உண்மை :
உண்மை என்பது மனிதர் அறிவின் தேடல். தம்மிடம் தொடுத்த வினாக்களின் அடிப்படையில், ஒரு பொருள் அல்லது ஒரு கருத்தியம் சார்ந்து மனிதரின் அறிவு, தக்க பதிலொன்றை எட்ட முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு நமது அனுபவமும் அறிவும் கைகோர்த்து உதவுகின்றன.
சற்று விரிவாக கூறவேண்டுமெனில், இப்பிரபஞ்சத்தின் எல்லா கூறுகளும், அவற்றின் இயக்கமும், அதற்குக் காரணமான உந்துவிசையும், ஆக அனைத்துமே மனிதர் கண்ணோட்டத்தில் அல்லது மனித வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருப்பெற்றவை. இவற்றையே உண்மையென்கிறோம் அல்லது உண்மையென நம்புகிறோம். இந்நம்பிக்கை, நேற்றைய மனித நம்பிக்கையின் தொடர்ச்சி. அது வித்தாக விழுந்து மரமாக ஓங்கிவளர்ந்திட பல காரணிகள் இருக்கின்றன.
இயறகையின் சுழற்சிக்கேற்ப வாழப்பழகிய மனித உயிர்கள், அறிவுவழி நடத்த, எதார்த்தத்தின் கதவுகளைத் திறந்து கண்டறிந்தவற்றையும் உண்மைகளென்று கூறலாம். இவையன்றி, ஒரு மனிதனைச் சுற்றியுள்ள பிறர், அவன் பின்புலத்தில் உள்ள சமூகம், அவன் மரபு ; அவனுடைய கல்விக் கேள்விகள், புலன்கள் ஆகிய அனைத்திற்கும் உண்மையில் பங்குண்டு. முடிவைத் தீர்மானிக்கிறபோது, தீரயோசித்து எது மெய் எது பொய்யென கண்டறியவேண்டும். ஆனால் அது அவளவு சுலபமல்ல எனபதுதான், நாம் வாழும் இன்றைய உலகின் போக்கு.
சாக்ரடீஸைப் பொறுத்தவரை, உண்மை என்பது ஒவ்வொருநாளும் மனிதர்கள் வாழ்க்கையிடம் கற்றுப்பெறும் அறிவு மட்டுமல்ல, அவ்வுண்மை மனிதர் வாழ்க்கையில் ஓர் அங்கமென்றும், அதை தட்டியெழுப்பும் சக்தி மனிதகுலத்திற்கு மட்டுமே உள்ளதென்றும் நம்புகிறார்; ஆனால் உண்மை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை, தன்னை முன்னிலைப்படுத்த அது படும்பாடு, அதற்குள்ள சவால்.
மனிதர்வாழ்க்கையில் காலம் காலமாக நம்பிவரும் உண்மைகளுக்குப் பிரச்சினைகளில்லை : ‘சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது’, ‘இந்தியா ஆசியக்கண்டத்தில் இருக்கிறது,’ ‘தமிழர்வழக்கில் மனைவியென்பவள் தாலிகட்டியவள்’, ‘சனி ஞாயிறு அலுவலக விடுமுறை தினம்’ இன்னமும் இதுபோன்ற ஏராளமான உண்மைகளை ஏற்பதில், அங்கீகரிப்பதில் நமக்குச் சங்கடங்களில்லை, காரணம் இவ்வுண்மைகள் நாம் பிறப்பதற்கு முன்பே உறுதிசெய்யப்பட்டவை, வழக்கில் உள்ளவை. இன்று, எவரேனும் நம்மை அணுகி, « இனி சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும் » என்று கூறினால் நாம் கைகொட்டி சிரிப்போம். சொல்லும் நபர், வானியலில் தேர்ந்தவரே ஆயினும் உலகம் அதனை ஏற்றுக்கொள்ள தயங்கும். அந்நபரின் மனநிலையைச் சந்தேகிப்போம். காரணம் இயற்கையும், அறிவியலும், காலமும், மரபும், கட்டமைத்ததை ; ஊரும் உலகமும் ஏற்றுக்கொண்ட உண்மையை மறுக்கவியலாதென நினைக்கிறோம்.
இந்நிலையில், பொய்மை எங்கிருந்து வந்தது ?
மேற்குலகில் ஒரு பழங்கதையுண்டு. அக்கதையின்படி, ஒருநாள் பொய்மை வாய்மையைச் சந்திக்கிறது. இரண்டும் பரஸ்பரம் வணக்கங்களைத் பரிமாறிக்கொள்கின்றன. பொய்மை வாய்மையிடம் : « இன்றைய தினம் வானிலை நன்றாக இருக்கிறது » எனத் தெரிவிக்க, வாய்மைக்கு பொய்மையின் வார்த்தைகளில் சந்தேகம்(நியாயம்தானே ?) எனவே அதை தெளிவுபடுத்திக்கொள்ள வாய்மை தலையை உயர்த்தி வானைப் பார்க்கிறது. அதற்கு வியப்பு, பொய்மைக் கூறியதுபோல மேலே மேகமூட்டமற்ற நீலவானம். « நீ கூறியது உண்மைதான் » என வாய்மை பொய்மை கூறியதை ஆமோதிக்கிறது. பொய்மைத் தொடர்ந்து அருகிலிருந்த நீர்நிலையைச் சுட்டிக்காட்டி, « இது கூட அழகாக இருக்கிறது ! » என்றுதெரிவிக்க, வாய்மைக்குப் பொய்மை கூற்றில் உண்மை இருக்குமோ என்று மீண்டும் ஐயம், எனவே நீர் நிலையைப் பார்க்கிறது. இம்முறையும் பொய்மை கூறியதுபோலவே, நீர்நிலை அழகாக இருக்கிறது. இந்நிலையில் பொய்மை, « வா இருவரும் நீராடலாம் ! » என தந்திரமாக அழைக்க, பொய்மையின் அழைப்பினை நம்பி, வாய்மை தனது ஆடைகளைக் களைந்து பொய்மையுடன் நீராடுகிறது. இந்நிலையில் அவசரம் அவசரமாக கரையேறிய பொய்மை, தனது ஆடைகளுக்குப் பதிலாக வேண்டுமென்றே வாய்மையின் ஆடையைத் தரித்து, அங்கிருந்து போய்விடுகிறது, நிலமையை புரிந்துகொண்டு கரையேறிய வாய்மை, பொய்மையின் ஆடையைத் தரிக்க மனமில்லை, அதுவாய்மைக்குப் பொருந்தவும் இல்லை. அதன் நிர்வாண கோலத்தைக்கண்டு, பார்த்தவர்கள் வெறுத்து ஒதுக்க அவமானமுற்ற வாய்மை வேறுவழியின்றி ஒரு கிணற்றில் பாய்கிறது. ஆக கதையின்படி பொய்மையின் தந்திரத்திற்குப் பலியான வாய்மை இன்று கிணற்றில் கிடக்கிறது. மாறாக கம்பீரமாக நம்மிடையே உலாவருவது வாய்மை உடை தரித்த பொய்மை.
இவர்தான அவர்தான் என்றில்லை, எவரிடமும் பொய்மையின் ஆர்ப்பாட்டம் ; எங்கும் எதிலும் பொய்மையின் வீச்சு. வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வணிகச் சந்தையில், செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில், உரையாடும் விடயங்களில் உண்மையின் நிலமை என்னவென்று நாம் அறிவோம். வாங்கும் பொருள் எங்கிருந்து வந்தது, எப்படி தயாரிக்கபட்டது என்கிற தேடலைக்காட்டிலும் ; விலையும், ருசியுமே அப்பொருளின் தேர்வைத் தீர்மானிக்கிற கணத்தில் வாழ்கிறோம். மானுடவாழ்க்கையெனும் தினசரி சந்தையில் உண்மை விலைபோவதில்லை, விலைபோவது அழகான ஆடம்பரமான கவர்ச்சிகரமான பொய்கள். அரிச்சந்திரன் கதை போதித்தது, என்ன ? நடிகர் எம். ஆர். ராதா வார்த்தைகளில் சொல்வதெனில் சுடுகாட்டில் வாட்சுமேனாக அரிச்சந்திரன் உத்தியோகம் பார்த்தார், வேறேன்ன கண்டார் ?
ஆதியாகமத்தின்படி(Book of Genesis) ஏதென் தோட்டத்தில்(Garden of Eden) தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியை உண்டால், மரணம் சம்பவிக்குமென இறைவன் கூறிய பொய்யைமறுத்து, அக்கனிமரம் பற்றிய உண்மையை ஆதாம்-ஏவாளுக்குத் தெரிவித்ததற்கு, இவ்வுலகில் மனித உயிர்கள் பெருக காரணமான பாம்பு, சபிக்கப்பட்டக் கதையும் உண்டு.
ஆக மனிதன் தோன்றிய நாள்தொட்டு உண்மையும் பொய்யும் உடன் பயணித்தாக அறிகிறோம். மேற்குலக பழங்கதை கூறுவதுபோல உண்மை அம்மணத்துடன் உலாவர சங்கடப்பட்டு ஒளிந்துவாழ, பொய் உண்மையின் ஆடையைத் தரிந்து மேளதாளத்துடன் வீதியுலா வருகிறது. அன்றைய உலகில் கதைக்கேனும் உண்மைபேச ஓர் அரிச்சந்திரன் கிடைத்தார். ஆனால் இன்றைக்கு அப்படி ஒருவர் இருக்கமுடியுமா ? சாத்தியமா ? என்ற் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. பொய் என்பது, நாவிற்கும் மனதிற்கும் சம்பந்தமற்ற வார்த்தைகளின் அடுக்கு, தீய எண்ணத்தின் வெளிப்பாடு. உள்நோக்கமின்றி தவறுதலாக ஒன்றைக்கூறுவது பொய் ஆகாது, ஆனால் உள்நோக்கத்துடன் தெரிந்த ஒன்றை திரித்துக்கூறுவது பொய் ஆகிறது.
கோப்பருந்தேவி ஊடல் கொண்டிருந்தாள், அவளை ஆற்றுவிக்க முனைந்து தன் விவேகத்தை நெடுஞ்செழியன் இழந்திருக்க, அவ்வேளை பார்த்து அரசனை வணங்கிய பொற்கொல்லன் “கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன் ; அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்” என விண்ணப்பித்ததோடு “அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்” என்று தன்நெஞ்சறிந்த உண்மையை திரித்தும் கூறுகிறான். பாண்டியன் நெடுஞ்செழியனும் சிந்தித்துப் பார்த்தவனில்லை ; காவலர்களை அழைக்கிறான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்தும்பொய் தீரவிசாரிப்பதே மெய் என்கிற பழமொழி பாமரர்க்கேயன்றி பாராளும் மன்னனான எனக்கெதற்கென நினைத்திருக்கலாம், தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக்கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். இங்கே வெற்றிபெற்றது பொற்கொல்லனல்ல, அவனது மனசாட்சிக்கு எதிராக அவனை வழி நடத்திய பொய்.
« கண்டொன்று சொல்லேல் » அதாவது கண்ணால் கண்டதற்கு மாறாக சொல்லேல் என்கிறது ஆத்திச்சூடி. ஆனால் கண்ணால் காண்பதே ஆயினும் அது பொய்யா மெய்யா என்பதைத் தீர்மானிக்க சில கணங்களை ஒதுக்கி ஆய்ந்தறிவது நமக்கு அவசியமாகிறது, அதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா என்பது மனிதர்க்குள்ள சவால். வள்ளுவர் ஒரு படிமேலே சென்று நன்மை பயக்குமெனில் வாய்மையிடத்தில் பொய்மையை உபயோகிப்பதில் தவறில்லை என சிபாரிசு செய்கிறார்.
« பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் » என்பது குறள்.
சிலப்பதிகார கொல்லனுக்கு அவன் கூறிய பொய்யால் அவனுக்கு நன்மையா என்றால் நன்மைதான், ஆனான் அவன் கூறிய பொய்யால் கோவலனுக்குத் தீமையாயிற்று. ஆகவே வள்ளுவப்பெருந்தகை எவ்வுயிருக்கும் தீங்கு விளைவிக்காதெனில் பொய்யுரைக்கலாம் என்கிற பொருள்படும் படியே பாடியிருப்பார் என்பது நிச்சயம்.
நம்மைத் தவிர பிறமனிதரிடம் உண்மையை எதிர்பார்க்கும் மனிதராய் உலகில் இன்று வாழ்கிறோம் ; நம்மில் அரிச்சந்திரரென்று எவருமில்லை. என்பதும் ஓர் உண்மை. தத்துவவாதி கான்ட்(Immanuel Kant) எக்காரணத்தை முன்னிட்டும் பொய்சொல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளக் கூடாதென்கிறார். அவரைப் பொறுத்தவரை, காட்டுமிராண்டித்தனமான சக்திகளால் துரத்தப்படும் ஒரு அப்பாவியின் உயிரைக் காப்பாற்றவேண்டிய நிலையிலுங்கூட, ஒருபோதும் பொய் சொல்லக்கூடாதென்பது அவர் முன்வைக்கும் வாதம், ஆனால் கான்ட் அதற்கான காரணத்தை முன்வைத்தவரில்லை. நம்முடைய வள்ளுவருக்கு வலுவான காரணம் இருக்கிறது. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதென்கிற பழமொழியின் வீரியத்தைக் காட்டிலும், வள்ளுவர் விடும் எச்சரிக்கைக்கு சக்தி அதிகம். « ஒரு மனிதன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்து பொய்சொல்வது நல்லதல்ல, அவ்வாறு செய்தால் அவன் மனசாட்சி உறுத்தும், விளைவாக அமைதியிழந்து அல்லற்படுவான் என்கிறபொருளில் :
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
என்கிறார். இதைவிட பொய்மைக்கு வேறென்ன தண்டனைவேண்டும். அதிலும் அதிகாரமும் பணமும் ஆட்சிசெய்யுமுலகில், இக்குற்றவாளிகளை அவர்களுடைய மனசாட்சிதான் தண்டிக்கவேண்டும்.
—————————————————————————————————————–