பார்த்ததும் சுவைத்ததும் : விரக்தி(Despair)

இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள்,  ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.

லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள்  அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து, அமெரிக்க பிரஜையாகி, இறுதியில் சுவிஸ்நாட்டில்  பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய விளாடிமிரின் வாழ்க்கை ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது எனக்கு முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில், ‘விரக்தி’ எதிரும்புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.  1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத்  திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.

விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’ என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார்.  “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில்  தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.

பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.

———————————————————————————————-

பின்னூட்டமொன்றை இடுக