Monthly Archives: செப்ரெம்பர் 2023

எழுத்துசாமியும் பேச்சாண்டியும்

      அவசர அவசரமாக இயற்கை பாரத்தை இறக்கிவைக்க இலுப்பை மரத்தை தேடினார். எப்போது பிறந்த மண்ணுக்கு வர நேர்ந்தாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ காலைக் கடனை முடிப்பதற்கு அவர்கள் பூர்வீக வீட்டிற்குப் பின்புறமிருக்கும் இலுப்பை மரமும், மறைப்புக்கு அதன் சொந்தபந்தங்களான ஈச்சம் புதர்கள் செடிகொடிகளென்கிற இத்யாதிகள் வேண்டும். அவர் தகப்பனார் நகரவாழ்க்கைக்கு இணையான வீட்டையும் டாய்லெட் ஏற்பாடுகளையும் மகனுக்கென செய்திருந்தாலும், நம்ம எழுத்து சாமிக்கு அவர்கள் பூர்வீக வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடையில் எதிர்ப்படுகிற புறம்போக்கு இலுப்பை மரத்தடியில் ஒதுங்கினால்தான் திருப்தி. அதன் அருகிலேயே இவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் புளியமரமொன்று இருக்கிறது அவசரத்திற்குக் கூட அதில் ஒதுங்குவதில்லை. இலுப்பை மரம்தான் அவருக்கு ராசியான மரம். ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து விட்டு, சொம்பு நீரை காலிசெய்துவிட்டு வீடு திரும்ப பிருஷ்டத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக ஏதாவதொரு நல்ல சேதி வந்திருக்கிறது.

      கடந்த 20 ஆண்டுகளாக சென்னை வாசம், எழுத்துசாமிக்கு பதிவுத் துறையில் டிபுடி டைரைக்டர் உத்தியோகம். ஓவ்வொரு பத்திரப்பதிவும் கரன்சிகளைக் கொட்டுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் முதலமைச்சரை பார்த்து ஒரு மாலை போட்டுவிடுவார். ஐந்து வருடத்திற்கு முன்பாக ஒரு கிலோ தங்க நகைகளோடு சாலி கிராமத்தில் இரண்டு கிரவுண்டு நிலத்தையும் வரதட்சணையாக கொடுத்து மூத்தமகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார். எழுத்துலகம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியென எல்லா தரப்பினரும் ஆஜராகி இருந்தார்கள். உத்தியோகம் பதிவுத் துறை என்பதால் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் ஸ்பெஷலாக கண்டுகொண்டார்கள்.

உபதொழிலாக எழுத்தை வைத்திருக்கிறார். எழுத்தில் இன்றையதேதியில் நான்கைந்துபேர் இவருடன் போட்டியில் இருப்பதுபோல பட்டாலும் அவர்களெல்லாம் இவருக்கு ஜூஜூபி. எதிரிகளை பல்லில் படாமல் விழுங்கும் சாமர்த்தியம். ஒருவரிடமும் பகையில்லை,தந்திரசாலி. இளைய தலையமுறையினரில் பலர் தீவிர ரசிகர்கள். தோளில் கைபோட்டுப் பேசுவார், அவர்களோடு தலையைச் சிலுப்பி சிகரெட் பிடிப்பார், பனைமரத்தின் கீழிருந்து கள்ளும் குடிப்பார், பாரில் உட்கார்ந்து சீயர்ஸ்ஸும் சொல்லுவார். அவர்கள் வாசிப்பில் உள்ள நம்பிக்கையில் அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அச்சுறுத்துவார். « தம்பி , உன் கவிதையை படிச்சேன், நல்லா வந்திருக்குதுங்க » என்றோ « யாரு சிறுகதை சிங்காரியா, ‘சுக்கு மிளகு திப்பிலியில்’ ஒங்கதையை வாசிச்சேன்மா, மாமனாரோட மருமகள் ஓடிப்போக நினைக்கிற மனசை நல்லா சித்தரித்திருக்கிற, தத்ரூபமா வந்திருக்கு, அருமைம்மா ! » என தாராளாமாகப் பாராட்டும் குணமும் உண்டு.

      அவருடைய கீர்த்திக்கும் எந்தக்ககுறையுமில்லை. கொறுக்குப் பேட்டை 13வது வட்டம் தோழர் முருகசாமி நினைவு பரிசிலிருந்து, தமிழ்நாடு, இந்தியா என்கிற வரைபடத்திற்குச் சொந்தமான பரிசுகள் வரை எல்லாவற்றையும் முறைப்படி எப்படி வாங்க வேண்டுமோ அப்படி வாங்கி இருக்கிறார். நாளிதழ்களிலும், சஞ்சிகைகளில் தொடர்ந்து அவரைப் பற்றி இரண்டொருவரிகள் எழுதுகிறார்கள், ‘எனக்கும் இலக்கியம் வரும்’ என்கிற சினிமா நடிகர்கள் வீடு தேடி வருகிறார்கள். வட ஆப்ரிக்க குளுபுளு மொழியில் தம்முடைய கவிதை வெளிவந்தாகவும் அதை அந்நாட்டு அதிபர் வெளியிட்டதாகவும் சொல்கிறார்.

      ‘ எட்டும் எட்டும் பதினாறு, எதிர்த்தவீட்டு பெண்யாருன்னு கவிதை எழுதினப்போ நம்ம எழுத்துசாமிக்குப் பதினாலு வயது. பிறகு சிறுகதைகள் நாவல்கள் என்று எழுத ஆரம்பித்தார். செங்கணாச்சேரி செந்தூர் பாண்டியன்போல தமிழ் எழுத்துலக சாம்ராச்சியத்தை கட்டி ஆளும் கனவு அவருக்கு முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும்போதே இருந்தது. இரண்டொரு தொகுப்புகள் போட்டார். பதிவுத்துறை உத்தியோக உயர்வைக்காட்டிலும் எழுத்தில் பிரமோஷன் வாங்கணும் அதில்தான் பெருமை என்பது இலட்சியமாக இருந்தது, அதைத் தடித்தக் கழுத்தும் கனத்த சரீரமும், நடந்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு( ?) வாங்குகிற பாரியாள் சௌபாக்கியத்திடம் சொல்லவும் செய்தார்.

      «  என்னவோ செய்யுங்க, தம்படிக்குப் பிரயோசனமில்ல்லாத எழுத்து பொழப்பு, பையன் தலைக்கு மேல வளர்ந்துட்டான், வரிசையா மூணு பொண்ணுங்க இருக்கு, மறக்காம இருந்தா சரி », என்ற மனைவியின் நியாயமான எச்சரிக்கையையும் அலட்சியம் செய்தவரில்லை.

      ஒருமுறை பரிசுக்குழுவில் இருந்த சக எழுத்தாளர் ஒருவர் « அண்ணே, முன்பின் நவீனத்துக்கான டபுள் டக்கர் நாவல் பரிசை இந்த வருஷம் நம்ம சொக்கப்பனுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம், பத்து வருஷமா எழுதறான். ஆட்டோ டிரைவர், குடும்பமும் கஷ்டத்துல இருக்கு, அடிக்கடி எங்களையெல்லாம் வந்து பார்த்துட்டு டீ காபின்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போற பணிவான பையன். அவர் என்ன சாதின்னும் உங்களுக்குத் தெரியும், அதனால  » என்று இழுத்தபோது இவருக்குக் கோபம் வந்துவிட்ட து, குறுக்கிட்டார், « நீங்க ஒருத்தனும் எழுத்துக்குப் பரிசுக் கொடுக்கறதில்லைன்னு எனக்கும் தெரியும், அந்த தைரியத்துலதான் எனக்குக் கொடுங்கன்னு கேக்கறன். கூடுவாஞ்சேரியில ஒம் பட்டா நெலத்துக்கு வில்லங்கம் எடுக்கணும்னு ரெண்டுமாசத்துக்கு முன்ன நீ சொன்ன ஞாபகம், பிரச்சனை முடிஞ்சுடுச்சா ? » என இவர் கேட்க « இல்லை » என்பது எதிர்தரப்பு பதில். « என்னபண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ » என்று சொல்லி போனை வைத்துவிட்டார். எதிர் பார்த்ததுபோல பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார்.

      லோக்கல் பரிசுகள், அவற்றோடு வாங்கிய கேடயங்கள், இடம்போதாமல் ஷோகேசில் நாட்டிக்கொண்டு கிடக்க, தேசியவிருதை வாங்கவில்லை என்ற ஒரு குறை நெடுநாளாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் சிலர் « என்ன எழுத்துசாமி, எல்லா பரிசுகளையும் வாங்கிட்டீங்க தேசிய விருதை வாங்கலைன்னா எப்படி, அவரைப் பாருங்க வாங்கிடலாம் இவரை பாருங்க வாங்கிடலாமென » உற்சாகமூட்ட  இவரும் தம்முடைய ‘ தாடியில் ஆங்காங்கே வெள்ளை மசுறு ’ நாவலில் இரண்டு பிரதியை அனுப்பிவைத்தார். அவருடைய எழுத்துகளை வாசிக்கும் மனைவி திருப்தியுடன் தலையை ஆட்டியது அதொன்றுக்குத்தான் என்ற காரணம் ஒரு பக்கம், ஐம்பது வயதில் அந்தப் பரிசை வாங்கியவன் நானொருத்தனாகத்தான் இருக்கணும் என்கிற வைராக்கியம் இன்னொரு பக்கம். பரிசுக்குழு தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவர் எழுதியக் கவிதைகளையும் சிறுகதைகளையும் தெலுங்கு. மலையாளம், கன்னடம் என தெரிந்தவர்களைக்கொண்டு மொழி பெயர்த்தார், ஒரு மலரும் வெளியானது. இவர் தந்திரங்கள் பலித்து தேசிய விருது செய்தியைப் பரிசுக் குழு தலைவர் அறிவித்தபோது அன்றும் நம்ம எழுத்துசாமி சொந்த கிராமத்து இலுப்பை மரத்தடியில் ஒதுங்கி முடித்து ஒரு சொம்பு நீரால் பிருஷ்டத்திற்கு அபிஷேகம் முடித்திருந்தார்.

      தமிழ் அன்னையின் சுவாசமே தமது கவிதைகளிலும், சிறுகதைகளிலும், நாவல்களிலும் இருப்பதாக நம்பும் எழுத்துசாமிக்கு கடந்த ஒருமாதமாக நெஞ்செரிச்சல். தம்முடைய இலக்கிய புகழுக்கு ஈடு இணை எவருமில்லை என நினைத்திருந்தபோதுதான் அவருடைய நெடுநாளைய எதிரியான பால்ய வயது சினேகிதன் நமச்சிவாயம் வீடு தேடிவந்தார்.

      உங்களுக்கு நமச்சிவாயம் என்ற பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பதிலாக பேய்மழை பேச்சாண்டி என்றால் நீங்கள் புளகாங்கிதமடைந்து மெய் சிலிர்க்க கூடும். இடைநிலைப் பள்ளி ஆசிரியர், கூடுதல் தகுதி பட்டிமன்ற பேச்சாளர், நடுவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நமச்சிவாயம் பேசத் தொடங்கினார். ‘முத்தாலம்மனும் கம்பனும்  ’ என்ற தலைப்பில் பேசியவர், முத்தாலம்மனை சீதை என்றார், தொடர்ந்து குஷ்பு, ரம்பா, மும்தாஜ் என பல ரேஞ்சுக்கு கம்பன் கதை நாயகியை ஒப்பிட்டு பாடியும் ஆடியும் பேச ஒட்டுமொத்த கிராமமும் வாய் பொளந்து கேட்டது. ஊர் பஞ்சாயத்து தலைவரும் தருமகர்த்தாவாவும் பேய்மழை பேச்சாண்டி என்ற பட்டத்தைக் கொடுத்து பெரிய கேடயமும் வழங்கினார்கள். அன்றைய தினம் ஊர்த் திருவிழாவுக்கு வந்திருந்த எழுத்துசாமி, அஜீரணம் காரணமாக  இரண்டு கோலிசோடாவை விழுங்க வேண்டியிருந்தது.

      மாநில விருது, மத்திய (ஒன்றிய ?) விருது என வாங்கி குவித்துள்ளபோதிலும் அவருடைய மெய் கீர்த்திகளை அறிந்த ஊர் ஆசாமிகள் இன்றைக்கும் பத்துபேர்கூட தேறமாட்டார்கள். மாறாக  பேய்மழை பேச்சாண்டி என்கிற நமச்சிவாயத்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இவரிடமே « நம்ம நமச்சிவாயம் எங்கேயோ போயிட்டாம்பா. அடிக்கடி டிவி பொட்டியிலே வந்து போறான், ஒன்ன அப்படி பார்க்க முடியலை » எனக்கூறி அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.

      அந்த நமச்சிவாயம் வீடு தேடி வரவேண்டிய காரணமும் புரியாமலில்லை. சரியாக ஒருவாரத்திற்கு முன்பு கிராமத்து இளைஞர்கள் இருவர் எழுத்துசாமியைப் பார்க்க வந்திருந்தனர். « இந்த வருட முத்தாலம்மன் திருவிழாவில் பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடிகொடுத்தவர்களை பாராட்டப் போகிறோம் » என்றார்கள். எதிர்பார்த்தது போலவே இவருடைய பெயரும், பால்ய சினேகிதன் பெயரும் அழைப்பிதழில் இருந்தன. இரு பெயர்களுக்கும் ஒரே எழுத்துவகையை உபயோகித்திருந்தார்கள், எழுத்தின் பரிமாணமும் ஒன்று போலவே இருந்தன. ‘எழுத்துசாமி’ என்ற பெயரை மேலும், ‘பேய்மழை பேச்சாண்டி’பெயரை கீழுமாக அச்சடித்திருந்தார்கள், இதை எப்படி எடுத்துக்கொள்வதென்கிற குழப்பம் எழுத்துசாமிக்கு இருந்தது.

      சரியாக ஒரு வாரம் கழித்து நமச்சிவாயம் வீடுதேடிவந்தார். விழாவையும் பரிசையும் நினைவூட்டிய சினேகிதன் « தவறாமல் வந்திடு, ஊர்ப் பசங்க ஏதோ விருது கொடுக்க போறாங்களாம்», என்றபோது அவர் கண்களில் தெரிந்த எள்ளலும், உதட்டோரம் வெளிப்பட்ட அலட்சியமும் கோபத்தையூட்ட, அதைச் சாமர்த்தியமாக சிரித்துச் சமாளித்தார்.

      ஊர் உலகத்தையெல்லாம் ஜெயிக்க முடிந்த தம்மால் உள்ளூரில் ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தேடிவந்த இளைஞர்களில் ஒருவன் கதை கவிதைகள்னு வாசிக்கிற பையன். ஆனால் இதுநாள்வரை வாய்திறந்து இவரை பாராட்டியவனில்லை என்கிறபோதும் பேச்சாண்டியா, எழுத்துசாமியா என்கிறபோது இவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப் பிருக்கிறது.

      திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கிராமத்துக்கு வந்துவிட்டார் . தமது வழக்கமான சாதுர்யத்துடன் ஊர்ப் பெரியவர்களைப் பார்த்தார். வெத்திலைப் பாக்கு பழமென தட்டில வைத்து அவர்கள் காலில் விழுந்தார். வீடு திரும்பியபோது தகப்பனார், சத்தம்போட்டார் : நம்ம கால்தூசிக்கு பொறமாட்டானுவ, அவனுங்க காலில் போய் விழுந்திருக்க, நாளைக்குப் பின்ன நான் தெருவுல தலைகாட்ட முடியுமா ? என ஆதங்கத்துடன் கண்டித்தார்.ஆனால், தந்தையிடம் « எனக்கு பேச்சாண்டி நமச்சிவாயத்தை எப்படியாவது தோற்கடிக்கணும், மான அவனமானத்தை பார்த்தா முடியுமா ! » என கேட்க நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஒன்றே ஒன்று பாக்கி, அதையும் நாளை காலை நிறைவேற்றிவிட்டால், கிராமத்து விருது தனக்கென்பது நிச்சயமென  உறங்கச் சென்றார். வெகு நேரம், புரண்டு நெளிந்து கடைசியில் எப்போது தூங்கினாரென்றே அவருக்குத் தெரியாது.

       கண்விழித்தபோது நன்கு விடிந்து விட்டது.  அவசரமாக தன்னுடைய  ‘பதி ‘எங்கு போகிறார் என்பதை விளங்கிக்கொண்டு உதட்டைச்சுழித்த வாழ்க்கைத்துணை, «  ஏங்க, ஒழுங்கா பாத்ரூம் கட்டிவச்சிருக்கிறப்ப எங்க கிளம்பிட்டீங்க, பூச்சி பொட்டு எதுனா கடிச்சா நாளைக்கு எங்க கதி ? »  என்ற மனைவியின் பதிபக்தி எச்சரிக்கையைக் காதில் வாங்கவில்லை. கருமமே கண்ணாக தமது புண்ணிய ஸ்தலத்தைத் தேடி விரைந்தார், இரண்டு நிமிஷநேரம் நடந்திருப்பார். ம் இலுப்பைமரப் பிரகாரத்திற்குள் நுழைந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன்  வேட்டியை உயர்த்திய கையோடு தலையையும் உயர்த்தினார், இலுப்பை மரம் மட்டுமல்ல அங்கிருந்த புளியமரமும் இல்லை,  வெறிச்சோடி கிடந்தது. 

      « அதுகள சூளைபோட வெட்டி ஆறு மாசம் ஆவுது » என ஒரு குரல் அசரீரி போல ஒலிக்க திரும்பினார், வேகமாக ஒருவர் நடந்துகொண்டிருந்தார், பார்க்க பேச்சாண்டிபோல இருந்தது.

——


 [

 

 

 [KN8]எடுக்கணும்னு

 [KN9]முடியலை

 [KN10]நமச்சிவாயம்

 [KN11]பரிமாணமும்

 [KN12]சிரித்துச் சமாளித்தார்

 [KN13]கவிதைகள்னு

 [KN14]நமச்சிவாயத்தை

 [KN15]தோற்கடிக்கணும்

 [KN16]வாழ்க்கைத்துணை

சைகோன் புதுச்சேரி நாவல் விமர்சனம்

                                                     – கௌரி பா

காட்சி ஊடகங்களின் வருகையினாலும் மற்றும் நவீன வாழ்க்கையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பி வழிவதனாலும் பொழுது போக்கிற்காக வாசிப்பவர்களின் வாசிப்பு என்பது அருகி வருகிற காலம் இது.

பணம் ஈட்டுவதை மையமாக கொண்டு செய்யப்படாத செயல்களில் ஒன்றாக இன்னமும் நீடித்துக்கொண்டு இருக்கும் செயல்ப்பாடுகளில் ஒன்றாக இலக்கிய எழுத்தும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒருவர் அவரது ஆத்ம திருப்திக்காக தன்னிச்சையாக முன்னெடுக்கும் எந்த ஒரு கலை முயற்சியும் எப்போதும் உயிரோட்டமானதாக இருக்கவே செய்யும்.

அவ்வகையாக நாகரத்தனம் கிருஷ்ணா எழுதிய சைக்கோன் புதுச்சேரி என்ற சமூக வரலாற்று நாவல் அமைந்ததனால் அந்த நாவல் வாசிப்பு அனுபவம் எனது ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைந்தது என்று சொல்வதொன்றும் மிகையல்ல.

இந்த நாவலின கதைக்களங்களாக இந்தியாவின் புதுச்சேரியும் வியட்னாமின் சைக்கோனும் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரோடு பின்னிப்பிணைந்த உண்மை நிகழ்வுகளினதும், அந்த காலகட்டத்தில் புகழ் பெற்ற நிஐ கதாநாயகர்களின் கதைகளையும் புதுச்சேரி மற்றும் சைக்கோன் நிலவியல் பின்னணியில் காலணியத்துவ அரசியல் நிகழ்வுகளையும் பின்னணியாக வைத்து எழுதிய சமூக நாவல் என்னும் ஒரு பெரும் புனைவு வெளிக்குள் வாசகரை கதை சொல்லி இப்படி இழுத்தழைத்துச்செல்கிறார்.

“ நம்முடைய தனித்தன்மையை விலக்கிக்கொண்டு எப்போது கொள்கை அல்லது சித்தாந்தத்திடம் முழுமையாக ஒப்படைத்துவிடுகிறோமோ அக்கணத்தில் குற்றம் தன்னை நியாயப்படுத்த முனைகிறது அதுவே ஒரு நியாயமாக உருப்பெறுகிறது”. ‘அல்பெர் கமுய்’ ( Albert Camus) வார்த்தைகள், சத்திய வாக்கு. காலனிய அரசியல்வாதிகளுக்குக் கடல் கடந்து முன்பின் அறிந்திராத மக்களை அடிமைப்படுத்த ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதெனில், அவர்களிடமிருந்து விடுதலைபெற எண்ணிய மக்களுக்கும் சித்தாந்தமொன்றின் தேவை இருந்தது. இச்சித்தாந்தப்போரில் இரு தரப்பு ஆயுதங்களும் பலிகொண்ட உயிர்கள் ஏராளம். வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் எமது பூமியொன்றில் எழுதப்பட்டபோது, கையறு நிலையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

முதல் இந்தோசீனா யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட எங்கள் சகோதர பூமிக்குப்பெயர்: தியன் பியன் ஃபூ (Dien Bien Phu). ஒன்பது ஆண்டுகாலப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த களம். நூறாண்டு காலம் ஆண்ட ஐரோப்பியர், காலனி மக்களின் விழிப்புணர்வை புரிந்துகொண்டிருக்க வேண்டும். அமைதியாக இந்தோசீனாவில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். விடுதலையைச் சில நிபந்தனைகளுடன் வழங்க முன்வந்த காலனிய அரசின் யோசனையை வியட்மின்கள் நிராகரிக்க, யுத்தம் ஆரம்பித்தது. ….. போரின் முடிவு ? நீங்கள் எதிர்பார்த்தது போலவே நீதியின் பக்கம்.

விளைவு நீதியின் பக்கமா இல்லை அமெரிக்க புவிசார் அரசியல் வியூகங்களில் விளைந்த தற்காலிகமான வியட்நாமின் வெற்றியா என்ற எண்ணம் வாசகராக எனக்கு தோன்றியது.

———————

முன்னூறு பக்கம் தாண்டி ஓடும் இந்த நாவலின் மிக முக்கியமான கருவாக நான் கருதுவது“விடுதலை”. 

ஐரோப்பியர்கள் ‘கூண்டில் அடைபடு ! வேண்டியது கிடைக்கும் என்று கூற வியட்மின்கள்“விடுதலையைக்கொடு, வேண்டியதை நாங்கள் தேடிக்கொள்கிறோம்’ எனத்தெரிவித்தபதிலால் நடந்த யுத்தம்.’ என்கிறார் எழுத்தாளர்.

ஓரே காலகட்டத்தில் புதுச்சேரி தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரான்சு தென் சீனக்கடலில் உள்ள வியட்நாம் சைக்கோனையும் அடிமைப்படுத்துகிறது. 

அவர்களை எதிர்க்கிற வியட்நாமியர்கள்மேல் போர் தொடுக்கிறது பிரெஞ்ச் கொலனி அரசு.

அந்த காலகட்டத்தில்வியட்னாமியர்களை வழிநடத்தும் தலைவராக கம்முனிசக்கொள்கையுடைய தலைவர்ஹோசிமின் மற்றும் படைத்தளபதியாக ழியாப் (Giap) இருக்கிறார். பிரென்சு படைத்தரப்பில்வேன்சான் ஒரியோல் , ஹாரி நவ்வார் இருக்கிறார். இது 1950 களின் தொடக்கத்தில் நடக்கும் யுத்தம்.

1930 களில் பிரான்சின் இன்னொரு கொலனியான புதுச்சேரித்தமிழர்கள் இருந்தார்கள். புதுச்சேரியில் இருந்து வெறும் பாடசாலைப்படிப்போடு 1930 களில் இருந்து தமிழர்கள்வியட்நாம் ல் உள்ள சைக்கோனுக்கு செல்கின்றனர், அங்கு அவர்களுக்கு கடிகாரத்தைபார்த்து செய்யும் அரச அலுவலக உத்தியோகங்களான காவல்த்துறை, கடற்படை, நகராட்சிகாவல்த்துறை, சுங்க இலாகா, நீதித்துறை, கல்வித்துறை , கப்பல்த்துறை  மற்றும் ராணுவ உத்தியோகங்களை வழங்குகின்றன. 

இந்தோசீனாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக புதுச்சேரியில் சட்டபூர்வமான வயதடைந்த பிரென்ஞசிந்தியர்கள் அனைவரும் ஜாதி மதம் பாலின வேறுபாடுகள் குறுக்கீடின்றி பிறப்பால்அவரவர்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தை களையலாம் என்ற ஆணை அனுமதிக்கிறது. தந்தை பெயருக்கு பதிலாக ஐரோப்பியர் உச்சரிக்க வசதியாக ஒரு குடும்பபெயரைத்தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஐரோப்பியருக்கு இணையாண சிவில் உரிமைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்கள். அதனால் ஈர்க்கப்பட்டும் பிரான்சின்  ரொனான்சன் என்றழைக்கப்படும் குடியுரிமை தரக்கூடிய சலுகைகளுக்காகவும் ஆசைப்பட்டு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முப்பது வயது சுப்பராயன் அவர் அக்கா மகளாக இருந்து பின்னர் பதினாலு வயதிலேயே இந்திய கிராம கலாச்சார மரபினடிப்படையில் அவர் மனைவியாக பரிணாம்ம் பெற்ற வேதவல்லியை அவள் வீட்டிற்ற்கு சொல்லாமல் சைக்கோனுக்கு அழைத்துசெல்கிறார். அதனைத்தொடர்ந்து  வேதவல்லியின் தம்பி சிங்காரம் “மாசிமக தீர்த்தவாரிக்கு போவது போல புறப்பட்டு வந்தோம் விழா முடிந்ததும் புறப்பட்டு விடுவோம்” என நினைத்தோம் என நாவலில் அவர் சைக்கோன் போன அனுபவத்தை அவர் வாயால்சொல்கிறார். 

சிங்காரம் அடிப்படை மனித இயல்புகளை கட்டுப்படுத்தும் புதுச்சேரியில் தான் ஆசை ஆசையாய் காதலித்த ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்ணான ஜானகியை கைகழுவி விட்டு சைக்கோனுக்கு கப்பல் ஏறுகிறார்.

அவர்கள் பிரியும் தருணம் நாவலில் இப்படியாக விரிகிறது.

“வழக்கமாக ஜானகியை அவளுடைய ஆடுகளுடன் சந்திக்க நேரும் அரசடிக்கு வந்திருந்தேன். காற்றில் அலைந்த கேசத்தை காதுமடலின் பின்புறம் தள்ளியபடித்துறட்டுக்கோலால் அரசமரத்தின் தாழ்ந்த கிளையொன்றிலிருந்து தழை பறித்துக்கொண்டிருந்தாள் கீழே விழுந்த கணத்தில் தளிர் குழைகளாக தேர்வு செய்து கவ்வி, அசைபோட்ட வண்ணம் ஆடுகள் அவளைச்சுற்றி வந்தன. அக்கம் பக்கம் பார்த்து ஒருவருமில்லை என உறுதி செய்து கொண்ட பின் “ ஜானகி” என அழைத்தேன். ஆடுகள் எனது குரலைக்கேட்டதும் தலையை உயர்த்தி “ ம். மே” என்று கத்திக்கொண்டு கலைந்தோடின.ஜானகியின் கவனம் முழுக்கத் துறட்டுக்கோலைக் கையாளுவதில் இருந்தது அல்லது அது போல பாவனை செய்தாள். … ஏரியில் சரிவில் தடதடவென இறங்கித் துறட்டுக்கோல் பிடித்திருந்த கைகளை பற்றினேன்.

“ எங்க வந்தீங்க சொல்லுங்க?”

⁃ உன்னைப் பார்க்கணும் என்று தான் வந்தேன்.

“ பார்க்கிறதுக்கு புதுசா எங்கிட்ட என்ன இருக்கு? சலிச்சுப்போச்சு, கிளம்பற. ஆரோக்கியம் சொன்னான் நீயும் சீமைக்கு போறியாமே?

⁃ ஆமாம் சைக்கோனுக்கு போறேன். ரெண்டு மூணு வருஷத்திலே திரும்பிடுவேன்.

“ திரும்பி?”

⁃ உன்னைக்கூட்டிக்கிட்டு போயிடுவேன்.

“ இதை நான் நம்பணுமாக்கும். குடுத்தனக்கார பொண்ணு எவளையாவது ஒங்க வூட்டுல பாத்து வெச்சிருப்பாங்க. அவளைக்கூட்டிக்கிட்டுபோவ, இனி நான் எதுக்கு?”

வெடுக்கென்று வார்த்தைகள் தெறித்தன. கண்களில் நீர் கோர்த்திருந்தது. புறங்கையால் மூக்கை நான்கைந்து முறை அழுந்த துடைத்தாள். கைகளில் இருந்த துறட்டுக்கோலைத் தரையில் எறிந்துவிட்டு மரத்தடியை நெருங்கினாள். வலது முழங்கையைத் தலைக்குக் கொடுத்து, ஒரு காலை தரையிலும் மறு காலை முக்கோணமாக மரத்திலும் ஊன்றி நின்றாள். …என்னை நம்பு நான் வந்திடுவேன்’ எனச்சொல்ல நினைத்தேன். வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்க…. மெல்ல என் தலையை அவள் முகத்தில் இறக்கியபோது கண்ணிரப்பைகளில் திரண்டிருந்த நீர் கன்னக்கதுப்பில் உடைந்து இறங்கியது. மறுகணம் என்னைத்தள்ளிவிட்டு விடு விடுவென நடந்தாள்.

இப்படித்தான் சிங்காரம் ஜானகியை பிரிந்த காட்சி இந்த நாவலில் விரிந்தது. இந்தக்காட்சியை படித்த எவருக்கும் தொண்டையை துக்கம் அடைக்காமல் இருந்திருக்க முடியாது.

சைக்கோனில் வந்திறங்கிய இரண்டு வருடங்களில் கம்பீரமான ராணுவ சிப்பாய் சிங்காரத்தின் வாழ்க்கையில் திடீர் என்று ஆஜரான அனமிட் இன வியட்னாமியப்பெண்ணான மரியா ஹோவாம்மி எந்தவிதமான இடைஞ்சல்களும் இல்லாமல் பிரத்தியேகமாக முன்கூட்டியே தனக்கென ஒதுக்கப்பட்ட விசேட வானூர்தி இருக்கை ஒன்றில் ஏறி அமர்வது போல சிங்காரத்தின் மனைவி என்ற அந்தஸ்தை பெற்று இரட்டைக்குழந்தைகளான இசபெல் மற்றும் ஃபிலிப் ற்கு தாயாவதும் நடந்தேறுகிறது. இந்தப்பக்கங்களில் நிறைவேறாத ஜானகியின் காதலுக்காக வாசகர் மனம் பரிதவிக்க தவறாது.

நாவலில் பல பக்கங்கள் சைக்கோனில் சிங்காரம் மரியாவின் காதல் தோய்ந்த குடும்ப வாழ்வை சித்தரித்துக்கொண்டே முன்னேறும் அதே நேரம் சிங்காரத்தின் வாரிசான பொன்னுச்சாமியை தனியாளாக வளர்த்தெடுக்க புதுச்சேரியில் ஜானகி படும் பாடுகளையும் வாசகர் கண் முன்னே சமாந்தரமாக விரித்துச்செல்கிறது. புதுச்சேரியில் ஜானகி திருமணமான ஆண்களின் காம இச்சைக்கு ஆள்படாமல் காத்துக்கொள்ள தன் கறாரான பேச்சையும் இயல்பான எடுத்தெறியும் போக்கையும் ஆயுதமாக கொள்வதோடு யார் தயவிலும் வாழாமல் வயல்களில் கூலி வேலை செய்தும் பிரான்ஸ் துரைமார்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்வதும் பிழப்பை ஓட்டுகிறாள்.

புதுச்சேரியில் இருக்கும் சாதிய அதிகாரத்திற்கு எதிராகவும் , காலணியத்துரைகளின் ஆணாதிக்கத்திற்கெதிராகவும், பல்வேறு தளங்களில் பல்வேறு அதிகாரத்தை எதிர்த்து போராடிக்கொண்டே தனது ஒற்றை இலட்சியமான தனக்கும் சிங்காரத்திற்கும் பிறந்த பொன்னுச்சாமியை சைக்கோனுக்கு அனுப்பவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கையில் ஜானகியின் ஒரே லட்சியமாக இருப்பது தனது மகன் பொன்னுச்சாமியை படிக்க வைத்து தன்னை ஏமாற்றி விட்டு சென்ற சிங்காரம் இருக்கும் இடமான சைக்கோனுக்கு அவனையும் ஒரு ராணுவ சிப்பாயாக அனுப்புவதாக இருக்கின்றது.

ஜானகி போன்ற ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களுக்கு பிரெஞ்சு காலணியவாதிகளிடம் இருந்து விடுதலை தேவையற்ற ஒன்றாக இருந்தது ஏனெனில் அவர்கள் ஆட்சியில் தான் ஜானகிக்கு மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது என்னவென்று ஓரளவு ஆவது தெரியவந்தது, சாதிய ஒடுக்குமுறைகளால் சதா நசுக்கப்படும் கூட்டத்திற்கு காலனிய அரசுகளின் ஒடுக்குமுறைகள் ஒன்றுமே இல்லை என்பதை காந்தி புரிந்து கொண்டிருந்தார். தான் கனவு காணும் இந்திய விடுதலைக்காக அவர்கள் போராடப்போவதில்லை என்று அவர் நினைத்ததனாலோ என்னவோ அவர் 1934 மாசி மாதம் புதுச்சேரி சென்ற போது அவர் உரையில் இந்திய விடுதலை பற்றிப்பேசாமல் இப்படிப்பேசினார் என்று நூலில் வருகிறது” சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி மக்களைக்காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே ஜாதி மற்றும் வகுப்பு வாத்த்திற்கு எதிராக புதுச்சேரி அன்பர்களே போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…..”. சாதி மற்றும் வகுப்புவாதங்களினால் பிளவுபட்ட இந்திய மக்களை முதலில் ஒருங்கிணைக்காமல் இந்திய சுதந்திரத்திற்காக ஒன்று திரட்ட முடியாது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார் என்பதை இந்த நாவலில் வரும் சம்பவங்கள் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.

இந்த கதையில் வரும் அடுத்த முக்கிய கதாபாத்திரமாக இருப்பது சுப்புராயனின் மனைவி வேதவல்லி. வேதவல்லி விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்த அதிகம் படிக்காத ஒரு பெண். சைக்கோனில் இருக்கும் இயற்கை வனப்பு மிக்க ந்திகளையும் குன்றுகளையும் ஏரிகளையும் கடலையும் ரசிக்கத்தெரியாமல் புதுச்சேரி மண்ணை நினைத்து நித்தம் ஏங்குகிறார்.

தான் விட்டு விட்டு வந்த உறவுகள் நினைப்பாகவே வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்த வேதவல்லிக்கு சைக்கோனில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மூலமாக இஸ்மாயில் அண்ணர்

அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் லெயோன் புருஷாந்தி என்ற செல்வந்தரின் நட்பும் கிடைக்கிறது. புதிதாக கிடைத்த உறவுகளினால் வேதவல்லி சொந்த மண்ணிற்காக ஏங்கும் ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, புது நட்புக்கள் தந்த ஊக்கத்தினால் வேதவல்லி அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரையை ஆகவும் தமிழ்ச்ங்கத்தின் நிர்வாக பொறுப்பையும் ஏற்கிறார். இதனால் பிள்ளை இல்லாத வேதவல்லிக்கு வாழ்வை வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் கிடைக்கின்றது. மேலும் காந்திய சிந்தனைகளினாலும் பெரியார் சிந்தனைகளினாலும் ஈர்க்கப்பட்டு சமூகத்திற்கு முன் உதாரணமாக விளங்கி காலத்தை மீறிய முற்போக்கு கருத்துக்களை சமூகத்திற்கு சொல்லும் கம்பீரமான தோற்றம் கொண்ட லெயோன் புருஷாந்தி மீது வேதவல்லிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர் முன் நின்று நடத்தும் எல்லாக்காரியங்களிலும் கைகொடுக்கும் ஆளாக வேதவல்லி வளர்கிறார். தமிழ் ஆணுக்கும் வியட்னாமியப்பெண்ணிற்கும் பிறந்த ஒரு அநாதைப்பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாகிறார். இதுவும் லெயோன் புருஷாந்தியின் உந்துதலில் தான் நடக்கிறது.

கதையின் ஓட்டத்தில் சுப்புராயன் பற்றிய கதை சொல்லியின் குறிப்புக்கள் அனைத்தும் அவரைத் தன்னைப்பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டிருக்கும் ஒருவராகவே சித்தரித்து வந்துள்ளார். தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் சாதாரணமாக பொது வெளியில் அவர்கள் மேல் விழும் அலட்சியப்பார்வைகளையோ நக்கல் தொனிகளையோ பெரிதாக சிரத்தை செய்ய மாட்டார்கள். சுப்பராயனுக்கு காவல்த்துறையில் அவர் செய்யும் பணி மூலம் அவ்வப்போது தன் அதிகாரத்தினால் மற்றவர்களை அடித்து துன்புறுத்தும் போது அவரது போதாமைகளை தற்காலிகமாக விலக்கி வைக்க உதவி அளிக்கிறது. பொதுவாக மனைவிகளை அடிக்கும் ஆண்கள் கூட இப்படியான உளவியல் தாழ்வுச்சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட ஆண்களாக இருப்பதும் ஒரு காரணம். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப்புராயன் வேதவல்லியை அடிக்கடி அடிப்பதும் பின்னர் அதற்கு ஒத்தடம் குடுக்கும் விதமாக நடந்து கொண்டு காலத்தை ஓட்டுகிறார். குடும்ப வன்முறையில் ஈடுபடும் குணாதிசயங்களுடன் சுப்புராயன் நாவல் முழுவதும் வலம் வருகிறார். த்த்ரூபமாக நாவலாசிரியர் இந்த கதாபாத்திரத்தை படைத்துள்ளார்.

சிங்காரத்தின் பிள்ளைகளான பிலிப் மற்றும் இசபெல்லும் வேதவல்லியின் மற்றும் சுப்பராயனின் வளர்ப்பு மகளான லட்சுமியும் ஒருவருக்கொருவர் அணைதுணையாக எப்போதும் ஒன்றாக வளர்கின்றனர்.

சிங்காரம் , சுப்புராயன் , வேதவல்லி மற்றும் லெயோன் புருஷாந்தி ஆகியவர்கள் பிரெஞ்சு குடியுருமை பெற்றவர்கள். அதனால் அவர்கள் தங்களை பிரெஞ்சிந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பிரஜாவுரிமையும் அரச உத்தியோகமும் வழங்கிய பிரெஞ் நாட்டிக்கு தாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆனால் லெயோன் புருஷாந்தி அந்த சிந்தனைக்கு விதிவிலக்கானவர். அவர் இந்தியா பிரிட்டிஷ்கார்ர்களிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர். அவர் ஒரு காந்தியவாதி என்றபோதிலும் தமிழர்கள் ஐரோப்பியர்கள் போல கம்பீரமாக உடை அணிய வேண்டும் என்று அனைவருக்கும் போதிக்கிறார். அவர் நாலு பிள்ளைகளுக்குத்தாயான கோடீஸ்வரியான விதவைப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து சீர்திருத்தவாதி என்ற நற்பெயரையும் சமூகத்தில் பெறுகிறார். சைக்கோனில் அரச உத்தியோகங்களில் இருக்கும் பிரெஞ்சிந்தியர்கள் மற்றும் வணிகம் செய்யும் பிரிட்டிஷ் இந்தியர்கள் சமூகங்களின் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு நபர். காந்தியின் செய்கைகளை நகல் எடுத்தாற்போல இவரின் செய்கைகளும் இருக்கிறது, காலனியர்களின் அரசிடம் கைகட்டி வேலை பார்க்கும் உத்தியோகமான தனது வங்கி வேலையை கைவிடுகிறார். இப்படி தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் காந்தியின் கால்தடங்களின் வழி நடக்கிறார். அவர் செயல்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வேதவல்லி பிரமிக்கும் அதே தருணம் சுப்புராயன் லேயோன் புருஷாந்தியின் தியாகங்களை எள்ளி நகையாடுவார். “ கோடீஸ்வர விதவைகள் என்றால் ஒன்றென்ன ஒன்பது பேரைக்கூட மறுமணம் செய்யலாம் என்று கூறுவார்.

பொதுவாக மனிதர்களின் செயல்ப்பாடுகளையும் அவர்கள் நகர்வுகளையும் தேவைக்கோட்பாட்டு அடிப்படையிலேயே கணிப்பது இலகுவாக இருக்கிறது.

முதலாவது அடிப்படைத்தேவையான உடல் சார்ந்த நிறைவு என்று பொருள் கொள்ளலாம். அவை சுவாசிக்கும் காற்று , நீர், உணவு , போதுமான நித்திரை மற்றும் உடலுறவு என்பவற்றை உள்ளடக்கும்) – இது உடல் சம்பந்தப்பட்ட திருப்தியை உள்ளடக்கும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற கூற்றுக்கிணங்க இந்த விளக்கம் அமைந்திருக்கிறது.

இரண்டாவதாக பாதுகாப்பு அவையாவன பொருளாதார, சமூக, தொழில் ஆகியவற்றினால் ஒரு தனிநபர் அடையும் நிறைவு. இந்த தேவைகள் உடல் சம்பந்தப்பட்ட அடிப்படைத்தேவைக்கு ஒரு படி மேலாக நிற்கிறது.

மூன்றாவதாக மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் குடும்பத்தில் அங்கத்துவம் வகிக்கும் அவள் தேவை , சமூகத்திற்குள் ஒருத்தியாக அங்கத்துவம் வகிக்கும் தேவை மற்றும் பரந்த நட்பு வட்டம், மனதிற்கினிய துணை ஆகியவை ஒரு நபர் தன் வாழ்வில் சந்திக்ககூடிய துயரசம்பவங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் , கொண்டாடப்பட வேண்டியவற்றை சேர்ந்து கொண்டாடுவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள் மூலம் பரந்துபட்ட சமூகத் தொடர்புகளும், நட்பு வட்டங்களும் ஒரு நபருக்கு மனவுளைச்சல் மற்றும் தனிமையால் விளையக்கூடிய மனச்சோர்விலிருந்து விடுவிக்கவல்லவை என்று நிரூபிக்கின்றன.

இந்தக்கதையில் மேற்குறிப்பிட்ட உளவியல் தேவைகள், நட்பு, மனதிற்கினிய துணை ஆகியவற்றிற்காக வெற்றிடத்தை நிரப்ப அலையும் ஒரு மனமாக வேதவல்லியின் மனம் உளலும் வேளையில் தான் அவளுக்கு லேயோன் புருஷாந்தி மூலமும் தழிழ்ச்சங்கம் மூலமும் அவையெல்லாம் கிடைக்கிறது. அந்த நட்பை ஸ்திரமாக வைத்திருக்கும் முனைப்பில் வேதவல்லி லேயொன் புருஷாந்தி முன்னெடுக்கும் எல்லா விடயங்களுக்கும் தன்னாலான ஆதரவை வழங்கி வருகிறார்.

அடுத்ததாக ஒரு தனிநபர் தான் தன் குடும்ப/சமூக சூழலில் மதிப்பு மரியாதை அந்தஸ்து மற்றும் தனிதன்மையுடன் கூடிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ வேண்டும் என்று நினைத்து அதில் முன்னேற்றமும் நிறைவும் காண்பது.

அந்த வகையில் தன்மதிப்பை தான் வாழும் சூழலில் தக்க வைக்க காவல் துறை வழங்கும் அதிகாரம் தாழ்வுச்சிக்கலில் உழலும் சுப்புராயனுக்கு தோதானா ஒன்றாக இருக்கிறது.

அந்த அதிகாரத்தை தனக்கு வழங்குவது தன்னையும் தன் இனத்தையும் சுரண்டும் பிரெஞ்சு காலனியத்துவ அரசு என்பதும் மேலும் இந்த பொலிஸ் உத்தியோகத்தின் மூலம் தன்னைப்போன்ற இன்னொரு பிரெஞ்சு காலனிய அடிமைகளான வியட்னாமியர்களை கையாளப்பயன்படுத்துகிறார்கள் என்ற பிரக்ஞை அற்ற ஒருவராக இருக்கும் சுப்புராயன் போன்ற ஆண்கள் பிரெஞ்சு காலனிய அரசுக்கு இரு வேற நாட்டு அடிமைகளை பிரித்தாண்டு தன் காலணிய ஆட்சியை தக்க வைக்க உதவியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் சுய வாழ்வியல் தேவைகள் பூர்த்தியான பின் அவர்கள் தாம் வாழும் சமூகத்தற்காக செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து சமூகத்தின் வளர்ச்சிக்கு தங்களினால் இயன்ற பங்களிப்பை செய்வதன் மூலம் தங்கள் சந்தோசத்தை மேலும் மெருகேற்றி பூர்த்தி செய்ய முனைவார்கள்.

அந்த வகையில் இந்த நாவலில் வரும் லேயோன் புருஷாந்திக்கு மனிதர்கள் உயிர்வாழத்தேவையான அத்தியாவசியத்தேவைகளுக்காகவோ தனது பாதுகாப்பு கருதியோ எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவோ அதனைத்தக்க வைக்கவோ வேண்டிய தேவைகள் அற்றவர் அதனால் அவரின் செயல்ப்பாடுகள் அவரை தன்னை சுற்றி இருக்கின்ற சமூகத்தினது மேம்பாடுகளுக்கு பங்களிப்பு செய்ய அவரை இயல்பாக உந்தித்தள்ளுகிறது.

அவர் பொதுக்கூட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமை பற்றிப்பேசுகிறார், பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற வேண்டும் என்று அந்த விடுதலை நோக்கி போராடும் நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய லீக் கட்சிக்கு உதவிகள் செய்கிறார் . எல்லாவிதமான சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனியோடு யப்பான் கூட்டு சேர்ந்து அதன் அதிகாரத்தின் பிடியின் கீழ் பிரெஞ்சு நாட்டு மக்களையும் கூடவே கொலனிகளையும் கொண்டு வருகையில் தற்காலிகமாக பிரித்தானியாவின் எதிரியாக யப்பான் மாறுகிறது இந்த சின்ன இடைவெளிக்குள் புகுந்து யப்பானின் ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனா பிரெஞ்சு கொலனிகளில் உள்ள இந்தியர்களின் ஆதரவையும் பணபலத்தையும் திரட்ட அன்றைய சக்தி வாய்ந்த அரசியலாளர்களான நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் சைக்கோன் வருகிறார்கள் அந்த வேளையில் காந்தியவாதியும் சைக்கோன் சமூகத்தில் பணபலமும் அந்தஸ்த்து மற்றும் புகழுடன் வாழும் லேயோன் புருஷாந்தியின் ஆதரவை அவர்கள் நாடுகிறார்கள், அந்த வேளையில் புவிசார் அரசியலில் நிலை எப்படியும் மாறலாம் தாங்கள் தங்கள் காவணிய நாடான பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் தங்களதும் தங்களின் குடும்பத்தின் பாதுகாப்பும் மட்டுமே முக்கியம் பிரெஞ்சு இந்தியர்கள் அனைவரும் ஒதுங்க லேயோன் புருஷாந்தி மற்றும் வேதவல்லி நேதாஜியை வரவேற்று அவர்களின் இந்திய விடுதலைக்கான பணிகளை இந்தோ சீனாவில் தொடங்கி வைக்கின்றனர். லேயொன் புருஷாந்தி என்ற அந்த சமூக அந்தஸ்த்தும் மரியாதையும் உள்ள மனிதருக்கு தனிநபராக தன்னுடைய பாதுகாப்பு என்பது எந்த சர்ந்தப்பத்திலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தவறாக கணிப்பிட்டார். யப்பானின் கொட்டத்தை அமெரிக்கா அடக்க மீண்டும் பிரெஞ்சு அரசு அதிகாரத்திற்கு வருகிறது அப்போது யப்பானுடைய ஆதரவில் பிரெஞ்சு கொலனியான சைக்கோனில் அரசியல் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சித்தவதைக்குள்ளாகி பைத்தியமாக லேயோன் புருஷாந்தி வெளியில் வந்து பின்னர் இந்தியா வந்து புதுச்சேரி வீதிகளில் பைத்தியமாக அலைந்ததற்கு பல நிஐ சான்றுகள் உள்ளதாக தெரிகிறது என்று கதையில் கூறப்படுகிறது.

உலகெங்கும் கொலனிகளை வைத்திருந்த பிரான்ஸ் அரசு அதன் ஒரு கொலனியில் இருந்து இன்னொரு கொலனிக்கு அரச உத்தியோகங்களுக்காக மக்களை இடப்பெயர்வு செய்து அவர்களை எதிர்க்கும் மக்கள் கூட்டத்தினை அவர்களின் இன்னொரு அடிமைகளைக்கொண்டு அடிமைப்படுத்த முனைந்தது என்பது இந்தக்கதை மூலம் தெட்டத்தெளிவாக தெரிகிறது. அரசு என்பது மக்களை ஒடுக்கும் இயந்திரம். பிரெஞ்சு அரசு தங்களால் ஒடுக்கப்படும் இந்திய புதுச்சேரி மக்களின் கைகளை கொண்டு இன்னொரு ஒடுக்கபட்டும் அவர்கள் பிரஜைகளான வியட்நாமியர்கள் கண்களை குத்த வைக்கிறது, இரண்டு அடிமைப்படுத்ப்படும் இனங்களிடம் பகையை வளர்த்து சாதூர்யமாக தங்கள் காலனித்துவத்திற்கு எதிரான கோவம் எப்போதும் பிரெஞ்சு அரசின் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ள முனைந்திருக்கிறது.

தங்களின் பொது எதிரி பிரெஞ்சு அரசு என்று அவர்களுக்கு தெரிய வரக்கூடாது என்ற எச்சரிக்கையோடு நடந்து கொண்டது. ஆனாலும் வியட்நாமியர்கள் எய்தவர் இருக்க அம்பை நோகவில்லை.

சிங்காரம் , வேதவல்லி, சுப்பு போன்ற புதுச்சேரி தமிழர்கள் வியட்நாம் சென்று குடியேறி சுமார் இருபது ஆண்டுகளின் பின்னரே வியட்நாம் போர் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வியட்நாம் தாய்க்கும் தமிழ் தகப்பனுக்கும் பிறந்த வேதவல்லி வளர்ப்பு மகள் லக்‌ஷ்மி , மற்றும் சிங்காரத்தின் மகன் பிலிப்பும் இராணுவத்தில் பிரெஞ்சுப்படையில் சேர்ந்துவிடுகிறார்கள். அத்தோடு ஜானகியின் மகன் பொன்னுச்சாமியும் புதுச்சேரியில் இருந்து வந்து சைக்கோனில் பிரெஞ்சு இராணுவத்தில் சேருகிறான்.

ஃபிலிப் பிரெஞ்சு குடியுருமை பெற்ற சிங்காரத்தின் மகனாகவும் வியட்னாமிய பெண்ணான மரியா ஹோவாம்மியின் மகனாகவும் இருந்து தன் தாய் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் ஜானகியின் மகன் பொன்னுச்சாமியையும் ஒருங்கே காப்பாற்றுகிறார். பிரெஞ்சு காலணியத்துவ அரசு எவ்வளவு தான் காலனிய நாடுகளின் குடிமக்களை ஒருத்தர் மீது இன்னொருவரை ஏவி தங்கள் பக்க போரினை வெல்ல முயன்ற போதிலும் தேசப்பற்றுள்ள மனிதர்களையும் மனித நேயத்திற்கு விசுவாசமான மனிதர்களையும் அவர்களினால் வெல்ல முடியவில்லை.

தனது தாய் நாட்டின் மேல் அந்நியரகள் போர் தொடுக்க வந்த போது ஃபிலிப் பிரெஞ்சு ராணுவத்தில் உளவாளியாக சேர்ந்து தனது வேலையை கச்சிதமாக முடித்து விடுவதோடு வியட்நாமிய ராணுவத்தினால் போரில் தோற்ற பிரெஞ்சு படையில் இருந்த பொன்னுச்சாமி கைதாகி திக்கற்று நின்ற போது ஃபிலிப் தனது சகோதரன் பொன்னுச்சாமியை காப்பாற்றும் அந்த காட்சி நாவலின் இப்படி விரிகிறது.

“ போர்க்கைதிகள் முகாமில் அடைபட்டு பத்து நாட்கள் கடந்துருந்தபோது திடீரென்று அம்மா நினைப்பும் ஊர் நினைப்பும்வர முதன்முறையாக அழுதான். ஒன்பது ஆண்டுகளாக சைக்கோனில் இருக்கிறான், யுத்தம் செய்கிறான், யாருக்காக இந்த யுத்தம்? வியட்மின்கள் அவனுக்குச் செய்த துரோகம் என்ன ? அல்லது அவர்களுக்கு பொன்னுச்சாமி தான் ஏதாவது துரோகம் செய்திருப்பானா, இதென்ன விளையாட்டு ? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, ஆசை ஆசையாய் அம்மா ஊர்ச்சாமிகளுக்கு படையலிட்டு கப்பலேற்றி விட்டது இப்படிச்சிறையில் வாடவா? ….தம்முடைய படைவீர்ர்கள் சிறைபட்டிருப்பது குறித்த அக்கறை பிரான்சுக்கு உண்டா? …. என்றெல்லாம் நினைத்துக்கலங்கினான். பிரெஞ்சு காலனியப்படை வியட்மின்களிடம் தோற்றுள்ள நிலையில் , வியட்நாமில் இன்றைய தேதியில் அவர்கள் முகவரி என்ன? அதிகாரம் என்ன? …எனக்குழம்கிக்கொண்டு வெளியில் வந்த வேளை, வாயிலில் பிலிப்.

⁃ உன்னை எப்போது விடுதலை செஞ்சாங்க ? ஆர்வத்துடன் பொன்னுச்சாமி நண்பனைக்கேட்டான்.

⁃ என்னை யார் விடுதலை செய்யவேண்டும், நான் உண்மையில் வியட்மின்களின் உளவாளி..பிரெஞ்சு காலனியப்படையில் சேர்ந்து எங்கள் வியட்மின்கள் படைத்தலைமைக்கு நம்முடைய அசைவுகளையும் கொண்டு சேர்ப்பது தான் என் வேலை.

முடிவில் இந்தப்போரின் முடிவு நீதியின் பக்கம் இருந்தது போல தோற்றப்பாடு அளித்தாலும் அமெரிக்கா ஜேர்மனியுடன் கூட்டு சேர்ந்த யப்பானை எதிர்த்து தனது அதிகாரத்தை அந்தப்பிராந்தியத்தில் நிலைநாட்ட நினைத்து உதவி பின்னர் அந்தப்பிராந்தியத்தில் சீனாவின் கொம்முனிசக்கொள்கை பரவிவிடாமல் இருக்க வியட்நாமியர்களுக்கு எதிராக இருபது வருடம் கடும் போரை மேற்கொண்டது, இந்தப்போர்களில் பங்கெடுத்த மனிதர்களும் அவர்களுக்கு பிறந்த அடுத்த தலைமுறையும் இன்னமும் போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர் என்பது தான் கொடுமையான யதார்த்தமாக இருக்கிறது.

நிஐ வரலாற்று தகவல்கள் நிரம்பிய பிரெஞ்சு கொலனிய காலத்தில் வியட்நாமில் வாழ்ந்த தமிழர்களின் பயணத்தடங்களையும் வாழ்வையும் சித்தரிக்கும் இந்நாவல் வாசிப்பு என் தேடல்களுக்கு தீனி போட்ட ஒரு நாவல் மட்டுமல்லாமல் லண்டனில் நான்றிந்த வியட்நாமிய மனிதர்களுடன் எனக்கு இனம் தெரியாத ஈர்ப்பையும் நெருக்கத்தையும் வரப்பண்ணியிருக்கிறது.

நாவலாசிரியருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.

நன்றி: அம்ருதா இதழ்

ஒரு புதிய சிலப்பதிகாரம்

  • – பேராசிரியர் கி. நாச்சிமுத்து

அண்மைக் காலத்தில் நான் படித்த நாவல்களில் மனத்தை நோகச்  செய்த ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘இறந்த காலம்’ என்ற இந்த நாவல். சிலப்பதிகாரக் கண்ணகிக்கு நேர்ந்ததுபோன்ற நிலைக்கு ஆளான நர்மதாவுக்கும் அவர்களோடு சேர்ந்து அதே கொடுமைக்கு மீரா, ஜெஸ்ஸிகா என்ற மேற்கத்தியப் பெண்களுக்கும் ஓர் இலக்கியத் தீர்வைத் தீர்வைத் தந்து கதையை முடித்திருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. கதையின் முக்கிய திருப்பமே இந்த முடிவுதான். இது வாசகனுக்கு நிறைவும் நிம்மதியும் தரும் முடிவாகவும் அமைகிறது.

வரலாற்றில் புதையுண்ட வாழ்க்கைதான் [தொடரை இரவல் தந்த நினைவில் வாழும் (சுகந்தி சுப்பிரமணியன், சுப்ரபாரதி மணியன் துணைவிக்கு நன்றி) கதையின் பாடுபொருள். புதுவை நாட்குறிப்புப் புகழ் ஆனந்தரங்கம் பிள்ளையின் எழுத்துலகப் புதுவாரிசு போல நாகரத்தினம் கிருஷ்ணா எழுத்து.  ஒரு பன்னாட்டுப் பின்புலத்தை வழக்கம்போன்று தமிழில் அசலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சார்பில் அதன் தலைவியாக இருந்த அன்னையின் எண்ணத்தில் உருவான பன்னாட்டு வாழ்விடமான ஆரோவில் என்ற விடியல் நகரில் தன்னை இணைத்துக்கொள்ள பிரான்சிலிருந்து புறப்பட்டுவரும் 27 வயது மீரா என்ற கலப்பினப் பெண்ணின் பார்வையில் அமையும் கதை. அங்கே அவளைப்போலவே வந்துசேர்ந்த அமெரிக்கப் பெண் ஜெஸ்ஸிகா கதையும் இது.

ஆரோவில்லில் வசிப்பதற்காகக் கனவுகளுடன் வந்த ஜெஸ்ஸிகா, மீரா என்ற இருவரையும் ஆல்பர்ட்டும் துய்மோனும் தங்கள் பாலியல் இன்பத்திற்கு மதுப் போதையூட்டி வல்லுறவு கொள்ளும்போது சிதைந்து சிதறுகிறார்கள். இதுபோன்றே ஆரோவில்லில் நடக்கும் நில அபகரிப்பு முதலிய அநீதிக்குக் குரல் கொடுக்கும் புரட்சிப் பெண்ணான நர்மதாவும் இந்தப் ஆன்மிகப் பொறுக்கிகளால் சீரழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகிறாள். இந்த வல்லுறவு அரக்கர்களை மீராவும் ஜெஸ்ஸிகாவும் அசாமின் பிள்ளை பிடிக்காரர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக்கிக் கும்பலால் அடித்துக் கொல்லப்படுமாறு நீதி தேடிக்கொள்வதுதான் கதையின் சாரம்.  இங்கே ஆரோவில் என்ற உயர்ந்த இலட்சியத்தைச் சிதைக்க புல்லுருவிகள் ஊடுருவியிருப்பதை நுட்பமாக ஆசிரியர் கதைப்படுத்தியிருக்கிறார். ஆன்மீகம் வணிக மயமாவதோடு இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டுக்கும் இடமளிப்பதை கண்முன் நிறுத்துகிறார். அதற்கிடையே இத்தகைய ஆன்மிகச் சோதனை முயற்சிகளுக்குப் பின் புதுக் காலனிய நோக்கங்கள் ஏதாவது ஒளிந்து கொண்டிருக்கிறனவா என்ற கேள்வியையும் மாதவன் போன்ற கதை மாந்தர்கள் வழியாக எழுப்புகிறார் ஆசிரியர்..

இந்தக் கதை உண்மையில் பாலியல் வன்முறையை மையமாக வைத்து எழுந்த கதை அல்ல. ஓர் ஆன்மிகச் சோதனைக்கு வந்த சோதனையைப் பற்றிய உரத்த சிந்தனையின் கதை வடிவம்.  இங்கே யார் மீதும் சேற்றை வாரிப் பூசும் எண்ணம் தெரியவில்லை. ஆனால் சில உண்மைகள் கசக்கத் தானே செய்யும். காந்தியை அரவிந்தர் சந்திக்கவில்லை என்பதும் அதற்கு யார் காரணம் என்பதும் மண்டையைக் குடைகின்றன. அதுபோல இந்திய விடுதலை நாளை அரவிந்த ஆசிரமம் புதுவை பிரெஞ்சு அரசுக்கு அஞ்சிக் கொண்டாடவில்லையாமே. மாநில மைய அரசுகள், ஐ.நா. போன்ற அமைப்புகளோடு சேர்ந்து ஆரோவில் என்ற உலக ஆன்மீக மையத்தை உருவாக்கச் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கிக்கொண்டார்களாமே. அதற்காக அவர்கள் போராடி மடிந்துகொண்டிருந்தார்களாமே. இதெல்லாம் ஆன்மிகப் புளிச்சேப்பக்காரர்களுக்குத் தெரியாதா என்ன? இதை யாரும் இதுவரை சொல்லிக் கேட்டதில்லையே. இந்த நாவலில் நால்வகை ஆசிரமத்திற்கு அப்பால் கிருஹஸ்த சந்நியாசம் என்ற கலப்புவகை ஒன்றைப் பேசுகிறார். வேடிக்கையாக இருந்தது.

இங்கே வரலாற்றுக் காலத்தில் எண்ணிறந்த பிரமதேயங்களை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி வேளாண் குடிகளின் நிலத்தைப் பறித்துச் செப்பேடு செய்த நம் மூவேந்த மன்னர்களின் ‘வரலாற்றுப் பெருமைகளை‘ நினைத்துப் பார்க்கலாம். அதில் இப்படிப்பட்ட எண்ணிறந்த பிரமதேயங்களை உருவாக்கிச் செப்பேட்டில் எழுதிக்கொடுத்து அந்த நாட்டில் செம்புக்கே பஞ்சம் வந்துவிட்டதாம். இன்னும் தமிழர் யாரும் படிக்காத அந்தச் செப்பேடுகளின் (தளவாய்புரம் செப்பேடு)வடமொழிப்பகுதியில் சூத்திரர்கள் இந்த நிலங்களை ‘ஆக்கிரமித்துக்கொண்டதாகவும்’ தமிழ்ப்பகுதியில் ‘மறக்கேடு செய்ததாகவும்’ எழுதிவைத்திருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் இப்போராட்டங்களில் கொலையும் விழுந்திருக்கிறது [வெ.வேதாசலம், ‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’ (ஊர்பிரம்மதேயம் வணிக நகரம், படைப்பற்று), தனலட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர், 2019பக்.108-109]. இங்கே முதலில் நிலத்தைப் பறித்தவன் அதாவது இன்றைய ஆட்சிமொழியில் கையகப்படுத்தியவன் அரசன்தான்.   வேளாண்குடிகள் அதை மீட்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் வரலாறு தலைகீழாகச் சொல்கிறது. இதுதான் பண்டைத்தமிழர் மன்னர் பாராண்ட பெருமை. இதுதான் இன்றும் நடக்கிறது..

இந்தக் கதையின் இன்னொரு தளம் புதுவையின் அறியப்படாத வரலாறு. இங்குள்ள மக்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று அவர்களுக்காக இந்தோ சீனா போன்ற இடங்களில் குருதி சிந்திய வரலாறு. இந்த வரலாறுகளையும் புதுவையின் விடுதலைக்கு முந்திய இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் இருளடைந்த ஏடுகளையும் மாதவன் தாத்தா சதாசிவம் சைகோனிலிருந்தும் அத்தைப்பாட்டி வேதவல்லி புதுவையிலிருந்தும் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் வாயிலாக நம் கண்முன்னே நிறுத்துகிறார். இங்கேயும் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் மாதவி கடிதப் பரிமாற்றம்போல அமைந்து சிலப்பதிகாரத்தை நினைவூட்டுகிறது.

சிலப்பதிகாரத்திற்கும் இந்தப் புதினத்திற்கும் வேறு சில ஒப்புமைகளும் தென்பட்டன. சிலப்பதிகாரத்தில் முற்பிறப்புக் கதை வருவதுபோல முன்தலைமுறைக் கதை வருகிறது. அதில் மீராவைப் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆல்பர்ட்டும் ஜெஸ்ஸிகாவை அதே செயலுக்கு ஆளாக்கிய துய்மோனும் அதே துன்புறுத்தலை ஒரு தலைமுறைக்குமுன் மீராவின் தாய்க்குச் செய்து அதன் விளைவாகப் பிறந்தவள்தான் மீரா. எனவே மீரா தன் தந்தையர்களைத்தான் பழி தீர்க்கிறாள். நாட்டுப்புறக் கண்ணகி கதை முற்பிறப்பில் கண்ணகியைப் பாண்டியனின் மகள் என்று கூறும். ஏன் கண்ணகியே சிலம்பின் வாழ்த்துக் காதையில் ‘தென்னவன்தீதிலன்; தேவர்கோன்தன் கோயில் நல்விருந்துஆயினான்; நான்அவன்தன்மகள்’ (வாழ்த்துக்காதை) என அவனைத் தந்தையாகவும் கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே இது ஒத்துப் போகிறது. மனிதனின் ஆழ்மனம் மீண்டும் எழுந்து வருகிறதோ? சிலப்பதிகாரத்தில் கிளைக்கதை போலவும் கடிதம் போலவும் வரும் சதாசிவம், வேதவல்லி கிளைக் கதைகள் இன்னொரு புறம். இறுதியாகச் சிலப்பதிகாரப் பதிகத்தில் வரும் சாத்தனார் போலச் சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் க. பஞ்சாங்கத்தின் அருமையான முன்னுரை. எல்லாம் கச்சிதமாகப் பொருந்துவது வேடிக்கையாக இருந்தது. 

இங்கே வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், பின்புலம் எல்லாம் உண்மைதான். ஆனால் அவை கோத்துக் கொண்டு நாடகக் கோவையாக வருவது செயற்கைதான். மேலும் வாழும் அல்லது வாழ்ந்த மனிதர்களுக்கு அரிதாரம் முதலிய ஒப்பனைகள் செய்து அவர்களை நாடகக் கதைமாந்தர்களாக உலவவிடுவது படைப்பாளரின் திறமை. இந்த நாடகமயமாக்கலும் பாத்திரத் தேர்வும் பொருத்தமாகவே வந்திருக்கின்றன. மீரா என்ற கதைசொல்லிக்குள் இருந்த உண்மை மீராவும் மனச்சாட்சியாய் வெளிப்படும் இன்னொரு மீராவும் கதையின் முதல் பகுதியில் வெளிப்பட்டது போலப் பிற்பகுதியில் அதிகம் வெளிப்படவில்லை. வருணனை, உரையாடல் முதலியவை இவர் நல்ல கதைசொல்லி என்று சொல்லும்படியிருக்கின்றன. சில இடங்களில்நடையில்கொஞ்சம் இறுக்கம் தெரிகிறது. ஒருவேளை ஆசிரியரின் பன்மொழிப் புலமையும் அறிவுசார் நடையில் எழுதும் பயிற்சியும் பாத்திரங்களின் பின்னணியும் இதற்குக் காரணமாகலாம். பிரெஞ்சுப் பேச்சு மொழி இடையீடுகளைப் பின்னிணைப்பில் தந்ததற்கு மாறாக வருமிடங்களிலேயே தமிழ் விளக்கத்தை அமைத்திருந்தால் வாசகருக்கு எளிதாக இருக்கும். கதை படிக்கிறவருக்குப் பின்னிணைப்பைப் பார்ப்பதற்கு எங்கே பொறுமை? அங்கே அதற்குரிய பக்க எண்ணையும் கொடுத்திருக்கலாம்.

இந்நாவலை அழகுற வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தையும் பாராட்டவேண்டும்.

மின்னஞ்சல்: nachimuthutamizhkina@gmail.com

நன்றி : காலச்சுவடு

நிசப்த நடனம் : இருதலைக் கொள்ளி எறும்புகள்

அனைத்து விலங்குகளினும் பார்க்க மனித விலங்குகள் மேம்பட்டவை, காரணம் இவற்றுக்கு புலன்களால் உணரப்பட்டதை  பகுத்தாயும் திறனுண்டு, ஆனால் மனிதர் கூட்டத்தின் பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். நரி, ஓநாய், சிங்கம் புலி,கரடியின் உருவங்கள்,  நேரடியாக அவ்விலங்குகளின் வலியத் தாக்கும் தன்மையை மான், முயல், ஆடு மாடுகளுக்கு உணர்த்திவிடும், அதன் விளைவாக கொடியவிலங்குகளைக் கண்ட மாத்திரத்தில் ஓடி மறைந்தும், இயலாதபோது அவற்றின் வயிற்றுப்பசிக்கு இரையாகியும் சாதுவான விலங்குகள் தங்கள் கானகச் சமூககத்தின் நியதிக்கு உட்படுகின்றன.

மனிதர் கூட்டம் கற்காலத்தில், ஏனையை விலங்குகளைப்போலவே   வயிற்றுப்பசிக்கு வேட்டையாடி வாழ்ந்தது, இவ்வேட்டையில் சகமனிதனையும் தின்று பசியாறியது. மனிதன் இருண்ட கானகவாழ்க்கையில் அலுத்து, தன் துணை தன் மக்கள், தம்முடைய சுற்றமென கூடி வாழ முற்பட்டு, வேட்டையை நம்பியல்ல விவசாயம் செய்தும் பசியாற முடியும் என்றுணர்ந்த மாத்திரத்தில் வெளிகளைத் தேடினான், தொடர்ந்து குடும்பங்களும் சுற்றமும்  ‘நான்’,  ‘நாம்’ என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதன் காரணமாக ஊர், நகரம் தேசமென சேர்ந்து வாழ ஆரம்பித்து, கற்காலத்திலிருந்து மனிதன் வெகுதூரம் விலகி வந்திருந்தான். எனினும் அவனுடைய அடிப்படைப் பண்பிலிலிருந்து விலகினானா ? என்பது கேள்வி,  ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சக விலங்கை சக மனிதனை வேட்டையாடி விளயாடினானே, பிற உயிர்கள் வலியில் துடிக்க கொன்றானே, அவற்றின் உடலைக் கிழித்துப் பசியாறினானே, அக்கொடிய குணம் அவனிடம் இன்றில்லையா?

வேட்டை மனம், அதற்கு அடிமைபட்ட உணர்வுகள் இன்றைக்கும்  இருக்கவே செய்கின்றன. இன்றிவன் கற்கால மனிதனில்லை, நிர்வாணமாக திரிந்தவனில்லை, பகுத்தறியத் தெரிந்தவன், காலத்திற்கேற்ப, சூழலுக்கு ஒப்ப, உயிர் வாழ்க்கைக்கு மாற்று வழிமுறைகளை உபாயங்களை, தந்திரங்களைக் கண்டறியக் கூடிய புத்திசாலி. பச்சையாக, கைவினைக்கு உட்படாமல்,  சமைக்காமல் மென்று விழுங்கிய, தின்று பசியாறிய கற்கால அநாகரீக மனிதனில்லை. இவன் நன்றாக உடுத்தத் தெரிந்தவன், தலைவாரத் தெரிந்தவன், மேடையில் நாகரீகமாகப் பேசத் தெரிந்தவன், அரசியல்வாதி, அதிகாரி, பேராசிரியன், எழுத்தாளன் என்கிற சமூக அடையாளங்கள் இருக்கின்றன. இவன் வேட்டையாடவேண்டிய அவசியமில்லை இவனுக்குப் பதிலாக வேட்டையாடவும், தோலுரிக்கவும், செத்த உடலை உப்பு காரமிட்டு விரும்பினால் தீயிலிடவும்   விரும்பாதபோது கூலிகளைக்கொண்டும் தமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.   இன்றைய பங்காளிச் சண்டை, சாதிச் சண்டை, இனச் சண்டை, எல்லைச் சண்டை, உலகப்போர் என அனைத்துமே வேட்டை மனத்திலிருந்து மனிதன் விலகவில்லை என்பதன் சாட்சியங்களே, பலியாகும் உயிர்களின் வதைகளை, அழுகுரலை இன்றும் வேட்டையாடும் மனித விலங்குகளன்றி வேடிக்கைப் பார்க்கும் மனித விலங்குகளும் பொருட்படுத்துவதில்லை, அதற்கு அவரவர்க்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன,

உள்ளூர் சண்டையில் ஆரம்பித்து உலகப்போர்வரை நீயும் நானும் ஒன்றல்ல என்கிற பகை உணர்வின் வெடிப்பு. உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஓர் இனம் மற்றோர் இனத்தை அழிப்பது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலும் தொடரவே செய்கிறது. « ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது »  இனப்படுகொலை. இந்த சொல் அண்மையில் (1943) ஞான ஸ்னானம் பெற்றது என்கிறபோதும், மனித குலம் தோன்றியதிலிருந்தே ஊர்ச்சண்டையில் ஆரம்பித்து உலகச்சண்டைவரை இனப்பகையை மையமாகக் கொண்டவை. அமெரிக்கா, ஆப்ரிக்கா ஐரோப்பா என எந்தக் கண்டமும் மானுடத்தை அவ்வப்போது தாக்குகிற இனப்படுகொலை என்கிற இப்பேரிடருக்கு தப்பியதில்லை.

 ‘நிசப்த நடனம். பிரதீபன் ரவீந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ள  தமிழ்த்  திரைப்படம், ஓர் ஆவணப்படம், கலைப்படம். 1983ல் தொடங்கி 2009 நீடித்த, சிங்களப் பெரும்ம்பான்மை தமிழின சிறுபானமையை சீரழித்த, கொன்று குவித்த, திக்குதிசையின்றி பின்னவர்களை தேசாந்திரிகளாக அலையவிட்ட ஓர் அவலச் சரித்திரத்திரத்தை திரைப்படக் கலை என்கிற தூரிகைக்கொண்டு காலத்தால் அழியாதச் சித்திரமாக இந்த ஈழத்துக் கலைஞர் உருவாக்கியிருக்கிறார். இப்படைப்பில் எழுத்து, இயக்கம், நடிப்பு இது தவிர திரைபட ஆக்கத்தின் பிறபணிகளுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்த வாழ்க்கைக்கு சபிக்கபட்டவர்கள் இருவகை. அகதியாக வந்த  நாட்டிலும் பிறந்த மண்ணையும் உறவையும் அவர்களுடன் தொலைபேசியிலும், கடிதங்களிலும் நினைத்தது போக, « தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்  வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்  கூற்றுக் கிரையாகிபோனபின்,  புலம்பெயர்ந்த நாட்டிலும் தோற்றம்  — மறைவு என விளம்பர சுவரொட்டிகளுடன் வேடிக்கை மனிதராக முடிகிறவர்கள் முதல்வகை. இரண்டாம்வகையினர் நிசப்த நடனம் கதை நாயகன் சிவா போன்றவர்கள், அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள், உயிரை சொந்தமண்ணிலும், உடலை வந்தமண்ணிலுமாக நிறுத்தி அவதிப்படுகிறவர்கள் : உறக்கம், விழிப்பு, பணி நேரம் ஓய்வு, நடக்கும் போது, மெட்ரோ, பேருந்து என பயணிக்கும்போது, கிட்டத் தட்ட அல்லும் பகலும் ஊர், உறவு, தோட்டம் துரவு, சொந்தம் பந்தம்என்கிற நீங்காத நினவுகளின் இணைகோடுகளாக நீளும் யுத்தம், படுகளம், அதன் கொடூரம்,  அனாதைகளாக்கபட்ட மனிதர் வாழ்க்கை என்கிற ஆழ்கடல் நினைவுகளில் தத்தளிக்கிறான்.

இலங்கை உள்நாட்டுப்போரில் 2009மறக்கமுடியாத வருடம்,  ஆயுதம் ஏந்திய தமிழர்களை மட்டுமல்ல பல ஆயிரம் அப்பாவி தமிழர்களையும் பலிவாங்கிய  யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டு. தனிமனித தாக்குதல்களுக்கு சட்டமுண்டு, விசாரணையுண்டு, சாட்சியங்கள் உண்மையெனில் தண்டனையுண்டு, இங்கே தாக்குதலை நடத்டதியது, கொலைகாரர்களாக மாறியது அரசியல் சாசனப்படி அதிகாரம் பெற்ற அரசாங்கம். தமிழர்கள் அனைவரையுமே அவர்கள் விடுதலைப் புலிகளாக பார்த்தார்கள், தமிழினத்தை அழிப்பதற்கு, அவர்கள் கோரிக்கைகளை நீர்த்துப்போகச்செய்ய, ஒட்டுமொத்த தமிழினத்தைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க இப்பார்வை அவர்களுக்கு சௌகரியத்தை அளித்தது.

நிசப்த நடனத்தின் கதைக்களத்தின் காலம் இதற்கு முந்தைய பத்தியில் கூறியதுபோல 2009. புலம்பெயர்ந்த ஐரோப்பிய மண்ணில்  தமிழ் ஈழப் பதாகைகளை ஏந்தி, தங்கள் படும்பாட்டை உலகமக்கள் புரிந்துகொள்ளவேண்டி தமிழர்கள் பங்கேற்கும் ஊர்வலங்களுடன் படம் தொடங்குகிறது. சிவா என்ற இளைஞனின் புலம் பெயர்ந்த வாழ்க்கை பற்றிய கதையென்பதால் பிரான்சு – இலங்கையென காட்சிகள் மாறி மாறி வருகின்றன.  

சிவா, ஈழத் தமிழ் இளைஞன், ஐரோப்பாவிற்கு உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க, வருகிறான், தனக்காக மட்டுமல்ல போரினால் வதைபடும் தன்பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பும் அவனைத் துரத்த அங்கே இங்கே என்று அலைந்து பிரான்சு நாட்டில் அடைக்கலம். பிரான்சு விருப்பத் தேர்வு அல்ல, அவனுடைய விதியின் தேர்வு. தொடக்க காட்சியில்  சிவா ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், ஒரு பிரெஞ்சு அதிகாரியுடன் தனது அகதி விண்ணப்ப நிலைப்பாடு குறித்து பேசுவதாக காட்சி. அதிகாரி, இலங்கை அரசாங்கத்தால் சிவாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தாலொழிய அகதி அந்தஸ்து கிடைக்காதென தெரிவிக்கிறார். உடன் வந்த மொழிபெயர்ப்பாளர் நீ கவலைப்படாதே எனக்குத் தெரிந்த சடடத் தரணியிருக்கிறார், அவரை வைத்து பிரச்சினையை முடித்து விடலாம், இதற்கான சில கதைகள் என்னிடம் இருக்கின்றன, எனத் தெரிவித்து அவரே சிலகுறிப்புகளை தருகிறார். சிவா நடந்த உண்மைகளைத்தானே தெரிவிக்கமுடியும் எனக்கேட்க, இங்கே அகதிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் அனைவரும் செய்வதுதான், அதுபற்றிய கவலைகள் உனக்கெதற்கு, எனக்கு நீ 850யூரோ கொடு, அனைத்தையும் நான் பார்த்துகொள்கிறேன் என்கிறார். தொடரும் காட்சியில் இலங்கை, சிற்பான்மையின்ரான தமிழர் பகுதி, சிறு வீடு வெள்ளந்தியாக மூன்று சிறுவர்கள், யுத்தநிழலில் வாழ்கிறோம் என்பதைக்கூட அறியாத விளையாட்டுப்பருவம். மீன் தொட்டி, அதிலுள்ள மீன்கள் குறித்தும் அம்மீன்கள் வாயால் குஞ்சுபொறிக்குமென வியப்புடன் வார்த்தைகளை உச்சரிக்கும் நேர்த்தியில் நமது பார்வை அவர்களுடைய அப்பாவித்தனமான முகங்களில் தேங்கி நிற்க, மறுகணம் நம் நெஞ்சத்தை உலுக்குகின்ற வகையில் குண்டடிப்பட்டு சிறுவன் சாகிறான்.  தொடர்ந்து பாரீஸில் கணிணியில் சிவா,யுத்தகளங்களை தேடிக்கொண்டிருக்க, திரையில் கிளிநொச்சி, முல்லைத் தீவு இராணுவத் தக்குதல்களுக்குப் பலியாகும் மக்கள், இடிபாடுகள், அழுகுரல்கள் சொந்தநாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய நெருக்கடி. இது தவிர சிவாவை தனிமனிதனாக மன உளைச்சலில் தவிக்கும் நோயாளிபோல காட்டும் இடங்களிலெல்லாம் ஜெயிப்பது கேமராவா, சிவாவா என முடிவெடுப்பது கடினம்.   அகதியாக வாழ்கிற மண்ணில் தன்வாழ்க்கைக் கண்டு நிறைவுறாமல், தாயுடன் கைத்தொலைபேசியில் சிவா உரையாடுவதுபோன்ற காட்சிகள் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.   « கதியா காசு அனுப்புகிறேன் » என பல காத தூரத்தில் இருக்கிற தாய்க்கு மகன் தரும் உத்தரவாதமும் ; ஊரில் நாட்டைவிட்டு வெளியேறவிருக்கும் நண்பனுடன் வாதிடும் புலிப்படையைச் சேர்ந்த நண்பன் ‘துவக்கு’(துப்பாக்கி) விஷயத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையை விவரிக்கும் வசனங்களும்,  நடத்தும் வாதமும் ;  பாரீசில் சிவா வேலை செய்யும் உணவு விடுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடுகொண்ட நண்பரும், அவர்களால் என்ன பலன் கண்டோம் என வாதிடும் நண்பரும் ஒரு கட்டத்தில் உரத்து விவாதிக்க, அதற்கு எதிரிவினையாக சிவா சன்னற் கதவை பைத்தியக்காரன் போல கைகளால் திரும்பத் திரும்பத் தாக்குவது, அனைத்துமே படம் முடிந்தபின்னரும் நம்மை தொடர்ந்து வருகின்றன.

திரைபடமே சிவாவுடையது, சிவாவின் கடந்தகாலம் நிகழ்காலம் ; சொந்த மண் அந்நிய மண் ; இந்த  இரண்டும் கெட்டான் வாழ்க்கை தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்  குறிப்பாக அப்பாத்திரம் தனிமைக்கு ஆட்படும்போதெல்லாம் ஒரு வித பதற்றத்திற்கு பலியாவது ஒரு தேர்ந்த கலைஞனாக பிரதீபன் இரவீந்திரனை நமக்கு அடையாளப்படுத்துகிறது. திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் காய்ந்து தீயில் கறுகி வீழ்ந்து கிடக்கும் பனைகள், பசுமாட்டின் அழுகுரல், கூடாரக் குடிமக்களாக விதிக்கபட்ட மனிதர் வாழ்க்கை, தாயின் கேவல், பசியில் ஓலமிடும் பச்சிளம் குழந்தை, குழந்தையை தோளில் சுமந்துகொண்டு நீரில் இறங்கும் சிவா போன்ற காட்சிகளைச் சகித்துக்கொள்ள கனத்த இதயம் வேண்டும். போதாதற்கு காற்றும் உரத்து ஒலித்திட ஓர் அசாதாரண நிசப்தம், படம்பார்க்கிற எந்த மனமும் சிவா படும்பாட்டிற்கு, அல்லது சிவாவின் இருப்பிற்கு தன்னைத் தாரைவார்க்கும் எனபது உண்மை.   பிரதீபன் இரவீந்திரன் ஒரு மகா கலைஞன். உலக அளவில் விரைவில் அங்கீகரிக்கப்படுவார் என்பதென் பரிபூரண நம்பிக்கை.

நன்றி : அம்ருதா செப்டம்பர் 2023

—————————————————————————-