ஒரு கால கட்டத்தின் கலை இலக்கியத்தை வாசிப்பதென்பது, அக்காலகட்டத்தின் சமூகத்தையும், மக்களின் வாழ்நெறியையும் அறிதலாகும் கலைக்கூறுகள் எவ்வடிவமாயினும் அது பண்பாட்டின் அடையாளம். மனித இனம் தனது பண்பாட்டினை, உணவு, உடை, உரையாடும் மொழி, கொண்டாடும், பண்டிகை, ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகம் என வெளிப்படுத்துவதோடு திருப்திகொள்வதில்லை, அது சார்ந்த மகிழ்ச்சியை, துயரை, அச்சத்தை, கவலையை, கோபத்தை, வியப்பை, அன்பை, பரிவை, காமத்தை உணர்வுகளைக்கொண்டு தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களுடன் உரையாடவும் செய்கிறது, பார்த்தலும், நுகர்தலும், சுவைத்தலும், கேட்டலும், தொட்டுணர்தலும், நம்மைசுற்றியுள்ள நிகழ் உலகை புரிந்துகொள்ளவும் ; அப்புரிதலால் இசைந்தோ முரண்பட்டோ வாழ்க்கையை நகர்த்தவும் செய்கிறோம். இந்த அடிப்படை உணர்வுகள் இல்லையேல் பிரபஞ்சமே பொய் என்றாகிவிடும். சா. பாலுசாமி போன்றவர்கள் கடந்த காலத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். சிக்மண்ட் பிராய்டு கூறுவதைப்போல « சிதைந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ». பிராய்டு உளவியல் அறிஞர் என்பதால், தொல்லியல் முயற்சிகளுக்கு, உளவியல் அகராதியில் விளக்கம் தேடுகிறார். தொல்லியல் அறிஞர்கள் மானுடம் கடந்துவந்த பாதையைச் தேடிச்செல்பவர்கள்.காலத்தால் புலம்பெயர்ந்திருக்கும் மனித கூட்டத்திற்கு, புறப்பட்ட புள்ளியின் மகத்துவத்தை நினைவூட்டும் பணி.
மூதறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி « தமிழ் அழகியல் பற்றிய மதிப்பீடு, தமிழ்க்கலைகளின் ஒட்டுமொத்தமான மொத்தமான மதிப்பீட்டிலிருந்து வெளிவரவேண்டும் » என்ற ஒரு விருப்பத்தை நாயக்கர்கால கலைக்கோட்பாடு நூலின்அணிந்துரையில் தெரிவித்திருக்கிறார். தமிழ் நிலத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக்கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது ? எப்படி அடையாளப்படுத்துவது ? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தொடர்ந்து தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி :
« சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ …..வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச்(இந்திய) ஒழுங்கமைவு » என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.
இந்தியத் துணைக்கண்டத்தில் இலக்கியப் படைப்பாளிகளைப்போல பிறதுறைசார்ந்த கலைஞர்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை. நாமறிந்த தமிழகத்தில் ஓவியர் என்றால் பேனர் வரைபவர்கள், வீர சந்தாணத்தின் மரணத்தை சினிமா நடிகர் மரணமென சொன்னால்தான் தமிழர்கள் விளங்கிக் கொள்வார்கள் எனும் கொடுமை. ஐரோப்பிய நாடுகளிலோ குழாய் பழுதுபார்ப்பவர், ரொட்டி சுடுபவர் கூட கலைஞர்(l’artisan). இந்நாடுகளில் ஓவியம் சிற்பம் முதலான துறைகள் மட்டுமல்ல சமையல், நிழற்படம், ஆடை அலங்காரம், ஆபரணம், பேச்சு இப்படி அனைத்தையும் கலையாக பார்க்கும் மரபு. நமது மரபில் இன்றுங்கூட தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர் ஆகியோரை கலைஞர்களாகப் பார்ப்பதில்லை சாதிக்குள் அடக்கி, கலைக்கு புறத்தில் வைத்து தொழிலாளிகளாகப் பார்க்கும் விநோதம் உள்ளது. இத்தகைய சமூக ஒழுங்கமைவில் சா. பாலுசாமி போன்றவர்களின் உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘ அர்ச்சுனன் தபசு’நூலுக்கு வழங்கியிருக்கிற அணிந்துரையில் :
« ஆய்வு, நுட்பம், விருப்பு வெறுப்பற்ற நடுநிலை பிறழாத அணுகுமுறை, அறிஞர் தம் கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி காணும்பண்பு, தொன்மங்கள் குறித்த ஆழமான பார்வை, எல்லா மொழிகளையும் நேசித்து உண்மைகாணும் திறம், கலையியல் கோட்பாடுகளின் வெளிப்பாடு, ஜடமென உலகப் பார்வையில் திகழும் பாறையினை நம்மோடு பேசவைத்துள்ள பாங்கு » என ஆய்வாளர் தொழிற்பட்ட முறையைப் பாராட்டியுள்ளார். காரணம் நம்மிடத்தில் சார்பற்ற ஆய்வாளர்கள் குறைவென்பதை, அவர் நன்கறிவார்.
சா. பாலுசாமி நேற்றைய தமிழகம் அங்கீகரிக்க மறந்த முன்னிலை படுத்தத் தவறிய படைப்பாளிகளைக் குறிப்பாக ஓவியர்களையும் சிற்பிகளையும் அவர்கள் படைப்பூடாக பெருமைபடுத்துகிறார். இலக்கியத்திற்கு உ.வே. சா என்ன செய்தாரோ அதனையே சா.பாலுசாமி போன்றவர்கள் சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் செய்திருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் தொழில் செய்தோம், கருத்தரங்குகளில் கலந்துகொண்டோம், நான்கு ஐந்து ஆட்டோ ரிக்ஷாக்களை வாங்கிவிட்டு காசுபார்த்தோம் என்றில்லாமல் கள ஆய்வுக்கு நேரத்தை ஒதுக்கி, முடிவின்றி பயணம் செய்து இறுதியில் கண்டறிந்த உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
இது போன்ற ஆய்வுகளில் அக்கறைகொள்ள முதலாவது தேவை தேர்வு செய்த பொருள் குறித்து ஞானமும், பேரார்வமும். அடுத்ததாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருளைத் துல்லியமாக அவதானித்தல். இறுதியில் கிடைத்த தகவல்களை ஒரு முறைக்குப் பலமுறை பிற அறிஞர்கள் கண்ட உண்மைகளோடு ஒப்பீடு செய்து, நடுநிலமையோடு தம்முடைய கருத்தைப் பதிவு செய்தல். வருங்காலத்தில் இந்நூல்களெல்லாம் ஆய்வுக்கு உதவலாம் என்பதால் பொறுப்புடனும், கவனத்துடனும் அக்கருத்துக்களை பதிவுசெய்வதும் அவசியம். நண்பர் பாலுசாமி கூடுதலாகவே உழைத்திருக்கிறார் என்பதுதான் நூல்கள் தெரிவிக்கும் உண்மை.
அ. ஆய்வுப் பொருள் பற்றிய ஞானமும், பேரார்வமும்
செய்யும் தொழில் எதுவாயினும் அதில் முழுமையாக ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அதிலும் ஆய்வாளர்களுக்கு இக்குணம் பெரிதும் இன்றிமையாதது. ஆசிரியரின் நூல்களைப் புரட்டிப்பார்க்கிறபோது, ஏதோ கடமைக்குச் செய்தவரல்ல என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், தேர்வு செய்த தலைப்புகளிலும், அவற்றை அணுகும் முறையிலும், காட்டும் ஆதாரங்களிலும், அறிஞர்பெருமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி தேடிப்பெற்றதிலிருந்தும் அறிகிறோம் கீழ்க்கண்டவரிகளும் இத்துறைமீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன :
« 1933 ஆம் ஆண்டு டாக்டர் தயா எங்களை மாமல்லைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு நோக்கில் அவர் விவரித்தபோது ஏற்பட்ட கலையறிவும் கலையனுபவமும் எல்லையற்ற பரவசத்தை ஏற்படுத்தின. கலைச்சின்னங்களை அணுக வேண்டிய முறையும் புரிந்தது. பின்னர் அவருடனும் மாணவர்களுட னும் பலமுறை மல்லைக்குச் சென்றுவரும் வாய்ப்பால் பல்லவக் கலைகுறித்துப் பயிலும் ஆர்வம் தொடர்ந்தது » ( நூண்முகம், அர்ச்சுன ன் தபசு பக்கம் 19)
இந்நிலையில் குமர குருபரர் பாடுவதைப்போல :
« மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார் »
என்ற நிலைக்கு நமது ஆய்வாளரும் ஆளானார் என்பதைக் கீழ்க்கண்ட வரிகள் உறுதிசெய்கின்றன.
« ……..அவ்விளக்கங்களால் நிறைவுபெறாத மனநிலை தொடர்ந்து தேடச்செய்தது. ஆயினும் , நம்பத்தகுந்த உறுதியான முடிவுக்குப் பல்லாண்டுகளாக வர இயலவில்லை. இருப்பினும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு தீவிர மனநிலையோடு தொடர்ந்து தேடியதில், பல்வேறு கருதுகோள்கள் எழுந்து, மாறி, இறுதியாக ஒன்றை உறுதி செய்து, விளக்க முடிந்தது. » (நூண்முகம், அ.த. பக்கம் 19).
ஆய்வில் கண்டறிந்த முடிவுகள் அறிஞர்பெருமக்களுக்கு மட்டுமின்றி பிறமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு ஆய்வுகுறித்த தெளிதலின்றி சாத்தியமில்லை. ‘நாயக்கர் கால கலைக்கோட்பாடுகள் நூலில், ஆசிரியர், விஜயநகர அரசு, தமிழ் நாட்டில் அவர்கள் காலூன்றியது, அவ்வரசின் பிரதிநிதித்துவ ஆட்சிகள், அவர்கள்வீட்சிக்குப்பின் சுயாதீனமாக ஆண்ட நாயக்கர்கள், என நாயக்கர் கால கலைத் தடத்தை அரசியல் வரலாற்றுடன் தொடங்கி, கலையின்பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் உள்ளடக்கங்களென்று பரந்து விரிந்த கலைஆகாயத்தை, வாசகனின் கண் சிமிழுக்குள் அடைப்பதற்கு அசாத்திய துணிச்சலும் ஞானமும் வேண்டும். அவ்வாறே ‘அர்ச்சுனன் தபசு நூலில் ஒவ்வொரு சிற்பத்தையும் விவரிக்கும் முன்பாக அச்சிற்பத்தோடு இணைந்த இலக்கியம், புவியி யல் தகவல்களை ஆதார த்துடன் தெரிவித்துள்மை ஆய்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நூலின் நன்றியுரையில் அவர் சுட்டும் அறிஞர் பெருமக்களின் பெயர்கள், இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் நூலுக்கும், ஆசிரியரின் ஞானத்திற்கும் பெருமை சேர்ப்பவை.
ஆ. அவதானிப்பும் ஆய்வாளரும்
ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய சிறப்பு குணங்களில் மிகமுக்கியமானது அவதானிப்பு, பொறுமையுடன் ஒரு பொருளை கண்களால் துழாவ அறிந்திருத்தல், உற்று நோக்குதல். இந்நூல்களில் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நாமும் சென்றிருக்கிறோம். நம்பில் பெரும்பாலோர் கோபுரங்களையும், மண்டபங்களையும், தூண்களையும், சிற்பங்களையும், சுதைகளையும் பார்க்கவும் செய்கிறோம். வீட்டிற்கு வந்ததும் மதுரைக்குச்சென்றேன், மாமல்லபுரம் சென்றேன் என்று நமது பயணம் புள்ளிவிவரத்தை த் தாண்டி பெரிதாக உதவுவதில்லை. ஆனால் பாலுசாமி போன்றவர்கள் சிற்பங்களையோ, ஓவியங்களையோ பார்ப்பவர்களில்லை அவதானிக்கிறவர்கள்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.(குறள் 703, குறிப்பறிதல்) குறளுக்கிணங்க ஒருவரின் முக க் குறிப்புக்கொண்டே அவரது உள்ளக்குறிப்பை உணரக்கூடிய ஆற்றல் சா.பாலுசாமிபோன்ற ஆய்வாளர்க்கு உண்டு..
« தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் வாலி, சுக்ரீவன் போர்க்காட்சி ஒரு தூணிலும், வாலிமீது ம்பு தொடுக்க வில் வளைத்துள்ள இராமர் உருவம் மற்றொரு தூணிலும் காட்டப்பட்டுள்ளன. இராமன் உள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும்படியும், வாலி உள்ள தூணிலிருந்து பார்த்தால் இராமன் உள்ள தூண் தெரியாதபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். »(பக்கம் 135 நா.க.கோ)
18 ஆம் நூற்றாண்டைச்சார்ந்த சிதம்பர சிவகாமியம்மன் ஆலய ஓவியம் : பெண்கள் இருவர் சமைக்கும் காட்சி
« அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, பச்சை ஆகிய மூல வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆடைக்கும் உடலுக்கும் ஏறக்குறைய ஒரேவண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுப்புக்கற்கள், எரியும் தீ, உறிக்கயிறு, உறியிலுள்ள பானைகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சமைக்க வைத்துள்ள காய்க்கும் , புடவைகளின் முந்தானைக்கும் ஒரே வண்ணம் கொடுக்கப்படெடுள்ளது. உருவங்கள் ஒரே திசை நோக்கி அமைந்துள்ளன. அமர்ந்துள்ள பெண்ணின் தோள்களும் சமைக்கும் பெண்ணின் கைகளும் அளவொப்புமை யற்றுள்ளன. காட்சியில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களே மேற்பகுதியை அலங்கரிக்கவும் தரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (பக்கம் 206, நா.க.கோ)
« அவர் முன்னர் நிற்கும் தபசி, ஒற்றைக்காலில் நின்றவண்ணம் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, விரல்களைக் கோர்த்துள்ளார். மார்பில் எலும்புகள் துருத்தி க் காணப்படுகின்றன. இடையில் ஒரு சிறு ஆடை உள்ளது. முகம் மிக மேல் நோக்கியுள்ளதால் நேர்பார்வைக்கு மீசையும் தாடியுமாக வாய்ப்பகுதிமட்டுமே பெரிதாக த் தெரிகிறது.(பக்கம் 36 , அ.த)
சா. பாலுசாமியின் நூல்களில் இது போன்ற பல உதாரணங்களை அவதானிப்பிற்குச் சான்றாக எடுத்துக்காட்ட முடியும். நாயக்கர்கால கலை கோட்பாடுகளினும் பார்க்க அர்ச்சுன ன் தபசுவில் கூடுதலாக உதாரணங்கள் இருக்கின்றன.
இ. ஒப்பீடும் முடிவும்.
ஓர் ஆய்வாளர் எடுத்துக்கொண்ட பொருளை கவனமாக அவதானித்தபின் கிடைத்த தகவல்களை பிறசான்றுகளுடன் ஒப்பிட்டு பின்னர் தீர்க்கமான தொரு முடிவுக்கு வருகிறார். அம்முடிவு குடவாயில் பாலசுப்பிரமணியம் பாராட்டுவதைப்போன்று நடுவு நிலைமையோடும் எடுக்கப்பட்டுள்ளது.
« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். » என்கிறது குறள்.
« காடுகள் மிகுந்த இமயத்தின் இயற்கை இட து புறபாறையில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் பாயும் சிங்கத்திற்கு அடுத்தும், இரண்டு வேடர்களுக்கு இடையேயும் உடும்பு ஏறுவதாகவும் பெரு மரங்கள் காட்ட ப்பட்டுள்ளன. வானரத்திற்கும் முயலுக்குமிடையே தொகுப்பாக மரங்கள் செதுக்கபட்டு அடர்வனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த சிகரங்களைக்கொண்ட இமயத்தின் மலைகளும் ஆழ்ந்த பள்ளதாக்குகளும் பொங்கிப்பாயும் ஆறுகளும் விலங்குகள், வனங்கள் முதலிய இயற்கைப்பொருட்களும் இச்சிற்பத்தொகுதியில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (பக்கம் 69 அ.த)
« பனைமரம்போல் உயர்ந்த மலைகளில் உச்சியிலிருந்து இறங்கிவந்துள்ள இந்த யானைகள் வைடூர்யம்போல் மின்னுகிற இப்பெரிய தடாகத்தைக் கலக்குகின்றன.
என அமையும் மகா பாரத த்தின் வருணனைக்கு ஏற்ப இந்த யானைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. »(பக்கம் 172 அ.த) போன்றவற்றைக்கொண்டு முடிவுகளை தகுந்த ஒப்பீடுகளுக்குப் பின்னரே எடுத்துள்ளார் என்பது தெளிவு.
அவதானித்து கிடைத்த தகவல்கள், பிறசான்றுகள் அடிப்படையில் பகீரதனா ? அர்ச்சுனனா ? தவசி உண்மையில் யார் என்பதை இமயமலையின் இயற்கைப் பண்பு சான்றுகளை, மகாபாரத சான்றுகள் ஆகியவற்றோடு மாமல்லபுர சிற்பத்தொகுதியில் இடம்பெற்றுள்ள மரங்கள், விலங்குகள், கந்தர்வர்கள், மலைவேடர்கள் ஆகிய உருவங்களை ஒப்பிட்டு தவசி அர்ச்சுனன் எனத் தீர்மானத்திற்கு வரும் ஆய்வாளர் முடிவு இங்கே மிகவும் வலுவானது.
ஆய்வாளர் சா.பாலுசாமியைப்போல , பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப்போல மொழித்துறையிலும் பிறதுறைகளிலும் உண்மையாக உழைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போற்றுகிற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
* அர்ச்சுன ன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் இரண்டும் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.