அதிரியன் நினைவுகள்: தமிழில் வாசிக்க கிடைத்த கலைச்செல்வம்

திரு மாலன், பத்திரிகையாளர், மற்றும் எழுத்தாளர்

நம்மைப் புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உலகின் மிக முக்கியமான வரலாற்றுப் புனைவுகளில் ஒன்று மார்கெரித் யூர்செனாரின் *அதிரியன் நினைவுகள்* (Memoirs of Hadrian). மிகப் பழைய நூல் எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது பிரஞ்ச் மொழியில் வெளியானது. நான் வேலை தேடிக் கொண்டிருந்த நாட்களில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நூலகங்களில் வாசித்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தமிழில் வாசிக்கக் கிடைத்தது இந்தக் கலைச் செல்வத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு நன்றி

தமிழில் நீங்கள் வாசித்திருக்கக் கூடிய வரலாற்றுப் புனைகதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. தமிழில் எழுதப்படும் வரலாற்றுப் புனைவுகள் பக்கத்திற்குப் பக்கம் அல்லது அத்தியாயத்திற்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள், பரபரப்பூட்டும் செய்திகள்  கொண்டிருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் இதை அறிவார்கள்.

ஆனால். இது ரோமானியப் பேரரசர் அதிரியன் வாழ்க்கையையும் மனதையும் ஆழமாக ஆராயும் நாவல், இது எழுதப்பட்டிருக்கும் விதமே வழக்கத்திலிருந்து வேறுபட்டது. அதிரியன் தனது வாரிசும்  தத்தெடுக்கப்பட்ட பேரனுமான மார்கஸ் ஆரேலியஸுக்கு எழுதும் கடிதமாக இது விரிகிறது. அதனால் அதிரியன் நம்முடன் பேசுவது போன்ற அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறது. இது தமிழில் நமக்குக் கிடைத்திராத வாசிப்பு அனுபவம்.

சராசரித் தமிழ் வாசகர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். உலகின் சுவாரஸ்யமான வரலாறுகளில் அது ஒன்று. இது, 2ஆம் நூற்றாண்டு ரோமின் பின்னணியில் அதிரியன் ஆட்சி, அவரது தனிப்பட்ட உறவுகள், சிந்தனைகளை விவரிக்கிறது. வரலாற்றை அறிந்தவர்களுக்கும்  மொழிபெயர்ப்பின் எழுத்து நடை, வரலாற்றுப் பின்னணிக் குறித்த அலசல், இவற்றின் காரணமாக இந்த நாவல் பிடிக்கும்

நாவல் கருப்பொருள் சிக்கலானது ஆனால் நெடிதுயர்ந்த தென்னை மீதேறி அதன் காயைப் பறித்துச் சீவி உரித்து, உடைத்து உள்ளிருக்கும் பருப்பைக் கீறித் தருவது போல கடும் உழைப்பில் விளைந்த கனி போன்ற நடையில் நாகரத்தினம் கிருஷ்ணா அதனை நாம் வாசிக்க எளிதாக்கித் தருகிறார், இதற்கெல்லாம் வாசகன் மீதான பிரியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்

நாம் ஏன் இந்த நாவலை வாசிக்க வேண்டும்? அதற்கான விடை இதுதான். இந்த நாவல் அதிரியன் குரல் மூலம் உலகளாவிய மனித அனுபவங்களை ஆராய்கிறது. மனித மனத்தைப் புரிந்து கொள்ள விழைகிற எவரும் இதனை வாசிக்க வேண்டும். இந்த நாவலின் ஒரு முக்கியப் பொருண்மை என நான் கருதுவது தலைமை, அதிகாரம் இவற்றின் சுமை. ரோமானியப் பேரரசை உறுதிப்படுத்த முயன்ற அதிரியனை ஆட்சி என்ற பொதுக் கடமை அவனுள் நிகழ்த்தும் தனிப்பட்ட மாற்றங்கள்  இதில் சித்தரிக்கப்படுகிறது. நல்லது, கெட்டது இரண்டுமே காலப்போக்கில் ஒரு வழக்கமாக மாறிவிடுகிறது,முகமூடி, காலப்போக்கில், முகமாகவே மாறிவிடுகிறது

நாவலின் இன்னொரு இழை காதலும் இழப்பும். காதல் என்பதை ‘வியத்தகு மனித உறவாக’ப் பார்க்கிறார் அதிரியன், ‘சில புதிரான  அற்புத நிகழ்வுகளுக்கு முன்பு மனிதர் தருக்கம் கூனிக் குறுகுவதுண்டு’ என்ற அவரது அவதானிப்பு என்பதைக் காலம் இன்றுவரை மெய்ப்பித்து வருகிறது.காதலில் உடலின் பங்கு பற்றியும் பேசுகிறார். காமம் பற்றி அதிரியன் முன்வைக்கும் கருத்துக்கள் அப்பட்டமான உண்மைகளைப் பேசுகிறது. “காமம் உடலில் ஆரம்பித்து உயிரில் முடிந்து, மனிதனை முழுமையாக வசீகரிக்கவல்ல ஓர் அபூர்வ விளையாட்டு, அத்தகைய மனிதனைவேண்டி எனது வாழ்க்கையின் ஒரு பகுதியை இழக்கவும் நான் தயார். காதற் பரவசத்தை விவரிப்பது கடினம் ; வார்த்தைளின்றித் தவிக்கிறேன். புணர்ச்சி தரும் இன்பம் முரண்பாடுகளாலானது ; அதில் வெப்பமுமுண்டு; குளிர்ச்சியுமுண்டு ; நெருக்கமும் உண்டு; மூர்க்கமும் உண்டு ; உடல்படும் வேதனைகளுமுண்டு, உயிர்களெழுப்பும் சப்தமும் உண்டு” என்கிறார் அதிரியன்

ஆனால் இழப்பைப் பற்றி இவ்வளவு அப்பட்டமாகப் பேசமுடிவதில்லை அவரது அன்பித்குரிய நண்பர்  ஆண்ட்டினஸுடைய மரணம் அவரை ஆழமாக பாதித்தது.  நெருங்கியவர்களுடைய மரணம், உணர்ச்சி, தத்துவச் சிந்தனை என்ற முரணான இரண்டையும் ஒரே நேரத்தில் விளைத்து நம்மைத் தாக்குபவை. ஆங்கிலத்தில் யூர்செனார் இந்தப் பகுதியை பரபரப்பைத் தவிர்த்து உணர்ச்சி ஆழத்துடன், கையாண்டிருந்தார் நாகரத்தினம் கிருஷ்ணாவும் அதற்கு இம்மி அளவும் குறையாத திறமையை இந்தப் பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார். மிகச் சவாலான இந்த இடத்தை கிருஷ்ணா கையாண்டிருக்கும் விதம் அவர் அதிரியனாகவே ஆகி எழுதியதைப் போல உணர்வுகளின் தீவிரத்தையும் இழப்பின் தாக்கத்தையும் உணர்த்துகிறது. .

இறந்து போன உயிர் நண்பனுடைய பெயரில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டதைப் பற்றி அதிரியன் எழுதுகிறார்: “அவன் நினைவாக ஆண்ட்டினோபோலிஸ் என்றொரு நகருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது .  ஆனால் அதுகூட, புரட்டுவணிகர்களுக்குப் புகலிடமாகவும் ; அரசாங்க அலுவலர்கள் முறையற்றவகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் ; விபச்சாரத்திற்கும், ஒழுங்கின்மைக்கும், தங்கள் உறவுகள் மரணத்திற்குக் கண்ணீர் சிந்திய மறுநாள் அவர்களை மறந்துபோகிற கோழைகளுக்கும் ; இடமளிக்கிற  மற்றுமொரு நகரமாகத்தான் இருக்கப்போகிறது ;  இந்நிலையில் இந்நகரத்தை  நிர்மாணிக்கும் செயல் அபத்த விளையாட்டன்றி வேறேன்ன ?”

ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். அனேகமாக நமது பெருநகரங்கள் எல்லாவற்றிலும் காந்தியின் பெயரால் ஒரு வீதி -அநேக இடங்களில் அது பெரிய கடை வீதி – அமைந்திருக்கிறது.  அவை காந்தியின் இயல்பையும் செய்லையும் பிரதிபலிக்கின்றனவா? பிரதிநிதிக்கின்றனவா? அல்லது அங்கு நடக்கிற செயல்கள் பெரும்பாலும் அதிரியன் மேலே விவரித்திருக்கிற அதே செயல்கள்களாகத்தான் இருக்கின்றனவா? இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை அந்த ‘அபத்த விளையாட்டை’ விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நூலை வாசித்துக் கொண்டுவரும் போது நம்மில் பலர் அதிரியனுக்கு நெருக்கமாக உணர்வோம். அதற்குக் காரணம் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடை

சில உதாரணங்கள்:

என்னுடைய சிந்தனைக்குக் கடுமையான பயிற்சியை அளிக்க வல்ல குறிப்பாக  மிகவும் சிக்கலான, தெளிவற்ற கவிதைகளையும் சுவைத்துள்ளேன்.  கவிஞர்கள் அண்மைக் காலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது பழைய ஆசாமிகளாகவும் இருக்கலாம் ஆனால் எனக்குப் புத்தம்புதுப் பாதைகளைக் காட்டுகிறவர்களாகவோ அல்லது நான் தொலைத்த பாதைகளைத் திரும்பப்பெற உதவுகின்றவர்களாகவோ அவர்கள் இருக்கவேண்டும். அப்போதெல்லாம் எனது விருப்பம், குறிப்பாக கவிதைக் கலையில் உடனடியாக புலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கங்களாக இருந்தன  என்பதையும் தெரிவிக்க வேண்டும்

நான்  மனிதர்கள் மீது பிரயோகிக்கத் தயங்கும் வெட்கக்கேடான அடக்குமுறைகளை மாணவர்கள் மீது பிரயோகித்தனர். குறுகிய ஞானவரம்பிற்குள் அடைபட்டுக்கிடந்த அந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நெருங்கிய தங்கள் சக ஊழியர்களை வெறுத்தனர் ; பிறவிஷயங்களிலும்  அவர்கள் அறிவு, குறுகியதென்றே சொல்லவேண்டும். எனினும் அகங்காரத்திலும் குறைவின்றி இருந்ததால் உச்சக்குரலில் வார்த்தைப் போரில் இறங்குவர்.

எந்த  அளவிற்கு சுதந்திரமானவனாகச் செயல்பட்டேனோ  அந்த அளவிற்குப் அடிபணியவும் செய்தேன் ; இத்தகைய முனைப்பைப் பிறரிடம் கணமுடியாது  என்பதொன்றுதான்  சராசரி மனிதர்களைக் காட்டிலும் என்னை உயர்ந்தவனாக  நான் உணரும்புள்ளி. ஏறக்குறைய மனிதர்கள்  அனைவருமே தங்களுக்குரிய சுதந்திரத்தை மட்டுமின்றி   உண்மையான அடிமைப் பண்பையும் அறியத் தவறியவர்கள்.

முதன்முறையாக இல்வாழ்க்கை என்கிற அமைப்பு எனக்கு அறிமுகம். அவ்வாழ்க்கை கிட்டத்தட்ட திணிக்கப்பட்டதொரு வாழ்க்கையெனில் மிகையில்லை.

அச்சம்தரும் கற்பனைகள், நம்பிக்கை அளிக்கும் மாயத் தோற்றங்களைப்போலவே அபத்தமானவை 

நேர்த்தி, துல்லியம், மற்றும் ஆழத்தால் அவரது நடை தனித்து நிற்கிறது. இது வாசகர்களை அதிரியன் உள் உலகத்தை நேரடியாக அனுபவிக்க அனுமதிக்கிறது. அவரது அழகான மற்றும் அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்கும் திறன் அதற்கு மெருகூட்டுகிறது

*அதிரியன் நினைவுகள்*  பிரஞ்சு மொழியில் வெளியிடப்பட்டபோது உடனடி வெற்றியைப் பெற்றது, அதன் இலக்கிய மதிப்பிற்காகவும் நுட்பத்திற்காகவும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

தமிழிலும் அது நடக்கும். நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

பின்னூட்டமொன்றை இடுக