மழையின் கால்கள் (1977)
தடதடவென மத்தள இடிகள்
தம்புராச் சுருதியில் தனிச் சுழற்காற்று
சலசலவென சங்கீதமழை
நீர்க்கோடுகளாய் நிலத்தில் இறங்கும்!
இலையும் கிளையும் துளிகள் வாங்க
இன்பச்சுகத்தின் இறுதியில் வேர்த்து
நின்று மூச்சிடும் மழையின் கால்கள்!
குக்கூவென்றும் அக்கோவென்றும்
குளறும் மொழியில் குளிரும் மழையில்
கூடத் துடித்திடும் கொஞ்சும் கால்கள்!
தாழங்குடையில் தலையை வாங்கி
வீழும் துளிகளை விரலால் வழித்து
உழவு மாட்டுடன் ஓடும் கால்கள்!
மழையில் நனைந்த மகிழுவுடன் கன்று
தாய்ப்பசு மடியில் தலையைத் துவட்ட
தாய்மைச் சுகத்தில் தவித்திடும் கால்கள்!
சவுக்கு மரங்கள் சாய்ந்திட-அந்த
சத்தம் கேட்டுப் பெண் முயல் விலக
அச்சம் தவிர்க்கும் ஆண்மையின் கால்கள்!
களையை முடித்து மழையில் நனைந்து
முந்திக் குடையில் முகத்தை மறைத்துக்
கனத்த மார்புடன் பிணக்குங்கால்கள்!
கொட்டும் மழையில் கூச்சலிட்டோடி
மூக்கு சளியை முழங்கை வாங்க
ஆட்டம் போடும் அறியாக் கால்கள்!
மழையின் கால்களில் மகத்துவம் தேட
ஒழுகும் துளிகளின் ஊடே புகுந்தேன்
காலடி மழையில் கரைந்து ஒளிந்து
தாளடி இயற்கைத் தருமம் அறிந்தேன்!
– நாகரத்தினம் கிருஷ்ணா