வரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து

அத்தியாயம் – 23

புதுச்சேரி (1)

1934 பிப்ரவரி  17…..

« …..ஏன் ஹரிஜன் என்று பெயர்வைக்கவேண்டும், எனப் பலர் என்னிடம் வினவுகிறார்கள். வினவும் அன்பர்கள், நம்முடைய ஹரிஜன சேவா சங்கத்தினராக இருக்கமுடியாது.  « ஹரிஜன் என்கிற பெயர் எதற்காக,  இதைவிட வேறு நல்ல பெயர்  உலகில் இல்லையா ? »எனறு சிலர் முணுமுணுத்ததையும் காதில் வாங்கியுள்ளேன்.   ஹரிஜன் என்ற சொல் அசாதாரணமானது என்பதை  நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இச்சொல்லுக்கென்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஒட்டுமொத்த மனிதர்களையும் கடவுளின் குழந்தைகளாகவே அன்றைக்குப் பார்த்தனர். தற்போது அச்சொல் வழக்கில் இல்லை என்பதால் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கருதக்கூடாது. ஒருமுறை நம்முடைய அபிமானி ஒருவர்  « ஒடுக்கப்பட்ட மனிதரென்று சித்தரிக்கிற எந்தப் பெயரும் எங்களுக்கு வேண்டாம் » எனத் தெரிவித்தார். அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டதால், நீங்களே ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள் என்றேன். குஜராத் கவிஞர் நரசிம்ம மேத்தா, தமது கவிதைகளில் பல இடங்களில் கையாண்ட ‘ ஹரிஜன் ‘ என்ற சொல் பரவாயில்லையா என வினவினார். மறுகணம், என் சந்தோஷத்திற்கு அளவில்லை. மிகப் பொருத்தமான பதமாக எனக்குத் தோன்றியது. தமிழில் « திக்கற்றவருக்குத் தெய்வம் துணை என்கிற பழமொழி » இருப்பது எனக்குத் தெரியும். அக்கூற்றிற்கு மிகப்பொருத்தமாக அமைந்த ஒரு சொல், ‘ஹரிஜன்’.  அவர்கள் கடவுள்களின் குழந்தைகள்; அக்குழந்தைகளை வாரி அணைக்க, முத்தமிட நாம் பாக்கியவான்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஹரிஜனக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஹரிஜன மக்கள் அல்லாதோர் பலரது மனசாட்சியை என்னுடைய  போராட்டம் உலுக்கியது என்ற உண்மையைப் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம். இப்போராட்டத்தின் காரணமாகப் பிறந்ததே நம்முடைய ஹரிஜன  சேவா சங்கம். அதன் கிளைகளில் ஒன்றை  இன்று உங்கள் புதுச்சேரியும் கண்டிருக்கிறது. சேவாதள அன்பர்கள் தீண்டாமை ஒழிப்பிற்கு அயராது பாடுபடுவார்கள்  என மனப்பூர்வமாக நம்புகிறேன். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியசொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி  மக்களைக் காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே  ஜாதி மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் புதுச்சேரி அன்பர்கள் போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை  எனக்கு இருக்கிறது. சமூக விழிப்புக் கொண்ட புதுச்சேரி சனங்கள் எனது அபிலாஷையைப் பூர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் »

காந்தி உரையை முடித்துக்கொண்டார்.புதுச்சேரி ஹரிஜன சேவா சங்கத்தின்  ஏற்பாடு. காலை நேரம். ஒதியஞ்சாலைத் திடலெங்கும் சமுத்திரம்போல மக்கள் கூட்டம். எங்கும் மாவிலைத் தோரணங்கள். புழுதி மண்டலம்.புதுச்சேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் திரண்டிருந்தார்கள். முன்னதாக மகாத்மாவை வரவேற்ற, சேவா சங்கத்தின் தலைவர் சவரிநாதன், காந்தியின் தென் ஆப்ரிக்க அரசியல் சம்பவங்களை நினைவு கூர்ந்து காந்தி, இந்த நூற்றாண்டின் மிகப் பெரியமனிதர் என்றார். 

இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசவோ, பிரெஞ்சுக் காலனி அரசுக்கு எதிராக எதையாவது கொளுத்திப்போடும் யோசனையோ கூடாதெனக் காலனி நிர்வாகம் தெளிவாக விழா ஏற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தது. ஆட்சிக்கு எதிராகக் காந்தி வாய் திறக்க வரவில்லை. பதிலாக இந்தியர்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது எனப்பேச வருகிறார் எனக் காலனி அரசுக்குச் சொல்லப்பட்ட சமாதானம் ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு  ஏற்புடைய விஷயம்.

காந்தி மேடையிலிருந்து இறங்கும்போது கூட்டத்தில் ‘மகாத்மா காந்திக்கு ! ’ என்றார் ஒருவர். தொடர்ந்து வழிமொழிவதுபோலப் பல குரல்கள் ஜே ! ஜே ! என்றன. மேடையில் பிரிட்டிஷ் இந்தியக் காங்கிரசாரின் சீருடையில் இருந்த ஒருவர், ‘வந்தே மாதரம்’ என முழங்க, « அதெல்லாம் கூடாதுப்பா » என்று விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் உரத்த குரலில் கையை உயர்த்திக், குரல்களை அடக்கினார். இதையெல்லாம் கூர்மையாக அவதானித்தபடிக் கூட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த காவல் அதிகாரி முகத்தில் திருப்தி. அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடக்கூடாதென்கிற கவலை அவருக்கு. அலுவலகத்திலிருந்து பந்தோபஸ்துக்கெனச் சிப்பாய்களுடன் கிளம்பியபோது சகுனம் பார்த்தார்.முதல் நாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று அர்ச்சனையும் செய்திருந்தார். ஐரோப்பியருடன் சகவாசமென்றாலும் இவற்றையெல்லாம் விட முடிகிறதா என்ன ?  தமது தலைக்குக் கேடு வரக்கூடாதென்கிற கவலை அவருக்கு.

அவர் கவலைக்குக் காரணங்கள் இருந்தன. இரண்டுவருஷத்துக்கு ஒருமுறை கவர்னர்களை மாற்றியும் புதுச்சேரிக் காலனிவாசிகளைக் கட்டி மேய்ப்பது பெரும் சிக்கலாகவே இருந்தது. சிக்கல், வயலில் இறங்கி உழைத்த ஏழைவிவசாயிகளால் வருவதில்லை; வரப்பில் குடைபிடித்து உட்கார்ந்திருந்த சண்முக வேலாயுத முதலி போன்ற மிராசுகளால் வருகிறது. கூலிக்கு வலைவீசிய மீனவர்களால் பிரச்சனையில்லை; அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த செல்வராஜு செட்டியார் போன்றவர்களால் பிரச்சனை. ஆலைத்தொழிலாளிகளால் அல்ல, ஆலை முதலாளியான  கெப்ளே போன்ற ஐரோப்பியர்களின் அரசியல் விளையாட்டினால்  தீராத தலைவலி. மொத்தத்தில் பிரெஞ்சுக் காலனி அரசுக்குப் பெரும் சங்கடத்தை அளித்தவர்கள் புதுச்சேரிக் காலனியின் ஐரோப்பிய, இந்திய மேட்டுக்குடிகள்

.

பிரெஞ்சு மேட்டுக்குடிகள் எனில் அவர்கள் கிறித்துவக் குருமார்கள், காலனி அதிகாரிகள், ஐரோப்பிய வணிகர்கள். இவர்களைப் பொறுத்தவரை, « புதுச்சேரி இந்தியருக்கு ஐரோப்பியரின் அரசியலையோ, பண்பாட்டையோ புரிந்துகொள்ளப் போதாது ».  இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதோ, பிரான்சு மக்களவையில் பிரதிநிதித்துவம் தருவதோ அவர்களைப் பொறுத்தவரை ஆபத்தாக முடியும். புதுச்சேரி ஊரையும் இரண்டாகப் பிரித்து ஐரோப்பியர் ஒதுங்கி வாழ்ந்தனர். இந்திய மேட்டுக்குடியினர் இருவகையினர். முதலாமவர் பழமைவாதிகள்;இரண்டாம்வகையினர், ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் மோகம்கொண்டவர்கள். இந்தியப் பழமைவாதிகளுக்குத் தங்கள் பண்பாட்டில் ஐரோப்பியர் குறுக்கிடாதவரை காலனி ஆட்சி, ஐரோப்பியப்பண்பாடு- இரண்டின்மீதும் தங்களுக்குப்  பகையோ, வெறுப்போ இல்லை என்கிற மனநிலை.பிரெஞ்சுக் கல்வி கிடைத்த புதுச்சேரி வாசிகளுக்கு மேற்கத்திய பண்பாடு மேலானது; அவர்கள் வாழ்க்கைமுறை உயர்ந்தது.

 பிரெஞ்சுக் காலனி அரசின் மன நிலை என்ன? சைகோன் உங்களிடம் அது பற்றி விரிவாகப்பேசியிருக்குமென நினைக்கிறேன். புதுச்சேரி சார்பாக எனக்கும் சொல்ல இருக்கிறது. ஆட்சியென்பது அதிகாரம், நலன் என்கிற இருசொற்களுக்குச் சொந்தமானது. இரண்டுமே ஆட்சியாளர்களுக்கானது. இதற்காக எதையும் அவர்கள் செய்வார்கள். நல்லவேளை  எல்லைதாண்டிக் கொள்ளை அடிக்க இன்றைய ஆட்சியாளர்களுக்குச்  அதிகம் சாத்தியமில்லை.  ஆனால் நேற்று இருந்தது. நேற்றெனில் இக்கதை நடக்கின்ற இருபதாம் நூற்றாண்டுவரை. ஒரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டுமா, அவனைச் சிறுமைப்படுத்து, உன்னை உயர்ந்தவன் என்று நம்பும்படிச் செய்.இதுதான் சகமனிதர்களை ஒடுக்குவதற்குப் புத்திசாலிகள் கடைப்பிடிக்கும் தந்திரம். காலனியத்தின் கொள்கையும் இதுதான். இலாபம் , முதலீட்டாளர்க்கு என்கிற வணிக அரசியலுடன் உள்ளே நுழைந்தவர்கள், காலனி நாடுகளின் சமூக அமைப்பையும், அவலங்களையும் ஆதிக்க அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். சந்தேகித்த காலனி மக்களிடம் ‘Civilizing Mission’க்காக வந்திருக்கிறோம் என்றார்கள், ஏதோ காலனிவாசிகள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைப்போல.

ஐரோப்பியர்களுக்கிடையிலான காலனிப் போட்டியில் அதிகம் ஜெயித்தது ஆங்கிலேயர்கள்.  அரசியல் யுத்தத்திலும், ஐரோப்பியரல்லாத  பிறர் மீதான மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்பிலும் ஆங்கிலேயர் அடைந்த வெற்றி உலகமறிந்தது.  ஒரு சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதற்கெனவே அண்டைவீட்டுக்காரன் அமைந்து விடுவதுண்டு. பிரிட்டிஷ் முடியாட்சி, பிரெஞ்சு முடியாட்சிக்கு அப்படி அமைந்த அண்டைவீட்டுக்காரன். பங்காளிகளுக்குள் நடந்த சண்டைகள், சமாதானங்கள் என்கிற நீண்டகால அரசியலிலும் ஆங்கிலேயர் கைகளே ஓங்கி இருந்தன.

ஐரோப்பியர்களுக்கிடையிலான ஏழாண்டுப்போர் முடிவில் ஜெயித்த இங்கிலாந்து, தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை « பாவம் நீ என்ன செய்வ ,மொத்தத்தையும் நான் எடுத்துக்கக் கூடாதில்லையா » என பிரான்சுக்குத் தானமாக அளித்தவைகளில் பிரெஞ்சிந்தியக் காலனிகளும் அடக்கம். இது நடந்தது 1763இல். அதன் பின்னர் இருவரும் உனக்கா எனக்காவென நடத்திய  குடுமிப்பிடிச் சண்டையில்   பாரீசுக்கும் இலண்டனுக்குமெனப் பந்தாடப்பட்டு  பிரெஞ்சிந்தியக் காலனிகள், மீண்டும் ஒருபோரின் முடிவில் தோற்ற பிரான்சு வசம், பிரிட்டன் சில நிபந்தனைகளுடன் 1815ல் பிரெஞ்சிந்தியக் காலனிகளைத் திரும்ப ஒப்படைத்தது.  காலனிய அரசியலில் பிரான்சுக்கு, இங்கிலாந்துடன் ஒப்பிடுகிறபோது « கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்டக் காலில்லை » என்கிற கதைதான்.

பிரிட்டிஷ் முடியாட்சி இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகளில் அதிகம் தலையிடுவதில்லை. இந்தியப் பண்பாடுகளின் கட்டமைப்பை இடித்து மாற்றி எழுப்புவது எளிதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சுரண்டவந்தோம், அதைச் சரியாகச் செய்வோம் என்ற மனநிலையில் அவர்கள் இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சியூடாக மனிதர் உரிமைக்கு வாதிட்ட பிரான்சு அரசாங்கத்திற்கு மனசாட்சி உறுத்தி இருக்கவேண்டும். சைவப்பூனையாக அவதாரம் எடுத்தது. சைகோனில் பேசாத மனிதர் உரிமையைப் புதுச்சேரியில் பேசியது. இந்தியர்களுக்கு, ‘ பிரிட்டிஷ் ராஜ்’ ஐக் காட்டிலும் ‘பிரெஞ்சு ராஜ்’ மேலானது என்பதைச் சொல்லவேண்டும். பிரெஞ்சு அரசு, காலனி மக்கள்  பிரெஞ்சுக் குடிமக்களாக மாறுவதற்கு உதவும் அரசாணையைப் பிறப்பித்தது. மாறிய காலனி மக்கள் இந்தியப் பிறப்பு வழங்கியுள்ள சமூக அடையாளத்தைத் துறக்கவும்,  பிரான்சுதேசத்துக் குடிமக்களுக்கு ஈடாகச்  சலுகைகள், உரிமைகள் பெறவும்  உறுதி அளித்தது. அரசாணைகளும் சட்டங்களும், விரைவான மாற்றத்திற்கு ஓரளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் அவை ஏட்டுச்சுரக்காய் என்பதுதான் புதுச்சேரியிலும், சைகோனிலும் பிரெஞ்சுக் குடியுரிமைபெற்ற புதுச்சேரிக் காலனிமக்களின் சொந்த அனுபவம்.

சைகோனுக்கும் புதுச்சேரிக்கும் அநேக விஷயங்களில் ஒற்றுமை இருந்தது.  ஆயினும் புதுச்சேரிமக்கள் இருநூறு ஆண்டுகாலம் கூடுதலாக அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்கிற பெருமைக்குரியவர்கள். இதைப் புதுச்சேரியாகிய நான்   சொல்லிக் கொண்டிருக்கிறபோது, வியட்நாம் மக்கள் அங்கே தங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. புதுச்சேரி சனங்கள் நாள், நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கூடிவந்தால் ஏதாவது நடக்கலாம். புதுச்சேரியில் ஆயிரத்தெட்டுச் சாதிகள். அவர்களை வழிநடத்தும் மக்கள் தலைவர்களுக்குத் தங்கள் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகள். 

———————————————————————————–

3 responses to “வரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து

  1. வணக்கம் மிசேவரலாற்றில் புனைவா புனைவில் வரலாறா என்று எளிதில் கூற இயலாவகையில் சுவாரசியமான நடை.புதுச்சேரியில் காந்தி ஆற்றிய உரை முழுமையாக உங்களிடம் இருக்கிறதா?எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? புதுச்சேரி வரலாற்று ஆவணங்கள் குறித்து நான் எழுதிக்கொண்டிருக்கும்கட்டுரை ஒன்றில் குறிப்பிட பயன் படும்.நன்றிஅன்புடன்நாயகர்

    Sent from Yahoo Mail on Android

பின்னூட்டமொன்றை இடுக