புதுவை சீனு . தமிழ் மணியை இனி கரந்தடி சீனு. தமிழ்மணி என்று அழைக்கலாம்.
‘இலக்கியம்’ என்ற புத்தகக் கடையைப் புதுச்சேரியைச் சேர்ந்த குயவர்பாளையம் பகுதியில் நடத்துகிறார் என்று தொடங்கியது அவரது அறிமுகம். மாத்தாஹரி நாவல் வந்திருந்த நேரம். புத்தகக் கடையில் அவரது வாடிக்கையாளர்களும் இலக்கிய அபிமானிகளுமாக இருந்த ஒரு சிலருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தார். நன்றிக்கடன் அவர்மீது அன்பு செலுத்த வழிவகைசெய்தது. அது நாள்முதல் அவதானித்து வருகிறேன். இனப்பற்று, தமிழ்த் தேசியம், பெரியார் மீது தீராக் காதல், பூவுலக நண்பர்கள், துளிப்பா கவிஞர், துளிப்பா புரவலர் என பலமுகங்களுக்கு அவர் சொந்தக்காரர், என்கிறபோதும் அவருக்கு சமூகப் போராளி என்கிற ஒற்றைச்சொல் கச்சிதமான கவசம். தமிழ்மணி அதிசயமணியாக எனக்குப் பட்டார். நல்ல மனிதர்களை அடையாளப்படுத்துகிற நண்பர் வெ.சுப நாயகருக்கு இதற்கும் நன்றி சொல்லவேண்டும். அகம், புறம் இரண்டிலும் அவர் தமிழ் மணிதான், தன் குடும்பத்தைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகளில், நண்பர்கள் நலனில் கூடுதல் அக்கறை, அநீதிகண்டு கொதிக்கும் மனம், எனப் பார்க்கிறபோது அவர் பெயருக்கு முன்னொட்டாக கரந்தடி பொருந்துகிறது. அடுத்ததாக இந்தப் பெயர் அவருக்கு ஏற்றதுதான் என நான் நினைப்பதற்குக் காரணம், ‘கரந்தடி’ துளிப்பா இதழைத் தொடங்கி நடத்தினார் என்றச் சிக்கலில்லாத உண்மை.
அவருடைய இலக்கிய பங்களிப்பை ஆழமாக உணரத் தவறி இருக்கிறேன். ஹைக்கூ என் கிற துளிப்பாக்களை அக்கறைகொண்டு வாசித்தவனல்ல. அன்பிற்குரிய ஈரோடு தமிழன்பன் எழுதியவை என்னிடம் இருக்கின்றன, அவற்றை வாசித்து மகிழ்ந்த துண்டு, அதன் பின்னர் வாசித்தவை முழுக்கமுழுக்க தமிழ் மணி குடும்பத்தாருக்குச் சொந்தமானவை. நண்பர் தமிழ்மணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரம் வாங்கி வந்தவர்கள்போல துளிப்பாக்கள் எழுதுகிறார்கள். நன்றாக எழுதவும் செய்கிறார்கள்.
அண்மையில் அவருடைய காவ்யா வெளியீடான ‘ஆய்வுப் பதிவுகள்’ என்ற நூலை வாசித்தேன். ஆலா, ம. ஞானசேகரன், ‘ஓவியம்’ தமிழ்ச்செல்வி, அர. சந்திரசேகரன், கரசூர் பத்ம பாரதி, புதுவை யுகபாரதி ஆகியோரின் துளிப்பா தொகுப்புகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல். கட்டுரைகள் விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஹைக்கூ எனப் பொதுவில் அறியப் பட் டதைத்தான், சீனு. தமிழ்மணி துளிப்பா என அழகாகச் சொல்கிறார். துளிப்பாவின் தோற்றம், வளர்ச்சி, தற்காலத் தமிழுக்கு அவற்றின் பங்களிப்பு, கவிதகள் பற்றிய விளக்கமான ஆய்வு, அவ்வாசியர்களைபற்றிய அறிமுகம் என விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்து பக்கங்களுக்கு மேல் எழுதப் பட்டுள்ளது.
ஆய்வுப் பதிவுகள் என்ற இந்த நூலில் இரண்டு விடயங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதலாவதாக வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம துளிப்பாவின் வரலாற்றையும், உடற்கூற்றையும் தெளிவாய்ச் சொல்ல நினைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். துளிப்பா எப்போது பிறந்தது, எங்கே பிறந்தது ? பெற்றோர்கள் யார் ? எப்படி எழுதினால் சிறப்பு ? துளிப்பாவில் படிமத்தின் பங்கு என்ன ? குறியீடு எப்படி ? இப்படி எல்லாச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் புதிதாக துளிப்பா எழுத நினைக்கிறவர்கள் நல்ல துளிப்பாக்களைத் தரமுடியும் என்பதோடு, எழுதிக்கொண்டிருப்பவர்களும் தங்கள் துளிப்பா வடிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள உதவும். அடுத்ததாக நான் இந்த நூலில் வியந்தது, அவர் துளிப்பாக்களைக்குறித்தும் அவற்றின் பொருள் குறித்தும், படிமம் குறியீடு ஆகியவைப் பற்றி மட்டும் பேசாமல், கவிஞர்களின் பின்புலம், துளிப்பாவின் கருப்பொருளாக ஒன்றைத் தேர்வு செய்யக் காரணம் முதலானவற்றை விரிவாக எவ்வித சமரசத்திற்கு இடம் கொடாமல் தயக்கமின்றி பேசுகிறார். உள்ளத்தில் ஒளி உண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும் என்பது, அவர் உபயோகிக்கும் சொற்கள் தெரிவிக்கும் உண்மை. இனி நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
- இங்கும் தோகுவா காலம்
‘ஆலா’ என்ற கவிஞரின் துளிப்பா நூலைப்பற்றிய இலக்கிய ஆய்வு இக்கட்டுரை. நூலைக்குறித்த விமர்சனத்திற்குள் நுழைவதற்கு முன்பாக புதுச்சேரி துளிப்பாவின் வளர்ச்சியை, தன் குழந்தையின் வளர்ச்சிக்கண்டு பெருமைபடும் இளந்தாயின் மனக்கிளர்ச்சியுடன் தமிழ்மணி விவரிக்கிறார். தமிழக அரசு நடத்திய துளிப்பா கருத்தரங்கில் புதுச்சேரி கவிஞர்கள் கலந்து கொண்டமை, புதுச்சேரியில் சீனு தமிழ்மணியின் தலைமையில் வாசிக்கபட்ட கட்டுரைகள், தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் துளிப்பா நூல்கள் வெளியீடு. இன்றைய தேதியில் யார் யாரெல்லாம் துளிப்பாவையில் அக்கறை செலுத்துகின்றனர் என்ற விவரங்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார். புதுச்சேரிக்கும் தமிழ்த் துளிப்பா உலகிற்கும் உள்ள உறவை பெருமித த்தோடு குறிப்பிடுகிறார்.
ஆலா வின் துளிப்பாக்கள் : :
« விழுதுகள் தாங்கும்/ஆலமரம் /முதியோரில்லம் »
« மாலையில்/சந்திக்குமிடம்/கோலத்தில் குறியீடு ; »
« தூரம் அதிகமாக/ஈர்ப்புவிசைக்கூடும்/காதலின் விதி ! »
2. புதுச்சேரி துளிப்பாக்களின் தொட்டில்
இக்கட்டுரை புதுச்சேரி ம, ஞானசேகரனின் துளிப்பா தொகுப்பு பற்றியது
தொகுப்பிலுள்ள துளிப்பாக்கள், நாத்திக விமர்சனப் பார்வையுடனும், சமயம், சாதி வழக்கைக் கண்டித்தும் சொல்லப்பட்டுள்ளன.
சக்கிலி குளம்/வண்ணான் குளம் / பெரியார் நகர்
மரம் வெட்டி/கட்டிய வீட்டில்/ பறவைகள் உச்சம்
மாடு விரட்டுகிறான்/மறத்தமிழன்/ ஊரில் மார்வாடி
போன்ற கவிதைகள் நல்ல உதாரணங்கள்
3 .ஓவியர் தமிழ்ச்செல்வி எழுதிய துளிப்பாக்களைக் குறித்த ஆய்வு
இக்கட்டுரையில் நல்ல துளிப்பாவிற்குரிய அடையாளங்களை மேனாட்டு அறிஞர்களின் கருத்தூடாக கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
« ஓரளவு சரியானச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்றில்லாமல் மிகச்சரியான சொல்லையே பயன்படுத்த வேண்டும், பாவலன் என்ன உணர்ந்தானோ அதை அப்படியே வாசகன் உணரும்படி வெளியிடவேண்டும் » என்பது போன்ற துறைசார்ந்த அறிஞர்களின் படிமக் கொள்கைகளை ஆசிரியர் நினைவூட்டுகிறார்.தவிர « துளிப்பாவின் வடிவ உத்திகளை சரிவர புரிந்துகொள்ளாமல் பலர் கிளம்பிவந்துவிட்டதால் தமிழ்த் துளிப்பா சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது பேருண்மையே. துளிப்பா எழுத முனைவோர் சபானியத் துளிபாக்களின் மொழிபெயர்ப்பைக் கட்டாயம் படிக்க வேண்டும் . சப்பானிய துளிப்பா குறித்த கட்டுரைகளையும் படிக்க வேண்டும் » என்ற கட்டுரை ஆசிரியரின் ஆதங்கத்தையும், ஆலோசனையையும் புதிதாகத் துளிப்பா எழுதுகிறவர்கள் மனதில் நிறுத்துவது நல்லது.
துளிப்பா கவிஞர் தமிழ்ச்செல்வி பாக்கள் மணக்கொடை என் கிற வரதட்சணை, பெண்விடுதலை ஆகியனவற்றைக் குறித்து பேசுபவையாக உள்ளன.
உருவம் இல்லாத பூதம் /பெண்ணையே அழிக்கும் /வரதட்சனை
பெண்கள் விரும்பி ஏற்கும்/ விலங்கு/ தாலி
- சிற்றுளி நன்றாகச் செதுக்குகிறது
அர. சந்திரசேகரன் என்பவரது கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
நீர் நிலைகளை ஆக்ரமித்து வீடுகள் கட்டப்பட அந்த வீடுகளுக்கு ஏற்பட்ட முடிவினை அண்மையில் சென்னை வெள்ளம் போதித்தப் பாட த்தால் அறிந்தோம்.
பொய்யாக்குளத்துள்/ புதுப்புது வீடுகள் /பொய்த்த மழை
என்ற இக்கவிதைக்கு, வழக்கமாகவே ஒரு கவிதையின் பொருள் குறித்துப் பேசுவதற்கு முன்பாக நீண்ட விளக்கத்தின் ஊடாக கவிதையை நெருங்குகிற தமிழ் மணி, இயற்கை உபாசகர் என்பதால் எழுத்துஇரட்டிபாகிறது :
« வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி எனத் தமிழிலக்கியப் பதிவுகளில் ‘பொய்யா’ எனும் அடைமொழி ‘வற்றாத’ எனும் பொருள் தரும். ஆகப் பொய்யாக்குளம் வற்றாத குளமாக இருந்திருக்கிறது. பொய்யாக்குளம் பொய்த்த குளமாகிப் போனதற்குக் காரணம்மக்களே. சுற்றுச் சூழல் பாதிப்பால் மழை சரிவரப் பெய்யாததால் பள்ளமான இடத்தில் வீடுகள் கட்டிவிட் டனர். அப்படி மழைப் பெய்தால் பள்ளத்தில் நீர்த் தங்கத்தானே செய்யும் …. » (பக்கம்-59)
- முகங்கள்
கரசூர் பத்மபாரதி என்ற பெண்கவிஞரின் துளிப்பா தொகுப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை.
இக்கட்டுரையிலும் ஆசிரியர், பெண்ணியம் குறித்து பல தகவல்களை அளித்தபின்பே தொகுப்பை பரிசீலிக்கிறார்.
உதாரணத்திற்கு எடுத்தாண்டுள்ள துளிப்பாக்களில் சில
இச்சைக் கணவன்/ ஏங்கும் மனைவி /அந்த மூன்றாம் நாள்
தேனீருட ன் /தேக க் கட்டை வணிகம்/ பெண்பார்க்கும் படலம்
- அரசமரம்
புதுவையைச் சேர்ந்த அரசு அலுவலர் யுகபாரதி என்பவர் எழுதிய துளிப்பாக்கள் தொகுப்பு குறீத்து எழுதப்பட் டக் கட்டுரை.
யுகபாரதியின் கவிதைகள் அர்த்தம் பொதிந்தவை ஒரு வகையில் அரசு அலுவலர்கள் பற்றிய சுய விமர்சனமும் கூட
மின்விசிறிகள் விளக்குகள்/வெறும் நாற்காலிகளுடன்
பல அரசு அலுவலகங்கள்
நூலில் இறுதியாக இடம் பெற்றுள்ள ‘புதிய புதிய சிந்தனைகளில்புதிய புதிய நகைத் துளிப்பாக்கள் என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. இது ஹைக்கூ வகைப்பாட்டில் ‘சென்ரியு’ வகைக் குறித்துப் பேசுகிறது.
கட்டுரையாளரும் அவர் சகோதர ர் தமிழ் நெஞ்சனும் இணைந்து வெளியிட்ட தீவின் தாகம், இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள் நூலிலும் நகைத் துளிப்பாக்களை (சென்ரியு) துளிப்பாக்கள் என்ற பெயரிலேயே வெளியிட்டிருந்த தாகவும் ஆனால் 2007இல் கரந்தடி என்ற நூலில் துளிப்பா, நகைத்துளிப்பா, ஈறுதொடங்கித் துளிப்பா, இயைபு துளிப்பா ( லிமரைக்கூ ), உரைத் துளிப்பா ( ஐபுன் ) எனத் தனித் தனியாகப் பிரித்தெடுத்துத் தமிழில் முதன் முதலாக வெளியிட்தாகவும் தெரிவிக்கிறார். இது தவிர விரிவான வேறு உபயோகமுள்ள செய்திகளும் உள்ளன.
நூலின் பதிப்பாசிரியர் இப்படி எழுதுகிறார் :
« நண்பர் சீனு தமிழ்மணி புதுவையில் இலக்கியா மூலம், பல புதுமைகள் செய்து வருகிறார். நல்ல நூல்களை விற்பதோடு நல்ல நூல்களை எழுதவும் முயன்றுவருகிறார். சமீபத்திய அவருடைய ஆர்வம் ஹைக்கூ பற்றிய ஆய்வுகளாகும். இதுவரை ஹைக்கூ பற்றி வெளிவந்துள்ள ஆய்வுகட்டுரைகளை தொகுக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்லார் என்றே சொல்ல வேண்டும். அதற்கான அடையாளம் இந்த நூலில் உள்ளது »
நூலைப்பற்றிய ஒரு முடிவுடன் வாசிப்பதில் கவனம் செலுத்த பதிப்பாளரின் இந்த அறிமுக வரிகள் உதவுகின்றன. எதனால் இதைக்குறிப்பிட வேண்டியிருக்கிறதெனில், துளிப்பா என்று அழகான தமிழ்பெயரைக் கொண்ட இவ்வகை பாக்களோடு எனக்கு அதிகப் பரிச்சயம் கிடையாது. பொருள் பொதிந்த, உபயோகமுள்ள பலச் செய்திகளை இந்த நூல் மூலம் பெறமுடிந்த து. கவிஞர் சீனு. தமிழ்மணி ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 8 நூல்களில் உள்ள படைப்புகள் அவரது மன நிலைக்கு ஒத்திசைவானவை, அவரது கொள்கைகளை எதிரொலிப்பவை. சமூக உணர்வு கொண்டவர்கள், தன்னைச்சுற்றியுள்ள மக்கள் உணர்வுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவர்கள், வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய நூல். உலகச் சமூகத்தில் காண்கிற மையப்பிரச்சினைகளையும், தமிழ் சமூகத்தில் காண்கிற தனித்துவமான சிக்கல்களையும் பேசுகிற துளிப்பாக்கள் தொகுப்புகளை கட்டுரையாளர் பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். பகுத்தறிவு, தமிழ்த் தேசியம், பெண்ணியம், இன்றைய சமூகத்தைக் குறித்த கடுமையான விமர்சனங்கள், சுற்றுபுற சூழலென்று இன்றைய உலகளாவிய மானுட பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நூல்கள் என்பது ஒரு புறம், அவற்றூடாக கரந்தடி சீனு தமிழ் மணி ஹைக்கூ கவிதைகளுக்கு வலிமை சேர்க்கும் புரிதலை நிகழ்த்தியுள்ளார் என்பது இன்னொருபுறம். இந் நூல் ஹைக்கூ பற்றிய ஆய்வுப் பதிவு மட்டுமல்ல, கையடக்கமான ஹைக்கூ குறித்த கலைக் களஞ்சியமும் ஆகும்.
ஆய்வுப்பதிவுகள்
ஆசிரியர் புதுவைச் சீனு தமிழ்மணி
காவ்யா பதிப்பகம்
சென்னை624