துகினம் (நாவல்)

( திறனாய்வோ மதிப்புரையோ அல்ல, வாசிப்பு அனுபவங்கள்)

                                                                               நாகரத்தினம் கிருஷ்ணா

மனிதர் வாழ்க்கை ராஜப்பாட்டையாக அமைவதில்லை: கல்லும் முள்ளும், காடும் கரம்பும், செடியும் புதரும், நரியும் நாயும் குறுக்கிடும் செப்பனிடப்படாத வழி. மனிதர் அனைவருக்கும் வாழ்க்கைப் பாதையில் ஆரம்பமும் முடிவும் ஒன்றென்கிறபோதும், அவரவர் கால்களுக்கு விதிக்கப்பட்ட தடங்கள் வேறு, காட்சிகளும் ஓசைகளும் வேறு வேறு. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் நம் ஒவ்வொருவருக்கும் துகினம் நாவல் பாத்திரங்கள்  ஆதவன், சங்கரன், சாத்தன் ஆகியோர் மூணாற்றை எட்ட தேர்வு செய்த களவுப்பாதை ஏதோ ஒருவகையில் பொருந்தும்.

‘துகினம்’  நாவலா அல்லது ஒரு கட்டுரை நூலா? என்றொரு கேள்வி இந்நாவலை படித்தபின்னும் எழக்கூடும். இன்றையச் சூழலில் நாவலுக்கென்று எந்தவிதக் கொள்கையோ கோட்பாடோ இல்லை.  கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்து, இறுதியில் திரை விழும்போது சுபம் எனறு முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற நியதிகள் கொண்ட கால சகாப்தத்தில் நவீன இலக்கியங்களில்லை. இன்றுங்கூட  தமிழில் பாமரத்தனமான இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமலில்லை. இரண்டரை மணி நேர படத்தில் ஒரு முழ உயரமுடைய  நாயகன் ஒன்றரை  முழம் உயரமுடைய நாயகியிடம் ஜொள்ளுவிட்ட நேரம்போக, நான்கு டூயட்டுகள், ஆறு சண்டைகள் என்று பார்த்து பழகிய பெருவாரியான மக்களைக்கொண்ட தேசமில்லையா? அந்த ஈரம் உலராமல் கண்களில் இருக்கத்தான் செய்யும்.

‘துகினம்’ அண்மையில் வெளிவந்ததொரு புதினம்; நாவலின் ஆசிரியர். ஜிதேந்திரன். தேசத்தில் ஏதோவொரு மூலையில்  சம்பாதித்துக் களைத்து வீடு திரும்பியதும்,   அவரவர் தன்மைக்கேற்ப மனைவி  மக்களிடம் உறவாடி, வாழ்க்கைப் படகைச் செலுத்தும் மனிதனுக்கும்; கோடிகோடியாய் கொள்ள அடித்த படத்தில் குடும்பத்திற்குச் சேர்த்ததுபோக, கொஞ்சம் கிள்ளி மக்களுக்குப் பிச்சை போடும் ஆட்சியாளனுக்கும் மன உளைச்சல்களின்றி மணித்துளிகள் நகருமாயின் இன்றைய தேதியில் ஆச்சரியமான விஷயம்.

 “அவனுக்கு  ஆண்கள் என்றாலே பிடிக்காது.அவனுங்களும் அவனங்க மூஞ்சியும். என்ன உருவம்டா இவனுங்க;  குட்டையா.. தொப்பையா.. நெட்டையா.. ஒல்லியா, கறுப்பா, அலங்கோலோமா,  முகத்தில் கொஞ்சம்கூட கருணையே இல்லாம ;  ஒரு ஒழுங்குக்குள்ளே வராத முகங்கள். சரி செயல்களிலாவது இந்த உலகத்தைச் சரி பண்ணியிருக்காங்களா … இல்ல, அதுவும் இல்ல . எப்படியோ நல்லா இருக்க வேண்டிய உலகத்தை இப்படி ஆக்கி வச்சிருக்காங்க. இப்படியாவது விட்டு வச்சிருக்காங்களேனுதான் சகிச்சிக்க வேண்டியிருக்கு. வாழ்வின் அத்தனை அகோரங்களுக்கும் சூத்ரதாரிகள். சுயநலம், சாதி, மதம், மொழி, அரசியல், அணுகுண்டு, நாடு…னு அவங்க இந்த உலகத்தை வாழ்வதற்குப் பொருந்தாத ஒன்றா மாத்தி வச்சிருக்காங்க……..இவங்களுக்கு மத்தியில் வாழ்வதற்குப் பதிலா மிருகங்கள் கூட வாழ்ந்திட்டுப்போயிறலாம்.  ஆண்களும் பெண்களும் மிருகங்கள் தானே ….. மக்கள் நடமாட்டமே இல்லாத காடுதான் வாழறதுக்குச் சரி..”

       … என நாவலின் தொடக்கத்தில் கசப்புச் சொற்களை உமிழும் ஆதவனும் ;  அவன் « எதையாவது தொட்டுப் பிடித்தபடி, அசைத்தபடி , இழுத்தபடி….செடியின் அசைப்பில் மின்மின்ப்பூச்சிகள் பறக்க ; அவன் நடை உரசல் கேட்டு தவளை பினாத்த, படுத்துக்கிடந்த பாம்பொன்று தலையைத் தூக்கிப்பார்த்து கண்கள் பளபளக்க, நாக்கை ஒருமுறை வெளியே நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளும் பாம்பையும் ; மனிதர் மிச்சம் வைத்திருக்கிற காட்டை, மலையை ; பறவைகளும் விலங்குகளும் மிச்சமிருக்கிற பூமியைப் பெற்ற மூணாறும்; நாவலின் பிரதான பாத்திரங்கள். உண்மையில் நாவாலசிரியரின் நோக்கம் மனிதர்களைக் கொண்டாடுவதல்ல, மனிதர்களே இல்லாத காட்டையும், நிசப்த மொழியையும், இயற்கையின் மௌனத்தையும், இயற்கையின் இசையையும் கொண்டாடுவது.

ஆதவன் ஒரு கொலை குற்றவாளியாகக் கருதப்பட்டுக் காவல்துறையினரால் தேடப்படுபவன் ; ஒரு மழைநாளில் பெருவெள்ளத்தின் காரணமாக அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொருபக்கம் சிதறுகின்றனர். இந்த இயற்கை விபத்தில் காணாமற்போன அவன் மகள் குழந்தை தேவயானி, மூணாரில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறாளென கேள்விப்பட்டு அங்கே செல்கிறான். குற்றவாளியின் இந்த இரகசியப்பயணத்தில் அவனோடு எதிர்பாராதவிதமாக வழித்துணையாக சேர்ந்துகொள்ளும் நபர் பெரியவர் சங்கரன். ஆதவனைப் போலவே, பெரியவர் சங்கரனும் தன் ஓடிப்போன மகளின் பிரிவால் வாடும் மனிதர்.  இவர்களோடு இணைந்த மூன்றாவது நபர், ஆதவன் நன்கறிந்த சங்கராம தீரன் என்கிற சாத்தன். ஆதவனும் சாத்தனும் ஞானமட அங்கத்தினர்கள்.  அம்மடத்தின் குரு போதித்ததைத் தங்கள் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றுகிறவர்கள். இந்த சாத்தன் ஆதவன் குடும்பம் பறிகொடுத்திருந்த குழந்தையின் தற்போதைய காப்பாளர் பற்றிய தகவலை அறிந்தவர்.

மூணாறுவரை இவர்களோடும் கதையும் பயணிக்க வேண்டி இருப்பதால் நாவலாசிரியர் வழித்தடத்தில் குறுக்கிடும் ஊர்கள் அவற்றின் தல வரலாறு, ஆலயங்கள், சர்ச்சுகள், பெருதெய்வங்கள், சிறுதெய்வங்கள் ;  காபி, தேயிலை எஸ்டேட்டுகள், அவற்றில் வேலைசெய்யும் பெண்கள் அவர்களின் அரட்டைகள்; ஆறு, நீர்வீழ்ச்சி ; ஈட்டி, ரப்பர், தேக்கு சந்தணமரங்கள், நரிக்கொட்டை,மலைவேம்பு ; மிளா, கரடி, மான்கள், யானை என குறுக்கிடும் விலங்குகள் ; 1954ல் நடந்த மொழிப்போராட்டத்தகவல்கள், பழைய மூணாறில் 1984ல் நடைபெற்ற தொங்குபாலம் விபத்து பற்றிய  செய்திகள் ; மூணாற்றின் பூவியியல், அதனைச் சுற்றி எழுதப்பட்ட சொல்லப்ட்ட புனைவு, வரலாறென இம்மனிதர்கள் ஊடாக ஆசிரியர் மூணார் பற்றிய ஒரு முழுமையான  எழுத்துச்சித்திரத்தை இந்நாவல் ஊடாகக் கொடுக்க முனைந்திருக்கிறார்.

இத்தகவல் செறிவுகளுக்கிடையில்

« மூவரும் கிளம்பத் தொடங்கினார்கள். அடுத்தது பெரியவார எஸ்டேட். ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் உன்னிப்பூக்கள்  மலர்ந்திருந்தன ….ரோடு மட்டுமல்ல .. பார்க்கிற திசையெங்கும் தேவ குலைசெடிகளும், உன்னிப்பூக்களுமாக. நீலம், ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என்று கொத்து கொத்தாக. மிகச்சிறிய பூ. » என்பதுபோன்ற காட்ச்சிகளையும் ஆங்காங்கே ஆசிரியர் கண் முன் நிறுத்துகிறார்.  இது முதற்புனைவு, ஆசிரியரின் அடுத்தடுத்த புனைவுகள் கூடுதல் கவனம்பெறும்.

———————————————————————-

பின்னூட்டமொன்றை இடுக