1. மனதிற் பதிந்த கவிதை
வாப்பாவின் மடி – ஹெச்.ஜி.ரசூல்
எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.
நன்றி: ஆபிதீன் பக்கங்கள்
http://abedheen.blogspot.fr/
2. மலைகள். காம்
மலைகள்.காம் இணைய இதழில் பார்ஸ்க்கர் இலட்சுமணனின் ‘எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய கட்டுரை, ‘நிழல்’ என்ற தலைப்பில் அறிமுகப்படைப்பாளி சு.சந்தோஷ்குமார் கட்டுரை;அறிமுக படைப்பாளி செந்தமிழன், சின்னப்பயல், குமார நந்தன் கவிதகள்; சொ.பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன் சிறுகதைககளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இதழிலும் பதிப்பக அலமாரி என்கிற தலைப்பில் புதிய நூல்களின் அறிமுகமும் இருக்கிறது. ‘வைத்தியம்’ என்ற சிறுகதை மனித வாழ்க்கையின் நவீன தேடல்கள் குறித்து வினா எழுப்புகிறது. மனித மூளைகள் தமது வாழ்விடத்தைத் தலைக்குப் பதில் கால்கள் எனத் தேர்வு செய்திருக்குமோ என்ற ஐயம் எனக்கும் அவ்வப்போது எழுவதுண்டு, அதை உறுதிபடுத்தும் கதை. ‘வெள்ளை நிறப்பாம்பு’ என்கிற சிறுகதையை விஷ்ணுபுரம் சரவணன் எழுதியிருக்கிறார். மனச்சிதைவுக்குள்ளானவன் ஒருவனுடைய மன ஓட்டங்களை கதைப்படுத்தியிருக்கிறார். விஷ்ணுபுரம் என்ற பெயரை ஒட்டிக்கொண்டிருப்பதாலோ என்னவோ விரும்பி வாசிக்கும் படி எழுதியிருந்தார். இவர் எழுத்துகள் கவனம் பெறும்.
http://malaigal.wordpress.com/
3. அசதா: தாகூர் சிறுகதைகள்
த.நா. குமாரஸ்வாமி வங்கமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பு. சா. கந்தசாமி தேர்வுசெய்த கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது அத்தொகுப்பைக்குறித்த மதிப்புரை இது. ‘புதிய புத்தகம் பேசுகிறது’ ஜூன் 2012ல் வெளிவந்த கட்டுரையை தமது தளத்தில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார். கதைகள் குறித்த சிறு விவரிப்பும், கதை மீதான கட்டுரையாளர் கருத்தும், வாசிப்பவர்க்கு கதைகள் குறித்த நல்லெண்ணத்தை உயிர்ப்பிக்கின்றன.
http://mugaiyurasadha.blogspot.fr/
4. அழகிய சிங்கர்: எதையாவது சொல்லட்டுமா?
போகிற இடங்களிலெல்லாம் வாசிப்பதற்கென அவ்வபோது ஒன்றிரண்டு புத்தகங்களை (‘பலபுத்தகங்கள் புரட்டிப்பார்க்காமலேயே இருக்கின்றன) வாங்குவது எனக்கும் பழகிவிட்டது. எதிர்காலத்தில் எனக்கும் பயனளிக்கக்கூடிய கட்டுரை. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. வணக்கத்திற்குரிய கி.அ. சச்சிதானந்தன் வீட்டிலும் எப்படி ஏராளமான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றனவென்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். கட்டுரையைப் படித்தபோது அவர் ஞாபகமே வந்தது. அம்ருதா டிசம்பர் மாத இதழில் வந்த கட்டுரையை, அழகியசிங்கர் பதிவு செய்திருக்கிறார்.
http://navinavirutcham.blogspot.fr/
5. எம்.டி. முத்துகுமாரசுவாமி: பாகேஸ்வரி ராகம்.
நண்பர் எம்.டி.முத்துகுமாரசுவாமியின் இசைகுறித்த கட்டுரைகளை அண்மைக்காலங்களில் விரும்பி வாசிக்கிறேன். பாகேஸ்வரி காலம், தருணம், உகந்த மனநிலை என அவ்வளவையும் ஒரு காதலின் மனோ நிலையில் எழுதியிருக்கிறார். கட்டுரையை படித்திர்களெனில் நீங்களும் காதலுக்கு ஏங்கக்கூடும்.
http://mdmuthukumaraswamy.blogspot.
——————————————————