Monthly Archives: செப்ரெம்பர் 2024

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

                              –  ரா கிரிதரன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’  – 1

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால்  ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியு ள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நீலக்கடல் – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை.  காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.

வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.

பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.

இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.

நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.

00Ooo

கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.

கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித  வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.

இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை

அவள் (சிறுகதை)

பாலைநிலம், கடந்த பல மணிநேரமாக இருவருமாக நடக்கிறார்கள் தலைக்குமேல் சூரியன் இருக்கவேண்டும் என்பது ஓர் யூகமதான், உறுதியாக சொல்வதற்கில்லை. வெளிறிய வானமே ஒரு பிரம்மாண்டமான சூரியனைபோல இருக்கிறபோது, சூரியனை எங்கிருந்து தேடுவது ! மனிதர் நடமாட்டமற்ற பெருவெளி. ஓரிடத்தில் மட்டும் சில கழுகுகள் இறந்த ஒட்டகமொன்றை குத்திக்கிளறி ருசிபார்த்துக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு கற்றாழைகளும், சப்பாத்திக்கள்ளிகளும் எதிர்பட்டனவேயன்றி, சற்றுகுந்தி இளைப்பாற பசுஞ்சோலையென ஒன்றோ, பேரீச்சைமரங்களோ கண்ணிற்படவில்லை.. பின்புறம் திரும்பிப் பார்க்க. புறப்பட்ட ஊர்,  நிலத்தையும் வான்வெளியையும் பிரிக்கின்ற கோடாய் நீண்டுக் கிடக்கிறது. « எனக்கு முடியலை  சிறிது நிதானமாக நட » என்று கெஞ்சினார். அவளைப்போல் உருக்கொண்ட அருவம் நின்றது. தலையைத் திருப்ப, அதன் பார்வையில்,  இவருக்கும் அவளுக்குமான தாம்பத்திய வாழ்க்கையில் கிடைத்த அன்போ, ஈரமோ இல்லை, மாறாக இரையைக் கவ்வும் நேரத்தில் இடையூறை எதிர்கொண்ட சிறுத்தைபோல விழிகள். அப்பார்வைக்குப் பொருள்சொல்வதுபோல, தொடர்ந்து « இல்லை இதுநாள்வரை நீங்கள் முன்னே செல்ல வளர்ப்புநாய் போல சோர்வின்றி, முணுமுணுப்பின்றி உங்களைத் தொடர்ந்து ஒரன்றிரண்டு வருடமல்ல தாலியைச் சுமக்க ஆரம்பித்த தினத்திலிருந்து நான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது உங்கள்முறை. இனி ஆயுள் பரியந்தம் நீங்கள் என்பின்னால நடக்கவேண்டும் »… என்கிறது

« சார் சார் ! பால் பாக்கெட் கொண்டுவந்திருக்கன். »

சுயநினைவுபெற்றவர்போல, சாய்வு நாற்காலியில் முதுகை நிமிர்த்தி உட்கார, எதிரே பக்கத்துவீட்டுப் பையன். ஆச்சரியமாக இருந்தது, அடிக்கடி அவர் கண்ணிற்படும் பையன்தான், ஆனாலும் தவறுதலாக தன் எதிரில் நிற்பதுபோல பட்டது. அவள் இருந்தால், உள்ளறையிலிருந்து தள்ளாடியப்டி வெளிப்பட்டு, « வாத் தம்பி ! » எனக் கம்மியகுரலில் விளித்து, பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு எள்ளுருண்டை ஒன்றை அவன் கையில் திணிப்பாள்.  

« நல்லது தம்பி, வச்சிட்டுபோ ! » என்றார், பையன் இரண்டு பால் பாகெட்டுகளையும் அங்கிருந்த ஸ்டூல் மீது வைத்துவிட்டு சிறிது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.     

காலை நேரம். மணி தோராயமாக எட்டுக்கு மேலிருக்கலாம். மெலிந்தகைகளிரண்டும் ஒன்றிற்கொன்று அன்பைப் பரிமாறிக்கொள்ளும்வகையில் தடவிக்கொண்டன. வயிற்றிர்க்கும் முதுகிடத்தில் அப்படியொரு பற்றுதல் இருக்கவேண்டும் ஒட்டிக்கிடந்தது. இலவம் பஞ்சுபோல நரைத்த தலைமயிரும், நிறத்தில் அதற்குச் சற்றும் குறையாத மீசையும், முருங்கை மர கம்பளிப் பூச்சிபோன்ற இரு புருவங்களும் ஒழுங்கின்றி இருந்தன. அவள் இல்லையென்று ஆனபிறகு தன் உடல் சார்ந்த பராமரிப்பில் அக்கறை இல்லாமலிருந்தார். எனினும் அவள் உயிரோடிருக்கும்வரை ஊட்டி வளர்ந்த உடல் என்பதால் முதுமைக்குரியசாயலை சிறிதும் காட்டிக் கொள்ளாத தேகம், சிலகிழமைகளாக, நீரைக் காணாத செடிபோல வாடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் கொழுகொம்பில்லை அந்த அம்மாள் மரம், இவருடைய பிடிமானமே அவள்தான். என்ற உண்மை அவள் மறைந்த குறுகிய நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகிவிட்டது.

 பார்வை வீதியிலும் விட்டத்திலுமாக தவணை முறையில் தடம் மாறிக் கொண்டிருக்கிறது. நடைகூடத்தில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் இரு கைகைளையும் தலைக்குக் கொடுத்திருந்தார்; கால்களை மாத்திரம் அவ்வப்போது, ஒன்றின்மேல் ஒன்றாக போடுவதும், பின்னர் கீழிறக்கி வைப்பதுமாக இருக்கிறார். அருகே தமிழ் தினசரிகள் இரண்டு, ஒன்று நேற்றைய தேதியிட்டது. « உங்களைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது », எனத் தெரிவித்து அவருடைய அபிமானி ஒருவர் கொடுத்துவிட்டுச் சென்றது, மற்றொன்று இன்றைய தினசரி.

  சாய்வு நாற்காலியில் எத்தனை மணிக்கு வந்தமர்ந்தார், அதிகாலை விழிப்பிற்குப் பிறகென்று வைத்துக்கொள்ளலாம். அவருடைய அவள் இல்லையென்றான பிறகு நாளின் பெரும்பகுதி இப்போதெல்லாம் சாய்வு நாற்காலியில் கழிகிறது. காலைக் கடன், இயற்கை உபாதைகளிலிருந்து விடுதலைபெற, பசி எடுத்தால் உணவுண்ண, மற்றும் எழுத்து சார்ந்து இவருடைய வருகை முக்கியம் என்கிற நெருக்கடி இருப்பின் இலக்கிய விழாக்களுக்காக அவருடைய சாய்வு நாற்காலியைப் பிரிவதுண்டு. மற்றப்படி வீடு தேடிவரும் இலக்கிய அன்பர்கள், உண்மையானஅபிமானிகள், பிறகு வீதியில் போய்க் கொண்டிருக்கும்போது, வழிபிள்ளையாருக்குத் தோப்புக்கரணம்போடும் இயல்புடன் நலன் விசாரிக்கவும், படம் எடுத்துக்கொள்ளவும் கதவைத் தட்டும் திடீர் அபிமானிகள் அனைவருக்கும்  அருள்பாலிக்க எழுத்தாளருக்கு உதவுவது  இந்த சாய்வுநாற்காலிதான்.

  வழக்கமாகவே அதிகாலையில் எழுந்திருக்கும் பேர்வழி. அவள் இறந்த நாளிலிருந்து உறக்கம் என்பது இல்லை, புரண்டு புரண்டு அவளைப்பற்றிய நினைவுகளில் மூழ்கி, அசைபோட்டது போதாதென்று, முன்கூடத்தில் போட்டிருக்கும் இந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். அதிலமர்ந்தபடியோ, படுத்தபடியோ, நாளின்மீது சூரியன் நிகழ்த்தும் அத்தனை மந்திர ஜாலங்களிலும் – சூரியன், சூரியன் அழைத்துவரும் காலை, முற்பகல், சூரியனற்ற பிற்பகல், மெல்ல மெல்ல பகல் நீர்த்து இரவு மாயப் போர்வையாக தடித்து அனைத்தையும் மூடும் வரை – தினம் தினம் பார்க்கிற காட்சிதானே என்கிற அலுப்பின்றி அவற்றில் லயித்திருப்பார். இடைபட்ட நேரங்களில் இறந்த அவருடைய மனைவியின் ஞாபகங்களோடு சாப்பிட இலை தைப்பதுபோல அவசரகதியில் சம்பவங்களைக் கோர்ப்பார் .

  மூத்த எழுத்தாளர், எழுபது வயது, சரியாகச் சொல்லவேண்டுமெனில் எழுபதுவயது நான்குமாதங்கள். போனமாதத்தில் அவருடைய பிறந்த நாள்,  திரைப்பட இயக்குனர் ஒருவர் தலைமையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.விழாவின்போது எழுத்தாளர் ஒருவருக்கு விருதும் கொடுத்தார்கள். விருதின்மதிப்பு பணத்தில் இருக்கிறது என்கிற தமிழிலக்கிய அறத்தின்படி பத்து இலட்ச ரூபாயை விருதோடு சேர்த்துக்கொடுத்தார்கள். பொதுவில் இன்றைய எழுத்தாளர்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் எதுவும் அவருக்கில்லை, வாசிப்பதுமில்லை. அதுவும் தவிர  தனக்காக ஒரு பெருந்தொகையை பரிசாக கொடுக்கும் அந்நபர் உண்மையில் இலக்கிய அபிமானியா அல்லது  பத்து இலட்சரூபாயை பரிசாகப் பெற அந்நூலுக்குத் தகுதியுண்டா என்பதுபோன்ற தேவையற்ற ஐயங்களுக்கு இடம்கொடுப்பதுமில்லை. இவரைக்கொண்டாடும் அன்பர்களின் பங்களிப்பில் நடப்பதால் எல்லாம் சரியாகத்தான் இருக்குமென்று நம்பிக்கை. ஒருமுறை இவருடைய மகள் தன்பிள்ளையைக் கல்லூரியில் சேர்க்க பணம் தேவைப்படுக்கிறதெனக் கூறி, அத்தொகையில் பாதியையாவது நம்மிடம் அவர்கள் கொடுக்கக் கூடாதா எனக்கேட்டு உபத்திரவம் கொடுக்க, அன்பர்கள் உண்மையைப் போட்டு உடைத்தார்கள். அந்த உண்மையை மேலும் உடைத்தால் சில்லுகளாகிவிடும் என்பதால்  இவரும் இவருடைய ‘அவளும்’ மகளுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்கள். கட்சி அரசியல் மட்டுமல்ல இலக்கிய அரசியலும் நமக்கு வேண்டாமென்று ஒதுங்கி இருப்பவர். நம்மீது மரியாதைவைத்து ஏதோ நடக்கிறது, அதுதான முக்கியம், என்கிற திருப்தியொன்று போதும்.  

புதுச்சேரிக்கே உரிய  சித்திரைமாதத்து வெயில். வீதியின் மறுபக்கம் சற்று சோர்வுடன் நிற்கும் மரங்கள், தொலைதூரத்தில் சமுத்திரம்போல வெளிறிய அடிவானம், புதிரான இராட்சத விலங்குகள்போல உறக்கத்தில் மேகங்கள், மொட்டைமாடிகள், ஆகாயத்தில் சோர்வின்றி வட்டமிடும் ஒரு கழுகு என மேய்ந்த அவருடைய பார்வை வீதியில் வீட்டெதிரில் நிற்கும் வேப்ப மரத்தின்  மீது பதிந்து அசையாமல் நின்றது. திடீரென்று மஸ்லின் ஆடையில் மென்காற்று, நடனக்காரிபோல சுழன்று சுழன்று அலை அலையாக அதன் கிளைகளில் இளைப்பாறுவதுபோல அமர்ந்து பின்னர் எழுந்தோடியது. வேம்பின் மெல்லிய கொம்புகள் மெய்சிலிர்த்து, நடனமாடும் காற்றுப்பெண்மீது பூ மாரிப் பொழிவதுபோல பூக்களை உதிர்க்கின்றன. அவருடைய ‘அவள்’ இருந்தால் படியிறங்கி வீதியின் மறுபக்கம் சென்று காத்திருந்து, உதிரும் பூக்களை மடியில்வாங்கி  வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் அடுப்பில் வாணலை வைத்து உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் தேங்காய்த் துருவலையும், வேப்பம் பூவையும் சேர்த்து, வதக்கி ஆற வைத்து. சூடு ஆறியதும் மிக்ஸியில் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, வேப்பம் பூ துவையல் தயாரித்தாளென்றால் அன்று இவருக்கு ஒரு பிடி தயிர் சாதம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இறங்கும்.

அவளைப் பற்றிய பிரம்மிப்பு இன்றுநேற்றல்ல மணமுடித்திருந்த ஒரு சில நாட்களிலேயே ஆரம்பித்து, இதோ இன்று இறந்தபின்னரும் நீடிக்கிறது. சம்பிராதாயப்படி மறுவீடு விருந்துக்கென அவள் வீ.ட்டிற்குச் செல்லவேண்டியிருந்தது. புதுமணத் தம்பதிகளுக்கென்று  மாடியில் ஓர் அறையை ஒதுக்கி இருந்தார்கள். சாப்பிட மட்டும் கீழே இறங்கவேண்டும். புதுமாப்பிளைக்குரிய விருந்தென்ற வகையில் தடபுடலாக படைக்கப்பட்டபோதும் இவருக்குப் பிடித்த அயிட்டங்கள் இல்லை, « புதுப் பொண்டாட்டியிடம் » விரும்பியதைச் சொல்லவும் கேட்கவும் இவருக்குத் தயக்கம், இந்த லட்சணத்தில் அப்போதெல்லாம் கொஞ்சம் கூச்சப் பேர்வழியுங்கூட. திருப்தியின்றியே கையைக் கழுவார்.  மூன்றாம் நாள் அந்த அதிசயம் நடந்தது. இலைபோட்டிருந்தது, வக்கம்போல இலையில் உப்பு, பருப்பு, அப்பளம், உளுந்து வடை. ஆனால், கடந்த இரண்டுநாட்களாக காணாத பருப்புப் பொடி, சேப்பங்கிழங்கு வறுவல், வாழைப்பூ கூட்டு, பிரண்டைத் துவையல், முளைக்கீரை சாம்பார், எலுமிச்சை ரசம், அவல் பாயாசமென  எல்லாமே இவர் விரும்பிச் சாப்பிடக்கூடியவை. போதாதற்கு அன்று என்னவோ, இவருடைய மாமியாருக்குப் பதிலாக ‘அவள்’ பரிமாறினாள். கூடுதலாக அவள் குனிந்து பரிமாறும் போதெல்லாம் பொன் வளைகளும், கால் கொலுசும் இணைந்து எழுப்பிய ஓசைக்கு, ஒற்றைச் சடை தரையில் கால்பதித்து ஆடியது. உபசார மயக்கத்தில் கூடுதலாகச் சாப்பிட்டார். கை கழுவச் சென்றபோது, கொலுசாக நடந்துவந்து செம்பு நீரை கண்கள் காதலுடன் கொடுக்க, கைகளைத் துடைப்பதற்கு துவாலையை நீட்டின, வளைகள். அப்போதும் அந்த ஒற்றைச் சடை ஒய்யாரமாய் குறுக்கிட்டது. அக்காட்சிகளெல்லாம், அவர் மனச் சுவரில் தீட்டப்பட்ட நிரந்தர ஓவியங்கள், அவற்றை அத்தனை எளிதாக மறக்க முடியுமா என்ன ?

அன்றையதினம் அவர் மனதிற்குள் எழுந்தகேள்வி இத்தனை சீக்கிரம் எப்படி « அவள் » தன் ‘சுவையை’ அறிய முடிந்தது. அதற்கான சூத்திரம், தந்திரம், உள்ளுணர்வு என்று பிரத்தியேகமாக அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இயற்கை கொடுத்திருக்குமா ? என்பதாகும். அக்கேள்வியைக் தனக்குள்  பலமுறை கேட்டிருக்கிறார்..பிறகு இவரைபோலவே தாம்பத்ய வாழ்க்கையின் பரிமாணங்களை : குழந்தைக்குத தாய், பேரப் பிள்ளைகளுக்குப் பாட்டியென ஒவ்வொன்றாக எட்டிப்பிடித்து உருமாற்றம்பெற்று பின்னர் திடீரென ஒரு நாள் « இங்கேயே இருங்கள் இதோ வந்துடறேன்  » எனப் போனவள்போல போய்ச் சேர்ந்துவிட்டாள். இறுதி மூச்சுவரை கைப்பிடிக் கொண்டை, நரைத்த தலை மயிர், புருவங்களுக் கீழ் எப்போதாவது சிமிட்டலுடன் இருப்பைவெளிப்படுத்துக் கண்கள், ஒட்டிய கன்னங்கள், வாயை உதடுகளில் மறைத்து, முகத்தை முகவாய்ப் பிரிமனையில் நிறுத்தி ஓய்வின்றி வீட்டில் வளையவந்தவள் திடீரென திருவிழாவில் தொலைந்தது போல தொலைந்துவிட்டாள். வீட்டில் திரும்புகிற இடத்திலெல்லாம் அவளை மட்டுமே கண்டதாலோ என்னவோ, இன்று அவள் நடமாட்டமற்ற வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.  

 அவள் உயிருடன் நடமாடியபோது, மணக்க மணக்க, கைவிரல் பதத்துடன், சரியாக ஆறு மணிக்கு ஒரு காப்பி கிடைக்கும். இந்த மூன்றில் எந்த ஒன்றில் தவறு நேர்ந்தாலும், இவரால் சகித்துக் கொள்ள முடியாது.விசிறி முகத்தில் அடிப்பார். ‘அவள்’ இடமிருந்து எவ்வித பதிலும் வராது,  அண்மைக் காலம்வரை சிறு சிறு முணுமுணுப்பைக்கூட கேட்டதில்லை. இடுப்பில் சொருகிய முந்தானையை எடுத்து முகத்தை அபிஷேகம் செய்தபின், மூக்கின் நுனியில் சொட்டிக்கொண்டிருக்கும் திரவத்தை அழுந்த துடைத்துக்கொண்டே, முதன் முதல் பெண்பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றபோது எப்படி நடந்தாளோ அப்படி  கால்களைப் பாந்தமாக எடுத்துவைத்து சுவரில் மோதி கீழே தரையில் புரண்டபடி அசையும் தம்ளரைக் குனிந்து கையில் எடுந்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்றால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இன்னொரு கப் காப்பி ஈசிச்சேர் அருகே வந்து உட்காரும்.

இன்றைய தமிழின் மூத்த படைப்பாளி என்கிற பெயர் வாங்கியிருக்கிறார். ஒருவித   மரியாதை நிமித்தம் அவரைப் பலரும் பார்க்க வருகிறார்கள் என்பதை நன்றாக அறிந்தும் இருக்கிறார், இருந்தும் ஒருநாள் மனைவியிடம் விளையாட்டாக, :

  « எனக்கென்னவோ என்னைப் பார்க்கும் சாக்கில் உன்னுடைய காப்பியை குடிக்கத்தான் நம் வீட்டுக்கு வராங்களோண்ணு நினைக்கிறேன், எனக்குக் கொடுப்பதுபோல அவர்களுக்குக் காப்பி போட்டுத் தராதே ! என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். »

எனச் சிரித்துக்கொண்டே தெரிவித்ததுண்டு. உதடுகளைப் பிரிக்காமல், பக்கவாட்டில் அவை சற்று இழுபட முகம் மொத்தமும் தசை நார்கள் உதவியுடன் வெளிப்படுத்துகிற மகிழ்ச்சியொன்றே அவள் அதற்குத் தரும் பதில். 

  அவள் இல்லையென்றான பிறகு, கடந்த சில கிழமைகளாக  உள்ளூர் இலக்கிய அன்பர் ஒருவர் ஏற்பாடு செய்த  வேலைக்கார அம்மாள் வரும் நேரத்தை பொறுத்து (ஒன்பது மணிக்கு வரவேண்டும்) காப்பி என்ற பெயரில் ஒரு பானம் கிடைக்கும். வாயருகே கொண்டு செல்ல மூக்கை கடிப்பதுபோல வரும் துர்நாற்றத்துடனான அந்த பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு, தரையில் வைத்துவிடுவார். அப்பெண்மணியும்  « நீ குடித்தாலென்ன குடிக்காவிட்டால் எனக்கென்ன, காலையில் காப்பிப் போடணும், பாத்திர பண்டத்தை துலக்கணும், வீட்டைப் பெருக்கணும், அழுக்குத் துணியிருந்தா துவைக்கணும், வாங்கிவைத்த காய்கறிகளில் என்ன மிச்சமிருக்கிறதோ அதைக்கொண்டு சமைக்கணும்.  பன்னிரண்டு மணிக்கெல்லாம் நான்  வீடு திரும்பணும் » என்றிருப்பவள்.  

நினைவுகளில் மூழ்கினார். அவள்’ இறந்த நாளிலிருந்து இப்படித்தான் பழைய ஞாபகங்களில் புதைந்துபோகிறார். அதை ஒரு தவம்போல ஐம்புலன்களையும் ஒடுக்கிச் செய்வார். சராசரியாக இரண்டுநிமிடங்களில் ஆரம்பித்து,  “அய்யா இருக்கீங்களா?”  எனக் கேட்டு, இலக்கிய அன்பர்கள் மேனகைகளாக குறுக்கிடாதிருப்பின் தவம் கலைய  இரண்டுமணி நேரம் கூட ஆகலாம். காற்று மெல்ல முன் கதவைக் கடந்து ஆடையின்றிருந்த மார்பையும் முகத்தையும் தொட்டு விலகிக்கொண்டது. காற்றின்மேல் கோபப் பட்டவர்போல உச்சுக்கொட்டினார். வீதியில் உருமிக்கொண்டுபோன இரு சக்கர வாகனம் மீண்டும் நனவுலகத்திற்கு அழைத்து வர, கண்கள் வெயிலில் பதிந்தன : வீதியின் மறுபக்கம் தழைத்திருந்த வேப்பமரமும் அதில் உட்கார்ந்திருந்த இரண்டு காகங்களும், நாக்கைத் தொங்கப்போட்டு ஓடிக்கொண்டிருந்த நாயும், குழதையைத் தோளில் போட்டுக்கொண்டு  மஞ்சள்புடவை, ஆரஞ்சு நிற சீட்டி இரவிக்கையென இடதுகாலை அழுந்த ஊன்றி விந்தி விந்தி நடந்துபோன பெண்மணியும் வெள்ளிச் சரிகைபோல வேய்ந்திருந்த வெயிலில் பளபளத்தனர், முன்வாசலில் குவிந்த வெயில் பெரிய டிராகன்போல நாவை நீட்டி இவரை நக்க ஆரம்பித்தது. வெகு தூரத்தில், ஒலிபெருக்கியில் « பழம் நீ அப்பா ! » என்ற பாடல்.  அவள் விரும்பிக் கேட்கிற பாடல். திருமணமான புதிதில் எனக்குப் பிடித்த பாடல் எது தெரியுமா எனக்கேட்டு, « மன்மத லீலையை வென்றாருண்டோ ?  » என அவள் காதில் மெல்ல முணுமுணுத்ததும், அவள் நாணத்துடன் சமையற்கட்டுக்குள் ஓடி மறைந்ததும் நினைவுக்கு வந்தன. 

அறுபதுகளில் தாய் மாமன் மகள் என்ற உரிமையில், சுற்றத்தார் ஊர் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் இவருடைய மூன்று முடிச்சை தலை குனிந்து ஏற்று, இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக அங்கே இங்கேயென கிராமம் கிராமமாகப் பந்தாடப் பட்டபோதும், இராமனிருக்குமிடம் அயோத்தியென ஊர் ஊராக இவரை பின் தொடர்ந்து வந்தவள். பிறகொரு நாள், « என்னுடைய கதை பத்திரிகையில் வந்திருக்குதுபார் ! » என அவளுடைய கை முழம் அளவு நீளமாக இருந்த  பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிக் காட்டியபோது, அவளுடைய புருவங்கள் உயர்ந்து, முன்வகிடில் வைத்திருந்த குங்குமம் உதிர நெற்றியில் சுருக்கங்கங்கள் மண்புழுக்களாக நெளிய, ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்தார்போல பிடித்து முகத்தில் ஆடிய கேசத்தை காது மடல்களில் ஒதுக்கியது கண்கொள்ளா காட்சி. அக்காட்சியை ஏதோவொரு சிறுகதையொன்றில் சேர்த்த ஞாபகம்.  

இத்தனை நேரமாக உள்ளூர் அன்பர்கள் இரண்டொருவர் வந்து பார்த்திருக்கவேண்டும். மணி ஒன்பது இருக்கலாம் ஒருவரும் எட்டிப்பார்க்கவில்லை. வேலைக்காரியும் வந்தபாடில்லை.உடம்பு கன கனவென்றிருந்தது, யாராவது வந்தால் ஒரு மாத்திரை வாங்கிவரச் சொல்லலாம். காலையிலிருந்து காப்பிக் குடிக்காதது என்னவோ போலிருந்தது. அவள் இல்லாத தனிமை முட்கம்பிபோல அவரைச் சுற்றிக்கொண்டு வதைக்கிறது. « இரக்கமற்ற பாவி ! » என வாய்விட்டுக் கத்தினார். வீதியில் போன இரு சிறுவர்கள் அச்சத்துடன் இவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு கால்களை எட்டிவைத்து நடக்கிறார்கள்.

 அவள், இவர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் இருந்திருக்கிறாள்.காப்பி கொடுக்கிறவளாக ; உணவு வேளைளில்.மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நித்திரைகொள்ளலாம் எனப்போகிறபோது இவருக்கு முன்பு படுக்கையை சரி செய்துகொண்டிருப்பவளாக ;  உள்ளூர் மனிதர்கள், வெளியூர் மனிதர்களென இவரைச் சந்திக்க இலக்கிய அபிமானிகள் வருகிறபோது, ஆட்களைப்பொறுத்து அடுக்களையிலிருந்தோ, கூடத்திற்குவந்தோ « வாங்க ! » என  வரவேற்றுவிட்டு காப்பிபோட, மோர் எடுத்துவர அல்லது தண்ணீர் கொண்டுவர என்று முகங்களின் தேவை அறிந்து  செயல்படுவாள். இவர் பேசும்போது முதிர்வயது சிலவற்றை நினைவுகூரத் தயங்கும், அவற்றையும் அந்த அம்மாள் நினைவூட்டுவாள். இலக்கிய விழாக்களில் முன்வரிசையில் அமர்ந்து சந்தோஷப்பட்டிருக்கிறாள். அவளுடைய பக்குவத்தில் வெந்தயக் குழம்பு, உருளைக்கிழங்கு வறுவல், இறால் குழம்பு, நெத்திலி வறுவல், மிளகு இரசம்,என ருசிகண்ட நாக்கு, இன்று வேலைக்காரி செய்தாலும், இலக்கிய அன்பர்கள் பரிதாபப் பட்டு வீடு தேடி எதையாவது கொண்டுவந்தாலும், சாப்பிடவேண்டும் என்று தோன்றினால், சாப்பிடுவார். . 

வாசிப்பும் எழுத்தும் தமது வாழ்க்கைத் துணை மீதான பார்வையை மாற்றியதென்கிற நம்பிக்கை அவருக்கு ஏராளமாக இருந்தது. பொதுவில் சொல்வதுபோல, காதிலும் வாங்கியதுபோல  தன்னுடைய அவளை எல்லாமுமாக பார்த்தது போதாதென்று விடலைப் பருவத்தில், வாலிப வயதில், இவர் பார்வையை, இவர் வார்த்தைகளைத் தங்கள் கண்களால், சொற்களால், உடல்மொழிகளால் நேர்செய்த பெண்களையும்கூட அவளிடம்தான் கண்டார். பின்னர் அவள் தன் வாழ்க்கைப்படகை சுமந்து செல்லும் ஜீவநதியாக மாறியபோது, « எதற்காக அவள் தன் நிழலாக வாழ்ந்தாள், அந்த சூட்சமத்தை அறியத் எப்படித் தவறினேன் ? » என்ற கவலை அவள் இருத்தலற்ற வெறுமைகளினால் முதலையாக உருமாற்றம்பெற்று இன்று அவரை விழுங்கிக்கொண்டிருக்கிறது. 

முப்பது வருடத்திற்கு முன்பு, ஒருமுறை ஊரில் திருவிழாவென கிராமத்திற்கு அவளை அழைத்துபோக மாமனார் வந்திருந்தார். « நீமட்டும் போ ! தேர்த் திருவிழா அன்று நான் வந்து சேர்ந்துகொள்கிறேன் » என்றார். அவரால் வாசிக்காமல், எழுதாமல் இருக்கமுடியாது என்பது மட்டுமல்ல, மாமனார் குடும்பத்தைத் தவிர வேற்று மனிதர்களை அந்த ஊரில் அவருக்குத் தெரியவும் தெரியாது, ஒரு நாள் இருநாளல்ல திருவிழா முடிய எட்டு நாட்கள் ஆகும், எனவே தன்னால் ஊருக்கு  வரமுடியாது எனத் தெரிவித்து மனைவியைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இவருக்கு ஓரளவு சமையல் தெரியும். பருப்பு சாம்பார், உருளைக் கிழங்கு வறுவலென்று வாலிப வயதில் சுமாராக சமைத்து பசியைத் தீர்த்துக்கொண்ட அனுபவமுண்டு, எனவே சமாளித்துவிடலாமென நினைத்தார். பழகிய வெங்காய சாம்பார், எனக்கும் உனக்கும் ஒத்துவராதென அடம்பிடிக்க, மோர் சாதம் நாரத்தை ஊறுகாய்க்கு முயன்று, கையை உதறிவிட்டு பட்டினிக் கிடந்தார். நான்காம் நாள் பருப்புப் பொடி, கருவேப்பிலைப்பொடி என முயன்றும் அரைகுறையாகத்தான் சாப்பிட்டு எழுந்திருக்கவேண்டியிருந்தது. எட்டாம் நாள் மனைவியின் ஊருக்குள் நுழைந்த மறுகணம், இவர் உடம்பை எடைபோட்டுவிட்டாள். அன்றிலிருந்து இறக்கும்வரை  இவரைவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்குமேல் அவள் வெளியில் தங்கியதில்லை.  இவர் சாப்பிடுவதற்கு எப்போது உட்கார்ந்தாலும், அது விருந்தினர் வீடாக இருந்தாலுங்கூட எதிரில் உட்கார்ந்தாளெனில் இவர் உண்டுமுடிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு அசைவதில்லை.

ஒரே மகளுக்குத் தலை பிரசவம். சம்பந்தி வீட்டாருக்கு கடலூரும் விழுப்புரமும் பக்கம் என்கிறபோதும், அவ்வளவு தூரம் தனால் வரமுடியாது என்பதோடு, அங்கு தங்கவும் இயலாது எனக்கூறி, மகளை புதுச்சேரி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கச் சொல்லி சம்பந்தி வீட்டாரைவற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றாள், « ஏன் இப்படியெல்லாம் பண்ற,இதற்கு என்ன அர்த்தம் ? » என்ற்று இவர் கேட்க, « நீங்கதான் நிறைய எழதவறாச்சே, நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்னு யோசிச்சுபாருங்க ! » என்பது அவளுடைய பதில். இது ஆறுமாதத்திற்கு முன்பு நடந்தது. திடீரென முதுகுவலியால் அந்த மனைவி அவதிப்பட, உள்ளூர் இலக்கிய அபிமானிகள் துணையுடன்  தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். வலி குறைந்த மறுநாளே வீடு திரும்பவேண்டுமென அடம்பிடித்தாள். தாயைப் பார்க்கவந்த மகளும், « அப்பாவை நான் பார்த்துகொள்கிறேன், நீ டாக்டர்கள் சொல்வதுபோல,  இரண்டு நாட்கள் பெட்டில் இருந்துட்டு வா, அவசரமில்லை ! », எனச் சொல்லிப்பார்த்தாள். பிடிவாதமாக, « உங்கப்பாவை பத்தி உனக்கென்ன தெரியும் ? » எனகேட்தோடு, அன்றே வீடு திரும்பி, இவருக்குப் பிடித்த வெந்தயக்குழம்பையும், தேஙாய்த் துவையலையும், இரவு உணவில் சேர்த்திருந்தாள்.

இதுபோல பலசம்பவங்களால் இவர் புரிந்துகொண்டது, தன்னைவிட்டு ஒரு நொடி கூட தன் மனைவிக்குப் பிரிந்திருக்க இயலாது என்கிற உண்மை. ஆனால் அவள்தான் இன்று தன்னை தனிமையில் வாடவிட்டு, ஒரேஅடியாகப் பிரிந்துபோய்விட்டாள். நினைக்க ஆத்திரமும் குமுறலும் முட்டிக்கொண்டு நெஞ்சில் புரள முதுகில் கிடந்த துண்டை வாயிற்பொத்திக்கொண்டு, யாரும் அருகிலில்லை என்கிற துணிச்சலில் :

« என்னைத் தனியா விட்டுட்டு எங்கும் போகமாட்டேன்னு இருந்த உனக்கு, என்ன வந்தது, இப்படியொரு வனாந்திரத்தில நிறுத்திட்டு போய்யிட்டிய நியாயமா ? » எனக் கதறி அழுதார்.

« ஐயா ! ஐயா ! » என்றொரு குரல்.  நினைவிலிருந்து மீண்டு வாசலைப் பார்த்தார். இந்தமுறை இரண்டு இளைஞர்கள்.

« நீங்க … ? »

« நாங்க மயிலம் பக்கத்திலிருந்துவறோம் ஐயா` ! உங்களைப் பார்க்கலாம்னு வந்தோம், சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்துட்டோம்.. என்னுடைய சிறுகதை தொகுப்பு ஒண்ணு வந்திருக்குது, அதைக் கொடுத்துட்டு, உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும். அப்புறம் எனக்கும் பூர்வீகம் பண்ருட்டிதான். வீட்டுல கன்னடம்தான் பேசுவோம். »

அவருக்கு வந்தபிள்ளையாண்டானின் உறவு மொழி புரியாமலில்லை. நாற்பது வருடங்களுக்குமேல் எழுதுகிறார். அவரைக்கொண்டாட ஏதேதோ காரணங்கள். அவற்றில் இதுவுமொன்று.  

« கோபிச்சுக்க கூடாது, வீட்டுல நான் மட்டும் தனியா இருக்கேன். தண்ணிகொடுக்க கூட வேறு ஒருத்தரும் எங்கூட தற்போது  இல்லை »

« பிரச்சனை இல்லைங்க ஐயா, இந்தப் புத்தகத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடறோம் »

இவர் எழுந்திருக்க முயற்சிக்க.. « வேண்டாங்க ஐயா நீங்க உட்கார்ந்திருங்க, எழுந்திருக்கவேண்டாம், என்ற  இளைஞர், தன்னுடைய நூலைக்கொடுத்த கையோடு கொண்டுவந்திருந்த சால்வையையும், இவருடைய முதுகில் போட்டு மறுபக்கம் வாங்கி, இரு முனைகளையும் சேர்த்துப் பிடிக்க, உடன் வந்திருந்த இளைஞர் தன்னுடைய கைத் தொலைபேசியில் படம் எடுத்துக்கொண்டார்.

« நான் படித்துப்பார்க்கிறேன் » என்று கூறி சாய்வு நாற்காலி அருகே இருந்த ஸ்டூலில் இளைஞர் கொடுத்த நூலை வைத்தார். இளைஞர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் போர்த்திய சால்வை முதுகில் உறுத்தியது. அதை மெல்ல அகற்றி, நான்காக மடித்து ஸ்டூலில் நூலருகே வைத்தார். ஒரு முறை இப்படித்தான் யாரோ சால்வையை போர்த்தி படம் எடுக்க மறு நாள், சால்வையைப் போர்த்தும்போது மெல்ல போர்த்துவதில்லை, போட்டு இறுக்குகிறார்கள், இனிசால்வையை கையில் வாங்கிக்கொள்ளுங்கள், என அன்பாய் கடிந்திருக்கிறாள்.

இன்று நேற்றல்ல, ஐம்பது ஆண்டுகால  மணவாழ்க்கை. அவருடைய ‘அவள்’ தன்னுடையவர் சராசரி எழுத்தாளரல்ல என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாள்.  சாமர்த்தியமாக காய் நகர்த்த தெரிந்தவர். எங்கோ ஊர் பேர் தெரியாத கிராமத்தில் பிறந்து இன்று நாடறிந்த படைப்பாளி எனப் பெயரெடுத்திருப்பது எழுத்தால் மட்டுமே சாதிக்கின்ற விஷயமல்ல. அவரைத் தேடிக்கொண்டு தெற்கே கன்னியாகுமரிலிருந்து வடக்கே சென்னை வரை ; தமிழ் வாழ்கன்னு கோஷம் போடற ஆசாமியிலிருந்து, தமிழ்நாட்டில் நாளைய முதலமைச்சர் ஆகனுங்கிற கனவுல வாழற நடிகர்கள் வரை தேடி வரத்தான் செய்தார்கள். இருந்தாலும் சிறிது நம்மைக் குறித்தும் யோசிக்க வேண்டுமில்லையா ?  என்ற ஆதங்கத்தில் ஒரு முறை அவள் கேட்டது நினைவுக்கு வந்தது.

« ஈஸிசேரை கொஞ்சம் தள்ளிப்போட்டு உட்காரக் கூடாதா, செத்த நேரத்துல வெயில் வீட்டுக்குள்ள நொழைஞ்சு உங்களை வழக்கம்போல தீச்சுடணும்னு, கங்கணம், கட்டிக்கொண்டிருக்கிறது, முன்னெல்லாம் பத்ரிக்கையிலேயே கருப்பு வெள்ளையிலே படம் போடுவாங்க, தவிர எப்பனாச்சும் ஒருமுறைதான உங்க படம் பேப்பர்ல வரும். இப்ப தினம் தினம் ஒங்க படத்தைப் போடறாங்க,  அதுவும் கலர்ல போடறாங்க. அதுல கொஞ்சம் பளிச்சுனு நீங்க இருக்கவேண்டாமா ?  »

« போடி பைத்தியக்காரி அவங்க என் கூட படம் எடுத்துக்கிறது என்னைக் காட்ட அல்ல அவர்களுக்கு முகவரி எழுதிக்க. நாற்பது வருஷமா எழுதறேன், எனக்கு இது தெரியாதா ? நான் மருத்துவமனை பெட்டுல படுத்திருந்தாகூடா பக்கத்துல நிண்ணு படம் எடுத்துக்க ஆசைபடறான், நான் பிணமா விழுந்தா கூட என் பக்கத்துல நின்னு படம் எடுத்துப்பாங்க. நடிகர்களைவிடு, இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோக் கூட இப்படியொரு அதிர்ஷ்டமில்லை. எடுத்துட்டுப் போகட்டும், யார் யாரோ எங்கூட படம் எடுத்துகிட்டாலும் நான் ஒருத்தன்தான் எல்லோருடனும் இருக்கேன். ஆக  உண்மையில் பளிச்சுனு இருக்கிறது இதுல யாரு ? அவங்க இல்லை, நாந்தான். »

அவரை ஜெயிக்கிறது சுலபமில்லைன்னு அவருடைய ‘அவளு’க்குத் தெரியாதா என்ன. இருந்தும் கேட்பாள். கேளிவியைகூட அவரைத் தவிர பிறருக்கு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல, பல்லி சத்தம்போடுது போல மெதுவாக கேட்டிருக்கிறாள். அவரிடம் கேட்டு அவர் சொல்லும் பதில்களில் வார்த்தைகள் குலுங்குவதையும் அவை எழுப்பும் நவரசத்தையும் அவற்றின் அர்த்தத்தையும் கேட்டு சந்தோஷப்படவே அடிக்கடி இப்படி ஏதாவது கேள்விகளை எழுப்புகிறேன் என ஒரு முறை கூறியிருக்கிறாள். 

 « மனிதர் வாழ்வில் ஆணு பெண்ணுமாக இரு உடல்கள் இரு உள்ளங்கள்  உயிர் வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்பம் துன்பம் இரண்டிலும் கைகோர்த்து, வலிகளைப் பகிர்ந்து, சுகங்களைத் தியாகம் செய்து, உனக்காக நான் என்பதை ஒவ்வொன்றிலும் உறுதி செய்து, ஒருநாள் «  இருந்ததும், நடந்ததும், சுவைத்ததும் சுகித்ததும் பொய்யாய் பழங்கதையாய் முடிகிறபோது, ஏன் இந்த மனித வாழ்க்கை என கேள்வி எழுகிறது.  » என்று ஏதோவொரு கட்டுரையில் ஒருமுறை எழுதியிருந்தார். உடல் சோர்ந்து, வாழ்க்கையில் அலுத்து, இதே ஈசிச்சேரில் சாய்ந்தபடி அன்றும் இப்படித்தான், மதிய உணவை உண்டு முடித்த கையோடு எதிரிலிருக்கும் வேம்பு காற்றில் தலையைச் சிலுப்பும் அழகை இரசித்துகொண்டு, பற்குச்சியால் பல்லிடுக்குகளை கிளறிக்கொண்டிருந்தார். அருகில்  வெற்றிலைச் செல்லத்துடன் இவருடைய அறுபது வருட தாம்பத்ய துணை. வெற்றிலையை எடுத்து காம்பைக் கிள்ளி எறிந்துவிட்டு அதன் முதுகில் சுண்ணாம்பை தடவிக்கொண்டிருந்தாள். மனதிலிருந்த சங்கடத்தை  அவளிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் போலிருந்தது, வெகு நாட்களாக அவர் சுமந்துவரும் பாரம், இறக்கிவைப்பதென்று தீர்மானித்தவராக :

« இங்கே பார்   இல்லறவாழ்க்கையில்  நீயும் நானும் கணவன் மனைவி, அப்பா அம்மா என்ற பதவிகளைக் கடந்து இன்றைக்கு தாத்தா, பாட்டி.  சமூக வாழ்க்கை வேறு. என்னை அது தனித்து அடையாளப்படுகிறது, ஒற்றையாக இருப்பதைபோன்ற உணர்வு, எழுத்துலகில் இன்று நான் முதலமைச்சன், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். இங்கு வெவ்வேறுவிதமான அமிமானிகள் எனக்கென்று இருக்கிறார்கள். »

என அவர் கூற, அவள் குறுக்கிட்டு :

«இரண்டு நாளைக்கு முன்ன செங்கல்பட்டிலிருந்து வந்த தம்பி நோபெல் பரிசெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கணும்னு  சூம் மீட்டிங்கிலே பேசுச்சுன்னு சொன்னீங்க.  சாகித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கிட்டீங்க அடுத்து ஏதோ ஞான பீட விருதாமே, கிடைச்சுடுமில்லையா ? உங்களுக்கு கிடைக்காம வேற யாருக்கு கிடைக்கும்! »

நரை போட்டிருந்த வயதிலும், இளமைக் காலத்தில் இவரிடம் வைத்திருந்த நம்பிக்கையில் எள்முனை அளவும் குறைவின்றி, பதில் உற்சாகத்தோடு அழுத்தமாக ஒலித்தது.

 « அவங்க என்மீது வைத்திருக்கிற அன்பு பேருல ஏதோ சொல்றாங்க. அரசியல்வாதிகள், நடிகர்கள்னு என் வீடு தேடி வருவதே, பிறருக்குக் கிடைக்காத விருதுதான். பார்ப்போம் » என்றவர் தொடர்ந்து :

« ஆனால் நான் சொல்ல வந்தது அதில்லை. வாசிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன், உன்னைச் சரியா நடத்தினேனா என்கிற குற்ற உணர்வு எங்கிட்ட இருக்கு. விசுவாசமிக்க அபிமானியா, என்னோட பயணப்படற, என்னுடையவளா எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ற, கைத் தட்டற. எனக்காக சமைப்பது, எனக்காக உடுத்துவது, எனக்கு வேண்டியவர்களை உபசரிப்பது, வேண்டாதவர்களை நிராகரிப்பதென்கிற உனக்கு, எப்போதாவது உன் ஞாபகம் வந்திருக்கிறதா, உனக்காக வாழ்ந்திருக்கிறாயா ? அதைப்பற்றியெல்லாம் யோசித்ததுண்டா ? » எனக் கேட்டு அவளைப் பார்த்தார்.

தன் அளவிற்கு புத்திசாலியில்லை. கிராமத்தில் பிறந்தவீட்டில் தொழுவத்தில் மாடுகன்றுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவள், தன் எழுத்துக்களையே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்கிறபோது, இதற்கு என்ன சொல்லிவிடப்போகிறாள். எப்போதும்போல பதிலின்றி அமைதியாக அடுப்படிக்குத் திரும்பிவிடுவாள் என்றுதான் நினைத்தார்.

« எனக்கு இதற்கெல்லாம் என்னபதில் சொல்றதுன்னு தெரியலை. உங்க அளவுக்கு நான் படிச்சவ இல்லை. எனக்குச் சொல்ல நிறைய இருக்கு, ஆனா கோர்வையா உங்களைப்போல சொல்ல வராது. பொறந்த வீட்டுல இருந்தப்ப அப்பா, அம்மா அண்ணன்  என்று இருந்துட்டேன். அங்கேயும் வீட்டைவிட்டு வெளியில் போனதில்லை. தோழிகளிடத்தில் கொஞ்சம் அன்யோன்யமா சில வார்த்தைகள், பேசியிருப்பேன். இங்கே வந்த பின்பு அதையே கொஞ்சம் மாத்தி கூடுதலாக உங்களிடம், « சமைச்சுட்டேன்,  சாப்பிட வறீங்களா », « தட்டை எடுத்துவைக்கட்டுமா », « காப்பிக் கொண்டுவரட்டுமா ? » என்பேன், உங்களைத் தேடி வந்தவங்கள « வாங்க ! »ன்னு சொல்லியிருப்பேன், உபசரிச்சிருப்பேன், வேறென்ன !. நம்ம வீட்டு கதவுகளாவது கூடுதலா சந்தமிட்டிருக்கும், என் குரலின் பலம் என்னனுதான் உங்களுக்குத்தான் தெரியுமே !  இரண்டுபேரும் அந்திம காலத்துல இருக்கோம், எல்லாத்துக்கும் நான் உங்களுக்குப் பக்கத்துல இருந்தாகணும், திடீர்னு நான் போயிட்டா நீங்க தனியா என்ன பண்ணுவீங்கங்கிற கவலைதான் எனக்கு. மற்றபடி « உனக்காக வாழ்ந்திருக்கிறாயா ?  » என்கிற கேள்விக்கு என்ன பதிலைச் சொல்ல. ஏதாவது  சொல்லணும்னுதான் தோணுது. எப்படீன்னுதான் தெரியலை. பெரிய பெரிய விருதெல்லாம் உங்களைத் தேடிவருது. உலகத்தையெல்லாம் புரிஞ்சுகிட்டிருக்கிறமாதிரி எழுதறீங்க, என்மனசுல என்ன இருக்கும், உங்க கேள்விக்கு எங்கிட்ட என்ன பதில் வரும் என்பதை ஒரு நாள் யோசிச்சுப் பாருங்க, தெளிவான  பதில்கிடைக்கும் » என்றாள். இவரும் என்னென்னவோ மாயமந்திரம் செய்து, அவளிடம் பதிலைக் கறக்க முயன்றார். கடைசிவரை « சொல்லமாட்டேன் ! நீங்கள்தான் என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்கணும். ஐம்பது வருஷம் என்னோட வாழ்ந்து இருக்கீங்க, உங்களால முடியும், அதை நீங்கதான் சொல்லணும் » என்றவள்,  சொன்னதுபோல இவரது கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காமலேயே இறந்துவிட்டாள்.

… மீண்டும் பாலை நிலம். மணற்காற்று ஹோவென்று சுழன்று சுழன்று அடிக்க, முதுமை ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல அவள் சாயலில் உள்ள அருவம் முன்னால் நடக்கிறது. « வெகுநாளா நெஞ்சில் ஊமுள்ளா தைத்துக்கொண்டிருக்கிற கேள்விக்கு பதிலைச் சொல்lலிட்டு நட சனியனே ! » எரிச்சலுடன் வார்த்தைகள் வந்தன.

« என்ன சொன்னீங்க !  »

« சொன்னன் சொரக்காய்க்கு உப்பில்லைண்ணு ! நீ ஒம்பதிலைச்சொல்லு,  »

« என்ன சொல்லணும். உங்க கேள்விக்குப் பதில்தானே. என்னென்னவோ எழுதறீங்க. உலகத்துல உள்ள ஜீவராசிகளையெல்லாம் புரிஞ்சுகிட்ட மாதிரி தோணுது. உங்கபக்கத்துல இருபத்துநாலுமணிநேரமும் வாழ்ந்த என்ன நீங்க புரிஞ்சுக்கலை. ! ஆரம்பம் முதலே உங்களுக்காக வாழ்வதில்தான் எனக்கு எல்லா சொகமும்.. ஒரு வகையில எனக்காக வாழ்ந்த வாழ்க்கைதான் அது.  இன்று நேற்றல்ல நீங்க மறுவீட்டிற்கு சாப்பிட வந்தபோது உங்களுக்கு எதெல்லாம், என்னவெல்லாம் பிடிக்குமென என் அத்தையிடம் அதாவது உங்க அம்மாவிடம்  கேட்டுக் கேட்டு செஞ்சேனே, பரிமாறினேனே அன்றிலிருந்தே எனக்காகத்தான் நான் வாழ்ந்தேன். அப்படி ஒரு அனுபவத்திற்கு நீங்க உடபடலை, அப்படி உட்பட்டிருந்தால் அதிலுள்ள சந்தோஷம் உங்களுக்கு விளங்கியிருக்கும்… ».

« இத்தனை வியாக்கியானமா பதில் சொல்ற, என்னைத் தனியா விட்டுட்டு நீ மட்டும் எதற்காக  எனக்கு முன்னே சாகணும் »

« அதற்கும் யோசிச்சா உங்கக் கிட்டப் பதில் கிடைக்கும், பரவாயில்லை நானே சொல்லிடறேன். நான் இறந்ததற்குப் பிறகுதான் என்னைக் கூடுதலாக நினைக்கிறீங்க, இருபத்துநாலு மணி நேரமும் என் நினைப்பில நீங்கள்  இருக்கீங்க, உங்க இந்த நெலமையைக் காண உண்மையில் எனக்குச் சந்தோஷம். இந்த மகிழ்ச்சியை நான் வாழ்ந்தப்ப நீங்க எனக்குத் தரலை. பல பெண்கள் கட்டுகழுத்தியா அதாவது சுமங்கலியா ஏன் சாகனும் என்பதற்குக் காரணத்தை இப்பத்தான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.. »

                               ******

லையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார்.

அடுப்படிக்கு முன்பாக அந்த அறை இருந்தது. பூட்டி இருந்தது. அவரை தனிமையில் நிறுத்திவிட்டு கொரோனாவில் இறந்துபோன ‘அவளை’ அந்த அறையில்தான் வைத்திருக்கிறார். வேலைக்காரி பெருக்கிச் சுத்தம் செய்ய பிற பகுதிகளுக்கு அனுமதியுண்டு, அந்த அறைக்கு மட்டும் அனுமதியில்லை. « சாவியைக் கொடுங்க, பெருக்குகிறேன் » என ஒரு முறை இறுமுறை அல்ல பலமுறைக் கேட்டு வேலைக்காரிக்கும் அலுத்துவிட்டது. ‘அவள்’  அந்த வீட்டிலிருந்தால்தான் அவருக்கு எதுவும் ஓடும். அவருடைய உயிர்ச்சிமிழ் அவளிடம் தான் இருக்கிறது, மற்றவர்களுக்கு அது புரியாது. நண்பர்களிடத்தில்  மனைவி கோலியனூருக்கு மகள் வீட்டிற்குச் சென்றிருப்பதாகச்  சொல்லிகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பழைய நினைவுகளில் துண்டு விழுகிறபோது அதை இட்டு நிரப்ப யாருமற்ற நேரங்களில் அவள் வேண்டும். பூட்டில் சாவியை நுழைத்துத் திருப்ப, ….ம் திறப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, எரிச்சலுடன் காலால் உதைக்கிறார்.

– ஏங்க காப்பி கலந்து  வச்சிருக்கேன், என்ன யோசனை ?

 தலையைத் திருப்ப, எதிரே «அவள் ». அவர் மனைவி.

– மணி என்ன ? 

– ஆறாகபோகுது. காற்றடிக்குது, அது ஆறி அவலாகறதுக்குள்ள குடிச்சுடுங்க. மறுபடியும் போட வீட்டில் காப்பித் தூள், சர்க்கரை எதுவுமில்லை. காலங்காத்தால அப்படியென்ன யோசனை.

– ஒரு கதை மனசுல ஓடுச்சி, வேறொண்ணுமில்லை.

__________________________________________________________

வியட்நாம் தமிழர்களின் பயணத்தடங்கள் -கௌரிபாரா

சைகோன் – புதுச்சேரி

         ஊடகங்களின் வருகையினாலும் மற்றும் நவீன வாழ்க்கையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பி வழிவதனாலும் பொழுது போக்கிற்காக வாசிப்பவர்களின் வாசிப்பு என்பது அருகி வருகிற காலம் இது.

பணம் ஈட்டுவதை மையமாக கொண்டு செய்யப்படாத செயல்களில் ஒன்றாக இன்னமும் நீடித்துக்கொண்டு இருக்கும் செயல்ப்பாடுகளில் ஒன்றாக இலக்கிய எழுத்தும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒருவர் அவரது ஆத்ம திருப்திக்காக தன்னிச்சையாக முன்னெடுக்கும் எந்த ஒரு கலை முயற்சியும் எப்போதும் உயிரோட்டமானதாக இருக்கவே செய்யும்.

அவ்வகையாக நாகரத்தனம் கிருஷ்ணா எழுதிய சைக்கோன் புதுச்சேரி என்ற சமூக வரலாற்று நாவல் அமைந்ததனால் அந்த நாவல் வாசிப்பு அனுபவம் எனது ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைந்தது என்று சொல்வதொன்றும் மிகையல்ல.

இந்த நாவலின கதைக்களங்களாக இந்தியாவின் புதுச்சேரியும் வியட்னாமின் சைக்கோனும் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரோடு பின்னிப்பிணைந்த உண்மை நிகழ்வுகளினதும், அந்த காலகட்டத்தில் புகழ் பெற்ற நிஐ கதாநாயகர்களின் கதைகளையும் புதுச்சேரி மற்றும் சைக்கோன் நிலவியல் பின்னணியில் காலணியத்துவ அரசியல் நிகழ்வுகளையும் பின்னணியாக வைத்து எழுதிய சமூக நாவல் என்னும் ஒரு பெரும் புனைவு வெளிக்குள் வாசகரை கதை சொல்லி இப்படி இழுத்தழைத்துச்செல்கிறார்.

“ நம்முடைய தனித்தன்மையை விலக்கிக்கொண்டு எப்போது கொள்கை அல்லது சித்தாந்தத்திடம் முழுமையாக ஒப்படைத்துவிடுகிறோமோ அக்கணத்தில் குற்றம் தன்னை நியாயப்படுத்த முனைகிறது அதுவே ஒரு நியாயமாக உருப்பெறுகிறது”. ‘அல்பெர் கமுய்’ ( Albert Camus) வார்த்தைகள், சத்திய வாக்கு. காலனிய அரசியல்வாதிகளுக்குக் கடல் கடந்து முன்பின் அறிந்திராத மக்களை அடிமைப்படுத்த ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதெனில், அவர்களிடமிருந்து விடுதலைபெற எண்ணிய மக்களுக்கும் சித்தாந்தமொன்றின் தேவை இருந்தது. இச்சித்தாந்தப்போரில் இரு தரப்பு ஆயுதங்களும் பலிகொண்ட உயிர்கள் ஏராளம். வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் எமது பூமியொன்றில் எழுதப்பட்டபோது, கையறு நிலையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

முதல் இந்தோசீனா யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட எங்கள் சகோதர பூமிக்குப்பெயர்: தியன் பியன் ஃபூ (Dien Bien Phu). ஒன்பது ஆண்டுகாலப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த களம். நூறாண்டு காலம் ஆண்ட ஐரோப்பியர், காலனி மக்களின் விழிப்புணர்வை புரிந்துகொண்டிருக்க வேண்டும். அமைதியாக இந்தோசீனாவில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். விடுதலையைச் சில நிபந்தனைகளுடன் வழங்க முன்வந்த காலனிய அரசின் யோசனையை வியட்மின்கள் நிராகரிக்க, யுத்தம் ஆரம்பித்தது. ….. போரின் முடிவு ? நீங்கள் எதிர்பார்த்தது போலவே நீதியின் பக்கம்.

விளைவு நீதியின் பக்கமா இல்லை அமெரிக்க புவிசார் அரசியல் வியூகங்களில் விளைந்த தற்காலிகமான வியட்நாமின் வெற்றியா என்ற எண்ணம் வாசகராக எனக்கு தோன்றியது.

———————

முன்னூறு பக்கம் தாண்டி ஓடும் இந்த வலின் மிக முக்கியமான கருவாக நான் கருதுவது“விடுதலை”. 

ஐரோப்பியர்கள் ‘கூண்டில் அடைபடு ! வேண்டியது கிடைக்கும் என்று கூற வியட்மின்கள்“விடுதலையைக்கொடு, வேண்டியதை நாங்கள் தேடிக்கொள்கிறோம்’ எனத்தெரிவித்தபதிலால் நடந்த யுத்தம்.’ என்கிறார் எழுத்தாளர்.

ஓரே காலகட்டத்தில்  புதுச்சேரி  தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் 

பிரான்சு தென் சீனக்கடலில் உள்ள வியட்நாம்  சைக்கோனையும்  அடிமைப்படுத்துகிறது.  அவர்களை எதிர்க்கிற  வியட்நாமியர்கள்மேல்  போர் தொடுக்கிறது பிரெஞ்ச் கொலனி அரசு.

அந்த காலகட்டத்தில்வியட்னாமியர்களை வழிநடத்தும் தலைவராக கம்முனிசக்கொள்கையுடைய தலைவர்ஹோசிமின் மற்றும் படைத்தளபதியாக ழியாப் (Giap) இருக்கிறார். பிரென்சு படைத்தரப்பில்வேன்சான் ஒரியோல் , ஹாரி நவ்வார் இருக்கிறார். இது 1950 களின் தொடக்கத்தில் நடக்கும் யுத்தம்.

1930 களில் பிரான்சின் இன்னொரு கொலனியான புதுச்சேரித்தமிழர்கள் இருந்தார்கள். துச்சேரியில் இருந்து வெறும் பாடசாலைப்படிப்போடு 1930 களில் இருந்து தமிழர்கள்வியட்நாம் ல் உள்ள சைக்கோனுக்கு செல்கின்றனர், அங்கு அவர்களுக்கு கடிகாரத்தைபார்த்து செய்யும் அரச அலுவலக உத்தியோகங்களான காவல்த்துறை, கடற்படை, நகராட்சிகாவல்த்துறை, சுங்க இலாகா, நீதித்துறை, கல்வித்துறை , கப்பல்த்துறை  மற்றும் ராணுவ உத்தியோகங்களை வழங்குகின்றன. 

இந்தோசீனாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக புதுச்சேரியில் சட்டபூர்வமான 

வயதடைந்த பிரென்ஞசிந்தியர்கள்  அனைவரும்  ஜாதி மதம் பாலின  வேறுபாடுகள்  குறுக்கீடின்றி பிறப்பால்அவரவர்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தை களையலாம் என்ற ஆணை அனுமதிக்கிறது.  தந்தை பெயருக்கு பதிலாக  ஐரோப்பியர்  உச்சரிக்க வசதியாக ஒரு குடும்பபெயரைத்தெரிவு செய்து கொள்ள வேண்டும் 

என்றார்கள்.  ஐரோப்பியருக்கு இணையாண சிவில் உரிமைகள்  அவர்களுக்கும்  கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்கள். அதனால் ஈர்க்கப்பட்டும் பிரான்சின்  ரொனான்சன் என்றழைக்கப்படும்  குடியுரிமை தரக்கூடிய  சலுகைகளுக்காகவும்  ஆசைப்பட்டு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முப்பது  வயது  சுப்பராயன்  அவர் அக்கா மகளாக இருந்து பின்னர் பதினாலு வயதிலேயே இந்திய கிராம கலாச்சார மரபினடிப்படையில் அவர் மனைவியாக பரிணாமம் பெற்ற  வேதவல்லியை  அவள் வீட்டிற்ற்கு சொல்லாமல் சைக்கோனுக்கு அழைத்துசெல்கிறார். அதனைத் தொடர்ந்து  வேதவல்லியின் தம்பி சிங்காரம் “மாசிமக  தீர்த்தவாரிக்கு  போவது போல புறப்பட்டு வந்தோம் விழா முடிந்ததும் புறப்பட்டு விடுவோம்” என நினைத்தோம் என நாவலில் அவர் சைக்கோன் போன அனுபவத்தை அவர் வாயால்சொல்கிறார். 

சிங்காரம் அடிப்படை மனித இயல்புகளை கட்டுப்படுத்தும் புதுச்சேரியில் தான் ஆசை ஆசையாய் காதலித்த ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்ணான ஜானகியை கைகழுவி விட்டு சைக்கோனுக்கு கப்பல் ஏறுகிறார்.

அவர்கள் பிரியும் தருணம் நாவலில் இப்படியாக விரிகிறது.

“வழக்கமாக ஜானகியை அவளுடைய ஆடுகளுடன் சந்திக்க நேரும் அரசடிக்கு வந்திருந்தேன். காற்றில் அலைந்த கேசத்தை காதுமடலின் பின்புறம் தள்ளியபடித்துறட்டுக்கோலால் அரசமரத்தின் தாழ்ந்த கிளையொன்றிலிருந்து தழை பறித்துக்கொண்டிருந்தாள் கீழே விழுந்த கணத்தில் தளிர் குழைகளாக தேர்வு செய்து கவ்வி, அசைபோட்ட வண்ணம் ஆடுகள் அவளைச்சுற்றி வந்தன. அக்கம் பக்கம் பார்த்து ஒருவருமில்லை என உறுதி செய்து கொண்ட பின் “ ஜானகி” என அழைத்தேன். ஆடுகள் எனது குரலைக்கேட்டதும் தலையை உயர்த்தி “ ம். மே” என்று கத்திக்கொண்டு கலைந்தோடின.ஜானகியின் கவனம் முழுக்கத் துறட்டுக்கோலைக் கையாளுவதில் இருந்தது அல்லது அது போல பாவனை செய்தாள். … ஏரியில் சரிவில் தடதடவென இறங்கித் துறட்டுக்கோல் பிடித்திருந்த கைகளை பற்றினேன்.

“ எங்க வந்தீங்க சொல்லுங்க?”

⁃ உன்னைப் பார்க்கணும் என்று தான் வந்தேன்.

“ பார்க்கிறதுக்கு புதுசா எங்கிட்ட என்ன இருக்கு? சலிச்சுப்போச்சு, கிளம்பற. ஆரோக்கியம் சொன்னான் நீயும் சீமைக்கு போறியாமே?

⁃ ஆமாம் சைக்கோனுக்கு போறேன். ரெண்டு மூணு வருஷத்திலே திரும்பிடுவேன்.

⁃ திரும்பி?

⁃ உன்னைக்கூட்டிக்கிட்டு போயிடுவேன்.

– இதை நான் நம்பணுமாக்கும். குடுத்தனக்கார பொண்ணு எவளையாவது ஒங்க வூட்டுல பாத்து வெச்சிருப்பாங்க. அவளைக்கூட்டிக்கிட்டுபோவ, இனி நான் எதுக்கு?

வெடுக்கென்று வார்த்தைகள் தெறித்தன. கண்களில் நீர் கோர்த்திருந்தது. புறங்கையால் மூக்கை நான்கைந்து முறை அழுந்த துடைத்தாள். கைகளில் இருந்த துறட்டுக்கோலைத் தரையில் எறிந்துவிட்டு மரத்தடியை நெருங்கினாள். வலது முழங்கையைத் தலைக்குக் கொடுத்து, ஒரு காலை தரையிலும் மறு காலை முக்கோணமாக மரத்திலும் ஊன்றி நின்றாள். …என்னை நம்பு நான் வந்திடுவேன்’ எனச்சொல்ல நினைத்தேன். வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்க…. மெல்ல என் தலையை அவள் முகத்தில் இறக்கியபோது கண்ணிரப்பைகளில் திரண்டிருந்த நீர் கன்னக்கதுப்பில் உடைந்து இறங்கியது. மறுகணம் என்னைத்தள்ளிவிட்டு விடு விடுவென நடந்தாள்.

இப்படித்தான் சிங்காரம் ஜானகியை பிரிந்த காட்சி இந்த நாவலில் விரிந்தது. இந்தக்காட்சியை படித்த எவருக்கும் தொண்டையை துக்கம் அடைக்காமல் இருந்திருக்க முடியாது.

சைக்கோனில் வந்திறங்கிய இரண்டு வருடங்களில் கம்பீரமான ராணுவ சிப்பாய் சிங்காரத்தின் வாழ்க்கையில் திடீர் என்று ஆஜரான அனமிட் இன வியட்னாமியப்பெண்ணான மரியா ஹோவாம்மி எந்தவிதமான இடைஞ்சல்களும் இல்லாமல் பிரத்தியேகமாக முன்கூட்டியே தனக்கென ஒதுக்கப்பட்ட விசேட வானூர்தி இருக்கை ஒன்றில் ஏறி அமர்வது போல சிங்காரத்தின் மனைவி என்ற அந்தஸ்தை பெற்று இரட்டைக்குழந்தைகளான இசபெல் மற்றும் ஃபிலிப் ற்கு தாயாவதும் நடந்தேறுகிறது. இந்தப்பக்கங்களில் நிறைவேறாத ஜானகியின் காதலுக்காக வாசகர் மனம் பரிதவிக்க தவறாது.

நாவலில் பல பக்கங்கள் சைக்கோனில் சிங்காரம் மரியாவின் காதல் தோய்ந்த குடும்ப வாழ்வை சித்தரித்துக்கொண்டே முன்னேறும் அதே நேரம் சிங்காரத்தின் வாரிசான பொன்னுச்சாமியை தனியாளாக வளர்த்தெடுக்க புதுச்சேரியில் ஜானகி படும் பாடுகளையும் வாசகர் கண் முன்னே சமாந்தரமாக விரித்துச்செல்கிறது. புதுச்சேரியில் ஜானகி திருமணமான ஆண்களின் காம இச்சைக்கு ஆள்படாமல் காத்துக்கொள்ள தன் கறாரான பேச்சையும் இயல்பான எடுத்தெறியும் போக்கையும் ஆயுதமாக கொள்வதோடு யார் தயவிலும் வாழாமல் வயல்களில் கூலி வேலை செய்தும் பிரான்ஸ் துரைமார்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்வதும் பிழப்பை ஓட்டுகிறாள்.

புதுச்சேரியில் இருக்கும் சாதிய அதிகாரத்திற்கு எதிராகவும் , காலணியத்துரைகளின் ஆணாதிக்கத்திற்கெதிராகவும், பல்வேறு தளங்களில் பல்வேறு அதிகாரத்தை எதிர்த்து போராடிக்கொண்டே தனது ஒற்றை இலட்சியமான தனக்கும் சிங்காரத்திற்கும் பிறந்த பொன்னுச்சாமியை சைக்கோனுக்கு அனுப்பவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கையில் ஜானகியின் ஒரே லட்சியமாக இருப்பது தனது மகன் பொன்னுச்சாமியை படிக்க வைத்து தன்னை ஏமாற்றி விட்டு சென்ற சிங்காரம் இருக்கும் இடமான சைக்கோனுக்கு அவனையும் ஒரு ராணுவ சிப்பாயாக அனுப்புவதாக இருக்கின்றது.

ஜானகி போன்ற ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களுக்கு பிரெஞ்சு காலணியவாதிகளிடம் இருந்து விடுதலை தேவையற்ற ஒன்றாக இருந்தது ஏனெனில் அவர்கள் ஆட்சியில் தான் ஜானகிக்கு மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது என்னவென்று ஓரளவு ஆவது தெரியவந்தது, சாதிய ஒடுக்குமுறைகளால் சதா நசுக்கப்படும் கூட்டத்திற்கு காலனிய அரசுகளின் ஒடுக்குமுறைகள் ஒன்றுமே இல்லை என்பதை காந்தி புரிந்து கொண்டிருந்தார். தான் கனவு காணும் இந்திய விடுதலைக்காக அவர்கள் போராடப்போவதில்லை என்று அவர் நினைத்ததனாலோ என்னவோ அவர் 1934 மாசி மாதம் புதுச்சேரி சென்ற போது அவர் உரையில் இந்திய விடுதலை பற்றிப்பேசாமல் இப்படிப்பேசினார் என்று நூலில் வருகிறது” சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி மக்களைக்காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே ஜாதி மற்றும் வகுப்பு வாத்த்திற்கு எதிராக புதுச்சேரி அன்பர்களே போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…..”. சாதி மற்றும் வகுப்புவாதங்களினால் பிளவுபட்ட இந்திய மக்களை முதலில் ஒருங்கிணைக்காமல் இந்திய சுதந்திரத்திற்காக ஒன்று திரட்ட முடியாது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார் என்பதை இந்த நாவலில் வரும் சம்பவங்கள் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.

இந்த கதையில் வரும் அடுத்த முக்கிய கதாபாத்திரமாக இருப்பது சுப்புராயனின் மனைவி வேதவல்லி. வேதவல்லி விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்த அதிகம் படிக்காத ஒரு பெண். சைக்கோனில் இருக்கும் இயற்கை வனப்பு மிக்க ந்திகளையும் குன்றுகளையும் ஏரிகளையும் கடலையும் ரசிக்கத்தெரியாமல் புதுச்சேரி மண்ணை நினைத்து நித்தம் ஏங்குகிறார்.

தான் விட்டு விட்டு வந்த உறவுகள் நினைப்பாகவே வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்த வேதவல்லிக்கு சைக்கோனில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மூலமாக இஸ்மாயில் அண்ணர்

அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் லெயோன் புருஷாந்தி என்ற செல்வந்தரின் நட்பும் கிடைக்கிறது. புதிதாக கிடைத்த உறவுகளினால் வேதவல்லி சொந்த மண்ணிற்காக ஏங்கும் ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, புது நட்புக்கள் தந்த ஊக்கத்தினால் வேதவல்லி அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரையை ஆகவும் தமிழ்ச்ங்கத்தின் நிர்வாக பொறுப்பையும் ஏற்கிறார். இதனால் பிள்ளை இல்லாத வேதவல்லிக்கு வாழ்வை வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் கிடைக்கின்றது. மேலும் காந்திய சிந்தனைகளினாலும் பெரியார் சிந்தனைகளினாலும் ஈர்க்கப்பட்டு சமூகத்திற்கு முன் உதாரணமாக விளங்கி காலத்தை மீறிய முற்போக்கு கருத்துக்களை சமூகத்திற்கு சொல்லும் கம்பீரமான தோற்றம் கொண்ட லெயோன் புருஷாந்தி மீது வேதவல்லிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர் முன் நின்று நடத்தும் எல்லாக்காரியங்களிலும் கைகொடுக்கும் ஆளாக வேதவல்லி வளர்கிறார். தமிழ் ஆணுக்கும் வியட்னாமியப்பெண்ணிற்கும் பிறந்த ஒரு அநாதைப்பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாகிறார். இதுவும் லெயோன் புருஷாந்தியின் உந்துதலில் தான் நடக்கிறது.

கதையின் ஓட்டத்தில் சுப்புராயன் பற்றிய கதை சொல்லியின் குறிப்புக்கள் அனைத்தும் அவரைத் தன்னைப்பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டிருக்கும் ஒருவராகவே சித்தரித்து வந்துள்ளார். தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் சாதாரணமாக பொது வெளியில் அவர்கள் மேல் விழும் அலட்சியப்பார்வைகளையோ நக்கல் தொனிகளையோ பெரிதாக சிரத்தை செய்ய மாட்டார்கள். சுப்பராயனுக்கு காவல்த்துறையில் அவர் செய்யும் பணி மூலம் அவ்வப்போது தன் அதிகாரத்தினால் மற்றவர்களை அடித்து துன்புறுத்தும் போது அவரது போதாமைகளை தற்காலிகமாக விலக்கி வைக்க உதவி அளிக்கிறது. பொதுவாக மனைவிகளை அடிக்கும் ஆண்கள் கூட இப்படியான உளவியல் தாழ்வுச்சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட ஆண்களாக இருப்பதும் ஒரு காரணம். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப்புராயன் வேதவல்லியை அடிக்கடி அடிப்பதும் பின்னர் அதற்கு ஒத்தடம் குடுக்கும் விதமாக நடந்து கொண்டு காலத்தை ஓட்டுகிறார். குடும்ப வன்முறையில் ஈடுபடும் குணாதிசயங்களுடன் சுப்புராயன் நாவல் முழுவதும் வலம் வருகிறார். த்த்ரூபமாக நாவலாசிரியர் இந்த கதாபாத்திரத்தை படைத்துள்ளார்.

சிங்காரத்தின் பிள்ளைகளான பிலிப் மற்றும் இசபெல்லும் வேதவல்லியின் மற்றும் சுப்பராயனின் வளர்ப்பு மகளான லட்சுமியும் ஒருவருக்கொருவர் அணைதுணையாக எப்போதும் ஒன்றாக வளர்கின்றனர்.

சிங்காரம் , சுப்புராயன் , வேதவல்லி மற்றும் லெயோன் புருஷாந்தி ஆகியவர்கள் பிரெஞ்சு குடியுருமை பெற்றவர்கள். அதனால் அவர்கள் தங்களை பிரெஞ்சிந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பிரஜாவுரிமையும் அரச உத்தியோகமும் வழங்கிய பிரெஞ் நாட்டிக்கு தாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆனால் லெயோன் புருஷாந்தி அந்த சிந்தனைக்கு விதிவிலக்கானவர். அவர் இந்தியா பிரிட்டிஷ்கார்ர்களிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர். அவர் ஒரு காந்தியவாதி என்றபோதிலும் தமிழர்கள் ஐரோப்பியர்கள் போல கம்பீரமாக உடை அணிய வேண்டும் என்று அனைவருக்கும் போதிக்கிறார். அவர் நாலு பிள்ளைகளுக்குத்தாயான கோடீஸ்வரியான விதவைப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து சீர்திருத்தவாதி என்ற நற்பெயரையும் சமூகத்தில் பெறுகிறார். சைக்கோனில் அரச உத்தியோகங்களில் இருக்கும் பிரெஞ்சிந்தியர்கள் மற்றும் வணிகம் செய்யும் பிரிட்டிஷ் இந்தியர்கள் சமூகங்களின் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு நபர். காந்தியின் செய்கைகளை நகல் எடுத்தாற்போல இவரின் செய்கைகளும் இருக்கிறது, காலனியர்களின் அரசிடம் கைகட்டி வேலை பார்க்கும் உத்தியோகமான தனது வங்கி வேலையை கைவிடுகிறார். இப்படி தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் காந்தியின் கால்தடங்களின் வழி நடக்கிறார். அவர் செயல்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வேதவல்லி பிரமிக்கும் அதே தருணம் சுப்புராயன் லேயோன் புருஷாந்தியின் தியாகங்களை எள்ளி நகையாடுவார். “ கோடீஸ்வர விதவைகள் என்றால் ஒன்றென்ன ஒன்பது பேரைக்கூட மறுமணம் செய்யலாம் என்று கூறுவார்.

பொதுவாக மனிதர்களின் செயல்ப்பாடுகளையும் அவர்கள் நகர்வுகளையும் தேவைக்கோட்பாட்டு அடிப்படையிலேயே கணிப்பது இலகுவாக இருக்கிறது.

முதலாவது அடிப்படைத்தேவையான உடல் சார்ந்த நிறைவு என்று பொருள் கொள்ளலாம். அவை சுவாசிக்கும் காற்று , நீர், உணவு , போதுமான நித்திரை மற்றும் உடலுறவு என்பவற்றை உள்ளடக்கும்) – இது உடல் சம்பந்தப்பட்ட திருப்தியை உள்ளடக்கும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற கூற்றுக்கிணங்க இந்த விளக்கம் அமைந்திருக்கிறது.

இரண்டாவதாக பாதுகாப்பு அவையாவன பொருளாதார, சமூக, தொழில் ஆகியவற்றினால் ஒரு தனிநபர் அடையும் நிறைவு. இந்த தேவைகள் உடல் சம்பந்தப்பட்ட அடிப்படைத்தேவைக்கு ஒரு படி மேலாக நிற்கிறது.

மூன்றாவதாக மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் குடும்பத்தில் அங்கத்துவம் வகிக்கும் அவள் தேவை , சமூகத்திற்குள் ஒருத்தியாக அங்கத்துவம் வகிக்கும் தேவை மற்றும் பரந்த நட்பு வட்டம், மனதிற்கினிய துணை ஆகியவை ஒரு நபர் தன் வாழ்வில் சந்திக்ககூடிய துயரசம்பவங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் , கொண்டாடப்பட வேண்டியவற்றை சேர்ந்து கொண்டாடுவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள் மூலம் பரந்துபட்ட சமூகத் தொடர்புகளும், நட்பு வட்டங்களும் ஒரு நபருக்கு மனவுளைச்சல் மற்றும் தனிமையால் விளையக்கூடிய மனச்சோர்விலிருந்து விடுவிக்கவல்லவை என்று நிரூபிக்கின்றன.

இந்தக்கதையில் மேற்குறிப்பிட்ட உளவியல் தேவைகள், நட்பு, மனதிற்கினிய துணை ஆகியவற்றிற்காக வெற்றிடத்தை நிரப்ப அலையும் ஒரு மனமாக வேதவல்லியின் மனம் உளலும் வேளையில் தான் அவளுக்கு லேயோன் புருஷாந்தி மூலமும் தழிழ்ச்சங்கம் மூலமும் அவையெல்லாம் கிடைக்கிறது. அந்த நட்பை ஸ்திரமாக வைத்திருக்கும் முனைப்பில் வேதவல்லி லேயொன் புருஷாந்தி முன்னெடுக்கும் எல்லா விடயங்களுக்கும் தன்னாலான ஆதரவை வழங்கி வருகிறார்.

அடுத்ததாக ஒரு தனிநபர் தான் தன் குடும்ப/சமூக சூழலில் மதிப்பு மரியாதை அந்தஸ்து மற்றும் தனிதன்மையுடன் கூடிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ வேண்டும் என்று நினைத்து அதில் முன்னேற்றமும் நிறைவும் காண்பது.

அந்த வகையில் தன்மதிப்பை தான் வாழும் சூழலில் தக்க வைக்க காவல் துறை வழங்கும் அதிகாரம் தாழ்வுச்சிக்கலில் உழலும் சுப்புராயனுக்கு தோதானா ஒன்றாக இருக்கிறது.

அந்த அதிகாரத்தை தனக்கு வழங்குவது தன்னையும் தன் இனத்தையும் சுரண்டும் பிரெஞ்சு காலனியத்துவ அரசு என்பதும் மேலும் இந்த பொலிஸ் உத்தியோகத்தின் மூலம் தன்னைப்போன்ற இன்னொரு பிரெஞ்சு காலனிய அடிமைகளான வியட்னாமியர்களை கையாளப்பயன்படுத்துகிறார்கள் என்ற பிரக்ஞை அற்ற ஒருவராக இருக்கும் சுப்புராயன் போன்ற ஆண்கள் பிரெஞ்சு காலனிய அரசுக்கு இரு வேற நாட்டு அடிமைகளை பிரித்தாண்டு தன் காலணிய ஆட்சியை தக்க வைக்க உதவியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் சுய வாழ்வியல் தேவைகள் பூர்த்தியான பின் அவர்கள் தாம் வாழும் சமூகத்தற்காக செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து சமூகத்தின் வளர்ச்சிக்கு தங்களினால் இயன்ற பங்களிப்பை செய்வதன் மூலம் தங்கள் சந்தோசத்தை மேலும் மெருகேற்றி பூர்த்தி செய்ய முனைவார்கள்.

அந்த வகையில் இந்த நாவலில் வரும் லேயோன் புருஷாந்திக்கு மனிதர்கள் உயிர்வாழத்தேவையான அத்தியாவசியத்தேவைகளுக்காகவோ தனது பாதுகாப்பு கருதியோ எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவோ அதனைத்தக்க வைக்கவோ வேண்டிய தேவைகள் அற்றவர் அதனால் அவரின் செயல்ப்பாடுகள் அவரை தன்னை சுற்றி இருக்கின்ற சமூகத்தினது மேம்பாடுகளுக்கு பங்களிப்பு செய்ய அவரை இயல்பாக உந்தித்தள்ளுகிறது.

அவர் பொதுக்கூட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமை பற்றிப்பேசுகிறார், பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற வேண்டும் என்று அந்த விடுதலை நோக்கி போராடும் நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய லீக் கட்சிக்கு உதவிகள் செய்கிறார் . எல்லாவிதமான சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனியோடு யப்பான் கூட்டு சேர்ந்து அதன் அதிகாரத்தின் பிடியின் கீழ் பிரெஞ்சு நாட்டு மக்களையும் கூடவே கொலனிகளையும் கொண்டு வருகையில் தற்காலிகமாக பிரித்தானியாவின் எதிரியாக யப்பான் மாறுகிறது இந்த சின்ன இடைவெளிக்குள் புகுந்து யப்பானின் ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனா பிரெஞ்சு கொலனிகளில் உள்ள இந்தியர்களின் ஆதரவையும் பணபலத்தையும் திரட்ட அன்றைய சக்தி வாய்ந்த அரசியலாளர்களான நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் சைக்கோன் வருகிறார்கள் அந்த வேளையில் காந்தியவாதியும் சைக்கோன் சமூகத்தில் பணபலமும் அந்தஸ்த்து மற்றும் புகழுடன் வாழும் லேயோன் புருஷாந்தியின் ஆதரவை அவர்கள் நாடுகிறார்கள், அந்த வேளையில் புவிசார் அரசியலில் நிலை எப்படியும் மாறலாம் தாங்கள் தங்கள் காவணிய நாடான பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் தங்களதும் தங்களின் குடும்பத்தின் பாதுகாப்பும் மட்டுமே முக்கியம் பிரெஞ்சு இந்தியர்கள் அனைவரும் ஒதுங்க லேயோன் புருஷாந்தி மற்றும் வேதவல்லி நேதாஜியை வரவேற்று அவர்களின் இந்திய விடுதலைக்கான பணிகளை இந்தோ சீனாவில் தொடங்கி வைக்கின்றனர். லேயொன் புருஷாந்தி என்ற அந்த சமூக அந்தஸ்த்தும் மரியாதையும் உள்ள மனிதருக்கு தனிநபராக தன்னுடைய பாதுகாப்பு என்பது எந்த சர்ந்தப்பத்திலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தவறாக கணிப்பிட்டார். யப்பானின் கொட்டத்தை அமெரிக்கா அடக்க மீண்டும் பிரெஞ்சு அரசு அதிகாரத்திற்கு வருகிறது அப்போது யப்பானுடைய ஆதரவில் பிரெஞ்சு கொலனியான சைக்கோனில் அரசியல் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சித்தவதைக்குள்ளாகி பைத்தியமாக லேயோன் புருஷாந்தி வெளியில் வந்து பின்னர் இந்தியா வந்து புதுச்சேரி வீதிகளில் பைத்தியமாக அலைந்ததற்கு பல நிஐ சான்றுகள் உள்ளதாக தெரிகிறது என்று கதையில் கூறப்படுகிறது.

உலகெங்கும் கொலனிகளை வைத்திருந்த பிரான்ஸ் அரசு அதன் ஒரு கொலனியில் இருந்து இன்னொரு கொலனிக்கு அரச உத்தியோகங்களுக்காக மக்களை இடப்பெயர்வு செய்து அவர்களை எதிர்க்கும் மக்கள் கூட்டத்தினை அவர்களின் இன்னொரு அடிமைகளைக்கொண்டு அடிமைப்படுத்த முனைந்தது என்பது இந்தக்கதை மூலம் தெட்டத்தெளிவாக தெரிகிறது. அரசு என்பது மக்களை ஒடுக்கும் இயந்திரம். பிரெஞ்சு அரசு தங்களால் ஒடுக்கப்படும் இந்திய புதுச்சேரி மக்களின் கைகளை கொண்டு இன்னொரு ஒடுக்கபட்டும் அவர்கள் பிரஜைகளான வியட்நாமியர்கள் கண்களை குத்த வைக்கிறது, இரண்டு அடிமைப்படுத்ப்படும் இனங்களிடம் பகையை வளர்த்து சாதூர்யமாக தங்கள் காலனித்துவத்திற்கு எதிரான கோவம் எப்போதும் பிரெஞ்சு அரசின் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ள முனைந்திருக்கிறது.

தங்களின் பொது எதிரி பிரெஞ்சு அரசு என்று அவர்களுக்கு தெரிய வரக்கூடாது என்ற எச்சரிக்கையோடு நடந்து கொண்டது. ஆனாலும் வியட்நாமியர்கள் எய்தவர் இருக்க அம்பை நோகவில்லை.

சிங்காரம் , வேதவல்லி, சுப்பு போன்ற புதுச்சேரி தமிழர்கள் வியட்நாம் சென்று குடியேறி சுமார் இருபது ஆண்டுகளின் பின்னரே வியட்நாம் போர் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வியட்நாம் தாய்க்கும் தமிழ் தகப்பனுக்கும் பிறந்த வேதவல்லி வளர்ப்பு மகள் லக்‌ஷ்மி , மற்றும் சிங்காரத்தின் மகன் பிலிப்பும் இராணுவத்தில் பிரெஞ்சுப்படையில் சேர்ந்துவிடுகிறார்கள். அத்தோடு ஜானகியின் மகன் பொன்னுச்சாமியும் புதுச்சேரியில் இருந்து வந்து சைக்கோனில் பிரெஞ்சு இராணுவத்தில் சேருகிறான்.

ஃபிலிப் பிரெஞ்சு குடியுருமை பெற்ற சிங்காரத்தின் மகனாகவும் வியட்னாமிய பெண்ணான மரியா ஹோவாம்மியின் மகனாகவும் இருந்து தன் தாய் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் ஜானகியின் மகன் பொன்னுச்சாமியையும் ஒருங்கே காப்பாற்றுகிறார். பிரெஞ்சு காலணியத்துவ அரசு எவ்வளவு தான் காலனிய நாடுகளின் குடிமக்களை ஒருத்தர் மீது இன்னொருவரை ஏவி தங்கள் பக்க போரினை வெல்ல முயன்ற போதிலும் தேசப்பற்றுள்ள மனிதர்களையும் மனித நேயத்திற்கு விசுவாசமான மனிதர்களையும் அவர்களினால் வெல்ல முடியவில்லை.

தனது தாய் நாட்டின் மேல் அந்நியரகள் போர் தொடுக்க வந்த போது ஃபிலிப் பிரெஞ்சு ராணுவத்தில் உளவாளியாக சேர்ந்து தனது வேலையை கச்சிதமாக முடித்து விடுவதோடு வியட்நாமிய ராணுவத்தினால் போரில் தோற்ற பிரெஞ்சு படையில் இருந்த பொன்னுச்சாமி கைதாகி திக்கற்று நின்ற போது ஃபிலிப் தனது சகோதரன் பொன்னுச்சாமியை காப்பாற்றும் அந்த காட்சி நாவலின் இப்படி விரிகிறது.

“ போர்க்கைதிகள் முகாமில் அடைபட்டு பத்து நாட்கள் கடந்துருந்தபோது திடீரென்று அம்மா நினைப்பும் ஊர் நினைப்பும்வர முதன்முறையாக அழுதான். ஒன்பது ஆண்டுகளாக சைக்கோனில் இருக்கிறான், யுத்தம் செய்கிறான், யாருக்காக இந்த யுத்தம்? வியட்மின்கள் அவனுக்குச் செய்த துரோகம் என்ன ? அல்லது அவர்களுக்கு பொன்னுச்சாமி தான் ஏதாவது துரோகம் செய்திருப்பானா, இதென்ன விளையாட்டு ? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, ஆசை ஆசையாய் அம்மா ஊர்ச்சாமிகளுக்கு படையலிட்டு கப்பலேற்றி விட்டது இப்படிச்சிறையில் வாடவா? ….தம்முடைய படைவீர்ர்கள் சிறைபட்டிருப்பது குறித்த அக்கறை பிரான்சுக்கு உண்டா? …. என்றெல்லாம் நினைத்துக்கலங்கினான். பிரெஞ்சு காலனியப்படை வியட்மின்களிடம் தோற்றுள்ள நிலையில் , வியட்நாமில் இன்றைய தேதியில் அவர்கள் முகவரி என்ன? அதிகாரம் என்ன? …எனக்குழம்கிக்கொண்டு வெளியில் வந்த வேளை, வாயிலில் பிலிப்.

⁃ உன்னை எப்போது விடுதலை செஞ்சாங்க ? ஆர்வத்துடன் பொன்னுச்சாமி நண்பனைக்கேட்டான்.

⁃ என்னை யார் விடுதலை செய்யவேண்டும், நான் உண்மையில் வியட்மின்களின் உளவாளி..பிரெஞ்சு காலனியப்படையில் சேர்ந்து எங்கள் வியட்மின்கள் படைத்தலைமைக்கு நம்முடைய அசைவுகளையும் கொண்டு சேர்ப்பது தான் என் வேலை.

முடிவில் இந்தப்போரின் முடிவு நீதியின் பக்கம் இருந்தது போல தோற்றப்பாடு அளித்தாலும் அமெரிக்கா ஜேர்மனியுடன் கூட்டு சேர்ந்த யப்பானை எதிர்த்து தனது அதிகாரத்தை அந்தப்பிராந்தியத்தில் நிலைநாட்ட நினைத்து உதவி பின்னர் அந்தப்பிராந்தியத்தில் சீனாவின் கொம்முனிசக்கொள்கை பரவிவிடாமல் இருக்க வியட்நாமியர்களுக்கு எதிராக இருபது வருடம் கடும் போரை மேற்கொண்டது, இந்தப்போர்களில் பங்கெடுத்த மனிதர்களும் அவர்களுக்கு பிறந்த அடுத்த தலைமுறையும் இன்னமும் போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர் என்பது தான் கொடுமையான யதார்த்தமாக இருக்கிறது.

நிஐ வரலாற்று தகவல்கள் நிரம்பிய பிரெஞ்சு கொலனிய காலத்தில் வியட்நாமில் வாழ்ந்த தமிழர்களின் பயணத்தடங்களையும் வாழ்வையும் சித்தரிக்கும் இந்நாவல் வாசிப்பு என் தேடல்களுக்கு தீனி போட்ட ஒரு நாவல் மட்டுமல்லாமல் லண்டனில் நான்றிந்த வியட்நாமிய மனிதர்களுடன் எனக்கு இனம் தெரியாத ஈர்ப்பையும் நெருக்கத்தையும் வரப்பண்ணியிருக்கிறது.

நாவலாசிரியருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.

திறனாய்வுக் கலை 

          அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு வகையில்  நமக்குள்ளாகவோ, வெளிப்படையாகவோ குறைகாண்பதும், பிறரைக் குற்றம்சாட்டுவதும், கண்டிப்பதும் மனிதர் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவையாக  இருக்கின்றன.

 « சே… கடுமையான வெயில், வெயில் தாழ்ந்தபின்  வெளியில் வந்திருக்கவேண்டும் ». அல்லது « புறப்படும்போதே மப்பும் மந்தாரமுமாக இருந்தது, மழைவரும்போலிருந்தது குடை எடுத்துகொண்டு வந்திருக்க வேண்டும்.  »

இவை இரண்டும் இயற்கையின் பண்பிற்கொப்ப ஒருவர் தான் நடக்கத் தவறியது குறித்து, அல்லது இயற்கையின் முனெச்சரிக்கையை அவர் அலட்சியபடுத்தியதை முன்னிட்டு மனம் நொந்து, தம்மைத் தாமே விமர்சிக்க்கும் வகையில் தெரிவிப்பவை.  

« எத்தனை பேர் இந்த வழியாகப் போயிருப்பார்கள், யாரேனும் ஒருவர் இந்தக் கல்லை எடுத்து ஓரமாகப் போட்டிருக்கக் கூடாதா, தடுக்கிவிழ இருந்தேன் ! » என்றோ அல்லது   « ரோடு போட்டு ஒரு மாதம் ஆகலை இதற்குள்ள குண்டும் குழியுமா இருக்கு, » என்றோ  உரத்தெழும் குரல்கள் நமக்குத்தெரிந்த மனிதர்களை முன்வைத்தோ அல்லது தெரியாத மனிதர்களை முன்வைத்தோ வைக்கப்படும் விமர்சனங்கள், பிறிதொருவகை.

எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தன்னையோ, தான் முன்பின் அறிந்திராத நபரையோ விமர்சிப்பவர்களன்றி, எதற்கு வம்பென்று தமது விதியை விமர்சித்து கோபத்தைத் தணித்துக்கொள்ளும் மனிதர்களும் நம்மிடையே உண்டு. குடும்பம், நட்பு, அலுவலகம்  போன்ற இடங்களில்  நாம் விமர்சனங்களை பிறர் குறித்து நேரடியாக அந்நபரிடமோ, அவரைச் சார்ந்தவர்களிடமோ  வைப்பதுண்டு, அந்தப் பிறரும் அவசியமெனில் நம்மையும்  அதேமுறையில் விமர்சிப்பதுமுண்டு.

Criticism என ஆங்கிலத்திலும், critique என   பிரெஞ்சு மொழியிலும் சொல்லப்படும் வார்த்தையின் மூலம் criticus என்கிற இலத்தீன் சொல். அதன் பொருள் மதிப்பீடுசெய்பவர், சார்பற்று கருத்துரைப்பவர். அதாவது குறைகளை சுட்டியும், நிறைகளை பாராட்டியும் கருத்துரைக்கும் அல்லது தீர்ப்பெழுதும் ஒருவர்.

பொதுவில் விமர்சகர்கள் இருவகை. பிறமனிதர்களைக் காயப்படுத்தவென்றே விமர்சனங்களை வைப்பவர்கள் முதல்வகை.   குறைகளைக் களைந்து இனி வரும் நாட்களில் சம்பந்தப்பட்டவர் மேன்மையுற வேண்டும் என்ற நோக்கில் விமர்சனங்களை வைப்பவர்கள் இரண்டாவது வகை. விமர்சனம் அல்லது திறனாய்வு  ஒரு கலையெனில், உண்மையான விமர்சகர்களின் நோக்கம் இரண்டாவதாகத்தான் இருக்கவேண்டும். காரணம் கலையின் முயற்சி ஆக்கலேயன்றி அழித்தல் அல்ல.  

திறனாய்வு என்ற சொல்லை காதில் வாங்கிய கணத்தில்  நமது சிந்தனையில் எழுவது கலையும் இலக்கியமும் ; அதாவது எழுத்தாகவும்  கலையாகவும் வடிவம் பெறும் அனைத்தும் திறனாய்வுக்குரியவை. இன்று நேற்றல்ல மனிதர் வாழ்க்கையில் கலையும் இலக்கியமும் கைகோர்த்த நாள்தொட்டு அவை விமர்சனத்திற்குரியவையாக இருந்து வந்துள்ளன, அவற்றில் இடம்பெறும் சம்பவகளும், கையாளும் கருப்பொருள்களும், மானுடத்திற்குப் பயன்தரக்கூடியவையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இவற்றை வரவேற்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம். பண்டையைத் தமிழ் வழக்கில் தொல்காப்பியம், தண்டியலங்காரம் போன்றவை அப்போதைய செய்யுள் வடிவ படைப்புகளுக்கென்று சில இலக்கண விதிமுறைகள எழுதிவைத்திருந்தன. கவிஞர்கள் அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு என்கிற நியதிக்குட்பட்டு படைக்கவேண்டிய கட்டாயம். அன்றியும் அன்றைய தமிழரின் வாழ்வியலுக்கு இசைந்து, எழுதவேண்டுமென்கிற எதிர்பார்ப்புகள் வேறு ; மீறியவை நிராகரிக்கப்பட்டன. அதிலும் பரிசில் வேண்டியும், பசியாறவும் படைத்தகாலத்தில் விமர்சிக்க, புறம்தள்ள ஆயிரத்தெட்டுக் காரணங்கள்.

இன்றைய படைப்பிலக்கியம் நேற்றைய நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல, குறிப்பாக இலக்கணமெகிற கைவிலங்கு கால்விலங்குகள் இவற்றுக்கில்லை. சொல் புதிது, சுவைபுதிது, பொருள்புதிதென பாரதி வழியில் வாழும் காலத்தை கருத்திற்கொண்டு கலையும் இலக்கியமும் படைக்கப்படும் காலம்.  மரபுகளை சீர்தூக்கி பார்த்து, ஒவ்வாததை ஒதுக்கும் காலம்,

தவிர, பிறந்த மண்ணைத் துறந்து வாழ்பவர்கள் அனேகம்.  அவ்வாறு துறக்கிறபோது புலம்பெயர்ந்த மண்ணின் பண்பாடும், அரசியலும் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை ஒருவகையெனில், சொந்தமண்ணில் வாழ்கிறவர்களின் நிலையென்ன ? அமெரிக்கர்கர்களாக ஐரோப்பியர்களாக வாழ்கிற தமிழர்கள் சென்னையிலும், கோவையிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏன் இந்தியாவிலேயே பெங்களூரு, மும்பையென தமிழர்கள் வாழ்வதில்லையா ?  சிலப்பதிகாரம், மனோன்மணீயம் வாசித்த தமிழர்கள்  இன்று டால்ஸ்டாய், அல்பெர் கமுய் என வாசிக்கிறபோது, நடைமுறை வாழ்க்கை, உலக மயமாக்கலோடு ஒத்திசைந்து போகிறபோது, இன்றைய படைப்புகள்  அதை எதிரொலிக்கத்தானே செய்யும். இந்நிலையில் திறனாய்வாளர்களும் காலத்திற்கேற்ப படைப்புகளை அணுகவேண்டிய நெருக்கடி.

இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து இன்று சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள்  வந்துவிடுகின்றன.  மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டும். ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து,  கூடாது. எவ்வித முற்சாய்விற்கும் இடம் தராமல் ஒரு படைப்பை அணுகுவதற்கு வசதியாக, உரிய அவகாசத்தை வாசகர்களுக்கு  அளித்த பின்னரே விமர்சனங்கள் வரவேண்டும்.

பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எங்ஙனம் தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே  விளம்பர உத்தியோடு  அல்லது அத்தகைய  நுட்பத்தோடு படைப்பிலக்கியத்திற்கு வைக்கப்படும் விமர்சனங்களை  நம்பியும் ஒரு படைப்பின் தராதரத்தை தீர்மானித்துவிடமுடியாது. இன்று படைப்பு வெளிவந்த கணத்திலேயே பதிப்பகமோ, எழுத்தாளர்களோ காட்டும் அக்கறையினால்  புத்தகங்கள் திறனாய்வாளர்களின்  கைக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. இவர்களும் புத்தகம் கிடைத்த குறுகிய காலத்திலேயே எதையாவது எழுதித் தரவேண்டிய   நெருக்கடி. படித்து முடித்த படைப்பு உண்மையில் ஏற்படுத்தும் தாக்கமென்ன ? அனுபவமென்ன என்பதையெல்லாம் சிந்தித்து  எழுத  நேரம் கிடைப்பதில்லை. வாசித்த கணத்தில் எதை உணர்கிறார்களோ அதை உடனே எழுதிவிடுகிறோம். கலைப் படைப்பு என்பது கணத்திற்குரியது அல்ல, கணத்தைக் கடந்தது. காலத்தோடு எதிர்  நீச்சல் போடுவது. வாசித்து முடித்தபின், தொடரும் கணங்களில்,  நாட்களில் நமக்குள் அப்படைப்பு என்ன  நிகழ்த்துகிறது என்பது முக்கியம்.

மேற்குலகில் கலை இலக்கிய விமர்சகர்கள் ஊடகங்களில் ஊதியத்திற்குப் பணிபுரிகிறவர்கள். படைப்பாளிகளுக்கும், விமர்சகர்களுக்குமான  இடைபட்ட தூரம் அதிகம். நெருக்கமிருந்தால்கூட பாவபுண்ணியம் பார்த்து விமர்சனங்களை வைக்கும் வழக்கம் அதிகமில்லை. பெரும்பான்மையான  விமர்சகர்கள், சுதந்திரத்துடன், எவ்வித முன்முடிபுமின்றி செயல்பட வாய்ப்புண்டு. அப்படி இருந்தும்கூட ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு நூலைக்குறித்து  எழுதவேண்டிய  நெருக்கடியில் சரியான, நியாயமான திறனாய்வுகளை எழுதத் தவறிவிடுகிறார்கள்.   இங்கு   நமக்குக் கூடுதக்   நெருக்கடி. தமிழ்ச் சூழலில் இன்று எழுத்தாளரென்கிற அடைமொழியோடு வலம்வருகிறவர்கள் ஏராளம். படைப்பு குறித்து எழுதும் திறனாய்வாளரும் அப்படைப்பாளியும் ஒரே குழுவைச் சேர்ந்தவராக அல்லது எதிராளி அணியினராக இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு.   நண்பர்களாக, தெரிந்தவர்களாக இருக்கிறபோது குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவது இயற்கை.  அடுத்து குற்றங்கடிகிற பேர்வழிகளை பொதுவில் படைப்பாளிகள் வெறுக்கவே செய்வோம், அவர்களைக் கொண்டாடுகிற படைப்பாளிகள் எந்த உலகிலுமில்லை. இருந்தபோதிலும் மேலை  நாட்டு விமர்கர்களில் பெரும்பான்மையோர்  காய்தல் உவத்தலற்று  ஒரு படைப்பை அணுகுகிறவர்கள் என்பதால் படைப்பாளிகள் மனம் வருந்துவதில்லை.

புதுச்சேரி மொழியியல் ஆய்வு தமிழ் ஆய்வுமாணவர்களுடன், கலந்துரையாடலை  நண்பர் பக்கதவச்சல பாரதி ஏற்பாடு செய்திருந்தார் அப்போது நோபெல் பரிசுபெற்ற எழுத்தாளர் லெ கிளேஸியொவின் குற்றவிசாரணை  நாவலை வாசித்ததாகவும் அது தமக்கு நிறைவைத் தரஇல்லையென்றும், அதைவிட தமிழில் நல்ல  நாவல்கள் வருகின்றன என்றும் கூறியவர், தாம்  நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை என்ற உண்மையையும் ஒளிக்காமல் தெரிவித்தார். நண்பர் பகதவச்சல பாரதி முதிர்ந்த சிந்தனையாளர். எனவே குற்றவிசாரணை  நாவல் அவருக்கு  நிறைவைத் தராதது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. அதனை மறுக்கின்ற வகையில் அன்று என்னிடத்தில் பதிலொன்று  இருந்தும் அதை நான் சொல்வது சரி அல்ல, அதனை ஒளித்து மழுப்பலாகத்தான் ஒரு பதிலைக் கூறினேன். அந்  நாவல் வெளியீட்டின்போது காலச்சுவடு சார்பாக கலந்துகொண்ட கவிஞர் சுகுமாரன் நேர்மறையான சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். புத்தக வெளியீடு நிகழ்வுகளில் பெரும்பாலும்  நிறைகளைச் சுட்டிக் காட்டுவதே நமது மரபு. நண்பர் பக்தவச்சல பாரதி கருத்தின் அடிப்படையில் எழுதவேண்டும் என  நினைத்தபோது திருநெல்வேலி  சதகத்துல்லாஹ்  கல்லூரியைச் சேர்ந்த  முனைவர்  ந.ஜிதேந்திரன்(தற்போது திருவனந்தபுரம் அரசு கல்லூரி பேராசிரியர்) என்பவர் குற்றவிசாரணை  நாவலை தாம் படித்ததாகவும், தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் « லெ கிளேஸியோவின் குற்ற விசாரணையில்  நுண்பொருள் கோட்பாட்டியல் » என்ற தலைப்பில் கட்டுரையொன்றை திருநெல்வேலியில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் தாம் வாசித்ததாகவும்  எனக்கு எழுதியிருந்தார்,  எழுதியதோடு கட்டுரையையும் அனுப்பியிருந்தார். குற்றவிசாரணை நாவலைப் பற்றிய  எனது கருத்திற்கு இணக்கமாக அக்கட்டுரை இருந்தது.

நண்பர் பக்தவச்சல பாரதியின் எதிர்மறையான கருத்தும், முனைவர் ந.ஜிதேந்திரன் என்பவரின் ஒத்திசைவானக் கருத்தும் இரண்டுமே நாவல் எழுதப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து வந்திருக்கின்றன. இரண்டுமே கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு சொல்லப்பட்டவை. எதிர்மறையான விமர்சனத்தை வைத்த  நண்பர் பக்தவச்சல பாரதியை அறிவேன். நேர்மறையான விமர்சனத்தை வைத்த  திரு நெல்வேலி பேராசிரியரை அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் மூலம் அறியவந்தேன். இரண்டுமே காலத்தின் விமர்சனம். குற்றவிசாரணை  நாவல், நண்பர் பக்தவச்சல பாரதியைப்போல பிரெஞ்சு மொழியில்கூடஒரு சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது, நாவலை எதிர்மறையாக  விமர்சித்த பிரெஞ்சு வாசகர்கள் இருக்கிறார்கள்.  அதேவேளை வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றபடைப்பு, பிரான்சு நாட்டின் மிகப்பெரிய படைப்பிலக்கிய விருதான  ‘கொன் க்கூர்’ விருதைப் பெற்ற  நாவல். இங்கே  விருதுகள் தேர்வுக் குழுவினரின்  விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, தேர்வுக்கான இலக்கிய காரணங்களை  வெளிப்படையாக அறிவித்து அறிவித்துத் தகுதிகுரியவை மேடைக்கு வருகின்றன.

 ஒரு படைப்புக்கு இருவகையான கருத்துக்களுக்கும் வாய்ப்புண்டு. ஒரு படைப்பை ஒட்டுமொத்த மானுடமும் இசைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதனைக் காலம் முன்மொழியவேண்டும், காலத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால்தான் ஆயிரமாயிரம் நடிகர்கள், ஆளுக்கொரு ரசிகர்மன்றங்கள்.  நாவிற்கு பல ருசிகளுண்டு என்பதாலேயே உணவகங்களில் நம்முன் ஒரு பெரிய  பட்டியலை  நீட்டுகிறார்கள்.

ஒரு வாசகனாக  நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது எந்தப் படைப்பையும் முன் முடிபுடன் அணுகாதீர்கள்.  தேர்தல்  நிற்கிற வேட்பாளரை ஆதரித்தும், எதிர்த்தும் சொல்லப்படும் கருத்துக்களை காதில் வாங்கவேண்டியதுதான், ஆனால் வாக்குரிமை  நம்முடையது.  அப்பாவுக்குப் பெண்பிடித்திருக்கிறது, அம்மாவுக்கும் பிடித்திருக்கிறது,  தங்கைக்குப் பெண்ணின் மூக்கு கருடன் மூக்கு என்பதன் அடிபடையிலெல்லாம் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேடக்கூடாதோ அதுபோலத்தான் விமர்சனங்களின் அடிப்படையிலும்  ஒரு புத்தகத்தைத் தேர்வுசெய்வது சரியாகாது. வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாசிப்பிற்கும்   நம்முடைய மனம்  என்ன சொல்கிறது என்பது முக்கியம்.

——————————————————————-