Monthly Archives: ஒக்ரோபர் 2023

படித்ததும் சுவைத்ததும்-2:வழக்கு (The Trial) ஃப்ரான்ஸ் காஃப்கா

பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான்  உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப்  பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.

செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு  உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ்  நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு,  வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.

1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை.  தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.

இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.

இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.

எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’  உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது  சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக  ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்-  They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில்  ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை  கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட  உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)

‘The Trial’  உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’  கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன்.  ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன்.  அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.

– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.

– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.

– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது

– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..

– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1)
———————————————————————–

1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.

குடைராட்டினம்

குடைராட்டினம்

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை  தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.  

அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி.  பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில்  கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன்.  ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.

மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம்.  இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”

பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல்.  இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.

பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும்.  காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.

போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால்  கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:

– எங்கே வந்த?- என்றாள்.

– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.

– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?

– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.

– பிரண்டுன்னா

– நீங்க நினைக்கிறமாதிரிதான்.

வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.

– தெவடியா. தெவடியா..

குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.

இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட  குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான்.  ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.

ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன.  அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது.  அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.

பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக  ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.

தமிழ் பேசும் கிளி

(“சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது” அறிவியல் சிறுகதை தொகுப்பிலிருந்து)

துறைத் தலைவர் ச்சின் – ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது ‘ஷிட்’டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில் அவரது மனைவியும் நானுமாக ”அலரில் தோன்றும் காமத்து மிகுதிக்கு” பரிகாரம் தேடிக்கொண்டிருந்தநேரம், மனிதர் கரடிபோல உள்ளே நுழைந்ததும் பின்னர் அவருடைய ஜிப்பைத் திறந்த வேகத்திலேயே மூடிக்கொண்டு வெளியேறியதும் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அழைக்கிறார்.

1950களில் சென்னைப்பல்கலை கழகத் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் கருணாகரத் தம்பிரான் உங்களுக்குத் தெரியுமில்லையா? அவருடைய மகள் வயிற்று வாரிசு எனச்சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ எனது பாட்டிக்கு நிறையவே இருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தில் தென் கிழக்கு ஆசியமொழிகள் துறை பிரிவில் பேராசிரியராக இருக்கிறேன், பெயர் செழியன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாட்டியும் நானுமாக இந்தக்கோளில்(1) இருக்கிறோம். எனக்குத் திருமணம் முடித்த கையோடு எனது பெற்றோர்களிருக்கிற அன்னா கோளுக்கே தான் போய்விடப்போவதாக சொல்லிக்கொள்ளும் பாட்டி அதற்கொரு நிபந்தனைவைத்திருக்கிறது. எனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டும், தமிழ் பேசவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. எங்கள் கோளில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து ஐந்து தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இரண்டு பெண்கள் என்னோட இரசனைக்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பாட்டி இல்லாதபோது வீட்டுக்கு அழைத்திருந்த ஒருத்தியிடம் இப்படித்தான் ஒருமுறை ‘உன்னாலே தமிழ் பேசமுடியுமெனில் நாமிருவரும் திருமணம் செய்துகொள்ள முடியுமென’ விஸ்கி போதையில் உளறப்போக அவள் “செலியன்! வம்ச விருத்தி செய்யறதுக்கும் தமிழ் பேசறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்னு எனக்குத் தெரியலை, அப்படி பார்த்தா இந்த ஜென்மத்துலே உனக்கு கல்யாணம் ஆகும்னு நான் நினைக்கலை, என்று சொல்லிவிட்டாள். Bitch! எந்த நேரத்தில் சாபமிட்டாளோ, நாற்பது வயது பேச்சுலராக சில சில்லரை விளையாட்டு உரிமைகளுடன் தமிழ் பேசுங் கிளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

– செழியன் நான் கூப்பிட்டிருந்தது மறந்துபோச்சா? மறந்திடாம வந்துட்டு போங்க. தொலைபேசியில் மீண்டும் ச்சின்-ஹ¤வா, துறைத் தலைவர்.

– மன்னிச்சுக்குங்க, அஞ்சு நிமிடத்திலே அங்கிருப்பேன், என்றேன் அவரிடம். ஆறுமணிக்கு மெய்நிகர் பெண்ணொருத்தியைப்(Virtual girl) பைசாக் தோட்டத்தில் சந்திக்க வேண்டும். இத்தனைக்கும் வீட்டுக்குப் புறப்படற நேரத்தில் கூப்பிடாதீர்கள் சார், வயசுப்பையன்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குமென்று ஒருமுறை அவரும் நானுமாக முன்னிரவில் சொஷ¤ குடித்துக்கொண்டிருந்தபோது கூறியிருந்தேன். எரிச்சலுடன் வெளியில் வந்து வாக்வே(walkway) பிடித்து, சொன்னதுபோல ஐந்தாவது நிமிடம் எனது துறைத்தலைவர் அலுவலகத்திலிருந்தேன்.

– உட்காருங்க, என்றவர் தரவு ஒலிபரப்பு(Datacasting) ஊடாக பதிவுசெய்திருந்த அழைப்பிதழை என்னிடத்தில் நீட்டினார். பிறகு தொடர்ந்து, ‘நீங்கள் பூமிக்குச் செல்லவேண்டியிருக்கிறது.

– எங்கே?

– இந்தியாவுக்கு, அங்கே தமிழ்நாட்டில் வெகுகாலத்திற்குப் பிறகு உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தின் சார்பில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள்.

– மாநாடு எப்போ?

– அடுத்தமாதம் பதினைந்தாம் தேதி. நிறைய நேரமிருக்கிறது. பயண ஏற்பாடுகளை பற்றிய கவலைவேண்டாம் நம்ம துறை அலுவலகம் கவனித்துக்கொள்ளும். தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கும் உங்களது பயணம் உதவறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். எபிகிரா·பிஸ்டுகள் பற்றிய தகவல்களையும் திரட்டி வச்சிருக்கேன். கூடுதலாக விடுமுறை தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். இந்தக் அட்டையைப் பாருங்கள்.

பெரியவர் டிஜிட்டல் அட்டையொன்றை மேசையில் வைத்தார். எறும்புகளை வரிசைபடுத்தி நிற்கவைத்ததுபோன்று ஆங்கிலத்தில் அட்டையைப் பற்றிய செயல்முறைவிளக்கம். சுமார் 50X50 மி.மீட்டரில் ஒரு திரை. நீலமாய் ஒளிர்ந்த புள்ளியை விரல் தொட்டது. மறுகணம் வெண்ணிறத்தில் பூவொன்று இதழ்விரிப்பதுபோல ஒளிபடர்ந்து திரையை நிறைத்தது: கவர்ச்சிகரமாக வெளிர் நீலத்தில் ஒரு மேலுடுப்பு, அதே நிறத்தில் வெள்ளைச் சட்டைக்குமேலாக ஒரு கழுத்துப்பட்டை, ஓவல் வடிவத்தில் வெள்ளைவெளேரென்றிருந்த முகம், காது மடல்களை கடித்துக்கொண்டு இரு முத்துகள், தலைமுடி பிசிரின்றி இறங்கி பிடறிக்குமேலே கேள்விக்குறியாய் வளைந்திருப்பதுபோல தோற்றம். பல முறை பயிற்சி எடுத்துக்கொண்ட சிரிப்பு. மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி வணங்கினாள். சன்னமான குரலில் வணக்கம் என்றாள். இடைவெளிவிட்டு சொற்களை கவனத்துடன் உச்சரிப்பதுபோல இருந்தது: பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன். அறிமுக உரைக்குப்பிறகு தமிழ்நாட்டு கோவில்கள், பாலை நிலக்காட்சிகள், உருமிமேளம்.. அணைத்தேன்.  

பணியில் சேர்ந்த இத்தனை வருடங்களில் பெரியவர் இத்தனை அக்கறையோடு என்னிடம் பேசியதில்லை. எனக்குக் காரணம் புரிந்தது. இருந்தாலும் மனதிலிருந்த சந்தோஷம் அதைவிட பெரிது. வாயெல்லாம் பல்லாக,’ ரொம்ப நன்றி சார் என்றேன். வீட்டுக்குத் திரும்பியதும் செய்தியைக்கேட்ட ஐஸ்வர்யா பாட்டிக்கும் மகிழ்ச்சி.

– “ஏண்டா தம்பி, என்னையும் அழைச்சுபோயேன். இந்தியா எப்படி இருக்கிறதென்று நானுந்தான் பார்க்கிறேனே.

பாட்டி நீ நினைக்கிறமாதிரியெல்லாம் இந்தியா இல்லை. கடலோரமிருந்த ஊர்களில் பல இப்போதில்லைண்ணு சொல்றாங்க. சென்னையிலே கூட இப்போ பாதிதான் இருக்குதாம். டாக்டர் கிட்டே கேட்டுப்பார்ப்போம். விண்கலத்துலே பயணம் செய்ய உன் உடம்புக்கு முடியுமாண்ணு அவர்தான் சொல்லணும். அவர் முடியாதென்று சொன்னால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. தனியா இருக்க யோசித்தால் நான் வரும்வரை அம்மா அப்பாவோட இரண்டுவாரம் தங்கிவிட்டு வாயேன்.

– இப்போ போகலை. பூமிக்குப் போயுட்டு நல்லபடியா திரும்பி வா, கோடை விடுமுறைக்கு வேண்டுமானா இருவருமா ‘அன்னா’வுக்குப் போகலாம்.

முதல் இரண்டுநாட்கள், பாட்டி சோர்வாக வீட்டில் இருந்தாள். பிறகு எப்போதும்போல ஒன்பது மணிக்கு ஜிம், பதினோருமணிக்கு கான்•ப்ரன்ஸ் சேம்பரில் பிறகோள்களிலுள்ள தோழிகளுடன் அரட்டை. பகல் ஒருமணிக்கு சின்னதாய் ஒரு லன்ச், குட்டித்தூக்கமென்று மாறிவிட்டாள். இந்தியாவிற்கான எனது பயண நாள் நெருங்க, ரொம்ப அவதிபட்டாள். அங்கே இதெல்லாம் கிடைக்குமோ, கிடைச்சாலும் கலப்பிடமில்லாம இருக்கணுமே என்றபடி அமினோ அமிலம், நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள், கார்போஹைடிரேட்ஸ், கொழுப்பு, உப்பென்ற இரசாயனக் கலவையிலான உணவுமாத்திரைகளை பாட்டில்களில் அடைத்து, தேதிவாரியாக பட்டியலிட்டாள். இந்தியாவில் குடிப்பதற்கன்றி வேறு உபயோகங்களுக்கு நீர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து இறக்குமதியாகியிருந்த ஸ்ப்ரேக்களெல்லாங்கூட தயார். 

காத்திருந்த அந்த மகா மகா நாள் வந்தது. ஐஸ்வர்யா பாட்டியுடன் விண்கல தளத்திற்கு இரவு 8.50க்கெல்லாம் வந்தாயிற்று. பேராசிரியர் ச்சின் – ஹ¤வா துறை நண்பர்களுடன் வந்திருந்தார். எனது முகப்பு மண்டப எண்ணை சரிபார்த்துக்கொண்டு காலடிவைத்தபோது, “டியர் பேரா! அங்கே நல்ல தமிழ் பேசுங்கிளி கிடைக்குமாவென்று பாரேன்”, என்று பாட்டி ஞாபகப்படுத்தியபோது, பொய்யாய் அலறியதை கணத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும், “போடா பைத்தியக்காரா எனக்கில்லை உனக்குத்தான்” என்றாள். எனக்குக்கூட, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தேண்ணு’, பூம்புகார் கண்ணகி சைசுலே, தமிழ் தெரிந்த பெண் கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. ‘முயற்சி பண்றேன் பாட்டி” என்றபோது அவள் கண்களில் துலக்கம், முகச் சுருக்கங்கள் இரட்டிப்பாக, இமைகளை இறக்கி ஒருமுறை என்னை ஏற இறங்கபார்த்துவிட்டு சிரித்தாள். “உண்மையாகவா, பாட்டியை சமாதானப்படுத்த சொன்னதில்லைண்ணு எடுத்துக்கலாமா?”, “தாராளமா என்னை நம்பு. எப்பவாவது இந்தப்பேரன் பாட்டியை ஏமாற்றியதுண்டா? அப்போ சொன்னா சொன்னபடி நடப்பேன். பார்ப்போம்”, எனக்கூறி அவளை அணைத்துக்கொண்டு விடைபெற்றேன்.

கொண்டுவந்த உடமைகளைப் பதிவு செய்துவிட்டு, பயணிகளுக்கான பயோ சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தபோது, கூடத்தில் சகப்பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தனர். இந்தியாவுக்கு எங்கள் கோளிலிருந்து நான் ஒருவன் மாத்திரமே பயணப்படுகிறேன் என்பதை நினைக்க பெருமையா, வருத்தமா என்பது புரியாமல் குழம்பியிருந்தேன். ச்சின்-ஹ¤வா கொடுத்திருந்த தகவல் அட்டை நீலப் புள்ளியியைப் பதினோறாவது முறையாக ஆள்காட்டிவிரல் தன்னிச்சையாகத் தொட்டது. மீண்டும் அதேமுகம், அதே சிரிப்பு, மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி அதே கும்பிடு, சன்னமான குரலில் வணக்கம் என்று ஆரம்பித்து, பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன், என்றது. சென்னை விண்கலத் தலத்தில் எங்கள் ‘சூ-மின் ஸ்பேஸ்ஷிப் ஏஜென்ஸிக்குச்’ சொந்தமான எஸ்.எம்.121 தரையைத் தொட்டபோது எனக்கு பிரயாணக் களைப்பு நிறையவே இருந்தது. ஆனால் அக் களைப்பு  சந்தணமாலையுடன் டிஜிட்டல் அட்டையில் பலமுறைபார்த்து மனதில் பதிவு செய்திருந்த பெண்ணைப் பார்த்ததும் போயே போயிற்று.

மிஸ்டர் செழியன்! என்றாள். கைக்குலுக்குவதற்காக கையை நீட்டியபொழுது அதை மறுத்தவளாய் கைகளைக் குவித்து வணங்கினாள். பின்னர் கடந்த சில தினங்களாக எனக்குப் பலமுறை பழகியிருந்த சிரிப்பினை முகத்தில் வரவழைத்தாள். பெயர் தாமரை என்று ஆரம்பித்து, பெண்-வயது 21 என்று சொல்லிக்கொண்டு போனவளை இடைமறித்து, ‘உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் எனது வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறீர்கள், சரிதானா? என்றதும் கலகலவென சிரித்தாள்.

– மனப்பாடமாக நான் சொல்லவந்ததைச் சொல்கிறீர்கள், எப்படி?

– மிஸ் தாமரை குறைந்தது உங்கள் முகத்தையும் குரலும் இங்கே மாத்திரல்ல இங்கேயும் பதித்துவைத்திருக்கிறேன் எனகூறி தலைக்குபோன ஆள்காட்டிவிரலை என் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்தியதும் அவள் அசல் சிலப்பதிகாரத் தமிழ்ப்பெண்போலவே முகம் சிவந்தாள்.

– மிஸ்டர் செழியன், போகலாமா? உங்கள் உடமைகள்  நீங்கள் தங்கவேண்டிய விடுதிக்குப் போய்விடும். நாம் கடற்கரை ஓரமாக பறக்கலாம். மாநாட்டு வளைவுகள், அலங்காரங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுபோல இருக்கும்.

இருவருமாக ·பேன்விங் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம், தாமரையே வாகன ஓட்டியின் இடத்தில் அமர்ந்து எஞ்சினை உறுமவைத்தாள், சிவ்வென்று மேலே எழுந்தது. தாமரை கூட பரவாயில்லை, பாட்டிகேட்ட மாதிரிதான் இருக்கிறாள்.

– தாமரை உங்களுக்குத் தமிழ் வருமா? 

– நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

– நிதானமாக கவனத்துடன் பேசுவதுபோல இருக்கிறது.

– விருந்தினர்களுடன் நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறகூடாதில்லையா? கீழே பாருங்கள்

– எங்கே?

– நான் சொன்னது •பேன்விங் கண்ணாடி கவசத்திற்கு வெளியே.

– கடற்கரையையொட்டி இடது புறம் நகரின் குடியிருப்பு டவர்களை அடுத்துத் தெரிவது புகழ்பெற்ற ‘தாத்தா மைதானம்’ அதை முழுவதுமாக வளைத்து தற்காலிகமாக மண்டபம் கட்டியிருக்கிறார்கள். ஒரு இலட்சம்பேர்வரை உள்ளே அமரலாம். அலங்கரித்த வண்ணக் கோபுரங்கள் தெரிகிறதில்லையா அவை விழா மண்டபத்திற்கான நுழைவு வாயில்கள்.

– கடற்கரையையொட்டி நமக்கு வலது புறத்தில் வரிசையாக சூரிய ஒளியில் மின்னுகிற மண்டபங்களும் உலகத் தமிழ் மாநாடுக்கென்று கட்டப்பட்டதுதானா?

– இல்லை செழியன் அவைகள் தாத்தாக்களின் சமாதிகள்.

– புரியவில்லை.

– கடந்த இருநூறு ஆண்டுகளாக தாத்தா திராவிட முன்னேற்றகட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நிறைய தாத்தாக்களுக்கு சமாதி கட்டியிருக்கிறோம். அவற்றில் சென்னைக் கடற்கரை முக்கியம். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் தவறாமல் பார்க்கவேண்டிய இடம். ஏப்ரல் 18ந்தேதி மாநாடு விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா பட்டியலில் இந்த இடமுமிருக்கு. ஆகையால் கவலை வேண்டாம்.

– அய்யய்யோ, இப்படி என்னென்ன சுற்றுலா தள பட்டியல் வச்சிருக்கீங்க.

– ஏன்?

– தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கு உதவற இடங்களைப் பார்க்கணும். பிறகு சொந்தப் பிரச்சினைவேறு இருக்கிறது. 

– நீங்க தமிழ்நாட்டுலே பார்க்கவேண்டியவை என்னன்னு சொல்லுங்க. எங்க அதிகாரிகிட்டே பேசிப்பார்க்கிறேன். என்னாலே உங்க நிகழ்ச்சி நிரலை மாற்றமுடியுமென்று தோணலை, ஆனால் முயற்சி செய்யறேன். பிறகு ஏதோ சொந்தபிரச்சினைபற்றி சொல்ல வந்தீங்க. அதற்கும் எங்களால உதவ முடியுமாவென்று பார்க்கிறோம். இங்கிருந்து உங்கள் நாட்டுக்குத் திரும்புகிறபோது முடிந்தவரை குறைகளில்லாமல் திரும்பனும். 

– சொந்தப்பிரச்சினையென்றாலுல், நான் தனி ஆளா தீர்வுகாணமுடியாது. எங்கப் பாட்டியின் ஆசைப்படி இங்கிருந்து கிளிமாதிரி ஒருத்தியைக் கொண்டுபோகனும். அக்கிளி தமிழ்ப் பேசும் கிளியாகவும் இருக்கவேண்டும் என்பது பாட்டியின் நிபந்தனை. ஆனால் அத்தனை சுலபாமானதில்லை.

– ஏன்?

– என்னோட பாட்டி நினைப்புலே இருக்கிற தமிழ் கிளிக்குச் சேலைகட்டத் தெரியனும், கோலம்போடணும், கும்மி அடிக்கணும், குலவை இடணும் இப்படி நிறைய தகுதிகளைப் பூர்த்தி செய்யணும். பிறகு கடைசியா அவள் தமிழ்பேசணும், அவளோட பேரனுக்கு மனைவியா வரணும்.

– நீங்க சொல்வதுமாதிரியான ஒன்றிரண்டு பெண்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் எதுவுமிருக்காதென்றுதான் நினைக்கிறேன். ஆனால் உங்களை மனைவியாக வருவதற்கு சம்மதிப்பார்களாவென்று கேட்டுப்பார்க்கவேண்டும். வேண்டுமானா ஒன்றுசெய்யலாம், உள்ளூர் தினசரிகளில் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம். உங்கள் கணினிமுகவரிக்கு தகவல் அனுப்புகிறேன். அதில் கொடுத்துள்ள தினசரிகளின் விளம்பரப் பிரிவுக்குள் நுழைந்து, சுருக்கமாக உங்கள் விளம்பரத்தைக் கொடுங்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நீங்கள் தங்கவேண்டிய ஓட்டல் வந்துட்டுது. இறங்கிக்குவோம். நாளை காலை எட்டுமணிக்கெல்லாம் ரிசப்ஷன் ஹாலில் காத்திருக்கவேண்டும். எட்டு முப்பதுக்கு முதலமைச்சர் விருந்தினர்களுடன் மாநாடு ஊர்வலத்தை பார்வையிடுகிறார்.  ஒழுங்காக எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடுங்க ஊர்வலத்தைப் பார்த்து முடிக்க பிற்பகல் இரண்டு ஆகிவிடும். பிறகு ஓட்டலுக்குத் திரும்பி மறுபடியும் மாலை நான்கு முப்பதுக்கு விருந்தினர் நுழைவாயிலில் இருக்கவேண்டும் அப்போதுதான் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு நான்கு ஐம்பதுக்கு விழா மண்டபத்தில் இருக்க முடியும். ஐந்து மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடக்கவிழா இருக்கிறது.

விடுதிக்கு முன் இறங்குதளத்தில் •பேன்விங்கை தரை இறக்கி, விடைபெற்றுக்கொண்டோம்.

*                       *                       *                 *

மறு நாள் காலை 8.30க்கெல்லாம் •பிளாஷ்லீடரில் மாநாட்டு ஊர்வலத்தை பார்வையிடவந்துவிட்டோம். முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சூழ வந்தார். சரியாக 9.00மணிக்குத் தொடங்கிய ஊர்வலத்தில், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டமென்று வந்த ஊர்வலத்தில் இருபது பெண்கள் கைகளில் துடைப்பம், முறமென்று ஏந்திகொண்டு சேலையை முழங்கால்களுக்குமேல் வாரி இடுப்பில் சொருகியபடி வந்தனர். கையிலிருந்த ஊர்வலவிவரணையில் அதுபற்றிய தகவல்களில்லை. குழப்பதுடன் அருகிலிருந்த தாமரையைப் பார்த்தேன்.

– அவர்கள் தமிழர் பண்பாடு பாதுகாப்புப்படையின் பெண்கள் பிரிவினர். இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தம். தமிழர் பண்பாட்டிற்கு எதிராக ஏதேனும் நடந்தால் இப்படித்தான் வீதியில் இறங்கிவிடுவார்கள். ஒரு சில அரசியல் கட்சிகளிலும் இந்த அணி இருந்திருக்கிறது. அருகிலிருந்த பிரெஞ்சுகாரரும், அமெரிக்கரும் மிக ஆர்வத்துடன் ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

– செழியன் அங்கே பாருங்கள்.

மீண்டும் கவனம் ஊர்வலத்தில் சென்றது. அலங்கரிக்கபட்ட ஊர்வலத்தில் ஆணும் பெண்ணுமாக பத்துபேர் அமர்ந்திருந்தனர்.

– தமிழ் அறிஞர்களா?

– தமிழறிஞர்களுக்கு இங்கே பஞ்சமில்லை, நிறையவே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் தமிழில் உரையாடக்கூடியவர்களென்று பத்துபேர்தான் தேறுவார்கள். அவர்கள் பத்துபேருக்கும் அரசாங்கம் மரியாதைசெய்ய வேண்டுமில்லையா? உங்கள் பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்கான விளம்பர யோசனை என்னவாயிற்று, பலனேதாவது?

-ம் இல்லை.

– நம்பிக்கையை இழக்காதீர்கள். எனக்கு நிஜமாகவே ஒரு தமிழ் பேசும் கிளியைத் தெரியும். உங்கள் பாட்டி எதிர்பார்ப்பிற்கு பொருந்திவருவாள். சொல்லப்போனால் எனக்கு நெருங்கிய தோழி. அவளுக்கு உங்கள் கோளிற்கு வரவும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதமெனில் இன்றைக்கு தேதி பதினைந்தில்லையா, அவளை பத்தொன்பதாம்  தேதி உங்களை பார்க்கச்சொல்கிறேன்.  

*                       *                       *                       *                

மிஸ் தாமரையின் சினேகிதி ஒருநாள் முன்பாகவே என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தாள்.  மாலை மூன்றுமணி இருக்கும், சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ் துறை தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், எனது கைக்கடிகார தொலைபேசி ஒலித்தது. காதில்வைத்தேன்.

– மிஸ்டர் செழியன் நான் கோப்பெருந்தேவி பேசறேன்.  தாமரையோட சினேகிதி. உங்களைப் பார்க்கணும்னு ஓட்டலில் காத்திருக்கேன்.

– யாரது, மிஸ். தாமரை சொல்லியிருந்தாங்களே அந்த தமிழ் பேசுங் கிளியா? மன்னிச்சுக்குங்க. இந்த நேரத்துக்கு நான் அங்கேதான் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருந்ததிலே நேரம்போனது தெரியல்லை. இங்கிருந்து ஓட்டலுக்கு வர 30 நிமிடம் பிடிக்கும் என்கிறார்கள். ஒன்று செய்யுங்கள் வரவேற்பில் கேட்டால் எனது அறைக்கான நுழைவு அட்டையைக்கொடுப்பார்கள். அறைக்குச்சென்று காத்திருங்கள் வந்துவிடுவேன்.

பதட்டத்துடன், ரொக்கார் ஒன்றை வாடகைக்குப்பிடித்து ஓட்டலில் நுழைந்து, நாற்பதாவது மாடிக்கு லிப்டில் வந்து திறந்து வழிவிட்டதும் வாக்வேயில் ஓட்டமாக ஓடி மூச்சிறைக்க கதவைத் தட்டினேன். பாட்டியின் கனவுத் தேவதை சிரித்தபடி வரவேற்றது.

– நான்தான் உங்களை வரவேற்கணும், ஆனா. நிலமை வேறமாதிரி அமைஞ்சுபோச்சு.

– பரவாயில்லை உட்காருங்க.

அமர்ந்தேன். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

– இவ்வளவு அழகா தாமரைக்கு ஒரு தோழி இருப்பாங்கண்ணு நினைக்கலை. எங்க பாட்டி சொன்ன விதிமுறைகளுக்கு நீங்க பொருந்துவீங்க இல்லையா?  ஒன்றிரண்டு பொருந்தலைன்னாலும் பரவாயில்லை, பாட்டியிடம் சமாளித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். சொல்லுங்க.. உங்களுக்கு சேலைகட்டறது, கோலம்போடறது, கும்மியடிக்கிறது எல்லாம் வருமா?

– வரும்.

– தமிழ் நல்லா பேசுவீங்க.

– பேசுவேன், தடுமாற்றமில்லை. எத்தனை பக்கமென்றாலும் தடுமாறாமல் பேசுவேன்.

– இப்படியொரு தமிழ் பேசுங்கிளியைத்தான் பாட்டி எனக்காகத் தேடிக்கொண்டிருந்தாள். தாமரைக்கு நிறைய நன்றி சொல்லணும்.

– அதற்கு முன்னே ஓரு உண்மையைச் சொல்லணும். நான் நீங்க நினைக்கிறமாதிரி தமிழ்ப் பெண்ணில்லை. நான் பஞ்சாபிலேயிருந்து வறேன். தாமரை கூட கர்னாடகாவைச் சேர்ந்தவங்க. இங்கே நாங்கதான் தமிழ் பேசறோம்.

– எப்படி?

– எல்லாம் சினிமாவுக்காக. சொல்லப்போனா இன்றைய தேதியிலே தமிழ் பேசற பெண்களென்றால் அது.  நாங்கதான்.

– உங்க சினேகிதி தமிழ் பேசுங்கிளிண்ணு பெருமையா சொன்னாங்க..

– உண்மைதான் ‘தமிழ் பேசுங்கிளி’ங்கிற படத்திலே கூட நடிச்சிருக்கேன்.

அப்போதுதான் கவனித்தேன், மதுரைப்பகத்திலே ஏதோ ஒரு பட்டியைசேர்ந்தவன்போலவிருந்த ஒருவன் டாய்லெட்டிலிருந்து வெளியில் வந்தான்.

– இவரு யாரு?

– இவர் என் கூடத்தான் வந்திருக்கார். பல படங்களில் உதவி இயக்குனரா இருந்திருக்கார்.

– இவரை எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க?

– நான் தமிழ்வசனம் பேசவேண்டுமென்றால் இவர் பக்கத்திலே இருக்கணும்.

– என்னை மன்னிக்கணும் முதலில் இந்த ஆளை அனுப்பிட்டு வரேன். எட்டுபட்டி ஆசாமியை வெளியிற்தள்ளி கதவைச் சாத்தினேன்.

– மிஸ் கோப்பெருந்தேவி எனக்கு இப்போ ஒரே ஒரு வசனந்தான் தேவை, உங்களுக்கு என்னை மணம்செய்துகொள்ள சம்மதமா?

–  தாராளமா, இப்பவே நான் தயார். அதற்காக வசனங்களெல்லாம் மனப்பாடமா தெரியும்.

–  பாட்டிக்கிட்ட மாத்திரம் வசனம் பேசினாப் போதும், நம்மிருவருக்குமிடையில் எதற்கு. புரியுதா?

புரிந்தமாதிரிதான் தலையாட்டினாள்.

———————————————————————

1. சூ-மின்- செவ்வாய் கிரகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்,  7826 ஹெக்டர் பரப்பு.  (வடகொரிய அதிபருக்குச் சொந்தமாக எங்கள் நாடு இருந்திருக்கிறது. பின்நாட்களில் தென்கொரிய தொழிலதிபர் ஒருவர் நூடில்ஸ்சையும் அரிசியையும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்து, அசலையும் வட்டியையும்  திருப்பிச் வாங்க முடியாத நிலையில், இக்கோளைக் கணக்கில் பற்று வைத்துக்கொண்டிருந்ததாக இணையதளமொன்றிலிருக்கிற தகவலை நம்பவேண்டாம்)