ஆடை, வடிவம், அழகு சங்கம் காட்டும் தோற்றம் என்கிற இந்நூல் புதுச்சேரி பாரதுதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமியின் ஆய்வு நூல். சங்க காலம், பெண்கள் இருதரப்பினரையும் முன்வைத்து அவர் எழுதியுள்ள பிறநூல்களை வாசித்தோருக்கு இந்நூலின் பெருமை சொல்லாமலே விளங்கும்.
« அழகு இந்தப் பிரபஞ்சத்தின் செய்தி. உண்மையுமாய் ஒளியுமாய் உணர்வையும் அறிவையும் கவர்ந்து உயிரில் கலக்கும் செய்தி. சமூக – பொருளாதார – பண்பாட்டின் நிகழ்வாய் அழகு பற்றிய செய்தி காலந்தோறும் பற்பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட சூழமைவுகளோடும், குறிப்பிட்ட பின்புலங்க்களோடும் வடிவமைக்கப்பட்டும், கண்டறியப்பட்டும் வந்திருக்கிற அழகினுடைய ஆற்றல் அறிவுப்புலனையும், உணர்வு நிலையினையும் இலக்கியமாக ஆக்குகிறது. » மேற்கண்ட வரிகள் தமிழறிஞர் தி.சு. நடராசன் அவர்களுக்குச் சொந்தமானவை. ‘ ஆடை,வடிவம், அழகு சங்கம் காட்டும் தோற்றம்’ என்கிற இந்த நூலை வாசிக்கக் கையிலெடுத்தபோது, நூலாசிரியரின் முயற்சியை, இப்பிரபஞ்சத்தின் அழகியலைப் புரிந்துகொள்ளும் நுட்பமாகவே பார்க்கிறேன்.
சங்கத்தமிழ், உலக இலக்கிய அழகியலில் முன்னத்தி ஏர், மொழிக்கலையின் வண்ணத்திரை. அதன் அடிச்சுவட்டில் கால்பதித்து கரையேறி, தமிழ்க்கள்ளை மாந்தி, பிறருக்கும் பகுத்து நம் தமிழ்க் கலைவாணியைக் கொண்டாடிய பெருமக்களையும், அவர்கள் படைப்புகளையும் அறிவோம். இங்கே நூலாசிரியர் ‘ஆடையை’ அலகாகக்கொண்டு சங்கத்தமிழின் பெருமையை பேசுவதோடன்றி, சங்கத் தமிழனின் வாழ்வியலையும் படம்பிடித்து காட்டுகிறார்.
மனிதரின் அடிப்படைதேவைகள் மூன்றென சொல்லப்படுகிறது அவை உணவு, உடை, உறையுள். மூன்றும் மனிதர் வளர்ச்சியை, பண்பாட்டை மதிப்பிடும் காரணிகள். இவைமூன்றில் உணவும், இருப்பிடமும் அத்தியாவசியமானவை. என்கிறபோதும், ஆடை விலங்கிடமிருந்து மனிதரை வேறுபடுத்தும் காரணி ; முன்பின் அறிந்திராத மனிதர்களிடத்தில் நம்மைப் பற்றி உயர்த்தியோ தாழ்த்தியோ முன்மொழியும் கட்டியக்காரன். சுருங்கக் கூறின் ஒருவனை அல்லது ஒருத்தியை பார்த்தகணத்தில் ஒதுங்கிச் செல்லவோ அல்லது மரியாதைச் செலுத்தவோ காரணமாக இருப்பது ஆடை. இச்சக்தி உணவுக்கோ, இருப்பிடத்திற்கோ இல்லை. ஆடை வாய்திறந்து, யாசிக்கவேண்டியதில்லை, அதற்குரிய மரியாதையை மௌனமொழியில் ஈட்டிக்கொள்ளும் வல்லமைகொண்டது. ஆடைக்கென்று ஒருசமூகத்தில் பன்முக அடையாளங்களுண்டு. அது தனி மனிதனின், அல்லது அவனுடைய இனத்தின் அடையாள வெளிப்பாடு. ஆணோ பெண்ணோ- அவர்கள் சார்ந்த சமூகத்தின் பின்புலத்தில், மதிப்பிடவும், தகுதியை நிர்ணயிக்கவும் அணிந்துள்ள ஆடை காரணமாகிறது. மனித உடலுக்கு ஆடைதரும் நன்மையென்ன என பார்க்கிறபொழுது, நாம் வாழும் இடத்தின் தட்பவெப்பத்திலிருந்து மட்டுமின்றி பிற மனிதர்களின் விமர்சனங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் கவசம்.
சங்க இலக்கியத்தை முன்வைத்து ஆடை அழகியலின் பன்முகத்தன்மையை ஆய்வுசெய்துள்ள நூலாசிரியர் கொடுத்துள்ள தலைப்புகள் : 1. தழையாடை உருவாக்க மரபு. 2. சங்க கால புலைத்தியும் அவர் தம் வாழ்நிலையும் 3. தழையாடை-பணி-மகளிர் 4. வெண்மை தமிழ் ஆடை மரபின் தனித்துவம் 5. புலமையும் வறுமையும் 6. தழையாடை அணியும் முறை 7. உடுக்கையும் உடுத்தியவரும் 8. பொன்னாடையும் சமூக கருத்தாட்டமும் 9. சிதாஅர் 10. தலைவனும் கையுறையும் 11. பருத்திப் பெண்டிர் 12. தமிழர் ஆடை மரபில் கலிங்கம் 13. சங்க மரபில் ஆடை . இவற்றின் சாரத்தைக் கீழ்க்கண்ட வகையில் அணுகலாம்.
1. சங்க காலத்தில் ஆடைகள் :
« சங்கால மக்கள் என்னென்ன ஆடைகளை உடுத்தியிருந்தார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிய இயலவில்லை » என்கிற பேராசிரியர் மா. இராசமாணிக்கனாரின் கருத்தை மேற்கோளாகக் காட்டியிருப்பினும், « தோலாடை, மரவுரி எனத் தொடங்கிய ஆடையின் வளர்ச்சி இன்றைய மனிதர்களைக் காட்டிலும், ஆதிக்குடிகளிடம் சமூகப்படிநிலையை எதிரொலிக்கும் அடையாளமாகவும் வழக்கில் இருந்துள்ளன என்பதையும், ஆடையென்ற சொல்லைக் கையாண்ட சங்கப் பாடல்களையும், அவற்றின் துணையுடனேயே ஆடையின் பல்வேறு பரினாமங்களையும் காண நூலாசிர்யர் எடுத்துக்கொண்ட முயற்சி, நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறதென்பது உண்மை.
அ. பொன்னாடை, பட்டு, கலிங்கம்
இன்றைய தமிழினத் சமூகத்த்தின் படிநிலையை ஆடையைக்கொண்டு மதிப்பிடுவது கடினம், ஆனால் நம்முடைய மூதாதையர் சமூகத்தில் ஆடைக்கு கணிசமான பங்களிப்பு இருந்துள்ளது. பொன்னாடைக்கு பொன்போன்ற ஒளிபொருந்திய ஆடையென பரிபாடல் விளக்கம் தருவதாகச் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள் தழையாடையைக் குறித்து விதந்து பேசும் அதே நேரம் பொன்னாடை பற்றியும் குறிபிடுவதாக நூலாசிரியர் தெரிவிக்கிறார். இன்றைக்குப் பொன்னாடை போர்த்தப்படாத தமிழரையோ தமிழச்சியையோ காண்பதரிது, ஆனால் சங்கத்தமிழர் பொன்னாடைப் போர்த்த தேர்வுசெய்திருந்த பிதாமகர்கள் இருவர் ; ஒருவர் கடவுள், மற்றவர் அரசன்.
பட்டாடை சங்ககாலத்திலேயே புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றினைக் ‘கொட்டைக் கரைய பட்டுடை நல்கி’...என்கிற பொருநராற்றுப்படை பாடல் வரி மூலம் ஆசிரியர் உறுதிசெய்கிறார். பட்டாடை சீன நாட்டிலிருந்து சாவக நாடு ஊடாக தமிழ் நிலத்திற்கு வந்ததாகச சொல்லப்படுகிறது. பட்டாடையைபோலவே கலிங்கம் வகை புடவைகளும், வேறு ஆடைகளும் தமிழ்நாட்டில் வந்தனவென்று அறிகிறோம். இவ் ஆடைகளில் பருத்தி ஆடைகளும் அடக்கம். கலிங்கம், பட்டுடைகளின் மாற்றுப்பெயரென்றும் சொல்லப்படுகிறது. சங்ககாலப் பெண்கள் கலிங்கம் உடுத்தியதற்கு சான்றுகளாக சங்கப்பாடல்களை இந்நூலாய்வுகள் தெரிவிக்கின்றன. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கியதை :
வானம் வாளிணித்த வனமலைக் கவாஅன்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்”
என்று சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் பாடுகிறார். பேகன் மயிலுக்கு வழங்கிய போர்வை கலிங்கம் என்று அறிகிறோம்.
ஆ. தழையாடை
« தமிழ்ச் சமூகத்தின் ஆதித் தொல்குடிசார்ந்த அடையாளத்தின் குறியீடாக தழையாடை இருந்தது » என்கிற பேராசிரியர் பக்தவச்சலபாரதியின் ஆய்வு முடிவு, இப்பகுதியில் நூலாசிரியருக்கு துணைநிற்கிறது.
பகைத்தழை, மடிவை, குழையென்று தன்மைக்கேற்ப தழைகளைத் தேர்வுசெய்து, துண்டித்து,கோர்த்து,தொடுக்கும்போது இடையிடையே ஆம்பல், நெய்தல், காந்தள், ஞாழல், வேங்கை, காஞ்சி, செங்கழுநீர், குவளை,துத்தி, புன்னை,தாழை முதலான மலர்களை இணைத்து தழையாடைகளை பண்டைத்தமிழர்கள் உருவாக்கினரென அறிகிறோம்.
உதாரணத்திற்கு, தழைகளை பறித்து தேவையற்றவற்றை நீக்கிவிட்டு, பாம்பின் படம் போன்று அகன்று காணப்படும் அல்குலுக்குத் தழையாடையைக் கட்டி இளம்பெண்கள் உடுத்தினார்கள் என்கிற குறிஞ்சிப்பாட்டைச் சுட்டுகிறார் நூலாசிரியர்.
« கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பைவிரி அல்குல் கொய்தழை தைஇ
பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை
எம் மெல்லிரு முச்சி கவின் பெறக் கட்டி”
தழையாடையை அணிந்தவர் யார் ?
தழையாடையை பேதைப்பருவம் முடிந்து பெதும்பைப் பருவம் தொடங்கிய காலத்திலிருந்து அவர்களின் மகப்பேறு காலம்வரை பெண்கள் அணிந்தனரென்றும். தினைப்புணம் காவல் காக்கும் பெண்களும், நெய்தல் நில பரதவப்பெண்கள் கடல் தெய்வத்தினை வணங்கும்பொழுதும், மீன்களைவிற்றல் மீன்களை உலர்த்துதல் முதலான பணிகளில் ஈடுபட்டபொழுதும் தழையாடையை அணிந்தனரென அறிகிறோம். குறமகளிர், பரத்தையர், விறலியர் முதலானோர் தழையாடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறே, களவொழுக்க காலத்தில் தலைவி தலைவனைச் சந்திக்கிறபொழுது தழையாடையை அணிந்திருக்கிறாள். ஆனால் அவளே தலைவனின் இறப்பிற்குப் பிறகு தழையாடை அணியக்கூடாதென்கிற வழக்கு இருந்ததென அறிகிறோம்.
உண்மையான காதலுறவுகொண்ட ஆடவனே காதலிக்கு தழையணியை அன்பளிப்பாக வழங்கமுடியுமென்ற நிலையில், களவாய் ஒருவன் ஒருத்தியைச் சந்திக்கிறபோது கையுறை (சங்க கால கையூட்டோ ?)கொண்டுவருவது சங்ககாலவழக்கம். அதற்குதாரணமாக பலபாடல்களை நூலாசியர் சுட்டுகிறார். அவற்றிலொன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளன இப்பாடல்.
« தளிர் சேர்த்தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணறிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ ? »
குறிஞ்சி, மருதம், நெய்தல் பாலை பெண்கள் தழையை ஆடையாக உடுத்தியிதோடு கழுத்திலும், தலையிலும், காதிலும் வெவ்வேறு வகையில் அதனை தொடுத்தும், செருகியும் தன்னை அழகுப்படுத்திக் கொண்டனரென்றும், அழகியல் உணர்வோடு, ஆடவரை ஈர்க்கும் வகையிலும் இவ்வலங்காரம் அமைந்திருந்தாகவும் சங்கப் பாடல்கள் துணையுடன் நூலாசிரியர் விளக்குகிறார்.
இ. துவராடை :
துவர்நிற ஆடையைக் குறிக்கும் இடங்களில் ஆடை என்கிற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறதென்கிற ஆசிரியர், நூலில் நோக்கிற்கேற்ப சங்கப்பாடல்களை உதாரணமாகத் தருகிறார் ஆசிரியர். காய்ந்த சருகிலிருந்து உருவான ஆடை துவர்நிறத்தில் இருந்ததால் துவராடை எனப்பட்டதென்றும் ; வழிப்பறியில் ஈடுபட்ட பாலைநில மறவரும், வில்லுடன் திரிந்த கொலைபாதகர் எய்னரும் துவராடை அணிந்தனர் என்றும் தெரியவருகிறது. இறைவனுக்கு அணிவித்த ஆடை பொலிவுடையது என்ற பொருளில் பரிபாடலில் பொலம்புரி ஆடையெனச் சொல்லப் பட்டிருக்கிறது. என்கிறார் ஆசிரியர். இதுபோல புறநானூற்று பாடலொன்றில் வீர்னொருவனின் தோற்றத்தை விதந்தோதும் வகையில் அவனது ஆடைப்பற்றிய குறிப்பில் பூவேலைப்பாடு மிக்க ஆடை என்ற பொருளில் பூவார் ஆடை என்ற சொல் பயன்படுத்தியிருப்பதை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். இவைதவிர இல்வாழ்க்கையில், நீராடுகையில் ஆடை என்கிற சொல்ல கையாண்டுள்ள சங்கப்பாடல்களின் வரிகளைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஈ. உடுக்கை :
‘உடுக்கை’ சங்க இலக்கியத்தில் வறியவர்கள் அணிந்த உடையாகவே குறிப்பிடுகிறதென்றும், வறுமையில் உழலும் மனிதர்களின் எளிய உடையைக் குறிக்கும் இடங்களில் “உடுக்கை” என்ற சொல்லாட்சியைக் காணமுடிகிறதென்றும் இவ்வாய்வு நூல் நமக்குத் தெரிவிக்கிறது.
புறநானூற்றில் சேரமான் வெற்றியைப் புகழ்ந்துரைக்கும் பாடலொன்றில் இடையன் ஒருவனின் தோற்றத்தை வர்ணிக்கும் கவிஞர் ‘மாசுண் உடுக்கை’யில் அவன் இருந்ததாக எழுதுகிறார். மற்றொன்றில் புலவர் பெருஞ்சித்திரனாரின் மனைவி வறுமையின் பிடியில் சிக்கி மேனி ஒளியிழந்திருக்க அவளாடையை ‘மாசொடு குறைந்த உடுக்கையள்’ எனச் சித்தரித்திருப்பதைக் காண்கிறோம். அவ்வாறே வறுமையில் வாடிய குறவர் ஆடையும் உடுக்கையென அழைக்கப்பட்டுள்ள சங்கப் பாடல் வரிகளைச் சுட்டுகிறார் ஆசிரியர்.
உ. சிதாஅர் :
உடை குறித்த சங்கப்பாடல்கள் ‘சிதாஅர்’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர் புறநானூறு, பொருநராற்றுப்ப்டை, சிறுபாணாற்றுப்ப்டை, முல்லைப்பாட்டு ஆகியவற்றுள் கந்தை என்கிற பொருளில் இவ்வார்த்தை உபயோகப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். வறுமையில் வாடும் பாணர், புலவர் ஆகியோரின் கந்தலாடையைச் சித்தரிக்க சிதாஅர் உபயோகப்பட்டுள்ளதென தெரியவ்ருகிறது.
உ.ம் :
« வே ற்று இழைநுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயல் பாண » (புறநானூறு)
2. ஆடை சார்ந்த பிற சொல்லாடகள்
சங்கக்கவிதைகளைச் சான்றாகக்கொண்டு தொல்தமிழர் ஆடைகுறித்த உண்மைகளை பகிர்ந்துகொள்ளும் நூலாசிரியர், தமது தேடலை முழுமை படுத்துகின்றவகையில் வேறுசில சொல்லாடகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
அ.பருத்திபெண்டிரும் புலைத்தியரும்
இருதரபினருமே பெண்கள். பருத்திபெண்டிர் என்கிற முதல் தரப்பினர் « பஞ்சிலிருந்து நூலினை உருவாக்கும் செயல்பாட்டில் முழுமையாகத் தங்களை இணைத்துக்கொண்ட பெண்களைப் பருத்திப் பெண்டிர் என அழைத்தனர் »
. “பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தனிந்த நிணம் தயங்கு
கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ்மாறு பெயர.”
புறநான்னூற்றில் இடம்பெற்றுள்ள இப்பாடலால், பெண்களில் ஒரு பகுதியினர் பஞ்சிலிருந்து நூலினை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர் என்பதும் அவர்களை பருத்திப்பெண்டிரென நம் முன்னோர்கள் அழைத்தனரென்றும் தெரியவருகிறது. இப்பெண்கள் தங்களின் உழைப்பின் மூலமாக மட்டுமே வாழவேண்டிய சூழலில் இருந்துள்ளனர் என்பதும் இப்பெண்களில் பெரும்பான்மையோர் கைம்பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். பொருளீட்டிக் குடும்பத்தைக் காப்பற்ற ஆளில்லாத நிலையில் அச்சுமையை இப்பெண்கள் தங்கள் உழைப்பினைக்கொண்டு ஈடுகட்டியுள்ளனரென அறிகிறோம்.
ஆடை உருவாக்கத்திற்குப் பருத்திப் பெண்டிரெனில், அவற்றினை பராமரிக்கின்ற மகளிராகப் புலைத்தியர் சங்க காலத்தில் இருந்துள்ளனர். அழுக்கான ஆடைகளைத் துவைப்பவளைப் ‘புலைத்தி’ என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிக்கிறது. மேலும் ஆடைகளை இரவு நேரங்களில் துவைத்தமையையும் இவ்விலக்கியங்களில் பதிவு செய்துள்ளதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார். நூலில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட பாடல் நற்றிணைப் பாடல்.
“ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பன்மயின் பெருங் கை துவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோளிணித்த
புகாப் புகர்? கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடி,
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க…”
ஆ. தமிரின் ஆடையில் வெண்மை நிறம்
வெண்ணிற ஆடை தமிழரின் நாகரிக வளர்ச்சியில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், வெவ்வேறு குறியீடுகளை இவ்வாடை கொண்டிருப்பினும், சங்ககால சமூக இயங்கியலில் வெண்மை பெறும் இடம், வாழ்வியல் நிகழ்வுகளில் வெள்ளுடையின் முக்கியத்துவம், அதிகாரக் கட்டமைப்பில் இவ்வாடையின் செயல்பாடு போன்ற காத்திரமான பல்வேறு தரவுகளைத் தன்னகத்தேக் கண்டுள்ளதென அறிகிறோம்.
« சங்கப் பனுவலில் தூய வெண்மையான ஆடை குளிர்ந்த அருவியிலிருந்து பலவாய் இழியும் துகிலின் தூய விரிப்பை ஒப்ப காட்சியளிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. » என்கிறார் நூலாசிரியர். வெண்மை ஆடையின் தூய்மையையும், அழகினையும் ஒருசேர புலப்படுத்தும் இப்புறநானூறுப் பாடலை இங்கே சாட்சியமாகிறது. .
“திரைபொரு முந்நீர்க் கரை நணிச் செலினும்.
எறிபடைக் கோடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரு அருவி நின்
கொண் பெருங்கானம் பாடலெனக் கொளிதே
துகிலினுடங்கி இழிதருமருவி
அவிர்துகில் புரையு மவ்வெள்ளருவி”
* * * *
மனித இனம் தோன்றிய குறுகிய காலத்திலேலே விலங்கிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்ட, உதவியது ‘ஆடை’. ஓர் இனத்தின் அடையாளமாக, பண்பாட்டின் வெளிப்பாடாக, பிறப்பு முதல் இறப்புவரை குதுகூலம், கொண்டாட்டம், திருமனம், இறப்பு என்று மனிதரின் உயிரோடும் உடலோடும் பயணித்த உடையை, நம்முடைய தொல்குடியினரைக்கொண்டு ஆடை, வடிவம், அழகு-சங்கம் காட்டும் தோற்றம் என்கிற முனைவர் ஏ.இராஜலட்சுமியின் இந்நூல் சிறப்பாக ஆய்வு செய்துள்ளது. அன்றியும் நூலாசிரியர் இப்பொருள் குறித்த தேடலுக்குத் துணை புரிந்த நூல்களென்று 75 அறிஞர் பெருமக்களின் நூல்களை பட்டியலுட்டுள்ளார். ஆக பண்டைத் தமிழரின் உடைகுறித்த சொல்லினை முன்மொழிந்து அதனூடாக ஓர் அழமான புரிதலை நூல் தருகிறது. சராசரி தமிழருக்கக்கு மட்டுமின்றி இத்துறை சார்ந்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பது நிச்சயம்.
_______________________________________________________________________


