(காக்கைச் சிறகினிலே மார்ச் 2017 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. நண்பரின் அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)
பாசிசத்தின் தமிழ் அடையாளமாகத் தமிழ்நாட்டு அரசியல் வெளியில் ஆடிமுடித்த ஜெயலலிதா என்ற அதிகாரத் தலைமை மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து , தற்போது முதலமைச்சர் என்ற பேரில் ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்ததுவரை கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக மக்களை ஒரு வகையான அதீத உணர்ச்சி சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்போல கட்டிவைத்து பரபரப்பான செய்திகளை 24 மணி நேரமும் மட்டும் அல்லாமல் காட்டியதையே , சொன்னதையே திரும்பத் திரும்பக் காட்டியும் சொல்லியும் ஓய்ந்து வழக்கம்போலத் தம் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கின்றன தமிழ் ஊடகங்கள் . பல் வேறு உள்நோக்கமும் சுயநலமும் கொண்ட இந்த ஊடகங்களின் வலைப் பின்னலில் சிக்கிய படித்த நடுத்தர வர்க்க மக்கள், ஊடகங்கள் சொன்னவற்றையே தாங்களும் திரும்பத் திரும்பச் சொல்லி (திரைப்படத்தில் வரும் முத்திரை வசனங்களையும் வடிவேலு வார்த்தைகளையும் திரும்பச்சொல்லி மகிழ்வதுபோல) அலுவலகத்தில், காலை நடையில், காய்கறிச் சந்தையில் , பயணத்தில் என எங்கு பார்த்தாலும் உரையாடிக் களித்தனர் என்றே சொல்லவேண்டும். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே ஊழல்வாதிகள் ; கொள்ளை அடிப்பவர்கள் ; மிரட்டி ஆக்ரமிப்பவர்கள் ; கார்பரேட் முதலாளிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு தன்னைத் தலையில் வைத்துக்கொண்டாடும் பெருவாரிப் பொது மக்கள்நலத்தைக் கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் தாரைவார்ப்பவர்கள் ; குடும்ப அரசியல் செய்பவர்கள் என்றெல்லாம் பொது வெளியிலேயே பேசிக்கொண்டு போகக்கூடிய ஒரு சூழல்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே நிலவிக்கொண்டிருக்கிறது என்பது யாதார்த்தம். அது கூடுதலாக ஊடகங்களின் துணையோடு நோய்ப்படுக்கை, சாவு, அதிகார வேட்டை என்கிற ஒரு பரபரப்பைத் தூண்டும் புதிய பின்புலத்தில் மிக வேகமாகப் பேசப்பட்டது என்பதைத் தவிரப் புதிதாக ஒன்றுமில்லை. இதே போன்றுதான் அண்னாதுரை இறந்தவுடன் நெடுஞ்செழியனை ஓரம் கட்டிவிட்டு, எம்ஜிஆர் துணைகொண்டு கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றியபோதும், எம்ஜிஆர் இறந்த போது ஜானகிக் குழுவை அமுக்கிவிட்டு ஜெயலலிதா வென்றெடுத்த போதும் பரபரப்பான பேச்சுகள் மக்களுக்குத் தீனியாக க் கிடைத்தன என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இத்தகைய பரபரப்பான பேச்சுக்களை சமூகத்தில் பரப்பிவிடும்போது, குடும்பத்திற்குள் ; உறவுகளுக்குள் ; அலுவலக அதிகாரப்போட்டி பொறாமை நிகழ்வுகளுக்குள் தீயாய் கனன்று கொண்டிருக்கும் பல முரண்களும் , பிரச்சனைகளும்கூடத் தற்காலிகமாக மட்டுப்பட்டு தனிமனிதர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து ஒருவிதமான விடுதலை உணர்வை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத்தான் முதலாளிகளின் ஊடகங்கள் இரண்டு கொள்ளைகாரர்களுக்கு நடுவில் முரண் ஏற்பட்டுச் சண்டைவந்து சதுராடும்போதுகூட அவற்றுள் ஒருத்தரைப் புனிதமானவராக, ஓரளவிற்குப் பரவாயில்லை என்று சொல்லத் தக்கவராக, ஏமாந்தவராகப் புனைந்து காட்டி, ஒரு திரைப்படம் போல தன் பார்வையாளர்களால் பார்த்து மகிழவைத்துவிடுகிறது. இதைத்தான் ஊடகங்கள் வழங்கும் குருட்டு மகிழ்ச்சி என்பர்.
உண்மையில் சமூகத்தைப் புற்று நோயாக அழித்துத் தின்னும் இந்த த் தீமைகளுக்கு வேர் எங்கே இருக்கிறது ? அந்த வேர் அடியோடு அழிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகள் யாவை ? என்பனக் குறித்தெல்லாம் இந்த ஊடகங்கள் பேசமாட்டா. இந்த நடுத்தர வர்க்கத்திற்கும் அவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்கக்கூடிய த் தேடலும் இல்லை. வாசிப்பும் இல்லை. அவர்களுக்கு ஊடக முதலாளிகளும் அதிகார வர்க்கமும், வடிகட்டித் தரும் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான் வேதவாக்கு; அவை தரும் செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் ஆதிக்க அரசியலைக்கூட மோப்பம் பிடிக்க க்கூடிய திராணியற்ற மூக்கையுடையவர்களாக மாற்றப்பட்டவர்கள் இவர்கள்.
முகநூலில் ஒரு நண்பர் « கழுதை விட்டையில் எந்த விட்டை நல்லவிட்டை » என்று கேட்டிருந்தார். அந்த அளவிற்கு இன்றைக்கு அதிகாரவர்க்கமும் அரசியல்வாதிகளும் முற்று முதலான குற்றவாளிகளாக, தீமையின் முழு உருவமாக மாறிப்போனார்கள். எந்த அளவிற்கு என்றால், தாங்கள் தீமையானவர்களாக மாறியது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தையே « குற்றவாளிகளின் கொள்கலமாக » மாற்றிக்காட்டுவதை நோக்கியும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தீமை ! இதனால்தான் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு நேர்காணலில் இப்படிப்பேசுகிறார் :
ஓட்டுவங்கிக்காக மக்களை சாதி, மதம் இனம் என்று பிரித்து விளையாடுகிற ரவுடிகளாக இந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஆகிவிட்டார்கள் ; நாட்டைச் சூறையாடும் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட த் தகுந்தவர்கள் என்கிறார். இவ்வளவு பெரிய தேசத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதிலிருந்து விடுபட வழியே இல்லையா என்றால், உண்டு ! ஒரேவழி புரட்சிதான் என்கிறார். இந்தக் கட்டிடம் இடிபாடுகள் நிறைந்ததாகி விட்டது ; இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்டவேண்டும் ; அழிவு இல்லாமல் ஆக்கமில்லை என்கிறார். நம்முடைய அரசியல் அமைப்பே காலாவதி ஆகிவி ட்டது ; அனைத்து நிறுவனங்களும் சிதைந்து உருக்குலைந்துவி ட் டன ; மாற்றி எழுத வேண்டிய தருணம் வந்துவிட்டது. பாராளுமன்றம் ஒன்று இருக்கிறதா ? நடந்துமுடிந்த பாராளுமன்றக்கூட்டம் ஒரு நாளாவது ஒழுங்காக நடந்த தா ?பிறகு இங்கே எங்கே அரசாங்கம் இருக்கிறது, ஆளும் அமைப்பு இருக்கிறது ? எனக் கேட்கிறார். சரி நீதிமன்றம் எப்படி இயங்குகிறது ? ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 18 ஆண்டுகளா ? எனவே நீதிமன்றங்களும் கெட்டுச் சீரழிந்துவிட்டன, என்கிறார் ; எல்லாமே அழிவு நிலையை அடைந்துவிட்ட ன. புரட்சி வந்துதான் புதுப்பிக்கவேண்டும்.பிரஞ்சுப் புரட்சிபோல என்று ஓர் எடுத்துக்காட்டும் கொடுக்கிறார் கட்ஜு.
சரி ! புரட்சிவந்துதான் தீமையைத் தூக்கி எறியமுடியுமென்றால் , அந்த த் தீமைக்கான காரணகர்த்தாக்கள் யார் ? அவர்களை நோக்கித்தானே புரட்சிவெடிக்க முடியும் ! இந்த த் தீமைகளுக்கெல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் என்பன கருவிகள்தான்.உண்மையில் இந்த த் தீமைகளின்வேர் முதலாளித்துவ உற்பத்திமுறையில் இருக்கிறது. இதை 1848ல் பொதுவுடமை அறிக்கை எழுதிவெளியிட்ட மார்க்ஸ்- எங்கெல்ஸ் அன்றைக்கே அழுத்தம் திருத்தமாக அழகான மொழியில் தர்க்கபூர்வமாக நிறுவியுள்ளனர். லஞ்சம், ஊழல், கொலை, குற்றம், ஆக்ரமிப்பு, பகைவெறி, மூலதனக் குவிப்பு என மனிதர்களைப் பணம்தேடும் எந்திரமாக மாற்றிப்போட்டது இந்த முதலாளித்துவ சமூக அமைப்புதான் என்கின்றனர். இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு :
- மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே அப்பட்டமான சுயநலம், கருணையற்றப் பணப்பட்டுவாடாதவிர வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்ட து.
- பல நூறு ஆண்டுகளாக மானுட சமூகம் பலவாறு அடிபட்டுத் தேடி அடைந்த மனித மாண்பினை எல்லாம் வெறும் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. மதகுரு, மருத்துவர், வழக்குரைஞர், கவிஞர், விஞ்ஞானி என மதிப்புக்குரியவர்களாகப் பார்க்கபட்டுவந்த அனைவரையும் தன்னிடம் கூலிபெறும் கூலிக்காரர்களாக ஆக்கி விட்டது.
- மதம் மற்றும் அரசியல் எனும் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக இந்த முதலாளித்துவம் அப்பட்டமான, வெட்கமற்ற நேரடியான கொடூரமானச் சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது புரிகிறதா ? ஜெயலலிதா என்ற பாசிசம் தனக்குப் பின்னால், ஒரு குடும்பத்தையே குண்டர்களாக மாற்றிவைத்துக்கொண்டு, எந்தச் சட்டதிட்டத்திற்கும் உட்படாமல் சதிசெய்து « சொத்தைக் குவிப்பது » என்கிற ஒரே நோக்கில் இயங்கி இருக்கிறது என்ற இன்றைய நீதிமன்ற தீர்ப்பில் வெளிப்படும் உண்மை ? இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகமுழுவதும் முதலாளித்துவ சமூக மைப்பில் ஆங்காங்கே ஜெயலலிதாக்களும் சசிக் கலாக்களும் தான் உருவாகிக் கொண்டிருப்பார்களென்ற காரணத்தை ப் பொதுவுடைமை அறிக்கை மேலும் தெளிவாக க் கூறுகிறது.
(கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த வாரத்தில்)