அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்
மார்ச்-30
இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம். இப்பிரதேச மெங்கும் பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன, வருடம் முழுக்க தங்கி பார்த்துவரலாம். கடந்தவாரம் எழுதியதுபோன்று வரலாறு, புவியியல், பண்பாடு மூன்றும் தமது தழும்பை ஆழமாகப் பதிவுசெய்திருப்பதால் துருக்கிக்கு பயணிக்கும் மேலேகுறிப்பிட்டுள்ள துறை ஆர்வலர்கள் எவரும் இப்பிரதேசத்தைத் தவிர்க்கக்கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றனர். பாரசீகமக்கள், அஸ்ஸீரியன் மக்கள், கிரேக்க நாட்டவர், உலகின் ஏனைய நாகரீகங்களோடு ஒப்பிட்டு பெருமைபேச துருக்கியருக்கு வாய்ப்பளித்த இட்டிட்ஸ் (Hittites)களும் இப்பகுதியைக் கைப்பற்றி பலகாலம் ஆண்டிருக்கிறார்கள். கனிமவளம் நிறைந்த பகுதியானதால் (குறிப்பாக வெள்ளியும் தங்கமும் ) படையெடுப்பிற்கு காரனமாகியிருக்கிறது. வந்தவர்கள் வழக்கம்போல மதத்தையும் மதத்தையொட்டிய நம்பிக்கையையும், நம்பிக்கையோடு விரவிய பண்பாட்டையும் பொதிகளாக கொண்டுவந்து சேர்த்திருக்கின்றனர். பாரசீகர்கள் இப்பகுதிக்கு கட்படுகா (Katpatuka) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘கட்படுகா’ என்றால் குதிரைகள் நாடு என்று பெயராம். அலெக்ஸாண்டர் தமக்கு வரவேண்டிய திரைப்பணத்திற்கு குதிரைகளை கொடுக்கும்படி கேட்டதாக குறிப்ப்ட்டிருந்தேன். கப்படோஸ் வரலாற்றோடு எனது பயண எழுத்தையும் ஓடவிடுவது உங்களுக்கு அயற்சியை தருமோ என்னவோ எனக்குத் தரக்கூடும் ஆகவே சுற்றுலா வாசிகளைக் கவர்ந்த அல்லது கவரங்கூடிய அருங்காட்சிகளுக்கு காரணமான முகத்துவாரத்தை அறிமுகபடுத்திவிட்டு இன்று பார்த்தவைகளை பட்டியலிடுகிறேன். ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டுவரை கப்படோஸ் பலமுறை சுன்னி பிரிவு அப்பாசிட் அரபு இனத்தவரின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கிட்டதட்ட மூன்று நூற்றாண்டுகள். உயிர்பிழைக்க அடிக்கடி பதுங்குழிகளை தேடியவர்கள் அதையே நிரந்தரமாக்கிக்கொள்கிறார்கள். இப்பிரதேசமெங்கும் மலைகளிலும் நிலவறைகளிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதற்கு இதுவே முதலும் முடிவான காரணம்.
காலை உணவிற்கு நாங்கள் மேசையில் அமர்ந்தபொழுது டாக்டருடன் அவர் மனைவியும் இறங்கியிருந்தார்; இன்று உடல்நலம் தேவலாம் என அவர் கூறிக்கொண்டாலும் முகத்தில் முந்தைய நாட்களில் கண்ட களையில்லை.
ஒர்த்தாயிஸ்ஸார் (Ortalhisar) – கொரேம் பள்ளதாக்கு ‘Goreme Valley):
காலையில் முதலிற் பார்த்தது ஒர்த்தேயிஸ்ஸார். மதிய உணவிற்குபிறகு பிற்பகல் மாலை ஐந்து மணிவரை கொரெம் பள்ளதாக்கென்கிற கொரெம் அருங்காட்சியகத்தை கண்டோம். இவ்விரண்டுமே கொரெம் நகரத்திற்கு வெளியே சில கி.மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றன. கப்படோஸ் பகுதியில் எரிமலைகள் வெடித்து அதன் லாவாக்களால் உருவான குன்றுகள் குடைவதற்கு எளிதாகவும் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருந்திருக்கின்றன. மக்கள் குடியிருப்பிற்கு மட்டுமின்றி, கிருத்துவ குருமார்கள் தேவாலாயங்களுக்கும் அவை
உதவின. (முதல் நாள் மனிதஉருவில் கண்ட தோற்றங்களுக்கும் அக்குன்றுகளில் மென்மையே காரணம். அம்மனித உருகொண்ட தோற்றங்களை Cheminளூe de fளூe என்று பிரெஞ்சில் அழைக்கிறார்கள் அல்லது நிலவியலில் hoodoo என்கிறார்கள்.) ஆக இப்பகுதி முழுக்க ஆர்தடோக்ஸ் கிருத்துவர்கள் வசம் இருந்திருக்கிறது. குகைகளில் பைசாண்ட்டைன் வகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒர்த்தாயிஸ்ஸார் வித்தியாசமானதொரு சிறுநகரம். மலைகோட்டைபோல தோற்றம் தரும் இக்கிராமமெங்கும் குடியிருப்புகள் புறாக்கூண்டுகள் போல உள்ளன. அரபு படைகளில் பயம் முற்றாக விலகிய பிறகு (பத்தாம் நூற்றாண்டில்) பூமிக்குமேலே திறந்தவெளியில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். அச்சிறிய நகரில் இடைக்காலத்தைச்சேர்ந்த ஒரு மசூதியுமிருந்தது. வீடுகள் எளிமையாக இருந்தன. நுழைவாயில்கள் கிரேக்கர் சாயலுடன் இருக்கின்றன. கப்படோஸ் பிரதேசத்தின் செராமிக் வகை அலங்கார தட்டுகள் பொம்மைகள் நிறைய கிடைக்கின்றன. நாங்கள் சுற்றுலா சென்ற இடங்களிலெல்லாம் இதுபோன்ற கடைகள் ஏராளமாக இருந்தனவென்றாலும் இங்கே விலை மலிவு. கண்ணேறு கழிக்கவென்று, செராமிக்கில் செய்து நீலவண்னத்தில் மயிற்கண் தோற்றமும் அலங்காரப் பின்னலும்கொண்ட சில்லுகள் கிடைக்கின்றன. வீட்டு முகப்புகளிலோ வரவேற்பறைகளிலோ கட்டித் தொங்கவிடலாமென்றார்கள். ஐரோப்பியர்ககளுக்கு குதிரை லாடத்தைவீட்டுச் சுவற்றில் அடித்துவைக்கும் பழக்கமுண்டு. இந்நகரத்து வீதிமுழுக்க கடைகள், அவற்றுள் விதவிதமான பேரிச்சைகள், உலர்ந்த திராட்சைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி பருப்புவகைகள் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.
பிற்பகல் கொரெம் நகரில் ஒரு ஓட்டலில் நல்ல உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு அங்கிருந்து கொரெம் பள்ளதாக்கு, திறந்தவெளி அருங்காட்சியகம். காவல் பலமாக உள்ளது. அவ்வாறிருந்தும் சிற்சில இடங்களில் விஷமிகளின் அத்துமீறல்களை உணரமுடிந்தது. இங்குள்ள தேவாலயங்களுள் நுழைவாயில்களில் பெரும்பாலானவை ஓர் ஆள் மட்டுமே புகுந்து செல்லகூடியவை. ஒவ்வொருமுறையும் ஒரு குழுவினரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குமேல் உள்ளே இருக்க அனுமதிலில்லை. வெளியே காத்திருக்கிற குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்ததால் இந்தத் திட்டம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்குப்பிறகு அதிக எண்ணிக்கையில் சீனர்களையும் ஜப்பானியர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. துருக்கிமொழியில் Kilise என்றால் தேவாலாயமென எங்கள் வழிகாட்டி சொன்னார். பிரெஞ்சு மொழியில் Eglise என்ற சொல்லுக்கு இது மிகவும் நெருக்கம். இந்த கொரெம் பள்ளதாக்கில் நிறைய Kiliseகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நான்கைமட்டுமே நாங்கள் கண்டோம். அவற்றுள் இரண்டு முக்கியமானவை.
Elmali Kilise: மிகச்சிறியது பதினோறாம் நூற்றாண்டில் உருவானது. உள்ளே டார்ச்சை உபயோகித்தே எங்கள் வழிகாட்டி விளக்கவேண்டியிருந்தது காவி நிறத்திலிருந்த ஓவியங்களில் பைபிளோடு தொடர்புடைய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
Tokali Kilise இவ்வாலயம் கொரெம் அருங்காட்சிகத்திற்கு வெளியே இருபது முப்பதுமீட்டர் தொலைவிலுள்ளது. வாடிகன் அரசாங்க நிதியுதவியுடன், இத்தாலி அரசின் தொழில் நுட்பத்தையும் பெற்று இங்கே புணருத்தான வேலைகள் நடக்கின்றன. அங்கும் பைபிளில் சொல்லப்படும் காட்சிகளை நினைவூட்டும் சித்திரங்கள்.
ஆறுமணிக்கு ஓட்டல் உணவை முடித்துக்கொண்டு இரவு விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Folk மற்றும் ‘Belly Dance’ காணச்சென்றோம். இன்னும்பத்துவருடங் கழித்து கப்படோஸ் சென்றாலும் சுற்றுலாவாசிகளுக்கு இது வாய்க்கும். கொரெம் நகருக்கு வெளியே இருந்தது. பெரியதொரு இரவு விடுதி. சுமார் இருநூறுபேர் அமர்ந்துபார்க்கக்கூடிய மண்டபம், சுற்றிலும் இருக்கைகள் -மேசைகள். உள்ளே நுழைகிறபோதே புகைப்படக்காரரை ஏற்பாடுசெய்து ‘கிளிக்’க்கிட்டார்கள். இரவு வெளியேறுகிறபோது தவறாமற் காத்திருந்து ஐந்து யூரோக்குப் ஒரு பீங்கான் தட்டின் பின்புறம் பதிவுசெய்த நமது நிழற்படத்தை நமது தலையிற்கட்டுகிறார்கள். முதலில் இசைக்கலைஞர்கள் வந்து அமர்கிறார்கள். இருக்கைகளுக்கெதிரே குளிர்பானங்கள் மது பாட்டில்கள் கொறிப்பதற்கு தீனி. உங்கள் விருப்பம்போல குடிக்கலாம்.
முதலாவதாக கிராமிய நடனம். ரஷ்யாவைச் சேர்ந்த கொக்காஸ் கலைஞர்கள் என்றார்கள். நடனம் மட்டும் கப்படோஸ் பிரதேசத்திற்குரியதாம். ஒருபெண்ணை மணக்க இருவர் போட்டி போடுகிறார்கள். அதற்கு ஆட்டம் பாட்டம் சண்டை எல்லாமுண்டு. ஜெயித்தவனை புறம்தள்ளிவிட்டு பெண் தோற்றவனுக்கு கை நீட்டுகிறாள். மொழி புரியாதுபோனாலும், நம்ம ஊர் நையாண்டிமேளக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தார்கள். சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி. அடுத்து இளம்பெண்ணின் வயிற்றசைவு நடனம்.30 நிமிடம் தனியொருத்தியாகவும், அடுத்து சுற்றுலா வாசிகளுடன் அரைமணிநேரமென்றும் அவள் நடனம் இருந்தது. randomமாக ஆண் பெண் பேதமின்றி அழைத்து ஒவ்வொருவரையும் வயிற்றை அசைத்து ஆடச் செய்தாள். பத்துபேர் இருக்கலாம். ஒவ்வொருவரோடும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் செலவிட்டிருப்பாள். சிலர் முயற்சி எடுத்து ஆடவும் செய்தனர். அவள் ஆட்டத்தினும் பார்க்க சில தொப்பை ஆசாமிகள் ஆட்டத்திற்கு கைத்தட்டல்கள். தேறும் ஆசாமிகளுக்கு பெண்ணின் முத்தமும் கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறியபோது அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. டாக்டரின் சகோதரி அவளிடம் பேசினார். இந்தப்பெண்ணா சற்றுமுன் அப்படி ஆடினாள் என நினைக்கும் அளவிற்கு உடையில் பெருத்தமாற்றம். பேருந்து ஏறும்போது கடுங்குளிர்காற்று இரவு ஒருமணிக்கு ஓட்டல் திரும்பினோம்.
கீழ்க்கண்ட youtubeஐ வலைத்தலத்தில் கிடைக்கிறது. நாங்கள் சென்ற இடத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மண்டபம், கலைஞர்கள் ஆடும்பெண் உட்பட நாங்கள் பார்த்த நிஜத்தின் நிழலென்பதில் துளியும் சந்தேகமில்லை.
(தொடரும்)