(அழுவதும் சுகமே (1980) தொகுப்பிலிருந்து)

பட்டு நூல்களைத் தொட்டு, உணர்வு
இட்டுக் கற்பனைக் கோர்த்து
ஒட்டும் வண்ணத்துப்பூச்சி, அழகு
இட்டு படைத்தவன் அங்கே !
இட்டச் சேலைகள் காட்டி, எங்கள்
இதயம் பூத்திட வைத்தீர், எனப்
பட்டமும் பெருமையும் பெற்று, நல்ல
துட்டு சேர்ப்பவர் இங்கே !
வாட்டும் நெருப்பில் வெந்து, நல்ல
வாய்க்கினிய கறிகள் செய்து, சுகம்
ஊட்டும் சுவைபல சேர்த்து, நள
விருந்து சமைப்பவன் அங்கே !
கோட்டும் சூட்டுமாய் வந்து, நன்கு
கேட்டு வாங்கி மிக உண்டு, ஏப்பம்
மீட்டும் இடைவெளியிற் சற்றே, விருந்து
வீட்டை புகழ்பவர் இங்கே !
பாட்டு தந்தவன் ஒருவன், வண்ணப்
படம் பிடிப்பவன் ஒருவன், மெருகு
ஊட்டும் திரைக்கதைக்கொருவன், எனக்
கூட்டு முயற்சிகள் அங்கே !
சாட்டை சொடுக்கும் அழகும், நடிகன்
சண்டை போடும் அழகும், கண்டு
கூட்டம் புரளுது இங்கே, அவனைக்
கும்பிட உருளுது இங்கே !
தஞ்சை பெரிய கோயில், அழகு
தாஜ் மகால் ஒத்த சான்றும், எழ
நெஞ்சைப் பிளந்தவர் கோடி, அவர்
நினைவில் நிற்பதில்லை கிளியே !
உழைக்க மட்டும் தெரிந்தால்-உன்னை
ஒதுக்கி மிதித்துப் பிறர் உயர்வார்
பிழைக்கத் தெரியவேணும் கிளியே நன்கு
பேசத் தெரிய வேணும் கிளியே !
- நா. கிருஷ்ணா