். தாகூரின் கவிதைகளை இந்திய தேசத்துக்கேயுரிய புராண இதிகாச சிந்தனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டதும் மந்திரச் சொற்களால் வடிக்கப்பட்டதுமான கவிதைகள்’, என கருதிய ழித் கீதாஞ்சலியின் கண்ணோட்டத்தில் பார்த்த இந்தியா வேறு. கீதாஞ்சலியை மாத்திரமல்ல கீதாஞ்சலியை எழுதிய கவிஞரையும் 1921ம் ஆண்டு பிரான்சுக்கு அழைத்து, இலக்கிய சந்திப்பொன்றிர்க்கு ஏற்பாடும் செய்தார். நேருவின் மகளும் ஆந்தரே ஜித்தின் மகளும் சுவிஸ்நாட்டில் இருந்தபொழுது நெருங்கிய சினேகிதிகளாக இருந்திருக்கிறார்கள். அவ்வகையில் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு, ழித் அவரைச் சந்தித்திருக்கிறார்.

ஆந்தரே ழித்தின் எழுத்துக்கள் வரம்பற்ற சுதந்திரத்தை ஆதரித்தவை, ஆதிக்கத்தின் எத்தகைய வடிவத்தையும் முற்றாக நிராகரித்தவை. மரபு, அறநெறிகள் என்ற விலங்குகள் சிரத்தையின்றி போகிறபோக்கிலே உடைத்தெறியப்படுகின்றன. “நமக்கென வாய்த்தவையும், நமதென வரித்துக்கொண்டவையும், பிறர் எவரிடத்தும் காணக்கிடைக்காததென்று மனிதப் பண்பினை தனிமைப் படுத்துகிறார்.’ ‘உன்னைக்காட்டிலும் ஒன்றை பிறரால் சிறப்பாக செய்யவியலுமெனில் அந்த ஒன்றை நீ செய்யாமலிருப்பது மேல்’, என்று அவர் கூறும் யோசனை, மனிதர்களின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பொருந்தும். தமது சிந்தனையை ‘தனி மனிதனின் விசித்திரமான குணம்(Idiosyncrasie)’ என வகைமைக்குள் அடக்குகிறார்: அவரது சிந்தனை உலகில் ஐரோப்பா ஒரு பக்கம் ஆப்ரிக்கா மறுபக்கம்; அல்ஜீரியா இடப்பக்கமெனில் சுவிஸ் நாடு வலப்பக்கம். பிஸ்காரா(அல்ஜீரியா)வைப் பேசுகிற ழித், பெரேவின்(சுவிஸ்) குறித்தும் எழுதுகிறார். ஊசியிலை மரங்களை கொண்டாடுகிறபோதும், பேரீச்சை மரங்களை சிலாகிக்க தவறுவதில்லை.

மரபுகளைத் தளர்த்திக்கொள்ளாமை, நெறிமுறைகளில் பிடிவாதம், சமூகப் பண்புகளிடத்தில் மரியாதை என்ற கருத்தியங்களால் உருப்பெற்றிருந்த ழித் பின்னாட்களில் உரையாடல், விவாதம், எதிர்வினை, முரண்பாடுகளென்று கலகக் குரலுடன் திரிந்தவர். நண்பர்களைக்கூட எதிரணியில் நிறுத்தி விவாதிப்பதில் ஆர்வம், விவாதத்திற்கு துணை வேண்டியதில்லை. நண்பர்களை அருகில் அமர்த்தி விவாதத்தைத் துவங்கும் வழக்கமுமில்லை. “சர்ச்சை, சண்டைபிடித்தல், மனம் நெகிழ்தல், தொடர்ந்து விவாதத்துக்குரிய பொருளுக்கு வளம் சேர்த்தலென்பது எழுத்தாளருக்கு நோக்கமாக இருந்திருக்கின்றன என்கிறார், வலேரி (ழித்துக்கு வலேரி எழுதிய கடிதம் -28 ஜூன் 1906). ழித்தின் பரம ரசிகரும், பேராசிரியருமான குளோது மர்த்தான் என்பவரின் கடுமையான உழைப்பில் ஆந்தரே ழித்தின் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சொந்தங்கள், நண்பர்கள், பிறருடள் ழித் உரையாட கடித மொழியும், அதன் வடிவும் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.

பத்து வயதில் பெற்றோர்களுக்கு ழித் எழுதியதுதான் அவருடைய முதல் கடிதம். விவாதத்தின்போதே எதிராளியாக தாமும், தம்மிடத்தை எதிராளிக்கும் அளித்து விவாதத்தை புணரமைக்கும் திறனும் அவருக்கு கைவந்திருக்கிறது. ‘அவன் என்று குறிப்பிடுகிறேன், ஆனால் அந்த அவன் வேறுயாருமல்ல நானே’ என்று கூறி வியப்பில் ஆழ்த்துகிறார். ஒரு கட்டத்தில் எனது எழுத்துக்களில் நான் ‘X’என்று குறிப்பிடும் முகம்தெரியாத நபர் நீங்கள் நினைப்பதுபோல வேறுயாரோ அல்ல அதுவும் நானே’ என்ற ரகசியத்தையும் ஒளிக்காமல் கூறுகிறார். கடித பரிமாற்றங்கள் அவரது Journal என்கிற அகவயது பதிவுகளைக் காட்டினும் தீட்சண்யமிக்கவை. கடிதமொழிகளூடாக நாம் சந்திக்கிற ழித் தம்மை தாமாவாகவே காட்டிக்கொள்கிறார்: எளிமை, பொய்முகமின்மை, இயல்பாய் வெளிப்படும் உரையாடல், செப்பனிடப்படாத தரிசனம், கபடமற்ற குரல் என அவற்றை பதிவு செய்யலாம். பொதுவாகவே ஆந்தரே ழித்தின் படைப்புகள் அவரது சொந்த வாழ்க்கையின் உண்மை பதிவுகள்.

ழித்துடன் கடிதப் பரிமாற்றங்கள் செய்துக்கொள்பவர்களுள் அவ்வப்போது தலைகாட்டும் புதுமனிதர்களைத் தவிர, Happy Few என்கிற வட்டத்தைச் சேர்ந்த அவருக்கு நெருங்கிய நண்பர்களுமுண்டு. ழித்-ஜேம்ஸ்; ழித்-குளோதல்; ழித்-புரூஸ்ட்; ழித்-வலேரி; ழித்-மர்த்தென் துய்க்கார்; ழித்-மொரியாக்… என பட்டியலை கைவலிக்க எழுதிக்கொண்டிருக்கலாம். ஆந்த்ரே ழித்தின் படைப்புகளை குறிப்பாக அவரது கடித பரிமாற்றங்களை வாசிக்கிற எவரும் தம்முள் பலராக அவர் வாழ்ந்துள்ளமையை உணரக்கூடும். ஒன்றிரண்டல்ல இரண்டாயிரம் நபர்களுக்கு 25000 கடிதங்கள் அவர் எழுதியிருக்கிறாரென குளோது மர்த்தென் கணக்கு வைத்திருக்கிறார். பிறருக்கு எழுதுவதும், பிறரோடு உரையாடுவதும், பிறருடன் விவாதிப்பதும் தம்மை மதிப்பீடு செய்ய உதவியதாக ழித் நம்புகிறார். ஆந்தரே ழித்தின் கடித பரிமாற்றங்களுள் ழித்திற்கும்-போல்வலேரிக்குமான கடிதப்போக்குவரத்துகள் குறிப்பிடவேண்டியவை. Correspondance -Gide-Valery என்ற பெயரில் பல பதிப்புகளை கண்டுள்ள இந்நூல் உலக இலக்கியங்களுக்கு பிரெஞ்சு படைப்புலகம் வழங்கியுள்ள கொடை என்கிறவர்கள் உண்டு. இந்நூலில் ழித்தும்- கவிஞர் போல் வலேரியும் 1890க்கும் 1942க்கும் இடையில் எழுதிக்கொண்ட கடிதங்கள் உள்ளன. இருவருமே சமகாலத்தவர், சிந்தனைக்கு இலக்கியவடிவம் கொடுப்பதில் தேர்ந்தவர்கள். முதற்பதிப்பின்போது 500 கடிதங்கள் கிடைத்தனவென்றும் மறு பதிப்பின்போது நூறு கடிதங்களை கூடுதலாகக் கிடைத்து பதிப்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆந்தரே ழித்தின் படைப்புகளில் சுயசரிதைகள் வடிவில் எழுதப்பட்ட புனைவுகளும் முக்கியமானவை. இப்புனைவுகளை வாசிக்கிறபோது எதிர்கால இலக்கிய உலகில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு பிரெஞ்சு வாசகர்களைத் தயார்படுத்தும் அக்கறையை எழுத்தாளரிடத்திற் காண்கிறோம். கற்பனா வாத இலக்கியத்திற்கும், சுயகதை இலக்கியத்திற்கும் உரிய ‘தான்’, ‘தனது’ சொற்களின் பல வடிவங்கள் அவர் படைப்பில் நமக்கு அறிமுகமாகின்றன. எனினும் முழுமையாகத் தம்மை கற்பனாவதத்திடம் ழித் ஒப்படைப்பதில்லை. அதனிடம் (கற்பனா வாதத்திடம்) கையளிக்காமலேயே பிறர் தம்மை எளிதில் அடையாளப்படுத்துவதற்கு உதவும் தந்திரமாக சுயகதை புனைவு வடிவத்தை இலக்கியத்திற்கு அவர் தேர்வுசெய்திருக்கவேண்டுமென கருத வேண்டியுள்ளது. அவரது தந்திரங்களையும் சந்தேகிக்கவே செய்கிறோம். அவ்வாறான மன நிலையை வாசகர்களிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் ஏற்படுத்தும் சூட்சமத்திலேயே அவரது திறன் அடங்கியுள்ளதென வியப்பவர்களுமுண்டு. தமது அந்தரங்க நகர்வுகளை, அசைவுகளை, மெல்லிய சலனங்களை எழுதுவதன் முதல் நோக்கம் தனக்குள் இருக்கும் வாசகனுக்கு. தம்மிடமுள்ள ‘தான்’ மட்டுமல்ல அடுத்துள்ள பிறரிடத்திலும் தமது அந்தரங்கம் பகிர்ந்துகொள்ளப்படமேண்டுமென்பது அவரது உப நோக்கம். வாசகர்களான நாம் படிக்கிறபோது நமது மனநிலையை அவரும் வாசிக்கிறார்.

ழித்தின் சுயபுனைவு அணுக்கத்தை மூவகையாகக் பிரிக்கலாம். தம்மை நிழலினினின்று வெளிச்சத்திற்கு கொண்டுவருவதென்பது முதற்படி. ஒளித் திட்டுக்குள் நிறுத்திவைப்பட்ட தனக்குத் தானே ஈவிரக்கமற்று தீர்ப்பு வழங்குவதென்பது இரண்டாம் படி. தாம்வழங்கிய தீர்ப்பிற்கு வாசகனிடம் மேல் முறையீடு செய்வதும் நீதிகேட்பதும் மூன்றாம் படி. அவரிடம் தண்டனைக்குள்ளாகிற தனிமனிதன் நமக்குள்ளும் இருக்கிறான் என்கிறபோது தண்டனைக்குரியவன் நீதிபதியா குற்றவாளியா என்ற கேள்விகளைத் தவிர்க்க முடிவதில்லை. ஆந்தரே ழித்தின் சுய சரிதைகளை வாசிக்கிறபோது எதிர்காலத்தை நிகழ்காலமாகப் பாவித்துக்கொண்டு பாம்புபோல ஆரவாரமின்றி சருகுகள், புதர்கள், முட்செடிகள், ஈரமணல், சரளைக்கற்களென்று ஊர்ந்து செல்லும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது.

சுயசரிதை புனைவுகள் வரிசையில் நான்கு நூல்கள் Paludes, As if it die, The Counterfeiters ஆங்கில மொழியாக்கத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை இவை. நாவல்கள், கட்டுரைகள், புனைவுகள், பயணக்கட்டுரைகள், காத்திரமான விமர்சனங்களென்று அவரது படைப்புகளின் எண்ணிக்கை நூற்றுக்கு குறையாமல் இருக்கின்றன. குடும்பவாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆந்தரே ழித் தன்னினப்புணர்ச்சியில் ஆர்வங்கொண்டவர். இதை சுயபுனைவுகளில் சொல்லவும் தவறியதில்லை. __________________________________________________________

காஃப்காவின் தீரா ‘வழக்கு’

பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான்  உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப்  பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.

செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு  உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ்  நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு,  வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.

1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை.  தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.

இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.

இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.

எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’  உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது  சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக  ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்-  They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில்  ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை  கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட  உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)

‘The Trial’  உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’  கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன்.  ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன்.  அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.

– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.

– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.

– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது

– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..

– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1)
———————————————————————–

1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.

இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’

எழுத்தும் எழுத்தாளனும் ஓர் கடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள் இருவரும்  ஒருவர்  மற்றவர் உயிரைத் தங்கள் சிமிழுக்குள் வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் எதிராளியின் ஆரோக்கியம் முக்கியம். இவர் அவரையோ அவர் இவரையோ தவிர்த்து உயிர்வாழமுடியாது. தனது வளத்தில் ஒரு பகுதியை எழுத்தாளனுக்கு கடன்கொடுக்க முன் வரும் எழுத்து, எழுத்தாளனின் தேவையையும், திருப்பி அளிக்கும் திறனையும் பொறுத்து கடன்தொகையை தீர்மானிப்பதில்லை. முழுச்சுதந்திரத்தையும் எழுத்தாளனுக்கு அளிக்கிறது, அவனது தேவையையும் திருப்பி அளிக்கும் திறனின் அடிப்படையிலும் கடன் தொகையை அவனே தீர்மானிக்கிறான்.

கைச்சாத்திடப்படாத இந்த ஒப்பந்தம் பரஸ்பரநம்பிக்கையின் அடிப்டையில் நிறைவேற்றப்படுகிறது. அசலுடன் வட்டியுயும் சேர்த்து பெற்று தனது கருவூலத்தை வளப்படுத்திக்கொள்ளும் எழுத்துக்குள்ளசுயநலம் எழுத்தாளனுக்கும் உண்டென்பதால் பரஸ்பர ஒட்டுண்ணிகுணத்தை மறந்து இருவரும் மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை இக்கடன் ஒப்பந்தத்தின் அடிப்படை சாரமாக கருதவேண்டியது. சார்த்துரு மொழியில் இதனை கடப்பாடு என்று அடையாளப்படுத்தலாம்.

மொழிக்குக் கடப்பாடுவடையானாக இருப்பவன் – கொஞ்சம் யோசித்துபார்த்தோமெனில் -அவனுக்கே அவன் கடப்பாடுடையவனாக இருக்கிறானென்று அச்சூத்திரத்தை தெளிவுபடுத்திகொள்கிறோம். சற்று கூடுதலாக சிந்தித்தால் எழுத்தும் எழுத்தாளனும் வேறுவேறல்ல- என்றாகிறது. வேண்டுமானால் புரிதலுக்காக எழுத்தாளர்களை எழுத்தின் அவதாரங்கள் எனக்கொள்வோம். அந்த அவதாரத்தில் அம்பையுமிருக்கலாம் ரமணிசந்திரனுமிருக்கலாம். எடுக்கின்ற அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கிருக்கிறது. ஜெயகாந்தனுக்கென்று ஒரு மொழியை கதைசொல்லலை மேற்குறிப்பிட்ட கடன்பத்திரத்தில் ஷரத்தாக சேர்த்திருப்பார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடப்பாடு ஜெயகாந்தனென்ற அவதாரத்திற்கு இருக்கிறது. எழுத்தாளனுக்குள்ள சுதந்திரம் என்பது ஒருவகையில் எழுத்திடமுள்ள கடப்பாட்டை புரிந்து நடப்பது.

உம்பர்ட்டோ எக்கோ தனது கறுப்பு நாயை வெள்ளை நாயாக மாற்றப்போகிறேன் என்கிறார். அவரது கறுப்பு நாய் நீங்கள் அறிந்த நாய்தான் பெயர் ‘The name of the Rose’. வெகுசன ரசனைகேற்றவகையில் தமது நாவலை திரும்பவும் எழுதப்போகிறாராம், பரவலான வாசகர்களை அவரது படைப்பு எட்டவேண்டுமாம்..

உம்பர்ட்டோவின் நல்லெண்ணத்தை சந்தேகிக்கமுடியாது. கூடுதலாக ஒன்றிரண்டு மில்லியன் டா¡லரை சம்பாதிக்கவேண்டுமென்ற என்ணம் அவரது பதிப்பாளருக்கு இருக்கக்கூடும். உம்பர்ட்டோவுக்கு இருக்கமுடியாது. அண்மையில் வெளிவந்த The Cemetery of Prague, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்கிறார்கள் – வாசித்ததில்லை. இன்றையதேதியில் உம்பர்ட்டோ எக்கோ என்ற பெயரில் ஒரு விலைப்பட்டியலை நூலகத்தில் வைத்தால்கூடபோதும், அதற்கும் வாசகர்கள் கிடைப்பார்கள். இச்சூழலில் எல்லோருக்கும் கொண்டுபோகிறேனென்று இலக்கியத்தை எளிமைபடுத்து அவசியமா என்று கேள்வி எழுகிறது.

உம்பர்ட்டோவின் இந்த முயற்சியை கண்டிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். நான் கண்டிக்கிறவர்கள் பக்கம். நாளை விஷ்ணுபுரத்தை எளிமைபடுத்துவதாக அதன் ஆசிரியர் கூறினால் ஏற்கமாட்டேன். விழ்ணுபுரத்து அழகே அதன் சிக்கலான நடையில்தானிருக்கிறது.. அப்படியொரு ஒப்பந்தத்தை ஜெயமோகன்  எழுத்தோடு கைசாத்திட்டுள்ளார். உம்பர்ட்டோ எக்கோவிற்கும் அத்தகைய கடப்பாடு எழுத்திடமுள்ளதென்பது எனது கருத்து. The name of the Rose வாசகர்கர்களில்  ஒரு விழுக்காட்டினர் கூட லத்தீன்மொழியை கற்றிருக்க சாத்தியமில்லை, அதனாலென்ன இடைக்காலத்தைப் பற்றி பேசுகிற நாவலொன்றில் அதன் உபயோகம் நாவலின் தரத்தை கூட்டியுள்ளதென்றே சொல்லவேண்டும். தவிர நாவலெங்கும் தற்காலத்தையும் இடைக்காலத்தையும் பிணைக்கும் தத்துவ விசாரங்களையும் குறியீடுகளையுங்கூட எளிமைப்படுத்துவாரா எனத் தெரியவில்லை. தவிர உம்பர்ட்டோவின் இந்த முடிவில் எனக்கென்னவோ ஏளனமும் கலந்திருக்குமோ என்ற சந்தேகம். அதாவது வெகுசன வாசகர்கள் இவரது படைப்பை தொடமறுப்பதற்குக்காரணம் வாசகர்களின் போதாமை எனச்சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது நாவலில் இவர் வெளிப்படுத்தியிருக்கிற மொழி ஆளுமையும், நுட்பமான சொல்லாடலையும், கோத்திக் நிழலையும், குறிப்பாக ‘I was a medievalist’ in hibernation’ எனக் கர்வப்படுகிற விஷயத்தை ஞான சூன்யங்களுக்குத் தெரியபடுத்துவானேன் என நினைக்கிறார் போலிருக்கிறது.

எனக்குள்ள ஆதங்கம் இதுதான் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ எழுத்து இவர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அக்கடப்பாட்டை மீறுவானேன், மீறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வானேன்.
——–

.