மொழிவது சுகம் ஏப்ரல் 24 – 2016

ஆண்டையும்  அடிமையும்

 

பிரெஞ்சில்  l’Individu – roi   என்ற சொல் ஒன்றுண்டு. தத்து வாதிகளின்  உபயோகத்தில் உள்ள சொல். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதெனில்  தனிமனித -அரசன். உண்மையில் அவன்  சுற்றியுள்ள கூட்டத்திடைத்  தன்னைப் பெரியவனாக, வல்லவனாக, திறமைசாலியாக, உயர்ந்தவனாக காட்டிக்கொண்டு தனது சுயத்தை முன்னிருத்த முனைபவன் . « நானே ராஜா ! நானே மந்திரி ! » – யோசனை வழங்கும் மந்திரியும் நானே, அதை அதிகாரத்தின் பேரில் செயல்படுத்துபவனும் நானே, என்ற பொருளில். அதாவது அவன் ராஜாவாகவும், மந்திரியாகவும் மட்டுமே இருக்க விழைபவன், «  நானே சேவகன் ! » எனக் கூறி அக்கோஷத்தை முடிக்கும் விருப்பம் துளியும் இல்லாதவன் .  இது உலகில் எல்லா உயிரினங்களிடத்திலும்  உள்ள அடிப்படை உணர்வு, இயற்கையான உணர்வு . இந்த ‘நானே ராஜா !’  ஆதியில் தனி நபரின் உடற்பலத்தை பொறுத்து இருந்த து,அதுவே பின்னர்  இரத்த உறவுகளின் எண்ணிக்கை தரும் பலத்தால் தீர்மானிக்கப் படுவதாக ஆயிற்று, ராஜாவாக  உருமாறியதும் அதைக் கட்டிக்காப்பது அவனுக்கு அவசியமாயிற்று,  சமயத்தையும் மரபையும் முன்வைத்து, சுற்றியுள்ளவர்களை அடிமைப்படுத்தினான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப் படுத்த நடத்தும் யுத்தம் உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை தொடர்கிறது.  ஒரு வித்தில் அது அ நீதியை  நீதியாக்கும் கலை. யுத்தத்தில் ஜெயிப்பவன் ஆண்டை , தோற்பவன் அடிமை.  இருபத்தோராம் நூற்றாண்டில்  ஆண்டையாகும் பண்பை நாகரீகமாகத் ‘தலைமைப் பண்பு ‘ என நிர்வாக அறிவியல்  தெரிவித்து, குப்பையைக் கூட்டக்கூட ஒரு தலைமை தேவையென வற்புறுத்துகிறது. இந்த யுத்தத்தில்  ஜெயித்து « நானே ராஜா ! » என்று தெரிவித்து எல்லையை விரித்துகாணும் கனவு, ஆக, நம் எல்லோரிடமும் உள நிலையாக  இருக்கிறது. தம் பலத்தை – (ஒரு வகையான வன்முறையை )அடுத்துள்ளவர்மீது  பிரயோகிக்க காலம் காலமாய் இனம், நிறம், சாதி, உயிரியல் பாகுபாடு, பொருள், அழகு, தந்திரம், பேச்சு  என பல ஆயுதங்கள்.  இன்று அவற்றோடு  விளம்பரம்,  ஊடகங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.  இந்த யுத்தம் இரு வல்லரசு நாடுகளின் அணு ஆயுத யுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, இரண்டு மனிதர்களுக்கிடையேயான  தெருச்சண்டையாக க் கூட இருக்கலாம். ஜெயித்து  « நானே ராஜா ! » என அறிவிக்கிற ஆண்டைக்கு  ஜெயித்துமுடித்த தும்  வெற்றியை நிரந்தரமாக்கிக் கொள்ளும் கவலை சேர்ந்துகொள்கிறது, எதையும் எவரையும் சந்தேகித்து தூக்கமின்றி  அவதியுறுகிறான். இக்கவலை அரசியல் ஆண்டைகளுக்கு மட்டுமில்லை,  இந்த நூற்றாண்டின் எழுத்து  ஆண்டை நான் தான் என வாழ்கிற  எழுத்தாளர்களுக்கும், பிறதுறை ஆண்டைகளுக்குமுண்டு.

 

இன்று உலகில் பகுத்தறிவு (   என்றாலே கடவுள் மறுப்பு என்று  பொருள் கொள்வதைத் தவிர்க்கவும்)  வளர்ந்துள்ளது, அதற்கு நேர் விகிதாச்சாரத்தில்  அடிமைகளும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வளர்ந்திருப்பதுதான் விந்தை. குளிர் சாதன பெட்டிகளிடைத்தலைவரையும்,  100 °  வெயிலின் கீழ் தலைகாய்ந்த அடிமைகளையும் வேறு நாட்டில் இத்தனை வெளிப்படையாகக் காணக் கிடைப்பதில்லை.

—————————————————-

பின்னூட்டமொன்றை இடுக