ஆஹா (தேர்தல்) வந்திருச்சி – 2

1938 டிசம்பர் 16….

  வாக்களித்த நூதனங் கேளும், பேதகர் சென்று

  வாக்களித்த நூதனங் கேளும்

  போக்கரெல்லாம் ஒன்றுகூடி

  பொதுக்கொலேழினை நாடி

  வாக்களிக்காபேரைத் தேடி

  மண்டையை உடைத்து ஓடி

  வாக்களித்த …

  குடிசையைக் கொளுத்தி னோரும்

  கோட்டைக்குப்பம் மேவினோரும்

  குடித்துத் திருடினோரும்

  கூடலூருக்குக் கோடினோரும்

  வாக்களித்த….

  வந்ததோ ஒரு நூறுபேரே

  வாக்கோ முப்பது முன்னூரே

  இந்தவித செய்தபேரே

  எல்லாஞ் செய்வர் பெரியோரே

  வாக்களித்த நூதனங்கேளும் !

 கடைத்தெரு மூலையில் நின்று பாடிக்கொண்டிருந்த கோமாளியைச் சுற்றி ஒரு சிறுகூட்டம்.

– இங்கே என் கடைமுன்னால வேண்டாம். அவனை அடித்து விரட்டுங்கப்பா. பல்லை இளித்துக்கொண்டு என்ன வேடிக்கை – சத்தம் போட்டார் செட்டியார். நெற்றியிலும் கழுத்து மடிப்புகளிலும் சுரந்த வியர்வையை ஈரிழைத் துண்டால் அழுந்தத் துடைத்தார். பூணூலில் முடிந்திருந்த சாவிக்கொத்து இடம்பெயர்ந்து பானை வயிற்றில் முடிச்சிட்டிருந்த தொப்புளில் திரும்ப விழுந்தபோது சலங்கைபோலக் குலுங்கியது. மதிய உணவை உண்டுமுடித்த கையோடு கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தார், இட துகை விரல்கள் பிடியில்  பனை மட்டை விசிறி.

செட்டியார் கோமாளியை எதற்காக ஏசுகிறார் என்பது அரசப்பனுக்குத் தெரியும். பைத்தியக்காரன் ஏதோபாடுகிறான் நமக்கென்ன வந்தது எனச் செட்டியாரால்  அலட்சியப்படுத்த முடியாது.  கோமாளியின் பாடல் டேவிட் ஆட்கள் காதில் விழுந்தால், பாடுகின்ற கோமாளி மட்டுமல்ல காதில் வாங்கும் மனிதர்களும் பந்தாடப்படுவார்கள். « ஆனால் இப்படி எத்தனைநாளைக்கு இவர்கள் அட்டூழியத்தைச்  சகித்துக்கொண்டிருப்பது. ஏதாவது செய்தாலொழிய அவர்களின் கொட்டம் அடங்கப்போவதில்லை » என எண்ணியபடி வேகமாக நடந்தான். பசித்தது. காலையிலிருந்து பட்டினி.

அரசப்பன் வீடு காக்காயன் தோப்பிலிருந்தது, மனைவி, பிள்ளைகள், வயதான தாய் என்று ஐந்துபேர்கொண்ட குடும்பம். தகப்பனுக்குக் கள் இறக்கும் தொழில். நித்தம் நித்தம் தலைக்கயிறு,பெட்டி, பாளை சீவும் கத்தி எனச் சுமந்து மரமேறி, பாளையைச்  சீவி, கவனமாய்க் கலயத்திலிட்டு இறங்கிவந்து பசியாறும் தொழில். « இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரைப் பணயம் வைத்து மரமேறி வயிறைக் கழுவறது. உன் சந்ததிக்காகவாவது விடிவுகாலம் பொறக்கட்டும். ஆலைவேலக்குப்போ, அல்லாங்காட்டி சைகோன் அப்படி இப்படின்னு சொல்றாங்களே போயிட்டு வாயேன் »  என வேலாயுதக்  கிராமணி சொன்னதுல நம்ம அரசப்பனுக்கு வாய்த்தது ஆலைவேலை. பத்துவருடமாக சவானா ஆலையில் தறி ஓட்டும் தொழிலாளி. உத்தியோகம் நிரந்தரமானதும், தமக்கை மகள் பர்வதத்திற்கு மூன்று முடிச்சுப் போட்ட சூட்டோடு இரண்டு பிள்ளைகள். எந்தக் குறையுமில்லை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள்.ஒரு முறை மேஸ்திரியிடம் முறைத்துக்கொண்டான். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. போனவருடத்தில்  புதுச்சேரி ஆலைகளில் ஊதிய உயர்வு மற்றும் பிற காரணங்களை முன்வைத்து நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு ஆள்குறைப்பு என முடிந்தபோது, உத்தியோகத்தை இழந்தவர்களில் நம் அரசப்பனும் ஒருவன். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ரெண்டு கொடுமை வந்து திங்குதிங்குன்னு குதிக்குது என்கிற கதை நம்முடைய  அரசப்பன் விஷயத்தில் நிஜம்.  நகராட்சித்  தேர்தலை முன்வைத்து மகாஜன சபை ஆதரவாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு  இந்தியக் கட்சியினர்  கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் அரசப்பன் கூரைவீடு தரைமட்டமானது, எரிந்த வீட்டோடு  பெண்டாட்டி பிள்ளைகள், தாய் என அவனுக்கென்றிருந்த உயிர்ச் சொத்துகளையும் தீ அடித்துப் போனது.

வீராம்பட்டணம் சாலையைப் பிடித்து அரசப்பன் நடந்தான். குடும்பத்தை அரசியல் கலவரத்திற்குப் பலிகொடுத்தபின்னர், நிரந்தர வாசத்திற்கு எதுவுமில்லை.   பகல் நேரங்களில் கடைத்தெருப்பக்கம் ஒதுங்குவான்,  கையை ஏந்துகிறபோது, காலணா அரையணா கொடுக்கிறார்கள். மதிய உணவென்பது பெரும்பாலுமில்லை. காக்கயந்தோப்பிற்குத் திரும்புகிறபோது இவன் வீட்டுக்கு எதிர்வீட்டுவாசியான சொர்ணம் அக்கா மறக்காமல் அழைத்துச் சோறுபோடுவதுண்டு. வழியில் ஏதாவது கோவில்கள் தென்பட்டால், கும்பிடத் தோன்றினால், மகராசி சொர்ணத்திற்காக வேண்டிக் கொள்கிறான்.

பெரியவர் மாசிலாமணி எதிரில் வந்தார். விறுக் விறுக்கென எதிரில் வரும் நபரை எட்டி உதைக்க விரும்பியவர்போலப் பாதத்தை உயர்த்திவைப்பார். கால்களில் இலாடம் கட்டிய எருமைத் தோல் செருப்புகள், பூமியைத் தொடும்போது இரணியகசிபோவெனச் சந்தேகிக்கத் தோன்றும். வேட்டியை மடித்துக்  கட்டி இருந்தார், மேலுக்குச் சட்டை இல்லை, தோளைச் சுற்றிய துண்டு மார்பை மறைக்க வெட்கப்படும். மார்புக்குழியிலும், காம்புகளைச் சுற்றியும் கோரைபோல ரோமம். முகத்திலும் சவரம் செய்யாமல் மூக்கு, நெற்றி, கண்களுக்குவிலக்களித்து தரிசு நிலத்தை ஆக்ரமித்து மழை காணாத புற்கள்போல ரோமம். தொப்புளுக்குக்கீழ் அடிவயிற்றின் மெல்லிய மடிப்புகளை ஒட்டியும் அதற்குக் கீழும் இரண்டு சிப்பங்கள். முதல் சிப்பம் கோரைப்புல்லாலான  அரைப்பை. அதில் வெத்திலை, களிப்பாக்கு, வாசனைச் சுண்ணாம்பு, குண்டூர் புகையிலை, சிறியதொரு பாக்குவெட்டி – இப்படி எல்லாமும் உண்டு. அதற்குக் கீழுள்ள சிப்பம் மேலேயுள்ள சிப்பத்தைவிட அளவில் பெரியது. அது அவருடைய அண்டம். « உங்களைப்  பெரிய மனுஷன்னு  சொல்றாங்களே இதுக்குத்தானா ? » என ஒருமுறை அரசப்பன் விளையாட்டாகக் கேட்கப்போய் ஊர் முழுக்கப் பரவி விட்டது. அவரே ஒருமுறை அரசப்பனை அருகில் அழைத்து, « எனக்கு நாலு பையன், ஆறு பொண்ணு, எல்லாம் இதனுடைய மகத்துவம்தான் புரிஞ்சுக்க » என வேட்டியை அவிழ்த்தபோது, பதறிவிட்டான்.  அப்போதைக்கப்போது, « ஏதாவது சாப்பிட்டியா, வீட்டுக்குப் போ, இன்றைக்கு கிருத்திகைக்கு படைச்சோம். உனக்கு எடுத்துவச்சிருக்காங்க. » என உரிமையுடன் உத்தரவிடுகின்ற ஆசாமி.

கண்களுக்கு மேல் குடைபிடிப்பதுபோல உள்ளங்கையைக் கவிழ்த்தி  நிறுத்தி, « யாரு அரசப்பனா ? உன்னைக் காலையிலிருந்து தேடறோம் எங்க போயிட்ட ? » என வினவினார்.

 அரசப்பன் தலையைச் சொரிந்தான். « சரி மாமா », எனத் தலையாட்டிவிட்டு  நடந்தான். இருபது நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு வீட்டுமுன்பாக நின்றான். பெரிய தூலகட்டு வீடு. இவன் தெருவாசலில் பாய்போட்டு படுத்திருந்தான். மனைவி அம்புஜம் தன் பிள்ளைகளுடன் உள் நடையில் படுத்திருந்தாள். தாய் அடுப்பங்கரையில் முந்தானையை விரித்துப் படுத்திருந்தார். நள்ளிரவைக்  கடந்த நேரம். மற்றொரு சாதிக்கார இளஞன் ஓடிவந்தான். தொழிற்சங்க ஆட்களை டேவிட் கட்சிக்காரங்க தடி, கம்புகளுடன் தாக்கறாங்க, நாம அதைத் தடுக்கனும் » என்றான். அரசப்பன் வீட்டிலிருந்த பாளைசீவும் கத்தியைக் கையிலேந்தியபடி அவனுடன் ஓடியவன் திரும்பியபோது, வீடு எரிந்துசாம்பலாகி இருந்தது. ஒரு ஜீவன் கூட மிஞசவில்லை.

வெகுநேரம் குத்துக்காலிட்டுத் தலையைப் பிடித்தபடி வீடிருந்த தழும்பைப் பார்த்து அலுத்து, கால்களைப் போலவே கண்களும் மரத்திருந்தன. ஆழ்ந்த நெடுமூச்சுடன் எழுந்து நின்றான். தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினான். பெரியவர் மாசிலாமணியின் நாலாவது மகன் அருணாசலம்.

– என்னண்ணே, அப்பாவைப் பார்த்தியா, வீட்டுப்பக்கம் வருவேன்னு உன்னை எதிர்பார்த்திருந்தேன்.

– ஏன்,என்ன விஷயம் ?

– இதைப்பிடி.

– என்னது ?

– பிரிச்சுப் பார்.

பொட்டலத்தைப் பிரித்த அரசப்பன் மூர்ச்சை ஆகாத குறை. கைத்துப்பாக்கி.

– சந்திரநாகூரிலிருந்து வந்த சரக்கு, பத்திரம். கவர்ன்மென்ட்டையும் சிப்பாய்களையும் துணைக்கு வச்சிக்கிட்டு அடியாட்களோட அவங்க பண்ற அட்டூழியத்தைக் கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல ஆடறானுவ.   அவனுங்க கொட்டத்தை அடக்க நாமளும் ஏதாவது பதிலுக்குச் செய்தாகணும். அதை நீதான் செய்யணும். பெத்தவ, பொண்டாட்டி, புள்ளகள்னு மொத்தக்குடும்பமும் தீயில வெந்திருக்கு, சமந்த மில்லாத எங்களுக்கே நெஞ்சு கொதிக்குதுன்னா, நீ எப்படி நாளத் தள்ளுவ. காதக் கொடு !

அரசப்பன் காதில் திட்டத்தைக் குசுகுசுவென்று ஓதிவிட்டு, புரிஞ்சுதா எனக் கேட்டான் அருணாசலம். இவன் தலையாட்டினான். தலையாட்டிவன் கையில் இன்னொரு பொட்டலத்தைத் திணித்தான், தொடர்ந்து «  காரியம் முடிஞ்சதும் கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருந்துட்டு வா. அதுக்குத்தான் இந்தப்பணம். கரியமாணிக்கம் போயிடு, அங்கிருந்து கூடலூர். பிரச்சனை தணிஞ்சதும் திரும்பலாம், எப்ப வரணுமுன்னு தகவல் அனுப்புவோம், அப்ப  வந்தால் போதும். 

மறுநாள்  பிரெஞ்சிந்தியர் கட்சியைச் சேர்ந்த செல்வராஜு சுடப்பட்டார் என்ற தகவல் அவரைச் சார்ந்த மனிதர்களிட த்தில் பெரும் புயலைக் கிளப்பியது, தடி,கம்பு, திருக்கைவால் எனக் கையிற்கிடைத்த ஆயுதங்களுடன் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள், கலவரமென்று புதுச்சேரி அல்லோலகல்லோலப்பட்டது.  

———————————

சைகோன் – புதுச்சேரி (நாவல்)

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

சென்னை

பின்னூட்டமொன்றை இடுக